Saturday, July 29, 2017

சுருக்குவலை
(The Purse Seine, 1937)

ராபின்சன் ஜெஃபர்ஸ்
கடற்கரை வளைவில்
ஒரு குன்று
அங்கிருந்து
பார்வைக்கு எட்டிய வரை
மேலைக்கடலின்
கரிய நீர்ப்பரப்பு

நிலவின்
மங்கிய வெளிச்சத்தில்
கடல்மீன்களின்
மின்வெட்டும் பளபளப்பு
பால் சிந்திச்சிதறியது போல்
ஒரு மீன்கும்பல்
வட்டமிடும்
இயந்திரப்படகில் இருந்து
அதைநோக்கி வீசப்பட்ட
சுருக்குவலை
அது பரந்து
மெல்லத் தாழ்ந்து
வெண்ணிறத் திட்டின்மேல் விழுந்து
அதன் திறந்த
அடிப்பகுதியின் வட்டம்
மீன்களை வளைத்து நீருக்குள் இறங்கி
வேகமாகச் சுருங்கி
இறுக்கிக்கொள்ள,
சரக்கை படகுக்கு இழுத்த
வலிய கரங்கள்.

எப்படிச் சொல்வதெனத்
தெரியவில்லை
அழகான ஆனால்
அச்சுறுத்தும் காட்சி
சிக்கிக்கொண்ட
கடல்மீன்களின் கூட்டம்
நீரில் இருந்து
நெருப்புக்குள் பாய்ந்த
அழகிய வடிவான
வெள்ளிக்கத்திகள்
வலையின் ஒரு புறத்தில் இருந்து
எதிர்ப்புறத்துக்கு
வாலை வேகமாகத் துடித்து
நீந்தினாலும்
வலையின் கயிறுகள் தான்
எல்லை
வேடிக்கை பார;த்த
கடல் சிங்கங்கள்
வானம்வரை
இரவு விரித்த
கறுப்புத்திரை
அம்மீன்களுக்கு எட்டாத தொலைவில்.

கடற்கரையின் எதிர்ப்பக்கம்
நாற்புறம் விரிந்த ஒரு நகரம்
வண்ண ஒளிவிளக்குகளின் வரிசை
அழகான ஆனால்
அச்சுறுத்தும் காட்சி
இயந்திரச் சிறையில்
சிக்குண்ட மனிதர்கள்
தனித்தன்மை இழந்த
தனித்து இயங்கும்
திறனைத் தொலைத்த
இயற்கையில் இருந்து
துண்டிக்கப்பட்ட
தானே உணவுதேடி
உயிர்பிழைக்கத் தெரியாத
நகர மாந்தர்கள்
இனி தப்பிக்க வழியில்லை.

பூமியின் வீரபுத்திரர்கள்
அவர்கள் எப்போதோ
இப்போது
வளர்ச்சி என்கிற மாய
சுருக்குவலையில்
சிக்கித்தவிக்கும் வெள்ளிமீன்கள்
வலையின் வடம்
குறுகக்குறுக
வாயின் வட்டம்
மெல்லமெல்லச் சுருங்க
படகுநோக்கி வலை இழுக்கப்பட
அவர்கள் அதை ஏன்
உணரவில்லை?

வலை எப்போது
முழுவதும் மூடிக்கொள்ளும்?
நம் காலத்திலா
நம் குழந்தைகள் காலத்திலா?
யாரால் அதைச்
சொல்ல முடியும்?
வலை சுருங்குவது மட்டும்
நிச்சயம்
சர்வாதிகார அரசின்
வலிய கரங்கள்
அனைத்தையும் அபகரிக்க,
மனிதர்களின் தவறுகளுக்கு
இயற்கை தண்டிக்க.

நாம் செய்வதற்கு
ஒன்றும் இல்லை.
அழுகை ஆர்ப்பாட்டம்
பயன் தராது.
விரக்தியோ வாய்விட்டு
சிரிப்பதோ வேண்டாம்
வியப்பதற்கு இதில்
ஒன்றும் இல்லை
வாழ்க்கையின் முடிவு
இறப்பு நிச்சயமாக
இந்த சமுதாயத்தின்
எதிர்காலம் சிதைவு.

• • •

- தமிழில் அமர்நாத்
Wednesday, July 19, 2017

தவளைக்கச்சேரி
(கவிதைத் தூறல்)
எஸ். சங்கரநாராயணன்


எஸ்.சங்கரநாராயணனின் பிற கவிதை நூல்கள்
01, கூறாதது கூறல் (கவிதை பம்பரம்)
02, ஞானக்கோமாளி (கவிதாப் பிரசங்கம்)
03, ஊர்வலத்தில் கடைசி மனிதன் (கவிதாஸ்திரம்)
04, திறந்திடு சீஸேம் (கவிதாவதாரம்)
05, கடவுளின் காலடிச் சத்தம் (கவிதை சந்நிதி)
னுசாளுக்குக் கலகலப்பு முக்கியம்.
தைராய்டு, கூடவே இப்போது சர்க்கரை அளவும் உடம்பில் அதிகமாகி யிருக்கிறது. தலை கிர்ர் என்று உருமுகிறது. சுற்றுகிற சுற்றலில் கழுத்தைப் பிய்த்துக்கொண்டு பறந்துவிடும் போலிருக்கிறது. உடல் அசதி. சோர்வு. படபடப்பு. எதிலும் கவனம் இன்மை. கவனச் சிதறல். இதனூடே எழுதுகிற ஆசை, விடாத ஆசை. எழுத முடியாத ஏக்கம் வேறு. கதைகள், களங்களும் கருக்களும் என உள்ளே முட்டி மோதுகின்றன. ஓட முடியாத குதிரை நான். இப்போது மணல் கண்ட இடத்தில் புரண்டு தன்னை உரசி உற்சாகப் படுத்திக் கொள்ளும் முனைப்பு தட்டி இப்படியோர் எடுப்பு. மனசின் நிழலாட்டங்களை சிறு குறும்புடன் பதிவுகள் செய்தால் என்ன?
உடல் சோர்வு தட்டும் போதெல்லாம் இப்படி நான இயங்கி வந்திருக்கிறேன்… இது எனது ஆறாவது நூல் இவ்வகையில். இப்படியும் நான், என இருக்கட்டுமே. உலகம் அழகானது. அதையே கண்டு, ஆகவே நான் எழுத வந்திருக்கிறேன். அந்தப் பதிவு இப்படித்தான் அமைந்தால் என்ன?
வாசிப்பு இன்பம் தரும் பிரதி என இதைக் கண்டுகொள்ளலாம். பசிக்காக யாரும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது இல்லை. இது ஐஸ்கிரீம் பிரியர்களுக்கானது.
ஒரே வாக்கியம் அதிகபட்சம். ஒரு சில வார்த்தைகள். ஐந்து அல்லது ஆறு, அதிகபட்சம் ஏழு, அவ்வளவே அனுமதி. இந்த எல்லைக்குள் லெட்சுமண வட்டம் போட்டு வளைய வருதல். இது கவிதையா? இதுவா கவிதை? கவிதைதானா இது?... என மறுதலிப்பவர் வேறு பேர் வைக்கலாம், எனக்கு மறுப்பு இல்லை. இன்பம் தரும் பிரதி என்பது தாண்டி யோசனை எதுவும் தற்சமயம் இல்லை.
ஆனால் இவையே என் சவால் எனவும் நான் தலைகொடுக்க வேண்டும். ஒரு சுவாரஸ்ய முடிச்சை அவிழ்த்தல். காட்சிகளின் துல்லியப் பதிவு. நகைமுரணகளைச் சுட்டுதல். மெலிதான நகைச்சுவை. கடைசியில் வாசகன் எதிர்பாராத ஒரு திகைப்பை, அல்லது திருப்பத்தை அளித்தல்.
புல்லின் நுனி
நுனியில் பனி
பனியில் பனை.

