ஆயுதம்

ஸ்.சங்கரநாராயணன்

 “ராத்திரி தனியா இருந்துக்குவியா இவளே?” என்று அவன் சாதாரணமாய்க் கேட்டான். சாதாரணமாய்த் தான் கேட்டானா, என்பதில் ஒரு யோசனை. ஏனென்றால் அவன் விருச்சிக ராசி. ரெண்டில் செவ்வாய். சட்டென அவன் பேச்சு ஆளைத் தூக்கி வீசிவிடும். “அட நான் சும்மா ஜாலியாச் சொன்னேன். என்ன இவ்ள சீரியசாயிட்டே?” என்று நம்மை சீரியசாக்கிவிட்டு அவன் சாதாரணமாகப் பேசுவான். அவனிடம் அஜாக்கிரதையாக இருக்க முடியாது. சட்டென முள் உரசி கீய்த்தாற் போல ஆகிவிடும்.

அவசர வேலை என்று அவன் அலுவலக விஷயமாகக் கிளம்ப வேண்டி யிருந்தது. மதுரை. அவன் கல்லூரி படித்த ஊர். மதுரை என்னும்போதே அவன் முகத்தில் புன்னகை மலர்வதை அவள் கண்டிருக்கிறாள். “உங்கவூருக்குக் கிளம்பியாச்சா?” என்றபடியே சித்ரா அவனுக்கு ஒரு துண்டை எடுத்துப் பெட்டியில் வைத்தாள். எதையும் கச்சிதமாக அடுக்கி எடுத்துப்போக அவனுக்குத் தெரியாது. தெரியாது என்று சொல்லமாட்டான். “நீ எவ்ள அழகா இதெல்லாம் பண்றே?” என்பான். நாம் துணிமணி எடுத்துவைக்க வேண்டும் என்று பொருள்.

பொதுவாக அவன் ஊருக்குக் கிளம்பிப் போக நேர்ந்தால் சித்ரா அம்மாவீட்டில் போய்ப் படுத்துக் கொள்வாள். அல்லது தம்பியைக் கூப்பிட்டுக் கொள்வாள். பயம் என்று இல்லை. பேச்சுத் துணைக்கு, கூட ஆளில்லாமல் தனிமை காப்பது ஏன் என்றிருந்தது. அம்மாவும் அவள் வந்ததில் சந்தோஷப் படுவாள். தம்பி எப்பவுமே அவளைக் கிண்டல் பண்ணிக் கொண்டே யிருப்பான். வயசு அப்படி. பிறரைச் சீண்டிச் சிரிக்கும் வயசு. “உன் வீட்டுக்காரர் வீட்ல இல்லைன்னா எங்க ஞாபகம் வந்திருது உனக்கு,” என்றுவிட்டு, அவள் தலைநிமிர்வதைப் பார்த்துவிட்டு “நல்ல விஷயம் தான்” என்று புன்னகைப்பான். ரமேஷ் என்ன, ரகுவரன் என்ன, ஆண்கள் எல்லாருக்குமே பெண்களைக் கலாய்ப்பதில் ஒரு சுகம்.

கிளம்பிப் போகுமுன் திரும்பத் தயங்கி நின்றான் ரகுவரன். “தனியா...” என்றவனை, “அதெல்லாம் இருந்துக்குவேன்” என முதுகைத் தள்ளி அனுப்பி வைத்தாள். நிஜமாகவே கவலைப் படுகிறான். அதை அப்படி நெட்டித் தள்ளியிருக்க வேண்டாம் என்று பிறகு தோன்றியது. தவிரவும் அவன் ஒரு முத்தங் கொடுக்கவோ, அல்லது பெற்றுக் கொள்ளவோ எதிர்பார்த்திருக்கவும் கூடும். எல்லாமே இப்போது நினைத்து என்ன செய்ய? பஸ் நிறுத்தம் வரை போயிருப்பான். கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தாள்.

கசகசவென்றிருந்தது. தனிமையான இரவு. அதனால் என்ன, என்று நினைத்துக் கொண்டாள். உள்ளாடையைக் கழற்றிப் போட்டாள். நைட்டி காற்றோட்டமாய் இருந்தது. ஒருமுறை குளித்துவிடலாமா? பெரும்பாலும் இரவில் இரண்டாங் குளியல் வாய்ப்பதே இல்லை. படுக்கையை நோக்கி ஒரு பேரலுப்பு அவளைத் தள்ளிவிடும். அலுவலகம் சார்ந்து மூளைக்குள் விவரங்கள் கனம் ஏறிக் கிடக்கும். உடல்ரீதியாகவும் அவள் அலுத்திருப்பாள். இரவில் சூடாகச் சாப்பிடலாம் என்று சிறு சமையல் வேலைகள் இருக்கும். ஒரு அலமாரியில் அடுக்கப் பட்ட புத்தகங்கள் போல நியதிகள் ஒழுங்காக ஒன்றன் பின் ஒன்றாக இருந்துகொண்டே யிருக்கின்றன. ஆசுவாசப்பட வாய்ப்பதே இல்லை பெண்களுக்கு. ஒருநாள் சீக்கிரம் வந்தால், இந்தப் படுக்கைவிரிப்புகளை வாஷிங்மிஷினில் போட்டு எடுக்கலாமா, ஸ்டூல் போட்டுக்கொண்டு மின்விசிறிகளை எட்டித் துடைக்கலாமா, என்று வேலைகள் சேர்ந்து கொள்கின்றன. ஓய்வு என்ற சொல்லுக்கு அர்த்தம் இல்லாமல் ஒரு வாழ்க்கை.

சட்டென்று விடுபட்டாப் போல இருந்தது இப்போது. வேலைகள் என்னும் அம்புகள் பூட்டிய வில் என இருந்த உடம்பை சற்று நெளித்து நிமிர்த்தி விரித்துத் தளர்த்திக் கொள்ள சிறு சந்தர்ப்பம். இதை அனுபவிக்கலாம். அப்பா அம்மாவும் அற்று, தம்பியும் அற்று, கணவனும் அற்று... நான் நானாக, என்று இதை அனுபவிக்கலாம். அப்படித்தானே இருந்தோம் கல்லூரிக் காலங்களில்? அந்தக் காலங்கள் ஒருபோதும் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. அடித்துப் போட்டாற் போல ஒரு தூக்கம். காலையில் அம்மாதான் எழுப்ப வேண்டும். ஒரு கவலை கிடையாது. ஆண்கள் ஓர் ஆர்வத்துடன் நப்பாசையுடன் பின்தொடரும் காலம். இளமை என்பது காந்தம் போல. ஆண்கள் என்ன, பெண்ணுக்குப் பெண்ணே ஓர் ஆச்சர்யம். சந்தோஷம் ஊற்று போல கொப்பளிக்கிறது. துள்ளித் திரிதல். இந்த உலகில் அனுபவிக்கப் பிறந்தவள் அவள். அப்பா ட்டூ வீலர் வாங்கிக் கொடுத்திருந்தார். சித்ரா அதில்தான் கல்லூரி போய்வருவாள். பாவனைகள் கொண்டாடும், ஒரு மிதக்கிற வாழ்க்கை. நன்றாகவும் படித்தாள். கல்லூரி முடிக்கு முன்னே வேலையும் அமைந்தது. தினசரி படுக்க அநேகமாக நள்ளிரவு ஆகிவிடும். அதுவரை என்ன வேலை செய்வாள்? கன கனமான புத்தகங்கள் வாசிப்பாள். அப்பாவுடன் செஸ் ஆடுவாள். அதற்காகத் தூக்கம் முழிப்பார்களா, என்று இருந்தது இப்போது. எப்படா படுக்கலாம் என்று முதுகு ஏங்கும் காலமாக அது மாறிவிட்டது, கல்யாணத்துக்குப் பிறகு.

எவ்வளவு மாறிப் போயிற்று என் உலகம்? அலாரம் இல்லாமல் அதிகாலை முழிப்பு வந்து விடுகிறது. காலை எழுந்து கொள்கிற போதே அடுத்து அடுத்து என்று வேலைகள் நினைவுக்கு வருகின்றன. கொடிகளில் காய்ந்து தொங்கும் உடைகளை எடுத்து மடித்து வைக்க வேண்டும். நேரம் இருந்தால் இஸ்திரி போட வேண்டும். பட்டு, பருத்திப் புடவைகள் தவிர மற்றதை அவளே அயர்ன் பண்ணிக் கொள்வாள். தெருவில் அயர்ன் வண்டிக்காரன் இருக்கிறான். காலையில் வேலைக்குப் போகுமுன் அவனிடம் துணிகளைத் தந்துவிட்டால் மாலை திரும்பும்போது மடித்து வாங்கிக் கொள்ளலாம். இப்பவே இப்படி வீட்டுவேலைகள் கண்ணைக் கட்டுதே, ஒரு குழந்தையும் ஆகி விட்டால்... என்று நினைக்கவே மயங்குகிறது. ஆனால் எல்லாத்தையும் பெண்ணானவள் சமாளிக்கிறாள். நானும் சமாளிப்பேன் என்று நினைத்துக் கொண்டாள். குழந்தை வேண்டாம் என்பது இல்லை. ரகுவரனும் அப்படி பெருந்தன்மையான ஆள் தான். வரும்போது வரட்டுமே. அதற்குக் கவலைப்பட்டு ஆகப் போவது என்ன, என்பான். அது சரிதான்.

கோயம்பேடு போயிருப்பாரா, மதுரைபஸ் கிடைத்திருக்குமா, என்று யோசித்துக் கொண்டிருக்கையில் அலைபேசி ஒலித்தது. அது அவன்தான். அவனுக்கான தனி அழைப்பொலி வைத்திருந்தாள். “பஸ் ஏறியாச்சா?” என்றாள் போனை எடுத்து. “ஆமாம். வர்ற வழியெல்லம் ஒரே டிராபிக் ஜாம்” என்றான் முக்கியமான விஷயம் போல. “உங்கவூருக்குப் போறீங்க, ஜாம் ஜாம்னு போங்க” என்றாள். அவள் உற்சாகமாக இருக்கிறாள் என்பதாகப் புரிந்து கொண்டான். “ரைட். டேக் கேர்” என்றபடி இணைப்பைத் துண்டித்தான்.

பசிக்கவில்லை. இருந்தாலும் இரண்டு தோசை ஊற்றிக்கொண்டு சாப்பிட்டாள். அத்தனை அறைகளும் எதற்கோ சுருதி சேர்த்தாற் போல உம்மென்று இருந்தன. படிக்கவும் புத்தகங்கள் இருந்தன. என்றாலும் கணவன் கூட இருக்கையில் வாசிக்க இருக்கிற மாதிரி மனநிலை இப்போது இந்தத் தனிமையில் இல்லை. உட்ஹவுஸ் அவளுக்குப் பிடித்த எழுத்தாளர். “அவன் எவ்வளவு வேகமாக அறைக்குள் நுழைந்தான், பிறகு எவ்வளவு வேகமாக வெளியேறினான், என்றால் உள்ளே யிருந்து வெளியே வருகையில் அவனை அவனே சந்தித்துக் கொண்டான்” என்று எழுதுவார். புன்னகை செய்துகொண்டாள்.

தொலைக்காட்சித் தொடர்கள் அவளுக்கு உவப்பானவை அல்ல. மாமியார் மருமகள், என்றால் ஒற்றுமையாய் இருக்க மாட்டார்கள் என்பது அவர்கள் தீர்மானம். ரகுவரனின் அம்மா நல்ல மாதிரி. கல்யாணம் ஆனதும் அவளே அவர்களைத் தனிக்குடித்தனம் என்று வைத்துவிட்டாள். ரெண்டு நாளைக்கு ஒருதரம் போனில் விசாரித்து அன்பாகப் பேசுவாள். அவளுக்கு, மாமியாருக்கு எப்படிப் பொழுது போகிறது? வேறென்ன, அவளும் டிவி சீரியல் பார்க்கிறாள். என்றாலும் நல்ல மாமியார்.

தம்பியைக் கூப்பிடலாமா என்று தோன்றியது. மணி பார்த்தாள். ஒன்பது நாற்பது. முன்பே கூப்பிட்டிருக்கலாமோ, என நினைத்துக் கொண்டாள். ரகுவரன் சொன்னபோதே அதைச் செய்திருக்கலாமோ? அலைபேசியை எடுத்தவள் மனம் மாறி திரும்ப மெத்தையில் போட்டாள். தனிமைக்கு நான் லாயக்கானவளே அல்ல. யூடியூபில் யேசுதாஸ் ஹிட்ஸ், ஜெயச்சந்திரன் ஹிட்ஸ் என்று கேட்... வேண்டாம்.

பக்கத்து பிளாட் இன்னும் காலி இடமாய்க் கிடக்கிறது. அதைத் தாண்டி அடுத்த மனையில் வீடு இருக்கிறது. காம்பவுண்டு எடுத்து நாய் அலைகிற வெளி. அங்கே விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. அந்த வீட்டு மாமி பிரதோஷம் தோறும் கோவில் போய் வருவாள். காலையில் பார்த்தால் வீட்டுக்கு வெளியே வளர்ந்து நிற்கும் தங்கரளிச் செடியில் பூ பறித்துக் கொண்டிருப்பாள். மஞ்சள் பூசிய முகம். அவளே தங்கரளிப்பூ போலத்தான் இருந்தாள். பெரிய பொட்டு. அவளது வாழ்க்கையின் நியாயங்களுடன் இருந்தது அந்த நியதிகள்.

மகா அமைதியாய் இருந்தது வீடு. டொக் என்று உள்ளே எங்கிருந்தோ சத்தம் கேட்டது. திடுக்கிட வைத்தது அந்தச் சத்தம். இன்ன சத்தம் என்று வகைப்படுத்த முடியவில்லை. சுவரோடு நகரும் பல்லி விழுந்திருக்கலாம். இருந்த அமைதிக்கு திடீர் திடீரென்று சப்தங்கள் உற்பத்தியாகி உடனே கரைந்தும் போயின. இருளைக் குடையும் சப்தங்கள். சத்தமாய் ஒலி அதுவே அந்தச் சத்தத்தில் பயந்தாப்போல உள்வாங்கிக் கொள்கிறது. மெல்ல வீட்டுக்குள்ளேயே நடந்தாள். எதும் பாடலை ஹம் செய்ய விரும்பினாள். ஆண் பாட பெண் ஹம்மிங், பெண் பாட ஆண் ஹம்மிங், என்று அந்தக் காலத்தில் பாடல்கள் வந்தன. இப்பத்தைய பாடல்களில் அந்தப் பாணி இல்லாமல் ஆயிற்று.

சன்னல் வழியே தெரு தெரிந்தது. பெரிய தெருவைப் பிரிந்த சிறு நீளத் துண்டுத்தெரு தான் இது. பெரும்பாலும் இங்கே அரவம் இராது. அப்படிப் பார்த்து வாங்கிய வீடு. பெரிய தெருவில் கூட இப்போது சந்தடி இல்லை. எப்போதாவது ஒரு சைக்கிள் சோம்பலாய்ப் போகிறது. இரவுகள் ஓய்வுக்கானவை. இங்கே உழைப்புக்கு இடம் இல்லை... என நினைக்கவே கொட்டாவி வந்தது.

கணவன் இருந்தால் கையில் அடங்காமல் பிடி நழுவி வழுகியோடும் பரபரப்பான நேரம், இப்போது தவழ்ந்து ஊர்ந்து போவதாகத் தெரிந்தது. ஒரு குழந்தை இருந்தால் இப்படித் தெரியாது. அதைப்பற்றி யென்ன... பெரும்பாலும் அவனுக்கு இரவு வரை அலுவலக வேலையே இருக்கும். வீட்டுக்கு வந்தும் லாப்டாப்பில் எதாவது முட்டிக் கொண்டிருப்பான். காபி கொண்டுவந்து வைக்க வேண்டும். ம், என தலையாட்டி விட்டு திரும்ப வேலைக்குப் போய்விடுவான். அவள் அப்படியே நின்றால், சிறிது கழித்து நிமிர்ந்து பார்ப்பான். “எனிதிங் தி மேட்டர்?” என்று கேட்பான். “நத்திங்” என்று திரும்பி விடுவாள். வேலைநேரத்தில் அவனைத் தொந்தரவு செய்வது சரி அல்ல. ஒரு குழந்தை இருந்தால் இப்படி அவனைத் தன்வேலையாய் இருக்க விடுமா என்ன? ஹா ஹா அவனும் இப்படி வேலையைக் கட்டிக்கொண்டு அழமாட்டான், என்று தோன்றியது.

விர்ரென்று புறப்பட்டு வந்த காற்று சன்னலை சிறிது நடுக்கியது. தெரு விளக்கடியில் ஒரு நாய்வந்து சுற்றிச் சுற்றி தன் வாலைத் தேடியது. இன்னும் காலி இடம் நிறைய இருக்கிற, பாதி வரைந்த சித்திரமாய்க் கிடந்தது இரவு உலகம். பக்கத்து வீட்டு காம்பவுண்டு சுவர் மேலே வேலிக்கொடிகள் ஆடின. கான்கிரீட் வேலை நடக்கும் சுவர்க் கம்பி நீட்டல்கள் போல. இந்தப் பகுதியில் இப்போது கிடுகிடுவென்று கட்டடங்கள் எழும்ப ஆரம்பித்து விட்டன. எழும்பும் கான்கிரீட் வனம். நேற்றுவரை கட்டியெழுப்பிய சுவருக்குத் தண்ணீர் ஊற்றுகிறார்கள். வனம் அல்லவா?... எத்தனை மாற்றங்கள்.பலசரக்குக் கடைகள் நிறைய இந்தப் பக்கம் முளைத்து விட்டன. மிதமான வெளிச்சத்தில் ஐஸ்கிரீம் பார்லர் ஒன்று பிரதான தெருவில் வந்திருக்கிறது.

ரகுவரனுக்கு போன் செய்யலாமா? எதுவரை போயிருக்கிறார் கேட்கலாம். செங்கல்பட்டு தாண்டி யிருக்கலாம்... பஸ்சில் இரவுப் பயணம் போனால் அவன் விடிய விடிய தூங்காமல் போய்ச் சேருவான். அவளானால் வெளியூர் பஸ் என்று இல்லை. உள்ளூர் டவுண் பஸ்சிலேயே அலுவலகம் போய்ச் சேருமுன்னே குட்டியாய் ஒரு தூக்கம் போட்டுவிடுவாள். வேறு எதுவும் யோசிக்க இல்லையென்றால் சரி, என்று அவள் தூங்கி விடுவாள். தலை தொங்கிவிடும். அவனுக்கு அது ஆச்சர்யமாய் இருக்கும்.

இன்று தூக்கம் வரவில்லை. தனிமை அவளைப் படுத்துகிறதா என்ன? ஏன், தனித்திருப்பது அத்தனை கஷ்டமா? அது என்ன உணர்வு? இத்தனை மனிதர்களின் நினைவுகள் என்னுடன் வாழ்கின்றன. தனி மனிதன் என்று உலகில் யாருமே இல்லை. எனக்கு அம்மா இல்லை, அப்பா இல்லை, மனைவி இல்லை... என்கிறவன் கூட இவர்கள் எல்லாம் உலகில் உண்டு என அறிந்தவன் தானே? தனி மனிதனா அவன்? வாழ்க்கை வெறும் தர்க்கங்களால் புரிந்துகொள்கிற ஒன்றாய் இருக்கிறது.

தர்க்கங்கள் அற்றுப் போகிறபோது இந்தத் தனிமை உணர்வு அல்லது பயம்... பயம்? சட்டென்று அந்த நேரத்தில் மின்சாரம் போயிற்று. விளக்கு அணைந்து மேலே சடசடவென்று சிறு சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி நிலைக்கு வந்தது. ஒரு அலையாய் இதயத்தில் மைக்கரைசல் பரவினாற் போலிருந்தது. வெளிச்சம் அதுவும் பயந்தபடி துள்ளித் தெறித்து சன்னல் வழியே ஓடிவிட்டது. என்ன ஆயிற்று என்று நிதானிக்குமுன் சில சமயம் என்னவோ நடந்து விடுகிறது. அப்படியே நின்றாள். நெஞ்சை உள்ளங்கையால் பொத்திக் கொண்டாள். மூச்சை சரிப்படுத்திக் கொண்டாள். பெண்கள் ஆண்களை அடக்கி ஆள்வதில் வெற்றி பெறுகிறார்கள். எதிர்க்குரல் கொடுத்து ஆவேசமாய் பதில் சொல்கிறார்கள். நினைத்ததைப் பிடிவாதம் பண்ணி சாதித்துக் கொள்கிறார்கள். என்றாலும் கரப்பான்பூச்சிக்கு, இருளுக்கு, பேய்க்கு... பயப்ப...

திடீரென்று இருள் அவளைச் சிறைப்பிடித்து விட்டது. அவள் கண்கள் கட்டப்பட்டு விட்டன. நடக்கையில் கால் தடுமாறிப்போய், கை தவறி யாரோ ஒரு பாத்திரத்தில் இருந்து அவள்மேல் இருளைக் கொட்டிக் கவிழ்த்துவிட்டார்கள். இருளுக்கும் வெளிச்சத்துக்கும் என்னவோ கயிறிழுப்புப் போட்டி. சில சமயம் இருள் ஜெயிக்கிறது. சில சமயம் வெளிச்சம் வெற்றி காண்கிறது. சரி. இப்ப என்ன பண்ண?

ரமேஷை, தம்பியைத் துணைக்கு வரச்சொல்லி இருக்கலாம் என்பது முதல் யோசனையாய் இருந்தது. அடுத்த அடியும் எடுத்து வைக்க முடியாமல் கால் கூசியது. இன்வர்ட்டர் போட வேண்டும் என்று திரும்ப யோசனை வந்தது. மழை பெய்யும் போது தான் ஓடு  மாற்றவேண்டும் என்று யோசிக்கிறார்கள். அதைப்போல. அப்புறம் அது மறந்து விடுகிறது. எத்தனை நேரம் இப்படியே நிற்பது. மெல்ல ஒரு யானைபோல காலைத் தூக்கி நகர்த்தி அடுத்த அடி. கால்கள் யானையின் கால்கள் போல கனத்தன. அசாத்தியத் தயக்கம் அது. அடுத்த அடி நிச்சயமான அடி இல்லை என்கிற தயக்கம். மனதின் தர்க்கங்கள் பயம் சார்ந்தவையோ? இருட்டில் நான் ஆயுதம் அற்றிருப்பதாக ஒரு பயம் இருக்கிறது. என்ன ஆயுதம்? ஏன் ஆயுதம்? ஆயுதம் இருந்தால்? அதைவைத்து எதிரியை வெற்றி பெற்று விடுவேனா? திருடன் வந்தால் சமாளித்து விடுவேனா? என்றாலும் கூட ஆயுதம் இருப்பதே ஒரு தெம்புதான்.

மனிதனின் கண்கள் வெளிச்சத்துக்குப் பழகியவை. இதர உயிரிகள்... சிற்றுயிரிகள் இரவுக்குப் பழகியவை. மனிதன் வெளிச்சத்தில் இயங்குவதாலேயே கூட அவை இரவைச் சார்ந்திருப்பது நல்லது என நினைத்திருக்கலாம். பூச்சிகளைக் கண்டாலே அழித்து ஒழித்துவிட ஆவேசப் படுகிறான் மனிதன். வெளிச்சம் மனிதனுக்குத் தெம்பு தருவதைப் போல பூச்சிகள் இரவில் உற்சாகங் கொள்கின்றன போலும்.

உண்மையில், இருட்டு... அத்தனை பயத்துக்கு உரியதா? இருட்டு, அது அல்ல பயம். இருட்டில் எண்ணங்கள் பெரிதாகி பூதாகரமாகி நிழலாட்டம் ஆடுகின்றன. விபரீதங்களை மனசு சிருஷ்டித்துக் கொள்கிறது. கசப்பும் ஒரு சுவை என்பதுபோல இருட்டும் ஒரு வண்ணம் தான். என் வயதுக்கு நான் பயப்படுவதா? அழகா இது?

இருட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். என்ன நடந்து விடும்? என்றால் எத்தனையோ விபரீதங்களைத் தான் மனம் பட்டியல் போடுகிறது. சட்டென மோசமான விஷயங்களைத் தான் மனம் யோசிக்கிறது. திரும்பி வாசல்பக்கம் பார்த்தாள். வாசலைப் பூட்டினோம் அல்லவா? ஆமாம். பூட்டிய ஞாபகம் இருக்கிறது. மெல்ல கையை நீட்டி, குருடாகிப் போனாற் போல நடந்து போனாள். திசைகளே இறந்திருந்தன. எப்படியும் படுக்கையறை வரை போய்விட்டால் நல்லது. போனால் படுத்து விடலாம். படுத்தால் தூக்கம் வருமா? அது அப்புறம். அடுத்த கதை.

இரு. பதறாதே. பதட்டம் தேவை இல்லை. சிறிது நேரத்தில் இதே இருட்டு கண்ணுக்குப் பழகிவிடும். இருட்டு என்பது முழு இருள் அல்ல... வெளிச்சம் உள்ளே கசிந்த இருளே இருட்டு. யார் சொன்னது? வான்கோ. ஓவியர் வான்கோ. ஓவியர்கள் உலகத்தைப் பார்க்கிற பார்வையே வெளிச்சமும் நிழலுமாகத்தான் பார்க்கிறார்கள். இந்தத் தனிமை, அது இந்த இருளைப் பூதாகரமாக்கி விட்டது. ஒண்ணும் ஆகாது. யாராவது உள்ளே வந்து ஒளிந்திருந்தால், கதவு பின்னால் இருந்து வெளியே வந்து கத்தியைக் காட்டினால்... காட்ட மாட்டார்கள். அவன் கத்தியைக் காட்டுவதை என்னால் பார்க்க முடியாது. சிரிப்பு வரவில்லை அவளுக்கு.

படுக்கையறையை எட்டி அடைந்திருந்தாள். வெற்றி. ஒரு தீப்பெட்டி எடுத்து விளக்கு பொருத்தி யிருக்கலாம். தோன்றவில்லை. இப்போது யோசனை வருகிறது. படுக்கையறை வந்தபிறகு. இனி திரும்ப அறை கடந்து சமையல் கூடம் வரை போய் தீப்பெட்டி எடுத்து விளக்கேற்றி... வேண்டாம். மெழுகுவர்த்தி கூட வாங்கி வைத்திருந்த ஞாபகம். மெழுகுவர்த்தியும் ஒரு தீப்பெட்டியும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்க வேண்டும். அமயஞ் சமயம் என்றால் சட்டென கையில் எட்ட முடிகிற அளவில். இதுவும் அந்த ‘ஓடு மாற்றுகிற’ யோசனை போலத்தான்... இருட்டில் யாருக்கும் எதுவும் சொந்தமில்லை. நம் வீடே நமக்குத் தெரியாத ஒன்றாய் அந்நியப்பட்டு விடுகிறது. எதையாவது தேடிப் போனால் இதுவரை நிகழாத விபரீதம் திரும்ப நாம் போகும்போது நடக்கலாம். எதாவது சாமானுடன் முட்டியில் இடித்துக் கொள்ளலாம். எதிலாவது முட்டிக் கொள்வதால் அதன் பேர் முட்டி என ஆகி யிருக்கலாம்... பேசாமல் இரு. படுக்கையில் ஒரு புடவை கிடந்தது போல. துணிமேலேயே உட்கார்ந்தாள். உட்கார்ந்தபின் அந்தத் துணியை நீக்கினாள்.

இன்றைக்கு உறங்க முடியும் என்று தோன்றவில்லை. இருந்த பதட்டத்துக்கு பசி எடுத்தது. பொதுவாக நான்கு தோசைகள் சாப்பிடுவாள். இன்று அசுவாரஸ்யமாய் இரண்டோடு முடித்துக் கொண்டாள். இப்போது பசித்தது. கொஞ்சம் தண்ணீர் குடித்துக் கொண்டால் கூட ஆசுவாசமாய் இருக்கும். திரும்ப தடவித் தடவி எழுந்து போவதா என்றிருந்தது. முழுத் தெருவுக்கே உலகத்துக்கே மின்சாரம் இல்லை. சாரமற்றுப் போய்விட்டது உலகு. இருளும் ஒளியுமாய் ஒரு தொடர் விளையாட்டில் இருக்கிறது உலகு. உண்மை பொய் என்பதைப் போல. எது உண்மை. எது பொய். இரண்டும் உண்மை. இரண்டும் பொய். அதாவது இதற்கு அது உண்மை. அதற்கு இது உண்மை.

கூட அலைபேசி இல்லை. அதை எங்கே வைத்தாள், அதுவே ஞாபகம் இல்லை. இந்த இருட்டில் அதைத் தேடிப் போக முடியாது. உட்கார்ந்தபின் எழுந்துகொள்ளவே அலுப்பாக இருந்தது. அவளது சிற்றசைவில் வளையல்கள் சிணுங்கின. இருளில், தெரிந்த சப்தங்கள் தெம்பாக இருக்கின்றன. தெரியாத சப்தங்கள் கலவரப் படுத்துகின்றன. இப்போது என்ன செய்வது? இப்படியே எவ்வளவு நேரம் அமர்ந்திருப்பது? இருட்டு மனிதர்களைக் குழந்தையாக்கி விடுகிறது. ஆதரவுக்கு ஏங்கும் குழந்தை. யாராவது என்னைத் தூக்கிக் கொள்ளுங்கள். அணைத்துக் கொள்ளுங்கள்... என அழுவதா? பெரியவர்கள் எப்படி அழ முடியும்?

சட்டென மின்சாரம் வந்தது. ஒளி பரபரவென்று அந்த அறைகளுக்குப் பெயின்ட் அடித்தது. அவளுக்குக் கண்கள் கூசின. ஆகாவென்றிருந்தது அந்தக் கணம். எவ்வளவு பயந்துவிட்டேன் என்று நினைத்துக் கொண்டாள். சிரிப்பு வந்தது. சிரிப்பு மீண்டிருந்தது. எதோ ஆயுதம் கிடைக்கப் பெற்றாற் போல. உலகத்தையே ஜெயித்து விடுகிற தெம்பு வந்தாற் போல. எழுந்து கூடத்துக்குப் போனாள். குழல் விளக்கை அணைத்தாள். ஒரு பெரிய செம்பில் நீர் எடுத்து தொண்டை குளிர அருந்தினாள். சமையல் அறை விளக்கை அணைத்தாள். படுக்கையறைக்கு வந்து மின்விசிறியைச் சுழல விட்டாள். நிமிடத்தில் தூங்கிப் போனாள்.

நன்றி தினமணிகதிர் 06 09 2020

storysankar@gmail.com

Mob 91 9789987842 / whatsapp 9445016842

 

Comments

  1. கதை என்று பெரிதாய் ஒன்றுமில்லை. ஆனால் விவரணைகள்.. விவரணைகள். இப்படி ஒன்றுமில்லாததை நகர்த்திக் கொண்டு போக ஒரு தெம்பு வேண்டும். எழுத்தாளருக்கு இருக்கிறது. படிப்பவர்களுக்கும் இருந்தால் நல்லது.இலக்கியம் தழைக்க வேண்டாமா?

    ReplyDelete
  2. ஆயுதம் என்பதென்ன..அச்சம் தீர்ப்பது..இங்கே அச்சம் என்பதென்ன..அடையாளம் தெரியாமல் இருப்பது...அழகான கதை.

    ReplyDelete
  3. பெயரும் புகழும் வாய்ந்த எழுத்தாளர் கதை .

    ReplyDelete
  4. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  5. அற்புதம் சார்... இருட்டைப்பற்றி பேச இவ்வளவு இருக்கிறதே. வார்த்தைகளால் வர்ணஜாலத்தை காட்டியிருக்கிறீர்கள். வழக்கம் போல அருமை சார்...நன்றி 🌾🙏🏻🐘

    ReplyDelete
  6. அற்புதம் சார்... இருட்டைப்பற்றி பேச இவ்வளவு இருக்கிறதே. வார்த்தைகளால் வர்ணஜாலத்தை காட்டியிருக்கிறீர்கள். வழக்கம் போல அருமை சார்...நன்றி 🌾🙏🏻🐘

    ReplyDelete
  7. கார்த்தி வாழ்க.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog