Thursday, June 24, 2021

 

உறைவு

எஸ்.சங்கரநாராயணன்

(published in kanayazhi monthly)

யாரோ நடமாடுவதுபோல் இருந்தது. சட்டெனத் திரும்பிப்£ர்த்தாள் மாதங்கி. ஒருவேளை பிரமையோ? அப்படி ஓர் உணர்வு அடிக்கடி¢ அவளுக்கு வந்துகொண்டே யிருந்தது. யாரோ பார்க்கிறார்கள். யாரோ நம்மை உற்றுக் கண்காணிக்கிறார்கள். யாரோ கூட நடமாடுகிறார்கள். ஏன் இப்படி தெரியவில்லை. நினைவுதெரிந்த நாளில் இருந்தே இந்த பிரமை அவளுக்கு இருந்துவந்தது.

      பெண்கள் அப்படியொரு சூட்சும மோப்பத்துடனேயே வளர்க்கப் படுகிறார்கள். அம்மாவுக்கு எப்பவுமே தன்னையிட்டு அல்ல, இவளையிட்டு பயம் அதிகம். தன்சார்ந்த பயங்கள் இயல்பாகவே அவளுள் விதைக்கப்பட்டவை. ஆண் குழந்தை பெற்றால் அது, அந்த பய உணர்ச்சி, கொஞ்சம் மேடு தட்டியும், பெண் குழந்தை என்றால் மேலும் பள்ளம் பாரித்தும் போகிறது. அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு. பெண்ணின் முதல் இலக்கணம் பயம். ஆண் அச்சம் மடம் ரெண்டையுமே சேர்த்து எள்ளுகிறான். அச்சம் என்பது மடமையடா.

      யாரோ பார்க்கிறார்கள், என்பதற்கும் யாரோ பார்க்கக் கூடும் என்று உள்ளே ஒலிக்கிற எச்சரிக்கைக்கும் பேதமில்லையோ என்னவோ?

      குறிப்பாக அவள் தனியாக இருக்கும் கணங்கள். அவள் தனியாக இருக்கும் கணங்களில் அவள் தனியாக இல்லை போல் ஓர் உணர்வு. இதை யாரிடம் சொல்வது? சொல்லவும் அப்போது அங்கே யாரும் இல்லை. நம் இச்சை இல்லாமல் மனமே தன்னால் பிரிந்து இயங்குகிறதா என்ன? ஏய் நீ யார்? என்ன வேண்டும் உனக்கு? குரல் மௌனமாய் தொண்டைக்குள்ளேயே எதிரொலித்தது. மௌனத்தின் நாக்கு உட்சுருட்டி உள்ளே இழுத்து அமுக்கிக்கொண்டது சப்தங்களை.

      சாத்விக கணங்களில் பிரச்னை ஏதும் இல்லை. ஆகா, அலுவலகத்துக்கு நேரமாகி விட்டது.... என்று பஸ் பிடிக்க ஓடுகிறாள் அன்றைக்கு. கூடவே யாரோ பரபரத்து வருகிற பிரமை. பிரமையேதான். என்ன இது? அவன், அல்லது அவள், அல்லது அது... என்ன? கூட ஓடி வருகிறது என்றால், இடப்பக்கமா வலப்பக்கமா, முன்னேயே பின்னேயா, தலைக்கு மேலேயா? சீச்சி, என்று பஸ்சுக்குள் தாவியேறினாள். எனக்குத் தான் அவசரம் என்றால், கூட வருகிற நபரும் நம்மைப் போல உணர்கிறது விநோத அனுபவம்.

      அவள் ஒன்றை கவனித்தாள். நினைவு தெரிந்த நாள்முதல் இந்த குறுகுறுப்பு நமக்கு இருக்கிறது, என்றால், நாளிது வரை, பத்து வயதில் அவளது சூட்சும அறிவு விழித்துக் கொண்டது என்று வைத்துக்கொண்டாலுங் கூட... இப்போது அவளுக்கு இருபத்திமூணு... இதுநாள் வரை அந்த நபரை நாம் நேரில் சந்திக்கவில்லை என்றாகிற போது... அவள் முடிவு செய்தாள்... அது ஓர் உணர்வு. நாம் ஓடும்போது அந்த உணர்வு பரபரக்கிறது. நாம் நின்றால், அது நிற்கிறதா தெரியாது. அந்த உணர்வு நமது சூட்சுமத்தில், ஆழத்தில் எங்கேயோ இருந்து கொண்டிருக்கிறது. நம்முடன் அது வாழ்கிறது. நம்மால் அதை உணர முடியும். உதற முடியாது. முடியாது என்று புரிந்தபின் பயந்து அர்த்தம் இல்லை. நாம் அந்த உணர்வோடு பழகிக்கொள்வோம்.

      நண்பனே, அல்லது தோழியே நான் உன்னை நேசிக்கிறேன். வா நாம் கைகுலுக்கிக் கொள்வோம். பன்னீர்ப் பூ மரம் ஒன்று சிலிர்த்து காற்றில் உதறிக்கொண்டதில் அவள்மேல் உதிர்த்துப் போட்டது பூக்களை. சிரித்துக் கொண்டாள்.

      பிறகு அந்த பயம் போய்விட்டது. மடம் போனால் பயம் போய்விடும் போலிருக்கிறது. பயிர்ப்பு போனால் நாணமும் போய்விடுகிறது அல்லவா? அதைப்போல! பயிர்ப்பு என்றால் அந்நிய ஆடவர் ஸ்பரிசத்தை விலக்குவது என்கிறதாக அவள் கேட்டறிந்திருந்தாள்.

      அந்த 'பா'வம் எப்போது  மாதங்கியின் பிரக்ஞைக்குள் புகுந்தது தெரியாது. முன்பே இருந்திருக்கலாம். அவள் அறிவு தன்முனைப்பாக செயல்படும் போது தன்னைப்போல இந்த பிரக்ஞை விழித்துக் கொண்டிருக்கிறது. குழந்தைப்  பருவத்தில் இந்த, யாரோ பார்க்கிறார்கள், இல்லை. பயம் இல்லை. இருட்டைக் கண்டு பயம். யாரும் பார்க்கா விட்டால் பயம். யாரும் பார்த்தால் புன்னகை தான், ஒரு பாதுகாப்பு உணர்ச்சிதான் வந்திருக்கிறது. பார்த்தால், புன்னகைத்தால் அவர்கள் கிட்டே வருவார்கள். கன்னத்தைக் கிள்ளுவார்கள். தூக்கிக் கொஞ்சுவார்கள். சந்தோஷ கணங்கள் அவை.

      ஆ தனிமையில், அவள் தனித்திருக்கவில்லை என்ற உணர்வு ஆழமானது. என்றால் அவளிடமிருந்து பகிர்ந்துகொள்ள, அவளுக்கு அளிக்கவோ அவள்  அளிக்கவோ, எதுவும் வாய்ப்பே இல்லை என்பது தான் விநோதமாய் இருந்தது. அவன் அல்ல அவள் அல்ல அதுவும் அல்ல. அது ஓர் உணர்வு. மனசின் தாக்கம் அது. சரி, அதற்கு என்ன பெயர்? தன் கூடவே நடமாடும், தன்னைத் தாண்டியும் போக்குகாட்டும் அது. தனக்குப் பின்தங்கியதே இல்லை, என்பதுதான் ஆச்சர்யம்.

      அம்மா இறந்து போனாள். ஹாவென பாரம் மேலேறிய திகைப்பு ஏற்பட்டது அவளுக்கு. துக்கம் தானா அது? அதில் துக்கமும் இருந்தது. ஆனால் முழுசாய் அது துக்கம் என்று கூறல் தகாது. அது ஓர் உணர்ச்சிக் கலவை. துக்கமும் அதில் கண்டது. ஒரு திகைப்பு. துக்கம். பயம். இனி என்ன, என்கிற திணறல். இதுநாள் வரை கூட இருந்தாள் அம்மா. அவளது தனிமைக்கு நான் அரண். என் தனிமைக்கு அவள் அரண். அப்பா காலமாகி விட்டார். அவளும் அம்மாவும் தான். அவள் வேலைக்கு வந்தபின் குடும்பம் கொஞ்சம் வசதி கண்டது. அம்மா தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்தாள். கோவில் குளம் என்று பவித்ர பாவனைகள் மீண்டும் கைக்கொண்டாள். இன்னிக்கி  ராஜராஜேச்வரிக்கு அலங்காரம் ரொம்ப விசேஷம், யார் மண்டகப்படியோ தெரியல, என்றாள். இதையெல்லாம் அவள் கவனித்ததே இல்லை. அப்பா இறந்த திகைப்பு அவள் நரம்புகளை மழுங்கடித்து விட்டது. கோவிலுக்குப் போகையில் பெண்ணுக்கு வேண்டிக்கொள்வாள். வீட்டு வேலைகளைக் கடமைசிரத்தையாய்ச் செய்வாள். அவள், மாதங்கி வேலைக்குப் போனதும் அம்மா மழைக்குத் துளிர்த்தாப் போலானாள். முகத்தில் கானல் வரிகள் குறைந்து புன்னகை சேர்ந்தது. அப்பா பார்த்த வேலையே அவளுக்குக் கிடைத்தது. வேலைக்குக் கிளம்பும் நாளில் அம்மா அவளுடன் கோவிலுக்கு வந்தாள். அப்போது தான் சொன்னாள் இப்படி.

      ''இன்னிக்கு ராஜராஜேச்வரிக்கு அலங்காரம் ... ...'' அப்படியே திரும்பி அவளைப் பார்த்தாள். ''என் கண்ணே பட்டுடும் போலருக்குடி...'' என்றபடி மல்லிகைப் பூவை, அவளைத் திரும்பச் சொல்லி தலையில் சூட்டினாள். அம்மாவின் உற்சாகம் அவளுக்குப் பிடித்திருந்தது. அவளுக்கு உற்சாகம் இல்லையா? இருந்தது, ஆனால் முன்பு, வேலை கிடைக்கு முன்பு, அவள் ஒன்றும் விளக்கணைத்தது போல் இல்லை, என்பது உண்மைதானே?

      இனி என்ன? அப்பா இறந்துபோனது பரவாயில்லை. கூட அம்மா இருந்தாள். அதில் துக்கம் இருந்தது. திகைப்பு இல்லை. திகைப்பு இத்தனைக்கு இல்லை. இனி என்ன என்ற கேள்வி பிறக்கவில்லை. அம்மாவின் அண்ணா வந்திருந்தான். கூட கொஞ்ச நாள் இருந்தான். ''ச், உங்கம்மா உனக்கு கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்கக் கொடுப்பினை இல்லாமல் ஆச்சே...'' என்றான். ''அப்பாவே பண்ணியிருக்கணும். அவர் காலம் முடிஞ்சது. அம்மாவாவது எதும் பார்த்து ஏற்பாடு பண்ணியிருக்கலாம்...'' அவன் பேசுவது பாதி புரிந்தும் பாதி புரியாமலும் இருந்தது. ஆனால் மனசில் ஒட்டத்தான் இல்லை. தலையாட்டினாள் குழப்பத்துடன். ஆ அவளுக்கு அம்மா அரண், அம்மாவுக்கு அவள் அரண். அம்மாவுக்கு அவள் அருகாமை வேண்டியிருந்தது. அவள் அருகில் இருக்கையில், இந்த அண்ணாவே தேவைப்படவில்லை. கூட இருந்தாள் மாதங்கி. அவளிடம், மாதங்கியிடம் அம்மா அந்த ஆதுரத்தை, அண்ணாவிடம் பெறாத அருகாமையை எதிர்பார்த்தால் என்ன தவறு? அவள் மடியில் அம்மா படுத்துக்கொண்டால் என்ன? எனக்கு வேலை கிடைத்து விடடது. எனக்கு தெம்பு அது. உள்ளே என் ஊற்றைப் பழையபடி திறக்க வல்லதாய் அது அமைந்தது. அம்மாவின் அடைபட்ட ஊற்று திரும்ப ஊறுமா?

      அம்மாவே இறந்துபோனாள். கடைசி நிமிடங்களில் அவள் மாதங்கியின் கல்யாணம் காணாமல், பொறுப்பைத் தீர்க்காமல் இறந்து போவதை நினைத்துப் பார்த்திருப்பாளா? அல்லது தன் காலம் அமைதியாய் முடிந்ததையிட்டு ஆறுதல் பட்டாளா? அப்படித்தான் என்றால் அது தப்பும் இல்லை. நானும் அவள் மரணத்தில் என்னைப் பற்றித்தான் முதலில் யோசிக்கிறேன். அது தப்பு என்றால், எல்லாருமே தப்பு செய்கிறார்கள் என்று அர்த்தம். அதாவது அது தப்பு இல்லை என்று அர்த்தம்.

      அம்மா நெடுஞ்சாண் கிடையாய் மல்லாக்கக் கிடந்தாள். அப்பா இப்படிக் கிடந்தது ஞாபகம் வந்தது. அப்போது பக்கத்தில் அம்மா. தலைமாட்டில் விளக்கு ஏற்றி வைத்திருந்தது. தள்ளி அவள், மாதங்கி உட்கார்ந்திருந்தாள். ஏனோ அப்போது தலைக்குமேல் இருந்த சாமி படத்தின் மேல் பார்வை சென்றது. மகாவிஷ்ணு படுத்திருக்க கால்மாட்டில் லக்ஷ்மி தேவி. எந்தப் பெண் தெய்வமும் இப்படி படுத்துக்கொண்டு அருள் பாலிக்குமா, என்று அப்போது தோன்றியது.

      ராத்திரிகளில் அம்மா முழிப்பு வந்து உருண்டு அவளைக் கட்டிக்கொள்வாள். ''என்னம்மா?'' ஒண்ணில்ல, என்பாள். தன்னைவிடப் படித்தவள் என்பதால் தன்னைவிட விவரம் தெரிந்தவளாக அவளை அம்மா வரித்தாள், மரியாதை தந்தாள் என்று தெரிந்தது. அம்மா அப்பாவின் நிழல். அப்பாவே அவளுக்கு நிழல் அளித்தார். அப்பா காலம் ஆனதும் மாதங்கியின் அடியில் அவள் ஒதுங்கியதாகப் பட்டது.

      இது என்ன உணர்வு தெரியவில்லை. நான் அப்படி யாரைச் சார்ந்தும் இயங்கவில்லையோ என்பதே புது அடையாளமாய் இருந்தது. அம்மா மரணம் அவளுக்கு ஒரு திகிலைக் கிளப்பும் என்று நினைத்திருந்தாள். அது கிளப்பவும் செய்தது. ஆனால் புயல் ஓய்ந்தாப் போல, உடனே எல்லாமே அடங்கிவிட்டது. எதுவுமே நிகழவில்லை போல ஆகிவிடும் போலிருந்தது.

      ஒரு பயணத்தில் நான் திடுமென நிற்கிறேன். அழுகிறேன். என்னை நினைத்து அழுகிறேனா, அம்மாவை நினைத்து அழுகிறேனா தெரியவில்லை. அழுகிறேன். நினைவுகளைக் கழுவி விடுகிறாப்போலக் கூட நான் அழுதிருக்கலாம். ஆனால் இந்த மேன்மை நிலை, நான் அம்மாவின் மடி என்கிற நிலை, அதுவே ஒரு பிரமைதான். நிச்சயம் பிரமைதான். மடி அளித்தலே நம்மையும் அவர்களோடு பிணைத்து விடுகிறது. நாம் விடுபட்டவர் அல்லர். மேம்பட்டவரும் அல்லர். இழப்பு, அதை உணர்த்தி விடும். அந்தக் கண்ணி விடுபடும் போது நமக்கு அது தெரிய வருகிறது.

      அவளுக்கு ஞாபகம் வந்தது, அம்மா இப்போது இல்லை என்று தெரிந்தபோது, அது ஆஸ்பத்திரி வார்டு. திடீரென்று அம்மா நெஞ்சடைக்கிறாப் போல இருக்குடி, என்று தவித்து, ஆஸ்பத்திரிக்குப் போனால் நிலைமை மோசம் என்று மருத்துவர் அவநம்பிக்கை தந்தார். அப்போது ஆச்சர்யமாய் இருந்தது. ஒரு நபர் மரணத்தை யாரால் நிர்ணயிக்க முடீயும்? என்ன சொல்கிறார் இவர், என்றிருந்தது. கெடு தந்துவிட்டார். உறவுக்காரர்களுக்குச் சொல்லிவிடுங்கள், என்றார் மருத்துவர். அவள் அண்ணாவுக்கு தகவல் போனது...

      இறந்திருந்தாள் அம்மா. என்ன நினைத்தாளோ? நினைவு திரும்பவில்லை. அவள் வெளியே காத்திருந்த போது, தாதி வெளியே வந்தாள். தவகல் கேட்டு அவள் உள்ளே போகிறாள். அந்த கடைசி நிமிட வெறிப்பு, உயிர் கண்வழியே வெளியேறும் என்பார்கள்... அவள் கேள்விப்பட்டிருந்தாள். அது வலியின் சாட்சி, என்று நினைத்தாள் மாதங்கி. அம்மா கண்மூடிக் கிடந்தாள். அம்மா செத்ததற்கு சாட்சி இல்லை.

      சற்றுமுன் மூச்சு விட்டபடி இருந்த அம்மா இப்போது இல்லை. அம்மா இறந்துவிட்டாள். என்ன அபத்தம் இது. நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? போய் மருத்துவருக்கு நன்றி சொல்லலாமா? நீங்கள் முடிந்ததைச் செய்தீர்கள், ஆனாலும்..... என்று நிறுத்திவிட்டு, நன்றி, சொல்லலாமா? சரியாய் யூகித்தீர்கள். அம்மா நீங்கள் சொன்னபடி இறந்துவிட்டாள், என்று பாராட்டலாமா?

      வெளியே வந்தாள். தூங்கும்போது அவள்மேல் காலைப் போட்டுக்கொள்ளும் அம்மா இல்லை. அவள் அப்படியே அந்த நாற்காலியில் போய் அமர்ந்தாள். சற்று ஆசுவாசப்பட வேண்டுமாய் இருந்தது. மார் ஏன் இப்படித் துடிக்கிறது தெரியவில்லை. ஒரு காபி சாப்பிட்டால் நல்லது. அம்மா இருந்தால், கேட்டால், உடனே போட்டுக் கொண்டுதருவாள் தலையைக் கிலையை வலிக்கறதாடி கோந்தே?... என்பாள். அவள் அன்புக்குப் பின்னே ஒரு பயம், அவள்சார்ந்த பயம், தன்பயம் ரெண்டும் இருந்தது. நான்? அடி வீரி. உன் வீரம் நாசமாய்ப் போக.

      அப்போதும் அந்த உணர்வு ஏற்பட்டது அவளுக்கு. யாரோ பார்க்கிறார்கள். உற்று என்னை யாரோ கண்காணிக்கிறார்கள். யார்? யார் அது, நண்பனா எதிரியா? எனக்கு எதிரிகள் இல்லை. நான் யாருக்கும் எதிரி இல்லை. எனக்கு எதிரிகள் இருக்க வாய்ப்பே இல்லை. நண்பனே, தோழியே...

      மாமா கைத் தொலைபேசியில் அழைத்து ''வந்திட்டே இருக்கேன். ஐயோ என்னாச்சி?'' என்றான். ஒரு மரணத்தை விவரிப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. மரணம் விவரிக்க ஏற்ற விஷயம் அல்ல. நீட்டிக்ககப்பட்ட மரணம் ஆபாசமானது. அபத்தமானது. அது சாகும் மனிதனைக் கொச்சைப்படுத்தி விடுகிறது. அம்மா, வெல்டன், என்று .... ''நேர்ல வா மாமா'' என்றாள். ''தனியா இருக்கே, பயமா இருக்கா?'' என்று அவன் கேட்டபோது பதில் சொல்லாமல் தொடர்பைத் துண்டித்தாள்.

      தனியாகவா இருக்கிறேன்? கலத்தல் என்பது ஓர் உணர்வு. அதேபோல தனிமை என்பதும் பாவனையேதான். பாவனையற்று உலகில் என்ன மிஞ்சும்? எதுவும் மிஞ்சுமா என்ன? தனியே இருக்கிறேன். இனிமேல் நான் தனி தான். அம்மா இல்லை. மாமாகூடப் போய் இருக்க முடியுமா? அப்படி யோசனையே என்னிடம் இல்லை. பயம்? பயம் அப்போது இருந்தது. இப்போது இல்லை.

      அப்போது தான் அந்த உணர்வு கிளர்ந்தது. நான் தனியே இல்லவே இல்லை. யாரோடு தான் நாம் பிணைக்கப் பட்டிருக்கிறோம். அது அம்மா அப்பா அண்ணன் தம்பி சித்தப்பா மாமன்... இப்படி உறவு தாண்டிய ஓர் உயிர்ப் பிணைப்பு. ஒருவேளை கற்பனை. ஆகா, பெரும் இயற்கையோடு, நியதிகளோடு பிணைப்பா இது? அம்மா சாவில் வேறு நினைவுகள் கிளரக் கிளர நான் நடந்துகொண்டிருக்கிறேன். இந்த வராந்தா இந்தப் பக்கம் பதினெட்டு தப்படி. அந்தப் பக்கம் தெரியவில்லை. திரும்பி பதினெட்டு தப்படி வைக்கிறேன்...

      ஆம், இது பழகிவிடும். பழகிக்கொள்ளாமல் முடியாது, என்று குரல். தெளிவாகக் கேட்டது அந்தக் குரல்... அவள் அறிவாள். அந்தக் குரலுக்கு ஒரு வாசனை இருந்தது. குரலுக்கு வாசனை இருக்கிறதா என்ன? இல்லாமல்? வாசனை என்பது ஒரு 'முன்பே அறிந்த' நிலை. ஒருமுறை அந்த வாசனையை நுகர்ந்து விட்டால், பிறகு அதை மறப்பது என்பது இல்லை. பிறகு அந்த வாசனை கமழும் போதெல்லாம் அது அடையாளப்பட்டு விடும், துல்லியமாக. அந்தக் குரல், என்ன குரல் அது? மௌனம் பேசுமா? ஓருவேளை... ஆம் அதுவேதான். அந்த நபர், என்னுடன் கூடவே வரும் அந்த நபரின் குரல். பரிச்சயப்பட்ட பாவனை கொண்டாடும் குரல் தான் அது. எனக்கு அதை இப்போது நன்றாக அடையாளம் புரிகிறது.

      யார் நீ?

      நீயே சொல்...

      நான் அறிந்தேன், என்றாள் நெஞ்சு நிமிர்த்தி. நீ காலம்... என்றாள். காலமே, நான் ஒரு கழைக் கூத்தாடி கம்பிமேல் நடக்கிறதைப்போல, உன்னில் பாதம் பதித்து நடக்கிறேன்.

      நல்லது, என்றது காலம். நான் ஓடிக்கொண்டே யிருக்கிறேன். ஓடிக்கொண்டே யிருப்பது என் இயல்பு. நாய்ப் பிறவி நான். ஏன் ஓடுகிறேன் தெரியாது. ஏன் ஓடுகிறாய், என்று நாயிடம் கேட்டால் தெரியாது. அதனால் சும்மா இருக்க முடியாது.

      ஆனால் நான் நிற்கிறேன். உன்னோடு நான் கூட வரவில்லை, என்றாள் மாதங்கி. நீ ஓடிக்கொண்டிருக்கிறாய். நான் உன்னோடு கூட வரவில்லை. என் அம்மா இறந்து விட்டாள். நான் அப்படியே நிற்கிறேன்...

      இது ஒரு நிலை, என்றது காலம். பொருள்களுக்கு மூன்று பௌதிக நிலைகள் இருக்கிறது என்று புரிந்து கொண்டவர் தாமே நீங்கள்... மனிதர்கள்? இது ஆன்மிகத்தின் பௌதிக நிலை. திரவப்பொருள் ஒரு தட்பத்தில் உறைவு காண்கிறது. அதுபோன்ற நிலை இப்போது உனக்கு, என்றது காலம். நீ மீண்டும் உருகிக் கரைவாய். ஓடுவாய். இது நியதி, என்று புன்னகைத்தது.

      ஆம், சம்பவங்களின் முடிச்சுகள், தாமே இறுகி, கட்டுகள் தாமே அவிழவும் செய்கின்றன.... என்றாள் அவள். எல்லாமே பாவனைகள், ம்... சரிதான், என்று தலையாட்டினாள்.

      மீண்டும் வேலைக்குப் போக ஆரம்பித்திருந்தாள். அம்மாவின் கண்ணி விடுபட்டதும், எப்படியோ தாமே வேறு கண்ணிகள் உற்பத்தியாகி பிணைப்பு கொண்டாடி விடுகின்றன. கொடிகள் சுருள் சுருளான தாவரக் கம்பிகளை நீட்டி, கிடைத்ததைப் பற்றிக் கொள்கின்றன.

      மகா அலுப்பு கண்ட கணங்கள், அவையே மறு எல்லையைக் காட்டித் தருகின்றன. முடிவு என்பது இல்லை. முடிவு என்கிற நிலைக்கு மனம் வரும்போது புதிய வாசல்கள், கதவுகள் கண்ணில் படுகின்றன. அதுவரை அந்த வாசல்களை, கதவுகளை அறிந்தவர் எவரும் இலர். ஹா, சாகும்போது வாழ்க்கையின் வாசலும், வாழ்கையில் மரணத்தின் வாசலும் கண்ணில் படுகிற விந்தை. மனிதனுக்கும், ஒன்று இருக்கும்போது இல்லாததில் கவனம் போவது ஏன் தெரியவில்லை.

      உறவினர் வீட்டுக்கு அம்மா போனால், மாதங்கி வரலையா, என்று கேட்பார்கள். மாதங்கி போனால் கட்டாயம் கேட்பார்கள். அம்மா வரலையா?

      மறுகரையில் வாழ்கிறார்கள் எல்லாரும். காலடி பூமி தெரிகிறதே இல்லை... என்று ஆச்சர்யத்துடன் மாதங்கி நினைத்துக் கொண்டாள்.

      பையில் இருந்து செலவாகிப் போன பணத்தை யாரும் நினைத்துக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் நினைத்துப் பார்க்கிறதும் இல்லை. கையிருப்பில் உள்ள பணத்தைக் கணக்குப் பார்த்து அவர்கள் வாழ ஆரம்பித்து வீடுகிறார்கள்.