இடுப்புக் குடத்தில் இருந்து தெறிக்கும் ஒரு திவலை நீர் போல பரவசம். மகிழ்ச்சி. இதை சாத்தியப்படுத்திப் பார்த்தேன். சமூக முரண்கள் அவலங்கள் அதிர்ச்சிகள்… ஆகியவையும் இஞ்சிமுரப்பா போல இடையிடையே மின்னல் வெட்டின. நான் எழுத்தாளன். தனி மனிதன் அல்ல. ஒரு சமூகத்தின் பிரிதிநிதி. வகை மாதிரி. என்னைப் பொருத்திக் கொள்ளாமல் நான் எழுத வர முடியாது.
உண்மையில் ஒரே வரியில் கதை சொல்லுதலை, பாரதியாரே நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.
பாரதியார் ஒரே வரியில் சொல்கிறார். கடவுள் கேட்டார். ‘பக்தா இதுதான் பூலோகமா?’
கேட்டவர் யார்? கடவுள். எல்லாம் அறிந்தவர். அவர் கேட்கலாகுமோ? இது முதல் எள்ளல். பக்தா, என்கிறார். யாரிடம் கேட்கிறார்… பக்தனிடம். அவரை நாடி, அவரை நம்பி வந்த பக்தனிடம். அவனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அவனுக்கு இனி அவர் உதவியளிப்பதா? பக்தனுக்கே நம்பிக்கை போய்விடும் அல்லவா? என்ன கேட்கிறார்? பக்தா, இதுதான் பூலோகமா? அவன் பூலோகத்தில் இருந்து வந்து இவரை பூலோகத்துக்கு அழைத்து வந்திருக்கிறான், என்று தெரிகிறது. எதற்கோ கடவுளிடம் உதவி கோரி அழைத்து வந்திருக்கிறான். இதுதான் பூலோகமா, என அவர் அவனிடமே கேட்கிறபோது அவர் அவனுக்கு எவ்வகையில் உதவி செய்யப் போகிறார்?...
ஒரே வரிதான் ஐயா. அது தரும் வீச்சு, வெப்பக் கதிர்வீச்சு.
நானும் முயல்வேன். கரியடுப்பில் கிளம்பும் தீப்பொறிகள் இவை. ஒரு தீக்குச்சியின் வெளிச்சம் இது.
ஆகவே, ‘தவளைக் கச்சேரி’ கவிதைத் தூறல் என உங்கள் கையில்.
அடுத்து இப்படியோர் முயற்சி, வேண்டாம் என நினைக்கிறேன். அத்தனைக்கு உடல் அசதி என்னை ஆக்கிரமிக்க வேண்டாம், என்ற பொருளில்.
வாய்ச்சொல் அருளீர்.

மிகுந்த நட்புடன்,
எஸ். சங்கரநாராயணன்
91 97899 87842

storysankar@gmail.com

Friday, July 14, 2017


எம்எஸ்வி
மரபின் தொடர்ச்சியும் மீறலும்

ச. சுப்பாராவ்
 ரு கலையின் வளர்ச்சிப் போக்கிற்கு மரபின் தொடர்ச்சியும், மரபை மீறுதலும் மிக அவசியமானதாக உள்ளன. ஒரு கலையில் புதிதாய் தன் திறமையைக் காட்டும் கலைஞன் ஆரம்ப நாட்களில் மரபைத் தொடர்வதும், தான் காலூன்றியதும், மரபை மீறி இன்னும் மேலெழும்பி சாதனைகள் புரிவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. கலைவடிவம் ஒன்றின் வளர்ச்சிக்கு, செழுமைக்கு இந்த இரண்டும் அவசியம் என்றாலும், மரபை நன்கு அறிந்தபின்பே மீறவேண்டும் என்பார்கள் அறிஞர்கள். சமீபத்தில் மறைந்த இசைமேதை எம்,எஸ், விஸ்வநாதனும் இந்த நடைமுறைக்கு விதிவிலக்கல்ல. அவரது மரபார்ந்த இசையும், மரபு மீறிய இசையும் பல தலைமுறை இசை ரசிகர்களுக்கும் தந்த பரவசத்தை நாளெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

தமிழ் திரையிசையின் மரபு தவிர்க்க முடியாதபடி கர்னாடக சங்கீத மரபாகவே இருந்தது. அன்றைய திரைப்படங்களும் புராண, ராஜா ராணிக் கதைகளாக இருந்ததால் இந்த செவ்வியல் இசையும் மிகப் பொருத்தமாகவே இருந்தது. ஜி.ராமநாதன், சி,ஆர்,சுப்பராமன் போன்றோர் வழி வந்த விஸ்வநாதன் ராமமூர்த்தியும் இந்த மரபின் தொடர்ச்சியாகவே இருந்தனர். கல்யாணிராகத்தை ஒத்த லதாங்கியில் ஆடாத மனமும் உண்டோ? பாடல் அவரது மரபார்ந்த இசைக்கு ஒரு உதாரணம். பின்னாளில் தான் இசையுலகின் தனிக்காட்டுராஜாவாக உலா வந்தபோது, இந்த மரபை அவர் மீறுகிறார். அவரது காலத்தில் புதிதாய் இத்துறைக்கு வரும் இளையராஜா எம்எஸ்வி பாணியைத் தொடர்ந்தார். தீபம் படத்தில் அந்தப்புரத்தில் ஒரு மகராணி பாடல், நீதிபதி படத்தில் பாசமலரே, அன்பில் விளைந்த வாசமலரே போன்ற பாடல்கள் ராஜா, கங்கைஅமரன் சாயலின்றி எம்எஸ்வி சாயலில் இருப்பது இந்த மரபுத் தொடர்ச்சி காரணமாகவே. பின்னர், ராஜா புதுவிதமான மரபு மீறல் செய்து வரலாற்றைத் தொடர்ந்தது நாம் அறிந்த ஒன்று.

