Saturday, October 31, 2020

 

2006 ம் ஆண்டின் சிறந்த நாவல் - தமிழக அரசு பரிசு

நீர்வலை

எஸ்.சங்கரநாராயணன்

6

ள்ளிக்கூடச்சீருடை கூடக் கழற்றாமல் ஓடிவந்து அப்பாமேல் உட்கார்ந்திருந்தாள். ரெட்டைப் பின்னலை மீறி சிறு மயிர்கள் வெளிச் சிதறியிருந்தன. பின் வெளிச்சத்தில் கம்பிகளாய்த் தெரிகின்றன. உற்சாகப் பந்தாய் இருந்தாள். வந்து விழுந்தால் அடங்காமல் திரும்பத் திரும்ப கொந்தளிக்கும் பந்து. வாழ்க்கையை ஆனந்தக் கிறுகிறுப்புடன் உணரும் பருவம் குழந்தைப் பருவம். உலகில் எல்லாமே ஆச்சர்யம் அவற்றுக்கு. எல்லாமே சந்தோஷம்.

நேத்துப் பாத்தேனே அப்பா. அந்த மரத்துல பூவே இல்லப்பா. இன்னிக்கு மாத்திரம் எங்கேர்ந்து வந்தது.

அந்தா இருக்கு பாருட்டி குட்டி... அந்தப் பறவை... அது கொண்டு வந்து குடுத்தது எல்லாப் பூவையும்!

இளவயதில் துயரங்கள் துன்பங்கள் இன்றி வாழ்க்கை அமைவது, வாழ்க்கை இன்பமயமானது என்கிற நம்பிக்கையை ஊட்ட வல்லதாய் இருக்கிறது. சிவாஜி பார்த்த காட்சிகள் வேறானவை...

பிறந்தபோதே உயிர்ப் பிண்டமாய் வெளியே வந்த தக்கணமே அவன் தன் அம்மாவின் சாவுக்காக அழ நேர்ந்தது!

அழுகை கூட அல்ல. அது கூக்குரல். ஒப்பாரி!

விஷம் கொடிது. சாவு கொடிது என்பர் தம் மக்கள் அழுகைச் சொல் கேளாதவர்.

அப்பாவுக்கு அதனின் மேலே திகைப்பு. இனியென்ன என்கிற பெரிய மலையில் முட்டி நிற்கிறார் அவர். அடுத்த-கணம் புரியாத வெருட்டல்.

இரண்டாவது காலையும் இழந்தாற் போல...

இத்தனை களேபரங்களுக்கும் நடுவே அவன் பிழைத்து வந்தது, அதும் நல்ல குணங்களுடன் எழுந்து வந்ததில் கிருட்டினமணிக்கு ஆச்சர்யம்.

கல்லுக் கல்லாய்க் கோயில் எழுப்பி நடுவில் பள்ளம். செயற்கைக் குளம். நடுவில் மிதக்க விட்ட தாமரை இவன்! பொற்தாமரை அல்ல - நிஜமே நிஜமான தாமரை.

அந்தக் கண்கள்... சிவாஜியின் அந்தக் கண்கள். அதில் கனவின் எல்லைகளை அளையும் ஒரு தன்மை. ஒரு தலைவணங்காத் தன்மை. தன்னையே புதுப்பித்துக் கொள்கிற சட்டையுரித்துக் கொள்கிற புத்தெழுச்சியுடன் இழப்புகளில் இருந்து மீட்டுக் கொள்கிற, உருவி விடுவித்துக் கொள்கிற தன்மை இருக்கிறதை... அவன்... கிருட்டினமணி கண்டுகொண்டான் எப்படியோ.

லாரிடிரைவர் வேலை எளிமையானதல்ல. கூட உதவிக்கு என கிளினர் பையன் யாரையாவது, டிரைவர்கள் வைத்திருக்கிறார்கள். அவனுக்கு யாரும் இல்லை. யாரும் இல்லாப் பயணத்தில், துணை பழைய திரைப்படப் பாடல்களே. பாடல் கேட்டுக்கொண்டே வண்டி ஓட்டிப்போவதில் பயண தூரம் தெரிவதில்லை. இடை வெளிகளில் மரங்கள் இருமருங்கும் நிற்கின்றன. இரவு வெளிச்சம். வானத்தில் இருந்து யாரோ, கொசுமருந்து தெளிச்சாப் போல.

நிலா மினிஷ்டர் வருகிறார், என்று ஏற்பாடுகள்!...

லாரி விளக்குகள் போதா. சாலையின் குண்டுகுழிகள் தெரியா. திடுங் திடுங் என அதிர்ந்து லாரி, மேடேறி... பள்ளமிறங்கிச் செல்லும். நல்ல லோடு என்று பின்பாரம் இருந்தால் சரக்குகள் மோதிக்கொள்ளும் சத்தம் கேட்கும். பின்பக்கம் நம்ம சிவஜோதி கூந்தலில் ரோஜாப்பூ வைத்துக் கொண்டாற் போல கட்டியிருந்த அரைவட்டச் சங்கிலி மோதிக் கொள்ளும் ணிக் ணிக் ஒலி. இந்த மேடுபள்ளங்களில் பயணித்துச் செல்ல பாடலில் உற்சாகத் தாளக் கட்டு நல்லது.

டிங்கு சிக்கு டிங்கு ஜிங்

டிங்கு சிக்கு டிங்கு ஜிங்...

அதற்கு சில உளரல்களை இசையொலிகளாக்கிய பாடல்கள் சிலாக்கியம். அர்த்தம் கிடையாது. சொல் அடுக்குகள் - வெறும் உற்சாக எடுப்புகள்...

டிங்கிரி டிங்காலே மீனாட்சி

டிங்கிரி டிங்காலே

உலகம் போற போக்கப் பாரு

தந்தன தன்னானே...

டிங்கிரி டிங்காலேன்னா என்ன? யாருக்குத் தெரியும். உலகம் போற போக்கப் பாரு... லாரியில் இருந்து பார்த்துக்கொண்டே போறதா?

உலகம் எங்க போகுது. அவன்தான் உலகத்தில் போகிறான்!

புகைபிடித்துக் கொண்டிருந்தான். சிவஜோதிக்கு புகைபிடிப்பது பிடிக்கவில்லை. ஒரு முத்தத்துக்கு இருமினாள். என்னாச்சி? - என்றான். ஒண்ணில்ல ஒண்ணில்ல... என்றபடி,

இருமினாள்.

சிகெரெட் ஒத்துக்கலியா?

அவள் பதில் சொல்லவில்லை.

சிகெரெட் குடிப்பதையே விட்டுவிட்டான். வேறு கெட்ட பழக்கங்கள் எதும் இல்லை. முன்பிருந்தே இல்லை.

ஆச்சர்யம். லாரிடிரைவர்... மென்மையான உணர்வுகள் பிடிபடுகின்றன. வன்முறை பிடிக்கவில்லை.

சின்னக் குழந்தையாகவே வீர சிவாஜியைப் பறி கொடுத்த துக்கம் காரணமாக இருக்கலாம்.

அப்பா கொடுங்கோலர்கோலம் பூண்ட கணங்கள். சட்டென கோபம் உச்சிக்கு ஏறி, வேட்டி மேல் பெல்ட்டை உயர்த்தி ஓங்குவார்... பலமுறை அடி விளாசியிருக்கிறார். ஒருமுறை எக்குத் தப்பான ஆவேசத்தில், பெல்ட்டைக் கழற்றி, உயர்த்தினாரா...

வேட்டி அவிழ்ந்து விழுந்துவிட்டது!

கடுமையான மெக்கானிக் வேலைகள் தெரிந்தவன். லாரிஷெட் பையன்கள் இரவுகளில் தூக்கம் வராமல், உற்சாகத்தை எப்படி வடிக்க, என்று தினவெடுத்துத் திரிகிற கணங்கள்...

எங்காவது நாய் இருந்தால் விரட்டிப் போவார்கள். பால் ஆடு கிடைத்தால் பிடித்துவந்து கட்டிப் போட்டுவிட்டு, அது திமிறத் திமிற, சிரட்டை சிரட்டையாய்ப் பால்கறந்து விடுவார்கள். அத்தனைக்குப் பால் இராது அதனிடம். ஆட்டுக்காரன் கறந்திருப்பான் என்பது ஒருபுறம். தவிர இராத்திரி நேரம். என்னத்தைச் சுரந்திருக்கும் உள்ளே. அவர்கள் மடியை அமுக்க அமுக்க, வலியில் அலறும். அவர்கள் இழுத்த இழுப்பில் சில சமயம் மடியில் இரத்தமே சுரந்து வரும்... இவனுக்கு அழுகை வந்துவிடும். டேய் விடுங்கடா, பாவம் வாயில்லா ஜீவனைப் போயி... என ஆட்டை மீட்டு விரட்டி விடுவான் கிருட்டினமணி.

முதல் பார்வைக்கே அவனுக்கு பிச்சையைப் பிடித்து விட்டது. முள்ளில் சிறகு சிக்கிக் கொண்ட வண்ணத்துப்பூச்சி இவன்!

தூங்கி வழியவில்லை அவன். தூக்கத்தில் பிரியங் காட்டுகிற சோம்பேறி இல்லை. வாழ்க்கையின் துயரங்களில் மிரண்டவனாய் இல்லை. சிரிப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கிறான் இன்னும்!

இந்த வயதில், பள்ளிக்கூட அறிவுகூட நிரம்பாமல் என்ன அழகாய்ப் பேசுகிறான்... சிமின்டுத் தரையில் மழை தெறித்தாப் போல...

நதியானவன். பாறையில் முட்டி நிற்காமல் திகைக்காமல், வளைந்து ஒதுங்கி புதுவழி தேடிப் பயணப்படும் நதி...

பின்னிரவின் அந்த அலுப்பு காணாதவன். உடம்பு நல்ல சொல்கேட்புடன்... மனசின் ஆணையின் ஒழுங்கு தவறாமல் இருக்கிறது. நிதானமானவன். சரியாகப் பேணினால் இவன்... நன்றாகத் தலையெடுத்து விடுவான்.

நாற்றங்கால். பிடுங்கி இவனைச் சரியான இடத்தில் ஊன்ற வேண்டும்.

ஊன்றுவேன்... என அவன் முடிவெடுத்தான்.

கமலா. ரெட்டைச் சடை என பாகம் பிரித்து, ரப்பர் பேண்டினால் கீழ்ப்பகுதி முடிச்சிடப் பட்டிருந்தது. தோட்டப் பூவாளியில் இருந்து செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினால் நீர் இப்படித்தான் பூவிரிகிறாப் போல இதழ் திறக்கும்... மூக்கில் சிறு வியர்வை முத்து. அப்பாவின் மார் மேல் உட்கார்ந்து எழுப்பினாள். அப்பா வீடு திரும்பிய உற்சாகம் அவளுக்கு.

வீட்டில் இருக்க நேர்ந்தால் அப்பா அவளைப் பள்ளிக்கூடம்வரை தூக்கிப் போகிறார். அல்லது அவளது பைச்சுமை அவர் எடுத்துக்கொள்ள, அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டே நடக்கையில் சப்பரமாய் உடம்பு ஆடும். தலையே ஆடும்... உற்சாகக் கும்மாளம். நடுப்பல் இடைவெளி சீர்ப்படவே இல்லை! அழகான வளர்ந்த கெட்டிப் பல். வெள்ளைப் பல். பல் அல்ல அது நடுப் பகல்!

'ஐய அப்பா தூங்கறாகட்டீ...' என அம்மா எச்சரிக்கை அவள் காதில் விழுந்தால்தானே?

அப்பா... எனப் பாய்ந்துவந்து முகத்தைத் தட்டி எழுப்பினாள். திடுக்கென அந்த உற்சாகம் விக்கியது. கூட யாரோ படுத்திருக்கிறார்கள். புது விருந்தாளி. புதுச்சட்டை. புது டவுசர். யார் அது?

அசைப்பில் விழித்துக் கொண்டான் கிருட்டினமணி. அவள் வருவதற்குள் அவன் தூங்கிவிட வேண்டியதாய் இருந்தது. 'யாருப்பா இது?' என்று முதல் கேள்வியாய்க் கேட்டாள் கமலா.

'ஏய் இந்த அண்ணன் நம்ம கூடவே இருக்கப் போகுது...'

அண்ணன்!...

'சரியா?' என்றபடி அவள் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தான் கிருட்டினமணி. அதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

'பச்சப் பிள்ளை அதுக்கு என்ன தெரியும்?' என்கிறாள் சிவஜோதி உள்ளே யிருந்து. 'நல்லா தூங்கிட்டிருந்தீங்க... அதான் எழுப்பல... சாப்பிட வரலாமா?'

அலை தளும்பினாப்போல சிலிர்த்து சிவாஜி விழித்துக் கொண்டான். அண்ணனின் மார் மேல் குழந்தை. அவன் புகைப்படத்தில் பார்த்த குழந்தை. தற்போது வளர்ந்திருந்தாள். மெலிதாய்ப் புன்னகை செய்தான். வீடு... 'அ வ ர் க ள்’ வீடு... இப்படி அங்கே, தான் சுவாதீனமாய்ப் படுத்துக் கிடந்தது கூச்சமாய் இருந்தது. தலைக்குமேல் மின்விசிறி. அவன் தூக்கத்தை பாதிக்காவண்ணம் யாரோ - அண்ணியாய்த்தான் இருக்கும்... அண்ணன், எங்க அவர் அவனுக்கு முன்னமே உருண்டாச்சி! - தலையணை வைத்திருந்தார்கள்...

அவர்களின் அன்பின் பரிபூரணத்தில், உண்மையில் மனசு நெகிழ்கிறது. மனம்விட்டு அழ ஆசைஆசையாய் இருந்தது. அழுவதற்குக் கூட இந்த உலகத்தில் தகுதி வேண்டியிருக்கிறது. யாரும் பொருட்படுத்தா விட்டால் அழுகையால் மனம் ஆறுதல் அடையுமா?... இதற்கெல்லாம் நான் தகுதியானவனா... என்கிற கூச்சம் வந்தது.

எழுந்து உட்கார்ந்து கொண்டான். 'உன் பேர் எனக்குத் தெரியும்...'

கமலா அவனையே பார்த்தாள். எப்படித் தெரியும்... என்று கேட்பாள் என எதிர்பார்த்தான். அவள் வேறு கேள்வி கேட்டாள். ஒரு சவால்போல அவள் அவனைப்பார்த்து, கேள்வியை வலை எறிதல் செய்தாள்....

'நான் எத்தனாங் கிளாஸ் சொல்லு பாப்பம்?'

அந்த சவாலை அவன் ஏற்றுக் கொண்டான். நாலாம் வகுப்பு என அவனுக்குத் தெரியாதா என்ன...

'மூணு!' என்கிறான்.

'தப்பு! நான் நாலு!' என்று கை கொட்டிச் சிரிக்கிறாள். அட முட்டாளே என்கிற ஆரவாரம் அதற்கு. பிரியமானவர்களிடம் தோற்றுப்போவது எத்தனை நல்ல விஷயம். அதுவும் அறிந்தே தோற்றுப் போவது.

ஒருவேளை அவன் சரியான பதில் சொல்லியிருந்தால் அவள் மனதின் இந்த அண்மை அவனுக்குக் கிடைத்திருக்குமா!... காது!

'இந்த அண்ணன் உனக்கு புதூ டிரஸ்லாம் வாங்கியாந்திருக்குட்டி...' என்றபடி எழுந்து கொள்கிறான் கிருட்டினமணி. லுங்கி நெகிழ்ந்திருக்கிறது. மீண்டும் இறுக்கிக் கட்டிக் கொள்கிறான்.... அவனுக்கு வாங்கும் போதே குழந்தைக்கும் ஒரு செட் பார்த்து வாங்கிய அவனைப் பார்க்க பயமாய் இருந்தது சிவாஜிக்கு. ஐயோ இவனுக்கு இந்த ஒரு பயணத்தில் என்னால் எத்தனை செலவு... என் று திரும்ப வருத்தமாய் இருந்தது.

எங்காவது வேலை என்று சேர்ந்து கொண்டு முதல் சம்பளப் பணத்தில் எல்லாருக்கும் நான் செலவழிக்க வேண்டும், என ஆசைப் பட்டான் அப்போது.

'அண்ணே.... ஒரு உதவி... கேட்டேனே?'

'என்னாடா புதிர் போடறே...'

'ஆமாண்ணே'

'சொல்லு...'

'உங்க மெக்கானிக் கடை...'

'அதுக்கு என்ன?'

'அதுல என்னியும் சேத்து விட்ருங்க' என்றான் ராஜா.

 ----

சனிக்கிழமை தோறும் தொடர்கிறேன்

storysankar@gmail.com

91 9789987842 / 91 9445016842

 

Friday, October 23, 2020

 தமிழக அரசு பரிசு பெற்ற - 2006ம் ஆண்டின் சிறந்த நாவல்

 


நீர்வலை

எஸ்.சங்கரநாராயணன்

5

பெண்களை அறியாதவன் அவன். அவன் அறிந்திருக்கக் கூடிய ஒரு பெண் - அம்மா... அவன் பிறந்தபோதே இறந்து போனாள்.

ஆண்களைத்தான் தெரியும். அவர்கள் - ஒன்று வீரர்கள்.... அப்பா. அல்லது, முரடர்கள்.... அவனை வேலை வாங்கிய சிலர். இல்லாவிட்டால் ரௌடிகள்... அவனுடன் சுற்றும் சிலர். வீட்டில் தங்காமல், வீட்டுக்கு அடங்காமல் அவர்கள் சுற்றித் திரிந்தார்கள். அன்பு அவர்களை வளைக்க முடியாதிருந்தது. வார்ப்பு-இரும்புகள். மேலே தண்ணியூற்றினால் நொறுங்கிப் போகும். வளையாது.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்று பழமொழி. வளையும்!

அஞ்சு டிகிரி பனியில் வளைக்க முடியாத இரூம்பு ஐம்பது டிகிரி உஷ்ணத்தில், அதாவது மேல்வெப்பநிலையில், வ ளை யு ம்!

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சொல்வார்கள். விளையும். என்னது? கன்னத்தில் முடி. முற்பகல் ஷேவ் செய்தால் பிற்பகலிலேயே கன்ன மழுமழுப்பு இராது!

ஏல நீ ராஜாவும் இல்லை. பிச்சையும் இல்லை... என்கிறான் கிருட்டினமணி.

நீ வீரன். தைரியசாலி. உனக்கு நான் பேர் வைக்கிறேன்... என்கிறான். அவன் திரும்பிப் பார்த்தான் ஆச்சர்யமாய். தலையாட்டினான்.

இன்னிலேர்ந்து நீ புது ஆள். எங்க வீட்ல ஒருத்தன். அதனால்... இன்னிலேர்ந்து பேரும் புதுப் பேர்... சரியா? நீ வீரன். உன் பேர் சிவாஜி! வீர சிவாஜி... சிவாஜி யார் தெரியுமா?

தெரியாது, எனச் சொல்ல வெட்கமாய் இருந்தது. பாடத்ல வந்தாப்ல ஞாபகம். சட்டென்று... 'உங்க வீட்ல ஒருத்தன் சிவாஜி. அது தெரியும்ணே...' என்றான்.

'நீ பள்ளிக்கூடம் போயிருக்கலாம்டா...' என்கிறான் கிருட்டினமணி.

'நீங்களும்!' என்கிறான் சிவாஜி கிண்டலாய். 'தங்கச்சியை நல்லபடியாப் படிக்க வைப்பம் ணே...' என்கிறான் பிறகு.

'அண்ணே நீங்க ஒரு உதவி செய்யணும்...'

'நானா?'

'ம்'

'உனக்கா?'

'ஏன்?'

'உன் கேள்வியே ஆச்சர்யமா இருக்குடா. இந்த ஊர் தெரிஞ்சாப்ல, என்னவோ பேசறே...'

'தெரியும். இது... இது எங்க அண்ணன் ஊர்.'

'ஏல ப்ளீஸ்டா. தயவுசெஞ்சிடா - உங்க அண்ணன் வீட்டுக்கு என்னியக் கூட்ட்டுப் போவியா?'

அன்பின் நெகிழ்ந்த, கனவில் மிதந்த கணங்கள். அப்பா போனபின், அவன் பேசியே எத்தனை காலம் ஆனது. யார் அவன்பேசிக் கேட்கக் காத்திருக்கிறார்கள். டீக்கடையில் டீ கிளாஸ் கழுவிக் கொண்டு ராவா பகலா பார்க்க இயலாத வேலை. பஸ் நிறுத்தம் பக்கம் பஸ் வந்தால் ஓடிப் போய் டீ டீ டீ டீ... என்று கத்திக் கொண்டே ஒவ்வொரு முகமாய்ப் பார்த்துக்கொண்டே அலைவான்.

