நோபல் பரிசு பெற்ற போலந்து எழுத்தாளர் இந்துமதம் பத்தி யோசித்து ஒரு கதை வடித்திருக்கிறார் என்பதே இதில் என் முதல் ஆச்சர்யம்.

வாழ்வும் சாவும்

ஹென்ரிக் சியென்கிவிச் (போலந்து)
தமிழில் எஸ். சங்கரநாராயணன்

ரந்த இரு பெருவெளிகளின் நடுவே துல்லியமாக ஓடும் நதி ஒன்று. நதியின் கரைகள் ஓரிடத்தில் சரிந்திறங்கி குளம்போலும் அடங்கியது. உள்ளே உள்ளது உள்ளபடி தெரியும் அமைதியான நீரோட்டம். இந்தச் சிற்றாழப் பகுதியில் தண்ணீர் சற்று இருள் பழுப்பு கண்டிருந்தது. அதன் அடியில் பொன்னிற மணல்படுகை. தாமரைத் தண்டுகள் அதில் இருந்து முளைத்தெழுந்திருந்தன. அந்தத் தண்டுகளில் வெண்மையும் சிவப்புமான மலர்கள், மினுமினுக்கும் நீர்ப் பரப்புக்கு மேல் மலர்ந்திருந்தன. பலவண்ணச் சிறு வண்டுகள் பட்டாம்பூச்சிகள் என அந்தப் பூக்களைச் சுற்றின. கரைபக்கம் பனை மரங்கள். உயர உயரங்களில் புள்ளினங்களின் வெள்ளிமணி யோசை போன்ற சப்தயெடுப்புகள்.
அந்த இரு பிரதேசங்களுக்கும் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குக் கடந்து போய்வரும் வழியாக இந்தக் குளம் இருந்தது. முதல் பிரதேசம் வாழ்க்கை வெளி என்று அழைக்கப்பட்டது. மற்றது மரண வெளி.
மகா புருஷனும் சர்வ வல்லவனுமான பிரம்மா தான் இந்த இரண்டு நிலங்களையும் படைத்தவன். வாழ்க்கை நிலத்தை அவன் நல்லவரான விஷ்ணுவிடம் ஆளப் பணித்தான். ஞானப்பிரகாசனான சிவன், மரணப் பிரதேசத்தின் தேவன் அவன். “உங்கள் ராஜ்ஜியத்தில் உங்களுக்கு மிகச் சிறப்பு என்று தோன்றுவதை யெல்லாம் செய்யுங்கள்” என்று பிரம்மா இருவரையும் பணித்தான்.
ஆக விஷ்ணுவின் பரிபாலன பூமியில் இயக்கங்கள் துடிப்புடன் துவங்கின. அங்கே சூரியன் உதித்தது. அஸ்தமனமானது. இரவு முடிய பகல், பகல் பின்னால் இரவு வந்தது. கடல் பொங்கியது. பின் தணிந்தது. வானத்தில் கரு கருவென மழையுடன் மேகங்கள் உருண்டு கனமாய்த் திரண்டன. மழை பெய்தது. அதனால் அந்தப் பிரதேசமே சீக்கிரத்தில் அடர்ந்த கானகமாய் உருமாறியது. விலங்குகளும், பறவையினங்களும், மனுச மக்களுமாய் அந்தப் பிரதேசமே நிரம்பி நெரிசலாகியது.
ஆகவே இப்படியாக எல்லா ஜீவராசிகளும் பல்கி ஏராளமாய்ப் பெருகும். பலப்பல மடங்குகளாகிக் கொண்டே வரும். கருணைக் கடவுளான விஷ்ணு அன்பையும் ஏற்படுத்தினார். அதனால் எல்லாரிடமும் மகிழ்ச்சி தங்குவதாகவும் ஆயிற்று.
பிரம்மதேவன் விஷ்ணுவை அழைத்துச் சொன்னான்.
“புவியில் இதைக்காட்டிலும் மேலானதாக உம்மால் செய்ய ஏதும் இல்லை. எனெனில் இதனினும் மேன்மையான சொர்க்கம், அதை நானே ஏற்கனவே நிர்மாணித்து விட்டேன். இப்போது உங்களுக்கு ஓய்வு. நீங்கள் அழைக்கிற ‘மனிதர்கள்’, தங்கள் வாழ்க்கையை அவர்களே நெய்து கொள்ளட்டும், நமது ஒத்தாசை இன்றி.
விஷ்ணு அதற்கு செவிமடுத்தார். ஆக அதன்பின் மனிதர்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தங்கள்அறிவின் கட்டளைப்படி வாழத் துவங்கினார்கள். தங்களின் நல் எண்ணங்களின்படி அவர்களுக்கு சந்தோஷம் வந்தடைந்தது. தீய எண்ணங்கள் சோகத்தைக் கொணர்ந்தன. வெகு சீக்கிரமே அவர்கள் ஓர் ஆச்சர்யத்துடன் உணர்ந்தார்கள். வாழ்க்கை என்பது முழுசும் சுகமான அனுபவம் அல்ல! பிரம்மதேவன் சொன்னானே, தங்கள் வாழ்க்கையை நெய்து கொள்ளுதல், இரண்டு வலைகளை அவர்கள் பின்னியிருந்தார்கள், இரு வேறு வேறு முக அடையாளங்கள் அவற்றில் இருந்தாப் போலிருந்தது. ஒரு முகம் சிரித்தபடி. மத்த முகத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
மனிதர்கள் எல்லாருமாய் விஷ்ணுவின் அரண்மனைக்கு வந்து முறையிட்டார்கள்.
“மகா பிரபு, வாழ்க்கை சோகங்களின் ஊடாக துயரங்களையே அளிப்பதாய் இருக்கிறது எமக்கு.”
“நீங்கள் நேசத்தை வளர்த்துக்கொண்டு சந்தோஷத்தை அனுபவிப்பீர்களாக” என்றார் விஷ்ணு பதிலாக.
அதைக் கேட்டுக்கொண்டு உம்மென்று எல்லாரும் வெளியேறினார்கள். உண்மையில் நேசம் அவர்களின் கவலைகளைப் பறக்கடிப்பதாய் இருந்தது. அது தரும் மகிழ்ச்சியின் பாற்பட்டு, நேசத்தை எல்லாரும் பெரிசாய் எடுத்துக்கொள்ளவே இல்லை. ஆனால் நேசம், அது வாழ்க்கையின் பெரும் தாய், மகா அடிப்படை அல்லவா? அதனால், விஷ்ணுவின் பரிபாலன பூமி பரந்து பட்டதாக இருந்தபோதிலும், மகா பெருக்கமான இந்த ஜனத்தொகைக்கு அந்த பூமியில் இடம் போதவே இல்லை. எங்கும் எதிலும் பற்றாக்குறை ஏற்பட்டது. மரங்களில் தேவையான அளவு பழங்கள் இல்லை. புதர்களில் பெர்ரிகள் போதும் அளவு கிடைக்கவில்லை. பாறைமூலைகளில் தேன்கூடுகளில் தேனும் தட்டுப்பாடாக இருந்தது.
உணவுநெருக்கடி ஆகிப் போனதினால் அறிவுஜீவிகள் எல்லாரும் காட்டுள் மரங்களை அழிக்கப் புகுந்தார்கள். காட்டை அழித்து நிலத்தை வானம்பார்த்த பூமியாக ஆக்க முனைந்தார்கள். அதில் விதைகளை விளைவிக்கிற யத்தனங்கள். தானியங்களை அறுவடை செய்து பசியாறலாம்.
ஆக இவ்வாறாக உழைப்பு என்ற அம்சம் மனிதர்களிடையே வந்து சேர்ந்தது. மனிதர்கள் எல்லாருமே உழைத்தார்கள். உழைக்காமல் வாழ்க்கை இல்லை என்றானதில், உழைப்பின் மத்தியில் வாழ்க்கை, அந்த அனுபவம் காணாமல் போயிருந்தது.
உழைப்பு, அதில் இருந்து கடும் உழைப்பு, போராட்டம் என இறுகியது வாழ்க்கை. போராட்ட வாழ்க்கையில் பேரலுப்பு கண்டார்கள் மக்கள்.
இரண்டாம் முறையாக சனங்களின் பெருந் திரள் வந்து நின்றது.
“ஓ கடவுளே…” என கை விரித்துக் கூவினார்கள். “இந்தக் கடும் உழைப்பினால் எங்கள் தேகம் பலவீனமாகி விட்டது. எங்கள் எலும்பு வரை அலுப்பும் வலியுமாக, தாள முடியவில்லை. நாங்கள் ஓய்வுக்கு ஏங்குகிறோம். ஆனால் வாழ்க்கை எங்களை உழை உழை என்று தூண்டிக்கொண்டே இருக்கிறது.”
அதற்கு விஷ்ணு பதிலளித்தார்.
“மகாபுருஷனும், சர்வவல்லனுமான பிரம்மா வாழ்க்கையை இவ்வளவுக்கு மேலாக கட்டமைக்க எனக்கு உத்தரவு தரவில்லை. ஆனால் என்னால் உங்களுக்கு ஒண்ணு என் கருத்தாகச் சொல்ல முடியும். உழைப்பை நிறுத்த ஒரு வழி இருக்கிறது. அப்போது ஓய்வு தன்னைப்போல கிடைக்கும் உமக்கு.”
அதைச் சொன்னார் விஷ்ணு. அப்படியே உறங்கிப் போனார்.
உறக்கம், இந்தப் புதிய பரிசினால் மக்கள் உற்சாகமாகி விட்டார்கள். வெகு விரைவிலேயே அவர்கள் உறக்கத்தை, கடவுள் மனிதனுக்கு அளித்த மிகச் சிறந்த வரமாக உணரத் தலைப்பட்டார்கள். உறங்கும்போது கவலை இல்லை. ஆயாசம் இல்லை. உழைத்து அலுத்துக் கிடந்தவர்கள் உறங்கி எழுந்ததும் தெம்பு ஊறினாப் போல உணர்ந்தார்கள். உறக்கம் அரவணைக்கும் அன்னையைப் போல அவர்களின் கவலை படிந்த கண்ணீரைத் துடைத்தது. தலையில் ஓடிக் கொண்டிருக்கும் பழைய விஷயங்களை மறக்கடிக்க வல்லதாய் இருந்தது உறக்கம்.
ஆக, சனங்கள் உறக்கத்தைப் புகழ்ந்தோதினார்கள். அவ்வப்போது அவர்கள் உறங்கப் போய்வந்தார்கள்.
“விழித்துக்கொண்டு அனுபவித்தீர்களே வாழ்க்கை, அதைவிட இந்த உறக்கம் மேலானதாக உணர்கிறீர்கள் அல்லவா? ஆசிகள்!”
இப்போது அவர்களிடையே ஒரே ஒரு குறைதான் இருந்தது. இந்த உறக்கம், அது அப்படியே இருக்கலாகாதா? உறக்க காலம் முடிந்து விழிப்பு வந்து விடுகிறதே. விழித்தால் காத்திருந்தது உழைப்பு. அதனால் வரும் புதிய போராட்டம். அலுப்பு.
இந்தமாதிரியான எண்ணம் எல்லார் தலையிலும் புழுவாய்க் குடைய ஆரம்பித்தது. இதன் விளைவு, அவர்கள் எல்லாரும் மூணாம் முறையாக விஷ்ணுவிடம் வந்தார்கள்.
“ஓ கடவுளே, நீங்கள் ஒரு வரம் தந்தீர்கள்…” என்றார்கள். “உயர்ந்த வரம், அதன் மதிப்பைச் சொல்ல வார்த்தையே இல்லை. என்றாலும் அந்த வரம் முழு திருப்தி தருகிற அளவில் இல்லை, என்று இப்போது படுகிறதே ஸ்வாமி? தூக்கமே எங்களுக்கு நிரந்தரமாக வாய்க்கும்படி நீவிர் அருள் பாலிக்கக் கூடாதா?”’
விஷ்ணு புருவத்தை நெறித்தார். அவர்களின் கோரிக்கையில் அவருக்குக் கோபம் வந்தது. “நீங்க கேட்கறீங்களே? அதைத் தர என்னால் ஆகாது. ஆனால் பக்கத்துப் குளம்… அதுக்கும் அப்பால் உள்ள பிரதேசம்… அங்க போங்க. அங்க நீங்க கேட்கிறது கிடைக்கும்.”
கடவுளின் குரல் அவர்களுக்குக் கேட்டது. குழு குழுவாக அவர்கள் கிளம்பினார்கள். குளத்தை அடைந்தார்கள். அங்கே நின்று மறுகரையைப் பார்த்தார்கள். அமைதியான சுத்தமான தண்ணீர். பூக்கள் மண்டிக் கிடந்த குளம். தாண்டி மறு பகுதி. மரணத்தின் பிரதேசம் அல்லது சிவபெருமானின் ராஜ்ஜியம் பரந்த வெளியாய்க் கிடந்தது.
அங்கே சூரியன் உதிப்பதும் இல்லை. அஸ்தமனம் ஆவதும் இல்லை. அங்கே பகல் இல்லை. இரவும் இல்லை. ஆனால் மொத்தப் பிரதேசமும் லில்லி மலரின் வெண்மையாய்க் காணப்பட்டது. தூய வெண்மை அது. நிழலே அற்ற துல்லிய வெண்மை வெளி. அந்த பளிச்சென்ற திருநீற்று வெண்மையே அது சிவ சாம்ராஜ்யம் என்று காட்டுவதாக இருந்தது.
ஆனால் அந்தப் பிரதேசம் காலியாக வெறுமையாக இல்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் அங்கே பீடபூமிகள், பள்ளத்தாக்குகள், அழகழகான மரங்களின் அணிவரிசை. அந்த மரங்களில் பற்றித் தாவியேறும் கொடிகள் படர்ந்து கிடந்தன. திராட்சை மற்றும் ஐவி கொடிகள் என பாறைப்பாங்கான புதர்ப் பகுதிகளில் கிடைத்தன.
ஆனால் அந்தப் புதரோ, மரத்தின் தண்டுகளோ, மெல்லிய கொடித் தாவரங்களோ எதுவுமே உள்ளே பார்க்கிற அளவில் மென்மையானவையாக இருந்தன. மிருதுவான பொருட்களால் ஆனவை என இருந்தன. ஐவியின் இலைகளில் வெளிர் ரோஜா வண்ணம் அதிகாலை போலக் கண்டது. ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லாமே அபாரமான ஓய்வுடன் இருந்தன. வாழ்க்கைப் பிரதேசத்தில் இதுமாதிரி அவர்கள் பார்த்ததே அனுபவித்ததே கிடையாது. எல்லாமே அற்புதமான தியானத்தில் மூழ்கிக் கிடந்தாப் போல. அவை எதோ கனவு காண்கின்றன போல. இடையறாத உறக்கத்தின் ஓய்வு போல இருந்தது அது. விழித்துக்கொண்டு விடுவோமோ என்கிற பரிதவிப்பு அற்ற மோன நிலை.
காற்று வெளியும் சுத்தமாய் இருந்தது. காற்றில் சிறு சலனமும் இல்லை. ஒரு பூ அசையவில்லை. ஒரு இலையும் படபடக்கவில்லை.
அந்தக் கரையை நோக்கி ஒரே இரைச்சலும், ஆவல் சார்ந்த எதிர்பார்ப்புகளும் பகிர்ந்துகொண்டே வந்த சனங்கள் கப்சிப் என்று ஆகிவிட்டார்கள். இந்த வெளியோ துல்லிய வெண்மைப்பாடாய் இயக்கமே அற்றுக் கிடந்தது. கிசுகிசுப்பாய் அவர்கள் பேசிக் கொண்டார்கள்.
“என்னவோர் நிசப்தம்! இந்தத் துல்லியத்தில் எல்லாம் எப்படி ஓய்வாய்க் கிடக்கின்றன!”
“ஆமாம். இங்கே எலலாவற்றுக்குமே பூரண ஓய்வு. யாருக்கும் எந்த வேலையும் கிடையாது.”
ஆகவே சிலர், உழைத்துக் களைத்தவர்கள் அவர்கள், சிறிது அமைதிக்குப் பிறகு இப்படிச் சொன்னார்கள். “நாம் தடைப்படாத காலாந்தமான உறக்கத்தைக் கண்டுகொள்வோம்.”
இப்படியாக அவர்கள் குளத்தில் இறங்கினார்கள். வானவில்லின் வர்ணச் சிதறல்களுடன் அந்தப் பரப்பு அவர்களுக்கு விரிந்து கொடுத்து, அந்தப் பாதையே ஒளிர்ந்தது. அவர்களில் சிலர் இந்தக் கரையிலேயே தங்கிக் கொண்டார்கள். போக வேண்டாம், என அவர்கள் கூப்பிடவும் செய்தார்கள். ஆனால் போகிறவர்கள் யாரும் திரும்பிபே பார்க்கவில்லை. அவர்கள் ஆர்வமும் உற்சாகமுமாய் முன்னேறினார்கள். சிவ ராஜ்ஜியத்தின் அழகு அவர்களை அப்படியாய் மேலும் மேலும் ஈர்ப்பதாய் இருந்தது.
இந்தக் கரையிலேயே தங்கிவிட்டவர்களும் அங்கிருந்தே வெறித்தபடி ஒன்றை உணர்ந்தார்கள். முன்னேறிப் போய்க் கொண்டிருந்தவர்கள் தேகங்கள் அவர்கள் முன்னேற முன்னேற எடை குறைந்தாப் போல இருந்தது. அவர்கள் உடல்களே ஊள்ளீடு அற்றதாய் தெள்ளத் தெளிவாய்த் தெரிந்தன. அந்த தேகங்களில் இருந்து தனி தேஜஸ் கிளம்பினாப் போல இருந்தது. அவர்கள் எல்லாருமே, சிவராஜ்ஜியம் என்கிற மரணப் பெருவெளியின் பூரண துல்லியத்துடன் சங்கமித்துக் கொண்டே வந்தாப் போல இவர்களுக்குப் பட்டது.
அவர்கள் கடந்துபோய் அப்படியே அந்தப் பெருவெளியின் மலர்களுக்குள்ளும் மரங்களுக்குள்ளும், புதர்களுக்குள்ளுமாகக் கரைந்து போய்விட்டார்கள். அப்படியே அவர்கள் சலனமற்ற சயனத்தில் ஆழப் போனார்கள். அவர்கள் விழிகள் மூடியிருந்தன. என்றாலும் அந்த முகங்களில் விவரிக்கவொண்ணாத அமைதி. அமைதி மாத்திரம் அல்ல, மகிழ்ச்சிபூர்வமான நேசத்தை அவர்கள் உணர்ந்தார்கள். வாழ்க்கைப் பெருவெளியில் அவர்கள் அனுபவித்தேயிராத உணர்வுகள் இவை.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தபடியே குளத்தில் தங்கிவிட்டவர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக் கொண்டார்கள். “சிவபெருமானுக்குச் சொந்தமான அந்தப் பகுதி இதைவிட அருமையானது. மேலானது.”
ஆக குளத்தில் பின்தங்ககியவர்களிலும் பலர் மெல்ல சிவராஜ்ஜியப் பகுதிக்கு வர ஆரம்பித்தார்கள். ஒரு யாத்திரை மேற்கொள்வதைப் போலிருந்தது அவர்கள் போவது. வயோதிகர்கள், மூப்பு கண்ட கிழவர்கள், கணவர்கள், மனைவிகள், தாய்மார்களுடன் சிறு குழந்தைகளும் பயணம் மேற்கொண்டன. கன்னிகள், வாலிவர்கள். ஆயிரம், மில்லியன் கணக்கான சனங்கள் அந்த அமைதியான பாதையில் தள்ளி முட்டிக்கொண்டு சிவராஜ்ஜியத்துக்கு மரணவெளிக்குப் போனார்கள். இப்போது இந்தப் பக்கத்து வாழ்க்கைப் பெருவெளி மனிதர்களே இல்லாத அளவில் கிட்டத்தட்ட காலியாகி விட்டிருந்தது.
விஷ்ணுவுக்கு பயம் வந்துவிட்டது. வாழ்க்கையின் பொறுப்பாளர் அவர் அல்லவா? இப்படி அது ஆட்களேயின்றி காலியாவது என்றால்? எனக்குத் தேவையில்லாத கோபம், நாந்தான் அவர்களுக்கு மரணப் பெருவெளிக்கு வழி காட்டித் தந்தது… இப்ப நான் என்ன பண்ண, அவர் அவசரமாக பிரம்மாவிடம் வந்தார்.
“படைப்புக் கடவுளே, வாழ்க்கையைக் காப்பாற்று” என்றார் விஷ்ணு. “இங்க பார். நீ மரணப் பெருவெளியையும் மிக அழகாகவே இப்போது நிர்மாணித்துக் கொண்டாய். அவ்வளவு அருமையாக, ஆத்மானந்த பூமியாக ஆக்கிக் கொண்டாய். ஆனால் எல்லா மனிதர்களும் என் ராஜ்ஜியத்தை விட்டுப் புறப்பட்டு விட்டார்கள்!”
“உங்க ராஜ்ஜியத்தில் ஒரு நபர் கூட மிஞ்சவில்லையா?” என்று கேட்டான் பிரம்மதேவன்.
“ஒரு இளைஞனும், ஒரு கன்னியும் மாத்திரம் இருக்கிறார்கள்… அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் அளப்பரிய காதல் வைத்திருக்கிறார்கள். எல்லையற்ற பரவசத்தையே அவர்கள் விட்டுத் தரச் சம்மதப் படுகிறார்கள். கண்ணை மூடிக் கொண்டிருந்தாலும், ஒருத்தரை ஒருத்தர் பார்வையால் வருடினாலும் அவர்கள் காதல் அப்படியே இருக்கிறது…”
“பின்ன என்ன? உங்கள் எதிர்பார்ப்பு என்ன?”
“மரணப் பெருவெளி, அதை அத்தனை உற்சாகமாக வைத்திருக்க வேண்டாம். இவ்வளவு சந்தோஷம் தருவதாக அது இருக்காமல் பார்த்துக் கொள்ளும். அப்படி செய்யாட்டி, காதலின் வசந்த பருவம் முடிந்து போனால் அவர்களும் என்னை விட்டுவிட்டு குளத்தைக் கடந்து அக்கரையை நாடுவார்கள்…”
பிரம்மா ஒரு கணம் யோசித்துவிட்டு பதிலிறுத்தான். “ச். இல்ல. மரணப் பெருவெளியின் அழகையோ சந்தோஷத்தையோ நான் குறைக்கவோ குலைக்கவோ மாட்டேன். வாழ்க்கைப் பெருவெளியில் வாழ்க்கை சார்ந்து வேறொரு அழுத்தமான பற்றினை நான் நிர்மாணம் செய்கிறேன். அதற்கு அப்புறம் மனிதர்கள் அங்கேயிருந்து இங்கே தானே விரும்பிக் கடந்து போக மாட்டார்கள். அவர்கள் வலுக்கட்டாயமாகக் கடத்தப் படுவார்கள்.”
அதைச் சொன்ன பிரம்மதேவன், இருளில் இருந்து ஒரு திரையைச் செய்தான். ஊடே யாராலும் பார்க்க முடியாத துகில் அது. அதற்கு அப்புறமாய் இரு பயங்கரமான அம்சங்களை உருவாக்கினான். ஒன்று பயம். இன்னொன்று வலி. அந்த இரண்டு அம்சங்களுமாய்ப் போய் அந்த இடைவழியில இந்தக் கருந்திரையைத் தொங்கவிட வேண்டும் என்று உத்தரவு போட்டான்.
அதன்பிறகு விஷ்ணுவின் ராஜ்ஜியம் என்கிற வாழ்க்கைப் பெருவெளி மக்கள்தொகையில் முன்பு போலவே திரும்ப நெரிசல்பட ஆரம்பித்தது. மரணப் பெருவெளி எப்பவும் போலவே அமைதியும் அருமையும் பரவசம் தருவதுமாய் இருந்தாலும் அதை அடையும் வழி சார்ந்து சனங்கள் திகிலடித்துப் போயிருந்தார்கள்.
·       

91 97899 87842

Comments

Popular posts from this blog