Sunday, August 8, 2021

 நன்றி / கவிதை உறவு ஆண்டு மலர் 2021

பாதுகாப்பு

எஸ்.சங்கரநாராயணன்

 •

கார்த்திகேயன் இறந்துவிட்டார், என்று கேள்விப்பட்டதுமே, அடாடா, என்று அவருக்கு மைதிலி ஞாபகம் வந்தது. மைதிலி நெருங்க முடியாத தேன்கூடாய் இருந்தாள் அவருக்கு. அது ஒரு காலம். இப்போது மைதிலிக்கே கல்யாணம் ஆகி இருபது இருபத்தியிரண்டு வயதில் ஒரு பெண் இருக்கிறாள். அவள் பெயர்கூட... அதைப்பற்றி என்ன, அவள் மைதிலியின் பெண். அது போதும். அதைவிட வேறென்ன அடையாளம் வேண்டும்.

பெண்களில் மைதிலி, அவளே தனிப்பெரும் அடையாளம். மைதிலி ஞாபகம் தன்னில் கமழும் தோறும், தான் இளமையாகி விடுவதாய் அவர் உணர்ந்தார். எல்லா ஆண்களுக்குமே அப்படித்தான் இருக்கும், என ஒரு புன்னகையுடன் அவர் நினைத்துக் கொள்வது உண்டு. ஆண்களுக்குப் பெண்கள் வாசனை வியூகம் தான்! அதாவது காதல் வயப்பட்ட ஆண்களுக்கு. வாசனை என்று கூட இல்லை. அவள் சார்ந்த ஓர் அந்தரங்கபூர்வமான விஷயம், எனக்குத் தெரியுமாக்கும், என்பது மகிழ்வூட்டுகிறது அவர்களை. அந்த அலுவலகம் மைதிலிவாசனையால் நிரம்பி வழிந்தது ஒரு காலம். தலைநிறைய பூ வைத்த மைதிலி. கருப்புச் செடியில் பூத்த மல்லிகையாட்டம். சிரிக்கும்போது எந்த அளவு உதடு விரிக்க வேண்டும், என்பன போன்ற நளின நாசூக்குகள் அவளுக்கு அத்துப்படி. பெண்களுக்கு மாத்திரமே இப்படி வித்தைகள் தெரிகின்றன. அவர்கள் மிக சாதுர்யமாக அவற்றைப் பயன்படுத்தவும் வல்லவர்களாக இருக்கிறார்கள். சில பெண்கள் அலுவலகத்தையே சுயம்வர மண்டபமாக ஆக்கி விடுகிறார்கள்.

ஆ, அவள் பெயர் கீதா! மைதிலியின் பெண். ஞாபகம் வந்து விட்டது!

கோபிநாத் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முயன்றார். மைதிலியின் கணவர் கார்த்திகேயன் இறந்துவிட்டார். செய்தி பயத்துடன் ஓரளவு எதிர்பார்த்ததுதான். . கார்த்திகேயன் நல்ல சுத்த பத்தமான மனிதர். எப்பவுமே உடல் ரீதியாகவும் உணவு ரீதியாகவும் ரொம்ப கட் அன்ட் ரைட்டாக இருப்பார். அலுவலக நுழைவாயிலில் சானிடைசர், அதைக் கட்டாயம் அவர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்துகொண்ட பின்புதான் உள்ளே வருவார். மாஸ்க் அணிந்தே வருவார். ஹெல்மெட், மாஸ்க் போன்ற முன்ஜாக்கிரதைகள் அவரிடம் இருந்தன.

என்றாலும்... கவனித்தார். நா அரும்புகளில் ருசி தட்டவில்லை. தண்ணீரையே ருசித்துக் குடிக்கிற மனுசன் அவர். லேசான தலைவலி. பிறகு காய்ச்சல் வந்தது. அவர் பக்கத்தில் போனாலே அந்த வெப்பம் நம்மை எட்டியது. அடுப்பு போல இருந்தது உடம்பு. அலுவலகத்தில் அவர் விடுப்பு சொன்னார். காய்ச்சல் உத்தேச மாத்திரைகளுக்கு அடங்கவே இல்லை. எதற்கும் பார்த்து விடலாம் என்று அவர் வீட்டுக்கே லாப் ஆளை வரவழைத்து ‘ஸ்வாப்’ எடுத்தார். ஒரே நாளில் முடிவு வந்தது. அவருக்கு கோவிட் 19 பாசிடிவ்.

உடனே பரபரத்து ஆஸ்பத்திரி தேடி... ஆக்சிஜன் வசதி கிடைக்குமா, என்று நாலைந்து மணிநேரம் தொலைபேசிக் களேபரம். எல்லா ஆஸ்பத்திரியும் இடமில்லை இடமில்லை என்றார்கள். டிராவல்ஸ் பஸ் போல எத்தனை பெட் ஒண்ணா ரெண்டா என்று கூட ஒரு ஆஸ்பத்திரியில் கேட்டார்கள். ஒருவழியாக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில், கிரெடிட் கார்டில் நிறைய முன்பணம் கட்டி  சேர்ந்தார். ஏற்கனவே நிறையப் பேர் அங்கே கோவிட் கேசுகள் இருந்தார்கள். பெரியவர்கள் என்று இல்லாமல் பள்ளிவயதுப் பிள்ளைகள் கூட இருந்தது அவருக்கு வருத்தமாய் இருந்தது. முன்னெல்லாம், பிள்ளை பிடிக்கிறவன் வர்றான். ஓடி ஒளிஞ்சிக்க, என்று குழந்தைகளுக்குக் கதைகளில் சொல்வார்கள். கொரோனா பிள்ளை பிடிக்கிற வேலையைத்தான் செய்கிறது. கவலையுடன் கண்ணை அவர் மூடினார். கண்ணில் வெந்நீர் வழிந்தது.

அவர் அட்மிட் ஆன செய்தி கேட்டு, அலுவலகத்துக்கு இரண்டு நாட்கள் விடுப்பு விட்டார்கள். அறை முழுக்க கிருமிநாசினி தெளித்தல்... போன்ற வேலைகள் வேகமெடுத்தன. இரண்டு நாட்களுக்குப் பிறகு எல்லாருக்கும் திரும்ப அலுவலகம் வரவே சற்று திகிலாய் இருந்தது. எல்லாரும் கார்த்திகேயன் உட்காரும் நாற்காலியை வெறித்துப் பார்த்தார்கள். நாம போய் அவரைப் பார்க்க முடியுமா?

“கொரோனா வார்டுல சொந்தக்காரங்களே உள்ள அனுமதி இல்லை...”

கார்த்திக்கு புகை பிடிக்கிற கெட்ட பழக்கம் இருந்தது. சில மன அழுத்தமான சந்தர்ப்பங்களில், அலுவலகத்தில் எதாவது மீட்டிங் என்று பெரிய விஷயம் பேசினால், அவர் பாஸின் அனுமதியோடு அந்தக் கூட்டத்திலேயே புகை பிடித்தார். பெரிய கை. வேறு ஊழியர்கள் அதை மறுத்துப் பேச மாட்டார்கள். கோவிட் மூக்கில் நழைந்து நுரையீரலை எட்டுகிறது. மூச்சுத் திணறல் அவருக்கு எற்பட்டது. விடாமல் அடக்க மாட்டாமல் கார்த்திகேயன் இருமிக் கொண்டிருந்தார். நுரையீரலை ஸ்கான் செய்து பார்க்க அழைத்துப் போனார்கள். முன்பணம் நிறையக் கட்டி யிருந்தார்.

வீட்டில் பெண்ணைத் தனியே விட்டுவிட்டு மைதிலி ஆஸ்பத்திரியில் கூட இருந்தாளா தெரியவில்லை. ஆஸ்பத்திரியில் நோயாளி அருகே அனுமதிக்க மாட்டார்கள். வெளி வராந்தாவில் நிறைய நாற்காலிகள். ஒரு பொது டி.வி. திடீரென்று யாராவது நர்ஸ் அந்த அறைக்கு வந்து, “காவேரியம்மா அட்டென்டர்?” என்று கூப்பிட கூட்டம் முகம் மாறி பரபரக்கும். “இன்னும் பணம் கட்டணும்” என்றோ, “இந்த மருந்தை வாங்கிட்டு வாங்க” என்றோ தகவல் தருவார்கள். ரெம்டிசிவர் மருந்துக்கு ஊரே திருவிழாக் கூட்டமாக அலைகிறது வெளியே.

சேர்ந்த மறுநாளில் கார்த்திகேயன் தீவிர கண்காணிப்புக்கு மாற்றப்பட்டார். தொற்று நுரையீரலுக்குள் நுழைந்திருந்தது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. பிராணவாயு தேவைப்பட்டது. யானைக்கு தும்பிக்கை போல அவர் முகத்தில் ஆக்சிஜன் குழாயைப் பொருத்தினார்கள். ஸ்டீராய்ட் கொடுக்கவேண்டி யிருக்கலாம். காய்ச்சலை இறக்கியாகி வேண்டும் முதலில். மைதிலியை ஆஸ்பத்திரியில் காத்திருக்க வேண்டாம், என்று சொல்லி விட்டார்கள். அவசரம் என்றால் அவர்களே தொலைபேசியில் தகவல் தருவார்கள். தினசரி மாலை நாலு மணி அளவில் நோயாளியோடு வீடியோ காலில் பேச அனுமதி உண்டு. நோயாளிக்கு உடம்பு முடியவேண்டும். முகநூலில் மைதிலி தகவல் தெரிவித்தபோது நிறைய ஆறுதல் அடிக்குறிப்புகள் வந்தன.

கோபிநாத் முகநூலில் இல்லை. கோபிநாத் மைதிலியை வீட்டிலோ ஆஸ்பத்திரியிலோ போய்ப் பார்க்கலாம், பார்க்கலாம் என்று உள்துடிப்பாய் இருந்தார். அங்கே சுற்றி இங்கே சுற்றி கோவிட் நம்ம பக்கத்திலேயே வந்து உட்கார்ந்து கொண்டது. ஒரு அலைபேசி அழைப்பில் கூட அவளிடம் பேசலாம். தயக்கமாய் இருந்தது. இதுநாள் வரை அவர் கணவர் இருக்கும் போது அவளிடம் தனியே அலைபேசியில் பேச யோசனைப் பட்டார். இப்போது அவர் கணவர் அருகில் இல்லை. பேச்சும் அவர் உடல்நலம் பற்றி விசாரிப்புதான்... என்றாலும் தயக்கமாகவே இருந்தது. மைதிலி இதை எப்படி எடுத்துக் கொள்வாள் தெரியவில்லை. ஒருவேளை என்னோடு பேச அலைகிறார் பார், என எடுத்துக் கொண்டு விடுவாளோ, என்று பயந்தார்.

மைதிலி கார்த்திகேயனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாள். இவருக்கு, கோபிநாத்துக்கு அவள் மேல் ஒரு கண் இருந்தது. அது அவளுக்குத் தெரியுமா? மைதிலி இம்மாதிரி விஷயங்களில் ரொம்ப சூட்சுமமானவள். அவளுக்கு அது தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. எந்த சம்பவச் சிக்கலையும் ஓர் அலட்சியச் சிரிப்புடன், மனசில் அவள் என்ன நினைக்கிறாள் என்று காட்டிக் கொள்ளாமல் தாண்டிச் செல்ல வல்லவள் மைதிலி. பாதிவேளை ஒரு சிரிப்பில் அவளால் நழுவிவிட முடிந்தது. ரவிக்கையிலும் புடவை பார்டரிலும் ஃப்ரில் வைத்துத் தைத்துக் கொண்டிருப்பாள். (உள்ளாடையிலும் ஃப்ரில் வைத்திருக்கக் கூடும். அதைக் கார்த்திகேயன் அறிவார்.) கண்ணுக்கு மைதீட்டி எப்பவும் சற்று திகட்டலான அலங்காரத்துடன் அவள் நடமாடினாள். மதிய உணவு இடைவேளைக்குப் பின் அவள் தனியறைக் கண்ணாடி முன் இன்னொரு கோட் பட்டை தீட்டிக் கொண்டாள்.

ஆண்களைத் தொந்தரவு செய்யும் விடாத முயற்சியாக அது கோபிநாத்துக்குப் பட்டது. அவளைப் பார்க்கக் கூடாது, என்கிற அவனது முன் தீர்மானங்கள்... கண் தன்னைப்போல அவள் அசைவுகளை அளந்த வண்ணம் இருந்தன. அவனுக்கே இதுகுறித்து வெட்கமாயும், பிடித்தும் இருந்தது இந்த விஷயம். மைதிலி அவனைத் தாண்டிப்போகும் தோறும் அவளிடம் இருந்து வரும் அந்த பான்ட்ஸ் பவுடர் வாசனையைக் கிட்டத்தில் நுகர அவனுக்கு வேட்கை வந்தது. மகா அமைதியான அந்த அலுவலகம், அவள் கால் மாற்றிப் போட்டு உட்கார்கிற அந்த சிறு கொலுசுச் சிணுங்கலுக்கும் நீரில் கல்லெறிந்த சலனம் கண்டது.

அதிகம் யாரோடும் பேசாத ஓர் அலட்சியமற்ற கவனிப்பு. ஆண்களை ஓர் எல்லையிலேயே நிறுத்தி விளையாட்டு காட்ட வல்லவள் மைதிலி. ஆண்கள் ஏன் ஓர் எல்லையை நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும். அவளை ஏன் அத்தனை லட்சியம் செய்ய வேண்டும், என்று தெரியவில்லை. வேலையில் ரொம்ப சிறப்பானவள் என்றெல்லாம் சொல்ல முடியாது. சற்று ஒயிலான நடை வசிகரம். தன் உருவம் சார்ந்த அலட்டல். சிறப்பு கவனம். உதட்டுச் சாயம் அவளை இன்னும் வெறிக்க வைத்தது. கைகளில் நகப்பூச்சு. கச்சிதமான இறுக்கமான உடைகள். கண்ணாடி போட்டால் வயதாகக் காட்டும் என கான்டாக்ட் லென்ஸ் அணிந்தாள். வாழ்க்கை என்பது சுவாரஸ்யங்களின் குவியல் என அவள் நம்புவதாக அவனுக்குத் தோன்றியது.

அவனது இந்த இணக்கப் போக்கு, அல்லது காதல் அறிகுறிகளை அந்த அலுவலகத்தில் வேறு யாரும் அறிந்திருந்தார்களா தெரியவில்லை. அவனே தன்னை அவள்முன்னே வெளிப்படுத்திக் கொள்ளத் தயங்கினான். அத்தனைக்கு அவள் பிடி தருகிறவளும் அல்ல. ஆண்களின் சூத்திரதாரி போல அவள் அவர்களைப் பொம்மலாட்டம் ஆட்டினாள். அவளிடம் பொம்மலாட்டக் கயிறுகளைத் தந்தது யார் தெரியவில்லை.

நுரைக்கத் தயாராய் இருக்கும் சோடா, பாட்டிலுக்குள் அடைபட்டிருப்பதைப் போல அவன் தனக்குள்ளேயே மருகிக் கொண்டிருந்தான். தவிர்க்கவே இயலாத அவளது வசிகர வலைக்குள் தான் சிக்குண்டு விட்டதை அவள் அறிவாளா? சிக்க வைத்தவள் அவளே. ஆனால் அதை அறியாத பாசாங்குடன் அவள் நடமாடுகிறாள். பிடித்த இரையைத் தப்பிக்க விடாமல் அதேசமயம் உடனே உண்ணாமல், அதன் உயிர்ப் பயத்தை, திகைப்பை வேடிக்கை பார்க்கிற பெரிய விலங்கின் குறும்பு அது.

அவனைத் தாண்டிப் போகும் போதெல்லாம் அவள் அவனை கவனிக்காத பாவனை கொண்டாடினாள். அந்த அதித அலட்சியமே அவளைக் காட்டிக் கொடுத்தது. அப்படி தலையைக் குனிந்துகொண்டு அதித பவித்ர பாவனை கொண்டாடுகிறவள் அல்ல அவள். அலுவலகத்தில் சக பெண்களுடன் அவள் சகஜபாவனை காட்டவே செய்தாள். மேகமல்ல நான் வானவில், என அந்தப் பெண்கள் மத்தியில் அவள் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பி யிருக்கலாம்.

அந்த அலுவலகத்தின் ஆண்கள் யாருடனும் அவள் அதிகம் பேசியதே இல்லை. வலியப்போய் ஆண்கள் அவளிடம் பேச வேண்டும், என அவள் எதிர்பார்த்திருக்கலாம். தானே தனக்கு முடி சூட்டிக்கொண்டு. ராணி என அவள் வளைய வந்தாப் போல இருந்தது. அவளைப்போலவே தன் கொடியை உயர்த்திப் பிடிக்க அங்கே வேறு பெண்கள் இல்லை.

கார்த்திகேயன் வேறொரு கம்பெனியில் வேலை செய்து இங்கே முதலாளியின் பிரத்யேக அழைப்பில் வந்து சேர்ந்தவர். அவ்வளவில் அவருக்கு வேறு யாருக்கும் கிட்டாத அநேக சலுகைகள் அங்கே வாய்த்தன. உதாரணம் அவரது தோரணையான சிகெரெட் புகைத்தல். அதற்கு முதலாளி மறுப்பு சொல்லவே இல்லை. வேறு ஆண் யாரும் அங்கே புகை பிடிப்பது இல்லை, கோபிநாத் அறிந்த அளவில். அவரும் புகைப்பது இல்லை. நல்ல படிப்பும், உயர் ரக தோரணையுமாக கார்த்திகேயன். சட்டையை இன் பண்ணி, டை கட்டி அலுவலகம் வருவார். அலுவலக உடை என்று ஒரு நேர்த்தி அவரிடம் வைத்திருந்தார். கூடவே சிகெரெட். அது ஒரு பந்தா.

ஆளால் ஆளையே அலலவா அது பலிவாங்கி விட்டது. முதலில் ஆக்சிஜன் வைத்தார்கள் அவருக்கு. பிறகு அவர் மனைவியைக் கூப்பிட்டுப் பேசி வென்ட்டிலேட்டர் வைக்க கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். உள்ளே புகுந்த கிருமியை விரட்ட என்று குழாய் குழாயாய் உள்ளே செருகினாற் போலிருந்தது. இருந்த வலியில் உதைத்துக் கிழித்து இணைப்புகளை நோயாளி பிய்த்து வீசிவிடுவார் என்று கையைக் காலைக் கட்டிப் போட்டிருந்தார்கள்.

எல்லாம் கேள்விப்பட்டார் கோபிநாத்.  வார்டு வெளியே இருந்து கார்த்தியைக் காட்டினார்கள். ஆளே அடையாளம் தெரியவில்லை. அக்டோபஸ் என்று கடல் பிராணி கேள்விப்பட்டிருக்கிறாள். அதைப் போலிருந்தார் அவர். யாரைப் பார்த்தாலும் இருந்த உடல் வலிக்கு, தன் இணைப்புகளை விடுவிக்கும்படி திரும்பத் திரும்ப எல்லாரிடமும் பாவனையால் அவர் கெஞ்சுவதாகப் பட்டது. “பார்க்க அவர் தெளிவா இருக்கறதாத் தோணுது... எல்லாம் வென்ட்டிலேட்டர்ல இருக்கற வரைதான். அவர் முழுசா தன் நினைவில் இல்லை” என்றார் மருத்துவர்.

தான் என்கிற அந்த நிமிர்வு, பாவம் காலம் அவளைத் தள்ளாட்டிக் கொண்டிருந்தது. யாரும் எதிர்பாராமல், உலகமே எதிரபாராமல் இந்தக் கொரோனா எல்லார் வாழ்விலும், உலகம் பூராவிலும் புகுந்து புறப்படுகிறது. காலையில் அலுவலகம் போகும்போது வந்த பாதையில் திரும்பப் போக முடியாது போகிறது. அந்தப் பகுதி அடைக்கப் பட்டிருக்கிறது. கோவிட் பரவும் வேகம் பயமுறுத்துகிறது. மரண எண்ணிக்கை வேறு கலவரப் படுத்துகிறது.அவரது நெருங்கிய வட்டத்திலேயே நிறைய மரணச் செய்திகள் வருகின்றன. போய் நேரில் பார்த்து ஆறுதல் சொல்லக்கூட முடியவில்லை. அலைபேசியில் விசாரிப்பதோடு சரி. இதே ஊர் என்றாலும் வெளியே போக அனுமதி இல்லை. வெளியூர் என்றார் ஈ பாஸ் அது இது, என்று நிறைய கெடுபிடிகள்.

மைதிலியின் சங்கடமான தருணங்களை நினைத்து வேதனைப்பட்டார் கோபிநாத். அவள் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வரை அதிகம் அவளோடு பேச வாய்க்கவே இல்லை. ஒரு உபாசகனைப் போலவே நான் தள்ளி நின்று அவளிடம் மயங்கிக் கிடந்தேன். ஒருவேளை இந்தக் காதல்... நிறைவேறாது, என எனக்கே புரிந்திருக்கலாம். அதை வெளிப்படையாக நான் ஒத்துக்கொள்ள மறுத்தேன். என்றாலும் காதல்... மற என்றால் மேலும் தீவிரமாக அது நினைக்க வைத்து விடுகிறது.

ஆனால் கார்த்திகேயனுக்கு அவளிடம் ஒரு கவனம் இருந்ததை கோபிநாத் உணரவே இல்லை. கோபிபற்றி அவர் அறிந்தும் இருக்கலாம். அதுபற்றி அவர் பெரிதும் சட்டை செய்யாமல் இருந்திருக்கலாம். கோபிக்கு ஒருபடி மேலான ஸ்தானம் வகிப்பவர் கார்த்தி, என்ற அளவில் அவருக்கு இருந்த செல்வாக்கும், அதிகாரமும் அவரை அப்படி அலட்சியமாய் இருக்க வைத்திருக்கலாம்.

கார்த்திகேயன் காதல் வயப்படுபவனா, என்பதே ஆச்சர்யமான விஷயம் தான். அலுவலக விஷயமாக அவன் அடிக்கடி மைதிலியைத் தன் அறைக்கு அழைத்துப் பேசுவான். கோபிநாத் அது சாதாரண அலுவலக நடைமுறை தானே, என நினைத்தான். எப்போது எப்படி அவன் மைதிலியிடம் தன் காதலைச் சொன்னான், அல்லது அவளைத் திருமணம் செய்துகொள்ள அவள் சம்மதத்தைக் கேட்டான், எதுவும் தெரியாது. இல்லை, மைதிலிதான் முதலில் அவனிடம் தன் காதலைச் சொன்னாளோ? தன்னிடம் நெகிழ்ந்து கொடுக்காத மைதிலியின் இதயம் அவனிடம், கார்த்தியிடம் இழைந்து கொண்டதோ ஒருவேளை. வாழ்க்கை என்பதே புதிர் அகராதி. புதிர்கள் மேலும் புதிர்களையே போடுகின்றன.

திடுதிப்பென்று கார்த்திகேயன் எல்லாரையும் ஆச்சர்யப் படுத்தினான். கார்த்திகேயன் மைதிலி இருவருமே ஒன்றாக கோபிநாத்திடம் வந்து கல்யாணப் பத்திரிகை தந்தார்கள். பிரித்துப் பார்த்தபோது கோபிநாத்துக்குக் கைகள் சிறிது நடுங்கின. “அடேடே... அடேடே...” என்று அப்படியே நாற்காலியில் இருந்து எழுந்து நின்றான். அதற்குமேல் அவனால் பேச முடியவில்லை. அதுவரை மைதிலியை நேருக்கு நேர் பார்க்காதவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். “அவசியம் வாங்க” என்றாள் மைதிலி. அடுத்த நாற்காலிக்கு அவர்கள் நகர்ந்தார்கள். மைதிலியும் கார்த்திகேயனும் அலுவலக இடைவேளையில் ஒன்றாய் காபி சாப்பிட என்று கிளம்பிப்போனதோ, அல்லது சேர்ந்து அருகருகே இழைந்து சிரித்துக் கொண்டதோ... அதுவரை யாருமே பார்த்தது இல்லை. இத்தனையும் தாண்டித்தானே கல்யாணம் வரை வரும் விஷயம்?

பரவாயில்லை என்று மைதிலியிடம் அவன் தன் காதலைச் சொல்லி யிருக்கலாம். ஆனால் இதுவரை அவள் அவனிடம் சுமுக பாவத்துடன் அருகில் வந்து பேசினால் தானே? இத்தனைக்கும் அந்த அலுவலகத்தில் அவனது வேலைகளுக்கு நல்ல பேர் இருந்தது. கோபிநாத்தின் கையெழுத்து குண்டு குண்டாக அழகாக இருக்கும். எந்தக் கடிதத்தையும் ‘டிராஃப்ட்’ செய்ய வல்லவன். முதலாளிக்கு அவனது கையெழுத்து பிடிக்கும். அவசர வேலை என்று அவர் சொன்னால் மாலை எத்தனை நேரம் ஆனாலும் அவன் முடித்துத் தந்துவிட்டுப் போனான். அலுவலகத்தில் அவனது நற்பெயர்... அது அவளைக் கவரும். நான் அவசரப் படவில்லை. அவள் காலப்போக்கில் என்னை நெருங்கி வருவாள்... என நம்பி யிருந்தான். இலவு காத்த கிளி.

அன்றைக்கு இரவு அவனுக்கு உறங்க முடியவில்லை. அந்தக் கார்த்திகேயன், படவா அவன் கோபிநாத்தை ஒரு போட்டிக்காரனாக லட்சியமே செய்யவில்லை. இருக்கட்டும். அந்த மைதிலி, அவளும் அவனை நெருங்கவே விடவில்லை அல்லவா? ஆனால்.... அப்படி எப்படிச் சொல்ல முடியும்? அவனது காதல் உண்மை என்றால் அவனே வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும். அந்தக் காதலை வளர்த்தெடுக்க முயற்சிகள் கைக்கொண்டிருக்க வேண்டும். அவள் அவனைப் பற்றி என்ன நினைக்கிறாள்... என்ற பதிலையாவது அவன் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

உண்மையில், அவன் எந்நேரமும் அவளை தான் விரும்புவதாகச் சொல்லக்கூடும், என அவள் கட்டாயம் எதிர்பார்த்தே யிருப்பாள். தவிரவும், ஒரு அலுவலகத்து சக ஊழியன் அவன். இதில் எந்த விகல்பமும் அவள் காண முடியாது. தன் காதலை மிக எளிமையாகவே அவளால் மறுத்து விடவும் முடியும். என்றானபோது அவன்தான் தயங்கி பயந்து வாய்ப்பை நழுவ விட்டுவிட்டதாகத் தோன்றியது.

கண்ணில் சிறு அளவு கண்ணீர் கூட வந்த அந்த இரவு இப்பவும் ஞாபகம் வந்தது அவருக்கு. சில இடங்களின் ஈரம் எப்பவும் காய்வதே இல்லை. இந்த இருபத்தி நான்கு, ஐந்து வருட ஈரம் இப்பவும் அவருக்கு குளிர்ச்சி தட்டச் செய்கிறது, அதுவும் அவருக்கே திருமணமாகி பிளஸ் ட்டூ வாசிக்கிற பையன் இருக்கிற போது! அவரது திருமண வாழ்க்கை ஒன்றும் மோசமில்லை தான். என்றாலும் மைதிலி என நினைக்கவே அவருக்குள் ஓர் உணர்ச்சி கொந்தளிப்பதை என்ன செய்ய தெரியவில்லை. மைதிலி பற்றி இவளுக்கு, அவர் மனைவிக்கு எதுவும் தெரியாது. அவரும் சொல்லவில்லை.

மைதிலி திருமணத்துக்குப் பின் வேலைக்கு வருவதை நிறுத்திக் கொண்டாள். அவர் ஒருத்தரின் சம்பளம் போதும் என அவள், அவர்கள் முடிவு செய்திருக்கலாம். அல்லது, கோபிநாத் பற்றி ஒரு யூக அளவில் அறிந்த கார்த்திகேயன் அவள் இனி அலுவலகம் வரவேண்டாம் என்று தவிர்த்திருக்கலாம். திருமணத்துக்கு ஒரு வாரம் முந்தியே மைதிலி வேலையில் இருந்து விலகிக் கொண்டாள். அதுவரை அவளை அலுவலகத்திலாவது அவனால் பார்க்க முடிந்தது.

கல்யாணம் நெருங்க நெருங்க அவளது அலங்கார அமர்க்களங்கள் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். கைக்கு மெஹந்தி. புருவம் திருத்துதல் என்று அழகு நிலையம் புகுந்து புறப்பட்டிருப்பாள். இனி அதெல்லாம் கார்த்திகேயன் மாத்திரமே அறிகிற செய்திகளாக ஆகிவிட்டன. அவர்கள் கல்யாணத்துக்கு கோபிநாத் போயிருந்தான். அவன்கூட வரிசையில் கிருஷ்ணன். “நல்ல ஜோடிப் பொருத்தம், இல்ல இவனே?” என்று இவனைப் பார்த்துச் சொன்னான் கிருஷ்ணன்.

நேரடியாக அவளிடம், மைதிலியிடம் பேசாமலேயே, மற்ற பெண்களிடம் அவள் அலட்டுகிற சிரிப்புகளிலேயே அவளை அறிந்திருந்தான் கோபி. மைதிலி இப்போது அவன் கண்களுக்கே மறைந்து விட்டாள். அடுத்த ஆறேழு மாதத்தில் கோபிநாத் கல்யாணம் செய்து கொண்டான். அப்பா அம்மா பார்த்த பெண். அவனது கல்யாணத்துக்கு கார்த்திகேயன் மாத்திரம் வந்திருந்தான். மைதிலி வரவில்லை. “அவ முழுகாம இருக்கா...” என்றார் எல்லாரிடமும்.

முழுகாம இருக்காளாமே. சரி அதைப்பற்றி என்ன, என நினைத்துக் கொண்டான். இப்போது அவள் முகத்தைப் பார்க்க ஆவலாய் இருந்தது. இப்போது வயிற்றை இப்படி அப்படி அசைத்தபடி தெருவில் பெண் பிள்ளையாராட்டம் நடந்து வருவாளா? இப்பவும் அதே அளவு அலங்கார அமர்க்களங்கள் செய்து கொள்கிறாளா? அவள் அவனிடம் இன்னுங் கொஞ்சம் சகஜமாக நாலு வார்த்தை பேசியிருக்கலாம். ஒருவேளை அவளது அந்த விலகலே நான் நெருங்கிவர என்று அவளது காத்திருப்பை உணர்த்தி யிருக்கலாம். என்னவோ... எத்தனையோ நடந்து விட்டது!

இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இதோ கார்த்திகேயனின் உடல்நலக் குறைவால் எல்லாம் மேலடுக்குக்கு வருகின்றன. இந்நேரம் இப்படி நினைவுகள் வரவேண்டிய தேவை என்ன? மனம் ஒரு குரங்கு. எதையாவது நினைக்காதே என்றால் அது அதையே நினைக்க ஆரம்பித்து விடுகிறது. அவளுக்குக் குழந்தை பிறந்தது தெரியும். பெண் குழந்தை. கார்த்திகேயன் எல்லாருக்கும் அலுவலகத்தில் இனிப்பு தந்தார். கீதா. அவளது முதல் பிறந்த நாள் என்று அலுவலகத்தில் எல்லாருமாய்ப் போய் வந்தது நினைவு உண்டு. யப்பா, அன்றைக்கு அவர் எதிர்பார்த்தபடி மைதிலி தேவதையாய்ப் பொலிந்தாள். தலைமுடியை அப்படியே விட்டு அதில் ஜிகினா தூவியிருந்தாள். சுய பெருமை மிக்கவள் தான். அவனை அவள் பார்த்த பார்வையில் அந்த ஜெயித்த கர்வம் இருந்தது. இக்காலங்களில் அவள் மனதில் இருந்து நான் அழிந்தே போயிருப்பேன்... என்று இருந்தது கோபிநாத்துக்கு.

வென்ட்டிலேஷன் வைத்தாலே நோயாளி கடுமையாகப் போராடுகிறார் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இனி அதை வேண்டாம் என்று பாதியில் எடுக்க முடியாது. இப்போது அவரது உயிரைப் பிடித்துவைத்திருப்பதே வென்ட்டிலேட்டர் தான் என்றார்கள். அதிகாரச் செருக்கு மிக்க கார்த்திகேயன், அடங்கி ஒடுங்கி மூச்சுவிட முடியாமல் தவித்து திணறி போராடி ஓர் பின்னிரவுப் போதில் இறந்து போனார்.

மொத்த அலுவலகமே துக்கம் கொண்டாடியது. உடலைத் தர மாட்டார்கள். ஆம்புலன்ஸ் வீட்டு வளாகம் வரை வந்து முகத்தைக் காட்டும். தள்ளி நின்று பார்த்துவிட்டு அகன்று விட வேண்டும். அடக்கமோ எரியூட்டலோ அவர்களே ஏற்பாடு செய்து கொள்வார்கள், என்றார்கள். யாரும் போய் மைதிலியைப் பார்க்க வகையில்லை. சந்தோஷத்தை விடு, துக்கத்தை இப்படி தனியே அனுபவிக்க விட்டு விடலாமா? கோவிட் காலங்கள் அப்படித்தான் ஆகி விடுகின்றன.

நாலைந்து நாள் கழித்து முதலாளி அனைவருடனும் கலந்து பேசினார். எதிர்பாராத இந்த மரணத்துக்கு நாம யாருமே எந்த ஆறுதலும் தந்துவிட முடியாது. மைதிலி மேடம், அவங்களே நம்ம அலுவலகத்தில் வேலை செய்தவங்க தான். இப்ப கணவரை இழந்து துக்கப்பட்டு நிற்கையில் நம்மால முடிந்த சிறு ஆறுதல், அவரோட பொண்ணு... கீதா பிபிஏ முடிச்சிருக்கு. கம்பேஷனேட் கிரவுண்டில், அவரோட பொண்ணுக்கு நம்ம அலுவலகத்தில் வேலை கொடுக்கலாம்னு இருக்கேன்... என்றார்.

எல்லாருக்குமே அந்த யோசனை பிடித்திருந்தது.

மைதிலியை அவரே கூப்பிட்டு தகவல் சொன்னார். ஒரு வாரத்தில் கீதா எங்கள் அலுவலகத்தில் வேலை ஏற்றுக்கொள்ள வந்தாள். குழந்தை வயதில் கோபி அவளைப் பார்த்திருந்தார். இப்போது பருவ வயதுப் பெண். அவள் முகம் எப்படி இருக்கும், மைதிலி சாயலில் இருக்குமா, அப்பா சாயலில் இருப்பாளா தெரியவில்லை.

கீதாவோடு மைதிலியும் துணைக்கு என்று வந்திருந்தாள். யப்பா, அவள் அந்த அலுவலகப் படிகளை மிதித்து இருபது இருபத்தி ஐந்து வருடங்கள் ஆகி யிருக்குமே. கோபிநாத்துக்கு அவளைத் திரும்பவும் அங்கே பார்க்க வருத்தாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.கார்த்திகேயன் இறந்து போனதும் அலுவலக இருக்கைகளை இடம் மாற்றிப் போட்டிருந்தார்கள். பழைய நினைவுகள் யாருக்கும் வேண்டாம்.

மென்மையான அலங்காரத்துடன் மைதிலி வந்திருந்தாள். காலம் அவள் மிடுக்கை சற்று தளர்த்தி யிருந்தது. அவள் வந்த சூழலினாலும் அப்படி இருக்கலாம். அந்தப் பெண் ஒல்லியாய் இருந்தது. என்றாலும் எல்லாரையும் இதமாய்ப் பார்த்துப் புன்னகை செய்தது. முதலாளி அறைக்குள் மைதிலியும் கீதாவும் போய்ப் பேசிவிட்டு வந்தார்கள். கீதா தன் இருக்கையில் அமர்வதை கோபிநாத் பார்த்தார். பிறகுதான் அது நடந்தது. அதுவரை அவரிடம் அநேகமாகப் பேசாதவள், மைதிலி அவரைப் பார்க்க வந்தாள்.

“பெண்ணை பத்திரமாப் பாத்துக்கங்க” என்றாள் மைதிலி.

•••

Mob 91 97899 87842 / whatsApp 94450 16842

storysankar@gmail.com

 

Thursday, August 5, 2021

 சிறுகதை / நன்றி அமுதசுரபி / ஆகஸ்டு 2021

ப ற வை வ ம் ச ம்

எஸ்.சங்கரநாராயணன்

 ப்பாவின் ஊர் தாமிரவருணிக் கரை. ஊர்சார்ந்த பேச்சும் நினைவுகளும் எப்பவுமே அப்பாவுக்குப் பிடிக்கும். தனது பழைய நாட்களை நினைக்கும்தோறும் அவர் முகத்தில் தோன்றும் புன்னகையை, பிரகாசத்தை ரவி ரசிப்பான். சில இரவுகளில் கரன்ட் கட்டாகி எல்லாரும் மொட்டைமாடியில் படுத்துக் கொள்வார்கள். அப்பாவுக்கு அந்த வெளிக்காத்து ரொம்ப இஷ்டம். சாதாரண நாளிலேயே இரவில் சாப்பிட வருமுன் மொட்டைமாடியில் உலாத்திக் கொண்டிருப்பார். படுக்க என்பது இன்னும் விசேஷம். தூக்கம் வராமல் அப்பா எதாவது பேசிக் கொண்டிருப்பார். மகன் மேல் அபார பிரியம் உள்ள அப்பா. அது சுஜாதாவுக்குத் தெரியும். அவள்அப்பா இத்தனை ஒட்டுதலாய் எல்லாம் நடந்து கொண்டது இல்லை. பெண்பிள்ளை என்று சற்று விலக்கம் காட்டி யிருக்கலாம். அண்ணா ரமணியும் அவள்அப்பாவும் கூடத்தில் படுக்க சுஜாதா தன் அம்மாவுடன் உள்ளறையில் படுத்துக் கொள்வாள். இந்த வயசிலும் அவள் கணவன் ரவி அப்பா அருகில் அவரைக் கட்டிக்கொண்டு படுத்திருப்பான். இன்னும் அவன் அப்பாகோண்டு. அவளுக்கு ஆச்சர்யமாய் இருக்கும்.

“பக்கத்துக் கருங்குளம் கோவில்ல தேர்னாலே இங்க இருக்கற சனங்க எல்லாருமே நடந்தே கருங்குளம் போயிருவோம் அம்மா. ஏழெட்டு கிலோமீட்டர். அப்ப பெரிசா பஸ்சும் இல்லை. எங்க கிட்ட சைக்கிளும் இல்லை… தேவையும் இல்லைன்னு வெய்யி. மறுநாள் விசேஷத்துக்கு முந்தின்னாள் சாயங்காலமே இங்கருந்து சனங்க புறப்பட்டு சாரி சாரியாப் போயிட்டே இருப்பாங்க. ஊர்ல திண்ணை வெச்சிக் கட்டாத வீடே கிடையாது கருங்குளத்தில் ஒண்டிக்க. கிடைச்ச திண்ணை. யார் வீடுன்னு தெரியாது. போயித் தங்கினால் ராத்திரி ஒரு அரிசிஉப்புமா அந்த வீட்டுக்காரர் எல்லாருக்கும் உபசரிப்பார். மொத்த ஊருக்கும் பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் ஒரு லன்ச் ஹோம்னு இருக்கும். வேறு ஓட்டல் கிடையாது. இருந்தாலும் ஓடாது. ஆனா சனங்ளும் வேத்துமுகம் காட்டாமல் அதிதிகளை வரவேற்பாங்க. அத்தனை பிரியமாய் எல்லாரும் பழகுவாங்க.”

ரவிக்கு எல்லாம் தெரிந்த கதைதானே? இருந்தாலும் அவளிடம் சொல்கிறதாக மாமனார் தனக்குத் தானே ரசித்தபடி பேசிக் கொண்டிருப்பார். அவரது உரையாடலில் பாதி தன் ஊர்ப் பெருமையாக இருந்தது. அவரது பாதிப் பேச்சில் ரவி தூங்கி யிருப்பான். “நீ காலைல வேலைக்குப் போகணுமே அம்மா. வேணா தூங்கு” என்பார் கரிசனத்துடன். இங்கிதமான மாமனார். ஒரு வருஷம் முந்தி மாமியார் தவறிப்போனதில் இருந்து அவர் கொஞ்சம் ஷீணித்துத்தான் போனார். இந்த ஆண்கள் பாவம். ரொம்ப தைரியம், சாமர்த்தியம் என்று வளையவரும் ஆண்கள் மனைவி இறந்தபின் சட்டென காற்று இறங்கிய டயர் போல ஆகிவிடுகிறார்கள். அவள் மாமனாருக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. காலையில் மாமனார் வெறும் கஞ்சிதான். மதியத்துக்கு அவள் சமைத்து வைத்துவிட்டுப் போனால் தானே போட்டுக்கொண்டு சாப்பிடுவார். ஒரு மூணு நாலு மணிக்கு தானே காபி தயாரித்துக் கொள்வார். டிவி பார்ப்பார். புராணத் தொடர்கள் அவருக்கு இஷ்டம். ‘சங்கரா’வில் பஜன் சாம்ராட் பிடிக்கும்.

மாமனாரின் குரல் ஒருமாதிரி மூக்கு வழியே ஒலியெழுப்பி வரும். சற்று கண கண. சும்மாவா சொல்றாங்க, தெக்கத்திக் காரனுக்கு மூக்குல குத்தாலம்! தண்ணியப் பாத்தாலே ஒரு முழுக்கு போடத் துடிக்கிற சனங்கள். மேலே எப்பவும் அவர் ஈரிழை குத்தாலத் துண்டு போட்டுக் கொண்டிருப்பார். அவருள் எப்பவுமே எதாவது பாட்டு ஓடிக் கொண்டிருக்கிறாற் போலத் தோணும். உட்கார்ந்திருக்கையில் தானே காலாட்டியபடி அமர்ந்திருப்பார். தன்னை எப்பவும் இளமை மாறாமல் துடிப்புடன் வைத்துக் கொள்ளும் முனைப்பு அது என்று நினைத்துக் கொள்வாள்.

சுஜாதா முழுகாமல் இருந்தாள். இப்போதுதான் போன மாதம் பெண்மருத்துவர் உறுதி செய்தாள். ரவிக்கு நாலு வருஷமாய்க் குழந்தை இல்லை. இன்னும் வயது இருக்கிறது. நாம அவசரப் பட்டாப் போல எல்லாம் நடக்குமா, என நினைத்துக் கொள்வார் அப்பா சிறு கவலையுடன். ரவி திருநவேலி அல்வாவுடன் வீட்டுக்குள் நுழைந்தான். நல்ல சேதி சொல்லப் போகிறான், என்று அப்பாவுக்குப் புரிந்து விட்டது. செய்தி கேட்டதும், சட்டென்று “இதைக் கேட்க உங்கம்மா…” என்றபோது அவர் சற்று மௌனமானார். ரவியும் சுஜாதாவும் அப்படியே நின்றார்கள். என்ன செய்ய என்றே புரியாத திகைப்புடன். அப்புறம் அப்பாவே சமாளித்துக் கொண்டார். சிரிப்புடன் அல்வாவை ஒரு விள்ளல் வாயில் போட்டுக் கொண்டார். ”நம்ம ஊரு பெருமாளுக்கு ஒரு ஐந்நூறு ரூபாய் அனுப்சுருடா” என்றார் உற்சாகத்துடன்.

சட்டென அப்பா அப்படி அம்மாநினைப்பில் உள்சுருங்கியதையே அவனும் நினைத்தபடி இருந்தான். படுக்கையில் சுஜாதாவிடம் திரும்பி “அப்பாவை ஊருக்குக் கூட்டிட்டுப் போயிக் காட்டினாப்லயும் ஆச்சு. கோவிலுக்குப் போனாப்லயும் ஆச்சு. ரயில்ல புக் பண்ணிறவா? உனக்கு உடம்பு சௌகர்யப் படுமா இவளே?” என்று கேட்டான். மசக்கை மாதிரி அவஸ்தை எதுவும் இல்லை அவளுக்கு. அவள் சரி என்றாள்.

தான் பிறந்து வளர்ந்த ஊருக்குக் கிளம்புதல் என்கிற விஷயமே அப்பாவைக் கிளர்ச்சியுறச் செய்து விட்டது. அவர் முகம் ராத்திரி விளக்கு போட்டாற் போலப் பொலிந்தது- வீட்டில் இருந்தபடியே ரவி திருநவேலிக்கு மூணு டிக்கெட் இணையத்தில் முன்பதிவு செய்துவிட்டான். உள்ளே அப்பா அவரது பால்ய சிநேகிதர் உத்தண்டராமனுடன் பேசுவது கேட்டது. சரி. அப்பாவுக்கு அந்தப் பழைய உற்சாகம் மெல்ல மீள ஆரம்பித்து விட்டது என்று புரிந்தது. சுஜாதா அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

நீரும் நிலமும் செழித்த ஊர். ஒரே பள்ளிக்கூடம் குமரகுருபரர் பெயரில். அப்பா காலத்தில் இல்லாமல் இப்போது பக்கத்தில் கல்லூரி வந்திருக்கிறது. ஊர் அத்தனைக்குப் பெரிய மாற்றங்கள் காணவில்லை  ஆனால் அதுதான் அப்பாவுக்கு உவகை அளித்தது. தாமிரபரணி நதிக்கு மேலே, பெண் பிள்ளைகளுக்கு ரெட்டை சடை போட்டு பிறை வடிவத்தில் பூச்சரம் வைத்தாற் போல பாலம் ஒன்று வளைந்துயர்ந்து அடங்கியது. பாலத்தில் இருந்து நதியைப் பார்த்ததும் அப்பா கன்னத்தில் போட்டுக் கொண்டார். ஊரின் ஒவ்வொரு செங்கலும் அவர் அறிந்தது தானே. அதுவரை ஜன்னலோர சீட்டில் இருந்தவன் புன்னகையுடன் அப்பாவுக்கு தன் இருக்கையை விட்டு கொடுத்தான். பஸ் நிலையத்தில் இருந்து இறங்கி அவர்களை முந்திக்கொண்டு முன்னே நடையை எட்டிப்போட்டு நடந்தார் அப்பா. சுஜாதா புன்னகை செய்துகொண்டாள்.  

உத்தண்டராமனுக்கு தன் பால்ய சிநேகிதனைக் கண்ட குஷி. “ஏ வா வா… எப்டி இருக்கே?” என்று வீட்டு வாசலுக்கே வந்து அப்பாவைத் தழுவிக் கொண்டார் உத்தண்டராமன். “உன்னைப் பார்த்துக் கொள்ளைக்காலம் ஆச்சேடா…” என்றார். “நல்லவேளை நீ வர்றச்ச மழை பெய்து தாமிரபரணில தண்ணி ஓடுது. போன வருஷம்லாம் வேட்டியா கோமணமா ஒடுங்கிக் கிடந்தது நதி…” என்றார். உத்தண்டராமனுக்கும் குரலில் அந்த கண கண இருந்ததைப் புன்னகையுடன் கவனித்தாள் சுஜாதா.

அவரவர் பூர்விகம் அவரவருக்கு சொர்க்கம் தான். இங்கேயே பிறந்த வளர்ந்து கால் புழுதிபட ஒடித் திரிந்து களித்து விளையாடி… மாமனார் தன் பால்யத்தின் ஒரு பகுதியை நினைவுகளால் எட்டித் தொட்டிருக்கக் கூடும். உத்தண்டராமனின் பார்யாள் வந்து சுஜாதாவைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டாள். “எல்லாம் நல்ல விசேஷந்தான் போல…” என்று அவள் கேட்டபோது சுஜாதாவுக்கு வெட்கமாய் இருந்தது. சில மனிதர்கள் அன்றைக்குப் பார்த்தாற் போலவே இன்றும் அதே உடல்வாகுடன் இருக்கிறார்கள். அப்படியே குணம் மாறாமல் நடந்து கொள்கிறார்கள். கிராமத்தின் இலக்கணம் அது. அவசரம் இல்லாத உலகம். அவசரம் காட்டாத உலகம்.

உத்தண்டராமன் அந்த ஊர் போஸ்ட் மாஸ்டராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். அவர்அப்பா வழி சொந்த வீடு. அவர் பிள்ளை பாஸ்கர் அதே போஸ்ட் ஆபிசில் போஸ்ட்மேன். எட்டு வருடம் ஆகிறது. இன்னும் பணி நிரந்தரம் ஆகவில்லை. “வாங்கோ வாங்கோ எல்லாரும்… பிரயாணம் எல்லாம் நல்லபடியா இருந்ததோல்யோ” என்றபடியே புன்னகையுடன் உள்ளே வந்தான் பாஸ்கர். அவன் கையில் காய்கறிப் பை.

“போய்த் தாமிரபரணியில் ஒரு முழுக்கு போட்டுட்டு வரலாமா,” என்றார் அப்பா அவனிடம். அதுவரை சுஜாதா அவர்களுடன் வந்தது இல்லை. மாமனாரின் துடிப்பு அவளுக்குப் பிடித்திருந்தது. “எங்க ஓடிப் போறது நதி. இப்பதான் வந்திருக்கேள்… காபி பலகாரம் பண்ணலாமே. ராத்திரி எப்ப சாப்ட்டேளோ,” என்றார் உத்தண்டராமன். “எல்லாம் வந்து பாத்துக்கலாம். வர்றச்சயே திருநவேலி ஸ்டாண்டில் இவன் காபி வாங்கிக் கொடுத்தான்…” என்றார் அப்பா. ரவி அவளையும் குளிக்க அழைத்தான். அவளுக்கு அப்படி எல்லார் முன்னாலும் வெறும்தோள் காட்டிக் குளிக்க வெட்கமாய் இருந்தது. அவர்கள் ஊரில் நதி எதுவும் கிடையாது. பின்கட்டுக் கிணற்றில் தண்ணீர் சேந்தி எடுத்து குளியல் அறைக்குக் கொண்டுபோய் கதவைச் சாத்திக்கொண்டு குளித்துப் பழக்கப் பட்டவள் அவள். இங்கே புகுந்த வீட்டில் வாழ்க்கைப்பட்டு வந்தபின்னும் தும்பிக்கை யானைக்குப் போல வீட்டுக்குள் ஷவரில் தலையைக் காட்டுவதுதான். “நீ அப்படியே புடவையோட குளி இவளே. அங்க வசதிப்படாட்டி இங்க வந்து மாத்திக்கலாம்…” என்றான் ரவி.

அப்பாவும் பிள்ளையுமாய் தோளில் துண்டுடன் குளிக்க என்று கிளம்பினார்கள். அவர்களுடைய உற்சாகம் அவளுக்குப் பிடித்திருந்தது. அண்ணன் தம்பியாக அவர்கள் தெரிந்தார்கள் இப்போது. பரபரவென்று ஓடிக் கொண்டிருக்கும் நகர வாழ்க்கையில் இருந்து இது ஒரு கட்டுத் தளர்ந்த நிலை   சிலாள் சாப்பிடும்போது இடுப்பு வேட்டியை சற்று நெகிழ்த்திக் கொண்டு உட்கார்வான், அதைப்போல! பத்து நிமிட நடை எட்டத்தில் இருந்தது நதிக்கரை. நல்ல உயரத்தில் பாலசுப்பிரமணியர் கோவில். குளித்துவிட்டுக் கரையேறும் எல்லாரும் சந்நிதியில் நின்று டைங் என்று மணி அடித்து கும்பிட்டுவிட்டு பிராகாரம் சுற்றிவிட்டுக் கிளம்பினார்கள். ஈர உடை சுற்றிய உடல். உதடுகளில் சுலோகமோ குளிரோ தந்தியடித்தது.

நல்ல வேகம். நுரைத்துச் சுழித்து ஓடியது நதி. புதுத் தண்ணீர். கன்றுக்குட்டியின் கும்மாளம் போல இருந்தது அதைப் பார்க்க. ஆங்காங்கே மண் மேடும், சிறு பாறைத் திட்டுகளும் யாரோ முங்கிக் குளித்துக் கொண்டிருந்தவர் தலைதூக்கினாற் போலத் தெரிந்தன. அந்த நீரோட்ட சலனத்தைப் பார்க்கிற போதே உடல் சிலிர்க்கிறது மாமனாருக்கு. சற்று தள்ளி ஐம்பது அறுபதடி தூரத்தில் மேம்பாலத்தின் கீழே ரெண்டாள் உயரச் சுவர்த்திட்டு. அதன் மேலேயிருந்து ஹைஜம்ப் பண்ணி  பொங்கி வழிந்து கொண்டிருந்தது தாமிரபரணி. அது சலசலக்கும் சத்தமே இனிமையாக இருந்தது. ராத்திரி அது பக்கத்து இரண்டு மூன்று தெருக்கள் வரை கேட்கும் என்று தோன்றியது. இயற்கை தன் இருப்பை அறிவித்த கணங்கள். மனிதனோடு பேசும் கணங்கள் அவை. இந்த ஊர்ப் பெருமக்கள் கொடுத்து வைத்தவர்கள் என நினைத்துக் கொண்டாள் சுஜாதா.

நதியோடேயே நடந்தார் மாமனார். இழுவை வெள்ளம். ஆளைத் தள்ளாட்டிய வெள்ளம். இயற்கையே போதைதானே, என்று இருந்தது அவருக்கு. நதி பூமிக்கு இறைவன் அளித்த கொடை. அவர் சற்று ஆழ வசத்துக்குப் போய் அப்படியே “ஈஸ்வரா…” என்று சத்தங் கொடுத்து ஒரு முங்கு முங்கினார். ஓடும் நதியின் சிலீரென்ற ஈரத் தழுவல் அவரைப் பரவசப்பட வைத்தது. “இந்த நதியின் வேகம் இருக்கு பாரும்மா…” என்றார் அவர் அங்கிருந்தே. காலைல ஆறு மணிக்கு ஒரு முழுக்கு போட்டம்னா சாய்ந்தரம் வரை அப்படியொரு உற்சாகமும் வேகமும் சக்தியும் சுறுசுறுப்பும் தருமாக்கும்” என்று மறுபடியும் மூழ்கினார். மேலே வந்து “அவளை ஜாக்கிரதையா ஆழம் பார்த்து அந்த அருவிக்கு அழைச்சிண்டு போ ரவி…”

சிற்றருவியாய் அந்த உயரத் திண்டில் இருந்து விழும் நீரில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு தலையை நீட்டினால் சீயக்காய் தேவையே இல்லை. நன்றாக எண்ணெயை வழித்தெடுத்து விடுகிறது தண்ணீர். நிறையப் பேர் தண்ணீருக்குள் தலையை நீட்டி காணாமல் போனார்கள். நீரின் இரைச்சலை மீறி அவர்களின் உற்சாக இரைச்சலும் கும்மாளமும் கேட்டது. தனி உலகமாய் இருந்தது அது. தண்ணீரில் இப்படி ஆட்டம் போட உடனே பசி வந்துவிடும் என்று இருந்தது.

ரவி சிரித்தபடி அவள் கையை வாங்கிக் கொண்டான். அவளை அப்படியே அருவியடியில் நகர்த்தி நிறுத்தினான். எப்பவுமே வெளியிடங்களில் அவனுடன் புழங்க அவளுக்குப் பிடிக்கும். “நீங்களும் வாங்க…” என்றாள் அவள் புன்னகையுடன். பளார் பளாரென்று நீர்ச் சாட்டை ஆக்ரோஷமாய்த் தலையில் அறைந்தது. நீரின் பாச ஆவேச ஆசிர்வாதம். உச்சியில் குறுறுவென்று வலி யெடுத்தது அவளுக்கு. நீர் என்று நினைக்கிறோம். அதன் சக்தி அது பாயும்போது, அல்லது மழையாய் விழுகையில் தான் தெரிகிறது. மழையில் ட்டூ வீலரில் போனால் அப்போது தெரியும் மழையின் உக்கிர அறைகள். இந்த அருவி அதைவிட மூர்க்கம். மூச்சை அடக்கி உள்ளே நின்றாள் சுஜாதா. உடலின், மனசின் அழுக்குகளை ஒருசேரக் களைய வல்லது அருவி. சோப்பு போட்டுக் கொள்ளத் தேவையே இல்லை. அவள் மூச்சுத் திணறத் திணற நீரின் பாய்ச்சலை விட்டு வெளியே வந்தபோது மாமனார் புன்னகை செய்கிறார்.

“இதாம்மா எங்க ஊர் அருவி. தினசரி காலைல ஒருவாட்டி சாய்ந்தரம் ஒருவாட்டி குளிக்காம எங்களால இருக்கவே முடியாது…” என்கிறார். அவர் முகமே குழந்தை போல மாறிவிட்டிருந்தது. தொடர்ந்து கிளர்ந்ழும் நினைவு வானவில். “ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்னிக்கு இங்க கரைல ஊரே கூடிரும். விதவிதமா சாதம் பண்ணி இங்க எடுத்துண்டு வந்து ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுவாங்க மொத்த ஊர்சனமும். வாலிபப் பசங்ளுக்கு நதிக் குளியல்ன்னா ராத்திரியாவது பகலாவது…” என்றார்.

“அப்பா எப்பிடியும் ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவையாவது என்னையும் அம்மாவையும் இங்க கூட்டிட்டு வந்திருவாரு. அரசாங்க வேலையாச்சே. ஹோம் ட்டௌன் எல் ட்டி சி உண்டு.” அதை அவன் சொல்லிக் கேட்டதில் அப்பாவுக்கு ஒரு பெருமை. “நான் அனுபவிச்ச இந்த சுகம் சௌகர்யம் எல்லாம் அவனுக்கு இல்லாமல் போச்சேன்றது என்னோட வருத்தம்...” என்றவர் ரவி பக்கம் திரும்பினார். “உனக்கு இதைப் பத்தி வருத்தம் உண்டா ரவி?” என்று கேட்டார்.

ரவி புன்னகை செய்தான். பின் “இல்லப்பா…” என்றான். அவருக்கு ஆச்சர்யமாய்ப் போயிற்று. “இல்லையா?” என்றார் அவனைப் பார்த்து. “பின்ன நீங்க ஏன்ப்பா என்னைக் கூட்டிக்கிட்டு இந்த ஊரைவிட்டு வெளிய வந்தீங்க?” என்று கேட்டான் ரவி.

அப்பா அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஒரு விநாடி அவனைப் பார்த்தார். “உனக்காகத்தாண்டா…” என்றார். “உனக்கு நல்ல கல்வி தரணும். பெரிய காலேஜ் கிடைக்கணும்…னு எனக்கு ஒரு இது.”

“அது சரி. வாஸ்தவம்…” என்றான் ரவி. “இந்த ஊர்ல காலேஜே இப்பதான் வந்திருக்குப்பா. நீங்க செஞ்சது நல்ல காரியம்…” என்றான். “இப்ப நான் படிச்ச படிப்பு. நான் பார்க்கற வேலை… எல்லாம் எதனால? நாம இந்த ஊரைவிட்டு வெளிய போனதுனாலதாம்ப்பா…” என்றான். சிரித்தபடி சொன்னான்.

“உங்க சிநேகிதர் உத்தண்டராமன் பிள்ளை… என்ன பண்றான்? இங்கயே போஸ்டாபிஸ்ல போஸ்ட்மேன்.”

அப்பா தலையாட்டினார். “வேலை இன்னும் பெர்மனன்ட் ஆவல.”

“பெர்மனென்ட்லி டெம்ப்ரரி…” என்றான் ரவி. இருவரும் சிரித்தார்கள். பிறகு ரவி சொன்னான். “இருக்கறதில் திருப்திப் படறது இளமைக்கு அழகல்ல அப்பா…”

“ஆமாண்டா…” என்றார் அப்பா.

 “நீங்க உங்க இளமைல இந்த ஊர், இந்த தாமிரபரணின்னு அனுபவிச்சீங்கப்பா. அருமையான விஷயம். அதேபோல என்னோட இளமைக்காலமும்… ஆனா வேற சில சந்தோஷங்களால ஆனதுப்பா” என்றான்.

“அதை நீங்கதான் குடுத்தீங்க…”

அப்பா ஒரு நிமிஷம் அவனையே பார்த்தார். பின் தலையாட்டினார். இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சுஜாதா. மாமனார் திரும்ப அருவிக்குள் புகுந்தார். யாரோ புடவை நெசவு செய்கிறதில் நீர்த் துகில் வெளியே வெளியே வந்து கொண்டிருந்தது போலிருந்தது. அப்பா திரும்ப அருவிக்குள் நழைந்ததைப் பார்த்ததும் ரவிக்கும் திரும்ப தலைநீட்ட ஆசை வந்தது.

“நேரமாயாச்சி…” என்றாள் சுஜாதா. ஓடும் தண்ணீரில் இடுப்பளவு ஆழத்தில் முங்கியபடியே.

மாமனார் சமத்துக் குழந்தையாய் சொன்ன பேச்சைக் கேட்டார் வெளியே வந்தபடி அவளிடம் துண்டை வாங்கிக் கொண்டே “உனக்கு எங்க ஊர் பிடிச்சிருக்காம்மா?” என்று கேட்டார்.

அவளுக்கு என்ன பதில் சொல்ல தெரியவில்லை. ஆனால் என்னுடைய பூர்விகத்தையும் நான் இப்படியே உற்சாகத்துடன் காட்டுவேன் அவருக்கு என்று தோன்றியது. புன்னகை செய்தாள் அவள்.

”நீங்க உங்க குழந்தையோட படிப்பு எதிர்காலம்னு ஊரைவிட்டு வெளியே கிளம்பி வந்தீங்க அப்பா” என்றாள் மாமனாரிடம் சுஜாதா.

ரவி இப்போது இடைமறித்துப் பேசினான். “நாங்களும் அதேபோல எங்க குழந்தைக்கு வாகான எதிர்காலம் நோக்கி நகர்வோம் அப்பா. எதிர்காலத்தில் அவன் மேற்படிப்பு என்று நன்றாகப் படித்துத் தேறினால்…” என்று நிறுத்தியவன் “வெளிநாடு கூட அனுப்புவோம்…” என்றான்.

சுஜாதாவுக்கு வெட்கமாய் இருந்தது. இன்னும் குழந்தையே பிறக்கவில்லை, அதற்குள் இவனது கனவுகள்… என நினைத்தாள். ஆனாலும் அவளுக்கு அது பிடித்திருந்தது.

“பெருமாள் கோவில் நடை சாத்தறதுக்குள்ள போக வேண்டாமா?” என்று நினைவு படுத்தினாள் சுஜாதா.

அப்பா அருவியில் இருந்து வர மனசே இல்லாமல் வெளியே வந்pதருந்தார். அதைப் பார்த்துவிட்டு ரவி “சாய்ந்தரம் ஒருவாட்டி வருவோம் அப்பா” என்றான். படியேறி டைங் என மணி அடித்து சுப்ரமணிய சுவாமியை வணங்கிவிட்டுக் கிளம்பினார்கள். ஈரப் புடவையுடன் சுஜாதா வாயில் குளிரின் நடுக்கமோ சுலோகமோ உதடுகள் தந்தியடித்துக் கொண்டிருந்தன.

•••

storysankar@gmail.com

Mob 91 97899 87842 / whatsapp 94450 16842

Tuesday, August 3, 2021

நன்றி

பேசும் புதிய சக்தி ஆகஸ்டு 2021 இதழ்


அரசனும் குடிமக்களும்

எஸ்.சங்கரநாராயணன்

 தாத்தா இந்த வீட்டுக்கு செக்யூரிட்டி வேலைக்கு என்று சேர்ந்து இரண்டு மாதம் ஆகப் போகிறது. 12 மணி நேர வேலை. சம்பளம் என்று நாலாயிரம் தருகிறார்கள். முதலில் என்ன இது, அவ்வளவுதானா… என்று இருந்தது. அங்கேயே தங்கிக் கொள்ளலாம், என்பது சம்பளத்தை விட பெரிய விஷயமாய் கணபதிக்கு இருந்தது. மற்றபடி இரண்டு வேளை தேநீர், மூணு வேளை உணவு அங்கேயே தந்து விடுவது பெரிய உபகாரம். ஒரு பையன் அவருக்கு. தானே ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்தான். பின் பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கொண்டு அவரை வேறு வீடு, வேறு வேலை பார்த்துக்கொள்ளக் கூசாமல் சொல்லிவிட்டான். பெத்தவர்கள்தான் பையனை, கல்யாணம் ஆனதும் தனியே போகச் சொல்வார்கள். இங்கே தலைகீழ்க் கதை. யாரையும் எதிர்த்துப் பேசாதவர் அவர். தன்பக்க நியாயத்தைக் கூடக் கேட்கத் தெரியாது. எங்கே போக, என்ன செய்ய என்று திகைப்பான நிலையில் இந்த செக்யூரிட்டி வேலை வரப் பிரசாதம் அல்லவா? வயதான காலத்தில் வாழ்வதே கடவுளின் சித்தம் என்றாகி விட்ட நிலை.

பெரிய காம்பவுண்டு வளாகம். தள்ளி பின்னே கார் நிறுத்த இடம் உண்டு. பின்கட்டில் சிறு அறை. அதில் அவர் தங்கிக்கொண்டார். யாரும் தேடி வீட்டுக்கு வந்தால் மாடியில் முதலாளி வீட்டை அழைத்து தகவல் சொல்ல இன்டர்காம் இருக்கிறது. அவர் கட்டளைகளுக்குக் காத்திருந்தார். கட்டளைகளுக்குப் பணியக் காத்திருந்தார். சிறு குழந்தை என்றாலும் அவரை வேலை வாங்கலாம். யாரும் அவரைத் திட்டலாம். மிரட்டலாம். கேள்வி கேட்கலாம். கணபதிக்கு பதில் சொல்லத் தெரியாது. எந்தக் கேள்விக்குமே பதில் சொல்ல அவருக்குத் திகைப்பாய் இருந்தது. தன் வாழ்க்கையில் அவர் யாரையும் எதிர்த்துப் பேசிய ஞாபகம் இல்லை.

இப்படியே தாத்தாவாகவும் ஆகி விட்டார்.

மகன் சித்தாள் வேலை பார்க்கிறான். நிலையான வருமானம் என்று இல்லை. அவனும் கையில் காசிருந்தால் வேலைக்குப் போவது இல்லை. பணம் எவ்வளவு வந்தாலும் குடிக்கக் கற்றுக் கொண்டால் பத்தாது தான். அவனே எதிர்பார்க்காமல் அப்பா இப்போது நல்ல வேலையில் அமர்ந்து விட்டதாக அவனுக்கு ஆச்சர்யம். இதே மாதிரி அவனும் சின்ன வேலையில் உட்காரலாம். அடங்கிப்போக மாட்டான். குடிக்காமல் இருக்க முடியாது. மாசம் ஒருமுறை அப்பாவிடம் வந்து ஐந்நூறு ஆயிரம் வாங்கிச் செல்கிறான். “தனி ஆளுத்தானே நீரு? உமக்கு எதுக்கு இத்தனை பணம்?” என்று கேட்கிற அவனை என்ன செய்வது? குளி சோப்பு, தலைக்கு எண்ணெய், துணி துவைக்கிற சவுக்காரம் என்றாவது எனக்குச் செலவு இருக்காதா என்ன? கைல பத்து காசு இருந்தாதானே… உடம்பு அசௌகர்யம் என்று வந்தால் பாடு பார்க்க வேண்டியிருக்காதா?  அவருக்குக் கேட்கத் தெரியாது. பணத்தைத் தந்தபடியே அவன் மனைவி, “அனுசூயா எப்பிடி இருக்கா?” என்று விசாரிப்பார்.

பகல் பூராவும் இராத்திரி எட்டு மணி வரை வாசல் காவல். அதே இடம். மெல்ல சிறிது எழுந்து நடந்தால் காலே அயர்ச்சி காட்டும். ஒரே மாதிர் ஒரு பத்து நிமிடம் வைத்திருந்தால் மரத்து விடுகிறது. யாராவது வாசலில் கூப்பிட்டால் சட்டென எழுந்து கொள்ள முடியாமல் சண்டித்தனம் செய்கிறது. “வரேன்… வரேன்…” என்று கத்திக்கொண்டே நொண்டியபடி பூமி தட்டாமாலை சுற்ற வாசலுக்குப் போனார். தனியே உட்கார்ந்திருக்கையில், நல்லவேளை அவர்கள் வீட்டில் நாய் வளர்க்கவில்லை என்று நினைப்பார். காவலுக்கு எனநாய் இருந்தால் அவருக்கு ஒருவேளை வேலை கிடைத்திருக்காது. ஆனால் நாய் இருந்தால் வர்றாட்களை விசாரித்து அது இன்டர்காமில் பேசாது. அதற்காகத்தான் ஆள் போட்டிருக்கிறார்கள்…

வாத மரத்தடியில் பிள்ளையாராட்டம் உட்ர்ந்திருப்பதாகத் தோணும். அவர் பேரே கணபதி. தெருக்குத்து இருந்தால் வாஸ்துப்படி பிள்ளையார் வைப்பார்கள். இந்த வீட்டுக்கு அவரே பிள்ளையார். அவரைப் பார்த்துக் கொள்ளவே ஆள் இல்லை, என்ற  நிலையில் இந்த வீட்டை அவர் பார்த்துக் கொண்டார். கண்ணாடி இல்லாமல் கண் சுத்தமாத் தெரியாது. அசுத்தமாய் கலங்கலாய்த் தெரியும். இந்த வயதுக்கு சரியான தூக்கம் கிடையாது. உடம்பும் அத்தனை நிதானத்தில் இல்லை என்ற அளவில் சரியான விழிப்பு நிலையும் இல்லை. சட்டென எழுந்துகொண்டால் லாத்திவிட்டு தலை சுற்றி விடும். பின்னறையில் வாசல் காம்பவுண்டில் இருந்து யாராவது மணி அழுத்தினாலும் கேட்கும். மாடியில் இருந்தும் சில சமயம் அவரை அழைப்பு மணி ஒலி எழுப்பிக் கூப்பிடுவார்கள். அரைகுறைத் தூக்க மயக்கத்தில் உடம்பைப் பிடிவாதமாய் எழுப்பிக் கொண்டு எழுந்து வருவார்.

எப்படியும் காலை வெளிச்சம் கண்ணில்  பட்டாலே விழிப்பு வந்து விடுகிறது. அதுவரை நல்லா தூங்கினார் என்பது அல்ல. தினசரி காலை ஆறு மணி வாக்கில் வாசல் வளாகத்துக்கு வந்து உதிர்ந்து கிடக்கும் வாத இலைகளைப் பெருக்கி ஒதுக்குவார். குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பற்காக. பெண் வேலைக்காரி இருந்தால் தண்ணீர் தெளித்து கோலம் போடும். மாடியில் முதலாளியின் மனைவி, முதலாளி, மற்றும் அவர்களின் ஒரு பையன் மூன்றே பேர்தான். சமையல் மற்றும் வீட்டு ஒத்தாசைக்கு ஒரு பெண் இருக்கிறாள். புண்ணியவதி அவள்தான் அவருக்கு அன்னபூரணி. எங்காவது முதலாளியின் மனைவி வெளியே போனால் கையில் கூடையுடன் பின்னால் கூடவே போவாள். முதலாளியாவது கணபதியுடன் ஓரிரு வார்த்தை பேசுவார். “கணபதி?” ஐயா என்று ஓடிவருவார் கணபதி. “இந்த மரம், தோ பூச்செடி… எல்லாத்துக்கும் தண்ணி ஊத்தறதில்லையா?” சரிங்க மொதலாளி. நான் பாத்துக்கறேன்… என்பார். வாசலை குப்பை செத்தை இன்றி சுத்தமாக வைத்திருக்க அவர் முயன்றார். அதன்பலன், மேலும் வேலைகள் தந்தார்கள். அதைக்கூட அந்தம்மா பேசியதே இல்லை. அவளது தகுதிக்கு அது, அவருடன் உரையாடுவது, அதிகம் என அவள் நினைத்தாளோ என்னவோ. அதைப் பற்றி என்ன? எதுவும் பேசாமல் ஆளைவிட்டாலே அதுவே நலல விசயம்தான்.

நகரத்தில் பெரிய ஜவுளிக்கடை வைத்திருக்கிறார்கள். கடை என்பதை அடித்து கடல் என்று போட்டிருப்பார்கள். கடல்ல துணியெல்லாம் நனைஞ்சிராதா. நான்கு மாடிகள் எடுத்த கடை. நெரிசலான நகரப் பகுதி. கடை உயரவாக்கில் வளர்ந்தது. அப்பாவுடன் சண்டை போட்டுக்கொண்டு இவர் பிரிந்துவந்து தனியே கடை போட்டார். எப்படியும் குடும்பப் பெயரின் சிறு சிதர் ஒட்டிய அளவில் கடைப்பெயர் இருந்தது கடைக்கு. அத்துடன் கடையும் ஊர் மத்தியில் நல்ல இடம். வியாபாரத்துக்குக் குறைவு இல்லை. கடை சிப்பந்திகளுக்குப் போலவே அவருக்கும் கெட்டித் துணியில் சீருடை தைத்துத் தந்தார்கள். அதுவும் நல்லதாச்சு.

முதலாளியின் அப்பா எப்பவாவது மகனைப் பார்க்க என்று இந்த வீட்டுக்கு வருவார். அந்தக் காரின் ஹாரன் சத்தம் கணபதி அறிவார். ஓடோடி வந்து கதவுகளை விரியத் திறப்பார். வணக்கம் சொல்வார். சினிமாவில் அதற்குத் தனியே இசை ஆர்ப்பரிப்பு இருக்கும். மகனிடம் பிரியம் காட்டும் அப்பா. எத்தனை சண்டை போட்டாலும் அவரால் மகனை விட்டுக்கொடுக்க முடியவில்லை பாத்தியா, என நினைத்துக் கொள்வார் தாத்தா. மகனைவிட பேரனிடம் அவருக்கு ஒட்டுதல் இருந்தாற் போலிருந்தது. மருமகள் சரியாகப் பேசுவாளா தெரியவில்லை ஒருவேளை அவளால்தான் மகன் பிரிந்து வந்தானோ என்னவோ. என் மருமகள் போல… இதெல்லாம் எனக்குத் தேவையில்லாத விஷயம் என நினைத்தார்.

அந்தப் பேரப்பிள்ளை பெயர் பிரசாத். பேருக்கேத்தாற் போல கடவுள் பிரசாதம் தான். என்னவோர் தேஜஸ் அவன் முகத்தில். பணக்காரக் களை என்பது இதுதான். ஒண்ணாம் வகுப்போ இரண்டாவதோ படிக்கிறான் போல. சில சமயம் காலையில் சீக்கிரம் எழுந்துகொண்டால் கையில் பெரிய பந்துடன் கிழே இறங்கி வருவான். அவருடன் வந்து விளையாடுவான் அவன். மேலே விழுந்தாலும் அந்தப் பந்து மெத்தென்று இருக்கும். அவன் கைக்கு வாகாக அவர் தூக்கிப் போட வேண்டும். சரியாக அவரைப் பார்க்க அவனுக்கு எறியத் தெரியாது. அவர் காட்ச் பிடிக்கத் தவற விட்டுவிட்டால் அதில் அவனுக்கு ஒரு சிரிப்பு.

சிறிது நேரத்தில் விளையாட்டு அலுத்துவிடும் அவனுக்கு. அதுவரை மேலேயிருந்து யாரும் அவனைக் கூப்பிடாவிட்டால் அவரிடம் தன் பள்ளிக் கதைகள் சொல்வான் அவன். எல்லாம் ஆங்கில ரைம்ஸ். ஆங்கிலக் கதைகள். அவருக்குத் தெரியாது. ஒன் ட்டூ பக்கிள் மை ஷு, பாடுங்க தாத்தா, என்பான். அவர் என்னத்தைக் கண்டார். அவன் பேச அவர் கேட்டுக் கொண்டிருப்பார். அதையெல்லாம் உட்கார்ந்து பொறுமையுடன் கேட்க அவனுக்கு யாருமே இல்லை என்று புரிந்து கொண்டார் கணபதி. அவன் தாத்தா கூட இருந்தால் கேட்டிருப்பார்… கணபதியுடன் சரி சமதையாக அவன் பேசிச் சிரித்து விளையாடுவதை முதலாளியம்மா எப்படி எடுத்துக் கொள்ளும் தெரியாது. அவருக்கு யோசனையாகி விடும். பயமாகி விடும். தனியே கொட்டுக் கொட்டென்று இப்படி வாசலில் உட்கார்ந்திருக்கிறதுக்கு அவனது பிரியத்தை வாங்கிக் கொள்ளவும் அவர் விரும்பினார். தனக்கு யாரும் இல்லை என்று தான் நினைப்பபதைப்போலவே அவனும் உறவுக்குத் திகைப்பதாகத் தோன்றும். உடனே தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்வார்.

தாத்தா உங்க வீடு எங்க, என்று கேட்பான். வெறுமனே சிரிப்பார். உங்க வீட்டுக்கு நீங்க போறதே இல்லியா, என்று கேட்பான். உங்களை யாரும் தேட மாட்டாங்களா தாத்தா? அவனது கேள்விகள் அவரைத் திகைக்க வைத்தன. ஏன் தாத்தா நீங்க இங்க இருக்கீங்க? உங்க பசங்க கூட நீங்க ஏன் இல்லை, என்று கேட்டான் ஒருதரம். இங்க என்ன வேலை உங்களுக்கு?

உங்க வீட்டுக்குக் காவல்காரன், என்று சிரித்தார் அவர். வீட்டை எதுக்குக் காவல் காக்கணும், என்று கேட்டான் அவன். அவருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அப்ப உங்க வீடு? அதை யார் காவல் காப்பா தாத்தா, என்பது அவனது அடுத்த கேள்வியாக இருந்தது.

அவனோடு ஓடியாட முடியாதபோது தாத்தா அவனுக்குக் கதைகள் சொல்ல ஆரம்பித்தார். ஜோரான குட்டி குட்டிக் கதைகள். ஆங்கில வழி பாடங்கள் படிக்கிறான் அவன். தமிழ் பேசுகிற அளவில் அவனுக்கு அந்தக் கதைகள் பரவசப் படுத்தின. தெனாலிராமன், மரியாதைராமன் என்று தமிழில் குட்டிக் கதைளுக்குப் பஞ்சம் இல்லை. விடுகதைகள், வேடிக்கையான பழமொழிகள் எல்லாம் அவனுக்குச் சொல்வார். அதில் எத்தனை புரிந்ததோ அவனுக்கு. ஆனால் தாத்தா பேசப் பேச அவன் எதிரே உட்கார்ந்து கேட்டுக் கொண்டே யிருப்பான்.

அரண்மனையில் குத்து விளக்கு ஒன்று திருடு போய்விட்டது. வேலைக்காரர்களில் யாரோதான் திருடி யிருக்க வேண்டும். எப்படிக் கண்டுபிடிப்பது? தெனாலிராமன் ஒரு உபாயம் சொன்னான். அரண்மனை வேலைக்காரர்கள் எல்லாரிடமும் ஒரு அடி நீள குச்சியைக் கொடுத்து மறுநாள் எடுத்துவந்து காட்டச் சொன்னான்.

“அங்குலம்னா தெரியுமா தம்பி?” என்று கேட்டார் தாத்தா. தெரியும் என்று தலையாட்டினான். “ஏன் அப்பிடிப் பண்ணினான் தாத்தா?”

யார் உண்மையான திருடனோ அவனது குச்சி ஒரு அங்குலம் வளர்ந்திருக்கும்… னு சொல்லிக் குடுத்தான் அந்தக் குச்சிகளை. அவர் சொன்ன கதைகளை அவன் ரசித்தான். மேலும் அவர் கதைசொல்ல என அவன் காத்திருந்தான். அவன் புருவங்கள் யோசனையில் நெறிபட்டன.

அந்தத் திருட்டுப் பயல், யார் விளக்கை எடுத்தானோ, அவனுக்கு பயமாகி விட்டது. நாளைக்கு அரண்மனைக்குப் போனால் நம்ம குச்சியின் நீளம்… என்னாயிருக்கும்? (ஒரு அங்குலம் வளர்ந்திருக்கும்.) ஆமா. அதுனால இப்பவே நாம நம்ம குச்சியை ஒரு அங்குலம் வெட்டிறலாம். காலைல நம்ம குச்சி ஒரு அங்குலம் வளர்ந்தாலும் அது அதே நீளத்துல தானே இருக்கும்னு சொல்லி… குச்சியை வெட்டி நீளத்தைக் குறைச்சிட்டான்.

மறுநாள் அரண்மனைக்குப் போனால்… எல்லா வேலையாட்களும் குச்சியைக் காட்டறாங்க. ஏய் குச்சி தானா வளருமா தம்பி? (வளராது, என்றான் பிரசாத்.) ஒவ்வொரு குச்சியா வாங்கிப் பார்த்தார் ராஜா. அந்தத் திருட்டுப் பயல், அவன் தான் குச்சியை வெட்டி நீளத்தைக் குறைச்சிட்டானே? அவன் குச்சியை அளந்து பார்த்தார் ராஜா.  அது நீளம் குறைவா இருந்தது. டக்குனு திருடன் இவன்தான்..னு பிடிச்சிட்டாரு!

“சூப்பர் ஐடியா தாத்தா!” என்று சிரித்தான் அவன். பிறகு சொன்னான். “என்னன்னாலும் திருடறது தப்பு தாத்தா.” ஆமா தம்பி, என்றார் அன்புடன். ஒருதரம் அப்படியே அவன் மடியில் படுத்து விட்டான் அவன். சிலிர்த்து விட்டார். உடனே பயமாகி விட்டது. நல்லவேளை யாரும் பார்க்கவில்லை. “தூக்கம் வருதா ராசா?” என்றார். இல்ல, என்று தலையாட்டினான். மடிதான் வேண்டும் போலிருக்கிறது. அதற்குள் மேலேயிருந்து பிரசாத்?... என்று அழைப்பு வந்துவிட்டது. வரேன் தாத்தா, என்று எழுந்து ஓடினான் பிரசாத்.

அவன் இல்லாத நேரத்தில் கூட அவனைப் பற்றிய யோசனைகள் வந்தன கணபதிக்கு. அவனிடம் சொல்ல என்று நிறையக் குட்டிக் கதைகள் யோசித்தார். என்ன இல்லை பிள்ளைக்கு. என்றாலும் அவன் தேடுவது, அந்தப் பிரியம், அது மாத்திரம் அவனுக்குக் கிடைக்காமல் ஆயிற்று என நினைத்தார். அவன்மேல் பிரியம் செலுத்துகிற தாத்தா அவன்கூட இருக்க முடியவில்லை. வேலைக்காரி ஊட்டுகிற உணவும் கவனிப்புமாய் வளர்கிறான். காலை பள்ளிக்கூடம் எட்டு எட்டுபத்து அளவில் அவன் கிளம்பினால் அவன் மாடி யிறங்கி வருவதைப் பார்க்க என்று காத்திருப்பார். பளிச்சென்று வருவான். கூட அவன் புத்தகப் பையைத் தூக்கிக்கொண்டு வேலைக்காரி. கார் ரிவர்சில் வர காம்மபவுண்டு பெரிய கதவைத் திறந்து விடுவார். அதை பிரம்மாண்டமாய்க் காட்ட சினிமாவானால் இசை ஆர்ப்பரிப்பு இருக்கும்..கார் டிரைவர் காலை எட்டு மணிக்கு வருவான். பிள்ளையைப் பள்ளியில் விடுவதில் இருந்து அவன் வேலைகள் ஆரம்பிக்கும். முதாலாளியின் சூட்கேசைத் தூக்கிக்கொண்டு கீழே வருவான்.அவரோடு அலுவலகம் போய்விடுவான். பிறகு அவர் எப்போது வீடு திரும்புவாரோ ஒன்பதோ பத்து மணியோ கூட ஆகிவிடும். காரை விட்டுவிட்டு அவன் சைக்கிளில் தன் வீடு போகவேண்டி யிருக்கும்.

பிரசாத் அடிக்கடி வந்து அவரிடம் கதைகள் கேட்க ஆரம்பித்திருந்தான். அவரது கதைகள் அவனுக்கு சுவாரஸ்யமாய் இருந்தன. குறிப்பாக ராஜா கதைகளை அவன் விரும்பினான். தெனாலிராமன் பக்கத்து வீட்டில் கத்திக்காய் திருடிய கதையை ஒருநாள் சொன்னார். ஹோ ஹோவென்று விகல்பம் இல்லாமல் சிரித்தான் பிரசாத். விடுகதை மாதரியான கேள்விகளை நிறைய அவனிடம் அவர் கேட்டார். பாதாளக் கிணத்திலே முத்துக்கள் 32 என்பார். நம்ம வாய், என அவன் சட்டென கண்டுபிடித்தால் பாராட்டுவார். “என் கிளாஸ்லயே நான்தான் தாத்தா முதல் ரேங்க்” என்றான் ஒருநாள். ரொம்ப சந்தோஷமாய் இருந்தது.