கிளிகள் கீ கீ கீ என்று திரிவதைப் போல, இவன் டீ டீ டீ என அலைகிறான்!

சற்று தள்ளி லாரிகள் வந்து நின்றுவிட்டுப் போகும். லாலாக்கடை மைசூர்பாகுக் கட்டிகள் போல வரிசையாய் அடுக்கி நிற்கும் லாரிகள். ராத்திரி முற்றினால் லோடு ஏற்றும் பஜார்ப் பக்கம் போய் டீ குடிக்க ஆள்ப் பிடிக்க வேண்டும்...

'அண்ணே டீ வேணுமா?'

'என்னது?'

'டீ அண்ணே... டீ. சாயா'

'என் காதுல குட்-டீன்னு கேட்டுது...' என்பார்கள். காமாந்தகர்கள்!

அதற்குள் பாதி வழி வந்திருந்தார்கள். நல்ல அகலமான தெருக்கள், பஸ் ஸ்டாணடு, பஜார் மெய்ன் பக்கம் போகாமல் ஒதுங்கி ரோடு சர்ரென்று இறங்கியது. சைக்கிளில் போக ஜாலியான தெரு. ஏறுகையில் மூச்சு வாங்கிரும்!...

வழி பார்த்துக் கொண்டே வந்தான். தெருக்கள் பாம்புவால்ப் பகுதி போல சிறுத்து வந்தன. கல் கட்டடங்கள். காரைக் கட்டடங்கள். மாடிவீடுகள் தாண்டி தனித் தனிச் சிறு வீடுகள். வாசலில் வாகனங்கள் நிறுத்திய வீடுகள். மாட்டுத் தொழுவம் சேர்ந்த வீடுகளில் மாடுகள் வெளியே கட்டப்பட்டு தொழுவம் உள்ளே சுத்தம் செய்யப் பட்டிருந்தது. அதற்குள் வெளித்திடலை மூத்திரம்போய் சாணிபோட்டு அலங்கோலப் படுத்தியிருந்தன மாடுகள்.

உலகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தெருவோர அடிகுழாயில் துள்ளித் துள்ளி ஒரு ஆள் தண்ணீர் அடிக்கும் சத்தம். தெரு திரும்பவும் குறுகலாகிப் போனது... எதிரில் வரும் ஆட்களிடம் அண்ணன் புன்னகை காட்டி எதும் பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தான். அண்ணன் வீடு இந்தப் பக்கம்தான் என யூகிப்பது கடினமாய் இல்லை... சொன்னாப்போல அண்ணன்வீட்டை நாமளே கண்டு பிடிப்பம்!... ஒரு சவால் போல ஏற்றுக் கொண்டான்.

சட்டென்று கிருட்டினமணியே எதிர்பார்க்காமல் 'கமலா?' என்று கூப்பிட்டான். ஓடும் குடிசையுமாய்க் குறுகலான தெருவின் இருமருங்கும் வீடுகள். திடீரென சேவல்கள் கோழிகள் உச்சியில் இருந்து இறங்கிக் குறுக்கே பறந்தன. வாசல் பக்கம் தோசைக்கல்லைக் குப்புறப் போட்டு கரிபோக வெறுங் காலால் மண்ணைத்தள்ளி தேய்த்துக் கொண்டிருந்தவள் ஆச்சர்யப்பட்டு 'கூப்ட்டியாப்பா?' என்கிறாள். அண்ணன் சிரிக்கிறான்.

'கமலா பள்ளிக்கூடம் போயிருக்கும்டா...' என்றவன் திரும்பி 'ஜோதி?' என்று கூப்பிட்டான்.

ரெண்டு வீடு தள்ளி இருந்தது அண்ணன் வீடு. சிறிய எளிய வீடுதான். வாசல் துப்புரவாகத் தெளிக்கப்பட்டு சிறிய கோலம். நிழலுக்கு என வேப்ப மரம் இருந்தது. வாசக்கால் மஞ்சள் பூசியிருந்தது. சந்தன குங்குமம். திருஷ்டிக் கயிறு. சவுக்காரக் கல் கட்டித் தொங்கியது.

கண்ணைப் பார் சிரி, என மஞ்சளாய் ஓர் அசுர வம்ச முகம். என்னத்தைச் சிரிக்க... பயந்து கெடக்கு!

சிவஜோதி வந்து கதவைத் திறக்கிறாள். குளித்த நெற்றியில் குங்குமம் வைத்திருக்கிறாள். உள்ளேயிருந்து மீன் வேகும் வாசனை. அண்ணனோடு அத்தனை இயல்பாய்ப் பேசிக்கொண்டு வந்தவனில் அவளைக் கண்டதும் தாங்கொணாத கூச்சம். பயமும் மரியாதையுமான கூச்சம் அது. அவன் தன் தாயைக் கூட அறிந்தவன் இல்லை...

சொந்தம் என்றும், அவள் அறியாத முகமான நண்பர்களையும் கிருட்டினமணி திடுதிப்பென்று கூட்டி வருவது உண்டுதான். வந்து சாப்பிட்டுவிட்டுப் போவார்கள் என்றாலும் ராத்தங்க மாட்டார்கள். தங்கவேண்டி நேர்ந்தால் லாரிஷெட்பக்கம் என எங்காவது ஏற்பாடு செய்துகொடுத்து விடுவான் கிருட் டினமணி.

'வாங்க...' என கதவைத் திறந்தாள். இவனை முன்பே அறிந்தாற்போலத் தலையை மாத்திரம் ஆட்டி வரவேற்றாள். 'சாப்பாடு... கொஞ்சம் லேட்டாவும்...' எனத் தயங்கினாள்.

'ஆவட்டும் ஆவட்டும். அவசரம் ஒண்ணில்ல... நாங்க வரும்போதே நாஷ்தா பண்ணியாச்சி... கொஞ்சம் படுத்து எந்திரிக்கணும்...' என்று முடிக்கையிலேயே குரலில் அலுப்பு காட்டினான்.

'தம்பி பேர் ராஜா...'

'சிவாஜி!'

'ம் ம்' என்று தலையாட்டிக் கொண்டவன், 'பாவம். அப்பா அம்மா உறவு சுத்தம் யாரும் இல்லை. சுத்தமா இல்லை!... ஒதுங்க இடம் கிடையாது... பாத்தா நல்ல பிள்ளையாட் டம் தெரிது...' எனத் தயங்கினான்.

'இங்கியே இருக்கட்டும்!'

அவள் சிவாஜியைப் பார்த்துப் புன்னகைத்தபோது அழுகை வந்துவிட்டது.

என்ன தோணியதோ, அப்படியே அவள் காலில் விழுந்தான். அண்ணன் பார்க்கிறான். 'நம்ப பையன்.... உயிரோட இருந்திருந்தான்னா.... கிட்டத்தட்ட இவன் வயசுதானே இருக்கும்?' என்கிறான் மெதுவாக.

'ம்' என அவள் தலையாட்டினாள்.

வருத்தமாய் இருந்தது. இழப்புகளே இல்லாத, துக்கமே இல்லாத உயிரே இல்லையா உலகத்தில்? அவரவர் சோகம் அவரவர்க்கு...

உங்க பிள்ளை... அவன் பேர் என்ன? - என்று கேட்க வந்தவன்... 'அவன் பேர் நான் சொல்லவா?' என்கிறான். ஆச்சர்யமாய் அவனைப் பார்த்தாள் அவள். தலையாட்டினாள்.

'சிவாஜி?' என்கிறான் புன்னகையுடன்.

ஆமாம்... என்கிறாப் போல கிருட்டினமணி தலையாட்டினான். 'வீர சிவாஜி!'

>>> 

அண்ணனின் பர்ஸ் புகைப்படத்தில் பார்த்ததை விட சிவஜோதி இளமையாய்த் தோற்றம் தந்தாள். ஒரு வேளை திருவிழா சந்தை என வேற்றூர் வெளியூர்ச் சமயம் படம் எடுத்திருக்கலாம். புதிய ஊரில் காலாற நடந்துவிட்டு திடுதிப்பென்று ஸ்டூடியோ என்று பார்த்து விட்டு ஊக்கமாகி உள்ளே நுழைந்து படம் எடுத்துக் கொண்டிருக்கலாம்.

அண்ணன் பாய் விரித்துப் படுத்தவன்தான். தூக்கம் அவனை அப்படியே ஆரத் தழுவிக் கொண்டது. வாயில் சாளவாய் வழிந்து ஈ சுற்றியது. அதுகூடத் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தான். ஓட்டு வெப்பத்துக்கு வெயில் தெரியாதபடிக்கு உள்ளே மரச்சட்டம் போட்டு பாய்போட்டு மூடியிருந்தார்கள். அந்தப்பக்க வீடுகளில் அது, கொஞ்சம் பெரிசாயும் உயர எடுப்பாயும் இருந்தது. புறம்போக்கு நிலத்தை வளைத்துக்கட்டிய வீடாய் இருக்கும்...

சொந்தமோ, வாடகையோ.

புது இடம் என்று சிவாஜிக்குத் தூங்க முடியவில்லை. மனம் மிதந்து திரிந்த லகரி. இதயம் நாக்கு போல மெலிசாகிக் கிடந்தது. உள்ளே ஏதோ அலைத் தாலாட்டு போல இருந்தது. அன்பின் தாலாட்டு அது.

வீடு! எனது வீடு! என் அம்மா!... அ ம் மா ! - மயக்கத் திகட்டலாய் இருந்தது.

கண்ட கண்ட இடங்களில் கிடைத்ததை உண்டு கிடைத்த இடத்தில் படுத்து அனுமதிக்கப்பட்ட நேரம் வரை தூங்குவான். இரவெல்லாம் சில சமயம் படுக்க இடம் அமையாது. திண்டாடிப் போகும். எங்கே போனாலும் விரட்டி விரட்டி விட்டுவிடுவார்கள். பொதுக்கூட்ட மேடை எப்போதும் அவன் உறங்கும் இடம். வெயில் காலம் என்றால் அதற்கும் போட்டியாகி விடும். வீட்டுக்குள் படுக்க இயலாத வெக்கை. அனல். ஜனங்கள் பாயைச் சுருட்டிக்கொண்டு மேடைக்கு வந்துவிடுவார்கள். அவனை விரட் டி விடுவார்கள்.

தூக்கம் வராத வாலிபப் பயல்கள் தெருப்புழுதியில் விளையாடும். தூரத்தில் இருந்தே பார்ப்பான். கூடச் சேர்ந்து கொள்ள ஆசையாய் இருக்கும். சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

பள்ளிக்கூடப் பக்கத்திலேயே எத்தனை நாள் பாஸ்கெட்பால், வாலிபால், கிரிக்கெட் பந்து... என வெளி எல்லையில் இருந்து பந்து எடுத்துப் போட்டிருக்கிறான்.

பகலில் அந்தப் பகுதி, ரௌடிகள் சாம்ராஜ்யம்... அவனே போக மாட்டான். ஆடு புலி ஆட்டம். தாயம். சீட்டாட்டம் எதாவது நடக்கும்.

சிரித்தபடி விளையாடுகிறாப் போல இருக்கும். திடீரென்று ஒருத்தன் உச்சிமயிரை ஒருத்தன் பிடிக்க, சட்டையைக் கிழிக்க, என யுத்தக் களரி ஆகிப்போகும்.

ஏல, பீடி வாங்கியா...

'காசு கொடுங்கண்ணாச்சி...'

போய் வாங்கியால தரேன்.

கைத்துட்டைப் போட்டு வாங்கி வந்தால் - அவர்களுக்கு அவனையிட்டு ஒரே சிரிப்பு. ஏல இங்க பார்றா, காசு கேக்கான்... விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஏல ஏன்ட்ட காசு இருந்தால் ஒன்னிய ஏண்டா பீடிவாங்க அனுப்பப் போறேன்...

காசு தாங்கண்ணே... வெளையாடாதீங்க...

ஏல சீட்டு வெளையாட வேணாங்கியா? - விழுந்து விழுந்து அவர்கள் சிரிக்கும்போது அவனுக்கு அழுகை வரும். இருந்த சொற்பக் காசை ரொம்பப் பசிக்கும்போது எதும் பன்னோ பழமோ, பழம்பன்னோ!... வாங்கலாம் என்று வைத்திருந்தான். பீடியாகி ஆவியாய்ப் புகையாய்ப் போகிறது...

ஏல நீ ரயில் பாத்திருக்கியா? கூகூகூ, என சத்தங் கொடுத்து, கிச் கிச் கிச் என்பார்கள். பிறகு புகை விடுவார்கள்.

ஏல நீ கழுதை பாத்திருக்கியா? - என்று சொல்லி ஒரு உதைவிட உள் ஆவேசம் வரும்.

தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே நகர வேண்டி வரும்.

மனுசாளுக்குள்ளேயே வக்ரம் உறங்கிக் கொண்டிருக்கிறது... பேசாமல் படுத்துச் சுருண்டிருக்கிற நாய்மேல் டீக்கடைக்காரன் வெந்நீரை ஊற்றி விரட்டிவிட்டுச் சிரிக்கிறான்!

படுக்க இடம் தேடி அலைதல் நித்தியப்படி வாடிக்கை. ஓரிடத்தில் படுத்துக் கிடப்பான். பசி என்றோ, ஒண்ணுக்குப் போக என்றோ எழுந்து, போய்வருமுன் அந்த இடத்துக்கு யாராவது வந்து விடுவார்கள். சில சமயம் நாய் வந்து சுருண்டு கிடக்கும். நாய் என்றால் விரட்டலாம். பெரியாம்பளைகள் என்றால் என்ன செய்வது?

டீக்கடை ஆள்கள் டீ மிச்சம் நின்று விட்டால் கிராக்கி பிடிக்க என்று அவனை எழுப்பி அனுப்புவதும் உண்டு. ஓசி டீ கிடைக்கும் அவனுக்கு.

பார்க்கும் ஜனங்களிலும் ஆயிரம் ரகம். ஒருமுறை ரொம்பப் பசி. சாப்பிட எதும் கிடைக்கவில்லை. நல்ல நல்ல நாட்டு வாழைப்பழங்கள் கடையில் தொங்கின. கெட்டித்தோல் பழங்கள். ருசி அபாரமாய் இருக்கும். பையில் சுத்தமாய்க் காசு இல்லை. என்ன செய்வது எனத் திகைத்தபடி நின்றிருந்தான். யாரோ ஒருவன், அவன் பெண்டாட்டி - ரெண்டு பேராய் நின்றபடி பழம் வாங்கித் தின்றார்கள். பசி. தன்னை மறந்து அப்படியே அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்தபடி நின்றுவிட்டான்.

நிற்கவே மாட்டான் சாதாரணமாய். அதைவிடக் கேவலமாய் ஒரு காரியம் செய்துவிட்டான். அந்த ஆண் சாப்பிட்டபின் தோலை கடையில் நின்றிருந்த ஆட்டுக்குப் போட என வீசி... தானறியாமல் கைநீட்டி விட்டான்.

சட்டென அந்த ஆணின் கை நின்றது. ஒரு வேடிக்கைபோல அவன் இவனை அலட்சியம் செய்து அந்தத் தோலை ஆட்டுக்குப் போட்டான். சர்வாங்கமும் கூனிக் குறுகிப் போயிற்று. அழுகை வந்துவிட்டது. கூட வந்திருந்த அந்தப்பெண் பதறி, ச்சீ, பாவங்க... என்றபடி தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த பழத்தின் பாதியை அப்படியே அவனிடம் தோலோடு நீட்டினாள். இவன் தலையை ஆட்டி மறுத்தபடியே அவர்களிடம் இருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டு நடந்துபோனான்...

பிச்சைக்காரனுக்குத் திமிரைப் பாத்தியாடி... என அந்த ஆண் சொல்கிறான்.

பிச்சை அல்ல நான்...

நான் ராஜா.

ஆ பிச்சையெடுக்கும் ராஜா! -அழுகை வந்தது.

பிச்சை எப்போது தூங்கினான் தெரியாது. பள்ளிக்கூடம் விட்டு கமலா வந்திருந்தது போலும். கீச் கீச் என்று சத்தங் கேட்டது. நாலு வகுப்பு வந்தும் மழலை விலகாத கமலா. அப்பாவின் தொப்பையில் உட்கார்ந்து எழுப்பிக் கொண்டிருந்தாள்.

இவனுக்கு முழிப்பு வந்தது.

---

சனிக்கிழமை தோறும் தொடர்கிறேன்

storysankar@gmail.com

91 9789987842 / 91 94450 16842

 

Friday, October 16, 2020

 

2006 தமிழக அரசின் பரிசு பெற்ற ஆண்டின் சிறந்த நாவல்

 


நீர்வலை

எஸ்.சங்கரநாராயணன்

4

லாம்பாக்கத்தில் லோடு இறக்கி விட்டு அவர்கள் நடந்தார்கள். புதிய ஊரின் வனப்புகள். அருகில் அண்ணன்.

என்னவோ தோணியது. அண்ணன் கையைப் பற்றிக் கொண்டே சின்னக் குழந்தையாட்டம் நடந்தான்.

அதைப் பார்க்க கிருட்டினமணிக்குச் சிரிப்பு. 'எலேய் பசிக்கா?'

இல்ல, எனத் தலையாட்டியவன், பிறகு வெட்கத்துடன் 'ஆமாண்ணே' என்றான் தயக்கமாய். அவனிடம் யார், பசிக்கிறதா என்று கேட்டிருக்கிறார்கள்.

ஆனால் அண்ணன் வெறும் டீ வாங்கிக் கொடுத்தான்! மணி எட்டு எட்டரை. வழியில் எங்கயும் சாப்பாடு விருத்தியாய் இராது என தள்ளிக் கொண்டே வந்துவிட்டான் கிருட்டினமணி. தவிரவும் குளிக்காமல் கொள்ளாமல் சாப்பிட பொதுவாக அவன் விரும்புவதில்லை. லாரிஷெட்டில் கூட எப்பவும் வேலை முடித்த ஜோரில் தண்ணியடிக்கிற குழாயில் குளித்து விடுவான். உடைமாற்றிக் கொண்டு சுத்தபத்தமாய்ச் சாப்பிட உட்கார்வான்.

'ரெண்டு தெரு திரும்பினா பத்தினிக்கண்ணீர்னு ஒரு ஆறுடா. போயிக் குளிச்சிட்டு வந்து சாப்பிடலாம்... என்ன?'

சரி என்று சொல்ல வேண்டியதாயிற்று. உண்மையில் அதுவரை காணாத உலகப் பசி அவனை ஆட்கொண்டிருந்தது. ஆச்சர்யம். எத்தனை கடும் பசியையும் தாக்குப் பிடித்தபடி வெறுமே திண்ணைகளில் திடல்களில் நோக்கம் எதுவும் இல்லாமல் படுத்துத் தூங்கியவன். உறவு சுற்றம் வந்தால் மனசைப்போல, பசியும் திறந்து கொள்ளும் போல!

கடையில் நின்று சோப்பு வாங்கிக் கொண்டார்கள்.

'போட்டு மாத்திக்கிறதுக்கு உடுப்பு இருக்காடே?'

'இருக்கு'

சில்லென்று கிடந்தது நீர். தெளிந்த தண்ணீரே அழகு. அதன் உள் வயிறு தெரிந்தது. இந்தக் காலப் பெண்கள் இப்படித்தான் புடவை அணிகிறார்கள்... சிவஜோதிக்கு இப்படி உடைகள் பிடிக்கிறதில்லை. தொப்புள் சுழி தெரிய இறக்கிச் சேலை கட்டுவது அவனுக்கும் பிடிக்காது. அவளும் அதை விரும்புவதில்லை. தலை நிறைய கனகாம்பரம் வைத்துக் கொள்கிறாள். ஏனோ வெள்ளைப் பூக்களை விட வண்ணப் பூக்களை அவள் விரும்பினாள். நிறைய நிறைய வைத்துக் கொள்ள விரும்பினாள். ரோஜாவே கூட ஒற்றை ரோஜா வைக்க மாட்டாள். தொடுத்துக் கட்டி பிறைநிலா வட்டமாய் வைப்பாள். முகப் பௌடர். திருஷ்டிப் பொட்டு. அவள் அலங்காரம் செய்து கொள்வதைப் பார்த்து நல்லா இருக்கு, என அவன் சொல்ல வேண்டும்!

பரபரப்பாய் வீட்டு வேலை செய்கிறவள். டிரஸ் பண்ணிக் கொண்டால் நடையே மாறிவிடும். காதில் ரிங் அணிவதில் ஆசை அவளுக்கு.

'நல்லா இருக்கா?'

'நல்லாதாண்டி இருக்கு. ஆனா என்ன, இருட்டுல இப்டியே எதிர்ல வந்திறப்டாது... கண்ணுல மை தீட்டச் சொன்னா, மைல கண்ணைக் கழட்டிப் போட்டாப்ல இருக்கே.'

வீட்டில் குளித்தால் குளியல் அறைக்கு வந்து முதுகு தேய்த்து விடுவாள். சுரண்டச் சுரண்ட சுரங்கமாய் அழுக்குருண்டைகள் வரும்... இந்த மாதிரி உடலைச் சூடேற்றிக் கொண்டால் பயண அலுப்பு பத்திகூடக் கவலைப் படாமல் மனம் குஷியாகி விடும்...

ராஜா கொட்டாவி விட்டான்...

- கமலா என ஒரே பெண் அவருக்கு. நாலாம் வகுப்பு போகிறதாக அண்ணன் சொன்னார். அவளை உடனே பார்க்க வேணுமாய் இருந்தது ராஜாவுக்கு. உறவு தளிர்க்கும் காலம்.

நான் போவதே அண்ணிக்கும் அந்தக் கமலாவுக்கும் தெரியாது....

பத்தினிக்கண்ணீர். பெரிய ஆறு என்று சொல்ல முடியாவிட்டாலும் தண்ணீர் கிடந்தது. குளிக்கிற அளவில் இடுப்புக்கு ஆழம். காலையில் சில்லிட்டுக் கிடக்கும் ஆறு நேரம் ஆக ஆக சுடும். மேல்ப்பக்கம் சூடாகவும் முங்க முங்க குளிராவும் கலப்படமாய் இருக்கும் அது.

அழுக்கு தீரத் தீர நிதானமாய்க் குளித்தார்கள். தண்ணீருக்குள் மொட்டைக் கட்டையாய் இருந்து கொண்டு முழுசாய் உடைகளைக் கழற்றி அலசிப் பிழிகிறான் அண்ணன். ஈரத்துண்டைக் கட்டிக் கொண்டு எழுந்து நிற்கிறான் பிறகு. அந்தத் துண்டு டிங் டாங்கை மறைச்சாப்ல தோணவில்லை.

சாப்பிட சாப்பிட வயிறு திறந்து கொண்டாப் போல இருந்தது. கிருட்டினமணியும் செலவைப் பற்றிக் கவலைப் பட்டதாய்த் தெரியவில்லை.

'வேறெதாவது வேணுமாடா...' என்கிறான் பரோட்டாவைப் பல்லால் இழுத்துக் கொண்டே.

'பார்சல்...'

'பார்சலா?'

'தங்கச்சிக்கு...' என்று சிரித்தான் ராஜா. அவனுக்கு உடனே கமலாவைப் பார்க்கணும் போல இருந்தது.

பெண்துணை காணாதவன் அல்லவா!

 >>> 

மனம் விரும்பி உறவுகளைப் பற்றிக் கொள்கிறது. சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள ஆட்கள் கூட இருப்பதே தெம்புதான். சுகங்கள் அப்போது இரட்டிப்பாகவும், துக்கங்கள் பாதியாவுமே கூட பரிமாணம் பெற்று விடுகின்றன!

விட்டுக் கொடுத்து விட்டால் இழப்புகளில் வலி இல்லை.

விரதம் இருக்கையில் பட்டினி கூட எத்தனை அழகாகி விடுகிறது.

காத்திருத்தல் கனவுகளின் நீட்சிதான். நம்பிக்கை அப்போது உள்ளே பூ போல விரிந்து மணம் பரப்புகிறது.

கால்களில் கண்ணறியா கொலுசுகள் கட்டி விட்டது யார்? சிரிப்பில் சற்று வெண்மையைப் பூசி விட்டது யார்?

'தங்கச்சிக்கு என்ன பிடிக்கும்?' என்கிறான் ராஜா.

'தங்கச்சிக்கா?... உன்னைப் பிடிக்கும்' என்று கேலி செய்கிறான் கிருட்டினமணி.

'என்னைச் சாப்பிட முடியாது' - அவனும் விடுவதாய் இல்லை. கன்றுக்குட்டித் துள்ளலாய் மனம் கிறங்கித் திரிகிறது. இத்தனை நாளாய் உறவுக்கு உள்ளூற ஏங்கிக் கிடந்திருக்கிறேன்.

'இதான் கமலா...' என்று பர்சின் புகைப்படத்தைக் காண்பிக்கிறான் கிருட்டினமணி. அவன், சிவஜோதி, கமலா என்று மூவர் கூட்டணியில் குடும்பப் புகைப்படம். எப்பவும் பர்சில் வைத்துக் கொண்டிருந்தான் அவன். ரெட்டைச் சடை போட்டு கருப்பு நெற்றிநடுப் பொட்டு. கன்னங்கள் உப்பி புதிதாய்ப் போட்டெடுத்த பூரிபோல் இருந்தன. அதில் கூட மச்சம் போல் சிறிய திருஷ்டிப் பொட்டு. புகைப்படம் எடுக்கிற ஆனந்தம் அதற்கு. சிரித்த பல்வரிசையில் நடுவில் ஒரு பல், கிரிக்கெட் ஆட்டத்தில் நடுக்குச்சி எகிறினாப் போல... காணவில்லை. அவனைப் போல!

பல் கெட் அப்ல உனக்கும் அவளுக்கும் ஒரே மாதிரிடா! - என்று சிரிக்கிறான் கிருட்டினமணி.

சின்னவயசுப் புகைப்படம். பட்டுப் பாவாடை கட்டிய உற்சாகம். மயில்நீல பட்டு உடையில் ஊடாடி ஜரிகைகள். சின்னாளப் பட்டு. இப்போது முகமும் சிறிது மாறியிருக்கும். உயரங் கொடுத்திருப்பாள்.

அப்பாவின் மிலிட்டரிச் சட்டை போட்டிருந்தான் ராஜா.

பாரதி, இது அவன் கேட்காமலே கிடைத்த பெரிதினும் பெரிது...

தொளதொளவென்று முட்டிவரை தொங்கியது. 'ஏல உனக்கு கீழ டவுசரே தேவையில்லைடா' என்று கிருட்டினமணி கேலி செய்தான். 'வேற உடுப்பு எதும் எடுக்கணுமா?-ன்னு கேட்டேன்ல...' என்றான்.

'அப்பா சட்டை. நல்லாதான் இருக்கு...' என்றான் ராஜா.

'ஐய இப்பிடியே போனா... பொண்ணு பூச்சாண்டின்னு பயந்துக்கும்டா...'

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தார்கள். உண்மையில் மாத்து உடை இருக்கிறதா என்று நான் அவனிடம் கேட்டிருக்கக் கூடாது. பாவம் அண்ணன் எவ்வளவுதான் செலவு செய்யும்னு, ஒரு கணம் ஜகா வாங்கி விட்டானோ, என்றிருந்தது. நல்ல பிள்ளைதான். இவனைப் பெத்து வளர்க்க இவங்க அப்பன் ஆத்தாளுக்குக் குடுத்து வைக்கல பாரேன், என்று வருத்தமாய் இருந்தது.

'ஏல உண்மையச் சொல்லு... எத்தனை வரை பள்ளிக் கூடம் போனே?'

'அட எப்பவோ போனது....'

'டேய் சொல்லுடா...'

'நாலாவது.'

'ஏன்... மேல படிக்கலியா?'

'இல்ல'

'அதான் ஏன்?'

ராஜா சிரித்தபடியே 'நாலுக்குப் பிறகு அஞ்சுன்னு ஞாபகம் வராமப் போச்சு...'

'ஏல என்ட்டியே திருப்பிச் சொல்றியாக்கும்...'

'அத்த விடுங்கண்ணே... ருவ்வாக் கணக்கு தெரியும். தமிள்ல எழுத்துக் கூட்டி வாசிப்பேன்... பஸ்ல போறஊர் வாசிக்கத் தெரியும்.'

'வர்ற ஊர்னா தெரியாதா!...'

போகும் வழியில் பெட்டிக்கடையில் அன்றைய தினசரியின் செய்தி போஸ்டர்.

'அது என்ன?'

'அது வடை சுத்தித் தர்ற காகிதம்ண்ணே...'

'ஏல வெளையாடாதே... ஒன் வயசுல படிக்கணும்டா... நான்தான் விளையாட்டுத்தனமா விட்டுட் டேன்... படிக்கிற வயசுல படிக்கணும்.'

எளிய பருத்தி உடைகள். ரெண்டு டவுசர், ரெண்டு சட்டை, ரெடிமேட் வாங்கினான் கிருட்டினமணி. உள்ளாடைகள் பிறகு பார்த்துக் கொள்ளலாம். டிங் டாங்கைக் காத்தாற விடவேண்டிதான். பணம் இல்லை. இதுக்கே ராஜாவுக்கு வருத்தம். அண்ணனைப் போட்டு செலவு செலவு என்று வாட்டுகிறான் அவன். அழுகை வந்து விட்டது அவனுக்கு..

'ஏல எதுக்கு அழுவறே? இப்ப என்ன ஆயிப் போச்சின்னு அழுகறே?' என்று தட்டிக் கொடுக்கிறான் கிருட்டினமணி.

'எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சிரிச்சிக்கிட்டே சகிச்சுக்கிட்டேன் அண்ணே... இப்ப சந்தோசம் வர்ற போது.... அழுகை அழுகையா வருது!' என்றான் ராஜா.

நேற்றையவரை அடுத்தவேளைச் சோற்றுக்கு இல்லாதவன். ஒரே நாளில் எத்தனை பெத்தம் பெரிய மாறுதல்கள்.

வாழ்க்கை. அதன் விசித்திர முடிச்சுகள்.

பூ - கட்டிய ஜோரில் அர்ச்சனைக்கும் போகும் - பிணத்தின் மேலும் போய்ச்சேரும் என்கிறாப்போல!

அண்ணன் அவனைப் பார்த்துவிட்டு 'நாளைக்கு ஊருக்குப் போயி உனக்கு முடி வெட்டணும்டா' என்கிறான்.

எனக்கே இத்தனை தூக்கம். இரா முழிச்சி, வண்டி ஓட்டி வந்திருக்கிறான் அண்ணன். அவனுக்கு உடம்பு அலுப்பு எப்பிடி இருக்கும்...

'பழகிருச்சி... ஆச்சி. வீட்ல போயித் தூங்க வேண்டிதான...' என்றான் கிருட்டினமணி.

திரும்ப பஜார்ப் பக்கம் வந்தபோது லாரி காலியாய் இருந்தது. லோடு இறக்கி விட்டார்கள். அதைவிட ஆச்சர்யம் - அதில் பாதி தார்கள் விற்றுப் போயிருந்தன.

வாலாந்துறைப் பழம்னா எப்பவுமே கிராக்கிதான். ருசியை வெச்சே சொல்லிறலாம். அந்த மண் வளம் அப்படி, என்றான் அண்ணன்.

லாரிக்குள் ஒரு சீப்பு பழுக்காத பழங்கள் கேட்டு வாங்கி வைத்துக் கொண்டிருந்தான் ராஜா. தங்கச்சிக்குப் பிடிக்கும், என்று கிருட்டினமணி சொல்லியிருந்தான்.

*

                                                   சனிக்கிழமை தோறும் தொடர்கிறேன்

storysankar@gmail.com

mob 91 97899 87842 / 91 94450 16842

Friday, October 9, 2020

 

2006 தமிழக அரசின் பரிசு பெற்ற ஆண்டின் சிறந்த நாவல்

நீர்வலை

எஸ்.சங்கரநாராயணன்

3

ராணுவக்கார அப்பா. என்றாலும் அவர் சாவு துக்ககரமானது.

வெயிலிலும் மழையிலும் பனியிலும் காடு மலைகளிலும் அலைந்து திரிகிறவராய் இருந்தார் பிச்சையின் அப்பா. குழந்தை இல்லாமல் வெகுகாலங் கழித்து அவன் அவருக்குப் பிறந்தான். பார்க்கிறவர்கள் பேரனா, என்பார்கள். அந்தளவு அவர் உடலும் மனசும் தளர்ந்திருந்தது. தலை வழுக்கை. நரை. நெற்றி நிறையச் சுருக்கங்கள், மணல் வெளிகளில் காற்று நடந்து போனாப்போல. நியதிகள் ஒடுங்கிவிட்டன.

பிச்சையைப் பெற்ற ஜோரில் அம்மா இறந்துபோனாள்.

ஒரு குழந்தை பிறந்து விட்டால் எத்தனை அழகாகி விடும் வாழ்க்கை என நம்பியிருந்தார் அப்பா. அது அவரது அதிர்ஷ்டம். அவனது அதிர்ஷ்டம்... காலம் அவர்களைத் துரத்தி விசிறியடிப்பதில் எத்தனை ஆர்வப் பட்டது. யானையின் துதிக்கையாய் விதி ஆவேசமாய் முன்னகர்ந்து வருகிறாப் போல இருந்தது.

இருந்த மண்வீடு ஒரு மழைக்குச் சரிந்து விழுந்தது தனிக்கதை...

சோகக்கதைகள்.

பதுங்கு குழிக்குள் விழுந்தது குண்டு. அவர் மீது விழுந்திருக்க வேண்டும். சுதாரித்ததில் தொடையைக் கீறியிருந்தது. ஒரு மீட்டர் உயரத்துக்கு எழுந்தது மண் புழுதி. அவரையும் சற்று வெளியே பிதுக்கி வீசியது. பற்பசைப் பிதுக்கல்.

தொங்கிக் கொண்டிருந்தது கால். எவ்வளவு ரத்தம்! மயங்கிக் கிடந்தார் காலைப் பிடித்தபடி. எப்படியும் தள்ளாடியும் ஊர்ந்தும் முடிந்தவரை அவர் நடக்கப் போரா... ஆடினார். உடம்பே அதிர்ந்து ஆளைத் தாலாட்டிக் கீழே தள்ளியது. முழுப் பனி. முட்டிவரையிலான பூட்ஸ். விமான குண்டு அடித்த அடியில் தொடைப் பக்கம் சதை குதறிச் சிதறியது ஞாபகம். என்ன அலறல் அலறினார். உடனே மயக்கமாகி விட்டார்.

முழித்தபோது உயிர் இருப்பதே திகைப்பாய் நம்ப முடியாத அம்சமாய் இருந்தது. உயிர் பிழைக்க ஆவேசமாய் எழுந்து கொண்டவர் கீழே விழுந்தார். தொடைக்காயம். காலில் பாய்ந்திருந்தது குண்டு. முருங்கைக் கிளையாய் ஒடிந்து ஆடிக் கொண்டிருக்கலாம் அது. சோதித்துப் பார்க்கக் கூட முடியவில்லை. எந்த மரத்தின் எந்தக் கிளை எப்படி அவர் கைக்குக் கிடைத்ததோ தெரியாது.

பத்து இருபது தப்படி - அது சரியான அடி அல்ல. தப்பு அடி! - வைக்குமுன்னே மயக்கமாகி யிருந்தார். நினைவு வந்தபின் எழுந்து கொள்ளக் கூட தைரியம் வரவில்லை. காத்திருந்தார். எதிரி கையில் மாட்டுவாரா, நமது ராணுவத்தினர் வந்து மீட்டுச் செல்வார்களா தெரியாது. வலி தெரியாமல் இருக்க கால்ப்பக்கம் அசைவு காட்டாமல் இருப்பது உத்தமம். இருக்கிற கொஞ்ச நஞ்ச தைரியத்தையும் அது கழட்டி விட்டு விடும்... ரயில்பெட்டி ஷண்டிங் போல.

எதிரி கையில் மாட்டினால் - இதோ உயிர் எடுத்துக் கொள், எனக் கொடுத்து விட வேண்டியதுதான்.

சில சமயம் முழித்துக் கொண்டு கிடப்பார். சிலசமயம் மயங்கிக் கிடப்பார். விழிப்பு வந்தபோதுதான் தெரியும் மயங்கிக் கிடந்த விஷயம். யாரோ நழுவ விட்டுவிட்டுப் போன பர்ஸ் போல அவர் மாத்திரம் கிடந்தார். பனியும் குண்டு சிதர்கள் வீசிய கந்தகமும் பாசியுமாய்க் கலவை வாசனையாய் இருந்தது பிரதேசம். சில சமயம் ஊதற் காத்து கிளம்பி உடம்பையே நடுக்கும். பனி கொட்டும். மழை போல கடுங் குளிராய்ப் பெய்கிறதும் உண்டு. மனிதன் வாழ லாயக்கில்லாத இடம்.

- அதற்கு ஒரு போர்!...

இரவும் பகலும் கழிந்து போயின அவர் பார்வையில். அந்தக் குளிர் அதைத் தாங்கும் வல்லமை எப்படி வந்தது தெரியாது.

நினைத்துப் பார்த்தால் மனிதன் எத்தனை பெரிய பெரிய சோதனைகளைத் தாங்கும் சக்தி உடையவனாய் இருக்கிறான் என்று தெரிகிறது. ஆச்சர்யம். எப்படியும் பிழைத்து விடுவோம் என்கிற அசாத்திய நம்பிக்கை. வாழ்க்கைமேல் அவனுக்கு இருக்கிற பற்று. ஆசை. பிடிப்பு.

செத்துப்போக யாருக்கும் எக்காலத்தும் மனசு வருவது இல்லை!

உலகம் துக்ககரமானது என மேல்ப்பூச்சாய் வாய் பேசினாலும் இறக்க யாரும் சம்மதிப்பதில்லை. வாழ்க்கையில் எதோ அம்சம் கவர்ச்சியாய் காந்தமாய் நம்மைப் பிடித்து வைத்துக் கொள்கிறது. மேலும் மேலும் வாழ அது தூண்டுகிறது...

வாழ்க்கை எதிர்பாரா விநோதங்களின் கலவை.

ஒண்ணு ரெண்டு வரிசையாச் சொல்லச் சொன்னால், தப்பாச் சொல்லவில்லையா குழந்தை... அதுபோல!

சோகப் படங்கள் - படம் பூரா விக்கி விக்கி அழுதபடி ஜனங்கள் பார்ப்பது இல்லையா! கடைசிவரை பார்த்தாகிறது. தியேட்டரில் படம் முடிந்து விளக்கு போட்டால் அத்தனை முகங்களிலும் ஜிவுஜிவு. அழுது சிவந்த முகங்கள்! ஒருத்தரைப் பார்க்க இன்னொருத்தருக்குச் சிரிப்பு. வேடிக்கை. தன்மேலேயே சிரிப்பு. படம்தான் அழுகை என்றால் அழுகைக்கு எனத் தனிப்பாட்டே வைக்கிறான்யா. போதும். நிப்பாட்டு, என யாரும் சொல்வதில்லை!...

எங்கே நிம்மதி!... கடைல போய்க் கேப்பான் போல!

ஐயா ஒரு கிலோ நிம்மதி - பொட்டலங் கட்டிக் குடுங்க!...

சோகப்பாட்டுக்கு எல்ப்பீ ரெகார்டு... ரெண்டு பக்கம். பெரிய பாடல்... கருப்புத் தட்டில் செவிக்கு உணவு! தட்டு நிறையச் சோறு.

எவ்வளவு அழுகிறோமோ அல்லது ஒரு பாதி எவ்வளவு கஷ்டப் படுகிறோமோ அந்தளவு பின்பாதி ருசிக்கிறது. பசித்தவனுக்கு உணவு போல! அந்த ருசிக்கு பட்டினியாய் இருப்பதுகூட வேண்டித்தான் இருக்கிறது!

அழுகை மனசைக் கழுவிவிட்டு சுத்தம் செய்கிறது.

இருட்டிலும் முழு இருட்டு என்பது இல்லை, என்று சொல்வார்கள். ஒளிகசிகிற இருட்டுதான்!

வெற்றியிலும் முழு வெற்றி கிடையாது. சோதனைகள் காயங்கள் தழும்புகள் கட்டாயம் கலந்துகட்டித்தான்... ஒவ்வொருவரிடமும் கூட இருக்கவே செய்கின்றன...

ஆனால் வாழ்க்கையில் ரொம்பக் கஷ்டப்பட்டவன் பிறகு முன்னேறிட்டா நான் அவ்ளோ கஷ்டப் பட்டேன்னு அல்ட்டறதில்லை. நினைச்சிப் பார்க்கறதில்லை. தூசிதட்டினாப்ல போயிர்றான். ஜெயிக்க முடியாத சனியன்கள்தான்... வாழ்க்கையை மலைபாரமாய் உணர்றாங்க... எப்பா ஏங் கிரகம் எப்பதான் விடியுமோ...ன்னு ஆயாசப் படுதுங்க. அந்தக் காரியம் பண்ணாதே, இந்தக் காரியம் பண்ணித்தான் நான் நாசமாப் போனேன்-னு அடுத்தாளுக்கு ஆயிரம் அட்வைஸ்.

