ஆளுமை ஜெயகாந்தன்

அஞ்சலி ஜெயகாந்தன்

அரியணை அனுமன்கள் தாங்க
எஸ். சங்கரநாராயணன்

ஜெயகாந்தன் இறந்துவிட்டார். கேள்விப்பட்டவுடன் ஆச்சர்யமான விஷயங்கள் நினைவில் அலைமோதுகின்றன. லா.ச.ரா., சுஜாதா போன்ற பேராளுமைகளைப் போன்றே ஜெயகாந்தனும் சாமான்ய வாசக மகா சமுத்திரத்தில் அலைக் கிளர்ச்சிகளைத் தோற்றுவிக்கிறார்கள். கேள்விப்பட்டு பிறகு ஜெயகாந்தனை வாசிக்க இன்றைய தலைமுறை வந்திருக்கும். அவரது எழுத்தின் நேர்மை, அவர் விவாதிக்கும் பொறுப்பு, அப்புறம் அந்த மகா எணிமை போன்ற அம்சங்கள் இன்றைய இளைஞர்கள் வரை அவரை கவனிக்க வைத்தன.

தொடர்ந்து முப்பது நாற்பது வருடங்களாக அவர் பெரிதாய் எழுதிவிடவில்லை. ஆனாலும் எழுத்துலகில் அவரது இடம் எப்படியோ வாசக மனதில் தக்கவைக்கப் பட்டிருந்தது. அனுமன் போல அவரது பீடத்தை வாசகர்கள் எப்படியோ தங்கள் மனதில் உயர்த்திப் பிடித்தே வைத்திருந்தார்கள்.

ஜெயகாந்தன் சொன்னவற்றையெல்லாம் பொருட்படுத்தினார்கள் சனங்கள் என்பது அல்ல. அவ்வப்போது, “கஞ்சா பழகுங்கள்“, என்பது போல அவரது அறிக்கைகளை சிரித்தபடி சனங்கள் வேடிக்கை பார்த்தார்கள், அவர்மேல் கொண்ட அதே மரியாதை விலகாமல், என்பது ஆச்சர்யம். அவருக்கு ஒரு ‘செல்ல‘ இடம் எப்படியோ அவர்கள் அனமதித்திருந்தார்கள்.

கதைகள் தாண்டி சமூக அக்கறை சார்ந்து அவரது உரையாடல்கள், பேட்டிகள், கட்டுரைகள் என்று பல தளங்களிலும் ஜெயகாந்தன் கவனிக்கப்பட்டார். அதாவது தன்னை அவர் அப்படி ஓயாமல் வெளிப்படுத்திக் கொண்டே வளைய வந்தார். அவர் கருத்துகளை வெளியிடும் போது ஒரு அதிரடித்தன்மை இருக்கும். அதைக் கோப்படாமல், “அவரது பாணி இது“ எனறு எல்லாரும் புரிந்துகொள்ள முடீந்தது. இது ஆச்சர்யம் அல்லாமல் வேறு என்ன?

இது எப்படி அவருக்கு, அவரிடம் நமக்கு சாத்தியம் ஆனது… ஜெயகாந்தன் கருத்துகளை மிகுந்த தன்னம்பிக்கையுடன் அழுத்தமாக ஆணித்தரமாக முழங்கனார். சாகித்ய அகாதமியின் ‘ஆண்டின் சிறந்த எழுத்தாளர்‘ பரிசு எப்பவுமே பல்வேறு சிபாரிசுகளின் அடிப்படையிலேயே, தகுதியற்ற நபர்களுக்கே தொடர்ந்து வழங்கப்படுகிறது. தரமான எழுத்தாளர்கள் மீண்டும் மீண்டும் அவமானப்பட நேர்கிறது… என்கிற மாதிரி ஒரு கருத்தை ஜெயகாந்தன் விமரிசிக்கும் பாணி தனித்தன்மையானது. “ஆண்டுப் பரிசு எல்லா எழுத்தாளர் பெயருடனும் சீட்டுக்குலுக்கிப் போட்டு எடுங்கள். அப்பகூட தப்பித் தவறி சரியான நபருக்குப் பரிசு போக வாய்ப்பு இருக்கிறது. வருடா வருடம் தப்பான ஆளுக்கே தருகிறீர்கள்“ என்பார் ஜெயகாந்தன்.

தமிழ் சிற்பக் கலையில் ஒரு முக்கிய அம்சம் உண்டு. நரசிம்மர், துர்க்கை போன்ற உக்கிர விக்கிரங்களை வடிவமைக்கும் போது அதில் கோபம் இருக்கும். வெறி இராதபடி கவனமாய்த் தவிர்க்க வேண்டும், என்பது மரபு. மேற்கத்திய பாணி ஓவியங்களில், சிற்பங்களில் இந்த தனித்தன்மையைப் பார்க்க முடியாது. சிற்பங்களில் கலை யழகு முக்கியம். இது இந்திய மரபு. இதை நாம் சாதித்துக் காட்டியிருக்கிறோம். நம் பெருமை இது.

ஜெயகாந்தன் கோபமாய்ப் பேசுவார். ஆனால் எதிராளி மனம் புண்பட மாட்டான். வேறு எந்த எழுத்தாளருக்கும் இது வாய்க்கவே இல்லை. மாற்றுக் கருத்துகளை அவர் மிக விரும்பினார். தன்னை சுயம்புவாக, சுதந்திரப்பட்ட பறவையாகவே அவர் உணர்ந்தார். தன்னைத் தானே பறக்க விட்டுக் கொண்டார் அவர். தன் கொடியைத் தானே ஏற்றிக் கொண்டார் அவர். அவ்வளவில் புதுமைப்பித்தனை விட இவர் வெற்றி பெற்றதாகவே கொள்ள முடியும். ஆச்சர்யம்.


ஜெயகாந்தனிடம் நான் பெரிதும் வியக்கும் விஷயம். கட்டுரைகளில் அவர் காட்டும் பல்கடித்த அழுத்தம், கதைகளில் மகா சாதுவாய் முகம் மாறிப் போகிறது. கோபக் கூத்தாடிய பாரதி, காதலியிடம்,நின்னைச் சரணடைந்தேன், என நெகிழ்கிறாப் போல. எழுதும்போதே நிறைய வாசித்தார் ஜெயகாந்தன். அவற்றைத் தொட்டும் விரித்தும் கதைகளிலும் கட்டுரைகளிலும் அவர் விவாதித்தார். மேடைகளில் அவற்றை தன் ஆளுமையாகப் பகிர்ந்தார். மேடையில் அவர் பேசுகையில், அப்போது தான் மூளையில் உதித்தாப் போல, ஆனால் ஏற்கனவே யோசித்து வந்ததைப் பகிர்வார் அவர். அந்தப் பாணி எனக்கு அவரிடம் பிடிக்கும்.

படைப்பு வேறு, படைப்பாளன் வேறு என்றெல்லாம் வாதங்கள் வருகின்றன. எழுத்தாளன் வேறு படைப்பு வேறு அல்ல – என ஜெயகாந்தன் எழுதியதைப் பற்றியே பேசினார் என்பது முக்கியம். ஒளிந்து கொள்ள, ஜகா வாங்க அவர் முயற்சி செய்தது கூட இல்லை.

கடைசி வாசகனுக்கும் அவர் கதை சொன்னார். ஆனந்த விகடன் போன்ற பெரும் சுற்று இதழ்கள் அவருக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தன, என்பதால் அது அமைய முடிந்தது.

மத்த எந்த எழுத்தாளனுக்கும் இல்லாத பெருமை ஜெயகாந்தனுக்கு, பாரதிக்குப் பிறகு, உண்டு. அவரது பெயரை தங்களுடன் இணைத்துக்கொள்ள ஒரு பின்வரிசை எழுத்துப்படை அவாவுற்றது. ஜெயகாந்தனைத் தொட்டே, ஜெயந்தன், ஜெயானந்தன்… என்றெல்லாம் எழுத்தாளர்கள் உருவானர்கள் என்பது ஆச்சர்யம் அல்லவா?

வாழும்போது அவர் பெற்ற சிறப்பு அது. வாழும்போதே பொலிவுடன் வாழ்ந்தவர் ஜெயகாந்தன். இறப்பு அவருக்கு இல்லை.


ஜெயகாந்தனைப் போல பீடம் வேறு ஒருவருக்கு இல்லை. அது உருவாவது. அமைத்துக் கொள்வது அல்ல. ஜெயகாந்தன் தொடர்ந்து இப்படி கொத்ணடாப்படுவார் என்றே நம்பலாம்.

Comments

Popular posts from this blog