Thursday, December 24, 2015

(1998ன் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற நாவல்) cover illustration JEEVA

(1998ன் இலக்கியத்திற்கான 
நோபல் பரிசு பெற்ற நாவல்)

பார்வை 

தொலைத்தவர்கள்

யோசே சரமாகோ
தமிழில் எஸ். சங்கரநாராயணன்
•••
நாவலின் பகுதி
•••
அதிகாலை மணி மூணுக்கு மேல் இருக்கும். முட்டியால் தாங்கி சிரமப்பட்டு திருடன் எழுந்து உட்கார்ந்தான்.
      அவன் காலில் உணர்ச்சியே இல்லை. ஆனால் அந்த வலி மாத்திரம் இருந்தது. மற்றபடி அந்தக் கால், அது அவனுடையதே அல்ல. கால் முட்டி விரைத்திருந்தது. தனது நல்லநிலையில் இருக்கிற மற்ற கால் பக்கமாக உடம்பைத் திருப்பிக்கொண்டான். அதைக் கட்டிலில் இருந்து தொங்கப் போட்டிருந்தான். இப்போது தன் ரெண்டு கையாலும் காயம் பட்ட காலைப் பற்றி அதை முன் கால் வாட்டத்துக்கு நகர்த்த முற்பட்டான்.
      சுரீர் என்று ஓநாய்கள் ஒன்றாய்ப் பாய்ந்தாப் போல அவனுள் வலி ஆளையே புரட்டியெடுத்து விட்டது. காயத்தின் கிண்ணத்தில் இருந்து பொங்கி எழுந்துவந்த அலையாய் வலி.
      கைகளை ஊன்றியபடி உடம்பை மெல்ல படுக்கையில் நகர்த்தி வார்டின் நடு நடைபாதைப் பக்கமாய் நகர முயன்றான். கட்டிலின் கால்பக்க இரும்புத் தண்டை அடைந்தான். ஹா என ஆஸ்த்மா கண்டாப்போல கடுமையான மூச்சிறைப்பு. கழுத்தில் நிற்காமல் தலையே கிறுகிறுத்தது. அதை அப்படியே நிமிர்த்திவைக்க அவன் போராடினான். சில நிமிடங்களில் மூச்சு சீர்ப்பட்டது. மெல்ல அப்படியே எழுந்துநிற்க ஓரளவு முடிந்தது. நல்ல காலில் அத்தனை பாரத்தையும் அழுத்தி நின்றான். மத்த காலால் பிரயோசனம் எதுவும் இல்லை என்று தெரிந்திருந்தது. எங்காவது போனால் நல்ல காலால் நகர்ந்து இந்த சொத்தைக்காலை இழுத்துக்கொண்டே கூட்டிச்செல்ல வேண்டும்.
      திடீரென நினைவுகள் மயங்கின. பாதாதி கேசம் ஒரு நடுக்கம் பரவியது. அந்தக் குளிரும் காய்ச்சலுமாய் பற்கள் கிட்டித்து தடதடவென்று தந்தி வாசித்தன. கட்டில்களின் இரும்புக் கிராதிகளைப் பிடித்துக் கொண்டபடியே, ஒரு சங்கிலியைப் பற்றியபடி போகிறாப்போல தூங்கிக் கொண்டிருக்கிறவர்களைக் கடந்து நடந்தான். சாக்குப்பை போல அந்த காயம்பட்ட காலை இழுத்தபடி போனான். யாரும் அவனை கவனிக்கவில்லை. எங்க போறீங்க, அதும் இந்த ரெண்டுங் கெட்டான் நேரத்தில், என்று கேட்கவும் இல்லை. அப்படி யாரும் கேட்டால் பதில் தயாராய் வைத்திருந்தான். ஒண்ணுக்கடிக்க.
      டாக்டரின் மனைவி அவனைப் பார்த்துக் கேள்வி கேட்பதை அவன் தவிர்க்க விரும்பினான். அவளை ஏமாற்றவோ, அவளிடம் பொய் பேசவோ அவனால் முடியாது. அவன் மனசில் என்ன இருந்ததோ அதை அவளிடம் பேசிவிடுவான். ஐய இந்தப் பாழில் இப்படியே உழன்று கிடக்க என்னால் ஆகாது. உங்க கணவர் எனக்கு எவ்வளவு உதவ முடியுமோ செய்துவிட்டார். இன்னாலும் ஒரு காரைக் களவாட வேண்டியிருந்ததுன்னால், இன்னொருத்தரிடம் போய், எனக்காக ஒரு காரைக் களவாடி வாருங்கள்னு நான் எப்பிடிக் கேட்க முடியும்? நானேதான் என்னுடைய அந்த வேலையைச் செய்ய முடியும். அதைப் போலத்தான் இதுவும், என் வலி, என் உடல்நோவு, அதை நானே பார்த்துக் கொள்ளுவேன். நானே வாசல் வரை போய் சிப்பாயிடம் பேசுவேன். என்னை அவர்கள் பார்த்துவிட்டு, என் மோசமான நிலைமையை உணர்ந்து, ஆம்புலன்ஸை வரவழைத்து என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போவார்கள்.
      பார்வையற்றவர்களுக்காக என்று தனியே ஆஸ்பத்திரி வேண்டும். கூட ஒரு ஆஸ்பத்திரி, அவ்வளவுதானே? நான் ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டால் இந்தப் புண்ணை சரியாகக் கையாள்வார்கள். என்னை சொஸ்தப்படுத்துவார்கள். நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தூக்கு தண்டனைக் கைதிகளைக் கூட, உடம்பு சரியில்லை என்றால் அதை முதலில் குணப்படுத்தவே முயற்சி மேற்கொள்வார்கள். குடல்வால் புண் அவனுக்கு என்றால் குடல்வாலை ஆபரேஷன் மூலம் அப்புறப்படுத்திவிட்டு, பிறகே தூக்கில் போடுவார்கள். அவன் ஆரோக்கியமாகச் சாக வேண்டும் என்பது நியதி. என்னைப் பொறுத்தமட்டில், என்னை முதலில் குணப்படுத்திய பின், அவர்கள் விரும்பினால், என்னைத் திரும்ப இங்கியே கொண்டுவந்து விட்டாலும் சரி. அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை.
      தொடர்ந்து நடந்தான். பல்லை இறுகக் கடித்து வலியை வெளியே சத்தம்வராமல் பொறுத்துக் கொண்டான். கட்டில்களின் வரிசை வரை கையால் பற்றியபடியே வர முடிந்தது. அதன் எல்லை முடிந்ததும் சட்டென நிலைகுலைந்ததில் தானறியாமல் ஓர் அலறல் வெடித்தது. கட்டில்களை எண்ணியதில் என்னவோ பிசகு. இன்னொரு கட்டில் இருக்கிறதாக எண்ணி நகர்ந்து கைநீட்ட திடுக்கென லாத்தி விட்டது. தரையில் அசையாமல் கிடந்தபடி கவனித்தான். இந்த கலாட்டாவில் யாரும் விழித்துக்கொள்ளவில்லை என உறுதி செய்து கொண்டான்.
      அட ஒரு குருடனுக்கு நகர்ந்து போக வேண்டுமானால் இந்தக் கிடக்கை தான் சரியானது. தவழ்ந்தவாக்கில் நகர்தல் அதிக சுலபமாகவே இருக்கும். வெளி முற்றம் வரை தன்னை நகர்த்திக்கொண்டே உடம்பை இழுத்து வந்திருந்தான். ஒரு நிமஷம் நிறுத்தி இனி எப்படிப் போவது, என தனக்குள் யோசித்தான். ரேழிக் கதவருகில் இருந்தே யாரையாவது கூப்பிடுவதா, அல்லது காம்பவுண்ட் வாயில் வரை போய்விடுவதா?
      கடைசிவரை வெளியே போக கைத்தண்டவாளம் போல வடக் கயிறுகள் இருக்கின்றன. நான் அங்கேயிருந்து உதவி என்று கோரினால், உடனே அவர்கள் அவனைத் திரும்பிப் போகும்படிதான் ஆணையிடுவார்கள்... அது தெரியும் அவனுக்கு. இரும்புக் கிராதிகளின் இறுக்கமான பிடிபோல அல்லாமல், இப்படித் தொய்ந்து ஆடும் கயிற்றைப் பிடித்தபடி நகர்வது சௌகர்யமாக இல்லை. அத்தனை தைரியமாக இதைப் பற்றிக்கொண்டு நகர முடியவில்லை. தயங்கினான்.
      சில நிமிட யோசனைக்குப் பின், ஆ ஒரு யோசனை!
      கயிறை ஒட்டியே நாம தவழலாம். அப்பப்ப கையை உயர்த்தி கயிறைத் தொட்டு புரண்ட ஜோரில் பாதைக்கோடு விலகாமல் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளவேண்டும். இதுவும் கார்த் திருட்டு போலத்தான். வழிகளையும் உபாயங்களையும் அவ்வப்போது நாமளே கண்டுபிடிச்சி காரியம்ஆற்ற வேண்டும். திடுதிப்பென்று அவன் மனசாட்சி விழித்தாப் போல ஒரு உள் குறுகுறுப்பு... ஒரு பாவப்பட்ட குருடன் கிட்டேயிருந்து, நான், காரை ‘திருடி’ விட்டேன்...
      டே இப்ப என் இந்த நிலைமை... அவன் காரை நான் திருடியதற்கா? இல்லை, அவனுடன் வீடு வரை நான் கூடப் போனேனே, அதனால் தான். அட தப்பு எங்கேயடா? காரைத் திருடியதில் இல்லை. அவன் கூடப்போனேனே அதுதான் தப்பு. பெரிய தர்ம பரிபாலன வாத விவாதம் எல்லாம் அவனிடம் அப்போது கிடையாது. அவன் யோசனை வெகு எளிமையானது. துல்லியமானது. குருடனாகப்பட்டவன் புனித ஆத்மா. குருடனிடம் நீ திருட்டு வேலை வெச்சிக்கக் கூடாது. ஸ்பஷ்டமாகச் சொன்னால், நான் அவனைக் கொள்ளை யடிக்கவில்லை. அவன் என்ன சட்டைப்பைக்குள் காரை வைத்துப்போய், அதை நான் துப்பாக்கி காட்டி மிரட்டிப் பறித்தேனா என்ன?... என்றெல்லாம் தனக்குத் தானே சாதகமான வாதங்களை உள்ளுக்குள் புரட்டிக் கொண்டிருந்தான். வெட்டி வாதங்களை நிறுத்து அப்பா. வேலையைப் பார்.
      வைகறையின் குளிர்ந்த காற்று முகத்தை வருடியது. அந்த வெளிக்காற்றே மூச்சுவிட அத்தனை சுகமாய் இருந்தது அவனுக்கு. இப்ப கால் வலி கூட அவ்வளவுக்கு இல்லை. இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. அவனுக்கே ஒன்றிரண்டு முறை இப்படி ஆகியிருக்கிறது. கதவுக்கு வெளியே இப்போது வந்திருந்தான். இனி படிகளை எட்டிவிடலாம்.
      ஆனால் படிகளில் தவழ்வது, தலையை முன்சரித்து நகர்வது தான் ஆக அவலட்சணமான காரியம். ஒரு கையை உயர்த்தி வடக்கயிறைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். நகர்வதைத் தொடர்ந்தான். ஒரு படியில் இருந்து கீழ்ப் படிக்குப் போவதே, அவன் எதிர்பார்த்ததுதான், திண்டாடியது. அந்த உதவாக்கரைக் கால், அதனாலேயே இத்தனை பாடும். அது இழவு கூடவருவதையே உணர அவனால் முடியவில்லையே. நடுப்படியில் ஒரு கை வழுகி உடம்பே ஒருவாட்டாய்ச் சரிந்தது. காலெனும் முண்டின் கனம் அவனை இழுத்துத் தள்ளிப்போனது. காலை யாரோ ரம்பத்தால் அறுப்பது போல் அபார வலி உள்ளே மின்னிப் பொங்கியது. அறுத்து குடைந்து ஆணியடித்தாப் போன்ற வலிப் பிரளயம். ஆனால் அவன் கத்தவேயில்லை, அது எப்படி என்று அவனுக்கே தெரியாது. அப்படியே பல யுகமான நிமிடங்கள் எதுவும் செய்ய முடியாதது போல் குப்புறக் கிடந்தான்.
      குப்பென்று கிளம்பிய காற்று அவனை நடுக்கியது. ஒரு சட்டை, டிரௌசர் மாத்திரமே அணிந்திருந்தான். காயம் தரையில் அழுந்திக்கொண்டிருந்தது. ஐயோ இன்ஃபெக்ஷன் இன்னும் அதிகமாகப் போகிறது. என்ன மடத்தனமாய் நான் யோசிக்கிறேன். இத்தனை தூரம் இந்தக் காலைத் தரையோடு தேய்த்து வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் இந்த அழுக்குசேர்கிற கவலை இல்லை. அந்த யோசனையே இல்லை.
      அதைப்பற்றி ஒன்றும் இல்லை. இது சீழ் பிடிக்கு முன்னால் அவர்கள் எனக்கு சிகிச்சை ஆரம்பித்து விடுவார்கள்... என மனதை அடக்க முயன்றான். பக்கவாட்டில் இப்போது கயிறை எளிதாக எட்ட முயன்றான். எங்கே கயிறு? அட கயிறுக்குத் தலைகீழாய் குப்புற நீ விழுந்திருக்கிறாய்.
      ஆனால் உள்ளுணர்வு திரும்ப அவனை நிதானப்படுத்தியது. மிகுந்த கவனத்துடன் மெல்ல மெல்ல உட்காரும் நிலையில் உடலை மாற்றிக்கொண்டான். அவன் இடுப்பு முதல்படியை, இறங்குவரிசையில் கடைசிப்படி, உணர்ந்தது இப்போது. ஆ வெற்றி! உயர்த்திய முஷ்டியின் சொரசெரப்புடன் அவன் ஒரு யோசனை செய்தான். நகர்வதில் புதிய எளிய வழி இது. நொண்டிகளை அங்கஹீன குஷ்டரோகிகளைப் பார்த்திருக்கிறான். உதவாக்கரைக் கால் தரையில் இழுபட வேண்டாம். வாயிலுக்கு முதுகு காட்டி அப்படியே கையால் ஊன்றி ஊன்றி இடுப்பை ஊஞ்சலாய் நகர்த்தி பின்நகர்வது எளிதோ எளிது.
      சின்னச் சின்ன அலைவுகளில் மெல்ல முதுகு காட்டி வாயிலை நோக்கி நகர்ந்தான். காலைத் தள்ளுவது அல்ல, இழுப்பது இன்னும் எளிதாய் இருந்தது. காலுக்கும் அலுப்பு குறைவு. வாயில் வரை போடப்பட்டிருந்த சாய்தளம் அவனுக்கு ரொம்ப உதவிகரமாக இருந்தது. அந்தக் கயிறு, அதை எட்டிப் பிடிப்பதில் இப்போது கணக்கு பிசகாது. தவிரவும் அந்தக் கயிறு அப்போது லேசாய்த் தலையில் உரசவும் செய்தது. காம்பவுண்டு வாயிலை இதோ எட்டிவிட்டோம், என்றே அவனுக்கு இருந்தது.
      சாதாரண நடையில் ஒன்று இரண்டு தப்படிகள். பின்பக்கமாய் இப்படிப் போவது என்பது வேறு. இது கை கையாய் அல்லது அங்குலக் கணக்கில் நகர்ச்சி. தனக்குக் கண் இல்லை என்பதையே மறந்துபோய் திரும்பி, இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என பார்க்க முற்பட்டான். ஆனால் அவன் கண்ணில், அப்பியிருந்தது வெண்படலம், காட்சி எதுவும் இல்லை.
      இது ராத்திரியா, விடிந்து விட்டதா என்று தெரியவில்லை. வெளிச்சம் வந்திருந்தால் அவர்கள் இந்நேரம் என்னைக் கண்டுகொண்டிருப்பார்கள். அத்தோடு இன்றைக்கு இரவுஉணவு மாத்திரம் தான், எப்பவோ வழங்கியிருக்கிறார்கள், அது எப்பவோ எத்தனையோ மணிகள் முன்னால். அதை நினைத்துப் பார்ப்பதே, ஃப்ளாஷ்பேக் தான். தனது துல்லியமான வேகமான நடவடிக்கைகளிலும் சூட்சுமத்திலும், அவனே தன்னை வியந்துகொண்டான்.
      எத்தனை தெளிவாக அலசி ஆராய்கிறேன். தனக்குள்ளே புதிய வெளிச்சம். நானே இப்போது புது மனிதன். இந்தக் கால் அது என் உடம்பின் முக்காலேமாகாணி என்று முக்கியத்துவம் அற்றுப் போனதில், செயலாற்ற இற்றுப் போனதில் அறிவு பார் என்னமாய் சுதாரித்து விட்டது. தன் வாழ்நாளிலேயே அடைந்திராத இத்தனை கூர்மை, இந்த விபத்து இன்றி வாய்ப்பே இல்லை!
      பின்பக்கமாய் இரும்பு வாயிலை நெருங்கியிருந்தான். பின்புறம் இப்போது இரும்பை இடித்த ஜில் தட்டியது. ஆ எட்டி விட்டேன்.

*
வாயில் காவலனுக்கு என தனி காபின் இருந்தது. கொட்டும் பனிக்கு உள்ளொடுங்கி சுருண்டு அதற்குள் உட்கார்ந் திருந்தான் சிப்பாய். தெளிவற்ற சரசரப்புகளை அவன் கேட்டான். என்ன சத்தம் தெரியவில்லை. ஆனால் இருந்த தூக்கக் கலக்கத்தில் அந்த ஒலிகள் உள்ளேயிருந்து என அவன் அனுமானிக்கவே இல்லை. சிறு காற்று மரத்தை உசுப்பி இரும்புக் கதவோடு உரசியிருக்கலாம்.
      இன்னொரு சத்தம். எதோ இரும்போடு மோதுகிறாப் போல... காற்றுரசல் அல்ல.
      உடலெங்கும் ஓடிய நடுக்கத்துடன் காபினைவிட்டு, தானியங்கி ரைஃபிளை தன்னியல்பாய் முடுக்கியிருந்தான்... உள் வராந்தா கதவை உன்னித்தான். கண்ணில் எதுவும் தட்டுப்படவில்லை. ஆனால் சத்தம் இப்போது இன்னும் ஓங்கி ஒலித்தது. யாரோ சொரசொரப்பான பகுதியைச் சுரண்டுகிறார்களா?
      வெளி வாயில் கதவின் அடி இரும்பு, என்று உடனே பட்டது. சற்று தள்ளி கூடாரத்தில் சார்ஜென்ட் உறங்கிக் கொண்டிருக்கிறான். எழுப்பி விஷயம் சொல்லலாமா. ஆனால் உப்பு பெறாத விஷயத்துக்கு தப்பா அவனை எழுப்பினால் பளார்னு விழும் கன்னத்தில். இருந்த மன அழுத்தத்தில் சார்ஜென்ட்கள் தானறியாத அசதியில் தூங்குவார்கள். அதைக் கலைப்பது, சரியான காரணத்துக்கு எழுப்பினாலும் கூட, அவர்களுக்கு மகா எரிச்சலைத் தந்துவிடும்.
      வராந்தா வாயிலைப் பார்த்தபடி கூர்த்த விரைப்புடன் காத்திருந்தான்.

      மெல்ல, இரு செங்குத்துப் பாங்கான இரும்புச் சட்டங்களின் ஊடே, பிசாசு போல, ஒரு வெள்ளை முகம் ... ஒரு குருடனின் முகம். குபீரென்ற திகில்ப் பாய்ச்சல். ரத்தமே உலர்ந்து விட்டாப்போல. அத்தனை கிட்டத்தில் தெரிந்த அந்தக் குறியைப் பார்த்து ரைஃபிளை சிப்பாய் சடசடவென இயக்கினான்.
*
storysankar@gmail.com
91 97899 87842 

Thursday, December 17, 2015

2015 சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஐயா ஆ. மாதவனுக்கு நல் வாழ்த்துக்கள்

short story

நா ய ன ம்
ஆ. மாதவன்


றந்தவருக்கு ஒன்றும் தெரியாது. புதிய மல் ஜிப்பா, வேஷ்டி அணிந்து கொண்டு, நெற்றியில் மூன்று விரல் திருநீற்றுப் பட்டையுடன், நீட்டி நிமிர்ந்து  அந்திமத்துயில் கொள்கிறார். கறுப்பு உடம்பு, வயசாளி, மேல்வரிசைப் பல் கொஞ்சம் பெரிசு, உதட்டை மீறி ஏளனச் சிரிப்பாக அது வெளித் தெரிகிறது. தலைமாட்டில் குத்து விளக்கும், நுனி வாழையிலையில் நிறை நாழி பழமும் ஊதுவத்தியும், சிவப்பு அரளிப்பூ மாலையுமாக ஜோடித்திருக்கிறார்கள். சாவு மணம் ஊதுவத்தியிலிருந்து கமழ்கிறது.
aa maadhavan_m
‘யென்னைப் பெத்த யப்போவ்.. யெனக்கினி ஆரிருக்கா?... என்று கால்மாட்டில் பெண்அள் கும்பலிலிருந்து நாற்பது வயசுக்காரி கறுப்பி முட்டி முட்டி அழுகிறாள். அவளுக்கு பச்சைக் கண்டாங்கிதான், பொருந்துகிறது.

சாயங்காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. தென்னந் தோப்புக்கு அப்பால், வாழைப் பண்ணையைத் தாண்டி, பாறைகள் நிறைந்த ஆற்றின் புது வெள்ளத்தின் குளிரைக் காற்று சுமந்து வருகிறது. காக்கைகள் கூட்டுக்குப் பறந்து போகின்றன. தாழைப்புதர் வேலிகளின் நடுவில்- வாய்க்கால் கரையிலிருந்து , முற்றிய கமுகு மரத்தை வெட்டிச் சுமந்து கொண்டுவந்து, முற்றத்தில் பாடை ஏணி தயாரிக்கிறார்கள். பிளந்த கமுகுமரம், வெளீரென்று பொள்ளையாக முற்றத்தில் துண்டாகக் கிடக்கிறது.

வாசலில், இளவுக் கூட்டத்தினரிடையே, செத்தவரின் தடியன்களான ஆண்பிள்ளைகள் இரண்டு அழுக்குத் துண்டை அணிந்து கொண்டு சுறுசுறுவென்று , எண்ணெய்ச் சிலைகள் போலத் தலைகுனிந்து அமர்ந்திருக்கிறர்கள். சின்னவன், கொஞ்சம் அழுகிறான். பெரியவன் முழங்கையைக் கன்னத்துக்கு முட்டுக் கொடுத்துக் கூரையின் துலாக் கட்டையைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். உள்ளேயிருந்து வரும் ஒப்பாரி, இப்பொழுது பழக்கமாகிச் சாதாரணமாகி விடுகிறது.

“இப்படியே இருந்தாப் பொழுதுதான் இருட்டும். இருட்டு வருமுன்னே இதோ அதோன்னு காரியத்தை முடிப்பம்; என்ன தங்கப்பா??”
“ஆமாமாம். நாயனக்காரனைத்தான் இன்னம் காணோம். யாரு போயிருக்காங்க அழைச்சார?”

“வடிவேலும் சின்னண்ணணும் போயிருக்கிறாங்க. மேலாத்தூரிலே இன்னிக்கு ஆம்புட்றது கஸ்டம் . அல்லாம், முத்துபட்டி திருவிழாவுக்குப் போயிருப்பாங்க.”
“சின்னண்ணன் போயிருக்கிறான்லியா அப்போ நிச்சயம் யாரையாவது இட்டுக்கிட்டு வருவான். வரட்டும். அதுக்குள்ளியும் மத்த வேலைங்களெப் பாக்கறது.”
மழைவரும் போல் இருந்தது. அந்தியிருள் குளிர ஆரம்பித்தது. கியாஸ் விளக்கொன்றைச் சுமந்து கொண்டு , வயல் வரப்பு வழியாக வாய்க்காலைத் தாண்டி ஒருவன் கரையேறி வந்து கொண்டிருக்கிறான். விளக்கின் ஒளியில், வாழை மரமும், பச்சை ஓலைய்ப் பந்தலும் பெரிய பெரிய நிழல்களாக வளர்ந்து திரைக்காட்சி போல மாறி மாறிப் போயிற்று.

விளக்கு சுமந்து வந்தவன், வேர்க்க விறுவிறுக்க முற்றத்தில் ஸ்டாண்டு மேல் விளக்கை இறக்கி வைத்தான். விளக்கின் உஸ்... உஸ்..! உள்ளே அழுகை ஓய்ந்து போயிருந்தது. குசுகுசுத்த குரலில் பெண்கள் வக்கணை பேசுகிறார்கள். ஊதுவத்தி இன்னும் மணமாக மணத்துக்கொண்டு புகை பரத்துகிறது.
விளக்கு வந்துவிட்ட வசதியில் முற்றத்துச் சந்தடி, அங்கிங்காக விலகி நின்றுகொண்டு இருட்டில், தெரியாத வயல் வரப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சலிப்பு- எல்லாரது முகத்திலும் அசட்டுக்களையை விரவிவிட்டிருக்கிறது. சும்மாவேனும் எத்தனை தரம் வெற்றிலை போடுகிறது? எத்தனை தரம் பீடி பிடிக்கிறது?

“விடிஞ்ச மொதக்கொண்டு ஒண்ணுமே சாப்பிடலே. எப்போ இந்தக் காரியம் முடியறது, குளிச்சு மாத்திச் சாப்பிடுறதோ? சரியான தொந்தரவு போ.”
யாரோ ஓராள் இருட்டைப் பொத்துக்கொண்டு வெள்ளையாக நடையும் வேகமுமாக ஓடிவந்தான்.

“சின்னண்ணனும், வடிவேலும் தட்றாம்பட்டிக்குச் சைக்கிள்லே போயிருக்கிறாங்க. மேலாத்தூரிலே யாரும் நாயனக்காரங்க ஆப்டலியாம். சேதி சொல்லச் சொன்னாங்க.” வந்தவன்  பந்தலையும்- கியாஸ் விளக்கையும்- முசுமுசுத்த கும்பலையும் - உள்ளே பெண்களீன் அர்த்தமற்ற அலமலங்களையும் - மாறி மாறி ப் பார்த்துவிட்டுப் பீடிக்கு நெருப்புத் தேடி ஒதுங்கினான். எப்பிடியும் தட்றாம்பட்டி போய் ஆளை இட்டுக் கொண்டுவர இன்னும் ஒரு மணியோ , ஒன்றரை மணியோ நேரமாகலாம், கும்பலின் முகம் சுணங்கியது.

“இந்தக் காலத்திலே, யாருப்பா நாயனமும் , பல்லக்கும் வச்சிக்கிறாங்க? ஏதோ அக்கம் அசலுக்கு ஒரு தொந்தரவு இல்லாமெ, காரியத்தை முடிக்கிறதெ விட்டுவிட்டு? இப்போ பாரு , எத்தினிஎ பேரு இதுக்கோசரம் காத்துக் கெடக்கிறாங்க ?”

”இல்லே, மூத்த பிள்ளைதான் சொல்லிச்சிது. செத்தவரு முன்னாடியே சொல்லி வச்ச சங்கதியாம். தமக்கு , சுடுகாடு யாத்திரை தவுல் நாயனக் கச்சேரியோட நடத்தணுமினு. அதாம் அந்த பொண்ணும் அழுகையா அழுதிச்சி. செத்தவங்க ஆத்துமா நிம்மதியாப் போகட்டுமேன்னு தான், இப்போ, மேலாத்தூர் போய் அங்கியும் ஆம்புடாமே தட்றாம்பட்டி போயிருக்காங்களாம்.”

“நல்ல ரோதனையாப் போச்சு. செத்தவங்களுக்கென்ன? அவுங்க போயிட்டாங்க. இருக்கிறவங்க களுத்து அறுபடுது “.

மழை வந்தேவிட்டது. ஹோவென்று . கூரை மேலும் பச்சைப் பந்தல் மேலும் இரைச்சலிட்டது. சுற்றிலும் கமுகு, தென்னை , தாழைப்புதூர் மேல் எல்லாம் கொட்டியதால் இரைச்சல் பலமாகக் கேட்டது. கியாஸ் லைட்டைத் திண்ணைமேல் தூக்கி வைத்தார்கள். திண்ணையில் அமர்ந்திருந்தவர்களின் தலை முண்டாசும், தலையும் பெரிய நிழல்களாகச் சுவரில் உருக்குலைந்து தெரிந்தன.

உள்ளே ஏதோ குழந்தை அடம்பிடித்து அழத் துவங்கியது. தாய்க்காரி பூச்சாண்டியைக் கூப்பிடுகிறாள். பிய்த்து எறிவேன் என்கிறாள். ‘சனியனே , உயிரை வாங்காதே’ என்கிறாள். குழந்தை நிறுத்தாமல் அழுகிறது.

எல்லோர் முகத்திலும் ,சலிப்பும், விசாரமும், பொறுமை இழந்த வெறுப்பும் நிறைந்திருக்கின்ற்ன. தலை நரைத்த முக்கியஸ்தர்களுக்கு யாரை, என்ன பேசி, நிலைமையை ஒக்கிட்டு வைப்பது என்று தெரியவில்லை. எல்லாரும், இருட்டாக நிறைந்து கிடக்கும் வயலின் வரப்புப் பாதையையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மழை சட்டென்று ஓய்கிறது. இரைச்சல் அடங்குகிறது. கூரையிலிருந்து தண்ணீர் சொட்டுகிறது. முற்றத்தில் தண்ணீர் தேங்கி வழிந்து போகிறது.

இதற்குள்ளியும் பாடை தயாராகி , உடம்பு சிவப்புப் பட்டு மூடிக்கொண்டு , நீட்டி நிமிர்ந்து- பந்தலில் தயாராகி இருந்தது. நீர்மாலைக்குப் போன புத்திரர்கள் இரண்டு பேரும், மழையில் குளித்துத் தலைமேல் வெண்கல ஏனத்தைச் சுமந்து கொண்டு, பிணத்தின் தலைமாட்டில் வந்து, முக்காடிட்ட முண்டச்சி போல நின்றார்கள்.
‘பொம்மனாட்டிங்க குலவை போடுங்க தாயீ. அதுக்கும் சொல்லியா தரவோணும்?’ என்று தலையாரி குரல் கேட்க, தாமதித்து நின்றவர்கள் போல் கிழவிகள். கொலு கொலுவென்று ஒப்பாரி போலவே குலவையிட்டார்கள். இருட்டில் ஒதுங்கி நின்றவர்  ஒன்றிரண்டு பேர் கூடப் பந்தலுக்குள் வந்து  திண்ணையில் நுழைந்தார்கள்.
‘வாய்க்கரிசி போட இன்னும் , உள்ளே பொம்மனாட்டிக இருந்தா வந்து போடலாம். நேரமிருக்குது” என்றார் தலையார். 

”அட அதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சே. இன்னும் புதுசாத்தான் ஆரம்பிக்கோணும். புறப்படுறதை விட்டுப்பிட்டு , அடியைப்புடிடா ஆபயாண்டீன்னு முதல்லே இருந்தே ஆரம்பிக்கோணுமா? தம்பி , சின்னத்தம்பு உன் கைக்கடியாரத்தலே மணியென்ன இப்போ?”

“மணியா? அதெல்லாம் ரொம்ப ஆச்சு. ஒம்போது ஆகப்போவுது. எப்போ நாயனக்காரங்க வந்து எப்போ பொறப்படபோறமோ?’

எல்லோரது கண்களும் வயல் வரப்பையே பார்த்துக் கொண்டிருந்தன . இப்போது - மரண சம்பவத்தை விட , நாயனந்தான் முக்கியப் பிரச்சனையாக அத்தனை பேர் மனத்திலும் பெரிய உருக்கொண்டு நின்றது.

“யாரோ வர்ராப்போல இருக்குதுங்களே” என்று ஒரு குரல் தொலைவில் இருட்டுப்பாதையைப் பார்த்துச் சந்தேகப்பட்டது.

“ஆமாண்ணோவ், வர்ராங்க போல , யாரப்பா அது வெளக்கை சித்தெ தூக்கிக்கொண்டு போங்களென். மழையிலே சகதியும் அதுவுமா கெடக்குது. சின்னண்ணன் தான், தோள் அசைப்பைப் பார்த்தா தெரியுதில்லே”.

எல்லாரது முகங்களும் தெளிவடைந்தன. இடுப்பு வேஷ்டியை முறுக்கிக்கொண்டு, முண்டாசைச் சரி செய்துகொண்டு எல்லாரும் எழுந்து தயாராகி நின்றனர். சில ஆண் பிள்ளைகள் உள்ளே பெண்களிடம் போய் விடை பெற்று வந்தனர். உள்ளே விட்டிருந்த அழுகை ‘யங்கப்போ’ என்று பின்னும் ஈனமாக எழுந்தது.
கியாஸ் விளக்கு வட்டத்தில், சின்னண்ணனும் வடிவேலுவும் வென்றுவந்த வீரர்கள் போல நின்றனர்.

“ அட , மேலாத்தூரிலே போனா அங்கே ஒரு ஈ, காக்கை இல்லெ. படு ஓட்டமா ஓடினோம். வீரண்ணன் சேரியிலே, ஒரு நல்ல வித்வான். மாரியம்மன் கொடையப்போ கூட நம்மூருக்கு வந்து வாசிச்சான். முனிரத்தினம்ன்னு பேரு . எப்படியும் அவரெ இட்டாந்திராலாம்ன்னு போனா. மனுசன், சீக்கா படுத்த படுக்கையா கெடக்கிறான். விடா முடியாதுன்னு, சைக்கிளைப் உடிச்சோம். தட்றாம்பட்டுலே, தோ... இவங்களெத் தான் புடிச்சுக் கொண்ணாந்தோம். சமத்திலே ஆள் ஆம்பிட்டதே தம்பிரான் புண்ணியமாப் போச்சு.”
எல்லோரும் பார்த்தார்கள்.

காய்ந்து போன மூங்கில் குழாய் போல, சாம்பல் பூத்த நாயனத்தை வைத்துக்கொண்டு , மாறு கண்ணும் குட்டைக் கிராப்பும், காவி மேலாப்புமாக, ஒரு குட்டை ஆசாமி, ‘இவனா?’ என்று கருவுவதற்குள் , ‘இவனாவது அந்த நேரத்தில் வந்து தொலைஞ்சானே’ என்ற சமாதானம் , எல்லாருக்கும் வெறுப்பை மிஞ்சி எட்டிப் பார்த்தது. தவுல்காரன், அடுப்படி, தவசிப்பிள்ளை மாதிரி வேர்க்க விறுவிறுக்க , ‘ஐயோ’ என்ற பார்வையில், முன்னால் வரமாட்டேன் என்று பின்னால் நின்றான்.

‘வெட்டியானெக் கூப்பிடுறது. நெருப்பெல்லாம் ரெடி..சங்கை ஊதச்சொல்லு பொறப்படலாமா? உள்ளே கேட்டுக்கோ.’

தாறுடுத்திக் கொண்டு பாடைப்பக்கம் நாலுபேர் தயாரானார்கள். கருமாதிக்கான பிள்ளைகள் இரண்டும், பெரியவன் தீச்சட்டியை வெட்டியான் கையிலிருந்து வாங்கிக் கொண்டான். சின்னவன், ஈர உடையில் , வெட வெடவென்று நடுங்கிக்கொண்டு , பெரியவன் பின்னால் செய்வதறியாமல் நின்றான்.

“பொறப்படுங்கப்பா. தூக்கு” என்ற கட்டளை பிறந்ததும் தாறுடுத்த நால்வரும் பாடையின் பக்கம் வந்தார்கள். உள்ளேயிருந்து பெண்கள், முட்டிக்கொண்டு தலைவிரி கோலமாக ஓடிவந்தார்கள். “யெங்களெ உட்டுட்டுப் போறீங்களே?” என்று கதறல் சகதியும் அதுவமாகக் கிடந்ததினால் விழுந்து அழுவதற்கு எல்லாரும் தயங்கினார்கள். பெண் மட்டும். ‘ங்கப்போ எனக்கினி யாருருக்கா” என்று பாடையின் கால்மாட்டில் வந்து விழுந்தாள்.

”கோவிந்தா!கோவிந்தா!” என்ற கோஷத்துடன் பாடை தோளில் ஏறிற்று. “யாருப்பா அது நாயனம். உம் ... சும்மா உங்களைப் பார்க்கவா கூட்டியாந்தோம் முன்னாடி போங்க. வெளக்குத் தூக்கறவன் கூடவே போங்க. மோளத்தைப் பிடிங்க..”
நாயனக்காரன் முகம் பரிதாபமாக இருந்தது. அழைத்துவந்த வேலண்ணன் அவன் 
காதருகில் எதோ சொன்னான். நாயனக்காரன் மெல்ல உதட்டில் வைத்து, “பீ ப்பீ.. ‘ என்று சுத்தம் பார்த்தான். ஊர்வலம் , சகதி வழுக்கும் வரப்புப்பாதையில் போய்க்க்கொண்டிருந்தது. கியாஸ் விளக்கின் ஒளியில் எல்லார் நிழலும் தாழைப் புதரின் மேலே கமுகு மர உச்சி வரை தெரிந்தது.

’கூ..ஊஉ..ஊஉ..’ என்றூ, வெட்டியானின் இரட்டைச் சங்கு அழுதது. நாயனக்காரன் வாசிக்க ஆரம்பித்திருந்தான். ‘பீ..பீ’ என்ற அவலம் பரிதாபகரமாக இருந்தது. தவுல்காரன் சந்தர்ப்பம் தெரியாமல் வீறிட்ட குழந்தைபோல-வாத்தியத்தைத் தொப்புத் தொப்பென்று மொத்தினான்.

விவஸ்தை கெட்ட மழை. வருதடி வைத்த அலமங்கலும், கீழே வழுக்கும் வரப்புப் பாதையும், தாழைப்புதரும், கௌமுகின் தோப்பின் உச்சியில் தங்கி நின்ற குளிர்ந்த இருட்டும், மரணமும் , பசியும், அசதியும், வெறுப்பும்,துக்கமும், எரிச்ச்சலும், கோபமும், எல்லாருடைய உள்ளங்களிலும் நாயனத்தின் கர்ண கடூரமான அபஸ்வரமாக வந்து விழுந்து வயிறெரியச் செய்தது.

கியாஸ் விளக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தது.தீச்சட்டியில் குமைந்த வறட்டியின் புகையால் சங்கு ஊதுபவன் செருமினான். அனைவரும் பேச்சற்ற அவல உருவங்களாக நிழல்களை நீளவிட்டு நடந்து கொண்டிருந்தார்கள்.

‘பீப்பீ..பீ..பீ’ 

எல்லாருக்கும் வயிற்றைப் புரட்டியது. நெஞ்சில் ஏதோ அடைத்துக் கொண்டது போல சிரமமாக வந்தது. தலையைப்பிய்த்தது.

பின்னும் , ‘பீ..ப்பீ..பீ..பீ! 

ஊர்வலம், ‘சனியனே’ என்ற பாவனையில் அவனையே பார்த்துக்க் கொண்டு வழி நடந்தது. யாராருக்கெல்லாமோ பாதை வழுக்கியது. பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த சிறுவன் ஒருவன், சக்தி தேங்கிய பள்ளத்தில் விழுந்தான். உடன் வந்த ஒருவர் , அவனைத் தூக்கிவிட்டுவிட்டு . ‘நீயெல்லாம் அங்கே எதுக்கோசரம் வரணும் , சனியனே?” என்று எந்த எரிச்சலையோ அவன் மேல் கோபமாக் கொட்டினார்.

ஆற்றங்கரை வரப்பு ஆரம்பமாகியிருந்தது. சிள் வண்டுகளின் இரைச்சல் கேட்டது. அக்கரையில், கடந்து வஞ்சித்துறையிலிருந்து தவளைகள், ‘குறோம் குறோம்’ என்று  எதிர்ப்புக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. குட்டி குட்டிக் கறுப்புப் பன்றிகள் போலப்பாறைகள் நிறைந்த ஆற்றில், புதுவெள்ளம் இரைச்சலோடு ஒழுகும் அரவம் கேட்டது. குளிர் , இன்னும் விறைப்பாக உடல்களைக் குத்திற்று.

சுடுகாட்டுத் தூரம் தீராத் தொலைவெளியாகத் தோன்றியது. இன்னும், பீ..ப்பீ..பீ..பீ..’
நாயனக்காரன் பக்கமாகத் தலை முண்டாசோடு வந்து கொண்டிருந்த தலையாரி முத்தன் , அவனையும் அந்த நாயனத்தையும் ஒரு முறை வெறித்துப் பார்த்தார். கியாஸ் லைட்டின் மஞ்சள் வெளிச்சத்தில் உப்பென்று மூச்சு நிறைந்த கன்னங்களுடன், நாயனக்காரனின், அந்தப் பொட்டைக்கண் முகம், எரிச்சலை இன்னும் வளர்த்தது.

இன்னும், பீ..ப்பீ..பீ..பீ..’

”படவா ராஸ்கல். நாயனமா வாசிக்கிறே?” தலையாரி முத்தன் ரொம்ப முரடு. அவரது அதட்டலை பாடை தூக்கிக்கொண்டு முன்னால் போய்க் கொண்டிருந்தவர்கள் கூடத் தயக்கத்தோடு திரும்பி நின்று செவிமடுத்தனர்.
அவ்வளவுதான்!

தலையாரி, நாயனக்காரன் பிடரியில் இமைக்கும் நேரத்தில் ஒரு மொத்து. ஆற்றில் துணி துவைப்பது மாதிரி ஒரு சத்தம். நாயனத்தை அப்படியே இழுத்துப் பறித்து கால் மூட்டின் மேல் வைத்து , இரண்டு கைகளாஅலும், ‘சடக்’ இரண்டு துண்டு ! புது வெள்ளமாகச் சலசலத்து ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் இருட்டில் நாயனத் துண்டுகள் போய் விழுந்தன.

‘ஒடிக்கோ பயமவனே, நாயனமா வாசிக்க வந்தே? நின்னா உன்னையும் முறிச்சு ஆத்திலெ வீசி யெறிஞ்சுடுவேன்.”

ஊர்வலம் தயங்கக் கொஞ்சம் நின்றது. எல்லார் முகத்திலும், ’முத்தண்ணே நீ செஞ்ச காரியத்துக்கு உனக்கு தங்கக் காப்பு அடிச்சுப் போட்டாலும் தகும்’ என்ற திருப்தி பளிச்சிட்டது.

“என்ன நின்னுட்டீங்க?- போங்கப்பா தோ மயானம் வந்தாச்சே, நல்ல நாயனக்காரனெ கொண்ணாந்தீங்க”.

இதைக் கேட்க நாயனக்காரனும் தவுல்காரனும் வரப்பு வெளியில் இல்லை. ஆற்றின் இடப்பக்கம் சந்தின் இருட்டில் இறங்கித் தெற்குப் பார்த்த பாதை வழியாக , இரண்டு பேரும் ‘செத்தோம் பிழைச்சோம்’ என்று விழுந்து எழுந்து ஓடிக்கொண்டிருந்தனர்1

விடாப்பிடியாகக் கழுத்தை அழுத்திய சனியன் விட்டுத் தொலைத்த நிம்மதியில் ஊர்வலம் சுடுகாட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.


Sunday, December 6, 2015

பத்தி chennai floods - a thing not to forget

chennai floods - a thing not to forget

நலம். நலமறிய அவா
06 திசம்பர் 2015

சென்னை நூறு வருடங்களுக்குப் பின் இத்தகைய கன மழைப் பொழிவைச் சந்தித்திருக்கிறதாகச் சொல்லப் படுகிறது. சென்னை, கடலூர் மாவட்டங்கள் இந்தப் பெருமழையால் கடும் பாதிப்பு அடைந்திருக்கின்றன. ஏராளமான உயிர்ப் பலிகள். பொருட் சேதங்கள். வாழ்விடங்களை இழந்து பாமர சனங்கள் தவித்து நிற்கிறார்கள். சராசரி மனிதனின் கடும் உழைப்பின் சேமிப்புகளால் கிடைத்த வீட்டுப் பொருட்கள் அத்தனையும் மூழ்கிக் கிடக்கின்றன. மீண்டும் பயன்படுத்த முடியாத அளவில் அவை சேதப்பட்டு விட்டன. புற நகர அடுக்ககங்களில் முதல் தளம் வரை கூட வெள்ளம் புகுந்து நிற்கிறது. ஏரிகள் நிரம்பி விட்டன. அவை திறந்துவிடப் படுகின்றன. அல்லது உடைக்கப் படுகின்றன. தானாவே உடைகின்றன.
மனித நேயம் தழைத்தோங்க, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், தனி மனித சேவையாளர்களும், சாதி மத இன வர்க்க பேதம் இன்றி, சட்டென உதவி என்று எங்கெங்கும் சுறுசுறுப்புடன் இயங்குகிறார்கள். பிற மாநிலங்கள், பிற நாடுகள் உதவுவதற்காக முன் வருகின்றன. அரசியல் கட்சிகள், புடவைக்கடையில் பக்கத்தில் நிற்பவள் தேர்வு செய்யும் புடவையைப் பார்க்கும் பெண்ணாய், அடுத்த கட்சிகளை விட தாம் செயல்படுவதாகக் காட்டிக்கொள்ள வேகம் கொள்கிறார்கள். தமிழக அரசியல் சூழலுக்கு விடிவு காலமே இல்லையா? மக்கள் அரசியல்வாதிகளைப் பார்த்தாலே கோபப்பட ஆரம்பித்து விட்டார்கள். தாங்கள் அடிமைகள் அல்ல. வாழ்க்கை எமது பிறப்புரிமை என அவர்கள்  உணர ஆரம்பித்து விட்டார்கள்.
முப்படையும் மீட்பில் இறங்கி யிருக்கிறது. ஆயிரக் கணக்கில் தினசரி அவர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருகிறார்கள். பத்துக் கணக்கில் தினசரி பிணங்களும் அவர்கள் கண்டெடுக்கிறார்கள்.
பாலும், குடிநீரும், காய்கறிகளும், அத்தியாவசியப் பொருட்களும் விலையேற்றி விற்கிறார்கள் சிலர். மின்சாரம் இல்லை. தொலைபேசி, அலைபேசி, இணையம் என்று எவ்விதத் தொடர்புகளும் இல்லை. வெளியூர்களில் இருந்து வேலை நிமித்தம் சென்னை வந்தவர்கள் தங்கள் பாதுகாப்பை, ஆபத்தைப் பகிர்ந்துகொள்ள, தெரிவிக்க, உதவி கோர வழி இல்லை. கோர நிமிடங்கள் அவை. ஆபத்தை விட ஆபத்தை எதிர்நோக்கும் மனது அதிகத் திகலைத் தருகிறது. கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், உடல் நலம் இல்லாதவர்கள், ஊனம் உள்ளவர்கள்... எத்தனையோ பேர் வெள்ளத்தில் தவிக்கிறார்கள்.
வங்கிகளில் ஏ டி எம் வேலை செய்யவில்லை. வங்கிகள் வேலை செய்யவில்லை. பணம் எடுக்க முடியவில்லை. கடைகளில் கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் மாற்ற வழியில்லை. பணம் இருந்தும் கையில் இல்லாமல் மக்கள் திண்டாடுகிறார்கள்.
சென்னை நகரமே தீவு தீவாகத் துண்டாடப் பட்டு விடுகிறது. இடைப் பாலங்கள் வழியே போக்குவரத்து நிறுத்தப் படுகிறது. அவற்றின் கீழே சீறிப் போகும் வெள்ளம். சில பாலங்களுக்கு மேலேயே பொங்கி வழிந்து ஓடுகிறது தண்ணீர். எங்கெங்கிருந்தெல்லாமோ என்னென்னவோ மிதந்து வருகின்றன.
தனி கவனச் சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லை. நோயாளிகள் உயிருக்கு மேலும் போராடுகிறார்கள். சிலர் இறந்து விடுகிறார்கள்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் சென்னை தான் தமிழ்நாட்டில் இந்த கன மழையால் திகைத்துப் போயிருக்கிறது. சகஜ நிலை திரும்ப வாரக் கணக்கில் எடுக்கும் போல் இருக்கிறது.
பருவ நிலைக் கோளாறுகளால் தான் இத்தனை கன மழை என்கிறார்கள். சென்னையின் விஸ்தரிப்பு, வகை தொகையில்லாமல், கணிப்புகளோ சமூக அக்கறையோ இல்லாமல் கைமீறிப் போனதாகச் சொல்கிறார்கள். ஏரிகளில் போய் வீடு கட்டி விட்டதாகச் சொல்கிறார்கள். எது எப்படியாயினும் இழப்பு வருத்தத்துக்குரியது. விவாதங்களை இப்போது தவிர்க்கலாம். தேவை அறிவுரைகள் அல்ல. உதவிகள். நற் சொற்கள். மீட்பு நடவடிக்கைகள். எதிர்காலத்தில் நமக்கு நிறைய வேலை இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று. விவாதம்.
மழையில் வீடு, வசிப்பிடம் இழந்தவர்கள், பொருட்கள் இழந்தவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். உறவுகளை இழந்தவர்கள் பாவம். அவர்கள் தவிப்பு புரிகிறது. உயிர் இழந்தவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். எல்லாமே கட்டுத் தளர்ந்து செயல் இழந்து நிற்கிற பதட்டமான சூழல் இது. மானுடத்திற்கான சவால் இது. மனிதன் மீண்டு விடுவான். அவன் மகத்தானவன்.
 ***
எஸ். சங்கரநாராயணன்
தொகுப்பாசிரியர்
பா. உதயகண்ணன்

பதிப்பாசிரியர்