அப்பா அப்படியே தூக்கமும் விழிப்புமாய்க் கிடந்தார். விமானம் ஒன்று தாழப்பறந்து வந்ததை அறிவார். சத்தம் கேட்டது. எத்தனை அற்புதமாய் இருந்தது அந்தச் சத்தம். குழல் இனிது. யாழ் இனிது. விமானச் சத்தமும் இனிது. அதன் இஞின் சத்தம் அவர் அறிவார்...

சிறிய செஞ்சிலுவை விமானம். சண்டைச் சத்தம் அடங்கிய ஜோரில் இடம் அமைதியானதும், இழப்புகளைச் சோதிக்க எனத் தேடி வருவார்கள். நமது நாட்டின் செஞ்சிலுவை விமானங்களும் வரும். எதிரி நாட்டின் மருத்துவக் குழுவும் வரும்... உயிர் ஊசலாடிக் கொண் டிருப்பவர்கள், இறந்த உடல்கள் என்றெல்லாம் கணக்கு கிடையாது. கிடைத்த நபர்களைச் சேகரிப்பார்கள்... எதிரி ராணுவ வீரன், நமது நாட்டு வீரன் என்கிற பேதங்கூட இல்லை. இவர்கள் நோயாளிகள். மருத்துவமும் உயிர் பிழைக்க வைப்பதான முயற்சிகளும் எல்லார்க்கும் பொது. மருத்துவ முகாமின் பணி அது.

போர்க்களத்தில் அவர்கள் தனிப் பிறவிகள். டாக்டர்மார் - அவங்கதான் நம்மைச் சாகடிப்பார்கள். நாம அவர்களைச் சாகடிக்க முடியாது!

போர் வளாகப் பகுதியிலேயே சற்றுதள்ளி மருத்துவப் பணிமனை. ரயில்வே பிளாட்பார்ம்போல வளாகங்கள். ஒரு ஸ்பெஷல் சாதா... என சத்தம் வராததாலோ என்னமோ, பார்சல் ஆகாத பிணங்கள். முகம்வரை மூடப்பட்டு வரிசையாய் வைக்கப் பட்டிருக்கும்.

இன்னும் இன்னும் என உடல்களும் காயம் பட்டவர்களும்... ஆட்கள் வந்து குவிந்துகொண்டே இருக்கிறார்கள். அருகிலேயே குண்டுச் சத்தங் கூட கேட்கும். பரபரப்புடன் விமானங்கள் உயர எழும் ஓசை கேட்கும். இரும்புப் பெருங் கரண்டியால் அடிவயிற்றில் சுரண்டுகிறாற் போல கடூரமான பயமான ஓசை.

செஞ்சிலுவைக் கொடி பறக்கும் பணிமனைப் பகுதிகள்...

போர் என்பதே அநேக அபத்தங்கள் கொண்டது. யாரோ என்னவோ பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். இவனுக்கும் அவனுக்கும் பாஷைப் பிராப்தி கூடக் கிடையாது. அவனுகள் பாட்டுக்கு அவனவன் வேலையைப் பார்க்கலாம். சும்மா நோண்டிக் கொண்டே இருப்பதில் பொழுதைக் கழிக்கிறார்கள்... அதில் உரசல்கள். போர்... வெற்றி என்கிறார்கள். தோல்வி என்கிறார்கள். உடனே போர் என்கிறார்கள். பிறகு போர் நடக்கிறது. யாரோ தெரியாத யாரோடோ மோதுகிறார்கள். ஆண்மை சிலிர்த்தெழுந்தாப் போல பீரங்கிகள்... அடிரா குண்டை. காயம் படுகிறார்கள். உயிர் இழக்கிறார்கள்... அதைவிட வேடிக்கை சுட்டுக்கொண்டே இருப்பார்கள். திடீரென்று செய்தி வரும்... நிறுத்து. நிறுத்து... சமாதானம் சமாதானம்... என்கிறார்கள். உடனே துப்பாக்கியை இரு தரப்பினரும் இறக்கி விட்டுப் புன்னகைகள். கைகுலுக்கல்கள்.

இரண்டு ராணுவத் தளபதிகளும் என்ன பேசிக் கொள்வார்கள்?

இரு குழந்தைகள் போல - ஏண்டா சுட்டே? - நீ மட்டும் சுடலாமோ?...

சிப்பாய்களும் போர்வீரர்களும் முடுக்கப் பட்டவர்களாய் ஆணைக்கு இயங்கியபடி இருப்பார்கள். சூ - என இலக்கு காட்டப்பட்ட நாய்கள்! சாவி கொடுத்த பொம்மைகள். மனித யந்திரங்கள். நேரங் காலம் இல்லை. இரவு பகல் இல்லை. உண்மையில் இரவில் போர் இன்னும் உக்கிரமாய் மூர்க்கமாய் இருக்கும்.

ஒரு பிரதேசத்தைக் குறிவைத்துக் கொள்வார்கள். முதலில் வானத்தில்தான் தாக்குதல்... முதல்கட்ட யோசனைதான். வரைபடங்களை வைத்துக் கொண்டு விவாதங்கள் நிகழும். சட்டென்று முகூர்த்தம் தவறாமல் சிர்ர் சிர்ர்ரெனச் சீறிக் கிளம்பும் விமானங்கள். அதன் அசுர வேகம். இலக்குகளில் குண்டுகள் பொழியும். மழையாய்ப் பொழியும். போன விமானங்கள் குறிப்பிட்ட எல்லைவரை வானத்தைக் கைப் பற்றி விட்டுத் திரும்பும். எத்தனை விமானங்கள் கிளம்பின, அத்தனையும் பத்திரமாய்த் திரும்புமா உத்திரவாதம் இல்லை. போரில் வெற்றி தோல்விக்கே உத்திரவாதம் இல்லை!

பிறகு பீரங்கிப் படையின் முறை. ஐம்பதடி தூரம்வரை பீரங்கிகளின் குண்டு வீச்சு. போஃபர்ஸ் பீரங்கிகள் எடை குறைந்தவை. நகர்த்திச் செல்ல எளியவை. இருளில் அக்னிக் குழம்புகளாய்ச் சீறிச் செல்லும் குண்டுகள். நீள்குழாயில் குண்டுகளைப் போடும் ஒருவன். விசையை அழுத்தி வெளியே தள்ளும் இயக்கத்தில் ஒருவன். பெரிய பெரிய கடல்மீன்களைப் போல குண்டுகள். தனியாளாய்த் தூக்க முடியாது. ஐம்பது அடிவரை குண்டுகள் முழங்கும். நம் பகுதியிலும் குண்டுகள் வந்து விழும் எதிரி முகாமில் இருந்து!

பிறகுதான் தரைப்படையின் வேலை. கடும் இருட்டு. நிற்க நேரங் கிடையாது. காதுகளின் வேலைதான் அதிகம். பதுங்கு குழிகளில் சுட்டுக் கொண்டே செல்ல வேண்டும். கூட வருகிறவன் இறந்து போனால் கூட பார்க்கமுடியாது. நிற்கமுடியாது. அதைப்பற்றி யோசிக்கவே முடியாது... என்ன, கூட வந்தவன் அலறல்... அது தெரியும். அவன் குண்டடிபட்டு உருள்கிறது, அங்கப் பிரதட்சிணம் - தெரியும். அவனது ராணுவ சாமான்களையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். எதிரிகள்... அடிபட்டு ஆயுதம் இல்லாமல் கிடக்கிறவர்கள் கையில் இந்த ஆயுதங்கள் கிடைப்பது ஆபத்து. அதை அனுமதிக்க முடியாது.

என்ன, நண்பன் அடிபட்டு விட்டான்... என்கிற நிலை உள்ப்பதட்டத்தை, சீற்றத்தை, ஆவேசத்தைக் கிளர்த்தும். சண்டை முன்னிலும் ஆக்ரோஷமாய் நிகழும். மனித சராசரி உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட நிமிடங்கள். மனித யந்திரங்கள்... எதிர்ப்பட்டவன் சாகணும் என்பது விதி. இரக்கப் பட்டால், பாவி அவன் உன்னைக் கொன்னுருவாண்டா!

ஒரு தீபாவளி அன்று பிச்சை பயந்து உள்ளோடி வருகிறான். அப்பா சிரிக்கிறார்.

'என்னடா?'

'வெடி வெடிக்காக...'

'ஏல... நீ ராணுவ வெடி பாத்திருக்கியால?'

அவன் அவரையே பார்த்தான்.

'என்னடா?'

'அந்த வெடிலதான உமக்குக் கால் போச்சு...'

'அதுக்கு? சண்டைன்னா எல்லாந்தான்...' என்று அவனைத் தடவிக் கொடுக்கிறார் அப்பா.

'எனக்கும் கால் போயிட்டா ஒன்னிய யார் பாத்துக்க இருக்காக...' என்றான் பிச்சை.

'ஏல பயப்டப்டாதுடா... இந்த வெடில கால் போயிருமாங் காட்டியும்... எது வந்தாலுஞ் சரின்னு இருக்கணும். நிமிர்ந்து நிக்கணும்... அவன்தான் மனுசன். கேட்டியா? மிருகங்கள் இல்ல... நாலு கால்ப் பிராணி. அதுதான் குனிஞ்சி நடக்கும். நாம? நாம மனுசங்க. நிமிர்ந் து தாக்குப் பிடிச்சி நிக்கணும்...'

'நிமிர்ந்து நின்னுதான் உமக்குக் காலைக் கழட்டி விட்ட்டானுங்க... பயப்பட வேண்டிய விசயத்துல அசட்டு தைரியங் கூடாதுப்பா...' என்கிறான் பிச்சை. எப்படியோ சட்டென்று பதிலடி அவனிடம் சிக்கி விடுகிறது...

இந்த அறிவு புழுதியில் வீணையாய்க் கிடக்கிறது!... அப்பாவுக்கு வருத்தம்.

- உடம்பு முழுக்க ரத்தம் சொட்டச் சொட்ட காயம். அங்கங்க வாழைக்காய்த் தெரிகிற பஜ்ஜியாட்டம் கெடக்கேன்! எதிரி வாரான் பாத்துக்க பிச்சை. உங்கப்பாவுக்கு நேரா வந்திட்டான். நான் எதிர்பார்க்கவே யில்ல. நான் முன்பக்கமாப் போயிட்டிருந்திருக்கேன். அல்லது அப்பதான் மயக்கம் தெளிஞ்சு எப்பிடியோ நடந்து வராம் போல...

என் முதுகுப்பக்கம்... சுட்டிருப்பான். எப்பவுமே எதிரி துடிக்கறதாத் தெரிஞ்சா உடனே சுட்றணும், அவனை விட்டு வைக்கப்டாதுன்னு கட்டளை. எப்படியோ அவன் தப்பிச்சிட்டிருக்கிறான்... சரி நம்ம கதை முடிஞ்சிட்டதுன்னே தீர்மானிச்சிட்டேன்...

ஆனா அப்படியே சரிஞ்சி என் காலடில விழுந்தான். எங்காளுகள்ல யாரோ ஒருத்தன்... அந்த மவராசன் யாரு தெரியல... போட்டுத் தள்ளீர்க்கான். எங்கருந்தோ வந்திருக்கு குண்டு.

எதுக்குச் சொல்ல வரேன். அப்பக் கூட எங்களுக்கு சாவுபயம் கிடையவே கிடையாது. ஆறிலுஞ் சாவு. போரிலும் சாவு!...

சாவு கூட பயமான விஷயம் இல்லடா. ஆனா சாவுக்குக் காத்திருக்கறம்ல? அதான் பயங்கரம்...

'புரியலய்யா... எதுக்குக் காத்திருக்கணும். ஒம்மபாட்டுக்கு நீர் ஒம்ம சோலியப் பாத்திட்டு இருக்காம...?'

'இப்ப எதுக்கு உனக்குச் சாவு கவலை... நான் சொன்னது உனக்குப் புரியாம இருக்கறதே நல்லது... நீ வளர்ற பிள்ளை...'

சாவு அல்ல. இந்த வயசில், பசிதான் பிரதான பிரச்னை. அது தீர்ந்ததா, வயிறு நிறைந்ததா... உலகம் இன்பகோளம்!

சற்று பள்ளத்தில் கீழே கிடந்த அப்பாவை ஒருவேளை பார்க்காமல் போய்விடக் கூடும் என்ற பயம் அப்பாவுக்கு. அதெப்படி போவார்கள் என்று யோசிக்க முடியாத கையறு நிலை. அடிச்ச பனிப்புயலின் கடுமை... அதுவரை உறைக்காதது அப்போது உறைத்தாப் போலிருந்தது. இருந்த சக்தியெல்லாம் திரட்டி கைதூக்கி ஒரு ஓநாய்போல அவர் அழுது அலறினார். ஓடிவந்த சிப்பாய் தொட்ட்... தூக்க் - ஆஆஆ ஊஊஊ... என உயிர் எழுத்துக்களை வாரி வழங்கினார்... சரியாய்த்தான் பேர் வைத்திருக்கிறார்கள். உயிர் போகும்போது உச்சரிக்கும் எழுத்துக்கள்! - மீண்டும் மயக்கமானார். கடுமையான காலங்கள். வலி தெரியாமல் இருக்க அங்கேயே ஊசி போட்டார்கள். மரத்துப்போகும் ஊசி. தொடைக்காயத்துக்கு முதலுதவி. சிறு கட்டுப்போட்டு புண்ணை மூடி அவரை ஸ்ட்ரெட்ச்சரில் தூக்கி எடுத்துப் போனார்கள். ஆஸ்பத்திரியில் காலைச் சோதித்தார்கள். கால் கடுமையாய்ச் சேதம் பட்டிருந்தது. ரத்தம் கெட்டுப் போய் இருந்தது. பாசிகள் திரண்டிருந்தன புண்ணில். தொடையே நீலமாய் இருந்தது.

ரத்தங் கட்டி பாரமாய் காலே... கால் இல்லாமல், துணையெழுத்து தப்பி, க ல் என ஆகியிருந்தது! - காலை எடுத்து விட்டார்கள். இல்லாவிட்டால் உயிரையே பறி கொடுக்க வேண்டியிருக்கும்.

முட்டிக்கு சற்று மேல் வரை நீக்க வேண்டியிருந்தது. உடல் தேற, புண்கள் ஆற ஆறேழு மாசம் படுக்கையில் கிடந்தார். நர்ஸ் தோளைப் பற்றியபடி மெல்ல நொண்டியபடி நடந்து பழகினார். பிறகு மனுசாள் உதவியின்றி தவளைத்துள்ளல் துள்ளித் துள்ளி, தானே குளியல், காலைக்கடன், என்று பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார்.

சிறு குழந்தை போல, வாழ்க்கையை மீண்டும் துவங்கினாற் போல...

உயிர் இன்னொரு ஜென்மம் எடுத்தாப் போல...

தந்தி கொடுத்து அவர் மனைவியை வரவழைத்திருந்தார்கள். ஊருக்குக் கூட்டிப் போகணுமானால் போகலாம். இங்கேயே நகர இராணுவ ஆஸ்பத்திரியிலும் வைத்துப் பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள். ஊரில் என்ன வசதி இருக்கிறது... அரசம்பட்டியில்? அங்க ஒரு வௌங்காத மருத்துவச் சி இருக்கா. நாளாக நாளாக அவ காலே இத்தா தண்டி வீங்கிப் போயி, வெளிநடமாட்டமே அவளுக்கே அத்துப் போச்சு. என்ன வைத்திச்சி. அவளுக்கே தன் காலையே சரி பண்ண இயலாமல்ல போச்சி... அவர்கள் அங்கேயே தங்க முடிவு செய்தார்கள்.

போர்க்காயம் பட்டவர். தனி அறையில் ராஜ வைத்தியம். கூட ரமணிபாய்...

ரமணிபாய் கருத்தரித்தது அங்கேதான்!...

அக்குள் தாங்குக் கட்டைகளுடன் அப்பா திரும்ப ஊர் வந்து சேர்ந்தார்.

ஊரே கௌரவமாய் வரவேற்றது மகிழ்ச்சிகரமாய் இருந்தது. வீட்டுக்கு அவரைப் பார்க்க வந்த எல்லாருக்கும துக்கம் தொண்டையில் விக்கியது. தம்மைக் காக்க அவர் கால் கொடுத்ததாக அவரைப்பற்றிப் பேசிக் கொண்டார்கள். நினைத்தார்கள்.

ரமணிபாய்க்குக் கூட அதையிட்டுப் பெருமைதான். நீங்க பிழைச்சி வந்ததே போதும், என்று வாயாரச் சொன்னாள்...

- நாளடைவில் அவர் கொண்டு வந்த பணத்தை கபளீகரம் செய்ய கழுகுகள் சுற்றிவர ஆரம்பித்தன. யாரை நம்ப, யாரை எவ்வளவு தூரம் நம்ப தெரியவில்லை. பிசினெஸ் என அவர் எதிலும் இறங்கியதில்லை.

ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது.

என்னத்தைக் காலை விடறது... காலே இல்லையே!

ஏமாற்றம். ஏமாற்றங்கள்.

இதன் நடுவே சிறு ஆறுதல் போல குழந்தை வரம்... என்று பார்த்தால், சுவரை விற்று சித்திரம் வாங்கினாப் போல.... இவனைப் பிரசவித்துவிட்டு ரமணி இறந்து போனாள். இந்தக் காலத்தில் சுற்றிலும் எதிரிகள் மத்தியில், கால் இல்லாமல்... இவனை நான் எப்படி வளர்ப்பேன்..

இருந்த உள்க் கலவரத்தில் உடம்பே படுத்த ஆரம்பித்து விட்டது. சிறு குளிரும் கூட ஒத்துக் கொள்ளவில்லை. எத்தனை பனியில் சிகரங்களில் வீறுநடை போட்டிருக்கிறார். என்னாயிற்று எனக்கு. மனசு... மனசுதான் விட்டுப் போயிற்று.

வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் - பாடிய பாரதியே குளிர்தாங்காமல் கழுத்தை முகத்தைத் தலையை மஃப்ளர் கட்டி மூடிக்கிட்டிருக்கிறார்....

பையனுக்கு அவர் துணை என்ற காலம் பிடி உருவிக் கொண்டாற் போல...

அவரே அவனது சுமையாகிப் போனார்.

பள்ளிக்கூடம் போவதை தானே நிறுத்திக் கொண்டான். தன் நிழலே தனக்கே எதிரி என ஆகிப் போன காலம்.

'எலேய் அழாதடா...' என்று சொல்ல வந்தவர் இரும ஆரம்பித்து முடிக்க முடியாமல் திணறினார்.

கண்ணைத் துடைத்து விட்டு 'அழாதீங்கய்யா' என்றான் அவன்.

அவசர வேலைகளில் அவனை அழைத்தார்கள். கல்யாணங்களில் கோவில் உற்சவங்களில் சாவில் என பெட்ரோமாக்ஸ் விளக்கு சுமந்தான். புஸ் புஸ்சென்று சத்தம் பாம்பை அடிக்கடி ஞாபகப் படுத்தியது. கோதுமை மாவு, நெல் அரைத்துக் கொடுத்தான். சந்தைக்கு இரா பூரா நடந்து மாடு ஓட்டிப் போனான். சாமிக்கு முன் தீவட்டி தூக்கி வந்தான். சாமிக்கு முன் ஆட்டபாட்டங்கள்.

யானை கூட நடக்க ஓர் உற்சாகம். எங்காவது நாட்டியம், கரகாட்டம் என, தெருச் சந்தியில் டேரா என்றால், மாவுத்தன் சிங்காரம் யானையின் முன்கால்ப் பக்கமே குந்தி உட்கார்ந் து பல்குத்திக் கொண்டிருப்பான்.

உற்சவத்தில் வெடிச்சத்தம் கேட்டபோது அப்பா இருமினாற் போலிருந்தது.

... அந்த யானையோடு ஒருமுறை... நினைக்கவே சிரிப்பு வந்தது.

இருந்த வெக்கைக்கு சிங்காரம் யானையின் அடியிலேயே ஒருநாள் படுத்துக் கொண்டான். படுக்க இடமா இல்லை. யானைக்கு அன்றைக்கு படா உற்சாகம். ஐந்தாம் காலால் அவனைத் தட்டித் தட்டி எழுப்ப முயன்றது... ராஜா பார்த்துக் கொண்டே இருந்தான். சிங்காரம் தண்ணி போட்டிருந்தான் போல. ஆள் எழுந்து கொள்கிறாப் போல இல்லை. அடக்க முடியாத யானை, சர்ர்ர்ரென்று அருவி போல அடிச்சது பார்... குடம் குடமாய் நாத்தமான நாத்தத்தில் சிங்காரம் குளிச்சான். வாரியடிச்சி எழு ந்திரிக்க வேண்டியதாயிட்டு.

குளிச்சதுல போதையே அடங்கிருக்கும்!...

storysankar@gmail.com

91 97899 87842

சனிக்கிழமை தோறும் தொடர்கிறேன்