Monday, January 8, 2018


மூங்கில்
எஸ். சங்கரநாராயணன்

வள் வைதேகி. அக்கா. இவள் சக்தி. தங்கை. அக்காவும் தங்கையும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்து இப்போது அக்கா கல்லூரி போகிறாள். தினசரி ஒண்ணாய் ஒரே வேனில் பள்ளிவரை அக்காவோடு உற்சாகமாய்ப் போவாள் சக்தி. இப்போது தனியே போவது அவளுக்குக் கஷ்டமாய் இருந்தது. ஆனால் அக்காவைப் பார்க்க மகிழ்ச்சி. கல்லூரியில் திங்களுக்குத் திங்கள் புடவை கட்ட வேண்டும் என்று கட்டாயம். வைதேகியைப் புடவையில் பார்க்க சக்திக்குச் சிரிப்பு. எந்நேரமும் புடவை சரியலாம் என்கிற சிறு பதட்டத்துடன் தெருவில் நடந்து வருகிற அக்காவைக் கிண்டல் அடித்தாள். “இருடி உனக்கும் இருக்கு…” என்றாள் அக்கா அழாக் குறையாக. “புடவை கட்டற காலேஜ்னா நான் வேணான்னுருவேன்ல” என்று அதற்கும் சிரித்தாள் சக்தி.
என்றாலும் அக்காமேல் கொள்ளைப் பிரியம் அவளுக்கு. அக்கா போல தான் அழகும் அல்ல. நிறமும் அல்ல. நிறத்தில் நான் அப்பா, என்றால் அவள் அம்மா மாதிரி. எந்த உடையும் அவளுக்கு, வைதேகிக்கு மேச்சாய் அமைந்து விடுகிறது. சற்றே பெண்மையின் ஆளுமை மிக்க அக்கா. வெளியே கிளம்பினால் ஒரு விநாடி நின்று கண்ணாடி பார்த்துவிட்டுக் கிளம்பும் அக்கா. கண்ணுக்கு மை தீட்டிக்கொண்டால் கூடவே அவள் புருவங்கள் தனி எடுப்பாகி விடுகிறது. வீட்டில் கூட தங்கையை, சக்தியைத் தான் திட்டுவார்கள். வைதேகியைத் திட்ட வாயெடுக்கும் போதே முணுக்கென அழுகை வந்துவிடும் அவளுக்கு. அப்பாவும் அம்மாவும் அவள் கண் திரள்வதைப் பார்த்தே இரங்கி விடுவார்கள். இவள், சக்தி அப்படியே விரைத்தாப் போல நிற்பாள். ரெண்டு வசவு கூடுதலாய் வாங்கிக் கொள்ள வேண்டி வரும். “அவளா? பிறக்கையிலேயே அவ அழுவல்லியே?” என்று அவள் தலையில் குட்டிச் சிரிப்பாள் அம்மா.
அக்காவை விட கிடுகிடுவென்று வளர்ந்தாள் சக்தி. மூங்கிலின் நிமிர்வு அது. அம்மா சலித்துக் கொண்டாள். “ஏய் ஏய் இருடி, இப்பிடி வளர்ந்தியானா எங்கருந்துடி உனக்கு மாப்ளை பாக்கறது?”
“அதெல்லா நாங்களே பாத்துக்கறம்.”
“இன்னும் வயசுக்கே வரல்ல. அதற்குள்ள பேசற பேச்சப் பாரு” என்றார் அப்பா.
“சின்னப் பொண்ணுகிட்ட அம்மா மாப்ளைபத்திப் பேசலாமாக்கும்?” என்றாள் சக்தி அப்பா பக்கம் திரும்பி.
எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தாள் வைதேகி. சலசலவென ஓடும் ஆற்றின் ஓரத்து நாணல் அவள். இந்தக் குட்டி என்ன இந்தப் பேச்சு பேசுது, என அவளுக்கு ஆச்சர்யம். என்றாலும் வைதேகிக்கு அவளை ரொம்பப் பிடிக்கும். சாப்பிடுகையில் அவள் வர தாமதமானால் காத்திருப்பாள் அக்கா.
“உனக்குப் பசிக்கறதாக்கா?”
“உனக்கு பசிக்கலையா?”
