தி. ஜானகிராமனின் ‘கமலம்’

கனலைக் கிளர்த்தல்

எஸ். சங்கரநாராயணன்

 *

ஜானகிராமனின் மண்வாசனைக்கு எப்போதுமே மகத்துவம் உண்டு. நாம் தாண்டிவந்த இளவயதை மண்வாசனை நினைவுபடுத்தி விடுகிறது. இன்பமும் துக்கமுமான நினைவுகள் அவை, என்றாலும் அவை கடந்துபோன துக்கம் என்ற அளவில் அதில் சிறு புன்னகையே இப்போது நம்மிடம் விளைவிக்கிறது. இளமைக்காலம் இப்போது நாம் ‘இழந்த’ ஒரு காலமாக ஏக்கத்துடன் நினைவுகூர வைக்கிறது. அதை அசைபோடுதல் ஆனந்தமயமானது.

எந்தவோர் இளைஞன் வாசித்தாலுமேகூட அந்த எழுத்தில் ஊடாடிநிற்கும் உயிர் அவனை படரும் கொடியாய்த் தீண்டிவிட வல்லது. குந்தித் தின்றால் குன்றும் மாளும்... என்பார்கள். அவசரப்படாத நிதானமான அசைபோடலுடன் தி.ஜானகிராமன் தன் பாத்திரங்களுடன் இயங்குகிறார். மனிதர்கள் அவர்களது சூழல், இயல்பு, அவைசார்ந்து அவர்களின் மனவோட்டங்கள், காரியங்கள்... அப்படி அவர் வாழ்க்கையின் இயக்கத்துக்கு மிகுந்த நியாயம் செய்கிறார். அதனால்தான் எத்தனை முறை வாசித்தாலும் திகட்டுவதே இல்லை அவர்.

சந்நிதானத்துத் திருவுருவைத் திரை விலக்கிக் காட்டுகிறார் தி.ஜானகிராமன்.

தி.ஜானகிராமனின் ‘கமலம்’ குறுநாவலை மீண்டும் வாசிக்கும்போது கிளர்ந்தெழுந்த ஜ்வாலை இது.

கல்கத்தாவில் இருந்து வந்திறங்கும் பெண், அவளுக்கு இருவாட்சி விரல்கள். அந்த அந்தியின் மங்கிய வெளிச்சத்திலும் ஆண்கள் பெண்ணின் பிரத்யேங்களைச் சட்டென்று கண்டுகொள்கிறார்கள் போலும். மாலை ஒளிமயக்கத்தில் மனசும் சித்திரம் தீட்டுகிறது.  கீழே இறங்கிய ஜோரில் அந்த ஊரைப்பற்றி ஆங்கிலத்தில் நல் வார்த்தைகள் உரைக்கிறாள் அவள். “என்ன அழகான கிராமம்! எத்தனை பச்சை! எத்தனை தினுசுப் பச்சை! இந்த நிசப்தத்தைப் பாருங்களேன். நீங்கள் நன்றாக அதைக் கேட்கவே முடியும் போலிருக்கிறதே! எனக்கு கேட்க முடிகிறது. இந்தமாதிரி ஒரு நிமிஷம் உட்காரத்தான் முடியுமா கல்கத்தாவிலேயும் பம்பாயிலேயும்? என்ன மௌனம்! என்ன மௌனம்! அப்புறம் இவரைப் பாருங்கள். என்னை முன்னேப் பின்னே பார்த்ததில்லை- எவ்வளவு அன்பாக எவ்வளவு பரிவாகப் பேசுகிறார்! ம்!...” என நீளும் உரையாடல். இது தன் மண்ணைவிட்டு விலகிப்போன தி.ஜானகிராமனின் குரலே போல எனக்குக் கேட்கிறது. எத்தனை பச்சை... எத்தனை தினுசுப் பச்சை. நெடுந்தொலைவு பயணப்பட்டு வந்து கிராமத்தில் வந்திறங்கிய அந்தப் பகலோடு அந்திக் கலப்பில், அறிமுகம் அற்ற நபர்கள் இப்படி வியப்பைக் கலந்து கொள்கிறார்கள். மனசில் அடிநாக்கின் காபி வண்டலாய் தி. ஜானகிராமனுக்கு தன் ஊர் இருக்கிறது.

