Sunday, April 10, 2022

 

சிறுகதை

நன்றி / சொல்வனம் 10 04 2022 இதழ்

செகண்ட் இன்னிங்ஸ்

எஸ்.சங்கரநாராயணன்

 

பெயர் கோமதிசங்கர். என்றாலும் முழுப் பேரும் சொல்லி எவன் கூப்பிடறான். அவங்க ஐயாவே “கோமதி… ஏல இங்க வா” என்றுதான் அழைக்கிறார். தன் பெயர் பொம்பளைப் பெயர்போல அமைந்து விட்டதில் அவனுக்கு வருத்தம் உண்டு. ஊரில் எலலாப் பயல்வளுக்கும் ஆம்பளைப் பெயரா அமைஞ்சிருக்கு. இவனுக்கு வெறும் சங்கர்…னு வெச்சிருக்கப்டாதா?

பையன்கள் எல்லாரும் பேசிச் சிரிச்சி ஓடியாடி விளையாடற மட்டுக்கு ஜாலியாத்தான் இருக்கும். ஆனா திடீர்னு கேலி கிண்டல்னு பண்ண ஆரம்பிச்சிட்டாங்கன்னா, “போடி பொட்டை!” ஒரே வார்த்தையில் கரண்ட் ஆஃப்.

ஆனாலும் தனியா இருக்கிற போது அவன் பேரை நினைக்க அவனுக்கே சிரிப்பு. என்ன பேரு இது. பசு மாட்டுக்கு வெச்சா மாதிரி… இதே பேரு வேற யாருக்காவது இருந்திருந்தா அவனும் கிண்டல் அடிச்சிருப்பான். தெருவில் பாதிப் பிள்ளைங்களுக்குப் பட்டப் பெயர் வைப்பது அவன்தான். அவனது இந்தத் திறமைக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு.

ரெட்டை மண்டை சுப்ரமணி. அவன் மண்டை கீறல் விட்ட தேங்கா கணக்கா டபுள் சைசா இருக்கும். மயில் ராமசாமி. அவன் கழுத்து சித்த உசரம் ஜாஸ்தி. பேரில் சூப்பர் பெயர் எது? வாசுதேவன், அல்ல அவன் ‘வாயுதேவன்.’ எப்பவும் வாயுவை வெளியேற்றிக் கொண்டே இருந்தான், அதனால்.

“ஏல பாத்து... வாயு பிரியும்போது சர்ருனு ராக்கெட் மாதிரி மேல தூக்கிறப் போவுது உன்னை!”…

வரவர அந்தப் பயகளே கூட ஒரிஜினல் பேரைச் சொல்லிக் கூப்பிட்டா திரும்பிப் பார்க்கிறது இல்லை. கிருஷ்ணா என்று அழைத்தால், எந்த கிருண்ணனோ, என்று போய்க்கொண்டே இருக்கிறவன், “ஏல நீளக்காதான்?...” திரும்பிப் பார்க்கிறான்.

அந்தத் தெரு என்று இல்லை. பக்கத்து நாலு தெருவிலும் அவனுக்கு, கோமதிக்கு சேக்காளி உண்டு. சண்டைக்காரனும் உண்டு. சண்டையின்னால் சட்டையைக் கிழிக்கிற உக்கிரமான, மூர்க்கமான சண்டையாய் இருக்கும். அப்புறம் கொஞ்சநாள் சட்டையைக் கிழிச்சவன் இந்தத் தெரு பக்கமே நடமாட மாட்டான். கிழிபட்டவன் ஒரு ஆத்திரப்பட்ட ஜமாவுடன் அவனைத் தேடித் திரிவான்.

பிறகு எப்படி அவர்கள், அந்த சண்டைக்காரர்கள் சமாதானம் ஆனார்கள், சாம தான முயற்சிகளால் அவர்கள் சமாதானம் ஆயிருக்கலாம். அவங்க அப்பனும் இவங்க அப்பனும் இவர்களுக்காக அத்தனை நாள் வேத்துமுகம் காட்டி உர்ர்ர் உர்ர்ரென்று புகைந்து கொண்டிருந்தால் இதுங்க ரெண்டு பேரும் தோளில் கை போட்டபடி, ஆளுக்கு ஒரு கை கொடுக்காப் புளி தின்று கொண்டு, ஒருத்தரை ஒருத்தர் கட்டிக் கொண்டு, சிரித்துக் கொண்டு எதிரே வருவார்கள்… அடுத்த தகராறு ஆரம்பிக்கும் வரை.

சொன்னாப்ல, அவங்க அக்கா பேரு ரமணி. ஆம்பிளைப் பேராச்சே. முழுப்பேர் ரமணிபாய்.

எங்க ஐயாவுக்கு ஏந்தான் இப்பிடி மாத்தி மாத்தி பேர் வைக்கத் தோணுதோ? ஒருவேளை அவரு பொம்பளைப் பிள்ளை எதிர்பார்த்து நான் பிறந்து இப்பிடிப் பேர் வெச்சிட்டாப்லியா? ரெண்டாவது, பையன்தான் என நினைத்து அவள் பிறந்திருக்கலாம். வளர்ந்து பெரியாளாகி நம்ம பேரை நாமே வெச்சிக்கலாம்னு இருந்தாதான் இது சரிப்படும். ஆனா பெரியாளானால் நாம நமக்குப் பேர் வைக்கிறமோ இல்லியோ ஊர்ல தன்னைப்போல பட்டப் பெயர் வைக்கறது இருக்கவே இருக்கு.

ஊரிலேயே இதுங்களை, பிள்ளைங்களா இதுங்க, புழுதிப்படை..ம்பாங்க. சாயந்தரம் பள்ளிக்கூடம் விட்ட ஜோரில் வீட்டுக்குள்ள பாய்ஞ்சி பைக்கட்டை வீசிவிட்டு தெருவில் ஓடுவார்கள். கோமதி அவர்களின் நாட்டாமை. இதெல்லாம் தன்னைப்போல அமைவது தான். புஜபல பராக்கிரமன் அவன். அவன் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேச அவனவனுக்கு பயம். அதென்னவோ அவன் தொட்டாலே அவனவனுக்குச் சட்டை டர்ர் ஆயிருது. இவனை நம்பியே தனபால் தேரடி தெருவில் டெய்லர் கடை போட்டுவிட்டான். பழைய கிழிசல் ஸ்பெஷலிஸ்ட் என்று போர்டுதான் இல்லை.

கோமதி சும்மாவே இருக்கமாட்டான். டவுசர் பைக்குள் எப்பவும் சூட்டுக்காய் வைத்திருப்பான். அதைப் பிறத்தியார் அறியாமல் தரையில் சர்ர் சர்ரென்று உரசி சூடேத்தி வகுப்பில் பக்கத்துப் பையன் தொடையில் அதை அழுத்தினால் ஆ… என அவன் அலறல் கேட்க ஒரு திருப்தி.

“ஆனாவுக்கு அடுத்த எழுத்து டோய்!”

பதிலுக்கு கோமதிக்கு சூடு வைக்க எவனுக்கும் தைரியம் இல்லை.

பல நாட்கள் வாத்தியாரிடம் அடி வாங்கவும் நேர்ந்திருக்கிறது. அதெல்லாம் இல்லாமல் எப்படி?

அவன் அந்தப் பக்கமாக வந்தாலே தெரு நாய்கள் ஓட்டம் எடுத்தன. அதுங்களை விரட்டிப் போய்க் கல் எறிவதில் சூரன். “நானா பொட்டை…” என கத்தியபடி கல்லால் அடிப்பான் நாயை.

