2006 ம் ஆண்டின் சிறந்த நாவல் - தமிழக அரசு பரிசு பெற்றது

நீர்வலை

எஸ்.சங்கரநாராயணன்

11

நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது இப்போது. பட்டறை என்பது அடைத்துப் போட்டாற் போலிருந்தது. அச்சக வேலை என்றால் பெரும்பாலும் வெளியே சுற்றவேண்டிய வேலை. சட்டென சுதந்திரம் பெற்றாப்போல ஒரு விடுதலை உணர்வு. சிறகு முளைத்த உற்சாகக் கும்மாளம்.

அழகர் ஆத்ல இறங்கினதைப் பார்த்தாப்லயும் ஆச்சி. அண்ணனுக்குப் பொண் பார்த்தாப்லயும் ஆச்சி - என பழமொழி!

விதவிதமான அனுபவங்கள். கல்யாணப் பத்திரிகையைப் பிரித்துப் பார்த்து அசட்டுச் சிரிப்பு சிரிக்கும் மணப்பெண். இழவு சமாச்சாரப் பத்திரிகையில் இறந்தவர் படம் சின்னதாகி விட்டதாக ஓர் அங்கலாய்ப்பு.

கல்யாணத்தில் வாழ்த்துப்பா, என்று நூறு இருநூறு, அவசர நோட்டிஸ்கள். திடீரென்று எவனுக்காவது கற்பனைவளம் பெருகி - மடை உடைந்து, அல்லது நட்டு லூசாகி... எதாவது கிறுக்கிவந்து கொடுப்பான். உடனே அச்சடித்து கல்யாணப் பந்தலில் டெலிவரி தர வேண்டும். ஒரு கல்யாணத்தில் வாழ்த்துப்பா வாசிக்கு முன்னாலேயே, மாப்பிள்ளை பார்ட்டிக்கும் பெண் வீட்டுக்காராளுக்கும் சண்டை. வரதட்சிணைப் பிரச்னையா தெரியவில்லை.

நடுவில் இவன் நிற்கிறான். அச்சடிச்ச மணமக்கள் வாழ்த்தை யாரிடம் தர? காசு பேருமா பேராதா... யூகிக்கவே முடியவில்லை. எவன் எழுதினானோ அவனிடமே தந்து காசு வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தான். கல்யாணம் நடந்ததா முறிந்ததா தெரியாது.

சர்ச் ஒன்று இருந்தது ஊரெல்லையில். கடல்கரையைத் தழுவிய சர்ச் அது. மீனவர்கள் வழிபட்டு விட்டு அதிகாலையில் கடலுக்குள் செல்கிற மாதிரியான அமைப்பு கொண்டது. நிறையப் படகுகள் கரையில் சற்று வெளித்தள்ளி மண்ணில் சொருகிக் கிடக்கும் அந்தப் பக்கம். தற்போது ஊர், சுற்றுலாத்தலம் என கவனம் பெற்று, புதுசாய் கைடுகள்... வழிகாட்டிகள்... கோனார் தமிழுரைகள் உருவாகி யிருந்தார்கள்...

ஓட்டைப் படகுகள் தவிர அதிகாலையில் மற்றவை கிளம்பிப் போவதைக் காணவே அழகு - என்பான் கிருட்டினமணி அண்ணன். சைக்கிளில், ஓடற வண்டியில் தாவி ஏறுவதைப் போல, படகைத் தண்ணியில் தள்ளி விட்டு விட்டு ஏறுவார்கள்... ஒரு நாள் அதிகாலையில் வந்துபார்க்க ஆசையாய் இருந்தது அதைக் கேட்க.

அருமையான வளாகம். வாசலில் நின்றால் கடல் காற்று ஆளைத் தாலாட்டியது. கால் புதையப்புதைய நடக்கும் மணல் வெளி.

பார்க்கவே கடல் எத்தனை அழகு. கரையில் நின்றபடி ஆவெனப் பார்த்தான். தூரதூரத்துக்கும் நீர்... நீர்... நீர்மயம். அம்மைத்தழும்பு போல, சிறுசிறு குழிவிழுந்து தளும்பும் அலைகள். காற்று, நீரைச் சலித்தாற் போலிருந்தது. அலைகளைத் தாம்பூலமாய் மடித்து காற்று, ஓரத்தில் தள்ளும் அழகு.

தொடும், என நினைத்துக் காத்திருந்தால், உள்வாங்கித் திரும்பிப்போய்விடும் சில. வேறு பேரலை உருவாகி உன்னை நோக்கி வரும் என்றாலும், திரும்பும் அலையில் சிக்கி அதும் தலையைக் கீழே போட்டு விடும். வராது என நினைக்கையிலேயே சில அலைகள், பிரம்மாண்ட உருவெடுத்து காலைத் தழுவி, அடிமண் உருவும். அந்தக் குறுகுறுப்பு அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.

லேசாய் வெளிச்சம் கரைந்த பொழுதுகள் - காலையானாலும் மாலையானாலும் - கடலுக்கு எத்தனை அழகு வந்துவிடுகிறது. காதல் வளர்க்க, காதலர்கள், எதனாலோ கடலைத் தேர்வு செய்கிறார்கள்... ஜெயித்தவர்கள் படகடியில் போகிறார்கள். தோற்றவர்கள் கடலில் பாய்ந்து செத்துப் போகிறார்கள்.

சதா சிரித்துக் கொண்டிருக்கிறது கடல். லூசுக் கடல்!

பிரம்மாண்டமான வெளிகளுக்கே, ஒரு மயக்கம் தருகிற அழகு இருக்கிறது. கோவிந்தசாமி நாடார் தோப்பு, பெரிய மாங்காய்த் தோப்பு ஊரில்... மரங்கள் மரங்கள். மற்றும் மரங்கள். இன்னும் மரங்கள். மேலும் மரங்கள்... நடுவே படுத்துக் கிடக்கவே தனி சுகம்.

ஒண்ணுமில்லை - நம்ம அரசம்பட்டி பொதுக்கூட்டத் திடல்... நிலா வெளிச்சத்தில் சிலசமயம் தனியே அவன் படுத்துக்கிடப்பான். மனம் தன்னைமீறிய இன்ப லகரியில் திகட்டிக் கிடக்கும்...

அவனுக்கு விளக்கத் தெரியாது. ஆனால் சந்தோஷத் தித்திப்பு உள்ளே சிலிர்க்கும்.

அடாடா, ஒரு நாள் அந்தத் திடலில் தெருஜனம் பாய்போட்டு ஆக்கிரமித்துக் கொண்டது. வெயில்காலம். வீட்டுக்குள் தூங்க ஏலாத ஜனம். அவன் போய்ப் பார்த்துவிட்டு ஏமாற்றமாய்த் திரும்பிவிட்டான்.

இடம் இடமாய்த் தேடி அலைகையிலேயே மழை வந்துவிட்டது. ஒதுங்க நினைக்குமுன்பே, நல்ல மழை... போட்டு கொட்டித் தீர்த்துவிட்டது. வெயில், பகலில் அதிகம்தான். அப்பவே மழைபற்றி எதிர்பார்க்க முடிந்தது...

திடீரென ஞாபகம் வந்தாற்போல அந்தத் திடலைநோக்கிப் போனான்.

ஆளின்றி வெறிச்சோடிக் கிடந்தது திடல். ஏறிப் படுத்துக்கொண்டான். உடம்பெங்கும், நாடி நரம்பெங்கும் கொட்டுகிறது மழை. பிடிவாதமான, முரட்டு மழை...

ஹம்ம்மா... என முணுமுணுத்தான். மழைக்குக்கூட இத்தனை முரட்டுத்தனம் உண்டா!

அருவியில் குளிக்கிறபோது நீரின் ஆக்ரோஷம் தெரியும்.

அதேபோல மழையில் முகத்தை நேரடியாய் நீட்டினால்தான் அதன் ஆவேசம் தெரிகிறது.

கடலை அவனுக்கு ரொம்பப் பிடித்துப் போனது. சிலநாட்கள் எதிர்பாராத வகையில் அண்ணனும் வீட்டில் இருப்பான். சிவாஜிக்கும் ஓய்வாய் இருக்கும்... எல்லாருமாய்க் கடல்கரைக்கு வருவார்கள். அன்றைக்கு அண்ணிதான் எத்தனை உற்சாகமாய் இருப்பாள்.

அருமையான பெண் அவள். எதையிட்டும் அவளுக்குக் குறை இல்லை. எதைப் பேசினாலும் சிறு சிரிப்புடன் அண்ணி பேசும். அண்ணி முகம் மாறினால் அண்ணனால் தாள முடியுமா?

தான் அழகு என மற்றவர் சொல்ல சிறு ஆசை அவளுக்கு. மறக்காமல் திருஷ்டிப் பொட்டு வைத்துக் கொள்வாள். அவள் முகக்கருப்புக்கு திருஷ்டிப்பொட்டு கூட, கருப்பு அத்தனைக்கு இல்லை, என்று சொல்ல முடியுமா?

வீட்டில் அவன் இருந்தால் அவனுக்கு என சூடாக சோறு வடித்து இறக்கினாள் சிவஜோதி. உனக்காகப் பருப்புத் துவையல் அரைச்சேண்டா, என்கிறாள் அவன் தலையை வருடி. அட என் அம்மாவே.... என அழுகை முட்டும் அவனுக்கு. இதுக்கெல்லாம் எனக்குத் தகுதி உண்டா?

அதான் பார்த்த கணத்தில்... அண்ணன் காலடியில் கூட விழாத அவன், அவள் காலடியில் விழுந்தான், தானறியாமல்!...

கமலா கால் புதையப்புதைய அந்த மணலில் ஓடித் திரிகிறது. தனக்குத் தானே பேசிக் கொண்டு, தன் உலகத்தில், அது இயங்க ஆரம்பித்துவிட்டது. கூ, என்று வாயைக் குவித்து, ஐவிரலையும் நெட்டுக்க வைத்துக் கொண்டு ஓடினால், ரயில். கமலாவின் குரலில் அது, ரயில் அல்ல... குயில்!

டுர்ர்ரென ஓடினால் அது பஸ்.

கூ டுர்ர் டும்... என்றால்,

பஸ்சும் ரயிலும் மோதி - விபத்து!

பஸ் எந்தூரு போவுதுட்டி?... என்று கேட்கிறான் சிவாஜி.

உங்கூர் எது?

அரசம்பட்டி.

அப்ப பஸ் அரசம்பட்டி போவுது...

அரசம்பட்டில ஆரு இருக்கா?

போயி எங்கய்யாவோட மண்மேட்டைப் பாத்திட்டு வர்றதா!... என சிரிப்பும் அழுகையுமாய் நினைத்துக் கொண்டான்!

அடிக்கடி உலக நினைவு வர, தூரத்தில் அப்பா, அம்மா, அண்ணன்... இருக்கிறார்களா, என ஒரு வெள்ளோட்டம் விட்டுக்கொள்கிறது.

உலகில் பிரச்னையே இல்லை, என வாழ்கிற வயது அதற்கு. எந்தக் காயத்தையும் அசட்டை செய்து - அழுது, உடனே மறந்து, எழுந்தோடி வரும் பருவம். அழுகை வரும்போதும், சிரிக்க விரும்பும் பருவம். எந்த அழுகையின் ஊடேயும் அண்ணி அதைச் சிரிப்புகாட்டி விடும்...

அழுத பிள்ளை சிரிச்சுதாம். கழுதைப்பாலைக் குடிச்சுதாம்... என்பாள்.

கழுதைப்பால் எப்படி யிருக்கும் நினைவில்லை. சின்னவயதில் முதல்நாளில் இருந்தே அவன் தாய்ப்பால் அறிந்தானில்லை. மாட்டுப்பால்,. ஆட்டுப்பால்., கழுதைப்பால் கூட, அப்பா, அவன் குடித்ததாய்ச் சொல்லியிருக்கிறார்... ஞாபகம் இல்லை.

கழுதைப்பால் மத்த பாலைக் காட்டிலும் உசத்தி சரக்கு. விலை ஜாஸ்தி.

உலகில் அத்தனை பிரச்னை அழுத்தங்களையும் ஒதுக்கி, ஆசுவாசம் கண்ட கணங்கள். கடல் கரை கணங்கள். பிரம்மாண்ட கடல். அதன் நீண்ட கரைவெளி. மனிதன் தன்னை - ஆகவே தன் பிரச்னையையும், சிறுத்துப் போனதாக உணர்கிறானா?

சற்றுதள்ளி அப்படியே மல்லாக்கப் படுத்துக் கொண்டான் சிவாஜி. நல்ல வெளிச்ச இரவில் இப்படி படுத்துக்கிடக்க ஆசையாய் இருந்தது. மெல்ல அலைவந்து முட்டமுட்ட, எழுந்துகொள்ளாமல் கிடக்க வேண்டும்.

சற்று தூரத்தில் அண்ணி. தலையில் மல்லிப்பூ. அரைவட்ட தோரணம் போலக் கட்டிக் கொண்டிருக்கிறாள். காலை நீட்டியவாக்கில் அருகே உட்கார்ந்தபடி அண்ணன். மணலை வெறுமனே அளைந்தபடி, என்னவோ அவளையிட்டு கிண்டல் தொனியில் அவர்கள் பேசிக் கொண்டிருக்கக் கூடும்.

அவர்கள் சந்தோஷமாய் இருக்கிறதைப் பார்க்கவே மனம் லேசாகி காற்றில் மிதக்கிறது.

வாழ்க்கையில், சந்தோஷம் என்பது, அமைதியின் வடிவமாகவும் அமையும், என்று அதுவரை அவனுக்குத் தெரியாது.

அதிகம் பேசிக்கொள்ளாமலேயே அநேக விஷயங்கள் புரிபட்ட, மனசுக்குப் பிடிபட்ட கணங்கள் அவை.

வாழ்க்கைதான் எத்தனை இனிமையானது... என நினைத்தான்.

மறுநாள்த்தான் நிகழ்ந்தது அந்த விபரீதம்.

 

12

ட்டென்று வானம் முகம்மாறி மழை பிய்த்து எடுத்து விடுகிறாப் போல சில சந்தர்ப்பங்கள் அமைந்து போகின்றன. நிகழ்ச்சிகள் நமது அபார, அதி சூட்சுமக் கற்பனைகளையும் மீறியே கூட அமைந்து விடுகின்றன.

இயற்கை மனிதனை எள்ளி நகையாடுகிற கணங்கள் அவை.

நிகழ்ச்சிகள் அவை நிகழும் அதி விரைவுகளில் மனித சக்திக்கு - மனித சக்திக்கு என்ன, மனிதக் கற்பனைக்கே அப்பாற்பட்ட பெரும் சக்தி சொரூபங்களை, அதன் விஸ்வரூப தரிசனத்தை, சட்டென பாம்பு தலைதூக்கிப் படமெடுத்தாற் போன்ற ஆவேசத்துடன், பெரும் அலட்சியத்துடன், இரக்கமற்ற, எதிராளிக்கு வாய்ப்பு தராத இறுக்கத்துடன், அரங்கேற்றுகின்றன.

தப்பித்தல், மீறி வெளிவருதல் முயற்சியளவிலேயே, கற்பனை அளவிலேயே இல்லை.

மனிதனை மண்டியிடச் செய்யும் இயற்கையின் கணங்கள் அவை.

அகழ்வாரைத் தாங்கும் நிலம் என்பார் வள்ளுவர். எப்போதும் தாங்கும், என்று சொல்ல முடியாது!... என இயற்கை சீற்றங்கண்ட கணங்களும் உண்டு. பூமி வாய்பிளந்து மனிதனை முதலைபோல் விழுங்கிய கணங்களும் இருக்கின்றன.

காலை சுமார் பத்துமணியளவில் நிகழ்ந்தது அது.

பூ க ம் ப ம்!

அச்சகத்தில் அவசர வேலை. எப்போதுமே எதாவது அவசர வேலை என்று தேள்கடிக்கு மருந்துதேடி ஓடிவந்தாப் போல யாராவது அச்சகத்துக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள். நேற்றே முடித்துத்தர வேண்டிய வேலை அது. சர்ச் பாதிரியார் அல்போன்ஸ் ஐயா தந்த வேலை.

இயேசு சீக்கிரம் வருகிறார்.

ஆகவே நோட்டிசும் அதைவிட சீக்கிரம் தருக.

சர்ச் வளாகத்தில் முன்திடலில் எப்போதும் நற்செய்திக் கூட்டங்கள் நடக்கின்றன. மீனவர்களின் ஓய்வுநேரங்களை அனுசரித்து கடல்கரைக் கூட்டங்கள். நீள ராஜபாட்டையான மணல்வெளி. உட்கார்ந்து கேட்கிற அளவில் நெடுகிலும் குழல் விளக்குகள். மேடைப்பக்கம் மின்மினி பல்ப்கள் வண்ணவண்ணங்களாய் மின்னுதல் தனி அழகு. மீனவர்களை மேலும் கவனஈர்ப்பு செய்வதற்காக வெளியில் இருந்தெல்லாம் போதகர்கள் வந்து அருமையாய்ப் பேசுவார்கள்.

சில சமயம் வெளிநாட்டுக்காரர்களின் பிரச்சாரங்கள் கூட ஏற்பாடு செய்வதுண்டு. தமிழ் தெரியாத வெளிநாட்டு பிரமுகர்கள் அவர்கள். அவர்கள் ஆங்கிலத்தில் பேச, உள்ளூர் ஆசாமி யாராவது அதைத் தமிழில் பின்பற்றிச் சொல்வார். கல்யாண நலுங்கில் ஊஞ்சலில் நாதசுரப் பின்பாட்டு போல. பேசப்போவதை அவர் முன்கூட்டியே சொல்லி மொழிபெயர்ப்பாளரும் தயாராகவே வந்திருப்பார். அவர் ஆங்கிலத்தில் சொன்ன ஜோரில் இவர் தமிழில் பேசுவது சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். ஊஞ்சல் மேலுயர்ந்த ஜோரில் திரும்பக் கீழிறங்கினாப்போலத் தோணும்.

மொழிபெயர்ப்பாளர் வேலையும் தவிர, பாதிரியார் அல்போன்ஸ் ஐயா அவரே தனிச் சொற்பொழிவுகளும் செய்வதுண்டு. நல்ல தமிழ் ஆர்வலர். வெள்ளிகளில், ஞாயிறுகளில் அவர் குருஸ் கோவிலில் உரையாற்றுவதைத் தொலைவில் இருந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம். நம்ம கதாகாலட்சேப சாஸ்திரிகள், சங்கீதத்தில் ஒரு காலும், வசனத்தில் ஒரு காலுமாக, ரெட்டைக்குதிரை சவாரி போவதில்லையா... அதே போல சிறு சிறு கீதங்களை அவர் இசைப்பதும் உண்டு.

சந்தோஷம் கொண்டேன், நான்

சந்தோஷம் கொண்டேன்...

ஆற்றொழுக்கான சொற்பொழிவு. கணீரென்ற குரல் எடுப்பு. நம்பிக்கையான உணர்வுத் தெறிப்புகள். தமிழில், பட்ட மேற்படிப்பு கண்டவர் அவர். ஆராய்ச்சி வல்லுநர் பட்டமும் - பி. எச்டி. - பின்னிணைப்பு எனப் பெயரோடு கொண்டவர்.

கொஞ்சம் பாடவும் கத்துக் கிடலாம்ல?

ஆமாம், பத்துமணியளவில்தான் நிகழ்ந்தது. பூகம்பம். காலையில்.

விநியோக நோட்டிசுகள் எழுதுவதில் அவர் பிரியங் கொண்டிருந்தார். மோட்சம் உண்டா? - விதி என்பது என்ன? - ஆண்டவரின் சாம்ராஜ்யம் - சாத்தானின் விழிப்பு - பாவ மன்னிப்பு - எப்படி வாழ வேண்டும்? - என்றெல்லாம் அவர் அவ்வப்போது தட்டச்சு செய்து தருகிறார். வெளிநாட்டு பாதிரிமார்கள் எழுதியதை மொழிபெயர்த்துத் தருகிறதும் உண்டு. (மிருகங்களுக்குப் பகுத்தறிவு உண்டா?) - எனக்கு எப்படித் தெரியும்? நான் மனுசன்! - கிறித்தவ மகாசபையில் அல்போன்ஸ் ஐயாவுக்குத் தனிமரியாதையும் அந்தஸ்தும் கௌரவமும் உண்டு.

அன்று மாலை பொதுக்கூட்டம் இருந்தது. பொதுக்கூட்டத்தில் விநியோகிக்க நோட்டிசுகள் அடிக்க வேண்டியிருந்தன. முந்தைய இரவே அடித்து முடித்துக் கொடுப்பதாக ரத்னசபாபதி உறுதி தந்திருந்தான். உறுதிமொழி தராட்டி, பார்ட்டி ஜுட் விட்ருமே. ஆனால் எதிர்பாராமல் முந்தைய இரவு அச்சகத்தில் கரண்ட் நின்றுபோனது. மின்வாரியக்காரனைக் கூப்பிட்டு, வரேன் வரேன் என்று வரவேயில்லை. போனமுறை அவன் வந்தபோது ரத்னசபாபதி துட்டு சரியாக கவனிக்கவில்லை. வேலையை முடித்தபிறகு வயர்மேன் வந்து பார்த்தால், ரத்னசபாபதி ஆளையே காணவில்லை... எஸ்கேப்!

அது அவன் நேரம். இப்போது வயர்மேனின் காலம்!

அச்சகத்திலேயே ஃபியூஸ் போயிருந்தால் நம்ம ஃபோர்மேனே வேலையைப் பார்த்திருப்பார். மெய்ன் லைனில், விளக்குக்கம்பம் ஏறிப் பார்க்கவேண்டிய வேலை. நாம் ஏறக்கூடாது.

இரவு காத்திருந்து பார்த்துவிட்டு, பத்துமணி வாக்கில்தான் அச்சகத்தை ஏமாற்றத்துடன் பூட்டிவிட்டுக் கிளம்பினார்கள்.

காலை முதல்வேலையாக அவனைத் தேடிப் பிடித்துவர, சிவாஜி பணிக்கப்பட்டான். வயர்மேன் வீட்டில் இல்லை. தேடிவருவார்கள், என்று தெரியும். காற்று சுழிமாறி தன்பக்கம் வீசுகிறது என்று தெரிந்துவிட்டால், மனிதர்கள் எத்தனை உற்சாகமாய்ப் படுத்துகிறார்கள்... வயர்மேன் வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்கிறான்!

அண்ணாச்சி வணக்கம்...

என்னப்பா? - என்கிறான் எதுவும் தெரியாத மாதிரி.

மச்சினி ஊர்லேர்ந்து வந்திருக்கு... நான் இன்னிக்கு லீவு விடலாம்னு பார்த்தேன்!... என்கிறான்.

மச்சினிச்சி வூட்டுக்கார் வர்லியாக்கும்? வந்திருந்தா ஏன் லீவு போடப்போறான்!

டீக்கடையருகே எப்படியோ ஆளைப் பிடித்து, டீக்கடைக்காரனுக்கு சிவாஜியே 'அழ' வேண்டியிருந்தது... டீக்டைக்காரன் 'வேற எதாச்சும் வேணுமா சார்?' என்கிறான் வயர்மேனைப் பார்த்து! - கூட்டிவர மணி ஒன்பது ஆகியிருக்கிறது.

பூகம்பம் பத்து மணிக்கு. யார் எதிர்பார்த்தார்கள்?

மூச்சா அடிக்க வந்த நாயை விரட்டிவிட்டு, வயர்மேன் கம்பத்தில் ஏறினான்.

ரத்னசபாபதியைப் பார்த்துக்கொண்டே வேலை செய்கிறான் வயர்மேன். எலேய் விழுந்துறாதே... என மனசில் பயப்பட்டான் சிவாஜி. காசு தொலையுதுறா. உயிர் - அது முக்கியம்லியா?

வேறு பியூஸ் காரியர் - பிரம்மோபதேசம் போல - வயர்ப் பூணல் போட்டு - கையோடு கொண்டு வந்திருந்தான். பழைய கேரியரை நீக்கிவிட்டு இதைச் சொருக சட்டென்று அச்சகத்துக்கு பிரசவம் ஆனாப்போல உயிரின் சலனம்!... நேற்றுப் போட்டிருந்த மின்விசிறி கடகட என இரைய ஆரம்பித்தது. குழல்விளக்குகள் கண்விழித்தன.

அசட்டுச் சிரிப்புடன் ரத்னசபாபதி பணங்கொடுக்கிறான். சிரிக்காமல் கொடுத்திருக்கலாம்... பாவம், வயர்மேன் போய்விடுவானோ என்ற பயத்தில் காலையில் இருந்து அவன் கல்லாப்பெட்டியை விட்டு நகரவில்லை.

வேடிக்கை வேணாம், வேலையாவட்டும்... நோட்டிஸ் அர்ஜன்ட். காலைலியே ஐயா போன் போட்டுட்டாங்க... என விரட்டுகிறான். எனக்கும் அர்ஜென்ட், என்று எழுந்து பாத்ரூம் போகிறான்.

மின்சாரம் வந்ததை எல்லாருமே உற்சாகமாய்த்தான் உணர்ந்தார்கள்.

பஜாரில் வழக்கமான வேலைகள் துவங்கிய உற்சாகமான காலை. யாருக்கும் பூகம்பம் வரப் போவது தெரியாது அல்லவா?

கச்சக் கச்சக் என்ற விநோத சப்தத்தை திரும்பத் திரும்ப உச்சரிக்கிறது அச்சு யந்திரம். யானை ஒரேமாதிரி ஆடிக்கொண்டே நிற்பதைப் போல. எருமை உட்கார்ந்து அசைபோடும்போது இப்பிடித்தான் பல்லை ஒரே மாதிரி ஆட்டும்..

கோவில் யானை வாசலில் இருக்கும். அச்சகத்தில் யந்திரம் உள்ளே, கர்ப்ப கிரகத்தில் போல தனி அந்தஸ்துடன்!

குருட்டுப் பிச்சைக்காரனுடன் அவன் பெண், அவனை அழைத்து வருகிறாள். சற்றே விலகிய ரோஸ் தாவணி. ரோஸ் ரிப்பன். ரத்னசபாபதி அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை சிவாஜி கவனித்து தனக்குள் சிரித்துக் கொள்கிறான். நடிகன் மகேஷ் கௌதம் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போவதாக அரசல் புரசல். எதோ ஒரு நடிகையுடன் கிசு கிசு... நம்மாளுக்கும் மூடு வந்திருக்கலாம். ரெண்டு பேருக்கும் ஒரே ஜாதகம்னாப்ல இப்டி உருகறான்... வான்கோழிப் பயல்!

பிச்சை கிடைக்காட்டி மோசமில்லை என அவசரமாய் நகர்கிறான் பிச்சைக்காரன். இவன் பார்ப்பதை அவன் எப்படித் தெரிந்து கொண்டானோ?

ஒருவேளை அவன் குருடனே இல்லையோ!

இந்தக் காலையில் அவரவர் அவசரகதியில் இயக்கங் கொண்டிருக்கிறார்கள். பஜார் சுறுசுறுத்துக் கிடந்தது. பெரிய அகலமான ரஸ்தா அது. ஆட்கள் நடமாடி சிறுத்து விட்டது. மேலிருந்து பார்க்க மனுஷநடமாட்டம் புள்ளிக்கோடாய்த் தெரியலாம். அச்சகவாசலில் பழங்களைப் பரப்பி கடை போட்டிருக்கிறாள் குண்டுப் பொம்பளை ஒருத்தி. சீக்குக்கோழிக் கழுத்து நிற கொய்யாப் பழங்கள். அவளை, கடை போடாதே, என்று ஆனமட்டும் சொல்லிப் பார்த்தாயிற்று. அவள் பேச ஆரம்பித்தால் வாயில் இன்ன வார்த்தை என்றில்லை. நல்ல வார்த்தைகளையே அவள் மறந்துவிட்டாப் போல இருக்கிறது. பழத்தின் ரூசி தட்டினாப் போல கெட்ட வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாக அனுபவித்துப் பேசினாள். அல்லது ஏசினாள்!

வெயில் ஏற ஆரம்பித்திருந்தது. பழங்களில் ஈ வந்து வந்து உட்கார்ந்ததை விரட் டுமுகமாக இலைச்சருகினால் பழங்களுக்கு விசிறிக்கொண்டே, ஆனால் தான் வியர்க்க விறுவிறுக்க உட்கார்ந்திருந்தாள்!

அவள் விசிறியதும் ஈக்கள் பழத்தில் இருந்து பறந்து அவள் மேல் உட்கார்ந்தன.

சும்மா உட்கார்ந்தமா, வியாபாரத்தைப் பார்த்தமா, என்பதுகூட இல்லை. வெத்திலையைக் குதப்பிக் குதப்பி, அரசியல்வாதி வெற்றி எனக் காட்டுவதைப்போல, உதட்டில் வைத்து தனக்கு இருமருங்கிலும் துப்பிக்கொண்டாள். இதில் இருந்து இது வரை என் இடம், என அடையாளம் போட்டாப் போல. ரிக்ஷாவில் அச்சகத்துக்குக் காகிதம் வந்து இறங்கினால் கூட, அவள் லேசாய் அசைந்து கொடுத்தாளே தவிர, இடம் மறித்தது மறித்ததுதான். ஆளும் செம குண்டு. சங்க நோட்டிசில் குறிப்பிடுவதுபோல, மாபெரும் தார்ணாவாக அது இருந்தது.

அல்போன்ஸ் ஐயா வேலைதான் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. அன்றைக்கு மாலை விநியோகம் செய்ய வேண்டும். ஒண்ணுக்குப் பதினாறு அச்சளவு நோட்டிசுகள்.

தலைப்பு - அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்?

எல்லாரும் வீட்டைத் திறந்து போட்ட்டுத் தூங்குங்கப்பா.

யாமிருக்க பயமேன் முருகர் கோவில் பட்டர்கூட, கோவிலைப் பூட்டிவிட்டு, பூட்டை இழுத்துப் பார்த்துக்கொள்கிறார் எச்சரிக்கையாக...

கடல்கரை வளாகம். நல்ல காற்றுப் போக்கான இடம். டூரிஸ்டுகள் வந்துபோகும் இடம். வெளியூர் ஆட்களும் நிறையப்பேர் சர்ச் வந்து போகிறார்கள். உள்ளூர்க்காரர்களையும் ஆகவே அந்த வளாகம் கவர்வதாய் இருந்தது. தினசரி திருவிழா என்கிற அளவில் கவனஈர்ப்பு செய்வதான கோவில் அது.

அருமையான சிற்பம் அது. பெரிய பீடம் நடுவில். அதற்குப் பின்னால் உயர உயரமான சிலுவையில் மிகக் கருணை கொண்ட கண்களுடன் சாந்தமான அமைதியான மூர்த்தி. யேசுபிரானின் அந்த எளிமை எல்லாரையும் கவர்வதாய் இருந்தது. அவரது எளிமையான தோற்றத்துக்கே ஜனங்கள் மனம் பறி கொடுத்து அவரிடம் பிரார்த்திக்க வந்தார்கள் என்றால், அந்த சந்நிதியை வைத்து பெரும் துட்டு கொழித்தவர்கள் எத்தனையோ பேர்!

>>> 

சனிக்கிழமை தோறும் தொடர்கிறேன்

storysankar@gmail.om

91 97899 87842 / 94450 16842

Comments

Popular posts from this blog