Friday, June 24, 2016

நேற்றைய அலைகளின் ஈரம்

(தொட்ட அலை தொடாத அலை 
நாவலின் இரண்டாம் பதிப்பின் முன்னீடு)
பிப்ரவரி 25 முதல் 29, 2016 வரை நாங்கள், சுமார் 60 தமிழ் எழுத்தாளர்கள் கோலாகலமாய் கோலாலம்பூரில் இருந்தோம். மலேஷிய அரசின் ‘இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அமலாக்கப் பிரிவு, பிரமதர் துறை’ (SITF) ஏற்பாடு செய்த அளவில், கோலாலம்பூர் மாநகர மன்றமும், ‘நாம்’ அமைப்புமாக எங்கள் அறுபது நூல்களை வெளியிட்டு கௌரவித்தார்கள். கலைஞன் பதிப்பகம் இந்த நூல்களைப் பதிப்பித்தது. கலைஞன் பதிப்பகம் திரு நந்தா அத்தனை நூல்களையும் விரைவாக புத்தக வடிவில் கொணர்ந்தது இன்னொரு வியத்தகு சாதனை. அரசு விருந்தினர் கௌரவம் அதுவும் வேறொரு நாட்டில் யாருக்கு வாய்க்கும்? அதிலும் ஒரு எழுத்தாளனுக்கு, அவன் எழுத்துக்காக வாய்ப்பது என்பது அரிதினும் அரிது. பெரிதினும் பெரிது. ஒரு மாலை நிகழ்வாக மலையக மக்களின் பாரம்பரிய நடனம் உட்பட நாங்கள் சிறப்பாக உபசரிக்கப் பட்டோம். எங்கள் புத்தகங்களை அரசின் துணையமைச்சர் இளைஞர் விளையாட்டுத்துறை, மாண்புமிகு டாக்டர் டத்தோ எம். சரவணன் (படம் 1)  அவர்கள் வெளியிடடார்கள்.
பரஸ்பர அறிமுக உரையாக இணைப் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணன் மணியம் அவர்கள் தமிழிலும் மலாய் மொழியிலும் அடுத்தடுத்துப் பேசியதே கேட்க இனிமையாக இருந்தது!
நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தார்கள். எந்த அளவிலும் எங்களுக்கு வசதிக் குறைவு ஏற்படாமல் கவனித்துக் கொண்ட SITF அமைப்பின் இணைப் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணன் மணியம் (படம் 2) அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்த. டாக்டர் மணிவாசகம், திரு. நடராஜன் குழுவுக்கும் எனது மதிப்பும் மரியாதையும் நன்றியும் வணக்கங்களும்.
இந்த நூலை மேற்சொன்ன மூவருக்கும் சமர்ப்பணம் செய்வதில் பெருமிதம் அடைகிறேன்.
அதேபோல, இந்தப் புத்தகத்தின் அட்டைப்படம், மலேஷியா, மலாக்காவின் பிரசித்தி பெற்ற டச்சுக் கோட்டை வளாகத்தில் ஓவியர் ஆல்வினிடம் நடைபாதைக் கடையில் விலைக்கு வாங்கியது.
2
தொட்ட அலை தொடாத அலை, என்கிற இந்த நாவலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்கத்தில் பரிசு கிடைத்தது. கிடைக்காமல் போனால் ஆச்சர்யப் பட்டிருப்பேன். மரணத்தை விஸ்தாரமாய்ப் பேசுகிறது நாவல்.
இந்த நாவலில் அதன் கடைசி எல்லை வரை என்னால் எட்டித் தொட்டுப் பார்க்க முடியவில்லை, என்னால் தாள முடியாத அளவில் நான் கனம்சுமந்தேன், என்பதை அப்போதே, நாவல் எழுதி முடித்தபோதே உணர நேரிட்டது. ஆனால் அதில் எனக்கு வருத்தம் இல்லை. சாத்தியப்பட்டதைச் செயவோம், என எழுதி முடித்தேன். நாவலின் இறுதிப் பகுதிகள் என் மனதில் மிகப் பதட்டத்தை, புழுதிப்புயலை உருவாக்கி உள்ளே கொந்தளிக்க வைத்து விட்டன. நாவலை முடித்த பின்னும் ஒரு வார அளவில் நான் இயல்பு நிலைக்கு வரவே முடியாது அவதியுற்றேன். என்னுடைய உடல் நிலையே பாதிக்கப் பட்டதையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
முதல் பதிப்பின் பதிப்பாளன் உதயகண்ணன், அவனும் இதையே சொன்னான்.
இதன் விஸ்தரிப்பாக இன்னொரு எடுப்பு எடுக்கலாம்… அப்போது, இந்த நாவலின் பாதி வடிவத்தில் எனக்கு இப்படியாய் ஒரு யோசனை இருந்தது. நாவல் எழுதி முடித்த போது, இதை இறக்கி வைத்ததே பெரும் பாடாக இருந்ததை நினைத்துப் பார்க்கிறேன்.
என்றாலும் இதன் அடுத்த கட்டம் என ஒன்றை என் வாழ்க்கையிலேயே நான் சந்திக்க, உணர நேரிட்டது.
அண்ணா கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி. கான்சரில் அகாலமாய் இறந்து போனான் அண்ணா. அவனது கடைசிக் காலங்கள் துயரமானவை. நான் அவனுடன் கழித்த அவனது கடைசிக் காலங்கள். வாழ்க்கை என்னை உழுது போட்டது.
‘கீமோதெரபி’ என முதலில் பதினைந்து நாளுக்கு ஒரு முறை, பிறகு வாரம் ஒரு முறை, வாரம் இருமுறை… என அண்ணா ஆஸ்பத்தரி படிகளைத் திரும்பத் திரும்ப மிதித்துக் கொண்டிருந்தான். பிறகு நிலைமை இன்னும் மோசமானது. இனி மருந்துகள் அவனுக்கு உதவா, என மருத்துவர்கள் கைவிட்டார்கள். அவனை மேலும் ஆஸ்பத்திரியில் வைத்துக்கொள்ளக் கூட அவர்கள் சம்மதப் படவில்லை. ஆஸ்பத்திரிக்கு வந்து இற்ந்தோர் எண்ணிக்கையில் இப்படியாய் ஒன்று கூட அவர்கள் விரும்பவில்லை.
வீட்டில் வைத்து அண்ணாவைப் பார்த்துக்கொள்ள வசதிப்படவும் இல்லை. குறிப்பாக அவனது கடைசி நேரங்கள் அவை.
சென்னை மணலி மாத்தூரில் ‘ஜீவோதயா ஹோஸ்பைஸ்’ இருக்கிறது. மதர் தெரேசா வழிவந்த அருமையான செவிலியர் கூடம். புற்று நோய் மாதிரி மீண்டு வர முடியாத நோய்களில் மருத்துவர்கள் கைவிட்ட நோயாளிகளை, அவர்களின் கடைசிநேரம் அன்போடு பராமரித்து அந்த உயிருக்கு மரியாதையுடன் விடை கொடுக்கிற அவர்களின் தொண்டு வார்த்தைக்கு அப்பாற்பட்டு வணக்கத்துக்குரியது.
அண்ணாவை கடைசிக் காலங்களில் அவர்கள் சிறப்பாக வைத்துக் கொண்டார்கள். அந்த மதர், புன்னகை மாறாமல் அந்தச் செவிலியர் செய்த சேவை… என் வாழ்வின் முக்கிய காலகட்டம் அல்லவா அது?
ஆஸ்பத்திரியில் அண்ணாவின் வாழ்க்கை இன்னும் இரண்டு மூன்று நாட்கள் தான், என கெடு வைத்தார்கள் அண்ணாவின் மரணத்துக்கு. நாங்கள், குறிப்பாக நான், ஆம்புலன்சில் அண்ணாவை ‘ஜீவோதயா’ அழைத்துப் போகிறேன். ’ஜீவோதயா’வில் அந்தத் தாதி நாடி பார்த்தாள். பார்த்த ஜோரில், “நாடி அடங்க அதிகபட்சம் இன்னும் இரண்டரை நாட்கள்’ என அவள் சொன்னாள்.
அண்ணா இரண்டு நாளுக்குள்ளாகவே இறந்து போனான்.
அந்த செவிலியர் நோயாளியின் கடைசி கட்டத்தை உணர்ந்ததும் மருந்துகளைத் தவிர்க்கிறார்கள். நோயாளி இஷ்டப்பட்டால் அவர்களுக்கு என்ன தேவை என்றாலும் சிரமேற்கொண்டு செய்து தருகிறார்கள். மருத்துவ வசதி உட்பட. என்றாலும், கடைசி நிமிடங்களின் வலி தெரியாமல் அவர்கள், ஒவ்வொரு முறை நோயாளி வலியின் பிடியில் அரற்றும் போதும், ‘பெய்ன் கில்லர்கள்’ ஊசி போட்டு நோயாளியை உறங்கப் பண்ணி விடுகிறார்கள்.
மரணத்தின் அந்த முகூர்த்தக் கணத்தில் வலியின் மூர்க்கம் தெரியாமல் உயிர் பிரிய அவர்கள் எத்தனை உறுதுணையாய் இருக்கிறார்கள்.
என் மனைவியிடம் பேசும் போதே எனக்கு அழுகை வந்தது.. தொட்ட அலை, தொடாத அலை, நாவலின் இரணடாம் பகுதி இது இவளே, என்றேன் நான் என் மனைவியிடம். மரணத்தைத் தானே தனியே ஒருகை பார்க்க ஆவேசமுறுகிறார் சிவக்கொழுந்து. அது நாவலின் கதை. இது கண்முன்னே நாம் பார்க்கிற வாழ்க்கை.
அந்தச் செவிலித்தாய், மதர் சுபீரியர், வலியில் உயிர் போராடுந்தோறும், அவன் தாயாக அவன் காதில் பேசுகிறாள்… அன்றைக்கு பெற்ற தாய், நீ பிறக்கும் போது, இதுதான் ஜனனம், என உனக்குக் காட்டித் தந்தாள். இவள், செவிலித்தாய், இதுதான் மரணம், என உன் கையைப் பிடித்து ஆதுரமாய் அறிவிக்கிறாள்

