Book review நன்றி தளம் காலாண்டிதழ்

Book review
நன்றி தளம் காலாண்டிதழ்

மெழுகுவர்த்தி 

ஏற்றிய 

அறைகள்

* *
எஸ். சங்கரநாராயணன்

(‘தேவன் மனிதன் லூசிஃபர்‘. சைலபதியின் நாவல். 224 பக். விலை ரூ 150/-இராசகுணா பதிப்பகம் எண் 28 முதல் தளம் 36வது தெரு பாலாஜிநகர் விரிவு சின்னம்மாள் நகர் புழுதிவாக்கம் சென்னை 600 091 அலைபேசி – 91 94440 23182.)

ரு தொண்டன் புதுக்கட்சி தொடங்குகிறான், சைலபதி வாசகனாய் இருந்து, பிறகு கதாநாயகனாக தானே ஆக முடிவு செய்த கணம் அது. இவரது முதல் நாவல் இது. இப்படி தனிக்கட்சி ஆசைக்காரர்கள் உடனே புதிய கொள்கைகளாக எதையோ சொல்லிவிட்டு, பின்னணியில் காமராஜர் காந்தி அம்பேத்கார் அண்ணா… என்று படங்கள் போட்டுக் கொள்வது வழக்கம். தமிழ் நாவல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் சைலபதி. இந்த நாவலின் பின், பைபிள், பிராமண சமூகம், கிறித்தவ சபை… என சில வளையங்களை அவர் சுழல விட்டிருக்கிறார்.

புராணங்கள், வரலாறுகள் சார்ந்து மறுவாசிப்பு பரிசீலனைகள் ஜோராக முன்னணிப் பட்ட காலம் இது. அசுரர்கள் என்பவர்கள் ஆதி பழங்குடிகள். அவர்கள் இடத்தில் போய் யாகம் செய்கையில் பிராமணர்களை அவர்கள் எதிர்த்தார்கள், என்று ஒரு பார்வை உண்டு. பட்டத்து அரசியின் மகன் ராமன். அவனுடன் தசரதனின் ஆசைநாயகியின் மகனான லட்சுமணன் வேலைக்காரனாக அடிமையாகப் போயிருக்க வேண்டும், என ஒரு கருத்து உண்டு. கிறித்துவ மதம் பற்றி, இயேசு ஒரு அதிகார பிம்பமாய்க் கட்டமைக்கப் பட்டிருப்பதாக பல்வேறு பதிவுகள், புனைவுகளேகூட வந்தாயிற்று. BIBILE, THEN RIFLE, என்று பிரபல சொலவடை உண்டு. இந்தச் சூழலில் இயேசுவை தொன்ம மயக்கமான கதைச்சூழலில் மிளிரப் பண்ணுகிறார் சைலபதி, என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது.

சைலபதியின் இந்த முதல் நாவல், அதன் (ஞான) ஸ்தானம் என்ன? முதல் நாவல் என்கிற அளவில், வயசுக்கு வந்த பெண்ணின் வசிகர அழகு இதற்கு உண்டு. பச்சைப் பந்தலிட்டு வாழ்த்தி அட்சதையிட வேண்டிய முயற்சி இது. ஒரு காவியத்தன்மையுடன் நாவலை அமைக்க சைலபதி யத்தனிக்கிறார். அது ஓரளவு கைகூடவும் செய்திருக்கிறது. வாசிப்பதில் அவ்வளவில் நாவல் சுவையானதாகவே இருக்கிறது. உவமை வீச்சுகள், பைபிள் வழிப்பட்ட, தொன்மம் சார்ந்த மொழி, அற்புதங்கள் நிகழ்த்தும் சம்பவ சுவாரஸ்யங்கள், மேஜிகல் ரியலிச வார்த்தையாடல்கள். தனிமனித அடையாளங்களில் ஆரம்பிக்கும் கதை. பாஸ்டர் ஜீவானந்தம் என லட்சியம் தொட்டு, அதனாலேயே கிறித்தவ சபையின் அதிகாரக் கட்டமைப்பு, உட்பூசல்கள், ஊழல்கள் என வேறு திசைக்கு நகர ஆரம்பிக்கிறது.

இந்த நாவலுக்கான முன்னுரை என்று தனது சட்டகத்துக்குள் சைலபதியை அடக்கப் பாடுபட்டிருக்கிறார் காரல் மார்க்ஸ் கோவில் பூசாரி கல்யாணராமன். நாவலைப் புரிந்துகொள்ள இது சிக்கல்ப்படுத்தி விடுகிறது. முன்னுரை விமர்சனம் அல்ல. அதன் ஐதிகங்கள் வேறு. தலைப்பிலேயே “சிறுமழை“ என்கிறார். “எல்லையின்மை என்பதை விடவும், எல்லை மீறாமை என்பதற்குத்தான் சைலபதி அடங்கிய தொனியில் அழுத்தமளித்துள்ளார்“ என்றும் சொல்கிறார். (அழுத்தம் அளிக்கவில்லை, என்பதைத் தான் இப்படிச் சொல்கிறாரா?)

இதேபோல, நாவல் வந்தபின், பின் நவீனத்துவ ‘குருசாமி‘ எம்.ஜி. சுரேஷ், இதை “அடிப்படைவாதங்களுக்கு எதிரான குரல்“ என பெருந்தன்மையுடன் ‘யு‘ சர்ட்டிஃபிகேட் தந்திருக்கிறார். ‘தேவன் மனிதன் லூசிஃபர்‘ என்ற தலைப்பே மதம் சார்ந்த அடிப்படைவாத சிந்தனைப் போக்குதான்! இதில் மாற்று மதம் கூட இல்லை! நாவலில் மத மாற்றத்தை யாருமே, இந்துக்களோ, கிறித்தவர்களோ தடுக்கவோ எதிர்க்கவோ இல்லை. மாற்று மதத்தை யாரும் குறைத்துப் பேசவில்லை. அந்த மதமாற்றம் பெறும்பாத்திரங்களும் பெரிதும் ஈர்ப்புடன் மதம் மாறவில்லை, என்பது முக்கியம்! இவர்களுக்கு சௌகர்யமான அளவிலேயே அதை அவர்கள் அணுகுகிறார்கள். சரி தப்பு என்றுகூட அதில் விவாத அளவில் கதை விரிவடையவில்லை. எம்.ஜி. சுரஷ் காட்டிய மேற்கோளே கூட, நாவலின் பாத்திரங்கள் சார்ந்த விஷயம் அல்ல. பொத்தம் பொதுவாக, எழுத்தாளரின் ‘பிரசங்கம்‘ தான். கதையின் முதல் பாத்திரம் ஹரி. காதல் என்று வருமுன்பே மதம் மாறியவன். வந்தபின் காதலா, கர்த்தரா என நெருக்கடி வந்தபோது, கர்த்தரே என்று முடிவு எடுக்கிறான். அடிப்படைவாதத்துக்கு எதிராக, என்று சுரேஷ் சொல்வதற்கு எதிராக முடிவு எடுக்கிறான்! நாவலும் விஸ்தாரமாக அடிப்படைவாதம் பேசுகிறது. யேசுவை வியக்கிறது. அவர்வழி சொல்லப்படும் வாழ்க்கை நெறிமுறைகளை விதந்தோதுகிறது. தனியே யேசுவின் சரிதத்தையும் அது எழுதிக் காட்டுகிறது. சாரி, எம்.ஜி.சுரேஷ்.

