ஆவநாழி 12 – ஜுன் ஜுலை 2022 இதழில் வெளியான கதை

art / roy kandhali

இரண்டு பெண்கள்

எஸ்.சங்கரநாராயணன்

 

ந்தினி இப்போது வேலைக்குப் போகிறாள். அலுவலகம் போய்வர அவளிடம் இரு சக்கர வாகனம் இருக்கிறது. அவள் கல்லூரியில் முதுநிலை படிக்கும்போதே அப்பா வாங்கித் தந்திருந்தார். பெண்ணின் தேவை எது என பார்த்துப் பார்த்து செய்துகொடுத்த அப்பா. கணவனைப் பற்றி லலிதாவுக்குப் பெருமிதம் உண்டு. நந்தினி வயிற்றில் இருக்கும்போதே அவன், மகேஸ்வரன் பெண் குழந்தையாப் பெத்துக் குடுடி, என்றான். “உன்னைப்போல ஒரு பெண்…” என்று சிரிக்கிறான். பிறகு சொன்னான். “ஓர் ஆணின் பெண் அடையாளம்… என்பது ஆச்சர்யமானது அல்லவா?”

“ஏய், அதேபோல நீ… ஆண் குழந்தையை எதிர்பார்க்கிறியா?” என்று அவளைச் சீண்டினான் அவன். அவள் பதில் சொல்லவில்லை.

ஆண்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்!

பெண் நந்தினி ஒருநாள் அலுவலகம் விட்டு வர தாமதம் ஆகி விட்டது. அன்றைக்குக் காலையிலேயே அவள் வண்டி எடுத்துப் போகவில்லை. லேசாய் மழை தூறிக் கொண்டிருந்தது. மணி ஏழாகி விட்டது. இன்னும் நந்தினி வீடு திரும்பவில்லை. லலிதா அலுவலகம் முடிந்து வந்திருந்தாள். நந்தினி இன்னும் வரவில்லை. “என்னாச்சி? ஃபோன் பண்ணினாளா?” என்று விசாரித்தாள் கணவனிடம். “இல்ல” என்றான். அவள் அவனைப் பார்த்தாள். “ஏம்ப்பா நான் என்ன சின்னக் குழந்தையா? நானா வந்திர மாட்டேனா?...ன்னு வெடுக்னு கேப்பா அவ…”

இப்போதும் மழை பெய்து கொண்டிருந்தது. மகேஸ்வரன் குடையை எடுத்துக்கொண்டு கிளம்பினான். “பஸ் ஸ்டாப் வரை போயி அவளைக் கூட்டிட்டு வந்திர்றேன்…” அவள் புன்னகை செய்தாள். “அவளே கால்டாக்சி பிடிச்சி வந்திட்டா?...” வந்திட்டா நீ போன் பண்ணு எனக்கு… “நான் உங்களைத் தேடி வரவா குடை எடுத்துக்கிட்டு?” என்று சிரித்தாள் லலிதா. என்றாலும் கணவனின் அக்கறை அவளுக்கு எப்பவுமே பிடிக்கும்.

ஆண் என்ன பெண் என்ன, அன்பு என்பது ஒருவகை தாய்மடி தானே என நினைத்துக் கொண்டாள். ஆண், பெண்… இரு பால் ஆனாலும் மறு பாலின் இயல்புகளை சுவிகரித்துக் கொள்வது… ஈர்ப்பின், காதலின், குடும்பத்தின் அடையாளம் போலும். பெண் குழந்தை ஓர் ஆணின் இந்த அம்சத்தைத் தூக்கிக் காட்டுவதாக இவன், மகேஸ்வரன் உணர்கிறான் போல.

ஆனால் எல்லாம் சிறு அலைபோல கிளம்பி உள்வாங்கி விட்டது. எதிர்பார்க்கவே இல்லை. மகேஸ்வரன் இறந்து போனான். மகேஸ்வரன் அன்றைக்கு வீடு திரும்பி வரவேயில்லை. மாலை விலகி இரவு சூழ்ந்தது. இந்நேரம் அவன் வீடு வந்திருப்பான். வரவில்லை. அவனிடம் இருந்து தகவல் வரவில்லை. அவனது அலைபேசி அடித்துக்கொண்டே யிருக்கிறது. சிறு கவலை வந்தது. பெரிதாய் இல்லை. வந்தவுடன் அவனே காரணம் சொல்வான்… என காத்திருந்தாள் லலிதா. காத்திருந்தார்கள்.

விபத்து. சாலையின் நடுவே கிடக்கிறான் மகேஸ்வரன். கிட்ட வந்து அவனைச் சுற்றிக்கொண்டு வாகனங்கள் கடக்கின்றன. விபத்து எப்போது நடந்தது, யார் எப்போது 108க்குத் தகவல் தந்தார்கள், தெரியாது. அவன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டபின் அவளுக்குத் தகவல் வந்தது. அவன் கடைசியாகப் பேசிய எண்ணுக்கு முதலில் அழைத்து, அந்த நபர் அவளுக்குத் தகவல் சொன்னார். அரசாங்க ஆஸ்பத்திரி. நேரம் இரவு பத்தரையைக் கடந்திருந்தது. ஐயோ, என்று ஓடினார்கள். நந்தினிக்கு உடம்பு பதறிக் கொண்டிருந்தது. இரு சக்கர வாகனத்தை எடுக்க தைரியம் இல்லை. ஆட்டோ பிடித்துக் கொண்டு ஜி எச் ஓடினார்கள்.

மரணம். யார் அவனை விபத்துக்கு உள்ளாக்கியது என்றே தெரியவில்லை. சிசிடிவி இல்லை அந்தப் பகுதியில். யாரை நொந்துகொள்வது? உலகம் சட்டென்று இருள்மயமாகி விட்டாப் போல இருந்தது. “உடலை அடையாளம் காட்டி வாங்கிக்கங்க. ரொம்ப தாமதமா ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு வந்தாங்க…” என்றெல்லாம் யாரோ எதோ சொன்னார்கள். அப்… என பொங்கிய நந்தினியை ஷ், என யாரோ அமர்த்தினார்கள்.

போஸ்ட்மார்ட்டம் வேறு இருந்தது. கையெழுத்து வாங்கிக் கொண்டு உடலைத் தந்தார்கள்.

“அம்மா அழாதம்மா” என்றபடி நந்தினி அழுதாள். “சரி” என்றபடி லலிதா பெண்ணின் கண்ணைத் துடைத்தாள். சட்டென்று வீடே இருள் சூழ்ந்ததாகி விட்டது. கலகலப்பான சிரிப்பால் பேச்சால் வீட்டை நிறைத்தவன் அல்ல மகேஸ்வரன்.  மௌனத்தால் அன்பால் அமைதியால் நிறைத்தவன். அவனிடம் வாழ்க்கை சார்ந்த அலுப்பு இல்லை. ஏமாற்றம் கொண்டாடவில்லை அவன். தளும்பாத அமைதி அவன். அன்பின் வழியது உயிர்நிலை, என்பார் வள்ளுவர். அவன் வழியாத உயிர்நிலையாய் இருந்தாற் போல இருந்தது. வீட்டில் அவன் கூட இருக்கும் பாவனையைத் தவிர்க்க முடியவில்லை. அப்படி பாவனைகள் வேண்டி யிருந்தன. இயல்பாக மறக்க வேண்டும். மறக்க நினைப்பது மறதியைத் தருமா?

இரவகளில் அம்மாவும் பெண்ணும் ஒன்றாகப் படுத்துக் கொண்டார்கள். ஒரு வாரத்தில் சற்று சுமுகப்பட்டு நந்தினி தனித்து தன்னறையில் படுத்துக் கொண்டாள். அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அவளுக்குத்தான் தனியே படுத்துக்கொள்ள ஒருமாதிரி இருந்தது. மகேஸ்வரன் இருந்த காலங்களில் உடல் அலுங்காமல் நிம்மதியாக அவள் அருகில் அவன் உறங்குவதை ஆச்சர்யமாய்ப் பார்த்திருக்கிறாள். இவனுக்குப் பிரச்னையே இல்லையா, என்று தோன்றும். பிறரை நம்பாமல் அமைதி யிழக்கிறார்கள் ஜனங்கள். இவன் எல்லாரையும் இயல்பாக சமமாக அணுகுகிறான். எளிமையான மனிதன். எதையும் சிக்கலாக்கிக் குழப்பிக் கொள்ளாதவன், என்று தோன்றும்.

‘அவர்கள்’ அறையை அவன் தாழ் போடுவது இல்லை. பெண் குழந்தை. அடுத்த அறையில் படித்துக் கொண்டிருப்பாள். தன்னைப்போல தண்ணீர் குடிக்கவோ வேறு சிறு தேவைகளுக்காகவோ எழுந்து நடமாடக் கூடும். அவனது அந்த நாசூக்கு லலிதாவுக்குப் பிடிக்கும். சட்டென்று மகேஸ்வரன் எழுந்து போய்விட்டாற் போல இருந்தது. சில சமயம் திகைப்பாய் இருக்கும். அழுகை வராது. இந்த அறிவாளி பாவனை, முறுக்கம் தேவை இல்லைதான் அறிவு அழுவதைத் தடுக்கிறது. இயல்பாக வாழ முடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்.

பெரிய பெரிய நாவல்கள், ஆங்கில நாவல்கள் வாசித்தாள் நந்தினி. வேலைக்குப் போவது அவளுக்கு ஓர் ஆசுவாசம் தான். ம். எனக்குமே கூட, என நினைத்துக் கொண்டாள் லலிதா. இந்த ‘வணிக’ ஆண்டின் இறுதிக் காலத்தில் அவளுக்கு அலுவலகத்தில் வேலை நெரித்தது. அது ஓரளவு நல்ல விஷயம்தான்.

நந்தினி அலுவலகம் விட்டு வந்தவுடன் போய் முகம் கை கால் கழுவிக் கொள்வாள். பிறகு சமையல் அறைக்குப் போவாள். “அம்மா உனக்குக் காபி…?” ஆச்சிடி. தன் காபிக் கோப்பையுடன் வெளியே வருவாள் நந்தினி. மெல்ல எதும் பாடுவாள். அவள் இயல்பு அது. பேசிக் கொண்டே யிருப்பாள். திடீரென பேச்சின் நடுவே மௌன இடைவெளியில் அவளிடம் இருந்து எதாவது பாடலின் இடை வரிகள் வரும். அதுவரை அந்தப் பாடல் அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்திருக்க வேண்டும்!

பாடுவது அல்லது பாடலை ரசிப்பது என்பது அலையில் கால் நனைக்கிற மாதிரியான அனுபவம் தான். பயிற்சியெல்லாம் கிடையாது. என்றாலும் நந்தினி சுமாராகப் பாடுவாள். சில சமயம் பாடிய பாடலை நிறுத்திவிட்டு, “இந்த பிஜியெம்ல ஒரு ஹம்மிங் சேர்க்க நினைச்சார் பாரு, இசையமைப்பாளர். கிரேட்!” என்பாள்.

வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. என்றாலும் பெரும்பாலும் அமைதியாகவே இருக்கும். நந்தினி செய்திகள் மாத்திரம் பார்த்துவிட்டு அணைத்து விடுவாள். அவளது ரசனைகள் வித்தியாசமானவை. நீள நீள தொங்கட்டான் அணிகிறாள். முழங்கை வரை ரவிக்கை அணிகிறாள். ‘ஆண்கள் வாட்ச்’ கட்டுகிறாள். ஆயினும் செயற்கையாய் உதட்டுச் சாயம் பூசுவது இல்லை. கண்ணுக்கு மைதீட்டி அகண்ட பாவனை தந்தது. தலையில் குதிரை வால் போல பின்மயிர் ‘எஸ்.’ அவள் நடையின் துள்ளலில் அது எகிறியது.

இப்போது அந்தப் பாடும் பழக்கம் மீண்டிருந்தது. அது சிறிது முன்பே மீண்டும் இருக்கலாம். ஆனால் மனதில் பாடல் உருள, அது உதடுவழி வெளியேறுமுன் அம்மாவை நினைத்து அடக்கிக் கொண்டும் இருக்கலாம். ஒருநாள் குளியல் அறையில் இருந்து நந்தினி மெல்லிய குரலில் பாடுவது லலிதாவுக்குக் கேட்டது. ஒரு வரியை சாதாரணமாகப் பாடி, பின் அதே வரியை புதிய சங்கதிகள் நுரைக்க அலங்காரமாய்ப் பாடிக் கொண்டிருந்தாள் நந்தினி. அம்மாவுக்கு சந்தோஷமாய் இருந்தது.

சில சமயம் வேடிக்கையாய், கிருஷ்ணா நீ பேகனே பாரோ. டென் ருப்பீஸ் ஐ வான்ட் டு பாரோ… என்றெல்லாம் கூட சுய சாகித்யம் பண்ணுவாள். அவள்அப்பா இருந்த காலத்தில், பாலகிருஷ்ண பிரசாத் பாடிய அன்னமாச்சாரியா கிருதி ஒன்று ‘நீராஞ்சனம் நீராஞ்சனம்’ என்று வரும் பாடல் ஓடிக் கொண்டிருந்தது. “அப்பா அடுத்த பாட்டு “டிரஸ் மாத்தணும் டிரஸ் மாத்தணும்னு வருமா?” என்று கேட்டது ஞாபகம் வந்தது.

மெல்லிய மழையில் நந்தினி குடையுடன் காத்திருப்பதை அம்மா பார்த்தாள். மகேஸ்வரன் இல்லாமல் லலிதா எப்பவுமே பஸ் அல்லது ஆட்டோ, ஷேர் ஆட்டோ பிடித்து அலுவலகம் போய்வந்தாள். அவன் காலத்தில் அவனே அவளை காலைப்பொழுதில் அலுவலக வாசலில் விட்டு விடுவான். வரும்போது மாத்திரம் அவள் பார்த்துக்கொள்ள வேண்டி யிருக்கும்… அம்மா பஸ்சில் இருந்து இறங்குவதை நந்தினி பார்த்துவிட்டு பஸ்சை நோக்கி வந்தாள். அம்மாவுக்கு என்று இன்னொரு குடை எடுத்து வந்திருந்தாள்.

தோளுக்குமேல் வளர்ந்த பெண்ணுடன் நடப்பது பெருமையாய் இருந்தது.

“இப்ப என்னடி படிச்சிட்டிருக்கே?” என்று அம்மா கேட்டாள். நந்தினிக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அம்மா படிப்பு ருசி உள்ளவள் அல்ல. என்றாலும் உற்சாகமாக பதில் சொன்னாள். “ஹெமிங்வே. நடைமன்னன். எழுத்துலக ரஜினி அவரு” என்றாள். “ஹேப்பினஸ் இஸ் எ மூவிங் ஃபீஸ்ட்…ன்றாரும்மா. நல்லா இருக்கில்ல?” என்று பேசிக் கொண்டே வந்தாள்.

“ஒரே வரியில் ஹெமிங்வே ஒரு கதை எழுதி யிருக்கிறாரும்மா…”

“ம்.”

“அதைத் தமிழ்ல சொன்னால்… விற்பனைக்கு, குழந்தைக் காலணிகள், இதுவரை அணியாதவை.”

அம்மா தலையாட்டி அதை ரசித்தாள்.

அடுத்த முறை அழகு நிலையம் போனபோது நந்தினியுடன் துணைக்கு அம்மாவும் போனாள். நந்தினி பொதுவாக ஃபேஷியல் செய்து கொள்வாள். கண் இமைமூடி அதில் வெள்ளரி பத்தை வைத்துக்கொண்டு முகவெள்ளையுடன் காத்திருப்பாள். அருகே இசை ஒலித்துக் கொண்டிருந்தது. முகத்தை வழுவழுப்பாக்கிக் கொண்டு எழுந்து கொண்டாள் நந்தினி. “அம்மா நீ?” என்று கேட்டாள் நந்தினி. “ஐய எனக்கு வேண்டாம்…” என்று புன்னகை செய்தாள் லலிதா. பெண் அப்படிக் கேட்பாள் என்று அம்மா எதிர்பார்க்கவில்லை. “ஐ-ப்ரோ ட்ரிம் பண்ணிக்கம்மா? பளிச்னு இருக்கும்…” என்று அவளைக் கைப்பிடித்து நாற்காலியில் உட்கார்த்தினாள் நந்தினி.

வீட்டில் வந்து நந்தினி அறியாமல் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தாள் லலிதா. ஒரு சீராக வெட்டப்பட்ட புருவம். சிறிது மஸ்காரா தீட்டி இன்னும் அழுத்தமாக்கிக் கொள்ளலாம், என்று தோன்றியது. “இந்தாம்மா…” என்று பின்னால் இருந்து சத்தம் கேட்டது. நந்தினி அம்மாவிடம் மையைத் தந்தாள். “தினசரி மஸ்காரா போட்டுக்கோ. என்னைவிட நீ அழகு…” என்று சிரித்தாள்.

சட்டென்று தொண்டைவரை ஒரு மகிழ்ச்சி வந்து முட்டியது லலிதாவுக்கு. புருவ மையை அவள் வேண்டாம், என்று மறுப்பதற்குள் நந்தினி போய்விட்டாள். அம்மாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அறைக்கதவைச் சாத்திக்கொண்டு திரும்ப ஒருமுறை கண்ணாடி பார்த்தாள் லலிதா. சிறு அளவுக்கு மேல் அலங்காரங்களை இந்நாட்களில் அவள் தவிர்த்திருந்தாள். கார்டன் சில்க் புடவைகள் நிறைய உள்ளே இருக்கிறது. அவள் அணிவதே இல்லை. ஒருமாதிரி, இஸ்திரி போட்ட பருத்திப் புடவைகளே அணிந்து கொண்டிருந்தாள்.

மறுநாள் அவள் குளித்துவிட்டு வரும்போது நந்தினி அம்மாவுக்கு கார்டன் சில்க் புடவையை எடுத்து வைத்திருந்தாள். அவள் மறுக்க மறுக்க அதையே கட்டச் சொன்னாள். பிறகு “நீ என் அம்மா மாதிரியே இல்லடி. என் அக்கா…” என்று கன்னத்தைக் கிள்ளினாள். பெண் இக்காலங்களில் சிரிக்க ஆரம்பித்திருந்தாள் என அம்மா கவனிக்க, நந்தினியோ அம்மாவைச் சிரிக்க வைக்கிற முயற்சிகளில் இறங்கினாள்.

அலுவலகத்தில் முதலில் அவள் முகப் பொலிவையும், பிறகு அவள் சந்தோஷத்தையும் எல்லாரும் பார்த்தார்கள். “லல்லூ? தலைக்கு ‘டை’ அடிச்சியா?” என்று கேட்டாள் அடுத்த சீட் ருக்மணி. லலிதாவுக்கு வெட்கமாய் இருந்தது. “என் பொண்ணுதான்…” என்று தயக்கமாய்ச் சொன்னாள். “இருக்கட்டும். இருக்கட்டும்…” என்று அவள் தோளைத் தட்டினாள் ருக்மணி.

அம்மாவுக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும். அப்பா சொல்லி யிருக்கிறார். வார இறுதி நாட்களில் அவர்கள் எதாவது ஐஸ்கிரீம் பார்லருக்குப் போய் சாப்பிட்டுவிட்டு வந்தார்கள். இளைஞர்களின் விசேஷமே அதுதான். எத்தனை கடினமான துக்கங்களிலும் நெருக்கடிகளிலும் இருந்து அவர்களால் கடந்து தாண்டி வர முடிகிறது, என நினைத்துக் கொண்டாள் லலிதா. ஐயோ, இவள் இல்லையென்றால்… நான் திகைத்துப் போயிருப்பேன், என்று இருந்தது.

நந்தினியிடம் சில மாறுதல்கள் தெரிந்தன.

அவளுக்கு இப்போதெல்லாம் வீட்டுக்கே அலைபேசி அழைப்பு வருகிறது. பொதுவாக அவளுக்கு வீட்டில் இருக்கும்போது அழைக்கிற ஆட்கள் கிடையாது. ஆனால் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே அவள் கவனம் வேறெங்கோ படபடப்பதை அம்மா கவனித்தாள். புன்னகை செய்து கொண்டாள் லலிதா.

நந்தினி அலுவலகம் கிளம்புமுன் ஒரு கணம் நின்று கண்ணாடி பார்த்து முடியைச் சரிசெய்து கொள்கிறாள். அவள் முகம் சற்று பூரித்து கனவு பொங்கிக் கிடந்தது. அவள் உள்ளே வண்ணங்கள் கலந்து குழைந்து கிடந்தது. ஆத்மாவின் உள்கவனம் அது. புலன்கள் சுதாரித்த நிலை. நரம்புகள் முறுக்கி தயாரான வீணை போல இருந்தாள்.

வேடிக்கையாய் இருந்தது. இந்த வாழ்க்கைதான் எத்தனை சுவாரஸ்யமான மாற்றங்களைத் தர வல்லதாய் இருக்கிறது. சோகத்தில் துக்கத்தில் உள் பதுங்கிய கடல். அந்தக் காலம் தாண்டி இப்போது அடுத்த கட்டமா இது? ஒரு துளிரின் மென் நிறங்கள் எத்தனை வசிகரமாய் இருக்கின்றன. வாழ்வின் ஒரு நிலை கடந்து கனவுகளின் அடுத்த நிலைக்கு மனம் தயாராகிற பருவ அடையாளங்கள் அல்லவா அவை.

அன்றைக்கு இரவு லலிதாவுக்கு இன்னொரு வியப்பு காத்திருந்தது. யாரோ ஒரு பையனுடன் நந்தினி அவர்கள் வீட்டு வாசலில் வந்து இறங்கினாள். சற்று தயங்கி வெட்கத்துடன் நந்தினி வீட்டைப் பார்த்தாள். அப்போது அம்மா கொடியில் காய்ந்த துணிகளை எடுத்துப் போக வந்திருந்தவள், மொட்டைமாடியில் இருந்தபடி அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தது இருவருக்குமே தெரியாது. லலிதாவுக்குச் சிரிப்பு வந்தது. பொதுவாக நந்தினி வீடு திரும்பும்வரை வாசல்பக்க விளக்கைப் போட்டே வைத்திருப்பாள் அம்மா. அதனால் அவள் முகமும் அந்த வெட்கமும், உள் கிளர்ச்சியும் அம்மாவால் பார்க்க முடிந்தது. அவன்… யார் அவன்? அவனது முக உணர்வு மேகங்களை அவளால் கண்டுகொள்ள முடியவில்லை.

மொட்டு விரிய இன்னும் வாசனை கிளராமல் இருக்கலாம் என்று தோன்றியது. அவளது அருகாமை அவனுக்கும் ஒரு தனி தவிப்பை தத்தளிப்பை கிளர்ச்சியைத் தந்திருந்தது. காதல் என்பதே என்ன?... தானே அறியாமல் ஓர் உடல் மற்றதை நோக்கிக் கனவுடன் கனிவுடன் சரணடைவது தானோ என்னவோ?

காதல் என்பது தன்னைப் போல ஒருவரை மற்றவர் முன் கொண்டு நிறுத்தி திகைக்கடிக்கிறது. அந்தத் தூண்டுதலைத்தான் ரசாயன மாற்றம் என்கிறார்கள். வண்டியில் சற்று விரைத்தாற் போலவே உட்கார்ந்திருந்தாள் நந்தினி. அவன் உடல்மேல் உரசாத ஜாக்கிரதை உணர்வு அது. அவனும் அப்படியோர் ஸ்பரிசம் தவிர்த்த கவனத்துடன், அதாவது ஸ்பரிச கவனத்துடன் இருந்தான்.

ஓர் ஆண்மகனாக சற்று முன்கையை நீட்டினாற் போல, உன்னை இன்னிக்கு நான் உன் வீட்டில் இறக்கி விட்டு விடவா, என்று கேட்டிருக்கலாம். அவள் சட்டென மறுக்க இயலாதவளாகவும், இதை எதிர்பார்த்து ஆனால் எதிர்பாராத பாவனையுடன் அதை ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்று நினைத்தாள் லலிதா. இப்படியெல்லாம் அவள் யோசனை செய்வதே அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

அன்றும் காலையில் சிறிய தூறல் இருந்தது. மழை பெரிதாகலாம் போலத்தான் இருந்தது. நந்தினி தன் வண்டியை எடுக்கவில்லை. ஒருவேளை வேண்டுமென்றே அவள் தவிர்த்தும் இருக்கலாம்! மனசின் கணக்குகள் வேறு தானே? நமக்கே பல சமயங்களில் அதன் அர்த்தம் தெரியாமல் போகிறது. எது எப்படியோ பெரும்பாலான காதல் சந்தர்ப்பங்களை உருவாக்கி ஒத்தாசை செய்யத்தான் செய்கிறது.

தன்னிடம் உள்ள சாவியால் நந்தினி கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்திருந்தாள். அவள் உள்ளறையில் நைட்டிக்கு மாறிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. “வந்தாச்சா நந்தூ?” என்றபடி மாடியிறங்கி வந்தாள் அம்மா. நந்தினி வெளியே வந்தாள். “மாடில இருந்தாயா அம்மா?” என்று கேட்டாள் நந்தினி. அம்மாவின் முகத்தைப் பார்த்து, இவள் வேறொரு ஆணுடன் வந்தது பற்றி அம்மா அறிந்து கொண்டாளா தெரியவில்லை. அம்மா தன்யோசனையாய் இருந்ததாக நந்தினி உணர்ந்தாள்.

பாஸ்கர் நினைவு வந்துவிட்டது லலிதாவுக்கு. கல்லூரி நினைவுகள். பாஸ்கரின் பார்வை ஒரு கலங்கரை விளக்கம் போல தன்மீது ஒரு ஒளிக்குவிப்பு செய்வதை லலிதா உணர்ந்தே வந்திருந்தாள். அவளுக்கு இதுபற்றி யோசிக்கவே பயமாய் இருந்தது. பாஸ்கர் நல்ல பையன்தான். சட்டென்ற நேர்ப்பார்வைக்கு படபடப்புடன்  தலையைத் தாழ்த்திக் கொள்கிறான்.

லலிதா, அவளும் கலகலப்பான பெண்தான். என்றாலும் இந்த அந்தரங்கப் பார்வை ஊடுருவல் வெலவெலக்க வைத்து விடுகிறது. என்ன இப்படிப் பார்க்கிறான் இவன். கூச்சமும் அச்சமுமாக இருந்தது. யாரிடமும் இதைச் சொல்லவும் முடியாது. தோழிகள் கிண்டல் நச்செடுத்து விடுவார்கள். அப்பா அம்மாவிடம்? வேறு வினையே வேண்டாம். அது தவிர, இவள் பாட்டுக்கு எதையாவது சொல்லி, கடைசியில் அவன் அப்படியெல்லாம் இல்லை, என்று ஜகா வாங்கி விட்டால்? அதைவிட மானக்கேடு என்ன இருக்கிறது.

“ராத்திரிக்கு என்னம்மா?”

“தோசை மாவு இருக்குடி.”

“நான் வார்க்கட்டுமா?”

“இப்பவேவா. பசிக்கறதா?” என்றாள் லலிதா.

“இல்ல. இல்ல. அரைமணி ஆகட்டும்…” என்று நந்தினி டிவியில் செய்திகள் போட்டாள். என்றாலும் அம்மாவின் முகத்தில் யோசனைமூட்டம் இருந்ததை அவள் அறிந்து கொண்டாள்.

கல்லூரியில் அவன், பாஸ்கரின் வகுப்பு, வேறு. பாடமும் வேறு. ஒல்லியாய் உயரமாய் இருப்பான். சட்டையை இன் பண்ணி விட்டிருப்பது அவனை இன்னும் உயரமாய்க் காட்டும். அவர்கள் குடியிருக்கும் தெருவில் இருந்தான். சில நாட்களில் அவள் தெருவில் கடந்து போகும்போது, அவன் மேல்சட்டை யில்லாமல் இருந்தால் சட்டென்று உள்ளேபோய்ச் சட்டையை மாட்டிக்கொள்வான். இவளும் எதோ தப்பு செய்துவிட்டாப்போல தலையைக் குனிந்தபடி அவனைப் பார்க்காதது போல் தாண்டிப் போவாள். தாண்டிப் போகுமுன் கால்கள் பின்னிக் கொள்ளும். இப்போது அதையெல்லாம் நினைக்க சிரிப்பு வந்தது.

இந்தக் காதல்… வராத ஆள் உண்டோ… என நினைத்தபடியே துணிகளை மடிக்க ஆரம்பித்தாள் லலிதா. நல்ல சிவப்பு பாஸ்கர். விசிலில் முழு பாடலும் அவன் பாடுவான். கிளி போல, காகம் போல… என சில குரல்களை ‘மிமிக்’ செய்வான். அவனைத் தாண்டிப் போகும்போதெல்லாம் அவன் குரலையோ, அவன்பக்க ஒலிகளையோ கவனித்து அவள் காதுகள் கூர்ந்தன என உணர்ந்தாள். இந்த அதித கவனம் தேவையா என்ன? ஆனால் அப்படித்தான் நடந்தது.

ஒருநாள் மொட்டைமாடியில் தனியே இருந்தபோது அவள், யாருமில்லை பக்கத்தில் எனப் பார்த்துக் கொண்டு விசில் அடித்துப் பார்க்க முயன்றது கூட நினைவு இருக்கிறது. அப்பா! பயமும் வெட்கமும் ஆளையே திகைக்க அடித்தன. எதும் நடந்து விடுமோ என்ற பயமும் எதிர்பார்ப்புமாகவே கழிந்தன நாட்கள்.

காதல் என்பது ரகசியக் கொந்தளிப்பாகவே உள்ளே வளர்கிறது… என்று லலிதா நினைத்துக் கொண்டாள். அந்த வயதில் குழப்பங்களும் சந்தோஷங்களும்… அவன் தன்னைப் பார்க்கிறானா, கவனிக்கிறானா, தன்னோடு எதுவும் பேச முயற்சிப்பானா… என ஆண்களைச் சுற்றி ஒரு சிலந்தி வலை போல நினைவுகள் தன்னைப்போல படர்கின்றன. ஆண்களுக்கு எப்படி இருக்கும் தெரியவில்லை.

பாஸ்கர் கடைசிவரை அவளிடம் தன் காதலைச் சொல்லவே இல்லை. அவளுக்கானால் தானாகக் கேட்க பயமாய் இருந்தது. ஒருவேளை மறுத்துவிட்டால்?... என்ற பயம். ஆ. அவனுக்கும் அப்படி ஒரு பயம் இருக்கலாம். பிற்காலங்களில், அதாவது இப்போது கல்யாணம் முடிந்த நிலையிலும் அந்த ஆண் பெண் ஈர்ப்பும் அந்தரங்கத்தை ஊடுருவும் பார்வைகளும், எந்த வயதிலும் ஆணிடம் இருந்து பெண்ணுக்கும், பெண்ணிடம் இருந்து ஆணுக்கும் நிகழவில்லையா என்ன? நிகழத்தான் செய்கின்றன.

அவர்களில் சிலர் தைரியமாகத் தங்கள் காதலைப் பரிமாற வல்லவர்களாய் இருக்கிறார்கள். எது எவ்வாறாயினும் ஒரு பொது அம்சத்தில், பெண்ணானவள் ஆண்தான் முதலில் தன் காதலைச் சொல்ல வேண்டும், வெளிப்படுத்த வேண்டும், என எதிர்பார்ப்பதாக இருக்கிறது… ஆமாம். பொதுக் கணக்கு இது.

நந்தினிக்கும் அந்தப் பையனுக்குமான நெருக்கம் பற்றித் தெரியவில்லை. அரும்பு திறக்க வாசனை முட்டிமோதி உள்ளுக்குள் தவிக்கும் பருவம் இது. இருவரில் யார் எப்போது எப்படி தன் காதலை வெளிப்படுத்துவார்கள்… என்பதே அவரவர் வாழ்வின் சுவாரஸ்யம் தான்.

எனினும் காதல் இல்லாத வாழ்க்கை உப்பு சப்பற்றது, என நினைத்தபோது புன்னகை வந்தது. நந்தினி அவளாக விவரம் சொல்லட்டும். அவளது அந்தரங்கம் ஒளிப்பட்ட காலம் இது. அம்மா காத்திருப்பாள். துணிகளை மடித்து முடித்து எழுந்துகொண்டாள் லலிதா. “நந்தூ? தோசை வாக்கலாமா?” என்று டிவி ஒலியை மீறி லலிதா குரல் கொடுத்தாள்.

•••

   

Comments

Popular posts from this blog