ஜீவோதயா இருக்கும் திசை நோக்கித் தொழுகிறேன்.
இதை அடுத்த நாவலாக என்னால் எழுத முடியுமா? அதற்கான தெம்பு, திண்ணக்கம் என்னிடம் உள்ளதா?

இவள், என் மனைவி என் கண்ணைத் துடைத்து விட்டாள். அது ஞாபகம் இருக்கிறது.

Friday, June 10, 2016

---
சொ ல் லி ன்   செ ல் வ ன்

      அன்டன் செகாவ்/ருஷ்யா
      தமிழில் - எஸ். ங்கரநாராயணன்

கிரில் இவனோவிச் பாபிலோனவ் என்கிற கல்லு¡ரி உதவிப் பேராசிரியர் நல்லதோர் காலையில் நல்லடக்கம் செய்யப் பட்டார். நமது தேசத்தில் பரவலாக அறியப் பட்டபடி இரு துன்பங்களில் - மோசமான மனைவி மற்றும் போதைப் பழக்கம் - அவர் இறந்து போனார். அவரது இறுதி ஊர்வலம் தேவாலயத்தில் இருந்து கல்லறை நோக்கிக் கிளம்பவும், அவருடன் பணியாற்றும் நண்பரான போப்லாவ்ஸ்கி நண்பன் ஒருவனைத் தேடி வாடகைக் கார் ஒன்றில் தாவியேறிப் போனார். கிரிகோரி பெட்ரோவிச் ஜபோய்க்கின் என்கிற அந்த நண்பன் இளைஞனேயானாலும் புகழ் மிக்கவன். மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது - என்னுடைய வாசகர்கள் அவனை அறிவார்கள் - ஜபோய்க்கின் முன்தாயரிப்பே இல்லாமல் கல்யாணங்களிலும், பெருவிழாமேடைகளிலும், இழவு நிகழ்ச்சிகளிலும் உரையாற்ற வல்லவன். து¡க்கமா, காலி வயிறா, மொடாக்குடியா, அட, கடும் காய்ச்சலா... எந்த நிலையிலும் நினைச்சால் அவனால் பேச முடியும். சீராகவும் மென்மையாகவும் வார்த்தைகள், ஏராளமான வார்த்தைகள் அவனிடம் இருந்து வழியும், குழாயில் இருந்து தண்ணீர் போல. அவனது பேச்சகராதியில் நெகிழ்ச்சிகரமாய் எராளமான, உணவு விடுதி ஈக்களைக் காட்டிலும் அதிகப்படியான, வார்த்தைகள் இருந்தன. உணர்வுபூர்வமாக நீண்ட உரையாகவே எப்போதும் பேசினான். அதனால் என்ன ஆகிப் போகுமென்றால், சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக சில வியாபாரிகளின் கல்யாணங்களில், அவன் பேச்சை நிறுத்த போலிசை வரவழைக்க வேண்டியதாகிவிடும்.
      'உம்மைத் தேடித்தான் வந்தேன் பெரிய மனுஷா...' போப்லாவ்ஸ்கி அவனது வீட்டில் நுழைந்தார். 'கோட்டும் தொப்பியும் போட்டுக்கோ. உடனே கிளம்பு. நம்மாள் ஒருத்தர் இறந்துட்டார். அந்தாளை மேலுலகத்துக்கு அனுப்பிட்டிருக்கோம். அவரை வழியனுப்ப நீயும் உன்னாலான உபசாரம் செய்யணும்... கூட்டத்தில் எங்க நம்பிக்கை நட்சத்திரமே நீதான். ஆள் ஏப்ப சாப்பையா இருந்தா உன்னைக் கூப்பிடற அளவுக்குப் பெரிய விஷயமா இராது. ஆனா பாரு... நம்ம செயலாளர் சாமி. ஒருவகையில் எங்க அலுவலகத்துத் து¡ண் மாதிரி. அத்தாம் பெரியாளை ஒரு நாலுவார்த்தை இல்லாம அடக்கம் செய்தா அசிங்கம் இல்லியா?'
      'ஓ செயலாளரா...' என வாயைப் பிளந்தான் ஜபோய்க்கின். 'விடாக் குடியன்... அவரா?'
      'ஆமாம். நொறுக்குத் தீனி, மதியச் சாப்பாடு எல்லாம் உனக்குக் கிடைக்கும்.... வாடகைக்கார் செலவும் பாத்துக்குவோம். கிளம்பு அருமைப் பையா. வழக்கமான கல்லறை உரைபோல வந்து அடிச்சி நொறுக்கு.... ஊரே மூக்குல வெரல் வைக்கப் போறாங்க.'
      ஜபோய்க்கின் உடனே ஒத்துக் கொண்டான். தலையைச் சரி செய்தான். முகத்தில் சிறிது பவுடர் பூச்சு. போப்லாவ்ஸ்கியுடன் தெருவில் இறங்கி நடந்தான்.
      'உங்க செயலாளர்... எனக்குத் தெரியும் அவரை...' காரில் ஏறியபடி அவன் சொன்னான். 'உள்ளொண்ணு வெச்சி வெளியே வேற மாதிரிப் பேசுவான். ரெளடிப்பயல். மிருகஜாதி... சொர்க்கவாசல் திறக்கட்டும் அவனுக்கு - அவனை மாதிரியாளுங்களை சாதாரணமா பாக்கவே முடியாது.'
      'பாருப்பா, செத்தவர்களைத் திட்டுறது சரியில்லை...'
      'ஆமாமா. செத்தவங்களை முடிஞ்சா பாராட்டு, இல்லியா விட்ரு...ன்னு வசனம். ஆனாக்கூட.... அவன் அயோக்கியனய்யா.'
      இறுதி ஊர்வலத்தை எட்டிக் கடந்து அத்தோடு இணைந்து கொண்டார்கள். சவப்பெட்டி மெதுவாக வந்து கொண்டிருந்தது. பெட்டி கல்லறைக்கு வந்து சேர்வதற்குள் மூன்று முறை அவர்கள் - இறந்தவனின் ஆரோக்கியத்துக்காக என்றபடி - 'தாகசாந்தி' செய்து கொண்டார்கள்.
      ஊர்வலம் கல்லறை அருகே வந்தது. மாமியாரும், சம்சாரமும், மைத்துனி ஒருத்தியும் சம்பிரதாயப்படி கதறி அழுதார்கள். சவப்பெட்டி குழிக்குள் இறக்கப்பட்டபோது சம்சாரம், 'நானும் போயிர்றேன்...' என கீச்சிட்டாள். ஆனால் போகவில்லை. ஓய்வூதியப் பணம் நினைவு வந்திருக்கக் கூடும். ஜபோய்க்கின் எல்லா சமாச்சாரமும் அடங்கட்டும் எனக் காத்திருந்துவிட்டு, முன்னால் வந்து நின்று, வந்திருந்த எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஆரம்பித்தான்.
      'என் கண்களையே, காதுகளையே நம்புவதா வேணாமா? இந்தக் கல்லறை, இந்த அழுதுசிவந்த முகங்கள், இந்த முனகல்கள், இந்தத் துயரங்கள்... எல்லாம் கொடூரமான கனவுதானே? ஆ - இது கனவு அல்ல. நம் கண்கள் நம்மை ஏமாற்றவும் இல்லை... சற்று முன்வரைகூட நாம் பார்த்தவர், மகா துணிச்சல்கார மனிதர், இளமைப் புத்துயிர்ப்பும் து¡ய்மையுமானவர், ஒரு தேனிபோல அபார சுறுசுறுப்புடன் நமது சமுதாயம் என்னும் தேன்கூட்டுக்காகப் பாடுபட்டவர்... மேலும்... ஆ அவர் இப்போது மண்ணோடு து¡சியாகிப் போய்விட்டார். மாயக் கானல்நீராகிப் போனார். மீளமுடியாத மரணத்தின் கொடூரக் கரம் அவர் மேல் விழுந்து விட்டது. தொண்டுகிழ வயோதிகத்திலும் அவர் உற்சாகமும் பலமும் கொண்டிருந்தார்... சாவு பற்றி நினைக்கவே இல்லை. ஈடு செய்யவே முடியாத இழப்பு இது! அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப வல்லார் யார்? அரசுப் பணியாளர்களில் நல்லவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் புரோகோஃபி