short story

கீழ்மை

* * *
தீஸ்மாஸ் டி செல்வா

கைதேர்ந்த தச்சன் ஒருவனால் வடிவமைக்கப்பட்ட சிலுவை மரத்தில், உடுத்திக் குளிக்கும் துவர்த்து போன்ற துண்டுத்துணியை இடுப்பில் கட்டிக்கொண்டு சிலுவை மரத்தோடு இரண்டு கைகளையும் பிணைத்தபடி இருபத்தாறு பன்னிரண்டு சைஸ் போட்டோ பிரேமுக்குள் இயேசு கிறிஸ்து நின்று கொண்டிருந்தார்.

இயேசுவுக்கு வலப்பக்கத்திலும், இடப்பக்கத்திலுமாக இரண்டுபேர் ஏறக்குறைய இதே கோலத்தோடு கைகளை விரித்தபடி நின்றார்கள். இருவரும் திருடர்கள். எனவே, அவர்களது தகுதியை உத்தேசித்து சாதாரண முருங்கை, வாராட்சி போன்ற மரங்களே இவர்களுக்குச் சிலுவை செய்யத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தன. அமைப்பிலும் அவ்வளவு செய் நேர்த்தியில்லை. அத்தோடு இயேசுவின் தலைக்கு மேலே கொடுக்கப்பட்டிருந்த, ஒளிவட்டமும் இவர்களுக்கு இல்லாமல் புறக்கணிக்கப் பட்டிருந்தார்கள்.

ஆனாலும் இதையெல்லாம் பெருங்குறையாகவோ, பொருட்டாகவோ இந்த திருடர்கள் எடுத்துக் கொண்ட மாதிரியும் தெரியவில்லை.

படத்தின் முன் அரைக்கிண்ணம் போன்ற ஸ்டாண்ட் ஒன்றில் இரண்டு மெழுகுவர்த்திகளும், ஒரு ஊதுபத்தியும் எரிந்துகொண்டிருந்தன. என்னதான் திருடர்களாயிருந்தாலும் வேண்டப்படாத மனிதர்களென்றாலும் ஊதுவத்தியின் நறுமணப் புகையை இயேசுவோடு இரு திருடர்களும் சேர்ந்து சுவாசிப்பதை யாரும் தடுத்ததாகத் தெரியவில்லை.

இந்த இயேசு கிறிஸ்து-திருடர் கோஷ்டிக்குக் கொஞ்சம் தள்ளி இருபத்தைந்து வயதுக்குட்பட்ட இளமங்கையாக மரியாள். பக்கத்தில் இந்த மரியாளின் மகன் இயேசு கிறிஸ்து சுமார் முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க தோற்றத்துடன். அடுத்து நரைத்துப்போன தலைமுடி, தாடியோடு தள்ளாத வயதிலும் ஒரு குழந்தைக்குத் தகப்பனாகிவிட்ட பெருமிதத்தோடு சூசை. சூசையின் ஒரு கையில் பூவரசம் கம்பு. சூசைக்கடுத்து கறுப்பு கம்பளிக் கோட்டணிந்து, தலையில் முட்டை வடிவத்தில் அரைப் பட்டம் வைத்தபடி அந்தோணி யார். அவர் கையில் ஃபாரக்ஸ் சாப்பிட்ட பேபி போல குழந்தை இயேசு. நான்கு புறமும் அம்புகளால் துளைக் கப்பட்டபின்பும் புன் சிரிப்போடு செபஸ்தியார். ஒரு முறை செத்துப் போய் பேயாக மாறியவனைக் குதிரை மீதேறி வாளால் தாக்கி மீண்டும் சாகடிக்கும் மிக்கேல், அவரை யடுத்தபடி.

சுவரின் கிழக்குப் பகுதி இத்துடன் முடிகிறது.

ஒரு ஸ்டூல் போட்டு மேலே ஏறி அல்போன்சம்மை படங்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். கையில் ஒரு கிழிந்து போன பனியன் வைத்திருந்தாள். பனியன், கொஞ்சம் தள்ளி நாற்காலியில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கும் சுவாமியார் பொனிப்பாசுடையது.

அந்தோணியார் படத்தைத் துடைத்து முடித்ததும் பக்கத்தில் இருந்த செபஸ்தியார் படத்தை நோக்கிக் கையை நீட்டினாள். எட்டாததால் ஒருகாலைத் தரையில் வைத்து இறங்கினாள். புடவையும், பாவாடையும் மூட்டுவரை மேலேறி மீண்டும் இறங்கியது. நல்ல வெள்ளையும் கொஞ்சம் மஞ்சளுங் கலந்த மாதிரியான நிறம். மயிர்களே இல்லாத மழ மழப்பான கால்கள். கருஞ்சிவப்பு நிறத்தில் கண்டாங்கிச் சேலை. பிரவுன் கலரில் பிளவுஸ். பிளவுசுக்கும் இடுப்பில் கட்டியிருந்த புடவைக்கும் இடையில் இரண்டு மடிப்புகளுடன் வயிறு. கால்களைப் போல அவ்வளவு வெண்மை இல்லாமல் இருந்த வயிற்றின் மடிப்புகளினூடே வேர்வை தேங்கி நின்றது. அதற்கும் மேலே கொஞ்சம் கீழிறங்கிய மார்புகள். கறுப்பு உத்தரியக் கயிறும் அதில் ஒட்டிய சிலுவைக் குறியும் ஒரு பக்கத்து மார்பில் ஒதுங்கிக் கிடந்தன. வேர்வையால் உப்புக்கரித்து வெள்ளையாகத் தெரிந்த அக்குள்கள்.

கண்ணாடியை சரிப்படுத்திய சாமியார் எழுதுவதை நிறுத்திக் கொண்டார்.

"என்ன அல்போன்சா..... மூணு ஞாயித்துக் கிழமையா ஒனக்க மோவன் ஞானோபதேசத்துக்கே வாறான்ல.... அப்பன மாதிரிப் போவட்டும்னு உடுறியா....?"

"கோயிலுக்குப் போறாண்ணுதானே என்ட்ட சொன்னான்."

"அப்பன் புத்தி அப்படியே அவன்ட்ட இருக்கு. கேரளாவுல போட்டுக்குப் போறான்னு சொல்லுக்கோண்டி ஒம் மாப்பிள்ளை அங்க ஒருத்தியோட  இருக்கியான். இந்தப் பயல் என்னடான்னா இப்பவே இப்படி இருக்கான். நீயும் வுட்டுட்டு இருக்க".

அல்போன்சம்மாள் ஸ்டூலை எடுத்து தெற்குப்புறம் போட்டுவிட்டு ஸ்டூல்மேல் ஏறினாள்.

"மாப்பிள்ளையப் புடுச்சு வைக்கிறது பெண்டாட்டி கையிலதான் இருக்கு. நீ இருக்குத இருப்ப பாக்கும்ப எனக்கு கஸ்பாரையும் குத்தம் சொல்ல மனசு வரல. மாப்புளக்காரன் என்ன கேக்கானோ அதக் குடுக்கணும். அனுசரிச்சுப் போவணும். அப்பதான் அவனுக்கு வேற பெம்பிளக்க ஓர்ம வராது. ஒனக்கு ஒண்ணுந் தெரியல."

அல்போன்சா படங்களைத் துடைக்க ஆரம்பித்தாள். முதல் படத்தில் நாலு மீசையில்லாத வாலிபர்கள் ஒருவர் தோள்மேல் இன்னொருவர் கை போட்டபடி சிரித்தபடி நின்றார்கள். அல்போன்சா, போட்டோவை சட்டத்திலிருந்து தூக்கி பனியனை வைத்து துடைக்கையில் சாமியார் சொன்னார்;

"அதுல கட்டம் போட்ட சட்ட போட்டுட்டு, ரெண்டாவதா நிக்கது யார்னு தெரியிதா?"

அல்போன்சா போட்டோவைப் பார்க்காமலேயே 'நீங்கதான் சாமி' என்றாள்.

அடுத்த போட்டோவில் ஒரு கல்லூரியின் பிரதான கட்டடத்தின் முன்பாகத்தில் நீண்ட பெஞ்சில் பத்து பன்னிரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். பெஞ்சில் இடம் கிடைக்காதவர்கள், உட்கார்ந்திருந்தவர்களின் பின்னால் வரிசையில் நின்றிருந்தார்கள். எல்லோருக்கும் வெள்ளைநிற அங்கி. சவப்பெட்டிக்குள் கிடந்தவர்களைத் தூக்கி உட்கார வைத்தது போன்ற முகத் தோற்றம்..

பக்கத்தில் மாவட்ட பிஷப்பின் நாலுவண்ண படம். கருநீல அங்கியும் பவுனுக்குமேல் மதிக்கத்தக்க பெரிய குருசுடனும் கூடிய சங்கிலியும், கோல்டு கவரிங் பண்ணின ஒரு செங்கோலும். தூரப் பார்வைக்கான கண்ணாடி, அதற்கு மேல் பருத்த கொங்கைகளைக் கொண்ட பெண்ணின் பிராவிலிருந்து ஒரு பாதியை வெட்டித் தலையில் கவிழ்த்துக் கொண்டாற்போல் தொப்பி. பிஷப்பின் படத்திற்குப் பக்கத்தில் போட்டோ ஒன்று. தலையில் றீத், கையில் பூச்செண்டு இவற்றோடு மணப்பெண் நிற்க அவளுக்கு இடப்பக்கத்தில் மாப்பிள்ளைக்காரன் சூட்டும் கோட்டும் போட்டுக் கொண்டு, பெண்ணின் அண்ணன் கழுத்தில் போட்ட மாலையை கையில் சுருட்டி வைத்துக் கொண்டு நின்றான். பெண்ணின் வலப்பக்கத்தில் சாமியார் சிரித்தபடி நின்றார்.

படங்களை மீண்டும் ஆணியில் எடுத்து மாட்டினாள். கைகளை மேலே தூக்கியபோது அக்குளில் ஈரம் அதிகமாயிருந்தது. சட்டை மேலேறி மார்பின் அடிப்புறம் வெள்ளையாகத் தெரிந்தது.

"ஒனக்கக் கூட்டுக்காரி எலிசபெத்தா காலம்பெற பாவ சங்கீர்த்தனம் செய்யணும்னு வந்தா."

"அப்பிடியா."

"ஆறாவது கற்பனைக்கு விரோதமாப் பாவஞ் செஞ்சேன்னா.... அதெல்லாம் வெளக்கமா ஒண்ணும் சொல்லாண்டாம். நேத்தைக்கே ஊத்தில பேண்டானுக்க மோவன் ராசாமணி எங்கிட்ட பாவ சங்கீர்த்தனம் பண்ணியாச்சு. வேற பாவம் என்னவாவது இருந்தா சொல்லுன்னு சொன்னேன்."

"அய்ய...... பாவ சங்கீர்த்தனத்தில் சொன்னதை வெளி யில் சொல்லப்பிடாதே. சாமி."

"எனக்குத் தெரியாதா? எல்லாம் நமக்குள்ளதானே பேசுதோம்... சாமியாருன்னா பேசப்படாதுன்னு இருக்காக்கும். நானும் மனுசந்தான். ஒனக்கு ஒரு வெவரம் தெரியுமா? சிலுவைல இருக்கற இயேசு நாதருக்குத் துணி இருக்குதே. உண்மைல அது கிடையாது. அமெரிக்காவில் துணி யில்லாமதான் சுருபம் வச்சிருக்கானாம். இங்க வச்சா ஒன்ன மாதிரி ஆளுவ அசிங்கம்னு சொல்வான்னு துணி போட்டு மூடியாச்சு."

ஒரு நீண்ட ஒட்டடைக் குச்சியை எடுத்து சாய்வாகப் பிடித்தபடி சுவர்களில் இருந்த சிலந்தி வலைகளை யெல்லாம் சேர்த்துச் சுருட்டினாள். மேஜை மேல் தண்ணீர் வைத்திருந்த கண்ணாடி தம்ளர் மேல் ஒரு புத்தகத்தை வைத்து மூடினார் சாமியார்.

ஒட்டடை அடித்து முடித்ததும் குச்சியை சுவர் மூலையோடு சாய்த்து விட்டுத் தென்னை ஓலைக் குச்சித் துடைப்பத்தை எடுத்துத் தரையைக் கூட்டத் தொடங்கினாள். அவள் கூட்டுவதற்கு வசதியாக இரண்டு கால்களையும் மேலே தூக்கி சம்மணம் போட்டுக் கொண்டார் சாமியார்.

கிழிக்கப்பட்ட துண்டுகாகிதங்கள், கடித உறைகள், ஒடிந்துபோன பேனா நிப்பு, கார்பன் தாள்கள், தாணு பிள்ளைக் கடையின் காராச் சேவுத் துணுக்குகள், உமிழ்நீர் பட்டுக் 'கொவுந்து' போன சுருட்டுத் துண்டுகள், எக்சைஸ் தீர்வை ஒட்டிய பீர்-பாட்டில் மூடிகள் இரண்டு, எல்லாவற்றையும் ஒன்றாகக் கூட்டி நொத்தோலிக் குவியலைப் போல் குவித்தாள். தொடப்பையைக் கீழே வைத்துவிட்டு முழங்கால் போட்டவாறு குப்பையைக் கைகளில் அள்ளி மேஜைக்கு அடியில் வைத்திருந்த கூடையில் போட்டாள்.

சாமியார் புத்தகத்தை மூடினார்.

நல்ல அடர்த்தியான தலைமுடியை வாரி கொண்டை போட்டிருந்தாள். அவிழ்ந்து விட்டால் பிரட்டத்தைத் தாண்டியும் தொங்கும். தேங்கா எண்ணெயும், மல்லிகைப் பூவும் சேர்ந்து ஒரு வாசனை தலையிலிருந்து வந்தது. பின் கழுத்தில் கொட்டினாற் போல பவுடர். பின்பக்கம் திறப்பு வைத்த மாதிரி பிளவுஸ், உள்ளே போட்டிருந்த பாடியின் நீள அளவுகள் பிளவுசில் அழுந்தப் பதிந்து கோடுகள் உருவாகியிருந்தன.

"அல்போன்சா நல்ல வேலை செய்யற... ஒட்டற கம்பக் கொண்டு போயி ஆண்டவரு படத்திலயா சாத்தி வச்சிருக்க."

"இன்ன எடுத்திடுதேன்."

"நீ அத அள்ளு. நான் எடுத்து மாத்தி வச்சிடுதேன்".

சம்மணம் போட்டிருந்த கால்களை மெதுவாகத் தரையில் இறக்கினார். "எளவு காலு... அஞ்சு நிமிசம் தூக்கி வச்சிட்டா ஒடனே பெருங்காலு புடுச்சுடுது." சொல்லிக் கொண்டே காலை கெம்பிக் கெம்பி வைத்தபடி ஒட்டடைக் குச்சி இருந்த மூலைக்கு அல்போன்சாவைக் கடந்து போனார். "சவத்து வாதம்! ஒரு மருந்துக்கும் கேக்கல. பாலப்பள்ளம் வைத்தியன் பெரிய ஆசான்னு சொன்னானுவ.... அவன் துட்ட புடுங்குனதுதான் மிச்சம். காலு அப்படியேதான் இருக்கு."

ஜன்னல் பக்கமாகப் போய் வெளியே எட்டிப் பார்த்தார்.

"வயிசாயிட்டா கால்ல வாதம் வரும் சாமி. எங்க சின்னியாவுக்கும் இப்ப வாதந்தானே. ரெண்டு மாசமாச்சு. மடிக்கு ஒண்ணும் போவாம வீட்டுலதான் கெடக்காரு."

"ஒங்க சித்தப்பன், எனக்கு மூத்த அண்ணன் மிக்கேலடிமையோட ஒண்ணா படிச்சவன்ல. எப்பிடியும் அறுவது இருக்காதா அவனுக்கு. இது எனக்கு சிமிண்டுத் தரையில நடக்கிறதால வர்றது. தரையில சிமிண்ட்ட எடுத்துட்டு தர ஓடு பதிச்சாச் சரியாப் போவும்."

சன்னல் திரையை இழுத்து விட்டார்.

குப்பையைக் கூடையில் அள்ளிப் போட்டபின் நிமிர்ந்தாள் அல்போன்சா. புடவையை இரண்டும் கையிலும் பிடித்து, சுளவில் அரிசி புடைப்பதைப் போல் தூக்கி உதறினாள். தோள்பக்கம் இருந்த தூசியை முகத்தைத் திருப்பி வாயால் ஊதினாள். இடுப்பில் சேலையைத் தளர்த்தி, முந்தானையால் நெற்றி, கழுத்து, துடைத்தாள். குங்குமப் பொட்டு நெற்றி, கன்னங்களில் பட்டை பட்டையாகப் பரவியது. குப்பையை வெளியே கொண்டு போய்க் கொட்டுவதற்காகக் கூடையை வெளியே கொண்டு போனாள்.

கொட்டிவிட்டு வெறும் கூடையுடன் அவள் திரும்பிவந்த பொழுது அரை நிர்வாணக் கோலத்தில் முகம் முழுக்க மயிரோடு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த இயேசு நாதர், ஒட்டடைக் கம்பின் தாக்குதலுக்கு இலக்காகிக் கீழே விழுந்துகிடந்தார். சண்டைக்குப் போகிறவரைப் போல அங்கியை இடுப்புக்கு மேல் மடித்துக் கட்டி, முழந்தாள் போட்டவாறு கண்ணாடித் துண்டுகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கிக் கொண்டிருந்தார் சாமியார்.
*

Theesmas Dselva 91 94440 28871

Comments

Popular posts from this blog