Wednesday, May 27, 2015

சிறுகதை - லா ரி

சிறுகதை


லாரி
எஸ். சங்கரநாராயணன்

துணிகள் என்று எடுத்துக் கொள்ள அதிகம் இல்லை. ஒரு கதர் வேட்டி, அரைக்கை ஜிப்பா. பொடி மட்டை, அது இல்லாமல் முடியாது. எடுத்துக்கொண்டார். பரபரவென்று பட்டையாய்த் திருநீறு பூசினார். கிளம்பிவிட்டார்.

வெளிய ரொம்ப குளிராக் கெடந்தது. செருப்பில்லாத கால்களில் பருக்கைக் கற்கள் குத்தின. இங்கேயிருந்தது கூத்தப்பாலம் மெய்ன் ரோடு வரை செண்மண் ரோடுதான். ஒரு சின்ன மழைக்கும் நாறிப்போகும். மனுசன் நட்க்க ஏலாது.

மணி ஒண்ணு இருக்குமா? பன்னிரண்டு எப்பிடியும் தாண்டிருக்கும். தெரு நீண்டு வெறிச்சுக் கிடந்தது. சக்கரக் கோனார் தொழுவத்தில் சிவத்த நாய் குளிருக்காக எருமை மாட்டோடு ஓட்டிப் படுத்திருந்தது. உண்மையில் குளிர் அதிகம்தான். காலை எட்டிப் போட்டு நடக்கையில் வேட்டி விலகி, முன்வந்த காலில் குளிர் ஆவேசமாய்ப் பாய்ந்தது. காதிலிருந்து பீடியெடுத்துப் பற்ற வைத்தவாறே ‘ஓஹ்’ என்றபடி வானத்தைப் பார்த்தார். உப்புக் கட்டிய நார்த்தங்காய் மேகத் துணுக்குகள். குலுக்கி வீசப்பட்ட நட்சத்திரச் சோழிகள்... காற்றின் ஜில்லிப்பு தாங்காமல் முண்டாசை அவசரமாய்க் கீழே இறக்கி விட்டுக் காதுகளை பத்திரப்படுத்தினார்.

லாரி ஓடிக் கொண்டிருந்தது. ‘ஒரு பாட்டு பாடு தருமு’ என்றான் அவன். அவனுக்கு போரடித்தது. ரொம்பத் தொலவெட்டுலேந்து அவர்கள் வருகிறார்கள். ஒருவன் களைப்பாய் உணர்கையில் அடுத்தவன் வண்டியை ஓட்ட சார்ஜ் எடுத்துக் கொள்ளுவான். இவன் பழனி. அவன் தருமன்.

தருமு பாடினான். அவனும் அலுத்திருந்தான். ஆயினும் பாடினான். அதிகச் சத்தமில்லாமல் லாரிக்குச் சற்று உரக்கப் பாடினான். சுமாரான, ஓரளவு தூக்கக் குரல். மெதுவாய்ப் பாடினான். பாடியபடியே தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொள்ள முன்னும் பின்னும் ஆடினான். ஆடியபடியே முதலுதவிப் பெட்டியைத் திறந்தான். பாட்டிலில் தமிழக அரசு முத்திரையிட்டு ஆசி வழங்கியது. திறந்து அப்படியே வாயில் ஊற்றிக் கொண்டான். வாயைத் துடைத்துக் கொண்டபடியே ‘ஹ’ என்றான் ‘கூட தனலெச்சுமி இருந்தா... ஹ’ என்றான்.

‘தனலெச்சுமி இப்ப எவனாவது குப்பனையோ சுப்பனையோ சேத்துக்கிட்டு...’

‘ஹ’ என்றான் தருமு. ‘வா - வா - வசந்தமே... ஸூகந்தரும்... ஹ’

‘பொல்லாதவன் பாத்தியா மாப்ள.’

முள்ளுக் காட்டுப் பக்கம் பன்னியொண்ணு குட்டி போட்டிருக்கும் போல. தாண்டிப் போகையில் எச்சரிக்கை அடைஎது ‘ர்ர்ர்’ என்றது. ஒதுங்கிப் போனார் அவர். லேசாய் இப்போது முன்னிலும் தீவிரமாய் இருட்டு கவியத் துவங்கியது. நட்சத்திரங்களைச் சுற்றி வளைத்து மேகங்கள். கீழைக்காற்றின் வேகத்தில் குளிர் உடம்பை எறும்பாய்க் கடித்தது. கை கால்களின் மயிர்கால்கள் விரைத்துக் கொண்டு குத்திட்டு நின்றன. ரொம்ப நாளாய் ஆடிக் கொண்டிருந்த இடது கடவாய்ப் பல் கூச்சமெடுத்து வலித்தது. வாத ஒடம்பு. மூட்டுக்கள் பிடித்துக் கொள்ளும்... அது வேறு இருக்கிறது இன்னும். கைகளை விறுவிறுவென்று தேய்த்து சூடேற்றிக் கொண்டார் இன்னொரு பீடிக்குத் தேடினார். காதில், சட்டைப் பையில், இடுப்பில் தேடினார். கிடைக்கவில்லை. குளிர் இன்று அதிகம்தான். மழை வேறு வரும்போல... ஆனால் எப்படியும் போயாவணுமே.

இதோடு மெய்ன் ரோடு வரை நல்ல மேடு. சரியான ஏத்தம். சைக்கிளிலேயே எறங்கித் தாம் போவாங்க. சரளை பூமி. வயல்களை வளைத்துக் கொண்டு சாரைப் பாம்பு போல நீள ஓட்டம் ஓடும். வெளிச்சமேயில்லை. பள்ளம் மேடு தெரியாமல் தட்டுத் தடுமாறி நடந்தார். தவளை ஒன்று ‘கக் கக் கக்’ என்றது. தவளைகள் வெற்றிலை போடுவதைப் போல ஒலிகளைக் குதப்பி அனுப்புகின்றன. எப்பா என்ன குளிர். நல்ல மேடு. அவருக்கு மூச்சு முட்டியது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டார். நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது. எங்காவது உட்கார்ந்து விட்டுப் போனால் தேவலை. கால்கள் மயங்கி சண்டித்தனத்துடன் உடம்பைத் தள்ளிற்று. வயசுன்னாப்புல கொஞ்சமா? இந்த வயசுல அவனவன் தொங்கிப் போறான். பல்லு கட்டிக்குவான். கண்ணாடி கொண்டா, தடியக் கொண்டான்னிட்டுத் தேடுவான்...

நிமிர்ந்து பார்த்தார். உயரத்தில் கூப்பிடு தூரத்தில் மெய்ன் ரோடு தெரிந்தது. விளக்கு வெளிச்சம் பகலைப் போல. அவர் எங்கேயும் உட்காராமல் தொடர்ந்து ஏறினார். கால்கள் மருண்டன, கிடுகிடுவென்று ஆடின. உள்ளங்கையால் முட்டிகளை அழுத்தியபடியே நடந்தார்.

‘பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?’

‘என்னாங்கடா இந்த குளுரு குளுருது’ என்றபடியே பழனி மப்ளரை காதுக்குக் கீழே இழுத்து விட்டுக்கொண்டான். ‘பூரா தீத்துட்டியா?’

‘இல்ல இந்தா.’

‘தமிழ்நாடு அவ்ள கிக் இல்லாடா... எங்க்கூர்ல காலைல நாலு மணி நாலரை மணிக்குப் போவம்டா. பனையேறி அப்பவே வடிச்சிக் குடுப்பாம் பாரு, அதான்டா கிக்கு. ஒரு நாப் பாரு...’’

‘பாத்து ஓட்ரா டேய்.’

நரியொண்ணு குறுக்கே புகுந்து ஓட்டமெடுத்தது. பிரம்ம சமுத்திரம், கோழிஞ்சேரி ரூட்டில் கீரிகள் ஓடும் இப்படி, பூந்துறை, கோதையூர் பகுதிகளில் முயல்கள் துள்ளித்திரியும். மனுஷபயம் இல்லாமல் ராத்திரி ஜோராய் ஓடிச்சாடும்.

‘ஒரு நா என்னடா?’

‘என்னது?’

‘என்னமோ சொல்ல வந்தியே?’

மேடு ஏறுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. தொடைகளில் சரியான வலி. ஓதம் வேறு. கனமான கனம். அவருக்கு மூச்சுத் திணறிற்று. ‘ஆஹ்’ என்று காறித் துப்பினார். வந்திட்டது வந்திட்டது என்று சமாதானப்படுத்திக் கொண்டே ஏறினார். சரளைக் கற்கள். காலை குத்திக் கிழித்தன. எங்கெல்லாமோ வலி. குளிரான குளிர். காற்றில் சிறு தூறல்கள் சிதறி அவர்மேல் மோதிய போது சிலிர்த்தது. பெரிய சிட்டிகையாய் விரல் கொள்ள எடுத்து மூக்கில் அழுத்தினார். நல்ல காரம். சுறுசுறு என்று ஒரு பாம்பு கிளம்பி மூளையில் கொத்தியது. கண்ணீர் தெறிக்க பெரிய தும்மலென்று வெடித்தது. அப்படியே பொடியைப் பல்லிலும் இழுவிக் கொண்டார்.

தெருவோடு கட்டை வண்டியொன்று ஆடியாடிப் போயிற்று. மாடுகள் சாவகாசமாய் நடந்தன. வேட்டியையே போர்த்திக் கொண்டு வண்டிக்காரன்  தூங்கிக் கொண்டே போனான். வண்டிக்குக் கீழே சிறு வெளிச்சத்துடன் அரிக்கேன் விளக்கு ஆடியாடிப் போனது.

‘வண்டீய் வண்டீய்’ என்று கத்தினார். அவன் எழுத்து கொள்ளவில்லை. இவரால் ஓடிப்போய் எட்டிப் பிடிக்க முடியவில்லை. நெஞ்சு வலித்தது. நடந்து வந்த அசதி. களைப்பு. அகாலத்தில் வந்த தந்தியும் அதனாலான விழிப்பும், நடையும்... அதைப்பத்தி இல்ல. வண்டி கெடச்சாக் கூட கமலக்குடி வரப் போயிட்டா லாரி எதுனாச்சும் ஆம்புடும். போயிச் சேந்திரலாம்.

தெற்கே திரும்பிப் பார்த்தார். வண்டியெதுவுமில்லை. போய்ப் புளிய மரத்தடியில் மூணு நிமிஷம் தொடர்ச்சியாய் ஒண்ணுக்கிருந்து விட்டு வந்து, தெருவோரம் குத்திட்டு உட்கார்ந்தார். காத்திருந்தார்.

‘மாயாண்டின்னு ஒத்தன். எங்கூட அப்ப ஏழு எட்டு கிளாஸூ வர கூடப் படிச்சான். அப்பால அவன் போலீசு வேலைக்கிப் போட்டுப் போய்ச் சேர்ந்தான்னு வெய்யி.’

‘ஏ நீ தனலெச்சுமியோட தங்கச்சியப் பாத்திருக்கியா?’

‘கதயக் கேளுடா நீயி. அப்பல்லா எனக்கும் மாயாண்டிக்குந்தா பந்தயம். முளுசா ஒரு படி, அப்பிடியே குடிக்கோணும்...’

‘ஏம் முடியாதா?’

‘ஒன்னால முடியுமா?’

‘ஹ’ என்றான் தருமு.

‘சரக்குன்னா இப்ப ஊத்திக்கினோமே இந்தக் கருமாந்தரம் இல்லடா, சுத்தமா அப்பவே மரத்துலந்து எறக்கினது.’

‘ஆனந்தா எங் கண்ணையே ஒங்கிட்ட ஒப்படைக்கிறேன்.’