      வாழ அலுத்தவர்களை காலம் நெட்டித் தள்ளி முன்னே விடுகிறது. கூட ஓடுவதே பெரும்பாலும் நடக்கிறது. ஆனால் உணர்ச்சிகள், அவையே காலத்தைக் கண்டுகொண்டன. காலம் எப்போது மனித மனத்தில் அடையாளப் பட்டது? மரணம் என்பது அறியப்பட்ட போது, மரணத்தை மனிதன் கண்டுகொண்ட போது காலம் என்கிற அம்சத்தை அவன் புதிதாய் அறிய நேர்ந்தது. காலில் தட்டிய மூலிகை.

      மரணத்துக்கு முன், மரணத்துக்குப் பின்... பிறப்பின் நேர் எதிர்வாசல் மரணம். வாழ்க்கை என்பது என்ன? இந்த ஜனனத்துக்கும் மரணத்துக்கும் இடைப்பட்ட கால அளவு... என்னென்ன வியாக்யானங்கள்.

      மாற்றங்களின் அடிப்படையில் நிர்ணயம் கொள்கிறது காலம். இது அல்ல காலம். அதுவும் அல்ல. இதற்கும் அதற்கும் இடைப்பட்டது காலம். அதற்குத் தனியே விளக்கம் கிடையாது. இரட்டைக் கிளவி என்று சிறு வயசில் இலக்கணம் வாசித்திருக்கிறாள். அது ஞாபகம் வந்தது.

      அவள் ஜெயராமனைத் திருமணம் செய்துகொண்டாள். சிவப்பான, மீசையில்லாத ஜெயராமன். காலத்தின் அலையடிப்பில் அவள்பக்கமாக ஜெயராமன் ஒதுங்கினான். பைக் ஓட்டாமல் ஸ்கூட்டர் ஓட்டும் ஜெயராமன். அரைக்கை சட்டை தவிர்த்து உடம்பை முழுக்க மூடிய முழுக்கை சட்டைகள் அணிந்தான். நீறில்லா நெற்றி பாழ், என விபூதி பூசினான். கோவிலுக்குப் போய் தவறாமல் வெள்ளிக்கிழமைகளை அலங்காரம் பண்ணினான். வயசில் பெரியவர் பேசினால் பவ்யமாய்க் கேட்டுக்கொண்டான். ஆராவாரங்கள் தெரியாத ஜெயராமனை அவள் கல்யாணம் செய்துகொண்டாள். சாத்விக ஜெயராமன். ரௌத்திரம் பழகறதா, ஐயையோ, பாரதியார்... என்ன ஸ்வாமி இது, என்று பதறினான்.

      அத்தோடு அவளை மதிக்கத் தெரிந்த ஜெயராமன். நீ அழகா இருக்கே, என்று அவள் நெற்றியில் முத்தமிட்ட ஜெயராமன். என்னைப் பிடிச்சிருக்கா, என்று கேட்கிற ஆம்பளையை அவளுக்குப் பிடிக்காமல் என்ன? அழகு முக்கியமா, என்றுஅவள் கேட்டாள். அவன் ஒருவிநாடி அவளைப் பார்த்தான். பின் ஆமாம், என்கிறான் எளிமையாய். அழகு முக்கியம்தான், என்றாள். ஆனால் எல்லாவற்றிலும் அழகு இருக்கிறதே, என்றாள். உலகில் அழகற்றது எது சொல்லுங்கள், என்றும் கேட்டாள் மாதங்கி.

      நீ அழகானவள், என்றான் அவள் மார்பில் சாய்ந்து. உன்னைப் பார்த்தபின் உலகைப் பார்க்கிறேன், உலகம் அழகாய் இருக்கிறது, என்கிற ஆம்பளையை அவளுக்குப் பிடிக்காமல் என்ன? ரட்சிப்பு மனோபாவத்தை தன்னில் இருந்து அவள் கழற்றி யெறிய விரும்பினாள். அப்போது அம்மா. இப்போது ஜெயராமன். பெண்களே ரட்சகர்களா என்ன? அவளுக்குத் தெரியவில்லை.

      சற்றே கால்பாவாமல் பறந்த காலங்கள் அவை. வாசல் கோலமாய்ப் பொழுதுகள் அலங்கரித்துக் கொண்டன. சோழிகள் சிதறினாப்போல அவள் சிதறிச் சிரித்தாள். வாழ்க்கை அழகாய் இருந்தது. அம்மா, நான் சந்தோஷமா இருக்கேம்மா, என்றாள் மனசுக்குள். ஒருவேளை அம்மா இருந்திருந்தால் சந்தோஷப் பட்டிருப்பாள். இந்த ஜெயராமன், நான் அம்மாவைக் கூடவைத்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னால் மறுத்திருப்பானா? மாட்டான் என்று தான் நம்ப வேண்டும். நம்பாமல் முடியாது. ஒருவேளை என் அம்மாவின் பக்கத்தில் நானும் இவனிடம் வந்திருந்தால், அவன் வாழ்க்கையை இத்தனை அழகாய் உணர்வானா, அதுவும் தெரியவில்லை. அட, நானே அதை எப்படி உணர்வேனோ, அதுக்கே உத்திரவாதம் இல்லை. புதிர்களை விடுவித்தபடி, புதிர்களைப் போட்டபடி நகர்கிறது காலம்.

      புதிரே வாழ்க்கையின் சுவாரஸ்யம், இன்னும் மிச்சம் இருக்கிற பாவனையே சுவாரஸ்யம், என்று நினைத்துக்கொண்டாள்.

      காலம் அவளைப் பார்த்துப் புன்னகைத்தது. அன்றைக்கு, திகைத்த ஒருபொழுதில், உனது உறைவு நிலையில், கையறு நிலையில் நான் உன்னைச் சந்தித்தேன். இது கடந்துவிடும் என்றேன்... என்றது காலம். கடக்க வேண்டுமாய் நீ காத்திருந்தாய், என்றது.

      இப்போது இந்தப் பொழுதுகளை நீ போஷிக்கிறாய். இந்த உறைவு, இது கடக்க வேண்டாமாய் நீ அவாவுறுகிறாய்.... ஆனால், ஆனால் இதுவும் கடந்து விடும், என்றது காலம். பயமாய் இருக்கிறதா?

      இல்லை, என்றவள், வேறு வழியில்லை அல்லவா, என்றாள் மாதங்கி.

      காலப் பிரக்ஞை இல்லாமல் நாம் வாழ்ந்திருக்கலாம். இப்போதே கூட அது நம்மிடம் தான் இருக்கிறது. சாத்தியம் தான் அது. ஆனால் நடைமுறையில் நாம் பின்னிக்கொண்ட சிக்கல்கள், அதை அனுமதிக்குமா என்ன? எப்பவாவது வெயிலில் இருந்து நிழலைக் கண்டதும் ஒதுங்குவது போல நிகழ்கிறது இந்த உறைதல். மகா ஓட்டம் ஓடி அலுத்தால் ஓய்வில் கிடைக்கிறது இந்த உறைவு.

      ஹா, காலமே, என நெஞ்சு நிமிர்த்தினாள். நான் உன்னோடு கூட ஓடி, ஆனால் அதேசமயம் நின்று சுவாசிக்க வல்லமை கொண்டவள். அவ்வகையில் நான் உன்னைக் கடக்க முயல்கிறவள்.

      நல்லது, மானுடத்தின் யத்தனம் அது, என்றது காலம்.

      உணர்வு ரீதியான கடத்தல்கள் மங்கி பிற்பாடு மத்தாப்பூக்களாய் கரிக்கட்டையாகிப் போகும். ஆனால் நான் ஹா, கலையை நான் கண்டேன். மனிதன் கண்டான். காலத்தைச் சிறை வைத்தான். காலத்தை உறையச் செய்தான் மனிதன். கலை என்பது பெட்டகம், என்று நினைத்துக்கொண்டாள்.

      ஓவியம், சங்கீதம். புகைப்படம். ஆ, எழுத்து.

      காலமே நான் உன்னை வென்றேன், என்றாள்.

      சிறிய அளவு, என்றது காலம். புன்னகையுடன்.

      கையில் கடிகாரத்தை மாட்டிக்கொண்டு விடுவிடுவென்று வாசலுக்கு வந்தாள். ஒன்பது பஸ் போயிருக்குமா, தெரியவில்லை. தெருவில் நடக்கும்போது தன்னைப்போல நடையின் தாளகதி கூடியிருந்தது.

 ***

storysankar@gmail.com

91 97899 87842 / 91 94450 16842 whatsapp

 

Monday, June 21, 2021

 


தி. ஜானகிராமனின் ‘கமலம்’

கனலைக் கிளர்த்தல்

எஸ். சங்கரநாராயணன்

 *

ஜானகிராமனின் மண்வாசனைக்கு எப்போதுமே மகத்துவம் உண்டு. நாம் தாண்டிவந்த இளவயதை மண்வாசனை நினைவுபடுத்தி விடுகிறது. இன்பமும் துக்கமுமான நினைவுகள் அவை, என்றாலும் அவை கடந்துபோன துக்கம் என்ற அளவில் அதில் சிறு புன்னகையே இப்போது நம்மிடம் விளைவிக்கிறது. இளமைக்காலம் இப்போது நாம் ‘இழந்த’ ஒரு காலமாக ஏக்கத்துடன் நினைவுகூர வைக்கிறது. அதை அசைபோடுதல் ஆனந்தமயமானது.

எந்தவோர் இளைஞன் வாசித்தாலுமேகூட அந்த எழுத்தில் ஊடாடிநிற்கும் உயிர் அவனை படரும் கொடியாய்த் தீண்டிவிட வல்லது. குந்தித் தின்றால் குன்றும் மாளும்... என்பார்கள். அவசரப்படாத நிதானமான அசைபோடலுடன் தி.ஜானகிராமன் தன் பாத்திரங்களுடன் இயங்குகிறார். மனிதர்கள் அவர்களது சூழல், இயல்பு, அவைசார்ந்து அவர்களின் மனவோட்டங்கள், காரியங்கள்... அப்படி அவர் வாழ்க்கையின் இயக்கத்துக்கு மிகுந்த நியாயம் செய்கிறார். அதனால்தான் எத்தனை முறை வாசித்தாலும் திகட்டுவதே இல்லை அவர்.

சந்நிதானத்துத் திருவுருவைத் திரை விலக்கிக் காட்டுகிறார் தி.ஜானகிராமன்.

தி.ஜானகிராமனின் ‘கமலம்’ குறுநாவலை மீண்டும் வாசிக்கும்போது கிளர்ந்தெழுந்த ஜ்வாலை இது.

கல்கத்தாவில் இருந்து வந்திறங்கும் பெண், அவளுக்கு இருவாட்சி விரல்கள். அந்த அந்தியின் மங்கிய வெளிச்சத்திலும் ஆண்கள் பெண்ணின் பிரத்யேங்களைச் சட்டென்று கண்டுகொள்கிறார்கள் போலும். மாலை ஒளிமயக்கத்தில் மனசும் சித்திரம் தீட்டுகிறது.  கீழே இறங்கிய ஜோரில் அந்த ஊரைப்பற்றி ஆங்கிலத்தில் நல் வார்த்தைகள் உரைக்கிறாள் அவள். “என்ன அழகான கிராமம்! எத்தனை பச்சை! எத்தனை தினுசுப் பச்சை! இந்த நிசப்தத்தைப் பாருங்களேன். நீங்கள் நன்றாக அதைக் கேட்கவே முடியும் போலிருக்கிறதே! எனக்கு கேட்க முடிகிறது. இந்தமாதிரி ஒரு நிமிஷம் உட்காரத்தான் முடியுமா கல்கத்தாவிலேயும் பம்பாயிலேயும்? என்ன மௌனம்! என்ன மௌனம்! அப்புறம் இவரைப் பாருங்கள். என்னை முன்னேப் பின்னே பார்த்ததில்லை- எவ்வளவு அன்பாக எவ்வளவு பரிவாகப் பேசுகிறார்! ம்!...” என நீளும் உரையாடல். இது தன் மண்ணைவிட்டு விலகிப்போன தி.ஜானகிராமனின் குரலே போல எனக்குக் கேட்கிறது. எத்தனை பச்சை... எத்தனை தினுசுப் பச்சை. நெடுந்தொலைவு பயணப்பட்டு வந்து கிராமத்தில் வந்திறங்கிய அந்தப் பகலோடு அந்திக் கலப்பில், அறிமுகம் அற்ற நபர்கள் இப்படி வியப்பைக் கலந்து கொள்கிறார்கள். மனசில் அடிநாக்கின் காபி வண்டலாய் தி. ஜானகிராமனுக்கு தன் ஊர் இருக்கிறது.

நம் எல்லாருக்கும் இருக்கிறது, அதை அவர் உணர வைக்கிறார்.

ஆளுயரத்தில் நீர்மேல் பறக்கும் மீன்கொத்தி குபுக்கென்று தண்ணீரில் ஒரு முழுக்கு போட்டு பின் நீர்ப்பரப்போடு பறந்து போகிறது... என்ற வர்ணனையே சிந்தனைக்கு சுருதி சேர்க்கிற லயம்தான்.

