artist peter kupcik

*

பிரமிட்

*

எஸ். சங்கரநாராயணன்

(அக்டோபர் 2020 சங்கு சிற்றிதழில் வெளியான சிறுகதை.)

 

ட்டம் முடித்து இரண்டு வருடம் ஆகியும், அந்தப் பட்டம் இன்னும் பறக்க ஆரம்பிக்கவில்லை. நல்ல வேலை என்று அவன் எதிர்பார்த்தபடி அமையாததில் அவனைவிட அவன்அப்பாவுக்கு அதிக வருத்தம் இருந்ததாக ராம்ஜி உணர்ந்தான். அவனுக்காக வீட்டில் தினசரி நாளிதழ், அதுவும் ஆங்கிலத்தில் வாங்கினார்கள். காலை எழுந்ததும் செய்தித்தாள், அதுவும் ஆங்கிலத்தில் வாசிக்க யார் இருக்கிறார்கள்? வாங்கியது அவனுக்காக. அவனுக்கே ஆங்கிலம் தகராறு. அம்மா அதைப் பிரித்து மாவு சலிப்பாள், அது ஆங்கிலமானால் என்ன, தமிழானால் என்ன.

காலை அவன் எழுந்துகொள்ளு முன்னமே அப்பா அதைப் பிரித்து ஆவலாய் ‘கிளாசிஃபைடு’ வாசித்தார். அவனது தகுதிக்கு எதுவும் வேலை என்று தட்டுப்பட்டாலே அவர் கனவுகாண ஆரம்பித்து விட்டாற் போலிருந்தது. சற்று பயந்த நடுத்தர வர்க்க அப்பா அவர். கனவுகளும் ஏமாற்றங்களுமாய் காலம் அவர் முதுகில் ஏறி, கொள்ளுத் தூண்டில் காட்டி சவாரி செய்தது. எதிர்காலம் என்பது அச்சுறுத்தலாய் இருந்தது அவருக்கு. கல்யாணம் ஆனபோதும் பிறகு குழந்தை பிறந்தபோதும்... வாழ்வு என்பது சவால்களை நிர்ப்பந்திக்கிறாற் போலவே அமைகிறது. ஒண்ணைத் தாண்டினாலும் காத்திருக்கிறது, அடுத்த சவால். இப்போது அவனுக்கு ஒரு தங்கை. வைஜெயந்தி. அவள் மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். அடுத்து அவளுக்குக் கல்யாணமா, வேலையா... என்கிற திகைப்பும், அவளுக்கல்ல, அப்பாவுக்குச் சேர்ந்து கொண்டிருக்கலாம்.

நேர்முகத் தேர்வு என்று அவன் கிளம்புமுன் வீடே அமர்க்களப் பட்டது. அவன் திரும்பி வரும்வரை, அலலது அவனுக்கு நேர்முகம் நடக்கிறநேரம் என்று அப்பா யூகிக்கிற காலங்களில் அப்பாவிடம் ஒரு விரைப்பு இருந்ததாக அம்மா சொல்வாள். அவன் வீடுதிரும்பி வாசல் அழைப்புமணி அடித்தால் அப்பாதான் வந்து கதவைத் திறந்தார். அவன் தலையைக் குனிந்தபடி உள்ளே நுழைந்தால் அவர் பெருமூச்சு விட்டார். மணிரத்தினம் படம் மாதிரி இருந்தது அந்தக் காட்சி. ம்? - (ம்ஹும்.) - ஹ்ம் - இப்படி அதற்கு வசனம் எழுதலாம். அவன் என்ன பண்ணட்டும். சட்டையை டக் இன் பண்ணி டை கட்டிக் கொண்டால் அவனை அவனுக்கே வேடிக்கையாய் இருந்தது. இதில் அவனைப் பேட்டி கண்டவர் அவனை எப்படி எடுத்துக் கொள்வார் தெரியவில்லை. கேள்விகளை அம்புகள் எனச் சமாளிப்பதில் ஒரு நிமிர்வு தன்னம்பிக்கை விரைப்பு தேவை. இப்படி அப்பாவிடம் இருந்து, மகன் தப்பிப் பிறக்க முடியுமா? இவர்கள் நடுவே அம்மா, அவள் மனதில் என்னதான் இருந்தது, யாருக்குத் தெரியும்?

அவனைவிடக் குறைவான மதிப்பெண் வாங்கி, வேலை கிடைக்க அவனைப் போலவே தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தவன் ராஜதுரை. நல்ல வேலை கிடைக்கட்டும் என்று காத்திருந்தான் ராம்ஜி. வேலை கிடைத்தாலே போதும், என்று அலைந்தவன் ராஜதுரை. பெண்களுக்கு மலிவான சம்பளத்தில் டீச்சர் வேலை. தலையில் அதற்கென ஓர் அடையாளக் கொண்டை. ஆண்கள் எனில் இன்சூரன்ஸ் ஏஜென்ட் அல்லது இன்னொரு வேலை.

