Monday, June 26, 2017

மாயபிம்பம்
அமர்நாத்
(நாவலின் பகுதி)
'ப்ரணவ்! இந்த வாரத்துக்கு என்ன?”  
'என் ஜெர்மன் பாடத்தில் வந்த ஒரு கவிதை.  ஹெர்மன் ஹெஸ்ஸேயின் கற்பனை. படித்தவுடனே பிடித்துவிட்டது. அதை ஆங்கிலத்தில் எழுதிப்பார்த்தேன்.”  
'எங்கே, காட்டு!”
அவன் நீட்டிய காகிதத்தில்.
வாழ்க்கைக் கட்டங்கள்
அரும்புகட்டி மலர்ந்து வாடும் பூக்கள்
முதுமையைத் தேடிப்போகும் இளமை
ஒவ்வொரு முடிவும் இன்னொன்றின் ஜனனம்.
ஒரு பருவத்தின் அறிவும் பெருமையும்
தொடர;ந்து நம்முடன் வருவது நியாயம் இல்லை.
நிகழ்காலத்துடன் பிரிவு எதிர;காலத்தின் வரவேற்பு.
நாளை புதிய வார்ப்புகள், புதிய இணைப்புகள்.
ஒவ்வொரு ஆரம்பமும் ஒரு ஜாலம்.
அதுவே வாழ்க்கையின் சுவாசம்.

பழகிவிட்ட இல்லம் நமக்குச் சிறை.
தினசரி வழக்கங்கள் கைகால் விலங்குகள்.
நிரந்தரம் நம்மைக் கட்டிக்காக்கும் காவல்.
வீட்டுக்கு வெளியே கைநீட்டி அழைக்கும்
முடிவற்ற தொடுவானம், அதோ! 
ஒரு கட்டம்
அதில் அடுத்த கட்டத்தின் நுழைவாயில்
வழிகாட்ட பிரபஞ்ச சக்தி.
பரிச்சயங்களுக்கு விடைசொல்லி
பயணத்தைத் தொடர ஏன் தயக்கம்?

இறப்பும் ஒரு விடுதலை. 
முடிவற்ற பயணத்துக்கு முன் வரும்
பிரியாவிடை. 

ரஞ்சனி மேலோட்டமாகப் பார்வையை ஓட்டினாள். பிறகு, ஒவ்வொரு வார்த்தையாகப் படித்தாள். கடைசியில் ஒட்டுமொத்தமாக ரசித்தாள். அப்படிச் செய்தபோது ஓரக்கண்ணால் ப்ரணவை அளந்தாள். பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் இடுப்பைக் கட்டிக்கொண்ட சிறுவன். ஏழாம் வகுப்புவரை அவளிடம் கணிதம் கற்ற மாணவன். இப்போது பெரியவர்களுக்கு சரிசமமாக வாழ்க்கைப் பிரச்சினைகளை விவாதிக்கும் பதின்பருவப் பையன். ப்ரபாவுக்கு மட்டும் அல்ல, அவள் தோழிகளுக்கும் இளகிய மனமுடைய அண்ணன். பெருமிதத்தில் நெஞ்சு விம்மியது. ‘முகம்கொடுத்துப் பேசுவது இல்லை’, ‘அவன் அறையில் நாள்முழுக்க அடைந்துகிடக்கிறான்’, ‘வீட்டுப்பொறுப்பு கொஞ்சமும் கிடையாது’ என்று மற்ற பெற்றோர்கள் குறைசொல்வதைக் கேட்கும்போது தனக்கு வரும் மனத்திருப்தி. ஏழு கல்லூரிப் பாடங்கள் எடுத்து படிப்பே குறியாக இருக்கும் சீனப்பெண் முதல் எழுத்துக்கூட்டிப் படிக்கத்தெரிந்தால் போதும் என நினைத்த கால்பந்து ஆட்டக்காரன் வரை எல்லாரும் அவன் தோழர்கள். 'இத்தனை புத்திசாலியாக இருந்தும் ப்ரனவ் ‘நெர்டா’க இல்லையே” என்று தெரிஸா ஆச்சரியப்படுவது உண்டு. எல்லாவற்றையும் போல இதிலும் பெற்றோர;களின் முயற்சி பாதி, அதிருஷ்டம் பாதி. 
'எளிய வார;த்தைகள், ஆழ்ந்த தத்துவம். நீ அனுபவிச்சுப் படிச்சிருக்கேன்னு தெரியறது. கவிதை எதைக் காட்டறது?”
'உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதனால், வாழ்வின் ஒரே கட்டத்தில் உட்கார முடியாது. நகர்ந்துகொண்டே தான் இருக்கவேண்டும்.” 
'ரொம்ப சரி. அதனாலதான் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு என்று பாடங்களை உன்மேல திணிக்கல. வாழ்நாள் முழுக்க பயன்படும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.” 
'தாங்க்ஸ், மாம்! குழந்தைகளுக்கும் இது பொருந்தும். ப்ரபா ஒருவார்த்தை பேசினப்ப நமக்கு ஒரே ஆச்சரியம். அந்த அதிசயத்திலேர்ந்து நாம் விடுபடுவதற்குள் அவள் முழு வாக்கியமே பேசிவிட்டாள்.”  
'அப்புறம்...”
'நம் முன்னோர்கள் ஒரு இடத்தில் நிலைத்து வாழாமல் நாடோடிகளாகத் திரிந்தார்கள். ஒருநாள் போல இன்னொரு நாள் இராது. புதிய சூழல்கள், புதிய சவால்கள். அவர்கள் வாழ்க்கையே இக்கவிதை. ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப செய்து ஒரு இடத்தில் நிலையாக வீடுகட்டி வாழ்கிற நமக்கு இந்த அறிவுரை மிக அவசியம்.” 
'நீயும் பிரபாவும் காலேஜ் போனதும் இந்த வீட்டை எங்க ரெண்டு பேர் உபயோகத்துக்கு மாத்தறதா இருந்தேன். இந்த இடத்தில தையல் மெஷின், அந்த மூலையில படங்களுக்கு ஃப்ரேம் போடற வேலை, கீழ் அறையில் அப்பாவின் பூஜைக்கு விக்கிரகங்கள், இப்படித் திட்டம் போட்டிருந்தேன். நீ சொல்றபடி பார்த்தா, இந்த வீட்டில நிலைச்சு நிற்காம தாற்காலிக வாழ்க்கைக்கு நாங்க மாறணும்…”  
கல்லூரி நூலகத்தின் புதுப்புத்தக அலமாரியில் ராஜேந்திர பிரசாதின் கவனத்தை ஈர்த்த ‘அன்வீவிங் த ரெய்ன்போ’எடுத்துவந்து ப்ரணவிடம் கொடுத்தார் அப்பா. ஒருவாரம் போனதும்...
'எப்படி இருக்கு?”
'ரிச்சர்ட் டாகின்ஸின் வார்த்தைப் பிரயோகம், வாக்கிய அமைப்பு இரண்டும் பிரமாதம். பரிணாமத்தின் கடினமான தத்துவங்களை எல்லாரும் புரிந்துகொள்ள அவர் எழுதிய புத்தகங்கள் பிரபலமானவை.” 
'இது...” 
'பிரதான கருத்து எனக்குப் பிடித்தது. வானவில் நீர்த் திவலைகளில் சிதறும் சூரியவொளி என்ற அறிவியல் விவரம் தெரிந்தால் அதை ரசிக்க முடியாது என்ற கீட்ஸின் கவிதை சரியில்லை, சொல்லப்போனால், நம் ரசனை இன்னம் கூடுகிறது. வானவில் ஒளித்தோற்றம் என்பதால் அது முடிகிற இடத்தில் தங்க நாணயங்கள் நிறைந்த பானை இருக்குமோ என்று தேடவும் வேண்டாம்.”
மத இலக்கியத்தில் பற்றுவைத்த சரித்திரப் பேராசிரியர் தந்தைக்கும் அறிவியலில் ஆர்வம் பிறந்த மகனுக்கும் சிலகாலமாக கருத்து வேற்றுமை. 
'வாழ்க்கையில் புதிர் இருக்கத்தான் வேண்டும். இயற்கையின் எல்லா ரகசியங்களையும் நாம் புரிந்துகொள்ள முடியாது. மனித உணர்ச்சிகளுக்கு அறிவியல் விளக்கம் சொல்ல முடியுமா?” என்று சவால் விட்டார்.