வி‘றுவிறுவென்று புத்தகத்தை மூடிவிட்டு வருவாள் சக்தி. சக்தி நன்றாகப் படித்தாள். வகுப்பில் முதல் அவள்தான். படிப்பு தவிர பேச்சு, கட்டுரை என்று போட்டிகளிலும் தானே பேர் கொடுத்து கலந்து கொள்வாள். அக்காவை விட இவள் படிப்பில் சுட்டி, என்பதில் வைதேகிக்குப் பெருமை உண்டு.
இரவில் சக்தி அக்காகூடப் படுத்துக் கொண்டாள். சீக்கிரமே படுத்து விடுவாள் வைதேகி. வீட்டுப் பாடங்கள் இருந்தால் கூட காலையில் அம்மா அவளை வந்து எழுப்பிவிட வேண்டும். விடுமுறை நாளில் அவள் எழுந்துகொள்ள சூரியன் பளிரென கிளம்பியிருக்கும். தங்கையிடம் படிப்பில் ஒழுங்கு இருந்தது. எத்தனை வீட்டுப்பாடம் இருந்தாலும், மறுநாள் தேர்வு என்றாலும் இராத்திரி பதினொரு மணியானாலும் படித்து முடித்துவிட்டுதான் உறங்க வருவாள். அவள் படிக்கையில் வீட்டில் டிவி எதும் ஓடக் கூடாது. செல்ஃபோன் கால் வந்தால் பேச வெளியே போய்விட வேண்டும், என்று கண்டிப்பு தங்கையிடம் இருந்தது. அவள் பாடங்களை முடித்துவிட்டு வரும்போது அக்கா நல்ல தூக்கத்தில் இருப்பாள். தலையணையில் இருந்து தலை இறங்கிக் கிடக்கும்.
அக்காவுக்கு தலையணையை மீண்டும் வைத்துவிடுவாள் சக்தி.
கடை கண்ணிக்குப் போனால் சக்தியின் உடைகளை, தேவைகளை யெல்லாம் வைதேகி பார்த்துப் பார்த்து வாங்கினாள். வண்ணங்கள் சார்ந்த அக்காவின் தேர்வு சக்திக்கு வராது. அது சக்திக்கே தெரியும். அதேபோல வைதேகி நல்லா பாடுவாள். பி. சுசிலா குரல் போல இருந்தது அவளுக்கு. பழைய சுசிலா பாடல்கள், பக்திப் பாடல்கள் பாடப் பிடிக்கும். சக்திக்கு சுட்டுப் போட்டாலும் சங்கீதம் வரவில்லை.
கல்லூரி என்பதால் அக்கா வர தாமதமானது. கல்லூரிக்குப் போக அரைமணி நேர பஸ் பயணம். லேடிஸ் பஸ் வரும். நாலு தெரு தள்ளி பஸ் நிறுத்தம் வரை போய் பஸ் ஏறவேண்டி யிருந்தது. சக்திக்கு இன்னும் வேன் தான். பள்ளிக்கு அவள் சீக்கிரம் போக வேண்டும். அவள் கிளம்பிப் போனபின் அக்கா கல்லூரி கிளம்புவாள். பல நாட்கள் அம்மா உள்ளே வேலையாய் இருந்தால், அக்கா அவளுக்கு ரெட்டைப் பின்னல் போட்டுவிடவேண்டி வரும். வைதேகி ரெட்டைப் பின்னல் போடுவதை நிறுத்தி நாலு வருடம் ஆகிறது. நீளமான கூந்தல் அவளுக்கு. அவிழ்த்து விட்டால் கருப்பு அருவியாய் இறங்கி முதுகை மறைத்துக் கொள்ளும். அக்காவின் தலைமுடியைப் பார்த்துப் பொறாமை உண்டு சக்திக்கு.