ராஜதுரைக்கு வேலை கிடைத்தது. மெடிக்கல் ரெப். அடி பெருத்த பிரமிட் பைகளைத் தூக்கிக் கொண்டு மருத்துவர் மருத்துவராக சந்தித்து மாத்திரை விற்க வேண்டும். மருத்துவர் கடவுள் நம்பிக்கை உள்ளவராய் இருந்தால் நெற்றியில் சிறு விபூதி குங்குமம் வைத்துக்கொள்வான். ஆளைப் பொருத்து நாமும் ஆடிக் கறக்கணும், பாடிக் கறக்கணும்... என்றான் ராஜதுரை. சம்பளம்? ச், என்றான் ராஜதுரை. எவ்வளவு என்று சொல்லவில்லை. அவன்மேல் நாம் வைத்திருக்கும் மரியாதை குறைந்துவிடலாம் என்று அவன் தயங்கி யிருக்கலாம். என்றாலும் அப்பா அம்மாவை விட்டு தூரப் போவதில் அவனுக்கு மகிழ்ச்சி. மறுகரை எல்லாருக்குமே ஆசுவாசமாய் இருக்கிறது.

ஒருநாள் ராஜதுரை அவனைப் பார்க்க வந்திருந்தான். அப்பா அவனது வேலையை எல்லாம் விசாரித்தார். அந்த மருந்துக் கம்பெனி ஆள் தேவை என்று விளம்பரம் கொடுத்ததா, நான் ‘கிளாசிஃபைடில்’ பார்க்கவே இல்லையே, என அவருக்கு வெட்கமாக இருந்தது. அது சின்ன கம்பெனிப்பா, என்றான் ராம்ஜி. கல்யாணம் ஆன புதிதில் பெண்களுக்கு கணவனைப் பற்றிய போதாமை இருக்கிறது. குழந்தைகள் பிறந்த பின்னால் பெற்றோருக்குப் பிள்ளைகள் பற்றிய குறை சேர்ந்து கொள்கிறது. அப்பாமுன்னால் நண்பனுடன் பேச சங்கடமாய் இருந்தது. இருவருமே வெளியே கிளம்பினார்கள்.

பட்டணத்தில் ராம்ஜி ஒரு லாட்ஜ் அறையில் தங்கி யிருந்தான். மாடிப்படி ஏறித் திரும்பும் இடத்தில் யாரோ எப்போதோ எச்சில் துப்பிய கறை இருந்தது. அறையைத் திறந்ததுமே ஒரு நெடி வந்தது. அம்மாவும் வைஜெயந்தியும் வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்துக் கொள்வார்கள்... என்று நினைத்துக் கொண்டான் ராம்ஜி. வெள்ளிக் கிழமைகளில் வீட்டைத் துடைத்து சாம்பிராணி மணக்கும். இத்ந அறையில் சிகரெட் நெடி அடித்தது. வீட்டில் சாமி படங்கள் மாட்டி யிருப்பதைப் போல, பக்கத்து அறையில் ஆளுசரத்தில் ஒரு நடிகை படம்.

வேலை என்று வந்தால் வேலையைப் பத்தி யோசி, இதெல்லாம் நாம் பழகிக்கொள்ள வேண்டும், என நினைத்துக் கொண்டான். நண்பன் வந்ததில் ராஜதுரைக்கு மகிழ்ச்சி. தன்னைவிட அதிக மதிப்பெண் வாங்கியவன், தனக்குக் கீழே... என்பதே அவனுக்கு போதையாய் இருந்தது. வேலையை நான்தான் சொல்லித் தர வேண்டும் இவனுக்கு. முதல்ல உன் ஹேர் ஸ்டைலை மாத்தணும். அதிக முடி ஒழுக்கக் கேடு... என்று என்னென்னவோ சொன்னான். ராஜதுரையும் தப்புத் தப்பாய் ஆங்கிலம் பேசினான். அதில் ராம்ஜிக்கு திருப்தி.

எல்லாமே புதுசாய் இருந்தது ராம்ஜிக்கு. வேலை கடினமாக இராது என்றே தோன்றியது. அட ராஜதுரை பார்க்கிற வேலையை நான் பார்க்க மாட்டேனா? அவன்கூட சில நாட்கள் ராஜதுரையும் வந்தான். மருத்துவர்கள் ஒன்றிரண்டு பேரை அறிமுகம் செய்தான். தனியே போய் ஒருமுறை ஒரு மெடிக்கல் ஸ்டோரில் ஆர்டர் பிடித்து வந்துவிட்டான் ராம்ஜி. அதில் அவனுக்கு, ராஜதுரைக்கு ரொம்ப சந்தோஷம். பண பாக்கியையும் அப்படி குறிப்பிட்ட காலக் கெடுவில் வாங்கத் தெரிந்து விட்டால் போதும். ராம்ஜி பிழைத்துக் கொள்வான் என்று தோன்றியது அவனுக்கு. புடவை கட்டிவிட்ட ஜவுளிக்கடை பொம்மையைப் பெருமையுடன் பார்ப்பது போல ராம்ஜியைப் பார்த்தான்.

ஒரு டிரான்சிஸ்டர் வைத்திருந்தான் ராஜதுரை. எப்பவும் இரண்டு நிலையங்களை ஒலிபரப்பியது அது. ஆளுக்கு ஒரு நிலையம் கேட்பதா என்று தோன்றியது. இந்நாட்களில் அவரவர் தனித்திசை பிரிந்து வேலை பார்த்தார்கள். ராம்ஜிக்கும் ஒரு பிரமிட் பை வந்து சேர்ந்திருந்தது. மருந்துக் கம்பெனி லேபிளை ஒட்டிய நீலச் சட்டை. அதை பேன்ட்டோடு ‘இன்’ பண்ணிக் கொண்டு, ஷு போட்டுக் கொண்டு கிளம்பிப் போக வேண்டி யிருந்தது. ரெப் என்று அடையாளம் தெரிகிற அளவில் இருந்தது அது. டாக்டருக்காகக் காத்திருக்கிற சமயம் அவனை தனியே காட்டிக் கொள்ள வேண்டி யிருந்தது. விசிட்டிங் கார்டு கம்பெனி அடித்துத் தந்திருந்தது. வரவேற்புப் பெண்ணைப் பார்த்து கார்டு தந்து (உங்களுக்கு இல்ல கார்டு. டாக்டருக்கு.) காத்திருந்தான். கூட்டமாய் இருந்தால் அரைமணி முக்கால்மணி கூட காத்திருக்க வேண்டி வந்தது. அதெல்லாம் பழகிக் கொள்ள வேண்டியது தான்... என நினைத்துக் கொண்டான்.

இரவில் இப்படி தனியே படுத்துக் கிடக்கிறபோது வீடு ஞாபகம் முட்டியது அவனுக்கு. இன்னும் உனக்கு பால் குடி மறக்கவில்லை, என ராஜதுரை அவனைக் கேலி செய்தான். அவன் கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. இப்படி புகைத்தும் குடித்தும் தன் சொந்தச் செலவுகளுக்கே எத்தனை பணத்தைக் கரைக்கிறான், என்று மலைப்பாய் இருந்தது ராம்ஜிக்கு. ச், என்ற சம்பளத்துக்கு இது அதிகம். இங்கே இப்படி தனியே படுத்துக் கிடக்கையில் தான் அப்பா அம்மா அவனிடம் எத்தனை பிரியம் காட்டினார்கள் என்று ராம்ஜிக்குத் தெரிந்தது. அம்மா அதிகம் பேச மாட்டாள். அவள் பேச்சு எடுபடாது என்று தயங்கினாளா, அல்லது மௌனமாகவே தான் சரி என நம்புவதை சாதித்துக் கொண்டாளா தெரியாது. உலகின் பெரும்பாலான குடும்பங்கள் அம்மாக்களின் மௌன தவத்தில் வரம் பெறுகின்றன.

தங்கை வைஜெயந்தி. அவள் முகம் எப்பவும் மலர்ச்சியாய் இருக்கும். வீட்டுக்கே விளக்கு அவள். குழந்தைகளே வீட்டின் அழகு என்று தோன்றியது. வேலை என்று போகையில் எங்காவது பஜாரில் ஜவுளிக்கடையில் வாசலில் தொங்க விட்டிருக்கும் சேலைகளைப் பார்த்தால் தங்கை நினைவு வந்து விடுகிறது.

இரண்டு வாரம் மூணு வாரம் ஒருமுறை ராஜதுரை ஊருக்குக் கிளம்பினான். ராம்ஜிக்கும் போக ஆசை. என்றாலும் ஒரு மாதம் இரண்டு மாதம் வரை அவன் அந்த நினைப்பைக் கைவிட்டான். அப்பா அடிக்கடி அவனோடு அலைபேசியில் பேசினார். “கண்டபடி அலைஞ்சி உடம்பைக் கெடுத்துக்காதேடா. வேளைக்குச் சாப்பிடு...” என்றெல்லாம் அவர் கவலையுடன் பேசினார். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டும் பெற்றோர் என்பதே அழகுதான். அம்மாவிடமும் அடுத்து விஸ்தாரமாக தங்கையுடனும் பேசினான். வீட்டில் இருக்கும் வரை அவளை எதற்காகவாவது அவன் சீண்டிக் கொண்டே யிருப்பான். அவளும் சிணுங்கிக் கொண்டே யிருப்பாள். படிக்கிற நேரம் அவள் ஒழுங்காகப் படித்தாள். அவனைவிட அதிக கவனம் இருந்தது அவளிடம். சளசளவென்று நதியோட்டமாய் அவளிடம் அவனுடன் பேச விஷயங்கள் இருந்துகொண்டே யிருந்தன.

கனவுகள், ஆசைகள் சூழ் பெண்மை... என ரொம்பத் தெரிந்தவன் போல நினைத்துக் கொண்டான். நாளை வேறொரு வீட்டில் போய்ச் சேரப் போகிற பெண்மை என்பதாலேயே அப்பாவும் அம்மாவும் அவளைக் கொண்டாடினார்கள். அவனும். குடும்பம் என்பதின் ஒத்திசைவில் ஒரு வாகனத்தின் உதிரி பாகங்களாய் எல்லாரும் இயங்கினார்கள். தங்கை மீது அவன் காட்டும் பாசத்தைப் பார்த்து ராஜதுரையே ஆச்சர்யப் பட்டான்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ராம்ஜி கிளம்பி ஊருக்கு வந்தான். அவன் வருகை வீட்டில் அமர்க்களப் பட்டது. ராஜதுரை தனியார் பேருந்தில் படுத்தபடியே வசதியாய்ப் போவான். மலிவான அரசுப் பேருந்திலேயே அமர்ந்தவாக்கில் ராம்ஜி ஊருக்குப் போனான். முடிந்தவரை செலவுகளைக் குறைப்பதாக அவனுக்குள் தன்னைப்போல சுய கவனம் எப்படி வந்தது தெரியவில்லை. அவனும், அப்பாவைப் போல, வாழ பயப்படுகிறானா என்ன?... அப்படி ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும். கவனமாக எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு அடியும் பெரிய பயணத்துக்குத் தயார் ஆகின்றன.

அவனுக்கே வீடு திரும்பியது ஒருமாதிரி லகரியாய்த் தான் இருந்தது. என்னவோ தொலைத்த பொருளை மீட்டெடுத்தாற் போல. நான் நதியின் கூழாங்கல். அவ்வளவே, என்று தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டான். அதிகாலையிலேயே பஸ் கொண்டுவந்து விட்டுவிட்டது. “யாரு ராம்ஜி வந்திருக்கானா?...” என்றபடி அப்பா உள்ளறையில் இருந்து கண்ணாடியை எடுத்து மாட்டியபடி வந்தார். அவர் முகமெல்லாம் மலர்ந்திருந்தது. பையனுக்குப் பொறுப்பு வந்து விட்டது, என அவர் பூரித்திருக்கலாம். சற்று ஆசுவாசப்பட அவர் நினைத்து அது நிறைவேறிய திருப்தியாகவும் இருக்கலாம். எல்லாம் கண்ணிக்குள் ஒழுங்காய் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கிறது. இருக்கிற அல்லது வாய்த்த சூழலில் ஒத்திசைவுக்காகவே எல்லாரும் ஆசைப் படுகிறோம்.

“அண்ணா?” என்று வந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள் வைஜெயந்தி. “இன்னும் தூக்கம் கலையலையா உனக்கு?” - “நேத்து ரொம்ப நேரம் படிச்சிட்டிருந்தா...” என்றபடி உள்ளேயிருந்து வந்தாள் அம்மா. அவர்கள் எதிர்பார்க்கும் போதெல்லாம் வராமல் திடீரென்று வந்து இறங்கி யிருந்தான் ராம்ஜி. வீடே கொண்டாட்டமாக ஆகிவிட்டது. வாசலில் இந்து பேப்பர் வீசிவிட்டுப் போகிறான் பேப்பர்க்காரன். அவன் அப்பாவைப் பார்த்தான். “இன்னும் இவ இருக்காளே...” என்றார் அப்பா.

வைஜெயந்திக்கு என்று ஒரு புடவை வாங்கி வந்திருந்தான். “இவ்ளவு காஸ்ட்லியா எதுக்குண்ணா?” என்றபடி சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள். “வேண்டாமா? திருப்பிக் கொடுத்திறவா?” என்றான். எல்லாரும் சிரித்தார்கள். திடீரென்று அந்த வீடே விளக்கேற்றிக் கொண்டாற் போல சிரிப்பில் ததும்பியது. சிறிது காலம் முன்னால் இதேவீட்டில் வேலைகிடைக்காமல் இருந்த ராம்ஜி. இன்று? உத்தியோகம் உள்ளவன். சின்னதோ பெரிதோ, (ச்.) சம்பாத்தியம் உள்ளவன். அதன் கௌரவமே வேறுதான்... என்று புன்னகை செய்து கொண்டான். அவனுக்கே தன்னைப் பற்றி ஒரு சந்தோஷம் இருந்தது.

சனி இரவு கிளம்பி வந்திருந்தான். உடனே ஞாயிறு இரவு போக வேண்டி யிருந்தது. மறுநாளே அவன் வாங்கிக் கொடுத்த புடவையை வைஜெயந்தி கட்டிக் கொண்டாள். அவளைப் பார்த்து அவன் புன்னகைத்தபோது சட்டென்று, என்ன தோன்றியதோ அவனை நமஸ்கரித்தாள். “இருடி. இரு...” என்று அவளை அப்படியே தாங்கித் தூக்கி விட்டான். ஒரு காலத்தில் அவனும் அவளும் எத்தனை சண்டை போட்டிருக்கிறார்கள். “ஜெய், புடவை வாங்கித் தரலைன்னா இந்த நமஸ்காரம் எனக்குக் கிடைச்சிருக்குமா?” என்று கண் சிமிட்டினான் ராம்ஜி. அம்மா சிரித்தாள். அம்மா என்ன நினைக்கிறாள் தெரியவில்லை. எல்லாவற்றையும் நம்ப முடியாத பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் அப்பா. பிள்ளை தலையெடுத்து விட்டான், பொறுப்பு வந்துவிட்டது அவனுக்கு என்கிற ஆசுவாசம் அவருக்கு.

கிளம்பும்போது வைஜெயந்திக்கு வருத்தமாகி விட்டது. “ஒரு ரெண்டு நாளாவது இருக்கற மாதிரி வரக்கூடாதா?” என்றாள். “அடுத்த டிரிப்... நீங்க அங்க வந்து என்னைப் பார்க்கணும்...” என்றான் வேடிக்கையாக. ஏன் அப்படிச் சொன்னான் தெரியவில்லை. அவனும் வைஜெயந்தியும் ஊர் என்று வெளியே கிளம்பிப் போனதே இல்லை.  அவர்கள் வீட்டுக்கும் விருந்தாளி என்று யாரும் வந்ததும் இல்லை. நண்பர்கள் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் அவனுக்கு ஏக்கமாக இருக்கும். இப்போது என்னவோ தங்கையைத் தன் ஊருக்கு அழைத்துக் காண்பிக்க வேண்டும்... என்று தானறியாமல் தோன்றி யிருக்கிறது.

மும்பையில் இருந்து வட்டார அதிகாரி வந்திருந்தார். அவனது வேலையில் ஏற்கனவே அவருக்கு திருப்தி. ராஜதுரை பரவாயில்லை. நல்ல ஆளாகத்தான் பார்த்து அழைத்து வந்திருக்கிறான்... என அவருக்கு சந்தோஷம். அவரது தாய்மொழி தெலுங்கு. அவர் பேசும் தமிழ் வேடிக்கையாக இருந்தது. இந்த இருந்தது-வில் கடைசி து தெலுங்குச் சாயலில் அவர் பேசினார். அவரை ரொம்ப நம்பாதே. நீ நல்லா வேலை செஞ்சா விட்டுற மாட்டாரு. டார்கெட்டைக் கூட்டிருவாரு... என எச்சரித்தான் ராஜதுரை.

வார இறுதிநாட்களில் ராஜதுரை மது அருந்தினான். ஓய்வுநாள், ஞாயிற்றுக் கிழமை என்றால் லாட்ஜில் சில சகாக்களுடன் சேர்ந்து அமர்ந்து காசு வைத்து சீட்டாடினான். சில சமயம் ஜெயிப்பான். பல சமயம் தோற்பான். ஜெயித்தவர் எல்லாருக்கும் ‘தண்ணி’ வாங்கித் தருவார். அவர்கள் கூடிய அறையே புகை மண்டலமாய் இருக்கும். எல்லாருமே ஒருமாதிரி. வாழ்வில் அவநம்பிக்கையோடும் எரிச்சலோடும் கசப்போடும் இருந்ததாகப் பட்டது. அவரவர் வேலை அவரவருக்குப் பிடிக்கவில்லை. வேற வழியில்லாம இந்த வேலைல மாட்டிக்கிட்டோமே, என்கிற இனம் புரியாத ஆத்திரம் இருந்தாற் போல இருந்தது. தங்கள் குடும்பத்தில் அவர்களைவிட அவர்கள் தரும் காசு அதிக மதிப்பு வாய்ந்தது, என்கிற எரிச்சல் வேறு.

அப்பா ஊரில் இருந்து பேசினார். “நீ சொன்னியேடா... நாங்க ஊருக்கு வந்து உன்னைப் பார்க்கலாம்னு இருக்கோம்...” என்றார். அவனால் நம்ப முடியவில்லை. எத்தனை நாள் இருப்பார்களோ? செலவு பயமுறுத்தியது. அத்தனை நாளைக்கு இங்கே லாட்ஜில் அவனுடன் தங்கியிருக்க முடியுமா? அத்துடன் ’நாங்கள்’ என்கிறார். “என்ன விசேஷம்ப்பா. யாரெல்லாம் வரீங்க?” என்று தயக்கமாய்க் கேட்டான். “நானும் ஜெய்யும். ஒரு கம்பெனிக்கு எழுத்துத் தேர்வு. எழுதிப் போட்டா, கூப்பிட்டுட்டான். அதான்...” இந்துவில் விளம்பரம் வந்திருக்கலாம்.

அவர்கள் வந்து அவனுடன் தங்கும் அந்த ஓரிரு நாட்கள் ராஜதுரை பக்கத்து அறையில் போய்த் தங்கிக் கொள்ளக் கேட்டுக் கொண்டான் ராம்ஜி. “அட அதுக்கென்ன” என்றான் ராஜதுரை. “பணம் கிணம் வேணுன்னாக் கூட கேளுடா. யோசிக்காதே. நாங்க இருக்கோம்” என்று இன்னொரு நண்பர் சொன்னார். அங்கிருந்த எல்லாரையும் விட ராம்ஜிதான் சின்னப் பையன். ராஜதுரை இன்னொருத்தன். அதனால் அவர்கள் மேல் எல்லாருக்கும் நல்ல அன்பு இருந்தது.

ராத்திரி அவனால் தூங்க முடியவில்லை. இப்போது பஸ் ஏறியிருப்பார்களா, என்று தோன்றியது. சட்டென முழிப்பு வந்து எழுந்துகொண்டு மணி பார்த்தான். அந்த அறை இன்னும் சுத்தமாய் இருக்கலாம் என்று தோன்றியது. மிக்சர் பொட்டலங்கள், ராஜதுரை புகைபிடித்து வீசிய சிகரெட் துண்டுகள் எல்லாவற்றையும் பெருக்கித் தள்ளியபோது தூசி கிளம்பி தும்மல் வந்தது. வியர்வை அடங்கட்டும் என்று கொடிகளில் வீசிப் போட்ட உடைகளை மடித்து பீரோ உள்ளே அடுக்கினான். என்னென்னவோ யோசனையில் தானறியாமல் தூங்கி யிருந்தான். அப்பா அலைபேசியில் அழைத்தார்.  ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பஸ் கிடைத்தால் 73, இல்லாவிட்டால் ஷேர் ஆட்டோ கிடைக்கும். பூரணி நகர்னு கேட்டு இறங்க வேண்டும்... “ஞாபகம் இருக்குடா” என்றார் அப்பா.

புதிய ஊர். புதிய மனிதர்கள்... என்று வைஜெயந்திக்கு உற்சாகம். அவள் சற்று பரபரப்பாக இருந்தாள். நான் வந்தபோது எப்படி பயத்துடன் இருந்தேன், என்று நினைத்துப் பார்த்தான் ராம்ஜி. இவள் அப்பாவுடன் வந்திருக்கிறாள். அவளுக்குக் கவலை தராத அளவில் கைச்சுடர் போல அவளை நாங்கள் எல்லாரும் காப்பாற்றுகிறோம், என நினைத்து தனக்குள் புன்னகை செய்து கொண்டான். அந்தக் ‘குடை’ பிடிக்கிற உணர்வு அவனுக்குப் பிடித்திருந்தது. சாதாரணமாக ஆண்கள் எல்லாருமே குடைக்காரர்கள்தானோ என்னவோ. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவு என்பது காதல் என்கிற ஒற்றைச் சொல்லில் அடங்குவது அல்ல என்றுதான் பட்டது. தங்கை என்கிற இவளது இந்த உறவு போல, ஓர் அக்கா இருந்திருந்தால்... அவள் தாயாகி யிருக்கவும் கூடும். குடைக்காரி ஆகி யிருக்கலாம் அவள்.

பிரதான தெருவுக்கே போய்க் காத்திருந்து அவர்களை அவன் அழைத்து வந்தான். “ரயில்ல தூங்க முடிஞ்சதா அப்பா?” என்று கேட்டபடியே அவரிடம் இருந்து பெட்டியை வாங்கிக் கொண்டான். “காபி கீபி வேணுமா? ரூமுக்குப் போய்ப் பாத்துக்கலாமா?” என்றான். “போயிறலாம்...” என்றார் அப்பா. அவன் அறையை முடிந்தவரை சுத்தமாக வைத்திருந்தான். என்றாலும் போதவில்லை. வீட்டின் அறை என்பது நான்கு சுவர்கள் அல்ல. வெறும் ஓய்வுக்கான இடம் அல்ல. சுவரில் காலண்டர்கள் குடும்பப் புகைப்படங்கள். நிலைக்கண்ணாடி... என அது ஒரு வரிசை.

“அண்ணா, சூப்பர். எத்தனை சுதந்திரமா இருக்கே இங்க நீ. இல்லையா?” என்றுகேட்டாள் வைஜெயந்தி. விட்டு விடுதலையாகி... என்கிறாப் போல புதியதைப் பறந்து எட்டித் தொடும் கனவு அவளுக்கு. எல்லாருக்குமே மறுகரை சார்ந்த கனவுகள் இருக்கத்தான் இருக்கின்றன. நானும் வீட்டைவிட்டுப் புறப்படும் வேகத்தில் தானே இங்கே இதோ வந்து சேர்ந்திருக்கிறேன். “உன்கூட ராஜதுரை இல்லையா?” என்று கேட்டார் அப்பா. இரண்டு பேராக இருந்தால் அந்தளவு வாடகை குறையும், என அவர் மனசில் தோன்றி யிருக்கலாம். “நானும் அவனும் தாம்ப்பா இந்த அறையில். அவன் பக்கத்து அறையில் இப்பசத்திக்கு தங்கி யிருக்கிறான்” என்றான் ராம்ஜி. வைஜெயந்தி உள்ளே வந்தவள் அவனது கட்டிலில் ஹாயாகப் படுத்தாள். “அலுப்பா இருக்கா ஜெய்?” என்று கேட்டான். “இல்ல இல்ல” என்றாள் சிரித்தபடி.

“எப்ப டெஸ்ட் அப்பா இவளுக்கு?” என்று கேட்டான் ராம்ஜி. “மதியம். சரஸ்வதிநகர்... ரொம்ப தூரமா? போய்ச்சேர எவ்வளவு நேரம் ஆகும்?” என்று அப்பா கேட்டார். “அரை அவர்.. நான் கூட்டிட்டுப் போறேன். நீங்க வேணா அறையில் ஓய்வெடுங்கப்பா” என்றான். “ஏன்? நான் வரேன். அதுக்கென்ன?” என்றார் அப்பா. “பத்து இருபது வருஷம் முன்னால வந்தேன் இந்த ஊருக்கு. இங்கதான் நாலாவது தெருவில் உங்க அம்மாவோட சித்தப்பா இருந்தாரு. அவர் தவறிப்போயி... இப்ப அவர் பசங்க எல்லாரும் வெளிநாடு அது இதுன்னு செட்டில் ஆயாச்சி.” “அண்ணா உன்னை உன் வேலை யூனிஃபார்ம்ல நான் பாத்ததே இல்லையே?” என்றாள் வைஜெயந்தி. “வேணாம். நீ சிரிச்சிருவே” என்றான் ராம்ஜி.

ராஜதுரையும் மற்ற லாட்ஜ் நண்பர்களும் ஒன்றாக வந்து அவர்களை நலம் விசாரித்துவிட்டுப் போனார்கள்.

குளித்து முடித்துவிட்டு வெளியே சாப்பிடக் கிளம்பினார்கள். “அண்ணா உனக்கு ரொம்ப அதிர்ஷ்டம். நினைச்சா நினைச்ச வேளைக்கு வேணுன்றதை சாப்பிடலாம்...” என்றாள் வைஜெயந்தி. “நீ வேற. வந்த ஒரு மாசம் நல்ல சாப்பாடுன்னு திண்டாடிப் போச்சு. ஒவ்வொரு கடையாத் தேடி... இப்ப உங்களுக்காக ஒரு நல்ல உடுப்பி ஹோட்டல் கண்டுபிடிச்சி வெச்சிருக்கேன்,” என்று கூட்டிப் போனான்.

வீட்டுச் சாப்பாட்டை விட இப்படி வெளியே வந்து சாப்பிட வைஜெயந்தி ஆசைப் பட்டிருக்கலாம். ஆண்களைப் போல தனியாக ஹோட்டலுக்கு என்று சாப்பிடப் போக முடியாது. தவிரவும் அவள் பர்சில் எப்பவும் ஐம்பது ரூபாய் இருக்கும். கல்லூரி போனாலும் வந்தாலும், அந்தப் பணம் ஒரு அவசரத்துக்கு. அதை சாதாரணமாக அவள் செலவழிக்க முடியாது. “என்ன வேணா சாப்பிடு... கடைசில ஐஸ் கிரீம் உண்டு” என்றான் ராம்ஜி. வட இந்திய உணவு வகை சொல்லிச் சாப்பிட்டாள் அவள். அடுத்த ஐட்டம் வரும்வரை விரல்களை நக்கிச் சுவைத்தாள். “அண்ணா உனக்கு அதிர்ஷ்டம் தான். எப்ப விரும்பினாலும் நீ ஹோட்டலுக்குப் போகலாம். இல்லியா?” என்றாள். “தினசரி இப்பிடி போட்டு அடிச்சா உடம்புக்கு ஆகாதுடி. நாலு நாளுல உனக்கு எல்லாம் வெறிச்சிரும்” என்று சிரித்தான் ராம்ஜி. “அப்டில்லாம் இல்ல” என்றாள் அவள். “அப்டில்லாம் இல்லன்னா, புஸ்னு குண்டடிச்சிருவே நீ.” அப்பா சிரித்தார். “எனக்கு எப்படா ஊருக்கு வரலாம்னு இருக்கு. இவளைப் பாருங்க” என்றான் ராம்ஜி. அப்பா புன்னகைத்தார். ஒரு சாமானைக் கடையில் வாங்கிச் சாப்பிடுவதை விட அதே செலவில் வீட்டில் செய்தால் கூட நாலு பேர் சாப்பிடலாம். ஆனால் கடையின் ருசி தனி. அதைக் கடையில் போய் உட்கார்ந்து சாப்பிடும் இஷ்டம் தனி. இட்லி மாத்திரம் அவர் வாங்கிக் கொண்டார். கடைசியில் அவருக்கு ஐஸ் கிரிம் கிடையாது, காபி.

ஒரு கல்லூரியில் அவளுக்குத் தேர்வு இருந்தது. நிறையப் பேர் ஆண்களும் பெண்களுமாய்ப் பரபரப்பாய்க் குழுமி  யிருந்தார்கள். அவர்கள் தனியாகவே வந்திருந்தார்கள். அண்ணனுடனும் அப்பாவுடனும் அவள் மாத்திரம் வந்திருந்தாள். “பாரு எல்லாரும் தனியா வந்திருக்காங்க. நீயும் தனியா வர போக கத்துக்கணும்” என்றான் ராம்ஜி. என்றாலும் அப்பாவோ அவனோ இருக்கும்வரை அவளைத் தனியா யார் அனுப்புவார்கள், என்றும் மனதில் பட்டது.

“நல்லா எழுது” என்று அப்பா அவளை உள்ளே அனுப்பி வைத்தார். தேர்வு முடியும் வரை அவர்சள் ஒரு நாகலிங்க மரத்தடியில் காத்திருந்தார்கள். பெரிய வளாகம் அது. இன்னும் தள்ளித்தள்ளி மரங்கள் மிச்சம் இருந்தன. அவர்களைப் போலவே வேறு சிலரும் பிள்ளைகளோடு தேர்வு எழுத வந்திருந்தார்கள். அவர்களும் கையில் தண்ணீர் பாட்டிலை அணைத்தபடி காத்திருந்தார்கள். “உனக்கு வேலை எல்லாம் எப்பிடிப் போகுதுடா?” என்பது போல அப்பா பொதுவாக அவனுடன் பேசிக் கொண்டிருந்தார். “இன்னிக்கு வேலைக்குப் போகணுமா?” என்று கேட்டார். “பரவாயில்லைப்பா. எனக்கு வாரம் இத்தனைன்னு டேர்ன் ஓவர் இருக்கு. நான் நாளைக்கு சேர்த்துப் பார்த்துக்கறேன்...” என்று பதில் சொன்னான்.

இப்படியொரு தனியான சூழலில் அப்பாவின் நிழலில் போல நின்றிருப்பது அவனுக்குப் புது அனுபவம். அவன் இப்படி தேர்வுகளுக்குப் போனால் தனியே தான் போவான். கூட அப்பா வருவதை அவன் விரும்புவது இல்லை. “ரொம்ப இளைச்சிட்டேடா. வேளைக்கு நல்லாச் சாப்பிடணும்” என்றார் அப்பா. “சரிப்பா” என்றான். இப்படியெல்லாம் அவர்கள் பேசிக்கொண்டதே இல்லை.

கலகலப்பாக வெளியே வந்தாள் வைஜெயந்தி. அப்பாவுக்கு அப்பவே அவளுக்கு வேலை அமைந்து விட்டதாக ஒரு பரவசம். இன்னும் கடைசி செமஸ்டரே அவளுக்கு மூன்று மாதம் இருக்கிறது. சரி. நம்பிக்கை உள்ளவர்களை ஏன் நாம் குறையாகப் பார்க்க வேண்டும், என்றிருந்தது அவனுக்கு. ஓரளவு அவள் எதிர்பார்த்த கேள்விகள் தான். ஊரிலேயே  ஒரு கம்பெனித் தேர்வு அவள் எழுதி யிருந்தாள். ‘கரன்ட் அஃபயர்ஸ்’ என்ன மாதிரி கேட்பார்கள், என்றெல்லாம் அவள் அறிந்திருந்தாள். தவிரவும் வைஜெயந்தி நல்ல புத்திசாலி. அவனைவிட நன்றாகப் படிக்கிறாள். அவள் தேறி விடுவாள்... என்று அவனுக்கும் நம்பிக்கை இருந்தது. சரி. இங்கே அவன்கூட வந்து தங்கி அவள் தேர்வு எழுத வேண்டும்... என்று அப்பா யோசித்தாரே, அதுவே அவனுக்குப் பிடித்திருந்தது.

ஷேர் ஆட்டோ பிடித்து அறைக்கு வந்தார்கள். வழியெல்லாம் நகரம் பரபரப்பாய் இருந்தது. எதோ சினிமா தியேட்டர் வந்தது. எல்லாவற்றையும் உற்சாகமாகப் பார்த்துக் கொண்டே வந்தாள். “அண்ணா, கடைசியா என்ன படம் பாத்தே? நீ லக்கி அண்ணா. நினைச்சா படத்துக்குப் போகலாம்” என்று திரும்ப ஆரம்பித்தாள் அவள். “இருக்கற வேலைல அதெல்லாம் முடியாது. சனி ஞாயிறு கூட பிரமிட் பெட்டியோட அலைய வேண்டி யிருக்கும். அப்படியே ஒருநாள் ஓய்வு கிடைச்சாலும் ஒருவாரத் துணி துவைக்க அது இதுன்னு வேலை இருக்கும்...” என்றான் அவன்.

அவனது நண்பர்கள் விடுமுறை நாட்களில் பகலெல்லாம் கொட்டம் அடித்துவிட்டு இரண்டாவது ஆட்டம் போய் கண் சிவக்க வந்தார்கள். அவன் வெளியே வெளுக்கக் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். நல்ல உணவகத்தில் சாப்பிடலாம். நிறைய சினிமா பார்க்கலாம். தனியே விடுதியில் இருக்கிறான். கெட்ட பழக்கங்கள் கற்றுக் கொள்ளலாம். லாகிரி வஸ்துகள் பழகிக் கொள்ளலாம்... ஆனால் பிள்ளை சிக்கனமாக இருக்கிறான்... அப்பாவுக்கு வருத்தப் படுவதா சந்தோஷப் படுவதா தெரியவில்லை. “அண்ணா, வேலை கெடச்சி நானும் இங்க வந்து எதும் ஹாஸ்டல் பாத்துக்குவேன்” என்று சிரித்தாள் வைஜெயந்தி. “ஏன் நீங்க ரெண்டு பேருமா ஒரு வீடு பாத்துக்கலாமே. அம்மா உங்ககூட வந்திருவா. நான் மாத்திரம் இங்க வந்துகிட்டு போய்க்கிட்டு இருப்பேன். எனக்கும் இன்னும் நாலு அஞ்சு வருசம்தான் சர்விஸ் இருக்கு” என்றார் அப்பா.

ராம்ஜி சட்டென புன்னகையுடன் திரும்பிப் பார்த்து அவர் கைகளைப் பற்றினான்.

---

STORYSANKAR|@GMAIL.COM

91 97899 87842 / 91 44450 16842

Comments

Popular posts from this blog