2006 தமிழக அரசு பரிசு பெற்ற ஆண்டின் சிறந்த நாவல்



 நீ ர் வ லை

எஸ்.சங்கரநாராயணன்

 

 

சமர்ப்பணம்

ஓல்ட் மேன் அன் தி சீ - எழுதிய

எர்னெஸ்ட் ஹெமிங்வேக்கு

 

 

1

 

வாலாந்துறைப் பக்கம் சரக்கு எடுக்க வந்திருந்தான் கிருட்டினமணி. வாழை வெட்டும் சீஸன். ராத்திரியே போய் லாரியை நிப்பாட்டிறணும். தார் தாராய் லோடு ஏத்தி நிறைக்க எப்பிடியும் பின்னேரம் கண்டுவிடும். தும்பிக்கை தூக்கிய யானையாட்டம வாழைக்குலைகள். பள்ளியில், வாத்தியார் கேள்விக்கு, பதில்தெரிந்து கை தூக்கினாப் போல. ஸ்ட்ரைக் ஊர்வலத்தில், ஊழியர்களைப் போலிஸ்காவலுக்கு என லாரியில் ஏற்றிக் கொள்கிறாப் போல... இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கத்துடன் லாரியேறும் வாழைத்தார்கள்!

தாருக்குப் புகைமூட்டம் போட்டு லேசாய்ப் பழுத்திருக்கும். திங்க முடியாது. பட்டணம், தூரதேசம் எனப் போகிற லோடு. நேரமாக ஆக புது வெயில் வந்தாப் போல ஒரு மினுங்கல் காணும். குளிக்கும் பொம்பளையாள் போல மஞ்சள் பரவும் பழங்கள். ரெண்டு நாளில் முழு வெயில் வந்த மாதிரி நிறமாற்றம். தேஜஸ். என்ன ஜோராய் இனித்துக் கிடக்கும். நாட்டுவாழை. கெட்டித்தோல் பழங்கள். கெட்டிக்காரக் கடைக்காரன். தோலைத் திங்க என்றே கடை வாசலில் ஆடு நிறுத்தி யிருப்பான்!

வண்டியிலேயே குட்டித் தூக்கம் போட்டான் கிருட்டினமணி. எழுந்து கொள்ளலாம் என சிறுமுழிப்பு கண்டது. கைவாட்சில் மணி பார்த்தான். ரெண்டு அஞ்சு என இசகுபிசகான நேரம் காட்டியது. ராத்திரி பசியில்லை. சீட்டு விளையாட்டில் துட்டாட்டத்தில் உட்கார்ந்து கொஞ்சம் கைப்பணம் விட்டிருந்தான். மனம் சோர பசியைப் பொருட்படுத்தாமல் வந்து படுத்து விட்டான்.

இப்போது பசித்தது. இந்நேரம் சாப்பிட என்ன கிடைக்கும். சுற்றிலும் பழ மண்டிகள். சவுக்காரக் கல் போட்டு பழுக்க வைத்த, இன்னும் பழுக்காத பழங்கள்.

அவன் வண்டியில் அசைவதைப் பார்த்து 'அண்ணே டீ சாப்பிடறீகளா?' என்று குரல் கேட் டது.

அட, என விழித்துக் கொண்டான். சின்னப் பையனாய் இருந்தான் கேட்டவன். தாராளமாய்ச் சிரித்தான். முன்வரிசைப் பல்லில் நட்ட நடுவில் கேட்வாசலாய் ஒரு பல்லைப் பறி கொடுத்திருந்தான்.

'டீ வேணுமா அண்ணே?'

'இந்நேரத்துலயா... கிடைக்குமாடே...'

'வரீங்களா, கொண்ட்டு வரட்டுமா அண்ணே...'

சிறு குளிரின் இறக்கம். விடியலின் சோம்பலான துவக்கம் அழகான விஷயம். கிருட்டினமணிக்குப் பிடிக்கும். சரி நடப்பமே என்று இருந்தது. கீழே இறங்கி வந்தான்.

ஊரின் முகம் தெரிகிற பின்ராத்திரிகள். சப்தம் அடங்கி ஊருக்கேயான வாசனையும் சாயலும் தெருக்களில் அடையாளங் கிடைக்கும். சற்று தூரத்தில் ஓடும் நதியின் சப்தம் கேட்கலாம் சில சமயம். தெருக்களுக்கேயான அடையாளந் தட்டுகிற கணங்கள்... பழவாசனை. சாக்கடை நாற்றம். புதியாய்ப் பூத்துக் காத்திருக்கும் சம்பங்கி பன்னீர்ப்பூ என நாசி அறிவிக்கும். இருட்டில்கூட தேவையில்லாமல் தூக்கங் கொள்ளாமல் அலைந்து கொண்டிருக்கும் நாய்கள் போல, சும்மா காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் தென்னை ஓலைகள். கோவில் யானை! திண்ணை வைத்துக் கட்டிய வீடுகளில் யாராவது திண்ணையில் படுத்திருந்தால் தூக்கத்தில் தன்னைத் தானே - கொசுவை விரட்ட என்று அறைந்து கொள்வார்கள்.

இருட்டு உள் நுழைகையில் குழந்தையை விட்டுவிட்டுப் போன அம்மாவாய் முரட்டு இறுக்கம் இறுக்கி உலகை முத்தமிட்டு மூடிக்கொள்கிறது. கால நெகிழ்ச்சிக்குப் பின் சாப்பிடத் தின்பண்டம் எடுத்துத் தருகிறாப் போல எத்தனை அழகுகளைப் புடவைப் பொதிவில் இருந்து தருகிறது.

இருட்டிக் கிடந்தது பஜார். சில கடைகளில் பெயர்ப்பலகையில் காய்ந்த மாலைச்சருகு காற்றில் எகிறி யிறங்கிக் கொண்டிருந்தது. தெருநடுவே குப்பை குவித்திருந்தார்கள். குப்பை எரிந்த புகைவாசனை. கரிமிச்சம். இன்னும் புகைந்தபடி சில குவியல்கள். கடைகள் நெடும் பலகையேறி மூடிக் கிடந்தன. வாசலில் கூலி ஜனங்கள் படுத்திருந்தார்கள். தூக்கக் கிறக்கத்தில் ஒருவன் வேட்டி தரையில் கிடந்தது. ஒருவன் இன்னொருவனின் வேட்டியை உருவி போர்த்திப் படுத்திருந்தான். கரிக்குவியல் அருகே கதகதப்பு பார்த்து சுருண்டு கிடக்கும் நாய்கள். சோம்பலுடன் தலைதூக்கிப் பார்த்து தூங்கி விட்டன. குரைக்கிற தீர்மானம் எதுவுங் கிடையாது. நமக்கு ஆபத்து இல்லை, என திரும்பச் சுருண்டு கொள்கின்றன.

சுவரொட்டியில் புடவைதிறந்தாற்போல நடிகை ஒருத்தி. மாடு ஒன்று சர்ர்ரென்று அந்தச் சுவரொட்டியையே சுவரில் இருந்து புடவை உருவலாய்க் கிழித்துச் சுவைத்துக் கொண்டிருந்தது. சுவர் ரொட்டி என உணர்ந்ததா அதை!

தெரு திருப்பத்தில் டீக்கடை விழித்திருந்தது. குறட்டைச் சத்தமாய் நல்ல வெளிச்சத்துடன் பெட்ரோமாக்ஸ். பால் மிஞ்சியிருந்ததா என்ன தெரியவில்லை. கொதிக்கிற பால் போல பெட்ரோமாக்ஸ்!... மிஞ்சிய பாலைத் தீர்க்கவென்றே ஆள் பிடிக்க என டீக்கடைக்காரன் யோசனை பண்ணி, பையனை அனுப்பி பார்ட்டியை மடக்கி விட்டான்.

அகல வட்ட பாட்டிலில் இருந்து ஒரு பன் எடுத்துக் கொண்டான். சின்னப் பையனுக்கும் ஒன்று தந்தபோது மறுக்காமல் அவன் வாங்கிக் கொண்டான்.

இந்நேரம் விழித்திருக்கிறானே என்றிருந்தது. சும்மா இந்தப் பக்கம் சுற்றித்திரிகிற பையனா தெரியவில்லை. மேல்சட்டை அணியாத பயல். உடம்பெங்கும் அழுக்கு. எண்ணெய் காணாத சிக்கு பிடித்த தலை. பல்லுகூட விளக்குகிறானோ என்னவோ. ஆனால் அந்தப் பல்லிலும் அந்தக் கண்ணிலும் ஒரு வசிகரம் இருந்தது எப்படியோ.

'ஒன் பேர் என்னடா?'

'ராஜா.'

சிரிப்பு வந்து விட்டது. 'ஆளையும் லெட்சணத்தையும் பாத்தா...' என்று சிரித்தாலும் அதில் குத்திக் காட்டும் த்வனி இல்லை.

'நானே வெச்சிக்கிட்டேன்...'

'அப்பா வெச்ச பெயர் என்ன?'

'பிச்சை!' என்றான் ராஜா.

'என்ன படிக்கறே?'

ராஜா அவனைப் பார்த்துப் புன்னகை செய்தான்.

'என்ன சிரிக்கறே?' என்றபடியே இவனும் புன்னகைக்கிறான்.

'என்ன அவசரம் மொத்தமாப் படிச்சிக்கலாம்னு...'

'வேற யாராவது படிச்சிட்டா உனக்கு இல்லாமப் போயிருமடா...'

'அப்ப அவன்ட்ட கடன் கேட்டு கைமாத்தா வாங்கிக்கிர்றதுதான்...'

'அப்பா என்ன செய்யிறாரு?'

'அப்பா இல்ல'

திடுக்கென்றது. 'அம்மா, உழைச்சுக் காப்பாத்தறாகளாக்கும்...'

'அம்மா இல்ல'

ஒரு கணம் திகைப்பாய் இருந்தது. பேச்சே உமிழ்நீரே வற்றி விட்டாப் போல.

அப்பா பேர் வெச்சார் பிச்சைன்னு, ஆனா அவர் பார்வையில் இவன் ராஜாதான். இப்போது அப்பா இல்லை. பேரில் ராஜா... பேரில் மட்டும்!

கண் விரிய அவனை கவனமாய்ப் பார்த்தான். பத்து பனிரெண்டு வயது காணும். கடைசியாய் எப்போது சாப்பிட்டான்? நிறைய இழப்புகளைப் பழகியவன்... வறுமை இளமையின் எதிரி. பையன் சமாளித்து புன்னகைத்து நிற்கிறான். பசி அவனைக் கலவரப்படுத்தி விடவில்லை. திமிர்த்து நிற்கிறான்.

'ரெண்டு டீ' - கடைக்காரனிடம் சொன்னான் கிருட்டினமணி. தூக்கம் விலகி யிருந்தது.

கடைக்காரனிடம் பையனைப் பற்றி விசாரித்தான். சும்மா இந்தப்பக்கம் சுத்தித் திரிகிற பிள்ளை. முகமற்ற முகமாய் அந்த வளாகத்தில் இயங்கிக் கொண்டு சிறு வேலைகள் உதவிகள் என வயிற்றைக் கழுவி அன்றாடப் பாட்டைத் தள்ளுகிறான் என்றிருந்தது.

'உங்க வீடு எங்கருக்கு? வீடு இல்லன்றாதே!' என்றான் ஜாக்கிரதையாய். பையன் புன்னகைத்தான் எதுவும் பேசாமல். பிறகு சொன்னான்.

'வீடு இல்ல.'

'அப்ப யார் உன்னைப் பார்த்துக்கறா?'

'அப்பா இருந்தவரை நான்தான் அவரையே பார்த்துக் கிட்டேன்...' என்கிறான் அலட்சியத்துடன்.

