Saturday, November 28, 2020

 

சூரரைப் போற்று

 

ஆனந்த விகடனில் புதிய ஆத்திசூடி என்று பாரதியாரின் வரிகளை அடிப்படையாக் கொண்டு சிறப்புச் சிறுகதை எழுத வாய்ப்பு அளிக்கப் பட்டபோது ”சூரரைப் போற்று” என்ற புதிய ஆத்திசூடியை வைத்து நான் எழுதிய சிறுகதை இது.

 ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியில், அதை மீள் பிரசுரம் செய்திருக்கிறார்ள்.

காட்டு மனிதர்களும் நாட்டு மிருகங்களும்

----

விகடன் டீம்

"காட்டு மனிதர்களும் நாட்டு மிருகங்களும்"

ஆனந்த விகடன் பொக்கிஷம் சிறுகதை. 22-11-1998 ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை

*

ஊரே துக்கமாக இருந்தது. சலூனிலோ, டீக்கடையிலோ, தேர்முட்டியிலோ... மக்கள் வருத்தமாகப் பேசிக்கொண்டார்கள். 'அடடா சாமுண்டி மாட்டிகிட்டான் போல....'

பத்து பன்னிரண்டு கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் சுருளி மலை காடு. சாமுண்டி அங்கேதான் ஒளிந்திருந்தான். ஒருமுறை பத்திருபது போலீஸ்காரர்கள் துப்பாக்கியும் தோட்டாவுமாக உள்ளே புகுந்து தேடிப் பார்த்தார்கள். காடு முழுக்க அலசிப் பார்த்தாகிவிட்டது. சலித்துப் பார்த்தாகிவிட்டது. சாமுண்டியைக் காணவில்லை. போலீசுக்கே அலுப்பாகிவிட்டது. ஒரு சலனமில்லை. ஒரு அசைவுமில்லை. அவன் இங்கே இல்லை என்று முடிவு செய்து போலீஸ் திரும்பிப் போக முடிவு செய்தது. பத்து ஐம்பது அடி திரும்பி இருப்பார்கள்... கைக்குச்சி அழுந்திய இடம் எல்லாம் குபீர் குபீர் என்று ஆங்காங்கே கண்ணி வெடிகள் ஒன்றும் புரியாமல் ஆளாளுக்கு பதறியடித்து ஓடி வந்தார்கள்.

சாமுண்டி விளையாட்டுக்கார, தைரியமான ஆள் அவனைப் பிடிக்க முடியாது என்று மக்கள் நம்பினார்கள். அவன் மேல் அவர்களுக்கு ஒரு போதையான மரியாதை இருந்தது. ஆங்காங்கே அவனைப் பற்றி கட்டுக்கதைகள் உலா கிளம்பி இருந்தன.

சாமுண்டி ரகசியமாக ஊருக்குள் வந்து போகிறான். ஊருக்குள் அவன் மாறுவேஷத்தில் நடமாடுவான்.

அவனைப் பிடிக்க போலீஸ் வெறிபிடித்துத் திரிந்தது. விசாரணை என்ற பெயரில் கண்ட ஆட்களை மடக்கி ஸ்டேஷனுக்குக் கூட்டிப்போயி உதைத்து அனுப்பி வைத்தார்கள். பொம்பளை தனியாக இருக்கும் வீடாகப் பார்த்து, ராத்திரி கதவைத் தட்டி உள்ளே புகுந்து பார்க்கிறார்கள். சோதனை போடுகிறார்களாம். யார் கேட்பது?

சாமுண்டியைப் பிடிக்க தனி போலீஸ்படை அமைத்திருந்தார்கள். அவனைப் பிடித்துத் தந்தாலோ, தகவல் தந்தாலோ பரிசு என்று அறிவித்தார்கள். தெருவெங்கும் நோட்டீஸில் சாமுண்டி படம். சாமுண்டி குடியிருந்த வீடு பாழடைந்து கிடந்தது. அதற்கு இப்போது வரலாற்று சுவாரஸ்யம் வந்திருந்தது.

குடியென்ன, கூத்திவீடென்ன என்று நிதானம் கெட்டுத் திரிந்து கொண்டிருந்த பயல் சவரிமுத்து. இப்போது கட்சிக் கரைவேட்டி தான். கழுத்தில் சங்கிலி தான். கூட நாலு பயல்கள். சண்டியர் நடையும் சவடால் பேச்சுமாக, ஊரில் இவர்கள் லூட்டி தாள முடியவில்லை. தண்ணீர்க் குழாய்ப் பக்கம் நின்று கொள்வார்கள். கூட்டத்தை ஒழுங்கு செய்கிறார்களாம். அதற்கு வீட்டுக்கு வீடு இவ்வளவு என்று காசு வசூல். தெருவில் குமரிப் பிள்ளைகள் நடக்க முடியவில்லை. கைதட்டுவது, விசில் அடிப்பது, திரும்பிப் பார்த்தால் வேறெங்கோ பார்ப்பது போல் நிற்பது.. அட... போலீஸ்காரர்களையும் வளைத்துப் போட்டார்களே, அதைச் சொல்லுங்கள். ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிள்ளை போல ஒன்றாகத் திரிவதும் சாராயக் கடையில் ஒன்றாக சாராயம் ஊற்றிக் கொண்டு குலாவிக் கும்மாளம் அடிப்பதும்...

சந்தைப் பக்கம் காலையில் வருவார்கள். ஒவ்வொரு கடை முன்னாலும் இவர்கள் போய் நின்றதும் மாமுல் வெட்டியாக வேண்டும். தராவிட்டால் மிரட்டுவது, ஆள் வைத்து அடிப்பது... கொஞ்சநஞ்ச அக்கிரமமா செய்து இருக்கிறார்கள்? இதைக் கேட்க ஊருக்குள்ளே ஒரு நாதி இல்லாமல் போய்விட்டதே...

ஒருநாள் சவரிமுத்து சந்தை வாசலில் செத்துக் கிடந்தான். தூய வெள்ளை வேட்டி சட்டையில் சகதியும் ரத்தமும் சிதறிக் கிடந்தன. வயிற்றில் ஆழமாக கத்திக் குத்து. பழம் நறுக்கும் கத்தி.

போலீசுக்கு ஆத்திரமான ஆத்திரம். கை தட்சிணை போச்சே... சந்தை வியாபாரி ஒருத்தனை விடவில்லை. நினைத்தவனை யெல்லாம் ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி அடி பின்னி எடுத்து விட்டார்கள். துருவித் துருவி கேட்டுப் பார்த்தார்கள். வியாபாரி அத்தனை பேரையும் சவரிமுத்து பகைத்துக் கொண்டிருக்கிறான். யார் வேண்டுமானாலும் அவனைக் கொன்றிருக்கலாம் இல்லையா?

கன்னியம்மா மேல் ஏட்டு சாமியப்பனுக்கு ரொம்ப நாளாகவே ஒரு கண். அவள் படியாத ஆத்திரம். கெஞ்சிப் பார்த்தாகி விட்டது. மிரட்டி அரட்டிப் பார்த்தாகிவிட்டது. எதற்கும் மசிவது போல் இல்லை. சிறுக்கி மவளே... என்று காய்கறிக் கூடையை ஒரே உதை.. உன் கடைப்பக்கம் தான் கொலை நடந்திருக்கு. கொலையாளியை நல்லா தெரியும்... மரியாதையா உண்மையைச் சொல்றியா... இல்லை உன்னையும் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி விசாரிக்கற மொறைல விசாரிக்கட்டுமா என்கிறார். என்ன ஆவேசம்! ‘ஏட்டையா என்னைய விட்டுருங்க... அன்னைக்கு எனக்கு வவுத்து நோவு. நான் கடையே தொறக்கல' என்கிறாள் கன்னியம்மா. ‘என்னாடி வவுத்து நோவு உனக்கு? வூட்டு விலக்காயிட்டியா நீயி?’ என்று ஏட்டையா சிரிக்கிறார்.

போலிஸ் விசாரணையில் தெரிந்தது. சவரிமுத்துவைக் கத்தியால் குத்தியது.. அது சாமுண்டியின் கத்தி.

சாமுண்டி ரொம்ப அமைதியான மனுஷன். யார் வம்புக்கும் போகமாட்டான். கொடைக்கானல் ஊட்டியிலிருந்தெல்லாம் அவனுக்கு ஆரஞ்சும் ஆப்பிளும் வரும். பெட்டியை உடைத்து பழங்களை துண்டால் துடைத்து வண்டியில் அடுக்கும் அழகே அழகு. யார் எது கேட்டாலும் ஒரு சிரிப்பு. அவனிடம் வியாபாரம் பண்ணினாலும் பழத்தைத் திரும்ப வைத்துவிட்டுப் போனாலும் அதே சிரிப்பு தான். அந்த சிரிப்புக்கே அவனுக்கு வியாபாரம் நடக்கும்.

சாமுண்டி இப்போது ஊரில் இல்லை. சவரிமுத்துவை தீர்த்துக் கட்டியது அவன்தான். மாமூல் கேட்ட தகராறு முத்தியிருக்கிறது. சாமுண்டி ஆத்திரத்தில் சவரிமுத்துவை...

பிடிடா அவனை என்று பரபரப்பானது போலீஸ். அவன் வீட்டை பூட்டுடைத்து சூறையாடியது. பக்கத்து வீட்டுக்காரனுக்கு அடி உதை. ‘அவன் என்னைக்காவது திரும்பி வந்தால் தகவல் சொல்லணும்... சொல்லாட்டி மவனே உன் கதி.. அவ்வளவுதான்...' உச்சி முடியைப் பிடித்தபடி ஒரே அறை. உறுமிக் கொண்டு கிளம்பியது போலீஸ்.

சவரிமுத்துவுடன் சதா சர்வகாலமும் திரியும் அந்த நான்கைந்து பேரும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. கொஞ்சநாள் பரபரப்பு அடங்கியதும் சந்தையில் திரும்பவும் அமைதி. வியாபாரிகள் நிம்மதியாக வேலையைப் பார்த்தார்கள். எல்லாருக்கும் சாமுண்டி மேல் ஒரு கவலையும் வருத்தமும் இருந்தது. இன்னைக்கு நாம சந்தையில எந்தத் தொந்தரவும் இல்லாம யாவாரம் பாக்குறோம்னா அது அவனால் தான் இல்லையா?

ஏட்டு சாமியப்பனுக்கு ஒரு துப்பும் அகப்படமாட்டேன் என்கிறது. விசாரிக்க கன்னியம்மா வீட்டுக்குப் போய்வர ஆரம்பித்தார். ஒரே மிரட்டல் தான். 'உனக்குத் தெரியாமல் இருக்கவே இருக்காது. எங்க அவன் ஒளிஞ்சிட்டு இருக்கான் சொல்லு, சொல்லு'ன்னு நெருக்கறாரு. எல்லாம் ஒரு பாவ்லா... அவர் எதுக்கு வர்றாருனானு அவளுக்குத் தெரியாதா என்ன?

சந்தைப் பக்கமும் போலீஸ் நடமாடி நடமாடி அவர்களும் ஓசி காய்கறி, மாமூல் என்று ஆரம்பித்து விட்டார்கள். முன்னமாவது சாமுண்டி இருந்தான். ஒரு பயம் இருந்தது. இப்ப அவன் வரமாட்டான் என்று ஆகிவிட்டதே.. அதிலும் ஏட்டையாவோட விஷயம் தெரிந்த ஒரு புள்ளி அவன் கன்னியம்மா கிட்டே வந்து மாமூல் என்று நின்றான். யாருமே எதிர்பாராமல் அப்போது ஒரு காரியம் நடந்தது. காய்கறி மூட்டைகள்லேர்ந்து படுத்துக் கிடந்த சாமுண்டி திடுதிப்புனு எழுந்திருச்சாம் பார்... போலிஸ் எடுத்தான் ஓட்டம்.

போனவன் பத்திருபது பேருடன் திரும்பி வந்தான். அத்தனைபேர் கையிலும் ஆயுதம். எங்கடி அவன், எங்கடி அவன் என்று ஆளாளுக்கு எகுறுகிறார்கள். ஏட்டையா ‘அவளை ஒன்னும் பண்ணிடாதீங்க'ன்னு சொல்லி விட்டிருப்பார் போல.. யாரும் வரம்பு மீறவில்லை. ‘ஐய சாமுண்டி இங்க ஏஞ்சாமி வரான்? ஐயா பயந்திருக்காரு... அதான் கண்டதெல்லாம் தெரியுது.. போய் மந்திரிச்சு அனுப்புங்க’ என்றார்கள் ஜனங்கள்.

அதன் பிறகு அந்தப் பீசி சந்தைப் பக்கம் வருவதே இல்லை.

இந்த நாட்களில் சாமுண்டிக்கு காடு பழகியிருந்தது. யாரும் ஆழம் காணமுடியாத காடு அது. உள்ளே போக போக திக்குதிசை குழப்பி விட்டுவிடும். இந்தக் காட்டை அவன் எப்படிப் புரிஞ்சிட்டான்னு எல்லாருக்கும் ஆச்சரியம். ஊருக்கு உள்ளே இருந்தே அவனுக்கு அரிசி பருப்பு போகிறது என்கிறார்கள். எல்லாம் பரம ரகசியமாக நடந்தது.

பண்ணையார் மகன் முருகேசனுக்கும் சம்சாரி கோமதிக்கும் இடையே கசமுசா ஆகி, ஊருக்கே தெரிந்து போய்விட்டது. நயமாகவும் பயந்து பயந்தும் கோமதியோட ஐயா நாலு பேரைக் கூட்டிக்கொண்டு போய் பண்ணையாரிடம் கேட்டுப் பார்த்தார்கள். முருகேசனோ வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறான். ‘யாரு கோமதி?’ என்கிறான். ‘எம்ளா, அவ முழுகாம இருக்கான்னா அதுக்கு நான் என்ன செய்யட்டும்?’ என்கிறான். 'ஏய்யா ஊர்ல எத்தினி பேரு இது மாதிரி கிளம்பியிருக்கீங்க..' ஒரே அலட்டல்தான். பேச வந்தவர்களுக்கு வாயடைத்துப் போய் விட்டது. கோமதியோ ஒன்றும் பேச முடியாமல் தவிக்கிறாள். ஒரே அழுகை. பெண் பிள்ளைகளுக்கு ஆசை அதிகம் தான். விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டாமா? இந்த மூதேவிக்கு எங்கே போச்சு அறிவு? ஆண்பிள்ளைகள் காரியத்தை சாதிக்க நாலு வார்த்தை ஆசை வார்த்தை பேசுவது உண்டு தான். நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ரொம்பக் கேவலமாக ஆகிவிட்டது அவளுக்கு. வெளியே நடமாட முடியவில்லை. வழக்கமாக காலையில் சோறாக்கி விட்டு காட்டுக்குள் போய் காய்ந்த சுள்ளி பொறுக்கிக் கொண்டு வருவாள். அன்றும் போகிறாள். நடக்க முடியவில்லை. அழுகை அழுகையாக வருகிறது. என்ன செய்வது என்கிற திகைப்பு. வழக்கமாகக் கூட வருகிற சினேகிதிகள் வரவில்லை. ஏதோ ஒரு வீம்பில் தனியாக வந்தவளுக்கு துக்கம் அடக்க முடியவில்லை.

அந்தப் பயல் முருகேசன் ஒருநாள் கோமதி வீட்டுக்கு வந்து முறைப்படி பெண் கேட்டான். எல்லாருக்கும் ஆச்சர்யம்.. எப்படிடி இது சாத்தியம் என்று. பஞ்சாயத்தே அவர்கள் பஞ்சாயத்து. இதில் ஏழை சொல் அம்பலம் ஏறாது என்று பார்த்தால்... நினைத்துப் பார்க்காததெல்லாம் நடக்கிறதே!

கோமதி காட்டுக்குள் ஒரு மரத்தில் தூக்கில் தொங்க போனாள் என்றும், அப்போது சாமுண்டி அவளைக் காப்பாற்றி, அவளுடைய குறையைக் கேட்டதாகவும் பேசிக்கொண்டார்கள். அடி உதவுவது மாதிரி அண்ணன் தம்பி உதவுவானா? சாமுண்டி முருகேசனைத் தனியே பார்த்து மிரட்டி, இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்ள வைத்து விட்டதாக ஊருக்குள் வதந்தி.

சாமுண்டி ஊருக்கே காவல் தெய்வமாகிப் போனான்.

அதற்கப்புறம் உண்மையோ பொய்யோ பிரச்சனை என்றால் ஊரில் சாமுண்டி தலையிட வேண்டும் என்று பரவலாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். என்ன ஆச்சரியம்... அவன் பெயரைச் சொன்னாலே காரியம் நியாயப்படி நடந்து முடிந்தது. இதில் யார் அவனைக் காட்டிக் கொடுப்பார்கள்.

வருஷம் மூணு ஆகிவிட்டது. சாமுண்டியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இவனை விட கூடாது என்று இன்னொரு தடவை போலீஸ் காட்டுக்குள் புகுந்தது. இந்தமுறை சாமுண்டியைப் பிடிக்காமல் திரும்ப மாட்டேன் என்று இன்ஸ்பெக்டர் சபதம் எடுத்தார். அட, அவனுக்கு பூஜை என் கையால் தான் என்று கிளம்பினார் ஏட்டையா.

அவன் எப்போது ஊருக்குள் வருகிறான் எப்போது போகிறான்... ஒரு இழவும் தெரியமாட்டேனென்கிறது.. ஜனங்கள் கமுக்கமாக இருந்து கொள்கிறார்கள். நாயை அடிப்பது மாதிரி அடி நிமிர்த்தியாகி விட்டது. வரவர நமக்கு எவன் பயப்படுகிறான்...? ‘ஏட்டையா வீரத்த எல்லாம் நம்ம கிட்ட தான் காட்டுவுரு... சாமுண்டி கிட்ட நடக்குமா? அவனைப் பார்த்தாலே நடுங்கி செத்துடுவாரு...’ - கன்னியம்மா அன்னிக்கு நாலு பேர் கிட்ட சொல்லி சிரிக்கிறாள். 'சிரிக்கிறியாடி சிறுக்கி...' அவருக்குக் கோபமான கோபம். இருந்தாலும் அவளை ஒன்றும் செய்ய முடியவில்லை.

அந்த வேட்டையின்போது பிடிபடாத சாமுண்டி, கரும்புத் தோட்டத்தில் மாட்டிக்கொண்டான். எப்படித்தான் தகவல் கிடைத்ததோ... போலீசார் சுற்றி வளைத்து விட்டது. கோமதி குழந்தைக்கு ஆண்டு நிறைவு. எப்படியும் அவன் வருவான் என்று எதிர்பார்த்தார்கள். அவனும் கரும்புத் தோட்டத்தில் பதுங்கியிருந்துவிட்டு ஊரடங்க வெளியே வரலாம் என்று இருந்திருக்கிறான். மாட்டிக்கொண்டான்.

நாலுபக்கமும் போலீஸ் சுற்றி வளைத்து விட்டது. அங்கே இங்கே அசைய முடியவில்லை. கிடுக்கிப்பிடி.. ‘ஏல மரியாதையா கையைத் தூக்கிட்டு நில்லு. தாக்க நினைச்சாலும் தப்பிக்க நினைச்சாலும் பொணமாயிருவே.’ - ஏட்டு சாமியப்பன் கத்திய கத்தல் ஊருக்குள் கேட்டது. இந்தக் கட்டத்துக்காக அவர் எத்தனை வருஷம் காத்திட்டிருந்தாரு, இல்லியா? கையில் துப்பாக்கியோடு கிட்டே வந்து அவனை மடக்கி கையில் விலங்கு மாட்டி விட்டு, ஒரு சிரிப்பு சிரித்தார். வெறிச் சிரிப்பு! சாமுண்டியே மாட்டிகிட்டான்.. இனி ஊர்ல எவன் எனக்கு பயப்படாம நடக்குறான் பாக்குறேன். ‘போடா மாப்ளே’ என்று சாமுண்டி பிடரியில் விட்டார் ஒரு அறை... குப்புற விழுந்தான் சாமுண்டி. ‘டேய் நாயே விலங்க அவுத்துட்டு அடிடா பாப்பம்'னு எதிர்க் குரல் கொடுத்தான் அவன். அவன் பேசும் முன்னால் தாடையில் அடுத்த அடி. ரத்தம் கசிந்தது. சாமுண்டியைச் சங்கிலியில் கட்டி தெருத்தெருவாக இழுத்துக்கொண்டு வந்தார்கள்.

ஊரே கூடி வேடிக்கை பார்க்கிறது. பஜார், கோயிலடி, தேர்முட்டி, சந்தை எல்லா பக்கமும் ஜனங்கள். திறந்த வாய் மூடவில்லை. எல்லாருக்கும் அவன் மாட்டிக் கொண்டதில் வருத்தம் தான். அவ்வப்போது, ‘வேகமாகப் போடா நாயே’ன்னு அடி உதை. முதுகில் எத்து. ஏட்டுக்கு இருந்த வெறியில் என்ன செய்கிறோம் என்றே புரியவில்லை.

ஊரே அன்றைக்குத் துக்கமாக இருந்தது. அதிலும் கன்னியம்மாவுக்கும் கோமதிக்கும் ஏற்பட்ட வருத்தம் இன்ன அளவு என்றில்லை.

மறுநாள் பேப்பர் பார்த்ததும் ஊருக்கே தெளிவு வந்தது. ஆ.. அவன் கில்லாடிய்யா... நான் சொல்லல... என்று உற்சாகம் கரைபுரள ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். விசாரணை என்று ஜீப்பில் அழைத்துப் போனபோது சாமுண்டி தப்பித்து விட்டானாம். ஜீப்பின் பெட்ரோல் டாங்கில் யாரோ சர்க்கரையைக் கொட்டி விட்டார்கள். பாதி வழியில் ஜீப் நின்றுபோனது. அப்படி இப்படி ஊரில் கதை. ஜனங்கள் உதவி செய்யாமல் அவன் தப்பிக்க முடியுமா என்ன?

அதான் ஏட்டுக்கு ஆத்திரம்.. இத்தனை வருஷமா போக்கு காட்டிட்டு இருந்த பய.. வசமா மாட்டிட்டான்னு பாத்தா நழுவி விட்டான். பிளாக் மார்க் அவருக்கு. இந்தமுறை விடக்கூடாது எங்கே போய் விடுவான் அவன். அதையும் பார்த்துவிடலாம். காட்டுக்குள் இந்த முறை ஐம்பது பேர்.

அந்தக் கதையை கன்னியம்மா சொல்லிச் சொல்லி சிரிப்பாள். எத்தனை தடவை சொன்னாலும் அவளுக்கு கதைசொல்லி அலுக்கவில்லை. சாமுண்டியைப் பிடிப்பது என்றால் என்ன இவர் உடும்பு வேட்டை என்று நினைத்தாரா?

உலகத்திலேயே உடும்பை பிடிப்பதுதான் சுலபம் என்று சொல்வார்கள். மண்ணுக்குள் குழி பறித்து உள்ளே பதுங்கியிருக்கும் உடும்பு. உள்ளே உடும்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டால், ஒரு நீள குச்சியை ஒடித்து பொந்துக்குள் விடுவார்கள் உடும்பு லபக் என்று அதைக் கவ்விக் கொள்ளும். அப்புறம் என்ன குச்சியை வெளியே எடுக்க வேண்டியதுதான்.