மரபைத் தொடர்வதையும், மீறுவதையும் எவர் கண்ணையும் உறுத்தாது, மிக மிக அழகாக, மென்மையாகச் செய்ய எம்எஸ்வியால் முடிந்தது. 1960களில் தமிழ் திரையிசையின் முடிசூடா மன்னனாகத் தான் திகழ்ந்த காலத்திலிருந்து, 1980களின் பிற்பாதியில் மெல்ல மெல்ல அத்துறையிலிருந்து விலகும் காலம் வரை அந்த இரண்டையும் மிக அழகாகச் செய்தார். நீயே உனக்கு என்றும் நிகரானவன் பாடலின் ஸ்வரங்களும், ஜதிகளும், கடத்தை அவர் பயன்படுத்தியிருக்கும் விதமும்தான் எத்தனை சுத்தமான சாஸ்திரிய சங்கீதம்! அதே போல சாஸ்திரிய சங்கீதத்தை முழுமையாகக் கோரும் கர்ணனிலும் அவர் அந்த மரபை அதன் உச்சபட்ச அழகோடு காப்பாற்றினார். விருத்தங்கள், தொகையறாக்கள் மோகன ராகத்தில்தான் பாடப்பட வேண்டும் என்ற செவ்வியல் விதியை மழை கொடுக்கும் கொடையுமொரு பாடலில்அவர் அப்படியே பின்பற்றினார். அந்த முழு சாஸ்திரிய சங்கீத இசையமைப்பிலும் அவர் செய்த மரபு மீறல்கள் மிக அற்புதமானவை. கரஹரப்ரியா ராகத்தை சதுஸ்ர கதியில் (நான்கு நான்காக எண்ணும் தாள அமைப்பு) அமைப்பதுதான் அதுவரை இருந்த மரபு. மஹாராஜன் உலகை ஆளுவான் பாடலை கரஹரப்ரியா ராகத்தில் திஸ்ரதாளத்தில் (மூன்றுமூன்றாக எண்ணிக்கை) அமைத்து அந்தப் பாடலையும், ராகத்தையும் வேறொரு உயர்ந்த தளத்திற்கு எம்எஸ்வி எடுத்துச் சென்றதாகப் புகழ்ந்து தள்ளுகிறார் அக்காலகட்டத்தில் அவரது உதவியாளராகப் பணியாற்றிய மிகச் சிறந்த கர்னாடக இசை வித்வான் மதுரை ஜி.எஸ், மணி. (ஆளவந்தான் படத்தில் மனநல மருத்துவராக வரும் பெரியவர்தான் ஜி.எஸ்.மணி) 

இராகங்களைக் கையாள்வதிலும் அவர் மரபைக் காப்பாற்றவும் செய்தார், மீறவும் செய்தார். மாலையிட்ட மங்கையில் நானன்றி யார் வருவார் என்ற பாடல் மிக சுத்தமான மரபார்ந்த ஆபோகி ராகத்தில், அதன் அத்தனை குழைவோடும், இனிமையோடும் அவரால் அமைக்கப்பட்டது. எனினும், அதுநாள் வரை உச்சஸ்தாயியில் பாடிக் கொண்டிருந்த டி,ஆர், மஹாலிங்கத்தை கீழ்ஸ்தாயியில் பாடவிட்டு, ஏ,பி.கோமளாவை மேல்ஸ்தாயியில் சஞ்சரிக்கவிட்ட அந்த மரபு மீறல்தான் அந்தப் பாட்டிற்கே அழகாக அமைந்தது. 60களில் என்னை யாரென்று எண்ணியெண்ணி நீ பார்க்கிறாய் என்றும் 70களின் இறுதியில் உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்த லாலா என்றும் சிந்துபைரவியை பரிசுத்தமாக நம்முன் நிறுத்தினார். மரபைத் தொடர்வதும், மீறுவதும் பாடலின் தேவையையொட்டி மிக இயல்பாக வந்தது.