நம் எல்லாருக்கும் இருக்கிறது, அதை அவர் உணர வைக்கிறார்.

ஆளுயரத்தில் நீர்மேல் பறக்கும் மீன்கொத்தி குபுக்கென்று தண்ணீரில் ஒரு முழுக்கு போட்டு பின் நீர்ப்பரப்போடு பறந்து போகிறது... என்ற வர்ணனையே சிந்தனைக்கு சுருதி சேர்க்கிற லயம்தான்.

கமலம் பற்றி ‘நான்’ (கதாநாயகன்) யோசனை இப்படி ஓடுகிறது. ‘இந்த உலகில் அழகாக இருக்க என்றே சிலர் பிறந்திருக்கிறார்கள். இவர்கள் பேசுவது அழகு. செய்வதுஅழகு. நடப்பது அழகு. கையைத் தூக்குவது அழகு. ஒவ்வொரு அசைவும் அழகுதான். எதையும் மனதில் வாங்கிக் கொள்ளும்போது, அதிலே ஒரு தனித்தன்மை, தனக்கென்று ஒரு தனிப்போக்கு. ஆனால் எல்லோரும் ஒப்புக்கொள்ளக் கூடிய போக்கு, என்ன வந்தாலும் நிதானமிழக்காத ஒரு பெருமிதம்- உணர்ச்சி பொங்கி அலைமோதாத ஒரு அமைதி. வெகுகாலப் பயிற்சியில், வெகுகாலத் தவத்தில் வரவேண்டிய பயிற்சிகள் இவை...’ என ஒரு வலை வசிகரத்தில் தன் வயமிழந்த சொல்லாடல். இது அவன் மனதின் அலைமோதுகிற அமைதியாக இருக்கிறதே. பெண் என்ற பிரக்ஞையே ஆணுக்குள் மௌனச் சுழிப்புகளை, உள்க் கனலைக் கிளர்த்தி விட்டுவிடும் போலும். ஆணுக்கு பெண்ணை வியத்தல் அன்றி வேறு போக்கு இல்லை போலிருக்கிறதே. வாழ்க்கை இவ்வாறாக தோரணங் கட்டிக் கொள்கிறாற் போல இருக்கிறதே. எல்லாருக்கும் பிடித்திருக்கிறதே இப்படியெல்லாம் சிந்தித்தபடி வயல்வெளிகளில் நீர்க்கரைகளில் உலாவல் வருவது.

சாமிநாதனுக்காகப் பெண்கேட்டு பெண்ணின் தகப்பனார் அருணாசலத்தோடு பேசுகிறார் கதாநாயகனின் மாமா. உரையாடலின் வாதத்தில் அவர் கையாளும் ஓர் உத்தி பற்றி தி. ஜானகிராமன் விளக்குகிறார். ‘மாமாவுக்கு இந்தத் தந்திரமெல்லாம் அற்றுபடி. திடீரென்று ஒரு பெரிய வார்த்தையாகப் போட்டு, சாதாரண வாதப் பிரதிவாதத் தரத்துக்கு மேலே பேச்சை உயர்த்தி விடுவார்- உயர்த்துவதுபோல் பொடி ஊதுவார்.’ - இது தி. ஜா.வுக்கும் பொருந்தும் அல்லவா? முன் பத்தியில் குறிப்பிட்ட பெண் விவரணையில், தவம், என்று வார்த்தை சேர்க்கப் பட்டிருப்பதை கவனிக்க வேண்டும்.

சாமிநாதனைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள நிர்பந்திக்க ‘நான்’ பாத்திரமே அடுத்து முயற்சி மேற்கொள்கிறது. அவரின் வார்த்தையெடுப்பு இப்படி அமைகிறது. ‘‘நமக்கெல்லாம் ஒரு கடமை, தர்மம், இதெல்லாம் இருக்கா, இல்லியா?” இங்கேயும் ஒரு அழுத்தமற்ற பொது வார்த்தைக்குப் பின், கனம் சேர்த்துக் கொள்கிறார்.

