Sunday, December 31, 2017

இல் அறம்
Short story – நன்றி குங்குமம் வார இதழ்
எஸ். சங்கரநாராயணன்
 வீட்டில் அவன் கூட அவளும் இருந்தாள். மனைவி. என்றாலும் அவன் ஏனோ தன்னைத் தனியனாகவே உணர நேர்ந்தது. அவளை அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவளும் உணர்ந்தாள். இதற்கு என்ன செய்ய தெரியவில்லை. அவள், அவளால் என்ன செய்ய முடியும்? அவள் அருகில் வந்தாலே அவனிடம் ஓர் விறைப்பு வந்தாப் போலிருந்தது. கனிவு அல்ல இறுக்கம் அது. ஒரு பெண்ணை இத்தனை கிட்டத்தில் ஒருவனால் வெறுக்க முடியுமா, ஒதுக்க அலட்சியப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. முதலில் ஆச்சர்யமும் பிறகு அதிர்ச்சியும் அவளுக்கு ஏற்பட்டன. அழுகை வரவில்லை. அவளுக்கு அழவே வராது. துக்கிரி என்றும் பீடை என்றும் பெற்றவர்களே கரித்துக் கொட்டினார்கள் அவளை. கல்யாணம் அவளுக்கு ஒரு கதவைத் திறக்கும் என நினைத்தாள். இன்னுமான இருட்டு சூழ்ந்திருந்தது அவள் வாழ்க்கையில் இப்போது.
வெளியே அந்த இளம் மாலைக்கு சீக்கிரமே இருட்டி விட்டது. மேகம் பொருமிக் கொண்டிருந்தது. நாடகம் துவங்குமுன் அரங்கில் ஒளி குறைக்கப்பட்டாப் போல இருள் சூழ்ந்து கவிந்தது. மழை நாடகம் துவங்கப் போகிறது என்று பட்டது அவனுக்கு. கல்யாணம் ஆகி சில மாதங்களே ஆகின்றன. தான் அவளிடம் சிக்கிக் கொண்டதாகவும் இனி இந்த ஜென்மத்தில் தான் இதிலிருந்து மீள முடியாது என்றும் அவன் நினைத்தான். ஆத்திரமாய் இருந்தது அவனுக்கு. அடிமனசில் சிறு கசப்பு திரண்டு விஷமாய் உள்ளே இறுகி வெறுப்பென கெட்டிப்பட்டு ஆத்திரச் சீற்றமாய் இந்நாட்களில் உள்ளே உரும ஆரம்பித்திருந்தது. இடியுருமல் வெளியே அல்ல, அவன் உள்ளே என்று தோன்றியது.
நேற்றுவரை பொழுது மேகந்திரள்வதும் இருள்வதுமாய்ப் போக்கு காட்டிவிட்டு விலகிச் செல்வதாய் இருந்தது. மழைக்கு முந்தைய வெயிலோ புழுக்கமோ தாள வொண்ணாதிருந்தது. மனுசர்கள் எல்லாருமே ஒரு வெறுப்புடன் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அதுவும் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் வரை மழை அடையாளங்கள் இல்லாமல், கிளம்பித் தெருவில் நடக்கையில், பஸ்சில் இருந்து வீடடையும் நேரத்தில் மழை பயமுறுத்தியது. உலகம் கலவரங்களால் ஆனது என்று தோன்றியது.
எல்லாவற்றையும் விட கலவரம், வீடடைதல். வீடடைய அவனுக்குப் பிடிக்கவில்லை. அலுவலகம் வருவது அவனுக்கு ஆசுவாசம் தருவதாய் அமைந்தது. அலுவலக நேரம் முடிந்ததும் எல்லாரும் வீட்டுக்குக் கிளம்புகையில் உற்சாகமடைந்தார்கள். சிலர் எப்ப ஐந்து மணியாகும் என்று கூட பொறுமையில்லாமல் காத்திருந்தார்கள், அவனைத் தவிர. ஐந்து மணி ஆனதும் அவன் பெரும் திகைப்புக்கு உள்ளானான். இனி அலுவலகத்தில் இருக்க முடியாது. வீடு நோக்கித் திரும்பவுது தவிர்க்க முடியாத விசயமாய் இருந்தது. கால்கள் பலவீனமாகி தெம்பே இல்லாமல் சோர்வாய் உணர்ந்தன.
அவளுக்கு படிப்பு வரவில்லை. எட்டாவது வரையே கூட ஆசிரியர்கள் இரக்கப்பட்டு அவளை பாஸ் போட்டார்கள். தமிழையே எழுத்து கூட்டி வாசிக்க சிரமப்பட்டாள். எழுத அதிக சிரமப் பட்டாள். ஒன்பதாம் வகுப்பில் வயதுக்கு வந்த போது, இனிமே பள்ளிக்கூடம் போக வேண்டாம் எனத் தோன்றிவிட்டது. “சரிடி, வீட்ல இருந்து என்ன செய்யப் போற?...” என்று அம்மா கேட்ட கேள்விக்கு மௌனமாய் நிற்கத்தான் முடிந்தது அவளால். ஆற்றோடு போகிற மரக்கட்டை அவள். படிப்பு அத்தோடு நின்று போனது.
பெரிய லண்டன் மாப்பிள்ளையா வரப் போகிறான்? அவளும் எதிர்பார்க்கவில்லை தான். அட வாரம் ஒரு வெள்ளிக்கிழமையில் ஒரு முழம் பூ. கோவிலுக்கு அழைத்துப் போக என்ன செலவு இருக்கும்? ஒரு எஃப் எம் ரேடியோ இருந்தால் நல்லது. விடிய விடிய அதில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தனிமை தெரியாது. பெண் பார்க்க வந்திருந்தான் அவன். அவனை நிமிர்ந்து பார்த்தாள். பெரும் ஆர்வம் ஆசை கனவு… அதெல்லாம் இல்லை. ஒரு அளவெடுக்கிற பார்வை. நெடு நெடுவென்று உயரமாய் இருந்தான். தொண்டை எலும்பு துறுத்தி வெளியே தெரிந்தது. கன்னங்கள் ஒட்டி மயிர் வளராமல் கிடந்தது. முழுக்கைச் சட்டை நாதசுரத்தை உறைபோட்டு மூடினாப் போல. நேரே அவன் கண்களைப் பார்த்தாள். வெட்கம் எல்லாம் இல்லை. அவன் கண்ணும் அவள் கண்ணும் சந்தித்து மீண்டன. அவனிடம் சலனம் இல்லை. சற்று சிரிப்பான் என நினைத்தாள். தான் சிரிக்க நினைத்தாள். அவன் சிரிக்காமல் அவள் சிரிப்பதாவது... அவன் மனசில் என்ன நினைக்கிறான் தெரியவில்லை. ஒரு பெருமூச்சு வந்தது அப்பவே அவளுக்கு. வாழ்க்கை அப்படித்தான் அமைகிறது அவளுக்கு. அவள் உப்பு விற்கப் போனால் மழை வருகிறது. மாவு விற்கப் போனால் காற்றடிக்கிறது.
அவன் அவளைப் பார்த்தான். அதேநேரம் அவளும் அவனைப் பார்ப்பாள் என அவன் எதிர்பார்க்கவில்லை. வறண்ட அவள் கண்கள். அவனிடம் அவை என்ன எதிர்பார்க்கின்றன? சரி, நான் அவளிடம் என்ன எதிர்பார்க்கிறேன்? இங்கே நான் எதற்கு வந்திருக்கிறேன்? என்ன செய்து கொண்டிருக்கிறேன்? அம்மாக்களுக்குப் பிள்ளைகளையிட்டுப் பெருமை பாட வேண்டியிருந்தது. அந்தப் பொய்களும் இல்லாமல் அவர்களால் வாழ முடியாதிருந்தது. புருசப் பெருமைகள் காற்றில் கரைந்து விட, இப்போது பிள்ளைகளையிட்டு நம்பிக்கை சார்ந்த கனவு சார்ந்த பெருமை. அவனுக்கு தன்னைப் பற்றி அம்மா பேசுவது பிடிக்கவில்லை. அதிகப் பிரசங்கம். இப்படித்தான் அவனது பாட்டி இவளை, அம்மாவை ஏமாற்றி தன் அப்பாவைக் கட்டி வைத்திருப்பாள் என்று தோன்றியது. கல்யாணம் என்றால் யாராவது வந்து வலை விரிக்கிறார்கள். பிறகு அவன் அவளைக் கல்யாணம் செய்துகொண்டான்.
அவளை ஏன் கல்யாணம் செய்து கொண்டான், அவனுக்கே புரியவில்லை. அட ஒரு ஆண்மகன் ஏன் பெண் ஒருத்தியை மணந்து கொள்கிறான்? அதன் தேவைதான் என்ன? அதுவே குழப்பமாய் இருந்தது அவனுக்கு. அவனது சம்பாத்தியம் அவன் ஒருத்தனுக்கே பற்றவில்லை. இப்பவே அம்மா தாராளமாய்க் கடன் வாங்கினாள். அவளது கடன் வாங்கும் வேகம் பார்த்தே அவர்களை நகரத்துக்கு அழைத்துவர மறுத்தான் அவன். அவளி கடன் வாங்குகிற சுவாதீனம் பார்த்தே கல்யாணத்தைத் தவிர்த்தான். அவனுக்கு வீட்டில் சாப்பிடவே யோசனையாய் இருந்தது. ஓரிடத்தில் கடன் வாங்கி இன்னொரு இடத்தில் அடைத்தாள் அம்மா. அதற்குப் பேர் சாமர்த்தியம். இதன் நடுவே சாமர்த்தியமாய் அவள் அவனுக்குக் கல்யாணம் வேறு நடத்திக் காட்டினாள். கல்யாணச் செலவுக்கு? கடன் வாங்கிக்கலாம்… சைக்கிளில் வீட்டிற்கு வந்து கடன் தந்தார்கள். வட்டி எவ்வளவு, அவன் கேட்கவில்லை.
நகரத்துச் சிறு வீடு. ஓடெடுத்த வீடு. அவனும் நண்பன் ஒருவனுமாய்ப் பகிர்ந்துகொண்ட வீடு. இவனுக்குக் கல்யாணம் என்று நண்பன் விலகிக்கொள்ள நேர்ந்தது. வேலைக்குப் போகிற பெண் என்றால் அதிகம் கேள்விகள் கேட்பாள் அவனை. நகை நட்டு புடவை சினிமா என சற்று பறந்து திரிய ஆசைப்படவும் கூடுமி. அவன் கல்யாணமே வேண்டாம் என்றவன். இப்போது வேலை பார்க்காத பெண் என்றதும் தான் ஆசுவாசமாய் இருந்தது, சிறிய அளவில். வாடகையை அவன் ஒருவனே சுமக்க வேண்டும் இப்போது. சாப்பாட்டுச் செலவு, அதுவும் ரெட்டிப்பானது. அவன் அலுவலகம் போய்விட்டால் கரண்ட் செலவாகாது. இவள் வீட்டில் இருந்தாள். ஆகவே… எல்லாமே தலைமேல் வெள்ளம் என ஓடுவதாய் இருந்தது… அம்மாவுக்கு இதையெல்லாம் விளக்க முடியாது. வீட்டுக்கு வீடு வாசப்படி, என்கிறாப் போல எதாவது சொல்லிச் சிரிக்கிறாள் அவள். இதில் சிரிக்க என்ன இருக்கிறது?
சின்ன இரண்டு அறை வீடு. சமையல் அறை சற்று ஒதுங்கி ஒரு நீள வராந்தா போல. ஒருவர் நின்று சமைக்கலாம். அந்தச் சின்ன இடத்தில் இருவர் வளைய வர வேண்டியிருந்தது. அவளை அவனால் தவிர்க்கவே முடியாதிருந்தது. அவள் அருகில் வரும்போது சிறு குற்ற உணர்வு அவனை வாட்டியது. தனக்கு சம்பந்தம் இல்லாமல் இங்கே வந்து, என்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டாள் இவள். இதுகுறித்து தன்மீதே ஆத்திரம் குமுறியது. தப்பு அவன் மேல் தானே? அவன் மறுத்திருக்க வேண்டும். அவள் வீட்டுக்கு வந்தபின் வீடே நரகமாகி விட்டது. தன் அறையில் அப்படியே மூலையில் சுருண்டு கிடப்பான். விடுமுறை நாட்கள் அவனுக்கு வெறுப்பாய் இருந்தன. வெளியே வேடிக்கை கேளிக்கை என்று போக அவன் விரும்பியதே இல்லை. தனக்கு அவையெல்லாம் சபிக்கப் பட்டவை என்று ஏனோ நினைத்தான். இந்த உலகம் மகிழ்ச்சிகரமானது அல்ல. இங்கே சிரிக்கிறவர்கள் நடிக்கிறார்கள்.
மழை வர்றாப்ல இருக்கு, என்று சீக்கிரமே அலுவலகத்தில் இருந்து எல்லாரும் கிளம்பி விட்டார்கள். சீக்கிரம் கிளம்ப அவர்களுக்கு ஒரு சாக்கு கிடைத்தாயிற்று. அவன்தான் தவிக்கும்படி ஆகிவிட்டது. வேறு வழியும் இல்லாமல் கிளம்பினான். பஸ்சேறாமல் வீடுவரை நடந்தே போகலாமா என்று கூட இருந்தது. மேகம் கருத்து அதுவேறு யோசனையாய் இருந்தது. பஸ்சில் இருந்து இறங்கி நடந்தான். வழியெல்லாம் மழை பயமுறுத்திக் கொண்டே வந்தது. மழைக்காலம் பிறக்குது, மழைக்காலம் பிறக்குது, என குடுகுடுப்பை அடித்தது இடி. வெளிச்சத்தை நாய்க்குட்டியாய் கவ்விக் கொண்டது இருள் நாய்.
வீடடைய மனம் அப்படியே குறுகி கால்கள் தளர்ந்தன. இப்படியே இருள் பெருகி நிறைந்து அவனையும் கரைத்து விட்டால் நல்லது. வீடு பயமுறுத்தியது. பிசாசு சந்நிதி அது. அவள் அருகில் இருக்கிற ஒவ்வொரு கணமும் இப்படி ஒரு குறுகல் வந்துவிடுகிறது. அவளிடம் பேச பயந்தான். எந்தவொரு வார்த்தையும் மறுவார்த்தையாக தனக்கு எதிராகக் கிளம்பி விடுமோ என அஞ்சினான். இங்க பார் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை.. என்று முகத்துக்கு எதிரே சொல்லிவிட்டால் கூட நல்லது தான். எனக்கு பெண்கள் யாரையுமே பிடிக்கவில்லை… என் அம்மா உட்பட. பெண்கள் தங்களுக்கான உலகில் ஆண்களை சுவிகரித்து, ஆக்கிரமித்து வாழ்கிறதாக அவன் நினைத்தான். தங்கள் எதிர்பார்ப்புகளால் அவர்கள் ஓர் ஆணின் விலா எலும்புகளை நொறுக்குகிறார்கள். தெரிந்தே இதில் ஆண்கள் சிக்கி வசப்படுகிறார்கள் என்கிற வாழ்க்கையின் அபத்தம் வெறுப்பாய் இருந்தது. கதவைத் தட்ட நினைத்த வேளையில் கதவைத் திறந்தாள் அவள். திறந்த ஜோரில் அவனைப் பார்த்தாள். வெளியே ஏன் நிற்கிறான்? கதவைத் தட்ட வேண்டியது தானே? இணக்கம் இல்லாத சூழலில் தன் வீடே தனக்கே அந்நியமாகி விட்ட அவலம் அது. அவள் அவன் முகத்தைப் பார்க்காமல் விலகி வழிவிட்டாள். இந்த இரண்டு மாதங்களில் அவர்கள் பேசிக்கொள்வதே கூட படிப்படியாய்க் குறைந்துகொண்டே வந்திருந்தது. இப்போது பேசாமல் இருப்பது பேச்சை விட சௌகர்யமாய் இருவருக்குமே இருந்தது. குப்பைத் தொட்டியை மூடி போட்டு மூடிக் கொண்டார்கள் இருவரும்.
மழை வருமா என பார்க்க அவள் கதவைத் திறந்திருந்தாள். ஒரு பெரிய உரையாடலுக்குத் தயாராவது போல மழை மெல்ல தூற ஆரம்பித்தது. சட்டென அது வேகமெடுத்து விடும் என்று தோன்றியது. திரட்டிச் சேர்த்திருந்த மேகம் கசிய ஆரம்பித்திருந்தது. இனி வெடித்து மொத்த பாரத்தையும் அது கொட்டி விடும் என்றிருந்தது. மணி ஆறு ஆறரை கூட ஆகவில்லை. அதற்குள் இந்த இருட்டு. மழை கிரகணம். இருந்த கடுப்பில் மழை ஏற்றிய வக்கிரத்தில் தேய்ந்து போன செருப்புகளை ஜாக்கிரதையாக வீடு வரை சேர்த்திருந்தான் அவன். வர வர எதில் சாதனை செய்வது என்று இல்லாமல் ஆகிவிட்டது. உள்ளே குமுறும் மூர்க்கம். எரிமலை வெடிக்கக் காத்திருந்தாப் போல. எதாவது பேசி அவளைக் குத்திக் கிழிக்க அவனுக்கு ஆவேசம் வந்தது. என் வாழ்வில் இருந்த கொஞ்சமே கொஞ்சம் அமைதி, அதையும் இவள் சின்னபின்னமாக்கி விட்டாள். என் குகைக்குள் நீ வேறு. குருடன் குருடனுக்கு வழி காட்டுவதா?
வீட்டுக்கு வராமல் வரப் பிடிக்காமல் வெளியே சுற்றிக்கூடத் திரிந்தாகி விட்டது. இரவு பதினோரு மணிவரை கூட, தெரு அடையாளம் இல்லாமல், நோக்கம் இல்லாமல் கால் வலிக்க வலிக்க நடந்து கொண்டிருந்தான். பல தெரு நாய் அவனுக்குப் பரிச்சயமாகி விட்டன. எந்த வீட்டில் எந்த டிவி சானல் ஓடும் என்பதும் அவனுக்கு ஓரளவு தெரிந்தது. என்றாலும், ஹா, எல்லாவற்றுக்கும் முடிவு என்று இருந்தது. ஆனால் வாழ்க்கையில் தனது சிக்கலுக்கு மாத்திரம் முடிவே தெரியவில்லை. அவன் சோர்ந்து அயர்ந்து கால் தளர வீடு திரும்புவான். அவனுக்கு அவள் சோறு எடுத்து வைத்திருப்பாள். கதவு தாளிடாமல் இருக்கும் உள்ளே வருவான். விளக்கைப் போடவே யோசனையாய் இருக்கும். அவன் வந்ததை அவள் அறிவாள். அவள் தூங்குகிறாளா என்பதே சந்தேகம். எப்பவுமே அவள் விழித்தே இருந்ததாக அவன் உணர்ந்தான். சமையல் பகுதி விளக்கைப் போட்டுக்கொண்டு தட்டை எடுத்து வைத்துக்கொண்டு ருசியே தெரியாமல் சாப்பிட்டுவிட்டுக் கை கழுவுவான். அவன் சாப்பிட்டாளா தெரியாது. கேட்டதும் இல்லை. நாலு நாள் கேட்காமல் விட்டால் தானே பசிக்குச் சாப்பிட ஆரம்பித்து விடுவாள்… என நினைத்தான்.
அவர்கள் இருவரிடையேயான மௌனத்தில் மழையோ பெரும் சத்தம் எடுக்க ஆரம்பித்திருந்தது. மழை எதையோ முறையிடுவது போலிருந்தது. யாரிடம் முறையிடுகிறது அது. அதன் முறையிடல் என்ன புரிந்ததோ மரங்கள் ஊய் ஊய்யென்று பொங்கி எழும்பின. எஜமானனைப் பார்த்த நாய் சங்கிலி மீறிக் கொந்தளிப்பது போல மழை கண்ட மரங்கள் உற்சாகம் காட்டினாப் போலிருந்தது. மழையின் சத்தமும் மரம் அசையும் சத்தமும் வெளியே கேட்டது. உலகம் இயக்கத்தில் இருந்தாப் போலிருந்தது. நல்லவேளை மழைக்கு முன் வீடு வந்ததாக நினைத்தான். நல்லவேளை கதவைத் திறந்தாள், இல்லாவிட்டால் கதவைத் தட்டி அவள் திறக்குமுன் நனைந்திருப்பேன்.
வெளி மழை அவன் உக்கிரத்தைச் சொல்வது போல் இருந்தது. ஓட்டுக் கூரையில் அது விழும் நாராச ஒலி. சரிந்திறங்கும் ஓடு. ஓரங்களில் மாத்திரம் வீடு ஒழுகும். இந்த மழைக்கு உடனே மின்சாரத்தைத் துண்டித்து விடுவார்கள்… என நினைக்கும் போதே விளக்குகள் அணைந்து தெருவே இருளில் மூழ்கியது. பைத்தியக்காரி பாட்டெடுத்தால் அவளை யாரும் அடக்க முடியாது, என்பதைப் போல மழை தன் பாட்டுக்குக் கொட்டி முழக்கிக் கொண்டிருந்தது. மணி என்ன இருக்கும் தெரியவில்லை. இருட்டான அந்த இரட்டை அறை வீட்டில் அவன் உள்ளே வந்து ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டான். அவள் என்ன செய்கிறாள் தெரியவில்லை. அவன் இந்த அறையில் இருந்தால் அவள் மறு அறைக்குப் போய்விடுவாள். அல்லது அவனே மறு அறைக்கு நகர்ந்து விடுவது வழக்கம். மழையும் இருட்டும் ஓரளவு சாதகமாக இருப்பதாக உணர்ந்த போதிலும், அவளது அருகாமையை உணராமல் ஒதுக்க முடியவில்லை. விறுவிறுவென்று அவனே துரித நடையில் வீடு வந்து சேர்ந்திருந்தான். வியர்வைத் தீவு. அவள்முன் சட்டையை உரித்தெறிய முடியவில்லை. கால தாமதமாக ஊரெங்கும் சுற்றித் திரிந்தபின் வீடு வந்து சாப்பிட்டுப் படுக்க சௌகரியமாய் இருந்தது. இன்றைக்கு வெளியே இறங்க முடியாது. மழை. இப்பசத்திக்கு விடுமா தெரியவில்லை.
நமக்காவது இப்படி ஊர் சுற்றிவிட்டு தாமதமாக வீடு வந்து படுத்து விட முடிகிறது. இவள்? இவள்நிலை என்ன, என் யோசனையை ஒதுக்கினான். உலகில் தனக்கு சாதகமாக எதுவுமே நடப்பதில்லை என நினைத்தான். மழைத் தண்ணீர் துணி துவைக்க நல்லது. நன்றாக அழுக்குப் போகும், என்று தோன்றியது. ஒரு பீப்பாயை எடுத்து வாசல்பக்கம் ஓட்டில் இருந்து விழும் மழையைப் பிடிக்கலாமா என நினைத்தான். அதற்குள் அவள் அதைச் செய்தாள். ஒரு பீப்பாயை எடுத்துக்கொண்டு வாசல் பக்கம் போனாள். அவனைத் தாண்டி அவள் போக வேண்டியிருந்தது. அவன் எழுந்து நின்றவன் பீப்பாயை வாங்கிக் கொண்டான். கதவைத் திறந்தபோது அதுவரை அடக்கமாய்க் கேட்டுக்கொண்டிருந்த மழைச்சத்தம் திடீரென்று பெருகி இன்னும் ஆக்ரோஷமாய்த் தோன்றியது. சப்த விஸ்வரூபம். யாருக்கு எதற்கு இத்தனை கோபம் காட்ட வேண்டும் அது தெரியவில்லை. சட்டென அவசரமாய்க் குனிந்து மழை தாரை விழும் இடத்தில் பீப்பாயை வைக்குமுன் நனைந்து போனான். மழையின் கயிறைப் பிடித்து ஆட்டிவிட்டது காற்று.
உள்ளே திரும்ப இருட்டில் விக்கிரகம் போல அவள் காத்திருந்தாள். அத்தனை கிட்டத்தில் அவள் நின்றது அவனுக்குத் துணுக்கென்றது. அவள் கையில் துண்டு இருந்தது. அவனுக்கு என்ன செய்ய தெரியவில்லை. மழையில் இறங்கி நடந்து விட்டால் கூடத் தேவலை. இவள் காட்டும் இந்தக் கரிசனம்… எனக்குத் தேவையா? இதை அனுமதிப்பதா? பேசாமல் வாங்கிக் கொண்டு பக்கத்து அறைக்குப் போனான். அவள் கதவைச் சாத்தினாள். அதற்குள் வீட்டின் ஒரு அடி வரை மழை உள்ளே சிதறிப் பரவியிருந்தது. எல்லாக் காரியத்திலும்அவர்களிடையே ஒரு சிறு நிற்றல், சின்னத் தயக்கம் என ஆகிப் போனதில் தரை நனைந்து விட்டது. அவன் நனைந்து விடடான். கிடுகிடுவென்று தவட்டிக் கொண்டான். மழையில் நனைந்ததற்கும் அதற்கும் லேசாய் குளிர் அடித்தது.
மழை அவனை வீட்டினுள்ளே அடைத்து விட்டதாய் உணர்ந்தான். பெரும் கொந்தளிப்பான மழை ஆனால் அவனை அடக்க முற்படடது போல் இருந்தது. இப்படி இதுவரை நேர்ந்ததே இல்லை. அவனால் தன்னளவில் சமாளிக்க முடிகிற மாதிரியே அவன் இயங்கினான். அவளுக்கு அவனிடம் பேச இருந்தாலும் அவன் அதை அனுமதிக்காமலேயே இருந்தான். பதில் சொல்லாமலேயே கடந்து போகிறவனாய் இருந்தான். பேசலாம். ஆத்திரப் படலாம். கோபப்படலாம்… அடிக்கவும் செய்யலாம். ஒன்று நிகழ்ந்தால் நல்லது. எதுவுமே நிகழாமல் இப்படியே காலம் போகிற அளவில் அவன் நடந்து கொண்டான். அவன் தானாகப் பேசப் போவது இல்லை என அவள் உணர்ந்தாள். வேறு வழியில்லாமல் அவள் பேசினாலும் பதில் சொல்கிறானில்லை. மாமியார் மாமனார், வேறு ஊரில். இதை எப்படி அவள் சமாளிப்பாள். ஆண்கள் குடும்பத் தலைவர்கள். அவர்களின் நிர்வாகத்தில் பெண்கள் நிழல் என அவர்களோடு இணைந்து பயணிக்கிறார்கள். அதுவே வழக்கம்… இவன் பிடி கொடுக்கிறானில்லை. நிழல் மாத்திரம் பிய்த்துக்கொள்வது எப்படி?
அவன் உள்ளறைக்குப் போனதும் அவள் இந்த அறைக்கு வந்திருந்தாள். உள் அறை சன்னல்களை கீழ்ப்பாதியை மாத்திரம் சாத்தியிருந்தாள். காற்று சுழன்றடித்ததில் சன்னல்கள் அதிர்வு கண்டன. அவன் எழுந்துபோய சன்னல் கதவுகளைச் சாத்தியதை அவள் இங்கே யிருந்தே கேட்டாள். அவளுக்கு அவனிடம் பேச வேண்டும். வீட்டுக்காரர் வாடகை கேட்டு வந்து போனார். இந்த இரண்டு இரண்டரை மாதங்களில் அவர்கள் வீட்டுக்கு யாருமே வந்தது இல்லை. அவன் அழைத்து வந்தது இல்லை. அவளும் வெளியே இறங்கி யாரிடமும் புன்னகைத்தது கூட இல்லை. அவன் எப்படி எடுத்துக் கொள்வான் தெரியாது. அவனே அவளிடம் சரியாகப் பேசவில்லை. இதில் மற்றவர்களோடு பேச்சு வார்த்தை என்ன?
வாசல் வேப்ப மரம்தான் அடிக்கும் சுழற் காற்றில் சிறு கிளைகளை முறிய முறிய இழந்தாப் போலிருந்தது. கிளைகள் மேல் ஓட்டுக் கூரையில் மோதும் சத்தம். யாருக்கோ கோபத்தில் சாபம் இட்டு சத்தியம் செய்கிறாப் போலிருந்தது மரம். உலகம் வெளியே பெரும் இயக்கத்தில் இருக்கிறது என்று நினைத்தாள். இங்கேயோ அபார மௌனம். இறுக்கம். மூட்டம். சுவர்க் கடிகாரம் இல்லை வீட்டில். அந்த டிக் டிக் சத்தம் கூட இல்லை. மின் விசிறி இருக்கிறது. மின்சாரம் இல்லை. அவள் போய் சிம்னி விளக்கு ஒன்றை சமையல் மேடையில் ஏற்றி வைத்தாள். முழு இருட்டு முதலையாய் அவளைக் கவ்வுவது என்னவோ போலிருந்தது. அவள் அத்தனை தைரியசாலி அல்ல. இருட்டு அவளை பயமுறுத்தியது. இருட்டு என்று கூட இல்லை. எதையும் பேசவும், செய்யவும் துவங்குமுன்னம் அவளுக்கு சிறு பயமும் பதட்டமும் கூடவே வந்தது. இந்த இருட்டில் அவன் கூட இருக்கிறது கூட, அவன் பேசாவிட்டாலும், ஆறுதலாய் இருந்தது.
இப்படியே கால காலத்துக்கும் அமர்ந்திருப்பதா? தன் தலை வீங்கி வெடித்துவிடும் போலிருந்தது. மனசின் அலையடிப்பில் வார்த்தைகள் கால காலமாய் குப்பைசேர்ந்தாப் போல அடைந்து கிடந்தன. சொற்களின் முடை நாற்றம் தாள முடியாதிருந்தது. தனக்கே நாறும்படியான சகிக்கவொண்ணா நிலை அது. சொற்களின் பிணம் தொண்டைக்குள் வாந்திவரச் செய்து விடுமோ என்று பயந்தான். எனினும் வார்த்தைகள் தொண்டையை விட்டு வெளியேற விடாமல் அவன் கவனமாய் இருந்தான். எதும் சமைத்திருக்கிறாளா தெரியவில்லை. சாப்பிட்டால் பேசாமல் படுத்து விடலாம் என்று இருந்தது. தூங்குகிறோமோ இல்லையோ, படுத்து விடலாம். தூங்குகிற பாவனை அவனுக்குப் புதிது அல்ல. அவளுக்கும்… அவள் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளக் கூட அவன் வாய்ப்பு அளிக்க மறுத்தான். நீ என் வாழ்வின் அதிதம். அதை அவள் புரிந்து கொள்ள வேண்டும். தான் அவளை விரும்பவில்லை… என்பதை தன் அலட்சியம் அவளுக்கு உணர்த்த வேண்டும் என அவன் நம்பினான்.
சட்டென்று காலை இழுத்துக் கொண்டாள் அவள். பதறினாப் போல ஸ்டூலில் இருந்து எழுந்து கொண்டாள். அவளிடமான திடீர் மாற்றம், அவன் திரும்பிப் பார்த்தான். தரையில் எதோ ஊர்ந்தாப் போலிருந்தது. புடவையைப் பதறி உதறினாள் அவள். சமையல் அறையில் ஏற்றி யிருந்த விளக்கை. அவளே போய் எடுத்து வந்தாள். தரையில் துழாவினாப் போல தேடினாள். தேள். தேள் ஒன்று ஒன்று மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. அவனும் எழுந்து வந்து தேளைப் பார்த்தான். பதட்டமாய் ஓட அது முயற்சிக்கவில்லை. பெரிய தேளாய் இருந்தது. அவன் பார்த்தான். குனிந்து தேள்ப் பக்கமாய் வெளிச்சம் காட்டினாள் அவள். தன் மேல் தேள் விழுந்து கடந்திருக்கிசறது. அவளக்கு ஏனோ அப்போது பயமாய் இல்லை. கூட அவன் இருப்பதால் இருக்கலாம். ஆச்சர்யகரமாக அதன் முதுகெங்கும் சிறு சிறு தேள்க்குட்டிகள் நமநமவென்று திரிவதை அவன் கண்டான். விளக்குமாறு மாதிரி எதையாவது எடுத்து வந்து தேளை அடித்துவிட அவன் நினைத்தான். அவள் சயைமல் அறைக்கு உள்ளே போனாள். பெண் தேள், குட்டிகள் ஈன்ற நிலையில் அவற்றை முதுகில் கதகதப்புக்காக ஏந்தித் திரியும் என்று அவன் கேள்விப் பட்டிருந்தான்.
அவள் ஒரு சிறு குப்பியில் இருந்த மண்ணெண்ணெயை தேளின் மேல் ஊற்றினாள். சில நிமடங்களில் தேள் சுருண்டு அழுக்குச் சுருணையாய்ப் போனது. அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. தனது நிதானம் அவளுக்கே வியப்பாகத்தான் இருந்தது. கனிந்து விளக்குமாற்றால் ஒரு காகிதத்தில் அதை அவள் அள்ளினாள். வெளியே இன்னும் மழை பெய்து பெருக்கியபடி இருந்தது. கதவைத் திறந்ததும் மழை ஓலம் இன்னும் உரத்துக் கேட்டது. புது நபர் நுழைய ஒப்பாரி அதிகரிப்பதைப் போல. அப்படியே காகிதத்தோடு வெளியே எறிந்தாள் அவள். அதற்குள் காற்றலைப்பில் மழை அவள்மேல் பாம்புச் சீறல் சீறி நனைத்தது. கதவைச் சாத்திவிட்டு அவள் திரும்பினாள். துண்டுடன் நின்று கொண்டிருந்தான் அவன்.
“ஓனர் வந்திருந்தாரு…” என்றபடியே வாங்கிக் கொண்டாள்.


91 978999 87842

Sunday, December 10, 2017

தனித்து விடப்பட்ட ரயில்பெட்டி
(நன்றி பேசும்புதிய சக்தி, டிச. 2017)

எஸ். சங்கரநாராயணன்
சிறிய ரயில் நிலையம். நிலையத்துக்கு இடதும் வலதுமாக பூனை மீசை போல தண்டவாளங்கள் போகின்றன. ஊருக்கு வெளியே இருந்தது நிலையம். தண்ணி கஷ்டமான ஊர். சனங்கள் ஊரில் இருந்து இடுப்பில் ஒரு குடமும், குஸ்திக்காரன் போல் கையை உள்ளே விட்டபடி எடுத்து வரும் குடங்களுமாக வருவார்கள். தினசரி ரெண்டு லோக்கல் பாசஞ்சர் ரயில்கள் வரும் அங்கே. மத்தபடி மகா அமைதி. மதுரை போகிற ரயில்கள் அங்கே நிற்காது. கடன் கொடுத்தவனைப் பார்த்தாப் போல ஒரே ஓட்டமாய் ஓடும். பரந்த செவ்வக வெளி அது. மல்லாக்கக் கிடத்ப்பட்ட ஏணியாய் தண்டவாளம். ரோடு போடும் கருங்கல் குவித்துக் கிடத்தப் பட்டிருக்கும்.
பரந்த விஸ்தீரணத்தில் சிமென்ட் எடுத்த நடைமேடை. பள்ளத்தில் ரயில் பாதை. பெரிய பெரிய வேப்ப மரங்கள் புளிய மரங்கள் மகா நிழலளிக்கும் இடம். தாவரங்களை விட நிழல்கள் வேகமாக வளரவும் சுருங்கவும் செய்கின்றன. ஆடுகள் மாடுகள் புல் மேய்ந்துவிட்டு அங்கே வந்து கால்பரப்பி அமரும். இடையன் அவன்பாட்டுக்கு ஸ்டேஷனில் துண்டு விரித்துப் படுத்துக் கிடப்பான். மேற் கூரை தேவைப்படாத ஸ்டேஷன். உருப்படாத வாலிபர்கள் அங்கே ஒதுக்குப் புறமாய் கல்லாட்டம் சூதாட்டம் ஆடுவார்கள். பொதுவாக ஆள் நடமாட்டம் என்று அதிகம் இராது.
வரும் ரயிலுக்கு, போகும் ரயிலுக்கு என இரண்டு தண்டவாளப் பாதைகள், எக்ஸ்பிரஸ் ரயில் போக மூன்றாவது பாதை. தவிர ஒரு எக்ஸ்ட்ரா தண்டவாளம் இருக்கிறது. ஷண்டிங் தண்டவாளம். அது மற்ற போக்குவரத்துத் தண்டவாளத்துடன் தூரத்தில் ட்ராக் சேர்ந்து கொள்ளும். வண்டிப்பெட்டிகளை ஒதுக்கி அங்கே போட்டு வைப்பார்கள். ஸ்டேஷனுக்கு இப்புறமும் அப்புறமும் ஒரு அம்பது மீட்டர் வரை இவை இருந்தன. இந்த ஸ்டேஷனில் அந்தத் தனி தண்டவாளத்தில் ரயில்பெட்டி ஒன்று விட்டுவைக்கப் பட்டிருந்தது.
ராமையா ஓய்வு பெற்றுவிட்டார். உடலில் ஒரு கோளாறுமில்லை. அந்த நிமிர்வு கூன் போடக் கூட இல்லை. பேன்ட் பிடிக்காது. எப்பவும் வேட்டி சட்டைதான். மணிக்கட்டில் பட்டன் போட்ட முழுக்கைச் சட்டையை சிறிது உள் நகர்த்தி மணி பார்ப்பது அவரது தோரணை. அரசாங்க உத்தியோகம் தான். சற்று ஏமாளி. சாதியைக் காட்டியும் திகிடு தத்தம் பண்ணியும் காக்கா பிடித்தும் காசு நகர்த்தியும் அவனவன் விரும்பிய இடம் மாற்றல், பதவி உயர்வு என வாங்கிக் கொண்டான். அதெல்லாம் அவருக்கு ஒப்பவில்லை. தெரியவும் தெரியாது. ஒரு மாதிரி அசடு என்று ஊரில் அவருக்கு நல்லபெயர். ராமையா, சரியான ஆமைய்யா அவரு, என்பார்கள்.
நெற்றி நிறைய திருநீறு பூசிக் கொள்வார். நீறில்லா நெற்றி பாழ். தூங்கி யெழுந்ததும் மனசில் சிவ சிவா… என முணுமுணுத்தபடி இழுத்துப் பூசிக் கொள்வார். உடம்புக்குச் சட்டை போல. நெற்றியில் திருநீறு. பிரதோஷ சமயம் கோவிலுக்குப் போவார். ஓதுவார் பதிகம் பாடுகையில் கடவுளைப் பார்த்தபடி பரவசப் படுவார். இதில் இந்தப் பதவியே, இதுவரை அவர் இதில் விக்னமில்லாமல் காலத்தை ஓட்டியதே அந்த சிவ பெருமான் அருள், என நினைத்தார் ராமையா. தான் பிறந்ததே தெய்வ கடாட்சம் என நம்பினார். புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா… என அப்பர் பாடியதை எண்ணி நெகிழ்ந்தார். பணி ஓய்வு பெறும் நாளும் வந்து விடைபெற்றுக் கொண்டார்.
அலுவலகத்தில் வேலை என்று எதையாவது, இல்லாவிட்டாலும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார் அவர். அடிக்கடி மணிக்கட்டில் மணி பார்ப்பதே வேலை தானே. யாரிடமும் அதிகம் பேசும் பழக்கம் இல்லை. தேவைக்கு குறைவாகப் பேசுவார். இரு காதால் கேட்க வேண்டும். ஒரு வாயால் பேச வேண்டும். அவர் வரை வந்த அத்தனை பொன் மொழிகளையும் ஞாபகம் வைத்துக் கொண்டு அதன்படி நடக்க முயன்றார். கற்றபின் நிற்க வேண்டும். வள்ளுவர் சொன்னாரா இல்லையா? ஆனால் சரியா படிக்காதவனை வாத்தியார் வகுப்புக்கு வெளியே நிறுத்துகிறார் என்பது வேறு கதை.
இந்த வாழ்க்கை நிலையற்றது. இகவுலகம் முக்கியம் இல்லை. பரவுலகம்… சொர்க்கபுரி அதை அடைய ஆத்மா முயற்சி செய்ய வேண்டும். கதா காலட்சேபங்களில் எல்லாம் போய் உட்கார்ந்து முழுக்கக் கேட்டார் ராமையா. அவர்கள் சொன்ன நகைச்சுவையை திடீர் திடீரென்று நினைத்துச் சிரிப்பு வரும் அவருக்கு. (வீட்டுக்கு வந்த விருந்தாளி கிட்ட சில பேர் “இன்னிக்கு எங்க வீட்ல விரதம்” அப்டிம்பான்.) வாரியார், கீரன் கேட்பார். இரா. கணபதியின் ‘தெய்வத்தின் குரல்‘ வீட்டில். வாங்கி வைத்திருக்கிறார். படிக்க வேண்டும். எப்போது படிப்பார் தெரியாது.
கோவிலுக்குப் போவது, கதா காலட்சேபம் கேட்பது… இப்படி இல்லாத வேலைகளை இழுத்து விட்டுக்கொண்டும் ராமையாவுக்கு நாள் மிச்சம் இருந்தது. பொழுது சண்டித்தனம் செய்யும் மாட்டைப் போல அப்படியே நின்றது. அதிலும் ஓய்வு பெற்றபின் ரொம்ப சிக்கலாகி விட்டது. வேலையே இல்லை. மூச்சு விடுவது மாத்திரமே அவர் செய்கிறதாகப் பட்டது. ஒரே பெண் அவருக்கு. மனைவி சிவ பதம் அடைந்தாயிற்று. சுமங்கலியாய்ப் போய்ச்சேர கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவளுக்கு அந்த அதிர்ஷ்டம் இருந்ததாய் நினைத்தார். எல்லாம் அவன் செயல், நம்ம கைல என்ன இருக்கு? நாம எல்லாரும் பிறவிப் பெருங் கடலை நீந்திக்கிட்டிருக்கோம்.
பெண்ணுக்கு ஒரு மகள். சிவதர்சினி. ரெண்டாம் வகுப்பு படிக்கிறாள். அவள் கண்கள் டார்ச் போல அபாரமாய் இருக்கும். மகள் சுந்தரவல்லி நல்ல சுறுசுறுப்பு. வேலைக்கு எங்கேயும் போகவில்லை அவள். வாசலில் தொழுவம். பசு மாடு இருக்கிறது. ரெண்டு ரெண்டரை லிட்டர் கறக்கும். சனி செவ்வாயில் வீட்டை பசுஞ் சாணத்தில் அவள் மெழுகுவாள். மாடு அந்த நெடிக்கு முகம் சுளிக்கலாம். அவள்தான் பால் கறக்க வேண்டும். அவர் அதன் கிட்டேயே போக மாட்டார். நீல்லா ஒரு ஆளா, என்கிறாப் போல அவரை அது ஒரு பார்வை பார்த்தது. பசு மாட்டுக்குக் கோபம் வருவது ஆச்சர்யமான விஷயம் தான். அதற்கு ஒரு ஆம்பளை பயப்படுவது அதைவிட ஆச்சர்யம். பசும் பால் வியாபாரம் காலை மாலைகளில். அதற்கு 190 மில்லி, 490 மில்லி அளவைகள் வைத்திருக்கிறாள் சுந்தரவல்லி.
காலையில் கிடுகிடுவென்று அவள் வேலை செய்வதைப் பார்க்க அதிசயமாய் இருக்கும். வேப்பங்குச்சி ஒடித்து காலையில் பல் துலக்கும் போதே மாட்டுக்கு தீவனம் இருக்கிறதா என்று பார்ப்பாள். பசு அடுத்த ஈனுக்குத் தயாராய் வயிறு பெருத்து நிற்பதை ஒரு திருப்தியுடன் பார்ப்பாள். ஏற்கனவே அது ஈனி அடுத்த பசு மாடு தயாராகி வருகிறது. விரைவில் 950 மில்லி அளவை வாங்க நேரலாம். வீட்டில் பசும் பால் காபி தான். குளித்து விட்டு தான் சமையல் கட்டுக்குள் புகுவாள். எதற்கு இந்த அவசரம் என்று நினைப்பார். ஏழு ஏழரை மணிக்குள் அவள் கணவன் தொழிற்சாலைக்கு ஷிஃப்ட் டூட்டி என்று பைக்கில் கிளம்ப டிபன் கட்டித் தர வேண்டும். ஆனால் எட்டரை, சிவதர்சினி பள்ளிக்கூடம் போய்விட்டால் வீடு மகா அமைதியாகி விடும். அது என்னவோ தெய்வக் குத்தம் போல டி.வியைப் போடுவாள் சுந்தரவல்லி. என்னவோ மூலிகை மருத்துவம்னு யாராவது தாடி வெச்சிக்கிட்டு பேசிக் கிட்டிருப்பார்கள்.
ராமையா காலை இள வெளிச்சத்துக்கு எழுந்துகொள்வார். தினசரி செய்தித்தாள் வாசிப்பார். வீட்டில் அவரைத் தவிர செய்தித்தாள் வாசிப்பார் இல்லை. பேப்பரின் பயன் மாவு சலிக்க என்று சுந்தரவல்லி நினைத்தாள். ஹோட்டலில் ஆர்டர் செய்த பேப்பர் ரோஸ்ட் போல காம்பவுண்டுக்குள் விழுந்து கிடக்கும் பேப்பர். எடுத்துவந்து உள் திண்ணையில் அமர்ந்து கடமை போல் வாசிப்பார். ஒரு முழு பக்கம் நகை விளம்பரம் போடறானுங்க. அவ்வளவு வியாபாரம் ஆவுதா? இதுல செய்கூலி இல்லை சேதாரம் இல்லைன்றானுங்க. தங்கமாவது உண்டுமா?
அவருக்கு அரசியலில் ஈடுபாடு என்று சொல்ல முடியாது. முதல் அமைச்சர் யார் தெரியும். மத்த அமைச்சர்கள் யார் யார் தெரியாது. நீதிமன்றத்தில் தமிழை ஆட்சிமொழி யாக்குவோம், என முதல்வர் ஆவேசப் பட்டால், இங்கிலீஷ் இருந்தா என்ன என்று தோன்றும். அந்தச் செய்தியைத் தாண்டி அடுத்த பக்கம் திருப்புவார். துக்க செய்திகளுக்கு ச் கொட்டுவார் மனசுக்குள். எத்தனை விபத்து நடக்குது இப்பல்லாம். கலிகாலம். வேறென்ன, என நினைப்பார். கணவனை அனுப்பி விட்டு எட்டு மணி வாக்கில் அவருக்கு காபி தருவாள் மகள். ஆகா என்றிருக்கும். காபி குடித்தால் தான் அன்றைய நாளே துவங்குது. ஆயே வருது… காபி என திண்ணையில் வைத்துவிட்டு பரபரப்பாய் உள்ளே ஓடுவாள் சுந்தரவல்லி. தினசரி மஞ்சள் பூசிக் குளிப்பதில் அவள் கருத்த முகத்தில் பசுஞ்சாணப் பொலிவு காணும். தலையில் துண்டுடன் வாயில் ஸ்லோகங்களுடன் அவள் வீட்டுக்குள் கபடி ஆடுவதாய்ப் படும்.
அவள் அப்படி பம்பரமாய்ச் சுழல ராமையா வெறும் பொம்மையாய் நின்றார் வீட்டில். வேலையே இல்லை. கொடுத்தாலும் செய்யத் தெரியாது. பணி ஓய்வு வேறு பெற்றுவிட்டார். குழந்தையைக் கொண்டுவிடலாம் என்று நினைத்தால், தாத்தா வேணாம், எதுவும் வாங்கித் தர மாட்டறார், என்கிறது குழந்தை. காய்கறி மாதிரி, கடைக்குப் போய் வரும் வேலையும் இல்லை. சுந்தரவல்லி கணவனையே நம்ப மாட்டாள். இதுநாள் வரை இல்லாமல் புதிதாய் வேலை ஏற்படுத்திக் கொள்ள சிரமமாய் இருந்தது. தெருவில் போய் நின்று போவோர் வருவோரிடம் நாலு வார்த்தை பேசவும் தெரியாது. எதிரே வரும் நபர் புன்னகை செய்தாலே, நமக்கா, நம்ம பின்னால் யாருக்குமா, என்று திரும்பிப் பார்க்கிறார்.
பேப்பர் படிச்சாச்சி என்றாலும் ராமையா யாரோடும் செய்தி பற்றி பேச மாட்டார். அலுவலகத்திலும் ஊரிலும் அவருக்கு சிநேகிதாள் இல்லை. சிவன் கோவில் குருக்களிடமே கூட தலையை மாத்திரம் ஆட்டுவார். சிவன் கோவில் அர்ச்சகர் ஒருநாள் ஜலதோஷம் என்று இன்ஹேலர் பயன்படுத்தியது ராமையாவுக்குப் பிடிக்கவில்லை. அட அது சிவ லிங்கம்லா, என்று இருந்தது. என்றாலும் சொல்லவில்லை. பக்தியும் நேர்மையும் வாழ்க்கையை ஒருமாதிரி தயக்கமாகவும் பயத்துடனுமே வாழ வைத்து விடுகிறது. நாமார்க்கும் குடியல்லோம்… மனுசன் தூக்கத்தில் சொல்லிப் பிட்டாரா?
வீட்டில் வேலையே கிடையாது. முன்னாலாவது டவுண் பஸ்சில் ஏறி மணி பார்த்தபடி உட்கார்ந்தால் இருபது நிமிடத்தில் அலுவலக வாசலிலேயே இறங்கி உள்ளே போகலாம். இறங்கும்போதும் மணி பார்ப்பார். முதல் ஆளாய் அவர்தான். வருகைப் பதிவில் கையெழுத்து போட்டால் வேலை செய்தாப் போல. சில ஆட்கள் மறுநாள் வந்து கையெழுத்து போட்டார்கள். இப்போது ஊரை விட்டே வெளியே போக வேலை இல்லாமலாச்சி. இந்த நேரக் கொடுமை தாள முயலாமல் ஆயிற்று.
போகாத பொழுதை என்ன செய்ய. காலை மாலை இரண்டு வேளையும் நடைப்பயிற்சி என வழக்கம் வைத்துக் கொண்டார் அவர். ஊர் ஆடுகள் மாடுகள் கால் போனபடி அலைந்து திரிகின்றன. நிழல் கண்ட இடம் ஒதுங்கி அமர்ந்து ஓய்வு கொள்கின்றன. ஒரு மாலையில் பிரதோஷம் முடிந்து கோவிலை விட்டு நேரே வீடு திரும்பாமல் இப்படி காலாற நடப்போமே என நினைத்தார். நண்பர்கள் என்று யார் வீட்டுக்கும் அவர் போனது கிடையாது. காலை வீசி நடந்தார். முழுக்கைச் சட்டை மணிக்கட்டு பகுதியை சற்று பின் தள்ளி மணி பார்த்துக் கொண்டார். நீறு இல்லாமல் நெற்றி இல்லை. வாச் இல்லாமல் கை இல்லை. ஊர் எல்லை தாண்டி ரயில்வே ஸ்டேஷன் வரை வந்தார். ஸ்டேஷன் கிட்டே வர வர, முதலில் மாமிச வாடையும் பிறகு ஜிலு ஜிலுவென்று காற்றும் வந்தது. அவருக்கு இந்த நடை பிடித்திருந்தது. ஆமைகளும் மீன்களும் கூட அமைதியான நேரம் நீரின் மேல் மட்டத்துக்கு வருகின்றன.
வாழ்க்கையில் என்ன இருக்கிறது? ஒரு அர்த்தமும் இல்லை. மகளுக்கே இவள், அவர் மனைவி தான் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைத்தது. வீடு வாங்கி, மாடு வைத்துக்கொண்டு… அதெல்லாம் சுந்தரவல்லியின் சாமர்த்தியம். அவரைத் தவிர எல்லாருமே எப்படியோ சாமர்த்தியமாய் வாழ்கிறார்கள். தனியே பக்கத்துத் தெருவில் இருந்தவர், மனைவி இறந்ததும் மகளோடு வந்து சேர்ந்து கொண்டார். வேளை தவறாமல் உணவு தந்து விடுகிறாள். காலைக்கு இட்லி. தோசை. உப்புமா… என எதாவது. ருசி தெரியாமல் சாப்பிடுவார். ஊருக்குள் அவர் வீட்டுப்பக்கம் கேட்காத தேவாரம் அந்த வெளியில் கேட்டது. மைக் செட் உண்டு கோவிலில். ஊர் எல்லையைத் தாண்ட தன்னைப் போல ரயில் நிலையம் வந்துவிடும். நிறையப் பேர் குடத்தில் நீர் பிடித்துப் போய்க் கொண்டிருந்தார்கள். சிலர் சைக்கிள் ஸ்டாண்டில் கயிறு முடி போட்டு ரெண்டு பக்கமும் குடம் கட்டிவைத்து எடுத்துப் போனார்கள். நடுத் தெருவில் மாடுகள் உட்கார்ந்திருந்தன. ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி காய்கறி மார்க்கெட். அதிகாலையில் அங்கே வியாபாரம் களை கட்டி பரபரத்துக் கிடக்கும். ஒரு சந்து காய்கறி. ஒரு சந்து மீனும் கோழியும் ஆடும் விற்பார்கள். மூக்கைப் பிடித்துக் கொண்டு தாண்டிப் போனார்.
ரயில்வே.ஸ்டேஷனில் முதல் முதலாக அந்த ரயில்பெட்டியைப் பார்த்தார் ராமையா. பள்ளிக்கு லேட்டா வந்த மாணவனை கேட்டுக்கு வெளியே நிறுத்திவைத்தாப் போல தனியே நின்றிருந்தது அந்த ரயில்பெட்டி. ஸ்டேஷன் தாண்டி ஓரத் தண்டவாளத்தில் தனியே நின்றிருந்தது அது. கிட்டே போய் நின்றார் அவர். தரையில் இருந்து அந்த உயரம் ஏற முடியாது அவரால். கற் குவியலுக்குள் தண்டவாளம். குறுக்கே ரீப்பர் கட்டைகள். ரயில்பெட்டி பெரிய கோவில்யானை போல இருந்தது. அவருக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அது அங்கே தான் நிற்கிறது என நினைத்துக் கொண்டார் அவர்.
இதுநாள் வ5ரை இல்லாமல் இப்போது தான் நான் அதை இத்தனை விஸ்தாரமாகப் பார்க்கிறேன், என நினைத்தார். யாரும் கவனிக்காமல் தனியே இப்படி அநாதையாய் நிற்கிறது அது… அவருக்கு அது வருத்தம் அளிப்பதாக இருந்தது. திரும்பி நடக்க ஆரம்பித்தார் வீட்டை நோக்கி. இனி காலையிலும் மாலையிலும் உலா என நடை கிளம்பி அந்த ரயில்பெட்டி, அதை அடையாளமாய் வைத்துக் கொண்டு அது வரை வந்துவிட்டு வீடு திரும்பலாம் என ஒரு பழக்கம் அன்று முதல் ஏற்பட்டது அவருக்கு.
இரவுகளில் அந்த ரயில்பெட்டி ஞாபகம் கூட சில சமயம் வரும் அவருக்கு. ஒருநாள் நின்று நிதானமாய் அதை ஒரு சுற்று சுற்றி வந்தார். ஒரு காலத்தில் உற்சாகமாய் எந்தெந்த ஊருக்கெல்லாம் அது போய் வந்திருக்கும். சனங்கள் பரபரப்பாக அதில் ஏறி இறங்கி யிருப்பார்கள். கடைசியாக அது எந்த ஊர் போனதோ. எப்படி இங்கே வந்தது. எப்படி இங்கே இந்தப் பெட்டியை மாத்திரம் ஒதுக்கி வைத்து விட்டார்கள். இனி அது என்றைக்கு இந்த ஊரை விட்டுக் கிளம்பும்? கிளம்புமா? அதுவே தெரியவில்லை. திடீரென்று அதனால் பயன் இல்லாமல் ஆகிப் போனது… எத்தனை பெரிய துக்கம் அது. அவருக்கு அதை நினைக்கப் பாவமாய் இருந்தது.
இப்படி யாருக்கும் வேண்டாதவனாய் ஆகிப் போய்விட்டதாக அது வருத்தப் படுகிறதா தெரியவில்லை. இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம், என அதற்கு, முன்பு இருந்தன. இப்போது எல்லாவற்றையுமே அது இழந்திருந்தது. காலமே அங்கே உறைந்து நின்று விட்டாப் போல. திகைத்து நிற்கிறது பெட்டி. அடாடா. பாவம்… என வருத்தப் பட்டார். வாழ்க்கையில் எதையிட்டும் முனைப்போ பிடிப்போ இல்லாமல் கோவிலுக்கு நேர்ந்துவிட்ட காளையாய் அவர் இருந்தார். ரயில்பெட்டி சார்ந்த நினைவுகள் இப்படி அவருள் பொங்குவது அவருக்கே வியப்பாய் இருந்தது.
தன் வாழ்க்கையிலும் எல்லா அலையுமே ஓய்ந்து தான் விட்டது, என நினைத்துக் கொணடார். முன்னமேயே அவர் ஒண்ணும் பிறவிப் பெருங் கடல் எல்லாம் நீந்தினார் இல்லை. கரை ஓரமாய் ஒரு செம்பில் அள்ளி தலையில் ஊற்றிக் கொண்டது தான். பணி ஓய்வு என்றான பின் அவரும் அப்படியே நீர்க் குட்டையாய்த் தேங்கி விட்டார். தனித்து விடப்பட்ட ரயில்பெட்டி அவரேதான்… என்று தோன்றியது.
காதலுக்கு தாஜ்மகாலாமே? அந்த ரயில்பெட்டி, அது தனிமையின் சின்னம் என நினைத்துக் கொண்டார். தினசரி காலையிலும் மாலையிலும் அதைப் போய்ப் பார்த்து வருகிற மாதிரி அவர் நடைப் பயிற்சி வைத்துக் கொண்டார். அவருக்கு மாத்திரமேயான உலகம் அது. அந்த அனுபவம் பூராவும் அவருக்கே சொந்தம். அதில் யாரும் பங்குபெற முடியாது. அவர்களுக்கு அது புரியவும் புரியாது. அவர் அதைப் புரிய வைக்கவும் முடியாது.
என்னிக்காவது ஒருநாள் அந்த ரயில்பெட்டி தேவைப்பட்டு அதை அந்த இடத்தை விட்டு அகற்றி விட்டால்?... என்னால் அதைத் தாங்கிக்கொள்ள முடியுமா, என்று கூட நினைத்தார். தனது ஓர் அடையாளம் அது. அந்த இடத்தில் அது நிற்பது அவர் மனதில் முழுசாகவே ஒரு சித்திரமாய்ப் பதிந்து போய் இருந்தது. அதில் அந்தப் பெட்டி இல்லாமல் சித்திரம் ஏது? அந்தச் சித்திரத்துக்குத்தான் அர்த்தம் ஏது? ஹா. ஹா. தினசரி அந்த ரயில்பெட்டி அங்கே இருக்கிறதா, என்று பார்க்கக் கூட காலையிலும் மாலையிலும் நான் அங்கே போய் வருகிறேனா, என்றுகூட தன்னையே கேட்டுக் கொண்டார்.
அந்த ரயில்பெட்டியின் கதவு ஒருநாள் உடைத்துத் திறக்கப் பட்டிருந்தது. இருட்டில் அதற்குள்ளே எட்டிப் பார்க்க முடியவில்லை அவரால். யாராவது அதை உள்ளே பயன்படுத்துகிறார்களா தெரியவில்லை. பூட்டப்பட்டே இதுநாள் வரை இருந்தது அது. அதைப் பயன்படுத்த என்று யாரோ முயற்சி செய்திருக்கவும் கூடும். காலையில் நல்ல வெளிச்சத்தில் அதை உள்ளே எட்டிப் பார்த்தார். உள்ளே யாரும் இல்லை.
அந்த ரயில்பெட்டி இப்படி தன்னைப் பயன்படுத்துவதைப் பற்றி என்ன நினைக்கும் தெரியல்லை. ஒருவேளை இப்போது, தான் பயன்பாட்டுக்கு வந்ததையிட்டு அதற்கு மகிழ்ச்சி வந்திருக்கவும் கூடும். இத்தனை நாள் அதை உடைக்காமல் இருந்ததே பெரிய விஷயம் தான். யார் உடைத்திருப்பார்கள். ஒருநாள் அதில் ஒருவன் படுத்துக் கிடப்பதைப் பார்த்தார் அவர். மீசையும் தாடியுமாய், அந்த ஊர் ஆசாமி போல் தெரியவில்லை. எங்கே யிருந்து வந்தான். இங்கே என்ன செய்கிறான்… எங்கோ வெறித்தபடி பீடி குடித்துக்கொண்டு, சொறிந்துகொண்டு படுத்துக் கிடந்தான். அவர் எட்டிப் பார்த்ததை அவன் கவனிக்கவில்லை. அவன் யாரையுமே கவனிப்பதாக சட்டை செய்வதாக இல்லை. தனியே தவம் செய்யும் அந்த ஒற்றை ரயில்பெட்டி. அதைப்போலவே அவன் தன் உலகில் மூழ்கிக் கிடந்தான்.
தனித்து விடப்பட்ட அந்த ரயில்பெட்டி, அவனுக்கு அது ஒருவித அடையாளத்தைத் தந்ததோ என்னவோ… என நினைத்தார். எனக்கு என் வாழ்வின் இந்த தேங்கிய நிலை போலவே, அவன் வாழ்க்கையும் தேங்கிப் போயிருக்கலாம். அதில் ஏமாற்றங்கள். வலிகள், துக்கங்கள், இருக்கலாம். அவனே தனித்து பிரித்துக் கொண்டு வந்திருக்கலாம். விரட்டப் பட்டிருக்கலாம். அவனே ஒதுங்கியும் இருக்கலாம். காயங்கள் சுமக்கிறானா இவன், என்றிருந்தது. யாரோடும் அவன் பேசுவானா என்றே தெரியவில்லை. அவனைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. என் நிலைமை அவனுக்கு மோசம் இல்லை. இந்த ரயில்பெட்டி? அதன் நிலைமையும் இவனுக்கு மோசம் இல்லை தான்.
என் வாழ்க்கையிலும் தான் என்ன அர்த்தம் இருக்கிறது? இனி புதிதாகவோ சுவாரஸ்யமாகவோ என்ன நிகழப் போகிறது? விதி வந்தால் சாக வேண்டிதான். தனித்து நிற்கிறேன் இந்த ரயில்பெட்டி போல. ஒருவேளை எமன் வந்து என்னை அழைத்துப் போகலாம். ஆனால் சாவு அது எப்படி எப்போது வரும். யாருக்குத் தெரியும். அதுவரை இந்த ஏமாற்றமான, புதுசாய் எதுவுமே நிகழாத இந்த வாழ்க்கையின் அலுப்பை என்ன செய்வது… என நினைத்தார். நொடி நொடியாய் இந்த வாழ்க்கையை எப்படித் தள்ளிப் போவது? காலம் என் தோள் மேல் ஏறி அழுத்திக் கொண்டிருக்கிறது. இந்த உலகில் நான் யாருக்குமே தேவைப்படவில்லை என்ற துக்கம் பெரிய விஷயம் தான். இதுநாள் வரை அது அவருக்குத் தோன்றவே இல்லை. தெரியவே இல்லை. காரணம் வேலை இருந்தது. அலுவலகம் போய் வந்தார். அவருக்கான அடையாளம் அது. அது போய்விட்டது. இப்போது அவர் நிர்வாணப் படுத்தப் பட்டுவிட்டார். ஹா. என மணி பார்த்துக் கொண்டார்.
அன்றைக்கு காலையில் செய்தித்தாள் வாசிக்கவே மனம் லயிக்கவில்லை. உலா கிளம்பும் போதே மனசை என்னவோ செய்தது. ஏன் தெரியவில்லை. சிவ சிவா என்று திருநீறை அள்ளிப் பூசினார். மணி பார்த்துக் கொண்டார், என்னவோ நேரப்படி செய்கிறாப் போல. நடையில் சிறு பரபரப்பு கண்டது. மார்க்கெட் தாண்டும் போது சிறிது நெஞ்சைப் பிடித்து நின்றார். இப்படியே திரும்பி விடலாமா என்றுகூட இருந்தது. பரவாயில்லை என நடந்தார். தனித்து விடப்பட்ட ரயில்பெட்டி, அது கிளம்பிப் போயிருந்தால் கூட நல்லது என்று ஏனோ நினைத்தார். தூரத்திலேயே அது கண்ணில் பட்டது. அதுவரை நடக்கவே கால்கள் பலமே இல்லாதது போல் இருந்தன.
ரயில்பெட்டி அருகே வருகையிலேயே அவருக்குத் தெரிந்துவிட்டது. அவன், பெட்டிக்குள் படுத்துக் கிடப்பானே அவன்தான் அது… தூக்கில் தொங்கி யிருந்தான். எப்படி இப்படி ஒரு முடிவு எடுத்தான். இந்த ஏமாற்றமான வாழ்க்கையை, மாற்றமே இல்லாத துயர கரமான வாழ்க்கைக்கு விடுதலை தேடிக் கொண்டானா அவன். தைரியமாய் தன் வாழ்க்கு ஒரு முடிவு எடுத்துக் கொண்டான் அவன். எப்போது தெரியவில்லை. தானறியாமல் வாச் பார்த்தார். அவன் கழுத்தில் கயிறு இறுக்கி நீலம் பாரித்துக் கிடந்தது. இரத்த நதி. இருந்த வலிப் பிரளயத்தில் கால்கள் வழியே மலமும் மூத்திரமாய்ப் பீய்ச்சி யிருந்தான். மேலும் பார்க்க முடியாமல் சட்டெனத் திரும்பினார். உடல் நடுங்க நடுங்க வீடு திரும்பினார். மீன் கடை தாண்டுகையில் வயிற்றைப் புரட்டி வாந்தி வந்தது. கோவிலில் இருந்து மைக்கில் தேவாரம் கேட்டது. நாமார்க்கும் குடியல்லோம். ஓதுவாரின் பௌருஷக் குரலும் ஜால்ராத் தாளமும் கேட்டன. நமனை அஞ்சோம்… என முணுமுணுத்தார்.

வீடு வரை எப்படி வந்து சேர்ந்தார் அவருக்கே தெரியாது.