Wednesday, November 3, 2021

 அமுதசுரபி தீபாவளி மலர் 2021

அலையுறக்கம்

எஸ்.சங்கரநாராயணன்

 வர் பெயர் ரத்தின சபாபதி. அவர் பெயர் அவருக்குத் தெரியாது. அதாவது தன் பெயரையே அவர் மறந்து போயிருந்தார். பெயர் என்று இல்லை. அவருக்கு என்னதான் நினைவில் இருந்தது? யாருக்குமே அதைக் கண்டுபிடிக்கத் தெரியவில்லை. மனைவி சாமுண்டீஸ்வரி. அவள் முகம் அவருக்குத் தெரிந்திருக்கலாம். பெரிதாய் அதைத் தாண்டி அவளுக்கு அவர் மனதில் அடையாளங்கள் இல்லை. அறிவு தாண்டி, பிடரிப் பக்கம் இருக்கும் சிறுமூளை, முகுளத்தின் இயக்கம் மாத்திரம் அவரிடம் செயல் பட்டதா ஒருவேளை?

மனதையே தொலைத்து விட்டாரோ அவர்?

பள்ளி வயதில் ஒரு சிறுகதை வாசித்திருக்கலாம். ஒரு ஈ, அதற்குத் தன் பெயரே மறந்து விடும். அது ஒரு கன்றுக் குட்டியிடம் போய், தன் பெயர் என்ன என்று கேட்கும்… கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, தாயை வளர்த்த ஆயா.. இப்படி ஒவ்வொருத்தரிடமாக அந்த ஈ, தன் பெயர் என்ன, என்று கேட்டுத் திரியும். கடைசியில் ஒரு கழுதைதான் அதைப் பார்த்து ஈஈஈ… என்று இளிக்கும். உடனே அதற்கு தன் பெயர் ஞாபகத்துக்கு வந்துவிடும், என்று கதை. அந்தக் கதையை ரத்தின சபாபதியும் பள்ளி வயதில் அறிந்திருப்பார். இப்போது அவருக்கே அவர் பெயர் உட்பட எதுவுமே நினைவில் இல்லாமல் ஆகிவிட்டது.

அவர் உயிர் மாத்திரம் மிச்சமாய் இருந்தார். சிரிப்பு இல்லை அவரிடம். அழுகையும் இல்லை. எப்படியோ இந்திரியங்கள் வேலை செய்கின்றன. வேளைக்குச் சாப்பிட வேண்டும் என்று கூடத் தெரியாது. பசிக்குமா? ஆனால் அதைச் சொல்லத் தெரியாது. வார்த்தைகள் இறந்து போயிருந்தன அவரிடம். வாய், பேச அல்ல. உணவு உண்ண மாத்திரமே.

மகா அமைதி ஓர் இருட்டைப் போல அவருள் கவிந்திருந்தது. மனம் குகையாகி, சூனியமாகி விட்டது. அதில் எண்ணவோட்டங்கள் இல்லை. அசைவுகளே, சலனங்களே இல்லை. உணர்வுகளே இல்லை. எப்படி இப்படி ஆயிற்று? வயதாகிப் போனால் மூளையும் தளர்ந்து விடுமா? பெரிதான எந்த உணர்ச்சிகளும் மழுங்கி, இல்லாமல் போய் விடுமா? மூளை கூட ஓய்வை விரும்பி இப்படிச் செய்து விடுகிறதா?

அவரது பேட்டரி ஃபியூஸ் போய்விட்டதா?

ஆனால் ஏனோ பிடிவாதமாய் விழித்திருந்தார். ஏன் தெரியவில்லை. “படுங்க” என்றால் படுத்துக் கொள்வார். “கண்ணை மூடிக்கங்க” என்றால் மூடிக் கொள்வார். ஆனால் தூங்க மாட்டார். தானறியாமல் அவர் தூங்கினால் உண்டு. எப்போது தூங்குவார். எப்போது விழித்துக் கொள்வார், யாருக்குமே தெரியாது. அவருக்கே தெரியாது. அவள் பக்கத்தில் படுத்திருப்பார். திடீரென்று பதட்டத்துடன் எழுந்து உட்கார்வார். மூச்சிரைக்கும். என்ன, என்று கேட்டால் சொல்லத் தெரியாது. மனவெளியில் தேங்காய் விழுந்திருக்குமோ? “பேசாம படுத்துக்கோங்க” என்று சொல்வாள் சாமுண்டீஸ்வரி. திரும்ப அவள் அருகில் அவளை ஒட்டிக்கொண்டு படுத்துக் கொள்வார்.

