சுருக்குவலை
(The Purse Seine, 1937)

ராபின்சன் ஜெஃபர்ஸ்
கடற்கரை வளைவில்
ஒரு குன்று
அங்கிருந்து
பார்வைக்கு எட்டிய வரை
மேலைக்கடலின்
கரிய நீர்ப்பரப்பு

நிலவின்
மங்கிய வெளிச்சத்தில்
கடல்மீன்களின்
மின்வெட்டும் பளபளப்பு
பால் சிந்திச்சிதறியது போல்
ஒரு மீன்கும்பல்
வட்டமிடும்
இயந்திரப்படகில் இருந்து
அதைநோக்கி வீசப்பட்ட
சுருக்குவலை
அது பரந்து
மெல்லத் தாழ்ந்து
வெண்ணிறத் திட்டின்மேல் விழுந்து
அதன் திறந்த
அடிப்பகுதியின் வட்டம்
மீன்களை வளைத்து நீருக்குள் இறங்கி
வேகமாகச் சுருங்கி
இறுக்கிக்கொள்ள,
சரக்கை படகுக்கு இழுத்த
வலிய கரங்கள்.

எப்படிச் சொல்வதெனத்
தெரியவில்லை
அழகான ஆனால்
அச்சுறுத்தும் காட்சி
சிக்கிக்கொண்ட
கடல்மீன்களின் கூட்டம்
நீரில் இருந்து
நெருப்புக்குள் பாய்ந்த
அழகிய வடிவான
வெள்ளிக்கத்திகள்
வலையின் ஒரு புறத்தில் இருந்து
எதிர்ப்புறத்துக்கு
வாலை வேகமாகத் துடித்து
நீந்தினாலும்
வலையின் கயிறுகள் தான்
எல்லை
வேடிக்கை பார;த்த
கடல் சிங்கங்கள்
வானம்வரை
இரவு விரித்த
கறுப்புத்திரை
அம்மீன்களுக்கு எட்டாத தொலைவில்.

கடற்கரையின் எதிர்ப்பக்கம்
நாற்புறம் விரிந்த ஒரு நகரம்
வண்ண ஒளிவிளக்குகளின் வரிசை
அழகான ஆனால்
அச்சுறுத்தும் காட்சி
இயந்திரச் சிறையில்
சிக்குண்ட மனிதர்கள்
தனித்தன்மை இழந்த
தனித்து இயங்கும்
திறனைத் தொலைத்த
இயற்கையில் இருந்து
துண்டிக்கப்பட்ட
தானே உணவுதேடி
உயிர்பிழைக்கத் தெரியாத
நகர மாந்தர்கள்
இனி தப்பிக்க வழியில்லை.

பூமியின் வீரபுத்திரர்கள்
அவர்கள் எப்போதோ
இப்போது
வளர்ச்சி என்கிற மாய
சுருக்குவலையில்
சிக்கித்தவிக்கும் வெள்ளிமீன்கள்
வலையின் வடம்
குறுகக்குறுக
வாயின் வட்டம்
மெல்லமெல்லச் சுருங்க
படகுநோக்கி வலை இழுக்கப்பட
அவர்கள் அதை ஏன்
உணரவில்லை?

வலை எப்போது
முழுவதும் மூடிக்கொள்ளும்?
நம் காலத்திலா
நம் குழந்தைகள் காலத்திலா?
யாரால் அதைச்
சொல்ல முடியும்?
வலை சுருங்குவது மட்டும்
நிச்சயம்
சர்வாதிகார அரசின்
வலிய கரங்கள்
அனைத்தையும் அபகரிக்க,
மனிதர்களின் தவறுகளுக்கு
இயற்கை தண்டிக்க.

நாம் செய்வதற்கு
ஒன்றும் இல்லை.
அழுகை ஆர்ப்பாட்டம்
பயன் தராது.
விரக்தியோ வாய்விட்டு
சிரிப்பதோ வேண்டாம்
வியப்பதற்கு இதில்
ஒன்றும் இல்லை
வாழ்க்கையின் முடிவு
இறப்பு நிச்சயமாக
இந்த சமுதாயத்தின்
எதிர்காலம் சிதைவு.

• • •

- தமிழில் அமர்நாத்




Comments

Popular posts from this blog