கமலம் பற்றி ‘நான்’ (கதாநாயகன்) யோசனை இப்படி ஓடுகிறது. ‘இந்த உலகில் அழகாக இருக்க என்றே சிலர் பிறந்திருக்கிறார்கள். இவர்கள் பேசுவது அழகு. செய்வதுஅழகு. நடப்பது அழகு. கையைத் தூக்குவது அழகு. ஒவ்வொரு அசைவும் அழகுதான். எதையும் மனதில் வாங்கிக் கொள்ளும்போது, அதிலே ஒரு தனித்தன்மை, தனக்கென்று ஒரு தனிப்போக்கு. ஆனால் எல்லோரும் ஒப்புக்கொள்ளக் கூடிய போக்கு, என்ன வந்தாலும் நிதானமிழக்காத ஒரு பெருமிதம்- உணர்ச்சி பொங்கி அலைமோதாத ஒரு அமைதி. வெகுகாலப் பயிற்சியில், வெகுகாலத் தவத்தில் வரவேண்டிய பயிற்சிகள் இவை...’ என ஒரு வலை வசிகரத்தில் தன் வயமிழந்த சொல்லாடல். இது அவன் மனதின் அலைமோதுகிற அமைதியாக இருக்கிறதே. பெண் என்ற பிரக்ஞையே ஆணுக்குள் மௌனச் சுழிப்புகளை, உள்க் கனலைக் கிளர்த்தி விட்டுவிடும் போலும். ஆணுக்கு பெண்ணை வியத்தல் அன்றி வேறு போக்கு இல்லை போலிருக்கிறதே. வாழ்க்கை இவ்வாறாக தோரணங் கட்டிக் கொள்கிறாற் போல இருக்கிறதே. எல்லாருக்கும் பிடித்திருக்கிறதே இப்படியெல்லாம் சிந்தித்தபடி வயல்வெளிகளில் நீர்க்கரைகளில் உலாவல் வருவது.

சாமிநாதனுக்காகப் பெண்கேட்டு பெண்ணின் தகப்பனார் அருணாசலத்தோடு பேசுகிறார் கதாநாயகனின் மாமா. உரையாடலின் வாதத்தில் அவர் கையாளும் ஓர் உத்தி பற்றி தி. ஜானகிராமன் விளக்குகிறார். ‘மாமாவுக்கு இந்தத் தந்திரமெல்லாம் அற்றுபடி. திடீரென்று ஒரு பெரிய வார்த்தையாகப் போட்டு, சாதாரண வாதப் பிரதிவாதத் தரத்துக்கு மேலே பேச்சை உயர்த்தி விடுவார்- உயர்த்துவதுபோல் பொடி ஊதுவார்.’ - இது தி. ஜா.வுக்கும் பொருந்தும் அல்லவா? முன் பத்தியில் குறிப்பிட்ட பெண் விவரணையில், தவம், என்று வார்த்தை சேர்க்கப் பட்டிருப்பதை கவனிக்க வேண்டும்.

சாமிநாதனைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள நிர்பந்திக்க ‘நான்’ பாத்திரமே அடுத்து முயற்சி மேற்கொள்கிறது. அவரின் வார்த்தையெடுப்பு இப்படி அமைகிறது. ‘‘நமக்கெல்லாம் ஒரு கடமை, தர்மம், இதெல்லாம் இருக்கா, இல்லியா?” இங்கேயும் ஒரு அழுத்தமற்ற பொது வார்த்தைக்குப் பின், கனம் சேர்த்துக் கொள்கிறார்.

அந்த ஊர்க்காரப் பிள்ளை சாமிநாதன் பெரிய அரசு அதிகாரி வீட்டில் சமையல்காரன் என அமர்கிறான். அதிகாரி வெளிநாடு என்று அலுவலாகக் கிளம்பும்போது அதிகாரியின் மனைவியுடன் சொந்த ஊர் வருகிறான். வந்தபோது அவனுக்குக் கல்யாணம் பேசுகிறார்கள். அப்போதுதான் அவனுக்கும் அந்தச் சீமாட்டிக்கும் இடையே சிநேகம் இருப்பது ‘நான்’ என்கிற பாத்திரத்துக்குத் தெரிய வருகிறது. அதை சாமிநாதனே ஒரு நெருக்கடியில் விளக்குகிறான். தி.ஜா. அடுத்து இப்படி எழுதுகிறார். “எனக்கு அவன்மீது வந்தது கோபமா, பொறாமையா என்பது புரியவில்லை.”

மனசின் ஊடாட்டங்களை அத்தனை நேர்மையாக எழுதிச் செல்வதில் தி.ஜா.வின் முத்திரை அமைகிறது. எதையும் நியாயப் படுத்தாத, என்று கூட அல்ல, அதன் யதார்த்தத் தளத்தில் விளக்குகிற நேர்த்தி அவருக்கு உண்டு. அந்த உறவு-முரண் விஷயத்தை  விவரிக்கும் வேளையில், நேரடியாக சாமிநாதன் என்கிற பாத்திரமே தன் கதையைச் சொல்வதாக வைப்பதை கவனிக்க வேண்டும். சாமிநாதனின் வியாக்கியானத்தில் ராமாயணம் வருகிறது. அனுமார் வருகிறார். மண்டோதரியை சீதை என நினைத்து மயங்கி ஏமாந்த கதை வருகிறது. “ஒருநாளிப் போது ஒம்பது சாஸ்திரம் படிச்சாலும் குரங்கு குரங்குதானே?”

பிறகு கதையில் இரண்டு விஷயங்கள் வைக்கிறார் தி.ஜா. ஒன்று ஊரில் கமலம் மற்றும் சாமிநாதன் பற்றி அரசல் புரசலாக வதந்தி கிளம்புவதை அவர்கள் இருவருமாகவே ஒரு வேடிக்கை போல வளர்த்து விடுகிறார்கள், என்கிறார். சாமிநாதன் கல்கத்தாவில் பி.ஏ. படித்து எம்.ஏ. போகிறான், என்று ‘நான்’ என்ற பாத்திரத்துக்கு கமலம் கடிதம் எழுதுகிறாள். வதந்தியை வளர்த்து வேடிக்கை பார்த்தவர்கள் இப்போது விளக்கம் தர வேண்டிய, கடிதம் எழுத வேண்டிய காரணம் தெரியவில்லை. சாமிநாதன் எனக்கு மகன் போன்றவன், என்கிற விளக்கமும், கமலத்துக்குப் பிறந்த பையன் இறந்துவிட்டான் என்கிற விவரமும், சாமிநாதனுக்கு காச நோய் என்கிற மேலதிகத் தகவலும் தரப் படுகின்றன.

உணர்வுகளின் ஊடாட்டத்தை தி.ஜானகிராமன் போல சாம்பிராணியாய்ப் பரத்தி விரித்தவர் வேறு யார். மாமா பாத்திரத்தின் தோற்காத சாமர்த்தியத்தை ஊதிப் பெருக்கி விவரித்துவிட்டு பிறகு அது காயப்படுவதைக் காட்டுவது, மிக யதார்த்தமாக அதை சாதிப்பது தி.ஜானகிராமனின் தனி அடையாளம். உலக் பொது அடையாளங்களை தனி மனிதப் பாத்திர வழி முன்னிறுத்தும் வல்லமையான எழுத்து தி.ஜா.வுடையது. மீண்டும் மீண்டும் வாசித்து இன்புறும் எழுத்தாக அது காலந்தோறும் மிளிர்கிறது, இருளில் ஒளிரும் செவ்வட்டையின் புளூஜாக்கர் போல... அதன் வசிகரமும் ஆபத்துமாக. எத்தனை வயதானாலும் மனம், அதற்கு வயதாவதே இல்லை. அது பொய்யல்லவே.

•••

 

 

 

 

 

 

Saturday, June 19, 2021

 


சிம்மாசனம்

அ.முத்துலிங்கம்

 

தினமும் 5 நிமிடம் பிந்திவரும் சோமபாலாவுக்கு வயது முப்பதுக்குள்தான் இருக்கும். ஆறடி உயரமாக இருப்பான். அடிமரக்குத்திகளை  தோளிலே அனாயாசமாக தூக்கி எறிவதை கண்டிருக்கிறேன். அப்படிச் செய்யும்போது அவன் புஜத்தில் திரளும் தசைநார்கள் முறுகி உருண்டு பெருகி புஜத்தை உடைத்து வெளியே வந்துவிடுமோ என்ற அச்சத்தையூட்டும். கைகட்டி முன்னே நின்றான். ஆசனத்தில் உட்காரமாட்டான். அவன் கையில் பிடித்திருந்த அட்டையை நீட்டினான். ஐந்து நிமிடம் பிந்தி வந்ததால் வருகை நேரம் அட்டையில் சிவப்பாக அச்சடிக்கப்பட்டிருந்தது.

 

ஆயிரம் பேர் வேலைசெய்யும் அந்த தொழிற்சாலையில் 6 மாதம் முன்னர்தான் வருகை பதிவு மணிக்கூடுகள் இரண்டை நிறுவியிருந்தார்கள். தொழிலாளிகள்  நிரையாக வந்து தங்கள் தங்கள் அட்டைகளை மணிக்கூட்டில் செருகி  வருகை நேரத்தை பதிவுசெய்வார்கள். 5 நிமிடம் பிந்தி வந்தால் 15 நிமிடக் கூலி வெட்டப்படும். 15 நிமிடம் பிந்தி வந்தால் அரைமணி நேரக் கூலி. அரை மணி பிந்தி வந்தால் ஒரு மணிநேரக்கூலி. ஒரு மணி நேரம் பிந்தி வந்தால் தொழிலாளி அன்று உள்ளே அனுமதிக்கப்படமாட்டார். .

 

சோமபாலா தினமும் பிந்தி வந்ததால் என் முன்னே நின்றான். அந்த தொழிற்சாலை கொழும்பில் இருந்து 125 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஜிந்தோட்ட என்னுமிடத்தில் இருந்தது. முழுக்க முழுக்க சிங்களப் பிரதேசம். அங்கே வேலை செய்தவர்களில் நான் ஒருவனே தமிழ் ஆள். நூறு சிங்கள வார்த்தைகளுக்கு மேலே எனக்கு பேசத் தெரியாது. நான் சொல்ல வேண்டியதை அந்த நூறு வார்த்தைகளுக்குள் சுருக்கி சொல்லிவிடவேண்டும். ’நீ பிந்தி வருவதால் உன் கூலியை வெட்டிவிடுகிறார்களே. வீட்டிலேயிருந்து ஐந்து நிமிடம் முந்தி புறப்பட்டால் போதுமே. என்ன பிரச்சினை?’  என்றேன். சோமபாலா குனிந்து பார்த்தபடியே நின்றான். ஏதோ பேசவிரும்பினான் ஆனால் அவனால் முடியவில்லை. அத்தனை பலசாலியான ஒருவன் என் முன்னே கூனிக்குறுகி நின்றது எனக்கே சங்கடமாக இருந்தது. ’சரி போ’ என்றதும் அவன் போனான். இன்னொரு தொழிலாளி கழுத்தை வளைத்து தலையை மட்டும் நீட்டிப் பார்த்தான். யாரோ பக்கவாட்டில் பிதுக்கி பிதுக்கி நேராக்கியதுபோல உயரமாகவிருந்தான். வருகை அட்டையுடன் உள்ளே நுழைந்தான்.

 

அரசாங்கத்துக்கு சொந்தமான அந்த ஒட்டுப்பலகை நிறுவனம் 20 வருடங்களாக இயங்கியது. தினமும் பெரிய பெரிய லொறிகளில் காட்டு மரங்கள் வந்து குவிந்தன. எந்த நேரமும் மரங்களின் மணம் அங்கே சூழ்ந்திருந்தது. பிரம்மாண்டமான மெசின்களில் மரங்கள் சுழல அவற்றை கூரிய கத்திகள் ஒரு பக்கத்தில் செதுக்க மறுபக்கத்தில் அவைகள் நீண்ட மரத்தாள்களாக விழுந்தன. இந்த இழைகளை ஒன்றுக்கொன்று குறுக்காக வைத்து 3,5,7,9 மரத்தாள்கள் என ஒட்டி வெவ்வேறு தடிப்புகளில் பலகைகள் செய்யப்பட்டன. அவை வழுவழுப்பாகவும் லேசாகவும் இருக்கும். ஆனால் சாதாரண மரப்பலகைகளிலும் பார்க்க வலுவானவை. ஆகவே விற்பனை அமோகமாகவிருந்தது..

 

தொழிற்சாலையில் வேலை செய்தவர்களில் அதிகமாகப் படித்தவன் சோமபாலா. ஆனால் அவன்  மெசின்களில் வேலை செய்வதில்லை. மரங்களை தரம் பிரிக்கும் பகுதியிலோ மற்றும் மரங்களை மெசினுக்குள் செலுத்தும் பகுதிகளிலோ இல்லை. ஒட்டும்பகுதியிலும் மினுக்கும் பகுதியில்கூட அவனுக்கு வேலை கிடையாது. மரத்துண்டு கழிவுகளை கூட்டி அள்ளும் பகுதியில் வேலை செய்தான். ஆனால் அவனால் நூற்றுக்கு மேல் மரங்களை அடையாளம் காணமுடியும். அவற்றின் குணங்களும் உபயோகங்களும் அவனுக்கு மனப்பாடம். தச்சு வேலையின் நுட்பங்கள்  அறிந்தவன். அவனுடைய பரம்பரைத் தொழில் அது. ஆனாலும் அங்கே ஆகக் கடைநிலையில் எல்லோருடைய ஏளனத்தையும் சகித்துக்கொண்டு வேலை செய்தான். .

 

ஒருநாள் சோமபால அரைமணி நேரம் பிந்தி வந்ததால் அவனுடைய மேலாளர் அவனை மோசமாகத் திட்டினார். ’உன் கூலியைத்தான் தண்டனையாகப் பிடிக்கிறார்களே. எதற்காக அவர் உன்னைத் திட்டினார்?’ என்று கேட்டேன். ’நான் கின்னர சாதி. ஆகக் கீழான சாதி. அப்படித்தான் திட்டுவார்கள்’ என்றான். ’உனக்கு பழகிவிட்டதா?’ என்றேன். கிட்ட வந்து காதோடு தொழிற்சாலையின் பொது மேலாளர் என்ன சாதி தெரியுமா என்றான். எனக்குத் தெரியாது. என்றேன். தேவ சாதி என்றான். அப்படி என்றால்? எங்கள் பழைய அரசர்கள் எல்லாம் தேவ சாதி. ஆக உயர்ந்தது என்றான். பின்னர் இருபக்கமும் பார்த்துவிட்டு ’உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? எங்கள் பொதுமேலாளர் ஒரு சிம்மாசனம் செய்கிறார்’ என்றான். ’சிம்மாசனமா எதற்கு?’ ’உட்காரத்தான்.’ .

 

’பொது மேலாளருக்கு தன் முன்னோர்கள் அமர்ந்ததுபோல ஒரு சிம்மாசனத்தில் உட்காரவேண்டும் என்ற ஆசை தோன்றிவிட்டது. காட்டிலிருந்து வந்து இறங்கும். மரங்களில் சிறந்த மரங்களைத் தேர்ந்தெடுத்து நல்ல சிம்மாசனம் ஒன்றை உருவாக்கச் சொல்லி கட்டளையிட்டிருந்தார். அதற்காகத் தேர்வு செய்யப்பட்டவன் துணிந்து பொய் பேசுகிறவன். அவனை நம்ப முடியாது. அன்னாசிப் பழம் தலையில் விழுந்தது என்று கூசாமல் சொல்வான். அவனுக்கு தச்சுவேலையும் தெரியாது, சிற்ப வேலையும் தெரியாது. பல மரங்களைப் பாழாக்கிவிட்டான். சிம்மாசனத்தின் கால்கள் சிங்கத்தின் முன்னங்கால்கள்போல இருக்கவேண்டுமென்று பொது மேலாளர் சொல்லியிருந்தார். அவனால் கழுதைக் காலைக்கூட உருவாக்க முடியாது.’

 

’ஒன்றிரண்டு மரங்கள் பொதுமேலாளர் சார்பில் வீணானால் என்ன? பெரிய நட்டம் ஏற்பட்டுவிடுமா?’  ’நீங்களே இப்படி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் வீணாக்குவது சாதாரண மரங்கள் அல்ல. அபூர்வமான மரங்கள். முன்பு எங்களை ஆண்ட வெள்ளைக்காரர்கள் கலுமெதிரிய மரங்களை கப்பல் கப்பலாக இங்கிலாந்துக்கு கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். நூறு வயது மரங்களை அவர்கள் வெட்டியபோது அவற்றுக்கு ஈடாக புதிய மரங்களை நடவில்லை. இங்கிலாந்திலே இந்த மரங்களில் செய்த மேசைகளிலும் நாற்காலிகளிலும் அமர்ந்து உணவருந்துகிறார்கள். இப்படியான மரம் அவர்களுக்கு எங்கேயும் கிடைக்காது. அத்தனை வழுவழுப்பானது; வலுவானது. மினுக்கினால் அதில் முகம் பார்க்கலாம். அவர்கள் அழித்தது போதாதென்று வேலை தெரியாதவர்களும் அழிக்கிறார்கள். கலையம்சம் சிறிதும் இல்லாதவர்கள் மரம் வெட்டும் வேலையை செய்யலாம். மரத்தில் ஒன்றை உருவாக்கும் வேலையை செய்யக்கூடாது. மூளைக்குள் ஏதாவது இருந்தால்தான் அது கலையாக மரத்தில் வெளிப்படும்.’

 

சோமபால இத்தனை கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. ’என்ன மரம் சிம்மாசனத்துக்கு உகந்தது என்று நீ நினைக்கிறாய்?’ ’முன்பு ஒரு வெள்ளைக்கார கவர்னர் இருந்தான். அவன் பெயர் சேர் ரோபர்ட் பிரவுண்றிக். இவன் இங்கிலாந்துக்கு காலண்டர் மரங்களை கடத்திப் போய்விட்டான். அவன் வீட்டுக் கதவுகளைக்கூட இந்த வகை மரத்தில்தான் செய்தானாம். அதிலும் மோசமாகவல்லோ இப்பொழுது நடக்கிறது. மரக் கழிவுகளை தினமும் கூட்டி அள்ளும் வேலைசெய்யும் என்னால் இவர்கள் செய்யும் அநியாயங்களை பார்த்துக்கொண்டு இருக்கமுடியவில்லை.’ நான் கேட்ட கேள்விக்கு அவன் பதில் சொல்லவே இல்லை. .

 

’மரங்களில் இத்தனை நேசம் வைத்திருக்கும் நீ எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தாய்?’ ’வேறு என்ன? மரப்பற்றுத்தான். ஒவ்வொருநாளும் என்னால் மரங்களுடன் வாழமுடிகிறது. அவற்றின் சரித்திரத்தை படிக்கிறேன். எத்தனை ரகங்கள். 60 அடி 70 அடி உயரமான மரங்கள். 20 அடி சுற்றளவான மரங்கள். 100 வயது வாழ்ந்த மரங்கள். ஆனால் இவை எல்லாம் அழிக்கப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. இந்த வேலை எனக்கு பொருத்தமானது இல்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ ’நீ அநேக கேள்விகள் கேட்கிறாய்.’ ’கேள்விகள்தான் முக்கியம். பதில்கள் அல்ல. உலகம் முன்னேறுவது கேள்விகளால்தான்.’ ‘என்ன செய்யப் போகிறாய்?’’ ’எனக்கு என்னவோ. மரத்தை அழித்துக் கிடைக்கும் காசில் வாழ்வது பிடிக்கவே இல்லை. ஒருநாள் வேலையை விட்டுவிடுவேன்.’

 

என்னுடைய தட்டச்சு மெசினில் யூ, கே, எக்ஸ் போன்ற எழுத்துக்கள் அடித்தவுடன் அவை தாளுடன் ஒட்டிவிடும். அவற்றை விரல்களால் கிளப்பிவிடவேண்டும். அந்த எழுத்துகள் வராத வசனங்களாக உண்டாக்கி டைப் அடித்துக்கொண்டிருந்தேன். வேலை முடிந்த சமயம் வாசலில் நிழல் தட்டியது. சோமபாலாவைப் பார்த்து திடுக்கிட்டேன். முகம், முடி, கை, கால் எல்லாம் மரத்தூள் அப்பியிருந்தய்து. ஆளே மாறிவிட்டான். . ’உள்ளே வா’ என்றேன். குறுக்காக அறுத்த முழுப் பலகை ஒன்றை தலையிலே தூக்கி வந்திருந்தான். வட்டமான பலகையின் விளிம்புகளை இரண்டு கைகளை நீட்டினாலும் தொடமுடியாது. அதன் சுற்றளவு 20 அடி இருக்கும். மரத்தின் கனத்தில் அவன் புஜங்கள் முறுகி ஏறின. நிலத்தில் கிடத்திவிட்டு ’இது என்ன மரம் தெரியுமா?’ என்றான். ’தெரியாது’ என்றேன். ’போபாப். சிங்களத்திலும் தமிழிலும் இதன் பெயர் பெருக்கா மரம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்த வகை மரம் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தது. வளையங்களை எண்ணிப் பார்த்தால் வயது தெரியும். இந்த மரத்தின் வயது தெரியுமா? 400 வருடம்.  400 வயது மரத்தை வெட்டிவிட்டார்கள். இதைப்போல இன்னொரு மரம் கிடைக்க நாம் 400 வருடம் காத்திருக்க வேண்டும். இதோ இந்த நடுப்புள்ளி இருக்கிறதே இதுதான் இது தோன்றிய காலம். அரசன் விமலதர்மசூரியா ஆண்ட காலம். 400 வருடங்களுக்கு முன்னர் கண்டியை ஆண்டவன். கிறிஸ்தவ சமயத்திலிருந்து புத்த சமயத்துக்கு மாறியவன். பெரிய படையோடு வந்த போர்த்துக்கீசியரை தன் சிறிய படையை திரட்டி தந்திரத்தால் துவம்சன் செய்தவன். அவன் காலத்தில் தோன்றிய மரம் இது. இதோ இந்தப்புள்ளியில் இலங்கையின் கடைசி அரசன் சிறீ விக்கிரமராஜசிங்கன் வேலூர் சிறையில் இறந்தான். இந்தப் புள்ளியில் இலங்கை சுதந்திரம் அடைந்தது.’ இப்படியே சொல்லிக்கொண்டு போனான்.

 

’அவ்வளவு நிச்சயமாகச் சொல்ல முடியுமா?’ ’முடியும். அத்துடன் இன்னும் ஒன்று. இந்த மரம் அரிதானது. கடைசிக் கணக்கெடுப்பில் 40 மரங்கள்தான் இருந்தன. அதிலே ஒன்றை இன்று வெட்டிவிட்டார்கள். அதுதான் எனக்கு வருத்தமாயிருக்கிறது. மரங்களை அழித்து வரும் காசில் வாழ்வது வெட்கமாயிருக்கிறது. நான் வேலையை விடப்போகிறேன்.’  ’நீ வேலையை விடமாட்டாய். மரங்களை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறாய். அவற்றின் அருகாமை உனக்கு தேவை.’

 

அவன் சொன்ன மாதிரி சோமபாலா வேலையை விட்டுவிட்டான் என்று நினைத்தேன். ஒருநாள் காலை வருகை அட்டையுடன் எனக்கு முன்னால் நின்றான். ’என்ன மறுபடியுமா?’ என்றேன். அவனுக்கு கோபம் வந்துவிட்டது. அவன் அப்படிப் பேசியதே இல்லை. ’நான் என்ன குழந்தைப் பிள்ளையச? திருப்பித் திருப்பி சொல்லி என்ன பிரயோசனம். நான் பிந்தி வந்த காரணம் தெரியுமா? நானும் என் தகப்பனாரும்தான் வீட்டில். எனக்கு ஒருவித உதவியும் இல்லை. நான் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர் வெளியே போய் திரும்பிவர வழி தெரியாமல் தொலைந்துபோய் விடுகிறார். அவருக்கு மறதி வியாதி. நான் காலையில் அவரைக் கழுவி சாப்படு ஊட்டி கட்டிலில் படுக்கவைத்து, முழங்காலில் முத்தமிட்டுவிட்டு, கட்டிலோடு சேர்த்து அவரைக் கயிற்றினால் கட்டிவிட்டு வேலைக்கு வருகிறேன். சிலசமயம் கொஞ்சம் நேரம் பிந்திவிடுகிறது. நான் மாலை போய்த்தான் அவரை விடுதலை செய்கிறேன். மறுபடியும் அவரைக் கழுவி சாப்பாடு கொடுத்து முழங்காலில் முத்தமிட்டு அவரைத் தூங்கவைப்பேன். நான் பிந்தி வந்தால் தண்டனையாக கூலியை பிடித்துவிடுகிறீர்கள். இதிலே என்ன பெரிய நட்டம். நான் மெசின் வேலையா செய்கிறேன். எனக்கு கூட்டி அள்ளும் தொழில்தானே.’

 

அந்த நேரம் பார்த்து பிரியங்கா உள்ளே நுழைந்தாள். பொது மேலாளரின் காரியதரிசி. அங்கே வேலை செய்யும் ஒரே பெண். அவளுடைய உடை பழைய காலத்து ராணியின் ஆடைபோல காலையும் தாண்டி நீண்டிருந்ததால் நிலத்திலே அரைந்தது. சேற்றிலே நடப்பதுபோல காலைத் தூக்கி தூக்கி வைத்து நடந்தாள். நான் பாடுபட்டு அச்சடித்த தாளைத் திருப்பித் தந்தாள். யூவோ அல்லது கேயோ தாளில் பதியவில்லை என்று மனேஜர் சுட்டிக்காட்டியிருப்பார். ’டைப்ரைட்டர் பழுதுபட்டுக் கிடக்கிறது’ என்றேன். அவள் ஒன்றுமே பேசாமல் கண்களை எறிந்து கூரையை பார்த்து நாடகத்தனமாக சுழற்றிவிட்டுத் திரும்பினாள். நான் சோமபாலாவிடம் ‘இந்த பெண்ணை உனக்குப் பின்னால் அழைத்துக்கொண்டு போ. அவளுடைய ஆடை நீ கூட்டவேண்டியதை எல்லாம் கூட்டிவிடும்.’ என்றேன். சோமபாலா வயிற்றைப் பிடித்துக்கொண்டு குனிந்து குனிந்து சிரித்தான். சிரிக்கும்போதுகூட அவன் புஜங்கள் திரண்டன.

 

அறை மகிழ்ச்சியால் நிரம்பியதும் நான் கேட்டேன். ‘உனக்கு உதவ யாருமே இல்லையா?’ ’நான் ஏன் மற்றவர்களிடம் உதவி கேட்கவேண்டும். இது என் கடமையல்லவா? ஒரு மரத்தின் நடுதான் அதன் பலம். வைரமாகவிருக்கும். மரத்தின் மூத்த பகுதியும் அதுதான். ஆனால் மரத்துக்கு வேண்டிய உணவை அதனால் கடத்த முடியாது. மரத்தின் பட்டைகள்தான் உணவை கடத்தும் வேலையை செய்கின்றன. அந்தப் பகுதி இளையது. மனிதர்களும் அதுபோலத்தான். முதியவர்கள் குடும்பத்தின் பலம். இளையவர்கள்தான் வேண்டிய உணவை சம்பாதிக்கவேண்டும்.’

 

அதன் பின்னர் அவன் இரவு வேலைக்குச் மாறிவிட்டதாகச் சொன்னார்கள். அவனைச் சந்திக்கும் சந்தர்ப்பமும் குறைந்துபோனது. ஒருநாள் இரவு வேளையின்போது லொறியில் வந்த மரங்கள் கட்டு அறுந்து விழுந்து உருளத்தொடங்கின. பள்ளத்தில் அவை வேகம் பிடித்து ஓடியதை சோமபாலா கண்டான். அங்கே வேலைசெய்த ஆட்கள்மீது மரம் ஏறினால் ஒன்றிரண்டு பேர் சாவது நிச்சயம். சோமபாலா பாய்ந்து வந்து மரக்குத்தி ஒன்றை குறுக்காகத் தூக்கி எறிந்து விபத்தை தவிர்த்துவிட்டான். அடுத்தநாள் காலை அதுவே பேச்சாக இருந்தது. .

 

அந்த வருசம் தொழிற்சாலை நடாத்தும் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அவனுக்கு பரிசு கிடைக்கும் என்று பேசிக்கொண்டார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆட்களின் உயிரை அல்லவா காப்பாற்றியிருந்தான். ஆனால் ஒரு பரிசும் கிடைக்கவில்லை. பொது மேலாளர் என்ன பேசினார் என்ற வதந்தி வெளியே உலாவியது. அவர் சொன்னாராம் ’அவனுக்கு பரிசு கொடுப்பதிலும் பார்க்க ஒரு தமிழனுக்கு கொடுக்கலாம்’ என்று. ’நீ பரிசு எதிர்பார்த்தாயா?’ என்று கேட்டேன். அவன் சொன்னான் ’மரம் உருளத் தொடங்கியபோது நான் ஓடிப்போய் நிறுத்தினேன். அந்த நேரம் பரிசு கிடைக்குமா என்றெல்லாம் யோசித்தது கிடையாது. அவர் அவருக்கு என்ன எழுதி வைத்திருக்கிறதோ அது அதுதான் நடக்கும்’ என்றான். நான் ஒன்றுமே சொல்லவில்லை. ’நான் வேலையை விட்டுவிடப்போகிறேன்’ என்றான். நான் திரும்பி பார்க்காமல் நடந்தேன்..

 

சோமபாலா வேலையை விடவில்லை. இரண்டு வாரம் கழித்து நான்தான் என் வேலையை துறந்தேன். சாமான்களை பயணப் பெட்டியில் அடுக்கிக்கொண்டு பஸ்ஸுக்கு புறப்பட்டபோது. பாதி வழியில் சோமபாலாவிடம் சொல்லவேண்டும் என்று தோன்றியது. அவன் இரவு வேலையில் இருந்தான். தொழிற்சாலை இரவு நேரத்தில் முற்றிலும் வேறுமாதிரி காட்சியளித்தது. வாசலில் இரண்டு பெரிய வருகைப் பதிவு மணிக்கூடுகள் நின்றன. காலை நேரத்தில் தொழிலாளர்கள் வரிசையாக நின்று அடித்துப்பிடித்துக்கொண்டு தங்கள் நேரங்களை அட்டைகளில் பதியும் காட்சி  நினைவுக்கு வந்தது. நான் சென்ற நேரம் அங்கே ஒருவரும் இல்லை.

 

சோமபாலாவைத் தேடிக்கொண்டு போனேன். வழக்கமான இடத்தில் அவனைக் காணவில்லை. மெசின்கள் காது செவிடாகும் ஒலியை எழுப்பின. கட்டடத்தின் ஒதுங்கிய சின்ன மூலையில் தனியாளாக அவன் வேலை செய்தான். என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் வேலையில் மூழ்கினான். ’உன்னை பழைய இடத்தில் தேடினேன்’ என்றேன். என் முகத்தைப் பார்க்காமலே பதில் சொன்னான். ’பல மாதங்களையும், அபூர்வ மரங்களையும் வீணடித்துவிட்டார்கள். இப்பொழுது என்னிடம் வேலை வந்திருக்கிறது. பழைய கண்டி அரசர்கள் தங்கள் அரண்மனைகளை அலங்கரிப்பதற்கு விரும்பி பயன்படுத்தியது இந்த மரம்தான். இதன் பெயர் ஹுலான்ஹிக். எப்படியோ வெள்ளைக்காரனிடமிருந்து இது தப்பிவிட்டது. இதிலிருந்து எழும்பும் நறுமணம் அரண்மனையையே நிறைக்கும். கறுப்பு என்பது நிறமே இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். மரத்தை மினுக்க மினுக்க அதன் மினுமினுப்பு கூடிக்கொண்டே போகும். இதைப்போல ஒளிவிடும் கறுப்பு மரம் உலகத்திலேயே கிடையாது.’

 

கைப்பிடியில் இரண்டு வாய் திறந்த சிங்கங்கள் தத்ரூபமாக நின்றன. கால்களும் பாய்வதற்கு தயாரான சிங்கத்தின் கால்கள் போலவே அமைந்திருந்தன. ஒரு குழந்தைப் பிள்ளையை அரவணைப்பதுபோல மெதுவாக அந்த கைப்பிடிகளை மினுக்கினான். அது கறுப்பு  ஒளியை வீசியது. அவன் வேலையில் ஆழ்ந்துபோய் இருந்தான். கலை என்று வந்துவிட்டால் எல்லாம் மறந்துபோகும் போலும். ’இதைப்போன்ற  நார்வரிகளை எங்கேயும் பார்க்க முடியாது. அவற்றின் உள் அணுத்துகள்களின் ஒழுங்கமைதி அற்புதமானது. மரங்களின் அரசன் இதுதான்.’

’சிம்மாசனமா செய்கிறாய்?’

எங்குமே பார்க்காத ஒரு பார்வை அவனுக்கு வந்தது. ’நான் நாற்காலிதான் உருவாக்குகிறேன். ஒரு மன்னன் உடகார்ந்தால்தான் அது சிம்மாசனம் ஆகும்.’.

 

’நான் வேலையை விட்டுவிட்டேன். உன்னிடம் சொல்லிவிட்டுப் போவதற்காகத்தான் வந்திருக்கிறேன்’ என்றேன். அவன் ஒன்றுமே பேசவில்லை. குனிந்து மிகக் கவனமாக மினுக்கிக்கொண்டு இருந்தான். ஏதோ அவன் மூளையின் உள்ளே ஓடியது. ஆனால் சொல்லாக வடிவம் பெறவில்லை. அவனுக்கு கிடைக்கவேண்டிய கூலியை தாறுமாறாக வெட்டிய ஒருவரிடம் என்ன பேச்சு என்று அவன் நினைத்திருக்கலாம்.

 

நான் கொழும்புக்கு போகும் கடைசி பஸ்ஸைப் பிடித்தேன். மூன்று மணிநேரம் பயணம் செய்யவேண்டும். கட்டிலில் கட்டப்பட்டு கிடக்கும் கிழவர் ஒருவரின் ஞாபகம் மனதில் வந்தது. ஆறாம் ஜோர்ஜ் மன்னர் அமர்வதற்கு தகுதியான உத்தமமான சிம்மாசனம் கறுத்து மினுங்கி உருவாகும் காட்சி தொடர்ந்தது. சிவப்பு மையில் நேரம் அச்சடித்த அட்டைகளை வைத்துக்கொண்டு வரிசையாக தொழிலாளர்கள் நிற்கும் காட்சி அடுத்து. தன்பாதை வெளிச்சத்தை தானே உண்டாக்கிக்கொண்டு பஸ் இருளை நோக்கி ஒளிக்கோடாக ஓடிக்கொண்டிருந்தது. ஒருவர் வாழ்நாளில் அருமையாகக் கிடைக்கும் என் நடுநிசி மணித்தியாலங்கள், தன் தகப்பனாரிலும் பார்க்க மரங்களை நேசிக்கும் ஒருவனைப்பற்றி சிந்திப்பதிலேயே கழிந்தது.

***

 

Sunday, June 6, 2021

 


அபிராமியின் கடைக்கண்கள்

எஸ்.சங்கரநாராயணன்

 (நன்றி / பேசும் புதிய சக்தி, ஜுன் 2021) 

மைதியான இரவுகளில் சில சமயம் தெருநாய்கள், அமைதி உள்குடையப் பட்டு ஆத்திரத்துடன் குரைப்பு எடுப்பதைப் போல, அப்பாவுக்கு அடிக்கடி இராத்திரி இருமல் வரஆரம்பித்து விடுகிறது. சிறு மழை, தூறல் கூட அவருக்கு உடம்பைப் படுத்தி விடுகிறது. இரவிருளின் நிழல் சித்திரம் எதிலும் அவர் கலவரப் பட்டாரா? பகலிலேயே அவர் அத்தனை தைரியசாலி என்று சொல்ல முடியாது. மிகக் குறைவாகவே, தலையாட்டலுடன் யோசித்து ஓரிரு வார்த்தை பேசுவார்.

உண்மையில் அந்த உடல் படுத்தலுக்கு அவரது வாழ்க்கைசார்ந்த நம்பிக்கை யின்மையே, பயமே காரணம் என்று சேதுவுக்குத் தோன்றியது. சேது இப்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். ஊரில் ஒரே பள்ளிக்கூடம்தான். நடந்தே போய் நடந்தே திரும்பி வருகிற அளவில், ஆனால் தூரம் அதிகம். மீசை அரும்பும் அந்த வயது அப்படி. திடீரென்று மூளை சொந்தமாக யோசித்து, முடிவுகள் எடுக்க பரபரப்பாகிறது. எல்லாவற்றையும் சந்தேகமாகவும் தலைகீழாய்ப் புரட்டியும், சுய சிந்தனையுடன் சீர் தூக்கியும் பார்க்க ஆரம்பிக்கிறது. மீசைக்கும் அதற்கும் தொடர்பு இருக்கலாம். அதேவயதுப் பெண்கள்? அவர்கள் திரண்டு குளிக்கிற அளவில் சுய முடிவுகளுக்குத் தயாராகிறதாகக் கொள்வதா?

அந்த வயதில் ஆண்கள் பெண்களுக்குப் புதுசாய்க் காட்சி அளிக்க ஆரம்பிக்கிறார்கள். அதிலிருந்து எல்லாம் மெல்ல மாற ஆரம்பித்து விடுகிறது போலும்.

இந்த முன்தலைமுறை... என்று அவர்களுக்கு, இளைஞர்களுக்கு ஆயாசமாய் இருக்கிறது. இப்படி எதற்கெடுத்தாலும் தயங்கி, பயந்து, தடுமாறி, திகைத்து, திண்டாடி... ஆகப்போவது என்ன? அப்பாவுக்கு ஒரு சிமென்டு குடோனில் வேலை. உள்ளே வந்து அடுக்கும் சிமென்டு, வெளியே போகும் சிமென்டு என்று கணக்கு அவரிடம். அதில் துல்லியமாக இருக்க அத்தனை மெனக்கிடுவதும், அதுபற்றிய பெருமையும். சேதுவுக்கு அது ஆச்சர்யமாய் இருந்தது. தவிரவும் கடையின் வரவு செலவுக் கணக்குகள் அப்பாவிடம் இருந்தன. முதலாளியின் வலக்கை நானாக்கும், என்கிற பெருமிதம். நாற்பது வருட உறவு  அது. இங்கே வந்து வேலையமர்ந்த பின் தான் அவருக்குக் கல்யாணம் ஆயிற்று. கணேசமூர்த்தி முன்னிலையில் தான் கல்யாணம். பிறகு சேது பிறந்தது... (பெண்பிள்ளை பிறக்காமல் ஆணாகப் பிறந்ததே அப்பா அம்மாவுக்கு சந்தோஷம்) என அவரது வாழ்வின் நல்லம்சங்களின் பின்னால், முதலாளி பார்த்து கைதூக்கிவிட்ட அந்த பெரியதனம் இருக்கிறது. முதலாளி என்ற வார்த்தை கேட்டாலே உட்கார்ந்திருக்கும் அப்பா எழுந்து நிற்பார். அத்தனை பயம். அல்லது மரியாதை. முதலாளியா அவர்... படியளக்கும் பெருமாள்.

சேது நன்றாகப் படித்தான். அது அப்பாவின் பெருமை. நான் நன்றாகப் படிக்கிறேன், இதில் இவர் பெருமைப்பட என்ன இருக்கிறது, என நினைத்தான் சேது. அப்பாவிடம் தன் சார்ந்த அவநம்பிக்கையும், வேண்டாத சந்தோஷமும் நிறைய இருப்பதாக சேது உணர்ந்தான். சேது பிறந்த அதிர்ஷ்டம் என்பார். இல்லாட்டி, அந்த ஈஸ்வர கடாட்சம், என்பார் நெகிழ்ச்சியுடன். பாவம். பஞ்சாயத்து சைரன் ர்ர்ர் என்று சத்தமெடுத்தாலே பயந்து போவார். சற்று சத்தமாகப் பேசவே அவருக்கு வரவில்லை. அதற்கு ஏற்றாற் போல முதலாளி கணேசமூர்த்திக்கு மைக் தேவையில்லாத பெரிய குரல். (அப்பா போல யாரோ ஒருத்தன்தான் மைக்கைக் கண்டு பிடிச்சிருப்பான்.) கடையில் அவர், கணேசமூர்த்தி இருந்தால் அவரது அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும். சிப்பந்திகள் அனைவருமே கப் சிப். சிப்பந்திகள் சப் சிப்பந்திகளாகி விட்டார்கள். ஆனால் எல்லாம் ஊமைக்குசும்புத் தனம். அவர் எழுந்து போனதும் அவர்கள் அடிக்கிற கொட்டம், ஒரே சிரிப்பு. அப்பாவுக்கு அது ரசிக்கவில்லை. நன்றி இருந்தாத்தானே இந்த சனியன்களுக்கு, என அவர் நினைத்துக் கொண்டார். என்றாலும் மற்றவர்களைப் பற்றி முதலாளி வந்ததும் இல்லாததும் பொல்லாததுமாய் அவர் போட்டுக்கொடுத்தது கிடையாது. அது மற்றவர்களுக்கும் தெரியும். “இந்த மாதிரில்லாம் அவரு கைலயே காசு வாங்கித் தின்னுட்டு அவரையே கிண்டல் பண்றது எப்பிடித்தான் உடம்புல ஒட்டுதோ?” என்பார். ஆனால் அப்பாதான் ஒல்லிப்பிச்சா. மற்றவர்கள் கிழங்காட்டம் தான் இருந்தார்கள்.

வீட்டின் தண்ணீர்ச் செலவுகளுக்கு பின்கட்டுக் கிணற்றில் இருந்து தண்ணீர் கோரி எடுத்து வந்து உள்ளே அம்மாவுக்கு சமையல் அறையில் சேர்க்க வேண்டும். அம்மா அதன் ஒரு ஓர ஜலதாரைப் பக்கமே ஒதுங்கி உட்கார்ந்து குளித்து விடுவாள். அப்பாதான் காலையில் பின்கட்டுக் கிணற்றில் நீர் இரைத்து இரைத்து ஊற்றிக் கொள்வார். எத்தனை சளி இருந்தாலும் வெந்நீர் கேட்க மாட்டார். மனுசாளுக்கு வெந்நீரே வியாதிடா, என்பார். அவரது எல்லா அசட்டு நம்பிக்கைக்கும் ஓர் அறிவார்ந்த பாவனை இருந்தது. “காய்கறிக்காரன் வந்துட்டுப் போறானா... இப்ப பார் அடுத்து தபால்காரன் வருவான்,” என்பார்.

அப்பாபற்றி இத்தனை கடுமையான யோசனைகள் வேண்டியது இல்லை. அம்மாபற்றி அப்படியெல்லாம் அவன் யோசித்தது கிடையாது. அப்பா உலகத்துக்கு பயப்பட்டால் இந்த அம்மா... அப்பாவுக்கு பயப்பட்டாளா தெரியவில்லை. அவளுக்கு அப்பாவைத் தாண்டி யோசனைகள் இருந்ததா அதுவும் சந்தேகமே. குடும்பம்னா ஒருத்தர் முடிவெடுக்கணும். ரெண்டு வண்டிமாடுகள் ஆளுக்கு ஒருபக்கமா இழுக்க ஆரம்பிச்சா (அது குடும்பத்துக்கு இழுக்கு) வண்டி நகருமா, என்கிறதாக அவள்சார்ந்து யோசனைகள். கைக்கும் வாய்க்கும் எட்டிய அளவில் திருப்திப் பட்ட வாழ்க்கை அது. எளிய வாழ்க்கை. அவளுக்கு மாங்கல்ய பலம் கெட்டி. தினசரி பூஜையில் அவள் அதை வேண்டிக் கொள்கிறாள்.

சேது அப்படி குடத்துள் அடங்கிவிட மாட்டான். அவன் கிணற்றுத் தவளை அல்ல. அவனது எதிர்காலம் பற்றி அவனுக்கு யோசனை எதுவும் உண்டா? ஒன்றும் இல்லை. அந்த நேரம் இன்னும் வரவில்லை. இப்போதைக்கு அவன் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் எடுத்தால் போதும். அப்பா அம்மா அவனிடம் எதிர்பார்ப்பது அதுதான். அதில் நான் குறை வைக்க மாட்டேன், என நினைத்துக் கொண்டான் அவன். நன்றாக மனப்பாடம் செய்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வாங்கினான். அவனையிட்டு அப்பா அம்மாவிடம் குறை எதுவும் இல்லை. அம்மா, அவள் பிரார்த்தனைகள் வீண் போகுமா என்ன?

அப்பாவின் முதலாளி, கணேசமூர்த்தி, அவர் முகமே அவனுக்குப் பிடிக்கவில்லை. எப்பவும் எதையாவது கணக்கு போட்டுக் கொண்டிருக்கும் உள்யோசனையைக் காட்டும் முகம் அது. என்ன யோசனை? அவரது பேர் எந்த சபையிலும் எடுபட வேண்டும். எதிலும் அவர் கை ஓங்கி யிருக்க வேண்டும். எதிலும் அவர் முயற்சி ஆதாயப்பட வேண்டும். தோல்வி, நஷ்டம்... அவருக்கு இல்லை. தினசரி பூஜைகள் செய்கிறார் அவர். அதில் கடவுளை மிரட்டுகிற ஒரு நிமிர்வு,தோரணை இருப்பதாக அவன் உணர்ந்தான். எப்பவாவது அவர் வீட்டைத் தாண்டி அவன் போனால் வாசலில் நாற்காலி போட்டுக்கொண்டு அவர் உட்கார்ந்து விசிறிக் கொண்டிருப்பார். விசிறிச் சாமியார் கேள்விப் பட்டிருக்கிறான். இவர் விசிறி முதலாளி. இவரைப் பார்க்க யார் போவார்கள். யாருக்கும் கடன் தேவைப் பட்டால் போவார்களாய் இருக்கும். ரேகை வாங்கிக் கொண்டு பணம் தருகிறார். அள்ள அள்ள குறையாத பணம். பணம் ஒரு போதைதான். பணம் அதிகாரத்தை தோரணையை நிமிர்வைத் தருகிறது. அப்பாவைப் பார். இவன் அப்பாவை... சற்று மெலிந்த ஒடிசலான உயரமான அப்பா. அவரிடம் நிமிர்வு அல்ல சிறு கூன் விழுந்திருந்தது.

கணேசுமூர்த்திக்கு ஒரே பெண். அபிராமி. முதலாளியின் பெண் என்பதாலேயே அவளைப் பற்றி சிறு எரிச்சல் இருந்தது சேதுவுக்கு. நல்ல சிவப்பு. கூந்தலை ஈரம் காய என்று மேல் முடிச்சோடு தளர விட்டிருப்பாள். தடுப்பணையில் இருந்து நீர் வழிந்து வருகிறாற் போலக் காணும். அவள் அருகில் போனால் அந்தக் கூந்தலில் இருந்து ஒரு சீயக்காய் வாசனை வரலாம். அல்லது ஷாம்பூ. ஏன் அருகில் போக வேண்டும், என நினைத்துக் கொண்டான் சேது. அதே பள்ளியில் அவனது வகுப்பில் தான் படிக்கிறாள் அபிராமி. பளிச்சென்ற உடைகள். கண்ணின் ஓரங்களை இன்னும் சற்று நீட்டி மை தீட்டி யிருப்பாள். கண் எனும் ஈட்டி எனக் காணும். முதலாளியின் பெண் என்ற அளவில் அவளை அவன் சற்று ஒதுங்கியே பழகி வந்தான். ஒருமுறை இடைவேளையில் அவன் தண்ணீர் குடித்துவிட்டு வகுப்பு உள்ளே வர அவள் வெளியே வர...

அது சீயக்காய்தான்.

பண ரீதியான கர்வம் அவளிடம் இருந்ததா தெரியவில்லை. அழகாய் இருப்பதாய் அவளைப் பற்றி அவளுக்கே ஒரு கிறுறுப்பு இருந்தது. தலையை ஒடித்து சிறு பாவனைகள் செய்தாள். இது குறித்து மற்ற பையன்களிடம் ஒரு ஹா இருந்தது. போங்கடா, உங்ளுக்கு வேற வேலை இல்லை, என அவன் சலித்துக் கொண்டான். ஒருவேளை அப்பாவின் முதலாளியின் பெண் என்ற அளவில் அப்பாவுக்கு எந்தச் சங்கடத்தையும் தர அவன் விரும்பவில்லையோ என்னவோ.

தினசரி காலைகளில் ஜமா சேர்த்துக் கொண்டு வயல் கிணறுகளில் போய்க் குளித்துவிட்டு வருவார்கள் ஊர்ப் பிள்ளைகள். நாலு பையன்களும் சேர்ந்து குபீர் குபீர் என்று குதிக்க கிணறும் வாய்த்துவிட்டால் கொட்டமடிக்கக் கேட்க வேண்டாம். போகும் வழியில்தான் கணேசமூர்த்தியின் தோட்டம். மாவும் புளியும் அடர்ந்து கிடக்கும். தோட்டத்துக்கு வேலியும் உண்டு. தோட்டக்காரனும் உண்டு. எல்லாம் சேதுவுக்கும் தெரியும்தான். விளையாட்டுப் புத்தி. தோட்டக்காரனை ஏமாற்றுவதில் ஒரு திருப்தி. வயசு அப்படி. வேலியில் ஒருபுறமாக ஒருவர் படுத்தபடி ஊர்ந்து உள்ளே போக வழி ஏற்படுத்திக் கொண்டு... எல்லாருக்கும் ஒரே சிரிப்பு. முதலில் தோட்டத்தினுள் நுழைவது யார்? நானே, என்று சேது நுழைந்தான். காடாகச் செழித்துக் கிடந்தது உள்ளே. தண்ணென்ற வெளிச்சம். அந்தக் குளுமையும் இதமான இருளும் வேறு உலகமாய் இருந்தது. பறவைகளும் குரங்குகளுமான பிரதேசம். வாலால் கிளையைப் பிடித்துக்கொண்டு தலைகீழாய் ஆடும் குரங்குகள் போல மாங்காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன. வயரில் தொங்கும் முட்டைபல்புகள். அல்லது காளைமாட்டின் அடிப்பகுதிகள்... மற்ற பயல்கள் வெளியே நின்று கொண்டிருந்தார்கள். சேதுவுக்கு உற்சாகம். துள்ளித் துள்ளி எட்டிய காய்களைப் பறித்துப் பறித்து வெளியே எறிந்தான். பையன்கள் இடமும் வலதுமாகப் பாய்ந்து காட்ச் பிடிக்கிறார்கள்.

இருந்த உற்சாகத்தில் தோட்டக்காரன் வந்தது கவனிக்கவில்லை. மாட்டிக் கொண்டான் சேது. அவனைப் பிடித்து மரத்தில் கட்டினான் தோட்டக்காரன். குளிக்க என்று கூடவந்த பயல்களைக் காணவில்லை. அவர்களில் ஒருவன் போய் அப்பாவிடம் தகவல் சொல்லி யிருக்கலாம். தோட்டக்காரன் முதலாளிக்குத் தகவல் சொல்லி விட்டான். அப்பா என்ன வேலையில் இருந்தாரோ பதறிப்போய் ஓடோடி வந்தார். அவனிடம் அப்பா பேசவே இல்லை. சற்று ஆத்திரத்துடன் நெஞ்சு விரைத்து நின்றிருந்தான் சேது.

அது தேவையற்ற வீம்பு, என்று இப்போது தெரிகிறது. அந்த வயசில், தப்பே செய்தாலும் மாட்டிக் கொள்ளும்போது ஆத்திரமாகி விடுகிறது.

“எவ்வளவு நாளா நடக்குது இந்த திருட்டுத்தனம்?” என்று அவனைக் கேட்டார் முதலாளி. அந்தக் குரலின் அதிகாரத் திமிர் அவனுக்குப் பிடிக்கவில்லை.  “எத்தனையோ குரங்கும் பறவையும் சாப்பிடறதுதானே?” என்று சற்று தைரியத்தைத் திரட்டிக் கொண்டு பேசினான். “ஏல நீ குரங்குன்னு ஒத்துக்கறியா?” என்று கேட்டார் முதலாளி. அப்போதுதான் அப்பா ஓடிவந்தார். சாதாரணமாகவே முதலாளி என்றால் அவருக்கு நடுக்கம்தான். பையன் வேறு குற்றவாளியாய் நிற்கிறான். அப்பாவைப் பார்க்கவே அவனுக்குப் பாவமாய் இருந்தது.