அந்த ஊர்க்காரப் பிள்ளை சாமிநாதன் பெரிய அரசு அதிகாரி வீட்டில் சமையல்காரன் என அமர்கிறான். அதிகாரி வெளிநாடு என்று அலுவலாகக் கிளம்பும்போது அதிகாரியின் மனைவியுடன் சொந்த ஊர் வருகிறான். வந்தபோது அவனுக்குக் கல்யாணம் பேசுகிறார்கள். அப்போதுதான் அவனுக்கும் அந்தச் சீமாட்டிக்கும் இடையே சிநேகம் இருப்பது ‘நான்’ என்கிற பாத்திரத்துக்குத் தெரிய வருகிறது. அதை சாமிநாதனே ஒரு நெருக்கடியில் விளக்குகிறான். தி.ஜா. அடுத்து இப்படி எழுதுகிறார். “எனக்கு அவன்மீது வந்தது கோபமா, பொறாமையா என்பது புரியவில்லை.”

மனசின் ஊடாட்டங்களை அத்தனை நேர்மையாக எழுதிச் செல்வதில் தி.ஜா.வின் முத்திரை அமைகிறது. எதையும் நியாயப் படுத்தாத, என்று கூட அல்ல, அதன் யதார்த்தத் தளத்தில் விளக்குகிற நேர்த்தி அவருக்கு உண்டு. அந்த உறவு-முரண் விஷயத்தை  விவரிக்கும் வேளையில், நேரடியாக சாமிநாதன் என்கிற பாத்திரமே தன் கதையைச் சொல்வதாக வைப்பதை கவனிக்க வேண்டும். சாமிநாதனின் வியாக்கியானத்தில் ராமாயணம் வருகிறது. அனுமார் வருகிறார். மண்டோதரியை சீதை என நினைத்து மயங்கி ஏமாந்த கதை வருகிறது. “ஒருநாளிப் போது ஒம்பது சாஸ்திரம் படிச்சாலும் குரங்கு குரங்குதானே?”

பிறகு கதையில் இரண்டு விஷயங்கள் வைக்கிறார் தி.ஜா. ஒன்று ஊரில் கமலம் மற்றும் சாமிநாதன் பற்றி அரசல் புரசலாக வதந்தி கிளம்புவதை அவர்கள் இருவருமாகவே ஒரு வேடிக்கை போல வளர்த்து விடுகிறார்கள், என்கிறார். சாமிநாதன் கல்கத்தாவில் பி.ஏ. படித்து எம்.ஏ. போகிறான், என்று ‘நான்’ என்ற பாத்திரத்துக்கு கமலம் கடிதம் எழுதுகிறாள். வதந்தியை வளர்த்து வேடிக்கை பார்த்தவர்கள் இப்போது விளக்கம் தர வேண்டிய, கடிதம் எழுத வேண்டிய காரணம் தெரியவில்லை. சாமிநாதன் எனக்கு மகன் போன்றவன், என்கிற விளக்கமும், கமலத்துக்குப் பிறந்த பையன் இறந்துவிட்டான் என்கிற விவரமும், சாமிநாதனுக்கு காச நோய் என்கிற மேலதிகத் தகவலும் தரப் படுகின்றன.

உணர்வுகளின் ஊடாட்டத்தை தி.ஜானகிராமன் போல சாம்பிராணியாய்ப் பரத்தி விரித்தவர் வேறு யார். மாமா பாத்திரத்தின் தோற்காத சாமர்த்தியத்தை ஊதிப் பெருக்கி விவரித்துவிட்டு பிறகு அது காயப்படுவதைக் காட்டுவது, மிக யதார்த்தமாக அதை சாதிப்பது தி.ஜானகிராமனின் தனி அடையாளம். உலக் பொது அடையாளங்களை தனி மனிதப் பாத்திர வழி முன்னிறுத்தும் வல்லமையான எழுத்து தி.ஜா.வுடையது. மீண்டும் மீண்டும் வாசித்து இன்புறும் எழுத்தாக அது காலந்தோறும் மிளிர்கிறது, இருளில் ஒளிரும் செவ்வட்டையின் புளூஜாக்கர் போல... அதன் வசிகரமும் ஆபத்துமாக. எத்தனை வயதானாலும் மனம், அதற்கு வயதாவதே இல்லை. அது பொய்யல்லவே.

•••

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog