தவளைக்கச்சேரி
(கவிதைத் தூறல்)
எஸ். சங்கரநாராயணன்


எஸ்.சங்கரநாராயணனின் பிற கவிதை நூல்கள்
01, கூறாதது கூறல் (கவிதை பம்பரம்)
02, ஞானக்கோமாளி (கவிதாப் பிரசங்கம்)
03, ஊர்வலத்தில் கடைசி மனிதன் (கவிதாஸ்திரம்)
04, திறந்திடு சீஸேம் (கவிதாவதாரம்)
05, கடவுளின் காலடிச் சத்தம் (கவிதை சந்நிதி)
னுசாளுக்குக் கலகலப்பு முக்கியம்.
தைராய்டு, கூடவே இப்போது சர்க்கரை அளவும் உடம்பில் அதிகமாகி யிருக்கிறது. தலை கிர்ர் என்று உருமுகிறது. சுற்றுகிற சுற்றலில் கழுத்தைப் பிய்த்துக்கொண்டு பறந்துவிடும் போலிருக்கிறது. உடல் அசதி. சோர்வு. படபடப்பு. எதிலும் கவனம் இன்மை. கவனச் சிதறல். இதனூடே எழுதுகிற ஆசை, விடாத ஆசை. எழுத முடியாத ஏக்கம் வேறு. கதைகள், களங்களும் கருக்களும் என உள்ளே முட்டி மோதுகின்றன. ஓட முடியாத குதிரை நான். இப்போது மணல் கண்ட இடத்தில் புரண்டு தன்னை உரசி உற்சாகப் படுத்திக் கொள்ளும் முனைப்பு தட்டி இப்படியோர் எடுப்பு. மனசின் நிழலாட்டங்களை சிறு குறும்புடன் பதிவுகள் செய்தால் என்ன?
உடல் சோர்வு தட்டும் போதெல்லாம் இப்படி நான இயங்கி வந்திருக்கிறேன்… இது எனது ஆறாவது நூல் இவ்வகையில். இப்படியும் நான், என இருக்கட்டுமே. உலகம் அழகானது. அதையே கண்டு, ஆகவே நான் எழுத வந்திருக்கிறேன். அந்தப் பதிவு இப்படித்தான் அமைந்தால் என்ன?
வாசிப்பு இன்பம் தரும் பிரதி என இதைக் கண்டுகொள்ளலாம். பசிக்காக யாரும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது இல்லை. இது ஐஸ்கிரீம் பிரியர்களுக்கானது.
ஒரே வாக்கியம் அதிகபட்சம். ஒரு சில வார்த்தைகள். ஐந்து அல்லது ஆறு, அதிகபட்சம் ஏழு, அவ்வளவே அனுமதி. இந்த எல்லைக்குள் லெட்சுமண வட்டம் போட்டு வளைய வருதல். இது கவிதையா? இதுவா கவிதை? கவிதைதானா இது?... என மறுதலிப்பவர் வேறு பேர் வைக்கலாம், எனக்கு மறுப்பு இல்லை. இன்பம் தரும் பிரதி என்பது தாண்டி யோசனை எதுவும் தற்சமயம் இல்லை.
ஆனால் இவையே என் சவால் எனவும் நான் தலைகொடுக்க வேண்டும். ஒரு சுவாரஸ்ய முடிச்சை அவிழ்த்தல். காட்சிகளின் துல்லியப் பதிவு. நகைமுரணகளைச் சுட்டுதல். மெலிதான நகைச்சுவை. கடைசியில் வாசகன் எதிர்பாராத ஒரு திகைப்பை, அல்லது திருப்பத்தை அளித்தல்.
புல்லின் நுனி
நுனியில் பனி
பனியில் பனை.

இடுப்புக் குடத்தில் இருந்து தெறிக்கும் ஒரு திவலை நீர் போல பரவசம். மகிழ்ச்சி. இதை சாத்தியப்படுத்திப் பார்த்தேன். சமூக முரண்கள் அவலங்கள் அதிர்ச்சிகள்… ஆகியவையும் இஞ்சிமுரப்பா போல இடையிடையே மின்னல் வெட்டின. நான் எழுத்தாளன். தனி மனிதன் அல்ல. ஒரு சமூகத்தின் பிரிதிநிதி. வகை மாதிரி. என்னைப் பொருத்திக் கொள்ளாமல் நான் எழுத வர முடியாது.
உண்மையில் ஒரே வரியில் கதை சொல்லுதலை, பாரதியாரே நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.
பாரதியார் ஒரே வரியில் சொல்கிறார். கடவுள் கேட்டார். ‘பக்தா இதுதான் பூலோகமா?’
கேட்டவர் யார்? கடவுள். எல்லாம் அறிந்தவர். அவர் கேட்கலாகுமோ? இது முதல் எள்ளல். பக்தா, என்கிறார். யாரிடம் கேட்கிறார்… பக்தனிடம். அவரை நாடி, அவரை நம்பி வந்த பக்தனிடம். அவனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அவனுக்கு இனி அவர் உதவியளிப்பதா? பக்தனுக்கே நம்பிக்கை போய்விடும் அல்லவா? என்ன கேட்கிறார்? பக்தா, இதுதான் பூலோகமா? அவன் பூலோகத்தில் இருந்து வந்து இவரை பூலோகத்துக்கு அழைத்து வந்திருக்கிறான், என்று தெரிகிறது. எதற்கோ கடவுளிடம் உதவி கோரி அழைத்து வந்திருக்கிறான். இதுதான் பூலோகமா, என அவர் அவனிடமே கேட்கிறபோது அவர் அவனுக்கு எவ்வகையில் உதவி செய்யப் போகிறார்?...
ஒரே வரிதான் ஐயா. அது தரும் வீச்சு, வெப்பக் கதிர்வீச்சு.
நானும் முயல்வேன். கரியடுப்பில் கிளம்பும் தீப்பொறிகள் இவை. ஒரு தீக்குச்சியின் வெளிச்சம் இது.
ஆகவே, ‘தவளைக் கச்சேரி’ கவிதைத் தூறல் என உங்கள் கையில்.
அடுத்து இப்படியோர் முயற்சி, வேண்டாம் என நினைக்கிறேன். அத்தனைக்கு உடல் அசதி என்னை ஆக்கிரமிக்க வேண்டாம், என்ற பொருளில்.
வாய்ச்சொல் அருளீர்.

மிகுந்த நட்புடன்,
எஸ். சங்கரநாராயணன்
91 97899 87842

storysankar@gmail.com

Comments

Popular posts from this blog