மரணமும் காமமும் அன்றி மாஜிகல் ரியலிசக் கதைகள் இல்லை. நாவலா என்கிற உடல்சார்ந்த மதமதர்ப்பு கொண்ட பாத்திரம். அதில் காமம் தான் உள்ளது. உடல்ருசி சார்ந்த வேட்கையைக் காதலாக அவளால் ஏற்க முடியவில்லை. அவள் ஒரு ஆணுடன் திருப்தி அடைய மாட்டாள், என்கிறார் ஆசிரியர். ஆனால் அவள் கடைசிவரை ஒரு ஆணுடன் தான் உறவு வைத்திருக்கிறாள், என்பது எழுத்தாளரின் சமத்தை, விகாரப்படாத உள்மனசை வெளிக்காட்டுகிறது. ஆனாலும் நாவலில் நாவலாவின் பாத்திரம் முற்றிலும் தனி அடையாளங்களுடன் செதுக்கப் பட்டிருப்பதாகவே சொல்ல முடியும். அவள் உடல் சார்ந்த தன்கிளர்ச்சிகள், எழுச்சிகள் கொண்டவள். ஆண் பெண் உறவைத் தாண்டி குடும்ப உறவுகளை அவள் கொண்டாடுவது இல்லை. எனினும் நட்பு பேணத் தெரிந்தவள்… என்கிற அளவில் அந்த எல்லைக்கோட்டைத் துல்லியமாக அவளைவைத்து சைலபதி காட்டியிருப்பது ஆச்சர்யமானது. கதையில் மதம், மத மாற்றம் என்பன தாண்டி இப்படியோர் பாத்திரப்படைப்பின் துல்லியம் ஆச்சர்யமானது. கதாசிரியரின் வெற்றி என நான் இதைப் பாராட்டுவேன்.
கதை மத மாற்றம் சார்ந்து துவங்கி, அடிப்படைவாதத்துக்கு எதிரான குரல் என வடிவம் பெற, இதை எழுத ஆரம்பித்தபோது சைலபதி பலதும் நினைத்திருக்கலாம். ஆனால் நாவல் யார் உண்மை ஊழியன், யார் தூய கிறித்தவன், அவன் அனுபவிக்கும் சோதனைகள் என்னென்ன, என்றெல்லாம் பயணிக்கும் கதை, இலட்சியத்தினவு கொண்டு, வேறு கதியில் நகர்ந்து, முடிகிறது.
கதையில் கதையம்சம், உத்தி, மாஜிகல் ரியலிச யத்தனங்கள், காவியப்புனைவு முயற்சிகள் எல்லாம் தாண்டி, சைலபதியின் படைப்பு மனம் எழுத்தின் ஊடே, மனித மனத்தின் ஊடாட்டங்களை, நெருக்கடிகளில் மனசின் தவிப்புகளை, தேடல்களையெல்லாம் துழாவிப் பார்ப்பது தான் இந்த நாவலின் விசேஷ அம்சம்.
 அழும்போதும் சிரிக்கும் போதும் தான் மனிதன் தன்சார்ந்த இயல்புகளை அறிந்துகொள்கிறார்கள் என்கிற அவரது வாதம், நாவல் மூலம் அவர் தரிசனப்பட்ட, கண்டடைந்த இடமாக நான் மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்வேன்….
 வளர்ந்தவர்களின் அழுகையின் காரணம் எப்பொழுதும் நேரடியானவை அல்ல. கிடைத்த காரணத்தைச் சொல்லி, வெளித் தெரியாத தங்கள் மனதின் தாழ்வாரங்களில் ஒளிந்து கிடக்கும் ரகசியங்களுக்காக அழுகிறார்கள். மரணத்தில் பிறக்கும் அழுகைகள் ஒரு பெருவெள்ளத்தைப் போலக் கிளம்பி மனத்தின் கரைகளை உடைத்துப் பெருகி வீழ்ந்து துக்கம் தீர்ந்து போனதும் நின்று விடுகிறது. ஆனால் அவமானங்கள் பெருக்கும் அழுகைகள் வெளிப்படையாக நின்று போனாலும் உள்ளூற அது மழைக்காலத்தின் சாரலைப் போல தூறிக்கொண்டே இருக்கிறது…” (ப. 87)
 தன் ஆசைகளும் தன் முடிவுகளும் தோற்கும் போதுதான் மனிதர்கள் முடிவில்லாமல் அழுது தீர்க்கிறார்கள். நாவலாவுக்குத் தெரியாதா என்ன, அவளின் காரியங்கள் செயல்கள் அவளுக்கு அவமானத்தைத் தேடித்தரும் என்று? ஆனாலும் அழுகிறாள். அழுது முடிக்கிற போது அவளுக்குத் தன் செயல்களின் குற்றவுணர்ச்சி தீர்ந்து போயிருக்கும். அவள் சுமுகமாவாள். அடுத்து என்ன செய்வது, என்று முடிவெடுப்பாள். பெரிய முடிவுகளுக்கு முன்னதான முஸ்திபுகள்தான் அவளின் அழுகை என்று ஹரி புரிந்துகொண்டான்.” (பக். 87)
 நாவலின் ஆகச் சிறந்த பகுதியாக அத்தியாயம் ஒன்பது திகழ்கிறது. பாஸ் உடனான அவளது உறவு வெளிப்படையாக விமரிசனத்துக்கு வரும் பகுதிகள் அவை. அப்போது நாவலா அழுகிற காட்சிகளை கச்சிதமாக ‘பிரசங்கிக்கிறார்‘ சைலபதி.
சில பகுதிகள் கழித்து காயத்ரி வாழ்வின் சிக்கல். அதில் வரும் அழுகை. “ஒரு பெண்ணின் சிரிப்பும் அழுகையும் அவ்வப்போது நிகழும் காரணங்களுக்காக அல்ல.“ (பக். 124) பாத்திரங்கள் சந்திக்கும் நெருக்கடிகளில் அழுகையின் ஊடாகப் பயணப்படுவதை எழுதுகையில் சைலபதி அதை உற்று கவனித்து ஊன்றி எழுதுகிறார். இது அவர் எழுத்துப் பயணத்தின் தனி முத்திரை. அடையாளம்.
ஸ்ரீவித்யாவை மறக்க முனைகிற ஹரியின் அழுகை. “அவனுக்குள் இருந்த பாரம் அவனைக் கேளாமல் கண்ணீராய்க் கசியத் தொடங்கியிருந்தது. சத்தம் இல்லை. ஆர்ப்பாட்டம் இல்லை. அவன் தன் ஆன்மாவில் இருந்து அழுதுகொண்டிருந்தான். என்ன சொல்லி அழுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. எல்லாம் அவன் அறிந்து தான் நடந்தது. இதில் எதற்கும் தான் பொறுப்பில்லை என்று எப்படிச் சொல்வது? அழுகிறவர்கள் எல்லோரையும்போல ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?‘ என்று சொல்லி அழலாம் என்று தோன்றியது. (பக். 142)
தவிக்கிற மனசின் மையப்புள்ளியை நோக்கி தானறியாமல் நகர உந்தப் படுகிறார் சைலபதி. ஒரு திரைப்படத்தின் சிறப்பான ரீ ரிகார்டிங் போல, தீம் மியூசிக் போல அமைகிறது இந்தப் பகுதிகள். இந்த உந்துதல், எழுத்தில் அவரை மேலும் பல படிகள் உயர்த்திவிடும் என்று நம்பலாம். 
ஆசிரிய உரையில் ஆன்மா என எழுதும் இவர், இந்துமதப் பின்னணியில் ஆத்மா எனவம், கிறித்துவம் வருகையில் ஆத்துமா எனவும் எழுதிச் செல்கிறார். கதையில் மூணு ஆன்மாக்கள்.
 நன்னடை நல்கல் சைலபதிக்கு வந்திருக்கிறது. வாசிக்க அருமையான நாவல் இது. முதல் நாவல் என்ற அளவில், விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டு, நல்ல கவனம் பெற வேண்டிய நாவல் இது.

Comments

Popular posts from this blog