Posts

Showing posts from August, 2015

WINNER OF NOBEL PRIZE FOR LITERATURE 1998

Image
(போர்த்துக்கீசிய நாவல்) பார்வை தொலைத்தவர்கள் யோசே சரமாகோ தமிழில் எஸ். சங்கரநாராயணன் நாவலின் ஒரு பகுதி பொ ழுது விடிந்தது. சின்ன ஊதுபத்தி நீட்டல்கள் போல அந்தக் கரிப்பாடுகளில் இருந்து புகை. அதுவும் ரொம்ப நீடிக்கவில்லை. மழை வந்துவிட்டது இப்போது. தூறல் தூவல்கள். பனிச் சிதறல்தான். ஆனால் தொடர்ந்து பெய்தது. சாரல் மழை. முதலில் அதனால் பூமியைக் கூட நனைக்க முடியவில்லை. அது பூமியை எட்டுமுன்பே ஆவியாய் மேலே கிளம்பியவாறிருந்தது. ஆனால் மழை தொடர்ந்தது. எல்லாருக்கும் தெரியும். மென்மையான நீரேயானாலும் கடினமான கல்லையே கரைக்க வல்லது அது. வேறு யாராவது இதை எதுகை மோனையாய்க் கவிதை எடுத்து விடலாம்.* (*ஆணைக் கரைக்கும் பெண்ணின் கண்ணீர் போல - எஸ். ச.)      அந்த அகதிகளின் கண் மாத்திரம் குருடாகி விடவில்லை. அவர்கள் நினைவே ஒருமாதிரி கலங்கலாய்த் தான் காணுகிறது. அட சனி கிரகமே இந்த மழையில் சாப்பாடு எப்படி வரும்?... என அவர்கள் அங்கலாய்த்து அரற்றினார்கள். நீங்களா என்னமாச்சிம் குண்டமண்டக்க யோசிச்சி மண்டைய உடைச்சிக்க வேணாம், என அவர்களை யார் சமாதானப் படுத்துவது? அட காலை உணவுக்கு இன்னும் நாழியே ஆகல்லியே,
Image
short story நன்றி அந்திமழை மாத இதழ் ஆகஸ்ட் 2015 • இருள்வட்டம் • எஸ். சங்கரநாராயணன் சி த்தப்பா எங்களுடன் இல்லை. பஜனைமடத்துக்கு அருகே தனியாய் நெல் அடுக்க என்று ஒரு கிட்டங்கி இருந்தது எங்களுக்கு. சித்தப்பா அங்கே தங்கிக்கொண்டார். என் சின்ன வயசில் இருந்தே அப்படித்தான். சாப்பிடக் கூட அவர் இங்கே, எங்கள் வீட்டுக்கு வருவது கிடையாது. அப்பாதான் சித்தப்பாவுக்கு சாப்பாடு எடுத்துப் போவார். “ஏம்ப்பா, நான் வேணா எடுத்திட்டுப் போறேனே…“ என்றால் அப்பா மறுத்து விடுவார். நாங்கள் சித்தப்பாவுக்குச் சாப்பாடு எடுத்துப் போவது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை…. என்று பிறகு எனக்குத் தெரிந்தது. சித்தப்பா குடும்பப் பொறுப்பு என்று எதுவும் இல்லாமல் இஷ்டப்படி சுதந்திரமாக இருந்தார். அவருக்கு அது பிடித்திருந்தது. அவர் சுபாவம் அது, என நினைத்துக் கொண்டேன். அம்மாவுக்கு அது பிடிக்கவில்லை போல. நாங்களும் அப்படி எதிலும் காலூனாமல் ‘திரிய‘ ஆசைப்பட்டு விடுவோமோ என்று அம்மா ஒருவேளை பயந்தாளோ என்னவோ. அம்மாவிடம் நிறைய ரகசியங்கள் இருக்கிறதாகவே நம்புகிறேன். எதையும் சட்டென வெளிப்படையாக அம்மா பேசி நான் பார்த்ததே இல்லை.