இசைகருவிகளைக் கையாளும் விதத்திலும் இது வெளிப்பட்டது. அதுநாள் வரை சோக இசைக்காக என்று ஒதுக்கப்பட்டிருந்த ஷெனாய்க்கு எம்எஸ்வியால் புதுவாழ்வு வந்தது. சுத்தசாரங் என்ற ஹிந்துஸ்தானி ராகத்தில் அமைக்கப்பட்ட இரவும் நிலவும் மலரட்டுமே பாடலின் இன்டர்லூட்களில், ஷெனாய்க்கும் சிதாருக்கும் பிரித்துப் பிரித்து சிதார் பேசும் ஸ்வரங்களுக்கெல்லாம் ஷெனாய் பதிலளிப்பது போல் அவர் அமைத்திருந்த இசைக்கோலம் ஷெனாய்க்கு புதுவாழ்வு தந்தது. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பாடலில், காற்றில் ஆடும் மாலை உன்னை பெண்மை என்றது, காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மை என்றது என்ற வரிகளுக்கு நடுநடுவே வெட்கத்தோடு வரும் ஷெனாய் பீஸை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. வாசகர்கள் அந்தப் பாடலைக் கேட்டுத்தான் இன்புறவேண்டும்! பாடலில் பல இடங்களிலும் வரும் ‘என்றது’ என்ற வரிகள் ஒவ்வொன்றையும் ஜானகி அம்மா வெவ்வேறு சங்கதிகள் போட்டுப் பாடும் அழகு மற்றொரு கட்டுரைக்கான தனி விஷயம்!

வெவ்வேறு மரபுகளைச் சார்ந்த இசைகளையும் சத்தமில்லாமல் இணைத்துப் புது வடிவம் தரும் விந்தையையும் செய்திருக்கிறார் எம்எஸ்வி. திருமணமாகாத பெண்ணை அவளது காதலை வைத்து கேலி செய்து, ஓட்டுவது கேரளத்து மாப்ளா பாடல்களில் ஒரு மரபு. இந்த மரபில் அமைந்த பாடல் தங்கச்சி சின்னப் பொண்ணு தலையென்ன சாயுது. இதில் விசேஷம் என்னவென்றால், இந்த மாப்ளா பாடலை சுத்தமான பிருந்தாவன சாரங்காவில் அவர் அமைத்ததுதான். அதில் சீர்காழி கோவிந்தராஜன் ஒரு ஹம்மிங்குடன் பாடலில் இணையும் இடம் மிகக் காவிய அழகு கொண்டது. தேரேறி வந்த மன்னன் என்று அவர் பாடும் போது நாமே தேர் ஏறியது போல இருக்கும் உணர்வை என்னவென்று சொல்வது!

மரபைத் தொடர்தல், மீறுதலன்றி புது மரபை உருவாக்குவதும் ஒரு சிறந்த கலைஞனுக்கு அடையாளம். தமிழ் திரையிசையில் பாங்கோஸ் என்ற ஸ்பானிய தாளவாத்தியத்தை அவர் போல் யாரால் பயன்படுத்தி இருக்க முடியும்? பொன்மகள் வந்தாள், ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன், பெண் போனால்,இந்தப் பெண் போனால் என்று பாங்கோஸ் பாடல்கள் ஆயிரமாயிரமாக இருக்கின்றன. அதேபோல் பாண்ட் வாத்தியக் கருவியான ட்ரம்போனை என் கேள்விக்கென்ன பதில் பாடலில் அவர் பயன்படுத்தி இருப்பது போல் யாராலும் பயன்படுத்தியிருக்க முடியாது. வாத்தியங்களைப் போலவே மனிதக்குரலின் உச்சபட்சப் பயன்பாட்டை தன் பாடல்களுக்குப் பயன்படுத்தினார் அவர். சுமதி என் சுந்தரியில் நாம் எல்லோரும் மிகவும் விதந்தோதுவது பொட்டு வைத்த முகமோ பாடல் என்றாலும் கூட, அதிகம் பிரபலமாகாத ஓராயிரம் நாடகம் என்ற பாடலில் ஹம்மிங்கும், பாடலும் மாறிமாறி வரும் விதத்தை, அதை சுசீலா பாடியிருப்பதைப் பார்த்தால் இப்போதும் வியப்பாக இருக்கும். அதே போல ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருளென்ன பாடலில் ஏனோ, ஏதோ என்ற வார்த்தைகள் பத்து பன்னிரண்டு முறை வரும். ஒவ்வொன்றும் வெவ்வேறு சங்கதியாய்ப் பாடப்பட்டிருக்கும் அழகைக் கேட்டுப் பார்த்தால்தான் தெரியும். பத்திரிகையின் தட்டையான எழுத்துக்களில் அந்த அழகைக் கொண்டுவரவே முடியாது.

இளையராஜா, டி.ராஜேந்தர் ஆகியோரது வருகைக்குப் பின்னும் எம்எஸ்வியின் இசைப்பயணம் தனது பாணியில் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. 79 – 80ல் சங்கராபரணம் படம் வந்து மானசசஞ்சரரே பாடல் தமிழ்நாடெங்கும் பிரபலமான அதே நேரம் அதே சாமா ராகத்தில் நூல்வேலிக்காக மெளனத்தில் விளையாடும் மனசாட்சியே பாடலை பாலமுரளி கிருஷ்ணாவை வைத்துப் பாடவைக்கிறார். கேட்டோர் கண்களில் எல்லாம் ஊமையின் பரிபாஷைதான். வறுமையின் நிறம் சிவப்பில் சிப்பி இருக்குது முத்து இருக்குது பாடல் ஒரு பாடலை அவரும் கண்ணதாசனும் உருவாக்குவதை நமக்குக் காட்டியது என்றால் ரங்கா ரங்கையா பாடலின் சரணங்களில் நாம் எதிர்பாராது வரும் ஹிந்துஸ்தானி பாணியிலான மெட்டும் தபேலாவும் நம்மை வேறொரு தளத்திற்கு நகர்த்திச் சென்றன. 

இவையெல்லாம் இந்த விஷயங்களை அறிந்த ரசிகர்களுக்கு கூடுதல் இன்பம் தந்தவைகளாக இருந்தவையேயன்றி, இவற்றை அறியாத ரசிகர்களின் சந்தோஷத்தை எள்ளளவும் குறைக்கவில்லை. சொல்லப் போனால் இந்த ராகமா, அந்த ராகமா? தாளமாலிகையா? இங்கே அந்தரகாந்தாரம் வருகிறதே, இது திஸ்ரஜாதி திருபுடை தாளமோ? என்ற அவஸ்தைகள் ஏதும் இன்றி, ரசிகன் வெறும் பிளையினான (plainஆன) ரசிகனாக, அதன் டெக்னிகல் அம்சங்கள் குறித்த கவலையின்றி நெருங்கிச் சென்று ரசிக்கத் தகுந்தவகைளாக இருந்தன. காரணம், எல்லா வயது ரசிகர்களுக்கும், அவர்களது காதல், அதன் வெற்றி அல்லது தோல்வி, அண்ணன் – தம்பி – தங்கை பாசம், துக்கம், பிரிவு, சந்தோஷம், வெற்றி, மரணம், திருமணம் என்று எல்லா தருணங்களுக்கும், எல்லா உணர்வுகளுக்கும் அவர் பாடல் தந்திருக்கிறார். எந்தக் கலை வடிவமானாலும் சரி, அதன் நுட்பங்களை அறிந்து ரசிப்பது என்பதைத் தாண்டி, எந்தக் காரணகாரியமும் இன்றி, அது தரும் இன்பத்திற்காக மட்மே அதை ரசிப்பது என்ற மனோபாவம் தரும் இன்பம் அலாதியானது. அந்த சுவையை, சுகத்தைத் தந்தவர் எம்எஸ்வி. அன்றாட வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்குப் பொருத்தமான அவரது பாடல் ஏதேனும் ஒன்றை நாம் நம்மையறியாமல் நினைத்துக் கொள்கிறோமல்லவா? அப்படி நாம் அவருக்கு வாழ்நாள் முழுவதும் அஞ்சலி செலுத்திக் கொண்டேதான் இருக்கப் போகிறோம் என்று தோன்றுகிறது.


செம்மலர் ஆகஸ்ட் 2015