சாமுண்டியைத் தேடிப் போனவர் வழி தவறிவிட்டார் காட்டுக்குள். கூட வந்த ஆட்கள் பிரிந்து திரும்பிப் போய்விட்டார்கள். ஏட்டையா தனியாக காட்டுக்குள்ளே. கையில் துப்பாக்கி இருக்கட்டும்... அதற்கென்ன..? அதை வைத்து என்ன செய்வது..?

தனியாக தேடித் தடுமாறி வருகிறார் ஏட்டையா. திடீரென அவர் முன்னால் குதித்தான் சாமுண்டி. ‘அடடே, ஏட்டையாவுங்களா? என்ன இவ்ள தூரம்?’னு குசலம் விசாரித்துக் கொண்டு நிற்கிறான். ஒரே உதையில் துப்பாக்கி தூரப் போய் விழுந்து விட்டது. ஏட்டையா நிமிர்ந்து பார்க்கிறார். வானத்துக்கும் பூமிக்குமாக சாமுண்டி நிற்பது போல் தெரிகிறது. அவன் யார்? சூரனாச்சே... பேடிகள் அவன் முன்னால் நிற்க முடியுமா? கையில் ஆயுதம் ஒண்ணும் கிடையாது. உன்னைக் கொல்ல ஆயுதம் ஒரு கேடா, என்று நிற்கிறான். கையை ஓங்கிக் கொண்டு அவன் நிற்பது அய்யனார் சிலை போல இருக்கிறது.

ஏட்டையாவுக்கு கைகாலெல்லாம் வெடவெடங்குது. பயம். நிக்க முடியல்ல. ஐயா தெய்வமே, என்னிய விட்டுரு.. நான் உன் வழிக்கு வரமாட்டேன்னு கதர்றாரு. கெஞ்சுறாரு.. தலைமேல கையெடுத்துக் கும்பிட்டு நிக்காரு. ஒரே அழுகை. நான் புள்ள குட்டிக்காரன்... ஏய்யா சாமி... ‘நீதா மனசு வெச்சு, உயிர்ப்பிச்சை கொடுக்கணும்'ங்காரு. அப்படியே தடால்னு அவன் கால்ல விழுந்தாரு.

சாமுண்டிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. 'அடச்சீ, எந்திரிய்யா இவ்வளவுதானா உன் வீரம்....'

'மாட்டேன் நீ மன்னிச்சேன்னு சொன்னாதான் எந்திரிப்பேன்...’

சாமுண்டி சிரித்தபடி அவரைத் தூக்கி நிறுத்தினான். ‘போயி அம்மாகிட்ட பால் குடியும்’ என்று அனுப்பி வைத்தான்.

அங்கே எடுத்த ஓட்டம்தான்... எப்படி தப்பித்தாரோ எப்படி வழி கண்டு பிடித்தாரோ... இல்லை சாமுண்டிதான் எல்லைவரை கொண்டு வந்து விட்டானோ?

கன்னியம்மாவைத் தேடித்தான் சாமுண்டி ஊருக்குள் வருவதாக ஜனங்கள் பேசிக் கொண்டார்கள்.

---

storysankar@gmail.com

91 97899 87842 / 91 94450 16842

 

Friday, November 27, 2020

 

2006 ம் ஆண்டின் சிறந்த நாவல் - தமிழக அரசு பரிசு பெற்றது

நீர்வலை

எஸ்.சங்கரநாராயணன்

11

நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது இப்போது. பட்டறை என்பது அடைத்துப் போட்டாற் போலிருந்தது. அச்சக வேலை என்றால் பெரும்பாலும் வெளியே சுற்றவேண்டிய வேலை. சட்டென சுதந்திரம் பெற்றாப்போல ஒரு விடுதலை உணர்வு. சிறகு முளைத்த உற்சாகக் கும்மாளம்.

அழகர் ஆத்ல இறங்கினதைப் பார்த்தாப்லயும் ஆச்சி. அண்ணனுக்குப் பொண் பார்த்தாப்லயும் ஆச்சி - என பழமொழி!

விதவிதமான அனுபவங்கள். கல்யாணப் பத்திரிகையைப் பிரித்துப் பார்த்து அசட்டுச் சிரிப்பு சிரிக்கும் மணப்பெண். இழவு சமாச்சாரப் பத்திரிகையில் இறந்தவர் படம் சின்னதாகி விட்டதாக ஓர் அங்கலாய்ப்பு.

கல்யாணத்தில் வாழ்த்துப்பா, என்று நூறு இருநூறு, அவசர நோட்டிஸ்கள். திடீரென்று எவனுக்காவது கற்பனைவளம் பெருகி - மடை உடைந்து, அல்லது நட்டு லூசாகி... எதாவது கிறுக்கிவந்து கொடுப்பான். உடனே அச்சடித்து கல்யாணப் பந்தலில் டெலிவரி தர வேண்டும். ஒரு கல்யாணத்தில் வாழ்த்துப்பா வாசிக்கு முன்னாலேயே, மாப்பிள்ளை பார்ட்டிக்கும் பெண் வீட்டுக்காராளுக்கும் சண்டை. வரதட்சிணைப் பிரச்னையா தெரியவில்லை.

நடுவில் இவன் நிற்கிறான். அச்சடிச்ச மணமக்கள் வாழ்த்தை யாரிடம் தர? காசு பேருமா பேராதா... யூகிக்கவே முடியவில்லை. எவன் எழுதினானோ அவனிடமே தந்து காசு வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தான். கல்யாணம் நடந்ததா முறிந்ததா தெரியாது.

சர்ச் ஒன்று இருந்தது ஊரெல்லையில். கடல்கரையைத் தழுவிய சர்ச் அது. மீனவர்கள் வழிபட்டு விட்டு அதிகாலையில் கடலுக்குள் செல்கிற மாதிரியான அமைப்பு கொண்டது. நிறையப் படகுகள் கரையில் சற்று வெளித்தள்ளி மண்ணில் சொருகிக் கிடக்கும் அந்தப் பக்கம். தற்போது ஊர், சுற்றுலாத்தலம் என கவனம் பெற்று, புதுசாய் கைடுகள்... வழிகாட்டிகள்... கோனார் தமிழுரைகள் உருவாகி யிருந்தார்கள்...

ஓட்டைப் படகுகள் தவிர அதிகாலையில் மற்றவை கிளம்பிப் போவதைக் காணவே அழகு - என்பான் கிருட்டினமணி அண்ணன். சைக்கிளில், ஓடற வண்டியில் தாவி ஏறுவதைப் போல, படகைத் தண்ணியில் தள்ளி விட்டு விட்டு ஏறுவார்கள்... ஒரு நாள் அதிகாலையில் வந்துபார்க்க ஆசையாய் இருந்தது அதைக் கேட்க.

அருமையான வளாகம். வாசலில் நின்றால் கடல் காற்று ஆளைத் தாலாட்டியது. கால் புதையப்புதைய நடக்கும் மணல் வெளி.

பார்க்கவே கடல் எத்தனை அழகு. கரையில் நின்றபடி ஆவெனப் பார்த்தான். தூரதூரத்துக்கும் நீர்... நீர்... நீர்மயம். அம்மைத்தழும்பு போல, சிறுசிறு குழிவிழுந்து தளும்பும் அலைகள். காற்று, நீரைச் சலித்தாற் போலிருந்தது. அலைகளைத் தாம்பூலமாய் மடித்து காற்று, ஓரத்தில் தள்ளும் அழகு.

தொடும், என நினைத்துக் காத்திருந்தால், உள்வாங்கித் திரும்பிப்போய்விடும் சில. வேறு பேரலை உருவாகி உன்னை நோக்கி வரும் என்றாலும், திரும்பும் அலையில் சிக்கி அதும் தலையைக் கீழே போட்டு விடும். வராது என நினைக்கையிலேயே சில அலைகள், பிரம்மாண்ட உருவெடுத்து காலைத் தழுவி, அடிமண் உருவும். அந்தக் குறுகுறுப்பு அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.

லேசாய் வெளிச்சம் கரைந்த பொழுதுகள் - காலையானாலும் மாலையானாலும் - கடலுக்கு எத்தனை அழகு வந்துவிடுகிறது. காதல் வளர்க்க, காதலர்கள், எதனாலோ கடலைத் தேர்வு செய்கிறார்கள்... ஜெயித்தவர்கள் படகடியில் போகிறார்கள். தோற்றவர்கள் கடலில் பாய்ந்து செத்துப் போகிறார்கள்.

சதா சிரித்துக் கொண்டிருக்கிறது கடல். லூசுக் கடல்!

பிரம்மாண்டமான வெளிகளுக்கே, ஒரு மயக்கம் தருகிற அழகு இருக்கிறது. கோவிந்தசாமி நாடார் தோப்பு, பெரிய மாங்காய்த் தோப்பு ஊரில்... மரங்கள் மரங்கள். மற்றும் மரங்கள். இன்னும் மரங்கள். மேலும் மரங்கள்... நடுவே படுத்துக் கிடக்கவே தனி சுகம்.

ஒண்ணுமில்லை - நம்ம அரசம்பட்டி பொதுக்கூட்டத் திடல்... நிலா வெளிச்சத்தில் சிலசமயம் தனியே அவன் படுத்துக்கிடப்பான். மனம் தன்னைமீறிய இன்ப லகரியில் திகட்டிக் கிடக்கும்...

அவனுக்கு விளக்கத் தெரியாது. ஆனால் சந்தோஷத் தித்திப்பு உள்ளே சிலிர்க்கும்.

அடாடா, ஒரு நாள் அந்தத் திடலில் தெருஜனம் பாய்போட்டு ஆக்கிரமித்துக் கொண்டது. வெயில்காலம். வீட்டுக்குள் தூங்க ஏலாத ஜனம். அவன் போய்ப் பார்த்துவிட்டு ஏமாற்றமாய்த் திரும்பிவிட்டான்.

இடம் இடமாய்த் தேடி அலைகையிலேயே மழை வந்துவிட்டது. ஒதுங்க நினைக்குமுன்பே, நல்ல மழை... போட்டு கொட்டித் தீர்த்துவிட்டது. வெயில், பகலில் அதிகம்தான். அப்பவே மழைபற்றி எதிர்பார்க்க முடிந்தது...

திடீரென ஞாபகம் வந்தாற்போல அந்தத் திடலைநோக்கிப் போனான்.

ஆளின்றி வெறிச்சோடிக் கிடந்தது திடல். ஏறிப் படுத்துக்கொண்டான். உடம்பெங்கும், நாடி நரம்பெங்கும் கொட்டுகிறது மழை. பிடிவாதமான, முரட்டு மழை...

ஹம்ம்மா... என முணுமுணுத்தான். மழைக்குக்கூட இத்தனை முரட்டுத்தனம் உண்டா!

அருவியில் குளிக்கிறபோது நீரின் ஆக்ரோஷம் தெரியும்.

அதேபோல மழையில் முகத்தை நேரடியாய் நீட்டினால்தான் அதன் ஆவேசம் தெரிகிறது.

கடலை அவனுக்கு ரொம்பப் பிடித்துப் போனது. சிலநாட்கள் எதிர்பாராத வகையில் அண்ணனும் வீட்டில் இருப்பான். சிவாஜிக்கும் ஓய்வாய் இருக்கும்... எல்லாருமாய்க் கடல்கரைக்கு வருவார்கள். அன்றைக்கு அண்ணிதான் எத்தனை உற்சாகமாய் இருப்பாள்.

அருமையான பெண் அவள். எதையிட்டும் அவளுக்குக் குறை இல்லை. எதைப் பேசினாலும் சிறு சிரிப்புடன் அண்ணி பேசும். அண்ணி முகம் மாறினால் அண்ணனால் தாள முடியுமா?

தான் அழகு என மற்றவர் சொல்ல சிறு ஆசை அவளுக்கு. மறக்காமல் திருஷ்டிப் பொட்டு வைத்துக் கொள்வாள். அவள் முகக்கருப்புக்கு திருஷ்டிப்பொட்டு கூட, கருப்பு அத்தனைக்கு இல்லை, என்று சொல்ல முடியுமா?

வீட்டில் அவன் இருந்தால் அவனுக்கு என சூடாக சோறு வடித்து இறக்கினாள் சிவஜோதி. உனக்காகப் பருப்புத் துவையல் அரைச்சேண்டா, என்கிறாள் அவன் தலையை வருடி. அட என் அம்மாவே.... என அழுகை முட்டும் அவனுக்கு. இதுக்கெல்லாம் எனக்குத் தகுதி உண்டா?

அதான் பார்த்த கணத்தில்... அண்ணன் காலடியில் கூட விழாத அவன், அவள் காலடியில் விழுந்தான், தானறியாமல்!...

கமலா கால் புதையப்புதைய அந்த மணலில் ஓடித் திரிகிறது. தனக்குத் தானே பேசிக் கொண்டு, தன் உலகத்தில், அது இயங்க ஆரம்பித்துவிட்டது. கூ, என்று வாயைக் குவித்து, ஐவிரலையும் நெட்டுக்க வைத்துக் கொண்டு ஓடினால், ரயில். கமலாவின் குரலில் அது, ரயில் அல்ல... குயில்!

டுர்ர்ரென ஓடினால் அது பஸ்.

கூ டுர்ர் டும்... என்றால்,

பஸ்சும் ரயிலும் மோதி - விபத்து!

பஸ் எந்தூரு போவுதுட்டி?... என்று கேட்கிறான் சிவாஜி.

உங்கூர் எது?

அரசம்பட்டி.

அப்ப பஸ் அரசம்பட்டி போவுது...

அரசம்பட்டில ஆரு இருக்கா?

போயி எங்கய்யாவோட மண்மேட்டைப் பாத்திட்டு வர்றதா!... என சிரிப்பும் அழுகையுமாய் நினைத்துக் கொண்டான்!

அடிக்கடி உலக நினைவு வர, தூரத்தில் அப்பா, அம்மா, அண்ணன்... இருக்கிறார்களா, என ஒரு வெள்ளோட்டம் விட்டுக்கொள்கிறது.

உலகில் பிரச்னையே இல்லை, என வாழ்கிற வயது அதற்கு. எந்தக் காயத்தையும் அசட்டை செய்து - அழுது, உடனே மறந்து, எழுந்தோடி வரும் பருவம். அழுகை வரும்போதும், சிரிக்க விரும்பும் பருவம். எந்த அழுகையின் ஊடேயும் அண்ணி அதைச் சிரிப்புகாட்டி விடும்...

அழுத பிள்ளை சிரிச்சுதாம். கழுதைப்பாலைக் குடிச்சுதாம்... என்பாள்.

கழுதைப்பால் எப்படி யிருக்கும் நினைவில்லை. சின்னவயதில் முதல்நாளில் இருந்தே அவன் தாய்ப்பால் அறிந்தானில்லை. மாட்டுப்பால்,. ஆட்டுப்பால்., கழுதைப்பால் கூட, அப்பா, அவன் குடித்ததாய்ச் சொல்லியிருக்கிறார்... ஞாபகம் இல்லை.

கழுதைப்பால் மத்த பாலைக் காட்டிலும் உசத்தி சரக்கு. விலை ஜாஸ்தி.

உலகில் அத்தனை பிரச்னை அழுத்தங்களையும் ஒதுக்கி, ஆசுவாசம் கண்ட கணங்கள். கடல் கரை கணங்கள். பிரம்மாண்ட கடல். அதன் நீண்ட கரைவெளி. மனிதன் தன்னை - ஆகவே தன் பிரச்னையையும், சிறுத்துப் போனதாக உணர்கிறானா?

சற்றுதள்ளி அப்படியே மல்லாக்கப் படுத்துக் கொண்டான் சிவாஜி. நல்ல வெளிச்ச இரவில் இப்படி படுத்துக்கிடக்க ஆசையாய் இருந்தது. மெல்ல அலைவந்து முட்டமுட்ட, எழுந்துகொள்ளாமல் கிடக்க வேண்டும்.

சற்று தூரத்தில் அண்ணி. தலையில் மல்லிப்பூ. அரைவட்ட தோரணம் போலக் கட்டிக் கொண்டிருக்கிறாள். காலை நீட்டியவாக்கில் அருகே உட்கார்ந்தபடி அண்ணன். மணலை வெறுமனே அளைந்தபடி, என்னவோ அவளையிட்டு கிண்டல் தொனியில் அவர்கள் பேசிக் கொண்டிருக்கக் கூடும்.

அவர்கள் சந்தோஷமாய் இருக்கிறதைப் பார்க்கவே மனம் லேசாகி காற்றில் மிதக்கிறது.

வாழ்க்கையில், சந்தோஷம் என்பது, அமைதியின் வடிவமாகவும் அமையும், என்று அதுவரை அவனுக்குத் தெரியாது.

அதிகம் பேசிக்கொள்ளாமலேயே அநேக விஷயங்கள் புரிபட்ட, மனசுக்குப் பிடிபட்ட கணங்கள் அவை.

வாழ்க்கைதான் எத்தனை இனிமையானது... என நினைத்தான்.

மறுநாள்த்தான் நிகழ்ந்தது அந்த விபரீதம்.

 

12

ட்டென்று வானம் முகம்மாறி மழை பிய்த்து எடுத்து விடுகிறாப் போல சில சந்தர்ப்பங்கள் அமைந்து போகின்றன. நிகழ்ச்சிகள் நமது அபார, அதி சூட்சுமக் கற்பனைகளையும் மீறியே கூட அமைந்து விடுகின்றன.

இயற்கை மனிதனை எள்ளி நகையாடுகிற கணங்கள் அவை.

நிகழ்ச்சிகள் அவை நிகழும் அதி விரைவுகளில் மனித சக்திக்கு - மனித சக்திக்கு என்ன, மனிதக் கற்பனைக்கே அப்பாற்பட்ட பெரும் சக்தி சொரூபங்களை, அதன் விஸ்வரூப தரிசனத்தை, சட்டென பாம்பு தலைதூக்கிப் படமெடுத்தாற் போன்ற ஆவேசத்துடன், பெரும் அலட்சியத்துடன், இரக்கமற்ற, எதிராளிக்கு வாய்ப்பு தராத இறுக்கத்துடன், அரங்கேற்றுகின்றன.

தப்பித்தல், மீறி வெளிவருதல் முயற்சியளவிலேயே, கற்பனை அளவிலேயே இல்லை.

மனிதனை மண்டியிடச் செய்யும் இயற்கையின் கணங்கள் அவை.

அகழ்வாரைத் தாங்கும் நிலம் என்பார் வள்ளுவர். எப்போதும் தாங்கும், என்று சொல்ல முடியாது!... என இயற்கை சீற்றங்கண்ட கணங்களும் உண்டு. பூமி வாய்பிளந்து மனிதனை முதலைபோல் விழுங்கிய கணங்களும் இருக்கின்றன.

காலை சுமார் பத்துமணியளவில் நிகழ்ந்தது அது.

பூ க ம் ப ம்!

அச்சகத்தில் அவசர வேலை. எப்போதுமே எதாவது அவசர வேலை என்று தேள்கடிக்கு மருந்துதேடி ஓடிவந்தாப் போல யாராவது அச்சகத்துக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள். நேற்றே முடித்துத்தர வேண்டிய வேலை அது. சர்ச் பாதிரியார் அல்போன்ஸ் ஐயா தந்த வேலை.

இயேசு சீக்கிரம் வருகிறார்.

ஆகவே நோட்டிசும் அதைவிட சீக்கிரம் தருக.

சர்ச் வளாகத்தில் முன்திடலில் எப்போதும் நற்செய்திக் கூட்டங்கள் நடக்கின்றன. மீனவர்களின் ஓய்வுநேரங்களை அனுசரித்து கடல்கரைக் கூட்டங்கள். நீள ராஜபாட்டையான மணல்வெளி. உட்கார்ந்து கேட்கிற அளவில் நெடுகிலும் குழல் விளக்குகள். மேடைப்பக்கம் மின்மினி பல்ப்கள் வண்ணவண்ணங்களாய் மின்னுதல் தனி அழகு. மீனவர்களை மேலும் கவனஈர்ப்பு செய்வதற்காக வெளியில் இருந்தெல்லாம் போதகர்கள் வந்து அருமையாய்ப் பேசுவார்கள்.

சில சமயம் வெளிநாட்டுக்காரர்களின் பிரச்சாரங்கள் கூட ஏற்பாடு செய்வதுண்டு. தமிழ் தெரியாத வெளிநாட்டு பிரமுகர்கள் அவர்கள். அவர்கள் ஆங்கிலத்தில் பேச, உள்ளூர் ஆசாமி யாராவது அதைத் தமிழில் பின்பற்றிச் சொல்வார். கல்யாண நலுங்கில் ஊஞ்சலில் நாதசுரப் பின்பாட்டு போல. பேசப்போவதை அவர் முன்கூட்டியே சொல்லி மொழிபெயர்ப்பாளரும் தயாராகவே வந்திருப்பார். அவர் ஆங்கிலத்தில் சொன்ன ஜோரில் இவர் தமிழில் பேசுவது சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். ஊஞ்சல் மேலுயர்ந்த ஜோரில் திரும்பக் கீழிறங்கினாப்போலத் தோணும்.

மொழிபெயர்ப்பாளர் வேலையும் தவிர, பாதிரியார் அல்போன்ஸ் ஐயா அவரே தனிச் சொற்பொழிவுகளும் செய்வதுண்டு. நல்ல தமிழ் ஆர்வலர். வெள்ளிகளில், ஞாயிறுகளில் அவர் குருஸ் கோவிலில் உரையாற்றுவதைத் தொலைவில் இருந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம். நம்ம கதாகாலட்சேப சாஸ்திரிகள், சங்கீதத்தில் ஒரு காலும், வசனத்தில் ஒரு காலுமாக, ரெட்டைக்குதிரை சவாரி போவதில்லையா... அதே போல சிறு சிறு கீதங்களை அவர் இசைப்பதும் உண்டு.

சந்தோஷம் கொண்டேன், நான்

சந்தோஷம் கொண்டேன்...

ஆற்றொழுக்கான சொற்பொழிவு. கணீரென்ற குரல் எடுப்பு. நம்பிக்கையான உணர்வுத் தெறிப்புகள். தமிழில், பட்ட மேற்படிப்பு கண்டவர் அவர். ஆராய்ச்சி வல்லுநர் பட்டமும் - பி. எச்டி. - பின்னிணைப்பு எனப் பெயரோடு கொண்டவர்.

கொஞ்சம் பாடவும் கத்துக் கிடலாம்ல?

ஆமாம், பத்துமணியளவில்தான் நிகழ்ந்தது. பூகம்பம். காலையில்.

விநியோக நோட்டிசுகள் எழுதுவதில் அவர் பிரியங் கொண்டிருந்தார். மோட்சம் உண்டா? - விதி என்பது என்ன? - ஆண்டவரின் சாம்ராஜ்யம் - சாத்தானின் விழிப்பு - பாவ மன்னிப்பு - எப்படி வாழ வேண்டும்? - என்றெல்லாம் அவர் அவ்வப்போது தட்டச்சு செய்து தருகிறார். வெளிநாட்டு பாதிரிமார்கள் எழுதியதை மொழிபெயர்த்துத் தருகிறதும் உண்டு. (மிருகங்களுக்குப் பகுத்தறிவு உண்டா?) - எனக்கு எப்படித் தெரியும்? நான் மனுசன்! - கிறித்தவ மகாசபையில் அல்போன்ஸ் ஐயாவுக்குத் தனிமரியாதையும் அந்தஸ்தும் கௌரவமும் உண்டு.

அன்று மாலை பொதுக்கூட்டம் இருந்தது. பொதுக்கூட்டத்தில் விநியோகிக்க நோட்டிசுகள் அடிக்க வேண்டியிருந்தன. முந்தைய இரவே அடித்து முடித்துக் கொடுப்பதாக ரத்னசபாபதி உறுதி தந்திருந்தான். உறுதிமொழி தராட்டி, பார்ட்டி ஜுட் விட்ருமே. ஆனால் எதிர்பாராமல் முந்தைய இரவு அச்சகத்தில் கரண்ட் நின்றுபோனது. மின்வாரியக்காரனைக் கூப்பிட்டு, வரேன் வரேன் என்று வரவேயில்லை. போனமுறை அவன் வந்தபோது ரத்னசபாபதி துட்டு சரியாக கவனிக்கவில்லை. வேலையை முடித்தபிறகு வயர்மேன் வந்து பார்த்தால், ரத்னசபாபதி ஆளையே காணவில்லை... எஸ்கேப்!

அது அவன் நேரம். இப்போது வயர்மேனின் காலம்!

அச்சகத்திலேயே ஃபியூஸ் போயிருந்தால் நம்ம ஃபோர்மேனே வேலையைப் பார்த்திருப்பார். மெய்ன் லைனில், விளக்குக்கம்பம் ஏறிப் பார்க்கவேண்டிய வேலை. நாம் ஏறக்கூடாது.

இரவு காத்திருந்து பார்த்துவிட்டு, பத்துமணி வாக்கில்தான் அச்சகத்தை ஏமாற்றத்துடன் பூட்டிவிட்டுக் கிளம்பினார்கள்.

காலை முதல்வேலையாக அவனைத் தேடிப் பிடித்துவர, சிவாஜி பணிக்கப்பட்டான். வயர்மேன் வீட்டில் இல்லை. தேடிவருவார்கள், என்று தெரியும். காற்று சுழிமாறி தன்பக்கம் வீசுகிறது என்று தெரிந்துவிட்டால், மனிதர்கள் எத்தனை உற்சாகமாய்ப் படுத்துகிறார்கள்... வயர்மேன் வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்கிறான்!

அண்ணாச்சி வணக்கம்...

என்னப்பா? - என்கிறான் எதுவும் தெரியாத மாதிரி.

மச்சினி ஊர்லேர்ந்து வந்திருக்கு... நான் இன்னிக்கு லீவு விடலாம்னு பார்த்தேன்!... என்கிறான்.

மச்சினிச்சி வூட்டுக்கார் வர்லியாக்கும்? வந்திருந்தா ஏன் லீவு போடப்போறான்!

டீக்கடையருகே எப்படியோ ஆளைப் பிடித்து, டீக்கடைக்காரனுக்கு சிவாஜியே 'அழ' வேண்டியிருந்தது... டீக்டைக்காரன் 'வேற எதாச்சும் வேணுமா சார்?' என்கிறான் வயர்மேனைப் பார்த்து! - கூட்டிவர மணி ஒன்பது ஆகியிருக்கிறது.

பூகம்பம் பத்து மணிக்கு. யார் எதிர்பார்த்தார்கள்?

மூச்சா அடிக்க வந்த நாயை விரட்டிவிட்டு, வயர்மேன் கம்பத்தில் ஏறினான்.

ரத்னசபாபதியைப் பார்த்துக்கொண்டே வேலை செய்கிறான் வயர்மேன். எலேய் விழுந்துறாதே... என மனசில் பயப்பட்டான் சிவாஜி. காசு தொலையுதுறா. உயிர் - அது முக்கியம்லியா?

வேறு பியூஸ் காரியர் - பிரம்மோபதேசம் போல - வயர்ப் பூணல் போட்டு - கையோடு கொண்டு வந்திருந்தான். பழைய கேரியரை நீக்கிவிட்டு இதைச் சொருக சட்டென்று அச்சகத்துக்கு பிரசவம் ஆனாப்போல உயிரின் சலனம்!... நேற்றுப் போட்டிருந்த மின்விசிறி கடகட என இரைய ஆரம்பித்தது. குழல்விளக்குகள் கண்விழித்தன.

அசட்டுச் சிரிப்புடன் ரத்னசபாபதி பணங்கொடுக்கிறான். சிரிக்காமல் கொடுத்திருக்கலாம்... பாவம், வயர்மேன் போய்விடுவானோ என்ற பயத்தில் காலையில் இருந்து அவன் கல்லாப்பெட்டியை விட்டு நகரவில்லை.

வேடிக்கை வேணாம், வேலையாவட்டும்... நோட்டிஸ் அர்ஜன்ட். காலைலியே ஐயா போன் போட்டுட்டாங்க... என விரட்டுகிறான். எனக்கும் அர்ஜென்ட், என்று எழுந்து பாத்ரூம் போகிறான்.

மின்சாரம் வந்ததை எல்லாருமே உற்சாகமாய்த்தான் உணர்ந்தார்கள்.

பஜாரில் வழக்கமான வேலைகள் துவங்கிய உற்சாகமான காலை. யாருக்கும் பூகம்பம் வரப் போவது தெரியாது அல்லவா?

கச்சக் கச்சக் என்ற விநோத சப்தத்தை திரும்பத் திரும்ப உச்சரிக்கிறது அச்சு யந்திரம். யானை ஒரேமாதிரி ஆடிக்கொண்டே நிற்பதைப் போல. எருமை உட்கார்ந்து அசைபோடும்போது இப்பிடித்தான் பல்லை ஒரே மாதிரி ஆட்டும்..

கோவில் யானை வாசலில் இருக்கும். அச்சகத்தில் யந்திரம் உள்ளே, கர்ப்ப கிரகத்தில் போல தனி அந்தஸ்துடன்!

குருட்டுப் பிச்சைக்காரனுடன் அவன் பெண், அவனை அழைத்து வருகிறாள். சற்றே விலகிய ரோஸ் தாவணி. ரோஸ் ரிப்பன். ரத்னசபாபதி அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை சிவாஜி கவனித்து தனக்குள் சிரித்துக் கொள்கிறான். நடிகன் மகேஷ் கௌதம் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போவதாக அரசல் புரசல். எதோ ஒரு நடிகையுடன் கிசு கிசு... நம்மாளுக்கும் மூடு வந்திருக்கலாம். ரெண்டு பேருக்கும் ஒரே ஜாதகம்னாப்ல இப்டி உருகறான்... வான்கோழிப் பயல்!

பிச்சை கிடைக்காட்டி மோசமில்லை என அவசரமாய் நகர்கிறான் பிச்சைக்காரன். இவன் பார்ப்பதை அவன் எப்படித் தெரிந்து கொண்டானோ?

ஒருவேளை அவன் குருடனே இல்லையோ!

இந்தக் காலையில் அவரவர் அவசரகதியில் இயக்கங் கொண்டிருக்கிறார்கள். பஜார் சுறுசுறுத்துக் கிடந்தது. பெரிய அகலமான ரஸ்தா அது. ஆட்கள் நடமாடி சிறுத்து விட்டது. மேலிருந்து பார்க்க மனுஷநடமாட்டம் புள்ளிக்கோடாய்த் தெரியலாம். அச்சகவாசலில் பழங்களைப் பரப்பி கடை போட்டிருக்கிறாள் குண்டுப் பொம்பளை ஒருத்தி. சீக்குக்கோழிக் கழுத்து நிற கொய்யாப் பழங்கள். அவளை, கடை போடாதே, என்று ஆனமட்டும் சொல்லிப் பார்த்தாயிற்று. அவள் பேச ஆரம்பித்தால் வாயில் இன்ன வார்த்தை என்றில்லை. நல்ல வார்த்தைகளையே அவள் மறந்துவிட்டாப் போல இருக்கிறது. பழத்தின் ரூசி தட்டினாப் போல கெட்ட வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாக அனுபவித்துப் பேசினாள். அல்லது ஏசினாள்!

வெயில் ஏற ஆரம்பித்திருந்தது. பழங்களில் ஈ வந்து வந்து உட்கார்ந்ததை விரட் டுமுகமாக இலைச்சருகினால் பழங்களுக்கு விசிறிக்கொண்டே, ஆனால் தான் வியர்க்க விறுவிறுக்க உட்கார்ந்திருந்தாள்!

அவள் விசிறியதும் ஈக்கள் பழத்தில் இருந்து பறந்து அவள் மேல் உட்கார்ந்தன.

சும்மா உட்கார்ந்தமா, வியாபாரத்தைப் பார்த்தமா, என்பதுகூட இல்லை. வெத்திலையைக் குதப்பிக் குதப்பி, அரசியல்வாதி வெற்றி எனக் காட்டுவதைப்போல, உதட்டில் வைத்து தனக்கு இருமருங்கிலும் துப்பிக்கொண்டாள். இதில் இருந்து இது வரை என் இடம், என அடையாளம் போட்டாப் போல. ரிக்ஷாவில் அச்சகத்துக்குக் காகிதம் வந்து இறங்கினால் கூட, அவள் லேசாய் அசைந்து கொடுத்தாளே தவிர, இடம் மறித்தது மறித்ததுதான். ஆளும் செம குண்டு. சங்க நோட்டிசில் குறிப்பிடுவதுபோல, மாபெரும் தார்ணாவாக அது இருந்தது.

அல்போன்ஸ் ஐயா வேலைதான் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. அன்றைக்கு மாலை விநியோகம் செய்ய வேண்டும். ஒண்ணுக்குப் பதினாறு அச்சளவு நோட்டிசுகள்.

தலைப்பு - அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்?

எல்லாரும் வீட்டைத் திறந்து போட்ட்டுத் தூங்குங்கப்பா.

யாமிருக்க பயமேன் முருகர் கோவில் பட்டர்கூட, கோவிலைப் பூட்டிவிட்டு, பூட்டை இழுத்துப் பார்த்துக்கொள்கிறார் எச்சரிக்கையாக...

கடல்கரை வளாகம். நல்ல காற்றுப் போக்கான இடம். டூரிஸ்டுகள் வந்துபோகும் இடம். வெளியூர் ஆட்களும் நிறையப்பேர் சர்ச் வந்து போகிறார்கள். உள்ளூர்க்காரர்களையும் ஆகவே அந்த வளாகம் கவர்வதாய் இருந்தது. தினசரி திருவிழா என்கிற அளவில் கவனஈர்ப்பு செய்வதான கோவில் அது.

அருமையான சிற்பம் அது. பெரிய பீடம் நடுவில். அதற்குப் பின்னால் உயர உயரமான சிலுவையில் மிகக் கருணை கொண்ட கண்களுடன் சாந்தமான அமைதியான மூர்த்தி. யேசுபிரானின் அந்த எளிமை எல்லாரையும் கவர்வதாய் இருந்தது. அவரது எளிமையான தோற்றத்துக்கே ஜனங்கள் மனம் பறி கொடுத்து அவரிடம் பிரார்த்திக்க வந்தார்கள் என்றால், அந்த சந்நிதியை வைத்து பெரும் துட்டு கொழித்தவர்கள் எத்தனையோ பேர்!

>>> 

சனிக்கிழமை தோறும் தொடர்கிறேன்

storysankar@gmail.om

91 97899 87842 / 94450 16842

Friday, November 20, 2020

 

2006ம் ஆண்டின் சிறந்த நாவல் - தமிழக அரசு பரிசு

 

நீர்வலை

எஸ்.சங்கரநாராயணன்

 9

டிப்பு வராதவர்கள் என்று ஒதுங்கியவர்களே அங்கே ஒர்க்ஷாப்பில் இருந்தார்கள். அப்பாவுக்கு இராணுவ பென்ஷன் என்று வந்தபோதிலும், மருந்துகளுக்கே பத்தாத நிலை. நாலுபேரை நம்பி, கடன் கொடுத்து வாங்கி, ஏகப்பட்ட சிக்கல்களில் அப்பா மாட்டிக்கொண்டு, கடனை அடைக்க வட்டியே ஆளை வீழ்த்தி... வாழ்க்கை திசைதடுமாறிய படகாக திணறிப்போனது. அப்பா உடம்பு மிலிடரி உடம்பு என்று சொன்னால்கூட நம்ப முடியாதிருந்தது. மிலிடரி ஓட்டல் சர்வர் உடம்புடா - என்று கிண்டல் செய்யும்படியாய் ஆகியிருந்தது!

அப்படி அவனுக்கும் ஒண்ணும் படிப்புதாகம் என்றெல்லாம் இல்லை. சரி, என்று பாடப்புத்தகத்தை எடைக்குப் போட்டான். சோன்பாப்டி கிடைத்தது. அவன் புத்தகத்தையே கிழித்து, கட்டிக்கொடுத்தான் வண்டிக்காரன்.

நாலு பக்கமும் கோட்டைபோல் நெளி நெளியாய் தகரமறைப்பு கண்ட பெரிய வளாகம்தான். மணி டிரான்ஸ்போர்ட். தனியார் பஸ் டவுண்பஸ் சர்வீஸ் ஒன்று முதலாளிக்கு இருக்கிறது. தனியே வேறு தெருவில், லாரி பார்சல் ஆபிஸ். ரெண்டு மூணு லாரிகள் லோடு அடித்தன. ஒரு லாரி அண்ணன் கையில். தவிர வேறு கனவாகனங்களில் பழுது, என்றுவந்தால் பார்த்துக்கொடுத்தார். எப்படியும், யானைக்கொட்டடி போல ஒன்றிரண்டு பெரிய வாகனம் - பஸ் - தண்ணி லாரி - லோடு எடுக்கும் லாரி, என உள்ளே நின்றது.

ஒரு விபத்தான லாரியின் முன்நெற்றி மாத்திரம் எப்போதும் ஓரத்தில் கிடக்கும் அங்கே. லாரிக்குப் பேர் வைத்திருக்கிறார்கள் - யாமிருக்க பயமேன் - அதை நம்பிய ஆள் என்ன ஆனோனோ அந்த விபத்தில்?

யாமிருக்க, வேறு பயமேன்!

அந்தத் தரையே கிரீசும், டீசல், பெட்ரோல், கீல் எண்ணெயுமாய்ப் படிந்து கருப்பாய் பளபளத்து வழுக்கியது. செதுக்கியெடுத்தால் எள்ளுப் புண்ணாக்கு போல கட்டியாய் மண் பெயர்ந்துவரும். மழைக் காலமானால் ஜாக்கிரதையாய்த்தான் நடக்கணும். இப்பவே ஜாக்கியில் தூக்கிய வண்டிக்குத் தண்ணீர் அடிக்கையில் சிந்தினால் காயும் வரை சிரமம்தான். உட்கார்ந்து வேலை செய்ய பலகை போட்டுக்கொள்வார்கள்.

சிறு சிறு சுற்றுவட்ட வேலைகள்தான் கஷ்டமாய் இருந்தது அவனுக்கு. டயர்பஞ்ச்சர் என்றுவந்தால் எட்டு நட்டு போலக் கழற்றி எடுக்க வேண்டிவரும். காலகாலமாய் மண் படிந்து இறுகிப்போன நட்டுக்கள். அவற்றைக் கழற்ற என்றே எக்ஸ் போல உபகரணங்கள். அதில் ஏறி, வயலில் ஏற்றம் இறைக்கிறாப்போல மிதித்து, நட்டை ஊப் என தம் பிடித்து, மூச்சடக்கி, அமுக்கி, அசைத்துக் கழற்ற அபாரசக்தி தேவை. அதேபோல் டயரைத் திரும்ப மாட்டுவதும் பெரும்பாடு.

கனவாகனங்களில் முன்பக்கம் ரெண்டு டயர், பக்கத்துக்கு ஒன்றாக - என்றாலும் பின் பக்கம் பக்கத்துக்கு ரெண்டு, என மொத்தம் ஆறு டயர்கள். உள்டயரில் பஞ்ச்சர் என்றாகிப் போனால் கழற்றுவது இன்னும் சிரமமான வேலை.

ஊ..ப்ப்ப்!

அவன் உடம்பில் தெம்பே இல்லை. மூச்சு வாங்க வாங்க வேலைசெய்ய வேண்டியிருந்தது. சில கனமான சாமான்களைத் தூக்கவே சிரமப்பட்டுப் போயிற்று. ஒவ்வொரு டயரும் என்ன கனம். ணங் கென்று டயரைக் கீழேபோட தரையே பாளம் பாளமாய்த் தெறித்தது. காலில் விழுந்தால், என நினைக்கவே பயமாய் இருக்கும். போகப்போகச் சரியாகிவிடும் என்று தேற்றிக்கொண்டான்.

போகப் போக எது சரியாகி விடும்? கால் புண்ணா!

லாரியாபிசில் மற்ற பையன்களுடன் படுத்துக் கொண்டான் முதலில். கமலாதான் வற்புறுத்தி அழைத்தது. கிருட்டினமணியும் தலையாட்டி விட்டான்... ராத்திரி பத்தோ பத்தரையோ ஆனாலும் பரவாயில்லை. வேலையைமுடித்த கையோடு வீடு வந்து சேர், என்றான் அண்ணன்.

நல்லா திருத்தமா அழகா குண்டு குண்டான கையெழுத்து கமலாவுக்கு. வீட்டுப்பாடங்களை முன்குனிந்து கவனமாய்ப் பென்சிலில் அழுத்தி எழுதும்போது நாக்கை ஏனோ சேஷ்டைகள் செய்யும். வீட்டில் அதற்குப் பாடம் சொல்லித் தர ஆள் இல்லை. பள்ளிக்கூடம் விட்டு வழியில் டீச்சர் வீடு. அங்கே போய்ப் படித்துவிட்டு வரும். மாலையில் டீச்சர் வீட்டுக்குப்போய் சிவஜோதி கூட்டிவருகிறாள். என்னமாச்சும் பாலோ, கூட நொறுக்குத்தீனியோ எடுத்துக்கொண்டு, டீச்சர் வீட்டில் சாப்பிடக் கொடுத்துக் கூட்டிக்கொண்டு வருவாள். அம்மா முதுகில் பள்ளிக்கூடப் பைக்கட்டு. கையில் தண்ணீர் பாட்டில் மதியச் சாப்பாட்டு டப்பி எல்லாம் வைத்த லன்ச்பேக். பார்க்க அம்மா பள்ளிக்கூடம் போய்வருகிறாப் போல இருக்கும்! கைவீசி வீசி லெஃப்ட் ரைட் நடை நடந்து வரும் கமலா.

தினசரி சிவாஜிமேல் கால் போட்டுக்கொண்டு தூங்குகிறாள் கமலா. அண்ணன் எங்க ஓடிப்போயிருவானோ, என்று பயந்தமாதிரி இருக்கிறது அவள் செயல்! காலை சீக்கிரம் கிளம்ப வேண்டிய சந்தர்ப்பங்கள் சிரமமானவை. அவன் மெல்ல, அவள் அறியாமல், அவள்காலை சலனப்படுத்தாமல் நகர்த்த முற்பட்டால், சட்டெனத் திரும்பி, கையால் அவனை அணைத்துப் படுத்துக்கொள்வாள் குழந்தை. பிரித்துக்கொண்டு கிளம்ப மனசு சங்கடமாய் இருக்கும்.

பட்டறையில் வேலை ஒரே மாதிரி அமையும் என்று சொல்ல முடியாது. சில நாட்கள் வேலையே இராது. கம்பெனி பஸ், கம்பெனி லாரியில் வழக்கமான செக் அப் முடித்து விட்டால் வேறுவேலை இல்லாமல் காலியாக இருக்கும் வளாகம்.

முதலாளி இல்லை என்றால் கொட்டம் அடிக்கலாம்... எறிபந்து விளையாடலாம். எவனாவது அப்பிராணி சுப்ரமணியை தெருநாய்போல நடுவில் மாட்டி பந்தால் நச்சி எடுத்துறலாம்.

துப்புரவா வேலை இல்லாத சந்தர்ப்பத்தில், எப்படியோ தெரிந்துகொண்டு, பெரியாள் நம்பிக்கு யாரோ பெண் ஃபோனில் பேசும். லவ். பேசியபடியே பெரியாள் நம்பி தன்னைப் போல தலையைத் தடவி, முடி ஒதுக்கி விட்டுக்குவான். சீப்பால் வாரிக் கொள்வான். இன்னும் கொஞ்சநாளில் பவுடர் கூட அடிக்கக் கூடும்!...

ஃபோனில் பேசிக்கவே இந்த அமர்க்களம் அப்பா!

காதல் வந்துவிட்டால் இந்த மனுஷாள் - ஆணாயினும் பெண்ணாயினும் கொஞ்சம் பைத்தியசாயல் கொண்டு விடுகிறார்கள். சிலசமயம் அந்த பெரியாள் நம்பி ஸ்பேனர் எடுத்து வந்திட்டிருக்கிற போதே தானே சிரிச்சிக்கிறான். நடையில் இடுப்புவலி கண்டாப்போல ஒரு வெடுக் ஒடிப்பு. நொடிப்பு... என்னடான்னா ... ஒண்ணில்ல ஒண்ணில்ல, என்று ஆனால் தொடர்ந்து சிரிக்கிறான். சில சமயம் அவனிடம் தனி பரபரப்பு காணும். உடம்பு இங்கே, மனசு வேறெங்கோ எனத் தெரியும்.

அவளிடம் இருந்து ஃபோன் எதிர்பார்க்கிற நேரங்களாக அவை இருக்கலாம். அழைப்புவரத் தாமதம் ஆகும் ஒவ்வொரு நிமிஷமும் இவாள் படற பாடு. தலையைத் தலையை எத்தனையோ தடவை வாரிக்குவான். பட்டறைக்குள்ளேயே நடையா நடை... ஃபோன் மணி அடித்தாலே இவனுக்குதான் என்கிறாப் போல உடம்பு சிலிர்த்து தூக்கிப் போடுகிறது. அவனுக்குதான் ஃபோன்-னா ஒரே சிரிப்பாணிதான்!

வந்த கால்... அதனால் செலவுக் கணக்கில் மணி ஐயா - வைகறையார் - பார்வைக்கு வராது. சிரிக்கச் சிரிக்கப் பேசுவான். என்னதான் பேசுவார்களோ தெரியாது...

எலேய் லாரி ஆபிசில் கழட்டாமலே தானே கழண்ட நட்டுறா நீயி... என்பான் மனோகரன் அவனை.

இல்லாவிட்டால் நம்ப மோகன்பாபு - இருக்கிற ஆள்களில் அவன்தான் கொஞ்சம் பொம்பளைசாயல் - அவனுடன் கூட்டாளி ராமசுப்பு... ரேடியோப் பொட்டியில் பாட்டு பாடப்பாட, ஆட்டம் போடுவார்கள். மோகன்பாபு குத்தாலத் துண்டு எதும் எடுத்து இடுப்பில் முந்திசொருகி உடலைமூடிக் கட்டிக்கொள்வான் புடவையாட்டம். இருவரும் டூயட் ஆட்டம். ஏ மன்மத ராசா.... என்று பாடினால் சுத்தி அதை வேடிக்கைபார்க்க என ஒரு ரசிக மகாக் கூட்டம்.

தேசிங்குராஜன் பலகுரல் மன்னன். சத்யராஜ் பாணியில் அப்படியே பேசிக் காட்டுவான். ராமநாதன் டிரங்குப் பெட்டியில் அபாரமாய்த் தாளம் போடுவான். டண்ட டக்கர டண்ட டக்கர... அவன் தாளத்துக்கு சிகாமணியின் பாட்டு எடுப்பாய் இருக்கும். எளிய, லம்பாடித்தனமான, தாளவெறியான பாடல் கள்.

காற்று வாங்கப் போனேன் - ஒரு கவிதை வாங்கி வந்தேன்...

ஏன் காத்து கிடைக்கலியாக்கும்... என்னத்தையோ பண்ணப் போயி, வேறெதையோ பண்ணிட்டு வராங்கய்யா! லூசுப் பசங்க.

எல்லாம் வைகறையார் இல்லாத பட்சம்தான். அவர் முன்னே எல்லாருமே அத்தனை அடக்கம் காட்டினார்கள் - ஆச்சர்யம்.

போன வாரம் சரஸ்வதிபூஜை, ஆயுதபூஜை, என அமர்க்களப்பட்டது வளாகம். கிருட்டினமணி அண்ணன்கூட வந்திருந்தான்... ஷெட்டே சீரியல்பல்ப் மினுங்க அம்சமாய் இருந்தது. சவுண்ட் சர்வீஸ்காரனிடம் சொல்லி, ஒலிபெருக்கி கட்டி, சினிமாப் பாட்டு, என சப்த இம்சை.

எலே சரஸ்வதிக்கு பூஜையாடா இது... பூரா கெட்ட வார்த்தைப் பாட்டா வருது, என்றான் அண்ணன்!

பெரிய முழு முழு வாழையிலைகளில் அவல் - பொரி - பொறிகடலை - தேங்காய், என வைத்து கற்பூரங்காட்டி பூஜை. வரிசையாய் சாமி படம். எங்கிருந்தோ கொண்டு வந்தார்கள்.

நேற்றுவரை அங்கே - ஜோதிகா, ரம்பா, த்ரிஷா, சிநேகா - என்று ஒட்டியிருந்தன. சந்திரமுகி படம் வந்தபிறகு ஜோதிகா படத்தைக் கிழித்து விட்டார்கள். ஒரு பயந்தான்!

ரா ரா.... சரசுக்கு ரா ரா...

ஐய நா வர்ல!

தொழிலாளி எல்லாரையும் நிற்க வைத்து திருஷ்டிப் பூசணி சுற்றிப் போட்டார்கள். வடிவேலுக்கு ஒண்ணரைக் கண்.. இவன் கண்ணைப் பார்த்து எவன் கண் போடப் போறான்!...

வாகனங்களுக்கு சந்தன குங்குமம் பூசினார்கள்.

எதுக்கு பொரி வைத்து பூசை, எப்படி அந்தப் பழக்கம் வந்தது தெரியவில்லை. எல்லார்க்கும் அள்ளிக் குடுக்க விலை மலிவு - சவுகர்யம் என பெரியவர்கள் நினைத்திருக்கலாம்.

பொரியைவிட மலிவா, எதாவது லோகத்தில் உண்டா?

குழந்தைக்கு எட்டரைக்குப் பள்ளிக்கூடம். கிருட்டினமணியிடம் இப்போது சைக்கிள் இருந்தது. சிவாஜி பட்டறைவரை போகவும், குழந்தையைப் பள்ளிக்கூடத்தில் விடவும், என சௌகர்யம். எலேய், பாவமன்னிப்பு படம் பாத்திருக்கியா? - என்று கேட்டான் கிருட்டினமணி. அதுல, நீயில்ல... நடிகர் திலகம் சிவாஜி, சைக்கிளில் பாடிட்டே போவாரு... வந்தநாள் முதல், இந்தநாள்வரை, வானம் மாறவில்லை... சூப்பர் பாட்டு.

'ஏன் மாறவில்லை? மழைக்காலமே வரல்லியாமா?' என்றான் நம்மாள் தேசிங்குராஜன்.

சைக்கிளில் முன்பக்கம் கமலாவுக்கு என தனி சிறிய சீட். பைக்கட்டை பின்கேரியரில் வைத்துக்கொண்டு கூட்டிப்போகிறான் சிவாஜி.

அவளுக்குப் போனமுறை செருப்பு பிய்ந்து போனபோது அண்ணன் ஊரில் இல்லை. இவனிடம் கையில் பணம் இல்லை. அண்ணி வைத்திருப்பாள். என்றாலும், அவளுக்கு செருப்பு பெரியவிஷயமாய்த் தோணவில்லை போல. அண்ணன் வரட்டும் எனக் காத்திருக்கக் கூடும்... இவனுக்கு அப்படி விட்டுவிட முடியவில்லை. தன்னால் வாங்கித்தர முடியவில்லை, என நினைத்தபோது அழுது விட்டான் சிவாஜி.

அன்றைக்குத் தற்செயலாக முதலாளி வந்து விட்டார். என்ன தோணியதோ, துணிச்சலாய், ஒரு அம்பது ருவ்வா வேணும் முதலாளி... என்று கேட்டு விட்டான்.

அவர் முகம் சுருங்கியது.

தப்பா நினைச்சுக்கப்டாது முதலாளி. அண்ணன் ஊர்ல இல்ல. பிள்ளை கால்ல செருப்பு இல்லாமப் பள்ளிக்கூடம் போவுது... பேசும்போதே குரல் தாழ்ந்து குழைந்தது.

சரி, என்று மறு வார்த்தை பேசாமல் எடுத்துக் கொடுத்தார். அட்வான்ஸ் கிட்வான்ஸ்னு பேசாதே... அதெல்லாம் இங்க வழக்கம் கிடையாது, என்றார்.

நீ திருப்பித் தரண்டாம். பரவால்ல - என்றார் புன்னகையுடன்.

அடடா, நூறு ருவ்வா கேட்ருப்பேனே... என்று தோழர்களிடம் சொல்லிச் சிரித்தான் வைகறையார் போனபின்னால்.

10

சிவாஜி எதிர்பாராத திருப்பம் நடந்தது. நல்ல பேச்சுஅடாவடி இருந்தது அவனிடம். அவனைத் தற்செயலாக முதலாளியின் இரண்டாவது மகன் ரத்னசபாபதி பார்த்தான். படபடவென பைக்கில் வந்து பட்டறை ஆட்களில் ஒருத்தனை உதவிக்கு எனக் கேட்டான். பிரஸ் உதவிக்கு என இருந்தவன் கல்யாணம் என்று ஒரு வாரம் மட்டம். விஷயம் அவசரம். சுத்து வட்ட வேலைகளுக்கு ஆள் கிடையாது.

ஊரில் கல்யாணம் என்றால் அச்சகத்தில் வேலை நெரிசல். இப்ப நம்ம அச்சாபிஸ் ஆளுக்கே கல்யாணம்! மட்டம் போட்டு விட்டான்!

பிரஸ் நபர்கள் ஏனோ இடம் இடமாய் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருநாள் ரெண்டுநாள் என்று மட்டம் போட்டால், அச்சகத்தில் தாக்கு பிடிக்க முடியாத நிலையில், வேறு ஆளை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. அடுத்த அச்சகத்தில் இருந்து ஆட்களை சுவீகரித்துக் கொள்வது வாடிக்கையாகி விடுகிறது.

அச்சக ஆர்டர்கள் எப்பவுமே பரபரப்பானவை. ஒண்ணுக்கு போல. அவற்றைத் தள்ளிப்போட முடியாது!

கிராமங்களில், பிள்ளையார் கோவிலுக்குப் பிரதிர்ஷ்டை செய்ய, என்று பிள்ளையார் விக்கிரகங்களைத் திருடி, இடம்பெயர்த்து விடுவார்கள். அது என்னவோ அப்பிடி ஒரு சம்பிரதாயம் அந்தக்காலத்தில் இருந்ததாகச் சொல்கிறார்கள். அதைப்போல, அச்சகக் கதையும்!

வைகறையார் சிவாஜியை அனுப்பிவைத்தார்.

வைகறை அச்சகம் நல்ல பிரதானப் பிரதேசத்தில் இருந்தது.

வைகறைவாசல் அப்படி ஒன்றும் சிறிய ஊர் அல்ல. தமிழ்நாட்டின் தென்கோடி. கடல் பிரதேசம். காலை சூர்யன் உதித்தது அங்கே. சூர்ய உதயம் பார்க்க, என்று வெளிநாட்டுக்காரர்கள் கூட, வந்து குழுமினார்கள்.

ஏன் அவங்க ஊர்ல சூர்யன் கிடையாதாமா...

வீட்ல சீக்கிரம் எழுந்து கொள்ளாமல், பத்தரை பதினொன்று என்று படுக்கையில் பொரண்ட ஆட்களுக்கெல்லாம் இந்த சூர்ய உதயம் சுவாரஸ்யமாய் இருந்தது. வெளிநாட்டுக்காரனுக்கு நம்ம நாட்ல எல்லாமே வேடிக்கை. அங்கேர்ந்து வந்து... இருக்கறதை எல்லாம் விட்டுட்டு, குழந்தை சர்ர்ரடிக்கிறதைப் படம் எடுக்கிறாங்கள். ஏன் அவங்க ஊர்ப் பிள்ளைங்க சர்ர் அடிக்காதாமா?...

இல்லாட்டி, பிச்சைக்காரன் வரிசையா கோவிலாண்டை உக்காந்திருப்பான்... அதைப் படம் எடுக்கிறார்கள். வீடியோப்படம். அதற்கு நம்மாட்கள் திருநீறு ஸ்பெசலாப் பூசி பவுடர் அடிச்சி போஸ். சில ஆளுகள் காரியத்தில் கண் - வந்த வெளிநாட்டுக்காரனை, சுரண்டல் லாட்டரி டிக்கெட், என நினைச்சி, சுரண்டிச் சுரண்டி பிச்சை கேட்கிறார்கள்...

ஒரு நம்பர் சுரண்டல் டிக்கெட் போல, பிச்சை கிடைக்கிறதும் அதிர்ஷ்டம் சம்பந்தப் பட்டதுதானே!

வாட்டிஸ் திஸ்...

இதா மாமா, இது திருவோடு...

திசிஸ் நைஸ்... என அதை ஒரு ஃபோட்டோ! இது எங்க கிடைக்கிறது, எல்லாரும் வெச்சிருக்கானுங்களே , என அவனுக்கு ஆச்சர்யம்! உனக்கெதுக்கு இது? நீ வாங்கிட்டுப் போயி, உங்க ஊர்ல பிச்சை எடுக்கப் போறியா...

லாரி வேலையைவிட இந்த மிஷின்வேலை, பேப்பரை அழகாக வசம் பார்த்து மடித்து நறுக்கி பைன்டிங் வேலை அவனுக்குப் பிடித்திருந்தது. வண்ண வண்ணக் காகிதங்கள். வண்ண வண்ண அச்சுகள்.

யந்திர யானைக்குட்டியாட்டம் அச்சடிக்கிற மிஷின். மாவுத்தன் சிங்காரம்தான்... ஃபோர்மேன் அண்ணன் தண்டபாணி...

வாடிக்கையாட்கள் நிறைய வந்துகொண்டே இருந்தார்கள். வர்ற ஆள் போற ஆள் எல்லாருக்கும் - தரம் பார்த்து, டீயோ குளிர் பானமோ, வெறும் டம்ளர் தண்ணியோ தந்தான் ரத்னசபாபதி. இவன் எதும் தாராவிட்டால் தரும்வரை பேச்சை நீட்டி, விடாக்கண்டனாக வாங்கி, வாயில் ஊற்றிக்கொண்டு செல்லும் பார்ட்டியின் வருகையும் உண்டு.

ரத்னசபாபதி ஆள் காசில் கெட்டி. அவனிடம் லேசில் காசுதேத்த முடியாது. கணக்கு கணக்கு என்று உயிரை வாங்கி விடுவான். பிளஸ் டூ-வரை பள்ளிக்கூடம் போயிருக்கிறான். அப்புறம் போகவில்லை. கணக்கில் ஐயா அவ்ட். இங்கே கணக்கு பார்த்து பிரயோஜனம் என்ன?

ஆனால் மனுஷன் புகழ்ச்சிக்கு அடிமை.

உங்க தலை அலங்காரம் மகேஷ்கௌதம் மாதிரியே இருக்கு சார்... என்றான் விளையாட்டாக. அவன் எந்த நடிகனைக் கண்டான். அச்சக எதிரில் சுவரில் நோட்டிஸ் ஒட்டாதே எழுத்தின் பக்கத்தில், எதோ பட போஸ்டர். அந்தக் கதாநாயகன் மகேஷ்கௌதம் என்று ஃபோர்மனைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்...

