Wednesday, April 22, 2015

உலக இலக்கியம் - நட் ஹாம்சன் (நோர்வே)

நடையழகினாலும், புதிய தளங்களைப் கையாண்டதாலும் பரவலாகப் புகழ்பெற்றார் நட் ஹாம்சன். 1920ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.சாதாரண ஒரு 
சராசரி ஈயின் கதை
• • •
நட் ஹாம்சன் (நோர்வே)

நான் எழுதிக்கொண்டிருந்தேன். திறந்திருந்தது ஜன்னல். ஜன்னல்வழியே அந்த ஈ உள்ளே வந்தது. ஆக எங்கள் சிநேகம் ஆரம்பமானது. ஈ என் தலையைச்சுற்றி ஒரு ஆட்டம் போட்டது.  தலையில் அல்கஹால் பூசியிருந்தேன். அந்த வாசனைக்குதான் அதற்கு அப்படியொரு கிறுகிறுப்பு. கையைவீசி, போ அந்தாண்ட,,, என அதை விரட்டி... எதையும் அது சட்டை பண்ணவில்லை. அப்புறம்தான் காகிதம் வெட்டும் கத்திரிக்கோலைக் கையில் எடுக்க முடிவுசெய்தேன் நான்.

     நல்ல பெரிய, அருமையான கத்திரிக்கோல். இன்ன உபயோகம்னில்லை, எனது புகைக்குழாயைக் குடைந்து சுத்தம்செய்ய, நெருப்பைச் சீண்டிவிட என்று கண்டபடி அதை நான் பயன்படுத்துகிறேன். சுவரில் ஆணியடிக்கக்கூட அதால் மண்டையில் நச்சென்று போடுகிறேன். பேணிப் புழங்கிய என் கைலாவகத்தில் பயங்கரமான ஆயுதம் அது. அதைக் காற்றில் விஷ் விஷ் என வீசினேன். ஈ பறந்து வெளியே போய்விட்டது.

     ஆனால் கொஞ்சநேரத்திலேயே அது திரும்பவந்து, கொட்டமடிக்க ஆரம்பித்துவிட்டது. ச். என்ன இடைஞ்சல் இது. நான் எழுந்து, மேசையை ஜன்னல்பக்கம் நகர்த்... அதுவும் கூடவே வந்தது. அட இழவே, இரு உன்னை வெச்சிக்கறேன்... பேசாமல்போய் என் தலையின் அல்கஹாலை அலசிக் கழுவிக்கொண்டு வந்தேன். ஈ ஏமாந்திருக்க வேண்டும். வெட்கப்பட்டு முகம்தொங்க என் விளக்குத்தொப்பியில் போய் கப்சிப் என்று அமர்ந்துகொண்டது. அதனிடம் அசைவில்லை.

     கொஞ்சநேரம் இப்படியே ஓடியது. அது தேமே என இருந்தது. நான் என் வேலையைப் பார்த்தேன். வேலை சுறுசுறுப்பாக ஓடியது. ஆனால் வேலைப்போக்கில் நான் தலைநிமிரும் போதெல்லாம் அது அப்படியே அங்கேயே, பிடிச்சிவெச்ச பிள்ளையாராட்டம் அடங்கிக் கிடப்பதைப் பார்க்கவே அலுப்பாய் இருந்தது எனக்கு. அதை உற்றுப் பார்த்தேன். சாதாரண சின்ன ஈ. முழுசாய் வளர்ந்த ஈதான். சாம்பல் இறகுகள். ''கொஞ்சமாச்சும் அசங்கப்டாதா?'' என்றேன் நான். அது அசையவில்லை. கைகாலைக் கூட அசக்கவில்லை. ''வெளிய போ... அதான் உன் உலகம்.'' அதைப்பார்த்து கையை வீசினேன். சட்டென எழும்பியது, அந்த அறையில் ஒருவட்டம் சுற்றிவந்தது. திரும்ப விளக்குத் தகடில் அமர்ந்துகொண்டது.

     ஆக அதற்கு வெளியே போகிறதாக உத்தேசமில்லை. எங்கள் நட்பு அந்தக்கணத்தில் முகிழ்த்தது எனலாம். அதன் மனஉறுதியை நான் மெச்சினேன். எதற்கு ஆசையோ அதற்கு வெட்கப்படாமல் முனையும் அது. அதன் முகபாவம் எனக்குப் பிடித்திருந்தது. தலையை ஒருவாட்டமாகத் திருப்பி என்னை அது வாட்டமாகப் பார்த்தது. ஆ பாவப்பட்ட ஜீவன். என்னைப்போல! நாங்கள் ஒரேமாதிரி பாவனைகளைக் கொண்டிருக்கிறோம். நான் அதனோடு இணக்கம் காட்ட ஆரம்பித்திருக்கிறேன், என்பதை அது புரிந்துகொண்டது. அதற்கேற்றாப் போலவே அதன் செல்ல அட்டகாசங்களும் இருந்தன. மதியம் நான் வெளியே கிளம்புகிறேன், சர்ரென்று எனக்கு முன்னே பறந்து வந்து, என்னை வழிமறித்தது அது. நண்பா என்னை விட்ட்டுப் போனா எப்டி, என்கிறாப் போல.

     அடுத்த நாள் சீக்கிரமே எழுந்துவிட்டேன். காலை நாஷ்தா முடித்து வேலைசெய்ய என எழுந்துகொண்டேன். வாசல்பக்கம் அந்த ஈ. ஹலோ... எனத் தலையசைத்தேன். ரீங்காரத்துடன் அந்த அறையை நிறையத்தரம் சுற்றி வந்தது ஈ. அப்படியே வந்து என் நாற்காலியில் அமர்ந்துகொண்டது. நான் எங்கே அதை உட்காரச் சொன்னேன்... அது உட்கார்ந்துகிட்டா நான் எங்க உக்கார்றது? ''எழுந்திரு.'' நான் சொன்னேன். சற்று எழும்பி ஒரு சுற்று, ஆ... திரும்ப நாற்காலியிலேயே வந்தமர்ந்து கொண்டது. என்ன சேஷ்டைக்கார ஈ. ஏய், என்ன திமிரா... என நான் எச்சரித்தேன். நான் உட்காரப்போறேன், என்றேன். அப்படியே உட்கார்ந்தேன். குபீரென அது எழுந்தது, ஆனால் இ,ப்போது என் தாளின்மேல் சப்பணம் போட்டு அமர்ந்துகொண்டது. ''அடி சிறுக்கி, இடத்தைக் காலிபண்ணு...'' பதில்சொல்லக் காணோம். கையால் காற்றை வீசினேன். தம் பிடித்து அங்கேயே பம்மிக்கிட்டதே தவிர, நகரக் காணோம். தபார் இது சரியில்லை, என்றேன் நான். பரஸ்பரம் மரியாதை இல்லாம இப்பிடியே போயிட்டிருக்க முடியாது,

     ஈ என்னை கவனித்தது. எதோ யோசித்தது. ச், பாத்துக்கலாம் என என்னை அலட்சித்து அப்படியே அங்கேயே பிள்ளையார்த்தவம் கிடந்தது. பெரிய கத்திரிக்கோல்.... அதைக் காற்றில் வாள்போல வீசியாட்டினேன். இன்னிக்கு உன் கதையை முடிச்சிர்றேன்... ஆனால் நான் கவனிக்கவில்லை. ஜன்னல் திறந்திருந்தது. ஈ எழும்பி ஜன்னலுக்கு வெளியே பறந்து விட்டது.

     திரும்பி வரவேயில்லை, ஒரு ரெண்டுமணி நேரம். அதுவரை என் மனசில் படபடப்பு. அப்படியே அதுபாட்டுக்குக் கிளம்பிப் போக விட்டுட்டேனே. இப்ப எங்க இருக்கோ, எப்பிடி இருக்கோ.... அதுக்கு என்ன ஆகுமோ... ஒருவழியாக நான் திரும்ப எழுத உட்கார்ந்தேன். மனசில் என்னென்னவோ விபரீத யூகங்கள்.

     அந்த ஈ திரும்பிவந்தது. அதன் பின்னங்கால்களில் ஒன்றில் தூசி. ஏய், அழுக்குணி, எந்த சகதில மேஞ்சிட்டு வரே எருமை, என்றேன் நான், ஏண்டி, உனக்கு வெட்கங் கிட்கங் கிடையாதா... இருந்தாலும் வந்து சேந்ததே, என்றும் ஆசுவாசம். முதல் காரியமாக மெல்ல போய் ஜன்னலை மூடிவிட்டு வந்தேன். என்ன இந்தமாதிரி ஒரு காரியம் பண்ணிப்பிட்டே, என்றேன். தலை நிமிர்த்தி ஒரு எகத்தாளப் பார்வை பார்த்தது ஈ. ஆமாம், பண்ணிட்டேன், என்னான்றே அதுக்கு, நீ என்ன பண்ணிப்பிடுவே... கழுத்தைச் சீவிருவியோ, என்கிற எள்ளல் பார்வை. ஒரு ஈ, அதற்கு என்ன நக்கல்டா. அதுவரை இப்படி மேலடி அடிக்கும் ஈ பற்றி எனக்குத் தெரியாது. பரவால்லியே, என மனப்பூர்வமாக நான் சிரித்தேன். என்ன ஜாலக்காரிடி நீயி... என்றேன் நான். கிட்ட வா, உன்னை கொமட்டுல குத்தறேன்... சிறுக்கிமவளே...

     அந்த சாயந்தரமும் நான் வெளியே போவதை வழிமறித்தது ஈ. போகாதே போகாதே என் கணவா... பொல்லாத சொப்ப(£)னம் நானுங் கண்டேன்... இப்போது அதை ரசிக்கவில்லை நான். ஏய், யார்ட்ட விளையாடறே, என எகிறினேன் நான். என்மேல் அதற்கு அன்பு, பிரியம் - எல்லாஞ் சரிதான். ஆனால் சாயந்தரங் கூட என்னை வெளியேவிடாமல் இப்பிடிப் பிடிச்சி வைத்துக்கொள்ள அதனால் முடியாது. அதெல்லாம் என்னாண்ட நடக்காது. போடி சர்த்தான், என நான் அதைத் தாண்டிப்போனேன்..அதன் சிறகுப் படபடப்பு, அதன் கோபம் எனக்குத் தெரியும். ''இப்ப பாருடி சிறுக்கிமவளே, என்னைத் தனியா விட்டுட்டுப் போனியே, இப்ப நான் போறேன், தனிமைன்னா என்னன்னு நீயும் தெரிஞ்சிக்க. உள்ளியே கெட,,, குட்பை!

     அதன்பின்னான நாட்களில் அந்த ஈ என் பொறுமையைச் சோதிக்கிறாப் போலவே எத்தனை சில்மிஷங்களெல்லாம் செய்தது... என்னைப் பார்க்ககொள்ள விருந்தாளிகள் என்று யாராவது வந்தால் அதற்குத்தான் எத்தனை அசூயை. பெருமூச்சுகளுடன் காய்ந்து, அவர்களை விரட்டிவிட அது முயற்சி செய்தது. ஏய், என்ன நெனைச்சிட்டிருக்கே உன் மனசில், என நான் கடுகடுத்தேன். இரு உனக்கு ஒரு பாடம் கற்பிக்கிறேன்... அதற்குள் அதன் கோபம் எல்லை கடந்திருக்க வேண்டும். சரட்டென்று அப்படியே செங்குத்தாக கழுத்தை விரைத்து மேலேறி உத்திரத்துக் கூரைமேல் தலைகீழாய்த் தொங்கியது. அப்படியே அங்கேயே, அசையாமல் கொள்ளாமல்.... எனக்குப் பதறியது. சனியனே, விழுந்துறப்போறே, என்று கீச்சிட்டேன். அதற்குக் கோபம், அது என்னைக் கண்டுக்கவே இல்லை. சொன்னா கேக்கமாட்டேயில்லே, சரி உன் இஷ்டம், எக்கேடுன்னா போ..' என நான் முகத்தைத் திருப்பிக்கொண்டேன். அதன்பின் அது கீழிறங்கி வந்தது!

     எப்பவுமே நான் அதை கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் அதற்கு. நான் கண்ணை எடுத்திட்டால் என்னை வேலைசெய்ய விடாமல் என் முகத்தருகே வந்து ரொய்ங் என்று சிறகடிக்கும். டப்பென்று என் காகிதத்தில் வந்தமரும். பிறகு இப்படியும் அப்படியுமாய் நடை பழக ஆரம்பிக்கும். கொஞ்சங்கூட சங்கோஜம் கிடையாது அதற்கு. என்னாண்ட காகிதக் கத்திரி இருக்கு.. மறந்திட்டதோ, என்றிருந்தது.

     அடேய் அதுங்கிட்ட ரொம்ப கெடுபிடி காட்டாதே, அடிச்சாலும் செல்ல அடி அடிக்கணும், என்று நினைத்துக்கொண்டேன். புன்னகையுடனான குரலில் நான் அதனிடம் சொன்னேன். அடி அந்தப் பக்கம்லாம் போகக்கூடாது, போயி மசியில் விழுந்து ஈஷிக்காதே... உனக்கு நல்லதுதானே சொல்றேன், என்றேன். இழவு காதுலயே வாங்கிக் கொள்ளவில்லை. ஏய், காகிதத்தில் நடக்காதேன்னு உன்னாண்ட சொன்னேனா இல்லியா? அதற்கும் அது மசிகிறதாய் இல்லை. கரடுமுரடா இருக்கு காகிதம், கால்ல வரி விழுந்துரும்டி, கீச்சிக்குவேடி கண்ணு. அதற்கு பயம் கியம் என்று எதுவும் இருந்தால்தானே? என்னன்னாலும் உனக்கு இத்தனை திண்ணக்கம் கூடாது... ஆத்திரத்துடன் கீச்சிட்டேன். காகிதம் சொரசொரப்பா இருக்கா இல்லியா சொல்லு. அதைப் பத்தி என்ன-ன்னாப்போல அது நடந்துகொண்டது. போ, அதுலயே கெடந்து சாவு... என்றேன் நான். அது நான் சொன்னபடி கேட்காத ஆத்திரம். நான் வேறகாகிதம் எடுத்துக்கிறேன்...

     என்ன கொழுப்பு அதுக்கு, நான்போய் வேறகாகிதம் எடுக்கிறேன், முடியாச்சின்னு எழுந்து வெளியே போய்விட்டது!

     நாட்கள் மாதங்கள் நகர்ந்தன. நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் சகித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தோம். நீயும் நானுமடி எதிரும் புதிருமடி. ரெண்டுபேரும் சேர்ந்தே நிறைய காகிதங்கள் பயன்படுத்தினோம். அதில் சந்தோஷமும் உண்டு, எரிச்சலும் உண்டு. அதன் அழிச்சாட்டியங்கள் ஏராளம். நான் பொறுத்துக்கொண்டேன். நான் எழுதுவதே அதற்கு உவப்பாய் இல்லை, என் எழுத்தில் அதற்கு ஒரு மரியாதையும் இல்லை... என்னத்த சும்மா எழுதிட்டேயிருக்கே, என்று அது பார்த்தது. வெறுத்துப்போய் வெளியே போய்விடுமோ என்று நான் கதவுகளை ஜன்னல்களைச் சார்த்தியே வைத்தேன், அதன் நல்லதுக்குத்தான். அத்தோடு, இந்தச் சனியன் மேல்கூரையிலிருந்து சடாரென ஜன்னல் கண்ணாடிக்கு பல்டி, மோதிக்கொண்டது. அதுக்கு இருக்கிற மப்புக்கு அப்படியே உடைத்துக்கொண்டு வெளியே போயிறலாம், என நினைப்பு.

     என்ன, வெளியே வேலை கீலை இருக்குதா, என்றேன் நான். அப்பன்னா வா, இப்டி வெளிய போ... நான் வாசல்கதவைத் திறந்துகாட்டிச் சொன்னேன். ஆனால் அதற்கு வெளியேபோக இஷ்டம் இல்லை. வெளிய போணுமா வேணாமா?... ஒண்ணு. ரெண்டு. மூணு!  அது பதில் சொல்லவில்லை. அடச்சீ வேலைகெட்ட வேலையா இது எனக்கு, கதவைப் படாரென்று சாத்தினேன்.

     இந்த மூர்க்கம்... விரைவிலேயே என்னை ஒரு அவஸ்தையில் கொண்டுவிட்டது..

     ஒருநாள் அந்த ஈ காணாமல் போய்விட்டது. காலையில் வேலைக்காரி வந்தபோது கதவு திறந்திருந்ததை அது கவனித்து மெல்ல நழுவிவிட்டது. என்மேல் உள்ள கோபத்தில் அது என்னைப் பழிவாங்கி விட்டது, அப்படித்தான் நான் புரிந்துகொண்டேன் அதை. ஹா... இப்போது நான் செய்யக்கூடுவது என்ன? வெளியே தோட்டப்பக்கம் போய் ஆத்திரமாய்க் கத்தினேன் - தபார், உனக்கு வெளிய தங்க இஷ்டமானா தாராளமா தங்கிக்கலாம். யார் வேணான்னா?... நான் அதை இழந்துறவெல்லாம் இல்லை. அதைத் தேடிக் கண்டுபிடிக்கவும் முடியப்போறதில்ல. அதை என்னமாச்சும் உசுப்பேத்தி திரும்ப வரவழைக்க என்னால் கூடாது. ஆ, அதைத் தொலைக்கவில்லை, என்பதெல்லாம் வெட்டி சமாதானம்.. இழந்துதான் விட்டேன்.

     என் வீட்டின் கதவு ஜன்னல் வென்டிலேட்டர் புகைபோக்கி இண்டு இடுக்கு, எதையெல்லாம் திறந்து வைக்க முடியுமோ திறந்து வைத்தேன். ஜன்னல்பக்கமாய் என் காகிதத்தை காற்றில் படபடக்க வைத்தேன். அழுக்கு, ஈரம் பட்டால் பரவாயில்லை. அது இப்போது முக்கியமில்லை. ஈ காகிதத்தில் ஆசை ஆசையா நடந்ததே, வா வந்து நட. இதைவிட வசதியான பரப்பு உனக்குக் கிடைக்காதுடி, வா.

     என் வீட்டுச் சொந்தக்காரி, அவகிட்டக் கூட விசாரித்தேன். தலைநிறைய சொதசொதவென்று அல்கஹால் போட்டுக் காத்திருந்தேன். என் அருமைத் தோழியே வருக வருக, ராஜகுமாரியே உள்ளே வருக, என்று அதற்கான சுமுகங்களை இங்கே ஏற்படுத்தி தாஜாபண்ணி காத்திருந்தேன். ஒரு பயனுமில்லை.

     பிறகு ஒருகாலையில் அது, ஆமாம், திரும்பிவந்தது. ஆனால் தனியே வரவில்லை. வீதியில் இருந்து கூடவே காதலனை உள்ளே இழுத்து வந்தது அது. அதைத் திரும்ப பார்த்ததும், அது திரும்பி வந்ததுமாக எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்தில் அதை நான் மன்னித்தே விட்டேன். தன் காதலனுடன் அது வந்ததையும் பொருட்படுத்தவில்லை.

     ஆனால் போதும், எல்லாத்துக்கும் ஒரு அளவு உண்டு. எல்லை உண்டு.

     ஒருத்தரையொருத்தர் அதுங்கள் லுக் விடுவதும், அப்டியே கால்களைத் தேய்த்து சூடு பண்ணிக்கொள்வதும்... அப்புறம் குபீரென்று அந்தக் காதலன் காதலிமீது பாய்ந்து ஏறி சவாரி செய்தபோது, எனக்கு லஜ்ஜையாகிவிட்டது. அட நாலுபேர் பாக்கிறாப்போல, என்ன காரியம் பண்றீங்க?... நான் அதட்டினேன். நீங்க ரெண்டுபேருமே ரொம்ப விடலைங்க. அதுக்கெல்லாம் லாயக்கில்லை...

     நான் சொன்னது அதற்குக் குத்தலாய்ப் பட்டிருக்கவேண்டும். தலையை நிமிர்த்தி என்னை விரோதமாய்ப் பார்த்தது. என்னாச்சி, பொறாமையா, என்கிறதாய் ஒரு கேள்விதொக்கிய பார்வை. ஹா, எனக்கா, பொறாமையா, அவன் மேலயா... என நான் கிசுகிசுத்தேன். பார் ஒரு விஷயம்... ஆனால் அது முகம்திருப்பிக் கொண்டது. உன் விளக்கம் கிளக்கம் எதுவுந் தேவை இல்லை, நான் சொன்னா சொன்னதுதான், என்கிற அலட்சியம். அடாவடி.

     சடக்கென்று ஆத்திரத்துடன் எழுந்துகொண்டு கூவினேன். ஏய் உன்னாண்ட நான் சண்டகிண்ட போடப்போறதில்லை. ஆனால் இது சம்பிரதாயத்துக்குப் புறம்பானது. அததுக்கு வயசுன்னு இல்லியா? ஆத்தமாட்டாம அலையறாம்பாரு உன் காதலன், அவனை என்னாண்ட அனுப்பு நான் பாத்துக்கறேன்...காகிதக் கத்திரியால் தரை அதிர அடித்தேன்.

     இப்போது பார்த்தால் அதுங்க ரெண்டும் சேர்ந்து என்னைப் பகடியடித்தன. மேஜையோரமாய் ரெண்டுமாய் அமர்ந்தன. குலுங்கிக் குலுங்கிச் சிரித்தன. என்னை அவை பார்த்த பார்வை! ஹா ஹா, இதைவிடப் பெரிய கத்திரி கிடைக்கல்லியா மாமா? எங்களைக் கொல்ல இதைவிடக் கொஞ்சமாவது பெரிசா வேணாமா?...

     கைல என்ன ஆயுதம் இருக்குன்றதில்ல விஷயம். உன் மாப்ளைய ஒரு சின்ன ரூல்தடியாலயே சமாளிப்பேன். தடியை வீசினேன். அவை முன்னிலும் ஆக்ரோஷமாக விழுந்து விழுந்து சிரித்தன. தங்கள் விறைப்பை முன்னிலும் தெளிவாக வெளிப்படுத்தின. நீங்க ரெண்டுபேரும் உங்க மனசுல என்னதான் நினைச்சிட்டிருக்கீங்கன்றேன்? என்னைப் பத்தித் தெரியாது உங்களுக்கு...

     ஆனால் அதுங்க என்னைக் கண்டுக்கவேயில்லை. அதுங்கபாட்டுக்கு வெட்கமேயில்லாத ஆபாசக்கூத்தடித்தன. திரும்ப ஒருத்தரை ஒருத்தர் ஆரத் தழுவிக்கொள்ள முனைந்தன. ''ம்ஹும்!'' நான் கத்தினேன். ஆனால் அவை கேட்கவில்லை. நான் தன்னிலை மறந்தேன். தடியை உயர்த்தி - மின்னலைப்போல முழுவேகத்துடன் கீழே இறக்கி - ஒரே அறை. எதோ வழிந்தது. குறி பிசகாத அடி. தரையோடு அவை நசுங்கின.

     இப்படியாக முடிந்தது எங்கள் சிநேகிதம் ...

     சாதாரண சின்ன ஈயே அது, சாம்பல் சிறகுகள். அதைபத்திச் சிறப்பாய்ச் சொல்ல எதுவும் இல்லை. என்றாலும் வாழ்ந்தபோது எனக்கு சில நல்ல தருணங்களை அது அளித்தது.

---
Just an Ordinary Fly of Average size
by Knut Hamsun (1859-1952)
trs. in English by Hallberg Hallmsundsson

நட் ஹாம்சனைப் போல தேசாந்திரி பாத்திரத்தை உயிர்ப்புடன் சித்திரித்த பிற நோர்வே எழுத்தாளர் இல்லை எனலாம். இளமைக்காலத்தில் கட்டற்ற சுதந்திர வேட்கையுடன் அவரே நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர்தாம். ஒரு காலணிதயாரிக்கிற ஊழியனாக, கடலோரக் காவலாளியாக, பள்ளியாசிரியனாக அவர் நோர்வேயில் பணியாற்றினார். பிறகு அமெரிக்காவுக்குப் போய் புல்வெளிபேணுகிறவனாகவும், கல்லுடைக்கும் தொழிலாளியாகவும், சிகாகோவில் உள்ளூர்ப் பேருந்தின் நடத்துனனாகவும் வேலைசெய்தார். புதிய உலகம் அவரைக் கவரவேயில்லை. பிறந்த மண் திரும்பினார். 1888ல் குறுநாவல் 'பசி' வெளியிட்டார். நடையழகினாலும், புதிய தளங்களை கையாண்டதாலும் பரவலாக புகழ்பெற்றார் நட் ஹாம்சன். 1920ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. இவரது பசி, நிலவளம் நாவல்கள் தமிழில் க.நா.சு. மொழிபெஎயர்ப்பில் வெளியாகியுள்ளன. நட் ஹாம்சனின் கடைசிக்காலங்கள் துக்ககரமானவை. நோர்வேயை ஆக்கிரமித்த நாஜிகளுக்கு அவர் துணைபோனார் என்ற குற்றச்சாட்டு எழுந்து தம் மக்களாலேயே ஒதுக்கிவைக்கப் பட்டார். என்றாலும் அந்தத் தூசியடங்கி தற்போது அவரது எழுத்துகள் முன்னடையாளம் பெறுகின்றன தற்காலங்களில்.
     தன்னையே சாதாரண ஈயாய் அடையாளங் கொண்டு பொதுமைகளை பரசிப் பரத்தி சொல் சமத்காரத்துடன் கதை நகர்த்துகிறார் நட் ஹாம்சன். இவர் வெளியேபோவதை ஈ ஆட்சேபிக்கிறது. பிறகு அது வெளியேறுவதை இவர் மறுதலிக்கிறார்... என்ற வட்டப்பாதையில் கதை. உத்தியளவில்  கொடுத்து வாங்குதல். ஈ புணரத்துடிப்பதில் இவர் நாடித்துடிப்பு அதிகரிக்கிறது என்பது எனக்கு ஒட்டவில்லை. வீட்டு சொந்தக்காரியிடம் ஈ பற்றி விசாரித்தேன், என்ற வரியும் கொஞ்சம் உப்பு தூக்கல். ஈயுடான உறவாடல் பற்றி, நாட்கள் மாதங்கள் கடந்தன, என ஒரு வரி. தெத்துப்பல்!

Tuesday, April 21, 2015

உலக இலக்கியம் சுவிஸ

கேளா ஒலிகள் 
கேட்கிறவள்
பீட்டர் ஸ்டாம் (சுவிட்சர்லாந்து)
 ஜெர்மானிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில் (Expectations) மைக்கேல் ஹோஃப்மன்
தமிழ் வடிவம் எஸ். சங்கரநாராயணன்

 • • • 
நீங்கள் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் எத்தனையோ சப்த களேபரங்களின் நடுவே ஒரு தனி ஒலிக்குறிப்பை என்னால் பிரித்தறிய முடியும். பேரோசை என்றில்லை சின்ன சிணுக்கம். அதைக்கூட நான் அறிந்துகொண்டு விடுவேன். ஒலிகளுக்காக என் காதுகள் ஆர்வப்பட்டுக் காத்திருக்கின்றன. சவாலாய்க் கூடச் சொல்வேன். மத்தவர்கள் கேட்காத ஒலிகளைக் கூட நான் துல்லியமாக அறிவேன். இந்த அடுக்கக மேல்தளத்து தரைப் பலகைகளின் அதிர்வொலிகளை இங்கே சாப்பிட வருகிறவர்கள் கேட்டிருப்பார்களா சந்தேகமே. எதுவும் நடக்காத மாதிரி அவர்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் இருப்பார்கள். அரட்டையும் சிரிப்புமாய் அவர்கள் நான் கொடுக்கும் ஒயினை அருந்தி நான் சமைக்கும் உணவு வகைகளைச் சாப்பிடுகிறார்கள். நன்றி என்றோ, சூப்பரா இருக்கு என்று ஒரு பாராட்டோ இதுவரை அவர்கள் என்னிடம் சொன்னது கிடையாது. இங்கே வந்து என் உணவைச் சாப்பிடுவதே அவர்கள் எனக்குச் செய்கிற உபகாரம் என நினைப்பு அவர்களுக்கு.

கணக்கெடுத்துப் பார்த்தால் தெரியும். பெரும்பாலான பெண்கள் தங்கள் ஆம்பளைத் துணைகளை வேலையிடத்தில் தான் கண்டுகொள்கிறார்கள். ஆனால் எங்கள் வேலை ஐந்து ஆறு வயசுச் சிறார்களைப் பராமரிப்பதாக இருக்கிறது. கூட அவர்களின் ஜோடி சேர்ந்த அப்பாக்கள் அல்லது தனிமரமான அம்மாக்கள். இவர்களில் நான் துணையெனத் தேட தனி ஆண் கிடையாது! ஸ்கௌட்டுகளாக இருந்தபோதே கரினும் பிம்மும் சிநேகமானார்கள். ஒரு விடுமுறை ஊர் சுற்றலில் ஆஸ்திரேலியாவில் யானகேயும் ஸ்தஃபானும் சந்தித்துக் கொண்டார்கள். அந்தக் கதையை ஒரு நூறு தரமாச்சும் அவர்கள் சொல்லிவிட்டார்கள். ரெண்டு டச்சுக்காரர்கள், ஆனால் சந்தித்தது ஆஸ்திரேலியாவில்! இது விதி அன்றி வேறென்ன? அதை மீற யாரால் முமடியும்? இப்போது அவர்கள் தங்கள் புத்தாண்டு பிரதிக்ஞைகளைப் பற்றி பிரஸ்தாபித்துக் கொண்டாகிறது. ஒண்ணுக்குப் போகும்போது உன் இருக்கையை உயர்த்திக்கொள், கரின் பிம்மிடம் சொல்கிறாள். எல்லா ஆண்களும் அப்படியே நின்னாப்லயே அடிச்சிர்றார்கள். .. என்பது அவளுக்கு எரிச்சல். ஒராள் சொல்லித்தான் செய்யணுமா? நீயே அப்பிடிப் பண்ணிக்கக் கூடாதா, என்று யானகே அவனைக் கடிந்து கொண்டாள். அவள்தான் ஸ்தஃபானை பெண்களைப் போல உட்கார்ந்து ஒண்ணுக்கடிக்கக் கற்றுத் தந்ததாகச் சொன்னாள். ஒண்ணு உட்கார்ந்து போ, இல்லை கிண்ணத்தை உயர்த்திவிட்டு வேலை முடிந்ததும் இறக்கி விடு, என அவள் எதிர்பார்ப்பு. கரினும் விடவில்லை. இந்த ஆண்களின் ஆரோக்கிய வழிமுறைகள்... வேறு தினுசானவை, என்றாள் கடுகடுப்புடன். பிம் பதிலடி கொடுக்கிறதாக உடனே, பெண்கள் துடைத்துவிட்டு நாப்கின்களை அப்படியே குப்பைக்கூடையில் எல்லாரும் பார்க்கும்படி எறிந்துவிடுகிறார்கள், என்றான் பிம். எப்பப்பாரு இப்படித்தான் அவர்கள் பேச்சு. நாசூக்கோ அறிவோ அற்ற உருப்படாத பேச்சு.

காபி இருக்கா? ஸ்தஃபான் கேட்கிறான், என்னமோ நான் பரிசாரகி மாதிரி. ம்ஹும், என நான் சொன்னதே முதலில் அவர்கள் காதில் விழவில்லை. ரொம்ப அலுப்பா யிருக்கு, நான் கிளம்பட்டுமா? சின்னச் சிரிப்புடன் அவர்கள் பேசிக்கொள்கிறார்கள். ம். நாம வெளிய எங்காவது காபி சாப்பிட்டுக்கலாம். அவர்கள் வெளியேறுகையில் யானகே, உனக்கு ஒண்ணுமில்லையே, என்று கேட்கிறாள். கீழே விழுந்து முட்டியை சிராய்த்துக்கொண்ட சிறு குழந்தையைப் பார்க்கிறாப் போல என்மேல் ஓர் இரக்கப் பார்வையை இறக்கினாள். முகம் பார் அழுதுவிடுவாள் போல. ஆனால் என் பதில் - ஒண்ணில்லையே - அதைக் கேட்கிற அக்கறை அவளிடம் இல்லை. நான் தனியா இருப்பதையே விரும்புகிறேன். அவர்கள் வழியில் எங்கும் நிற்பார்கள் என்றே தோன்றவில்லை. வழியில் அவர்கள் என்னைப் பற்றி எதுவும் பேசிக்கொள்வார்கள் என்றும் நினைக்கவில்லை. என்னைப் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை தான். இப்படி இருப்பது தான் எனக்குப் பாந்தமாய் இருக்கிறது.

அமைதியாய்க் கூடத்துக்குப் போய் அமர்ந்துகொண்டு ஒலிகளுக்கு உன்னிக்க ஆரம்பிக்கிறேன். ஒரு நீண்ட அமைதி. பிறகு அந்த க்றீக். மர அதிர்வுகள். ஆனால் யாரோ சப்தம் எழுப்பாமல் குதிகாலில் அடிமேலடியாய் நடக்க முயற்சிக்கிற ஒலி அது. கதவில் இருந்து ஜன்னல் பக்கமாய் நகரும் ஒலி. திரும்பி அறையின் நடுவுக்கு வருகிறது ஒலி. ஒரு நாற்காலியோ எதோ மரச்சாமான் நகர்கிறது. அடுத்த ஒலி எனக்குப் புரிகிறது. எதோ விழுந்தாப் போல. கனமான அதே சமயம் மென்மைகலந்த எதோ.

மாடிக்காரி திருமதி தி க்ரூத்தை நான் பார்த்தது இல்லை. கதவுப்பலகையில் பெயர் பார்த்திருக்கிறேன். அதனால் என்ன. நேரில் பார்க்காவிட்டாலும், அவளை உலகில் யாரையும் விட எனக்கு நன்றாகத் தெரியும். அவளது ரேடியோ. வாக்வம் கிளீனர். ராத்திரி உணவுத்தட்டங்களை நகர்த்துதல்... எல்லாமே சப்தமாய். என் சமையலறையில் பாத்திரந் தேய்க்கிற அளவில் துல்லியம். ராத்திரிகளில் அவள் எழுந்துகொண்டு நடமாடும் சரசரப்புகள். அவளது குளியல். கழிவறை ஃப்ளஷ். சன்னல் திறத்தல்... சில சமயம் அவள் மாடி முற்றம் தொட்டிமலர்களுக்கு நீரூற்ற என் மாடியில் நீர் சிந்தும். நான் போய் நிமிர்ந்து மாடியைப் பார்த்தால் அவள் போயிருப்பாள். அவள் வீட்டைவிட்டு வெளியே போனதை நான் பார்த்ததே இல்லை.

மாடியின் சரசரப்புகள் எனக்குப் பிடித்திருந்தன. ஒருவித அமானுஷ்யத்துடன் நான் அந்தச் சத்தங்களுடன் வாழ்கிறேன். ஆ கண்ணுக்குத் தெரியாமல் யாரோ பயமுறுத்தாமல் என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்... என்பதைப்போல. ஆனால் கடந்த ரெண்டு வாரங்களாக எல்லாமே அடங்கிவிட்டது. மாடியில் இருந்து சத்தமே இல்லை. இப்போது... யாரோ நடமாடும் சத்தம்.

யாராவது கள்ளத்தனமாய் உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துவிட்டார்களா? உடை களைந்துவிட்டு கழிவறை போனபோது யோசனையாய் இருந்தது. போலிசை அழைப்பதா? அடுக்ககக் காவலாளியையா? நானே மாடிக்குப் போய் பார்த்துவிட முடிவுசெய்தபோது இரவு உடையில் இருந்தேன். ஆச்சர்யமான விஷயம். எனக்கு எதனிடத்திலும் யாரிடத்திலும் எப்பவுமே பயம் கிடையாது. துணிஞ்ச கட்டை. தனிக்கட்டையாய் வாழ நேர்கிற பெண் அப்படித்தான் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். துணிவே துணை. இரவு அங்கியை இழுத்துவிட்டுக்கொண்டு எதோ ஷூவில் காலை நுழைத்துக்கொண்டேன். ராத்திரி அப்போது மணி 11.

அழைப்பில் முதல் மணிக்கு பதிலில்லை. ரெண்டாவது முறை உள்ளிருந்து வெளியே பார்க்கும் கண்ணாடிக் குமிழில் வெளிச்சம் தெரிந்தது. ஒரு இளைஞன் கதவைத் திறந்தான். என்னைவிட ரொம்ப வயசு சின்னவன். மிருதுவாய் மாலை வணக்கம் சொன்னான். நான் மாடியேறி வந்ததே தப்பு. நான் உண்டு என் வேலை உண்டு, என்று இருக்கவே விரும்புகிறவள் நான். அடுத்தாள் வம்பு நமக்கு எதற்கு, என்கிற சாதி. ஆனால் செய்திகள் வாசிக்கத்தானே செய்கிறோம்? மக்கள் செத்துப்போய் பூட்டிய அறையில் அவர்கள் சடலம் அழுகி நாறி வாரங்கள் கழித்து கண்டுபிடிக்கப் படுகிறது. அவன் கருப்பு ஜீன்சும் கருப்பு டீ ஷர்ட்டும் அணிந்திருந்தான். அந்தச் சட்டையில் எழுத்துக்கள் ‘அயர்ன் மெய்டன்‘. அது ஒரு ராக் இசைக்குழுவின் பெயர் என்று ஞாபகம். காலில் ஓட்டை சாக்ஸ். ஷூ இல்லை.

என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். கீழ்த்தளத்தில் நான் இருக்கிறேன். மேலே நடமாட்டம் கேட்டது... திருமதி தி க்ரூத் காலி பண்ணிப் போய்விட்டதில் சந்தேகம் இல்லை. இந் நேரம் இந்தச் சத்தம்... அதான் யாராவது கன்னம் வைக்கறாங்களோன்னு தோணியது... அந்தப் பையன் சிரிக்கிறான். பரவால்ல, தைரியமா மேல தனியா பார்க்கலாம்னு வந்திருக்கீங்க. நானாயிருந்தால் போலிசைக் கூப்பிட்டிருப்பேன். சரி. மேல்வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள்னு எப்பிடி நினைச்சீங்க? வாசல் பலகை, திருமதி பி. தி க்ரூத். அதைவெச்சா?

எப்படியோ தோணிச்சு. ஒரு வயதான பெண்மணி தனியே வசிக்கிறாள்னு தான் பட்டது. அவனிடம் நான், மேல் வீட்டில் யாரையும் பார்த்தது இல்லை, என்றும் அங்கிருந்து கேட்கிற ஒலிகள் தான் எனக்கு அடையாளம், என்றும் சொன்னேன். பெண்கள் ஏற்படுத்துகிற சத்தத்துக்கும் ஆண்கள் ஏற்படுத்துவதற்கும் எதும் வித்தியாசம் இருக்கிறதா என்ன, என அவன் கேட்டான். என்னை பகிடியடிக்கிறானோ என்றுதான் முதலில் பட்டது. ஆனால் அந்த முகம் அப்படிக் காட்டவில்லை.

தெரியல, என்றேன். அவன் என்னை ஒரு பையனின் பார்வை, கேட்டுக்கொள்கிற பாவனை காட்டினான். தொந்தரவுக்கு மன்னிக்கணும். நான் படுக்கையிலிருந்து எழுந்து அப்படியே வந்திட்டேன். ஏன் அவனிடம் அப்படிச் சொன்னேன், பொய் சொன்னேன் தெரியவில்லை. இவன், இவன்தான் என்னை நான் பேசாத விஷயங்களையெல்லாம் பேசவும், பொய் சொல்லவும் வைக்கிறான். இவனைப் பார்த்தநிமிடத்தில் இவனிடம் பசப்ப ஆரம்பிக்கிறேன் நான். அப்புறம் இருவருமே பேசிக்கொள்ளவில்லை. அப்படியே ஒருவரை ஒருவர் மௌனமாய்ப் பார்த்துக் கொள்கிறோம். இப்போது நான் கிளம்ப வேண்டும்... அப்போது அவன், என்னுடன் ஒரு காபி குடிக்கறீங்களா, என்று அழைத்தான். உடனே தலையாட்டி விட்டேன். ராத்திரி நான் காபி குடித்துப் பழக்கமே இல்லை. அதுவும் இப்படி இரவு அங்கியில்... இந்தப் பையனுடன்... அவன் பின்னால் உள்ளே போகிறேன்.

அவன் போய் கதவைத் தாளிட்டபோது சட்டென உள்ளே ஒரு பொறி. அட இவனே ஒரு கொள்ளைக்காரனாகக் கூட இருக்கலாம். அவன் என்னை உள்ளே கூப்பிட்டதே கூட நான் அலறி ஊரைக் கூட்டிவிடக் கூடாது என்றுகூட இருக்கலாம். அவன் ஒல்லியாக வெளிறிய நிறமாய் இருந்தான். அவனருகே நான் அவன் தோளுக்குக் காணமாட்டேன். நல்ல தசையேறிய கைகள். இதோ என்னை அப்படியே தரையோடு அழுத்தி அமுக்கி, என் வயிற்றில் ஏறியமர்ந்து, என் கைகளை உயரவிடாமல் வரி விழ இறுக்கி, என் வாயில் எதையோ அடைத்து என்னைக் கத்தவிடாமல்...

அவன் சமையல் அறைக்குள் போனான். ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பேற்றி வைத்தான். கப்-போர்டை விரியத் திறந்தான். கோப்பைகள். காபித்தூள். வடிகட்டி. சாமான்கள் இருந்த இடங்கள் அவனுக்குப் பழகியிருந்தன. சர்க்கரை. சாக்ரீன். பால்... காபித்தூள் கிடைக்கவில்லை. நான் போயி வேணா கொண்டுவரவா? இல்ல, பரவால்ல, என்றான் உரிமையாய். அந்த அழுத்தம் துணுக்குற வைத்தது. அவன் சொன்னான். டீ சாப்பிட்டாப் போச்சு...

அந்த இல்லம் நான் நினைத்திருந்த மாதிரியே தான், ஒரு வயசான பெண்மணியின் வீடாகவே இருந்தது. டீபாயில் ஒரு டி.வி. பத்திரிகை. கோப்பை வைக்கிற சிறு தட்டுக்கள். பின்னல் வேலை செய்த சோபா கவர்கள். வலைப்பின்னல் கம்பளங்கள். சுவரில் பாடாவதி உடையில் மூதாதையர் படங்கள். நாங்கள் உட்கார்ந்தோம். அந்த சோபாவில் நான். கைவைத்த பெரிய நாற்காலியில் அவன். அவன் கைப்பகுதியில் சின்னப்பெட்டி சிறு பொத்தான்களுடன். அதை அவன் அழுத்த அதன் கீழ்ப்பக்கம் சின்னப் பட்டை அவன் கால் வைத்துக்கொள்ள வெளியே வந்தது. வேறொரு பொத்தானை அழுத்தினான். இடம் வலம் என்று சரித்து நாற்காலியில் வசதி பண்ணிக்கொண்டான். புது பொம்மையுடன் விளையாடும் குழந்தையின் பரபரப்பு அவனிடம்.

ஆ நாம இன்னும் பரிச்சயப்படல்ல. சட்டென முன்பக்கமாய்த் துள்ளிவந்து கைநீட்டினான். நான் தாஃப்னி, என்று சொன்னதற்கு வாய்விட்டுச் சிரித்தான். ஓகோ! நான் பாட்ரிக். இத்தனை கிட்டத்தில் இருந்துகிட்டு நாம சந்திச்சதே இல்லை, வேடிக்கைதான். அவன் என் கையைத் தன்கைக்குள் வைத்திருந்தான். நீங்க தனியாதான் இருக்கீங்களா?

என் வாழ்க்கை பற்றி, என் வேலை பற்றி, என் குடும்பம் பற்றியெல்லாம் அவன் மேலும் கேள்விகள் கேட்டான். புற்றீசலாய் அவனில் இருந்து கிளம்பும் கேள்விகள். எங்கே அவனைப் பற்றி நான் கேட்கவே வாய்ப்பு தந்தானில்லை. இதுமாதிரி என்மேல் ஆர்வப்பட்டு யாரும் என்னிடம் பேசியது இல்லை. அவன் கேட்கக் கேட்க நானோ வளவளவென்று அதிகமாய் என்னைப் பற்றி பினாத்திக் கொண்டிருப்பதாகப் பட்டது. என் குழந்தைப் பருவம் பற்றியும், நாலு வருஷம் முன்னால் ஒரு மோட்டார்சைகிள் விபத்தில் பலியாகி விட்ட என் சகோதரன் பற்றியும், என் அப்பா அம்மா பற்றியும், மழலைப்பள்ளியில் நான் வேலை பார்ப்பதையும்... அதில் ஒரு சுவாரஸ்மும் இல்லை, என்றாலும் அவன் தலையாட்டி கேட்டுக்கொண்டிருந்தான். மினுங்கும் கண்கள். குழந்தைகளுக்கு நான் கதைசொன்னால் அவை இப்படித்தான் கேட்கும்!

தேநீர் அருந்தி முடித்தாயிற்று. பாட்ரிக் எழுந்துபோய் அலமாரியைத் திறந்தான் தூசி படிந்து இருந்த கிரான்ட் மார்னியர் போத்தல். கிட்டத்தட்ட செலவழியாமல் முழுசாய். இரு சிறிய கண்ணாடி தம்ளர்களை டீபாயில் வைத்தான். தம்ளரை நிரப்பி ஒன்றைக் கையில் எடுத்து என் பக்கமாய் உயர்த்தினான்.

என் திடீர் விருந்தாளிகளுக்காக ...

நான் மது அருந்துவது இல்லை. என்றாலும் அதை எடுத்து அருந்தினேன். அவனுக்கும் அது பழக்கம் இல்லை என்று அவன் குடிக்கும்போது முகத்தை வைத்துக்கொண்ட தினுசில் தெரிந்தது. முன்னாடில்லாம் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்துகொண்டிருந்தார்கள் எனக்கு, என்றேன் நான். கூட வேலைபார்க்கிற சிலர், சில பெண்கள், அவர்களின் கணவன்மார்கள். ஒவ்வொரு முதல் வெள்ளிக்கிழமையும் நாங்க இங்க கூடுவோம். இதை ஏன் அவனிடம் நான் சொல்கிறேன், அதுவே எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் அந்த சந்திப்புகளைப் பற்றி மேலும் சொல்ல விஷயம் பெரிசாய் ஒண்ணும் இல்லை தான்.

அவன் சொன்னான். சனவரி அவனுக்குப் பிடித்த மாசம். அவன் பிறந்தநாள் சனவரியில் வருகிறது. இன்னும் ரெண்டு வாரத்தில். அவனுக்கு சனவரி குளிர் பிடிக்கிறது. அவன் கேட்டான். உங்களுக்கு எந்த மாசம் பிடிக்கும்? ஆ, நான் அப்படி நினைச்சிப் பார்த்ததே இல்லை, என்றேன். ஆனால் நவம்பர் மாதம், அதை எனக்குப் பிடிக்காது.

அவனுக்கு என்று பிடித்த மாதம், பிடித்த பருவம், பிடித்த பூ, பிடித்த பிராணி, பிடித்த கதைப்புத்தகம்... எல்லாம் இருக்கிறது. ஆனால் அவனிடமும் சொல்லிக்கொள்ள அவ்வளவே இருக்கவேண்டும். மனசில் இருப்பதைப் படபடவென்று கொட்டிவிடும் எல்.கேஜி. குழந்தை. அதுங்களிடம் விடுமுறை நாட்களில் என்ன செஞ்சீங்க? - என்று கேட்டால், வெளாண்டோம், என்று சொல்லும். குறிப்பாய் எதுவும் சொல்லத் தெரியாது அதுங்களுக்கு. அவன் நிசமாகவே குழந்தை தான். உற்சாகம் வற்றாத, எடுப்பார் கைப்பிள்ளை. சில சமயம் வெட்கம் பூசி விடுகிறது முகத்தில். சட்டுச் சட்டென்று உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் ஆச்சர்யப் படுகிறான். வாய்விட்டுச் சிரிக்கிறான். என்னை அவன் கேட்டான். உங்களுக்குக் குழந்தைகள் பிடிக்குமா? ஓ, என்றேன். என் வேலையே அவர்களைப் பராமரிக்கிறது தான்.

அ, அதுனால குழந்தைகள் பிடிக்கணும்னு இல்லியே. ஒரு கசாப்புக்கடைக்காரனாய் இருக்கலாம். ஆனால் வீட்டில் நாய் வளர்ப்பான். எனக்குக் குழந்தைகளைப் பிடிக்கும். அதனால் தான் நான் இந்த வேலையில் இருக்கிறேன், என்றேன் நான். அதை சற்று வெடுக்கென்று பேசினேனோ. அவன் முகம் மாறி, என்னிடம் மன்னிப்பு கோரினான். இன்னொரு தம்ளர் மது ஊற்றினான். எனக்கு வேணாம், என்றேன். ஆனாலும் அதை வாங்கி அருந்தினேன். அவன் தொடர்ந்தான். நான் ரொம்ப அடுத்தாள் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறேன். ச், அப்டில்லாம் இல்லை, என்றேன். ஆனால் அடுத்தாள் விவகாரத்தில் அதிகம் தலையிடாமல் இருக்கறது தான் நல்லது. இதை ஒரு குழந்தைக்குச் சொல்கிற கண்டிப்புடன் நான் சொன்னேன். ஆனால் இந்நேரத்தில் நானே அவனது ஆர்வப்பிடியில் மீள முடியாமல் ஈர்க்கப்பட்டு கட்டுண்டு கிடக்கிறேன். என் அன்றாட வாழ்வு சார்ந்து அவன் அக்கறைப்படுகிறதான கேள்விகள் அவை.

சில பதில்களில் அவன் எதுவுமே பேசாமல் அப்படியே உட்கார்ந்திருப்பான். என்னை உன்னிக்கிற முகம். அதில் தேக்கிய சிறு புன்னகை. உங்களுக்கு ஆண் சிநேகிதன்... என அவன் கேட்கிறான். சட்டென என் முகம் மாறிவிட்டது. எத்தனையோ தடவை யாராரோ இதே கேள்வியை என்னிடம் கேட்டாயிற்று. எது எப்படியாயினும் இது இவனுக்குத் தேவையில்லாத விஷயம். இந்த வீட்டில் நான் தனியாகவே, எந்த ஆணுடனும் அல்லாமல் வசிக்கிறேன், என்பதற்காக... பெரிய பளபளப்பான கண்களால் என்னை அவன் பார்க்கிறான். இவனுக்கு என்ன பதில் சொல்ல தெரியாமல் திண்டாட்டமாய் உணர்ந்தேன். அதனாலேயே என்மேலேயே எனக்குக் கோபமாய் வந்தது.

ஆ, இப்ப என் மேல உங்களுக்குக் கோபம். ச், அதெல்லாம் இல்ல, என்கிறேன். இப்படியே பிடியும் நழுவலுமாய்ப் போகிறது நேரம். மது அருந்தியபடி நாங்கள் சூரியனுக்குக் கீழான அனைத்தையும் பற்றி, என்னைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அவனைப் பற்றி எதுவுமே பேசவில்லை. சட்டென்று அடுத்தாளை அலட்சியம் செய்தாப்போல குண்டக்க மண்டக்க எதாவது பேசிவிடுகிறான். ஆனால் அவன் அடுத்தாளை எரிச்சல் படுத்தும் நினைப்புடன் அப்படிப் பேசவில்லை என்றும் தெரிகிறது. எனது உடை விலகி என் கால்கள் வெளித் தெரிய அவன் என் கால்களையே பார்க்கிறதை சட்டென உணர்கிறேன். என் தொடைவரை அவனால் பார்க்க முடிகிறது. கால்களை மெருகேற்றிக்கொள்ள வேண்டும், என்ற எண்ணம் தான் முதலில் வந்தது. ச், என்ன அலங்காரம் வேண்டிக்கெடக்கு. திரும்ப உடையை சரிசெய்து கொள்கிறேன். பாட்ரிக் அதைப் பார்த்து ஒரு பிடிபட்ட விழிப்பு விழிக்கிறான்.

எனக்கு அந்நேரம் போதை உச்சத்தில். ஆ இவன் எனக்காக எதையும் செய்வான், என அப்போது எனக்குத் தோன்றியது. ஐய நான் ஏன் இப்படி நினைக்கிறேன், என உடனே வெட்கம் ஆளைத் திகைக்க வைத்தது. இவனா? எத்தனை சின்னப் பையன் இவன். எனக்கு இவன்தாயார் வயசு. தலையைக் கோதி நெருக்கமாய் இவனை அரவணைக்க ஆசை உந்தியது. குழந்தைகள் செய்யுமே அதைப்போல அவன் என்னைக் கட்டிக்கொள்ள ஆசைப்பட்டேன். என் மடியில் தலைசாய்த்து என் அரவணைப்பில் இவன் கண்ணுறங்க ஆசைப்பட்டேன்.

அவன் கொட்டாவி விட நான் என் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறேன். காலை மணி மூணு. ம். நான் கிளம்பறேன், பாட்ரிக். நாளைக்கு சனிக்கிழமை தானே, என்கிறான் அவன். அதுக்கு? அவன் சோபாவில் என்னருகே வந்து உட்கார்ந்தான். உங்களுக்கு ஒரு நல்லிரவு சொல்லி முத்தம் தரலாமா நான்? ஆனால் நான் பதில் சொல்லுமுன், என் கையை எடுத்து அவன் முத்தமும் தந்துவிட்டான். தூக்கிவாரிப்போட்டது அவன் செய்த காரியம். அந்தக் கையை உருவிக் கொள்கிறேன். சட்டென துள்ளி சன்னல் பக்கமாய் ஒதுங்கினான். நான் அவனை அறைந்துவிடுவேனோ என்று பயந்தாப் போலிருந்தது. சாரி, என்றான். பரவால்ல, என்றேன் நான்.

அடுத்து அவன் சொன்னது வித்தியாசமாய் இருந்தது. உங்களை நான் ரொம்ப மதிக்கிறேன், என்கிறான் அவன். அதன்பிறகு ரொம்ப நேரம் நாங்கள் ரெண்டுபேருமே எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. ஒருவழியாக அவன்தான் திரும்பப்பேசினான். பாருங்க. வெளியே மழை. பனியெல்லாம் இப்ப உருக ஆரம்பிச்சிரும். பனியே எனக்குப் பிடிக்காது, நான் சட்டென்று சொல்லிவிட்டேன். அது உண்மைதானா என்பதில் அப்போது எனக்கே குழப்பம். உடனே அதை விளக்கவும் தலைப்பட்டேன். எனக்கு பனி பிடிக்காது. தெருவெங்கும் பனியும் உப்புமாய் குவியல்கள். பிள்ளைங்கள் பனிக்காலங்களில் உடம்பு முழுக்க துணிமணி சுற்றி மொத்தையாய் வருகிறார்கள். உள்ளே வந்து அவர்கள் மாற்றிக்கொள்ளவே அரை மணி ஆயிரும். ஷூ நிறைய பனியும் அழுக்குமாய் உள்ளே அப்பிக்கொண்டு வந்து நிற்பார்கள்.

... ஆனால் குழந்தையாய் இருந்தபோது எனக்கு பனி பிடித்திருந்தது. அப்ப எனக்கு கொள்ளையான விஷயங்கள் பிடித்தே இருந்தன. எனக்கென்னவோ அந்த நேரம் பூராவும் நான் அங்கலாய்ப்புடன் அவனிடம் பேசியதாகப் பட்டது. அவன் அவனுக்குப் பிடித்த விஷயங்களையெல்லாம் பேசுகிறான். நான்? நான் எனக்குப் பிடிக்காத விஷயங்களைப் பட்டியல் இடுகிறேன். அப்படிப் பேசுவது... என்ன இவள், எதற்கெடுத்தாலும் அஸ்து பாடுகிறாள், விரக்தி வேதாந்தியா இவள், என என்னைப்பற்றி அவன் நினைக்கக் கூடும். ஆ ஒருவேளை அது நிசமாய்க் கூட இருக்கலாம். குறைந்தபட்சம் நகரத்தில் என்னைப்போல யாரும் இரார். இம்மாதிரியாட்கள் எதாவது புலம்பி எங்கும் புழுதி வாரித் தூற்றுகிறார்கள். எனக்கு அது பிடிக்காது.

அப்படியே இருவரும் சரிகிறதாய்.... அருகில் அவன் தொடைகள் என்மேல் அழுத்திய கதகதப்பு. என் கூந்தலுக்குள் அவன் முகம் புதைக்கிறான். என் கழுத்தில் அவன் மூச்சு தகிக்கிறது. என் காதோடு என்னவோ கிசுகிசுக்கிறான். சட்டென தன்னிலை மறந்தாப்போல, ஏ நீ எத்தனை அருமையான பெண், என்கிறான். உன்னை சந்திச்சதில் எனக்கு அபார சந்தோஷம்... என்று... சொல்கிறானா? சொல்வானா?

நாளை உங்களை சந்திக்க முடியுமா? - சனிக்கிழமை நான் எங்க அப்பாம்மாவைப் பார்க்கப் போவேன், என்கிறேன். ஞாயிறு ராத்திரி என்னுடன் சாப்பிடலாம், நீங்க விரும்பினால், என்கிறேன். கூட ஒராளுக்கு சமையல்ன்றது பெரிய சமாச்சாரம் இல்லை. எனக்கு சமைக்கப் பிடிக்கும், என்று சேர்த்துச் சொல்கிறேன். அட அதொண்ணாவது நான் பிடித்துச் செய்கிறேன். இருவரும் இரவு வணக்கத்தைப் பரிமா... என் கையைப் பற்றி திரும்பவும் முத்தம் தருகிறான்.

அன்றைக்கு என் தூக்கம் போச்சு. மேலே அவனது சந்தடி. குளியலறை தண்ணீர் சத்தம். நல்ல பையன். அக்கறையும் பதவிசும் நிறைந்தவன். ஆனால் எதிலும் ஒரு தயக்கம். அந்தச் சிரிப்பில் ஒரு உள்வாங்கல், இருக்கிறது. ஐய நான் ஏன் அவனைப் பற்றி குறையாய் நினைக்கவேண்டும். ஒராள் நல்லதனமாய் நடந்துக்கிட்டால் அவங்களை நாம நம்பறதே இல்லை!

காலையில் எழும்போதே தலை பாரம். தலைவலி மண்டையைக் குடைகிறது. நாக்கு கசந்தது. காலை உணவு முடிந்ததுமே நான் சமையல் புத்தகத்தில் இருந்து புதிதாய் சமைக்கிற விஷயம் எதுவும் கிடைக்கிறதா என்று தேடலானேன். சும்மா ஒரு சாதாரண சமையல் என்றுதான் சொன்னேன். ஆனால் அவனை ஆகா, என்று சொல்லவைக்க இப்போது வேகம் வந்தது. இந்த சீசனுக்கு நல்லதாய் காய் எதுவும் கடைகளில் கிடைக்காது. அநேகமாய் எல்லாமே ரொம்ப தூரத்தில் இருந்து தருவிக்கப்... கொணர்ந்து விக்கப் பட்டவை. எல்லாமே சப்பென்று இருக்கும். அவபரைக்காய் கென்யா சரக்கு. எதுக்கு? வேணாம். உறைய வைத்த காய் எதாவது பார்த்து வாங்கலாம். அந்த ராத்திரி அப்பாவுடன் ஒரு உப்புபெறாத வாக்குவாதம்.

ஞாயிறு மதியம் பூராவும் நான் சமையல் அறையில். மாடியில் சத்தமே இல்லை. எங்காவது வெளிய கிளிய போயிருப்பானோ. ஆனால் சரியாக ஆறு மணி. அழைப்பு மணி. அவன் கையில் மகா மலர்க்கொத்து. என் கையில் முத்த மெத்து. இந்த மாதிரி எல்லாரிடமும் நடந்துகொள்ள மாட்டான் என்று நம்புகிறேன். இத்தனை பூவையும் அடுக்கும் பெரிய பூச்சாடி என்னிடம் இல்லை. அடி இவை உனக்கே அடுக்குமா? இப்போதைக்கு இருக்கட்டும் என குளியறை பிளாஸ்டிக் அண்டாவில் போட்டுவைத்தேன். எனக்கு இப்படி அடிக்கடி மலர்கள் வருவது இல்லை. அடிக்கடியாவது கொசுக்கடியாவது. வருவதே இல்லை, அதுவே நிசம். நானும் மலர்கள் வாங்குவதே இல்லை.

மூன்றாம் உலக ஏழை நாடுகளில் இருந்து தருவிக்கப்படுகின்றன அவை. மலர்கள் வளர்க்கப்படுகையில் அந்தப் படுகையில் தெளிக்கும் மருந்துகளால் அதைப் பறிக்கிறவர்கள் நோய்வாய்ப் படுகை ஆகிறது. அடியே நீ என்ன, திரும்பவும் பிலாக்கணம் ஆரம்பிக்கிறாய். உனக்கு மலர்கள் கொணர்ந்தவனுக்கு நன்றி சொல்ல வேணமா?

சாப்பிடுகையில் ஒவ்வொன்றையும் ஆகா ஓகோ என்கிறான். அவன் பேசுவதை அனுமதிக்கவே எனக்கு லஜ்ஜையாகி விட்டது. ஆனால் விருந்து சிறப்பாய்த்தான் இருந்தது. அதைச் சொல்லாமல் முடியாது. சமையல் செய்வதில் நான் நிபுணி, என அவன் சொல்ல நான் வெளிப்படையான மகிழ்ச்சியுடன் கலகலக்கிறேன். அதை அத்தனை விமரிசையாக நான் எடுத்துக்கொள்ளவும் முடியவில்லை. பெரியவர்கள் பேசுவதைப் பார்த்து குழந்தைகள் பேசும் சம்பிரதாயச் சொல்லாய்க் கூட அது இருக்கலாம். சைக்ளோஸ்டைல் வார்த்தை நகல்கள்.

அவனை நான் ஈர்க்கிறேன் என்றுதான் பட்டது. ஏன் அப்படித் தோணுகிறது தெரியவில்லை. நான் பேச என வாயைத் திறக்கும் போதெல்லாம் அவன் சாப்பிடுவதை நிறுத்தி என்னை தன் பெரிய கண்ணை உருட்டிப் பார்க்கிறான். நான் பேசிய அனைத்தையும் அப்படியே நினைவில் அவன் வைத்திருப்பான் எனத் தோன்றியது. என்னைப்பற்றி ஏற்கனவே அவனுக்கு எல்லாம் கொட்டிக் கவிழ்த்தாகி விட்டது. ஆனால் இதுவரை அவனைப்பற்றி எனக்கு லவலேசமும் தெரியாது.

அப்புறம் நாங்கள் சோபாவில் அமர்நது பேசிக்கொண்டிருந்தபோது சட்டென தன் தம்ளரை அவன் சரியாகப் பிடிக்காமல்... சோபாமீது சிந்திவிட்டான். ஏய், என நான் கிட்டத்தட்ட... குழந்தைகள் குறும்பு செய்கையில் அடிக்கிறாப் போல.... அவன் டிராயரை இறக்கி குப்புறப்போட்டு ஒரு சுரீர் சாத்துமுறை... நல்லவேளை, சுதாரித்துக் கொண்டேன். சோபாவை சுத்தம் செய்ய உப்பும் மினரல் வாட்டரும் எடுத்துவர சமையலறை போனேன்.

இந்தக் கறை போகவே போகாது. என்னால் இதைத் துடைத்தெடுக்கவே முடியாது. வெள்ளை சோபா வாங்குவது எத்தனை மடத்தனம். ஆனால் அது எனக்குப் பிடித்திருந்தது. வெள்ளை சோபா. சகோதரன் இறந்த பிறகு அதை வாங்கினேன். அவன் போய்விட்டாலும் அவனுக்கும் அதற்கும் என்னவோ ஒட்டு உறவு இருக்கிறதாக என்னில் பிரமை. நான் அந்தக் கறையை சொரசொரவென்று தேய்க்க, பக்கத்தில் செய்வதறியாமல் பாட்ரிக் நிற்கிறான். சாரி சாரி என்று திரும்பத் திரும்பச் சொல்கிறான். ஒரு புது சோபா உறை வாங்கித் தந்துர்றேன்... ஆனாலும் எனக்கு சமாதானம் ஆகவில்லை.

நான் படுக்கப் போகவேண்டும், நாளை திங்கள் இல்லியா? என்கிறேன். அவன் எழுந்துகொள்கிறான். வாசல் அருகில் இருந்து ஒரு துயரப்பார்வை தூரப்பார்வை பார்க்கிறான். சாரி. அதை விடு, என்கிறேன். நடந்தது நடந்தாகி விட்டது. நாங்கள் திரும்ப சந்திப்பதைப் பற்றி பேசிக்கொள்ளவில்லை. அவன் பேசவும் இல்லை. நான் அவனிடம் ஒரு இறுக்கத்துடன் இருந்தேன்.

நான் அவன் சத்தங்களைக் கேட்கிறாப் போல இத்தனை துல்லியமாக அவனால் என்னைக் கேட்க முடியுமா என்பது சந்தேகமே. ஆனால் புள்ளிக்குழாயடியில் குளிக்கிறபோது திடீரென்று என் நிர்வாணம் சங்கோஜப்படுத்தியது. கழிப்பறையில் நுழைந்தால் கதவைத் தாழிட்டுக்கொண்டேன். சில சமயம் ஃப்ளஷ் செய்யாமல் அப்படியே வந்தேன். அவன் காதுகளில் இருந்து தப்பிக்கிற ஜாக்கிரதை அது. அடிக்கடி தாகம் எடுத்து நிறையத் தண்ணீர் குடிக்கிறேன். என் வாழ்க்கையில் பாதி ஒண்ணுக்கடித்தே தீர்ந்துவிடுமாய் இருந்தது. இன்னுஞ் சொன்னப்போனால் இப்பதான் எனக்கே நான் எத்தனை நாராசமான சப்தங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிந்தது. இப்போது தெருவில் அணிகிற ஷூக்களை வீட்டுக்குள் மாட்டித் திரிந்தேன். வாக்வம் கிளீனரைப் பயன்படுத்தும்போது சத்தமாய் வானொலி வைத்தேன். எனக்குள்ளேயே திட்டுவதும், எதாவது பாடுவதுமாய்... இந்த இழவையெல்லாம் விட்டுத் தொலைஞ்சால் தேவலை என்றிருந்தது. மிருதுவான அதிகம் சத்தம்போடாத ஸ்லிப்பர்களை வாங்கிவந்தேன். கண்ணாடி தம்ளர் என எதையாவது கீழே போட அது விழும் சத்தத்தில், மேலேயிருந்து பதில் சத்தம் எதும் வருகிறதா என்று உன்னித்தேன். ஆனால் முற்றான அமைதி.

அவன் இத்தனை கிட்டத்தில் இருக்கிறதே எனக்கு என்னமோ போலிருந்தது. மேலே என்ன செய்துகொண்டிருக்கிறானோ கடவுளுக்கே வெளிச்சம். ஒருவேளை என் சப்தங்களை அவன் உன்னித்துக் கேட்டவாறிருக்கலாம். அவனிடம் இருந்து தப்பிக்கிற மோஸ்தரில் நான் வெளியே நிறைய சுற்றித் திரிய ஆரம்பித்தேன். வெளியே குளிர்காலம் ஆரம்பித்து விட்டாலும் எதாவது கஃபேயில் அமர்ந்தோ, வெளியே உலாவியோ பொழுதை நகர்த்தினேன். சளிபிடித்து ஜன்னி கின்னி வராமல் இருக்க வேண்டுமே. போன வருடம் உள்ளே இன்ஃபெக்ஷன் வந்து நான் வெளியே எங்குமே போக மறுத்துவிட்டேன். ரெண்டுநாள் மூணுநாள் என்று விடுப்பு. காய்ச்சல் மாத்திரைகளை எடுத்துக்கொண்டேன். பிற்பாடு ஜனேக்கும் கரினும் கிண்டலடித்தார்கள். இரத்தப்போக்கு! அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு இரத்தப்போக்கு என்றால் ஒண்ணே ஒண்ணுதான்...

மூணு நாளுக்குப் பிறகு பாட்ரிக் அழைப்பு மணியை அடிக்கிறான். நான் அப்போது தான் வேலையில் இருந்து திரும்பி யிருந்தேன். நான் வருவதற்காக அவன் காத்திருந்தான் போல. கையில் சோபாவுக்குப் புது உறை. கூட பரிசுக்காகிதம் சுற்றி எதோ. அவனும் நானுமாய் சோபாவுக்கு உறை மாற்றினோம். எங்கள் கரங்கள் இடித்துக்கொண்டன. அந்தப் பரிசு, ஒரு மீன் வாணலி. அன்றைக்கு ராத்திரி இவன் சாப்பிட வந்தபோது பேச்சுவாக்கில் நான் சொன்னது - ஒரு மீன் வாணலி இருந்தால் தேவலை ... அதை ஞாபகம் வைத்துக்கொண்டு வாங்கிவந்திருக்கிறான். ரொம்ப விலையிருக்குமே. என்ன பைத்தாரத்தனம்? இதையெல்லாம் நீ வாங்கித் தரணும்னு இல்லை இவனே.

ஆனால், உங்களுக்கு நான் ரொம்ப சிரமம் கொடுத்திட்டேன், அதுக்காக... என்கிறான். புன்னகை செய்கிறான். முதல்முறையாக நாங்கள் முத்தமிட்டுக் கொள்கிறோம். யதார்த்தமாய் அப்படி ஆகிப்போனது. யார் அதை ஆரம்பித்தார்கள். அவனது முத்தங்கள் கொஞ்சம் ஆவேசமானவை. என் உதடுகள் மேல் அவன் உதடுகளைப் பதிக்கிறான். தன் அதரங்களை விரிக்கிறான் சுருக்குகிறான். என்னை அப்படியே கடித்துத் தின்கிறாப் போல. அவனின் அழுத்தமான பிடியில் நான். எத்தனை திடகாத்திரம் இவன், என்றிருந்தது. என்னால் அசையக்கூடவும் கூடவில்லை. என்ன இப்பிடிப்போட்டு அழுத்தறே... என்கிறேன். சட்டென பிடி தளர்த்திவிட்டு, சாரி, என்கிறான். ஆ வூன்னா சாரி. அது அவனுக்குப் பிடிக்கிறது. சாரி வள்ளல்! என்னை அப்படி முத்தமிட்டதில் அவனுக்கு லஜ்ஜையாய் இருக்கிறது.

எனக்குள்ளே யோசனை... என் உடைகளை அவனே அவிழ்த்து, என்னோடு படுத்து உறங்குகிறான் அவன். இதோ இந்த புதிய உறையிட்ட சோபாவில். விந்துக் கறை போகத்தான் போகாது. நான் ஏன் இப்படி கண்டபடி காணாதபடி நினைத்துக் கொண்டிருக்கிறேன்?... அவனோ என்னை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறான்.

திரும்ப அவன் தன் மாடிக்குப் போய்விட்டான். ஆனாலும் என்னுள்ளே அவனைப் பற்றியே அலை. அவனைப் பற்றி இன்னமும் எனக்கு எதுவுமே தெரியாது. அந்த வீட்டின் சாமான்கள் எல்லாம் அவனுடையதா, அதுவே தெரியாது. அவன் அங்கே தான் வசிக்கிறானா, கொஞ்ச காலத்துக்கு தங்க வந்தவனா? அவனது பெயர் நடு இனிஷியல் என்ன? வயசு? பார்க்கும் வேலை? ஒரு இழவும் அறியேன் நான். ஆனால் பரிசு என்று தாராளமான கைவீச்செடுப்பு இருக்கிறது.

என்னையும் இவனையும் சேர்த்துப் பார்க்க நேர்ந்தால் அந்த யானகேயும் கரினும் என்ன சொல்வார்களோ? விழுந்துட்டுது பட்சி, என்பார்களா? இந்த வயசுக்கு மேல அவளை இப்டில்லாம் பேசக்கூடாது, என்பார்களா? அல்லது, சும்மா கிடைக்குமா? அவ காசுக்குதான் அவன் அவள்பின்னால் அலைகிறான். அவளை அவன் பயன்படுத்திக்கொள்கிறான்... என்பார்களா? அவர்கள் என்ன சொன்னாலும், நினைத்தாலும்... நான்தான் அவனைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

அதற்குப் பிறகு ரெண்டு மூணு நாளுக்கொரு தரம் நாங்கள் சந்தித்துக்கொண்டோம். சிலபோது அவன் கீழே இறங்கி வருவான். நான் மேலே அவனைத் தேடிப் போவதும் உண்டு. நாங்கள் எப்போது வீட்டில் இருப்போம், என்பது இருவருக்குமே தெரியும். சில சமயம் தொலைபேசியிலேயே மணிக்கணக்காய்ப் பேசுகிறதும் உண்டு. பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே எனக்குக் குழப்பமாகி விடும், இவன் குரல் தொலைபேசியில் இருந்து கேட்கிறதா, மேற்கூரையில் இருந்தா?

ராத்திரி ஒண்ணாய் உணவுகொள்கிறபோது நிறைய மது அருந்தினோம். ஆனால் அவன் நிதானத்தை இழந்ததே இல்லை. நாங்கள் உட்கார்ந்து வெகுகால சிநேகிதர்களைப் போல பேசிக்கொண்டோம். பிரியும்போது மாத்திரம் சின்ன முத்தம். அது பழக்கமாகவே ஆகியிருந்தது. நான்தான் ஃப்ரன்ச் முத்தம் ஆரம்பித்தது. என் நாவால் அவன் வாய்க்குள் அவன்நாவைத் துழாவினேன். அவனை சிரித்தபடி தொட ஆரம்பித்திருந்தேன். பிறகு அவனும் அப்படிச்செய்தான். ஆனால் விரல் நுனியால் நாசூக்காக அதைச் செய்தான். என் இடுப்பிலும் அடிமுதுகிலும் அவன் வருடினான். அடிமுதுகில் எப்பவாவது இம்சையாய் இருக்கும் எனக்கு. அவன் அழுத்தம் இதமாய் இருந்தது. அவன் கையை எடுத்து என் மார்பில் வைத்துக் கொண்டேன். கொஞ்சநேரம் கையை அங்கேயே வைத்திருந்தான். பிறகு எடுத்துக்கொண்டான்.

அவனுக்கு அவகாசம் வேண்டியிருக்கலாம். எனக்கு அவசரமாய் இருந்தது. எனக்கு அவசரம் என்று அவனிடம் நான் சொல்லவில்லை தான். எனக்கே உள்சூட்சுமம் அபாரமாய் வேலை செய்கிறது. எதைப் பேசணும், எதைப் பேசக்கூடாது, என சதா அது உள்ளே உழப்புகிறது. அவனை நான் உற்று அவதானிக்கிறேன். கவனிக்கிறேன்.
சில இரவுகளில் அவன் வீடு வரமாட்டான். அந்நாட்களில் எனக்கு உறக்கம் பிடிப்பது இல்லை. அப்படியே அமர்ந்தபடி மாடி சத்தங்களை எதிர்பார்த்து இருந்தேன். காலையில் மகா சோர்வாய் இருக்கும். இப்படியெல்லாம் செயல்படுவது எனக்குப் பிடிக்கவும் இல்லை. ஆனால் நான் அப்படியே தான் செயல்பட்டேன். அடுத்தமுறை நாங்கள் சந்திக்கிறபோது முதல் காரியமாக அவன் எங்கே போயிருந்தான் என்று சொல்லிவிடுவான். அப்பா அம்மா கூடவோ, யாரும் நண்பர்களோடோ, அதுவரை எனக்குச் சொல்லாத யாருடனோ இருந்துவிட்டு வந்திருப்பான். நான் அவன் மீது நம்பிக்கையில்லாமல் பார்ப்பேன். புரியட்டும் என் ஏக்கம் இவனுக்கு.

வேலையிடத்தில் யானகே என்னாச்சி இவளே... என்று கேட்டாள். உடம்பு சரியா இல்லியா என்ன? நான் ரொம்ப ஆயாசமாய் இருக்கிறதாக அவள் சொன்னாள். சரியான தூக்கம் இல்லை, அவ்ளதான், என்கிறேன். இளைத்திருக்கிறேன் இப்போது. பசியே இல்லைன்னால் நான் என்ன செய்யறது? யானகே ஸ்தஃபானைனைப் பிரியப்போகிறதாகச் சொல்கிறாள். அதுதான் அவளது புத்தாண்டு பிரதிக்ஞை. அவனிடம் இனி தான் அவள் சொல்லப் போகிறாள்.

அவள் பிரச்னையை என்னிடம் வந்து கொட்டுகிறாள். அவரவருக்கு எதாவது பிரச்னை என்றால் என்னிடம் வந்து கொட்டிவிட்டுப் போகிறார்கள். ஆனால் நான் அறிவுரை சொன்னால் யார் எடுத்துக் கொள்கிறார்கள்? நீ நினைக்கிறா மாதிரி விஷயம் அத்தனை சுலபம் இல்லைன்னு என்னிடமே திரும்பிச் சொல்லியாகிறது. கரினுக்கு மனசு சரியில்லை இப்போது. ஏன்னு அவளுக்கு பிடிபடவில்லை. சில சமயம் அவளைச் சமாளிக்கவே முடியாமல் போகிறது. பிள்ளைகளையே அப்போது உண்டு இல்லைன்னு பண்ணிருவா. அவள் கொடுக்கும் அளப்பறையில் எதாவது குழந்தை அழ ஆரம்பித்து, இவளும் அழ ஆரம்பிப்பாள்.

எனக்கு உன்னை நிசமாவே பிடிச்சிருக்கு, என்கிறான் பாட்ரிக். உன்னை நான் அடைஞ்சது என் அதிர்ஷ்டம், என்கிறான். என்னை அவன் முத்தமிடுகிறான். ஆனாலும் என்னிடம் இருந்து அவன் விலகினாப் போலவே நடந்துகொள்கிறான். இவன் உடம்பில் எதுவும் பிரச்னையோ என்றுகூட நான் நினைத்தேன். ஒரு பெண்ணுடம்பின் அருகாமையில் இவன் இப்படி அடக்கி வாசிக்கிறானே. பார்க்க திடகாத்திரமாய்த் தான் இருக்கிறான். என் ஆத்திரம் அறியாத திடகாத்திரம்... ஆனால் பார்ப்பதை வைத்துச் சொல்ல முடியுமா என்ன? நாட்டில் குறி விரைத்தெழாத எத்தனையோ ஆண்கள், செக்சில் ஈடுபாடு அற்றவர்கள், இருக்கிறார்கள். இப்ப ஆண்களின் விந்து வீர்யமும் அடங்கிட்டு வருது. கருத்தடை மாத்திரைகளில் சேர்க்கப்படும் பெண் ஹார்மோன்களின் உபயம் இது.

இப்படியே இதை கயிறு தளர்த்திக்கிட்டே விட முடியாது. இம்மாதக் கடைசி வரை பார்க்கப் போகிறேன். அவனா எந்த முடிவுக்கும் வரவில்லை என்றால் நானே இதை முடிவுக்குக் கொண்டு வருவேன். ஆனால் முடிவு என்று நான் என்ன சொல்ல வருகிறேன். எனக்கே எப்போது அவன் முடிவு எடுப்பான் என்பதைத் தீர்மானம் செய்ய முடியாதிருந்தது. என்ன செய்ய வேண்டும் அவன்? என் உடையைப் பிரித்திழுத்து அப்படியே சோபாவில் என்னை அமுக்கி என்மேல் ஆளுமை செய்வானா? அப்படி நடக்காது தான். அவன் என்னிடம் மனம்விட்டுப் பேசுதல். என்னை நம்புதல். என்னிடம் தன்னை ஒப்படைத்தல்... அப்படியான சில வார்த்தைகள்.

அடுத்த நாள் வீடு திரும்புகிறேன். லயொனல் ரிச்சி பாடிய பாடல் ‘ஹலோ!‘ மேல் தளத்தில் இருந்து கேட்டது. பாட்ரிக் ஒருமுறை வந்தபோது நான் போட்ட இசை. அந்த சிடியை அவனே வாங்கியிருக்கிறான். இப்போது நான் வருகையில்... அவர். நான் வருவதற்குக் காத்திருந்து எனக்கும் அதே முகமன்

இதோ அவன் காலடிச் சத்தம். கீழிறங்கிப் போகிறான். என் வீட்டைத்.. தாண்டி... தெருக் கதவு சாத்துகிற ஒலி கூடவே. நள்ளிரவுக்குப் பின்தான் அவன் திரும்பி வந்தது. மரத்தள அதிர்வுகள். கூட யாரையோ கூட்டி வருகிறானோ? சே அப்படியெல்லாம் இராது.... பின் அமைதி. அமைதி தான் பெரிய எதிரி. எனக்குத் தூக்கமே இல்லை. பல நாளாக என்னால் தூங்கவே முடியவில்லை. என்னவெல்லாம் கோட்டித்தனமான கற்பனைகள். இப்படியெல்லாம் அச்சு பிச்சு சிந்தனைகளை நான் உடனே வெட்டி விரட்டியாக வேண்டும்.

பாட்ரிக் தனது பிறந்த நாளில் எனக்கு விருந்தை அவனே சமைத்தான். எனக்காக என்னவெல்லாமே பிரயத்தனப் பட்டிருந்தான். உணவு மேசையில் சாக்லேட்டால் லெடிபேர்ட்ஸ் கூட செய்து வைத்திருக்கிறான். நான் சாக்லேட்டை ஈஷிக்கொண்ட பாவனையில் என் ரவிக்கையை கறைப்படுத்திக் கொண்டேன். அப்படியே ரவிக்கையைக் கழற்றி சரியாய் அதை அலசிவர எடுத்துப் போனேன். சமையல் அறைவரை என்னுடன் கூடவே வந்தான் பாட்ரிக்.

என்னவோ பேசினோம். அவன் என்னைப் பார்த்தபடி யிருந்தான். ஆனால் சலனப்படாதது போலவே நடந்து கொண்டான். அவன் முன்னால் நான் முழு நிர்வாணமாய் ஆனாலும் அவன் கவனிப்பானா தெரியவில்லை. அது சராசரி நபரின் இலக்கணம் அல்ல. என்ன யோசிக்கிறான் இவன்? கீழே போய் இன்னொரு சட்டையை மாட்டிக்கொண்டு வந்தேன். மேல் தளத்தில் அவன் கழிவறைக்குப் போவது கேட்கிறது. இருமுறை ஃப்ளஷ் செய்கிறான். ம். நான் மேலே போகப் போவது இல்லை. சொல்லப் போனால் நாங்கள் தள்ளியிருக்கையில் நெருக்கமாய் உணர்கிறோம். ஒருத்தரை ஒருத்தர் எங்கள் சத்தங்களால் அதிகம் புரிந்து கொள்கிறோம்.

விருந்தில் நிறைய ஒயின் குடிக்கிறோம். முழு போத்தல் ஒயின். பிரிவின் முத்தம். சட்டென அவன் மெல்லப் பேசினான். இது... நல்லது இல்லை, என ஆரம்பித்து பிறகு பேசவில்லை. இப்போது நான் என் படுக்கையில். உறக்கம் வராது. எனக்கு நேர் மேலே அவன். சில கஜம் தூரத்தில். தொடைகளை விரிக்கிறேன். என் யோசனையில் அவன் என் மேல்.... இயங்குகிறான் அவன். என் கைகளை அழுத்திப் பிடித்திருக்கிறான். என்னை முத்தமிடும் போதெல்லாம் அப்படியே இறுக்கிப் பிடித்திருப்பான்

அவன். என் சடையைப் பிடித்து இழுக்கிறான். என் முகத்தில் அறைகிறான். என் கால்களால் அவனைச் சுற்றிக் கொள்கிறேன். விரகப் பட்டினி கிடந்தாப்போல என்னை அவன் முத்தமிடுகிறான். இருவருக்கும் வியர்த்து வழிகிறது. ஒரே அமைதி. அவன் மூச்சு மாத்திரம் எனக்குக் கேட்கிறது. என் பிரிந்து கிடக்கும் கூந்தலில் அவன் மூச்சு தகிக்கிறது. கைகளை விரித்து... கிசுகிசுக்கிறேன். வா! வா! அபார நெருக்கத்தில், சில கஜ நெருக்கத்தில் அவன். அவனை என்னால் உணர முடிகிறது.
----
storysankar@gmail.com

Wednesday, April 8, 2015

ஆளுமை ஜெயகாந்தன்

அஞ்சலி ஜெயகாந்தன்

அரியணை அனுமன்கள் தாங்க
எஸ். சங்கரநாராயணன்

ஜெயகாந்தன் இறந்துவிட்டார். கேள்விப்பட்டவுடன் ஆச்சர்யமான விஷயங்கள் நினைவில் அலைமோதுகின்றன. லா.ச.ரா., சுஜாதா போன்ற பேராளுமைகளைப் போன்றே ஜெயகாந்தனும் சாமான்ய வாசக மகா சமுத்திரத்தில் அலைக் கிளர்ச்சிகளைத் தோற்றுவிக்கிறார்கள். கேள்விப்பட்டு பிறகு ஜெயகாந்தனை வாசிக்க இன்றைய தலைமுறை வந்திருக்கும். அவரது எழுத்தின் நேர்மை, அவர் விவாதிக்கும் பொறுப்பு, அப்புறம் அந்த மகா எணிமை போன்ற அம்சங்கள் இன்றைய இளைஞர்கள் வரை அவரை கவனிக்க வைத்தன.

தொடர்ந்து முப்பது நாற்பது வருடங்களாக அவர் பெரிதாய் எழுதிவிடவில்லை. ஆனாலும் எழுத்துலகில் அவரது இடம் எப்படியோ வாசக மனதில் தக்கவைக்கப் பட்டிருந்தது. அனுமன் போல அவரது பீடத்தை வாசகர்கள் எப்படியோ தங்கள் மனதில் உயர்த்திப் பிடித்தே வைத்திருந்தார்கள்.

ஜெயகாந்தன் சொன்னவற்றையெல்லாம் பொருட்படுத்தினார்கள் சனங்கள் என்பது அல்ல. அவ்வப்போது, “கஞ்சா பழகுங்கள்“, என்பது போல அவரது அறிக்கைகளை சிரித்தபடி சனங்கள் வேடிக்கை பார்த்தார்கள், அவர்மேல் கொண்ட அதே மரியாதை விலகாமல், என்பது ஆச்சர்யம். அவருக்கு ஒரு ‘செல்ல‘ இடம் எப்படியோ அவர்கள் அனமதித்திருந்தார்கள்.

கதைகள் தாண்டி சமூக அக்கறை சார்ந்து அவரது உரையாடல்கள், பேட்டிகள், கட்டுரைகள் என்று பல தளங்களிலும் ஜெயகாந்தன் கவனிக்கப்பட்டார். அதாவது தன்னை அவர் அப்படி ஓயாமல் வெளிப்படுத்திக் கொண்டே வளைய வந்தார். அவர் கருத்துகளை வெளியிடும் போது ஒரு அதிரடித்தன்மை இருக்கும். அதைக் கோப்படாமல், “அவரது பாணி இது“ எனறு எல்லாரும் புரிந்துகொள்ள முடீந்தது. இது ஆச்சர்யம் அல்லாமல் வேறு என்ன?

இது எப்படி அவருக்கு, அவரிடம் நமக்கு சாத்தியம் ஆனது… ஜெயகாந்தன் கருத்துகளை மிகுந்த தன்னம்பிக்கையுடன் அழுத்தமாக ஆணித்தரமாக முழங்கனார். சாகித்ய அகாதமியின் ‘ஆண்டின் சிறந்த எழுத்தாளர்‘ பரிசு எப்பவுமே பல்வேறு சிபாரிசுகளின் அடிப்படையிலேயே, தகுதியற்ற நபர்களுக்கே தொடர்ந்து வழங்கப்படுகிறது. தரமான எழுத்தாளர்கள் மீண்டும் மீண்டும் அவமானப்பட நேர்கிறது… என்கிற மாதிரி ஒரு கருத்தை ஜெயகாந்தன் விமரிசிக்கும் பாணி தனித்தன்மையானது. “ஆண்டுப் பரிசு எல்லா எழுத்தாளர் பெயருடனும் சீட்டுக்குலுக்கிப் போட்டு எடுங்கள். அப்பகூட தப்பித் தவறி சரியான நபருக்குப் பரிசு போக வாய்ப்பு இருக்கிறது. வருடா வருடம் தப்பான ஆளுக்கே தருகிறீர்கள்“ என்பார் ஜெயகாந்தன்.

தமிழ் சிற்பக் கலையில் ஒரு முக்கிய அம்சம் உண்டு. நரசிம்மர், துர்க்கை போன்ற உக்கிர விக்கிரங்களை வடிவமைக்கும் போது அதில் கோபம் இருக்கும். வெறி இராதபடி கவனமாய்த் தவிர்க்க வேண்டும், என்பது மரபு. மேற்கத்திய பாணி ஓவியங்களில், சிற்பங்களில் இந்த தனித்தன்மையைப் பார்க்க முடியாது. சிற்பங்களில் கலை யழகு முக்கியம். இது இந்திய மரபு. இதை நாம் சாதித்துக் காட்டியிருக்கிறோம். நம் பெருமை இது.

ஜெயகாந்தன் கோபமாய்ப் பேசுவார். ஆனால் எதிராளி மனம் புண்பட மாட்டான். வேறு எந்த எழுத்தாளருக்கும் இது வாய்க்கவே இல்லை. மாற்றுக் கருத்துகளை அவர் மிக விரும்பினார். தன்னை சுயம்புவாக, சுதந்திரப்பட்ட பறவையாகவே அவர் உணர்ந்தார். தன்னைத் தானே பறக்க விட்டுக் கொண்டார் அவர். தன் கொடியைத் தானே ஏற்றிக் கொண்டார் அவர். அவ்வளவில் புதுமைப்பித்தனை விட இவர் வெற்றி பெற்றதாகவே கொள்ள முடியும். ஆச்சர்யம்.

ஜெயகாந்தனிடம் நான் பெரிதும் வியக்கும் விஷயம். கட்டுரைகளில் அவர் காட்டும் பல்கடித்த அழுத்தம், கதைகளில் மகா சாதுவாய் முகம் மாறிப் போகிறது. கோபக் கூத்தாடிய பாரதி, காதலியிடம்,நின்னைச் சரணடைந்தேன், என நெகிழ்கிறாப் போல. எழுதும்போதே நிறைய வாசித்தார் ஜெயகாந்தன். அவற்றைத் தொட்டும் விரித்தும் கதைகளிலும் கட்டுரைகளிலும் அவர் விவாதித்தார். மேடைகளில் அவற்றை தன் ஆளுமையாகப் பகிர்ந்தார். மேடையில் அவர் பேசுகையில், அப்போது தான் மூளையில் உதித்தாப் போல, ஆனால் ஏற்கனவே யோசித்து வந்ததைப் பகிர்வார் அவர். அந்தப் பாணி எனக்கு அவரிடம் பிடிக்கும்.

படைப்பு வேறு, படைப்பாளன் வேறு என்றெல்லாம் வாதங்கள் வருகின்றன. எழுத்தாளன் வேறு படைப்பு வேறு அல்ல – என ஜெயகாந்தன் எழுதியதைப் பற்றியே பேசினார் என்பது முக்கியம். ஒளிந்து கொள்ள, ஜகா வாங்க அவர் முயற்சி செய்தது கூட இல்லை.

கடைசி வாசகனுக்கும் அவர் கதை சொன்னார். ஆனந்த விகடன் போன்ற பெரும் சுற்று இதழ்கள் அவருக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தன, என்பதால் அது அமைய முடிந்தது.

மத்த எந்த எழுத்தாளனுக்கும் இல்லாத பெருமை ஜெயகாந்தனுக்கு, பாரதிக்குப் பிறகு, உண்டு. அவரது பெயரை தங்களுடன் இணைத்துக்கொள்ள ஒரு பின்வரிசை எழுத்துப்படை அவாவுற்றது. ஜெயகாந்தனைத் தொட்டே, ஜெயந்தன், ஜெயானந்தன்… என்றெல்லாம் எழுத்தாளர்கள் உருவானர்கள் என்பது ஆச்சர்யம் அல்லவா?

வாழும்போது அவர் பெற்ற சிறப்பு அது. வாழும்போதே பொலிவுடன் வாழ்ந்தவர் ஜெயகாந்தன். இறப்பு அவருக்கு இல்லை.

ஜெயகாந்தனைப் போல பீடம் வேறு ஒருவருக்கு இல்லை. அது உருவாவது. அமைத்துக் கொள்வது அல்ல. ஜெயகாந்தன் தொடர்ந்து இப்படி கொத்ணடாப்படுவார் என்றே நம்பலாம்.

Friday, April 3, 2015

உலக இலக்கியம் - மொழிபெயர்ப்பு

கேளா ஒலிகள்
கேட்கிறவள்
பீட்டர் ஸ்டாம் (சுவிட்சர்லாந்து)
 *
ஜெர்மானிய மொழியில் இருந்து
ஆங்கிலத்தில் (Expectations) 
மைக்கேல் ஹோஃப்மன்
தமிழ் வடிவம் எஸ். சங்கரநாராயணன்
*

நீங்கள் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் எத்தனையோ சப்த களேபரங்களின் நடுவே ஒரு தனி ஒலிக்குறிப்பை என்னால் பிரித்தறிய முடியும். பேரோசை என்றில்லை சின்ன சிணுக்கம். அதைக்கூட நான் அறிந்துகொண்டு விடுவேன். ஒலிகளுக்காக என் காதுகள் ஆர்வப்பட்டுக் காத்திருக்கின்றன. சவாலாய்க் கூடச் சொல்வேன். மத்தவர்கள் கேட்காத ஒலிகளைக் கூட நான் துல்லியமாக அறிவேன். இந்த அடுக்கக மேல்தளத்து தரைப் பலகைகளின் அதிர்வொலிகளை இங்கே சாப்பிட வருகிறவர்கள் கேட்டிருப்பார்களா சந்தேகமே. எதுவும் நடக்காத மாதிரி அவர்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் இருப்பார்கள். அரட்டையும் சிரிப்புமாய் அவர்கள் நான் கொடுக்கும் ஒயினை அருந்தி நான் சமைக்கும் உணவு வகைகளைச் சாப்பிடுகிறார்கள். நன்றி என்றோ, சூப்பரா இருக்கு என்று ஒரு பாராட்டோ இதுவரை அவர்கள் என்னிடம் சொன்னது கிடையாது. இங்கே வந்து என் உணவைச் சாப்பிடுவதே அவர்கள் எனக்குச் செய்கிற உபகாரம் என நினைப்பு அவர்களுக்கு.
 கணக்கெடுத்துப் பார்த்தால் தெரியும். பெரும்பாலான பெண்கள் தங்கள் ஆம்பளைத் துணைகளை வேலையிடத்தில் தான் கண்டுகொள்கிறார்கள். ஆனால் எங்கள் வேலை ஐந்து ஆறு வயசுச் சிறார்களைப் பராமரிப்பதாக இருக்கிறது. கூட அவர்களின் ஜோடி சேர்ந்த அப்பாக்கள் அல்லது தனிமரமான அம்மாக்கள். இவர்களில் நான் துணையெனத் தேட தனி ஆண் கிடையாது! ஸ்கௌட்டுகளாக இருந்தபோதே கரினும் பிம்மும் சிநேகமானார்கள். ஒரு விடுமுறை ஊர் சுற்றலில் ஆஸ்திரேலியாவில் யானகேயும் ஸ்தஃபானும் சந்தித்துக் கொண்டார்கள். அந்தக் கதையை ஒரு நூறு தரமாச்சும் அவர்கள் சொல்லிவிட்டார்கள். ரெண்டு டச்சுக்காரர்கள், ஆனால் சந்தித்தது ஆஸ்திரேலியாவில்! இது விதி அன்றி வேறென்ன? அதை மீற யாரால் முமடியும்? இப்போது அவர்கள் தங்கள் புத்தாண்டு பிரதிக்ஞைகளைப் பற்றி பிரஸ்தாபித்துக் கொண்டாகிறது. ஒண்ணுக்குப் போகும்போது உன் இருக்கையை உயர்த்திக்கொள், கரின் பிம்மிடம் சொல்கிறாள். எல்லா ஆண்களும் அப்படியே நின்னாப்லயே அடிச்சிர்றார்கள். .. என்பது அவளுக்கு எரிச்சல். ஒராள் சொல்லித்தான் செய்யணுமா? நீயே அப்பிடிப் பண்ணிக்கக் கூடாதா, என்று யானகே அவனைக் கடிந்து கொண்டாள். அவள்தான் ஸ்தஃபானை பெண்களைப் போல உட்கார்ந்து ஒண்ணுக்கடிக்கக் கற்றுத் தந்ததாகச் சொன்னாள். ஒண்ணு உட்கார்ந்து போ, இல்லை கிண்ணத்தை உயர்த்திவிட்டு வேலை முடிந்ததும் இறக்கி விடு, என அவள் எதிர்பார்ப்பு. கரினும் விடவில்லை. இந்த ஆண்களின் ஆரோக்கிய வழிமுறைகள்... வேறு தினுசானவை, என்றாள் கடுகடுப்புடன். பிம் பதிலடி கொடுக்கிறதாக உடனே, பெண்கள் துடைத்துவிட்டு நாப்கின்களை அப்படியே குப்பைக்கூடையில் எல்லாரும் பார்க்கும்படி எறிந்துவிடுகிறார்கள், என்றான் பிம். எப்பப்பாரு இப்படித்தான் அவர்கள் பேச்சு. நாசூக்கோ அறிவோ அற்ற உருப்படாத பேச்சு.
 காபி இருக்கா? ஸ்தஃபான் கேட்கிறான், என்னமோ நான் பரிசாரகி மாதிரி. ம்ஹும், என நான் சொன்னதே முதலில் அவர்கள் காதில் விழவில்லை. ரொம்ப அலுப்பா யிருக்கு, நான் கிளம்பட்டுமா? சின்னச் சிரிப்புடன் அவர்கள் பேசிக்கொள்கிறார்கள். ம். நாம வெளிய எங்காவது காபி சாப்பிட்டுக்கலாம். அவர்கள் வெளியேறுகையில் யானகே, உனக்கு ஒண்ணுமில்லையே, என்று கேட்கிறாள். கீழே விழுந்து முட்டியை சிராய்த்துக்கொண்ட சிறு குழந்தையைப் பார்க்கிறாப் போல என்மேல் ஓர் இரக்கப் பார்வையை இறக்கினாள். முகம் பார் அழுதுவிடுவாள் போல. ஆனால் என் பதில் - ஒண்ணில்லையே - அதைக் கேட்கிற அக்கறை அவளிடம் இல்லை. நான் தனியா இருப்பதையே விரும்புகிறேன். அவர்கள் வழியில் எங்கும் நிற்பார்கள் என்றே தோன்றவில்லை. வழியில் அவர்கள் என்னைப் பற்றி எதுவும் பேசிக்கொள்வார்கள் என்றும் நினைக்கவில்லை. என்னைப் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை தான். இப்படி இருப்பது தான் எனக்குப் பாந்தமாய் இருக்கிறது.
 அமைதியாய்க் கூடத்துக்குப் போய் அமர்ந்துகொண்டு ஒலிகளுக்கு உன்னிக்க ஆரம்பிக்கிறேன். ஒரு நீண்ட அமைதி. பிறகு அந்த க்றீக். மர அதிர்வுகள். ஆனால் யாரோ சப்தம் எழுப்பாமல் குதிகாலில் அடிமேலடியாய் நடக்க முயற்சிக்கிற ஒலி அது. கதவில் இருந்து ஜன்னல் பக்கமாய் நகரும் ஒலி. திரும்பி அறையின் நடுவுக்கு வருகிறது ஒலி. ஒரு நாற்காலியோ எதோ மரச்சாமான் நகர்கிறது. அடுத்த ஒலி எனக்குப் புரிகிறது. எதோ விழுந்தாப் போல. கனமான அதே சமயம் மென்மைகலந்த எதோ.
 மாடிக்காரி திருமதி தி க்ரூத்தை நான் பார்த்தது இல்லை. கதவுப்பலகையில் பெயர் பார்த்திருக்கிறேன். அதனால் என்ன. நேரில் பார்க்காவிட்டாலும், அவளை உலகில் யாரையும் விட எனக்கு நன்றாகத் தெரியும். அவளது ரேடியோ. வாக்வம் கிளீனர். ராத்திரி உணவுத்தட்டங்களை நகர்த்துதல்... எல்லாமே சப்தமாய். என் சமையலறையில் பாத்திரந் தேய்க்கிற அளவில் துல்லியம். ராத்திரிகளில் அவள் எழுந்துகொண்டு நடமாடும் சரசரப்புகள். அவளது குளியல். கழிவறை ஃப்ளஷ். சன்னல் திறத்தல்... சில சமயம் அவள் மாடி முற்றம் தொட்டிமலர்களுக்கு நீரூற்ற என் மாடியில் நீர் சிந்தும். நான் போய் நிமிர்ந்து மாடியைப் பார்த்தால் அவள் போயிருப்பாள். அவள் வீட்டைவிட்டு வெளியே போனதை நான் பார்த்ததே இல்லை.
 மாடியின் சரசரப்புகள் எனக்குப் பிடித்திருந்தன. ஒருவித அமானுஷ்யத்துடன் நான் அந்தச் சத்தங்களுடன் வாழ்கிறேன். ஆ கண்ணுக்குத் தெரியாமல் யாரோ பயமுறுத்தாமல் என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்... என்பதைப்போல. ஆனால் கடந்த ரெண்டு வாரங்களாக எல்லாமே அடங்கிவிட்டது. மாடியில் இருந்து சத்தமே இல்லை. இப்போது... யாரோ நடமாடும் சத்தம்.
 யாராவது கள்ளத்தனமாய் உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துவிட்டார்களா? உடை களைந்துவிட்டு கழிவறை போனபோது யோசனையாய் இருந்தது. போலிசை அழைப்பதா? அடுக்ககக் காவலாளியையா? நானே மாடிக்குப் போய் பார்த்துவிட முடிவுசெய்தபோது இரவு உடையில் இருந்தேன். ஆச்சர்யமான விஷயம். எனக்கு எதனிடத்திலும் யாரிடத்திலும் எப்பவுமே பயம் கிடையாது. துணிஞ்ச கட்டை. தனிக்கட்டையாய் வாழ நேர்கிற பெண் அப்படித்தான் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். துணிவே துணை. இரவு அங்கியை இழுத்துவிட்டுக்கொண்டு எதோ ஷூவில் காலை நுழைத்துக்கொண்டேன். ராத்திரி அப்போது மணி 11.
 அழைப்பில் முதல் மணிக்கு பதிலில்லை. ரெண்டாவது முறை உள்ளிருந்து வெளியே பார்க்கும் கண்ணாடிக் குமிழில் வெளிச்சம் தெரிந்தது. ஒரு இளைஞன் கதவைத் திறந்தான். என்னைவிட ரொம்ப வயசு சின்னவன். மிருதுவாய் மாலை வணக்கம் சொன்னான். நான் மாடியேறி வந்ததே தப்பு. நான் உண்டு என் வேலை உண்டு, என்று இருக்கவே விரும்புகிறவள் நான். அடுத்தாள் வம்பு நமக்கு எதற்கு, என்கிற சாதி. ஆனால் செய்திகள் வாசிக்கத்தானே செய்கிறோம்? மக்கள் செத்துப்போய் பூட்டிய அறையில் அவர்கள் சடலம் அழுகி நாறி வாரங்கள் கழித்து கண்டுபிடிக்கப் படுகிறது. அவன் கருப்பு ஜீன்சும் கருப்பு டீ ஷர்ட்டும் அணிந்திருந்தான். அந்தச் சட்டையில் எழுத்துக்கள் ‘அயர்ன் மெய்டன்‘. அது ஒரு ராக் இசைக்குழுவின் பெயர் என்று ஞாபகம். காலில் ஓட்டை சாக்ஸ். ஷூ இல்லை.
 என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். கீழ்த்தளத்தில் நான் இருக்கிறேன். மேலே நடமாட்டம் கேட்டது... திருமதி தி க்ரூத் காலி பண்ணிப் போய்விட்டதில் சந்தேகம் இல்லை. இந் நேரம் இந்தச் சத்தம்... அதான் யாராவது கன்னம் வைக்கறாங்களோன்னு தோணியது... அந்தப் பையன் சிரிக்கிறான். பரவால்ல, தைரியமா மேல தனியா பார்க்கலாம்னு வந்திருக்கீங்க. நானாயிருந்தால் போலிசைக் கூப்பிட்டிருப்பேன். சரி. மேல்வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள்னு எப்பிடி நினைச்சீங்க? வாசல் பலகை, திருமதி பி. தி க்ரூத். அதைவெச்சா?
 எப்படியோ தோணிச்சு. ஒரு வயதான பெண்மணி தனியே வசிக்கிறாள்னு தான் பட்டது. அவனிடம் நான், மேல் வீட்டில் யாரையும் பார்த்தது இல்லை, என்றும் அங்கிருந்து கேட்கிற ஒலிகள் தான் எனக்கு அடையாளம், என்றும் சொன்னேன். பெண்கள் ஏற்படுத்துகிற சத்தத்துக்கும் ஆண்கள் ஏற்படுத்துவதற்கும் எதும் வித்தியாசம் இருக்கிறதா என்ன, என அவன் கேட்டான். என்னை பகிடியடிக்கிறானோ என்றுதான் முதலில் பட்டது. ஆனால் அந்த முகம் அப்படிக் காட்டவில்லை.
 தெரியல, என்றேன். அவன் என்னை ஒரு பையனின் பார்வை, கேட்டுக்கொள்கிற பாவனை காட்டினான். தொந்தரவுக்கு மன்னிக்கணும். நான் படுக்கையிலிருந்து எழுந்து அப்படியே வந்திட்டேன். ஏன் அவனிடம் அப்படிச் சொன்னேன், பொய் சொன்னேன் தெரியவில்லை. இவன், இவன்தான் என்னை நான் பேசாத விஷயங்களையெல்லாம் பேசவும், பொய் சொல்லவும் வைக்கிறான். இவனைப் பார்த்தநிமிடத்தில் இவனிடம் பசப்ப ஆரம்பிக்கிறேன் நான். அப்புறம் இருவருமே பேசிக்கொள்ளவில்லை. அப்படியே ஒருவரை ஒருவர் மௌனமாய்ப் பார்த்துக் கொள்கிறோம். இப்போது நான் கிளம்ப வேண்டும்... அப்போது அவன், என்னுடன் ஒரு காபி குடிக்கறீங்களா, என்று அழைத்தான். உடனே தலையாட்டி விட்டேன். ராத்திரி நான் காபி குடித்துப் பழக்கமே இல்லை. அதுவும் இப்படி இரவு அங்கியில்... இந்தப் பையனுடன்... அவன் பின்னால் உள்ளே போகிறேன்.
 அவன் போய் கதவைத் தாளிட்டபோது சட்டென உள்ளே ஒரு பொறி. அட இவனே ஒரு கொள்ளைக்காரனாகக் கூட இருக்கலாம். அவன் என்னை உள்ளே கூப்பிட்டதே கூட நான் அலறி ஊரைக் கூட்டிவிடக் கூடாது என்றுகூட இருக்கலாம். அவன் ஒல்லியாக வெளிறிய நிறமாய் இருந்தான். அவனருகே நான் அவன் தோளுக்குக் காணமாட்டேன். நல்ல தசையேறிய கைகள். இதோ என்னை அப்படியே தரையோடு அழுத்தி அமுக்கி, என் வயிற்றில் ஏறியமர்ந்து, என் கைகளை உயரவிடாமல் வரி விழ இறுக்கி, என் வாயில் எதையோ அடைத்து என்னைக் கத்தவிடாமல்...
 அவன் சமையல் அறைக்குள் போனான். ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பேற்றி வைத்தான். கப்-போர்டை விரியத் திறந்தான். கோப்பைகள். காபித்தூள். வடிகட்டி. சாமான்கள் இருந்த இடங்கள் அவனுக்குப் பழகியிருந்தன. சர்க்கரை. சாக்ரீன். பால்... காபித்தூள் கிடைக்கவில்லை. நான் போயி வேணா கொண்டுவரவா? இல்ல, பரவால்ல, என்றான் உரிமையாய். அந்த அழுத்தம் துணுக்குற வைத்தது. அவன் சொன்னான். டீ சாப்பிட்டாப் போச்சு...
 அந்த இல்லம் நான் நினைத்திருந்த மாதிரியே தான், ஒரு வயசான பெண்மணியின் வீடாகவே இருந்தது. டீபாயில் ஒரு டி.வி. பத்திரிகை. கோப்பை வைக்கிற சிறு தட்டுக்கள். பின்னல் வேலை செய்த சோபா கவர்கள். வலைப்பின்னல் கம்பளங்கள். சுவரில் பாடாவதி உடையில் மூதாதையர் படங்கள். நாங்கள் உட்கார்ந்தோம். அந்த சோபாவில் நான். கைவைத்த பெரிய நாற்காலியில் அவன். அவன் கைப்பகுதியில் சின்னப்பெட்டி சிறு பொத்தான்களுடன். அதை அவன் அழுத்த அதன் கீழ்ப்பக்கம் சின்னப் பட்டை அவன் கால் வைத்துக்கொள்ள வெளியே வந்தது. வேறொரு பொத்தானை அழுத்தினான். இடம் வலம் என்று சரித்து நாற்காலியில் வசதி பண்ணிக்கொண்டான். புது பொம்மையுடன் விளையாடும் குழந்தையின் பரபரப்பு அவனிடம்.
 ஆ நாம இன்னும் பரிச்சயப்படல்ல. சட்டென முன்பக்கமாய்த் துள்ளிவந்து கைநீட்டினான். நான் தாஃப்னி, என்று சொன்னதற்கு வாய்விட்டுச் சிரித்தான். ஓகோ! நான் பாட்ரிக். இத்தனை கிட்டத்தில் இருந்துகிட்டு நாம சந்திச்சதே இல்லை, வேடிக்கைதான். அவன் என் கையைத் தன்கைக்குள் வைத்திருந்தான். நீங்க தனியாதான் இருக்கீங்களா?
 என் வாழ்க்கை பற்றி, என் வேலை பற்றி, என் குடும்பம் பற்றியெல்லாம் அவன் மேலும் கேள்விகள் கேட்டான். புற்றீசலாய் அவனில் இருந்து கிளம்பும் கேள்விகள். எங்கே அவனைப் பற்றி நான் கேட்கவே வாய்ப்பு தந்தானில்லை. இதுமாதிரி என்மேல் ஆர்வப்பட்டு யாரும் என்னிடம் பேசியது இல்லை. அவன் கேட்கக் கேட்க நானோ வளவளவென்று அதிகமாய் என்னைப் பற்றி பினாத்திக் கொண்டிருப்பதாகப் பட்டது. என் குழந்தைப் பருவம் பற்றியும், நாலு வருஷம் முன்னால் ஒரு மோட்டார்சைகிள் விபத்தில் பலியாகி விட்ட என் சகோதரன் பற்றியும், என் அப்பா அம்மா பற்றியும், மழலைப்பள்ளியில் நான் வேலை பார்ப்பதையும்... அதில் ஒரு சுவாரஸ்மும் இல்லை, என்றாலும் அவன் தலையாட்டி கேட்டுக்கொண்டிருந்தான். மினுங்கும் கண்கள். குழந்தைகளுக்கு நான் கதைசொன்னால் அவை இப்படித்தான் கேட்கும்!
 தேநீர் அருந்தி முடித்தாயிற்று. பாட்ரிக் எழுந்துபோய் அலமாரியைத் திறந்தான் தூசி படிந்து இருந்த கிரான்ட் மார்னியர் போத்தல். கிட்டத்தட்ட செலவழியாமல் முழுசாய். இரு சிறிய கண்ணாடி தம்ளர்களை டீபாயில் வைத்தான். தம்ளரை நிரப்பி ஒன்றைக் கையில் எடுத்து என் பக்கமாய் உயர்த்தினான்.
 என் திடீர் விருந்தாளிகளுக்காக ...
 நான் மது அருந்துவது இல்லை. என்றாலும் அதை எடுத்து அருந்தினேன். அவனுக்கும் அது பழக்கம் இல்லை என்று அவன் குடிக்கும்போது முகத்தை வைத்துக்கொண்ட தினுசில் தெரிந்தது. முன்னாடில்லாம் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்துகொண்டிருந்தார்கள் எனக்கு, என்றேன் நான். கூட வேலைபார்க்கிற சிலர், சில பெண்கள், அவர்களின் கணவன்மார்கள். ஒவ்வொரு முதல் வெள்ளிக்கிழமையும் நாங்க இங்க கூடுவோம். இதை ஏன் அவனிடம் நான் சொல்கிறேன், அதுவே எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் அந்த சந்திப்புகளைப் பற்றி மேலும் சொல்ல விஷயம் பெரிசாய் ஒண்ணும் இல்லை தான்.
 அவன் சொன்னான். சனவரி அவனுக்குப் பிடித்த மாசம். அவன் பிறந்தநாள் சனவரியில் வருகிறது. இன்னும் ரெண்டு வாரத்தில். அவனுக்கு சனவரி குளிர் பிடிக்கிறது. அவன் கேட்டான். உங்களுக்கு எந்த மாசம் பிடிக்கும்? ஆ, நான் அப்படி நினைச்சிப் பார்த்ததே இல்லை, என்றேன். ஆனால் நவம்பர் மாதம், அதை எனக்குப் பிடிக்காது.
 அவனுக்கு என்று பிடித்த மாதம், பிடித்த பருவம், பிடித்த பூ, பிடித்த பிராணி, பிடித்த கதைப்புத்தகம்... எல்லாம் இருக்கிறது. ஆனால் அவனிடமும் சொல்லிக்கொள்ள அவ்வளவே இருக்கவேண்டும். மனசில் இருப்பதைப் படபடவென்று கொட்டிவிடும் எல்.கேஜி. குழந்தை. அதுங்களிடம் விடுமுறை நாட்களில் என்ன செஞ்சீங்க? - என்று கேட்டால், வெளாண்டோம், என்று சொல்லும். குறிப்பாய் எதுவும் சொல்லத் தெரியாது அதுங்களுக்கு. அவன் நிசமாகவே குழந்தை தான். உற்சாகம் வற்றாத, எடுப்பார் கைப்பிள்ளை. சில சமயம் வெட்கம் பூசி விடுகிறது முகத்தில். சட்டுச் சட்டென்று உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் ஆச்சர்யப் படுகிறான். வாய்விட்டுச் சிரிக்கிறான். என்னை அவன் கேட்டான். உங்களுக்குக் குழந்தைகள் பிடிக்குமா? ஓ, என்றேன். என் வேலையே அவர்களைப் பராமரிக்கிறது தான்.
 அ, அதுனால குழந்தைகள் பிடிக்கணும்னு இல்லியே. ஒரு கசாப்புக்கடைக்காரனாய் இருக்கலாம். ஆனால் வீட்டில் நாய் வளர்ப்பான். எனக்குக் குழந்தைகளைப் பிடிக்கும். அதனால் தான் நான் இந்த வேலையில் இருக்கிறேன், என்றேன் நான். அதை சற்று வெடுக்கென்று பேசினேனோ. அவன் முகம் மாறி, என்னிடம் மன்னிப்பு கோரினான். இன்னொரு தம்ளர் மது ஊற்றினான். எனக்கு வேணாம், என்றேன். ஆனாலும் அதை வாங்கி அருந்தினேன். அவன் தொடர்ந்தான். நான் ரொம்ப அடுத்தாள் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறேன். ச், அப்டில்லாம் இல்லை, என்றேன். ஆனால் அடுத்தாள் விவகாரத்தில் அதிகம் தலையிடாமல் இருக்கறது தான் நல்லது. இதை ஒரு குழந்தைக்குச் சொல்கிற கண்டிப்புடன் நான் சொன்னேன். ஆனால் இந்நேரத்தில் நானே அவனது ஆர்வப்பிடியில் மீள முடியாமல் ஈர்க்கப்பட்டு கட்டுண்டு கிடக்கிறேன். என் அன்றாட வாழ்வு சார்ந்து அவன் அக்கறைப்படுகிறதான கேள்விகள் அவை.
 சில பதில்களில் அவன் எதுவுமே பேசாமல் அப்படியே உட்கார்ந்திருப்பான். என்னை உன்னிக்கிற முகம். அதில் தேக்கிய சிறு புன்னகை. உங்களுக்கு ஆண் சிநேகிதன்... என அவன் கேட்கிறான். சட்டென என் முகம் மாறிவிட்டது. எத்தனையோ தடவை யாராரோ இதே கேள்வியை என்னிடம் கேட்டாயிற்று. எது எப்படியாயினும் இது இவனுக்குத் தேவையில்லாத விஷயம். இந்த வீட்டில் நான் தனியாகவே, எந்த ஆணுடனும் அல்லாமல் வசிக்கிறேன், என்பதற்காக... பெரிய பளபளப்பான கண்களால் என்னை அவன் பார்க்கிறான். இவனுக்கு என்ன பதில் சொல்ல தெரியாமல் திண்டாட்டமாய் உணர்ந்தேன். அதனாலேயே என்மேலேயே எனக்குக் கோபமாய் வந்தது.
 ஆ, இப்ப என் மேல உங்களுக்குக் கோபம். ச், அதெல்லாம் இல்ல, என்கிறேன். இப்படியே பிடியும் நழுவலுமாய்ப் போகிறது நேரம். மது அருந்தியபடி நாங்கள் சூரியனுக்குக் கீழான அனைத்தையும் பற்றி, என்னைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அவனைப் பற்றி எதுவுமே பேசவில்லை. சட்டென்று அடுத்தாளை அலட்சியம் செய்தாப்போல குண்டக்க மண்டக்க எதாவது பேசிவிடுகிறான். ஆனால் அவன் அடுத்தாளை எரிச்சல் படுத்தும் நினைப்புடன் அப்படிப் பேசவில்லை என்றும் தெரிகிறது. எனது உடை விலகி என் கால்கள் வெளித் தெரிய அவன் என் கால்களையே பார்க்கிறதை சட்டென உணர்கிறேன். என் தொடைவரை அவனால் பார்க்க முடிகிறது. கால்களை மெருகேற்றிக்கொள்ள வேண்டும், என்ற எண்ணம் தான் முதலில் வந்தது. ச், என்ன அலங்காரம் வேண்டிக்கெடக்கு. திரும்ப உடையை சரிசெய்து கொள்கிறேன். பாட்ரிக் அதைப் பார்த்து ஒரு பிடிபட்ட விழிப்பு விழிக்கிறான்.
 எனக்கு அந்நேரம் போதை உச்சத்தில். ஆ இவன் எனக்காக எதையும் செய்வான், என அப்போது எனக்குத் தோன்றியது. ஐய நான் ஏன் இப்படி நினைக்கிறேன், என உடனே வெட்கம் ஆளைத் திகைக்க வைத்தது. இவனா? எத்தனை சின்னப் பையன் இவன். எனக்கு இவன்தாயார் வயசு. தலையைக் கோதி நெருக்கமாய் இவனை அரவணைக்க ஆசை உந்தியது. குழந்தைகள் செய்யுமே அதைப்போல அவன் என்னைக் கட்டிக்கொள்ள ஆசைப்பட்டேன். என் மடியில் தலைசாய்த்து என் அரவணைப்பில் இவன் கண்ணுறங்க ஆசைப்பட்டேன்.
 அவன் கொட்டாவி விட நான் என் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறேன். காலை மணி மூணு. ம். நான் கிளம்பறேன், பாட்ரிக். நாளைக்கு சனிக்கிழமை தானே, என்கிறான் அவன். அதுக்கு? அவன் சோபாவில் என்னருகே வந்து உட்கார்ந்தான். உங்களுக்கு ஒரு நல்லிரவு சொல்லி முத்தம் தரலாமா நான்? ஆனால் நான் பதில் சொல்லுமுன், என் கையை எடுத்து அவன் முத்தமும் தந்துவிட்டான். தூக்கிவாரிப்போட்டது அவன் செய்த காரியம். அந்தக் கையை உருவிக் கொள்கிறேன். சட்டென துள்ளி சன்னல் பக்கமாய் ஒதுங்கினான். நான் அவனை அறைந்துவிடுவேனோ என்று பயந்தாப் போலிருந்தது. சாரி, என்றான். பரவால்ல, என்றேன் நான்.
 அடுத்து அவன் சொன்னது வித்தியாசமாய் இருந்தது. உங்களை நான் ரொம்ப மதிக்கிறேன், என்கிறான் அவன். அதன்பிறகு ரொம்ப நேரம் நாங்கள் ரெண்டுபேருமே எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. ஒருவழியாக அவன்தான் திரும்பப்பேசினான். பாருங்க. வெளியே மழை. பனியெல்லாம் இப்ப உருக ஆரம்பிச்சிரும். பனியே எனக்குப் பிடிக்காது, நான் சட்டென்று சொல்லிவிட்டேன். அது உண்மைதானா என்பதில் அப்போது எனக்கே குழப்பம். உடனே அதை விளக்கவும் தலைப்பட்டேன். எனக்கு பனி பிடிக்காது. தெருவெங்கும் பனியும் உப்புமாய் குவியல்கள். பிள்ளைங்கள் பனிக்காலங்களில் உடம்பு முழுக்க துணிமணி சுற்றி மொத்தையாய் வருகிறார்கள். உள்ளே வந்து அவர்கள் மாற்றிக்கொள்ளவே அரை மணி ஆயிரும். ஷூ நிறைய பனியும் அழுக்குமாய் உள்ளே அப்பிக்கொண்டு வந்து நிற்பார்கள்.
 ... ஆனால் குழந்தையாய் இருந்தபோது எனக்கு பனி பிடித்திருந்தது. அப்ப எனக்கு கொள்ளையான விஷயங்கள் பிடித்தே இருந்தன. எனக்கென்னவோ அந்த நேரம் பூராவும் நான் அங்கலாய்ப்புடன் அவனிடம் பேசியதாகப் பட்டது. அவன் அவனுக்குப் பிடித்த விஷயங்களையெல்லாம் பேசுகிறான். நான்? நான் எனக்குப் பிடிக்காத விஷயங்களைப் பட்டியல் இடுகிறேன். அப்படிப் பேசுவது... என்ன இவள், எதற்கெடுத்தாலும் அஸ்து பாடுகிறாள், விரக்தி வேதாந்தியா இவள், என என்னைப்பற்றி அவன் நினைக்கக் கூடும். ஆ ஒருவேளை அது நிசமாய்க் கூட இருக்கலாம். குறைந்தபட்சம் நகரத்தில் என்னைப்போல யாரும் இரார். இம்மாதிரியாட்கள் எதாவது புலம்பி எங்கும் புழுதி வாரித் தூற்றுகிறார்கள். எனக்கு அது பிடிக்காது.
 அப்படியே இருவரும் சரிகிறதாய்.... அருகில் அவன் தொடைகள் என்மேல் அழுத்திய கதகதப்பு. என் கூந்தலுக்குள் அவன் முகம் புதைக்கிறான். என் கழுத்தில் அவன் மூச்சு தகிக்கிறது. என் காதோடு என்னவோ கிசுகிசுக்கிறான். சட்டென தன்னிலை மறந்தாப்போல, ஏ நீ எத்தனை அருமையான பெண், என்கிறான். உன்னை சந்திச்சதில் எனக்கு அபார சந்தோஷம்... என்று... சொல்கிறானா? சொல்வானா?
 நாளை உங்களை சந்திக்க முடியுமா? - சனிக்கிழமை நான் எங்க அப்பாம்மாவைப் பார்க்கப் போவேன், என்கிறேன். ஞாயிறு ராத்திரி என்னுடன் சாப்பிடலாம், நீங்க விரும்பினால், என்கிறேன். கூட ஒராளுக்கு சமையல்ன்றது பெரிய சமாச்சாரம் இல்லை. எனக்கு சமைக்கப் பிடிக்கும், என்று சேர்த்துச் சொல்கிறேன். அட அதொண்ணாவது நான் பிடித்துச் செய்கிறேன். இருவரும் இரவு வணக்கத்தைப் பரிமா... என் கையைப் பற்றி திரும்பவும் முத்தம் தருகிறான்.
அன்றைக்கு என் தூக்கம் போச்சு. மேலே அவனது சந்தடி. குளியலறை தண்ணீர் சத்தம். நல்ல பையன். அக்கறையும் பதவிசும் நிறைந்தவன். ஆனால் எதிலும் ஒரு தயக்கம். அந்தச் சிரிப்பில் ஒரு உள்வாங்கல், இருக்கிறது. ஐய நான் ஏன் அவனைப் பற்றி குறையாய் நினைக்கவேண்டும். ஒராள் நல்லதனமாய் நடந்துக்கிட்டால் அவங்களை நாம நம்பறதே இல்லை!
காலையில் எழும்போதே தலை பாரம். தலைவலி மண்டையைக் குடைகிறது. நாக்கு கசந்தது. காலை உணவு முடிந்ததுமே நான் சமையல் புத்தகத்தில் இருந்து புதிதாய் சமைக்கிற விஷயம் எதுவும் கிடைக்கிறதா என்று தேடலானேன். சும்மா ஒரு சாதாரண சமையல் என்றுதான் சொன்னேன். ஆனால் அவனை ஆகா, என்று சொல்லவைக்க இப்போது வேகம் வந்தது. இந்த சீசனுக்கு நல்லதாய் காய் எதுவும் கடைகளில் கிடைக்காது. அநேகமாய் எல்லாமே ரொம்ப தூரத்தில் இருந்து தருவிக்கப்... கொணர்ந்து விக்கப் பட்டவை. எல்லாமே சப்பென்று இருக்கும். அவபரைக்காய் கென்யா சரக்கு. எதுக்கு? வேணாம். உறைய வைத்த காய் எதாவது பார்த்து வாங்கலாம். அந்த ராத்திரி அப்பாவுடன் ஒரு உப்புபெறாத வாக்குவாதம்.
 ஞாயிறு மதியம் பூராவும் நான் சமையல் அறையில். மாடியில் சத்தமே இல்லை. எங்காவது வெளிய கிளிய போயிருப்பானோ. ஆனால் சரியாக ஆறு மணி. அழைப்பு மணி. அவன் கையில் மகா மலர்க்கொத்து. என் கையில் முத்த மெத்து. இந்த மாதிரி எல்லாரிடமும் நடந்துகொள்ள மாட்டான் என்று நம்புகிறேன். இத்தனை பூவையும் அடுக்கும் பெரிய பூச்சாடி என்னிடம் இல்லை. அடி இவை உனக்கே அடுக்குமா? இப்போதைக்கு இருக்கட்டும் என குளியறை பிளாஸ்டிக் அண்டாவில் போட்டுவைத்தேன். எனக்கு இப்படி அடிக்கடி மலர்கள் வருவது இல்லை. அடிக்கடியாவது கொசுக்கடியாவது. வருவதே இல்லை, அதுவே நிசம். நானும் மலர்கள் வாங்குவதே இல்லை.

மூன்றாம் உலக ஏழை நாடுகளில் இருந்து தருவிக்கப்படுகின்றன அவை. மலர்கள் வளர்க்கப்படுகையில் அந்தப் படுகையில் தெளிக்கும் மருந்துகளால் அதைப் பறிக்கிறவர்கள் நோய்வாய்ப் படுகை ஆகிறது. அடியே நீ என்ன, திரும்பவும் பிலாக்கணம் ஆரம்பிக்கிறாய். உனக்கு மலர்கள் கொணர்ந்தவனுக்கு நன்றி சொல்ல வேணமா?
சாப்பிடுகையில் ஒவ்வொன்றையும் ஆகா ஓகோ என்கிறான். அவன் பேசுவதை அனுமதிக்கவே எனக்கு லஜ்ஜையாகி விட்டது. ஆனால் விருந்து சிறப்பாய்த்தான் இருந்தது. அதைச் சொல்லாமல் முடியாது. சமையல் செய்வதில் நான் நிபுணி, என அவன் சொல்ல நான் வெளிப்படையான மகிழ்ச்சியுடன் கலகலக்கிறேன். அதை அத்தனை விமரிசையாக நான் எடுத்துக்கொள்ளவும் முடியவில்லை. பெரியவர்கள் பேசுவதைப் பார்த்து குழந்தைகள் பேசும் சம்பிரதாயச் சொல்லாய்க் கூட அது இருக்கலாம். சைக்ளோஸ்டைல் வார்த்தை நகல்கள்.

அவனை நான் ஈர்க்கிறேன் என்றுதான் பட்டது. ஏன் அப்படித் தோணுகிறது தெரியவில்லை. நான் பேச என வாயைத் திறக்கும் போதெல்லாம் அவன் சாப்பிடுவதை நிறுத்தி என்னை தன் பெரிய கண்ணை உருட்டிப் பார்க்கிறான். நான் பேசிய அனைத்தையும் அப்படியே நினைவில் அவன் வைத்திருப்பான் எனத் தோன்றியது. என்னைப்பற்றி ஏற்கனவே அவனுக்கு எல்லாம் கொட்டிக் கவிழ்த்தாகி விட்டது. ஆனால் இதுவரை அவனைப்பற்றி எனக்கு லவலேசமும் தெரியாது.
 அப்புறம் நாங்கள் சோபாவில் அமர்நது பேசிக்கொண்டிருந்தபோது சட்டென தன் தம்ளரை அவன் சரியாகப் பிடிக்காமல்... சோபாமீது சிந்திவிட்டான். ஏய், என நான் கிட்டத்தட்ட... குழந்தைகள் குறும்பு செய்கையில் அடிக்கிறாப் போல.... அவன் டிராயரை இறக்கி குப்புறப்போட்டு ஒரு சுரீர் சாத்துமுறை... நல்லவேளை, சுதாரித்துக் கொண்டேன். சோபாவை சுத்தம் செய்ய உப்பும் மினரல் வாட்டரும் எடுத்துவர சமையலறை போனேன்.
 இந்தக் கறை போகவே போகாது. என்னால் இதைத் துடைத்தெடுக்கவே முடியாது. வெள்ளை சோபா வாங்குவது எத்தனை மடத்தனம். ஆனால் அது எனக்குப் பிடித்திருந்தது. வெள்ளை சோபா. சகோதரன் இறந்த பிறகு அதை வாங்கினேன். அவன் போய்விட்டாலும் அவனுக்கும் அதற்கும் என்னவோ ஒட்டு உறவு இருக்கிறதாக என்னில் பிரமை. நான் அந்தக் கறையை சொரசொரவென்று தேய்க்க, பக்கத்தில் செய்வதறியாமல் பாட்ரிக் நிற்கிறான். சாரி சாரி என்று திரும்பத் திரும்பச் சொல்கிறான். ஒரு புது சோபா உறை வாங்கித் தந்துர்றேன்... ஆனாலும் எனக்கு சமாதானம் ஆகவில்லை.
 நான் படுக்கப் போகவேண்டும், நாளை திங்கள் இல்லியா? என்கிறேன். அவன் எழுந்துகொள்கிறான். வாசல் அருகில் இருந்து ஒரு துயரப்பார்வை தூரப்பார்வை பார்க்கிறான். சாரி. அதை விடு, என்கிறேன். நடந்தது நடந்தாகி விட்டது. நாங்கள் திரும்ப சந்திப்பதைப் பற்றி பேசிக்கொள்ளவில்லை. அவன் பேசவும் இல்லை. நான் அவனிடம் ஒரு இறுக்கத்துடன் இருந்தேன்.
 நான் அவன் சத்தங்களைக் கேட்கிறாப் போல இத்தனை துல்லியமாக அவனால் என்னைக் கேட்க முடியுமா என்பது சந்தேகமே. ஆனால் புள்ளிக்குழாயடியில் குளிக்கிறபோது திடீரென்று என் நிர்வாணம் சங்கோஜப்படுத்தியது. கழிப்பறையில் நுழைந்தால் கதவைத் தாழிட்டுக்கொண்டேன். சில சமயம் ஃப்ளஷ் செய்யாமல் அப்படியே வந்தேன். அவன் காதுகளில் இருந்து தப்பிக்கிற ஜாக்கிரதை அது. அடிக்கடி தாகம் எடுத்து நிறையத் தண்ணீர் குடிக்கிறேன். என் வாழ்க்கையில் பாதி ஒண்ணுக்கடித்தே தீர்ந்துவிடுமாய் இருந்தது. இன்னுஞ் சொன்னப்போனால் இப்பதான் எனக்கே நான் எத்தனை நாராசமான சப்தங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிந்தது. இப்போது தெருவில் அணிகிற ஷூக்களை வீட்டுக்குள் மாட்டித் திரிந்தேன். வாக்வம் கிளீனரைப் பயன்படுத்தும்போது சத்தமாய் வானொலி வைத்தேன். எனக்குள்ளேயே திட்டுவதும், எதாவது பாடுவதுமாய்... இந்த இழவையெல்லாம் விட்டுத் தொலைஞ்சால் தேவலை என்றிருந்தது. மிருதுவான அதிகம் சத்தம்போடாத ஸ்லிப்பர்களை வாங்கிவந்தேன். கண்ணாடி தம்ளர் என எதையாவது கீழே போட அது விழும் சத்தத்தில், மேலேயிருந்து பதில் சத்தம் எதும் வருகிறதா என்று உன்னித்தேன். ஆனால் முற்றான அமைதி.
 அவன் இத்தனை கிட்டத்தில் இருக்கிறதே எனக்கு என்னமோ போலிருந்தது. மேலே என்ன செய்துகொண்டிருக்கிறானோ கடவுளுக்கே வெளிச்சம். ஒருவேளை என் சப்தங்களை அவன் உன்னித்துக் கேட்டவாறிருக்கலாம். அவனிடம் இருந்து தப்பிக்கிற மோஸ்தரில் நான் வெளியே நிறைய சுற்றித் திரிய ஆரம்பித்தேன். வெளியே குளிர்காலம் ஆரம்பித்து விட்டாலும் எதாவது கஃபேயில் அமர்ந்தோ, வெளியே உலாவியோ பொழுதை நகர்த்தினேன். சளிபிடித்து ஜன்னி கின்னி வராமல் இருக்க வேண்டுமே. போன வருடம் உள்ளே இன்ஃபெக்ஷன் வந்து நான் வெளியே எங்குமே போக மறுத்துவிட்டேன். ரெண்டுநாள் மூணுநாள் என்று விடுப்பு. காய்ச்சல் மாத்திரைகளை எடுத்துக்கொண்டேன். பிற்பாடு ஜனேக்கும் கரினும் கிண்டலடித்தார்கள். இரத்தப்போக்கு! அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு இரத்தப்போக்கு என்றால் ஒண்ணே ஒண்ணுதான்...

மூணு நாளுக்குப் பிறகு பாட்ரிக் அழைப்பு மணியை அடிக்கிறான். நான் அப்போது தான் வேலையில் இருந்து திரும்பி யிருந்தேன். நான் வருவதற்காக அவன் காத்திருந்தான் போல. கையில் சோபாவுக்குப் புது உறை. கூட பரிசுக்காகிதம் சுற்றி எதோ. அவனும் நானுமாய் சோபாவுக்கு உறை மாற்றினோம். எங்கள் கரங்கள் இடித்துக்கொண்டன. அந்தப் பரிசு, ஒரு மீன் வாணலி. அன்றைக்கு ராத்திரி இவன் சாப்பிட வந்தபோது பேச்சுவாக்கில் நான் சொன்னது - ஒரு மீன் வாணலி இருந்தால் தேவலை ... அதை ஞாபகம் வைத்துக்கொண்டு வாங்கிவந்திருக்கிறான். ரொம்ப விலையிருக்குமே. என்ன பைத்தாரத்தனம்? இதையெல்லாம் நீ வாங்கித் தரணும்னு இல்லை இவனே.
 ஆனால், உங்களுக்கு நான் ரொம்ப சிரமம் கொடுத்திட்டேன், அதுக்காக... என்கிறான். புன்னகை செய்கிறான். முதல்முறையாக நாங்கள் முத்தமிட்டுக் கொள்கிறோம். யதார்த்தமாய் அப்படி ஆகிப்போனது. யார் அதை ஆரம்பித்தார்கள். அவனது முத்தங்கள் கொஞ்சம் ஆவேசமானவை. என் உதடுகள் மேல் அவன் உதடுகளைப் பதிக்கிறான். தன் அதரங்களை விரிக்கிறான் சுருக்குகிறான். என்னை அப்படியே கடித்துத் தின்கிறாப் போல. அவனின் அழுத்தமான பிடியில் நான். எத்தனை திடகாத்திரம் இவன், என்றிருந்தது. என்னால் அசையக்கூடவும் கூடவில்லை. என்ன இப்பிடிப்போட்டு அழுத்தறே... என்கிறேன். சட்டென பிடி தளர்த்திவிட்டு, சாரி, என்கிறான். ஆ வூன்னா சாரி. அது அவனுக்குப் பிடிக்கிறது. சாரி வள்ளல்! என்னை அப்படி முத்தமிட்டதில் அவனுக்கு லஜ்ஜையாய் இருக்கிறது.
எனக்குள்ளே யோசனை... என் உடைகளை அவனே அவிழ்த்து, என்னோடு படுத்து உறங்குகிறான் அவன். இதோ இந்த புதிய உறையிட்ட சோபாவில். விந்துக் கறை போகத்தான் போகாது. நான் ஏன் இப்படி கண்டபடி காணாதபடி நினைத்துக் கொண்டிருக்கிறேன்?... அவனோ என்னை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறான்.
திரும்ப அவன் தன் மாடிக்குப் போய்விட்டான். ஆனாலும் என்னுள்ளே அவனைப் பற்றியே அலை. அவனைப் பற்றி இன்னமும் எனக்கு எதுவுமே தெரியாது. அந்த வீட்டின் சாமான்கள் எல்லாம் அவனுடையதா, அதுவே தெரியாது. அவன் அங்கே தான் வசிக்கிறானா, கொஞ்ச காலத்துக்கு தங்க வந்தவனா? அவனது பெயர் நடு இனிஷியல் என்ன? வயசு? பார்க்கும் வேலை? ஒரு இழவும் அறியேன் நான். ஆனால் பரிசு என்று தாராளமான கைவீச்செடுப்பு இருக்கிறது.

என்னையும் இவனையும் சேர்த்துப் பார்க்க நேர்ந்தால் அந்த யானகேயும் கரினும் என்ன சொல்வார்களோ? விழுந்துட்டுது பட்சி, என்பார்களா? இந்த வயசுக்கு மேல அவளை இப்டில்லாம் பேசக்கூடாது, என்பார்களா? அல்லது, சும்மா கிடைக்குமா? அவ காசுக்குதான் அவன் அவள்பின்னால் அலைகிறான். அவளை அவன் பயன்படுத்திக்கொள்கிறான்... என்பார்களா? அவர்கள் என்ன சொன்னாலும், நினைத்தாலும்... நான்தான் அவனைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
அதற்குப் பிறகு ரெண்டு மூணு நாளுக்கொரு தரம் நாங்கள் சந்தித்துக்கொண்டோம். சிலபோது அவன் கீழே இறங்கி வருவான். நான் மேலே அவனைத் தேடிப் போவதும் உண்டு. நாங்கள் எப்போது வீட்டில் இருப்போம், என்பது இருவருக்குமே தெரியும். சில சமயம் தொலைபேசியிலேயே மணிக்கணக்காய்ப் பேசுகிறதும் உண்டு. பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே எனக்குக் குழப்பமாகி விடும், இவன் குரல் தொலைபேசியில் இருந்து கேட்கிறதா, மேற்கூரையில் இருந்தா?
 ராத்திரி ஒண்ணாய் உணவுகொள்கிறபோது நிறைய மது அருந்தினோம். ஆனால் அவன் நிதானத்தை இழந்ததே இல்லை. நாங்கள் உட்கார்ந்து வெகுகால சிநேகிதர்களைப் போல பேசிக்கொண்டோம். பிரியும்போது மாத்திரம் சின்ன முத்தம். அது பழக்கமாகவே ஆகியிருந்தது. நான்தான் ஃப்ரன்ச் முத்தம் ஆரம்பித்தது. என் நாவால் அவன் வாய்க்குள் அவன்நாவைத் துழாவினேன். அவனை சிரித்தபடி தொட ஆரம்பித்திருந்தேன். பிறகு அவனும் அப்படிச்செய்தான். ஆனால் விரல் நுனியால் நாசூக்காக அதைச் செய்தான். என் இடுப்பிலும் அடிமுதுகிலும் அவன் வருடினான். அடிமுதுகில் எப்பவாவது இம்சையாய் இருக்கும் எனக்கு. அவன் அழுத்தம் இதமாய் இருந்தது. அவன் கையை எடுத்து என் மார்பில் வைத்துக் கொண்டேன். கொஞ்சநேரம் கையை அங்கேயே வைத்திருந்தான். பிறகு எடுத்துக்கொண்டான்.
 அவனுக்கு அவகாசம் வேண்டியிருக்கலாம். எனக்கு அவசரமாய் இருந்தது. எனக்கு அவசரம் என்று அவனிடம் நான் சொல்லவில்லை தான். எனக்கே உள்சூட்சுமம் அபாரமாய் வேலை செய்கிறது. எதைப் பேசணும், எதைப் பேசக்கூடாது, என சதா அது உள்ளே உழப்புகிறது. அவனை நான் உற்று அவதானிக்கிறேன். கவனிக்கிறேன்.
 சில இரவுகளில் அவன் வீடு வரமாட்டான். அந்நாட்களில் எனக்கு உறக்கம் பிடிப்பது இல்லை. அப்படியே அமர்ந்தபடி மாடி சத்தங்களை எதிர்பார்த்து இருந்தேன். காலையில் மகா சோர்வாய் இருக்கும். இப்படியெல்லாம் செயல்படுவது எனக்குப் பிடிக்கவும் இல்லை. ஆனால் நான் அப்படியே தான் செயல்பட்டேன். அடுத்தமுறை நாங்கள் சந்திக்கிறபோது முதல் காரியமாக அவன் எங்கே போயிருந்தான் என்று சொல்லிவிடுவான். அப்பா அம்மா கூடவோ, யாரும் நண்பர்களோடோ, அதுவரை எனக்குச் சொல்லாத யாருடனோ இருந்துவிட்டு வந்திருப்பான். நான் அவன் மீது நம்பிக்கையில்லாமல் பார்ப்பேன். புரியட்டும் என் ஏக்கம் இவனுக்கு.
 வேலையிடத்தில் யானகே என்னாச்சி இவளே... என்று கேட்டாள். உடம்பு சரியா இல்லியா என்ன? நான் ரொம்ப ஆயாசமாய் இருக்கிறதாக அவள் சொன்னாள். சரியான தூக்கம் இல்லை, அவ்ளதான், என்கிறேன். இளைத்திருக்கிறேன் இப்போது. பசியே இல்லைன்னால் நான் என்ன செய்யறது? யானகே ஸ்தஃபானைனைப் பிரியப்போகிறதாகச் சொல்கிறாள். அதுதான் அவளது புத்தாண்டு பிரதிக்ஞை. அவனிடம் இனி தான் அவள் சொல்லப் போகிறாள்.
 அவள் பிரச்னையை என்னிடம் வந்து கொட்டுகிறாள். அவரவருக்கு எதாவது பிரச்னை என்றால் என்னிடம் வந்து கொட்டிவிட்டுப் போகிறார்கள். ஆனால் நான் அறிவுரை சொன்னால் யார் எடுத்துக் கொள்கிறார்கள்? நீ நினைக்கிறா மாதிரி விஷயம் அத்தனை சுலபம் இல்லைன்னு என்னிடமே திரும்பிச் சொல்லியாகிறது. கரினுக்கு மனசு சரியில்லை இப்போது. ஏன்னு அவளுக்கு பிடிபடவில்லை. சில சமயம் அவளைச் சமாளிக்கவே முடியாமல் போகிறது. பிள்ளைகளையே அப்போது உண்டு இல்லைன்னு பண்ணிருவா. அவள் கொடுக்கும் அளப்பறையில் எதாவது குழந்தை அழ ஆரம்பித்து, இவளும் அழ ஆரம்பிப்பாள்.
 எனக்கு உன்னை நிசமாவே பிடிச்சிருக்கு, என்கிறான் பாட்ரிக். உன்னை நான் அடைஞ்சது என் அதிர்ஷ்டம், என்கிறான். என்னை அவன் முத்தமிடுகிறான். ஆனாலும் என்னிடம் இருந்து அவன் விலகினாப் போலவே நடந்துகொள்கிறான். இவன் உடம்பில் எதுவும் பிரச்னையோ என்றுகூட நான் நினைத்தேன். ஒரு பெண்ணுடம்பின் அருகாமையில் இவன் இப்படி அடக்கி வாசிக்கிறானே. பார்க்க திடகாத்திரமாய்த் தான் இருக்கிறான். என் ஆத்திரம் அறியாத திடகாத்திரம்... ஆனால் பார்ப்பதை வைத்துச் சொல்ல முடியுமா என்ன? நாட்டில் குறி விரைத்தெழாத எத்தனையோ ஆண்கள், செக்சில் ஈடுபாடு அற்றவர்கள், இருக்கிறார்கள். இப்ப ஆண்களின் விந்து வீர்யமும் அடங்கிட்டு வருது. கருத்தடை மாத்திரைகளில் சேர்க்கப்படும் பெண் ஹார்மோன்களின் உபயம் இது.
 இப்படியே இதை கயிறு தளர்த்திக்கிட்டே விட முடியாது. இம்மாதக் கடைசி வரை பார்க்கப் போகிறேன். அவனா எந்த முடிவுக்கும் வரவில்லை என்றால் நானே இதை முடிவுக்குக் கொண்டு வருவேன். ஆனால் முடிவு என்று நான் என்ன சொல்ல வருகிறேன். எனக்கே எப்போது அவன் முடிவு எடுப்பான் என்பதைத் தீர்மானம் செய்ய முடியாதிருந்தது. என்ன செய்ய வேண்டும் அவன்? என் உடையைப் பிரித்திழுத்து அப்படியே சோபாவில் என்னை அமுக்கி என்மேல் ஆளுமை செய்வானா? அப்படி நடக்காது தான். அவன் என்னிடம் மனம்விட்டுப் பேசுதல். என்னை நம்புதல். என்னிடம் தன்னை ஒப்படைத்தல்... அப்படியான சில வார்த்தைகள்.
 அடுத்த நாள் வீடு திரும்புகிறேன். லயொனல் ரிச்சி பாடிய பாடல் ‘ஹலோ!‘ மேல் தளத்தில் இருந்து கேட்டது. பாட்ரிக் ஒருமுறை வந்தபோது நான் போட்ட இசை. அந்த சிடியை அவனே வாங்கியிருக்கிறான். இப்போது நான் வருகையில்... அவர். நான் வருவதற்குக் காத்திருந்து எனக்கும் அதே முகமன்
 இதோ அவன் காலடிச் சத்தம். கீழிறங்கிப் போகிறான். என் வீட்டைத்.. தாண்டி... தெருக் கதவு சாத்துகிற ஒலி கூடவே. நள்ளிரவுக்குப் பின்தான் அவன் திரும்பி வந்தது. மரத்தள அதிர்வுகள். கூட யாரையோ கூட்டி வருகிறானோ? சே அப்படியெல்லாம் இராது.... பின் அமைதி. அமைதி தான் பெரிய எதிரி. எனக்குத் தூக்கமே இல்லை. பல நாளாக என்னால் தூங்கவே முடியவில்லை. என்னவெல்லாம் கோட்டித்தனமான கற்பனைகள். இப்படியெல்லாம் அச்சு பிச்சு சிந்தனைகளை நான் உடனே வெட்டி விரட்டியாக வேண்டும்.
 பாட்ரிக் தனது பிறந்த நாளில் எனக்கு விருந்தை அவனே சமைத்தான். எனக்காக என்னவெல்லாமே பிரயத்தனப் பட்டிருந்தான். உணவு மேசையில் சாக்லேட்டால் லெடிபேர்ட்ஸ் கூட செய்து வைத்திருக்கிறான். நான் சாக்லேட்டை ஈஷிக்கொண்ட பாவனையில் என் ரவிக்கையை கறைப்படுத்திக் கொண்டேன். அப்படியே ரவிக்கையைக் கழற்றி சரியாய் அதை அலசிவர எடுத்துப் போனேன். சமையல் அறைவரை என்னுடன் கூடவே வந்தான் பாட்ரிக்.
 என்னவோ பேசினோம். அவன் என்னைப் பார்த்தபடி யிருந்தான். ஆனால் சலனப்படாதது போலவே நடந்து கொண்டான். அவன் முன்னால் நான் முழு நிர்வாணமாய் ஆனாலும் அவன் கவனிப்பானா தெரியவில்லை. அது சராசரி நபரின் இலக்கணம் அல்ல. என்ன யோசிக்கிறான் இவன்? கீழே போய் இன்னொரு சட்டையை மாட்டிக்கொண்டு வந்தேன். மேல் தளத்தில் அவன் கழிவறைக்குப் போவது கேட்கிறது. இருமுறை ஃப்ளஷ் செய்கிறான். ம். நான் மேலே போகப் போவது இல்லை. சொல்லப் போனால் நாங்கள் தள்ளியிருக்கையில் நெருக்கமாய் உணர்கிறோம். ஒருத்தரை ஒருத்தர் எங்கள் சத்தங்களால் அதிகம் புரிந்து கொள்கிறோம்.
விருந்தில் நிறைய ஒயின் குடிக்கிறோம். முழு போத்தல் ஒயின். பிரிவின் முத்தம். சட்டென அவன் மெல்லப் பேசினான். இது... நல்லது இல்லை, என ஆரம்பித்து பிறகு பேசவில்லை. இப்போது நான் என் படுக்கையில். உறக்கம் வராது. எனக்கு நேர் மேலே அவன். சில கஜம் தூரத்தில். தொடைகளை விரிக்கிறேன். என் யோசனையில் அவன் என் மேல்.... இயங்குகிறான் அவன். என் கைகளை அழுத்திப் பிடித்திருக்கிறான். என்னை முத்தமிடும் போதெல்லாம் அப்படியே இறுக்கிப் பிடித்திருப்பான்
 அவன். என் சடையைப் பிடித்து இழுக்கிறான். என் முகத்தில் அறைகிறான். என் கால்களால் அவனைச் சுற்றிக் கொள்கிறேன். விரகப் பட்டினி கிடந்தாப்போல என்னை அவன் முத்தமிடுகிறான். இருவருக்கும் வியர்த்து வழிகிறது. ஒரே அமைதி. அவன் மூச்சு மாத்திரம் எனக்குக் கேட்கிறது. என் பிரிந்து கிடக்கும் கூந்தலில் அவன் மூச்சு தகிக்கிறது. கைகளை விரித்து... கிசுகிசுக்கிறேன். வா! வா! அபார நெருக்கத்தில், சில கஜ நெருக்கத்தில் அவன். அவனை என்னால் உணர முடிகிறது.
• • •
storysankar@gmail.com

ஆடி 91 97899 87842