“பாத்தியா ஒன் பிள்ளை லெட்சணத்தை?” என்றபடி திரும்பி வெற்றிலைச் சாற்றைத் துப்பினார் முதலாளி. “என் கௌரவத்தைக் கெடுக்கவே வந்து பிறந்தியாடா நீ?” என்று அவனைப் பளாரென்று அறைந்தார் அப்பா. அப்பா அவனை அதுவரை அடித்ததே இல்லை. பள்ளியில் முதல் மதிப்பெண். நல்லா படிக்கிற பிள்ளை, என அவனையிட்டு அவருக்கு அதுவரை பெருமைதான் இருந்தது. வீட்டுவேலை எதுவும் அவராக வாங்க மாட்டார். அம்மா தண்ணீர் கொண்டு வர என்று அவனைப் படிப்பில் எழுப்பினால் கோபித்துக் கொள்வார் அம்மாவை.

முதலாளி அவனை அடிக்குமுன் அவரே அடிப்பது நல்லது என்று அவர் கணக்குப் போட்டாரோ தெரியாது. ஆனால் அவன் அப்பாவிடம் தான் அடி வாங்குவதை எதிர்பார்க்கவில்லை. அதைவிட அவனால் தாள முடியாத இன்னொரு காரியம் செய்தார். “எனக்காகப் பையனை மன்னிக்கணும் முதலாளி...” என அவர்முன் கைகூப்பினார்.

அதை அவன் செய்திருக்க வேண்டும், சேது மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும், என்று அவர், அப்பா எதிர்பார்த்திருக்கலாம். முதலாளியும் அப்படித்தான் எதிர்பார்த்திருக்க வேண்டும். செய்யிறதையும் செஞ்சிட்டு எப்பிடி விரைத்து நிற்கிறான். வீட்டுக்கு அடங்காத பிள்ளை போல... என அவர் ஒரு வெறுப்புடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அதே வெறுப்புடன் திரும்பி அப்பாவைப் பார்த்தார் முதலாளி. ”நல்லா வளத்துருக்கய்யா பிள்ளையை” என்றவர், தோட்டக்காரனிடம் “அவனை கட்டவுத்து விடு துரை” என்றார்.

தன்னால், தன் முன்னால் அப்பா கூனிக் குறுகி நின்றது அவனால் தாள முடியாதிருந்தது. அப்பா அடித்தபோது வராத அழுகை அப்போது வந்தது. குளிக்கப் போனவன் அப்பாவோடு வீடு திரும்பினான். இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அன்றைக்கு முழுவதும் அப்பா முகம் களையிழந்து கிடந்தது. அவனை அடித்ததை யிட்டு அவர் வருத்தப்பட்டுக் கொண்டிருந் திருக்கலாம். “இத்தனை வருஷமா முதலாளி கிட்ட நான் காப்பாத்திட்டுவந்த நல்ல பேரை ஒரு க்ஷணத்தில காத்துல பறக்க விட்டுட்டியேடா...” என்று அவர் தனக்குள் மறுகிக் கொண்டிருந்தார். நம்மப்போல ஏழைங்களுக்கு மானந்தாண்டா முக்கியம், என அவரில் எண்ணங்கள் குமுறிக் கொண்டிருந்தன. அவரது, மேன் மக்கள் மேன் மக்களே, நாமெல்லாரும் அன்னாரின் அடிவருடிகளே, அடிமைகளே... என்கிற சித்தாந்தம் அவனுக்குப் பிடிக்கவில்லை. முதலாளியையே அவன் எதிர்த்துப் பேசி விட்டான், என்ற விஷயம் அவரைத் திகைக்க வைத்திருக்க வேண்டும். இனி அவர் முதலாளியைச் சமாளிக்க வேண்டும். சும்மாவே அவர் பார்வையை அப்பாவால் தாள முடியாது. இப்போது மகன் வேறு அவரிடம், முதலாளியிடம் வெறுப்பைச் சம்பாதித்து விட்டான்... என்கிற நினைவு அவரைக் கலங்கடித்தது. இனி முதலாளி அப்பாவை முன்னைவிட கவனமாய்க் குற்றம் கண்டுபிடிப்பார் என்று தோன்றியது.

அப்பாவின் அந்த கைகூப்பிய நிலை திரும்பத் திரும்ப அவன் மனசில் வந்தது. சிறு வயசின் குறும்புத் தனமான எனது விளையாட்டில் அவர் காயம் பட்டு விட்டார். இதற்கு என்ன செய்ய என்று தெரியவில்லை. இவனது படிப்பு என்று கூட சிறு கடன் அவர் முதலாளியிடம் வாங்கி யிருந்தார்.ரேகை அல்ல. அப்பா கையெழுத்து போடுவார். முதலாளியின் பெண் அபிராமிக்கும் அது தெரியாமல் இராது. பள்ளி வகுப்பில் அவனைப் பார்க்கையில், தானும் அவளை அண்டிப் பிழைக்கிறவன், என்கிற அதிகாரப் பித்துடன் அவள் அவனை கவனிக்கிறாளா, அவனுக்குத் தெரியாது.

ஆனால் படிப்பில் சேது கெட்டிக்காரன். பாடங்களை சட்டென்று அவன் சுவிகரித்துக் கொண்டான். பதினைந்து வரிகள் கொண்ட ஓர் ஆங்கிலக் கவிதையை, மனப்பாடப் பகுதி அது, ஆசிரியர் பாடம் நடத்த நடத்த ஒரே ஒருதரம் கேட்டவுடனேயே எழுந்து அப்படியே முழுசும் சொன்னான் சேது. மற்ற மாணவர்கள் அனைவரும் கை தட்டினார்கள். அபிராமி என்ன நினைத்தாள் தெரியவில்லை. அவள் படிப்பில் அத்தனை சூட்டிகை என்று சொல்ல முடியாது.

ஒவ்வொரு தேர்விலும் சேது தான் முதலாவதாக வந்தான். இரண்டாவது மதிப்பெண் கிரிஜா என்ற பெண். அவள் தந்தை டெய்லர். ஒவ்வொரு முறை வகுப்புக் கட்டணம் செலுத்தவும் அவளுக்குத் தாமதமானது. பாதி விலைக்கு வாங்கிய போன வருடத்திய புத்தகங்களையே அவள்  தந்தை அவளுக்கு வாங்கித் தர முடிந்தது. தீபாவளி போன்ற திருவிழாக் காலங்கள் இல்லாத சமயம் அவரே பழைய துணிகளைத் தைத்துத் தந்து கொண்டிருந்தார். அபிராமிக்கு பணம் சார்ந்த சுக அம்சங்கள் சேர்ந்து கொண்டதில் படிப்பில் அத்தனை அக்கறை இல்லாது இருந்ததா தெரியாது.

வகுப்பில் ஓரளவு பணக்காரப் பிள்ளைகளுடனேயே அவள் சிரித்துப் பேசிப் பழகினாள். மதியம் ரிக்ஷா வந்துவிடும் அவளுக்கு. வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருவாள். சேது கையில் ஒரு டப்பாவில் தயிர் சாதம் கொண்டு போனான். காலையில் அடைத்த சாதம். நெகிழ்வின்றிக் கல்லாய் இறுகிக் கிடக்கும். தண்ணீர் சேர்த்து நெகிழ்த்திக்கொண்டு சாப்பிடுவான்.

வெறும் பணம், அதன் நிமிர்வுகள், வசதி வழிப்பட்ட சுகங்கள், அதிகாரம்... இவை போதுமா, போதும் என இவள், அபிராமி நினைக்கிறாளா தெரியவில்லை. மேலே வானம் கீழே பூமி, என அனைத்தையும் அனுபவிக்கக் கிடைத்த இந்த வாழ்க்கையில் எத்தனை யெத்தனை விஷயங்களை இவள் தன் திமிரால், மமதையால் இழக்கிறாள், இவள் அறிவாளா? சகல உயிர்களும் இந்த உலகத்தில் மிகப் பெரும் சுதந்திரத்துடன் அல்லவா பிறக்கின்றன. அதை சிறு சிறு சுகங்களுடன் முடக்கிக் கொள்வது சரியா? அவை இருக்கிற கனவு மயக்கம் அவளுக்கு. என்றால் அவற்றில் சில தனக்கோ, தன் குடும்பத்துக்கோ மறுக்கப் பட்டதாக அப்பாவுக்கு ஆதங்கம். கவலை. இல்லாததை நினைத்து மறு கரையில் அல்லவா வாழ்கிறார்கள் இவர்கள்.

தனக்கு என்ன கவலை என்றாலும், பண ரீதியான பிரச்னை என்றாலும் அப்பா அவனை நன்றாகப் பார்த்துக் கொண்டார். அவனுக்கு ஒரு குறையும் அவர் வைக்கவில்லை. நல்ல நாள் விசேஷங்களில் அவர் கோவிலுக்குப் போய்வந்தார். ஊர் நடுவே பெருமாள் கோவில். யானை கட்டிய கோவில். மார்கழிக் காலைகளில் அங்கே ரெகார்டு போடுவார்கள். திருப்பாவைக் காலங்கள். அப்பாவுக்கு அதில் அநேகப் பாடல்கள் தெரியும். அம்மா மார்கழிக் காலைகளில் குளித்து விளக்கேற்றி திருப்பாவை வாசிப்பாள். எல்லே இளங்கிளியே, இன்னும் உறங்குதியோ... என அவள் உரக்க வாசிக்கையில் அவனுக்கு சில சமயம் விழிப்பு வரும்.

கணேசமூர்த்தி அபிராமிக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தந்திருந்தார். நல்ல கனம். அத்தனை கனத்தைத் தூக்கி நிறுத்தி அதில் ஏறி ஓட்டுவதே பெரிய விஷயம் தான். குறுக்கு பார் கம்பி இல்லாத பெண்கள் மாடல். நன்றாகவும் ஓட்டினாள் அபிராமி. அவன் எப்பவாவது தெருவில் போகையில் அவள் சைக்கிளில் எதிரே வந்தாள். அந்த சின்ன யந்திரத்தை அடக்கி ஆள்கிற போதை அவளுக்கு இருந்தது. அந்த வயதின் போதை அது.

தன் பையனை விட அபிராமியை அவள் அப்பா அருமையாக வளர்த்து வந்தார். அங்கே பெண்ணாய்ப் பிறந்தது அவள் அதிர்ஷ்டம். அதெல்லாம் ஒரு கொடுப்பினை என அப்பா நினைக்கலாம். அதெல்லாம் இல்லப்பா, உன் பையன் நான், நாளை உன் பிள்ளையைப் பற்றி ஊரே பேசும். நீ பார்க்கத்தான் போகிறாய், என நினைத்துக் கொண்டான் சேது.

அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சி யளிக்கிற மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்தது. அன்றைக்கு கணக்கு வாத்தியார் போட்ட கணக்குகள் மிகக் கடினமானவை. யாருக்குமே அது சரியாக விளங்கவில்லை. தவிரவும் வீட்டுப்பாடம் வேறு அவர் சில கணக்குகள் தந்திருந்தார். அவன் புன்னகைத்துக் கொண்டான். ஒரு சவால் போல அவன் அவற்றைத் தானே முயன்று போட்டுவிட முடிவு செய்தான். ராத்திரி அப்பாவும் அவனுமாய் வீட்டில் இருந்தபோது திடீரென்று வாசல் பக்கம் சைக்கிள் சத்தம் கேட்டது. அப்பா வாசல் பக்கம் பார்த்தால், சைக்கிளில் இருந்து இறங்கியவள்... அபிராமி.

அப்பா பயந்து போனார். சட்டென பாதி சாப்பாட்டில் எழுந்து வாசல் பக்கம் போக முயன்றார். இவ பாட்டுக்கு நம்ம வீட்டுக்குக் கிளம்பி வந்துட்டாளே, என அவரிடம் ஒரு திகைப்பு இருந்தது. அவள் வந்தது முதலாளிக்குத் தெரியுமா, என்றி பயம் அவரைச் சுருட்டியது. “நீ உக்காருப்பா...” என்று அப்பாவைத் தோளை அழுத்தினான் சேது.

“என்ன அபிராமி? இவ்ள தூரம்...” என்று கேட்டான் சேது. பாதி சாப்பாட்டில் எழுந்துகொள்ள அவன் முயற்சிக்கவில்லை. “இன்னிக்கு சார் போட்ட கணக்கு... எனக்குப் புரியலைடா. அதான்... நம்ம கிளாஸ்லயே நீதானே கணக்குல எக்ஸ்பர்ட். உன்கிட்ட கேட்டுப் போட்டுக்கிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றாள் அபிராமி புன்னகையுடன். பாவாடை சட்டையில் அந்த இரவிலும் பளிச்சென்று இருந்தாள். வீட்டுக்குள்ளேயே ஒரு ஒளி வந்தாற் போலிருந்தது.

“நீ வந்தது உங்க அப்பாவுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் அப்பா. “ம்ஹும்” என்று புன்னகைத்தாள் அபிராமி. “கேட்டா அவர் விடமாட்டார் மாமா. அதான்... சைக்கிள்ல நாம் பாட்டுக்கு வந்திட்டேன்...” என்றாள் அபிராமி. சேதுவுக்கு அந்த பதில் பிடித்திருந்தது. “அபி... நீயும் சாப்பிடறியா? வா வந்து உட்காரு” என்றான் சேது. அவர்கள் பேசிக்கொண்ட அந்த சுவாதீனம் அப்பாவுக்குப் பிரமிப்பாய் இருந்தது. அப்பவே அவருக்கு வயிறு நிறைந்தாற் போலிருந்தது.

கை கழுவிவிட்டு வர அபிராமி பின்கட்டுக்குப் போனாள்.

•••