‘சே. நடிகர் திலகம்னா சும்மாவா? இப்பப் போட்டாலும் இந்தப் படம் வசூல் அள்ளுது...’

‘கவினிச்சியா பழனி. கியரு கிளைட்சு சரியாப் புடிக்க மாட்டது. வண்டி எம்புது. பாத்துப் போ. ஊருக்குப் போயி களட்டிப் பாத்திறலாம். மொதலாளியப் பாக்கப் போறன்னியே, பாத்தியா? அட்வான்சு குடுத்தானா?’

அவர் ரெண்டு கையாலும் வண்டியை மறித்து நிறுத்தினார். ஹெட்லைட்டின் அதிக வெளிச்சம் கண்ணில் குத்தியது. தலையைக் குனிந்தபடியே வெளிச்ச நதியில் குளித்துக் கூசினார்.

வண்டி பெருங் குலுக்கலுடன் நின்றது. பின் பகுதிகள் அதிர்ந்து இரும்புச் சங்கிலிகள் கிங் க்ளாங் என மோதிக் கொண்டன.

‘பாட்டையா, வூட்ல சொல்லிட்டு வந்திட்டியா?’

‘தம்பி ஒரு அவசரய்யா, என்னிய வேம்படியில எறக்கி வுட்ருங்க, புண்ணியமாப் போவும்.’

‘பெரியவரு பஸ்ஸூ காச மிச்சம் பிடிக்கிறாரு டோய்.’’

‘அதில்லய்யா, பஸ்ஸூ காச நீதா வாங்கிக்க இப்பென்ன போச்சி. ரொம்ப அவசரந் தம்பி.’

‘என்னடா?’

‘ஓ இஷ்டம்’.

‘பெரியவரே, எது வரப் போறீங்க?’

‘வேம்படி! வேம்படி!... என்னப் பெத்தார ஏறிக் கிடட்டுமா?’

‘ஏறுங்க, ஜல்தி.’


இப்போ அப்போன்னு பாய்ச்சல் காட்டிட்டிருந்த மழை வந்தே விட்டது. சடசடவென்று சின்னதும் பெரிதுமாய் மழைத் தூறல்கள் அவர்மேல் சிதறின. அவர் குளிரில் நடுங்கினார். ஓதம், ஏற முடியவில்லை. கதவில் ஒரு கையும் பிடியில் ஒரு கையுமாய் ஏறமுனைந்தார். குளிர் உடம்பை ஆட்டியது. ‘எய்யா ஒரு கை குடு சாமீ ஈ...ஈ,‘ என்று இழுத்தார். தருமு அப்படியே அவரைத் தோளோடு தூக்கி உள்ளே வாங்கிக் கொண்டான். அதற்குள் ரொம்ப நனைந்து விட்டிருந்தார். ‘யாத்தாடி என்னமாத்தாங் குளுருது.’

‘இந்த மாறி ராத்திரில இப்படித் தனியா மாட்டிக்கிறாதே பெருசு, செத்துப் போவே’ என்றான் பழனி. ‘உங்கூரு எது?’

‘சாமிந்திக்கல்லு. மெய்னு ரோட்டுலேந்து உள்ற புகுந்து போவோணும்....ம்...ம்.’

கிழவனுக்குப் பற்கள் கிட்டிக்கொண்டன. நேரே உட்கார முடியவில்லை. குத்திட்டு உட்கார்ந்து கொண்டு பைக்குள்ளிருந்து வேறு வேட்டி எடுத்துப் போத்திக் கொண்டான்.

சீரில்லாத மழை. மழைத்துளிகள் சின்னதும் பெரிசுமாய் விழுந்தன. சில அப்படியே பனிக்கல்லாய் லாரியின் கண்ணாடியில் உடைந்து சிதறித் தெறித்தன. ஹெட்லைட் வெளிச்சத்தில் மழை விழுவது தெரிந்தது. ஒருச்சாய்ந்து விழுந்த மழையைக் காற்று வேறு திசைக்கு விரட்டிற்று. காற்றடிக்குந் தோறும் கிழவன் ‘ஊ.... ஊ’ வென்று சாமியாடினான்.

‘பீடி இருக்குதா தம்பி?’

‘குட்ரா, பாவம் நடுங்கறாரு.’

தருமு தனது லைட்டரால் அவரது பீடியைப் பற்ற வைத்தான். சின்ன ஒளியில் பெரியவரின் மூக்கு நுனி சிவப்பாய்ப் பளபளத்தது. வெள்ளி முட்களெனத் தாடியும், காலம் உழுத நிலமாய்ச் சில சுருக்கங்களும் தெரிந்தன.

‘திடீர்னு யாரோ கையக் காட்றாங்கன்ன ஒடனே நாங்கூட தனலெச்சுமி தானாக்கும் னிட்டில்ல பாத்தேன்...’

‘அவ இங்க எங்கடா வரப்போறா.... இந்நேரம் அவ எவங்கூடப் படுத்துக் கெடக்காளோ?’

தருமு கதவின் மேல் தார்ப்பாய் மறைத்து மூடினான். கதவின் ஓரத்தில் எறும்புவரிசையாய் நீர் முத்துக்கள். உள்ளே இறுக்கமாய் இருந்தது. அடைக்கப்பட்ட காற்றின் லேசான கதகதப்பு. பீடிப் புகை உள்ளேயே சுற்றி வந்தது.

‘போன வாரம் கடலூர் பாண்டி ரூட்டு நமக்கு.’

‘அப்பதா அவளப் பாத்தாப்ல...’

‘தனலெச்சுமியையா?’

‘அவ தங்கச்சிய-’

‘அவளே கூட்டி வந்தாளா?’

‘ஆமா - நல்ல கலரு. எம்மா என்ன ஒடம்புன்றே?’

‘அப்பிடியா?’ என்று பழனி அவனைப் பார்க்கத் திரும்பினான்.

‘ரோட்டப் பாத்து ஓட்டு தம்பி.’

‘பயப்டாத பெரிசு. ஒண்ணும் ஆயிறாது.’

‘இவ பேரென்ன?’

‘செல்லம்மா... ரோசாப்பூ ரவிக்கைக்காரி...’

‘எங்கூர்ல திருளாவுக்கு டிராமா ஆக்டிங் குடுக்க ஒத்தி வருவா பாரு. லலிதகுமாரின்னு பேரு. பிரசிடெண்டு வருஷா வருஷம் எப்பிடியும் அவளக் கூட்டியாந்திருவாப்ல. ஙொம்மாள, வசனமா பேசுவாளுக? என்ன பெரியவரே சிரிக்கிறீங்க?’

இப்போது குளிர் குறைந்திருந்தது. மழை வேகம் அடங்கியிருந்தது. மழைத் துளிகள் உத்தேசமில்லாமல் சிதறின. பழனி வைப்பரை நிறுத்தி விட்டான்.

‘என்னடா போதையே இல்ல? வேற பாட்டிலு கெடக்குதா?’

-ம் ....ம், ஒடைப்பமா?’

‘வேணாந் தம்பி - ’

‘கம்னிரு பெருசு. எட்ரா டேய்! வந்தநாள் முதல்’ இந்த நாள் வரை... அந்தப் படம் பாத்தியாடா?’

‘என்ன படம்?’

‘பாலும் பழமும்’

‘இல்லடா வேற ஏதோ படம்...’

‘அதேதாண்டா. ‘பா’வன்னாப் படம் பூராவுமே சிவாஜி ஆக்டிங் கொன்னுருவாண்டா...’

‘எங்க இருக்கு?’

‘தோ வரேன்’ என்று பழனி வண்டியை அப்படியே விட்டு விட்டு எழுந்தான். ‘பாத்து பாத்து’ என்று பெரியவர் அலறினார். வண்டி நிதானமில்லாமல் குலுங்கிக் குலுங்கி ஓடியது.

‘நீயேம் பெரிசு இப்பிடிப் பயந்து சாவறே? நாங்கதா இளந்தாரி. நாங்கதா சாவ பயப்படணும். நீ எல்லா அனுபவிச்சிருப்பியே?’

‘வேணுமா பெருசு?’

‘வேணா, வேணா, வண்டி ஓட்டும்போது குடிக்காதீங்கய்யா.’

‘ஹ’ என்றபடி தருமு வாயைத் துடைத்துக்கொண்டான். ‘பயமா இருக்குதா? இந்தா நீயும் போடு. ஷூம்மா வாங்கிக்க. பயமெல்லாம் பறந்துரும்... கண்ணத் தொறக்கணும் ஷாமீ...’

‘வண்டீய் பாத்து பாத்து’ என்று பெரியவர் கத்தினார். மாட்டு வண்டி மீது மோதிவிடாமல் சடாரென்று பழனி லாரியை ஒடித்தான். லாரி குலுக்கலும் துள்ளலுமாய் ஏராளமாய்த் திரும்பிக் கடந்தபோது மாடுகள் மிரண்டு ஓரத்துக்குப் பாய்ந்தன.

‘பயந்திட்டியா பெருசு.’

‘கண்ணுகளா எப்பவுமே வண்டி யோட்டும்போது நிதானம் வேணும் மொதல்ல, கேட்டிங்களா?’

‘-சொல்லுங்க!’

‘இப்பக் கேலியாப் படுது... சரிப்பா நாங் கெழவந்தா, பயந்தவந்தா... போங்க.’

மழை இப்போது விட்டிருந்தது. குளிரின் லேசான ஜில்லிப்பு இன்னும் மிச்சமிருந்தது. பழனி திரும்பி அவரைப் பார்த்துச் சிரித்தான். பின் வேண்டுமென்றே ஸ்டீயரிங்கை விட்டுவிட்டு ‘வணக்கம் பெரியவரே’ என்று கும்பிட்டான்.

‘கௌதம புத்தரு-’

‘வாழ்க!’

‘பெரிசு!’

‘வாழ்க!’

‘தனலெச்சுமி-’

‘வாழ்க!’

‘கிண்டல் பண்ணாதீங்க பையங்களா?’

‘ஒனக்கு எத்தன பொஞ்சாதி பெரீவரே?’

-த்ச்.’

‘சரி விட்டுர்றா - நேத்து சாயந்தரம் நாலு மணிக்கு வண்டில ஏறினது பெரியவரே, இன்னிக்கு மதியம் ‘கூத்தப்பாலம்’ போயித்தான் ஹால்ட்டு. ஒடம்பு என்னா வலி வலிக்குது தெரியுமா ஒனக்கு? தண்ணி போட்டு கொஞ்சத்துக்குத் தாவல. கூட ஆளுக வந்தா கலாட்டா பண்ணிட்டே பொளுது தெரியாமல் போய்ச் சேந்திர்லாம். முன்னால வண்டி வந்தா விர்ர்ருனு அதத் தாண்டறதுல ஒரு கிக்கு. எப்படியும் கீழ எறங்கறவரிக்கும் நேரம் போவணும்ல?’

‘டீ சாப்பிடுவோமாடா?’ என்றான் தருமு, சாலை ஓரம் ஒரு டீக்கடையைப் பார்த்துவிட்டு.

லாரியை நிறுத்திவிட்டு இறங்கினார்கள். பன், பொரை, பட்டர் பிஸ்கெட், பாட்டில்கள் அடுக்கிய சின்னக்கடை. பெட்ரோமாக்ஸ் பெரிய சீறலாய்ச் சீறிக்கொண்டு இருந்தது. இரண்டொரு பெஞ்சுகளும் மேஜையில் பழைய பேப்பரும், வெளியே கிடந்தன. பீடி, சிகரெட் பாக்கெட்டுகள் கல்லாவில் அடுக்கியிருக்க, நீளக் கயிறில் எல்லா பாஷையிலும் கெட்ட புஸ்தகங்கள் தொங்கின. உள்ளே வெறுந்தரையில் துணி விரித்து, ஒரு பெண்ணும் அவளது குழந்தையும் உடம்பு முழுக்கப் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

பெரியவருக்கு நல்ல பசி போலிருக்கிறது. பன்னைப் பிய்த்துப் பிய்த்து டீயில் முக்கித் தின்றார். டீ ருசியாய் இருந்ததென்று சொல்ல முடியாது. ஆனால் சூடாய் குளிருக்கு இதமாய் இருந்தது.

‘பெரிசு காசு வெச்சிருக்கியா?’

‘நாங் குடுத்திர்றேய்யா, நீங்க போங்க.’

சுற்றிலும் இருள் கவிந்து கிடந்தது. தூரம் வரை வயல்கள் கருமையில் முங்கிக் கிடந்தன. வயலைப் பிளந்து கொண்டு தூரத்தில் ரயிலொன்று சத்தமில்லாமல் ஓடியது. பெட்டிகளில் சாத்தப்பட்ட ஜன்னல்கள் தவிர தொடர் வெளிச்சப் புள்ளிகள் அழகாய் ஓடின.

‘பீடி வாங்கிக்கிட்டீங்களா?’

‘ஆச்சிய்யா போலாம்,:

‘மள பிடிச்சிக் களட்டப் போவுதுன்னு பார்த்தேன். புஸ்ஸூனு போச்சே?’

‘அதாங் காத்து கலச்சிட்டதே? கீழக்காத்து கெடுக்கும், மேலக்காத்து கொடுக்கும்னு எங்கூர்ல வசனம்.’

‘வா’ என்று தருமு அவரை மீண்டும் தூக்கிவிட்டான். ‘ஏங் கெடந்து அவஸ்தைப் படுற. ஆபரேசன் பண்ணிக்கிறதுதான?’

‘எங்க - கமலக்குடி போவோணும். அங்க ஒரு தறுதலப் பய இருக்காம் பாரு. பொளுதன்னிக்கும் நர்சுங்களக் கேலியடிக்கவே அவனுக்கு நேரஞ் சரியா வருது. ஒண்ணெடக்க ஒண்ணு பண்ணி வுட்டுட்டான்னா...’

அதோ ரயில்வே கிராசிங்கோட பதினஞ்சி நிமிஷம் வேம்படி. கேட்டைத் தாண்டும்போது வண்டி துள்ளிக் குலுங்கியதில், பெரியவர் முன்னே குதித்துப் பிடித்துக் கொண்டார். மேலே சாமி படத்து மாலைகள் ஆடின.

‘எய்யா, பள்ளம் மேடு பாத்துப் போங்க. சைடு திரும்பினாப் பையப் பதறாமக் கோளாறாத் திரும்போணும். நிதானமாப் போணுண்டா கண்ணுகளா. சொன்னாக் கேளுங்க.’

ஹாரனடித்தபடியே ஒரு பஸ் சைடு கேட்டது. ‘குடுக்காதே, குடுக்காதே’ என்றான் பழனி. இப்போது தருமு வண்டியை ஓட்டி வந்தான். கேபினுக்குப் பின்புறக் கதவு வழியே பழனி பார்த்தான். டூரிஸ்டு பஸ் போலிருக்கிறது. ஒரே அழுக்கு, டீசலும் எண்ணெயுமாய் நாற்றம். ஒரேடியாய்ப் புழுதி கிளப்பிக் கொண்டு பிசாசு மாதிரி வந்து கொண்டிருந்தது.

‘விடாத மாப்ளா. ரைட்ல மறிச்சே நீ போ.... என்ன செய்யிறான்னு பாப்பம்.’

‘என்னப் பெத்தார, நா சொல்றதக் கேளுங்க’

முன்னே போகப் பாய்ந்து பாய்ந்து டூரிஸ்ட் பஸ் தடுமாறிற்று. பழனி பெரிசாய்ச் சிரித்தான். ‘ஹ’ என்றான் தருமு. ‘இவன் என்னடா, இவங்கப்பன்னாலும் வரட்டும். நம்மட்ட முடியாதுன்றேன்.’

‘அச்சம் என்பது மடமையடா.’

‘பிள்ளைங்களா?’

‘பெரிசு, ஒனக்கு வயசாச்சு, நீ கம்னிரு. சீக்கிரம் வேம்படி போணுமா வேணாமா?’

‘வேணாம்-’

‘வேணாமா?’ என்று தருமு திரும்பிப் பார்த்தான்.

‘பாத்து - ரோட்டப் பாத்து ஓட்டுய்யா.’

அந்த விநாடி நேர சந்தர்ப்பத்தில் டூரிஸ்டு பஸ் ஹாரனடித்துக் கொண்டே தெலுங்கில் திட்டிக்கொண்டே கடந்து போயிற்று.

‘சே விட்டுட்டமேடா.’

‘வேணாந் தம்பி வெளையாட்டு. எனக்கு உசிர் போயி உசிர் வருது. நீங்கல்லா இளந்தாரிக, நல்லா வாழ வேண்டிய வயசு.’

‘புத்தர்!’

‘வாழ்க-’

‘கௌதம் புத்தர்’ என்றபடியே குனிந்த பழனி பதறிப் போனான். ‘என்னய்யா அளுவறீங்க?’

‘இந்தத் தந்தியப் படி தம்பி...’

‘டே லைட்டப் போடுறா...’

‘செல்வகுமார் லாரி விபத்து’

உடன் புறப்படவும் - கலா’

‘செல்வக்குமாரா?’

‘எம் மவன், லாரி டிரைவர்...’

‘ஐயய்ய எப்ப?’ என்றான் தருமு, வேகத்தைக் குறைத்தபடியே.

‘தெரிலயே தெரிலயே’ என்றார் கிழவர். அழுதார். ‘என்ன ஆச்சி? எப்பிடி இருக்கான்? எங்க விபத்து? எவ்ள அடி? எதுவுமே தெரிலயே... கை கால்தாம் போச்சோ. இல்ல ஆளே...’ என்று கிழவர் அழுதார். கட்டி வைத்த பாரமெல்லாம் உள்ளேயிருந்து உருகி வழிய, உள்ளம் உடைந்து ‘ஊ ஊ’வென அவல ஊளை.

தருமுவுக்குக் கைகள் நடுங்கின. ‘நீ ஏம் பெருசு அளுவற? அதுல்லா ஒண்ணும் ஆயிருக்காது’ என்றான்.

பெரியவர் அழுகையை நிறுத்திவிட்டு ‘நீ அச்சப்படாம ஓம் பாட்டுக்குப் போ தம்பி’ என்றார்.

‘தம்பிக்குக் கலியாணங் களிஞ்சிருச்சிங்களா?’

‘பழனி, நீ கடேசியா என்ன படம் பாத்தே?’ என்றார் பெரியவர்.

‘ஒங்க நெலம தெரியாம... த்ச், மன்னிச்சிரு பெருசு.’

‘தனலெச்சுமி நல்லாருப்பாளா தம்பி?’ என்று பெரியவர் கேட்டார். ‘பாத்து! பாத்து நிதானமாப் போய்யா’ என்றார். ‘நீங்க எம் பயக மாதிரி. நீங்கல்லா நல்லபடியா ரொம்பக் காலம் வாழணுய்யா.’

‘ஒங்க பையனுக்கு ஒண்ணும் ஆயிறாதுங்க.’

‘நல்லது, நா இப்பிடியே எறங்கிக் குறுக்கால நடந்துருவேன். இந்தாங்க...’

‘என்னது?’

‘சார்ஜு...’

‘அட வெய்ங்க பைல.’

‘இல்ல பரவால்ல.’

‘அட வெய் பெருசு, பாத்துப் போ.’

‘வரட்டா?’

‘வாங்க’ என்றபோது லாரி தாண்டிப் போயிற்று.

பொட்டு வெளிச்சமில்லாத வனாந்தரம் ஒரு பிரச்னையின் நேரடி எதிர்கொள்ளல் பற்றி ஒரு ஆக்ரமிப்பு வியூகம் பயமாய் கவலையாய் அவரைத் திணறடித்தது. ‘குமாரு, குமாரு’ என்று வாய் முணுமுணுத்தது. விழிகள் நனைத்து கண்ணீர் பூச்சியெனத் துடித்தது,

இடப்புறம் வலப்புறம் கவனித்து விட்டு, ஒரே ஓட்டமாய்த் தெருவை கடந்தார். 

-----------------------


Friday, May 15, 2015

Book review நன்றி தளம் காலாண்டிதழ்

Book review
நன்றி தளம் காலாண்டிதழ்

மெழுகுவர்த்தி 

ஏற்றிய 

அறைகள்

* *
எஸ். சங்கரநாராயணன்

(‘தேவன் மனிதன் லூசிஃபர்‘. சைலபதியின் நாவல். 224 பக். விலை ரூ 150/-இராசகுணா பதிப்பகம் எண் 28 முதல் தளம் 36வது தெரு பாலாஜிநகர் விரிவு சின்னம்மாள் நகர் புழுதிவாக்கம் சென்னை 600 091 அலைபேசி – 91 94440 23182.)

ரு தொண்டன் புதுக்கட்சி தொடங்குகிறான், சைலபதி வாசகனாய் இருந்து, பிறகு கதாநாயகனாக தானே ஆக முடிவு செய்த கணம் அது. இவரது முதல் நாவல் இது. இப்படி தனிக்கட்சி ஆசைக்காரர்கள் உடனே புதிய கொள்கைகளாக எதையோ சொல்லிவிட்டு, பின்னணியில் காமராஜர் காந்தி அம்பேத்கார் அண்ணா… என்று படங்கள் போட்டுக் கொள்வது வழக்கம். தமிழ் நாவல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் சைலபதி. இந்த நாவலின் பின், பைபிள், பிராமண சமூகம், கிறித்தவ சபை… என சில வளையங்களை அவர் சுழல விட்டிருக்கிறார்.

புராணங்கள், வரலாறுகள் சார்ந்து மறுவாசிப்பு பரிசீலனைகள் ஜோராக முன்னணிப் பட்ட காலம் இது. அசுரர்கள் என்பவர்கள் ஆதி பழங்குடிகள். அவர்கள் இடத்தில் போய் யாகம் செய்கையில் பிராமணர்களை அவர்கள் எதிர்த்தார்கள், என்று ஒரு பார்வை உண்டு. பட்டத்து அரசியின் மகன் ராமன். அவனுடன் தசரதனின் ஆசைநாயகியின் மகனான லட்சுமணன் வேலைக்காரனாக அடிமையாகப் போயிருக்க வேண்டும், என ஒரு கருத்து உண்டு. கிறித்துவ மதம் பற்றி, இயேசு ஒரு அதிகார பிம்பமாய்க் கட்டமைக்கப் பட்டிருப்பதாக பல்வேறு பதிவுகள், புனைவுகளேகூட வந்தாயிற்று. BIBILE, THEN RIFLE, என்று பிரபல சொலவடை உண்டு. இந்தச் சூழலில் இயேசுவை தொன்ம மயக்கமான கதைச்சூழலில் மிளிரப் பண்ணுகிறார் சைலபதி, என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது.

சைலபதியின் இந்த முதல் நாவல், அதன் (ஞான) ஸ்தானம் என்ன? முதல் நாவல் என்கிற அளவில், வயசுக்கு வந்த பெண்ணின் வசிகர அழகு இதற்கு உண்டு. பச்சைப் பந்தலிட்டு வாழ்த்தி அட்சதையிட வேண்டிய முயற்சி இது. ஒரு காவியத்தன்மையுடன் நாவலை அமைக்க சைலபதி யத்தனிக்கிறார். அது ஓரளவு கைகூடவும் செய்திருக்கிறது. வாசிப்பதில் அவ்வளவில் நாவல் சுவையானதாகவே இருக்கிறது. உவமை வீச்சுகள், பைபிள் வழிப்பட்ட, தொன்மம் சார்ந்த மொழி, அற்புதங்கள் நிகழ்த்தும் சம்பவ சுவாரஸ்யங்கள், மேஜிகல் ரியலிச வார்த்தையாடல்கள். தனிமனித அடையாளங்களில் ஆரம்பிக்கும் கதை. பாஸ்டர் ஜீவானந்தம் என லட்சியம் தொட்டு, அதனாலேயே கிறித்தவ சபையின் அதிகாரக் கட்டமைப்பு, உட்பூசல்கள், ஊழல்கள் என வேறு திசைக்கு நகர ஆரம்பிக்கிறது.

இந்த நாவலுக்கான முன்னுரை என்று தனது சட்டகத்துக்குள் சைலபதியை அடக்கப் பாடுபட்டிருக்கிறார் காரல் மார்க்ஸ் கோவில் பூசாரி கல்யாணராமன். நாவலைப் புரிந்துகொள்ள இது சிக்கல்ப்படுத்தி விடுகிறது. முன்னுரை விமர்சனம் அல்ல. அதன் ஐதிகங்கள் வேறு. தலைப்பிலேயே “சிறுமழை“ என்கிறார். “எல்லையின்மை என்பதை விடவும், எல்லை மீறாமை என்பதற்குத்தான் சைலபதி அடங்கிய தொனியில் அழுத்தமளித்துள்ளார்“ என்றும் சொல்கிறார். (அழுத்தம் அளிக்கவில்லை, என்பதைத் தான் இப்படிச் சொல்கிறாரா?)

இதேபோல, நாவல் வந்தபின், பின் நவீனத்துவ ‘குருசாமி‘ எம்.ஜி. சுரேஷ், இதை “அடிப்படைவாதங்களுக்கு எதிரான குரல்“ என பெருந்தன்மையுடன் ‘யு‘ சர்ட்டிஃபிகேட் தந்திருக்கிறார். ‘தேவன் மனிதன் லூசிஃபர்‘ என்ற தலைப்பே மதம் சார்ந்த அடிப்படைவாத சிந்தனைப் போக்குதான்! இதில் மாற்று மதம் கூட இல்லை! நாவலில் மத மாற்றத்தை யாருமே, இந்துக்களோ, கிறித்தவர்களோ தடுக்கவோ எதிர்க்கவோ இல்லை. மாற்று மதத்தை யாரும் குறைத்துப் பேசவில்லை. அந்த மதமாற்றம் பெறும்பாத்திரங்களும் பெரிதும் ஈர்ப்புடன் மதம் மாறவில்லை, என்பது முக்கியம்! இவர்களுக்கு சௌகர்யமான அளவிலேயே அதை அவர்கள் அணுகுகிறார்கள். சரி தப்பு என்றுகூட அதில் விவாத அளவில் கதை விரிவடையவில்லை. எம்.ஜி. சுரஷ் காட்டிய மேற்கோளே கூட, நாவலின் பாத்திரங்கள் சார்ந்த விஷயம் அல்ல. பொத்தம் பொதுவாக, எழுத்தாளரின் ‘பிரசங்கம்‘ தான். கதையின் முதல் பாத்திரம் ஹரி. காதல் என்று வருமுன்பே மதம் மாறியவன். வந்தபின் காதலா, கர்த்தரா என நெருக்கடி வந்தபோது, கர்த்தரே என்று முடிவு எடுக்கிறான். அடிப்படைவாதத்துக்கு எதிராக, என்று சுரேஷ் சொல்வதற்கு எதிராக முடிவு எடுக்கிறான்! நாவலும் விஸ்தாரமாக அடிப்படைவாதம் பேசுகிறது. யேசுவை வியக்கிறது. அவர்வழி சொல்லப்படும் வாழ்க்கை நெறிமுறைகளை விதந்தோதுகிறது. தனியே யேசுவின் சரிதத்தையும் அது எழுதிக் காட்டுகிறது. சாரி, எம்.ஜி.சுரேஷ்.

மரணமும் காமமும் அன்றி மாஜிகல் ரியலிசக் கதைகள் இல்லை. நாவலா என்கிற உடல்சார்ந்த மதமதர்ப்பு கொண்ட பாத்திரம். அதில் காமம் தான் உள்ளது. உடல்ருசி சார்ந்த வேட்கையைக் காதலாக அவளால் ஏற்க முடியவில்லை. அவள் ஒரு ஆணுடன் திருப்தி அடைய மாட்டாள், என்கிறார் ஆசிரியர். ஆனால் அவள் கடைசிவரை ஒரு ஆணுடன் தான் உறவு வைத்திருக்கிறாள், என்பது எழுத்தாளரின் சமத்தை, விகாரப்படாத உள்மனசை வெளிக்காட்டுகிறது. ஆனாலும் நாவலில் நாவலாவின் பாத்திரம் முற்றிலும் தனி அடையாளங்களுடன் செதுக்கப் பட்டிருப்பதாகவே சொல்ல முடியும். அவள் உடல் சார்ந்த தன்கிளர்ச்சிகள், எழுச்சிகள் கொண்டவள். ஆண் பெண் உறவைத் தாண்டி குடும்ப உறவுகளை அவள் கொண்டாடுவது இல்லை. எனினும் நட்பு பேணத் தெரிந்தவள்… என்கிற அளவில் அந்த எல்லைக்கோட்டைத் துல்லியமாக அவளைவைத்து சைலபதி காட்டியிருப்பது ஆச்சர்யமானது. கதையில் மதம், மத மாற்றம் என்பன தாண்டி இப்படியோர் பாத்திரப்படைப்பின் துல்லியம் ஆச்சர்யமானது. கதாசிரியரின் வெற்றி என நான் இதைப் பாராட்டுவேன்.
கதை மத மாற்றம் சார்ந்து துவங்கி, அடிப்படைவாதத்துக்கு எதிரான குரல் என வடிவம் பெற, இதை எழுத ஆரம்பித்தபோது சைலபதி பலதும் நினைத்திருக்கலாம். ஆனால் நாவல் யார் உண்மை ஊழியன், யார் தூய கிறித்தவன், அவன் அனுபவிக்கும் சோதனைகள் என்னென்ன, என்றெல்லாம் பயணிக்கும் கதை, இலட்சியத்தினவு கொண்டு, வேறு கதியில் நகர்ந்து, முடிகிறது.
கதையில் கதையம்சம், உத்தி, மாஜிகல் ரியலிச யத்தனங்கள், காவியப்புனைவு முயற்சிகள் எல்லாம் தாண்டி, சைலபதியின் படைப்பு மனம் எழுத்தின் ஊடே, மனித மனத்தின் ஊடாட்டங்களை, நெருக்கடிகளில் மனசின் தவிப்புகளை, தேடல்களையெல்லாம் துழாவிப் பார்ப்பது தான் இந்த நாவலின் விசேஷ அம்சம்.
 அழும்போதும் சிரிக்கும் போதும் தான் மனிதன் தன்சார்ந்த இயல்புகளை அறிந்துகொள்கிறார்கள் என்கிற அவரது வாதம், நாவல் மூலம் அவர் தரிசனப்பட்ட, கண்டடைந்த இடமாக நான் மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்வேன்….
 வளர்ந்தவர்களின் அழுகையின் காரணம் எப்பொழுதும் நேரடியானவை அல்ல. கிடைத்த காரணத்தைச் சொல்லி, வெளித் தெரியாத தங்கள் மனதின் தாழ்வாரங்களில் ஒளிந்து கிடக்கும் ரகசியங்களுக்காக அழுகிறார்கள். மரணத்தில் பிறக்கும் அழுகைகள் ஒரு பெருவெள்ளத்தைப் போலக் கிளம்பி மனத்தின் கரைகளை உடைத்துப் பெருகி வீழ்ந்து துக்கம் தீர்ந்து போனதும் நின்று விடுகிறது. ஆனால் அவமானங்கள் பெருக்கும் அழுகைகள் வெளிப்படையாக நின்று போனாலும் உள்ளூற அது மழைக்காலத்தின் சாரலைப் போல தூறிக்கொண்டே இருக்கிறது…” (ப. 87)
 தன் ஆசைகளும் தன் முடிவுகளும் தோற்கும் போதுதான் மனிதர்கள் முடிவில்லாமல் அழுது தீர்க்கிறார்கள். நாவலாவுக்குத் தெரியாதா என்ன, அவளின் காரியங்கள் செயல்கள் அவளுக்கு அவமானத்தைத் தேடித்தரும் என்று? ஆனாலும் அழுகிறாள். அழுது முடிக்கிற போது அவளுக்குத் தன் செயல்களின் குற்றவுணர்ச்சி தீர்ந்து போயிருக்கும். அவள் சுமுகமாவாள். அடுத்து என்ன செய்வது, என்று முடிவெடுப்பாள். பெரிய முடிவுகளுக்கு முன்னதான முஸ்திபுகள்தான் அவளின் அழுகை என்று ஹரி புரிந்துகொண்டான்.” (பக். 87)
 நாவலின் ஆகச் சிறந்த பகுதியாக அத்தியாயம் ஒன்பது திகழ்கிறது. பாஸ் உடனான அவளது உறவு வெளிப்படையாக விமரிசனத்துக்கு வரும் பகுதிகள் அவை. அப்போது நாவலா அழுகிற காட்சிகளை கச்சிதமாக ‘பிரசங்கிக்கிறார்‘ சைலபதி.
சில பகுதிகள் கழித்து காயத்ரி வாழ்வின் சிக்கல். அதில் வரும் அழுகை. “ஒரு பெண்ணின் சிரிப்பும் அழுகையும் அவ்வப்போது நிகழும் காரணங்களுக்காக அல்ல.“ (பக். 124) பாத்திரங்கள் சந்திக்கும் நெருக்கடிகளில் அழுகையின் ஊடாகப் பயணப்படுவதை எழுதுகையில் சைலபதி அதை உற்று கவனித்து ஊன்றி எழுதுகிறார். இது அவர் எழுத்துப் பயணத்தின் தனி முத்திரை. அடையாளம்.
ஸ்ரீவித்யாவை மறக்க முனைகிற ஹரியின் அழுகை. “அவனுக்குள் இருந்த பாரம் அவனைக் கேளாமல் கண்ணீராய்க் கசியத் தொடங்கியிருந்தது. சத்தம் இல்லை. ஆர்ப்பாட்டம் இல்லை. அவன் தன் ஆன்மாவில் இருந்து அழுதுகொண்டிருந்தான். என்ன சொல்லி அழுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. எல்லாம் அவன் அறிந்து தான் நடந்தது. இதில் எதற்கும் தான் பொறுப்பில்லை என்று எப்படிச் சொல்வது? அழுகிறவர்கள் எல்லோரையும்போல ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?‘ என்று சொல்லி அழலாம் என்று தோன்றியது. (பக். 142)
தவிக்கிற மனசின் மையப்புள்ளியை நோக்கி தானறியாமல் நகர உந்தப் படுகிறார் சைலபதி. ஒரு திரைப்படத்தின் சிறப்பான ரீ ரிகார்டிங் போல, தீம் மியூசிக் போல அமைகிறது இந்தப் பகுதிகள். இந்த உந்துதல், எழுத்தில் அவரை மேலும் பல படிகள் உயர்த்திவிடும் என்று நம்பலாம். 
ஆசிரிய உரையில் ஆன்மா என எழுதும் இவர், இந்துமதப் பின்னணியில் ஆத்மா எனவம், கிறித்துவம் வருகையில் ஆத்துமா எனவும் எழுதிச் செல்கிறார். கதையில் மூணு ஆன்மாக்கள்.
 நன்னடை நல்கல் சைலபதிக்கு வந்திருக்கிறது. வாசிக்க அருமையான நாவல் இது. முதல் நாவல் என்ற அளவில், விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டு, நல்ல கவனம் பெற வேண்டிய நாவல் இது.

Sunday, May 10, 2015

FICTION Kuwait

*

மூங்கில் தண்டு


சாத் அல்சனௌசி (குவைத்)
*தமிழில் எஸ். சங்கரநாராயணன்


காலி சிலிண்டரை மாற்ற வேண்டியிருந்தது. ஒரு மாலை. வாடகைக்காரை அமர்த்திக்கொண்டு பெரிய சந்தைக்குப் போனேன். ஜப்ரியா பகுதியின் ஒரு தெருவில் கடுமையான போக்குவரத்து நெரிசல். அங்கே எப்பவுமே ஜன நடமாட்டம் அதிகம் தான். ஆனால் இந்த நெரிசல், ஒரு காரும் ஒரு விரற்கடை போலும் நகரக் கொள்ளவில்லை, ஒரு விபத்தோ, பந்தோபஸ்து சோதனையோ இருந்தால் தான் இப்படி திணறல் ஏற்படும். நான் எதிர்பார்த்தபடி, தெருக்கோடியில் காவல்துறை கார்கள். மினுங்கும் அவற்றின் நீல சிவப்பு விளக்குகள். தெருவோரமாக காவலர். ஓட்டுநர் சீட்டு மற்றும் வாகன உரிமங்களைச் சரிபார்க்கிறார்கள்.

     டாக்சி ஓட்டுநர் சன்னலைத் திறந்து தனது அடையாளக் காகிதங்களை நீட்டுகிறார். அதை சரிபார்த்த போலிஸ்காரர், அதைத் திருப்பிக் கொடுக்குமுன், என் அடையாள அட்டையைக் கேட்டார். என் கால்சாராய்ப் பைக்குள் கைவிட்டேன். என் பர்ஸ்... இல்லை. ச். கலவரமாய் இருந்தது. தெருவில் என் வீட்டின் திசை காட்டி அவரிடம் சொன்னேன். ''அதை என் அடுக்ககத்திலேயே விட்டுட்டு வந்திருக்கிறேன்.''

     அந்தாளுக்கு விளங்கவில்லை. ''இக்வாமா, இக்வாமா.'' அரபு மொழியில் அவர் தொடர்ந்து பிடிவாதம் பிடித்தார். நான் சட்டபூர்வமாய் குவைத்வாசி என்பதற்கு அவருக்கு ருசு வேண்டியிருந்தது. நான் பிறந்ததே இந்த நாடு தான். எனக்கு குவைத்தில் தங்கும் அடையாள அட்டை தேவை கிடையாது... ''நோ இக்வாமா'' என்றேன் நான் ஆங்கிலத்தில். அப்பகூட அவரால் அதை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

     ''முதல்ல கீழ இறங்கி வாங்க'' என்றார் அவர். ''இங்க பாருங்க...'' என நான் அவரிடம் விளக்க முற்பட்டேன். அவரோ அதைக் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. ரொம்ப முரட்டுத்தனமாய் என்னிடம் அவர் கத்த ஆரம்பித்தார். என்னால் அவரிடம் எதுவுமே பேச முடியவில்லை.

     என் அலைபேசியை எடுத்து அத்தை ஹிந்திடம் பேச முயற்சி பண்ணினேன். சட்டென அவளை அழைக்கலாம் என்று ஏன் முடிவெடுத்தேன், எனக்கே தெரியாது. ஆனால் அவள் அலைபேசியை எடுக்கவே இல்லை. உடனே கௌலாவுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். 'போலிஸ் பிடியில் நான்.' அதற்குள் அந்தப் போலிஸ் என்னை முதுகில் உந்தித் தள்ளினார். திடீரென்று பார்த்தால், நான் சாலையோரம் நின்றிருந்த போலிஸ் வேன் ஒன்றில். விசா காலாவதியான அல்லது அடையாள அட்டையே இல்லாமல் பிடிபட்ட வந்தேறிகளுடன் நானும்! அராபியர்க.ள இந்தியர்கள். பிலிப்பைன், வங்க தேச நபர்கள். கூட நான்.

     நான் பார்க்க மத்த குவைத் ஆட்கள் போல இல்லை தான்.

     வேன் புறப்பட்டது. அவர்களில் சிலபேர் திகிலாய் இருந்தார்கள். சிலர் விரைப்பாய். ''என்ன, அதிகபட்சம் நம்மள திருப்பி நம்ம நாட்டுக்கே அனுப்பி வெச்சிருவாங்க.'' யாரோ சொன்னார்கள். வேன் பக்கத்தில் இரைந்து கொண்டிருந்த போலிசிடம் நான் திரும்ப, எப்பா நான் குவைத் ஆசாமியே தான், என எடுத்துச் சொல்ல... அவர் காதில் வாங்கிக் கொண்டாரா என்றே தெரியவில்லை. வேனின் பின் இருக்கைகளைக் காட்டினார் அவர். என்னவோ நாராசமாய்ப் பேசினார். என்ன பேசினார் என்றே எனக்குத் தெரியாது. திகிலுடன் நான் என் இருக்கைக்குத் திரும்ப வேண்டியதாயிற்று.

     என் பக்கத்தில் ஒரு பிலிப்பைன் இளம் பெண். மகா அழகாய் இருந்தாள். என் பக்கம் திரும்பி அவள் பேசினாள். ''இது வாரக்கடைசி. ஆக சனி ஞாயிறு நாம உள்ளதான்... நம்மளை விசாரிக்கிற அதிகாரியே திங்கள்தான் வருவாரு.'' ஐயோ என கண்ணை விரித்தேன். ''நான் குவைத்காரன் தான். எனக்கு விசா கிசா ஒரு மண்ணாங்கட்டியும் தேவை கிடையாது.'' அவள் புன்னகைத்தாள். ''எப்படியும் இங்க உங்களுக்கு மண்டகப்படி உறுதி. வெளிய போக நீங்க இந்த ஊர்க்காரர்னு ருசுப்படுதிதி யாகணும்.''

     இன்னொரு வயதான பிலிப்பினோ அழுது கொண்டிருந்தாள். இவள் அவளைப் பார்க்கத் திரும்பினாள். ''என்னாண்ட முறையான குடியிருப்பு அனுமதிச் சீட்டு இல்லை. என்னை வேலைக்கு எடுத்திருந்த வீட்டை விட்டு ஓடி வந்திட்டேன்... பல மாசமா நான் என்னென்னவோ வேலை பாத்திட்டிருக்கேன். இப்ப என்னை ஊருக்குத் திருப்பி அனுப்பிட்டால் என் குடும்பமே செத்திற வேண்டிதான்.''

     ''அந்தளவுக்கு நிலைமை எக்கச்சக்கம்னால்...'' என்றாள் இவள். கொஞ்சம் நிறுத்தினாள். ''நீங்க கொஞ்சம் அனுசரிச்சிப் போக வேண்டியிருக்கலாம்...''

     இவள் சொல்ல வந்த குறிப்பில் அவள் அதிர்ச்சியடைந்தாள். ச்சீச்சீ, கேடுகெட்ட தேவிடியா... என்று என்னென்னவோ கெட்ட வார்த்தைகளால் இவளைத் திட்டினாள்.

     அந்த இளம் பெண் இப்போது என் பக்கம் திரும்பினாள். ''ஆனால் உங்களாண்ட அதைப்போல 'அனுசரிக்க' எதுவும் இல்லைன்னு படுது...'' என்று அசிங்கமாய்ச் சிரித்தாள். ''எனக்கு ஒரு வயசான அம்மா. மூணு தம்பி. அவங்களுக்காக நான் எல்லாவித தியாகங்களும் செஞ்சாச்சி'' என்றாள் கூடவே.

     அனுபவப் பட்டவளாட்டம் இருந்தது. இது, இப்படி மாட்டுவது அவளுக்கு இது முதல் தடவை அல்ல. பொதுவா நான் ஜெயில்ல அதிக காலம் தங்கறது இல்லை, என்றாள். காலைல வேலைக்கு வர்ற போலிஸ் நேர்மை, ஒழுக்கம்னு இருந்தால் கூட, அடுத்து அந்த இடத்துக்கு வேலைக்கு வர்றாளு அப்படி இருக்க மாட்டான். அவளை வெளியே அனுப்ப முதல் நாளில் யாரும் மசியவில்லையானால், அடுத்த நாள் சபல கேஸ் கட்டாயம் அமைஞ்சிரும். ''எப்பவுமே குடியுருப்பு அனுமதிச் சீட்டு வாங்க நான் என்ன செய்வேன்... காவல் நிலையத்திலேயே தனி அறை, அல்லது அவர்களின் கார், அல்லது எங்காவது வெளி இடம்...'' என்றாள். ''என் அலைபேசியில் எத்தனை போலிஸ்காரங்க எண் இருக்கு தெரியுங்களா?'' என்றாள் நெஞ்சு நிமிர்த்தி.

     ஆனால் காவல் நிலையத்துக்குள் எங்கள் அலைபேசிகள் பிடுங்கப்பட்டு விட்டன. எங்களை யாரும் விசாரிக்காமலேயே, ஒரு முடை நாற்றம் பிடிச்ச கைதியறையில் போட்டுவிட்டார்கள். எனக்குக் கூட எவனாவது லஞ்சம் வாங்கறாளா கிடைச்சால் பணம் வெட்டினோம், வெளியிறங்கினோம்னு ஆயிட்டால் நல்லாருக்கும், என்றிருந்தது. ஒரு வருஷம் முன்னால் ஒரு போலியான போலிசுக்கு பத்து தினார் அழுது காரியம் சாதித்திருக்கிறேன். நஷ்டம் பத்து தினார். ஆனால் அத்தோடு அந்தப் பிரச்னை ஓஞ்சிரும் அல்லவா? நிஜ போலிஸ்கிட்ட மாட்டி, இப்ப போலிஸ் ஸ்டேஷனில் அடைக்கப் பட்டு....

     ரெண்டு இரவுகள் அங்கேயே வாசம். அல்லது நாற்றம்னு சொல்லலாம். என் கடிகாரம் அப்படித்தான் காட்டியது. வெளியுலகம் தெரியாது. ஆனால் எத்தனையோ ராத்திரி இப்படி அடைஞ்சிருந்தாப் போல பெரும் அவதியாய் இருந்தது. சின்ன அறை அது. என்னுடன் கூட பத்துப் பேர். அவர்களும் அந்த அறையும் அத்தனை அழுக்காய் இருந்தார்கள். அறை நாற்றமும், அந்த மனுச வாடைகளும் உவ்வே என்று வந்தது. ஜனவரி மாதத்தின் உலர்ந்த குளிர். விரல்நுனிகளே சொரணையற்று நமத்திருந்தன. குளிர் நேரே எலும்புக்கே இறங்கினாப் போலிருந்தது. ஆனால் கைதிகள் பேசாதிருந்தார்கள். என்னைத் தவிர, அவங்க எல்லாருக்குமே அவங்க கதை அடுத்து என்ன என்பது தெரியும். நாந்தான் இன்னும் எத்தனை காலம் இப்படி உள்ளே மாட்டிக் கிடப்பேன், தெரியவில்லை.

     பெண்கள் கைதியறையில் இருந்து குரல்கள் இங்கேவரை கேட்டன. அந்த அறைதான் அந்த வராந்தாவின் கடைசி என்று பின்னர் தெரிந்து கொண்டேன். வேனில் ஏறியதில் இருந்தே அந்த பிலிப்பைன் பொம்பளை அழுதபடியே தான் இருந்தாள். இப்ப இன்னும் சத்தமாய் அழுது கொண்டிருக்கிறாள். என்னவாவது புலம்பிக் கொண்டே யிருந்தாள். சிலப்ப ஆங்கிலத்தில், சிலப்ப அரபு மொழியில். யாராவது ஆபத்பாந்தனாக வரமாட்டாங்களா என்கிற அசட்டு நம்பிக்கை. ''எய்யா என்னை ஊருக்கு கீருக்கு திருப்பி அனுப்பினிங்களானால் என் குடும்பமே பசில கெடந்து செத்துருவாங்க. உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்... கெஞ்சிக் கேட்டுக்கறேன்....''

     என் அறையின் மத்த கைதிகள் ஒவ்வொருத்தராய் உறங்கிவிட்டார்கள். அந்தப் பெண்களின் கேவல் இன்னுமாய் சத்தமெடுத்தது. இங்கேயிருந்து ஒரு போலிஸ் எழுந்து போவதைப் பார்த்தேன். கையில் கருப்பாய் லத்தி. பயத்தில் அப்படியே சுருண்டு கொண்டேன். வாய் தன்னைப்போல அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்... என முணுமுணுத்தது. அவன் அந்தம்மாவைத் துன்புறுத்தாமல் இருக்கட்டும்..

     போலிஸ்காரன் என்னவோ கத்தியது கேட்டது. என் இதயப் படபடப்பு அதிகரித்தது. அந்தப் பொம்பளை, அவள் திருப்பிக் கத்தினாள். நான் இன்னுமாய் ஒடுங்கிக் கொண்டேன். அடியே, அவனை இன்னும் மூர்க்கமாக்காதே... என எனக்குள் முணுமுணுத்தேன். அவர்கள் இரைச்சல் அதிகமானது. ஏ அவளை அடிச்சிறாதே... பெரிய ணிங் கேட்டது. என் அறைக் கைதிகள் கூட விழித்துக் கொண்டார்கள். போலிஸ்காரன் அந்த பெண்கள் கைதியறையின் இரும்புக் கிராதிக் கதவில் தட்டுகிறான். உடனே உள்ளே எல்லாம் கப் சிப்.

     போலிஸ் தன் இடம் திரும்ப நான் மெல்ல ஆசுவாசப்பட்டேன். என் சகாக்கள் திரும்ப உறங்கப் போனார்கள். எனக்கானால் கண்ணே மூட மறுத்தது. ஒரு நீண்ட பெருமூச்சு எழுந்தது என்னிடம். அல்லாஹு அக்பர். சர்வ வல்லமை படைத்தவர் கடவுள், நன்றி.

     பத்து நிமிஷத்துக்கு ஒரு தரம் யாராவது விழித்து, ஒண்ணுக்கு என்று வார்டரை அழைத்துக் கொண்டே யிருந்தார்கள். இந்தச் சூழலில் மத்தாட்கள் எப்படி தூங்குகிறார்கள் என்பதே புதிர் தான் எனக்கு. அந்தக் குளிர். பெருங் குறட்டைகள். அந்த பிலிப்பைன் பொம்பளையின் விசும்பல்கள்...

     முட்டிகளை நெஞ்சோடு அழுத்தி வைத்திருந்தேன். சுவரோடு முதுகைச் சாத்தியிருந்தேன். இன்னும் என்னை மீட்க ஆள் வரவில்லை. அது தாமதமாக ஆக, எனக்கு விமோசனமே இல்லை என்கிறதாய் அவநம்பிக்கை எழுந்தது என்னுள். கௌலாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய அந்தக் கணம், நான் இத்தனை நேரம் இப்படி உள்ளே சிக்கிக் கிடப்பேன் என்றெல்லாம் நினைக்கவே இல்லை. எனக்கு இதெல்லாம் நடக்கக் கூடும், என நான் எதிர்பார்த்தே யிராத விஷயம் எல்லாம் நடந்தேறி விட்டது. என்ன கௌலா, நீயே என்னைக் கைவிட்டுட்டியாடி?

     பின்னிரவில், எல்லாரும் ஆழ்ந்த உறக்கத்தில்... வராந்தாவில் சந்தடிகள். பதறாத நடை. தலைதூக்கிப் பார்க்கிறேன். ஒரு போலிஸ்காரன். யாரையும் சட்டை செய்யாமல் நடந்து போகிறான். அவன் சத்தம் அடங்கியது. கிளிங் என்று சாவிகளின் ஒலி. கிசுகிசுப்பான பேச்சுகள். பிலிப்பைன்காரி இந்நேரம் தூங்கியிருக்கலாம், என்றாலும் எழுப்பப்ட்டாள். திரும்ப அவள் முறையிட ஆரம்பித்தாள். கதவைத் திரும்ப சாத்தும் சத்தம். திரும்பி வரும் சந்தடிகள். என் பக்கமாக வரும் ஒலிகள். நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் பொம்பளையின் கதறலையும் மீறி மத்தாட்கள் அசாத்திய உறக்கத்தில்.

     போலிஸ் போகிறான். அதிகார நிமிர்வு. இதோ அந்த இளம் பிலைப்பினோ அவன் பின்னால், அவள் நடையில் தான் என்ன நம்பிக்கை. நான் இருந்த அறையை அவள் ஒரு பார்வை பார்த்தாள். எஙகள் இருவர் பார்வைகளும் ஒரு விநாடி சந்தித்துக் கொண்டன. புருவத்தை உயர்த்தி அவள் ஒரு புன்சிரிப்பு சிரித்தாள். வேனில் வைத்து நான் என்ன சொன்னேன், ஞாபகம் இருக்கா, என்கிற புன்சிரிப்பு அது.

     அவர்கள் போய்விட்டார்கள். காலை வரை நான் பிறகு தூங்கவேயில்லை. மனம் பூராவும் அந்தப் பெண் பற்றிய நினைப்பு தான். அட எங்கியோ அவள் இப்படி முறைகேடாக லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக் கொண்டிருக்கிறாள். விடுதலையோடு குடியிருப்பு அட்டையும் வாங்கிவிடுவாள்.

     எங்க அத்தை ஹிந்த், மனித உரிமைகளில் பெரிதும் வலியுறுத்தல் உள்ளவள். இங்க என்ன நடக்கிறது என்பதை அத்தை அறிவாளா? நான் கேள்விப்பட்டதையும் பார்த்ததையும் அவளிடம் சொல்வதா? அதைவிட முக்கியமாய், இங்க இந்த கைதியறைகளில் நடக்கிறதையிட்டு அவளால் எதுவும் செய்ய முடியுமா?

     திங்கள் காலை. என் பெயரை அழைக்கிறார்கள். சட்டென அறைக் கம்பிகளுக்குள் எழுந்து விரைத்து நிற்கிறேன். என் அடுக்ககத்தின் சாவி கேட்டார் ஒரு போலிஸ். வாங்கிக்கொண்டவர் ஒரு வார்த்தை பேசாமல் அகன்று விட்டார். ஒரு மணி நேரத்தில் அதிகாரி அறைக்கு என்னை அழைத்துப் போனார்கள். அங்கே காசன் எனக்காக காத்திருக்கிறதைப் பார்த்தேன். என்னைப¢ பற்றிய ஆதார காகிதங்களை அவன் காட்டி அதிகாரியிடம் பேசினான். அதிகாரி தன்மையான மனிதன் தான். என் அலைபேசியைத் திருப்பித் தந்தபடி நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார் அவர். ''அடுத்த தடவை இப்படி பர்சை மறிதியா வீட்லயே வெச்சிட்டு வெளிய இறங்காதீங்க'' என அறிவுரையும் தந்தார் அவர்.
• • •
Bamboo Stalk - 
English trs. from arabic by Jonathan Wright.
courtesy words without borders July 2014

நன்றி – சங்கு சிற்றிதழ்
இது நாவலின் சிறு பகுதி – ஆண்டின் சிறந்த அராபிய மொழி நாவல் என இது பரிசு பெற்றது.
*Saturday, May 9, 2015

உத்தம வில்லன் பசிக்குத் தலையணை

உத்தம வில்லன்
பசிக்குத் தலையணை
எஸ். சங்கரநாராயணன் 

மல் ஹாசனின் உத்தம வில்லன் பார்த்தேன். இதற்கு முன் பார்த்த படம் மணி ரத்தினத்தின் ‘ஓ காதல் கண்மணி.‘ ரெண்டு பேருமே புதுசாய்ச் செய்ய வேகம் கொண்டவர்களாய், அதனாலேயே கவனம் பெறுகிறார்கள். ரெண்டு படமுமே எதிர்பார்த்த அளவு, அதாவது அவர்கள் இருவரும் எதிர்பார்த்த அளவு கொள்வார் இலலாமல் ஆனவர்கள். ஒருவகையில், ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு அவர்கள் சொல்லவில்லை, என்பதும் இதன் பொருள் ஆகிறது.

ஓ காதல் கண்மணி – பற்றி ஏற்கனவே எழுதியாகி விட்டது.

ரெட்டைக்குதிரை சவாரி செய்ய முயற்சி செய்ய ஆசைப்பட்டிருக்கிறார் கமல். தப்பு என்ன இதில்?

எத்தனை ரெட்டைதான் கதை இடங் கொடுக்கும் தெரிய வேணாமா? மூச்சுத் திணறுகிறது. சரித்திர சூழல் ஒண்ணு, நிகழ்காலத்தில் ஒரு பெரும் நடிகனின் கடைசித் தருணம், அதன் வாழ்வில் நெருக்கடிகள்… என ரெண்டாவது கதை… என்றால் அத்தோடு விட்டுறணும். தமிழ் தெலுங்கு மலையாளம்… என பாத்திரங்களைப் போட்டு வதக்கி சுவை சேர்க்கலாம் என நினைத்தார் பாருங்க. புரியாமை மற்றும் ஒட்டாமலேயே நகர்கிறது கதை.

சரித்திரக் கதை கதாநாயகனைச் சுற்றி நகர மறுக்கிறது. யாரோ ஒரு தளபதி சூழ்ச்சிக்கார அண்ணாச்சி ராஜாவாகிறான்.. அவனுக்கு மரண பயம். இவன், ம்ருத்யுஞ்செயன், கதாநாயகன். மரணத்தை வென்றதாக நம்பப்படுகிறான். இவனிடம் சாகா வரத்தைப் பெற ராஜா முயல்கிறான்.. என்று சொல்ல வர, ராஜா, அவருக்கு சிறைப்பிடிக்கப் பட்ட ராணி மேல் ஆசை… என அந்தக் கதையே பெரிசாய் வருகிறது.

மரண பயம் என்று ஒற்றைச் சொல் தவிர, படத்தில் அவனது, ராஜாவின் பாத்திரத்தில் அது பிரஸ்தாபிக்கப் படவே இல்லை. வில் ஏந்திப் போர் செய்கிறவன் வில்லன், என ம்ருத்யுஞ்செயன் பற்றி விவரணை. வில்லுக்கும் அவனுக்கும் ஸ்னானப் பிராப்தியே இல்லை. திடீரென்று வில்லுப்பாட்டு என சுப்பு ஆறுமுகத்தை முதலில் உட்கார்த்தி வைக்கிறார்கள். அப்புறம் அவரைப் பயன்படுத்தவேயில்லை. இரண்யவதம் கதையைத் திடீரென கதையில் செருகுகிறார்கள். கதை உடனே கேரளக் கூத்துக் கலைக்குப் போகிறது. கதையில் ரெட்டை அம்சங்கள் தாண்டி, இப்படி மூணு நாலு என்று ஒட்டாத அம்சங்களே நிறையச் சேர்ந்து கொண்டே போகிறது.

சரித்திரப் புனைவில் நகைச்சுவை என நினைத்த காரியம் சித்தி பெறவே இல்லை. அதனால் நடிகனின் நிகழ்கால மரணத்தையும் சாகா வரம் பெற்ற பாத்திரமாக அவனது திரைக் கதையையும் மாற்றி மாற்றிச் சொல்ல நினைக்கையில் எடுபடாமல் ஆகிறது.

கதை நாலு மருமகள் ஆளுக்காள் உப்பு போட்டு சமைத்த மாதிரி ஆகிப் போகிறது.

முதல் மனைவியை நடிகன் எப்பவோ பிரிந்து, சினிமா இயக்குநரின் பெண்ணை மணந்து கொள்கிறான். இவனுக்கே பதின் வயதில் குழந்தை… என பாத்திர வார்ப்பு ஆகிப் போனதில்  இவனுக்கு, மூளையில் கட்டி, என வைத்தியம் பார்க்கும் மருத்துவச்சியையே கள்ளக் காதலியாக வைத்துக் கொள்ளலாம், கதையில் கிளுகிளுப்பு காணும், என எதிர்பார்த்திருக்கிறார்கள். கதையே இதனால் ஆட்டங் காணும், என யோசிக்காமல். அவளும் கூடவே இருக்கிறாள். டாக்டர்கள் வேலையே செய்ய மாட்டார்கள், என்கிற அவப் பெயர் தான் மிச்சம்.

அவனுக்கு மூளையில் கட்டி என்றவுடன் அவன் என்னவெல்லாம் ஒழுங்கற்று விட்டிருந்தானோ, எல்லாவற்றையும் புறந்தள்ளி அவன்மீது இரக்கப் பட்டு விடுகிறார்கள், என்பது எப்படி சாத்தியம் ஆகும். மூணாவது கள்ளக் காதலையும் நீட்டித்துக் கொண்டு?

பாலசந்தர் வேறு இந்தப் படத்துக்குள் இயக்குனராக வருகிறார். இயக்குநர் மணிவண்ணன் வசனம் பேசுகையில் சத்யராஜ் போலவே காணும். சத்யராஜுக்கு வசன உச்சரிப்புகளைப் பழக்கியவர் மணிவண்ணன் என்ற அளவில். அதேபோல இந்தப் படத்தில் பாலசந்தர் பேசுகையில் நாகேஷ் நினைவு வருகிறது!

கே. பாலசந்தர் கே. விஸ்வநாத் பாத்திரங்களை நன்றிக் கடன் தீர்க்க என கமல் சேர்த்திருக்கிறார். கடன் சுமை அதிகரித்து விடுகிறது. திரைப்படப் படப்பிடிப்பில் காட்சி முடிந்ததும், இயக்குநர் பாலசந்தர் சூப்பர், சூப்பர்… என மாத்திரம் சொல்லிக் கொண்டே யிருக்கிறார். டைரக்டர் நாற்காலியில் அவர் உட்கார வைக்கப் பட்டவர். அவ்வளவே அவர் பாத்திரச் சித்தரிப்பு. விரல் சூப்பர்.

யோசிக்க யோசிக்க குழப்பமாய்த் தான் இருக்கிறது. பசிக் கனவில் தலையணையைத் தின்றிருக்கிறார்கள்.

என்றாலும், புதிய மிகப்புதிய களத்தை நோக்கி கமல் நகர முயற்சி செய்திருக்கிறார். வெற்றி பெறாவிட்டால் என்ன?


வருத்தமாய் இருக்கிறது. Better luck next time.


*
storysankar@gmail.com

Saturday, May 2, 2015

திரைப்பட விமரிசனம்

திரைப்பார்வை - 
எஸ். சங்கரநாராயணன்
• • •
கூ ரை ய ற் று

தூண்கள் மட்டும்…
*

முற்றிலும் தற்காலத் தளத்தில் நிகழ்கால சூட்டோடு, இன்றைய இளைஞர்களின் மனப் போக்குகளை இயல்புப்படுத்தி, அதில் ‘கல்யாணம் வேணாம். சேர்ந்து வாழ்வோம்‘ என்கிற, அவர்களிடையே கிளைத்துவரும் புதிய சிந்தனையை அடையாளப்படுத்தி கதை வளர்கிறது. இந்தக் கதையை இன்றைய இளைய இயக்குநர்களில் ஒருவர் எடுத்திருக்க வேணாமா? (தாடி மீசை குடி குத்துப்பாட்டு, காதலுக்கு மல்லிகை நிறைய வைத்திருக்கும் கூந்தலை உடைய கிராமத்துப் பெண்ணிடம் வம்பு… என இளைஞர் பட்டாளம், ஜாலியா படம் எடுக்கிறது.) இதை எடுக்க, அதை வெற்றிகரமாய் அவர் செய்திருக்கிறாரா, என்பதை விட, அவர்தான் இதைச் செய்தார் என்பது சிறப்பு. மணி ரத்தினத்தை அதற்காகவே நாம் கவனிக்க வேண்டும்.

என்ன சொல்கிறார் மணி ரத்தினம்? லிவிங் டுகெதர், சரியா? சரியா வருமா? “அப்படியெல்லாம் இல்லை. கல்யாணம் பண்ணிக்கொண்டு குடித்தனமாய் வாழ்வதே சுபிட்சம்“ என்கிறார் மணி ரத்தினம். அதை இந்த இளைய பாத்திரங்கள் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் இந்த இரண்டு இளவட்டங்களையும் ஒரு பெரு மழையில் அல்லாட விட்டு மாத்தி மாத்தி வசனம் பேசி… படத்தின் மொத்த வசனத்தில் பாதியை இந்த ஒரு காட்சியில் செலவழித்திருக்கிறார் மணி ரத்தினம். பெரு மழையில் பெரு வசனங்கள்… காதலன் இன்னுங் கொஞ்சம் பேசுமுன் அவள் “சரி கல்யாணம் பண்ணிக்கலாம்‘‘ என்று விடுகிறாள்.

இந்த இளவட்டங்களின் பார்வையில், அவர்களுக்கு வாழ இடம் அளித்த ஒரு முதிய தம்பதியரின் வாழ்க்கை சித்தரிக்கப்படுகிறது. அந்த ‘அம்மையார்‘ மறதி நோயால் பீடிக்கப் படுகிறார். அப்போது அந்த ‘அப்பாவார்‘ நனிப் பரிந்து அவளைப் பேணுகிறார். ஒரு நீள் செவ்வக சன்னல் பிளவு வழியே அவர்கள் பரிவு காட்டப் படுகிறது. முதியவர்களுக்குள்ளே அநேக விஷயங்கள் ஒத்துப் போகவில்லை தான். ஆனாலும் அவளது இயலாமையின் போது, கைத் தாங்குகிறார் அவர். அதற்குத்தான் கல்யாணம் செஞ்சிக்கறது, என்று அவர்களைப் பார்க்கிற இந்த இளவட்டங்கள் ரெண்டு பேரும் புரிந்து கொள்கிறார்கள். இது யதார்த்தப் படமா? புதுமைப் படமா? புதுமையில் ஆரம்பித்து யதார்த்தமே ஓ.கே. என்கிற படமா? கல்யாணம் என்பதே என்னிக்காவது உடம்பு முடியாமல் போனால் பாத்துக்கணும், என்பதற்காகப் பண்ணிக் கொள்வது என்கிறாரா மணி ரத்தினம்? சரி, என்னதான் சொல்கிறார்?

ஆரம்பக் காட்சியில் கதாநாயகன் வருகிற ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள் அவள். பிறகு கதாநாயகனிடம் வயப்படுகிறாள். காதல் வயப்படுகிறாள், என எழுதக் கூடாது. இது லிவிங் டுகெதர் கதையாச்சே. ஏன் தற்கொலைக்கு முயன்றாய், என்று அவன் கேட்க, அவளை அவள்பணத்துக்காக பெண்பார்க்க ஒருவன் வந்தான். அவனை தன்னிடம் இருந்து கழட்டிவிட இந்த நாடகம் என்கிறாள். உடனே நாம எல்லாரும் ‘சரி‘ என்று அந்த சம்பவத்தை அப்படியே விட்டுவிட்டு படத்தைத் தொடர்ந்து பார்ப்போம், என மணி ரத்தினம் நினைக்கிறார். இந்தப் புதியவன், கதாநாயகன் இவளை இவள்பணத்துக்காகக் காதலிக்கவில்லை என அவள் எப்படியோ கண்டுபிடித்து விடுகிறாள்!

தற்கொலை முயற்சி என்பது எத்தனை பெரிய விஷயம்? அப்படி ஒரு காட்சி துவங்குகையில் அந்தப் பாத்திரப் படைப்பைச் சுற்றி கதை எப்படிப் பின்னிப் போகும். அவள் உணர்ச்சிகளை எப்படி உற்று உள்வாங்கும். கதையில் வெறும் திடுக் தந்துவிட்டு கழண்டு கொண்டுவிடுகிறது அது. சம்பவங்களைத் தொடராக்கி அடுத்த உணர்ச்சித் தீவிரத்தை நோக்கிக் கதை நகர்த்திச்செல்லப் படவில்லை.

சர்ச்சில் வேறொரு கல்யாணத்தின் போது அவனும் அவளும் பத்து ஆட்கள் இடைவெளியில் கலகலக்கிறார்கள். அங்கேயே அவளது அலைபேசி எண்ணை அவன் கேட்டுப் பெற்று, அலைபேச்சில் கலகலப்பு தொடர்கிறது. தொடர்ந்து இளமைக் கும்மாளம் ஆரம்பமாகிறது. அவர்கள் லிவிங் டுகெதர் பாணியில் சேரப் போகிறார்கள், என்கிற அளவில் வசனங்கள். கல்யாணம் நான்சென்ஸ். அவசர அவசரமா செக்ஸ், உடனே குழந்தை, அது நம்ம மேலேயே கக்கா போகும்… என புது மண தம்பதியரின் வாழ்க்கை சார்ந்து கிண்டல். கடைசியில் திருமணம் சரி என்கிற அளவில், இந்தப் படம் முடியும் போது ‘இந்த‘ வசனங்களை நாம மறந்துவிட வேண்டும், என்கிறார் மணி ரத்தினம். கக்கா போகாத குழந்தை பெற்றுக் கொள்வார்களாக இருக்கும்.

ஐ. ட்டி. சார்ந்த பின்னணி என்கிறார்கள். அவன் ஐ. ட்டி.க்காரன். அவர்களின் ஆகப் பரபரப்பான வாழ்க்கையை மணி ரத்தினம் காட்ட யோசிக்கவே இல்லை. திடீரென்று அலுவலகத்தை மறந்து, அல்லது துறந்து காம ஈர்ப்பைப் பேணுகிறார்கள். போஷிக்கிறார்கள். அவள் ஆர்க்கிடெக்ட். அவள் வெளியூர் போகிற வாய்ப்பு வந்தால், இவனும் கூடவே அதே ரயிலில் ஓடிவந்து ஏறிக் கொள்கிறான். அங்கே அவள் தன் அம்மா அப்பா ரெண்டு பேரும் தனது சிறு வயதில் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள், என்று சோகமாய்ப் பேசுகிறாள். விவாகரத்து முடிந்து அப்பா அம்மா, யார் கூடவும் நான் போக விரும்பவில்லை, என்று அந்தச் சிறுமிவயதிலேயே நினைத்ததாகச் சொல்கிறாள்.

சுதந்திரமாய்த் திரிகிறதில் அவள் இச்சை அப்போது ரசிகர்களாகிய நமக்கு அறியத் தரப்படுகிறது. வெளியூரில் ரயிலை விட்டுவிட்டு அவனுடன் தங்குகிறாள். பாட்டு கூட பாடுகிறாள். ஊர் திரும்பியதும் அம்மா திட்ட என்றே வந்து காத்திருக்கிறாள். இவள் தற்கொலை செய்ய முயன்றது தெரியாத அம்மா. இப்போது “நேற்று நீ யார் கூடத் தங்கினே? எனக்கு எல்லாம் தெரியும். நான் உன்னைக் கண்காணிச்சிக்கிட்டே இருக்கிறேன்“ என்கிறாள்.

அப்புறம் ஒரு முதிய தம்பதியரின் வீட்டில் இவர்கள் ஒன்றாகத் தங்குகிறார்கள். முதிய ஆண் அவர்கள் சேர்ந்துதங்க இடம் தர மறுக்கிறார். முதிய பெண் ஒரு கர்நாடக சங்கீதப் பாடகி. அவளை ஒரு கர்நாடக சங்கீதப் பாடல் பாடி இந்த இளம் பெண் அசத்தி விடுகிறாள். உடனே வீடு தரப்படுகிறது. நல்லா பாடினால் வாடகைக்கு அதிலும் மும்பையில் வீடு கிடைத்து விடும், என்பது புதிய செய்தி. அதுவும் ‘லிவிங் டுகெத‘ருக்கு வீடு கிடைப்பது ஆச்சர்யமே.

பாடத் தெரியாத லிவிங் டுகெதர் பெண் பாவம் தான்.

அந்த அம்மாள் பாட்டுக் கச்சேரி ஒன்றுக்கு இளம் பையனுடன் போகிறாள். அவளே பாடுவாள், என அவளது கணவர் அறிமுகம் செய்கிறார். ஆனால் அவள் பாட முயற்சிக்கவே இல்லை. இவ்வளவு ரசனையும், ஈர்ப்பும் கர்நாடக இசையில் உள்ளவர்கள் எதாவது முணுமுணுத்துக் கொண்டே யிருப்பார்கள் என்கிற அளவில் பாத்திரப் படைப்பு துலக்கமாய் இல்லை. அவளது கணவர் முதல்அறிமுகக் காட்சியில் அந்த அம்மாளுக்கு சமையல் செய்து கொண்டிருக்கிறார். படம் முடியும் வரை அவர் வீட்டில் இருந்தால் சமையல் கூடத்திலேயே இருக்கிறார். அந்த அம்மாள் கையில் கரண்டியையும் பார்க்க முடியவில்லை, தம்புராவையும் தரிசிக்க முடியவில்லை. புள்ளி வைத்துவிட்டு கோலம் போட மறந்து விட்டாப் போல அமைந்திருக்கிறது கதையோட்டம்.

சுடிதார் போட்ட இளம் பெண்ணிடம் கவர்ச்சி வசனங்கள். கதாநாயகன் பேசுகிறான். “துச்சாதனனா மாறட்டுமா?“ அவள் அவனை மேலும் பேசக் தூண்டுகிறாளாம். “அப்புறம்?“ துப்பட்டாவை வேணுமானால் உருவலாம் அவன். அது என்ன துகில் உரிதல்?
 இளம் பெண்ணை கர்நாடக சங்கீதத்தில் தோய்ந்தவளாக ஒரு காட்சியில், வீட்டுக்கார அம்மாளைக் கவர என்று மாத்திரம் பயன்படுத்தி விட்டு, அதை மெல்ல பின்னணி இசையில் மாத்திரம் காட்டுகிறார் மணி ரத்தினம். அதுகூட இவர் வேலை அல்ல. ஏ. ஆர். ரகுமானின் வேலை. படத்தின் ஆகச் சிறந்த அம்சம் சூழல் அறிந்து புதிய ஒலிகளைப் பயன்படுத்தி புதுமை சமைத்திருக்கிறார் ரகுமான். இளமையான காட்சி எடுப்புகளுக்கு ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம். அவர் தயாராய் இருந்தாலும், காட்சிகளை அடுக்குவதிலும், பதிவதிலும் சாதாரண அளவிலேயே அழுத்தமோ, முத்திரையோ இல்லாமல் இயக்குனர் இயங்கியிருக்கிறாப் போல் இருக்கிறது.

மணி ரத்தினத்தின் முத்திரை ஓர் இடத்தில் அருமையாய் வந்து விழுந்திருந்தது. அவள் கர்ப்பமாக இருப்பதாக அவன் பதறும்படி, ஒரு மகப்பேறு இல்லத்துக்கு அவனையும் அவள் தரதரவென்று இழுத்துப் போகிறாள். அவன் திகைக்க அவள் “இவர்களின் ஒரு கட்டட பிராஜெக்ட் விஷயமாக வந்தேன்“ என அவனைக் குறும்புடன் தளர்த்துவது அழகு. இப்படி நாலைந்து இடங்கள் இருந்திருக்கலாம். எதிர்பார்க்க வைக்கும் அளவுக்கு இந்தக் காட்சி நிமிர்ந்து உட்கார வைத்தது. ஆனால் வேறு காட்சிகள் ஒன்று கூட இந்தத் தரத்தில் இல்லை.

கர்நாடக இசையின் ரசிகை என அவள் பாடும் பாடல் கூட ஆணிடம் இறைஞ்சும் பெண்ணின் தாபப் பாடல் தான். லிவிங் டுகெதரின் நவீனத்தன்மையை ஒட்டி அந்தக் காட்சியை வடிவமைக்க மணி ரத்தினம் முயற்சித்திருக்கலாமோ என்று பட்டது. அந்த முதிய அம்மையார் எதோ பாடிக் கொண்டிருக்க, இவள் போய் கூட அமர்ந்து இயல்பாய் இணைந்து கொண்டிருக்கலாம், என்றெல்லாங் கூட மனசில் அலையடித்தது.

முதிய தம்பதிகளில் அவர்தான் கடைசி காலத்தில் அவளைப் பராமரிக்கிறார், என்பது கதையம்சம். இளம் காதலியும் அவனிடம் கடைசி காலத்தில் இப்படி என்னை அனுசரணையாய்ப் பார்த்துக் கொள்வாயா, என்று கேட்டு, அவன் சம்மதித்ததும், திருமணத்துக்கு சம்மதிக்கிறாள். அவனுக்கு எதும் ஆனால் இவள் முடிவு என்ன, என்ற கேள்வியையே மணி ரத்தினம் விட்டு விடுகிறார். பெண் சென்டிமென்ட் நிறைந்த சினிமாவில் ஆண் நாசமாப் போனால் கவலைப்பட வேண்டாம். பெண்மையை உயர்த்திப் பிடிக்கலாம், என அவர் குறுக்கு சால் ஓட்டி விட்டார் போல.

மறதி நோயில் அந்த அம்மாள் முதலில் ஒருதரம் காணாமல் போகிறாள். கூட்டி வருகிறார்கள். திருப்பியும் காணாமல் போகிறாள். ரெண்டு முறையும் அவள் கணவர் அல்ல, இந்த இளம் காதலர்களே கூட்டி வருகிறார்கள். ஆனால் அவர் இவளை நல்லா பார்த்துக் கொள்கிறார், என்று இளம் காதலர்கள் புரிந்து கொள்கிறார்கள்.

இந்த இளம் வயதுக்காரர்களின் துடிப்பும் அறிவுச் சுடர் மிளிரும் செயல்பாடுகளும் மிடுக்கும் எடுப்பும்… எதுவுமே கதையில் இல்லை. அவள் அப்பாவும் அம்மாவும் விவாகரத்து கோரினால் கல்யாணம் வேணாம், திருமண பந்தத்தில் இருக்கும் வரை அவர்கள் சந்தோஷமாக சேர்ந்து வாழவில்லை, என்று ஒரு வசனம் சொல்லிவிட்டால் இளம் பெண்ணின் பாத்திரப் படைப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும், என மணி ரத்தினம் எதிர்பார்க்க முடியாது. அது டூ ஸ்கொயர் மச். இவள் ஏன் நன்றாக வாழும் இன்னோரு தம்பதியை உதாரணமாகக் கொள்ளக் கூடாது?... என்ற கேள்வி எழுகிறது.

அவள் சொல்வதற்கு தர்க்கம் வைக்கும் மணி ரத்தினம், கதாநாயகன் இப்படி லிவிங் டுகெதர் முறையில் வாழ எந்த தர்க்கத்தையும் வைக்க யோசிக்கவேயில்லை. திருமண பந்த வாழ்க்கையை அவன் புறக்கணிக்க யாதொரு சூழலோ, அவன்பக்க நெருக்கடியோ, அலலது அறிவார்ந்த முன்னெடுப்போ இல்லை. நீ கல்யாணம்னா பண்ணிக்கோ, சேர்ந்து வாழணும்னா வாழு, என அவன் கை கட்டிக் காத்திருக்கிறான். எனக்கு செக்ஸ் பசி தீர்ந்தாப் போதும்.

அவர்கள் பிரியும் வேளை வரும்போது அவன் “நீ இல்லாமல் நான் இல்லை“ என்று வாய் திறக்கிறான். அதற்கு அந்த அம்மையார் இன்னொரு தரம் தொலைந்துபோக வேண்டியிருக்கிறது. அதற்கு பெரு மழை ஒன்று வேண்டியிருக்கிறது…

உண்மையில் லிவிங் டுகெதர் என ஆரம்பித்து, கடைசியில் திருமண பந்தம் பாதுகாப்பானது, பிற்காலத்தில் முதிய காலத்தில் அவசியப் படுவது, என்பது அன்றி வேறு முடிவு என்ன கொடுக்க முடியும், என மணி ரத்தினம் தனக்குள் போராடியிருக்கக் கூடும்.

அதுவரை நவீன உடையில் சுற்றித் திரிகிற இளசுகள். சட்டென அவள் தலை நிறைய பூவும் புடவைமாய் முகூர்த்தம் பார்த்து தாலி கட்டிக் கொள்வதும், அவன் சமத்து மாப்பிள்ளையாய் மாறுவதும் அதுவரை அவர் காட்டிய அத்தனையையும், அதற்கு என அவர் வரைந்த நியாய வசனங்களையும் கேலிக் கூத்தாக்கி விடுகிறது.

பாலசந்தர், முதிர்ந்த ஆண் முகேஷ், முதிர்கன்னி குஷ்பு – இருவரையும் ஒரே கூரையடியில் லிவிங் டுகெதராக தங்க வைத்து, தற்செயலாபக இளைய காதலரகள் என ஒரு ஜோடியைப் புகுத்தி, அவர்களைப் பார்த்து இவர்கள் கல்யாணம் செய்துகொள்ள முடிவுக்கு நெருங்குகிறார்கள்… என வளைத்து ஒரு கதை சொல்லியிருக்கிறார். ‘ஜாதிமல்லி.‘ அதிலும் அவர்கள் கல்யாணம் வரை கதை வளராமல்… ஜாதி, கலவரம் அது இதுவென்று, டிராஃபிக் போலிஸ் வழி மாத்தி விட்டாப் போல கதை வேறொரு இடத்தில் போய் முட்டி நிற்கும். அதே சிக்கலை மணி ரத்தினமும் கதையை முடிக்கையில் சந்தித்து திகைத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

கூரையற்று, தூண்கள் மாத்திரமேயான கட்டடம் போல இருக்கிறது மணி ரத்தினத்தின் ’ஓ காதல் கண்மணி.‘

• • •