Sunday, June 12, 2022

 


திண்ணை இணைய இதழில் வெளியான கதை

நஞ்சு

எஸ்.சங்கரநாராயணன்

 

‘அவர்’ வேண்டாம். ‘அவன்’தான். வயசு முப்பது தாண்டியானாலும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தொழில் சொன்னால் டாக்டர். ஆனால் அவன் இடத்தில் அவன் ஒற்றை ஆசாமி. தானே போய் ஸ்டவ் பற்ற வைத்து சிரிஞ்சுக்கு வெந்நீர் சூடு பண்ணி, நோயாளியை சோதித்துப் பார்த்துவிட்டு, மருந்துகள் எழுதி, (லெட்டர் பேட் இல்லை. ரப்பர் ஸ்டாம்புதான்.)  தானே போய் எடுத்துவந்து தருவான். மருந்துக்கும் சேர்த்து பணம் பெற்றுக் கொள்வான். உங்களுக்கு மருந்தகம் வரை போற வேலை மிச்சம்தானே? பல்துறை வித்தகனாக அவன் இருந்தாலும் முதல் பார்வைக்கு அவனை “கம்பவுண்டரா?” என்று கேட்டார்கள் வந்தவர்கள். அத்தனைக்கு மோசமில்லை என நினைத்தவர்கள் கூட அவனிடமே “டாக்டர் இல்லையா?” என்று கேட்டார்கள்.

பஞ்சாட்சரம் சுருங்கி பஞ்சு என ஆனால், அவன் பெயர் நஞ்சுண்டேஸ்வரன், அது சுருங்கி நஞ்சு என ஆகிவிட்டது. அவங்க வீட்டிலேயே அவன் நஞ்சுதான். ஜாதகத்தில் விபரீத ராஜயோகம் போல விபரீத ராஜமோசமாகிப் போயிற்று. நஞ்சு, மருந்து இரண்டுக்குமே கேது ஆதிபத்தியம். அவன் உத்தியோகத்துக்கு ஒத்துப் போனது. நம்மாட்கள் சங்கட ஹர சதுர்த்தியையே சங்கட சதுர்த்தி என்று சொல்லுவார்கள். அந்தக் கதைதான்.

கழுத்தில் ஒற்றை உத்திராட்சக் கொட்டை கட்டிக் கொண்டிருப்பான். இதென்ன கோவில் அர்ச்சகர் மாதிரி, என்று அவனுக்கே இருந்தது. அதை அவன் கழட்ட நினைத்தபோது அம்மா தடுத்தபடி கோவித்துக் கொண்டாள். “நான் தவம் கிடந்து பெத்த பிள்ளைடா நீ. அது உனக்கு தாயத்து மாதிரி. காவல்… தெரிஞ்சிக்கோ” என்றாள் அம்மா. நல்ல தவம் போங்க. இந்தப் பிள்ளையப் பெத்ததுக்கு தவம், கிவம்லாம் கொஞ்சம் ஓவர்தான். தவம் என்று கண்மூடி அவள் தூங்கிப் போயிருக்கலாம்.

ஆக கழுத்தில் ஒரே மணி உத்திராட்சம் கட்டிக்  கொண்டபடியே தான் நஞ்சு டாக்டருக்குப் படித்து முடித்தான். நல்லவேளை தலையில் குடுமி இல்லை. அப்படியொரு வேண்டுதல் அம்மா மேற்கொள்ளாத வரை சந்தோஷம் தான். இது தவிர நெற்றியில் முப்பட்டையாய் விபூதியும் தேசியக் கொடியில் போல நடு குங்குமப் பொட்டும் கிட்டத்தட்ட கோவில் அர்ச்சகர் சாயலே அவனுக்கு இருந்தது. தன்னை யாரும் பாராட்ட மாட்டார்களா என்ற ஏக்கமும், பாராட்டிவிட்டால் கிண்டல் செய்கிறார்களா என்ற பயமும் இருந்தது. பெரிய படிப்பாளி யெல்லாம் இல்லை. அவன் அரியர் வைத்துத் தான் மருத்துவம் தேறினான். எம் பி பி எஸ் நாலெழுத்து படிப்பை ஒவ்வொரு எழுத்தாக அவன் படித்தாற் போல இருந்தது. அனாடமி வகுப்புகளில் உடல்களைப் பதப்படுத்திய நெடி குடலைப் புரட்டியது. இதில் மேற்படிப்பு ‘எம்.எஸ்’ படிக்கலையா என்று சிலர் அவனைக் கேட்டு திகைக்க வைத்தார்கள். எத்தனை அரியர்ஸ் தேர்வுதான் எழுத முடியும் அவனால், எனறு அவனுக்கே திகைப்பாய் இருந்தது.

அவனது கிளினிக்கின் பெரிய அறையைத் தட்டி வைத்துத் தடுத்த பரிசோதனை அறையில், கல்வி ஆண்டு என்று இல்லாமல் அரியர்ஸ் தனித் தேர்வு மாதத்தில் வாங்கிய மதிப்பெண் சான்றிதழும், அதையடுத்து வாங்கிய டாக்டர் பட்டமும், அதன்பின் அவன் பெற்ற பதிவு எண்ணும் இருந்தது. அதுவே ‘டி வோ ட்டி ஈ - 2’ல் கிடைத்த இடம். தாமதமாய் கல்லூரிப் படிப்பில் இருந்து அவன் மருத்துவம் படிக்கத் தாவினான்.

பஜார்ப் பக்கம் கிளினிக் வைத்தால் நல்ல அளவு வரும்போகும் நபர்களின் பார்வையில் விழும் என்று அவனுக்குத் தோன்றியதால், சித.ராம.பழனியப்பச் செட்டியார் மளிகைக்கடையை ஒட்டிய சந்தில் ஒடுகலான வழி போய் அவன் அறையை அடைய வேண்டும். பிரதான சாலையில் இடது பக்கம் அம்புக்குறி போட்ட போர்டு வைக்க வேண்டி யிருந்தது. பெரிய வருமானம் ஒன்றும் பார்க்க முடியாத நிலையில் அதன் கீழேயே சின்ன போர்டு வைத்தான். ‘இங்கே குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்படும்.’

தினசரி காலை ஒன்பது மணி வாக்கில் அவன் கடை திறக்க வருவான். தவறாமல் அவன் கடை வாசலில் ஒரு சிவப்பு நாய் படுத்திருக்கும். உடம்பே எலும்பாய் வரியோடி, எலும்பே உடம்பான நாய். அதற்கென்னவோ அதன் இடத்தில் வந்து அவன் கிளினிக் வைத்திருப்பதாக ஓர் எரிச்சல் இருந்தது. உலகில் எல்லா மனிதருக்கும், சிறு வயசுப் பிள்ளைகள் உட்பட, அதற்கு பயம் இருந்தது. அவர்கள் கிட்டே வந்தாலே வாலை கப்பைக்குள் விட்டு பணிந்து இடத்தைக் காலி பண்ணும். எப்படியோ அவனிடம் மாத்திரம் அதற்கு பயம் சிறிதும் இல்லை. காரணம் நாய்கள் என்றாலே அவனுக்கு பயம்.

அதைப் பார்த்ததுமே அவனது கால் சதை நரம்புகள் நடுங்கித் துடிப்பு காட்டுகின்றன. நாய்கள் அந்தத் துடிப்பை உணர்ந்து கொண்டுதான் அவனது பயத்தை வைத்து அவனைப் பார்த்து குரைக்க ஆரம்பிக்கின்றன. நாயைப் பார்த்த ஜோரில் தானறியாமல் அவன் நடுங்க ஆரம்பித்தான். பிறகும் நாய் இடத்தை விட்டு நகர மறுக்கும். கடையில் (சித.ராம.பழனியப்பச் செட்டியார் மளிகை) இருந்து யாராவது வந்துநிற்கிற ஜோரில் நாய் சர்வாங்கமும் ஒடுங்க படத்தைக் கீழே போட்டாற் போல இடத்தை விட்டு நகரும். கிளினிக்கில் ஓய்வு நேரங்களில், அதாவது அவனது பெரும்பான்மை நேரங்களில், மற்ற பிரபல வைத்தியர்களைப் போலவே அவனும் நோயாளி சிகிச்சை முறைகளை வாசித்து நினைவுகளைப் புதுப்பித்தபடி இருப்பான். அவ்வப்போது அதில் நாய்க்கடி சிகிச்சை பற்றி சரி பார்த்துக் கொள்வான். 

அவன் அறையைத் தாண்டி பலசரக்குக் கடைக்கு சாமான் இறக்குகிற குடோன் இருந்தது. எப்பவும் அங்கேயிருந்து ஒரு கலந்துகட்டிய தானிய நெடி வந்துகொண்டே யிருந்தது. தனியா, மிளகு, வரை மிளகாய் என கலவை நெடி. மூக்கைத் துளை போடுகிறா மாதிரி தும்மல் வரவழைக்கிற நெடி. தானியங்களை வயதான பெண்மணி ஒருத்தி புச்சக் புச்சக் என்ற விநோத சத்தத்துடன் முறத்தில் புடைத்துக் கொண்டிருப்பாள். யாராவது நோயாளி வந்தால், பெரும்பாலும் வருவது இல்லைதான், அவன் கேள்வி கேட்கும்போதும், வந்த நபர் பதில் சொல்லும் போதும் அந்த புச்சக் சத்தம் ஊடறுக்கும். உங்க பேரென்ன? புச்சக். மணிகண்டன். புச்சக். என்ன வயசு? புச்சக். இருபத்தி புச்சக் மூணு. நாக்க நீட்டுங்க. புச்சக்.  தவிர ஒரு ஹச். அது என்ன? தும்மல்.

குழந்தைகள் தடுப்பூசி என்றால் அதற்கு ஒரு காலக் கிரமம் இருக்கிறது. குழந்தை பிறந்த இத்தனாம் மாதத்தில் இந்தத் தடுப்பூசி. இத்தனை மாதக் குழந்தை இத்தனை எடை இருக்க வேண்டும். எல்லாம் விவரமாகக் குறிக்க தனியாக அச்சடித்த சார்ட் உண்டு. தனியே அதற்கு ரெண்டு ரூபாய் கட்டணம் வாங்குவான். அவனிடம் ஒரு சிறு டைரிநோட்டு உண்டு. அதில் முதல் ஊசி போட்ட நாள், திரும்ப வர வேண்டிய நாள் எல்லாம் குறித்து வைத்திருப்பான். அடுத்த தவணை தடுப்பூசிக்கு அவனே வீட்டிற்குப் போய் அழைத்துவிட்டு வருவான்.

ஒடுகலான சந்தாக இருந்தது அந்த இடம். தவிரவும் பஜார்ப் பக்கம் என்று பார்த்தானே யொழிய அது ஒரு மருத்துவம் பார்க்க என அமைந்த இடமே அல்ல. இந்த இடத்தை அவன் காலி பண்ணினால், சித.ராம.பழனியப்பச் செட்டியார் இந்த இடத்தையும் சேர்த்து சுவிகரித்துக் கொள்ளச் சித்தமாய் இருந்தார். பேஷன்ட்கள் வந்தால் உட்கார என்று நாலைந்து நாற்காலிகள் போடக் கூட அங்கே இடம் கிடையாது. லுங்கி கட்டினாற் போல இடுப்பு உயரம் நீலக் கலரும் மீதி உயரம் வெண்மையுமாய் ஒரு பெயின்ட் அலங்காரம். வெளியே இன்னொரு போர்டு இருந்தது. அவன் பெயர் போட்டு, மருத்துவர் என்று பிளஸ் குறியும் போட்டு, (இன்ட்டு குறி போட்டுவிடக் கூடாது.) பார்வை நேரம் என்று போட்டிருந்தாலும் அவன் அதைக் கண்டுகொள்வது இல்லை. காலை ஒன்பது மணிக்கு திறந்து வைத்தால், மதியம் ஒரு அரையவர் ஒண்ணு ஒண்ணரை சாப்பிட என்று போய்வருவான். பிறகு திரும்ப வந்தால் இரவு பத்து வரை கூட இருப்பான். தூக்கம் வருகிற வரை.

அப்படி அவசர கேஸ் வந்தால் மளிகைக் கடை ஆள் யாராவது தேடி வீட்டுக்கு வரலாம் என்று சொல்லி வைத்திருந்தான். இதுநாள் வரை இந்த பத்து வருடத்தில் அவசர கேஸ் என்று எதுவும் வரவில்லை. ஆனால் மிக அவசரம் என்று நோயாளியை அந்தச் சந்துக்குள் சொருக முடியாதவர்கள் நிறைய இருக்கலாம், என அவனுக்கே தோன்றியதால் அவனை வீட்டுக்கே அழைத்துக் கூட்டிப்போய் நோயாளியைக் காட்டினார்கள்.

“ஒரு கால் வந்திருக்கு… போயிட்டு வந்திர்றேன். பேஷன்ட் யாராவது வந்தா இருக்கச் சொல்லுங்க. கதவு திறந்துதான் இருக்கு” என்பான் செட்டியாரிடம்.

“போயிட்டு வா தம்பி. ஆரு வரப்போரா” என்பார் செட்டியார்.

பிசியான டாக்டர்கள் அவசரம் என்று யாராவது அழைத்தால், “பேசாம பேஷன்ட்டை இங்க கூட்டியாந்துருங்க” என்பார்கள். இவன் உடனே கிளம்பி அவர்களை அவர்களது மூலஸ்தானத்துக்கே போய் சந்தித்தான். நோயாளியைச் சோதிக்க என ஒரு சிறு மெத்தையுடனான ‘பென்ச் மேசை’ மாத்திரமே அவனிடம் இருந்தது. ஒரு ஆளைப் படுக்க வைத்து குளுக்கோஸ் ஏத்தக் கூட அங்கே வசதி கிடையாது.

வயதான கிழங் கட்டைகளே அவனது வாடிக்கையாளர்கள். படுக்கையில் தான் படுத்திருப்பார்கள். அல்லது உட்கார்ந்திருப்பார்கள். சோதனை என்றால் அவர்களைப் பொறுத்தவரை நாடி பார்த்தல். ஸ்டெத்தாஸ்கோப் வைத்து மாரில் சளி இருக்கிறதா, இருந்தால் கர் புர் என்று உள்ளே யிருந்து சத்தம் வரும்… இதயத்தில் எதுவும் வேண்டாத ஒலி கேட்கிறதா, என்று சோதிக்க வேண்டி யிருக்கும். “மூச்சை இன்னும் இழுத்..த்து விடுங்க தாத்தா…” என்பான். “இன்னும் இழுத்தா நானே செத்திருவேன்” என்றார் தாத்தா.

அவன் அம்மாவுக்கு இன்னும் இவனுக்குக் கல்யாணம் ஆகவில்லையே என்று இருந்தது. “முதல்ல ஒரு நல்ல டாக்டர்னு பேர் எடுக்கணும்மா நான். அப்பறம் கல்யாணம்” என ஆரம்பத்தில் சொல்லிக் கொண்டிருந்தான். அது நடக்காது போல இருந்தது. இவன் எப்ப நல்ல பேர் எடுத்து எப்ப இவனுக்குக் கல்யாணம் பண்ண. நல்லா தவம் இருந்தேன் போ… என அவளுக்கு சலிப்பு.

வயது முப்பதைத் தாண்டியாகி விட்டது. இப்போது அம்மா அவனது கல்யாணப் பேச்சை எடுப்பதே இல்லை, என்கிற வருத்தம் உண்டு அவனுக்கு. அவள் என்ன செய்வாள். ஊரில் பொது இடங்களில், கோவில்  பிராகாரங்களில் சந்தித்துக் கொள்ளும் பெண்கள், இவளுக்கு இவனைப் பார்க்கலாம், என்பதுபோல பேசிக் கொள்வது உண்டு. அவர்கள் எல்லாருமே அம்மா அவர்கள் பக்கத்தில் வந்ததுமே பேச்சை நிறுத்திக் கொள்கிறார்கள்.

இவனே நோயாளியை வீட்டில் போய் சந்திக்கிற வழக்கமானதினால் அநேகமாக வேறு டாக்டர்கள் கைவிட்ட கேசுகள், அல்லது அந்த வீட்டு நபர்களே கைவிட்ட கேசுகளே அவனிடம் வந்தன. எப்பவும் வெளியே கிளம்பத் தயார் ஆயத்தத்துடன் அவனிடம் ஒரு மெடிக்கல் கிட், பிரமிட் பையும், உளளே முதலுதவி உபகரணங்கள், டிஞ்சர் அயோடின், பஞ்சு, ஒரு பேண்டேஜ் துணி, கத்திரிக்கோல், சிரிஞ்சு, சில அத்தியாவசிய மருந்துகள், மாத்திரைகள் இருந்தன. பெரும்பாலும் பாராசிடமால் போன்ற ஜுர மாத்திரைகள். ஊசி போட வேண்டி யிருந்தால் அந்த வீட்டிலேயே வெந்நீர் போடச்சொல்லி சிரிஞ்சை சுத்தம் செய்து கொள்வான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், என அவன் அறிவான். அட அதெல்லா வல்லவனுக்குத் தானே, என அறியமாட்டான்.

பெரிய கேசுகள் அவனிடம் வருவதே இல்லை. சில தற்கொலை முயற்சி கேசுகள் எப்பவாவது வரும். அவன் பேரே நஞ்சண்டேஸ்வரன். “ஏன் சார், நீங்களே தற்கொலை முயற்சி பண்ணினீங்களா?” என அவனிடமே சந்தேகம் கேட்பார்கள். பரிட்சை ரிசல்ட் வரும் நாட்களில் அவனும் தயாராய் இருப்பான். விஷம் குடித்த கேசுகளுக்கு இனிமா கொடுத்து வாந்தி எடுக்க வைத்து குடலை சுத்தம் செய்து தூங்கப் பண்ணுவான். “டாக்டர் நீங்க மட்டும் இல்லன்னா என் பொண்ணு…” என கதறும் பெற்றோர், ஃபீஸ் சொன்னால், “அவ்வளவா?” என்று பேரம் பேசினார்கள். உலகத்திலேயே டாக்டர் கூலி  என்று பேரம் பேசியது அவன் மாத்திரம்தான்.

இது தவிர, வீட்டிலேயே செத்துப்போன கேசுகளுக்கு அவனிடம் ‘டெத் சர்ட்டிஃபிகேட்’ கேட்டு வந்தார்கள். அவன் இதுவரை பார்த்த வைத்தியத்தில் வாய்த்த வருமானத்தை விட இந்த சர்ட்டிபிகேட் தந்து அதிக வருமானம் வந்தது அவனுக்கு. சான்றிதழை எழுதி வைத்துக்கொண்டு அவன் கேட்ட காசைப் பேரம் பேசாமல் தந்துவிட்டுப் போக வேண்டி யிருந்தது. அதில் கறாராய் இருந்தான். பேரம் கிடையாது.

இதுதவிர நாலைந்து கேசுகள் ஆஸ்பத்திரி போக முடியாலும், வசதி இல்லாமலும் ஊரில் இருந்தன. “தினசரி பேஷன்ட்டைப் பார்த்துவிட்டு கிளினிக்கை மூடும் போது சிலரையும், மதிய இடைவேளையில் சிலரையும்  அவன் சைக்கிளில் போய்ப் பார்த்தான். சைக்கிளுக்குக் காத்தடைக்க, அவசர பஞ்சர் போட என அவனுக்கு சைக்கிள் கடையில் அக்கவுன்ட் இருந்தது! “பாத்து ஐயா. கடன் ரொம்ப நிக்குது. நானும் பிழைக்கணும்…” என்பான் சைக்கிள் கடைக்காரன். “நான் டாக்டர், எல்லாரையும் பிழைக்க வைக்கிறதுதான் என் வேலை. கவலைப்படாதே” என்பான் நஞ்சு.

இடுப்பில் முதுகில் அடிபட்டு நகர முடியாமல் படுக்கையோடு கிடக்கும் கிழட்டு கேசுகள் உண்டு. அவர்களைத் திருப்பி பௌடர் போட்டு டெட்டால் வாஷ் செய்ய வேண்டும். முதுகெல்லாம் கொதகொதவென்று இரத்த விளாறியாய்க் கிடக்கும். கெட்ட நாற்றம் வரும். சில உடம்புகளில் உள்ளே பள்ளமே கிடக்கும். அத்தனை சதையும் என்னதான் ஆயிற்று என்று இருக்கும். பஞ்சு வைத்து அந்த துவாரத்தை அடைத்து புண்ணை மூடி பாண்டேஜ் போட்டால், அதைப் போட தனி காசு. இரண்டு நாளில் புண் ஆறிவிட்டதா என்று அதைப் பிரிக்க தனி காசு. “எவ்வளவு?” என்று கேட்டுவிட்டு, “அவ்வளவா?” என்பார்கள். பேரம் பேசுவார்கள். “நீங்க தானே திரும்பத் திரும்ப வரீங்க. பாத்து வாங்குங்க” என்றபடியே கிழவனைப் பார்ப்பார்கள். “இந்தாளும் சாக மாட்டேங்கறான்” என்பார்கள்.

“நான் கைராசியான டாக்டர்…” என்பது போல சம்பந்தம் இல்லாமல் சொலலி ஒருதரம் வாங்கிக் கட்டிக் கொண்டான். “இப்படியாளுகளை உசிரைக் காப்பாத்தி நீங்க எனக்கும் நல்லது செய்யல்ல. நோயாளிக்கும் நல்லது செய்யல்ல” என்று ஒருத்தர் அவனைப் பிடித்துக் கொண்டார். எனக்கும் நகைச்சுவைக்கும் ராசியே இல்லை… என நினைத்துக் கொண்டான் அவன்.

அவனிடம் இப்படி வீட்டு விசிட் வைத்தியத்துக்கு என்று மாத அக்கவுன்ட் வைத்தவர்களும் உண்டு. அப்படி வரும்படிகளை வாங்கித்தான் அவன் சித.ராம.பழனியப்பச் செட்டியாரின் கடன் அடைப்பான். சில நாட்கள் அவன் கிளினிக் போகாமல் வீட்டிலேய இருந்துவிட நிறையப் பேர் வந்து காத்திருப்பதாகக் கனவு வந்து உடனே விழித்துக் கொள்வான்.

அவனுக்குப் பள்ளியில் பாடம் எடுத்த சௌமிய நாராயணன். ஹெட் மாஸ்டராக அவர் ரிடையர் ஆகி, போன வருடம் இறந்து போனார். அவர் அம்மா இன்னும் இருந்தாள். அவருக்கு ஒரே பெண். ஒரு மாதிரி அசடு அது. கண் வேறு. அது நம்மை பார்த்தால் எங்கேயோ பார்க்கிற மாதிரி இருக்கும். எங்கேயோ பார்க்கிறாள் என்று நினைத்தால் நம்மைத்தான் பார்த்துக் கொண்டிருக்கும். சௌமிய நாராயணன் இருக்கும் வரை அவளை யார் தலையிலாவது கட்டிவிட நினைத்து முடியவில்லை. அவளைக் கட்டிக் கொள்பவன் தலையில்லாமல், குறைந்தபட்சம் தலையில் மூளை இல்லாமல் இருப்பான், என நினைத்துக் கொள்வான் நஞ்சு.

சௌமிய நாராயணன் இறந்தபோது அவனிடம் தான் இறப்பு சான்றிதழ் கேட்டு பேரம்பேசி வாங்கிப் போனார்கள். சார் என்பதால் ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. வேறு யாருக்குமே பேரம் எல்லாம் எடுபடாது. சாரின் சாவுக்கு அவன் போயிருந்தான். அவர் பெண் ராஜம் ஆம்பளைக் குரலில் அழுததைப் பார்த்து பொம்பளைகளே முகத்தைக் குனிந்துகொண்டு சிரித்தார்கள். இந்தக் குழந்தையைப் படைக்கையில் ஆம்பளையாப் படைப்பதா பொம்பளையாக்குவதா என பிரம்மதேவனே சிறிது குழப்பத்தில் இருந்திருக்கலாம்.

சாரின் அம்மா இப்போது படுத்த படுக்கை. எங்கேயோ கால் இடறி விழுந்து மூளையில் எக்கு தப்பான அடி. எப்பவும் தானறியாமல் எதாவது பிதற்றிக் கொண்டு கிடந்தாள். திடீர் திடீரென்று காலமே அவளிடம் தடம் புரண்டு முன்பின் குழப்பியது. “சௌமி உயிர் பிழைச்சதே பெரும் பாடாப் போச்சு” என்பாள் திடீரென்று. அவர் செத்துப் போயே ஒரு வருஷம் ஆச்சு. “பொம்மனாட்டிக்கு என்ன இருந்தாலும் இம்புட்டு வாய் கூடாது” என்றாள் ஒருதரம். யாரைச் சொல்கிறாள் தெரியவில்லை. அவளுக்கே அது பொருந்தும்.

பாட்டிக்கு உதவி என்று ராஜம்தான் கூடவே இருந்தது. நஞ்சு இரவு ஒன்பது மணிக்குமேல் கிளினிக்கை மூடிவிட்டு பாட்டியைப் பார்க்க வந்தால் பரபரப்புடன் எழுந்து  நிற்பாள். அவனை நேருக்கு நேர் பார்க்கவே அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. இத்தனை பொறுமையா ஒரு வயசான மனுஷியைப் பார்த்துக் கொள்கிறாள் அவள். இதைப்போல பெண் அவனுக்கு எத்தனை வலைவீசித் தேடினாலும் கிடைக்காது… என அவளே தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கலாம். அது அவனுக்குத் தெரியாது. தெரிந்தால் அப்பவே தன் பாக்கெட்டில் ‘டெத் சர்ட்டிபிகேட்’ எழுதி வைத்துக்கொண்டு அவன் செத்து விடுவான்.

சில நாட்கள் பாட்டி எதுவும் நடவாத மாதிரி முழுத் தெளிவாகவும் இருப்பாள். எழுந்து உட்கார முடியாது. தலை கிர்ரிடும். படுத்தபடி பேசுவாள். “ஓ வயசு எனக்கு இருக்கும்போது இவளே. உப்பிலின்னு ஒருத்தன். கோவில் மடப்பள்ளி சேவகம் அவனுக்கு. மத்த நேரம் நல்லா டீக்கா டிரஸ் பண்ணிப்பன். அத்தர் போட்டுப்பன்… ஒருநா என்னாச்சின்னா…” என்று முடிக்குமுன் பாட்டிக்கு பொக்கைவாய் நிறையச் சிரிப்பு. தொண்ணூறு வயசுக் கிழவி. அவளுக்கு ஒரு காதல். இதைப் பற்றி இப்போது ஒரு வியாக்கியானம். அதற்கு இப்ப ஒரு சிரிப்பு வேறு.

கோவில் மடப்பள்ளி பரிசாரகனுக்கு டாக்டர் எத்தனையோ மேல் என்றுதான் தோன்றியது ராஜத்துக்கு. மற்றபடி பாட்டியின் கதை அவளுக்கு ரசிக்கவில்லை. நேற்றைக்குக் கோவிலுக்குப் போயிருந்தாள் ராஜம். அங்கே திடுதிப்பென்று எதிரே பார்த்தால்… யார் தெரியுமா? சுப்புலெட்சுமி மாமி. யார் அது? நஞ்சுவோட அம்மாவாக்கும். வெட்கம் அப்படி பிடுங்கித் தின்றது. சுவாமியே பார்க்காமல் திரும்பி ஓடி வந்துவிட்டாள் ராஜம்.

பாட்டியின் நிலைமை பொழுதுக்கு ஒரு தினுசாய் இருந்தது. ஒவ்வொரு நாளில் ஜுரம் ஆளையே நடுக்கும். ”குளிர்றது குளிர்றது” என்று இருக்கிற அத்தனை துணியையும் போர்த்திக் கொண்டு கிடப்பாள். சாவு பயம் அவளுக்கு இருந்தது. இத்தனை வயதுக்குப் பிறகு அதுவும் இத்தனை சிரமப்பட்டு உயிர் வாழ்ந்து என்ன செய்யப் போகிறாள் தெரியவில்லை. “ஆச்சி. நம்ம ராஜத்தோட கல்யாணத்தைப் பார்த்துட்டா, அதுவரைக்கும் எனக்கு உசிர் இருந்தாப் போதுண்டி” என்பாள்.

ஐயோ, இது என்ன வரம்? சத்தியவான் சாவித்திரி கேட்டாப் போல. எட்டில் சனி அவள் ஜாதகத்தில். லேசில் உயிர் போகாது. அவள் சாகப் போவதும் இல்லை. ராஜத்துக்குக் கல்யாணம் நடக்கப் போவதும் இல்லை, என்று பேசிக் கொண்டார்கள் ஊரில். தினசரி என்று இல்லாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் வந்து பார்த்துவிட்டுப் போனான் நஞ்சு. தினசரி அவனுக்கு ஃபீஸ் கொடுக்க ராஜத்தின் அம்மாவுக்குக் கட்டுப்படி ஆகவில்லை. அவன் வராத நாள் எல்லாம் பிறவா நாளே, என்று இருந்தது ராஜத்துக்கு. சில நேரம் அம்மா இல்லாமல் இருந்தால் அவனுக்கு காபி போட்டுக் கொண்டு வந்து நாணத்துடன் கொடுப்பாள். இவ எதுக்கு திடீர்னு நெளியறா?.. என்று தோன்றும். காபி படு மோசமாய் இருக்கும்.

சில சமயம் பாட்டிக்கு ரொம்ப உடம்பு மூச்சிழுத்து சிரமப் படுத்தினால், யாராவது வந்து சொல்வார்கள். நஞ்சு கிளம்பிப் போய்ப் பார்ப்பான். ஒவ்வொரு தடவையும் அவனே, பாட்டி காலம் ஆயிட்டது, என்று எதிர்பார்ப்புடன் சைக்கிளில் ஏறிப் போவான். ஒரு இஞ்ஜெக்ஷன் போட்டுவிட்டு “பாக்கலாம். நம்ம கைல என்ன இருக்கு?” என்றான் ராஜத்தின் அம்மாவிடம். “அப்ப ஃபீஸ் வேணான்றியா?” என்றாள் மாமி. அவன் பதில் சொல்லவில்ல. அப்டியே ஆயிரம் ஐந்நூறுன்னு அள்ளிக் குடுத்திட்டாப்லதான் சலிச்சிக்கறது… என நினைத்தபடியே பிரமிட் பெட்டியை மூடினான் நஞ்சு.

“உன் வீட்டுக்குள்ள நுழைவேனா பார்” என்று மெல்ல முனகிக் கொண்டிருந்தாள் பாட்டி.  திடீர் திடீரென்று ஒரு காலப் பாய்ச்சல் நிகழ்த்திக் கொண்டிருந்தாள். அவள் உதடுகள் துடித்தன. குடிக்கத் தண்ணி வேணுமா தெரியவில்லை. நஞ்சு அவள் பேசுவதைக் கேட்கக் குனிந்தான். “நஞ்சு, எங்க ர்ரா… ராஜத்தைக் கல்யாணம் பண்ணிக்கோ” என்றாள் பாட்டி. பக்கத்தில் நின்றிருந்த ராஜத்துக்கும் அது கேட்டு, அவளுக்கு சிலிர்த்தது. அவள் அம்மாவுக்கும் அது கேட்டிருந்தது. சிறு புன்னகையுடன் அம்மாக்காரி அவன் முகத்தைப் பார்த்தாள்.

“சுய நினைவே இல்லாம பாட்டி என்னென்னவோ பெனாத்தறா…” என்றபடி வெளியே போனான் நஞ்சு.

 

Saturday, June 4, 2022

நிசப்த ரீங்காரம் / சிந்தனைத் தொடர் பகுதி 8

நன்றி – பேசும் புதிய சக்தி மாத இதழ்


வேப்ப மரத்தில் தேன்கூடு

ஞானவள்ளல்

ரு சிந்தனை மொழி வழியாக வெளிப்படும் போது அதன் அழகு தன்னைப்போல கட்டமைக்கப் படுகிறது. சிந்திக்கிறவனின் ஈடுபாடு, கவனம் சார்ந்து அதன் வீச்சின் வெளிப்பாட்டின் ஆழமும் சேரும் எனலாம். தன்னை முற்றிலும் அந்த சிந்தனையில் அமிழ்த்திக் கொள்கையில் அதை ரசித்து அந்தப் படைப்பாளன் அதை வெளிப்படுத்த, வழக்கம் இல்லாத புதிய பாதைகளையும் சேர்த்தே வடிவமைத்துக் கொள்ளப் பிரியப் படுகிறான். அதனால்தான் காவியங்களிலும், கவிதைகளிலும் புதிய புதிய வகைமைகள் அமைய முடிகிறது.

ராமனின் பெரும் காவியம் எழுத முனைகிறான் கம்பன். அந்தக் காவியத்தில் எத்தனை விதமான பாடல்கள். அனுமனைப் பற்றிய துதிப்பாடல் ஒன்று. அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி, அஞ்சிலே ஒன்று ஆறு ஆக, அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அஞ்சிலே ஒன்றை வைத்தான்… என சொல் விளையாட்டு. சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவிரியினை வீரர் கண்டார், என இடையே ஒரு கவிதையில் இரட்டுற மொழிதல், என அங்கங்கே ஞானத்தில் பொங்குகிறான். ஓசைநயம் மிக்க பாடல்கள் அவ்வப்போது வருகின்றன. ஈடுபடும் செயலில் அவனது ஆர்வமும் ஆசையும் அப்படியாய் அவனைப் புதுப்புது வடிவங்களில், சொல் உத்தி முறைகள் பயணப்பட, இயங்க வைக்கின்றன. இதுதவிர வாசக மனதைத் தாண்டி சிந்திக்கிற நுட்ப உணர்வுகளை அவன் வெளிப்படுத்தும் போது, கவிதை களைகட்டுகிறது.

கம்பன், ராமன் என மனது திளைக்கும்போது அந்தகக்கவி வீரராகவ முதலியார் நினைவு வருகிறார். பாணர் பாணினி பற்றிய ஒரு சம்பவச் சித்திரம் அது.

இம்பர் வான் எல்லை ராமனையே பாடி… என ஒரு பாடல். ராமன் என்ற வள்ளலைப் பாடியபோது ஒரு பாணர் ஒரு யானையைப் பரிசாகப் பெற்று வருகிறார். வீட்டில் வறுமை தாண்டவம் ஆடுகிற போது யானையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? யோசனையுடன் வீடு வந்ததும் அந்தப் பாணனின் மனைவி பாணினி, என்ன பரிசு கொண்டு வந்தீர், எனக் கேட்கிறார். அவளோடு சிறிது நகைச்சுவையாக உரையாட விரும்புகிறார் பாணர்.

யானை என்று சொன்னால் திகைத்து விடுவாள் என்பதால், யானை என்ற விலங்கைக் குறிப்பிடும் பல்வேறு சொற்களைப் பரிசு என்ன, என்பதாக அவர் சொல்லிக் கொண்டே வருகிறார். அவர் மனைவியோ வறுமையைப் போக்க வழி என்ன என்ற சிந்தனையிலேயே இருக்கிறார். ஆதலால் ஒவ்வொரு சொல்லுக்கும், யானை என்ற பொருளுக்கு பதிலாக மாற்றுப் பொருளைப் புரிந்துகொண்டு தங்கள் வறுமை விலகுவதாக மகிழ்ச்சி அடைகிறார். இறுதியில் யானை என அவள் புரிந்துகொண்டு அவளும் திகைத்து நிற்பதாக ஒரு கவிதை. அக்காலத்துப் பாணர் குலப் பெண்ணின் தமிழ் அறிவின் விசாலத்தையும் இதில் ரசிக்க முடிகிறது.

இம்பர்வான் எல்லை இராமனையே பாடி

என்கொணர்ந்தாய் பாணா நீ, என்றாள் பாணி

வம்பதாம் களபம் என்றேன், பூசும் என்றாள்

மாதங்கம் என்றேன், யாம் வாழ்ந்தேம் என்றாள்

பம்பு சீர் வேழம் என்றேன், தின்னும் என்றாள்

பகடு என்றேன், உழும் என்றாள் பழமை தன்னை

கம்பமா என்றேன், நற் களியாம் என்றாள்

கைம்மா என்றேன், சும்மா கலங்கினாளே

இந்தப் பாடலில் யானை என்ற விலங்குக்கு வழங்கப்படும் களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, மற்று கைம்மா என்ற சொற்கள் குறிப்பிடப் படுகின்றன. அச்சொற்களுக்கான மாற்றுப் பொருளும் பாணினி புரிந்துகொண்ட அளவில் சுட்டிக் காட்டப் படுகின்றன. பாடலில் மெல்லிய சோகமும் நகைச்சுவையும் ததும்புகிறது. வேப்ப மரத்தில் தேன்கூடு இந்தக் கவிதை.

(களபம் – யானை மற்றும் சந்தனம். மாதங்கம் – யானை, நிறையப் பொன். வேழம் – யானை, கரும்பு. பகடு– யானை, எருது. கம்பமா – யானை, கம்பு தானியத்தின் மாவு.)

எல்லாவற்றையும் அவள் மாற்றுப் பொருள் கொண்டே புரிந்து கொண்டதை எண்ணி அந்தப் பாணர் இறுதியாக கைம்மா, என்று முடிக்கிறார். அந்தச் சொல் யானை என்பதைத் தவிர வேறு மாற்றுப்பொருள் தராத நிலையில், யானையையா பரிசாக வாங்கி வந்தாய், இதில் யானையையும் வைத்து போஷிப்பது எப்படி, என அவள் திகைப்பதாகப் பாடல் முடிவு பெறுகிறது.

சங்க கால இரட்டைப் புலவர் பற்றித் தெரிந்திருக்கலாம். அவர்கள் இருவரிலும் ஒருவர் அந்தகர். அவர்களும் வறமையிலும் நகைச்சுவை குறையாமல் வாழ்ந்தவர்கள். இருவரும் மீனாட்சி திருக்கோவில் பொற்றாமரைக் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பார்வை அற்றவரின் ஆடை நழுவி குளத்தில் மூழ்கி விடுகிறது. இடுப்பு உடுப்பு தொலைந்ததில் மற்றவர் திகைத்து “ஐயோ  எனது கலிங்கம் (ஆடை) கைக்குத் தப்பி குளத்தில் மூழ்குகிறது” என்று பரிதவிக்கிறார். அதற்கு மற்றவர் இப்படி பதில் அளிப்பதாக தனிப்பாடல் வளர்கிறது.

         அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாம் அதனைத்

         தப்பினால் நம்மை அது தப்பாதோ?

என்று பதில் சொன்னவர், கூடவே ஆறுதலும் சொல்கிறார்.

     “… இப்புவியில்

         இக்கலிங்கம் போனால் என் ஏகலிங்க மாமதுரைச்

         சொக்கலிங்கம் உண்டே துணை.”

தமிழ் கொண்டு உற்சாகமான மனநிலையிலேயே புலவர்கள் வாழ்ந்தார்கள் என்று தெரிகிறது. வறுமையிலும் நகைச்சுவை உணர்வு நழுவாத உற்சாக வாழ்க்கையே அவர்கள் வாழ்ந்தார்கள்.

 ஔவையாரின் இப்படியான பல பாடல்களை நினைவுகூர முடியும்.

காளமேகப் புலவரின் பாடல்கள் பல கலகலப்பானவை. மன்னரை விடுத்து சாமானியர் பற்றிய பாடல்களும், இறைவர் பற்றியே கூட அவரது எகத்தாள தொனியும் உள்ளுந்தோறும் உவகை தர வல்லவை. விஷ்ணுவின் வாகனம் கருடன், என்பதை ’ஐயோ பிள்ளையைப் பருந்தெடுத்துப் போகுது பார்’ என்று பாடுவார். ஓர் ஊரில் ஆய்ச்சியரிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு, அந்த மோர் மிக நீர்த்துப் போய் இருந்ததைக் கிண்டல் அடிக்கிறார் இப்படி.

கார் என்று பேர் படைத்தாய் ககனத்துரும்போது

நீர் என்று பேர் படைத்தாய் நெடுந்தரையில் வீழ்ந்ததன் பின்

வார் சடை மென்கூந்தல் பால் ஆய்ச்சியர்கை வந்ததன் பின்

மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே

தண்ணீர் வானத்தை அடைகையில் மேகம் என்று (கார்) பெயர் எடுக்கிறது. மழையாகப் பெய்கையில் அதற்கு நீர் என்று பெயர் பெறுகிறது. ஆனால் இந்த ஆய்ச்சியர் அதையே மோர் என்று சொல்லி விற்கிறார்கள், என்று கிண்டல் அடிக்கிறார் புலவர்.

காளமேகப் புலவரின் இரட்டுற மொழிதல் பாடல்கள் வெகு சிறப்பு. ஆசுகவி என்ற அளவில் நினைத்த நேரத்தில் உடனே கவிபாடும் திறம் மிக்க புலவர் அவர். அவர் பற்றிய இன்னொரு கதை இப்படிச் செல்கிறது.

காளமேகப் புலவர் பிறப்பால் வைணவர். ஸ்ரீரங்கத்துக்காரர். அவர் இயற்பெயர் வரதன். பக்கத்து திருவானைக்காவல் சிவன் கோவில் தாசி ஒருத்தியுடன் அவருக்கு மையல் ஏற்படுகிறது. அவர் திருவானைக்காவல் கோவில் மடப்பள்ளியிலேயே பணியமர்கிறார். அதனால் அவர் சைவர் ஆனதாகச் சொல்லப் படுகிறது.

அதில் பெருமாளுக்கு வருத்தம்.

ஒருமுறை பெருமாள்கோவில் பக்கமாக அவர் வரும்போது, பெருமாள் சட்டென்று மழை பொழியச் செய்கிறார். புலவருக்கு ஒதுங்க வேறு இடம் இல்லை.

வேறு வழியில்லாமல் அவர் பெருமாள் கோவிலுக்குள் நுழைய முயல்வதைப் பார்த்த பெருமாள் சட்டென்று கோவில் கதவுகளை அடைத்துக் கொள்கிறார்.

புலவருக்கு இது பெருமாளின் வேலைதான் என்று புரிகிறது. மழைக்கு ஒதுங்கியாக வேண்டுமே. இப்போது என்னசெய்வது? சட்டென்று அவர் பெருமாளைப் புகழ்ந்து ஒரு வரி பாடுகிறார்.

     “கண்ணபுரமாலே கடவுளினும் நீ அதிகம்…”

நான் வணங்கும் சிவனை விட நீ பெரியவன், என்ற பொருள்பட அவர் பாடியதும், பெருமாளுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கதவைத் திறந்து அவரை உள்ளே அனுமதிக்கிறார்.

உள்ளே வந்த காளமேகம் மீதி வரிகளைப் பாடுவார் என்று காத்திருந்தால் அவர் கவிதையைத் தொடர்வதாக இல்லை. பெருமாளுக்கே ஆர்வம் தாளாமல் பாடலைத் தொடரச் சொல்லி அவரைக் கேட்கிறார்.

     “உன்னிலுமோ நான் அதிகம்…”

எனத் தொடர்கிறார் காளமேகம். உன்னைவிட ‘நான்’ பெரியவன், என்கிறார் புலவர்.

திகைத்துப் போகிறார் பெருமாள். எப்படி?... என்று விளக்கம் கேட்கிறார்.

காளமேகம் பாடலை இப்படி முடிக்கிறார்.

     கண்ணபுரமாலே கடவுளினும் நீ அதிகம்

         உன்னிலுமோ நான் அதிகம்

         உன் பிறப்போ பத்தாம்

உயர் சிவனுக்குப் பிறப்பு இல்லை.

என் பிறப்போ எண்ணிலடங்கா.

பெருமாள் பத்து அவதாரங்கள் எடுத்தவர். சிவ பெருமான் அவதாரம் எதுவும் எடுக்கவில்லை. ஆகவே நீ சிவனை விடப் பெரியவன். ஆனால் நான்… எண்ணிலடங்காப் பிறவிகள் எடுத்தவன். உன்னைவிடப் பெர்யவன் யார்? நான்தானே?... என்று கேட்கிறது பாடல்.

எத்தனை அநாயாசமாக சிந்திக்கிறார் காளமேகப் புலவர் என்று நினைக்க வியப்பு மேலிடுகிறது.

காளமேகத்தின் சொற்திறன் பார்த்துத்தான் அவரிடம் நிறையப் பேர் ஈற்றடி அல்லது ஈற்றுச் சொல் விதவிதமாகத் தந்து கவிதை பாடச் சொன்னார்கள். அதில் நிறைய அவரை மட்டந் தட்டும் விதமான இழி சொற்கள். என்றாலும் காளமேகத்தின் கவித்திறன் அபாரமானது.

ஒருமுறை ’விளக்குமாறு’ (துடைப்பம்) என்று முடிகிற அளவில் அவரை வெண்பா பாடக் கேட்கிறார்கள் அவர் பாடிய வெண்பா இது.

“செருப்புக்கு வீரர்களைச் சென்றுழக்கும் வேலன்

பொருப்புக்கு நாயகனைப் புல்ல – மறுப்புக்குத்

தண்டேன் பொழிந்த திருத் தாமரைமேல் வீற்றிருக்கும்

வண்டே விளக்கு மாறே.”

மகாகவி பாரதியாரிடமும் ஒருவர் இப்படி இடக்காக ‘பாரதி சின்னப் பயல்’ என்று ஈரடி தந்து பாடச் சொன்ன கதை உண்டு. பாரதியார் அந்தப் பாடலை இப்படி முடிக்கிறார். “காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப் பயல்.” பாரதியாரின் பெருந்தன்மையினால் பிறகு அதே பாடலை, வயதில் மூத்த காந்திமதி நாதனுக்கு பாரதி சின்னப் பயல், என்பதாக மாற்றிப் பாடியதாக சம்பவம் சொல்லப் படுகிறது.

இரண்டு வடிவத்திலும் பாரதியாரின் பாடல் அறியக் கிடைக்கிறது.

நமது காலத்தில் கி.வா.ஜ., கிருபானந்த வாரியார் போன்றவர்கள் இப்படி நுட்பமாய் சொல் விளையாட்டு வித்தகம் செய்வார்கள். ஒரு திருமண வைபவத்தில் கி.வா.ஜ அவர்கள் விருந்து உண்டுவிட்டு வந்தபோது ஒருவர் அவருக்கு நீர் முகர்ந்து கொடுத்தார். அப்போது கி.வா.ஜ. குறிப்பிட்டாராம். “சாதாரணமாக நீரில் தான் குவளை இருக்கும். (குவளை மலர்.) இப்போது குவளையில் நீர் இருக்கிறதே.” (குவளை – நீர் அள்ளும் பாத்திரம்.)

“நவ கிரகங்களில் வியாழன் தான் கல்வி கிரகம். மற்றவை கல் விக்கிரகம்” என்பார் வாரியார்.

சங்கடமான சந்தர்ப்பங்களிலும் நகைச்சுவையாகக் கடந்து செல்லுதல் சிலரது இயல்பு. நம்மில் பலரிடம் அந்த அநாயாசத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

“வேட்டி அழுக்கா இருக்கே மாத்திக் கட்டிக்கக் கூடாதா?”

“என்ன பண்றது வேட்டிக்கு மூணு பக்கம் இல்லியே...” என்று அவன் பதில் சொன்னானாம்.

நெருக்கடி நேரங்களில் சமாளிப்பது ஒரு தனிக்கலை. தி.ஜானகிராமனின் ஒரு கதையில் இந்தக் காட்சி வருகிறது.

பழைய பேப்பர் எடுக்கும் ஒருத்தனைப் பற்றிய கதை. பழைய பேப்பரைப் போடுகிறவர் அவனது தராசு எத்தனை எடைக்கு பேப்பர் வைத்தாலும் எடைகுறைத்தே காட்டும், என்று அலுத்துக் கொள்கிறார். அதற்கு பேப்பர் எடுக்கிறவன் சொல்கிறான்.

“என் தராசை சந்தேப் படாதீங்க சாமி. இந்தத் தராசு எழுதின கடுதாசிக்கும் எழுதாத கடுதாசிக்கும் எடை வித்தியாசம் காட்டுமாக்கும்..” (தி.ஜா.வின் சிறுகதை ‘கோதாவரி குண்டு.’)

என்ன சாமர்த்தியமான பதில். 

சில பதில்கள் எதிராளி கிண்டலாகக் கேட்கும்போது அவருக்குத் தக்க பதிலடியாக அமைந்து விடுவதும் உண்டு.

ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு என ஒரு கம்யூனிஸ்டு தலைவர். கேரளாக்காரர். அவர் பேசுகையில் சிறிது நா தடுமாறும். ஒரு தடவை அவரிடம் அரசியல் சார்ந்து எதோ கேள்வி கேட்டார்கள். மிக விளக்கமாக அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்தபோது அடிக்கடி அவருக்கு நா குழறியது. நிருபர் அடக்க முடியாமல் அவரது பேச்சில் குறுக்கிட்டுக் கேட்டார்.

“நீங்க எப்பவுமே இப்படித் திக்குவீங்களா?”

நம்பூதிரிபாடு சட்டென பதில் சொன்னார். “இல்ல, பேசும்போது மாத்திரம்தான் திக்குவேன்.”

 

Wednesday, June 1, 2022

 

ஆவநாழி 12 – ஜுன் ஜுலை 2022 இதழில் வெளியான கதை

art / roy kandhali

இரண்டு பெண்கள்

எஸ்.சங்கரநாராயணன்

 

ந்தினி இப்போது வேலைக்குப் போகிறாள். அலுவலகம் போய்வர அவளிடம் இரு சக்கர வாகனம் இருக்கிறது. அவள் கல்லூரியில் முதுநிலை படிக்கும்போதே அப்பா வாங்கித் தந்திருந்தார். பெண்ணின் தேவை எது என பார்த்துப் பார்த்து செய்துகொடுத்த அப்பா. கணவனைப் பற்றி லலிதாவுக்குப் பெருமிதம் உண்டு. நந்தினி வயிற்றில் இருக்கும்போதே அவன், மகேஸ்வரன் பெண் குழந்தையாப் பெத்துக் குடுடி, என்றான். “உன்னைப்போல ஒரு பெண்…” என்று சிரிக்கிறான். பிறகு சொன்னான். “ஓர் ஆணின் பெண் அடையாளம்… என்பது ஆச்சர்யமானது அல்லவா?”

“ஏய், அதேபோல நீ… ஆண் குழந்தையை எதிர்பார்க்கிறியா?” என்று அவளைச் சீண்டினான் அவன். அவள் பதில் சொல்லவில்லை.

ஆண்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்!

பெண் நந்தினி ஒருநாள் அலுவலகம் விட்டு வர தாமதம் ஆகி விட்டது. அன்றைக்குக் காலையிலேயே அவள் வண்டி எடுத்துப் போகவில்லை. லேசாய் மழை தூறிக் கொண்டிருந்தது. மணி ஏழாகி விட்டது. இன்னும் நந்தினி வீடு திரும்பவில்லை. லலிதா அலுவலகம் முடிந்து வந்திருந்தாள். நந்தினி இன்னும் வரவில்லை. “என்னாச்சி? ஃபோன் பண்ணினாளா?” என்று விசாரித்தாள் கணவனிடம். “இல்ல” என்றான். அவள் அவனைப் பார்த்தாள். “ஏம்ப்பா நான் என்ன சின்னக் குழந்தையா? நானா வந்திர மாட்டேனா?...ன்னு வெடுக்னு கேப்பா அவ…”

இப்போதும் மழை பெய்து கொண்டிருந்தது. மகேஸ்வரன் குடையை எடுத்துக்கொண்டு கிளம்பினான். “பஸ் ஸ்டாப் வரை போயி அவளைக் கூட்டிட்டு வந்திர்றேன்…” அவள் புன்னகை செய்தாள். “அவளே கால்டாக்சி பிடிச்சி வந்திட்டா?...” வந்திட்டா நீ போன் பண்ணு எனக்கு… “நான் உங்களைத் தேடி வரவா குடை எடுத்துக்கிட்டு?” என்று சிரித்தாள் லலிதா. என்றாலும் கணவனின் அக்கறை அவளுக்கு எப்பவுமே பிடிக்கும்.

ஆண் என்ன பெண் என்ன, அன்பு என்பது ஒருவகை தாய்மடி தானே என நினைத்துக் கொண்டாள். ஆண், பெண்… இரு பால் ஆனாலும் மறு பாலின் இயல்புகளை சுவிகரித்துக் கொள்வது… ஈர்ப்பின், காதலின், குடும்பத்தின் அடையாளம் போலும். பெண் குழந்தை ஓர் ஆணின் இந்த அம்சத்தைத் தூக்கிக் காட்டுவதாக இவன், மகேஸ்வரன் உணர்கிறான் போல.

ஆனால் எல்லாம் சிறு அலைபோல கிளம்பி உள்வாங்கி விட்டது. எதிர்பார்க்கவே இல்லை. மகேஸ்வரன் இறந்து போனான். மகேஸ்வரன் அன்றைக்கு வீடு திரும்பி வரவேயில்லை. மாலை விலகி இரவு சூழ்ந்தது. இந்நேரம் அவன் வீடு வந்திருப்பான். வரவில்லை. அவனிடம் இருந்து தகவல் வரவில்லை. அவனது அலைபேசி அடித்துக்கொண்டே யிருக்கிறது. சிறு கவலை வந்தது. பெரிதாய் இல்லை. வந்தவுடன் அவனே காரணம் சொல்வான்… என காத்திருந்தாள் லலிதா. காத்திருந்தார்கள்.

விபத்து. சாலையின் நடுவே கிடக்கிறான் மகேஸ்வரன். கிட்ட வந்து அவனைச் சுற்றிக்கொண்டு வாகனங்கள் கடக்கின்றன. விபத்து எப்போது நடந்தது, யார் எப்போது 108க்குத் தகவல் தந்தார்கள், தெரியாது. அவன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டபின் அவளுக்குத் தகவல் வந்தது. அவன் கடைசியாகப் பேசிய எண்ணுக்கு முதலில் அழைத்து, அந்த நபர் அவளுக்குத் தகவல் சொன்னார். அரசாங்க ஆஸ்பத்திரி. நேரம் இரவு பத்தரையைக் கடந்திருந்தது. ஐயோ, என்று ஓடினார்கள். நந்தினிக்கு உடம்பு பதறிக் கொண்டிருந்தது. இரு சக்கர வாகனத்தை எடுக்க தைரியம் இல்லை. ஆட்டோ பிடித்துக் கொண்டு ஜி எச் ஓடினார்கள்.

மரணம். யார் அவனை விபத்துக்கு உள்ளாக்கியது என்றே தெரியவில்லை. சிசிடிவி இல்லை அந்தப் பகுதியில். யாரை நொந்துகொள்வது? உலகம் சட்டென்று இருள்மயமாகி விட்டாப் போல இருந்தது. “உடலை அடையாளம் காட்டி வாங்கிக்கங்க. ரொம்ப தாமதமா ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு வந்தாங்க…” என்றெல்லாம் யாரோ எதோ சொன்னார்கள். அப்… என பொங்கிய நந்தினியை ஷ், என யாரோ அமர்த்தினார்கள்.

போஸ்ட்மார்ட்டம் வேறு இருந்தது. கையெழுத்து வாங்கிக் கொண்டு உடலைத் தந்தார்கள்.

“அம்மா அழாதம்மா” என்றபடி நந்தினி அழுதாள். “சரி” என்றபடி லலிதா பெண்ணின் கண்ணைத் துடைத்தாள். சட்டென்று வீடே இருள் சூழ்ந்ததாகி விட்டது. கலகலப்பான சிரிப்பால் பேச்சால் வீட்டை நிறைத்தவன் அல்ல மகேஸ்வரன்.  மௌனத்தால் அன்பால் அமைதியால் நிறைத்தவன். அவனிடம் வாழ்க்கை சார்ந்த அலுப்பு இல்லை. ஏமாற்றம் கொண்டாடவில்லை அவன். தளும்பாத அமைதி அவன். அன்பின் வழியது உயிர்நிலை, என்பார் வள்ளுவர். அவன் வழியாத உயிர்நிலையாய் இருந்தாற் போல இருந்தது. வீட்டில் அவன் கூட இருக்கும் பாவனையைத் தவிர்க்க முடியவில்லை. அப்படி பாவனைகள் வேண்டி யிருந்தன. இயல்பாக மறக்க வேண்டும். மறக்க நினைப்பது மறதியைத் தருமா?

இரவகளில் அம்மாவும் பெண்ணும் ஒன்றாகப் படுத்துக் கொண்டார்கள். ஒரு வாரத்தில் சற்று சுமுகப்பட்டு நந்தினி தனித்து தன்னறையில் படுத்துக் கொண்டாள். அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அவளுக்குத்தான் தனியே படுத்துக்கொள்ள ஒருமாதிரி இருந்தது. மகேஸ்வரன் இருந்த காலங்களில் உடல் அலுங்காமல் நிம்மதியாக அவள் அருகில் அவன் உறங்குவதை ஆச்சர்யமாய்ப் பார்த்திருக்கிறாள். இவனுக்குப் பிரச்னையே இல்லையா, என்று தோன்றும். பிறரை நம்பாமல் அமைதி யிழக்கிறார்கள் ஜனங்கள். இவன் எல்லாரையும் இயல்பாக சமமாக அணுகுகிறான். எளிமையான மனிதன். எதையும் சிக்கலாக்கிக் குழப்பிக் கொள்ளாதவன், என்று தோன்றும்.

‘அவர்கள்’ அறையை அவன் தாழ் போடுவது இல்லை. பெண் குழந்தை. அடுத்த அறையில் படித்துக் கொண்டிருப்பாள். தன்னைப்போல தண்ணீர் குடிக்கவோ வேறு சிறு தேவைகளுக்காகவோ எழுந்து நடமாடக் கூடும். அவனது அந்த நாசூக்கு லலிதாவுக்குப் பிடிக்கும். சட்டென்று மகேஸ்வரன் எழுந்து போய்விட்டாற் போல இருந்தது. சில சமயம் திகைப்பாய் இருக்கும். அழுகை வராது. இந்த அறிவாளி பாவனை, முறுக்கம் தேவை இல்லைதான் அறிவு அழுவதைத் தடுக்கிறது. இயல்பாக வாழ முடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்.

பெரிய பெரிய நாவல்கள், ஆங்கில நாவல்கள் வாசித்தாள் நந்தினி. வேலைக்குப் போவது அவளுக்கு ஓர் ஆசுவாசம் தான். ம். எனக்குமே கூட, என நினைத்துக் கொண்டாள் லலிதா. இந்த ‘வணிக’ ஆண்டின் இறுதிக் காலத்தில் அவளுக்கு அலுவலகத்தில் வேலை நெரித்தது. அது ஓரளவு நல்ல விஷயம்தான்.

நந்தினி அலுவலகம் விட்டு வந்தவுடன் போய் முகம் கை கால் கழுவிக் கொள்வாள். பிறகு சமையல் அறைக்குப் போவாள். “அம்மா உனக்குக் காபி…?” ஆச்சிடி. தன் காபிக் கோப்பையுடன் வெளியே வருவாள் நந்தினி. மெல்ல எதும் பாடுவாள். அவள் இயல்பு அது. பேசிக் கொண்டே யிருப்பாள். திடீரென பேச்சின் நடுவே மௌன இடைவெளியில் அவளிடம் இருந்து எதாவது பாடலின் இடை வரிகள் வரும். அதுவரை அந்தப் பாடல் அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்திருக்க வேண்டும்!

பாடுவது அல்லது பாடலை ரசிப்பது என்பது அலையில் கால் நனைக்கிற மாதிரியான அனுபவம் தான். பயிற்சியெல்லாம் கிடையாது. என்றாலும் நந்தினி சுமாராகப் பாடுவாள். சில சமயம் பாடிய பாடலை நிறுத்திவிட்டு, “இந்த பிஜியெம்ல ஒரு ஹம்மிங் சேர்க்க நினைச்சார் பாரு, இசையமைப்பாளர். கிரேட்!” என்பாள்.

வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. என்றாலும் பெரும்பாலும் அமைதியாகவே இருக்கும். நந்தினி செய்திகள் மாத்திரம் பார்த்துவிட்டு அணைத்து விடுவாள். அவளது ரசனைகள் வித்தியாசமானவை. நீள நீள தொங்கட்டான் அணிகிறாள். முழங்கை வரை ரவிக்கை அணிகிறாள். ‘ஆண்கள் வாட்ச்’ கட்டுகிறாள். ஆயினும் செயற்கையாய் உதட்டுச் சாயம் பூசுவது இல்லை. கண்ணுக்கு மைதீட்டி அகண்ட பாவனை தந்தது. தலையில் குதிரை வால் போல பின்மயிர் ‘எஸ்.’ அவள் நடையின் துள்ளலில் அது எகிறியது.

இப்போது அந்தப் பாடும் பழக்கம் மீண்டிருந்தது. அது சிறிது முன்பே மீண்டும் இருக்கலாம். ஆனால் மனதில் பாடல் உருள, அது உதடுவழி வெளியேறுமுன் அம்மாவை நினைத்து அடக்கிக் கொண்டும் இருக்கலாம். ஒருநாள் குளியல் அறையில் இருந்து நந்தினி மெல்லிய குரலில் பாடுவது லலிதாவுக்குக் கேட்டது. ஒரு வரியை சாதாரணமாகப் பாடி, பின் அதே வரியை புதிய சங்கதிகள் நுரைக்க அலங்காரமாய்ப் பாடிக் கொண்டிருந்தாள் நந்தினி. அம்மாவுக்கு சந்தோஷமாய் இருந்தது.

சில சமயம் வேடிக்கையாய், கிருஷ்ணா நீ பேகனே பாரோ. டென் ருப்பீஸ் ஐ வான்ட் டு பாரோ… என்றெல்லாம் கூட சுய சாகித்யம் பண்ணுவாள். அவள்அப்பா இருந்த காலத்தில், பாலகிருஷ்ண பிரசாத் பாடிய அன்னமாச்சாரியா கிருதி ஒன்று ‘நீராஞ்சனம் நீராஞ்சனம்’ என்று வரும் பாடல் ஓடிக் கொண்டிருந்தது. “அப்பா அடுத்த பாட்டு “டிரஸ் மாத்தணும் டிரஸ் மாத்தணும்னு வருமா?” என்று கேட்டது ஞாபகம் வந்தது.

மெல்லிய மழையில் நந்தினி குடையுடன் காத்திருப்பதை அம்மா பார்த்தாள். மகேஸ்வரன் இல்லாமல் லலிதா எப்பவுமே பஸ் அல்லது ஆட்டோ, ஷேர் ஆட்டோ பிடித்து அலுவலகம் போய்வந்தாள். அவன் காலத்தில் அவனே அவளை காலைப்பொழுதில் அலுவலக வாசலில் விட்டு விடுவான். வரும்போது மாத்திரம் அவள் பார்த்துக்கொள்ள வேண்டி யிருக்கும்… அம்மா பஸ்சில் இருந்து இறங்குவதை நந்தினி பார்த்துவிட்டு பஸ்சை நோக்கி வந்தாள். அம்மாவுக்கு என்று இன்னொரு குடை எடுத்து வந்திருந்தாள்.

தோளுக்குமேல் வளர்ந்த பெண்ணுடன் நடப்பது பெருமையாய் இருந்தது.

“இப்ப என்னடி படிச்சிட்டிருக்கே?” என்று அம்மா கேட்டாள். நந்தினிக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அம்மா படிப்பு ருசி உள்ளவள் அல்ல. என்றாலும் உற்சாகமாக பதில் சொன்னாள். “ஹெமிங்வே. நடைமன்னன். எழுத்துலக ரஜினி அவரு” என்றாள். “ஹேப்பினஸ் இஸ் எ மூவிங் ஃபீஸ்ட்…ன்றாரும்மா. நல்லா இருக்கில்ல?” என்று பேசிக் கொண்டே வந்தாள்.

“ஒரே வரியில் ஹெமிங்வே ஒரு கதை எழுதி யிருக்கிறாரும்மா…”

“ம்.”

“அதைத் தமிழ்ல சொன்னால்… விற்பனைக்கு, குழந்தைக் காலணிகள், இதுவரை அணியாதவை.”

அம்மா தலையாட்டி அதை ரசித்தாள்.

அடுத்த முறை அழகு நிலையம் போனபோது நந்தினியுடன் துணைக்கு அம்மாவும் போனாள். நந்தினி பொதுவாக ஃபேஷியல் செய்து கொள்வாள். கண் இமைமூடி அதில் வெள்ளரி பத்தை வைத்துக்கொண்டு முகவெள்ளையுடன் காத்திருப்பாள். அருகே இசை ஒலித்துக் கொண்டிருந்தது. முகத்தை வழுவழுப்பாக்கிக் கொண்டு எழுந்து கொண்டாள் நந்தினி. “அம்மா நீ?” என்று கேட்டாள் நந்தினி. “ஐய எனக்கு வேண்டாம்…” என்று புன்னகை செய்தாள் லலிதா. பெண் அப்படிக் கேட்பாள் என்று அம்மா எதிர்பார்க்கவில்லை. “ஐ-ப்ரோ ட்ரிம் பண்ணிக்கம்மா? பளிச்னு இருக்கும்…” என்று அவளைக் கைப்பிடித்து நாற்காலியில் உட்கார்த்தினாள் நந்தினி.

வீட்டில் வந்து நந்தினி அறியாமல் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தாள் லலிதா. ஒரு சீராக வெட்டப்பட்ட புருவம். சிறிது மஸ்காரா தீட்டி இன்னும் அழுத்தமாக்கிக் கொள்ளலாம், என்று தோன்றியது. “இந்தாம்மா…” என்று பின்னால் இருந்து சத்தம் கேட்டது. நந்தினி அம்மாவிடம் மையைத் தந்தாள். “தினசரி மஸ்காரா போட்டுக்கோ. என்னைவிட நீ அழகு…” என்று சிரித்தாள்.

சட்டென்று தொண்டைவரை ஒரு மகிழ்ச்சி வந்து முட்டியது லலிதாவுக்கு. புருவ மையை அவள் வேண்டாம், என்று மறுப்பதற்குள் நந்தினி போய்விட்டாள். அம்மாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அறைக்கதவைச் சாத்திக்கொண்டு திரும்ப ஒருமுறை கண்ணாடி பார்த்தாள் லலிதா. சிறு அளவுக்கு மேல் அலங்காரங்களை இந்நாட்களில் அவள் தவிர்த்திருந்தாள். கார்டன் சில்க் புடவைகள் நிறைய உள்ளே இருக்கிறது. அவள் அணிவதே இல்லை. ஒருமாதிரி, இஸ்திரி போட்ட பருத்திப் புடவைகளே அணிந்து கொண்டிருந்தாள்.

மறுநாள் அவள் குளித்துவிட்டு வரும்போது நந்தினி அம்மாவுக்கு கார்டன் சில்க் புடவையை எடுத்து வைத்திருந்தாள். அவள் மறுக்க மறுக்க அதையே கட்டச் சொன்னாள். பிறகு “நீ என் அம்மா மாதிரியே இல்லடி. என் அக்கா…” என்று கன்னத்தைக் கிள்ளினாள். பெண் இக்காலங்களில் சிரிக்க ஆரம்பித்திருந்தாள் என அம்மா கவனிக்க, நந்தினியோ அம்மாவைச் சிரிக்க வைக்கிற முயற்சிகளில் இறங்கினாள்.

அலுவலகத்தில் முதலில் அவள் முகப் பொலிவையும், பிறகு அவள் சந்தோஷத்தையும் எல்லாரும் பார்த்தார்கள். “லல்லூ? தலைக்கு ‘டை’ அடிச்சியா?” என்று கேட்டாள் அடுத்த சீட் ருக்மணி. லலிதாவுக்கு வெட்கமாய் இருந்தது. “என் பொண்ணுதான்…” என்று தயக்கமாய்ச் சொன்னாள். “இருக்கட்டும். இருக்கட்டும்…” என்று அவள் தோளைத் தட்டினாள் ருக்மணி.

அம்மாவுக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும். அப்பா சொல்லி யிருக்கிறார். வார இறுதி நாட்களில் அவர்கள் எதாவது ஐஸ்கிரீம் பார்லருக்குப் போய் சாப்பிட்டுவிட்டு வந்தார்கள். இளைஞர்களின் விசேஷமே அதுதான். எத்தனை கடினமான துக்கங்களிலும் நெருக்கடிகளிலும் இருந்து அவர்களால் கடந்து தாண்டி வர முடிகிறது, என நினைத்துக் கொண்டாள் லலிதா. ஐயோ, இவள் இல்லையென்றால்… நான் திகைத்துப் போயிருப்பேன், என்று இருந்தது.

நந்தினியிடம் சில மாறுதல்கள் தெரிந்தன.

அவளுக்கு இப்போதெல்லாம் வீட்டுக்கே அலைபேசி அழைப்பு வருகிறது. பொதுவாக அவளுக்கு வீட்டில் இருக்கும்போது அழைக்கிற ஆட்கள் கிடையாது. ஆனால் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே அவள் கவனம் வேறெங்கோ படபடப்பதை அம்மா கவனித்தாள். புன்னகை செய்து கொண்டாள் லலிதா.

நந்தினி அலுவலகம் கிளம்புமுன் ஒரு கணம் நின்று கண்ணாடி பார்த்து முடியைச் சரிசெய்து கொள்கிறாள். அவள் முகம் சற்று பூரித்து கனவு பொங்கிக் கிடந்தது. அவள் உள்ளே வண்ணங்கள் கலந்து குழைந்து கிடந்தது. ஆத்மாவின் உள்கவனம் அது. புலன்கள் சுதாரித்த நிலை. நரம்புகள் முறுக்கி தயாரான வீணை போல இருந்தாள்.

வேடிக்கையாய் இருந்தது. இந்த வாழ்க்கைதான் எத்தனை சுவாரஸ்யமான மாற்றங்களைத் தர வல்லதாய் இருக்கிறது. சோகத்தில் துக்கத்தில் உள் பதுங்கிய கடல். அந்தக் காலம் தாண்டி இப்போது அடுத்த கட்டமா இது? ஒரு துளிரின் மென் நிறங்கள் எத்தனை வசிகரமாய் இருக்கின்றன. வாழ்வின் ஒரு நிலை கடந்து கனவுகளின் அடுத்த நிலைக்கு மனம் தயாராகிற பருவ அடையாளங்கள் அல்லவா அவை.

அன்றைக்கு இரவு லலிதாவுக்கு இன்னொரு வியப்பு காத்திருந்தது. யாரோ ஒரு பையனுடன் நந்தினி அவர்கள் வீட்டு வாசலில் வந்து இறங்கினாள். சற்று தயங்கி வெட்கத்துடன் நந்தினி வீட்டைப் பார்த்தாள். அப்போது அம்மா கொடியில் காய்ந்த துணிகளை எடுத்துப் போக வந்திருந்தவள், மொட்டைமாடியில் இருந்தபடி அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தது இருவருக்குமே தெரியாது. லலிதாவுக்குச் சிரிப்பு வந்தது. பொதுவாக நந்தினி வீடு திரும்பும்வரை வாசல்பக்க விளக்கைப் போட்டே வைத்திருப்பாள் அம்மா. அதனால் அவள் முகமும் அந்த வெட்கமும், உள் கிளர்ச்சியும் அம்மாவால் பார்க்க முடிந்தது. அவன்… யார் அவன்? அவனது முக உணர்வு மேகங்களை அவளால் கண்டுகொள்ள முடியவில்லை.

மொட்டு விரிய இன்னும் வாசனை கிளராமல் இருக்கலாம் என்று தோன்றியது. அவளது அருகாமை அவனுக்கும் ஒரு தனி தவிப்பை தத்தளிப்பை கிளர்ச்சியைத் தந்திருந்தது. காதல் என்பதே என்ன?... தானே அறியாமல் ஓர் உடல் மற்றதை நோக்கிக் கனவுடன் கனிவுடன் சரணடைவது தானோ என்னவோ?

காதல் என்பது தன்னைப் போல ஒருவரை மற்றவர் முன் கொண்டு நிறுத்தி திகைக்கடிக்கிறது. அந்தத் தூண்டுதலைத்தான் ரசாயன மாற்றம் என்கிறார்கள். வண்டியில் சற்று விரைத்தாற் போலவே உட்கார்ந்திருந்தாள் நந்தினி. அவன் உடல்மேல் உரசாத ஜாக்கிரதை உணர்வு அது. அவனும் அப்படியோர் ஸ்பரிசம் தவிர்த்த கவனத்துடன், அதாவது ஸ்பரிச கவனத்துடன் இருந்தான்.

ஓர் ஆண்மகனாக சற்று முன்கையை நீட்டினாற் போல, உன்னை இன்னிக்கு நான் உன் வீட்டில் இறக்கி விட்டு விடவா, என்று கேட்டிருக்கலாம். அவள் சட்டென மறுக்க இயலாதவளாகவும், இதை எதிர்பார்த்து ஆனால் எதிர்பாராத பாவனையுடன் அதை ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்று நினைத்தாள் லலிதா. இப்படியெல்லாம் அவள் யோசனை செய்வதே அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

அன்றும் காலையில் சிறிய தூறல் இருந்தது. மழை பெரிதாகலாம் போலத்தான் இருந்தது. நந்தினி தன் வண்டியை எடுக்கவில்லை. ஒருவேளை வேண்டுமென்றே அவள் தவிர்த்தும் இருக்கலாம்! மனசின் கணக்குகள் வேறு தானே? நமக்கே பல சமயங்களில் அதன் அர்த்தம் தெரியாமல் போகிறது. எது எப்படியோ பெரும்பாலான காதல் சந்தர்ப்பங்களை உருவாக்கி ஒத்தாசை செய்யத்தான் செய்கிறது.

தன்னிடம் உள்ள சாவியால் நந்தினி கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்திருந்தாள். அவள் உள்ளறையில் நைட்டிக்கு மாறிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. “வந்தாச்சா நந்தூ?” என்றபடி மாடியிறங்கி வந்தாள் அம்மா. நந்தினி வெளியே வந்தாள். “மாடில இருந்தாயா அம்மா?” என்று கேட்டாள் நந்தினி. அம்மாவின் முகத்தைப் பார்த்து, இவள் வேறொரு ஆணுடன் வந்தது பற்றி அம்மா அறிந்து கொண்டாளா தெரியவில்லை. அம்மா தன்யோசனையாய் இருந்ததாக நந்தினி உணர்ந்தாள்.

பாஸ்கர் நினைவு வந்துவிட்டது லலிதாவுக்கு. கல்லூரி நினைவுகள். பாஸ்கரின் பார்வை ஒரு கலங்கரை விளக்கம் போல தன்மீது ஒரு ஒளிக்குவிப்பு செய்வதை லலிதா உணர்ந்தே வந்திருந்தாள். அவளுக்கு இதுபற்றி யோசிக்கவே பயமாய் இருந்தது. பாஸ்கர் நல்ல பையன்தான். சட்டென்ற நேர்ப்பார்வைக்கு படபடப்புடன்  தலையைத் தாழ்த்திக் கொள்கிறான்.

லலிதா, அவளும் கலகலப்பான பெண்தான். என்றாலும் இந்த அந்தரங்கப் பார்வை ஊடுருவல் வெலவெலக்க வைத்து விடுகிறது. என்ன இப்படிப் பார்க்கிறான் இவன். கூச்சமும் அச்சமுமாக இருந்தது. யாரிடமும் இதைச் சொல்லவும் முடியாது. தோழிகள் கிண்டல் நச்செடுத்து விடுவார்கள். அப்பா அம்மாவிடம்? வேறு வினையே வேண்டாம். அது தவிர, இவள் பாட்டுக்கு எதையாவது சொல்லி, கடைசியில் அவன் அப்படியெல்லாம் இல்லை, என்று ஜகா வாங்கி விட்டால்? அதைவிட மானக்கேடு என்ன இருக்கிறது.

“ராத்திரிக்கு என்னம்மா?”

“தோசை மாவு இருக்குடி.”

“நான் வார்க்கட்டுமா?”

“இப்பவேவா. பசிக்கறதா?” என்றாள் லலிதா.

“இல்ல. இல்ல. அரைமணி ஆகட்டும்…” என்று நந்தினி டிவியில் செய்திகள் போட்டாள். என்றாலும் அம்மாவின் முகத்தில் யோசனைமூட்டம் இருந்ததை அவள் அறிந்து கொண்டாள்.

கல்லூரியில் அவன், பாஸ்கரின் வகுப்பு, வேறு. பாடமும் வேறு. ஒல்லியாய் உயரமாய் இருப்பான். சட்டையை இன் பண்ணி விட்டிருப்பது அவனை இன்னும் உயரமாய்க் காட்டும். அவர்கள் குடியிருக்கும் தெருவில் இருந்தான். சில நாட்களில் அவள் தெருவில் கடந்து போகும்போது, அவன் மேல்சட்டை யில்லாமல் இருந்தால் சட்டென்று உள்ளேபோய்ச் சட்டையை மாட்டிக்கொள்வான். இவளும் எதோ தப்பு செய்துவிட்டாப்போல தலையைக் குனிந்தபடி அவனைப் பார்க்காதது போல் தாண்டிப் போவாள். தாண்டிப் போகுமுன் கால்கள் பின்னிக் கொள்ளும். இப்போது அதையெல்லாம் நினைக்க சிரிப்பு வந்தது.

இந்தக் காதல்… வராத ஆள் உண்டோ… என நினைத்தபடியே துணிகளை மடிக்க ஆரம்பித்தாள் லலிதா. நல்ல சிவப்பு பாஸ்கர். விசிலில் முழு பாடலும் அவன் பாடுவான். கிளி போல, காகம் போல… என சில குரல்களை ‘மிமிக்’ செய்வான். அவனைத் தாண்டிப் போகும்போதெல்லாம் அவன் குரலையோ, அவன்பக்க ஒலிகளையோ கவனித்து அவள் காதுகள் கூர்ந்தன என உணர்ந்தாள். இந்த அதித கவனம் தேவையா என்ன? ஆனால் அப்படித்தான் நடந்தது.

ஒருநாள் மொட்டைமாடியில் தனியே இருந்தபோது அவள், யாருமில்லை பக்கத்தில் எனப் பார்த்துக் கொண்டு விசில் அடித்துப் பார்க்க முயன்றது கூட நினைவு இருக்கிறது. அப்பா! பயமும் வெட்கமும் ஆளையே திகைக்க அடித்தன. எதும் நடந்து விடுமோ என்ற பயமும் எதிர்பார்ப்புமாகவே கழிந்தன நாட்கள்.

காதல் என்பது ரகசியக் கொந்தளிப்பாகவே உள்ளே வளர்கிறது… என்று லலிதா நினைத்துக் கொண்டாள். அந்த வயதில் குழப்பங்களும் சந்தோஷங்களும்… அவன் தன்னைப் பார்க்கிறானா, கவனிக்கிறானா, தன்னோடு எதுவும் பேச முயற்சிப்பானா… என ஆண்களைச் சுற்றி ஒரு சிலந்தி வலை போல நினைவுகள் தன்னைப்போல படர்கின்றன. ஆண்களுக்கு எப்படி இருக்கும் தெரியவில்லை.

பாஸ்கர் கடைசிவரை அவளிடம் தன் காதலைச் சொல்லவே இல்லை. அவளுக்கானால் தானாகக் கேட்க பயமாய் இருந்தது. ஒருவேளை மறுத்துவிட்டால்?... என்ற பயம். ஆ. அவனுக்கும் அப்படி ஒரு பயம் இருக்கலாம். பிற்காலங்களில், அதாவது இப்போது கல்யாணம் முடிந்த நிலையிலும் அந்த ஆண் பெண் ஈர்ப்பும் அந்தரங்கத்தை ஊடுருவும் பார்வைகளும், எந்த வயதிலும் ஆணிடம் இருந்து பெண்ணுக்கும், பெண்ணிடம் இருந்து ஆணுக்கும் நிகழவில்லையா என்ன? நிகழத்தான் செய்கின்றன.

அவர்களில் சிலர் தைரியமாகத் தங்கள் காதலைப் பரிமாற வல்லவர்களாய் இருக்கிறார்கள். எது எவ்வாறாயினும் ஒரு பொது அம்சத்தில், பெண்ணானவள் ஆண்தான் முதலில் தன் காதலைச் சொல்ல வேண்டும், வெளிப்படுத்த வேண்டும், என எதிர்பார்ப்பதாக இருக்கிறது… ஆமாம். பொதுக் கணக்கு இது.

நந்தினிக்கும் அந்தப் பையனுக்குமான நெருக்கம் பற்றித் தெரியவில்லை. அரும்பு திறக்க வாசனை முட்டிமோதி உள்ளுக்குள் தவிக்கும் பருவம் இது. இருவரில் யார் எப்போது எப்படி தன் காதலை வெளிப்படுத்துவார்கள்… என்பதே அவரவர் வாழ்வின் சுவாரஸ்யம் தான்.

எனினும் காதல் இல்லாத வாழ்க்கை உப்பு சப்பற்றது, என நினைத்தபோது புன்னகை வந்தது. நந்தினி அவளாக விவரம் சொல்லட்டும். அவளது அந்தரங்கம் ஒளிப்பட்ட காலம் இது. அம்மா காத்திருப்பாள். துணிகளை மடித்து முடித்து எழுந்துகொண்டாள் லலிதா. “நந்தூ? தோசை வாக்கலாமா?” என்று டிவி ஒலியை மீறி லலிதா குரல் கொடுத்தாள்.

•••