'உண்மைதான். டாஸ்டயாவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் செய்ததை எந்த விஞ்ஞானியும் செய்ய முடியாது. ஆனால், நிச்சயமாகத் தெரிந்த விஷயங்களை அலட்சியம் செய்வது அறிவீனம். மில்டனின் ‘பாரடைஸ் லாஸ்ட்’டை எடுத்துக் கொள்வோம். பூமியை மையமாகக் கொண்ட பிரபஞ்சமும், வற்றாத கந்தகம் எரியும் நரகமும் எவ்வளவு அழகாக வர்ணிக்கப்பட்டாலும் எனக்கு பிரமாதமாகப் படவில்லை” என்று அவன் அவரை வம்புக்கு இழுத்தான்.
'அறிவைவிட கற்பனாசக்தி முக்கியம் என்று ஐன்ஸ்டைன் சொல்லி இருக்கிறார்.” 
'இரண்டையும் ‘எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம்’ போல அளவோடு கலக்கினால் ரசிப்பேன்.”
'சரி, நியூட்டனின் விதிகளைக் கவிதையில் வடிக்கமுடியுமா?” என்று அவர; அவனை மடக்கினார;. 
'அதற்கு கணித சமன்பாடுகள் தேவை. ஆனால், ‘உயிரினங்களின் தோற்றம்’ ஒரு உரைநடைக் காவியம்.” 
'சரி, இந்தப் புத்தகம் எப்படி?” 
'பல இடங்களில் பிரதான கருத்தில் இருந்து விலகிப் போகிறது. அவற்றை நீக்கியிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.”    
'நாவலோ கட்டுரைத் தொகுப்போ கையில் கணிசமாக முன்னூறு நானூறு பக்கம் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்கள். ராபின் குக் நாவல்களில் பாதியை தள்ளிவிட்டுத்தான் நான் படிப்பேன். அந்த நல்ல காரியத்தை அவரே செய்திருக்கலாம்.”  
விவாதம் சமரசமாக முடிந்தது.
••

amarnakal@gmail.com

Tuesday, June 20, 2017

திருவையாறு
(நன்றி குங்குமம் வார இதழ்)
எஸ். சங்கரநாராயணன்
 ண்மூடிக் கிடந்தாலும் சூட்சுமம் மெல்ல தாமரையாய் மலர்ந்தது. சூரியனை மனசு உள்வாங்கிக் கொண்டதோ. இது எந்த நாழிகை தெரியாது. ராம ராம என மனசில் துடிப்பு. கண்ணைத் திறக்கா விட்டாலும் மனம் முதலில் விழித்துவிட்டது. வெளியே எங்கோ பெயர் தெரியாத பறவை ஒன்று சிறகடித்து சிற்றொலி ஒன்றை எழுப்புவதைக் கேட்டார். ட்விட். தேன் சொட்டினாப் போல! என்ன ஸ்வரம் அது, என்று  மனசு யோசித்தது. உலகின் ஒலிகள் ஸ்வரங்களால் ஆளப்படுகின்றன. வாழ்க்கை சுருதியிலும் ஸ்வரங்களிலுமாகப் பிரித்தாளப் பட்டு பிணைக்கப் பட்டுக் கிடக்கிறது. பகலைவிட இரவின் பிரத்யேக ஒலிகள் அற்புதமானவை. பிசிறற்ற அவைகளின் துல்லியம் கவிதைத் திவலைகள்.
காற்றில் ஒலிகள் பிறந்தபோதே இசை உருவாகி விட்டது. ஒலி இசையாகிற போது மனம் இணக்கநிலைக்கு இளகிக் கொடுக்கிறது. மெல்ல எழுந்து உட்கார்ந்தார். கண்ணைத் திறக்கவில்லை. உள்ளங்கைகளைத் தேய்த்து சூடு பண்ணிக் கொண்டார். அப்படியே கண்ணில் வைத்துக் கொண்டார். உள்ளங்கைகளைப் பார்த்துவிட்டு எழுவது அவர் பழக்கம். புகைப்படப் பெட்டியைக் கருப்புத் துணி போட்டு மூடி யிருந்தது. வெளியே இருட்டு இன்னும் விலகவில்லை. சாதனங்கள் முடிக்கப் படாத ஓவியம் போல எல்லைக் கோடுகள் மாத்திரமே அடையாளப் பட்டன. மீதியை நாம் யூகிக்கிற அளவில். இயற்கையின் இந்த விளையாட்டை ரசித்தார் அவர். ரசனை பொக்கிஷங்களை மனசில் கொண்டுவந்து நிரப்புகிறது.
சில ஆனந்த கணங்களில் இரவு தூக்கம் விலக தன்னியல்பாய் முழிப்பு வருவதும் உண்டு. பூஜையறையின் துளசியும் சாம்பிராணியும் கற்பூரமும், சுகந்த வாசனையுடன் அவரை அழைக்கும். அகல்விளக்கின் சிற்றொளியில், வில்லேந்திய ஸ்ரீ ராமன் விக்கிரகம். பொன் மினுங்கல். அந்த இருளிலும் அவன் புன்னகை அவருக்கு மனசில் தட்டும். ஸ்ரீ ராமன் ஆளும் இல்லம். எப்பெரும் பேறு இது, என நெகிழ்வார்.
மௌனமான தம்புரா தானே இயங்க ஆரம்பித்தா மாதிரி அவருள் ரும்ம் என்ற அதிர்வு. தம்புராவை எடுத்து வைத்துக்கொண்டு விக்கிரகம் முன் அமர்வார். எத்தனை நேரம் கண்மூடி அப்படியே ஆழ்ந்து கிடப்பார் தெரியாது. ரும்ம் என்ற சுருதி அறையைச் சுற்றி வரும். மனம் மெல்ல வாசனைப் புகை போல ஸ்வரங்களைக் கிரணவீச்சு வீசும். ஸ்வரங்கள் அடுக்கடுக்காக அறை முழுசும் அசைந்து நெளிந்து ஆடும். எப்போது ஸ்வரங்கள் வார்த்தைகளாய் உருமாறின அவருக்கே ஆச்சர்யமாய் இருக்கும். இந்தக் கீர்த்தனைகள்... இவையெல்லாம் என்னில் இருந்தா வந்தன... ஸ்ரீ ராமன் அவனே அருளி என்னை இயக்கிக் கொண்டிருக்கிறான். சொல்லும் அவனே. செயலும் அவனே. கண் பனிக்கப் பனிக்க திரும்ப தம்புராவைக் கீழே வைக்கும் போதுதான் உலகம் மீண்டும் அவர் கண்ணுக்கு, புலன்களுக்கு வரும்.
இசையே அவரது இரத்த நாளங்களில் சலசலத்துப் பாய்கிறதோ என்னவோ? சன்ன சரீரம். உடலே வற்றி ஆனால் கண் மாத்திரம் கங்கு போல் மினுக்கங் காட்டியது. நடையிலேயே கனவுச் சாயல் வந்திருந்தது. உலகே ஆனந்த மயம். ஆனந்தம் தவிர வேறில்லை. ஒருமுறை ஸ்ரீ ராமர் கோவில் பிராகாரத்தில் அமர்ந்திருந்தார். பொழுது இருட்டி சுதாரிக்குமுன் மழை பிடித்துக் கொண்டது. வானுக்கும் பூமிக்குமான அருட் கொடை அல்லவா இது? தலைமேல் கூப்பிய கையுடன் கண்மூடி அப்படியே ஆடினார். தன்னை மறந்த நிலை அது. பிராகாரம் சுற்றி வந்தார். பகவான் ஸ்ரீ ராமனை மனசில் சித்திரம் போல் தீட்டியபடியே நடந்தார். பிரக்ஞை மீண்டபோது கீர்த்தனை ஒன்று பாடியிருந்தார். பகவான் நினைத்த முகூர்த்த வேளைகளில் நான் விளைகிறேன்! அவருக்கு உடல் சிலிர்த்தது. அப்படியே சந்நிதியில் மடிந்து வணங்கினார்.
அதிகாலைகளோடு அவருக்கு நினைவு தெரிந்த நாள் முதலான பரிச்சயம். ஸ்ரீ ராமர் கோவிலைத் தாண்டி தோப்பு வழி இறங்கிச் செல்ல காவேரி. காவேரியில் ஸ்நானம் முடித்து உடல் நடுங்க நடுங்க வாயில் நாம சங்கீர்த்தனம் உருளும். சூரியப் பசு மடியில் இருந்து சிறிது சிறிதாகப் பால் பீய்ச்சும் வைகறை. விடியலின் ரச்மிகள் நீள பூமியில் பரவ ஆரம்பிக்கும் நேரம் கோவிலில் இருந்து அவர் உஞ்சவிருத்தி கிளம்புவார். தலையில் முண்டாசுக் கட்டு, பின்பக்கமாக, விரிந்த கூந்தலாய் அங்கவஸ்திரப் பதாகை. ஒருகையில் தம்புரா. மறுகையில் சிப்லா. வீதியே நாடகமேடை. தன்னை மறந்த ஆனந்த அசைவுகளில் இசைப்படகு.
மனம் தளும்புகிறது. நாழியாகி விட்டது, என எழுந்துகொண்டார். வாழ்க்கை நியதிப்பட்டிருந்தது. அவரது சிற்றுலகம் ஆழப்பட்டிருந்தது. ஆழப்படுத்திக் கொண்டார் அவர். ராமனைத் தவிர அவருக்குத்தான் என்ன தெரியும்?... ஆனால், ஆகா ராமனைத் தெரியுமே, என தேரை நிலை நிறுத்திக் கொண்டிருந்தார். வேறு உலகம் இல்லை. வேறு உலகம் அவருக்கு துச்சமானது. அவரது சங்கீத ஞானத்தை உணர்ந்து, பாடல் புனையும் ஆற்றலை அறிந்து தனவந்தர் ஒருவர் பெரும் நிதியம் தந்து தன்னைப் பாடச் சொல்லி செய்தி அனுப்பினார்... மறுத்து விட்டார் அவர். அப்பனைப் பாடும் வாயால் சுப்பனைப் பாடுவதா?
நிதி சுகம் அல்ல. எது சுகம்? சந்நிதியே சுகம்.
வெளியே இறங்க தெருவே அமைதியாய்க் கிடந்தது. சிறு குளிர் ஊடுருவிய இருள். புல்லில் கொட்டிய பனியை வைரமாய்ப் பொதிந்து பாதுகாத்து வைத்திருக்கிறது இருள் எனும் கம்பளிப்போர்வை. கால் சில்லிட்டது. குதிகாலைக் கூசச் செய்யும் அதிகாலைக் குளிர். வஸ்திரத்தை இழுத்துப் போர்த்திக் கொண்டார்.
ஸ்ரீ ராமனோடு மனம் ஐக்கியப் பட்டதும் தனிமை உணர்வு இல்லாமல் ஆயிற்று. அதுவரை சாமான்ய லௌகிக உறவுகளோடு இருந்த உறவு, வீர்யம் இழந்து போயும் இருக்கலாம். அவனுக்கு, ஸ்ரீ ராமனுக்குப் பணிவிடை செய்கிறாப் போலவும், சிலசமயம் அவனே பணிவிடை செய்கிறாப் போலவும் மனசு விதவிதமாய் யோசிக்க ஆரம்பித்திருந்தது. பகவான் ஸ்ரீ ராமனுடன் பேசிக்கொள்ளக் கூடச் செய்தார். வேடிக்கை பண்ணினார். நெகிழ்ந்து பரவசித்து உருகினார். தனிமை உணர்வு அறவே இல்லை.
தோப்புப் பாதையாய்க் கிடந்த இடத்தில் முழுசுமாய் இருட்டு. ஒரு குகைக்குழி போல் கண்டது. ஓரத்து மரங்கள் போர்வை போர்த்தி நின்றன. சிறு சரளைக்கற்களை பாதரட்சைகளுக்கு அடியே உறுத்தலாய் உணர்ந்தார். உதடுகள் தாமாக ராம ராம என்று ஜெபித்துக் கொண்டிருந்தன. தன்னியல்பாகவே அது அவர் அறியாமல்கூட நிகழ்ந்து விடுகிறது. அத்தோடு அன்றைக்குத் தோன்றிய புதிய ராகம் எதோவொனறின் சிற்றலை அவரில் மோத ஆரம்பித்திருந்தது. இந்தக் கோர்வைகள் வேறொரு முகூர்த்த வேளையில் கிருதியென ஜனிக்கும். மௌனத்தையே சுருதியாய்க் கொண்ட அபூர்வ மனசு அது.
படித்துறையில் ஆளே இல்லை. தோப்பைத் தாண்டியதுமே நீரோடும் சலசல, என்கிற திகட்டலான ஒலி. அந்த கிசுகிசுப்பே உள்ளங்காலில் கூச வைத்தது. நீர் உலகின் அற்புதம். பகலின் கலவை ஒலிகளில் கேட்கா ஒலிகள் இரவின் அமைதியில் தனி அழகு காட்டுகின்றன. உத்திரியத்தை அவிழ்த்தார். யாரும் இல்லாப் பெருவெளி. நீரின் முதல் ஸ்பரிசத்தை ஓர் ஆர்வத்துடன் எதிர்பார்த்து முதல் படித் தண்ணீரில் கால் வைத்தார். சிலீரென்று அது ஒரு குளிர் அலையை உள்ளே பாய்ச்சியது. அந்த இன்பலகரியில் நீருக்குள் பாய்ந்தார். சரசரவென்ற வெள்ளம். என்ன வேகம். என்ன மூர்க்கம். சுதாரிக்கா விட்டால் ஆளைத் தள்ளிக் கொண்டுபோய் எங்கோ எறிந்து விடும். அதில் தொலைந்து போனவர் அநேகம். இரு கரைகளையும் தழுவி நழுவிக் கொண்டிருந்தது நதி. ஸ்ரீ ராமனின் கருணைப் பிரவாகம். அப்படியே அதில் மூழ்கி உள்ளேயே தம் பிடித்துக் கிடந்தார். அந்த ஓட்ட வேகத்தில் அதிகாலையில் குளிப்பது நாள்முழுசுமான சுறுசுறுப்பைத் தர வல்லதாய் இருந்தது.
தானும் நீருமான உலகு. அந்த நீருக்குள் தானும் கலந்து கரைந்துவிட விரும்பினாப் போல. உலகின் பிரம்மாண்டத்தின் சிறு துளி நான், என்று மமதை அழியும் நேரம் அது. இயற்கை எப்பவுமே எதையாவது குறிப்புணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது. மனக்காதுகள் தயாராய் இருக்க வேண்டியிருக்கிறது. மூழ்கி சடாரென்று அவர் மேலெழுந்தபோது அவரைச் சுற்றி ஸ்வரங்கள் சிதிறினாப் போலிருந்தது. என்ன ஆனந்தமடா இது. புதிய ஸ்வரக் கோர்வைகள் அவருள் உருண்டு திரள ஆரம்பித்தன. ஆரோகண அவரோகணமாய் அவர் நதியில் மூழ்குவதும் எழுவதுமாய் இருந்தார்.
நதிநீராடல் நியதிகளுக்கு நல்ல துவக்கத்தைத் தருகின்றன. எழுந்து தன்னுடையதையும், பகவான் ஸ்ரீ ராமனுக்கு இடுப்பில் உடுத்திவிடும் கச்சையையும் அலசிப் பிழிந்து தோளில் போட்டுக்கொண்டார். நீரில் இருந்து வெளியேறிய ஜோரில் உடலில் ஒரு வெடவெடப்பு. சிறிது நேரத்தில் இதுவும் பழகிவிடும். வாயில் ஸ்வரங்கள் பின்னி ஒரு மாலைபோல் உருவம் திரண்டன. சிறு நடுக்கக் குளிரில் குரல் சிறிது அலைந்தது. உள்ளங்கையில் மையாய் சந்தனத்தைக் குழைத்து ஸ்ரீ சூர்ணம் இட்டுக்கொண்டார். ராம ராம.
படியேறி மணல் புதையப் புதைய நடை. ஈரமணல் காலில் சிறிது ஒட்டியது. மண் இறுகிய சரளை மேடு. வீட்டைப் பார்க்க நடந்தார். மனம் பூத்த நேரம் அது... அந்த ஸ்வர அடுக்குகளை மணக்க மணக்க உச்சாடனம் செய்தபடியே வந்தார். வழியில் நந்தவனம் ஒன்றில் நுழைந்து கிடைத்த புஷ்பங்களைக் குடலை ஒன்றில் பறித்துப் போட்டுக் கொண்டபடியே வந்தார். வீட்டின் புழக்கடைத் தோட்டத்தில் துளசி மண்டிக் கிடக்கிறது. போய் அதையும் பறித்துக் கொள்வார். துளசியும் புஷ்பங்களுமாய்த் தானே மாலை கட்டி ஸ்ரீ ராமனுக்கு அணிவிப்பதில் தனி ஆனந்தம் அவருக்கு. வாயில் புரளும் ஸ்வர ஆலாபனை அந்த இருளில் சிறு கிளை ஒன்று மரத்தில் இருந்து அட, என தலையாட்டுவதாய்க் கண்டார். புன்னகை செய்து கொண்டார். சில சமயம் ஸ்ரீ ராமனும் கூட அவரது பாடலைக் கேட்டுக்கொண்டே வருகிறாப் போலவெல்லாம் இருக்கும். அந்த சந்தர்ப்பங்களில் சட்டென்று ஸ்வரங்கள் பாடலாக உருமாறுவதை அவர் ஓர் வியப்புடன் உணர்வார். “நனுபாலிம்ப... நடசி வச்சி...” எனக்காக நடந்து வந்தாயா ராமா!... என நெகிழ்வார்.
உலகே மறந்து பசியே மறந்து உஞ்சவிருத்தியில், இதே ஆனந்தத்தில் திளைத்து, ஸ்ரீ ராம ஸ்மரணையில் இப்படியே காலம் முடிந்து விடாதா என்றிருந்தது அவருக்கு. உலகே ஸ்ரீ ராமன். நான் அவனில் சிறு பகுதி. அவனே நான். நானே அவன். எப்பெரும் நிலை அது.
மௌனத்தை நிரப்பிக் கொள்ளும் மனசு. ஸ்வரங்கள் மௌனத்தை நோக்கி நகர வைக்கின்றன.
தூரத்தில் எங்கோ பாட்டுச் சத்தம் கேட்டது.
இந்த இருளில் என்ன இது, என்பது முதல் வியப்பு. இது காலையா இளம் இரவா? கால்கள் தன்னியல்பாக அந்த திசைக்கு நடைபோட்டன. அவர் அறியாத, அவர் கற்பனையே செய்யாத வேறு சாயலில் எதோ பாடல். தூரத்தில் கேட்கும் நதியின் ஓசை போல. இந்த இசை எங்கிருந்து வருகிறது.
அவருக்குப் பரிச்சயமே இல்லாத இடம். பரிச்சயமே இல்லாத மனிதர்கள். நம்ப முடியாமல் எல்லாவற்றையும் அவர் பார்த்து விக்கித்து நின்றார்.
மகா வெளிச்சமாய்க் கிடந்தது அரங்கம். கண்ணே கூசும் வெளிச்சம். செயற்கை சூரியன்கள். திடல் கூட அல்ல. அரங்கம். இத்தனை வெளிச்சத்தை அவர் பார்த்ததே கிடையாது. மேடையில் யாரோ பெண்மணி. மகாராணி போல வீற்றிருந்தாள். மூக்கிலும் காதிலும் கழுத்திலும் ஜ்வலித்தன நகைகள். அலங்காரமும் பாவனைகளும் எடுப்புகளும் அரிதாரப் பூச்சும் அவரை மூச்சுத் திணற வைத்தன. கீழே ஏராளமான நாற்காலிகளில் ரசிகர்கள். எல்லாருமே மேட்டுக்குடி பெருமக்கள். பட்டும் பகட்டும் பீதம்பரமும் சீரழிந்தன. கச்சேரி நடக்கிறது!
இசைக்கு இத்தனை வெளி அலங்காரங்கள் தேவையா என்ன, ஸ்வர அலங்காரம் அதுவே போதாதா என்றிருந்தது அவருக்கு. என்ன பாடல், புது மோஸ்தரில் இவள் பாடுகிறாள். “நனு பா லிம்ப... நட சி வச்சி...” அவர் பாடல்தான். இரக்கமும் உருக்கமுமாய் அவர் பகவான் ஸ்ரீ ராமன் முன்னால் அமர்ந்தபடி, எளிய வஸ்திரம் ஒன்றை அவன் விக்கிரகத்துக்குச் சாத்தியபடி நெகிழ்ந்துருகி கசிந்து அளித்த பாடல். இந்த மேடை. இந்த படாடோபம். இந்த வெளிச்சம். இப்படியான பெரிய அரங்கம். அதற்கானதா இது? அதற்காகவா அவர் பாடினார்?
திரும்ப இருளில் நடக்க ஆரம்பித்தார். பூக்குடலை கனத்தது. உஞ்சவிருத்திக்கு நாழியாகி விட்டது. நனுபாலிம்ப... அவர் பாடிப் பார்த்தார். அவர் பாடலே அவருக்கு என்னவோ போலிருந்தது.
*

91 97899 87842