மாலையானால் தெருவில் புழுதிப்படையின் படையெடுப்புதான். ஹோவென்ற பேரிரைச்சல். கபடிக் கபடி, என்று சத்தம் கேட்கும். சில சமயம் யாராவது பந்து கொண்டு வந்தால் ‘எறிபந்து’ விளையாடுவார்கள். அதில் அடி வாங்க என்றே சில அப்பிராணிப் பையன்கள் உண்டு. முடிந்தவரை அடி வாங்கிக்கொண்டு, அவர்கள் “டியூஷன் இருக்குடா” என்று நழுவப் பார்ப்பார்கள். அல்லது அவனது அழுகைச் சத்தம் கேட்டு பையனைப் பெற்றவள் பதறி வெளியே ஓடிவந்து பார்ப்பாள். பையன்கள் கப் சிப் என்று நிற்பார்கள். “சனியனே பொழுதன்னிக்கும் விளையாட்டு இதுக்கு. இவனுங்களோட சேராதேன்னா கேக்கறியா?” என்று அவளும் தன் பங்குக்கு மொத்துவாள். அதைப் பார்த்து சில பையன்கள் சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள்.

சட்டை கிழிய திடீரென்று தெரு அமைதி காப்பதும் உண்டு.

பையன் ஒவ்வொருத்தனிடமும் ஒரு விசேஷம் இருந்ததாக நினைத்தார்கள். வெங்கடேசனிடம் சைக்கிள் இருந்தது. அது அவங்க அண்ணன் சைக்கிள். இப்போது இவனுக்கு பாத்யதைப் பட்டது. அவன் மனம் வைத்து கருணை செய்தால், மத்த பிள்ளைகள் அதில் ஒர் ரவுண்டு ஓசியில் போய் வரலாம். சில குழந்தைகளுக்கு ஓடினால் ஜெட்டி அவுந்துரும். அதைப்போல அந்த சைக்கிளுக்கு மிதமான வேகமே சரி. வேகம் எடுத்தால் செய்ன் கழட்டிக்கும். ஆனால் இந்த சைக்கிளை வைத்துக் கொண்டு அவன் அலட்டும் அலட்டல்...

வெங்கடேசனுக்கு கௌரவமான பட்டப் பெயர். சைக்கிள் வெங்க்கி.

பந்து வைத்திருக்கும் சிலர். டென்னிஸ் ‘ஒன் பிச்’ விளையாடலாம். இந்த வீட்டு வாசல் திண்ணைக்கும் அந்த வீட்டுத் திண்ணைக்கும் நடுவே சுவர். அதுதான் ‘நெட்’ என்று வைத்துக் கொண்டு விளையாடுவார்கள். பேட் கிடையாது. உள்ளங்கைதான் பேட்.

சனி ஞாயிறு ஏன்டா வருது, என்று என பெற்றவர்கள் நடுங்கினார்கள். அடிக்கிற வெயிலையும் பொருட்படுத்தாமல் தெருவில் சப்த களேபரம். ஓட்டு வீடு வத்சலா பாட்டுச் சொல்லிக்கொள்ள, வாத்தியார் வருவார். இதுங்களின் சத்தத்தில் பாட்டாவது டியூஷனாவது… அவருக்கே தலையை வலிக்கும்.

ச ரி க ம ப த நி சா… சாநி…பாட்டி… பிள்ள… பெத்தா… என்று யாராவது வத்சலா வீட்டுப் பக்கம் வந்து பாடிவிட்டு ஓடி விடுவார்கள்.

தெரு அமைதியாய் இருந்தால் அது நல்ல விஷயம் அல்ல. ஒரு யுத்தம் அப்பதான் நடந்து ஓய்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு நாடகத்தின் இடைவேளை போல.

இந்தக் காட்சிகள் தாண்டி தெருக்களுக்கு அமைதி வந்ததே அதைச் சொல்.

தொலைக்காட்சிப் பெட்டிகள் ஊருக்கு வந்தபின், தெருவில் கேட்ட அளவு வீட்டுக்குள்ளேயே டிவி பெட்டி இரைச்சல் கேட்க ஆரம்பித்து விட்டது. டிவி தொடர்களில் எல்லாப் பெண்களும் கண் சிவக்க பொறி பறக்க ஆவேசப் பட்டார்கள். “நீ எப்பிடி நல்லா வாழறேன்னு நான் பாத்திர்றேன்…”

ஊர்ப் பெரியவர்கள், ஐயய்ய வீட்டுக்குள்ளயே மூதேவிய நடுவுல உட்கார வெச்சி கும்மி யடிக்கிறாப்ல ஆயிட்டதே, என்று வருத்தப் பட்டார்கள்.

பழைய பாடல்களுக்கு, நகைச்சுவைக்கு மட்டும் என்று தனி சேனல்கள் கூட பிற்காலத்தில் வர ஆரம்பித்து விட்டன. சின்னப் பிள்ளைகளுக்கு என்று கதைகள் சொல்லும் கார்ட்டூன் நெட்வொர்க், போகோ, பிறகு டிஸ்கவரி, அனிமல் பிளானெட். ஃபேஷன் டிவி என்றும், மேற்கத்திய இசைக்கு என்றும் வகை வகையான சேனல்கள். இதன் பயன் என்ன? இதுநாள் வரை பிள்ளைகள் தெருவில் இரைச்சலாய்ச் சண்டை போட்டுக் கொண்டிருந்த காலம் போய், வீட்டுக்குள் பெரியவர்களும் சிறியவர்களுமாய், யார் எந்த சேனல் பார்ப்பது என்று சச்சரவு செய்ய ஆரம்பித்தார்கள். வெளியே அல்ல, வீட்டுக்கள்ளேயே இரைக்கல். ஏற்கனவே டிவி ஏதோ ஒரு சேனல் அலற அதையும் மீறிய ஒலிப் பிரளயம்.

எப்பப் பாரு இவனுங்களுக்குத் தெருவுலயே எதையாது பொறுக்கிக் கிட்டிருக்கணும்… என்று பிள்ளைங்களைத் திட்டியவர்கள் எல்லாம், ஏல வெளிய போயி விளையாடுங்களேன்டா. நாங்க சித்த நேரம் ஆற அமர டிவி பார்க்க முடியுதா… என வெளியே விரட்டினார்கள்.

விளையாட்டு சேனல்களும் உண்டு. அதில் டபிள்யூ டபிள்யூ எஃப் என்று ஒரு குண்டன் மேல் இன்னொரு குண்டன் உயரத்தில் இருந்து குதிக்கிறான். யாராவது வந்து விலக்கி விட மாட்டார்களா, என்று பார்த்தால், எல்லாரும் கை தட்டுகிறார்கள். என்ன விளையாட்டோ இது. அதைப் பார்த்துவிட்டு நம்ம கோமதி உணர்ச்சி பொங்க ஒருமுறை மரத்தில் இருந்து குதித்து ஒரு சட்டையைக் கிழித்தான்.  அவன் எடுத்த நரசிம்ம அவதாரம்.

அவர்களது விளையாட்டுகளும் இந்நாட்களில் மாறி யிருந்தன. ஆரம்பத்தில் மாலை இருள் திரள கண்ணாமூச்சி, கல்லா மண்ணா, ஒத்தையா ரெட்டையா… என்று துட்டு செலவு இல்லாத விளையாட்டுகள் விளையாடினார்கள். பள்ளிக்குப் போகையில் ‘வாங்கித் திங்க’ என்று சிறு காசு கிடைத்ததும், நாலைந்து சிநேகிதர்களாக அவரவர் கைக்காசைச் சேர்த்து பந்து வாங்கினார்கள். அதிலும் சண்டை வந்து, “நான் உங்க கூட விளையாட வரல்ல, என் காசைக் குடு” என்று பிரிந்து போவதும் நடக்கும்.

அவன்துட்டும் சேர்த்துப் போட்டு வாங்கிய பந்து எப்பவோ பிய்ந்திருக்கும். அல்லது எவனாவது ஷாட் அடிக்கிறேன் என்று முள்ளுக் காட்டில் அடித்த பந்து காணாமல் போயிருக்கும். சில பந்துகள், அந்தத் தெருவின் முசுடான மனிதர்கள் வீட்டுக்குள் விழுந்திருக்கும். போய்க் கேட்டால் அந்த மாமா அடிக்க வருவார்.