கோவில் கடைகண்ணி என்று அக்காவும் தங்கையுமாய் வெளியே இறங்கினால் ‘என் கண்ணே பட்ரும் போலுக்கே…’ என பெற்றவளுக்கு கண் பனிக்கும். சின்னவள் ஊசிப் பட்டாசு போல, வீட்டுக்கு வந்ததும் அன்றைக்குப் பள்ளியில் என்னென்ன கலாட்டா நடந்தது அது இதுவென்று அம்மாவை இழுத்து உட்கார்த்தி வைத்துக்கொண்டு கதையளக்க வேண்டும் சக்திக்கு. பெரியவள் முன்னேயிருந்தே சற்று அமெரிக்கை. அளந்து பேசுவாள். அளந்து புன்னகை செய்வாள். பளீரென்ற பற்கள். இன்னும் இவள் சிரிக்க மாட்டாளா என்றிருக்கும். அப்பா அம்மாவிடம் தான் இப்படி இருக்கிறாளா, இல்லை தங்கையிடமாவது கலகலப்பாக அவள் பேசுவாளா தெரியவில்லை. ஆனால் சக்தி ஆள் கெட்டி. எதும் பேச வேண்டியிருந்தால் அவள் அக்கா வாயைப் பிடுங்கி வேண்டியதை வாங்கி விடுவாள் என்றிருந்தது அம்மாவுக்கு.
வைதேகிக்கு கல்லூரி பிடித்திருந்தது. புடவை கட்டுவது சற்று சிரமமாய் இருந்தாலும் அதைப் பழகிக் கொள்ளப் பிடித்தது. சுடிதாரை விட புடவை இன்னும் பாந்தமாய்த் தான் இருக்கிறது. இன்னொரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வைக்கிறது. புடவை அவள் கட்டும் தினங்களில் அம்மா தவறாமல் பூ வாங்கி ஃப்ரிஜ்ஜில் வைத்து எடுத்துத் தந்தாள். பாதியைக் கிள்ளி தங்கையிடம் தந்துவிட்டு பூவை ஹேர்பின் வைத்துக் குத்திக் கொண்டாள் வைதேகி. நடை இன்னும் நளினமாய் இருந்தாப் போலத் தோணியது. வீதியிலும் கல்லூரியிலும் புடவை கட்டி வந்த பெண்ணுக்கு அதிக கவனம் கிடைப்பதை அவள் சற்று வெட்கத்துடன் உணர்ந்தாள். இப்படியெல்லாம் தான் யோசிப்பது ஆச்சர்யமாய், என்றாலும் பிடித்தும் இருந்தது அவளுக்கு.
அவளைக் கேலியடிக்கிற தங்கையைப் பிடித்துவைத்து அவளும் அம்மாவுமாய் ஒரு ’ஞாயிற்றுக்கிழமை புடவை கட்டி விட்டுவிட்டார்கள். தலையைத் தழையப் பின்னி பூவும் வைத்து கண்ணாடி முன் நிறுத்தினார்கள். சக்தி வெட்கப்பட்டு அன்றைக்குத்தான் பார்க்கிறார்கள். “நல்லாருக்காடி?” என்று அவள் கன்னத்தை வருடிக் கொஞ்சினாள் அம்மா. “நாளைலேர்ந்து நான் ஸ்கூலுக்கு புடவை கட்டிக்கிட்டு தாம்மா போகப் போறேன்” என்றாள் சக்தி. எல்லாருக்கும் ஒரே சிரிப்பு.
சில நாட்களாக வைதேகி முகத்தில் ஒர் இனம் புரியாத கவலை இருப்பதாய் சக்தி உணர்ந்தாள். அம்மா அதைக் கண்டுபிடித்தாளா தெரியவில்லை. அம்மாவிடம் கூட அதைப் பற்றி சக்தி சொன்னாள். “பரிட்சைல எதும் மார்க்கு குறைஞ்சிட்டதா என்னன்னு தெரியலியே…” என்றாள் அம்மா. அவளாகச் சொல்லட்டும், என அம்மா காத்திருந்தாள். பிள்ளைகள் வளர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு என தனி நோக்கும் போக்கும் வருகிற வயசு அல்லவா இது. எல்லாவற்றையும் விசாரிக்காமல் ஓரமாய் நின்று அழகு பார்க்க அவள் விரும்பினாள்.
வைதேகியிடம் அந்த வழக்கமான உற்சாகம் இல்லை. காலையில் கல்லூரி கிளம்பும் போது அந்த வேகம், இப்போது தயக்கமாய் இருந்தது. உடையுடுத்துவது சரியாக இருக்கிறதா, நெற்றியில் பொட்டு சரியாக இருக்கிறதா, என கண்ணாடியில் ஒரு மேற்பார்வை… பார்க்காமல் கிளம்பினாள். அப்பாவிடம் இதுபற்றிச் சொல்லலாமா என்று நினைத்தாள் அம்மா. அதற்குள் வைதேகியிடம் பேசிவிட்டால் நல்லது, என்று தோன்றியது. எப்படி உற்சாகமாய் வளைய வருவாள். குளிக்கையில் கூட எதும் சுசிலா பாடல் பாடுவது கேட்கும். என்னாயிற்று இவளுக்கு, அம்மாவுக்குக் கவலையாய் இருந்தது.
**
யார் அவன் தெரியவில்லை. சரியாக லேடிஸ் பஸ் வருகிற சமயம் நிறுத்தத்தில் வந்து நிற்கிறார்கள் சில பையன்கள். அதில் அவன் சற்று நெடுமரமாய் இருந்தான். முழுக்கைச் சட்டை. மீசை முளைக்கிற வயசுக்காரன். ஒரு சிகெரெட் கையில். அதன் நெருப்பை அலட்சியமாய் ஒரு சுண்டு சுண்டி அவளைப் பார்த்தபடியே வாயில் வைத்து ஆழமாய் உறிஞ்சி புகையை வெளித் தள்ளுகிறான்.
அவள் அவனை கவனிக்கவில்லை. பிறகு கவனித்தாள். அவளை அவன் பார்த்த பார்வை பிரத்யேகமானது என வைதேகி உணர்ந்தாள். வழியில் உரசும் முள் போன்ற பார்வை அது. இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. பள்ளியிலும் அவளுடன் பையன்கள் படித்தார்கள். ஆனால் அவர்களிடம் இந்தமாதிரி கள்ளப் பார்வையை அவள் உணர்ந்தது இல்லை. ஒருவேளை அவள் இப்போது தான் இதையெல்லாம் உணர ஆரம்பித்திருக்கிறாளா தெரியாது.
இரவு பாடம் படிக்கையிலும், காலையில் கல்லூரி கிளம்பத் தயாராகும் போதும், என அடிக்கடி அவன் முகம் மனசில் வந்தது. என்னவோ நிகழப் போகிறது. பயமாய் இருக்கிறதா? பயமும் இருந்தது. என்ன ஆகிவிடும்… என யோசித்தாள். ஏற்கனவே புகை பிடிக்கிறான். வாழ்வின் சுகமான பகுதிகளை சற்று முன்னதாக அனுபவிக்க அவன் உந்தப் பட்டுவிட்டான் என்று தோணியது. ‘ஐ லவ் யூ” என்று எதும் உளறி விடுவானோ? அந்த நினைப்பே அவளுக்கு பயத்தை உண்டு பண்ணியது.
அப்படி எதும் அபத்தமாய் நிகழ்ந்தால் இதை எப்படிச் சமாளிப்பது, என யோசித்தாள். வீட்டில் யாருக்கும் இது தெரியாது. அப்பாவிடம் சொல்ல முடியாது. சட்டென்று கோபம் வந்து விடும். அவரால் பொது இடத்தில் அவள் பெயர் அடிபடுவதை அவள் விரும்பவில்லை. அப்பாவையோ அம்மாவையோ பஸ் நிறுத்தம் வரை, கூட வா, என்று சொல்லலாமா, என்ற எண்ணத்தையே அவள் கைவிட்டாள். எல்லாம் ஒழுங்காக அமைதியாக நடந்து கொண்டிருந்தது அவள் வாழ்வில். இப்போது… ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?
அவளே எதிர்பாராமல் ஒருநாள் அந்தப் பையன் அவள் அருகே விறுவிறுவென்று வந்தான். திடுக்கிட்டாள் அவள். அப்போது பஸ் நிலையத்தில் யாரும் இல்லை. பஸ்சும் வரவில்லை. அவள் காத்திருக்க வேண்டியதாகி விட்டது. அவன் அந்த சந்தர்ப்பத்தை நழுவ விடத் தயாராகயில்லை. அவள் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. “வைதேகி…” என்றான் தாபத்துடன். தூக்கிவாரிப் போட்டது. அவன் எப்படியோ விசாரித்து என் பெயரைத் தெரிந்து கொண்டிருக்கிறான். அவள் ஓரடி முன்னால் நகர்ந்தாள். அதற்குள் நல்லவேளை பஸ் வந்தது. பெண்கள் பேருந்து அல்ல. பரவாயில்லை, என ஏறிக்கொண்டாள். அவள் கூட அதே பஸ்சில் அவனும் ஏறி விடுவானோ என்று பயந்தாள். அவன் பஸ் வரும் என எதிர்பார்க்கவில்லை. தவிர அவன் அவள்பார்க்கத் திரும்பி நின்றிருந்தான். பஸ் வந்ததை அவன் கவனிக்கவில்லை. நல்லதாயிற்று.
இருந்த பயத்தில் அழுது விடுவாள் போலிருந்தது. தன் நிறுத்தத்தில் கவனமாய் இறங்க வேண்டி வந்தது. கல்லூரிக்குள் நுழைந்தபோதுதான் ஆசவாசமாய் இருந்தது. அவன் பைக் வைத்திருந்தான். அவள் பஸ்சில் ஏறியதும் அவன் கூட ஏறாதது அதனால் கூட இருக்கலாம். அவளது கல்லூரியும் அவனுக்குத் தெரிந்திருந்தது. அவள் பஸ்சில் இருந்து இறங்க, அவன் பைக் அருகே அந்த நிறுத்தத்தில் நின்றிருந்தான். ஆனால் நிறையப் பேர் அருகே இருந்தார்கள். அவள் அவனை சட்டைசெய்யாமல் விறுவிறுவென்று கல்லூரிக்குள் நுழைந்தாள். அதற்குள் குப்பென்று வேர்த்து விட்டது. ஏன் இப்படி? ஒரு வேட்டையாடப் படுகிற மனநிலையில் நான் இருக்கிறேன். ஏன் இந்த பயம்? அவனிடம் முரட்டுத் தனமாய் எதும் பேசி அப்போதே இதை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம் என்று பட்டது. ஆனால் இவள் சொன்ன வார்த்தையில் அவன் விலகிக் கொண்டால் நல்லது- மேலும் விடாமல் அவன் துரத்தினால்?... என்ற பயம். ஆண்களுக்கு இப்படி அலைய நிறைய நேரமும் வாய்ப்பும் கிடைக்கத் தான் செய்கின்றன.
அடுத்தநாள் கல்லூரிக்குக் கிளம்பவே அவளுக்குக் கால்கள் தயங்கின. பசித்த மிருகமாய் அவனை உசுப்பேற்றி விட்டதாக நினைத்தாள். இனி அது சாமானியமாய் அடங்குமா தெரியாது. தலை வலிக்கிற மாதிரி இருந்தது. வீடே தனக்குப் பாதுகாப்பு என்று தோணியது. அவள் உடம்பு சரியில்லை என ஓய்வு எடுத்துக்கொண்டாள். அன்றைக்குக் கல்லூரிக்கு அவள் போகவில்லை.
“என்னக்கா?”
“தலை வலிக்குதுடி…” என்றாள் வைதேகி.
சக்தி போனதும் அம்மா அவள்பக்கம் வந்து உட்கார்ந்தாள். “என்னடி சொல்லு, நானும் நாலு நாளாப் பாக்கறேன். ஒருமாதிரி இருக்கே. உடம்பு கிடம்பு சரியில்லையா டாக்டர்கிட்ட போணுமா?” என்று வந்து அவள் தோளைத் தொட்டாள் அம்மா. அப்படியே அம்மாவைப் பாய்ந்து கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் வைதேகி.
**
சக்தி பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தாள். முழுக்கைச் சட்டை. நெடுநெடுவென்று உடல். அடையாளங் கண்டுபிடிக்க சிரமம் இருக்காது என்றுதான் தோன்றியது. நிறுத்தம் காலியாக இருந்தது. இன்னும் பரபரப்பாகிற நேரம் ஆகவில்லை போல. அவளுக்குத் தெரியாது. அவள் வேனில் பள்ளி போய் வருகிறவள். பைக் ஒன்றின் சத்தம். அவன்தான்… என திரும்பிப் பார்த்தாள். வெள்ளை முழுக்கைச் சட்டை. வெளியே விரல்கள். பன்னீர்ப் பூ போல இருந்தான். ஒருமாதிரி கிறக்க மனநிலையில் இருந்தான் அவன். காதல் பித்து தான், என நினைத்துக் கொண்டாள் சக்தி.
“குட் மார்னிங்” என்றாள் சக்தி அவனைப் பார்த்து. திடுக்கிட்டான் அவன். அவளைப் புரியாமல் பார்த்தான். “எஸ்?” என்றான். “நான் வைதேகியோட தங்கை” என்றாள். “தெரியும். உன் பேர் சக்தி” என்றான் அவன். சக்தி சிரித்தாள். “நல்லாதான் துப்பறியும் வேலை செஞசிருக்கீங்க” என்றாள் சக்தி. “காலைல ஆனா, சாயந்தரம் கல்லூரி விடற நேரமானா உடனே பைக் எடுத்துக்கிட்டு வேண்டுதல் போல பஸ் ஸ்டாப்ல காத்திருக்கீங்க. இதை ஆராய்ச்சி இல்லாமலே நான் சொல்வேன்…” என்றாள்.
“இல்ல. நீ ரொம்பப் பேசற” என்றான் ஒரு விரைப்புடன்.
“இல்ல. இந்த மாதிரி கோவில் பிராகாரம் சுத்தினால் புண்ணியமாவது மிஞ்சம்’னு சொனினேன்” என்று சிரித்தாள்.
“இது படிக்கிற வயசு. அதுக்கே அத்தனை போட்டி இருக்கு இந்த உலகத்துல. அதுல போட்டி போடுங்க முதல்ல” என்றாள் சக்தி. “இப்ப என்ன? உடனே எங்க அக்காவைக் கூட்டிட்டுப் போயி தாலி கட்டிக் குடித்தனம் பண்ணப் போறீங்களா?” என்று உக்கிரமாய் அவனைப் பார்த்தாள் சக்தி.
“வாட் டூ யூ மீன்?”
“அததுக்கு வேளை இருக்கு. இது படிக்கற காலம். நீங்க படிச்சி முடிச்சி நல்ல வேலை கீலைல உட்காருங்க. அப்பறம் காதல், கல்யாணம் எல்லாம் பார்த்துக்கறது நல்லது. சொந்தமா சம்பாதிச்சிங்கன்னா இதோ…” என அவன் பையில் இருந்த சிகெரெட் பாக்கெட்டைக் காட்டினாள். “இதோட காசு அருமை தெரியும். வீணாக்க மாட்டீங்க” என்றாள்.
அவன் பதில்சொல்லாமல் அவளையே பார்த்தான்.
“நைஸ் மீட்டிங் யூ. எங்க அக்காவுக்கு காதலிக்கறதைத் தவிர வேறு வேலைகள் நிறைய இருக்கு. அவளைத் தொந்தரவு பண்ண வேண்டாம். ஐ திங்க் யூ கேன் அன்டர்ஸ்டேண்ட்.”
அவன் அவளையே பார்த்தான். கையில் எடுத்த சிகெரெட் பாக்கெட்டை குப்பைத் தொட்டியில் வீசி தலையாட்டினான். அதைப் பார்த்தும் பாக்காமல் நடந்து போனாள் சக்தி. பள்ளிக்கு நேரமாகி விட்டது.
**
“இதை ஏண்டி முன்னாடியே சொல்லல எங்க கிட்ட? அப்பாகிட்டச் சொன்னா ஒரு வழி சொல்லுவார் இல்லே?” என்றாள் அம்மா வைதேகியிடம். “பயப்படக் கூடாதுடி. பயந்தா ஒரு காரியமும் ஆகப் போறது இல்லை. யார்கிட்டயுமே இதைச் சொல்லாம இப்படியே வெச்சிக்கிட்டுத் திண்டாடினியாக்கும்?”
“சக்திகிட்ட மட்டும் சொன்னேம்மா,”
அம்மா சிரித்தாள். “அவகிட்டியா? ரொம்பப் பெரிய மனுசி. அவ என்ன செய்யப் போறா இதுல?” என்றாள் அம்மா.
“இனி அவன் உனக்குத் தொந்தரவு தர மாட்டாண்டி…” என்றபடியே உள்ளே நுழைந்தாள் சக்தி. “என்கூட பள்ளிக்கூடம் வரை வாம்மா. முதல் பீரியடு போகல. டீச்சர் திட்டுவாங்க…” என்றபடி அக்காவைப் பார்த்தாள். “அழுதியா என்ன?” என்றாள்.

வைதேகி இப்போது தலையாட்டி வெட்கத்துடன் மறுத்தபடி சிரித்தாள். பளீரென்ற வெண்மையான பற்கள் அவளுக்கு.