Monday, August 21, 2017

நன்றி ‘சங்கு’ காலாண்டிதழ்/சிறுகதை

புரவிக்காலம்
எஸ். சங்கரநாராயணன்

கௌடில்யன் (சொந்தப் பெயர் சங்கரராமன்.) நாளைக்குள் அடுத்த அத்தியாயம் தர வேண்டும். சரித்திரக் கதை என்று பெயர் சொன்னாலும், பாண்டியன் என்றோ பல்லவன் என்றோ அவர் சொல்வது ஒரு கால அம்சம் சார்ந்ததே தவிர, அரசர்கள் எல்லாரும் ஒரே மாதிரிதான் காரியம் ஆற்றினார்கள். குதிரையில் அவர்கள் ஏறிவிட்டால் அதை மெதுவே ஓட்டிச் செல்வார் எவரும் இல்லை. அவர்களது படையில் பெரும் மல்லர், வில் வித்தகர், தேர் ஓட்டிகள் இருந்தார்கள். என்றாலும் வீர விளையாட்டுப் போட்டி என்று வரும்போது அரசர் அவர்களையே ஜெயித்தார். சனங்கள் அரசரை மெச்சி பூரித்து ஆர்ப்பரித்தார்கள். போர் என்றபோது இந்தத் தளபதிகள் முன்னே சென்றார்கள், என்பது விசித்திர முரண்.
கௌடில்யன் சரித்திரக் கதை மாத்திரமே எழுதி வந்தார். அவரது புதிய தொடர்கதை ஆரம்பிக்கிறது, என அறிவிப்பு வந்தாலே அந்த இதழின் விற்பனை அதிகரிக்கிறது. காரணம் அவர் எழுதும் சரித்திரக் கதைகளில் சரித்திரத்தை விட சிருங்கார ரசமே மேலோங்கி நிற்கிறது. வாசகர்கள் அவற்றை வாசித்து ஹா என வியந்து பிரமித்தார்கள். அவர் எழுதும் கதைகளின் அரசிகள் கனவுலக தேவதைகள். திரைப்படம் பார்ப்பதைப் போல அந்தரங்கக் காட்சிகளை கௌடில்யன் அவசரமில்லாத நிதானத்துடன் விரித்து விவரித்துச் சொன்னார். முழுசாய் தனி அத்தியாயமே, சந்தனத்தைக் கிண்ணத்தில் நிரப்பினாப் போல தந்துவிடுவதும் உண்டு. யாருக்குதான் சிருங்காரம் பிடிக்காது... எல்லாரும் அந்த சந்தனத்தைத் தொட்டு உள்ளங்கையில் தேய்த்து முகர்ந்துபார்த்து பூசிக்கொண்டு மகிழ்ந்தார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், எழுதுவது சரித்திரக் கதை, அதை எழுத கணினி தேவைப்பட்டது அவருக்கு.
காலை வேலைக்குச் செல்லுமுன் எழுத்துத் தேரை ஓர் அளவு நகர்த்தி விட்டுவிட்டால் பஸ்சில், ஷேர் ஆட்டோவில் போகும்போதோ அலுவலக ஓய்வு நேரத்திலோ மீதிப் பகுதிகளை மனசிலேயே கடகடவென்று எழுதிக்கொள்வார். சரித்திரக் கதையில் ஆண்கள் வீரமும் தோள் உரமும் செறிந்தவர்களாக இருந்தார்கள். அவர்தான் மேனேஜர் முன்னால் தோள் தொய்ந்து நின்றார். சரித்திரப் பெண்கள் நிமிர்ந்த எடுப்பான மார்பகங்களுடன் பேரழகிகளாகத் திகழ்ந்தார்கள். அழகற்ற பெண்களோ, மார் சிறுத்த பெண்களோ சரித்திரக் கதையில் இடம் பெற முடியாது. வீரம் அற்ற ஆண்களும்...
கௌடில்யன் கணினியை இயக்கினார். எழுத்துருக்கள் அமருமுகமாக கணினி வெண் திரையைக் காட்டியது. அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கணினித் திரையில் புழுதி பறந்தது. பெரும் புழுதிப்புயல். புழுதி சிறிது அடங்க இப்போது குதிரையின் குளம்படிகள் கேட்டன. இரு புறமும் மரங்கள் செறிந்த சாலை தென்பட்டது. அதிகாலையின் சூரிய ரச்மிகளின் உக்கிர எடுப்பில் மர உச்சிகளின் கொழுந்திலைகள் சிவப்பு ஏறி தீ பற்றி யெரிகிறாப் போலத் தெரிந்தது. சாலையெங்கும் சிதறிக் கிடக்கும் செங்கொன்றை மலர்களை அவர் பார்த்தார். அதை மிதித்துத் தாவிச் செல்லும் புரவி. அம்மன் கோவில் தீ மிதித் திருவிழாவா இது, என நினைக்க வைத்தது.
வெகு தூரத்தில் இருந்து துரித கதியில் வந்திருக்க வேண்டும் அந்த இளவரசன். அவன் நெற்றியில் இருந்து வியர்வை ஒரு நதிபோல கழுத்தில் இறங்கி தங்கச் சங்கிலி என மினுக்கங் கொடுத்தது. உதய நாழிகைக்கு முன்னேரே கிளம்பி விட்டிருக்க வேண்டும் அவன். வெளிச்சம் அற்ற அந்த ரஸ்தாவில் புரவி அத்தனை சடுதியில் வந்ததே அந்தப் புரவியின் பார்வை தீட்சண்யத்தையும், அதன் உயர் சாதியையும் உணர வைப்பதாய் இருந்தது. பழுப்பு நிறத்தில் இருந்த அதன் சருமம் பட்டுத் துகிலென அந்த சூரிய ஒளியில் பொலிந்தது. அவனது வருடலையும், முடுக்கத்தையும், லகானைச் சுண்டுதலையும் அது புரிந்து கொள்ளும் லாவகம் ஆச்சர்யமானது. அவனது மூன்றாவது கையாகவே அது இருந்தது. அவனது மனதைக் குதிரையும், குதிரையின் மனதை அவனும் நன்றாகப் புரிந்து கொண்டவர்களாகவே இயங்கினார்கள் என்பது ஆச்சர்யம்.
நெடுந்தொலைவில் இருந்து வருகிறான் அவன். அந்தப் புரவியும் நுனிவாயில் நுரை சிந்த சிறிது அயர்ச்சி கண்டிருந்தது. வழித்தடத்தில் கிட்டத்தில் சலசல என்று ஓடை ஒன்று ஓடும் சப்தம் அந்த நிசப்தத்தில் கேட்டதை அவன் உணர்ந்ததும், அதே ஒலிகளுக்கு குதிரையின் காதுகள் இன்னுமாய் விரைத்து கவனங் குவிந்ததையும் அவன் கண்டான். ஓடைக்கு அருகில் இருந்ததால் அந்தக் காற்றே இன்னுமான குளிர்ச்சியுடன் உடலை சிலுசிலுவென ஆரத் தழுவுவதையும் அவன் உணர்ந்தான். வியர்த்த விறுவிறுத்த அந்த முகத்துக்கும் அது சிலிர்ப்பு தந்தது. புரவிக்கு ஆறுதல் அளிப்பான் போல அவன் புரவியை மெல்லத் தட்டிக் கொடுத்தான். புரவி மெல்ல தன் வேகத்தைத் தளர்த்தி மட்டுப்பட்டது. அடங்கி அது நடையோட்டமாகி, பிறகு நடக்கவும் ஆரம்பித்தது.
“காபி” என்றாள் அவள். அவர் மனைவி. அப்போது தான் அவள் எழுந்து கொண்டிருந்தாள். அவள் எழு முன்பே அவர் விழித்துக்கொண்டு எழுத உட்கார்ந்து விடுவார். என்றாலும் அவளை அவர் தொந்தரவு செய்ய மாட்டார். இராத்திரி யெல்லாம் அவள் இருமிக் கொண்டிருந்தாள். அத்தனை ஆரோக்கியமான பெண் அல்ல அவள். அடிக்கடி அவளுக்கு எதாவது உடல் தொந்தரவு இருந்துகொண்டே இருந்தது. சிறிது குளிர் வெளியே கண்டாலும் ஆஸ்த்மா வந்துவிடுகிறது. வெயில் அதிகமானால் தலைவலி. சளிபிடித்து மூக்கு ஒழுக ஆரம்பித்து விடுகிறது. அவளைத் திரும்பிப் பார்த்தார். ஒல்லியாய் ஈர்க்குச்சியாய் இருந்தாள் அவள். வற்றி ஒடுங்கிய சிறிய தனங்கள். சருகு போல் இருந்தாள். காற்றடித்தால் பறந்து விடும் சருகு.
“போன தொடர்கதையிலயும் இப்படி இளவரசன் அவசரமா எங்கியோ போனானே?” என்று கேட்டாள் அவள். “என்ன அவசரம் அவனுக்கு?”
“எனக்கே தெரியாது.” சங்கரராமன் காபியை எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தார்.
“ராத்திரியோட ராத்திரியா ஏன் அவன் வரணும்? திருடனா என்ன?” என்று கேட்டாள் அவள். “அதுவும் எதுக்கு இந்த வேகம்?”
“காபி நல்லா இருந்தது” என்றார் கௌடில்யன். “உன் காபியால இனி கதை இன்னும் சுறுசுறுப்பாகும்.”
“ஓடையில யாராவது பொம்மனாட்டி குளிச்சிண்டிருக்கப் போறா. அதானே?” அவள் காபித் தம்ளரை எடுத்துக் கொண்டு திரும்பினாள்.
எதுவரை வளர்ந்திருக்கிறது கதை என்று பார்த்தார் கௌடில்யன். மூணு பக்கம் வந்திருந்தது. ஆறு பக்கம் என்றிருந்தால், அவள் குளிப்பதை அவன் பார்த்தான், என்ற இடத்தில் கதையை நிறுத்தியிருப்பார். தொடரும் என்று விட்டு விடலாம். அடுத்த வாரம் வரை அவள் குளித்துக்கொண்டே இருந்தாலும் அவளுக்கு ஜலதோஷம் பிடிக்காது. இவளுக்கு? வெந்நீரே ஒத்துக்கொள்ள மாட்டேங்குதே ஐயா... பெருமூச்சு விட்டார்.
சில சமயம் நாயகி தோழிகளுடன் ஜலகிரீடை செய்வதும் உண்டு. ஒரே சிரிப்பும் கலகலப்புமாய் இருக்கும் படித்துறை. ஒருவர் மேல் ஒருவர் நீரைப் பீய்ச்சியடித்து விளையாடுவார்கள். வாய் நிறைய நீரை அதக்கிக் கொண்டு நாயகி வாயில் இருந்து பீய்ச்சியபடியே மல்லாக்கு நீச்சலில் போவாள். உயர வசத்தில் இருந்து அவளை நாயகன் பார்த்தால் இன்னும் ஜோராக இருக்கும். ஓவியம் வரையவும் தோதானது அந்தக் காட்சி.
காபியின் உற்சாகமா தெரியவில்லை. சட்டென விரல்கள் கீ போர்டில் சுறுசுறுத்தன. நீருக்குள் எத்தனை நேரம் இருக்க முடியும் என்று தோழிகளுடன் பந்தயம் வைக்கிறாள் நாயகி. அவள் உள்ளே முங்கிய சமயம் நாயகன் வருவதைப் பார்த்து தோழிகள் வெட்கப்பட்டு அங்கேயிருந்து ஓடி விடுகிறார்கள். நாயகி தலையை உயர்த்தி மேலே எழுந்தபோது திகைத்து நிற்கிறாள். அவளது தோழிகள் எல்லாரும் எங்கே?
ஐயோ ஈர உடைகள் என்று தன் துகில் தனக்கே நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதை உணர்ந்து வெட்கம் மிகக் கொண்டாள். பாறைகள் நடுவே ஓடும் அந்த சிற்றோடை. அதைப்போலவே அவளது இரு தனங்களுக்கும் நடுவே கிடந்த துகில். அல்லது ஒரு கொடியின் இரு மலர்களோ இவை. காதிலும் மூக்கிலும் அவள் அணிந்திருந்த வைரங்களைத் தவிர அவளிடம் இருந்து சிதறிய நீர்த் திவலைகள், அவையே ஒளி சிதறச் சிதற கண்ணை மருட்டின. பருவத்தின் பதவி கொண்ட பட்ட மகிஷி அவள். பிரம்மதேவன் அவளை அங்குலம் அங்குலமாக கவனமாய் வடித்திருக்கிறான். ஓ இவளுக்கு வலித்திருக்குமே என நினைத்து வருத்தம் அடைந்தான் அவன்.
எத்தனை பக்கம் வந்திருக்கிறது, என்று பார்த்துக் கொண்டார்.
எங்கேயும் ஓரிடத்திலும் அவள் உடம்பில் துளி பிசிர் தட்டியிருக்க வேண்டுமே. இல்லவே இல்லை. சதை சிறிது தூக்கல்? சிறிது கம்மல்? கிடையவே கிடையாது. பெண்மையின் இலக்கண நூலாய்த் திகழ்ந்தாள் அவள். இடுப்புக்குக் கீழே கஞ்சனாக இருந்த பிரம்மன் இடுப்புக்கு மேலே தாராளமாய் நடந்துகொண்டிருந்தான்! கன கச்சிதம். சாமுந்திரிகா எழுச்சிகளும் வீழ்ச்சிகளும், வளைவுகளும் குழைவுகளும். மேலாக புற்கள் மூடிக் கிடக்கும் குழி. அவள் நீரில் மூழ்கி எழுந்ததில் அந்த அவயவங்கள் கொண்ட மென்மையும் இளக்கமும்... கல்லில் இதை வடிக்கவே முடியாது, என நினைத்தான் அவன்.
அலுவலகத்துக்கு நேரமாகி விட்டது. குளிக்கப் போக வேண்டும். இங்கே கதையில் நாயகி குளித்து முடித்த பாடில்லை.
காலக்கடிகை போன்ற உடல். ஆலிலை அல்குல். முகம் பார்க்கலாம் போன்ற எழினிக் கன்னம். பிரம்மதேவனே செய்திருந்தாலும் இதற்கு மாற்று ஒன்று அவனே செய்வது கடினம், என நினைத்தான் இளவரசன். வியப்பு தாளாமல் அவன் விழிகள் காது ஓரம் வரை அகன்று வளர்ந்தன. ஆ... என்று தானறியாமல் வாய் சிறிது திறந்து அப்படியே திகைப்புடன் அவன் நின்றதைக் கண்ட அவளுக்குச் சிரிப்பு வந்தது. “என்ன நீர்? ஏன் இப்படி என்னை இமைகொட்டாமல் பார்க்கிறீர்? பெண் சென்மத்தை நீர் பார்த்ததே இல்லையோ?” என சிறு நகைப்புடன் வினவினாள் அவள்.
“உன்னைப் போன்ற பெண்ணைப் பார்த்தது இல்லை...”
“தனியே குளித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை இப்படி வந்து நின்று நீங்கள் பார்ப்பதும், சம்பாஷிப்பதும் பிழையன்றோ?” என்றாள் அவள். என்றாலும் அந்தப் பிழை அவளுக்கு இஷ்டமானதே என்றும் அவள் உணர்த்தினாப் போலே அந்த வதனம் உவகை பூத்துக் கிடந்தது.
மேலும் எழுத என்று யோசனையாய் தட்டச்சு செய்வதை சிறிது நிறுத்தினார். சங்கரராமனுக்கு அப்போது ஆச்சர்யமான ஒரு காரியம் நடந்தது.
கணினியின் வெண்திரை சொற்கூட்டத்தில் சலனம் ஏற்பட்டது. எழுத்துருக்கள் கலங்கிக் கலைந்தன. என்ன இது? அவர் நம்பவியலாத வியப்புடன் பார்த்தார். பரவசமும் வியப்பும் கதைகளில் மாத்திரம் தானா என்ன? வெகு சுருக்கில் அந்த சொற்கள் தம்மில் தாமே பிரிந்தும் கூடியும் இனிப்புக்கு மொய்க்கும் எறும்புகள் போலும் கொத்துக் கொத்தாய்த் திரள்வதும் ஒதுங்குவதுமாய் இருந்தன. எறும்பு கலைடாஸ்கோப். இந்த களேபரம் மெல்ல அடங்கி நிதானப்பட்டது. அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மெல்ல ஒரு உருவம் கணினியில் உருவானது.
பெண் உருவம்.
அவர் திகைத்துப் போய் கணினியையே பார்த்தபடி இருந்தார். அவரது திகைப்பு கண்டு அவளுக்குச் சிரிப்பு வந்தது. மெல்லொலியுடன் கண் விரிய அவரைப் பார்த்தபடி தளிர் வெண்டைப் பிஞ்சுகள் போன்ற விரல்களால் வாய் பொத்திக் கொண்டாள் அவள்.
“பெண்ணே யார் நீ?”
“உங்கள் சொற்கள் வடித்த சுந்தரி நான். என்னைத் தெரியவில்லையா அன்பரே?” என அவள் மேலும் கேலி பேசினாள். “என்னை நன்றாக உற்றுப் பாருங்கள்” என்றாள் அவள். தன் மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் அவர் அப்படி உற்றுப் பார்த்ததே இல்லை. பயம் காரணம்.
அவர் அவளை உற்றுப் பார்த்தார். கண்ணாடி அணிந்துகொண்டு கணினிக்குக் கிட்டத்தில் போய்ப் பார்த்தார். அவளை முன்பே பார்த்தது போலவும் பார்க்காதது போலவும் இருந்தது. அது முழுசுமாக அவர் அறிந்த உரு அல்ல, என்று தான் அவருக்குப் பட்டது. ஆ அந்தக் கண்கள். சற்று மேலே திரும்பினாப் போல மைச்சொப்பு மீன் கண்கள். அலுவலகத்தில் அவருடன் வேலை பார்க்கும் மைதிலி, அவளுடையதைப் போலிருந்தன. தோளில் இருந்து சரேலென மேலெழும் அந்தக் கழுத்து. அதை, அதை... எங்கே பார்த்திருக்கிறார்? அழகான முகத்தைச் சுமக்கிற பெருமையான கழுத்து, என்கிற நிமிர்வு அது. நேற்று பஸ்சில் என்னுடன் வந்த அந்த பெயர் தெரியாத பெண்ணின் சாயல் அல்லவா அது, கூரிய அந்த நாசி. அது அவருக்கு நிச்சயமாய்த் தெரியும், கல்லூரியில் அவருடன் வாசித்த கிருத்திகாவின் நாசி அது. தனங்கள் பெருத்த பிரேமா. நடிகை பத்மினியை அவருக்குப் பிடிக்கும்.
இன்னும் கிட்டே போய் அவர் ஒரு நப்பாசையுடன், கௌரியின் எந்த அடையாளமாவது அதில் தட்டுகிறதா என்று தேடினார். கௌரி அவரது மனைவி. இருமல் சத்தம் கேட்டது. அவள் வந்துவிடுவாளோ என்றிருந்தது. அவசர அவசரமாகத் தேடலானார். அதற்குள் சட்டென மின்சாரம் தடைப்பட்டது... இனி எழுத முடியாது. கோப்பை முடித்து, யூ பி எஸ்சை அணைத்துவிட்டு எழுந்து குளிக்கப் போனார்.
ஷேர் ஆட்டோவில் கூட்டம் இருந்தது. அலுவலக சமயங்களில் கூட்டமாகத் தான் இருக்கிறது. கணினியில் இருந்து அவரது கதாநாயகி எழுந்து வந்ததை அவர் எதிர்பார்க்கவே இல்லை. சொன்னாலும் யாராவது நம்புவார்கள்? இப்படியெல்லாம் நடக்குமா? சங்கரராமன் ஷேர் ஆட்டோவில் அமர்ந்திருந்தார். பெண் ஒருத்தி கை காட்டி ஆட்டோவை நிறுத்தியதில் ஷேர் ஆட்டோ நின்றது. அவருக்குப் பக்கத்தில் ஒரு ஆள் உட்கார இடம் இருந்தது. அந்தப் பெண் தன்னருகில் வந்து அமர்வாள் என எதிர்பார்த்தார். அவரது கதையிலோ வெனில் வழியில் வரும் நாயகியை கதாநாயகன் தன் புரவியில் அள்ளி யெடுத்து ஏற்றிக்கொண்டு போவான்.
“சார் நீங்க இப்பிடி வந்துருங்க. அவங்க லேடிஸ் சேர்ந்து உட்காருவாங்க” என்றான் ஷேர் ஆட்டோக்காரன். எதிர்ப்பக்கமாக நகர்ந்து மாறிக் கொண்டார். மகா அழகாய் இருந்தாள் அந்தப் பெண். இதுவும் வசதிதான். அவளை நேரே பார்க்க முடியும். வேறெங்கோ பார்க்கிற மாதிரி அவளைப் பார்த்தார். சட்டென முகத்தைச் சுளித்து அவரை அலட்சியப் படுத்தினாள் அவள். அவள்முன் தன்னைக் கிழவராக உணர்ந்தார் சங்கரராமன்.
ஆட்டோ போய்க் கொண்டிருந்தது. கண்ணை மூடிக் கொண்டு தொடர்கதையை விட்ட இடத்தில் இருந்து யோசிக்க ஆரம்பித்தார்.

91 97899 87842

Tuesday, August 8, 2017

மின் கம்பிக் குருவிகள்
 
எஸ். சங்கரநாராயணன்

ஒரு விரல் உலகைப் பார்த்து நீட்டும் போது மத்த மூணு விரல்கள் உன்னையே காட்டுகிறது என்பார்கள். அதைத் தவிர்க்க முடியாது. பிறரைப் பற்றி எழுதுவதான பாவனையில் மிக்கவாறும் தன்னையே காட்டிக் கொடுத்து விடுகிறது எழுத்து. அதற்கு ஓர் எழுத்தாளன் தயாராய் இருக்க வேண்டும். காலப்போக்கில் ஒரு வேடிக்கை போல அந்த எழுத்தின் அடிநாதமான விமரிசனக் குரலை அவன் தன் வாழ்க்கை பாவனைகளாக ஆக்கிக்கொள்ள உந்தப் படுகிறான். அது ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறது. முதல் நிலை, இந்த பாவனைகளில் இருந்து தான் அநத எழுத்து பிறக்கிறது. அடுத்த நிலை, எழுத்து என்று சகஜப்பட்டான பின், எழுத்தில் இருந்து இவனுக்கு ஒரு கிரண வீச்சு கிடைக்கிறது. பெறும் நிலைக்கு, வாசக நிலைக்கு அவன் மீண்டும் வந்தமைகிற வேளை அது.
எதனால் எழுதுகிறேன்?
அப்படி அலலாமல் வேறு எவ்வாறும் என்னை, என் இருப்பை என்னால் நியாயப் படுத்திக் கொள்ள முடியாது என்று தோன்றுகிறது. நான் ஒரு அலுவலகப் பணியாளி. பிணியாளி. இது பிணிக்கப் பட்ட பணி. அன்றாடங்களின் ஒழுங்கு அதில் உள்ளது. ஆனால் வாழ்க்கை? அது ஒழுங்கற்று நேர்ப் பாதையாய் அல்லாமல் முப்பரிமாணக் காட்சி என பரந்து விரிந்து கிடக்கிறது, ஒரு வானம் போல. சமுதாயம் என்கிறது ஒரு தன்னார்வ அமைப்பு. நாம் கட்டமைத்த ஒரு கற்பனை வடிவம். மனித உயிர் சிரஞ்ஜீவியாக வாழ அவாவுறுகிறது. குறைந்த பட்சம் பாதுகாப்பாக வாழ அது ஆவேசப்படுகிறது. அதை அலட்சியமாக, சம்பவங்களின் இடிபாடுகளில் மாட்டிக்கொள்ள அனுமதிக்க முடியாது. இதற்கு வாழ்வில் ஒரு கூட்டு அமைப்பு, ஒழுங்கு, நியதிகள் என அடுக்குகளை உருவாக்கிக் கொள்கிறான் மனிதன்.. இந்த ஒழுங்கற்ற மொத்தத்தில் சிறு ஒழுங்கைப் பிரித்து தன் ராஜ்ஜியத்தை அவன் அமைத்துக் கொள்கிறான். எதிர்பாராத ஒரு ஆபத்தைச் சமாளிக்க, தன்னால் தனியாக அலலாமல், ஒரு மனிதக் கூட்டமாக என்றால் வேலை எளிது, என்பது அவன் துணிபு. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் வேறு வேறு நபர்கள் தருகிறார்கள். மானுடம் வெல்க. மிருகம் மாருதம் ஆனது கிடையாது. மனிதம் மானுடம் ஆகி விட்டது.
மேலதிக ஒழுங்குகளை அவன் வரையறை செய்துகொண்டபோது, அதற்கான கணக்குகளில், இந்த ஒழுங்கு சார்ந்த கலை வடிவம் தன்னைப் போல சித்தித்தது அவனுக்கு. வாழ்க்கையைக் காரண காரியங்களுக்கு உட்படுத்துகிற அவனது பிரியத்தில், இந்த கலை ஒழுங்குகள் அவனைக் கவர்கின்றன. இப்படிப்பட்ட ஒன்றைத்தான் அவன் வாழ்க்கையில் லட்சியப்படுத்துகிறான். ஒழுங்குகள் சார்ந்த உலகத்தில் மரண பயம் இல்லை. மரணத்தை மீறி வாழ்க்கை சார்ந்து அவனுக்கு நெடுந்தூரப் பயணம் இருக்கிறது. வாழ்க்கை அற்புதமானது என்கிறது கலை. எடுத்துச் சொல்கிறது கலை. அவனது மனசின் விழைவு அது.
ஆனால் கலை என்பது என்ன? கலை எப்படித் தோன்றியது?
கலை என்பது அடிப்படையில் முரண். ஒரு கருத்துக்கு நீட்சி என்றோ, மாற்று எனறோ உதிக்கும்போது அங்கே பரிமாற்றம் நிகழ்கிறது. எது சரி எது தவறு போன்ற விவாதங்கள் நிகழ்கின்றன. கலை அதற்கு ஏற்பாடு செய்கிறது. நல்லது நிற்க வேண்டும். நிலைக்க வேண்டும். இதுவரை இருந்தது அகன்று வேறு, சரி எனப் படும் ஒன்று, மேல் மட்டத்துக்கு, புழக்கத்துக்கு வருகிறது. கலை ஒரு முரண் சார்ந்த வழியில் மேலதிக உன்னதம் நோக்கி மனிதனை வழி நடத்துகிறது.
அதோ, என்கிறது கலை.
ஒரு நல்ல பாடல் கேட்கிறோம். மனசின் இருட்டு, அல்லது கவலை மெல்ல மேகம் விலகுவதாக உணர்கிறோம். கலையின் ஒழுங்கு, அந்த உள்மனச் சிதறலைத் திரும்ப சமப்படுத்த முயல்கிறதாக நமக்கு அமைகிறது. ஒரு பிரச்னை. அதைத் தீர்க்க வேண்டியிருக்கிறது. கலை, புனைவு என்கிற வடிவம் வேறொரு பிரச்னையை எடுத்துப் பேசுகிறது. அதற்கான தீர்வு அதில், அந்தப் புனைவில் நேரடியாகவோ உட்பொருளாகவோ காட்டப் பட்டிருக்கும். அல்லது விவாதிக்கப் பட்டிருக்கும். வேறொரு பிரச்னையை அங்கே விவாதித்திருக்கலாம். நம் பிரச்னை என்ன? அதன் தீர்வு நோக்கி நம்மை எப்படி சமப்படுத்திக் கொள்கிறோம்… என கலை சிந்தனைகளைத் தருகிறது. அது சொன்ன தீர்வை ஒட்டியும் வெட்டியும் இப்படியும் அப்படியுமாய் கலை ஊடாடுகிறது.
மின கம்பிக் குருவிகள்.
எதனால் எழுத வந்தேன் தெரியாது. ஆனால் ஒழுங்குகளுக்கும், ஒழுங்கற்ற சம்பவங்களுக்கும் ஒரு ஒத்திசைவைத் தர கலை முயல்வதை நான் அவதானிக்கிறேன். கட்டாயம் மனிதனுக்கு அது தேவையாய் இருக்கிறது, என்பதை உணர்கிறேன். எனக்கு அது தேவை.
இந்த சமூகத்தில் நான் ஓர் இடத்தில் பணி செய்கிறேன். எனக்கு அந்த வேலை அத்தனை உவப்பாய் இல்லை. ஒருவேளை வேறொரு இடத்தில் நான் இன்னும் சிறப்பாக இயங்க முடியுமோ என நினைக்கிறேன். எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. இதைவிட ஒரு நல்ல மனைவி கிடைத்திருக்கலாம், என்று சில சமயம் தோன்றுகிறது. நான் பிறந்த ஊர், என் குடும்பம்… எல்லாம் சார்ந்து எனது அதிருப்திகளை நான் கவனிக்கிறேன். அமைதல், புண்ணியம், விதி என்றெல்லாம் மனசு ஊசல் ஆடுகிறது. யாருக்கும் எல்லாமும் கிடைத்து விடாது, என்று தான் உலகம் அமைந்திருக்கிறது. அல்லது, இல்லாத ஒன்றுக்குக் கை நீட்டுவதே மனசின் எடுப்பாக இருக்கிறது. இன்றை விட நாளை மேலாக இருக்க வேண்டும் என மனசு வேண்டுகிறது. அப்படியானால் இருக்கிற இருப்பில் ஒரு மனம் திருப்தி கொண்டு அடங்கவிட முடியாது.
மேலான வாழ்க்கை பற்றிய ஒரு கற்பனையைக் கலை ஊக்குவிக்கிறது.
நான் எனக்கு உகந்த பிரதேசங்களில் பயணிக்க என் கலை எனக்கு, ஒரு படைப்பாளனாக வெகு உதவி. இந்த வாழ்க்கை, இது எனக்கு அமைந்தது. என்றால், நானாகத் தேர்ந்து கொண்ட என் எழுத்து, அதில் எனக்கான ஒரு வாழ்க்கையை, உன்னதத்தை நான சிருஷ்டி செய்து கொள்வேன். அதில் எனக்கு வாயத்தது இது என்கிற, இன்னொரு தலையீடு இல்லை. ஏமாற்றங்கள் சாத்தியமே இல்லை.
நான் என் எழுத்தை நேசிக்கிறேன். கலைஞர்கள் பிறப்பது இல்லை. அப்படியெல்லாம் அதித நம்பிக்கை எனக்கு இல்லை. நான் கலைஞனாக உருவானவன். இந்த வாழ்க்கையில் வேறு எங்கும் கிடைக்காத அமைதி, திருப்தி எனக்கு நான் கலைஞனாக ஈடுபாடு காட்டுகையில் எனக்கு வாய்க்கிறது.
ஆகா, இதைக் கைமாற்ற முடியுமா?
அதனால் எழுதுகிறேன்.
என் கதைகள் அதை உறுதி செய்கின்றனவா? செய்ய வேண்டும். இது என் அவா.
*

91 97899 87842