அப்பா. அவர் பேசுவதை விட இருமும் நேரமே அதிகம். பேசும்போது இருமுவார். பின் இருமிக் கொண்டே பேசுவார். ஓட்டை ரேடியோ. எப்பவும் கரகரப்பாய் எதாவது அறிவிக்கும். எதுவுமே புரியாது கேட்கிற ஆட்களுக்கு. ராணுவத்தில் வலது கால் இழந்தவர். மீதியாக இன்னும் எப்படியோ ஒரு பழைய ராணுவச் சட்டை அவரிடம் இருந்தது. அப்பாவுக்கு மூச்சுத் திணறல் அதிகம் ஆகி தவித்துக் கொண்டிருந்தபோது அவன் பசி என்று பஜார்ப்பக்கம் போயிருந்தான்.

பிளாஸ்டிக் குடம் வாங்கிப் போய்த் தண்ணீர் நிறைத்துக் கொண்டு வந்து ஊற்றினால் சிறு காசோ சாப்பிட ஏதுமோ தருகிறார்கள்.

உருவத்துக்குச் சம்பந்தம் இல்லாத சட்டை, டிராயர் கிடைக்கும்.

ஊர்ச் சின்னப் பயல்கள் மத்தியில் அவனுக்குத் தபால்பெட்டி என்று பட்டப்பெயர். வறுமை கூடப் பெரிசில்லை. வறுமையால் அவனை மற்ற பையன்கள் அலட்சியம் செய்தார்கள். அதுதான் தாள வொண்ணாதிருந்தது. அவனை விளையாடச் சேர்த்துக்கொள்ள மறுத்தார்கள். வன்முறை தவிர்த்து அவன் நட்பு கொண்டாடினால் கேலியும் கிண்டலுமாய் அவனை ஒதுக்கினார்கள். அவமானப் படுத்தினார்கள்.

திரும்பி அப்பாவுக்குச் சாப்பிட என வாங்கிவந்தபோது அப்பா இறந்திருந்தார்.

அழுகை வரவில்லை. அவர் காரியம் முடிந்தது என்றிருந்தது. இனி அவரைப் பற்றி அவன் கவலைப்பட வேண்டியதில்லை, என்கிறதாய்... பாரம் இறக்கி வைத்த ஆசுவாசம்.

மிலிட்டரிச் சட்டை. அப்பா ஞாபகமாய் அதை எடுத்துக் கொண்டான். எலும்புக் கூடாய் இருந்தார் அப்பா. கண்கள் வழியே உயிர் வெளியேறி யிருந்தது. என்ன பார்வை இது? போகிற உயிரை வேடிக்கை பார்த்தாப் போல... பார்க்கவே அச்சுறுத்தியது அந்தக் கோலம். அழுகை கூட இல்லை. அதைத் தாண்டிய திகில். உறவு என சிறு சருகாய் ஒட்டியிருந்தார் அப்பா. அவனும் அப்பாவும், பாதி காய்ந்தும் பாதி பசுமையுமான இலைபோல சேர்ந்திருந்தார்கள். அந்த நாதியும் இனி இல்லை.

வெளியே வந்து வாசலில் கால்மடக்கி கைகளால் கால்களைக் கட்டிக்கொண்டு சிறிது உட்கார்ந்திருந்தான். திரும்ப உள்ளே பார்த்தான். இருட்டில் நிழல் எனக் கிடக்கிறார்... இது நிழல் சரி. நிஜம் எங்கே? அப்பாவும் பார்வையால் தேடுகிறாரா? நிழலை மாத்திரம் பாம்பு சட்டையுரித்தாற் போல இப்படி உதறிவிட்டுப் போகமுடியுமா?

அப்பாவுடன் சாப்பிடலாம் என வாங்கி வந்திருந்த தோசைகள்... பார்சல் பிரிபடாமல் அருகே கிடந்தன. எழுந்து உள்ளே போக ஹோட்டல் சாம்பார் மணக்கிறது.

ம்... எனப் பெருமூச்சு விட்டான். அழுகையெல்லாம் கிடையாது. ஆக வேண்டியதைப் பார்க்கிற ஆசுவாசம் வந்திருந்தது தானாக. அப்பாவை அப்படியே தூக்கிக் கொண்டான்... பழைய செய்தித்தாள்களை எடைக்குப் போட எடுத்துப் போகிறாப் போல இருந்தது. தூக்க சிரமமாய் இல்லை.

இருட்டு. தனிமை. ஊரே உறங்கிக் கிடக்கிறது. தனியே தன்னந்தனியே அவன் நடக்கிறான்... அப்பாவைத் தூக்கிக் கொண்டு!... சுடுகாட்டை நோக்கி!... இப்போது நினைக்கையிலும் அந்த தைரியம் அந்தத் தீர்மானம் நடையின் அந்தக் கால் அழுத்தம்... ஆச்சர்யப் படுத்துகிறது...

புதைகாட்டில் இருட்டுச் செறிவில் தனியே அவன் குழி தோண்டி அப்பாவைப் புதைத்ததை மறக்க முடியுமா? புதைகுழியில் வாங்கிப் போட பூ இல்லை. பன்னீர்ப்பூ மரத்தடியில் புதைத்தான். தினசரி பூவை அது வீசிப் போடட்டும்.

முடிந்தவரை மண்ணைத் தள்ளி மூடினான். கர்ப்பம் எடுத்த வயிறாய் சிறு மேடு.

குழந்தையை அல்ல - கிழவனை கர்ப்பம் எடுத்திருந்தது மண்...

கர்ப்பத்தில் பிள்ளை வெளிவரும்... அப்பா உள்ளே போய்விட்டார்.

ஒரு கையளவு செங்கொன்றைப்பூக்களை பன்னீர்ப்பூக்களை அந்த மேட்டில் இறைத்தான்.

அம்மா... என்று - பரவாயில்லை, சத்தமாய்க் கத்தினான்... அம்மா! அப்பாவை உன்னிடம் ஒப்படைக்கிறேன்...

அவனுக்குப் பைத்தியமா?... பரவாயில்லை. சில கணங்களை விளக்கிக்கொள்ள வேண்டியதில்லை.

மெதுவாக நடந்தபடியே திரும்பிப் பார்த்தான். இருமுகிற சப்தம் இருட்டில் கேட்கிறாப்போல இருந்தது.

அழுகை வந்தது. மனம் விட்டு துக்கம் கரைய அழுதான். வெட்கம் விட்டு அழுதான். சத்தமாய் அழுதான். அப்படியே அந்த மண்ணில் உட்கார்ந்து மண்ணை அறைந்து அறைந்து அழுதான்... சட்டென்று தானாக அழுகை நின்றது.

இப்படி தனியே சுடுகாட்டில் அழுது கொண்டிருப்பதா?... வெட்கமாய் இருந்தது. சுற்றிலும் பார்த்தான். தள்ளித் தள்ளி மரங்கள். நின்றபடி மௌனமாய் அவனை வேடிக்கை பார்க்கின்றனவா அவை.

'என்னாச்சி?' என்றன மரங்கள்.

'ஒண்ணில்ல...' எனத் தலையை உதறிக் கொண்டான்.

விரித்துப் போட்ட தலையை உதறிச் சேர்த்துக் கட்டிக் கொள்கிறது இயற்கை. வெளிச்சத்தின் சிறுதிசை தெரிந்து நடக்க ஆரம்பித்தபோது விடிய ஆரம்பித்திருந்தது.

'எங்கூட வரியா?' என்று கேட்டான் கிருட்டினமணி.

---

- சனிக்கிழமைதோறும் தொடரும்

 

storysankar@gmail.com

Mob 919789987842 - whatsapp 91 9445016842

 

Comments

  1. என்னதான் நூலாக படித்திருந்தாலும் , சரியான இடத்தில் “ தொடரும் “ போட்டு வாசிப்பது தனி சுவைதான் .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog