Saturday, February 28, 2015

சைலபதியும் இலக்கியச் சூழலும்

சொற்களின் மீது எனது நிழல் – 
சிறுகதைகள் சைலபதி
பக். 160 விலை ரூ 120/-
*
நிவேதிதா பதிப்பகம் சென்னை வெளியீடு
அலைபேசி 91 89393 87296 email - 
nivethithappathipagam1999@gmail.com


சைலபதியும் 
இலக்கியச் சூழலும்

*
எஸ். சங்கரநாராயணன்

சைலபதியின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி ‘சொற்களின் மீது எனது நிழல்‘ வெளியாகியிருக்கிறது. நேற்று (27,02,2015) இலக்கிய வீதி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து அவருக்கு ‘அன்னம்‘ விருது அளித்து கௌரவித்தது. அதே நாளில் இந்தத் தொகுதியும் வெளியிடப்பட்டது. இலக்கிய வீதி இனியவன் வெளியிட்டார். முதல் பிரதி நான் பெற்றுக் கொண்டேன்.

 எந்தக் காலத்திலும் இல்லாத அளவில், தமிழ்ச்சூழல் கவலை தருகிறதாய் இருக்கிறது. இந்தக் காலத்தில் எழுத வந்ததே கூட சிரமமான விஷயமாய் இருக்கிறது. மூத்த தலைமுறையினர் எல்லாருக்குமே, எங்க காலம் ஆகா, உங்க காலம் சுகமில்லை… என்கிற புலம்பல் இருக்கும். நான் சொல்வது அந்த மாதிரி அல்ல. இலக்கியத்தில்  பொதுவாக அரசியல் தலையீடு குறைவாகவே, அலட்சிக்கத் தக்கதாகவே இருக்கும். அதன் உச்சகட்ட தலையீடு, அதிகாரப் பிடிப்பு இப்போது உள்ளது.

அதென்ன தலையீடு?

இப்போது விமரிசகர்ள, இதைத் தான் எழுது, என்கிறார்கள். இப்படித்தான் இதை நீ எழுது, என்கிறார்கள். இதை நீ எப்படி எழுதலாம், என்கிறார்கள். இதை இப்படி எப்படி நீ எழுதலாம், என வருகிறார்கள். என்ன எழுதப்பட்டிருக்கிறது, என்பதைத் தாண்டி, யார் எழுதினார்கள், ஏன் எழுதினார்கள் என்றெல்லாம் யூகங்களை வாரியிறைத்து ஒரு முட்டு மோதல். கற்பிதங்களை வாகசர்கள் மீது திணிக்கும் விமரிசகர்கள். எழுத்தாளனின் பின்னணியில் செயல்படும் மனம், என அதற்கு வியாக்கியானம். விமரிசகனின் பின்னணியில் செயல்படும் ‘திரிந்த‘ மனத்தைப் பற்றிச் சொன்னவர்கள் இல்லை.

நான் சொல்லப் பார்க்கிறேன் இப்போது. படைப்பை ஒரு முன் வரைவுடன், தன் எதிர்பார்ப்புடன் அணுகுவதே இப்போது விமரிசன பாணி என்கிற அளவில் நிலைப்பட்டு வருகிறது. இது இலக்கியத்தில் ஆரோக்கியமான போக்கு அல்ல. எழுத்தாளனை விட விமரிசகர்கள் பெரியவர்கள் என கொக்கரிக்கிறார்கள். பின் நவீன கதையாடல்களில் இது வலியுறுத்தவும் படுகிறது. எழுத்தாளன் எழுதியவுடன் மரணித்து விடுகிறான், என்று வாசகனுக்கு, ‘தன்‘ மரணத்தை நினைவூட்டி பயமுறுத்துகிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி உட்பட, உனக்கான சமூக முகம் இங்கே கட்டமைக்கப் பட்டிருக்கிறது. இந்த அதிகார மையத்தை மீற இயலாது. மனிதனுக்கு விமோசனமே இல்லை, என பின் நவீன வாதிகள் வாதிடுகிறார்கள். பக்கவாதம் தான் இது. வெறும் உசுப்பேத்தி விடும் கலகக்குரல் தான் இது. ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கும்மாளம். பலர் ஒன்றிணைந்து வாழும் சமூக அமைப்பில் சட்ட திட்டங்கள் ஒழுங்குகள் தேவை தான். அவை அன்றி இவர்களும் நானும் ஒரே மேடையில், அல்லது ஒரே குடையடியில் இப்படி விவாதம் செய்யக் கூட முடியாது. ஒருவனுக்கு ஒருத்தி என அமைதி காணும் சாமானியனைத் துன்புறுத்த இவர்களுக்கு ஏன் தோன்றுகிறது. பயந்தவர்களிடம் போணி பண்ணும் வியாபாரமா இது.

கம்யூனிஸ்டுகளுக்கு கம்யூனியம் பேச சிறந்த இடம், ஜனநாயக நாடு தான். அங்கே தான் அவனுக்கு பேச்சுரிமை பேணப்படுகிறது, என நான் வேடிக்கையாய்ப் பேசுவேன். பின் நவீன வாதிகளுக்கும் இது பொருந்தும்.

வாசகனைத் தெளிவிக்க அல்ல, குழப்பிவிட என்று விமரிசகர்கள் கிளம்பினாப் போலிருக்கிறது. கவலை அளிக்கும் விஷயம் இது. விமரிசன ஆதிக்கம் எப்பவுமே இலக்கியத்துக்கு நல்லது அல்ல. இலக்கியத்தில் இருந்து விமரிசனம் என அமைவதே இயல்பு.

எப்படி அப்படி நிகழ்ந்தது?.. என்பதையும் யோசிகக வேண்டும். மரபு வழியாக புதுக்கவிதை என்கிற பாணியை உலகம் எட்டியபோது, புதுக்கவிதை எழுத வந்தவர்கள் மரபின் சாரத்தை உணர்ந்தவர்களாய் இருந்தார்கள். அதன் பின்னான தலைமுறை மரபின் செழுமையை உணராமலும், அதையே கேலியடித்தும் படைப்புகள் தர ஆரம்பித்தபோது, இலக்கியம் அதன் மேல்மட்ட அளவிலேயே மழைத்தண்ணீராய் ஓட ஆரம்பித்து விட்டதை உணர முடியும். படைப்புகளை, படைப்பாளரின் வாழும் சூழல் சார்ந்து ஒரு வட்டம் போட்டு, இதான் இவன், இப்படித்தான் இவன் எழுதுவான், என எல்லாவற்றையுமே அலட்சியப்படுத்தி, அல்லது குற்றப்படுத்திப் பார்க்கிற பாவனைகள் வந்துவிட்டன. தன் சூழலை விட்டு வெளியே வந்து ஓர் எழுத்தாளன், தன் படைப்பு வீர்யத்துக்கு என்ன நியாயம் செய்துவிட முடியும்? அடுத்தவனின் சட்டையைத் தேவையற்று மாட்டித் திரிகிற நிலைமைக்கு எழுத்தாளன் பலவந்தப்படுவது கவலை அளிக்கிறது.

தவிரவும், ‘சமுதாயப் பிரச்னை‘ பேசும் இன்றைய எழுத்தாளனுக்கு பெரிய வாசிப்புப் பின்னணியோ, பிரச்னையின் நிஜமான தீவிரமோ, அக்கறைசார்ந்த பொறுப்போ அத்தனைக்கு இல்லை. அவனது படிப்பறிவு குறைவு. பட்டறிவும் குறைவாகவே இருக்கிறது. ஆக விவாதிக்க வரும் விஷயம் பற்றி அவர்களுக்கே அரைகுறையான அல்லது ‘எனக்குத் தெரியும்‘ என்கிற வீம்பும் இறுமப்பு சார்ந்த பிரமையும் தான் படைப்பில் காணக் கிடைக்கிறது. அதனால் அவர்கள் படைப்பில் காட்டுகிற ‘நியாயமின்மை‘, சமூகத்தின் எதிர்ப்புக் குரலுக்கும் காரணமாகி விடுகிறது.

இந்த சூழலில் தான் சைலபதியின் கதைத் தொகுதி ‘சொற்களின் மீது எனது நிழல்‘ வெளியாகியுள்ளது. தன் இயல்பில் தான் கண்டு கேட்டு உணர்ந்த விஷயங்களை, சாதிச்சாயம் இன்றி, அரசியல் கட்டமைத்த சமூகப் பார்வை இன்றி அவர் வாழ்க்கையின் தன்னொழுங்கில் முன்வைக்க முயல்கிறார், என்பதே ஆறுதலாய் இருக்கிறது. அதுவே முதற்கட்ட அளவில் கவனிக்கத்தக்க விஷயமாய் இருக்கிறது. பக்கச் சார்பு அற்ற கதைகள் என்ற அளவிலேயே தேடிப் பார்க்க வேண்டியிருக்கிற இலக்கிய சூழலில், சைலபதி தன் அடையாங்களுடன் அடையாளப் படுகிறார். கெடுபிடிகளால் அசைப்புறாமல் அவர் எழுத வேண்டும். இதை அவர் உணர்ந்திருக்கிறாரா? இன்னும் பெரிய வட்டத்துக்குள் அவர் வருகையில் அவர் இதைக் கடைப்பிடிப்பாரா?

என் கவலைக்குக் காரணம் உண்டு. ‘மழித்தலும் நீட்டலும்‘ என்கிற சிறுகதை. ஐயர் பாத்திரம் ஒன்று. சவரக்கடை நடத்தும் சாத்தன்… இரு பாத்திரங்கள். சாத்தனின் மகனின் சமூக ரீதியான செயல்பாடுகளைக் கிண்டல் செய்யும் ஐயர். அவன் முன்னேறி விடுவான், என்பதை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை, என்கிற சிறுமை. அதைப் புரிந்துகொண்டான் சாத்தன், என முடியும் கதை.

இந்தக் கதைக்காகவே கதைச்சூழல். இப்போது சவரக்கடைகள் நவீன முகம் அடைந்துவிட்ன என ஆரம்பிக்கிற கதை, ஆனாலும் பழைய சவரக்கடை ஒன்று, பழைய சாத்தன்… என உட்சுருள்கிறது. இதுதான் இலக்கிய அரசியல்  ந்ர்ப்பந்திக்கும், ‘இதை எழுது. இதை இப்படி எழுது‘ கட்டளை. வழக்கொழிந்த விஷயங்களை பூதக்கண்ணாடி கொண்டு தேடி முன்னிறுத்தி, நான் சமுதாயப் புரட்சிக்குப் பங்களிக்கிறேன், என்கிற பாவனை…

ஆனால் அநேகக் கதைகள் தன்னியல்பில் இந்தத் தொகுதியில் உலா காண்பது ஆறதல் அளிக்கிறது. மரபுசார்ந்த சிந்தனைவியூகத்துடன் இவர் பாத்திரங்கள் நடமாடுகின்றன. கனவுகள் உண்டு. ஆனால் அதிதங்கள் அற்ற பாத்திரங்கள். பிரமைகள் அல்ல. நம்பிக்கை சுமந்து அதை தாமே வேடிக்கை பார்க்கிற பாத்திரங்கள். முனி வருகிறது. இறந்தவனின் சாபம் வருகிறது. இறந்தவர்களுக்கு அக்கறையுடன் ‘காரியம்‘ செய்ய இவர் பிரியப்படுகிறார். அதைப்பற்றிய உங்கள் விமரிசனத்துக்கு கதையில், அதன் யதார்த்தப் பின்னணி மீறிய கருத்துத் திணிப்பு இல்லாத அளவில், நல்ல முற்றம் அமைக்கப் பட்டிருக்கிறது. யதார்த்தப் படைப்புகளில் தான் அது சாத்தியமும் ஆகிறது.


உத்தி சார்ந்த முறுக்கல்கள் இல்லாமல், இன்றைய சூழலில் யதார்த்தக் கதைகளை அவர் எழுதுகிறார். ஆறுதல் அளிக்கும் விஷயம் இது. சைலபதி விமரிசன அரசியலுக்குள் அலைப்புற மாட்டார், என நான் நம்புகிறேன்.

Wednesday, February 25, 2015

very short story / America

very short story


துரதிர்ஷ்டம்

ஆலன் இ, மேயர்


டம்பெங்கும் கடும் வலியுடன் கண் விழித்தேன். என் படுக்கையருகே ஒரு நர்ஸ்.

     ''ஃபியுஜிமா ஐயா...'' என்றாள். ''ரெண்டுநாள் முன்னால் ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்டதில், உங்கள் நல்லதிர்ஷ்டம், நீங்கள் தப்பித்து விட்டீர்கள். இப்போது நீங்கள் இந்த ஆஸ்பத்திரியில் நலமாய் இருக்கிறீர்கள்.''

     பலவீனமாய் நான் கேட்டேன். ''இது எந்த இடம்?''

     ''நாகசாகி'' என்றாள் அவள்.
---
தமிழில் எஸ். ங்கரநாராயணன்


Saturday, February 21, 2015

சொற்களின் மீது எனது நிழல்
சைலபதியின் சிறுகதைத் தொகுதி
*
அணிந்துரை / தமிழ்மகன்

*
சொற்களின் மீது

உனது நிழல்

*
''ஹலோ... சைலபதி?''

''ஆமாம் சார். ஒரு நிமிஷம்... வண்டியை ஓரமா நிறுத்திட்டுப் பேசறேன். ம்.. சொல்லுங்க

சார். படிச்சுட்டீங்களா?''

''படிச்சுட்டேன். நல்ல தொகுப்பு. புதிய  புதிய களம்... நல்லா வந்திருக்கு.''

''நன்றி சார்.''

''உங்களுக்குப் பெண் குழந்தை இருக்கா?''

''இல்லை சார்.''

''உங்கள் கதைகளில் பெண் குழந்தைகள் முக்கியமான பாத்திரங்களாக இடம்

பெற்றிருப்பதைப் பார்த்தேன். அதான் கேட்டேன்.. அப்புறம் இன்னொரு சந்தேகம்...''

''சொல்லுங்க சார்''

''ஸ்ரீ தோஷம்னு ஒரு கதை... ஸ்திரி தோஷம் என்பதுதான் தப்பா வந்துடுச்சோன்னு''

''இல்ல சார். ஸ்ரீ தோஷம் சரிதான்.''

''இப்பத்தான் முன்னுரை எழுதிக்கிட்டு இருக்கேன். கேட்கணும்னு தோணுச்சு... சரி..

ஓ.கே.''

''ஓ.கே.''

தேவைப்படாத இரண்டு சந்தேகங்களைக் கேட்ட இளம் நெருடலோடு எழுத
ஆரம்பித்தேன்.

அப்துல்காதரின் குதிரை, தேவன் மனிதன் லூசிஃபர் நூல்களைத் தொடர்ந்து சைலபதியின் இந்த சிறுகதைத் தொகுதி எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிறது. அந்த இரண்டு நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியவர்கள் நிஜமாக இந்த மூன்றாவது நூலையும், இனி அவர் எழுத இருக்கும் அத்தனை நூல்களையும் எதிர்பார்ப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கதைகளின் கடைசி வரி வரை சுவாரஸ்யத்தைத் தக்க வைக்கும் இனிமையான வாசிப்பு அனுபவத்தைத் தரக் கூடியவை சைலபதியின் எழுத்துக்கள்.

எழுத்தில் அமானுஷ்யத்தை ஏற்படுத்தும் ‘ஒத்தைப்பனை‘ ஆகட்டும், மகளின் தவிப்பைக் கண்டு கலங்கும் தந்தையை விவரிக்கும் ‘அம்மு‘ ஆகட்டும் எல்லாமே வாசிப்பின் தரிசனத்தைத் தரத் தக்கவை.  ‘ஒத்தைப்பனை’யின் முனி உண்மையில் இரவிலே வெள்ளைக் குதிரையில் வானத்துக்கும் பூமிக்குமாக அமர்ந்து வேட்டைக்குப் புறப்படுகிறாரா? அது உண்மையா, பொய்யா? பொய்யே போன்றதொரு உண்மையா?... நம்பிக்கையா, நிஜமா? என்ன ஆச்சர்யம்? அது எல்லாமாக இருக்கிறது. அதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் அதைப் படிக்கும் ஒவ்வொரு வாசகனும்தான். ஒவ்வொரு வாசகனுக்கும் ஒரு சந்தேகம். கேரளாவுக்குக் கடத்திச் செல்லப்பட்டது முனியா, ராஜனின் காதலியைத்தான் முனி கேரளாவுக்குக் கடத்திப் போய்விட்டதா?

சைலபதியின் பேய்கள் பெரும்பாலும் நல்லவித மானவை. அப்துல்காதரின் குதிரை தொகுதியில் இடம்பெற்ற எஸ்.எம்.எஸ். பேய்க்குத்தான் எத்தனை இரக்க சுபாவம்? அந்தப் பேயைப் போலவே மிஷ்கினின் பிசாசு படத்தில் வரும் பேய்க்கும் இரக்கம் வந்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

சில விஷயங்களில் நாம் தவறான முடிவுகள் எடுக்கிறோம். தவறாகக் கோபப்படுகிறோம். தவறான தண்டனைகளை வழங்கிவிட்டு, தவறுக்கு வருந்துகிறோம். ‘பார்க்கிங்‘ கதை, வித்தியாசமான இடத்தில் வந்து முடியும் ஒரு சுவாரஸ்யமான கதை. கடை முதலாளிக்கும், அதேதெருவில் வீட்டுச் சொந்தக்காரர் ஒருவருக்குமான பிரச்னையில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும், வேலையை இழந்த அவளுடைய கணவனும் சிக்குவது எதிர்பாராதது.

பிகார்காரர்கள் பல லட்சம் பேர் இப்போது தமிழ்நாட்டில் வந்து வேலை பார்க்கிறார்கள். அவர்களில் சிலரை நல்ல உழைப்பாளிகள் என்கிரோம். படிப்பறிவு குறைந்தவர்கள் என்கிறோம். குறைந்த சம்பளத்துக்கு மாடு மாதிரி உழைக்கும் இளிச்சவாயன்களாகப் பார்த்து விட்டோம். ஈஸிஆர் சாலைகளில் பெண்களைக் கற்பழிக்கிறவர்களாகவும், ஏ.டி.எம். மிஷின்களில் கொள்ளை அடிப்பவர்களாகவும் பேப்பர்களில் பார்த்துவிட்டோம். பிகாரி கதையில் வரும் மானுவின் தந்தை... சைலபதியின் மனசு அவருடைய கதைகளில் பிரதிபலிக்கிறது.

மானுவின் தந்தை கொண்டுவரும் பார்சலை ஈவு இரக்கம் இல்லாமல் பிரித்துப் போட்டுவிட்டு வருத்தப்படுபவனும், பைக்கில் ஊசி கொண்டு குத்திவிட்டு வருத்தப்படும்.... பிழைக்கு அஞ்சும் நடுத்தர மனசுகளின் அடையாளங்கள்.

அது ஒரு நடுத்தர வர்க்கத்தின் மனசு. மத்தியமர் மனசின் நிழலாட்டங்களைப் படம்பிடிப்பதுதான் உண்மையில் கதைக்கான இடமோ?

கச்சிதமான வர்ணனைகள்... (மனம் வாகனங்கள் இல்லாத சாலையாக வெறிச்சோடிக் கிடந்தது - துஞ்சுதல் போலும்) வசனங்கள்.

முடிவெட்டுகிற சாத்தன், முதுமை காரணமாக நிராகரிக்கப்படுகிற சோமசுந்தரம், மகளின் படிப்பைக் கனவு காணும் ராம் சிங், 23 வயதில் வாழ்வை இழந்து நிற்கும் விநோதா, சாகப் போகிற கட்டைக்கு வீணாக செலவு செய்யும் மகனை நினைத்துத் தவிக்கிற ஆறுமுகய்யா எல்லோரும் ஒரு விதத்தில் எல்லோருக்கும் நெருக்கமானவர்கள்தான்.

மனிதராக இருக்கும் அனைவரும் சந்திக்கும் மாந்தர்கள்தான். இவர்களை கதை மாந்தர்கள் ஆக்கும் போது சைலபதி, தன் படைப்புத் திறனை வெளிப்படுத்துகிறார். அந்தக் கதாபாத்திரங்களுக்கான நம்பகத்தன்மையே அது. நாம் தவறவிட்ட ஒரு புள்ளியை நமக்குத் தரிசிக்கத் தருவது படைப்பாளியின் ஆகச் சிறந்த திறமை.

சாலமன் சலிப்போடு வண்டியை நிறுத்திவிட்டு, 'தோத்திரம் பாஸ்டர்' என்றான்.

'என்ன பெரியவரே காசு தராம கம்பி நீட்டலாம்னு பாக்கறீயா?' என்றான் வாட்ச்மேன்.

ரமணா ஸ்டோர்... அங்கு அம்மா, அப்பா தவிர எல்லாவற்றையும் சல்லீசா விக்கிறான்.

ரொம்ப நாளாக அந்த ஸ்பாவை ஏதோ ஓட்டல் என்றே நினைத்திருந்தார். - கதையை ஜீவனுள்ளதாக்கும்

இத்தகைய வரிகள் இந்த நூலில் ஏராளம். இதில் உள்ள 13 கதைகளும் ஒன்றில் இருந்து ஒன்று மாறுபட்டது.

சுவையான ஆரம்பம்... விவரித்துச் செல்லும் பாங்கு, இறுக்கமான முடிச்சு, நெகிழ்ச்சியான, அதிர்ச்சியான முடிவு... இப்படித்தான் சைலபதியின் கதைகள் கட்டமைக்கப்படுகின்றன. கதைகளை எழுதுவது, வாழ்வின் துளிகளைத் தரிசிக்கத் தருவது.

சைலபதி தரிசிக்கத் தெரிந்தவராகவும் தரிசிக்கத் தருபவராகவும் இருக்கிறார். அவரை அவருடைய கதைகள் மூலமாகக் கண்டுபிடிப்பது சவால். ஆரம்பத்தில் அவருடன் போனில் பேசியது அந்த சவாலில் ஏற்பட்ட சறுக்கலாகத்தான் நினைக்கிறேன்.

எழுத்தாளனுக்குள் அவனுடைய அடையாளத்தைக் கலைத்துப் போடும் எத்தனையோ உருவங்கள் இருக்கின்றன. படைப்பாளியின் நிஜ அடையாளத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் வாசகன் தோற்க வேண்டும். அதுதான் எழுத்தாளனின் வெற்றி. சைலபதி வென்றுவிட்டார்.

 வாழ்த்துகள்.
அன்புடன்,

தமிழ்மகன்

Tuesday, February 17, 2015

தமிழ்மகனின் சிறுகதை - த க வ ல்

SHORT STORY
த க வ ல்


*
தமிழ்மகன்

வானத்தில் இருந்து தேவதூதன் யாரும் காட்சி தரவில்லை. வழக்கமான விடியல்தான். எப்போதும்போல ஐந்து நிமிட தாமதம் அதைச் சரிகட்ட ஓட்டம். ஓடும்போது டிபன் பாக்ஸ் திறந்து கொண்டு சாப்பாடு கூடையில் கொட்டிக் கொண்டது. இதுவும்கூட வழக்கமான ஒன்றுதான். இது எல்லாமே முருகனுக்கான வழக்கம் பற்றியது. அவன் அலுவலகத்தில் கெடுபிடி அதிகம். ஒரு ஜெர்மன் நிறுவனத்துடன் முருகன் வேலை பார்க்கும் அலுவலகம் ஒப்பந்தத்தில் இருந்தது. அதற்காக அதனுடைய வேலை நேரம் முதற் கொண்டு எல்லாமே சராசரி இந்த அலுவல் நேரங்களுக்கு மாறுபட்டிருந்தது. காலை ஏழு இருபத்தெட்டுக்கு அவனுக்கான அலுவல் நேரம் தொடங்கும். நான்கு முப்பத்திரண்டுக்கு வெளியே அனுப்புவார்கள். ஒவ்வொரு விநாடியும் முக்கியம் என்று பணியாளர்களுக்குச் சுட்டிக் காட்டத்தான் இந்த ஏற்பாடு.

"உச்சி வெயில்ல எங்கடா கிளம்பிட்டே?', "விளக்கு வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்'.. என நேரத்தைக் குத்து மதிப்பாகச் சொல்கிற குடும்பச் சுழலில் அவன் இந்த ஏழு இருபத்தெட்டு விஷயத்தை காலைல ஏழரை மணிக்கு ஆபீஸ் என்றுதான் சொல்ல முடிந்தது. அவர்களும் அதை எட்டு மணிக்குள் என்று புரிந்து வைத்துக் கொண்டு சாப்பாடு தயார் செய்வதையோ, முருகனை தயார் செய்வதையோ செய்து வந்தனர். வீட்டுக்கு நிலைமையை விளக்குவது சிரமம் என்று முருகனுக்குத் தெரியும். அதனால் ஆபிஸில் புரிந்து கொள்வார்கள் என்று அவனாக எதிர்பார்த்தான். அதாவது அவன் ஐந்து- பத்து நிமிடங்கள் தாமதமாக வருவது காலப் போக்கில் அவர்களுக்குக் குற்றமாகத் தெரியாமல் போய் பரிதாபத்துக்குரியவனாக எண்ணுவார்கள் என்று நினைத்தான். ஆனால் அவனைப் பொருட்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஒரு மின்னணு எந்திரத்திடம் இருந்தது. அவனுடைய கட்டைவிரல் ரேகையின் மூலம் அவனுடைய வருகைப் பதிவேற்றம் நிகழ்த்தப்பட்டது. விநாடி சுத்தமாக இருந்தது அந்தப் பதிவு. நான்கு தாமதங்களுக்கு ஒரு முறை அவனுக்கு ஒரு நாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்தது அது. இப்படியாக அவனுக்கு மாதத்துக்கு இரண்டு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டபோது அம்மட்டில் பிரச்சினைகள் ஓய்ந்தது என்று சந்தோஷம்தான்பட்டான். வீட்டில் சம்பளமே அவ்வளவுதான் என்று சொல்லிக் கொள்வதில் அவனுக்குப் பிரச்னை இருக்கவில்லை. வீட்டில் இருப்பவர்களைப் பொறுத்தவரை முருகனுக்கு அவ்வளவுதான் சம்பளம் தரமுடியும் என்று நம்பினார்கள். அலுவலகத்திலும்தான்.

அன்றும் முருகன் தன் இடது கட்டை விரலைப் பதித்தபோது இரண்டு நிமிடம் தாமதம்தான். நாளையில் இருந்து ஆறே கால் மணிக்கு வரும் பேருந்தைப் பிடித்தால்தான் சரி பட்டு வரும் என்பதையும் வழக்கம்போல நினைத்துக் கொண்டான்.

மூன்றாவது மாடியில் அவனுக்காக ஒதுக்கப்பட்ட டிபன் பாக்ஸ் ஸ்டேண்டில் சாப்பாட்டை ஒழுக ஒழுக வைத்துவிட்டு, சில்லென்று தண்ணீர் பிடித்துக் குடித்தான். அவனுக்கான பிரத்யேக ஆடையை எடுத்து அணிந்து கொண்டான். மஞ்சள் நிற பருத்தித் துணியில் எல்லார் மேசை, நாற்காலி, கணினிகளைத் துடைக்க வேண்டும். எட்டு மணிக்கு இவன் துடைத்து வைத்தவற்றை அழுக்காக்குபவர்கள் வருவார்கள். அதனால் மேஜையைத் துடைக்கும்போது அதற்கான நாற்காலியில் அமர்ந்து கொள்வது, அப்படியே கிர்ர் என ஒரு சுற்று சுற்றுவது எல்லாம் செய்வான். அறையில் கேமிரா பொருத்தியிருப்பதைச் சொன்ன பிறகு அப்படி செய்வதில்லை. கேமிரா எதிரில் வரும்போது சட்டென அடக்கமான- ஒழுக்கமான- பரிதாபமான முகத்தை எதேச்சையாக காட்டுவதுபோல காட்டுவான். யாரோ உயர் அதிகாரியின் பார்வையில் பட்டு தன் அடக்கத்துக்கும் பரிதாபகரமான தோற்றத்துக்கும் இரக்கம் சுரந்து அது சம்பள உயர்வாக மாறும் என்பது அவன் ஐந்தாண்டு கனவு. தன் விசுவாசம் கேட்பாரற்றுக் கிடப்பதாக அவனுக்கு வருத்தம் இருந்தது. மேஜையைத் துடைக்கும் போது அதிலிருந்த துண்டுக் காகிதங்களைத் தன் பிரத்யேக ஆடையில் பிரத்யேகமாகத் தைக்கப்பட்ட பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். பேப்பர்களைப் பச்சைக் கூடையிலும் பிளாஸ்டிக் உறைகளை மஞ்சள் கூடையிலும் போட வேண்டும்.

அடுத்து என்ன செய்வது என்று கிழக்கு பக்க ஜன்னலோரத்தில் நின்று யோசித்தான். அங்குதான் பெரிய மனிதர்கள் நடமாட்டம் இருக்காது. கொஞ்ச நேரம் நின்றாலும் தெரியாது. ஜன்னலை ஒட்டிய தெருவில் ஒரு பையன் இரண்டு கையையும் மேலே தூக்கியபடி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். கைகளை தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு ஓட்டுவதைவிட சைக்கிளின் கைப்பிடியைப் பிடித்து ஓட்டுவதுதான் சுலபமாக இருக்கும் என்று தோன்றியது. அவன் கஷ்டப்பட்டு அப்படி செய்வது யாருக்கும் பலனின்றி போவதோடு மற்றவர்களுக்கு உபத்திரவமாகவும் போய்விடும் போலவும் இருந்தது. அதாவது அவன் யார் மீதாவது இடித்துவிடக் கூடும். போன வாரத்தில் ஒருநாள் அந்தப் பையன் இதே போல வந்தான். அவனைத் திடுக்கிட வைத்து அனுப்பினான் முருகன். திடுக்கிட வைத்த பின்பு அந்தப் பையன் சைக்கிளை ஒழுங்காக ஓட்டிச் செல்ல ஆரமம்பித்தான். அந்தப் பையன் தெருமுனை வரை சென்று மீண்டும் திரும்பி வந்தான். முருகன் போன வாரம் போலவே சட்டென அவனைசலனப்படுத்த ஆசைப்பட்டான். பாக்கெட்டில் துழாவிய கையில் கிடைத்த பேப்பரைச் சுருட்டி பையனை நோக்கி எறிந்தான். அது பையன் தலைமீது விழுந்ததா என்று எட்டிப் பார்த்தான். பையன் காகிதம் வந்து விழுந்த திசையை திடுக்கிடலோடு பார்த்துவிட்டு வேகமாகச் சென்று மறைந்தான். முருகனுக்கு தன் பொருட்டு உலகில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் மகிழ்ச்சி பொங்கியது. அப்படி இருந்தவனை இப்படி ஆக்கிய சந்தோஷம். கீழே வந்து அந்தந்த அறைக்கான டேபிள் டாப் தண்ணீர் குடுவைகளைக் கொண்டு போய் வைக்கத் தொடங்கினான்.

நாள் வழக்கம் போல நகர்ந்து கொண்டிருந்தது.

பதினோரு மணி வாக்கில் அவனுடைய ஹவுஸ் கீப்பிங் துறை கண்காணிப்பாளர் அழைத்தார். இடுக்கான ஒரு அறை. வெளிச்சம் குறைவு. அங்கிருந்த பீரோவுக்கு சில ஃபைல்களும் ஏராளமான டாய்லட் கிளினிங் அமில பாட்டில்களும் வாசனை தரும் பொருள்களும் பாட்டில்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அறைமுழுதும் அவற்றின் கலவையான மணம் சூழ்ந்திருந்தது. பெரும்பாலும் அந்த அறையிலேயே இருப்பதால் அவர் மீதும் அந்த வாடை பரவியிருந்தது.

"எத்தனை மணிக்கு வந்தாய்?'' என்றார்.

முருகன் தலையைச் சொறிந்தான். சரியான நேரத்துக்கு வரவில்லை என்பதை அப்படித் தெரியப்படுத்தினான். கண்காணிப்பாளர், கடுமையான முகத்தோடு இருந்தார்.

"வந்ததும் என்ன செய்தாய்?''

"எல்லா அறை மேஜை, நாற்காலியையும் துடைத்தேன்''

"அப்புறம்?''

"தண்ணீர் குடுவைகளை...''

"அதற்கப்புறம்?''

எந்த மேஜையாவது சுத்தமாக இல்லை என்று புகார் வந்திருக்கக் கூடுமோ? கணினி விசைப்பலகையின் கீழே எங்காவது தூசு தப்பித்திருந்திருக்கக் கூடும்.

"உங்கள் வீடு எங்கிருக்கிறது?''

சொன்னான். முழு முகவரியையும் எழுதிக் கொண்டார்.

"போன் நம்பர் இருக்கிறதா?''

"இல்லை. தம்பியிடம் இன்னொரு செல் போன் இருக்கிறது''

அந்த நம்பரை முகவரிக்குக் கீழே குறித்துக் கொண்டார்.

"எல்லாத்தையும் சுத்தமாகத்தான் துடைத்தேன்'' முருகன் சொன்னதைக் கவனித்தில் கொள்ளாது, ""நீ வேலை எதுவும் செய்ய வேண்டாம். ஓய்வறையில் இரு'' என்ற கண்காணிப்பாளரின் குரலில் அவனுடைய ஓய்வு முக்கியமானதாகத் தெரியவில்லை.

டாய்லட்டுகளுக்கு பெனாயில் உற்ற வேண்டிய நேரத்தில் எப்படி ஓய்வெடுப்பது என்று முருகனுக்கு பெருங்குழப்பமாக இருந்தது.

ஓய்வறை என்பது பணியாளர்கள் திடீர் சுகவீனம் அடைந்தால் சற்றே படுத்திருக்க சில மரப் பலகைகள் அடிக்கப்பட்ட கூடம். அங்கே கிடந்த பழைய தினத்தாளை மரப் பலகை மீது விரித்துப் படுத்தான். ஒரே ஓரு மின் விசிறி தலைக்கு மேல் இருப்பதை வெகு நேரம் கழித்தே கவனித்தான். அதைப் பயன்படுத்தலாம் என முடிவெடுத்த கணத்தில் ஒரு பணியாள் வந்து மனிதவள அதிகாரி அழைப்பதாகச் சொன்னான். அவர் இருப்பது இரண்டாவது மாடி. அந்த அறையைத்தான் தாம் சரியாகச் சுத்தம் செய்யவில்லை என்று தீர்மானித்து போனதும் மன்னிப்பு கேட்கத் தயாராக அவர் அறைக்குள் நுழைந்தான்.

"காலையில் வந்ததும் என்ன செய்தாய்?'

"இனிமே சுத்தமா துடைச்சுவிட்டிர்றேங்க''

"கேட்டதுக்கு பதில் சொல்''

கண்காணிப்பாளரிடம் சொன்ன தகவலை மறுபடி சொன்னான். கண்காணிப்பாளர் போலவே இவரும் திரும்பத் திரும்பக் கேட்டார். அவர்கள் தாம் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ அதைத் தெளிவுபடுத்தினால் அந்தச் சரியான வாக்கியத்தைச் சொல்லிவிட்டு வேறு வேலையைப் பார்க்கலாம் என்பதுதான் முருகனின் சிந்தனையாக இருந்தது.

"உன் தம்பிக்கு நீதான் செல் போன் வாங்கித் தந்தாயா?''

இந்தக் கேள்விக்கு "எப்படித் தெரியும் என்பதா?, ஆமாம் என்பதா' என்பதில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டது முருகனுக்கு. அந்த முகக் குறிப்பு மனித வள அதிகாரிக்கும் புரிந்தது.

"சரி. என்ன விலை'' அடுத்தக் கேள்விக்குத் தாவினார்.

அதிகாரிகள் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது நம் கடமை என்று கருதுபவன்தான் முருகன். ஆனால் அதிகாரிகளுக்கு இப்படியெல்லாம் கேட்பதற்கு அதிகாரம் இருக்கிறதா என்று தத்தளித்தான். எதற்கு இதையெல்லாம் கேட்கிறீர்கள் என கேட்பதற்கு அவனுக்கு நா எழவில்லை. அதனால் அதிகாரி கோபமடைந்துவிடக்கூடும் என்பது அவன் யூகம்.

அந்த யூகத்தினூடே அதிகாரிக்குக் கட்டுப்படவில்லையாயின் அது நம் வேலையைப் பாதிக்குமா என்பதையும் யோசித்தபடியே விலையைச் சொன்னான்.

"உன் சம்பளத்துக்கு இந்த விலை கட்டுபடியாகுமா? வீட்டில் வேறு யார் சம்பாதிக்கிறார்கள்?''

"நானும் இந்த மாதத்திலிருந்து தம்பியும்''

"அப்படியானால் போன மாதம் வரை நீ மட்டும்தான்'' }இப்படித் தெளிவாகக் கேட்பதின் அர்த்தம் புரிந்து கொள்ள முடியவில்லை. நாமும் அதைத்தானே சொன்னோம், நாம் சொன்னதை அவர்கள் கண்டுபிடித்ததுமாதிரி ஏன் திரும்பச் சொல்கிறார்கள் என்பதும் முருகனுக்குப் புரியவில்லை.

"பைக் வாங்கியிருக்கிறாயா?''

"மாதத் தவணை... அம்மா வளையலை வைத்து... தம்பிதான்... '' அதிகாரி அனைத்தையும் குறித்துக் கொள்வதைப் பார்த்து ஓர் அசட்டு தைரியத்தில் "எதுக்கய்யா கேட்கிறீங்க?'' என்றான் மெதுவாக. அது அதிகாரியின் காதில் விழாமல் இருந்தால் நல்லது போல இருந்தது அந்தக் குரலின் வலிமை. அதிகாரியும் அவன் கேட்டதைக் கண்டு கொள்ளாமல் இருந்தது நிம்மதியாக இருந்தது முருகனுக்கு. ஏசி அறை அதிக குளிர்ச்சியுடன் இருந்தது. அதிகாரியிடம் அதிகப் பிரசிங்கித்தனமாகக் கேட்டுவிட்டது சரியா, தவறா என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

இரண்டு மணிக்கு மேல் பொது மேலாளரைப் பார்க்கும்படி கூறிவிட்டு வெளியே செல்லச் சொன்னார். பொதுமேலாளரைப் பார்க்கும்வரை வேலை செய்யலாமா கூடாதா என்று யாரும் கட்டளையிடவில்லை. என்ன நடக்கிறது, எல்லா பணியாளரையும் இப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை விசாரிப்பது வழக்கம் என்று பதில் சொல்வார்களா? நம் வேலையில் ஏதாவது குற்றம் கண்டார்களா? ... அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் தம்மால் யோசிக்க முடியாது என்பது தெரிந்திருந்தாலும் நாம் நினைப்பதில் ஏதாவது ஒன்று சரியாக இருக்கும் போல தோன்றியது அவனுக்கு. சாப்பாட்டுக்கூடையில் கொட்டிய நிலையிலேயே இருந்த சாப்பாட்டைப் பக்குவமாக வெளியே எடுத்து சாப்பிட்டான். டிபன் பாக்ûஸக் கழுவி பைக்குள் திணித்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்தால், இன்னும் இரண்டு மணி ஆவதற்கு இரண்டு மணி நேரம் இருந்தது. இவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டிருக்க வேண்டாமோ?.. ஆனால் அதைத் தவிர்த்து வேறு என்ன செய்வது என்பது தெரியாமல்தான் பசியே எடுக்காத நிலையிலும் அவன் சாப்பிட்டான். காத்திருக்கும் நேரம் விரைவாகவும் கடிகார ஓட்டம் மெதுவாகவும் இருந்தது. ஜன்னல் வழியே தெருவைப் பார்த்தான். சாலை மரங்களின் இடைவெளியில் வெயில் இருந்தது. ஆள் நட மாட்டம் இல்லை. திரும்பி பணியாளர் ஓய்வறையில் சென்று அமர்ந்தான். பல மணி நேரங்களுக்குப் பிறகே இரண்டு மணி நேரம் கடந்தது.

இப்போது பொது மேலாளரின் கேள்வி நேரம்.

முதல் இரண்டு பேர் கேட்ட கடுகடுப்பும் இல்லாத தொனியில் ஆனால் கூர்மையான பார்வையோடு அவர் கேட்டார். அவருடைய கேள்வி மிக இயல்பான விசாரிப்பாக இருந்தது. அவருக்குத் தமிழும் தெரிகிறதே என்ற ஆச்ச்ர்யம் முருகனுக்கு. அவர் அறையில் இருந்து யாருடனாவது பேசியபடியே வெளியே வரும்போதும், யாருடனோ லிப்ட்டுக்காகக் காத்திருக்கும்போதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவதைப் பார்த்திருக்கிறான். சாயங்காலம் வீட்டுக்குப் போகும்போது மேனேஜருக்கு நன்றாகத் தமிழ் பேசத் தெரிவதை பழனியிடம் சொல்ல வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டான். பழனியைக் காலையிலிருந்தே பார்க்க முடியவில்லை. காலையில் இருந்தே யாரையும் பார்க்க முடியவில்லை. யாரையும் பார்க்காமல் இப்படி அரை நாளை எப்படிக் கழிக்க முடிந்தது? ஏன் யாரும் தம்மைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை?

"திடீர் என்று உங்களிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது?'' மேலாளரின் கேள்வி வெளியே அலைந்து கொண்டிருந்த முருகனை இறுக்கிப் பிடித்தது.

இரண்டு நாளுக்கு முன் சம்பளம் வாங்கியதால்.. என்ற பதில் மேலாளருக்கு முருகனின் தெனாவட்டு போல இருந்திருக்க வேண்டும். ஏறிட்டுப் பார்த்துவிட்டு குனிந்தார்.

"ஏன் அடிக்கடி ஜன்னல் பக்கம் போனாய் என்ற காரணத்தை மட்டும் உண்மையாக ஒப்புக் கொண்டால் உன்னை விட்டுவிடுவோம்'' என்றார்.

முருகன் உறைந்த நிலையில் இருந்தான். "விட்டுவிடுவதென்றால் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தமா?'

"எதற்கு?'' என்ற வார்த்தை அவனுடைய பயம் காரணமாக உரக்க வெளியானது.

தன் மேஜை அறையில் இருந்து ஒரு கசங்கிய தாளை வெளியே எடுத்தார். அதை மேஜை மீது வைத்து நீவிவிட்டுக் கொண்டே முருகனின் முகத்தைப் பார்த்தார். அந்தக் கசங்கிய தாள் அவருடைய அறையின் மதிப்பைக் குறைத்து விட்டதாகத் தோன்றியது. மேலாளரின் கோட்டுக்கும் தங்க பிரேம் போட்ட கண்ணாடிக்கும் பளபளக்கும் கிரானைட் மேஜை மேற்பரப்புக்கும் அது பொருத்தமில்லாமல் இருந்தது. அந்தக் காகிதத்தை அவன் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் அவருடைய பார்வையில் தெரிந்த காரணத்தால் சுய காரணம் இல்லாமல் பார்த்தான்.

இருவரின் பார்வையும் சந்தித்துக் கொண்ட வினாடியில் "இது என்ன தெரிகிறதா?'' என்றார்.

அவன் அப்போதும் உண்மையைச் சொன்னான். "தெரியவில்லை''

"இதைக் காலையில் நீ தெருவில் எறிந்திருக்கிறாய்''

"ஓ.. அதுவா சார்..?''

"நீதானே எறிந்தாய்?''

"எப்பவுமே பச்சைக் குப்பைக் கூடையில்தான் போடுவேன். இது வந்து ஒரு பையனை...''

"எத்தனை முறை இப்படி எறிந்தாய்?''

"இரண்டு.. மூன்று தடவை... ''

"உண்மையைச் சொல்.. எத்தனை வருடமாக இது நடக்கிறது?''

மேலாளரின் குரல் மாறிவிட்டது. "போலீஸோடு போய் காலையில் உங்கள் வீட்டில் தேடிப் பார்த்தோம்... வேறு எங்கு பதுக்கி வைத்திருக்கிறாய்?''

"என்ன சார் சொல்றீங்க?'' ரொம்ப தாமதமாக இந்தக் கேள்வியைக் கேட்டான்.

மேலாளர் பதில் சொல்லவில்லை. காலால் ஏதோ பட்டனை அழுத்தினார். இரண்டு போலீஸ் அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். எப்படி சொல்லி வைத்த மாதிரி நடக்கிறது என்று ஆச்சர்யமாக இருந்தது.

முருகனை ஏற இறங்க பார்த்துவிட்டு அமர்ந்தனர்.

"இவன்தானா?'' போலீஸ் அதிகாரி தீர்மானமாகக் கேட்டார்.

போலீஸ் அதிகாரிகளுக்கு மேலாளர் ஆங்கிலத்தில் விளக்க ஆரம்பித்தார். முருகனுக்கு ஆங்கிலம் புரியாது. அதிலும் மேலாளரின் ஆங்கிலம் மிகுந்த வேகம் கொண்டது. பின் தொடர முடியாதது. ஓரிரு வார்த்தையாவது புரியுமா என்று கவனித்தான். தன்னைப் பற்றி தவறாக எதையோ புரிந்து கொண்டு அதை உறுதியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தது.

இந்த நாள் தன் வழக்கமான நாளாக இல்லாமல் போனதற்காக முருகன் வருந்திக் கொண்டிருந்த வேளையில் மேலாளர் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தது இதைத்தான்... "எங்களின் எல்லா அறையும் கண்காணிக்கப்படுகின்றன. தேவைப்பட்டால் நாங்கள் உடன்படிக்கைப் போட்டிருக்கும் ஜெர்மன் நிறுவனத்துக்கும் அந்த பதிவுகளை அனுப்புகிறோம். அப்படி ஒப்பந்தத்திலேயே இருக்கிறது. அவர்கள்தான் இவனின் நடவடிக்கையை எங்களுக்குச் சுட்டிக் காட்டினார்கள். சில டெண்டர்கள் எங்களுடைய போட்டியாளர்களுக்கு எப்படிக் கிடைக்கிறது என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. இவனுடைய சில ஆயிரம் ரூபாய் பேராசைக்காக நாங்கள் பல கோடிகளை இழந்திருக்கிறோம். எப்படி விசாரிப்பீர்களோ, ஆனால் எவ்வளவு ஆவணங்கள் கடத்தப்பட்டுள்ளன, யார் யாருக்கெல்லாம் போயிருக்கிறது என்பது தெரியவேண்டும். இப்போது இவனை விசாரிப்புக்குக் கூட்டிச் செல்லலாம்''

போலீஸ் அதிகாரிகள் விடைபெறும்போது முருகனை நோக்கி "சரி, வா'' என்றனர்.

மேலாளரின் மேஜை கடிகாரத்தைப் பார்த்தான் சரியாக நான்கு முப்பத்திரண்டு.

  
 *

(நன்றி வார்த்தை மே மாத இதழ்)

Sunday, February 15, 2015

15 02 2015 -ICSA Centre Egmore Chennai 008 நன்றி ஓ ஹென்றி – சிறுகதைத் தொகுதி வெளியீடு ஏற்புரை

15 02 2015 -ICSA Centre Egmore Chennai 008
நன்றி ஓ ஹென்றி – சிறுகதைத் தொகுதி வெளியீடு ஏற்புரைபேச என ஏற்கனவே சுருக்கமாகத் தான் வைத்திருந்தேன். பொக்கிஷம் புத்தக அங்காடி பதிப்பகத் துவக்க விழா, மற்றும் எனது மற்றம் எம்.ஜி. சுரேஷின்  நூல்கள் வெளியீடு… நேரம் நழுவிக்கொண்டே வந்தது. எனது ஏற்புரைக்கு மணி எட்டே முக்கால். கேட்பவர்களின் மனநிலை பற்றித் தெரியவில்லை. எனக்குத் தகுதியுரை அளித்த லா.ச.ரா. சப்தரிஷி லா.ச.ராவையும், சுநுஜாதாவையும் திரும்பத் திரும்ப வியந்தும் நயந்தும் என்னைப் பற்றி அதன்கூடவும் பேசியதாகப் பட்டது. ரொம்ப சிறிய அளவில் தான் நான் ஏற்புரை வழங்க வேண்டும், என்று பட்டுவிட்டது. நன்றி ஓ ஹென்றி. நன்றி பேச்சாளர்கள். நன்றி பதிப்பாளர். நன்றி லா ச ரா, நன்றி சுஜாதா… என்று அமர்ந்து விட்டேன்.

என்றாலும் பேச வைத்திருந்த சிறு உரை அதைக் கீழே தரலாம்… நமது இணைய வாசகர்களுக்கு என… என்று பகிர்கிறேன்…


தோள் கண்டார்

தோளே கண்டார்
·       
எஸ். சங்கரநாராயணன்


பொக்கிஷம் புத்தக அங்காடியின் எனது பதிப்பாளர் மாக்சிமுக்கு நல் வாழ்த்துக்கள். முதல் இரண்டு நூல்களையுமே முத்திரை நூலகளாகத் தேர்ந்தெடுத்து அவர் வெளியிட்டிருக்கிறார். ‘அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே‘ என்கிற தன் அனுமானத்தை விஸ்தரித்து விளக்கி விவரித்து எம்.ஜி. சுரேஷ் எழுதிய நூல் தெளிவும் சுவாரஸ்யமும் மிக்கது. சில தத்துவப் புத்தகங்கள் நம்மைத் தெளிவிக்க என எழுத ஆரம்பிக்கப் பட்டு, கடைசியில், வாசித்து முடிக்கையில் இருக்கிற கொஞ்ச நஞ்சத் தெளிவையும் குழப்பிவிட்டு விடும். தலையில் அடிபட்டவன் கண்ணை முழித்துப் பார்க்கும்போது ‘நான் எங்கருக்கேன்?“ என்று சினிமாவில் கேட்பான் அல்லவா? அந்தக் கதை ஆகிவிடும். எம்.ஜி. சுரேஷ் தன்னளவிலேயே  தெளிந்து பிறகு பேனா பிடிக்கிறார். தன் வாசகர்கள் மேல் அவருக்கு அவ்வளவில் இரக்கம் இருக்கிறது.

    ஆனால் இந்தப் புத்தகத்தின் தலைப்பில் இருந்தே இதில் எனக்கு புரிதல் பிரச்னை. ‘எல்லாக் கோட்பாடுகளும் அனுமானங்களே‘ என்கிறார் சுரேஷ். அது அவரது கோட்பாடு. அது அவரது அனுமானம். என்றால் என்ன அர்த்தம்? ‘எல்லாக் கோட்பாடுகளும் அனுமானங்கள் அல்ல‘ என்கிற வாய்ப்பையும் அந்தத் தலைப்பே அளிக்கிறது அல்லவா? தத்தளிக்கிற வாசகனைக் கரை சேர்க்கச் சொன்னால் தண்ணீரில் அவர்களே தள்ளி விட்டால் எப்படி?

     இது கோட்பாட்டு விமரிசனம். கதைகளின் விமர்சனம் பற்றிப் பொதுவாகப் பேசலாம். இங்கே என் புத்தகம் பற்றி உரையாடியவர்கள் பற்றி அல்லாமல், பொதுவாக நாம் பேசுவோம்.

     படைப்பு என்பதே வாழ்க்கையின் பிரதிபலிப்பு. உண்மையும் கற்பனையும் ஒரு முயக்கத்தில் சுவாரஸ்யமான படைப்பு என ஆகி, வாழ்க்கையை ருசிக்கத் தக்கதாய் மாற்ற ஒரு படைப்பு அவ்வளவில் பாடுபடுகிறது. ஆனால் விமரிசனம் அதை மீண்டும் சுருக்கி உள்ளங் கைக்குள் அமுக்கிவிடப் பார்க்கிறது. எத்தகைய பேராசை அது.

சிற்றாசை என்று கூட நான் சொல்லுவேன்.

     கம்பர் சொல்வாரே, தோள் கண்டார், தோளே கண்டார் – விமர்சகர்களுக்காகச் சொன்னது போல் இருக்கிறது. ஒரு படைப்பு பற்றிய ஒரு விமரிசனம் ஒரு வாழ்க்கையின் மற்றோர் பக்கத்தை தானறியாமல் மறைத்து விடுகிறது. இலையில் பரிமாறப் பட்ட காய்கள், கனிகள் எல்லாவற்றையும் விட இலையில் விழுந்த சோற்றை, அதன் ருசியை ஒரு விமரிசனம் பேசுவதாகக் கொள்ளலாம்.

விமரிசிக்கப்படாத படைப்பில் மேலும் விஷயங்கள் வாசகனுக்குக் கிடைக்கவும் கூடும், என்றே நம்பலாம். என்றால் விமரிசனம் தேவையா?.. என்ற நியாயமான கேள்வியும் எழுகிறது. தேவையில்லை என்று எப்படிச் சொல்வது?... இங்கேதான் வாசகனுக்குப் படைப்பில் உள்ள பங்கு பிரதானப் படுகிறது. என்ன அது?

விமரிசனத்தை கவனிக்கிற வாசகன் தன்னளவில் அந்தப் படைப்பை தன் சுயமுகத்தோடு அணுகி, அந்த விமரிசனத்தில் விடுபட்டவற்றையோ, அல்லது… அந்த விமரிசனத்தில் தான் ஒத்துப்போகிற விஷயத்தையோ யோசிக்கையில் அந்தப் படைப்பு மேலும் மெருகு பெறுகிறது. பொலிவு பெறுகிறது, எனலாம்.

வாசகனை வாழ்க்கை நோக்கி ஒரு படைப்பு, ஒரு விமரிசனத்தின் வழியாக நடத்திக் கூட்டிச் சொல்கிற நிலை அற்புதமானது அல்லவா? விமரிசகர்கள் வாழ்க. முதல்கட்ட தாக்குதலாக்கு படைப்பாளனுக்கு முந்தி, அவர்கள் இலக்காகிறார்கள். தியாக சீலர்கள் அவர்கள். அவர்கள் வாழ்க.

இலக்கியம் வாழ்க்கையின் கையள்ளிய குளிர்ந்த ஓடைநீர். தொண்டைக்குள் இதமாய் இறங்கும் அதன் குளுமை, நாவில் இறங்கும் அதன் ருசி அலாதியானது. எழுத்தாளனின் நெஞ்சத்தின் ஈர ஓடையில் இருந்து அது பெருகி வாசக இதயத்தில் வழிய முயற்சிக்கிறது. அதில் தத்துவங்கள் தரிசனப்படலாம். அவை கூழாங்கற்களே. வெறும் மின்னல் ஒளிப் பிரதிகளே. வாழ்க்கை எல்லாமாக இருக்கிறது. படைப்பும் எல்லாமாக பரந்து விரிந்து கிடக்கிறது. அதைத்தான் வள்ளுவர் ‘நவில்தொறும் நூல் நயம்‘ என்கிறார். வள்ளுவர் வாழ்க.

என் வாசகர்களை, எம்.ஜி. சுரேஷின் வாசகர்களை ஒரு படைப்பு சார்ந்த வியூகத்துக்கு அழைக்கிறேன். நூல்கள் பற்றிப் பேசிய சான்றோர்களுக்கும், வந்து கேட்டு மகிழ்ந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

விமரிசனம் மட்டுமல்ல. ஒரு படைப்பு பற்றி, பேசுவதே, அதும் அந்த எழுத்தளனே பேசுவதே கூட, வன்முறை தான் ஒரு விதத்தில். நாம் நட்புடன் பிரிவோம்… என்கிற அளவில் முடித்துக் கொள்கிறேன்.
·       
91 97899 87842

     

Wednesday, February 11, 2015


short story
கல்கொக்குஎஸ்.சங்கரநாராயணன்

*
ப்படியும் வீடு திரும்ப இரவு நேரமாகி விடுகிறது. சுடுகாடு. ஊராட்சி எல்லை போர்டு. டிரான்ஸ்ஃபார்மர். கடந்து புத்துக்கோயில் வாசலில் இறங்கவே கால் கூசி பயந்து கிடக்கும். பஸ்சும் போய்விட்டால் ஜிலோவென்றிருக்கும். விட்டு விட்டு வாகனங்கள் பால்லாரி போல வெளிச்சம் சிந்திப் போகும். தவளை குதிக்க, நீர் பிரிந்து நீர் சேர்ந்தாப் போல, திரும்ப இருட்டு சூழும்.

     அவன் மனைவியின் கனவு அது. வீடு வாங்குவது. சொந்த வீடு என்பது மன வலிகளுக்கு ஒத்தடம் தான்.

     குளிரான காற்று. விளக்கவியலாத அதன் வாசனை. தனிமை. மகா தனிமை அது. ரெண்டு பக்கமும் வயல்கள். ஒரு காலத்தில் வயற் பசுமைக்கு நடுவே வெள்ளைக் கொக்குகள் தட்டுப்படும். இப்போது விவசாயமே பட்டுப்போய் மனைகளாகி வெண் கற்கள் நின்றன. கல்கொக்குகள் போல.

     ஒரு ஐம்பதடி நடை. வலப்பக்கமாக இறங்கும் சிறு சந்து. விஸ்வரூபம் எடுத்தாப் போல முள் கிளம்பி கன்னத்தைக் கீச்சுவதாக ஆடியது. இரவுப்போதில் சடைசடையான அதன் காய்கள் பாம்பென அச்சுறுத்தின. புதர்களில் இருட்டு தீவிரப்பட்டு அடர்ந்திருந்தது. யாரோ அமுக்கிப் பிடித்தாப்போல. காலடியில் செம்மண் சரளை தள்ளாட்டியது. இங்கிருந்து வீடு சேர பத்திருபது நிமிடம். பகலில் தூரம் தெரியாது. ராத்திரியில் நீளங்கள் அதிகரித்து விடுகிறது. காலம் பலூனாய் உரு பெருகிவிடுகிறது.

     சில நாட்கள் நிலா துணை வரும். தனி அனுபவம் அது. மூளைக்குள் டென்னிஸ் பந்துகள் துள்ளும். தன்னைப்போல வாயில் பாட்டு வரும். மனசைப் பட்டமாய்ப் பறக்க விடுகிற பாடல்கள். எம். எஸ். விஸ்வநாதன், எம்ஜியார் கூட்டணி. குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்... ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்... கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா... முதல் பாட்டு முடிய அடுத்த பாட்டு. வாய் மணக்கும் எம்ஜியார் திருப்புகழ்! வாலியும் கண்ணதாசனும் வார்த்தைப் பூ இரைந்தார்கள். சில சமயம் பாட்டோடு தாளமும் இசையுமே வாயில் பீரிடும். டட் டர்ர டட்ட பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா! இடையே மேகம் வெட்டி வெண்மையொளி உள்பதுங்குவதும் உண்டு. குதிரையை லகான் கொண்டு இழுத்தாப் போல மனம¢ பின்வாங்கினாலும் உற்சாகத்துக்குக் குறைவிராது.

     அன்றைய நாள் அப்படி இல்லை. அலுப்பாய் இருந்தான். நெடுஞ்சாலையில் விண்வெளிக்காரனின் கவச முகம் போன்ற சோடியம் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. தெருவைக் கடந்து வலப்பக்கச் சந்தில் இறங்கியபோது விளக்கணைந்தது. திடுக்குற்றான். மகா இருள். நிலா இல்லை. நட்சத்திரங்களே இல்லை. நிலக்கரிச் சுரங்கம் இப்படித்தான் இருக்குமாய் இருந்தது. முகம் அருகே உரசிய முள்ளைத் தலைகுனிந்து தவிர்த்தான். இன்னும் எத்தனை முள் நீட்டி மறைக்கிறதோ தெரியாது. அடுத்த அடி தெரியாத இருள். கையைத் தூக்கினால் கை தெரியாத இருள்..

     இப்ப என்ன செய்வது? உள்ளே கப்பென்று எதோ கவ்வியதாய் உணர்ந்தான். ஒரு வேட்டைநாய்க் கவ்வல். உலகம் சட்டென்று ஆபத்தானதாகி விட்டது. வாழ லாயக்கற்றதாகி விட்டது. கால் அடுத்த அடி எடுத்து வைக்க மறுத்தது. சிறு நடுக்கமும். சண்டி மாடு. எப்பவுமே அவன் அத்தனை தைரியசாலி என்று சொல்ல முடியாது. வளர்ப்பு அப்படி. இருட்டு. மகா இருட்டு. இருட்டில் எதுவும் நிகழலாம். தான் பாதுகாப்பற்று இருப்பதாய், நிராயுதபாணியாய், கையறு நிலையாய் இருப்பதாய் ஒரு திகைப்புடன் உணர்ந்தான்.

     சின்ன வயசிலிருந்தே இருட்டாகி விட்டால் அவன்அம்மா வெளியே அவனை அனுப்பவே மாட்டாள். தலைச்சன் பிள்ளை. யாராவது தூக்கிப்போய் நரபலி தந்துவிடுவார்கள்... என்றெல்லாமான விபரீதக் கவலைகள். ரொம்ப பயந்தவள் அம்மா. அவனையும் அவள் தன் பயத்துடன் வளர்த்தாள். பயத்தை ஊட்டியே வளர்த்தாள். யாம் பெற்ற பயம் பெறுக இவ் வையகம். அவனும் அதை நம்புகிறாப் போலவே ஆகிப்போனது.

     இந்த இருள். அவன் கால்கள் கட்டப்பட்டு விட்டாப் போலிருந்தது. உலகில் எதுவுமே இல்லை இப்போது. அவன் மாத்திரமே. அவனாவது இருக்கிறானா? தெரியாது. அதைச் சொல்ல யாராவது கூட வேண்டாமா? யாருமே இல்லை. அவனே இல்லை. இல்லை இருக்கிறானா, என்று தெரிந்துகொள்ள ஒரு ஆவேசத்துடன் முயன்றான். சட்டென தொண்டையை விரித்து கமற முற்பட்டான். சத்தமே யில்லை. நான் இருக்கிறேனா என்று தன்னையே தொட்டுப் பார்த்தான். ரெண்டு பக்கமும் வயல் மனைகள். நடுவே ரஸ்தா என ஞாபகம் இருந்தது. இனி நினைவுகளால் அவன் இயங்க வேண்டும். வழியை காலால் விசாரித்துப் போகவேண்டும்... வீடு வரை... இருபது நிமிட நடை. வெளிச்ச அடையாளங்களுடன் இருபது நிமிடம். இந்த இருட்டில் எத்தனை நேரம் ஆகுமோ தெரியாது. நடையா? காலையே அசைக்கவே எடுத்து வைக்கவே முடியவில்லை.

     தெருவில் எடுத்துப்போட்ட சாக்கடையாய் இருள். கருப்புக் கசடு. கலிஜ். உடம்பே பிசுபிசுப்பாய் உணர்ந்தான். ச்சே இது வியர்வை. கெட்ட வாசனை வருகிறதா? சாக்கடை வாசனை? ச்சேச்சே. அதெல்லாம¢ இல்லை. இந்த மனசு... கொஞ்சம் விட்டால் பீதியை உட்பெருக்கி ஆளைச் சுருக்கி விடுகிறது. உடம்பு சிலிர்த்தது. எதுவும் நிகழலாம். இதுவெல்லாம் குட்டிச் சாத்தானின் வேலையாகக் கூட இருக்கலாம். பேய்கள் இருட்டில் அபார தைரியம் பெறுகின்றன. தலை வரை போர்த்தியபடி கஞ்சி நிறத்தில் காற்றில் மிதந்து அவை வருகின்றன. சினிமாவில் அவை ஜோராய்ப் பாடுகின்றன.

     குட்டிச்சாத்தான். கொள்ளிவாய்ப் பிசாசு. பில்லி. சூன்யம். செய்வினை. மனுசாளை இம்சிக்க எத்தனையெல்லாம் இருக்கிறது லோகத்தில். பேய்களுக்கும் மந்திரவாதிகளுக்கும் எப்படி தலைச்சன்களை அடையாளம் தெரிகிறது தெரியவில்லை. விக்னம் இல்லாத உடம்புதான் அவர்களுக்குத் தேவை. நரபலி அப்பதான் பலிக்கும். அதனால் தான், நாம பிள்ளைங்களுக்கு காது குத்துகிறோம். கதைகள். காது குத்தும் கதைகள்! இவை பொய்கள்தான். பேயே பொய்தான். இருந்தாலும் பயந்து கிடக்கிறதே. ராத்திரி பயம். பகலில் சிரிப்பு... ஆனால் மொத்தத்தில் சுவாரஸ்யம். அம்மாவுக்கு எத்தனையோ பேய்க்கதைகள் தெரிந்திருக்கிறது. இந்நேரம் அவை ஞாபகம் வந்திருக்க வேண்டாம். ஆனால் இப்படித்தான் ஆகிப்போகிறது. எப்போது வேண்டாமோ தப்பாமல் அப்போது அது ஞாபகம் வந்துவிடுகிறது. கால்கள் வெடவெடவென்று நடுங்குவதை உணர்ந்தான். உடம்பு திடீரென்று சில்லிட்டாப் போலிருந்தது.

     நடக்கவா, அசையவே முடியவில்லை. எவ்வளவு நேரம் இப்படியே நின்று கொண்டிருப்பது? உதவிக்கு யாரும் அந்த வழியில் வரவும் இல்லை. வந்தாலும் அவர்களை எப்படி நம்புவது? மனிதனின் வக்கிர உணர்வுகள் தலைதூக்கி மக்கள் இருட்டில் அபார தைரியம் பெறுகிறார்கள். வர்றவன் திருடனாக வழிப்பறிக் கொள்ளையனாக இருக்கலாம். அட என்ன பயம். நம்மிடம் எதுவும் இல்லையே, என்று இருக்க முடியாது. எதுவும் இல்லாத எரிச்சலில் அவன் மேலும் ஆத்திரப்பட்டு நம்மைக் காயப்படுத்தி விடலாம்.

     பேய்கள் கூட மனுச ரூபத்தில் தான் வருகின்றன.

     இருட்டு எனும் கிணற்றுக்குள் விழுந்து கிடந்தான் அவன். காப்பாற்ற யாரும் வரும்வரை, வந்து அவனை அவர்கள் இருட்டுக் கிணற்றில் இருந்து மீட்டு, தூக்கி மேலே கொண்டுவர வேண்டும். அல்லது அவன் காத்திருந்தாக வேண்டும். வெளிச்சம் வரும் வரை. வெளிச்சம் எப்போது வரும்? வருமா? வெளிச்சம் எப்படியோ மனுசாளுக்கு அபார தைரியம், அசட்டு தைரியம் கொண்டுவந்து விடுகிறது. ராத்திரி பூரா அந்த இருட்டில் காய்ச்சல் படு போடு போடுகிறது. செத்திருவம்னே ஆகிவிடுகிறது. காலை வெளிச்சக் கீற்று உள்ளே நுழைய நுழைய தெம்பு ஊறி மனுசன் நிமிர்கிறான். நாக்கு ருசி கேட்கிறது.

     இருட்டிடம் பூட்டுகள் இருக்கின்றன. வெளிச்சத்திடம் சாவிகள் இருக்கின்றன.

     இதொன்றும் அறியாமல் இவள், என் மனைவி வீட்டில் ஹாயாகத் தூங்கிக் கொண்டிருப்பாள். வீட்டின் டிஷ் ஆன்டென்னா, நம்பூதிரியின் ஓலைக்குடைபோல வீட்டின் கூரையில். அந்தக்கால பஞ்ச தந்திரக் கதைகளில் இந்த ராட்சசனின் உயிர் அந்தக் கிளியில், என்றெல்லாம் கதைகள் சொல்வார்கள். இவையும் அம்மா சொன்ன கதைகள் தான். நம்ப முடியாத கதைகளை யெல்லாம் அம்மா நம்பும்படி, தானே நம்பி அவனுக்குச் சொல்லியிருக்கிறாள். பஞ்ச தந்திரக் கதைகள் போல, இந்தயுகப் பெண்களின் உயிர் டி.வி. பெட்டியில் இருக்கிறது. எழுந்தவுடன் டி.வி.யை ஆன் பண்ணிவிட்டே அவள் பாத்ரூம் வரை போகிறாள்.

     ஹ இப்படி கரெண்ட் காலைவாரினால் டி.வி. இருந்து என்ன பயன்? அது பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. அவனிடம் மொபைல் ஃபோன் இல்லை. வைத்துக்கொள்ளவில்லை. பெரிய செலவு ஒண்ணுமில்லை. என்னவோ அவன் வைத்துக்கொள்ளவே தோணவில்லை. அவசரம் என்று அவனை யார் கூப்பிடப் போகிறார்கள், என விட்டுவிட்டான். இப்போது அவனுக்கே அவசரம். அவனால் கூப்பிட முடியாமல் போய்விட்டது. செல் ஃபோன் இருந்தால் கூட அவளைக் கூப்பிட முடியாது. வீட்டில் தொலைபேசியும் இல்லை. அலைபேசியும் இல்லை. என்ன, பென்சில் டார்ச் வெளிச்சமாய் செல் ஃபோன்கள் சிறு வெளிச்சம் காட்ட உதவும். சிலர் சிகெரெட் லைட்டர்கள் வைத்திருந்தார்கள். அதை எடுத்து அவர்கள் சிகெரெட் பற்றவைத்துக் கொள்கையில், இந்தத் ... எப்ப மூக்கைச் சுட்டுக்குவானோ என்றிருக்கும். எப்பவுமே அடுத்தாளைப் பற்றிய நல்ல விஷயங்கள் எதிர்பார்ப்புகள் நம்மிடம் இல்லை.

     மனசை வேடிக்கை காட்டி அலைக்கழிக்கப் பார்த்தான். பயத்தில் இருந்து விடுபட மறுத்தது. இருட்டுக் கசம். நிசம் என்று அதுவரை நம்பிய அனைத்தையும் அழித்து பொய்யாக்கி விட்டது இருள். அல்லது இது தான் நிசமோ? உலகில் நிசம் என்று எதுவுமே கிடையாதோ. எல்லாம் மாயை தானோ, என மயங்கியது. எல்லாம் மாயை என்றால் இதுவும், இந்த நினைவும் மாயையாகவே இருக்கும். அப்ப எல்லாமே நிசம் என்றாகி விடாதா?

     இருட்டு குழப்பங்களை விளைவிக்கிறது. வெளிச்சம் தெளிவு தர வல்லது.

     அடிப் பிரதட்சிணம் செய்கிறாப் போல அடிமேல் அடி வைத்து உஷாராய் நடக்க ஆரம்பித்தான். இப்படி இங்கேயே இருந்துவிட முடியாது. எதாவது செய்தாக வேண்டும். கடும் இருள். திக்கு திசை தெரியாத இருள். நேர்கோட்டில் நடக்க முடியாது. எந்த திசைக்கு சரிகிறோம் தெரியாது. வண்டிப்பாதை தான் இது. தானறியாமல் ஓரங்களில் ஒதுங்க முள் கீச்சிவிடும். வயலில் அவன் இறங்கிவிடக் கூடும். வீட்டைப் பார்க்கப் போகாமல் வேறு பக்கமாய் அது அவனை அழைத்துப் போய்விடக் கூடும். ஆனாலும் வேறு என்ன வழி இருக்கிறது? அவனுக்கு வழியே தெரியவில்லை. போவது தான் வழி. வீடடைதல் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயமாய் ஆகியிருந்தது.

     தற்செயலாக அரைக்கை சட்டை இல்லாமல் முழுக்கை அணிந்திருந்தான். குளிருக்கு இப்போது இதமாய் இருந்தது. தனிமை தெரியாமல் இருக்க எதுவும் பாடலாம். சிலாள் விசிலடித்தபடி போவான். வந்த நாள் முதல் இந்த நாள் வரை... என்று சிவாஜியின் விசில் பாட்டு. என்னாத்துக்கு சிவாஜி விசில் அடிக்கிறான். இருட்டில் பயந்துட்டாப்லியா? அவனுக்கு தொண்டையில் இருந்து சத்தமே வரவில்லை. அப்படியே விசில் கிளம்பினாலும் அதில் நடுக்கம் இருக்கத்தான் இருக்கும்.

     எதிரே பேயும் பாடியபடி வந்தால் என்ன செய்வது?

     மாட்டிக்கிட்டமடா, என்றிருந்தது. தெரு என்கிற அமைப்பு இருந்தாலும், இருமருங்கும் வீடுகள் தொடர்ச்சியாய் இல்லை. கிழவியின் வாய் போல விட்டுவிட்டு நின்றன வீடுகள். தெரு விளக்குகள் இன்னும் போடவில்லை. அந்தப் பகுதி இப்போது தான் ஊராக உருக்கொள்ள ஆரம்பித்திருந்தது. கர்ப்பத்தில் இருந்தது ஊர். அங்கே வீடுகட்டி வந்த சிலர் வாகனப் பிராப்தி உள்ளவர்கள். நகரத்துக்கு ஒரு விசேஷ வைபவம் என்றோ, தினசரி அலுவலகம் போக என்றோ கூட, போனால் கணவன் மனைவி ரெண்டு குழந்தைகள், என நாலு பேருமே அமுக்கி உட்கார்ந்துகொண்டு ஒரே வண்டியில் போய்வந்தார்கள். அந்தக¢ கணவனுக்கு மாமனார் அவரே வாங்கித் தந்தாரோ, இவனே கேட்டிருப்பானோ தெரியாது. சில மாமனார்கள், இப்படி ஊரெல்லை மனை வாங்கித் தருகிறார்கள். அவன் மாமனார் இருக்கிற மனையை விற்றுத் தான் அவன்கல்யாணம் பண்ணினார். ராசி என்று ஒண்ணிருக்கில்லே? அவர்ராசியா அவன்ராசியா இது தெரியவிலிலை!

     அப்படியே நின்றான். பேய்கள் என்கிற தீய சக்திக்கு எதிரே மனுசனே கண்டுவெச்ச நல்ல சக்தி ஒன்றிருக்கிறது. கடவுள். கடவுள் துணை வருவார். அரக்கர்கள் தோன்றி மனுச குலத்தை அழிக்க முற்படும் தோறும் கடவுள் முன்வந்து அவர்களை அழித்து உலகை ரட்சிக்கிறார். பயம் சுமந்த மனசுக்குள் வெளிச்சம் பாய்ச்சுகிறார் அவர். அவரை நம்ப வேண்டும். (அரக்கர்கள் சாமி கும்பிடுவார்களா தெரியவில்லை.) நாள் என்செயும் வினைதான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும்... பயத்தில் படபடவென்று என்னவெல்லாம் பாடுகிறார்கள். தீபாவளிப் பட்டாசு! கந்த சஷ்டி கவசம். அது காக்க, இது காக்க, என எல்லா உறுப்பையும் காக்கச் சொல்லி மன்றாடல். எல்லா உறுப்புமே டேன்ஜர்ல தான் இருக்கிறாப் போல. நல்லா இருக்கிறதுக்கும் முன் கூட்டியே சொல்லி வெச்சிக்குவம்னு ஒரு முன்னேற்பாடு தான் போல. அது சரி அவன் கவலை அவனுக்கு. பாரதியாரே பதறிப்போய் காலா என் காலடியில் வாடா... உன்னை சிறு புல்லென மிதிக்கிறேன் என்கிறார். அவனே இவர்காலடியில் வந்து நின்றால், இவர் நோகாமல் காலைத் தூக்கி மிதிச்சிருவார். பாவம் நல்ல மனுசன். கடைசியில் அவரை யானை மிதித்து விட்டது...

     பசி தாளாமல், வயிறு படுத்தும் பாடு தாளாமல், சொன்னான் பார் ஒரு புலவன். இல்லை புலவி, ஔவையார்... இடும்பை கூர் என் வயிறே. உன்னோடு வாழ்தல் அரிது... பழகிக்கொள். இதுதான் நிசம். இத்தோடு வாழ்... என்கிற தெளிவு அது. செல்லமான அங்கலாய்ப்பு. இது இருள். இது உலகம். இதற்கு நான் பழகிக் கொள்ள வேண்டும். இங்கே நான் வாழ வந்திருக்கிறேன். தினசரி இதே வழிதான் நான் வரவேண்டும். அடிக்கடி இப்படி தெரு விளக்குகள் அணையலாம். இருக்கட்டும். அதையும் நாம் சந்தித்துத் தான் ஆக வேண்டும். தவிரவும் ஆகா, இந்த இருள்... இருள் என்பது என்ன, அதையும் நாம் ருசித்துப் பார்த்து அனுபவிக்கப் பழகிக் கொண்டால் ஆயிற்று. குறைந்த பட்சம் பயம் விலகும் அல்லவா?

      பஸ்சில் கூட்ட நெரிசலில் ஏற முடியுமா என்றிருக்கும். ஏறியபின் சிறிது ஆசுவாசமாய் நாம் ஒருவருக்கொருவர் ஒத்திசைவு பெற்று விடுவது இல்லையா? அவனுக்கு திடீரென்று வான்கோ ஞாபகம் வருகிறது. பரவாயில்லை. பயம் சில விஷயங்களை ஞாபகப்படுத்துவது போலவே, தெளிவு அநேக விஷயங்களை மேல்மட்டத்துக்குக் கொணர்ந்து விடுகிறது. என்ன சொன்னான் வான்கோ. துல்லியமான இருள் என்பது இல்லை. எந்த இருளிலும் ஒரு வெளிச்சமும், எந்த வெளிச்சத்திலும் சிறு இருளும் இருக்கிறது. கால வரிக்குதிரை! வேலை கிடைக்கிற வரை பொழுது போகாத நேரங்களில் நூலகம் போவான் அவன்... அது நல்ல விஷயம் தான். மேலே இருள். கீழே இருள். ரொட்டித் துண்டுகள் அவை. நடுவே வெண்ணெய். அதுதான் வெளிச்சம். இருட்டெனும் நீருக்குள் கண்ணால் துழாவித் தேட சிறு அளவில் பார்வை பழகிக்கொள்ள முடிகிறது. அதன் விஸ்தீரணம் குறைவு என்றாலும் என்ன அழகான உணர்வு அது.

     கவிதை கிளைக்கிற கணங்கள். இருட்டில் கண்ணுக்கும், காதுக்கும் நு£தன அனுபவங்கள் சித்திக்கின்றன. அவை ஆசிர்வதிக்கப் பட்ட கணங்கள். சிறு வெளிச்சத்தில் பொருட்களுக்கு ஒரு ஓவியத்தன்மை வாய்த்து விடுகிறது. வெளிச்சம் வண்ண ஓவியங்களைத் தந்தால், இருட்டில் அது கருப்புவெள்ளை படக் கண்காட்சியாகி விடுகிறது. வெளிச்சம் நிழலை அறியாது. இருள் மேலதிக சூட்சுமம் கொண்டது. இருளுக்கு ஒளியையும் தெரியும். நிழலையும் தெரியும். நிழல் என்பது இருளின் குழந்தை.

     தெருவில் துள்ளித் திரியும் தவளைகள். அவை இப்போது தூரத்தில் இருந்து சப்த அடையாளங்கள் காட்டின. அதுவரை குறித்துக் கொள்ளாத, கவனப்பட முடியாத சிற்றொலிகளையும் இருள் பூதாகரமாக்கி உள்ளங்கைக்குள் ஆனால் ரகசியமாய்த் தந்தது. இயற்கையை நீ வணங்கினால் அது பொதிவை அவிழ்த்து, பிரியமான பாட்டியாய் சுருக்குப் பை அவிழ்த்து அநேக பொக்கிஷங்களைக் காட்டித் தருகிறது.

     மனம் நிதானப்பட ஆரம்பித்திருந்தது. எப்படியும் சிறு பதட்டத்துக்குப் பின் மனம் சமாளித்தபடி மேல் நகர ஆரம்பிக்கிறது, என ஆச்சர்யத்துடன் நினைத்துக் கொண்டான். அதிலும் காலடியே தெரியாத இந்த இருள். இதில் அடுத்த அடியை வைக்கவே தடுமாறும் தன்னை ஒரு குழந்தையாய் உணர்ந்தான். ம்மா. ங்கா... என விநோத சப்தங்களுடன் தன் அகாராதியில் அதற்கான பிரத்யேக அர்த்தங்களுடன். குழந்தையாய் உணர்தல் வாழ்வின் பெரும் பேறு அல்லவா? இருட்டு ஒரு தாய்மை உணர்வுடன் அவனை, அவனது குழந்தைத் தன்மையை மீட்டெடுத்து அவனிடமே தருகிறது. நானே எனக்குக் குழந்தையானேன். தெளிந்த நல் அறிவோடும், அதேசமயம¢ விளக்கவியலா உவகையோடும் இப்படி இருப்பது ஆனந்த நிலை அல்லவா?

     ஆகா இவற்றை இத்தனை நாள் இழந்திருக்கிறேன், என ஒரு ஏக்கத்துடன் நினைத்துக் கொண்டான். உன் உத்தேசங்களுடன், அதன் வெற்றிகள், அல்லது ஏமாற்றங்களுடன் வாழ்க்கையை இருள் சுவாரஸ்யமாக்கி விட்டது. அட எனக்கே நான் அந்நியனாகவும், எனக்கே நான் முன்னைவிட நெருக்கமானவனாகவும் ஆக்கிக் காட்டிய இருளின் மேஜிக்.

     இன்றோடு பயத்தை ஒழித்தேன்... என்று வெட்கமில்லாமல் அந்த இருளைக் கையெடுத்துக் கும்பிட்டான். நடை தெளிந்திருந்தது. அறிவு கால்களுக்கு வழி சொல்லியது. மெல்லத் தான் ஆனால் வீடு என்கிற உத்தேச வெளியில் உத்தேச திசையில் நடந்தான். குருடர்கள் தயக்கம் இல்லாமல் இங்கே நடந்து போவார்கள் என நினைக்க சிரிப்பு வந்தது. நான் குருடனும் அல்ல, பார்வை உள்ளவனும் அல்ல, என்றால் நான் யார்? மூன்றாம் பாலா இது? சிரிப்பு வந்தது.

     இருள் ஒரு மகா அன்புடன் மொத்த உலகையுமே கட்டி அணைக்கிறது. எத்தனை பெரும் தாய்மை உணர்ச்சி அது? வெளிச்சத்தின் இயல்பு கதகதப்பு. என்றால் இருள் குளுமையானது. இருள் என்பது கடவுளின் நிழல்.

     பகலில் இந்த அனுபவங்கள் கிடைத்தே யிராது என நினைத்துக் கொண்டான். அதிக வெளிச்சமான சாலை அல்ல அது. தெரு விளக்குகள் அந்த ஓரம் ஒன்று, இந்த ஓரம் ஒன்று என்றுதான் எரியும். என்றாலும் வெளிச்சம் பார்த்தபடி நடக்க தெம்பாய் இருக்கும். ஒவ்வொரு வெளிச்சத்துக்கும் ஒரு எல்லை உண்டு. தெருநாய்கள் போல அவை. ஆனால் இருள் எல்லைகளை விரும்புவது இல்லை. கருத்த காளி தான் இருள். அவள் ஏன் அப்படி கண் பிரித்து உக்கிரமாய்ப் பார்க்கிறாள். இருளில் அவளுக்கும் கண் தெரியவில்லயோ என்னமோ!

     தெரு திரும்பினான். பெரும் நிழலாய் அவன் வீடு தெரிந்தது. தலையில் நம்பூதிரி குடை. அதை மடக்க முடியாது. சுற்றிலும் இன்னும் வீடுகள் எழும்பியிருக்கவில்லை. காலம் அவற்றை அந்த பூமிக்குள் அழுத்தி வைத்திருக்கிறது. வீட்டைப் பார்த்த கணம் மனம் எழுச்சி கண்டது. குபீரென்று தெருவில் விளக்கு எரிய ஆரம்பித்தது. கண் கூசியது அந்த வெளிச்சம். இருள் சட்டென சுதாரித்து வழிப் பாம்பாக ஓடி ஒதுங்கியது. திரும்பிப் பார்த்தான். அதோ தெரு திருப்பத்தில் இங்கிருந்து தெரியாத இடத்தில் இருள் பதுங்கிக் கொண்டது. வெளிச்சமும் இருளும், கண்டுபிடி என்று கண்ணாமூச்சி ஆடுகின்றன...

     கிறுக்குத் தனமாய்ப் பட்டது. ஆனாலும் அவன் அந்தத் திருப்பத்தை நோக்கி கைகாட்டினான். போய் வருகிறேன் இருளே. மீண்டும் சந்திப்போம்.

*

storysankar@gmail.com mob 91 97899 87842