காலைக் கடன்கள் தன் பாட்டில் பார்த்துக் கொள்கிறார் என்பது சிறு ஆறுதல்.  அலுவலகம் போகுமுன் அவரைப் பையன்தான் குளிப்பாட்டி விட வேண்டும். காபியோ, டிபனோ கூப்பிட்டு கையில் தர வேண்டும். வந்து நின்று கேட்கத் தெரியாது. பசிக்கிறதா, என்று கேட்டால் சொல்லத் தெரியாது. “சாப்பிட்டுருங்க” என்று இட்லி சட்னியுடன் தட்டைக் கையில் தர வேண்டும். சாப்பிடுவார். பிறகு “தட்டை சிங்க்ல போட்ருங்க.” போய்ப் போடுவார். “கையலம்புங்க. வாயைக் கொப்பளிக்க வேணாமா?” என்று கட்டளைகள் தந்தால் அவர் கீழ்ப் படிந்தார்.

எந்தச் செயலையும் அவர் செய்ய யாராவது சொல்ல வேண்டி யிருந்தது. வராந்தாவில் படிந்த நிழல் போல அவர் உள்ளம் காலியாய் வெறுமையாய்க் கிடந்தது. ஆனால் புலன்கள் வேலை செய்யாமல் இல்லை, என்றுதான் சொல்ல வேண்டும். உடம்பில் வலி தெரிகிறது. காது கேட்கிறது. கண் பார்க்கிறது. வாசலில் போஸ்ட்மேன் சைக்கிள் மணி அடித்தால் திரும்பிப் பார்க்கிறார். எழுந்து போய்த் தபாலை வாங்கி வருகிறார். ஆனால் தபால் வாங்கத்தான் போகிறரா என்று பார்த்துக் கொள்ள வேண்டி யிருந்தது.

வாசல் கதவைத் தாளிட்டால் போதாது. பூட்டு போட்டு எப்போதும் பூட்டி வைக்க வேண்டி யிருந்தது. அவர் யோசனையில் என்ன இருந்ததோ இல்லையோ. வாசல் கதவு திறந்திருக்கிறதா என்று உஷாராய்ப் பார்த்தபடி இருந்தார் அவர். அது ஏன், யாருக்கும் புரியவில்லை. வீடு அவருக்குச் சிறை போல இருந்ததா? இங்கே எல்லாரும் அவரைக் கட்டுப் படுத்தினார்களா? அப்படி அவர் உணர்ந்தாரா என்ன?

பிள்ளை ராமசுப்பிரமணியன் அவரை மரியாதைக் குறைவாய் நடத்தியதே இல்லை. அப்பாவுக்கு ஞாபகம் பிசக ஆரம்பித்த நாளில் இருந்து, அவன் அலுவலகம் போகு முன்னால் அம்மாவிடம், “அப்பாவைப் பார்த்துக்க அம்மா. அலட்சியமா இருந்திறாதே. வெளிய விட்றாதே” என்றெல்லாம் எச்சரிக்கை செய்து விட்டுத்தான் கிளம்பினான். கையில் சாப்பாடு கட்டி எடுத்துப் போகிற பிள்ளை. மதிய இடைவேளையில் வீட்டுக்கு அம்மாவின் அலைபேசியில் பேசுவான். தவறாமல் “அப்பா சாப்பிட்டாரா?” என்று அக்கறையாய் விசாரிப்பான்.

மருத்துவரிடம் காட்டியாயிற்று. அவரும் கொஞ்ச காலம் மருந்து என்று தந்தார். எதுவும் பலிக்கவில்லை. கடைசியில்  “இதை ஒண்ணும் செய்ய முடியாது. அவருக்கு வேற தொந்தரவு எதுவும் இல்லை இல்லையா? அதை நினைச்சி சந்தோஷப் பட்டுக்கங்க” என்று சொல்கிறார். ஒரு வகையில் அப்படித்தான் சமாதானப் படுத்திக்கொள்ள வேண்டும் போலிருந்தது.

வாசலில் காய்கறி வந்திருந்தது. உள்ளே பார்த்தபடியே சாமுண்டி கதவைத் திறந்தாள். படுத்திருந்தார் அவர். காய்கறிக்காரி கொஞ்சம் பேச்சு சுவாரஸ்யம் உள்ளவள். எதையும் விஸ்தாரமாய் நீட்டி முழக்கிப் பேச வேண்டும் அவளுக்கு. சில பேர் காபி குடித்தால் டபாராவையும் தம்ளரையும் விலக்கி உயரத்தில் இருந்து காபியை ஊற்றி ஆத்தி அப்புறம் குடிப்பார்கள். அதைப் போல. ‘‘நேத்து பூரா எங்க வூட்டுக்காருக்கு ஜுரம்” என்று எதாவது அவளுக்குப் பேச கிடைத்துக் கொண்டே யிருந்தது. சாமுண்டி தலையாட்டி கேட்டுக் கொண்டே யிருக்க வேண்டும். வாசலில் அவள் குரலைக் கேட்டுவிட்டு அப்படியே வந்து கதவைத் திறந்திருந்தாள் மாமி. தேவைப்பட்ட காய்கறியைப் பேரம் பேசி வாங்கி, பணம் எடுக்க உள்ளே போனாள்.

திரும்பி வந்து, பர்சை எடுத்துக் கொண்டு, சில்லரைகளைச் சரியார்த்து எண்ணி, அவளிடம் தந்துவிட்டு திரும்ப கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளே வந்தவள் சுதாரித்து உள்ளறையைப் பார்த்தாள். மின்விசிறி மாத்திரம் ஓடிக் கொண்டிருந்தது. அவர் இல்லை. அட. ஒரு நிமிஷம். அதுக்குள்ள காக்கா ஓஷ்..ன்றாப் போல. அவர் மறைந்து விட்டார். இவருக்கு இதே வேலையாப் போச்சு, என்றபடி குளியல் அறைப் பக்கம் தேடினாள். கதவு வெளியே தான் தாள் போட்டிருந்தது. அதை அவர் திறந்திருக்க வாய்ப்பு இல்லை.

ஒரு செகண்டு போதும் அவருக்கு. தூங்கறாப் போல படுத்திட்டிருந்திருக்கார். நான் உள்ள வந்த நேரம் பார்த்து நழுவிட்டார். இனி அவரை எங்கயாவது போய்த் தேடி கண்டு பிடித்துக் கூட்டிவர வேண்டி யிருக்கும். சம்பவாமி யுகே யுகே... மாமி பெருமூச்சு விட்டாள்.

•••

வண்டியில் இருந்து கட்டவிழ்த்துக் கொண்ட காளை மாட்டைப் போல விறுவிறுவென்று உற்சாக நடையிட்டார் ரத்தின சபாபதி. வாசல் கதவு திறந்து கிடந்தாலே அவருக்கு உடனே வெளியே இறங்க என்று ஒரு அவசரம், ஒண்ணுக்கு போல முட்டி விடுகிறது. ஒண்ணுக்கு வந்தால் பாத்ரூம் போக வேண்டும். இவர் எங்கே போகிறார், தெரியாது. வெளியே அவருக்கு என்ன வேலை?  ஒரு வேலையும் கிடையாது.

ஆனால் இந்த வெளி, அதன் பிரம்மாண்டம், சுதந்திரக் காற்று அவரைப் பரவசப் படுத்தி யிருக்க வேண்டும். தெருவில் யாரையும் அவருக்கு அடையாளம் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தாலும் அவருக்கு அவர்களைத் தெரியாது. அவரிடம் யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் அடையாளங்கள் இல்லை.

ரத்தின சபாபதி விறுவிறுவென்று நடந்து போய்க் கொண்டிருந்தார். யாரும் பின்னால் தேடி வந்து விடுவார்களோ, இதோ தன்னைக் கூப்பிட்டு விடுவார்களோ என்கிற பயம் மாத்திரம் இருந்தது அவரிடம். நேர் ரோட்டில் போனவர் அங்கே தெருவோரம் படுத்திருக்கிற நாயைப் பார்த்தார். அவருக்கு பயமாய் இருந்தது. நாய்கள் உக்கிரமானவை. உர்ர் என அவை மெல்ல கோபத்துக்கு சுருதி சேர்க்கின்றன. அவற்றின் கண்களுக்கு ‘சூம் இன்’ ஆகிறாற் போல நாம் அவற்றை கிட்டே நெருங்க நெருங்க அவை சுருதி பெருக்கி மைக் ஆன் செய்தாற் போல ஆவேசம் பெறுகின்றன. நாய் துரத்தினால் அவருக்கு ஓடக் கூட தெரியாது. கடகடவென்று எந்தக் காரியமும் ஆற்ற அவர் லாயக் இல்லை. சும்மா இருக்கையில் வேகாக நடப்பார். வேகமாக நடக்கச் சொன்னால் நின்று விடுவார் திகைத்து.

கண்மூடிக் கிடந்தது நாய். மெல்ல அடிமேல் அடி வைத்து பூமிக்கே தெரியாமல் தெருவின் மறு பக்கம் நடந்தார். நெஞ்சு படபடத்தது. நாய் சட்டென தலை தூக்கி யிருந்தால் பொத்தென அங்கேயே விழுந்திருப்பார். அந்த பயத்துக்கு கடவுளிடம் பிரார்த்தனை செய்யக் கூட அவருக்குத் தெரியாது.

நாயைத் தாண்டிவிட்டதை அறிந்ததும் திரும்ப பாதுகாப்பாக உணர்ந்தார். அடுத்த சந்தில் டிரான்ஸ்பாரம் இருந்தது. அந்தப் பக்கமாகத் திரும்பி விட்டார். நாயைப் போல அந்த டிரான்ஸ்பாரமும் உர்ர் என்று உருமிக் கொண்டிருந்தது. ஆனால் அதற்கு அவர் பயப்படத் தேவை இல்லை. நல்ல வெயில். அவர் கிளம்பிய அவசரத்துக்குக் காலில் செருப்பு அணிந்துகொண்டு வரவில்லை. செருப்பு அவர் நினைவிலேயே இல்லை. பாதம் சுட்டது. ஸ் ஸ், என காலை எட்டு வைத்து நடந்தார். சிறு நிழல் கண்டால் ஆசுவாசம் வந்தது. ஆனால் நிற்காமல் தொடர்ந்து நடந்தார்.

மேல் சட்டையும் இல்லை. கையில் பணமுங் கிடையாது. பணம் இருந்தாலும் செலவு பண்ணத் தெரியாது. தனக்கு இது வேண்டும், என்று சொல்லத் தெரியாது. எந்த உத்தேசமும் அற்ற நடை. லேசான காற்று அவரது மார்பு முடிகளைச் சிலிர்க்க வைத்தது. எத்தனை தூரம் இப்படியே போகப் போகிறார் அவருக்கே தெரியாது. எந்தத் தெருவில் இறங்கி வந்தார், அவர் வசிக்கும் தெரு என்ன, எந்த நினைவும் அவரிடம் கிடையாது. அவருக்கு திரும்ப தன் வீட்டுக்குப் போக வழி தெரியாது. நம் வீட்டுக்கு இப்போது இடப்புறம் திரும்பிப் போக வேண்டுமா, வலப்புறமா எதுவுமே அவர் மனக் குறிப்பில் இல்லை.

திடீரென்று அப்படியே நின்றார். கால் சுட்டது. அவருக்குத் திகைப்பாகி விட்டது. நான் என்ன செய்கிறேன்? எங்கே போகிறேன்? ஏன் வீட்டை விட்டு வெளியேறினேன்? இப்படி யெல்லாம் யோசித்தார் என்பது அல்ல. அவர் கேள்விகள் அற்ற திகைப்புடன் இருந்தார். ஆனால் தான் பாதுகாப்பு அற்று இருப்பது போலத் தோன்றியது. சிறு பயம் வந்தது.

எதோ தர்காவில் இருந்து அந்நேரம் துஆ ஓதுவது சத்தமாய்க் கேட்டது. திடீரென்று பெருஞ் சத்தமாய் அது கேட்டபோது துணுக்குற்றார். சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தார். மசூதியை நோக்கி நடந்து போனார். சத்தம் வராமல் இருந்திருந்தால் அவர் அந்தப் பக்கம் போயிருக்க மாட்டார்.

“சாமி என்ன இங்க வந்திருக்கீங்க?” என்று ஒரு பாய் அவரைக் கேட்டார். தாடி வைத்த பாய். ஹஜ் போய் வந்திருப்பார் போல. ரத்தின சபாபதி பதில் பேசாமல் நின்றார். “எதுவும் திங்க வேணுமா?” என்று கேட்டார் அந்த பாய். அதற்கும் அவர் பேசாமல் நின்றபடி அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். “சாமி வூட்டுக்குப் போங்க“ என்று அவர் கைகாட்டினார். அவர் கை வலது பக்கம் காட்டியது.

ரத்தின சபாபதி வலது தெருவில் நடக்கத் துவங்கினார். வலது தெருவில் போனால் தன் வீடு வந்துவிடும் என நம்பினாரா அவர்? சின்னச் சின்னத் தெருக்கள் தாண்டி இப்போது பெரிய சாலை வந்துவிட்டது. சின்னத் தெருவிலேயே அவரை யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத பட்சம் பிரதான சாலையில் அத்தனை கூட்டத்தின் நடுவே யார் அவரைக் கண்டுகொள்ளப் போகிறார்கள்.

இடதும் வலதுமாக சைக்கிள்கள், கார்கள் என்று சாலை பரபரப்பாய் இருந்தது. நடைபாதையிலேயே நிறையக் கடைகள் இருந்தன. அதனால் மக்கள் நடைபாதையை விட்டு நடுத் தெருவில் இடித்தபடி நடந்து போய்க் கொண்டிருந்தார்ள். சாமான் வாங்கிய கனமான பைகளுடன் முகத்தில் அந்த பாரத்தின் இறுக்கத்துடன் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அந்தப் பரபரப்பும் அத்தனை கூட்டமும் அவருக்கு வேண்டி யிருந்திருக்கலாம். தனியே நடந்து போவதற்கு இது எத்தனையோ பரவாயில்லை, என அவர் நினைத்திருக்கலாம். அல்லது தன் வீட்டை எப்படியும் அடைந்தே தீர வேண்டும். நாம இப்பிடி கிளம்பி வந்தது தவறு என்கிற பயம் அவரை முட்டித் தள்ளி யிருக்கலாம். அவர் நடையில் வேகம் இருந்தது.

அடிக்கொரு தரம் பயம் எதாவது ஒரு ரூபத்தில் அவரைத் திகைக்க வைத்தது.

மேல் சட்டை இல்லாத உடம்பு சுட்டது. வியர்க்க ஆரம்பித்து விட்டது. இருந்த நடை வேகத்துக்கு மூச்சு திணற ஆரம்பித்து விட்டது. ஏன் இத்தனை வேகம், அவருக்கே தெரியாது. இன்னும் எத்தனை தூரம் நடக்க வேண்டும் தெரியவில்லை. வீடு வந்து விட்டால் நல்லது. ஆனால் வீடு எங்கே யிருக்கிறது? எப்படியும் வீட்டைத் திரும்பப் போய் எட்டிவிட வேண்டும். என் வீடு எங்கே, என்று யாரைக் கேட்பது? எப்படிக் கேட்பது?

மருட்சி மாத்திரமே அவரிடம் இருந்தது.

கால் வலிக்கிறாற் போல இருந்தது. சுற்றிலும் ஜனங்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். இதில் எங்கே உட்கார்வது? அந்தப் பிரதான சாலையில் மரங்களே இல்லை. எங்காவது பெரிய கட்டடம் அமைந்து அங்கே நிழல் இருந்தால் அந்த நிழலில் சிறு வியாபாரிள் கடை போட்டிருந்தார்கள். அல்லது அந்த நிழலில் வாசனங்ளை நிறுத்தி யிருந்தார்கள். இன்னும் சிறிது போனால் சம்பிரமமாய் மாடு ஒன்று உட்கார்ந்திருந்தது. அவர் அடைய நிழலே இல்லை.

கால் சுட்டது. இருந்த வெயிலுக்கு சட்டை இல்லாத உடம்பே சுட்டது. மண்டை கொதித்தது. திடீரென்று அவர் வாழ்க்கை துன்ப மயமாகி விட்டது. பெரும் பயமும் திகைப்பும் அவரை ஆட்கொண்டன. என்றாலும் அவர் நடையை நிறுத்தவில்லை. இப்படி எத்தனை நேரம், எவ்வளவு தூரம் நடந்து கொண்டே இருக்க முடியும் தெரியவில்லை. சிறு நிழல் இருந்தால் அவர் அப்படியே படுத்து விடவும் கூடும். தாகமாய் இருந்தது. அது அவரது சங்கடத்தை இன்னும் அதிகப் படுத்தியது. ஹா, என வாயைத் திறந்து மூச்சு விட்டார்.

•••

சாமுண்டிக்கு அவர் எங்கே போனார் என்று கண்டுபிடிக்க முடியவிலலை. அதே தெருவில் ருக்மணி மாமி வீட்டு வாசலில் தபால் பெட்டி உண்டு. சிவப்பு சட்டென மனசில் தட்டும் நிறம். அதனால் பெரும்பாலும் மாமி வீட்டைத் தாண்டும்போது தபால் பெட்டியை ரத்தின சபாபதி பார்த்துவிட்டு அந்த வீட்டை ஒட்டிய தெருவில் திரும்புவார்.

வீட்டில்தானே, என்று சாமுண்டி நைட்டி அணிந்திருந்தாள். இவரைக் காணவில்லை என்றதும் சட்டென வெளியே இறங்கி யிருந்தால் அவரை எட்டிப் பிடித்திருக்க முடியும். மாமி அவசர அவசரமாக நைட்டியில் இருந்து புடவையை மாற்றிக் கொண்டு, நெற்றிக்கு இட்டுக் கொண்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே கிளம்புமுன் ரத்தின சபாபதி பக்கத்து வேறு சந்து வழியே திரும்பி யிருக்க வேண்டும். நெடிய சாலை காலியாய் கிடந்தது. ஈஸ்வரா, இப்போது என்ன செய்ய? இவரை எங்கே யென்று தேட புரியவில்லை.

அவருக்கே தன்னைப் போல வழி விசாரித்துக் கொண்டு வீடு வரத் தெரியாது. எங்காவது மலங்க மலங்க முழித்துக் கொண்டு நிற்பார். தெரிந்தவர் யாராவது கண்ணில் பட்டால் பிறகு அவரைக் கையைப் பிடித்து வீட்டில் கொண்டு வந்து விடுவார்கள். தெரியாதவர்களிடம் அவர் உதவி பெற முடியாது. ஓரு முறை அவர் காணாமல் போய் வீடு திரும்ப ஏழெட்டு மணி நேரம் ஆகி விட்டது. பசி வயிற்றைக் கிள்ளி யிருக்கும் பாவம். ராமசுப்பிரமணியன் அலுவலகம் விட்டு வந்து, பின் அவனும் அவனது சகாக்கள் இரண்டு மூன்று பேருமாய் ஆளுக்கு ஒரு திக்கில் பிரிந்து தேடி ஒரு பஸ் நிறுத்தத்தில் அவர் உட்கார்ந்திருப்பதைக் கண்டுபிடித்து கூட்டி வந்தார்கள். அன்றைக்கு சாமுண்டி அவரைத் திட்ட ஆரம்பிக்கு முன், “அம்மா முதல்ல அவருக்கு சாதம் போடு. அவர் சாப்பிட்டு எத்தனை நாழி ஆயிட்டது” என்று மகன் நினைவு படுத்தினான். அவசர அவசரமாக அவர் சாப்பிடுவதைப் பார்த்து அழுதான் அவன்.

எத்தனை ஜாக்கிரதையாக இருந்தாலும் நாலு நாளைக்கு ஒரு தரம் அவருக்கு எப்படியோ கதவு திறந்திருப்பது தெரிந்து விடுகிறது. அது திறந்திருப்பதைப் பார்த்த ஜோரில் சவாரி விட அவருக்கு ஒரு பதட்டம் எப்படியோ வந்து விடுகிறது. அப்படி வெளியே என்னத்தைப் பார்த்து சுவாரஸ்யப் படுகிறாரோ தெரியவில்லை. அவர் சட்டைப் பையில் முகவரியோ, அலைபேசி எண்ணோ இருந்தாலாவது யார் பார்த்தாலும் தகவல் சொல்ல முடியும். எந்த சுய அடையாளங்ளும் இல்லாமல் தெருவோடு அதுவும் யாரிடமும் பேசாமல் போகிற நபரிடம் யார் என்ன கேட்பார்கள்?

•••

தெருவில் அவரை ஒருவன் வழி மறித்தான். “சாமி நீங்க இந்த ஏரியாதானா?” அவர் சட்டை யில்லாமல் இருந்ததால் அவனுக்கு அப்படியொரு நம்பிக்கை. அவர் பதில் சொல்லாமல் அவனையே பார்த்தார். “இந்த அட்ரஸ் எங்க இருக்கு சாமி?” என்று அவரிடம் ஒரு காகிதத்தை நீட்டினான் அவன். அவர் அவனுக்கு என்ன பதில் தர முடியும் தெரியவில்லை. “சாமிக்கு எழுதப் படிக்கத் தெரியாதா?” என்றபடி அவன் அவரைக் கடந்து போனான்.

இனியும் நடக்க முடியும் என்று தெம்பே இல்லை அவருக்கு. ரொம்ப தூரம் வந்திருப்பார் போல இருந்தது. அவர் வீடு எங்கே என்றே குழப்பமாய் இருந்தது. அவரிடம் அடையாளங்ளும் இல்லை. வார்த்தைளும் இல்லை. திடுதிப்பென்று அவர் நின்றார். அவர் தாண்டிச் செல்ல முடியாதபடி அந்தச் சந்தையில் சினை மாடு ஒன்று பெரு வயிறுடன் மறைத்து நின்றிருந்தது. சட்டென கொம்பு சிலுப்பி அவரை ஒரே முட்டு முட்டினால்… என அவருக்கு பயமாய் இருந்தது.

தெருவைப் பார்த்தால் தெருவை அடைத்துக் கொண்டு வாகனங்கள் சர்ர் சர்ரென்று விரைகின்றன. இப்போது என்ன செய்வது? மாட்டை எப்படித் தாண்டிப் போவது? அது சாத்தியமாகப் படவில்லை. சட்டென அந்த வாகன நெரிசலுக்கு ஊடே நீச்சல் அடிப்பது போல பாய்ந்தார் அவர். கிரீச் கிரீச்சென பிரேக்குகள் பிடித்த சத்தம். ஒரு இரு சக்கர வாகனம் அவரை மோதி முட்டித் தள்ளியது. பயத்துடன் அப்படியே நடுத் தெருவில் விழுந்தார். பயத்தில் அவரிடம் இருந்து எந்த சப்தமும் எழவில்லை. உடம்பு  கிடுகிடுவென்று நடுங்கியது. விழுந்த வேகத்தில் வேட்டி விலகி தொடைப் பக்கமெல்லாம் சூரியன் சுட்டது. அப்படியே எழுந்து நின்றார். அந்த வரிசையில் எல்லா வாகனங்ளும் நின்று விட்டன. அதைப் பார்த்தார். திடீரென்று அதைப் பயன்படுத்தி அவர் சாலையைக் கடந்து எதிர்ச் சாரிக்கு ஓடினார். தன்மீது மோதிய வாகனத்தைக் கூட அவர் பார்க்கவில்லை.

திரும்ப வாகனங்கள் நகர ஆரம்பித்தன. வாகனத்தின் எதோ பகுதி இடித்து அவரது முழங்கைப் பக்கம் சிராய்ப்பு கண்டு காயத்தில் இருந்து இரத்தம் வழிந்தது. அது அவருக்குத் தெரியாது. “சாமி என்ன காரியம் பண்ணிட்டீங்க?” என்று எதிர்ச் சாரியில் நுங்கு விற்றுக் கொண்டிருந்த பெண் ஒருத்தி எழுந்து வந்து அவர் கையைப் பிடித்து ஓரம் நகர்த்தினாள். “ஐயோ கைல ரத்தம்… படுபாவிப் பய இடிச்சிட்டானா?” என்றாள். தன் சேலையைக் கிழித்து அவருக்குக் காயம் துடைத்து கட்டு போட்டாள். அவர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“எங்க சாமி வந்தீங்க?” என்று கேட்டாள் அவள். “யார் வூட்டு சாமியோ தெரியலயே?” என்றபடி அவள் அவரைப் பார்த்து “பதிநி குடிக்கறீங்களா?” என்று கேட்டாள். உண்மையில் அவரும் அந்த வெயிலுக்கு அந்த உபசரிப்பு தேவை என  உணர்ந்திருக்கலாம். ஒரு பனையோலையைக் குழிததுக் கட்டி அதில் பதனீர் ஊற்றி அவரிடம் நீட்டினாள். அவர் சட்டையே அணிந்திருக்கவில்லை. அவரிடம் பணம் இல்லை, என்று அவளுக்குத் தெரியும்.

பக்கத்து வீட்டுப் பிள்ளை ராகவன், காலையில் பரிட்சை அவனுக்கு. பள்ளிக்கூடம் அவனுக்கு அன்றைக்குப் பாதிநாள் தான். பள்ளி விட்டு ஆட்டோவில் அவன் திரும்பி வந்து கொண்டிருந்தவன், எதிர்ச்சாரியில் ரத்தின சபாபதியைப் பார்த்தான். “அன்க்கிள் வண்டியை நிறுத்துங்க” என்று கத்தி நிறுத்தச் சொன்னான். ஆட்டோவை நிறுத்தி விட்டு, தெருவைக் கடந்து ஓடிவந்தான்.

“தாத்தா, என்ன இங்க நிக்கறீங்க?” அவர் பையனைப் பார்த்தபடி நின்றார். அவனை அவர் அடையாளம் கண்டு கொண்டாரா தெரியவில்லை. ஆனால் இந்நேரம் அவர் சோர்வா யிருந்தார். “எங்களுக்குத் தெரிஞ்ச தாத்தாதான்” என்று ராகவன் நுங்குக்காரியிடம் சொன்னான். “தம்பி உனக்கு இவங்க வீடு தெரியுமா?” என்று கேட்டாள் அவள். “தெரியும்” என்று தலையாட்டினான் ராகவன். “தாத்தா, வாங்க நம்ம வீட்டுக்குப் போகலாம்…” என்று அவர் கையைப் பிடித்து இழுத்தான். அதற்கே காத்திருந்தாப் போல சமத்தாக சொன்னபடி கேட்டார் அவர்.

ஆட்டோவில் அவரையும் ஏற்றிக் கொண்டார்கள்.

வீடு பூட்டி யிருந்தது. சாமுண்டி வர அவர்கள் காத்திருந்தார்கள். மாமி ஐந்தாறு நிமிடங்ளில் அங்கே வந்து சேர்ந்தாள். தூரத்திலேயே அவர்கள் காத்திருப்பது தெரிந்தது. மாமி விறுவிறுவென்று வந்து கதவைத் திறந்தாள். “இவரை எங்கடா கண்டு பிடிச்சே? ரொம்ப தேங்ஸ்டா. நீ நன்னா யிருக்கணும்…” என்றபடியே மாமி கதவைத் திறந்தாள். “நான் ஊர் முழுக்க தேடிட்டு வரேன்…” என்றாள்.

“வரேன் மாமி” என்று ராகவன் தன் வீட்டுக்குப் போய் இறங்கிக் கொண்டான்.

எதுவுமே நடக்காத மாதிரி ரத்தின சபாபதி உள்ளே வந்து தன் அறைக்குப் போய்ப் படுத்துக் கொண்டார். உள்ளே வந்தாள் மாமி. அவர் கைக் கட்டைப் பார்த்துவிட்டு “ஐயோ என்னாச்சி உங்களுக்கு?” என்று பதறினாள். அவர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். “நன்னா பட்ருக்கு. வெளிய போகாதீங்கன்னா கேட்டாதானே?... செப்டிக் ஆகாம இருக்கணுமே ஈஸ்வரா” என முனகினாள் மாமி. “இருங்க, வெந்நீர் வெச்சி துடைச்சி விடறேன்” என வெந்நீர் போட உள்ளே போனாள்.

மாமி கவனிக்கவில்லை. வாசல் கதவு திறந்திருந்தது.

மாமி ஒரு பாத்திரத்தில் வெந்நீர், ஈரத்துணி மற்றும் டெட்டாலுடன் வந்தபோது ரத்தின சபாபதி அறையில் இல்லை.

(அமுதசுரபி தீபாவளி மலர் 2021)