திரும்பவும் மகன் பச்சைமுத்து வந்து பணம் கேட்டான். இல்லை என மறுக்கவும் முடியாத இம்சை அது. “அனுசுயா முழுகாம இருக்கா அப்பா” என்றான் அவன். அவருக்கு ரொம்ப சந்தோசம். “நல்லபடியா பாத்துக்கப்பா…” என்று பணம் கொடுத்தார். வாங்கிக் கொண்டான். “வீட்டுக்கு வாங்கப்பா…”  என்று கூப்பிடுவான் என எதிர்பார்த்தார். அவருக்கு லீவு கிடைக்குமா தெரியவில்லை. என்றாலும் அவன் கூப்பிடவே இல்லை. இந்தப் பணமே நேரே வீடு வரை போகிறதோ வழியிலேயே சாராயம் வாங்கி ஊத்திக்குவானோ தெரியாது.

அடாடா, முதலாளியின் அப்பாவுக்கும் முதலாளிக்கும் என்னவோ வாக்குவாதம் வந்துவிட்டது. என்ன பிரச்னை தெரியவில்லை. பணப் பிரச்சினையாய்த்தான் இருக்கும். முதலில் சின்ன அளவில் துவங்கிய சத்தம் மாடியில் அதிகரித்தது. அவருக்கு என்ன செய்ய என்று புரியவில்லை. இது மாதிரி இந்த இரண்டு மாதத்தில் பெரிய அளவில் அப்பாவும் பையனும் சச்சரவிட்டதே இல்லை.

மாடியில் இருந்து விறுவிறுவென்று இறங்கி வந்தார் முதலாளியின் அப்பா. டிரைவர் ஓடோடி வந்து அவர்காரின் கதவைத் திறந்தான். முதலாளி மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். பெரிய முதலாளி மாடியைப் பார்த்து “இனிமே நான் இங்க வரமாட்டேன். பேரனுக்காக வந்திட்டிருந்தேன்… இனி அதுவும் இல்லை” என்றார். மாடியில் இருந்து மகன், “உங்களை யாரும் இங்க அழைக்கல்லியே..” என்றான். கணபதிக்கு வருத்தமாய் இருந்தது. அவரால் என்ன செய்ய முடியும்? கதவை விரியத் திறந்து அந்தக் கார் வெளியே போக வழி விட்டார். சினிமா இசை ஆர்ப்பரிப்புடன் பின்னணிச் சத்தம் கேட்கவில்லை இப்போது. அவருக்கு வருத்தமாய் இருந்தது.

மறுநாள் அந்தப் பையன் பிரசாத் கீழே இறங்கி வந்தான். “தாத்தா? கதை சொல்லுங்க தாத்தா” என்று அவர் தொடையைத் தொட்டபடி உட்கார்ந்து கொண்டான். “ச். போ என்ன கதை சொல்றது. ஒண்ணும் வேணாம்” என்றார். “ராஜா கதை எதாவது சொல்லுங்க தாத்தா” என்றான் பிரசாத்.

“ராஜா கதையா…” என்று யோசித்தார். “சரி… ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு. அவரு நாட்டுல பெரும் பஞ்சம் வந்தது. பஞ்சம்னா என்னன்னு தெரியுமா உனக்கு?” தெரியாது, என்று தலையசைத்தான் பிரசாத். “குடிக்க தண்ணி கிடைக்கல்ல. வயல்ல பயிர் எதுவும் விளையல்ல. நாடெங்கும் மக்களுக்குச் சாப்பிட எதுவும் கிடைக்காமல் போயிட்டது.” ஐயோ, என்றான் பிரசாத்.

ராஜா பாத்தாரு. நாடு இருக்கற நிலைமைல வயசான பெரியவர்கள்.. தாத்தா பாட்டிகள், அவங்களால எதுவும் நாட்டுக்கு பிரயோசனம் கிடையாது. அவங்களையெல்லாம் எல்லா வீட்டிலும் கொன்னுறணும்னு ஆணை போட்டான்…

“ச்சீ. ரொம்ப பயங்கரமான கதை தாத்தா.” அந்த ஊர்ல ஒரு நல்ல பையன். பிரசாத் மாதிரின்னு வெய்யி… என்று அவர் புன்னகை செய்தார். அவன் என்ன பண்ணினான், தன்னோட தாத்தாவை தன் வீட்டு பாதாள அறையில் போய் தங்கச் சொன்னான். அவன் தாத்தாவைக் கொல்லவில்லை. இரகசியமா அவருக்குப் போயி சாப்பாடு கொடுத்திட்டு வந்தான்.

பையன் தலையாட்டினான். அப்ப அந்த ஊருக்கு ஒரு பெரிய அறிவாளி வந்திருந்தான். அவன் ராஜாகிட்ட போயி, தன்னைவிட அறிவாளி இந்த நாட்டில் இருக்கானா? இருந்தால் தன்னோட கேள்விகளுக்கு வந்து பதில்சொல்லச் சொல்லுங்கன்னு சவால் விட்டான்.

“சரி..” கதை மெல்ல உருவாக ஆரம்பிப்பதாக பிரசாத் உணர்ந்தான். தாத்தாவின் கதைசொல்லும் பாணி அவனுக்கு ரொம்ப இஷ்டம். தாத்தா தொடர்ந்து பேசினார். “முதல் சவால்! பானைக்குள்ள ஒரு பூசணிக்காயை வைக்க முடியுமா!” ராஜாவுக்கு பயமாகி விட்டது. இதென்ன இவன் இப்பிடி ஒரு காரியம் சொல்கிறான். பானையின் வாய் சின்னது. பூசணி என்பது உருண்டையாக பெரியதாக இருக்கும். பானைக்குள் பூசணியை எப்படி நுழைப்பது?

“முடியவே முடியாது தாத்தா” என்றான் பிரசாத். ராஜா நாடெங்கும அறிவிப்பு செய்தார். இந்தக் கேள்விக்கு பதில் சொன்னால் ஆயிரம் பொற்காசுகள்… யாருக்கும் அதற்கு பதில் தெரியவில்லை.  அப்ப அந்தப் பேரன் இருக்கான் இல்லியா? நம்ம பிரசாத் மாதிரி… நல்ல பையன் அவன் என்ன பண்ணினான். ரகசியமா மறைச்சி வைச்சிருக்கற தன்னோட தாத்தாகிட்ட போயி அந்தக் கேள்வியைக் கேட்டான். தாத்தா, பானைக்குள்ள பூசணியை நுழைக்க முடியுமா?

முடியும்னாரு அவரு. பிரசாத்துக்கு ஆச்சர்யம். “முடியுமா?” என்று வாயைப் பிளந்தான். கணபதி தலையாட்டினார். ஒரு பூசணிக் காயைப் பிஞ்சா இருக்கும்போதே பானைக்கு உள்ள வெச்சிறணும். அது பெரிசானா அப்புறம் பானைக்கு உள்ளேதானே இருக்கும்?

பிரசாத் தலையாட்டிச் சிரித்தான். கணபதி கதையைத் தொடர்ந்தார். ராஜாவிடம் அந்தப் பேரன் போய் அந்த விஷயத்தைச் சொன்னதும் , சரியான பதில், என்று ராஜா மகிழ்ந்தார். உடனே அவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளித்து மகிழ்ந்தார்.

அந்த முதல் கேள்வி கேட்டானே, அவனுக்கு ரொம்ப ஏமாத்தமா ஆயிட்டது. அவன் அடுத்த கேள்வி கேட்டான். “தானாகவே அடிக்கிற மத்தளம் செய்ய முடியுமா?” பிரசாத்துக்கு கதை ரொம்ப சுவாரஸ்யமாகி விட்டது. மத்தளத்தை யாராவது தட்டினால் தானே சத்தம் வரும் தாத்தா? ஆமாம். ஆனால் தானாகவே அடிக்கற மத்தளம் செய்து காட்டணும். அதானே கேள்வி.

பிரசாத் அவரை நெருங்கி அமர்ந்தான். அதுக்கு அந்தப் பையனோட தாத்தா ஐடியா குடுத்தாரா தாத்தா?... கணபதிக்கு அவன் ஈடுபாட்டோடு கதை கேட்பதில் ரொம்ப திருப்தி. பின்னே?... என்றார். ஒரு மத்தளத்தைப் பிரித்து அதுக்குள்ள நாலைந்து வண்டுகளை வைத்து மூடிறணும். பின்ன உள்ள இருக்கற வண்டுகள் மோதி மோதி மத்தளம் சத்தம் போடுமா இல்லியா?

பையன் கை தட்டினான். கதை சூப்பரா இருக்கு தாத்தா… என்றவன் ராஜா பரிசு குடுத்தாரா?.. “பின்னே?” என்றார் கணபதி. அந்த அறிவாளிக்கு இந்த முறையும் ஏமாற்றம் வந்தது. சரி, மூணாவது கேள்வி..ன்னான் அவன்.

“அதெல்லாம் நம்ம பையன்ட்ட நடக்காது ” என்று கத்தினான் பிரசாத். “பையன்கூட தாத்தா இருக்காரே” என்றான். “சரி தாத்தா. அந்த மூணாவது கேள்வி என்ன?”

மணலைக் கயிறாத் திரிக்கணும்!

“அது எப்பிடி முடியும்?” என்று யோசித்தான் பிரசாத். முடியணும்… அதான் கேள்வி, என்றார் தாத்தா. சரி, என தலையாட்டிக் கொண்டான் பிரசாத். பையன் போயி அவன் தாத்தாகிட்ட யோசனை கேட்டானா…என வேண்டுமென்றே இடைவெளி விட்டார்.

“தாத்தாவுக்கே பதில் தெரியல்லியா?” அவருக்கா தெரியாது… என்று சிரித்தார் கணபதி. பிரசாத்தும் சிரித்தான். எப்பிடி தாத்தா மணலைக் கயிறா திரிக்கறது? “ஒரு கயிறை எடுத்து பத்த வெச்சா அதுபாட்டுக்கு நிதானமா நெருப்புவிட்டு எரியும். அப்பறம் அப்படியேயே அதன் சாம்பல் தங்கிரும். அதைக் கையால் எடுத்தால் அந்தச் சாம்பல் கலைஞ்சிரும். அதைக் கலைக்காமல் ஒரு தட்டைப் போட்டு மூடி எடுத்திட்டுப் போயி ராஜகிட்ட காட்டு.. அதுதான் மணல்கயிறு..ன்னார் அந்தத் தாத்தா.

“வெரி குட்” என்று துள்ளிக் குதித்தான் பையன். ராஜா அவனுக்குப் பரிசுகள் வழங்கி அவனைக் கட்டிக்கிட்டார். சவால் விட்ட அந்த அறிவாளி ராத்திரியோட ராத்திரியா நாட்டை விட்டே ஓடிப்போனான்.

ராஜா கேட்டாரு. எப்பிடி யாராலயும் பதில் சொல்ல முடியாத கேள்விக்கு எல்லாம் உன்னால பதில் சொல்ல முடிஞ்சது? அப்ப அவன் சொன்னான். “எங்க தாத்தாதான் இந்தக் கேள்விக்கு எல்லாம் பதில் சொன்னாரு. வயசானவங்ளை நாம ஒதுக்கி வைக்கிறோம். அலட்சியப் படுத்தறோம். ஆனா ஆபத்து அவசரம்னால் அவங்க அனுபவமும் அறிவும் சமயோசித புத்தியும் தான் நமக்ககு வழிகாட்டுது. வயசானவங்களை நாம நல்லபடியா வெச்சிக் காப்பாத்தணும்..

உடனே அந்த ராஜா, முதல்ல ஒரு ஆணை போட்டாரே, நாட்ல உள்ள வயசானவங்ளை யெல்லாம் கொன்னுருங்கன்னு சொன்னாரே, அந்த ஆணையை விலக்கிக்கிட்டாரு… வாபஸ்… என்றபோது தாத்தா அழ ஆரம்பித்திருந்தார்.

“தாத்தா நல்ல முடிவுதானே? ஏன் அழறீங்க?” என்று கேட்டான் பிரசாத்.

•••

storysankar@gmail.com

91 97899 87842 / whatsapp 9445016842