பொழுது போக விளையாடுதல் என்பது தாண்டி, கோமதிக்கு கிரிக்கெட் விளையாட்டில் தனி ருசி வந்தது. டிவிகளில் கூட கிரிக்கெட் அமர்க்களப் பட்டது ஒரு காரணமாக இருக்கலாம். டிவியில் மேட்ச் எதும் நடந்தால் முழு ஒளிபரப்பும் காட்டினார்கள்.

பையன்கள் எல்லாரும் யாராவது ஒரு பையன் வீட்டில் கூடி மேட்ச் பார்த்தார்கள். திடீரென்று அலை கிளம்பி மதகை உடைத்துக் கொண்டு வெளியே தண்ணீர் பீய்ச்சுவது போல அந்த வீட்டில் இருந்து ஒரு சப்தக் கொந்தளிப்பு கேட்டது. அந்த வீட்டு அப்பாக்கள் அடிக்கடி உள்ளறையில் இருந்து வெளியே வந்து, “நாளைக்குப் படிக்க ஏதும் இல்லையாடா உங்களுக்கு?” என்று கேட்பார்கள்.

நாங்க கிரிக்கெட் பார்க்கிற போதுதான் இவங்களுக்கு படிப்பு ஞாபகம் வருது, என்று பிள்ளைங்களுக்கு வருத்தம். இந்த அப்பாக்கள் நல்லாப் படிச்சு கலெக்டா ஆயிட்டா மாதிரி…

“தேவா, நாளைக்கு உனக்கு டெஸ்ட்டுனு சொன்னியே?”

“ஆமாம் மாமா. படிக்கணும்…”

“பின்னே? இங்க உட்கார்ந்திட்டிருக்கே? நாளைக்கு டெஸ்ட்டில் ரோஹித் சர்மா பத்தியா கேக்கப் போறான்…”

“இல்ல மாமா… செஞ்சுரி அடிக்கப் போறான். அதைப் பாத்திட்டுப் போறேன்…”

“அவன் செஞ்சுரி அடிக்கறது இருக்கட்டும். நீ என்ன, நாளைக்குப் பரிட்சையில் டக் அடிக்கப் போறியா?”

வேண்டா வெறுப்பாக அவன் எழுந்து கொள்வான்.

“உங்களுக்குந் தாண்டா… எப்ப பாரு, டிவி… கிரிக்கெட்னுகிட்டு…” என்று அவரே வந்து டிவியை அணைப்பார்.

வேண்டா வெறுப்பாகப் பிள்ளைகள் கலைந்து போவார்கள்.

“எனக்கு வந்த ஆத்திரத்துக்கு பெர்ரிய கல்லா எடுத்து அந்த டிவிய உடைச்சிறலாம்னு வந்ததுடா.”

“டிவிய எதுக்கு உடைக்கணும். அந்தாள் மண்டைய உடைக்காம…” என்று அடுத்தவன்.

ஐந்து நாள் ஆட்டம், ஒருநாள் ஐம்பது ஓவர் ஆட்டம். இப்போதெல்லாம் இருபதே ஓவர் ஆட்டம் வந்து விட்டது. அதேபோல இந்திய கிரிக்கெட் டீம் கேப்டன் பேரையும் பாரேன். அப்ப அந்தக் காலத்தில் காப்டன் கபில்தேவ். அஞ்செழுத்து. பிறகு கங்குலி. நாலெழுத்து. பிறகு மூணெழுத்தில் கும்ளே. அடுத்து தோனி ரெண்டே எழுத்தில். இனி வர்றாள் ஒரே எழுத்தில் கேப்டனாக வரலாம்.

ஆட்டமும் ஒரே ஓவர் – ‘சூப்பர் ஓவர்’ மாத்திரம் விளையாடுவாங்களா?

அவங்க ஜமாவில் பாஸ்கரன் நன்றாகப் படிப்பான். அவங்கப்பா உரக் கம்பெனியில் வேலை. நல்ல சம்பளம். நீ நல்ல மார்க் வாங்கினா, கிளாஸ் ஃபர்ஸ்ட் வந்தால் உனக்கு கிரிக்கெட் பாட் வாங்கித் தரேன், என்று சொல்லி யிருக்கார். பையன் மேல் பிரியமான அப்பா.

சில அப்பாக்கள் பிறந்த பிள்ளையையே “நாம் பண்ணின பாவம் பார், இப்பிடித் திரியுது” என அலுத்துக் கொள்வார்கள். நிறைய அப்பாக்களுக்கு தங்கள் பிள்ளைகள் சந்தோஷமா இருந்தாலே பிடிக்க மாட்டேன் என்கிறது.

ஒரு அப்பா தரன் பிள்ளையைத் திருவிழாவுக்குக் கூட்டிப் போகிறார். அதை வாங்கித் தா, இதை வாங்கித் தா… என்று அடம் பிடிக்கக் கூடாது, என்று கண்டிப்புடன் சொல்லி அழைத்துப் போகிறார். அப்றம் எதற்கு அவனைக் கூட்டிப் போகிறார்? அதுதான் தெரியவில்லை.பையன் ஒரு விசில் வாங்கித்தா அப்பா, ஒரேயொரு விசில்… என்று கேட்டுக் கொண்டே வந்தான்.

பொறுக்க முடியாமல் அப்பா ஒரு விசில் வாங்கி அவனிடம் தந்தார். பிறகு சொன்னாராம். “நீ கேட்டபடி நான் விசில் வாங்கித் தந்திட்டேன்டா. இப்ப நான் சொன்னபடி நீ கேளு. நீ விசிலை ஊதவே கூடாது” என்றாராம்.

இதற்கு வாங்கித் தந்திருக்கவே வேண்டாம். பையன் அப்பவே அந்த விசிலைச் சாக்கடையில் விசிறி யடித்து விட்டான்.

சின்னப் பையன்களுக்கு உற்சாகம் வந்தால் அது தன்னைப்போல அடங்காது. எப்பவாவது சிரிப்பு வந்தாலும் அது உருளும் தண்ணீர்க் குடம் போல பொங்கிப் பொங்கி வரும். வயசு அப்படி. அது என்னாத்துக்குடா அந்தச் சிரிப்பு சிரிக்கறே?... என்று விசாரித்தால் அது உப்பு பெறாத விஷயமாய் இருக்கும்.

பாஸ்கரனின் அப்பா நல்ல மனுசன். வாக்கு தவறாமல் அவனுக்கு கிரிக்கெட் பாட் வாங்கித் தந்து விட்டார். பந்து இல்லை. சின்னக் கடைகளில் கிடைக்கிற ரப்பர் பந்துகள் அதால் அடிக்கிற அடிக்குத் தாங்கவில்லை. ரப்பர் பந்து என்ற அளவில் தெருவிலேயே விளையாட முடிந்தது. அந்த ஊருக்கே உரிய புதிய கண்டிஷன்கள் விளையாட்டில் சேர்க்கப் பட்டன. கணக்கு வாத்தியார் வீட்டுக் காம்பவுண்டுக்குள் விழுந்தால் அவுட். அந்த வாத மரத்தைத் தாண்டினால் ஃபோர்... இப்படி.

பள்ளிக்கூட கிரிக்கெட் டீமில் கூட பாஸ்கரன் இருந்தான். ஒன்பதாம் வகுப்புக்கு மேல்தான் சேர்த்துக் கொள்வார்கள். கோமதி தன் முறை வர ஆவலுடன் காத்திருந்தான். பாஸ்கரனுக்கு கிரிக்கெட் பாட் இருந்தாலும் அவனுக்கு ‘பௌலிங்’ போடப் பிடித்திருந்தது. அது கோமதிக்கு மகிழ்ச்சி யளித்தது. தடதடவென்று ஓடி வந்து வேகமாய்க் கையைச் சுழற்றினால் பந்து புயலைப்போல வந்தது. விளையாட சிரமமாய்த்தான் இருந்தது.

எப்படி அவனுக்கு இத்தனை வேகமாய்ப் பந்தை எறிய முடிகிறது என்று கோமதிக்கு ஆச்சர்யம். இமைக்கும் நேரத்தில் பந்து அவனைக் கடந்து சென்றது. அதிலும் ஒன்றிரண்டு பந்துகளை கோமதி தொட்டுவிட்டாலே பந்து கதறிக்கொண்டு வாத மரத்தைத் தாண்டிப் பாய்ந்தது. ஃபோர்.

பள்ளியில் பழைய விளையாட்டு ஐட்டங்களை விற்க என்று ஏலம் போட்டார்கள். அவன் தெரு சகாக்களிடம் பேட் இருக்கிறது. நம்மிடம் பந்து இல்லை. ஒரு பழைய பந்து ஏலம் எடுக்கலாம் என்று நண்பர்கள் நிதி திரட்டினார்கள். பாஸ்கரன் காசு எதுவும் போட வேண்டாம். அவன் பேட் சொந்தக்காரன் அல்லவா? சல்லிசான விலையில் பந்தை கோமதி ஏலத்தில் எடுத்தான். திருப்பதி லட்டுக்கு பாதி சைஸ். கார்க் பந்து. தரையில் பட்ட ஜோரில் பொங்கி யெழுந்தது பார்.

பள்ளிக்கூட கிரவுண்டில் தான் இதை வைத்து விளையாட முடியும். இங்க தெருவில் யார் மண்டையிலாவது பட்டால் அவ்வளவுதான். இப்பவே ரப்பர் பந்து ஆட சிறுவர்கள் சேர்த்துக் கொள்வார்கள். கார்க் பந்தில் அவர்கள் கிடையாது. கோமதி? ஆறாங் கிளாஸ். என்றாலும் அவன் விளையாட்டில் கட்டாயம் உண்டு. ஆள் சூரன்லா.

கார்க் பந்து கடுமையானது, அந்த வயதுக்கு. சின்னப் பிள்ளைகள் அதை வைத்துக்கொண்டு விளையாடக் கூடாது. விளையாடவும் தெரு சரிப்படாது, என்று பிள்ளைகள் பள்ளிக்கூட விளையாட்டுத் திடலுக்கு ஆட்டத்தை இடம் மாற்றினார்கள். அப்பா அம்மாக்கள் நிம்மதியாக டிவி பார்க்கும்படி தெரு அமைதியாகி விட்டது.

பள்ளிக்கூடம் போனால் இன்னொரு வசதி உண்டு. சிறப்பு விருந்தினர் வந்தால் என்று விரிக்க சணலால் செய்த தரைவிரிப்பு பள்ளியில் உண்டு. விளையாட்டு சாமான் பாதுகாப்பு அறை, ஸ்டோர் ரூமுக்கு வாசலில் காம்பவுண்டுக்குள் அந்த விரிப்பு கிடக்கும்.

சாதா தரையில் விளையாடினால் பந்தின் எகிறல் சீராக இராது. அதற்காக பள்ளி டீம் கிரிக்கெட் விளையாடுகையில் அந்த சணல் படுதா விரித்து ஆடினார்கள். அது ஒரு பெருமை பிள்ளைகளுக்கு. விடுமுறை நாளில் போனால் தெருப் பையன்களும் ஸ்டோர் ரூம் காம்பவுண்டைத் தாண்டிக் குதித்து அந்த விரிப்பை நாலுபேராய்த் தூக்கி சண்டிமாட்டை வண்டிக்கு இழுப்பதுபோல கிரவுண்டுக்கு சரசரவென்று இழுத்து வந்து விரித்துப் பரத்தி கிரிக்கெட் ஆடினார்கள். பாஸ்கரனுக்கு வெறும் தரையில் பந்து வீசுவதை விட மேட்டில் வீசுவது நன்றாக இருந்தது. அவன் பந்து முன்னிலும் விரிப்பில் பட்டு பாம்பாகச் சீறியது. பையன்கள் விளையாடத் திணறினார்கள்.

பையன்கள் எத்தனை பேர் வருகிறார்களோ அதைப் பொறுத்து மேட்ச் கூட வைத்தார்கள். தரையில் கோடு கீறி, 1 2 3 என்று எழுதி விளையாடும் மட்டையால் மறைத்து ஆளாளைத் தொடச் சொன்னார்கள். அந்த வரிசையில் பேட்டிங் வந்தது.

அநேகமாக ஒரு சைடுக்கு பாஸ்கரனும், மறு சைடுக்கு வீரமணியும் தலைமை. வீரமணி வயசில் மூத்தவன் என்ற மரியாதை. எப்படியும் பாஸ்கரனுக்கு எதிரணியில்தான் கோமதி. இந்நாட்களில் ஓரளவு பந்தின் பாதையை கணித்து, அதன் வேகத்தையும் சரியாகப் புரிந்துகொண்டு ஆட ஆரம்பித்திருந்தான் கோமதி.

“பெரிய கிளாஸ் வந்ததும் நீ கிரிக்கெட் டீம்ல சேந்துருவ இல்லடா?”

“பின்னே?”

“அவன் கேப்டனாவே ஆயிருவாண்டா…” என்று பக்திப் பரவசத்துடன் சொன்ன சேதுவை அவனுக்குப் பிடித்திருந்தது.

ஆனால் விபரீதமான நிகழ்ச்சி ஒன்று நடந்து விட்டது.

இந்நாட்களில் கார்ச் பந்தும் தாண்டி சிவப்புப் பந்தில் ஆட ஆரம்பித்திருந்தார்கள். சிவப்புப் பந்திலும் உள்ளே சிறிய லட்டுபோல கார்க் தான் இருக்கும், என்று பாஸ் சொன்னான். ஆனால் சணல் சுற்றிய பெரிய பந்து இது. திருப்பதி லட்டு. கைநிறையப் பிடித்து எறியலாம். படுதா விரித்து ஸ்டம்ப்புக்கு எறிந்தால் ஸ்வைங் என்று பறந்தது பந்து.

அன்றைக்கு கோமதியும் நன்றாக ஆடினான். சும்மா சொல்லக் கூடாது. பள்ளிக்கூட மைதானம் பெரியது. கூடைப்பந்து தளம் தாண்டினால் இங்கே நான்கு ரன் கணக்கு. அதை தரையைத் தொடாமலேயே பந்து தாண்டினால? ஆறு! கோமதி ஆட்டத்தில் பொறி பறந்தது. பாஸாவது ஃபெயிலாவது, அடி பின்னி யெடுத்து விட்டான்.

பாஸ் பல்லைக் கடித்தபடி தரையில் தேங்கா வெடல் போட்ட மாதிரி அழுத்தி எறிந்த பந்து, பௌன்சர் அது. அது இத்தனை எகிறும் என கோமதியே எதிர்பார்க்கவில்லை. ஒரு பாம்பு கொத்த வருவதுபோல அவன் முகத்துக்குப் பாய்ந்து வந்ததை முகத்துக்கு நேரே பார்த்தான் கோமதி. சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டான். பந்து அவனது நெற்றிப் பொட்டுக்கு சற்று மேலே பளீரென்று பாய்ந்தது. அவனுக்குள் மின்னல்கள் சிதறின. அப்படியே சுருண்டு விழுந்தான்.

பாஸ்கரனுக்கு முதலில் சிரிப்பு. “போடி பொட்டை” என நினைத்தபடி கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு வந்தான். கோமதியின் நெற்றி புடைத்து வீங்கி யிருந்தது. வலி துடித்தது. என்றாலும் அவன் கண்ணைத் திறக்கவே யில்லை. வலிக்கு அவனால் கத்தக் கூட முடியவில்லை.

“என்ன பாஸு இப்பிடிப் பண்ணிட்டே?”

“நானா? நான் என்னடா பண்ணினேன்? பொட்டப் பய. விளையாடத் தெரிஞ்சா விளையாடணும். இல்லாட்டி அம்மைட்ட பால் குடிச்சிக்கிட்டு வீட்டோட இருக்கணும். ஹ” என்றான் பாஸ். என்றாலும் அவனுக்கு பயமாய்த்தான் இருந்தது.

கோமதி அப்படியே கிடந்தான். யாரோ போய்த் தண்ணீர் எடுத்து வந்தார்கள். அவன் முகத்தில் தெளித்தார்கள். கோமதி அப்படியே கிடந்தான். “டேய் மூச்சு இருக்கா பாருங்கடா…” என்றான் ஒருத்தன். “அட நீ வேற…” என்றபடி பயந்துகொண்டே கோமதியின் நெஞ்சைத் தொட்டான். “இருக்குது…”

அதற்குள் ஒரு பயந்த சிறுவன் கோமதியின் வீட்டுக்குப் போய்த் தகவல் சொல்லி யிருந்தான். பெத்தவர்கள் ஓடி வந்தார்கள். பாஸ்கரனின் அம்மா ஓடிவந்தாள். அவன் அப்பா வேலைக்குப் போயிருந்தார்.

பாஸ் அன்றைக்கு அம்மாவிடம் வாங்கிய அந்த அடி. ரொம்ப நாள் நினைத்து நினைத்துச் சிரிக்கத் தக்கது. சிரிக்க நேரம் இல்லை. பையன்கள் பாவம். கோமதி செத்திருவானோ என்றே பயந்து விட்டார்கள். எதோ ஒரு வண்டியை வரவழைத்து கோமதியை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரி ஓடினார்கள்.

ஆஸ்பத்திரி என்றாலே பிள்ளைங்கள் எலலாருக்கும் பயம்தான். அங்கே ஊசி போடுவார்கள். கசப்பா மருந்து கூட குடுங்க சாமிகளா. ஊசி மாத்திரம் வேணாம். நர்ஸப் பார்த்த மாத்திரத்தில் பாதிப் பேருக்கு அழுகை வந்தது.

பெரிய மாட்ச்களில் நாடும் நாடும் விளையாடுகிற கிரிக்கெட் ஆட்டங்களில் ஹெல்மெட் உண்டு. நாம வண்டியில போற போதே ஹெல்மெட் போடறது இல்லை. ஹெல்மெட் போடறவன் பயந்தாங்குளி, என்று நினைப்பு.

கோமதி அந்தத் தெருவின் சூரன். அவனுக்கு அடிபட்டு மயக்கமாகி விட்டது. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். பையன்களுக்கெல்லாம் ஒரே வருத்தம். அவர்களில் சில பேர் பாஸ்கரனிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். முதலில் சிரித்தாலும் பாஸ்கரனுக்கும் இப்படி ஆகிப்போனதில் வருத்தம்தான்.

நெற்றிப் பொட்டு தப்பித்தது ஆச்சர்யம்தான். சற்று மேலே நல்ல அடி. பொட்டில் அடித்திருந்தால் இந்நேரம் பால் ஊத்தியிருப்பார்கள், என நினைத்துக் கொண்டான். இப்பவே பிடிக்காத போஸ்டரில் சாணி அடிச்சா மாதிரி அவன் நெற்றி முழுசுமாகவே புடைத்து விட்டது.

அவனை அப்படியே அள்ளித் தூக்கியபோது கூட முனகினான். ‘‘பாத்துத் தூக்குங்க” என்று சொல்ல நா துடித்தது. இப்ப இருக்கிற ஆத்திரத்துக்கு மத்த பையன்களே அவனை மொத்தி விடுவார்கள், என்று சும்மா இருந்தான்.

நல்ல பையன்தான் கோமதி. கொஞ்சம் விளையாட்டுக்காரப் பிள்ளை. ஒண்ணைச் செய்யதோன்னால் முதலில் அதைத்தான் செய்து பார்க்கணும் என்று அவனுக்கு வேகம் வரும். அவனை எதுலயாவது மாட்டிவிட வேண்டும் என்று நண்பர்கள் நினைத்தால், அவன் வரும்போது அவனைப் பார்க்காமல் அவனைப் பற்றி ரகசியம் போல எதாவது பேசுவார்கள். அவனுக்கு உடனே பரபரப்பாகி விடும். ‘‘அந்த மரத்துல மாத்திரம் யாராலயும் மாங்கா பறிக்கவே முடியாதுடா…” என்பதுபோலப் பேசிக்கொண்டால், ஹ என்னால் முடியாதா? செஞ்சி காட்டறேன் வெத்துப் பசங்களா, என்று தோட்டத்துக்குப் போவான்.

அவன் அறியாமல் பையன்களும் அவன் அறியாமல் பின்தொடர்ந்து போவார்கள். உண்மையில் அந்த மரம் அடிப்பகுதியில் செல்லரித்து வயிறு திறந்து கிடந்தது. அங்கே பெரிய குளவிக்கூடு இருந்தது. அதன் பக்கத்திலேயே யார் போனாலும் சிவக்க சிவக்க கொட்டித் துரத்தி விடும் அது.

கோமதி ஐயோ, அப்பா… என்று ஓடிவந்ததைப் பார்த்து எதிரே வந்த பையன்களுக்கு ஒரே சிரிப்பு.

“டேய் சிரிக்கறீங்களேடா நாய்ங்களா…” என்று கோமதி கத்தினான். “எல்லா உங்க ட்ரிக்குதானா?”

“பின்னே?” என்று அவர்கள் சிரித்தார்கள். “எத்தன பேருக்கு நீ சூட்டுக்காயாலே சூடு வெச்சிருக்கே? அப்ப மாத்திரம் இனிச்சிக் கெடந்ததோ?”

பள்ளிக்கூடம் போனாலும் பாஸ்கரனோடு நண்பர்கள் யாரும் பேசவில்லை. அது அவனுக்கு அழுகையாய் வந்தது. டேய் யாராவது வேணுன்னு இப்பிடிச் செய்வாங்களாடா?... என்று கத்த வேண்டும் போல இருந்தது.

ஆஸ்பத்திரியில் அவன் ரெண்டுநாளாய்க் கண்ணே திறக்காமல் கிடந்தான். முதல் நாள் மூச்சுத் திணறிக்கொண்டிருந்தான். வலி இருந்தது அவனுக்கு. படுக்கையில் குடைந்தான். கையில் டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. அதை அத்து எறிய ஆவேசப் பட்டான். கையைக் காலை படுக்கையோடு கட்டிப் போட்டிருந்தார்கள்.

அடுத்தநாள் வலியைத் தாண்டி யிருந்தான் அவன். அவனிடம் அசைவுகள் குறைந்து விட்டன. உடம்பு உணவு எடுக்கிறது. இதயம் துடிப்பது மிஷினில் பச்சை சிகரங்களாகத் தெரிகிறது. ஆனால் அவன் எண்ணங்கள் உள்ளே ஆழ்ந்து விட்டன என்று தெரிந்தது.

நாலைந்து நாளில் அவன் ‘கோமா’ நிலைக்குப் போய்விட்டான், என்று கேள்விப்பட்டபோது தூக்கிவாரிப் போட்டது பாஸ்கரனுக்கு. இதை அவன் எதிர்பார்க்கவில்லை. கோமா என்றால் மூளையின் அடியாழத்தில் மாத்திரம் நினைவுகள் இருக்கும். ஆனால் மேலோட்டமாக அவனிடம் எந்த இயக்கமும் இருக்காது.

அட அவன் பேரே கோமதி. அதிலும் ஒரு எழுத்து அடி வாங்கி, கோமான்னு ஆயிட்டதா?.. என நினைக்க சிரிப்பு வரவில்லை. அவனுக்கே அவனைப் பிடிக்கவில்லை. அட இப்படியெல்லாம் ஆகும்னு யார் எதிர்பார்த்தார்கள்? படுக்கையில் ராத்திரி படுக்க தூக்கம் வரவில்லை. அழுகை வந்தது. அழுகை பொங்கிப் பொங்கி வந்தது. அட இப்ப இப்பிடி தனியே அழுது என்ன பண்ண, என்று அவன்மீது அவனுக்கே வெறுப்பு.

அதுவரை ஆஸ்பத்திரி பக்கமே போகாமல் இருந்தான் பாஸ்கரன். அmப்பாவிடம் சொல்லி போய்ப் பார்க்க முடிவு செய்தான் அவன்.

“நீ போனா? அவங்க அப்பா அம்மா அங்க இருக்க மாட்டாங்களா? உன்னைக் கண்டாலே அவங்களுக்கு ஆத்திரம் வராதாடா?” என்றார் அவன் அப்பா.

“பரவால்லப்பா…” என்று சாயந்தரமாய் அப்பாவுடன் கிளம்பினான் பாஸ்கரன்.

என்ன செலவு ஆயிற்றோ பாவம், என்று இருந்தது. தனியறையில் இருந்தான் கோமதி. அவனைப் பார்க்கவே அதுவரை வராத அழுகை பொத்துக்கொண்டு வந்தது. அவனது அப்பா அம்மாவும் அங்கே இருந்தார்கள். கோமதியின் அம்மா கோபப் படுவாள் என்று எதிர்பார்த்திருந்தான். ஆனால் அவலளோ “பாத்தியாடா உன் ஃப்ரென்டு நிலைமையை?” என்று காட்டி அழுதாள்.

“எப்பிடி யிருக்கான்?”

“உடம்பில் உணர்ச்சியே இல்லை. கோமா…” என்றாள் அம்மா.

“இது எப்ப சரியாவும்?”

“தானா சரியானாத்தா உண்டு. சரியாகலாம். சரியாகாமலும் போகலாம்…”

“ஐயோ” என்றான் பாஸ்கரன்.

“சின்ன வயசு மாமி. சரியாயிருவான்…” என்று ஆறுதல் சொன்னார் பாஸ்கரனின் அப்பா.

அழுதபடி தலையாட்டினாள் கோமதியின் அம்மா.

அடுத்த இரண்டு நாளில் கோமதியின் உடலில் எந்த மாற்றமும் இல்லை. தினசரி பள்ளி விட்டதும் பாஸ் கோமதியை ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்துவிட்டு வந்தான்.

ஒருமுறை அவன் போயிருந்தபோது பெரிய டாக்டர் வந்து கோமதியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கிளம்பும்போது கூடவே போனான் பாஸ்கரன்.

டாக்டர் திரும்பிப் பார்த்தார். “என்னப்பா?”

“நான் கோமதியோட ஃப்ரண்டு சார்.”

அவர் புன்னகையுடன் தலையாட்டினார்.

“நான் பௌலிங் போட்டுதான் அவனுக்கு அடி பட்டது சார்.”

அவர் தலையாட்டினார்.

“எப்பிடியாவது அவனைக் காப்பாத்துங்க சார்…”

“சின்ன வயசுதான். தானே அவன் தெளிஞ்சி தேறி வருவான்…”

“எப்ப?”

“அதை எப்பிடிச் சொல்ல முடியும்?” அவர் புன்னகைத்தார். சின்னப் பையன் என்றாலும் அவனது அக்கறை அவருக்குப் பிடித்திருந்தது.

திடீரென்று யோசித்தாற் போல அவன் கேட்டான். “அவனைத் திரும்ப மேல்மட்டத்துக்குக் கொண்டுவர நாம எதும் ட்ரை பண்ண முடியுமா டாக்டர்?”

அவர் அவனைத் திரும்பிப் பார்த்தார். “ம். நல்ல விஷயம்தான். அவனுக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் எது எதுன்னு பார்த்து… அந்த நினைவுகளை அவன் மனசில் அலையெழுப்பிப் பார்க்கலாம்…”

“ஆகா” என்றான் பாஸ்கரன்.

டாக்டர் போய் விட்டார். அன்று இரவு அவன் உறங்கவில்லை. மறுநாள் அவன்தான் டாக்டருக்கு அந்த யோசனை சொன்னது. உடனே அந்த யோசனை செயலாற்றப் பட்டது.

ஏதோ அரதப் பழசான கிரிக்கெட் மேட்ச்சின் முழு வர்ணனையைத் தேடி ரெகார்ட் செய்து அவன் காதில் இடைவிடாமல் ஒலிக்க வைத்தார்கள். முதல்நாள் ஒரு மேட்ச். அடுத்தநாள் அடுத்த மாட்ச். தினசரி ஏழு எட்டு மணி நேரம். அவன் காதில் கிரிக்கெட் வர்ணனை ஒலித்துக் கொண்டே யிருந்தது.

இரண்டாம் நாள் அவன் உள் கண்ணில் கருமணிகள் துடிப்பதை மூடிய கண்ணுக்குள்ளேயே பார்க்க முடிந்தது. அவன் அம்மாவுக்கு நம்பிக்கை வந்தது. அடுத்த நாள் மதிய வாக்கில் அவன் உதடுகள் துடிப்பதைக் கண்டாள். அவன் உடல் வலியில் சிறிது நெளிந்தான்.

அன்றைக்கு மாலையில் பாஸ்கரன் வந்தபோது அவன் அம்மா சிரித்தபடி அவனை வரவேற்றாள்.

“பாஸ்கரா, அவன் உடம்புல அசைவு வருதுடா. நீ கிட்ட வந்து பாரு…”

பாஸ்கரனுக்கு சந்தோஷத்தில அழுகை வந்தது. கிட்டவந்து அவன் கோமதியைத் தொட்டான். குனிந்து அவன் காதில் “கோமதி…” என்று கூப்பிட்டான். “நான் பாஸ்டா… பாஸ்கரன்…” அவன் உடம்பில் துடிப்புகளை அவனால் உணர முடிந்தது.

“எந்திரிச்சிருவான் ஆன்ட்டி…” என்றான் பாஸ்கரன்.

“நீதான் இந்த ஐடியா குடுத்தியாமே?”

“ஆமா ஆன்ட்டி…” என்றபோது அழுகை வந்தது.

“ஏன்டா அழறே?” என்று கோமதியின் அம்மா அவனைக் கட்டிக் கொண்டாள்.

“சிரிக்கறதா அழுகறதான்னே தெரியல ஆன்ட்டி…” என்றான் பாஸ்கரன்.

•••

(2022)

Monday, April 4, 2022

 

நன்றி / பே’சும் புதிய சக்தி

சிந்தனைத் தொடர் – நிசப்த ரீங்காரம் / பகுதி 6

 

மழைக்குள் நுழைந்த குடை

ஞானவள்ளல்

 லைஞனுக்கு நயம்பட உரைத்தல் முக்கியம். அவனது கூறுதிறனாலேதான் அந்தப் படைப்பு வாசக மனதில் பீடமிட்டு அமர்கிறது. சிறப்பாகச் சொல்லப்பட்ட ஓர் உவமை, அல்லது சிறப்பான ஓர் இசை என்றுகூட வைத்துக் கொள்ளுங்கள், மனதில் தங்கி ரீங்காரம் செய்ய வல்லது. அதன் கூறுதிறன் அவனது கலையெழுச்சி எனலாம்.

சில நல்ல ஸ்வரக் கோர்வைகளை மனது திரும்பத் திரும்ப பாடிப்பாடி ரசிக்கும் அல்லவா?

எதுகை மோனை என்கிற சொல் அலங்காரங்களுடன் தமிழ் இலக்கியம் கலையின் எழுச்சியைக் கொண்டாடியது. சங்க இலக்கியம் முதல், போன நூற்றாண்டு வரை இந்தச் சொல்லாளுமை பெரும் ஆட்சி செய்தது. செய்யுள்கள் தாண்டியும் உரைநடையிலும், திரைப்படங்களிலுமே கூட அடுக்குமொழி பெரும் வரவேற்பு கண்டதை நாம் அறிவோம். திரைப்படங்கள் என்றால், ‘மகாதேவி’ படத்து வசனம் உடனே நினைவு வருகிறது.

இணங்க மறுத்த பெண்ணை மூட்டையில் அடைத்துக் கொண்டுவரச் சொல்வான் பி.எஸ்.வீரப்பா. அவர்கள் தவறுதலாக அவனது மனைவியையே தூக்கிவந்து விடுவார்கள். மூட்டையைத் திறந்ததும் வெளியே வருவாள் அவனது மனைவி.

“அத்தான்…”

“அப்படிச் சொல் கண்ணே. இந்த சத்தான வார்த்தையிலே செத்தான் கருணாகரன்” என வீரப்பா அலுத்துக் கொள்ளும்போது திரையரங்கமே விசிலும் கைதட்டுலுமாய் அதிர்ந்தது.

பத்து இருபது வருடங்களுக்கு முந்தைய ‘புது நெல்லு புது நாத்து’ படத்தில் நடிகர் நெப்போலியன் பேசும் ஒரு வசனம். “என்னடி, இலைல இட்டிலியைப் போட்டுட்டு தலைல இடியைப் போடறியே?”

ஒரு சோகமான வசனம். வில்லன் பாத்திரம் அவதிப்படும்போது அதை ரசித்தார்கள் மக்கள்.

அரசியலிலும் இப்படி அடுக்குமொழி பேசுவது ஒரு மோஸ்தர், என்றான காலம் ஒன்று இருந்தது அல்லவா?

அளபெடையாகவும், இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் என்றும் எத்தனை வசிகர உத்திகளைக் கையாண்டார்கள். பொழுது பலபலவென விடிந்தது. அவன் விறுவிறுவென்று நடந்து போனான். நடந்து நடந்து கால் தேய்ந்தான்… என்றெல்லாம் உணர்ச்சிக் கேந்திரங்களை வடிக்க எத்தனை வழி வகைகள்.

இன்றைக்குப் பரவலாக வந்து கொண்டிருக்கிற புதுக்கவிதைகளிலுமே கூட எதுகை மோனை நயம் இருந்தால் தனி ருசிதான். தணிகைச்செல்வனின், ஆறு வறண்ட கதை பற்றிய எள்ளல் கவிதை,

“காவிரியைக் கடக்க

ஓடங்கள் எதற்கு

ஒட்டகங்கள் போதுமே”

என்ற வரிகளின் கவர்ச்சிக்கு அதன் மோனைநயம் காண்க.

கவிதைகளில் கச்சிதத்தன்மையான சொற்கட்டு எப்போதுமே உயர்தரம். வள்ளுவரின் இந்தச் செய்யுள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

“செய்தக்க அல்ல

செயக்கெடும்

செய்தக்க

செய்யாமையானும் கெடும்.”

ஆனால் வள்ளுவர் இந்த ஒண்ணே முக்காலடி பாணியில் கூட சில சொல் விரயங்கள் தந்திருக்கிறார்… என்பதையும் கூறிவிட்டு தாண்டிச் செல்லலாம்.

“நாடென்ப

நாடா வளத்த

நாடல்ல

நாட வளந்தரும் நாடு.”

 

ஒரு தரம் சொன்னால் போதாதா என்ன?

அதே சமயம் இந்தக் கவிதை பாருங்கள். என்ன சொல் அழுத்தம்…

“இருவேறு

உலகத்து இயற்கை

திரு வேறு

தெள்ளியர் ஆதலும் வேறு.”

அதேபோல உவமான உவமேயங்களில் காட்சிரீதியான தாக்கத்தை ஏற்படுத்த வல்ல திருக்குறள் செய்யுள்கள் அழகானவை.

தினைத்துணை

நன்றி செயினும்

பனைத்துணையாகக் கொள்வர்

பயன் தெரிவர்.

இங்கே தினை பனை என்கிற உருவக் காட்சிகள் மனதில் தன்னைப்போல விரிகின்றன.

இலங்கையில் சீதையைச் சந்தித்துவிட்டு வந்த அனுமன், ராமனிடம் சீதையைப் பார்த்த கதையைச் சொல்லும்போது, சீதையைக் கண்டேன், என்று சொல்லாமல், முதலில் கண்டேன் என்று ஆரம்பித்து சீதையை, என பின்னால் சேர்ப்பதைக் கம்பர் காட்டுகிறார். கம்பராமாயணப் பட்டிமன்றங்கள் தோறும் இந்த விவரம் கொண்டாடப்படும்.

தூத்துக்குடியைச் சார்ந்த என் எழுத்தாள நண்பன் மோகனன் ஒரு நாவல் எழுதினான். அதன் தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

‘கொக்கு பூத்த வயல்.’

என் நினைவுக்கு எட்டியவரையில் ஒரு நில வரைபட அளவில் இப்படி காட்சிப் படுத்திய வேறு நாவல்தலைப்பை நான் கேட்டதே இல்லை.

வயல் வரப்பில் இருந்து யாரோ பார்க்க, தூரத்தில் வயலுக்குள் கொக்குகள் அமர்ந்திருக்கின்றன… என காட்சி மனதில் வரவில்லையா?

இவரது குறுநாவல் தொகுதியை நாங்கள் பதிப்பித்தபோது அதற்கு ‘மோகனராகம்’ என தலைப்பு வைத்தோம். இவரது பெயரே மோகனன் அல்லவா.

இந்தத் தலைப்பில் மனம் லயித்து நான் எழுதிய ஒரு சிறுகதைத் தலைப்பு ‘அதோ பூமி.’ என்றாலும் இந்த ‘அதோ’ என்று சுட்டல் அமைந்து விட்டதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்!

ஆமாம், திருப்பூர் தமிழ்ச் சங்கம் பரிசு பெற்ற என் நாவல், அதன் தலைப்பு ‘தொட்ட அலை தொடாத அலை.’ இதிலும் ஒரு நிகழ்வு அல்லது காட்சிப் பதிவு இருக்கிறது.

காட்சிகளைக் கற்பனையில் விரித்து நம் மனதில் முழுமையடையும் கவிதைகள் சிறப்பானவை.

இதைப்போலவே காட்சியம்சம் மிக்க இன்னொரு கற்பனை, உதயகண்ணனின் ‘மழைக்குள் “நுழைந்த” குடை.’

தேவதேவனின் ஒரு கவிதை இப்படிக் காட்டுகிறது.

“கட்டியணைத்து

முத்தமிடவா முடியும்

வா காபி சாப்பிடலாம்.”

இங்கே கவிதை அது நிகழும் இடத்தை நினைவுபடுத்தி தன் இருப்பை அமைத்துக் கொள்கிறது. காதலன், காதலி உணவு விடுதிக்குப் போகிறார்கள். அங்கே ‘குடும்ப அறை’யில் போய் அமர்கிறார்கள்… என்கிற விவரம் மனதில் சித்திரமாக வரும்போது, இந்தக் கவிதை ரசிக்கிறது அல்லவா?

இதில் கட்டியணைத்து முத்தமிடுதல் என்பது அதிகக் காம வேட்கையைக் குறிக்கிறது. வா காபி சாப்பிடலாம், என்பது ‘யானைப் பசிக்குச் சோளப் பொறி’ என்பார்களே அந்த ஆதங்கத்தையும் குறிக்கிறது அல்லவா?

விக்கிரமாதித்தனின் இந்தக் கவிதையும் அதேபோல நம் மனதில் சித்திரம் வரைந்து பொருளைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய நல்ல முயற்சி.

‘இக்கரைக்கும் அக்கரைக்கும்

அலைகிறான் ஓடக்காரன்

அமைதியாய்

ஓடிக் கொண்டிருக்கிறது நதி.”

இவர் நம் மனதில் வரையும் சித்திரம் என்ன? ஒரு பொதுக் கோணத்தில் இந்தக் கவிதை வாழ்க்கை சார்ந்த தேடல், என்று கொள்வோம். காலம் என்னும் ஓடத்தில் நாம் வாழ்க்கையைக் கடக்கிறோம்.

ஓடக்காரன் இக்கரைக்கும் அக்கரைக்கும் கடக்கிறான்… என்பது அவனது தேடல், என்பது சரி. அவன் எந்த திசையில் நதியைக் கடக்கிறான்… என காட்சியாக நினைத்துப் பார்த்தால், இடம் வலமாக அவன் கடக்கிறான். அவனது தேடல் ஒரு குறுக்குவெட்டு அளவில் நிகழ்வதை அவதானிக்கலாம்.

ஆனால் வாழ்க்கை? அது ஒரு நதிபோல ஓடிக் கொண்டே யிருக்கிறது. நதி எப்படி ஓடுகிறது? அதன் காட்சி வடிவம் என்ன?

நதி கீழிருந்து மேலாக… ஒரு நெடுக்குவெட்டுத் தோற்றமாக அல்லவா அது ஓடுகிறது.

அதாவது, நமது வாழ்க்கை சார்ந்த புரிதலும் தேடலும் சிறு அளவுதான். வாழ்க்கை நம் பிடிக்குள் சிக்காத அளவில் பெரியது, பிரம்மாண்டமானது என்கிறார் கவிஞர்.

மென்மையிலும் மென்மையை முன்னிறுத்தி ’பீலிபெய் சாகாடும் அச்சு இறும்’ என்கிறார் வள்ளுவர். மெல்லிய மயிற்பீலிதான் என்றாலும் சால மிகுத்துப் பெய்தால், வண்டியின் அச்சு முறிந்து விடும், என்பதன் அழகு காண்க.

மோப்பக் குழையும் அனிச்சம், நோக்கக் குழையும் விருந்து… என்பதெல்லாம் எத்தனை மென்மையான விவரம்.

மெல்லிய விவரங்களை அடுக்க ஹைகூ போல வேறு வடிவம் கிடையாது, எனலாம்.

‘‘காலைப் பனியில்

காணாமல் போயின

வெள்ளை நாரைகள்.”

வானத்தில் பறக்கும் நாரைகளின் உடல் நிறமும் காலைப் பனியின் நிறமும் ஒன்றுகலந்து முயங்கிய நிலை.

‘சிட்டுக்குருவி

சற்றே கால் தூக்க

சேறு துடைக்கும் மாம் பூ.’

என்பது மனதுக்குப் பிரியமான அடையாளமாகி விடுகிறது.

இதில் சோகத்தை மென்மையாகச் சொல்லும் இந்தக் கவிதை தனி ருசி.

“கல்லைறைக்கு

வழிகாட்டுகிறது

குடும்பத்துக் கிழட்டுநாய்.’’

இதில் ‘கிழட்டு’ நாய், என்கிற அடையாளம் கனமாகி விடுகிறது.

இப்படி மெல்லிய உணர்வுகளைக் கிளர்த்தும் விதமாக நான் ஒருமுறை எழுதினேன்.

“தாழ இறங்கிவந்த பறவை

பொத்தெனக் கீழே போட்டது

நிழலை.”

இதைப்பற்றி பிறகு ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கையில் அந்த நண்பர், இதே கருத்தை கம்பர் வேறு மாதிரி சொல்லி விட்டார், என்றார். என்ன சொல்கிறார் கம்பர்?

எத்தனை உயரம் பறந்த போதும் அந்தப் பறவையால் தன் நிழலைக் கீழே போட முடியவில்லை.

ஆகா என்றிருந்தது அதைக் கேட்க. கம்பர் கவிதையிற் பெரியவர் அல்லவா?

தமிழுக்கே கதி, கம்பரும் திருவள்ளுவரும் என்று சொல்வார்கள்.

நவீன விருட்சம் அழகியசிங்கரின் புதுமனை புகுவிழா, என்று போயிருந்தேன். பழைய நிகழ்ச்சி. விருந்தின் போது என் அருகே ஞானக்கூத்தன். இரண்டு கலைஞர்கள் சேர்ந்தால் என்ன பேசிக்கொள்ளப் போகிறோம்…

எனது ஒரு கதையைப் பற்றி அவரிடம் பேசினேன். வீட்டைக் காலிசெய்து போவதின் துக்கம் சார்ந்து ஒரு கதை. இந்த துக்கத்தை மேலதிக அழுத்தமாய் உணர்த்துகிற விதமாக, அந்த வீட்டில் பார்வையற்ற பெண் ஒருத்தி இருந்ததாகவும், அந்த வீட்டை அவள் தப்படிகளால் அளந்து வைத்திருந்த நெருக்க உணர்வு கொண்டவள் என்றும் விவரித்து, அந்த வீட்டைப் பிரிதல் பிரத்யேகமாக அவளுக்கு எத்தனை துக்ககரமானது, என நான் விவரப்படுத்தியதைச் சொன்னேன்.

கதையின் தலைப்பு. ‘புள்ளும் சிலம்பின காண்.’

ஞானக்கூத்தன் சட்டென தன் கவிதையில் காட்டிய காட்சி ஒன்றைச் சொன்னார்.

வீட்டைக் காலி செய்துகொண்டு துக்கத்துடன் கிளம்பும் ஒரு குடும்பத்தினர். அவர்கள் வீட்டு பீரோ நகர மறுக்கிறது. ஒருவர் இருவராய் அதை இழுத்து அசைத்து நகர்த்தப் போராடுகிறார்கள். நகர மறுத்த பீரோ கோபப் பட்டு ஒருவனின் காலைக் கிழித்து விடுகிறது!

ஒரு செய்தி கதையாகவும், கவிதையாகவும் உருமாறிய விதம் ஆச்சர்யமானது தானே?

கவிதையில் கவிஞனின் பார்வை சாமானியனின் பார்வையில் இருந்து மாறுபடும் போது அந்தக் கவிதை நம்மை ஆச்சர்யப்படுத்தி விடுகிறது.

கந்தர்வன் எழுதிய ஒரு கவிதையில், ஒரு வீட்டு வாசலில் உரித்துப்போட்ட ஆரஞ்சுப்பழத் தோல் கிடக்கும். தெருவில் போகிறவர் “ஐயோ, வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லையா?” என்று பதறி விசாரிப்பதாக எழுதுவார்.

வறுமையின் சித்திரம். ஏழை வீட்டில் ஆரஞ்சு சாப்பிடுவது நோயுற்று இருக்கும் போது மாத்திரமே.

எங்காவது சென்ட் வாசனை வந்தால் சிலருக்கு ‘பிணம்’ நினைவு வரும்! இந்தப் பகுதியை எழுதிக் கொண்டிருக்கும் போது உதித்த யோசனை இது.

கணவனுடன் கருத்து மாறுபாடு காரணமாக அழுது கொண்டிருப்பாள் மனைவி. அருகில் இருக்கும் அவளது குழந்தை, “ஏம்மா அழுகிறாய்? பசிக்குதா?” என்று கேட்பதாக நான் ஒரு கவிதை எழுதினேன்.

ஒரு மந்தகாச மனநிலையில் நான் எழுதிய இன்னொரு வரி.

‘மெரினா கடற்கரை

முறுக்கு வியாபாரம்

கண்ணகி சிலை.’

எஸ். வைதீஸ்வரனின் ஒரு கற்பனை எப்போது நினைத்தாலும் புன்னகையை வரவழைக்கும்.

சென்னையின் அசோக்நகரின் பிரதான சாலை. உதயம் திரையரங்கப் பக்கம், நாற்சந்தி. சிக்னலில் ஸ்தூபி. அதில் உயரத்தில் நமது தேசியக் கொடியை நினைவு படுத்தும் விதமாக நான்கு சிங்கங்கள் அமைத்திருப்பார்கள்.

வைதீஸ்வரன் கற்பனை செய்கிறார் இப்படி.

போக்குவரத்து நெரிசலுக்கு பயந்து இப்படி ஸ்தூபியின் உச்சிக்கு ஏறிக்கொண்டதா இந்தச் சிங்கங்கள்.

என்ன ஆச்சர்யமான கற்பனை!