ஒசிபிச் தனித்தன்மைக்காரர். சுத்த சுயம்பு. தன் நேர்மையான பணியில் அவர் அடிமனதின் ஆழத்தில் இருந்து செயல்பட்டார். இரவு வெகுநேரம்வரை கூட அவர் அயராமல் பணிபுரிந்தார். ஆனாலும் ஆரோக்கியம் கெடாமல் இருந்தார். லஞ்ச லாவண்யங்களை அவர் சட்டை செய்ததும் இல்லை. ஆர்வப் பட்டதும் இல்லை. லஞ்சம் வாங்க அவரைத் து¡ண்டியவர்களை அவர் எத்தனை வெறுத்தார். சிறு சிறு லெளகிகக் கையூட்டுகளால் தமது கடமைக்கு துரோகம் செய்ய அவரை இழுத்த நபர்களை அவர் ஒதுக்கினார். ஆமாமாம், நம்ம கண்ணு முன்னாடியே புரோகோஃபி ஒசிபிச் தமது சிறு மாத ஊதியத்தை, தம்மிலும் ஏழைபாழையான தம் அலுவலகப் பணியாளர்களோடு பகிர்ந்து கொண்டார். அவருடைய உதவி உபகாரத்தில் வாழ்ந்த அனாதைகளின், விதவைகளின் ஆழ்ந்த துக்கக் குரல்களை இப்போது நீங்களே கேட்டீர்கள். தமது அலுவலகக் கடமையிலும் வேலையின் சிரத்தை மிகுதியிலும் அவர் தன் வாழ்வின் இன்பங்களையே ரெண்டாம் பட்சமாக்கினார். இல்வாழ்க்கையையே அவர் துறந்தார். உங்க எல்லாருக்குமே தெரியும்- தன் கடைசி நாள்வரை அவர் பிரம்மச்சாரி. ஆ தொழிற்சங்கத் தோழராக அவரை நிரப்ப யார் இருக்கிறார்கள்? சவரம் செய்த அன்பான அவரது முகம்... அதன் மெல்லிய முறுவல்... இப்போதும் மனசால் நான் பார்க்க முடிகிறது. மிருதுவான சிநேகபூர்வமான அவரது குரல்... என்னால் கேட்க முடிகிறது. உங்க ஆத்மா சாந்தியடைக, புரோகோஃபி ஒசிபிச்... நேர்மையாளரே... புனிதமானவரே... உழைப்பாளரே...'
      ஜபோய்க்கின் தொடர்ந்து பேசினான். ஆனால் கூட்டத்தில் ஜனங்கள் தங்களுக்குள் குசுகுசுக்க ஆரம்பித்து விட்டார்கள். எல்லாரையும் அவனது உரை திருப்திப் படுத்தவே செய்தது.  சிலர் கொஞ்சம்போல அழக்கூட செய்தார்கள். ஆனால் அந்த உரை பலவிதங்களில் விசித்திரமாய் இருந்தது அவர்களுக்கு. முதல் விஷயம், இறந்து போனவரை பேச்சாளர் ஏன் புரோகோஃபி ஒசிபிச் என்று குறிப்பிட வேண்டும்? மரித்தவர் கிரில் இவனோவிச் அல்லவா? ரெண்டாவது, தொட்டுத் தாலி கட்டிய சம்சாரத்தோடு அவர் காலம்பூராவும் காள்பூளென்று கத்திக் கொண்டிருந்தார்... அவரை பிரம்மச்சாரி என்று எப்படிச் சொல்வ முடியும்? மூணாவது, அவருக்கு செமத்தியான சிவப்பில் தாடி உண்டு. அதை அவர் எடுத்ததாக சரித்திரமே கிடையாது. ஆக ஒருத்தருக்கும் பேச்சாளர் சொன்ன, சவரம் எடுத்த முகம்... என்ற அடையாளம் விளங்கவில்லை. எல்லாரும் மண்டையைப் பிய்ச்சிக் கிட்டார்கள். ஒருத்தரை ஒருத்தர் பாத்துக் கிட்டு, தோளைக் குலுக்கிக் கொண்டார்கள்.
      'புரோகோஃபி ஒசிபிச்...' பேச்சாளன் தொடர்ந்தான். கல்லறையைப் பார்த்துக்கொண்டே அழுத்தமான பாதிப்புடன் பேசினான். 'துப்புரவான, எதையும் வெளிக்காட்டாத முகம். நீங்கள் பிடிவாதமான கண்டிப்புடன் செயல்பட்டீர்கள். ஆனால் எங்க எல்லாருக்குமே தெரியும்... வெளிப் பார்வைக்கு எப்பிடி இருந்தாலும், உங்களுக்குள்ள இருந்தது நேர்மை தவறாத, சிநேகபூர்வமான அந்த இதயம்.'
      கொஞ்ச நேரத்தில் அந்தப் பேச்சில் மாத்திரம் அல்ல, பேச்சாளனிடத்திலேயே ஏதோ கோளாறு என ஜனங்கள் உணர்ந்தார்கள். ஓர் இடத்தில் அவன் குறிப்பாய்ப் பார்த்... லேசா அதிர்ந்து... அவனும் தோளைக் குலுக்கிக் கொண்டான். அந்தமேனிக்குப் பேச்சையே நிறுத்தி விட்டான். திக்குமுக்கிக்கிட்டு திரும்பி போப்லோவ்ஸ்கியைப் பார்த்தான்.
      'அட அந்தாளு இருக்காருய்யா...' என்றான் திகிலடிச்சிப்போய்.
      'யாரு இருக்காருன்றே?'
      'ஏன்? புரோகோஃபி ஒசிபிச்... அந்தா நிக்கிறாரு. அந்த கல்வெட்டு பக்கத்தில்...'
      'அவரு சாகவே இல்ல. கிரில் இவானோவிச்தான் செத்திட்டாரு...'
      'கிரில் இவானோவிச்தான் எங்க செயலாளர். நீ போட்டுக் கலக்கிட்டியே எல்லாத்தையும் பேமானி. புரோகோஃபி ஒசிபிச்சும் முன்ன எங்க செயலாளரா இருந்தவரு. அது நிஜம்தான். ஆனா ரெண்டு வருஷம் முன்ன அவர் தலைமை குமாஸ்தாவா செகண்ட் டிவிஷனுக்குப் போயிட்டாரு.'
      'ஐய சாத்தானே நான் இப்ப என்ன பேச?'
      'நீ ஏன் நிறுத்தறே? நீ பேசு. விவகாரம் அசிங்கமாயிரும்ல...'
      ஜபோய்க்கின் கல்லறைப் பக்கம் திரும்பிக் கொண்டான். தொடர்ந்து அவன் விட்ட இடத்தில் இருந்து பேச்சை எடுத்தான். புரோகோஃபி ஒசிபிச் என்ற, மழுங்க சவரம் எடுத்த முகத்தார், அந்தப் பழைய குமாஸ்தா வாஸ்தவத்தில் அந்த இடத்தில் ஒரு நினைவுக் கல்வெட்டின் அருகில் நின்றிருந்தார். பேச்சாளனைப் பார்த்து அவர் ஆத்திரத்துடன் உருமினார்.
      அவரது சக ஊழியர்கள் 'வசம்மா மாட்டிக்கினியாக்கும்' என்கிற தினுசில் அவரைப் பார்த்துச் சிரித்தார்கள். எல்லாரும் ஜபோய்க்கின்னுடன் சடங்குகள் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். 'ஒராள உயிரோட புதைச்சாச்சி!'
      'கடுப்படிச்சிட்டியே தம்பி' என்று முணுமுணுத்தார் புரோகோஃபி ஒசிபிச். 'செத்தவனைப் பத்தி நீ அப்பிடிச் சொல்றது சரிதான். ஆனா உசிரோட இருக்கிறவன் அப்பிடி இருக்கறதாச் சொன்னா குசும்புக்கார கிண்டல்தான் அது. என்னத்தை நீ சொல்லிட்டிருந்தே? லஞ்சம் வாங்க மாட்டார். அவருகிட்ட லஞ்சத்தை நீட்ட முடியாது. லஞ்சம் வாங்க இஷ்டப்படாதவர்... எவனையாவது போட்டுத் தாளிக்கணும்னா, அப்பிடிச் சொல்றதுதான். யாராவது உன்ட்ட என் முகத்தை விவரிக்கச் சொன்னாங்களா? துப்புரவான, உணர்ச்சி தெறிக்காத... அட இருந்துட்டுப் போட்டும்யா. நான் பொறுமைசாலின்னு எல்லார் முன்னாடியும் சொல்லி அவமானப் படுத்திட்டியே...'

---

THE ORATOR by Anton Chekhov

Monday, June 6, 2016

ப ரி சு ச் சீ ட் டு
      அன்டன் செகாவ் - ருஷ்யா
      தமிழில்/எஸ். சங்கரநாராயணன்

 **
இவான் டிமிட்ரிச் கிடைக்கிற சம்பளமே யதேஷ்டம் என வாழ்கிற நடுத்தரன். இரவு உணவை முடித்துக் கொண்டு செய்தித்தாளை வாசிக்க சோபாவில் உட்கார்ந்தான்.

மேஜையை சுத்தம் செய்துகொண்டே பெண்டாட்டி 'இன்னிக்குப் பேப்பரைப் பார்க்கவே விட்டுட்டது' என்றாள். 'குலுக்கல் முடிவு வந்திருக்கா பாருங்க.'

'ஆமா, இருக்கு,' என்றான் டிமிட்ரிச். 'ஆனா உன் சீட்டு காலாவதியாவல்லியா?'

'இல்லல்ல, வட்டியெடுக்க நான் செவ்வாயன்னிக்குதானே போயிருந்தேன்...'

'நம்பர் என்ன?'

'வரிசை 9499 - எண் 26'

'சரி... பாத்திர்லாம். 9499 அப்புறம் 26...'

பரிசுக் குலுக்கல் அதிர்ஷ்டத்தில் அவனுக்கு நம்பிக்கை கிடையாது. பொதுவாக குலுக்கல் முடிவுகளை அவன் சட்டை செய்வதும் கிடையாது. ஆனாலும், இப்போது வேறு செய்ய எதுவும் இல்லாததாலும், கையில் பேப்பர் இருக்கிறதாலும், பரிசு பெற்ற எண் வரிசையில் விரலைக் கீழ்நோக்கி ஓட்டினான். அவனது அசிரத்தையைக் கிண்டலடிக்கிற மாதிரி, மேலிருந்து இரண்டாவது வரியிலேயே அவன் கண்கள் சிக்கிக் கொண்டன. 9499! அசந்து விட்டான் அவன். தன் கண்ணையே நம்ப இயலாமல் கை நடுங்கி மடியில் விழுந்தது செய்தித்தாள். மேற்கொண்டு எண்ணைப் பார்க்க முடியவில்லை. உள்ளே சிலீரென யாரோ தண்ணியைக் கொட்டினாப் போல ஒரு குளிர். வயிற்றில் கிச்சு கிச்சு. இதமான அபாரமான தளும்பல்.

''அடி மாஷா 9499 இருக்கு'' மெல்லச் சொன்னான்.

வெலவெலத்துப்போன திகைப்பான அந்த முகத்தை அவன் பெண்டாட்டி பார்த்தாள். அவர் முகம் பொய் பேசினாப்போல இல்லை.

''9499-தா?'' மேசை விரிப்பைத் தவற விட்டபடி அவள் முகம் வெளிறக் கேட்டாள்.

''ஆமாண்டி ஆமா. நிசம்மா, இருக்குடி இருக்கு!''

''சரி, நம்ம நம்பர்... அது இருக்கா பாருங்க...''

''ஆமாமா. நம்ம சீட்டின் நம்பர், அதுவும்... ஆனால், இரு. இல்லடி... பார்க்கறேன் பார்க்கறேன். ஆனாக்கூட நம்ம வரிசை - அது இருக்கு. அத்தோட... புரியுதா?...''

பரந்த, அர்த்தம் இல்லாத அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி மனைவியைப் பார்த்தான் டிமிட்ரிச். ஜோரான விளையாட்டு சாமானைப் பார்த்ததும் குழந்தை அப்படித்தான் சிரிக்கும். பெண்டாட்டியும் புன்னகை சிந்தினாள். அவள் வாங்கிய வரிசையில் பரிசு வந்திருக்கிறது, என்றாலும் குறிப்பிட்ட அவள் எண்ணுக்குப் பரிசு பற்றித் தேட அவசரப்படவில்லை அவன். ஒராளைக் கிண்டலும் கவலையுமான காத்திருப்புக்கு உட்படுத்தி அதிர்ஷ்டம் சார்ந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தினா, என்ன சுகம். என்ன சுவாரஸ்யம்...

ஒரு நீண்ட மெளனம். ''நம்ம வரிசைக்குப் பரிசு'' என்றான் டிமிட்ரிச். ''ஆக நாம பரிசு அடிக்க வாய்ப்பு இருக்கு. ஒரு யூகம்தான்... ஆனா அந்த வாய்ப்பு... அது இருக்கத்தான் இருக்கு!''

''நல்லதுய்யா, மேல பாரும்...''

''பொறுமை1 நாம ஏமாற இன்னும் நிறைய நேரம் இருக்கு. மேலயிருந்து ரெண்டாவது வரி - ஆக பரிசு 75000. அது வெறும் துட்டு இல்லடி. சக்தி! மூலாதாரம்! இதோ பட்டியலைப் பாத்திர்றேன். ஆ இதோ 26! - அதானா? நாம நெஜமா ஜெயிச்சா எப்பிடி இருக்கும்?''

புருஷனும் பெண்டாட்டியும் ஒருத்தரை ஒருத்தர் மெளனமாய்ப் பார்த்தபடி புன்னகை செய்து கொண்டார்கள். ஜெயிக்கிற அந்த சமாச்சாரமே அவர்களைத் திக்குமுக்காட்டியது. அந்த 75000 துட்டு அவர்களுக்கு எதற்கு? அதை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் வாங்க, எங்கேயெல்லாம் போய்வர... என்றெல்லாம் அவர்கள் பேசவில்லை. கனவு கூடக் காணவில்லை. வெறும் 9499 என்ற எண், மற்றும் 75000 என்ற எண் அவற்றை மாத்திரமே மனதில் நினைத்துப் பார்த்தார்கள். என்னவோ, அந்த எண்கள் கொண்டு வரப் போகிற சந்தோஷங்களை, அதன் விரிவான சாத்தியங்களை அவர்கள் நினைக்கவே இல்லை.

டிமிட்ரிச் செய்தித்தாளைக் கையில் பிடித்தபடி அறையில் மூலைமுதல் மூலைவரை நடை பயின்றான். மெல்ல நிதானப்பட ஆரம்பித்தபோதுதான் மெல்ல அவனில் கனவுகாண ஆரம்பித்தான்.

''பரிசு மட்டும் விழுந்திட்டிருந்தா...'' என்றான். ''வாழ்க்கையே புதுசா ஆயிரும். எல்லாமே பூரா மாறிப்போகும். பரிசுச் சீட்டு உன்னிது. என்னிதா இருந்தா, மொதல் காரியமா - ஒரு 25000 எடுத்து பண்ணைநிலம் நீச்சுன்னு போடணும். உடனடிச் செலவுன்னு ஒரு பத்தாயிரம். புது கட்டில், பீரோ, மேஜை... அப்புறம் உல்லாசப் பயணம்... கடன் கிடன் அடைக்க, இந்த மாதிரி. மிச்ச 40000 ஒரு வங்கில போட்டுட்டா வட்டி கிடைக்கும்...''

''ஆமாம், ஒரு பண்ணை - அது நல்ல விஷயம்...'' உட்கார்ந்தவண்ணம் மடியில் கை வைத்தபடி அவள் பேசினாள்.

''துலா அல்லது ஓர்யோல் மாகாணப் பக்கம் எங்கியாவது... இப்ப சத்திக்கு நமக்கு கோடைவாசஸ்தலம்லாம் தேவையிராது. நம்ம தங்காட்டியும், வாடகை கீடகைன்னு வருமானம் வருமில்ல?''

வீட்டில் மாட்டியிருக்கும் அழகழகான புகைப்படங்களை மனசில் பார்த்தான் அவன். முதல் படத்தை விடவும் அடுத்தது சூப்பர் என்கிற தினுசில். எல்லாத்திலும் அவன் அத்தனை அம்சமா ஆரோக்கியமா கொழுகொழுன்னு இருந்தான். அப்பிடி நினைக்கவே நல்ல வெதுவெதுப்பு. அட உடம்பே சூடாயிட்டது.

அந்தக் கோடை இரவில் அப்போதுதான் சில்லிட்டுப் போன சூப் குடித்து முடித்திருந்தான். மனசினால் அவன் இருந்த இடமே வேறு - நதிக்கரையொன்றின் கதகதப்பான மணலில் மல்லாக்கக் கிடக்கிறான். அல்லது தோட்டத்து எலுமிச்சை மரத்தடி.. இப்போதும் என்ன வெக்கை! பையனும் பெண்ணும் அருகே மண்ணை அளைந்தபடியோ, அல்லது பச்சைப்புல்தரையின் சிறு பூச்சிகளைப் பிடித்தபடியோ. இனிமையான அரைத்து¡க்கம். ஒரு யோசனையுங் கிடையாது. இன்னிக்கு அலுவலகம் போக வேணாம் என்கிறாப்போல அவிழ்த்துவிட்ட நிலை. இன்னிக்கு மாத்திரங் கூட இல்லை. நாளை - நாளைமறுநாள் கூட போக வேண்டியதில்லை. சும்மா கெடந்துருவள அலுத்துப் போச்சா, வைக்கப்படப்பு பக்கம் போகிறான். காடுகளில் குடைக்காளான் தேடிப் போகிறான். வலைவீசி சம்சாரிகள் மீன் பிடித்துக் கொண்டிருக்கறதை வேடிக்கை பார்க்கிறான். சூரியன் அடையுதா, துண்டும் சோப்பும் எடுத்துக்கறான்... குளியல் மறைவுக்குள் புகுந்து கொள்கிறான். நிதானமா உடைகளைக் கழற்றிக் கொள்கிறான். மெதுவா நெஞ்சை விரல்களால் நீவிக்கொண்டே தண்ணீரில் இறங்குகிறான். நுரைத்து வழியும் சோப்பு. சிறு மீன்கள் பதறி விலகினாப் போல... நீர்க்கொடிகள் லேசாய் ஆடுகிறாப் போல. குளியலைத் தொடர்ந்து, தேநீர். கூட கடித்துக் கொள்ள பால் மற்றும் கிரீம் பிஸ்கெட்டுகள். அதற்கப்பால் ஒரு உலாவல், அல்லது பக்கத்து¡ட்டு மனுஷாளோடு அரட்டை.

''ஆமாமா, பண்ணை வாங்கறது நல்ல விஷயம்'' என்றாள் பெண்டாட்டி. பார்க்கவே அவளும் கனவுலோகத்தில் மிதந்து கொண்டிருப்பது தெரிந்தது.

இவான் டிமிட்ரிச் இலையுதிர் காலம் மற்றும் அதன் மழை பற்றி எண்ணமிட்டான். குளிரான அந்த மாலைப்பொழுதுகள். அதைத் தொடரும் இந்தப் பக்கத்து வேனில். இக்காலங்களில் அவன் தனது தோட்டத்தில் மற்றும் நதிப்பக்கமாக அதிகம் நடந்து உடற்பயிற்சி கொள்ள வேண்டியதிருக்கும். அப்போதுதான் உடம்பு முழுசும் தகிப்படங்கும். அதையடுத்து பெரிய டம்ளரில் ஓட்கா மது. சாப்பிட உப்புபோட்ட காளான். பொடிசு பொடிசா நறுக்கிய வெள்ளிரிப் பிஞ்சு... திரும்ப இன்னொரு டம்ளர்... சமையல் அறைப் பக்கத்துச் சிறு தோட்டம். பிள்ளைகள் அங்கிருந்து கேரெட்டோ முள்ளங்கியோ மண்வாசனையுடன் பிடுங்கி வருகிறார்கள். இவன் நல்லாக் கால்நீட்டி சோபாவில் படுத்தபடி, படம்லாம் போட்ட பத்திரிகைகளைப் புரட்டுதல். அதாலேயே முகத்தை மூடிக்கொண்டு இடுப்பு இறுக்கங்களைத் தளர்த்திக்கிட்டு ஹாயான குட்டித் து¡க்கம்.

வேனில் ஓய, வருகிறது மேக மூட்டமான பருவம். ராப்பகலான விடாக்கண்டன் மழை. மொட்டை மரங்கள் திணறும். காற்று சிலீரென வீசும். நாயும் குதிரையும் கோழிகளும் எல்லாமே நனைஞ்சு நொந்து நு¡லய் அசமந்தமாய்க் கெடக்கும். நாள்க் கணக்கா வெளிய வர முடியாது. உலாப் போக இடங் கிடையாது. சாத்திக் கிடக்கிற ஜன்னலைப் பார்த்துக்கிட்டு வீட்டுக்குள்ளியே நடை. மகா இம்சை!

சுதாரித்துக் கொண்டு இவான் டிமிட்ரிச் மனைவியைப் பார்த்தான்.

''நான் வெளிநாடு கூடப் போலாம் மாஷா?'' என்றான் அவன்.

இலையுதிர்கால முடிவில் வெளிநாட்டுப் பயணம் - பிரான்சின் தென்பகுதிகள்... இத்தாலி... இந்தியா!... என்றெல்லாம் யோசனை நீண்டது.

''நானும் நிச்சயம் வெளிநாடெல்லாம் போணும்'' என்றாள் பெண்டாட்டி. ''ஆனா பரிசு விழுந்த எண்ணைப் பாருங்க...''

''பொறு! பொறு!''

திரும்ப அறைக்குள் நடக்க ஆரம்பித்தபடி நினைவை நீளவிட்டான். இவளா... வெளிநாடு போயி என்ன பண்ணுவா இவ? தனியாத்தான் நான் போகணும். அல்லது அந்தந்தக் கணங்களுக்காக வாழ்கிற ஸ்திரீகளுடன் போகலாம். சில பெண்கள் பிரயாணம் பூராவும் தொணதொணத்துக்கிட்டே வரும்.  வாய் ஓயாமல் வேற பேச்சே பேசாமல் தன் பிள்ளைங்களைப் பத்தியே சொல்லிச் சொல்லி அலுத்துக்கும். எதுக்கெடுத்தாலும் விதி விதின்னுக்கிட்டே வரும். இவான் டிமிட்ரிச் தன் பெண்டாட்டி ரயிலில் தன்கூட வருவதாக யோசித்தான். சுத்தி வர பைகள், கூடைகள், பொட்டலங்கள். ஸ்ஸப்பா - என ஒரு சலிப்பு. இந்த ரயிலுல வந்ததுல தலைவலி மண்டையப் பொளக்குது. எம்மாஞ் செலவுடியம்மா... ஸ்டேஷன்ல வண்டி நிக்குதோ இல்லியோ வெந்நித் தண்ணிக்கு, ரொட்டிக்கு வெண்ணைக்குன்னு ஓடணும் அவன். ராப்பொழுதுக்கு அவள் சாப்பாடு சாப்பிட மாட்டாள். ஸ்டேஷன்ல நல்ல சாப்பாடு கிடைக்காதில்லையா?.

என்னியப் போட்டு நப்பி எடுத்துருவா, என அவளைப் பார்த்தபடியே நினைத்துக் கொண்டான் அவன். ஆ - பரிசுச்சீட்டு அவளிது, என்னிதில்ல. அதிருக்கட்டும், இவ வெளிநாடு போயி என்ன செய்யப்போறா! அங்க அவளுக்கு என்ன இருக்குன்னு நினைக்கிறா? எதாவது ஹோட்டல்ல போயி முடங்கிக்குவா. வெளிய வரவே மாட்டா. என்னியும் வெளிய விடமாட்டா... எனக்குத் தெரியும்!

தன் வாழ்க்கையிலேயே முதன்முதலா அவன் தன் பெண்டாட்டியை எதுக்கும் லாயக்கில்லாத கிழவியாக நினைத்தான். அவ கிட்ட போனாலே சமையல் நெடி. நான் எப்பிடி இளமையா ஆரோக்கியமா மல்ர்ச்சியா இருக்கிறேன்! இன்னிக்கும் மாப்ளையாகலாமே...

ஆனா அதெல்லாம் மடத்தனமான கற்பனை, என நினைத்தான். என்னாத்துக்கு அவ வெளிநாடு போறா? அங்க அவளுக்கு என்ன இருக்கு?... ஆனாலுங் கூட அவ போவாள். உண்மையிலேயே நேப்பிள்ஸோ கில்ன்னோ... எல்லா இடமும் அவளுக்கு ஒண்ணுதான். தானும் அனுபவிக்க மாட்டா. என்னையும் அனுபவிக்க விட மாட்டா... ஒண்ணொண்ணுத்துக்கும் நான் அவகிட்ட கையேந்தி நிக்கணும்! எனக்குத் தெரியும் - எல்லாப் பொம்பளைகளையும் போலவே அவளும் கைக்குப் பணம் வந்ததும் எல்லாத்தையும் அப்டியே போட்டு அமுக்கி வெச்சிக்குவா. தன் சொந்தக்காரன் சேக்காளின்னு கவனிச்சுக்குவா. என்னையத் தான் போட்டு நோண்டுவா...

அவளது சொந்தக்காரர்களைப் பற்றி இவான் டிமிட்ரிச் நினைத்தான். அண்ணந்தம்பி அக்காதங்கச்சி அத்தைமாமா... எல்லாச் சென்மங்களும் பரிசு விழுந்திருக்குன்னு கேள்விப்ட்டாப் போறும் உருண்டுபொரண்டு ஓடி வந்துருவாங்க. பிச்சைக்காரச் சிரிப்பும் கெஞ்சலும். கேடுகெட்ட சனியன்கள். கண்றாவிக் கும்பல்... எதும் குடுத்தியா இன்னுங் குடுன்னுவாங்க. குடுக்கலியா வண்டை வண்டையாத் திட்டுவாங்க. நாசமாப் போன்னு சாபம் விடுவாங்க...

தன் சொந்தக்காரர்களிடம் இவான் டிமிட்ரிச் முன்பு வேற்றுமுகம் காட்டாதவன், இப்போது அவர்களை வெறுப்போடும் எதிர்ரிகளாகவும் பார்த்தான். எல்லாம் மனுஷாளோடவே சேர்த்தி கிடையாது... என்று நினைத்துக் கொண்டான்.

தன் பெண்டாட்டி முகம் கூட அவனுக்குப் பிடிக்காமலும் வெறுப்பேத்தக் கூடியதாகவும் இருந்தது. அவளையிட்டும் உள்ளே ஆத்திரம் கிளர்ந்தெழுந்தது. கடுப்பான கடுப்பு. பணத்தைப் பத்தி இவளுக்கு என்னா தெரியும். பிசினாறிப் பொம்பளை. பரிசு அடிச்சா அவ எனக்கு ஒரு நு¡று ரூபிள் தருவா. சொச்சத்தப் பெட்டில போட்டுப் பூட்டிக்குவா.

இப்போது பெண்டாட்டியை கடுமையுடன் வெறுப்புடன் அவன் பார்த்தான். அவளும் அவனை அதே மாதிரியான எதிர்ப்புணர்வுடன் பார்த்தாள். அவளுக்குமே தன் பகல்கனாக்களும், திட்டங்களும், ஆசை அபிலாஷைகளும் இருந்தன. தன் கணவரின் கனவுகள் அவளுக்குத் தெளிச்சியாகத் தெரிந்தது. பரிசுன்னு விழுந்தா அவளிடமிருந்து மொதல்ல யார் லபக்-கிக்குவாங்க என்று அவளுக்குத் தெரிந்தது!

பிறத்தியாள்க் காசில் பகல்கனவுன்னா நல்லாத்தான் இருக்கு இல்லே?... அவள் கண்கள் அதைச் சொல்லிக் காட்டின. அதென்ன அத்தனை தினாவெட்டு இந்தாளுக்கு?

பார்வைக்குப் பார்வை பதிலாய் அமைந்தது அவனுக்கும் புரிந்து விட்டது. அதுவே அவன் ஆத்திரத்தை இன்னும் து¡ண்டிவிட்டது. அவளைப் போட்டுத் தாக்குகிற ஆவேசத்துடன் அவன் நாலாம் பக்கம் செய்தித்தாளை அவசர நோட்டம் விட்டான். உற்சாகமாக வாசித்தான்.

''வரிசை 9499. எண் 46! இருபத்தியாறு இல்லை...''

வெறுப்பு மற்றும் நம்பிக்கை - இரண்டுமே அந்தக் கணமே அவர்களிடம் இருந்து மறைந்தன. அவர்கள் ரெண்டு பேருக்குமே சட்டென்று அந்த அறைகள் சிறியதாகவும் தலையிடிக்கும் கூரையுடனும் இருளடித்துப் போயும் இருப்பதாகப் பட்டன. அவர்களின் ராச்சாப்பாடு பிரயோஜனமேயில்லை. செரிப்பதேயில்லை... நகரவே நகராத அலுப்பான மாலைப் பொழுதுகள்.

''இதெல்லாம் என்ன?''- இவான் டிமிட்ரிச் திரும்ப வெறுப்புடன் பேசினான். ''உள்ளாற வந்தாலே து¡சி தும்பு கிழிச்சிப் போட்ட காகிதம். அறையைப் பெருக்கினாத்தானே? ஆளையே வெளிய வெரட்டிருது... வங்கொடுமையப்பா. நான் செத்துத் தொலையிறேன். வெளியபோயி மொதல் பார்க்கிற மரத்தில் நாண்டுக்கிட்டு சாகறேன்...!''

>>> 
the lottery ticket - shortstory by anton chekhov
தமிழில் எஸ். சங்கரநாராயணன்

storysankar@gmail.com

Friday, June 3, 2016

சிவன்கோவில் 
கவியரங்கம்
எஸ். சங்கரநாராயணன்
றிவிற் சிறந்த இந்த அவைக்குத் தலை வணங்குகிறேன். இந்தக் கூட்டத்துக்கு என்னைத் தலைமையேற்கும்படி திரு சித்தன் சொன்னபோது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. சித்தம் போக்கு சிவம் போக்கு என்பார்கள். அவர் போக்கே பல சந்தர்ப்பங்களில் ஆச்சர்யமளிப்பதாய் இருக்கிறது. இந்த வேண்டுகோளும் அப்படியே.
      இதில் ஒரு அன்பர் ஹாங்காங் தமிழ்ச்சங்க செயல்பாடுகள் பற்றிப் பேச வந்திருக்கிறார். நான்கு நூல்கள் வெளியிடப்பட இருக்கின்றன. அதை வெளியிட நால்வர், பெற்றுக்கொள்ள நால்வர். அதைப்பற்றிப் பேச நால்வர், பிறகு நூலாசிரியர் உரை.... என இனி மேடையேறுகிற எல்லாருக்கும் அவரவர் வேலை இருக்கிறது. பொறுப்பு இருக்கிறது. எனில் என் வேலைதான் என்ன?
      இத்தனை பேரைக் கணக்கு பண்ணி ஆளுக்கு ரெண்டுபேரைக் கூட அழைத்து வந்தால் கூட அரங்கு நிரம்பி விடும் என்று சித்தன் ஒரு கணக்கு வைத்திருக்கலாம்... நானும் சில நபரை வரச் சொல்லியிருந்தேன். அவர்கள் வரவில்லை. அவர்கள் இன்றைக்கு இந்த கே.கே.நகர் பக்கமே வரவில்லை என அறிகிறேன்...
      கூட்டம் என்பதை ஒரு பேருந்துப் பயணம் என்று உருவகித்தால், பஸ்சில் பயணிகளைக் கூட்டிப்போக இத்தனை பேச்சாளப் பெருமக்கள் இருக்கிறார்கள். அவர்கள் டிரைவர் என்றால் நான் ஒருவேளை கண்டக்டர் என என்னைச் சொல்லிக் கொள்ளலாம். இப்போது காம்பியரிங் என்கிற ஒரு பாணி கூட்டங்களில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அழகான யாராவது இளவயசுப் பெண்ணை மேடையேற்றி நட்சத்திர அந்தஸ்து தந்துவிடுகிறார்கள். தமிழை தமில் என அவள் கிளிப்பேச்சு பேசுகிறாள். என் நகையைப் பார், என் உடையைப் பார் என அவள் காதுக்கு அல்ல, கண்ணுக்கு விருந்தளிக்கிறாள். சில சினிமாக்களில் படத்தை விட இடைவேளை பயனுள்ளதாக அமைந்துவிடுவதைப் போல, தொகுப்பாளினி ஒரு ஆசுவாசம் தருவதாகக் கூட சில கூட்டங்கள் அமைவது உண்டு. சுதந்திரதினம் என்றால் அநேகம் பேருக்கு மிட்டாய்தினம் என்றே தெரியும். அதைப்போல...
      இலக்கியக் கூட்டம் என்பதற்கு சில அடையாளங்கள் உண்டு. எழுத்தாளர்களே பேச்சாளர்களாக அமைவார்கள். பெரும்பாலும் அவர்களே துட்டுப்போட்டு நடத்தும் கூட்டம். நூல் வெளியீடு. அந்த நூலும் அவர்களே துட்டுப்போட்டு வெளியிட்டதாக இருக்கலாம். இந்நிலையில் கூட்டத்துக்கு வேறாளைப் பேச அழைத்து, சில சந்தர்ப்பங்களில் அவர் ஏடாகூடமாய் ஏதாவது பேசிவிட்டுப் போய்விடுவாரோ என்ற பயம் எழுத்தாளனுக்கு உண்டு. பேசாமல் பாராட்டிவிட்டுப் போனால் நல்ல பேச்சாளன்.
      பொதுவாக இலக்கியக் கூட்டங்களில், மேடையிலும் கீழேயும், எழுத்தாளர்களே அமர்வர். அதிகபட்சம் நூல் வெளியிடுகிற நபரின் நண்பர், உறவினர் என்று சிறு கூட்டம், கைதட்டத் தயாருடன் கீழே காத்திருப்பார்கள். கீழே அமர்ந்திருக்கிற மற்ற எழுத்தாளருக்கு இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதும் தானும் எழுத வேண்டும், புத்தகம்போட வேண்டும், அதற்கு விழா எடுக்க வேண்டும் என்று ஒரு நமநமப்பு ஏற்படும். பஸ்சில் பக்கத்து சீட்காரன் எதும் முறுக்கை கடக் முடக் என்று கடித்தால், எதிரில் பார்த்துக் கொண்டிருக்கிற சின்னப் பிள்ளையின் சங்கடம் அது... இதுதவிர எந்த சமுதாயச் சிந்தனையும் கூட்டங்களில் கிளறிவிடப் பட்டதாக நான் நம்பவில்லை. அப்படியொரு நம்பிக்கை சித்தனிடமும் இருக்க முடியாது. ஏனெனில் அவர் 'என்னைப்' பேச அழைத்திருக்கிறார். அதிலும் தலைமை என்று போட்டிருக்கிறார்.
      சிவன்கோவில்
      கவியரங்கம்
      கீழே அறுபத்திருவர் –

      என நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.      இதெல்லாம் எழுத்தாளனுக்கு வேண்டியிருக்கிறது. கூரைமேல் ஏறி சேவல் விடியலை அறிவிக்க முயல்வதைப் போல. மனுசாளுக்கு சில அடையாளங்கள் வேண்டியிருக்கிறது. அதாவது மேல்சட்டை போட்டால் பத்தாது. அதன் மேல் ஒரு துண்டு, அல்லது அங்கவஸ்திரம். எழுத்தாளன் சமுதாயத்தில் தனக்கு ஒரு அந்தஸ்து இருப்பதாக நம்புகிறான். அதற்காக உள்ளூற ஏங்குகிறான். ஆனால் அவன் மேடைபோட்டு ''நான் விலைபோக மாட்டேன், நான் அவதார புருஷன், லட்சிய வீரன்''... என்றெல்லாம் அறைகூவ விரும்புகிறான். அல்லது ஆள் வைத்து தன்னைப் பற்றி இப்படிப் பேசச்சொல்லி காதாரக் கேட்கிறான். ஊரறிய கல்யாணம் பண்ணிக்கொள்கிற ஒரு சந்தோஷம் இதில் இல்லையா? இருக்கத்தான் இருக்கிறது.
      இந்த எழுத்தாள ஆசாமி ஏன் தன்னை விநோதமான ஜந்துவாக உணர வேண்டும் என்று தெரியவில்லை. அது ஒராளின் விசித்திர குணங்களில் ஒன்றாகத்தான் தோன்றுகிறது. மனிதரில் சிலபேர் உட்கார்ந்திருக்கையில் சும்மா இருக்க மாட்டாமல் காலாட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறதைப் பார்க்கலாம். சிலபேர் தனியே நடந்து போகையில் எதாவது பொட்டுக்கடலையோ பட்டாணியோ பொட்டலத்தில் வாங்கி வழிநெடுக அரைத்துக்கொண்டே வீடடைகிறார்கள். என்னைப் பற்றியும் சொல்ல வேண்டும். நான் என்னையே அறியாமல் சில சமயம் எதும் பாடியபடி வீடு திரும்புகிறேன். வயசாளிகளில் சில பேர் தனக்குத் தானே பேசிக் கொள்வதும் உண்டு.
      தனக்குத்தானே சத்தமில்லாமல் பேசிக் கொள்கிறவனை எழுத்தாளன் என்று சொல்லலாம் போலிருக்கிறது.
      நாய் ஏன் ஓடிக்கொண்டே யிருக்கிறது, என ஆராய்ந்து பார்த்ததாக ஒரு சேதி உண்டு. நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமில்லை - என்று நம்மிடையே பழமொழி உண்டு. கடைசியில், நாயின் இயல்பு அது, ஓடிக்கொண்டே யிருப்பது, என்று முடிவுக்கு வந்தார்களாம். ஆங்கிலத்தில் கூட சொல்வார்கள்... கீலீணீt வீs ஜீணீக்ஷீணீபீவீsமீ யீஷீக்ஷீ ணீ stக்ஷீணீஹ் பீஷீரீ? ஸிஷீணீபீ யீuறீறீ ஷீயீ tக்ஷீமீமீs ணீஸீபீ தீணீரீ யீuறீறீ ஷீயீ uக்ஷீவீஸீமீ.
      எப்படியும் மிகைபட வாழ்தல் மனுசாள் இயல்பாகி விட்டது. தங்கப்பல் கட்டிக்கிட்டவள் பக்கத்து வீட்டுக்குப் போய் ''இஞ்சி இருக்கா இஞ்சி''ன்னு கேட்டாளாம்... இதில் எழுத்தாளனை, பாவம் அப்பாவி அவனை விட்டுறலாம் போலிருக்கிறது. எதிர்காலம் பத்திய கவலையும் ஆர்வக்குறுகுறுப்புமாய் சாமானியன் போய் ஜோசியம் பார்க்கிறான். குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி... என்று எதிலாவது மாற்றம் கிடைக்காதா என ஒரு ஆசை. மாற்றம் தேவையாய் இருக்கிறது. சிலர் அந்த ஜோசியர் வேலையை, கணிப்பைத் தாங்களே கையெடுத்துக் கொள்கிறார்கள். அவர்களை எழுத்தாளர் எனலாம்.
      எழுத்து என்பது கட்டிக்கொடுத்த சோறு. அது எத்தனை காலம் கெடாமல் இருக்கும் என்று தெரியவில்லை. காலாவட்டத்தில் உணவுப் பண்டங்கள், சாப்பிடும் முறைகள் மாறிவிடுகின்றன. மோரும் கூழும் தேனும் தினைமாவும் தின்று வளர்ந்த சமூகம்... இப்போது பெப்சி, பிசா, ஹார்லிக்ஸ் என்கிறார்கள்.... என்றாலும் எழுத்தாளனுக்கு நம்ம எழுத்து நின்று நிலைக்கும், இந்த சமூகத்தைத் தட்டி எழுப்பும், புரட்டிப் போடும் என்றெல்லாம் தளராத தன்னம்பிக்கை. அவன் நம்பிக்கை வாழ்க. ஒரு எழுத்தாளனின் எழுத்து இந்த சமூகத்தை அலாக்காகத் தூக்கி வேறிடத்தில் நட்டுவிடும் என்றால், இதுவரை இத்தனை எழுத்தாளன் பிறந்திருப்பானா என்றே தெரியவில்லை. ஒருத்தனே போதும் அல்லவா? அடுத்தாளுக்கு வேலை இல்லை அல்லவா?
      மாஜிக் நிபுணர்களா எழுத்தாளர்கள்? சாமானியன் கண்ணை மூடிக்கொண்டு கனவு கண்டால், எழுத்தாளன் கண்ணைத் திறந்தபின் கதை எழுதுகிறான். அவனும் கனவுதான் காண்கிறான்... கனவு வேண்டியிருக்கிறது. மாற்றம் வேண்டியிருக்கிறது. அதன் விளைவே கலைகளாக உருவெடுக்கிறது. எழுத்து, பேச்சு, சித்திரம், நிழற்படம், சிற்பம், இசை.... என அவன் கனவின் எல்லையை விரித்து வலையாகப் பரத்துகிறான். வாழ்க்கை அதில் சிக்குமா என்று காத்திருக்கிறான். ஆனால் அது வாழ்க்கை அல்ல. வாழ்க்கையின் கனவு. வாழ்க்கை வெளியே இருக்கிறது. அதுவும் அவனருகே அமர்ந்து வலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
      அரைத்து வைத்த தோசை மாவு மறுநாள் பொங்குவதைப் போல எழுத்து அதிதம். மிகை. எழுதுதல் தாண்டி பதிப்பித்தல் அல்லது அச்சுவடிவம் காட்டுதல். அதை நூலக்கி அழகு பார்த்தல். அழகான அட்டைப்படம் அதற்கு வேண்டியிருக்கிறது. கூந்தல் நிஜம். என்றாலும் அதைப் பின்னிவிடலாம், கொண்டை போடலாம்... திருப்பதி காணிக்கையாக்கலாம். முடி நிஜம். கூந்தல் கனவு என்று சொல்லலாம். அந்தக் கனவுக்கு சிலர் அழகழகான ஸ்லைட் மாட்டி அழகு செய்கிறார்கள். சிலர் வண்ண வண்ண, வாசனை வாசனையான பூக்கள் சூடிக் கொள்கிறார்கள்... புத்தகம் தாண்டி, அதன் கட்டுமானம் தாண்டி... ஆ அதற்கு ஒரு தலைப்பு. அழகான அட்டைப்படம் என்று ஒரு ஓவியம். கனவுகள் அடுக்கப்படுகின்றன. அதன் உச்சம் எது?... அதற்கு ஒரு வெளியீட்டு விழா.
      மௌனத்தில், கனவில் உள்ளே ஊறிய விஷயம். அதை மௌனமாய்ப் பகிர்ந்து கொள்வது இதைவிடச் சிறப்பாய் அமையக்கூடும். எழுதப்பட்ட விஷயம் வாசிக்கப் படுவதற்காக. அதை மேடையேற்றி சத்தமாய் இடம் சுட்டிப் பொருள் விளக்குதல் சரியா? ஆனால் வேண்டித்தான் இருக்கிறது. அகோ வரும் பிள்ளாய், வந்து, மைக்கைப் பிடித்து, மௌனத்தைப் பற்றிப் பேசுக.
      மிகைகள் வாழ்வில் தவிர்க்க முடியாமல் கலந்துவிட்டன. அதுவும் நுகர்வுக் கலாச்சாரம் சார்ந்த இந்தக் காலத்தில் எதிலும் ஒரு மிகை. விளம்பரம். அலட்டல் வந்து சேர்ந்து விடுகிறது. தியானம் பற்றி டி.வி. சானல்கள் தவறாமல் ஒளிபரப்புகின்றன. சாமியார்கள் ஆசி வழங்குகிறார்கள். மௌனமே முன்வந்து பேச ஆரம்பித்த காலமாய் இருக்கிறது...
      ஒரு பாரசிகக் கவிஞன் சொன்னான்.
      ரோஜாக்களை
      கூவி விற்கிற வியாபாரியே
      ரோஜாக்களை விற்று
      இதைவிட உயர்ந்த எதை
      வாங்கப் போகிறாய்?

      (ரோஜாவை விற்று ஒருவேளை வீட்டுக்கு மீன் வாங்கிப் போவானாய் இருக்கும்.)
      பகிர ரெண்டு சேதிகள் ஞாபகம் வருகின்றன. ஒண்ணு நமது தொன்மையான தமிழ்மொழியின் சிறப்பு. தமிழில் நிறுத்தற் குறிகளே கிடையாது. அநேக ஓலைச்சுவடிகளில் நிறுத்தற்குறிகள் இராது. கமா, முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி, கேள்விக்குறி எதுவுமே இல்லை. எல்லாம் மேலை நாட்டில் இருந்து இறக்குமதியான சரக்குதான். சொல்லின் மிகை என்று சொல்ல வருகிறேன். தமிழ் இலக்கணம் கச்சிதமானது. வினைமுற்று மொழியின் இறுதியில் அமையும். அத்தோடு அந்த வாக்கியம் முற்றுப்பெற்றதை வினைமுற்றே அறிவித்துவிடும். வாசிக்கும்போது தானே முற்றுப்புள்ளியை நாம் உணர்ந்துவிடலாம். கிருஷ்ணன் வந்தான்.... என்று சொன்னால் வந்தானோடு வாசிப்பு முற்றுப்புள்ளி அளவில் தானே நின்றுவிடுவதை அறிக. ஆகாரம் ஓகாரம் சேர, தானே கேள்விதொனி கிடைத்து விடுகிறது. தனியே கேள்விக்குறி தேவையே இல்லை. அதேபோல கமா. நான் அவன்வீட்டுக்குப் போனபோது அவன் தூங்கிக்கொண்டிருந்தான், என்று சொன்னால் போனபோது என வருகையிலேயே மனம் அந்த கமாவைக் குறித்துக் கொண்டுவிடுகிறது, கவனிக்க. எழுவாய் மொழிமுதல் அமையும். கந்தன் வந்தான், என்பதே சரி. வந்தான் கந்தன், என எழுதுதல் தகாது.
      இலக்கணமீறலாக சீதையைக் கண்டேன், என்பதை ராமனுக்கு அனுமன், கண்டேன் சீதையை, என்று சொல்வதை கலைநுட்பமாக நாம் காண்கிறோம்.
      அடுத்த சேதி பூமணி சொன்னது. கதைகள் வாழ்க்கையின் ஆக நேர்மையான தீற்றல்களாக குறைந்த அளவு கற்பனைச்சாயலுடன் வடிவமைதி பெற வேண்டும் என்பார் அவர். வார்த்தை அதிதம் தகாது என்பது அவர் கருத்து. அவர் சொன்னார். கதை என்றால் தலைப்பு எதற்கு? அதுவே முகத்தில் துறுத்திய மூக்குதான். ஷங்கரநாராயணன் எழுதிய கதை, என்பதே போதும். தனியே அதற்கு மிகையாக தலைப்பு ஒட்ட வைக்கப்பட்டு நாமும் பழகிவிட்டோம்... என்கிறார் பூமணி.
      சரி என்றுதான் படுகிறது.
      
(யுகமாயினி கூட்டம். 17 சனவரி 2011 அன்று 
தலைமையேற்று வாசித்தளித்தது.)

9789987842