எப்பிடி கரெக்டாக் கண்டு பிடிச்சே?... என்றான் ரத்னம் மகிழ்ச்சியுடன். ‘ரஞ்ஜினி என்னைக் கொஞ்சு நீ’ - படத்தில் இதே கெடப்லதான் வருவான்! நீ அந்தப்படம் பார்த்திருக்கியா?

சினிமா தியேட்டரே உள்ளேபோய்ப் பார்த்ததில்லை அவன்.

பார்த்தேன். ஆனா நீங்க சொன்ன பிறகுதான் படம் பேர் ஞாபகம் வருது, உங்களுக்கு நல்ல ஞாபக சக்திண்ணே, (டீ மாட்டுமா?) என்றான் சிவாஜி. அதே படம்தான்.

எலேய், மொதலாளியவே கவுத்திட்டியேடா - என்கிறார் ஃபோர்மேன் தண்டபாணி.

அடுத்த படத்துல மகேஷ்கௌதம் முழு மொட்டையா வர்றாப்டி... இவரையும் கெட் அப்பை மாத்திக்கச் சொல்லு.

உமக்கு வேலை கொடுத்திட்டாரில்ல... மாத்திற வேண்டிதான்! - என்றான் சிவாஜி.

இவனது கலகலப்பும் சுறுசுறுப்பும் ரத்னசபாபதிக்குப் பிடித்து விட்டது. உதவி ஒத்தாசைக்கு என, இவனைத் தன்னுடனேயே வைத்துக்கொள்வதாக அப்பாவிடம் சொல்லிவிட்டான்.

ரத்னசபாபதியும் இவனுமாய் ஒரு படம் போனார்களே. மகேஷ்கௌதம் படம் என்று தனியே வியாக்கியானம் வேண்டியதில்லை. ஒழுங்கா நடந்து வர்றாளுகள் பாட்டு வரும்போது தண்டு ஒடிஞ்சாப்போல என்னமோ ஆகிப் போகிறார்கள். காலைக் காலைத் தூக்கி வீசுகிறார்கள். எலேய் ஷூ பர்றந்திறப் போவுதுடா... பூ எங்காவது பூத்திறப்டாது. பக்கத்தில் நின்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு காலை சகதியை உதறுகிறாப் போல தட்டித் தட்டி - ஓ அது டான்ஸ் ஸ்டெப். பொம்பளையாள் இப்படி தண்ணிக் குடம் எடுத்து வரும். பலூன்காரனிடம் வேலை மெனக்கிட்டு ஏகப் பட்ட பலூன் வாங்கி - ஆச்சர்யம் பறக்க விட்டு விடுகிறார்கள். அதற்கு வாங்குவானேன்?

ஒரு சின்னப் பையன் தெருவில் நடந்து போகிறான். திடீர்னு அவன்மேல சக்கரம் உருளுது. சர்த்தான், விபத்தாகி செத்தே போனானே பாவி, என்று பார்த்தால் பெரியாள் ஒருத்தனைக் காட்டுகிறார்கள்...

அவனேதான் இவன். பெரியாளாயிட்டான். சிம்பாலிக் ஷாட், என்று சிரிக்கிறான் ரத்னசபாபதி.

என்னத்தை சிம்பாலிக்... அப்ப ஒராள் செத்துப்போனா, தென்னை ஓலை விழறாப்ல கூட காட்டுவாங்களா? ஒரு பீடிக் கம்பெனி படத்துல பார்த்தேன்.

ஆமாம்!

ஐய, அந்தாள் தென்னை மரத்துல ஓலையை வெட்ட ஏறினப்ப கீழே விழுந்து செத்தான்னு நான் நினைச்சேன்... என்றான் சிவாஜி.

ஒரு பக்கம் காசு காசு எனக் கணக்கு பார்க்கிற ஆள். இந்த மாதிரி சினிமா பந்தாக்களுக்குச் செலவழிப்பான் போல.

நீலா என் நிலா - படத்தை மாத்திரம் பத்து தரம் பார்த்தானாம். சும்மா கிண்டலுக்கு, ஏண்ணே அதில் மகேஷ்கௌதம் பிரஸ்காரனா வர்றானான்னு கேட்டா...

அட - ஆமாம்னு தலையாட்டுறான்!

அண்ணே சட்டையை இன் பண்ணிக்கங்க. உங்களுக்கு அம்சமாய் இருக்கும்.

மறுநாள் வந்து ''நல்லா இருக்கா?'' என்று நிற்கிறான் ரத்னசபாபதி. அவன் முதுகுப் பக்கம் இருந்து ஃபோர்மேன் சிரிக்கிறார்.

ஏலேய் கூடிய சீக்கிரம் அவனைப் பைத்தியமாக்கிருவ போலுக்கே... என்கிறார்.

கூடிய சீக்கிரம் என்ன... இப்பவே! - என்கிறான் சிவாஜி.

முன்னைப்போல் இந்த வேலை கடுமையானதாய் இல்லை. சைக்கிள் இப்போது வெகு உபயோகம். நாலுஇடம் வெளியிடம் போய்வர வேண்டியிருந்தது. இந்தப் பணத்தை பாங்கில் போடு... என சலான் எழுதி பணமும் தருவான். பேப்பர்கடைக்குப் போய் பேப்பர் வாங்கிவரச் சொல்வான். கல்யாண முகூர்த்தப் பத்திரிகைக் காகிதம்... ஒருபக்கம் மஞ்சள் ஒருபக்கம் குங்கும வண்ணம், என ஐதிக வண்ணங்கள். மஞ்சள்த் தாளில் கருப்பு எழுத்துகள் அடிக்க, பச்சை வண்ணம் வந்தது. ஆச்சர்யம்!

வெத்திலைப் பச்சை. சுண்ணாம்பு வெள்ளை... இரண்டையும் மடக்கி வாய்ல போட்டா, வர்ற வர்ணம்?

சிவப்பு!... அதைப் போலத்தான் இது!

அச்சிட்டவற்றை டெலிவரி கொடுக்கவும் அவன் போகவேண்டும். விதவிதமான அனுபவங்கள். அச்சடிக்க வந்த வேலைகளும் எத்தனையோ ரகம். இயேசுவை நம்பு... ஆட்டோ காணவில்லை. நாய் படம் போட்டு, நாய் காணவில்லை, என்றுகூட வந்தது. காணவில்லை என்று சொல்லி படம் போடுகிறார்கள். காணவில்லை என்றால், படம் எப்படி எடுத்தார்கள் தெரியவில்லை!...

சில நல்ல வாசகங்களே அச்சுப் பிழையில் நாராசமாகி விடுகின்றன. பம்பு பாம்பாகி விடுகிறது...

கண்ணீர் அஞ்சலி. நீத்தார் காரிய அறிவிப்பு. பிறந்தநாள்... கல்யாணம்... என வைபவ சிறப்பு அழைப்புகள். ஒரு கல்யாணப் பத்திரிகை அடிக்க வந்திருந்தது. அந்தப் பெண் அவளது காதலனைப் புறக்கணித்து வேறு மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டுகிறாள்... அவன் தற்கொலை செய்து கொண்டான். காதலி கல்யாணப் பத்திரிகை மை காயவும், கண்ணீர் அஞ்சலி பத்திரிகையும் அங்கே அச்சானது...

வெளிநாடு போகிறதுக்கு... டாட்டா டாட்டா! நன்றி நன்றி - என நாய் வாலாட்டும் படம் போட்ட சுவரொட்டிகள். புதியகடை திறப்பு விழா... அமைச்சர் - பிரமுகர் என யாரும் வந்தால் வருக வருக - அது வேறு.

இப்போது எல்லாத்துக்கும் போஸ்டர் அடிக்கிறார்கள். இனி வந்துவிட்டுப் போகும்போது போங்க, போங்க - போஸ்டர்கள் வரலாம்!

ஃபோர்மேன் அண்ணே, நம்ம முதலாளி பிறந்தநாளுக்கு, நாம ஒரு போஸ்டர் அடிச்சிருவம்!

வெளிநாடு சென்றுதிரும்பும் பிரமுகர்கள், என்று வரவேற்பு போஸ்டர்கள். விமானம் ஓட்டற ஆள் எத்தனை தரம் போயிட்டு வரான்... அவனை வரவேற்க ஆள் கிடையாது!

சங்கங்கள் மாபெரும் கண்டனப் பேரணி. தார்ணா... என அச்சிட அடிக்கடி வருவார்கள். சிலாளுகள் சும்மா உட்கார்ந்திருந்தாக் கூட காலை ஆட்டிட்டே கிடப்பான். அதைப்போல இவர்கள், சும்மாவாச்சும் எதாவது நோட்டிஸ் அடித்து விநியோகம் செய்து கொண்டே இருக்கிறார்கள். பஸ் ஸ்டாண்டு பக்கம் விநியோகிக்கப்படும் நோட்டிஸ்களில் அவனவன் பஜ்ஜி எண்ணெயைத் துடைக்கிறான்... அவர்களுக்கு சிவப்புமையில் அத்தனை இஷ்டம். ஏன் சிவப்பு மை தெரியவில்லை. ஒருவேளை, வாத்தியார் பேப்பர் திருத்தும் மை சிவப்பு மை. இவர்கள் சமுதாயத்தைத் திருத்துகிறார்கள் அல்லவா?

முதலாளிகள்தான் சிவப்புத் தோல்காரர்கள். தொழிலாளிகள் வண்ணம் கறுப்பே!...

போஸ்டர் அடிக்க காசு குறைவாய் இருக்கிறது, என்று சின்னதாய் அடிக்கச் சொல்வார்கள். அதில் /மாபெரும் தார்ணா!/

ஒருநாள் ஒரு தொழிற்சங்க நோட்டிஸ் தந்துவிட்டு, எங்க முதலாளி சரியா சம்பளம் தர மாட்டேங்கறாருங்க, என்றான்.

நோட்டிஸ் பெற்றுக் கொண்டவன் நிமிர்ந்து உட்கார்ந்தான்...

எனக்குச் சம்பளம் தரணும். நீங்க பாக்கி வைக்காம பில்லைக் குடுங்க... என்றான் சிவாஜி.

வைகறைவாசல் வித்தியாசமான ஊர். ஊரில் என்னமாவது பரபரப்பாக நடந்து கொண்டேயிருந்தது. பஜார்ப்பக்க நாய்களே பரபரப்பாகத் திரிந்தன. லாரிப் பட்டறை ஒதுக்குப் புறம். ஆனால் அச்சகம் நல்ல சென்டர். அதே தெருவில் மூலையில் நடுவீதியை மறைத்து அரசியல் கட்சிகள் பந்தல் போட்டு பொதுக்கூட்டம் நடத்தின. தெரு விளக்குக் கம்பத்தில் இருந்து திருட்டு மின்சாரம் எடுத்து கூட்டம். விழாவில் கலந்துகொண்டவர் யார் தெரியுமா? அப்பத்திய மின்வாரியத் துறை அமைச்சர்!

மனுஷர் கண்டுக்கவே யில்லை!

மைக் இருந்தும், இந்த அரசியல் பேச்சாளர்கள் கத்து கத்தென்று கத்துகிறார்கள். அவர்கள் பேச்சில் பாலும் தேனும் ஓடியது... தெருவில்? மூச்சாதான் ஓரங்களில் இருந்து ஒடுகிறது.

ஒருமுறை வைகறையார் கூட அந்தத் திடலில் பேசினார். நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக ஆவேசப் பட்டார். அவர் வண்டி எதும் செக் போஸ்டில் மாட்டியிருக்கலாம்.

அத்தான் தேர்தலில் போட்டியிடும், போட்டியிட்டுத் தோற்றுப் போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை - என்று தோன்றியது!

---

சனிக்கிழமை தோறும் தொடர்கிறேன்

storysankar@gmail.com

91 97899 87842 / 91 94450 16842