Posts

Showing posts from September, 2020
Image
  2006ம் ஆண்டின் சிறந்த நாவல் - தமிழக அரசு பரிசுபெற்றது   நீர்வலை எஸ். சங்கரநாராயணன் 2 கி ருட்டினமணிக்கு ராப்பயணத்தில் பாட்டு கேட்டுக் கொண்டே போவது பிடிக்கும். பழம் பாடல்களின் ரசிகன் அவன். சில சமயம் கூடவே பாடவும் செய்வான். பழம் பாடல்களில் செக்ஸ் இலைமறை காய்மறை என இருந்தது. வெகுஜன ஈர்ப்புக்கு அவை தேவை என வைத்தார்கள் போலும். ஆனால் அதைமீறிய சுவை அதில் காணக் கிடைக்கும். வார்த்தை எளிமையும் அதை குரல்தெளிவுடன், கேட்கிற அளவில் பாடும் பாடகர்களும். எளிய வாத்திய இசை. இப்ப மாடிப்படியில் இருந்து உருண்டு விழுந்தாற்போல எல்லாம் சத்தங்கள் பாடல்களில் வருகின்றன. தமிழ் உச்சரிக்க வராத ஆட்கள் நிறைய பாட வந்துவிட்டார்கள். தமிழே தெரியாத பாடகர்கள் நடிகர்கள் எல்லாம் வந் து விட்டார்கள். பார்வையற்ற காமெராமேன் கூட வரக்கூடும்! பையனுக்கு நம்ப முடியவில்லை. திடுதிப்பென்று அவன் கேட்டது.... எந்த ஊர் தெரியாது. கூட வரியா, என்று கேட்டான். இவன் யாரைக் கேட்க வேண்டும்... ம், என்று தலையாட்டினான். எதிர்பாராத கேள்வி... திக்குமுக்காடிப் போனது. டிரைவரை நம்பலாம் போலிருந்தது. அந்த சிநேகத்தில் சிரிப்பில் நம்பிக்கை வந்தது.
Image
  2006 தமிழக அரசு பரிசு பெற்ற ஆண்டின் சிறந்த நாவல்   நீ ர் வ லை எஸ்.சங்கரநாராயணன்     சமர்ப்பணம் ஓல்ட் மேன் அன் தி சீ - எழுதிய எர்னெஸ்ட் ஹெமிங்வேக்கு     1   வா லாந்துறைப் பக்கம் சரக்கு எடுக்க வந்திருந்தான் கிருட்டினமணி. வாழை வெட்டும் சீஸன். ராத்திரியே போய் லாரியை நிப்பாட்டிறணும். தார் தாராய் லோடு ஏத்தி நிறைக்க எப்பிடியும் பின்னேரம் கண்டுவிடும். தும்பிக்கை தூக்கிய யானையாட்டம வாழைக்குலைகள். பள்ளியில், வாத்தியார் கேள்விக்கு, பதில்தெரிந்து கை தூக்கினாப் போல. ஸ்ட்ரைக் ஊர்வலத்தில், ஊழியர்களைப் போலிஸ்காவலுக்கு என லாரியில் ஏற்றிக் கொள்கிறாப் போல... இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கத்துடன் லாரியேறும் வாழைத்தார்கள்! தாருக்குப் புகைமூட்டம் போட்டு லேசாய்ப் பழுத்திருக்கும். திங்க முடியாது. பட்டணம், தூரதேசம் எனப் போகிற லோடு. நேரமாக ஆக புது வெயில் வந்தாப் போல ஒரு மினுங்கல் காணும். குளிக்கும் பொம்பளையாள் போல மஞ்சள் பரவும் பழங்கள். ரெண்டு நாளில் முழு வெயில் வந்த மாதிரி நிறமாற்றம். தேஜஸ். என்ன ஜோராய் இனித்துக் கிடக்கும். நாட்டுவாழை. கெட்டித்தோல் பழங்கள். கெட்டிக்காரக் கடைக்காரன்.
Image
  தோட்டா இல்லாத துப்பாக்கி எஸ்.சங்கரநாராயணன் *    இ க்காலங்களில் கிருஷ்ணசாமி திண்ணைக்கு மாற்றப் பட்டிருந்தார். நடமாட்டம் எல்லாம் ஓய்ந்து எல்லாமே படுக்கையில் என்றாகி விட்ட நிலைமை. வீட்டிற்குள் இப்படி நாற்றம் பிடித்த உடலை வைத்துக்கொள்ள எல்லாரும் முகஞ் சுளித்தார்கள். அது தாத்தாவின் வீடு. அவரே திண்ணை வைத்துக் கட்டியிருந்தார். அவரையே திண்ணையில் கொண்டுவந்து கிடத்தினார்கள். தினசரி காலையிலும் மாலையிலும் உதவியாள் ஒருத்தி வந்து அவரை சுத்தம் செய்துவிட்டுப்  போக ஏற்பாடு. குடிக்க தண்ணீர் என்று அவருக்கு தாகம் எடுத்தால் ஒரு கத்து, ஊளை போலிருக்கும். உள்ளே யிருந்து யாராவது மனசிருந்தால் வருவார்கள். வேண்டா வெறுப்பாக வாயில் ஊற்றுவார்கள். “ஹா” என மூச்சு விடுவார். பெரும் நாற்ற வியூகம் அது. “ஆரு? தேவகியா?” தேவகிதான் வரணுமா, என்று நொடிப்பு கேட்டால், யார் என்ற ஆராய்ச்சியை விட்டு விடுவார். “இப்ப மணியென்ன?” உமக்கு மணி தெரிஞ்சி என்னாவப் போவது? போயி எந்தக் கோட்டையப் பிடிக்கப் போறீரு?... என்று அந்த உருவம் எழுந்து போகும். அது மருமகள் குமுதா. தேவகி அவர் பெண். அவளுக்குக் கல்யாணம் கட்டிக் கொடுத்தாச்சி. அவ இங்க