ஆவநாழி ஜுன் ஜுலை 2021 இதழில் வெளியான கதை

ஓவியங்கள் ஜீவா

உயிரளபெடை

எஸ்.சங்கரநாராயணன்

 

ம்மா இறந்து போனாள். அப்பா இல்லாமல் என்னை இருபது இருபத்தி ஐந்து வருடம் வளர்த்து ஆளாக்கிய அம்மா. வாழ்வின் துக்கங்களைப் பற்றி அவள் அலட்டிக் கொள்ளாதவள். அல்லது வெளியே காட்டிக் கொள்ளாதவள். பெண்கள் சுலபமாக அம்மாஸ்தானம் அடைந்துவிட முடிகிறது. ஆண்கள், ஏணிகளில் காலப்போக்கில் கீழிறங்கி விடுகிறதாகவும் பெண்கள் தங்கள் கொடியை உயர்த்திக் கொள்வதாகவும் தோன்றுகிறது. என் உடலும் உயிரும் சதையும்... அம்மாவாக உணர முடிகிறது என்னால். நான் அம்மாவின் உயிரளபெடை. அப்பாவை என்னால் அப்படி உணர முடியவில்லை. அறிய முடியவில்லை. இது எப்படி? விளக்கத் தெரியவில்லை எனக்கு. அப்பாவின் கூறுகள் என்னிடம் இல்லை... என்றே நினைக்கிறேன்.

எனது ஐந்து வயதில் அப்பா காணாமல் போனார். ஒரு ராத்திரி அப்பா வீட்டைவிட்டு வெளியேறி யிருந்தார். ஹா, ஐந்து வயதில் குழந்தைகள் காணாமல் போய்க் கேள்விப் படலாம். இது அப்பா. இப்படி நடக்குமா? நான் தூங்கிய பிறகு அப்பா அம்மாவுக்கு இடையே ஏதும் வாக்குவாதம் நிகழ்ந்திருக்குமா? என்ன காரணம் தெரியவில்லை. அதிலும் கூட, கோபம் கொண்ட ஆண்கள் வெளியேறிவிட முடிகிறது. பெண்களால் அப்படி தனியே இரவில் வெளியேறி விட முடியுமா? தவிரவும் இது ஒரு ஒப்பந்தம். வானம் சாட்சியாக. இந்திரன் சாட்சியாக... ஆயுசு பரியந்தம் நாம் பிரியாதிருப்பதாக. அப்பா கட்டிய திருமாங்கல்யத்தை கடைசிவரை சுமந்தாள் அம்மா. அதை, அந்த ஒப்பந்தத்தை அப்பா மீறிவிட்டதாகவே நினைக்கிறேன். இந்தக் குடும்ப வாழ்வில் அப்பாவை விரக்தி தட்டச் செய்தது எது? வெலவெலக்கச் செய்தது எது? விலகி எட்டிப் போகச் செய்தது தான் எது?

என்ன ஆயிற்று? எங்கே போய்விட்டார் அப்பா? அம்மாவுக்கு இது அவமானமாய் உணர்ந்திருக்க வேண்டும். இது அவளுக்கு ‘திருமாங்கல்யச் சிறை’ அல்லவா? அம்மாவிடம் இதைப்பற்றிக் கேட்க முடியாது. அவளாகத் தன்னைத் திறந்து கொள்கிற கணங்கள் உண்டு. பெண்கள் பொதுவாக இறுக்கமானவர்கள் தாம். இரகசியங்களின் கிடங்கு அவர்கள். அவர்களிடம் இருந்து பெரும்பாலும் ஒரு புன்னகையே நமக்கு வாய்க்கிறது. அதில் அம்மாவின் சோகத்தின் கரிந்த வாடை அடிக்கும். அதற்குமேல் அவளும் விளக்க, விவரிக்க மாட்டாள். நாமாகவும் அதில் யூகிக்க எதுவும் சிக்குவது இல்லை.

பாவம் அம்மா. பெண்களே பாவம்தான். ருக்மணியை அப்படி வாடவிடக் கூடாது, என்று திரும்பத் திரும்ப நினைத்துக் கொள்வேன். நான் அப்பாஇல்லாமல் வளர்ந்த பிள்ளை. அம்மாவிடம் வளர்ந்த பிள்ளை. ருக்மணி, பெண்ணை, பெண்மையை அறிந்தவன் நான், என உனக்குக் காட்டுவேன். மாமியாரிடம் பிரியம் மிகுந்தவள் ருக்மணி. கடைசி காலத்தில் என் அம்மாவுக்கு அவள் செய்த பணிவிடைகள், அம்மாவிடம் அவள் காட்டிய பொறுமை... அம்மா அந்தளவில் கொடுத்து வைத்தவள் என்றுதான் சொல்ல வேண்டும். அப்பாவின் இழப்பு, அதுகூட இக்காலங்களில் அலையடங்கி யிருக்கும், அவள் வாழ்க்கை தன் சுக்கானைத் திருப்பி பயணப்பட ஆரம்பித்திருக்கும். இந்தக் குடும்பம் சார்ந்த உலகம், இதில் அப்பாவுக்கு மிச்சம் எதுவும் இல்லை என்று நினைத்தாரோ? அம்மா... அவளுக்கு, கூட நான் இருந்தேன். அவளுக்கு வாழ்க்கை இன்னும் மிச்சம் இருப்பதாக, என்னால் அவள் நினைத்தாளா?

அப்பா இல்லாமல் அவள் உலகம் என்னைச் சேர்த்துக் கொண்டபடி திரும்பவும் சுழல ஆரம்பித்திருக்கும். அப்பா எங்க போனார் தெரியாது. திரும்பி ஒருவேளை வருவார், என அவள், அம்மா அவர் காணாமல்போன புதிதில் காத்திருந்திருக்கலாம். அவள் காத்திருக்கவில்லை, என்று ஒருநாள் சொன்னாள். “இல்லை. அவர் என்னைத் தனியே விட்டுவிட்டுப் போய்விடுவார், என நான் எதிர்பார்த்தேன்,” என்று அம்மா ஒருநாள் சொன்னாள். இதைச் சொல்லுகையில் அவள் உடம்பு சிறிது நடுங்கியது. சில விஷயங்கள் சிலருக்கு பகிரப்படாமலேயே புரிந்து விடுகின்றன. மனம் மனசுக்குள் திடீரென்று ஏதோ புத்தகத்தை விரித்து எதோ பக்கத்தை வாசிக்க வைத்து விடுகிறது போலும். மரணம் வேறு விஷயம். பிரிவை உணர்வது?... பயங்கரம்.

ஓர் ஆத்மா, இதோ விடைபெறத் துடிக்கிறது. அணைகிற விளக்கைப் போல அந்த இமைகள் படபடக்கின்றன. அதன் தீராத ஆசைகளை, ஏக்கங்களை மனசின் மேல் தளத்துக்கு அந்த ஆத்மா கொண்டு வருமா? அம்மாவின் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும்? அது தெரிந்து நான் செய்யப் போவது என்ன? என்னால் அவளது ஏக்கங்களைத் துடைத்தெறிய முடியுமா? அவளது நிறைவேறாத கனவுகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், ஆசைகள்... அவற்றை அறிந்து அவளைக் கடைத்தேற்ற என்னால் ஆகுமா? “அம்மாவை எடுத்து மடில வெச்சிக்கோங்க...” என்றாள் இவள், ருக்மணி. வாழ்வின் சூட்சும நிமிடங்களில் பெண்கள் அபார முன்தயாரிப்பு காட்டுகிறார்கள். ஆண்களோ வெனில் அக்கணங்களில் சற்று துணுக்குற்று வெலவெலத்துப் போகிறார்கள். பொதுவாக இந்த ஆண்கள் தைரிய வீரியம் பேசுகிற நபர்களாகவும் இருக்கிறார்கள். எல்லா ஆணுக்குமே ஜாதகத்தில் மூணாமிடம் பலவீனம்தான். “அம்மா? அம்மா?”... என்று குனிந்து அவள் காதருகே கூப்பிட்டேன். அம்மா கண்ணைத் திறக்கவில்லை.

என்றாலும் அவள் என்னைக் கேட்கிறாள் என்பது இருவருக்குமே புரிகிறது. நிறைய நிறைய நினைவுகள் அவளில் முட்டிமோதித் தத்தளிக்கிறாள் உள்ளேயே என்று தெரிகிறது. அந்தக் கொதிநிலை தாளாமல் கெட்டிலில் இருந்து போல கண்கள் சுடுநீரைக் கசிய விடுகின்றன. காலமே ஆவியாகிக் கொண்டிருக்கிறாற் போலிருக்கிறது. அம்மா இதோ சாகப் போகிறாள். அது எனக்குப் புரிகிறது. அம்மாவுக்கு அதைவிடத் தெளிவாகப் புரிகிறது. இதை எங்களுக்கு முன்னரே புரிந்து கொண்டவளாக ருக்மணி இருக்கிறாள் என்று தோன்றுகிறது.

“சரி அம்மா. நீ கவலைப்படாதே.. எவ்வளவோ தாண்டி வந்திருக்கே நீ. ரைட்டா ரைட்டான்னு பாண்டியாட்டம் ஆடி ‘உப்பு’க்கு வந்து சேர்ந்திட்டே. மனசுல எதையும் போட்டுக் குழப்பிக்காதே...” நான் என்னென்னவோ சொல்கிறேன். அபத்தம். அபத்தமாக நான் ஏதேதோ பேசுகிறேன். அந்தக் கணமே அபத்தமானது. அர்த்தங்கள் நிறைந்தது வாழ்க்கை. சூட்சுமங்கள் மிக்கது வாழ்க்கை. ஆனால் மரணம்? மரணம் வாழ்வின் அபத்தம். அத்தனை அர்த்தங்களையும் ஒருசேர வாங்கி குப்பையில் வீசிவிட்டுப் போய்விடுகிறது மரணம். அபத்தமே அதன் அர்த்தம். அபத்தபூரணம். இரு, அம்மா... என்ன சொல்கிறாள்.

கண்ணைத் திறக்க முயல்கிறாள். முடியவில்லை போல. தலையை சிறிது அசைக்கிறாள். நான் அவள்பக்கமாகக் குனிகிறேன். ஒரு முத்தம். சின்ன முத்தம் தருகிறாள் அம்மா. அம்மாவின் கடைசி முத்தம். தன் மொத்த வாழ்க்கையையும் அர்த்தப்படுத்தி விட்டாள் அம்மா. அவள் யார்? அவள் பேர் என்ன? அதெல்லாம் வேண்டாம். அவள்... அம்மா அவள். நான் அவள்பிள்ளை. என் அம்மா அவள். அம்மா செத்துப் போனாள் அத்தோடு. ஒரு ஈர முத்தத்தோடு விடைபெற்றுக் கொண்டாள். மிக அர்த்தபூர்வமாக அவள் மரணத்தைத் தழுவியதாக அவளுக்கு நினைப்பு அப்போது, சாகும்போது இருந்திருந்தால் எனக்கு மகிழ்ச்சியே. அர்த்தம் என்பது தான் என்ன? அது ஒரு புரிந்துகொண்ட பாவனை. அவ்வளவுதானே?

“ஐயோ, ருக்மணி... அம்மா... எங்க அம்மா...” என என்னென்னவோ திரும்பவும் பிதற்ற ஆரம்பிக்கிறேன். சரியாக மூட முடியாத குழாய் போல துக்கம் பீரிடும் கணம் அது. ருக்மணி என்னை மார்போடு சாய்த்துக் கொண்டாள். அவளும் பெண்தான். அவளும் அம்மாதான். உலகத்தை, ஆண்களை ரட்சிக்க வந்தவர்கள் பெண்கள். பெண்கள் இல்லாமல் ஆணால் இந்த உலகத்தில் என்னதான் முடியும்? அவள் முந்தானையில் கவிந்து குழந்தை போல் அழுகிறேன். ருக்மணி என்னை அழ விட்டுவிட்டாள். மன இரைச்சல் ஓயும்வரை அழட்டும், அழுது கரையட்டும், கரைந்து தெளியட்டும், என விட்டுவிட்டாள்.

அவள் எந்த ஒரு கணத்திலும் திகைப்பு காட்டவே யில்லை. ஒருவேளை அவள் உள்ளூற திகைப்பு அடைந்திருக்கலாம். ஆனால் கணவன்... அவனது அம்மாவின் மரணத்தின் பவித்ரத்தில் இருக்கிறான். அங்கே அவள் தன்னை பின்னிறுத்திக் கொள்ள நினைத்திருக்க வேண்டும். பெண்கள் எப்படியெல்லாம் ஒதுங்கிக் கொண்டு, அபாரமான பங்களிப்பு செய்கிறார்கள். அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு - அதில் ‘மடம்’, இதுதான் அது. அவர்களின் சூட்சுமங்களின் தடம் அயர வைக்கிறது. நாம் அவர்களைக் கொண்டாடும் போது, நமது நம்பிக்கைக்கான பங்களிப்பு அது. ருக்மணி... என அவளை உதவிக்கு நான் அழைப்பேன். அவள் அந்த அழைப்புக்குத் தயாராகக் காத்திருந்தாள், என்பது ஆச்சர்யம். வள்ளுவர் அல்ல நான். அவள் வாசுகி. அன்பு மகா சமுத்திரம் பெண்கள். பெண்கள் வாசுகிகள்.. என்று தோன்றுகிறது. அவளது சேலை மடிப்பின் ஜரிகையாக நான் கிடக்கிறேன்.

இந்த சூட்சும உணர்வின் வளாகத்தில் அவர்கள் சகஜப்பட்டு விட்டார்கள். அடுப்படியில் வேலைசெய்து கொண்டிருப்பார்கள். உள்ளே தூளிக் குழந்தையின் சிறு அசைவு. அதில் ஒலிகள் இல்லை. ஆனால் அவர்களுக்கு அது எட்டி விடுகிறது. ஆகா குழந்தைக்குப் பசி வரும் போல... என நினைக்கையிலேயே அவளுக்கு, பெண்ணுக்கு மார்பு நனைந்து விடுகிறது. வள்ளல் பெரும் பசுக்கள். ஆண்டாளால் மாத்திரமே அப்படி எழுத முடியும். சூட்சுமங்களின் முடிச்சைப் போட்டபடி, முடிச்சை அவிழ்த்தபடி பெண்கள் வாழ்க்கையை ஸ்வெட்டர் போலும் பின்னுகிறார்கள்.

ஹ. சரி. அம்மா. இந்த அம்மாவிடம் என்ன குறை கண்டார் அப்பா. திகைப்பாய் இருக்கிறது அப்படி நினைக்கவே. ஓரிரவு அப்பா காணாமல் போய்விட்டார். சட்டென எழுந்து விலகி பிரிந்து காணாமல் போய்விட்டார். ஏன்? யாருக்குமே தெரியாத திகைப்பு அது. அம்மாவுக்கே விளங்கி யிருக்காது. அம்மாவைப் புறக்கணிக்கக் கூட முடியுமா ஒருவரால்... என்பதே அதிர்ச்சிகரமாக இருந்தது.

அம்மாவை எரியூட்ட எடுத்துப் போகுமுன் அவளுக்கு சுமங்கலி அந்தஸ்திலேயே ‘காரியங்கள்’ நடந்தன. சிவப்பு வஸ்திரம் சாத்தப்பட்டாள் அம்மா. அவளது நகைகள், மூக்குத்தி, எண்ணெய் இறங்கிய தோடு, ஆ திருமாங்கல்யம்... அதை, மஞ்சள் கோர்த்த சரடைக் கட்டிவிட்டு,  பழைய தாலி கோர்த்த சரடை கத்திரிக்கோல் வைத்து நறுக்கியபோது ருக்மணிக்குக் கை நடுங்கியது. அப்பா இன்னும் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்றே தெரியாது. அம்மா ஓர் ‘உத்தேச’ சுமங்கலி.

அப்பா அம்மாவுக்கு இடையே என்ன ஆயிற்று?... ம். இப்படி இருக்கலாம். ஒருவேளை... அந்தப் பவித்திரத்தின் உச்ச தரிசனம், தனது பலவீனங்களைச் சுட்டி அப்பாவை வெருட்டி யிருக்கலாம். நான் அம்மாபிள்ளை. அப்படித்தான் எனக்கு உணர முடிகிறது. ம். இப்படியும் இருக்கலாம். அம்மாவாக எனக்கு அவள் காட்டிய முகம், பெண்ணாக அப்பாவிடம் காட்டிய முகம்... இரண்டுக்கும் வித்தியாசம் இருந்தும் இருக்கலாம். நான் அப்பாவை வெறுக்கிறேன். நான் அம்மாவை நேசிக்கிறேன், அதனால் அப்பாவை வெறுக்கிறேன். பிரச்சினைகள் இருக்கலாம். யாருக்குதான், எங்குதான் பிரச்சினை இல்லை? பிரச்சினை என்பது ஒரு புரிதலின் உப்பக்கம். மறுபக்கம் இல்லாமல் உலகமே இல்லை. பகலும் இரவும் போல, வெளிச்சமும் நிழலும் போல. நாணயத்தின் இருபக்கம் போல. உலகமே இரட்டைத்தன்மை கொண்டதாக அல்லவா இருக்கிறது? பிரச்சினைகளுக்கு நடுவே ஒத்திசைவு காண்பதே வாழ்வு, அல்லவா? இது தெரியாதா அப்பா?  என்ன ஆயிற்று அப்பா உனக்கு?

அப்போது எனக்கு ஐந்து வயது. அந்த நிகழ்ச்சிகள் எனக்கு அத்தனை சரியாக நினைவு இல்லை. காரணம் எனது வாழ்க்கையின் அந்த அலையை நான் உணருமுன்பே அம்மா என்னை சுவிகரித்துக் கொண்டாள், என்று இப்போது தோன்றுகிறது. ஆளுயரப் பேரலை பொங்கி வந்து என் காலடிமண் பறித்து கடலோடு என்னை இழுத்துக் கொள்ளுமுன் அம்மா என் கையைப் பிடித்து தன்னோடு இழுத்துக்கொண்டாள். அப்பாவின் இழப்பை நான் உணரவில்லை. அதுபற்றி தீவிரம் காட்டவில்லை. எனக்கு அம்மா இருந்தாள். அவள் கூட இருக்கிறாள், என்கிற குடையடி நிழலே எனக்குப் போதுமானதாக இருந்தது போலும். அப்பா காணாமல் போய்விட்டார். நான் அப்பாவைத் தேடினேனா? அப்பா இல்லை எனக்கு, என ஏங்கினேனா?

பிற நண்பர்கள், பள்ளித் தோழர்களுக்கு அப்பா இருந்தார். இருசக்கர வாகனத்தில் அவர்களை அவர் பள்ளிக்குக் கொண்டுவந்து விட்டார். அவர்கள் பாடத்தில் பரிசு வாங்கும்போது கீழே அமர்ந்து கண்மலர கைதட்டினார். உங்களுக்கு, நண்பர்களே, எனக்குப் போல அம்மா வாய்க்கவில்லை அல்லவா, என நான் நினைத்துக் கொள்வேன் ஒரு புன்னகையுடன். எனக்கு அப்பா இல்லை. ஆனால் அம்மா இருந்தாள், எல்லாமாக.

உள்ளூர்ப் பள்ளிக்கூடத்திலேயே எனக்கு வேலையும் அமைந்தது. குமாஸ்தா வேலைதான். இருக்கட்டுமே. உள்ளூர் என்பதால் இரட்டைச் செலவு ஆகாது. வேலைக்கு என்று நடந்தே போய்வரலாம். அம்மாவைவிட்டு வேலை என்று வேறு ஊர் போகவேண்டிய தேவை இல்லை என்பதே ஆசுவாசமாய் இருந்தது. காலை விடிய வயல்பக்கமாக நடந்துபோய் கிணற்றில் குளித்து விட்டு வருவேன். திரும்பி வருகையில் கோவில் மணியோசை கேட்கும். சிவ சிவ... என்று தன்னைப்போல வாய் முணுமுணுக்க மனம் கூப்பும் கைகள். ஒர்ரெண்டு ரெண்டு, ஈர்ரெண்டு நாலு... என எளிய வாய்ப்பாடு போல இருந்தது என் வாழ்க்கை. சம்பவ அடுக்குகளால் ஆனது அது. நியதிகளால் வடிவமைக்கப் பட்டது அது. இதில் அநேகமாக மாற்றங்கள் எதுவும் இராது.

பக்கத்துத் தெரு ருக்மணி. கணக்கு வாத்தியாரின் பெண் அவள். அவர்கள் வீட்டு வாசல் திண்ணையில் சாயந்தரமானால் ஏராளமான பசங்கள் கணிதமும் இந்தியும், டியூஷன் படித்துக் கொண்டிருப்பார்கள். ருக்மணி பள்ளிப் படிப்பு முடித்தபின் கொஞ்சநாள் பாட்டு கற்றுக் கொண்டாள். நவராத்திரிகளில் கொலு முன்னால் பாடுகிற அளவில் நாலு பாட்டு தெரியும் அவளுக்கு. மீதி நேரங்களை என்ன செய்ய என்று தெரியாமல் அவள் பாட்டு வகுப்புகளுக்குப் போயிருக்கலாம். இனி, என்று கேள்வியில்லாமல் அவள் காத்திருந்தாள். அப்பா அவராகவே ஜாதகக்கட்டை எடுப்பார். எப்போது அவளுக்குக் கல்யாணம் பண்ண வேண்டும், யாருக்கு அவளைக் கொடுக்க வேண்டும், அப்பா எல்லாம் பார்த்துக் கொள்வார், என அவள் நம்பினாள். ராட்டினத்தில் அமர்ந்தாற் போல, அது சுழல அவள் காத்திருந்தாள்.

நான் கணக்கில் சுமார்தான். என்றாலும் பள்ளியிலேயே வேலையமர்ந்தாகி விட்டது. வீட்டுக்கு அடங்கிய பிள்ளை. அம்மா வளர்ப்பு எப்போதுமே சோடை போகாது. அப்பா வளர்ப்பை அப்படிச் சொல்லிவிட முடியாது... என்றெல்லாம் அவரிடம் யோசனை இருந்திருக்கலாம். அவருக்கே என்னை மாணவனாகத் தெரியும். அவரிடம் நான் கணிதம் மற்றும் இந்தி டியூஷன் படித்திருக்கிறேன். கூட வாசிக்கிற எந்தப் பெண்ணையும் பார்த்துப் படபடக்காத ஆண். உள்ளூற தோல்விபயம் அதற்குக் காரணமாக இருக்கலாம். அல்லது அம்மாவிடம் காட்டிய மரியாதையின் அம்சம் அது. கணக்கு வாத்தியாருக்கு எனது ஒழுக்கம் பிடித்திருந்தது, என்று நானே பெருமையாக நினைத்துக் கொள்கிறேன். ஆண்களுக்கு ஒழுக்கம் முக்கியம் அல்லவா? நான் அம்மாபிள்ளை. கையிருப்பில் இருப்பதில் பெருமைகொள்ள வேண்டி யிருக்கிறது.

பெரிய உறவினர் பட்டாளம் எல்லாம் கிடையாது. ஆனால் இருப்பதைவிட்டு பறப்பதைப் பிடிக்க யத்தனிக்கிற ஆவேசமும் இல்லை எங்கள் இருவருக்கும். எனக்கும் ருக்மணிக்கும், என்கிறேன். கோவிலிலேயே கல்யாணம். வாத்தியார் வீட்டு பின்கட்டிலேயே விறகுச் சமையல். பத்து ஐம்பது சாப்பாடு. இரண்டு பந்தியில் வைபவம் முடிந்தது. வாழ்க்கை அலட்டிக்கொள்ளப் படுவது அல்ல. அது ஓர் அனுபவம். தாலி கட்டும்போது அப்பா இல்லையே, என்று யாரோ நினைவுபடுத்தி அழுதார்கள். என் அப்பா பற்றி அவர்களுக்குக் கவலை வந்தது. எனக்கு வரவில்லை. அப்பா என் அருகில் இல்லை. இது நானாகத் தேடிக் கொண்டது அல்ல, இந்த நிலை. இதற்கு நான் என்ன பண்ண முடியும்?

அர்ச்சகர் வீட்டில் சூறைத் தேங்காய் சில்லு போட்டு விற்பார்கள். விடல் போட்டவர்களே அங்கேவந்து சில்லு வாங்கிப் போவார்கள். மூணாம் வீட்டு சிவசைலம் வாசல் முருங்கைமரத்தில் இருந்து தெருவுக்கே முருங்கைக்காய் தருவார். அதன் கீரையும் வாரம் ஒருநாள் சேர்த்துக் கொள்ளலாம். மாதச் சம்பளம் வாங்குவதால் பால் கணக்கு உண்டு. வீட்டுப் பின்கட்டில் மருதாணி, அரளிச் செடிகள். பூஜைக்கு பின்கட்டுப் பூக்கள் தான். சிரித்துக் கிடந்தது பின்கட்டு.  ஒரு சாயலில் என் அம்மாவுக்கும் ருக்மணிக்கும் பொறுப்பு சுமப்பதில் வித்தியாசம் எதுவும் இல்லை, நுகத்தடி மாடுகள்... என்றே தோன்றியது. என் தாய் முன்னால் கூடியவரை ருக்மணி உட்காருவது இல்லை. காலை சமையல் ஆனதும் பூஜை அறையில் அந்த சாதத்தை வைத்து நெய் ‘சுத்தி’ பண்ணி மணியடித்து ஒரு ஸ்லோகம் சொல்லி, பிறகு நாங்கள் சாப்பிடுவோம். சமையல் தாமதம் ஆனால், ஐயோ, சாமிக்குப் பசிக்கும்டி, என்றுகூட நான் சொல்லியிருக்கிறேன்.

குளத்தில் மிதக்கும் ஊறிய கட்டைகள். மூன்று கட்டைகள். நான். அம்மா. ருக்மணி. இன்னும் எங்கள் ஊர் சனம் எல்லாரும், என்றுகூடச் சொல்லலாம். வழவழவென்று ரெட் ஆக்சைட் சிமென்ட் தரையில் படுத்துக் கொள்ளலாம். வாசல் பக்கமிருந்து ஜிலுஜிலுவென்று காற்று வரும். பெரிதும் எதிர்பார்ப்பு இல்லாவிட்டால் வாழ்க்கை சுகமானது தான். விதவிதமாகப் புடவை கட்ட வேண்டும். டிசைன் டிசைனாய் நகை வாங்கிச் சேர்க்க வேண்டும். ஒரு நல்ல நாள், கோவில் விசேஷம் என்றால் விசேஷ அலங்காரங்களுடன் உதட்டுச் சாயத்துடன் தலைகொள்ளாப் பூவுடன் காலில் சதங்கை ஒலிக்க வரும் பெண்கள் என்னை அச்சப் படுத்தினார்கள். இதெல்லாம், தான் அனுபவிக்க வில்லை என ருக்மணிக்கு ஏக்கம் இருக்குமா தெரியவில்லை. அம்மாவுக்கு அப்படி யோசனையே வந்திருக்காது பாவம். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அம்மா தன்னை உட்சுருக்கிக் கொள்கிற அளவிலேயே ஆகிப்போனது.

லேசாய் எப்பவுமே ஒரு பூசிய இருள் இருந்தது வீட்டில், அடர்ந்த கூந்தல் முகத்தில் பரவினாற் போல. பகலில் வாசல்கதவைத் திறந்தே வைத்திருக்க வேண்டியிருந்தது. அம்மா வாசல் நிலைப்படியில் தலைவைத்துப் படுத்துக் கொள்வாள். வாசலில் யாராவது வந்தால் இங்கே சுவரில் மறைப்பு கவியும். தலைதூக்கிப் பார்ப்பாள் அம்மா. ஒருவேளை அப்பாதான் வருகிறாரா, என்று பார்க்கிறாளா, என நினைத்துக் கொள்வேன். அம்மாவுக்கு அப்பா ஞாபகமா, இல்லை எனக்கா, என்று தெரியவில்லை.

குண்டு பல்பு மஞ்சளாய் அறைகளில் தேய்ந்த வெளிச்சத்தைத் தந்தது. எப்பவுமே அறைக்குள் நாங்களும் நிழல்களுமாய் நடமாடினோம். அதனாலேயோ என்னமோ ஊரில் பேய், கெட்ட ஆவி என்றெல்லாம் நிறையக் கதைகள் இருந்தன. விளக்கு வெச்சப்பறம் பெண்கள் வெளியே வர மாட்டார்கள். ஆண்கள் வெளியே போனால் அரிக்கேன் விளக்கு கையில் எடுத்துக்கொண்டு போனார்கள். இரவின் சிறு மழைக்கும் வீட்டுக்குள் தேள், பாம்புகள் வந்தன. ஓட்டு வீடுகளுக்கே தேள் வந்து விடுகிறது. பொத்துப் பொத்தென்று அவை தரையில் விழுந்தன. விளக்குமாற்றால் அடித்து வெளியே போட்டோம்.

எப்பவாவது அப்பாநினைவு வராமல் இல்லை. அம்மா இறந்தபின் அம்மா கனவில் சில நாட்கள் வருவாள். வாசல் திண்ணையில் உட்கார்ந்து நரையும் கருமையுமான கூந்தலை வாரிக்கொண்டிருக்கும் அவளது உருவம் மனதில் வரும். சீப்பில் முடி சேரச் சேர அதைச் சுருட்டி கால் கட்டைவிரலுக்கும் அடுத்த விரலுக்கும் நடுவே கவ்விக் கொள்வாள். ஆகா பெரும் சவாலாக, என் பிள்ளையை வளர்த்து ஆளாக்கி விட்டுவிட்டேன், என ஆசுவாசமாய் அவள் அமர்ந்திருப்பதாகப் படும். சரி. இனி? இனி என்ற கேள்வி எப்போதுமே ஊரில் எல்லாரையுமே திகைக்க வைத்தது. எதிர்காலம் பற்றி யார் யோசித்தார்கள் அங்கே. பரபரப்பே அற்ற ஊர் அது.

அம்மா இறந்து விட்டாள். அப்பா? அப்பா எங்கே இருக்கிறார்? இருக்கிறாரா என்பதே தெரியாது. அம்மா இறந்து விட்டாள், என்பதும் அப்பா அறிய மாட்டார். அம்மா காரியங்களை கடைத்தேற்றும் கர்மாக்களை நான் செய்துவிட்டேன். அப்பாவுக்கு அப்படி எதுவும் நடக்க வாய்ப்பு இல்லை. அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும். அப்பாவை அம்மாகாலத்துக்குப் பின் நினைக்க ஆரம்பித்திருந்தேன். அப்படி திரும்ப வரவே வராத அளவில் என்ன ஆயிற்று? அம்மா என்ன பிழை செய்து விட்டாள்? வீட்டுக்கு வெளியே, எனக்குதான் என்ன இருக்கிறது? நான் இல்லாவிட்டால்... இவள், ருக்மணி பாடு என்னாகிறது. இதுவரை எங்களுக்குக் குழந்தையும் இல்லை. அப்பா மனைவி, குழந்தை, என்றெல்லாம் யோசிக்காமல் எப்படி அவரால் இப்படி ஒரு முடிவு எடுக்க முடிந்தது. அதாவது இதெல்லாம் விட, தன்காரியம் பெரிதாய் அவர் உணர்ந்திருக்க வேண்டும். சரியா அப்பா இது? இது நியாயமா?

அப்பாவைப் பற்றி நான் கேள்விப்படுகிற சூழலும் வந்தது. ஒருநாள் அவரை நேரில் சந்திப்பேன் என எனக்கே ஒரு யோசனை ஓடியபடியேதான் இருந்தது. இதற்கிடையில் ருக்மணியின் அப்பா அம்மா ஷேத்திராடனம் கிளம்பினார்கள். காசிக்கும் பிறகு ராமேஸ்வரத்துக்கும். காசிக்குப் போன மாமனார் காசிக்கு சற்று தள்ளி ஒரு ஆசிரமத்தில் அப்பாவைச் சந்தித்ததாகச் சொன்னார். எனக்கு அங்கே யிருந்தே அவர் பேசினார். அவர் குரலில் பரபரப்பு இருந்தது. திடீரென்று எனக்கு அவரிடமிருந்து அழைப்பு. நாலுவீடு தள்ளி ராஜம் மாமி வீட்டில் போன் இருக்கிறது. ருக்மணி திடீரென்று அப்பாவிடம் இருந்து போன் என்றதும் அழவே ஆரம்பித்து விட்டாள். எனக்கும் பயம் தான். விஷயம் நல்ல விஷயமா இருக்கணுமே ஈஸ்வரா... என்றபடி படபடப்புடன் நான் போனை எடுத்தேன்.

அவர் சந்தித்த மனிதர் என் அப்பா, என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது ஏன் இப்போது இப்படி நடக்கிறது, தெரியவில்லை. அப்பாவை நான் அறிந்துகொள்ளாமலே இருந்திருக்கலாம். மாமனார் பெரிதும் உணர்ச்சிவசப் பட்டிருந்தார். அவரைப் பார்த்ததுமே அப்பாவுக்கு அடையாளம் தெரிந்திருக்கிறது. தலையை மாத்திரம் அசைத்திருக்கிறார். இவருக்கு என் அப்பாவை முதலில் அடையாளம் தெரியவில்லை. அப்பா அதை ரசித்தாற் போலிருந்தது. அன்றைக்கு முழுவதும் மாமனாருக்கு, யார் இவர், என்று யோசனை. ஏன் என்னைப் பார்த்து அவர் புன்னகை செய்ய வேண்டும். ஊரைவிட்டுக் கிளம்புமுன் மாமனார் திரும்பப் போய் அப்பாவைப் பார்த்தாராம். “நீங்க...” என்றாராம். “ஆமாம்...” என்றாராம் அப்பா. ஆகா, ஞாபகம் வந்துவிட்டது. “நீங்க ராம்பிரசாத் தானே?” என்றாராம் மாமனார். நரைத்த தாடியை நீவி விட்டுக் கொண்டு அப்பா பேசினாராம். “பூர்வாசிரமத்தில் அப்படித்தான் என்னை எல்லாரும்  அழைத்தார்கள்...” என்றாராம். “ஜெய் சக்தி!” என்று அப்பா விடை கொடுத்திருக்கிறார்.

எனக்கு அப்பாவைப் போய்ப் பார்ப்பதா வேண்டாமா என்று குழப்பமாய் இருந்தது. அம்மா இறந்தே பத்து வருடம் ஆகிறது. அதுபற்றிய விவரங்கள் அப்பா அறிய மாட்டார். என்னைப் பற்றி அப்பா விசாரித்தாரா, தெரியாது. மாமனார் என் அப்பாவின் முகவரியுடன் தந்தி ஒன்றை அடித்திருந்தார். இன்னும் பல ஸ்தலங்கள் போய்விட்டு அப்படியே ராமேஸ்வரம் போய்விட்டு அவர் திரும்பி வருவார். இடையே மிக முக்கியமான ஒரு கடமை போல அவர் இதையெல்லாம் ஏன் செய்கிறார் தெரியவில்லை. நான்... இந்தத் தகவலுடன்... இப்போது என்ன செய்வது?

“போய்ப் பார்த்திட்டு வாங்களேன்...” என்றாள் ருக்மணி. “பார்த்து?” என்றுகேட்டேன். ருக்மணி பதில் சொல்லவில்லை. நான் போய்ப் பார்த்துவிட்டு வர விரும்புகிறேன், என்பதை அவள் யூகிக்கிறாள். மேலோட்டமாக நான் அப்பாமேல் கோபம் போல் காட்டிக் கொள்கிறேனா? அப்பாவிடமும் அம்மாவிடமும் ஒருவனால் கோபம் காக்க முடியுமா? அதைத்தான் ருக்மணி யூகிக்கிறாளாய் இருக்கும். போய்? அப்பாவை என்னோடு வந்துவிட அழைப்பதா? அவருக்கே அதெல்லாம் தோன்ற வேண்டும். வருந்தி அழைப்பது சரி அல்ல. அப்பா ஏன் காவி கட்டி சாமியாராக வேண்டும்? எத்தனை வருடங்களாக இப்படி இருக்கிறார். “வைத்தி எப்பிடி இருக்கிறான்?” என்று மாமனாரிடம் ஒரு வார்த்தை அவர் கேட்டாரா? அந்த விவரத்தைக் கேட்குமுன் மாமனார் தொலைபேசியை வைத்து விட்டார். அவர் இருந்த பரபரப்பில் அப்பா என்னை விசாரித்தாரா, என்று கேட்பதும் லஜ்ஜைகெட்ட தனம் அல்லவா. அவர் எந்த எண்ணில் இருந்து என்னிடம் பேசினாரோ அதுவே தெரியாது. ‘ட்ரங்க் கால்’ என்று தபால் அலுவலகத்தில் இருந்து பேசி யிருக்கலாம் மாமனார். ஒருநாளில் அப்பாவின் முகவரியைத் தெரிவித்து மாமனாரிடம் இருந்து தந்தி வந்தது எனக்கு. அதே தபால் அலுவலகத்தில் இருந்து தந்தி அடித்திருந்தார். போனை வைத்தபின் இந்த யோசனை வந்ததா தெரியாது.

சற்று குழப்பமான மனநிலையிலேயே நான் ரயிலில் அமர்ந்திருந்தேன். எனக்கு இந்தி தெரியாது. மாமனாரிடம் சின்ன வயதில் டியூஷன் படித்திருக்கிறேன். ஆனால் யாராவது இந்தி பேசினால் புரியும். இந்திப் பாடல்கள் ரசிப்பேன். இந்திப் படங்கள் சில பார்த்திருக்கிறேன். கையில் புளிசாதம், எலுமிச்சை சாதம், தயிர்சாதம், சப்பாத்தி... என வகை வகையாய்ச் சோத்து மூட்டை. வெளியே சாப்பிட்டால் சரியா வருமா என்பது இவள் கவலை. ருக்மணி எனக்கு எத்தனை பெரிய துணை. இவர், என் அப்பாவானால், இதெல்லாம் வேணாம் என்று ஒரே உதறு, விரித்திரிந்த துண்டை எடுத்து உதறித் தோளில் போட்டுக்கொண்டு இருட்டில் புகுந்து காணாமல் போய்விட்டார். “ருக்மணி, நீயும் கூட வரியா?” என்றுகூட கேட்டேன். வேணாம். திடீர்ச் செலவு இது. கையிருப்பில் அதிகம் பணம் இல்லை. ஒண்டியாளா நீங்க மாத்திரம் போகத்தான் காணும். உங்க அப்பாதானே? “நீங்கதான் போகணும், அதான் முக்கியம்” என்றாள் ருக்மணி.



சிறு ரயில் நிலையம் ஒன்றில் இறங்கி ரிக்ஷா பிடித்து... என ஒரு பயணம். ஆனால் எல்லா இடங்களிலும் ஆளைப் பார்த்தே தமிழா, என்று கேட்டார்கள். தமிழ் பேசினார்கள். எல்லா ரிக்ஷாக்காரர்களுக்கும் எல்லா இடமும் தெரிந்திருந்தது. அப்பாவின் ஆசிரமம் அந்தப் பகுதியில் பிரசித்தி பெற்றதாக இருந்தது. பெரும் இரு தூண் எடுத்த வாயில். சிவப்பான தூண்கள். குங்குமத் திகட்டல். தென்னம்பாளையின் பூக்கள் கட்டி யிருந்தது. பல பத்து வருடங்களாக இயங்கும் ஆசிரமம் போலத் தெரிந்தது. பின் வளாகத்தில் முந்தைய பீடாதிபதியின் ‘பிருந்தாவனம்’ இருந்தது. அதையும் தாண்டி கோசாலை. சனம் மொத்தமும் வரிசையில் கோசாலை தாண்டி பிருந்தாவனம் தாண்டியே உள்ளே போக ஒழுங்குசெய்யப் பட்டிருந்தது. நுழைவாயிலில் பிள்ளையார். நிறையப் பேர் உள்ளே போவதும் வெளியேறுவதுமாய் இருந்தார்கள். அத்தனை பேர் அந்த அதிகாலையிலேயே ஒன்று திரண்ட இடம் அது. ஆனாலும் ஒரு பவித்ரமான அமைதி அங்கே நிலவியது. எதிரில் வருகிற எல்லாரையும் எல்லாரும் வணங்கினார்கள். புண்ணிய பூமி. முழு வளாகமும் தரை முழுசும் பளபளவென்று பளிங்கு இழைத்திருந்தது.

மிகப் பெரும் காளி சிலை ஒன்று அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்தது. எங்கும் சிவப்பு மயம். அத்தனை சிவப்பு, கொஞ்சம் பயமாய்க் கூட இருந்தது. பெரிய தட்டு அளவு, வட்டத் தொப்பி அளவு ஜால்ராக்களை அவர்கள் திடீர் திடீரென்று அடித்து பெரும் ஒலி எழுப்பினார்கள். பூஜையின் முகூர்த்தத்தில் அந்த இடமே கொந்தளித்தது. ருக்மணி கூட இருந்திருக்கலாம். இதெல்லாம் அவள் எங்கே பார்க்கப் போகிறாள், என்றிருந்தது. காலையில் பூஜை நேரம் அது. நான் போய் இறங்கிய நேரம் பூஜைகள் மும்முரப் பட்டிருந்தன. கூட்டத்தோடு கூட்டமாய் நானும் கலந்துகொள்ள வரிசையில் உந்தப்பட்டேன். அந்த சூழலே ஒரு மாதிரி நெற்றிப்பொட்டைத் தெறிக்க விடுகிறதாக இருந்தது. சிறு குழந்தைகளுக்கு அனுமதி இல்லையாம், சொன்னார்கள்.

காளி சிலையருகே சிறு பீடத்தில் அமர்ந்தபடி, அவர்... அவர்தான் என் அப்பாவா? இப்போது அவர் பெயர் என்ன? சக்திஜோதி சுவாமிகள் என்றார்கள். செக்கச் சிவந்த கனி போல இருந்தார். உடம்பு பூராவும் காவியால் மூடிக் கொண்டிருந்தார். நரையும் கருமையாய்த் தாடிக்குள் அந்த முகம். அடடா என்ன பிரகாசமான தேஜஸ் அது. காண்பவரை மயக்குகிற ஏதோ ஒரு சக்தி அவரிடம் இருந்தாற் போலிருந்தது. நானறியாமல் கைகூப்பித் தொழுதேன் நான். அவரைப் பார்த்த கணம் என் நெஞ்சு ஏறியேறி விம்மித் தணிந்தது. அழுகை வரும் போலிருந்தது. ருக்மணி... என்று வாய் முணுமுணுத்தது. இப்படி சந்தர்ப்பங்களுக்கு நான் லாயக்கானவனே அல்ல. உன்னதங்களின் உக்கிரக் கணம் அது. மஞ்ச மஞ்சேர் என நாக்கை நீட்டிய காளி. அதன் அருகில் அமர்ந்து பூஜை செய்யவே அபார தைரியம் வேண்டும். அதை வழிபாடு செய்வது என்பது உச்சகட்ட பலத்தை வழங்க வல்லது. அங்கு வந்து அந்த ஸ்வரூபத்தை வணங்கினாலே தீமை கிட்ட நெருங்கவே அஞ்சும் என்று பட்டது. நமக்கெல்லாம் ஆஞ்சநேயர், நரசிம்மர் உக்கிரமே தாளாது, என்று தோன்றியது. இரவில் தனியே அந்த வளாகத்தில் நிற்கவாவது முடியுமா?

சுவாமிஜியின் அருகே ஒரு இளம் பாலகன் அமர்ந்திருந்தான். அவருக்குப் பின் பட்டம் இந்த பாலகனுக்கு வருகிறது போல. முன் தலையை மழித்து பின் குடுமி வைத்திருந்தான். எல்லாருமே நெற்றியில் கோபி போல குங்குமம் வைத்திருந்தார்கள். ஒவ்வொரு ஆன்மிகப் பள்ளிக்கும் ஒரு அடையாளம் தன்னைப்போல அமைந்து விடுகிறது போலும். நானும் குங்குமம் வாங்கி அவர்களைப் போல நெற்றியில் உயரவாக்கில் தீற்றிக் கொண்டேன். இதை எழுத வெட்கப் படுகிறேன். ஆண்களைப் பற்றி என்ன, பெண்கள் இப்படித் தீற்றிக் கொண்டால் ஒரு கிளர்ச்சி ஆணுக்கு ஏற்பட்டுப் போகிறது.

காலை உணவு எல்லாருக்குமே இலவசமாக வழங்கினார்கள். கேசரி. இட்லி. பொங்கல். பிறகு செவ்வாழைப்பழம். பழத்திலும் சிவப்பை விடவில்லை போல. எல்லா இடங்களுமே மிக மிக சுத்தமாகப் பராமரிக்கப் பட்டிருந்தன. எல்லாமே ஓர் ஒழுங்கில் இயங்குவதாக இருந்தன. அத்தனை பேர் முகத்திலும் ஒரு அமைதி, திருப்தி இருந்தது. எல்லாரிடமுமே ஒரு நெகிழ்ந்த மிருது இருந்தது. ஆன்மிக பூமி அது. அப்பாவின் பூமி. அப்பா தன்னை சுவாமிஜியாக கிடுகிடுவென்று பெருக்கிக் கொண்டிருக்கிறார், என்று நினைத்துக் கொண்டேன். அவர்முன் நாம் எல்லாரும் சிறு புல் என உணர வைத்த பெருக்கம் அது. நல்லவை அல்லவை எல்லாருக்கும் தெரிகிறது. தெரியாமல் என்ன? ஆனால் மக்கள் அதை எடுத்துச் சொல்ல யாரையாவது எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் யாரையாவது பின்தொடர விரும்புகிறார்கள். அப்பா அவர்களது மனசாட்சியின் குரல், என்று தோன்றுகிறது. சுவாமிஜி, அவர் கண்கள் அன்பைப் பொழிந்தன. அவரது அசைவுகளில் கருணை வழிந்தது. வற்றி ஒடிசலான மெலிந்த தேகம் அது. நிறைய ருத்ராட்ச மாலைகள் அணிந்திருந்தார். கையில் ஒரு ‘தண்டம்’ இருந்தது. அது ஆலங் குச்சியா தெரியவில்லை. அவரிடமிருந்து சந்தனமும் குங்குமமும் கலந்த ஒரு வாசனை கமழ்ந்தது. அடிக்கடி அந்தக் கூட்டத்துக்குள் ஆங்காங்கே சாம்பிராணி காட்டிக்கொண்டே யிருந்தார்கள். பானகமும் விநியோகித்தார்கள். சுள்ளென்ற சுக்கு ருசியுடன் பானகம். தரையெங்கும் சிவப்பு விரிப்புகள். எத்தனை நேரம் உட்கார்ந்தாலும் கால் மரத்துப் போகாது.

பத்து மணிக்கு மேல் அவரது ஆன்மிகச் சொற்பொழிவு தினசரி இருக்கும் போலிருக்கிறது. அதில் பக்தர்கள் நிறைய சந்தேகங்களும் கேட்கிறார்கள். காலையுணவு முடித்த ஜோரில் பக்தர்கள் மண்டபம் வந்து குழுமி விட்டார்கள். கூட்டத்தில் உட்கார இடம் இல்லாமல் நிற்கவும் செய்கிறார்கள். சக்திஜோதி சுவாமிஜி மாறாத, தெளிந்த புன்னகையுடன் பதில் சொல்வது அழகு. மனிதனுக்கு வாழ்க்கையில் பிரச்சினையே கிடையாது, என்பது போல அவரது ஆளுமையில் ஒடுங்கிக் கிடந்தன அத்தனை ஆத்மாக்களும். தெளிவாக இந்தி பேசினார் சுவாமிஜி. கூட்ட முன் வரிசையில் பல வெளிநாட்டினர்களும் அமர்ந்திருந்தார்கள். பக்தர்கள் ஒவ்வொருவராக வர வர அவர்களுக்கு பதில் வணக்கம் சொல்லி ஒரு பழமோ பூவோ பிரசாதம் வழங்கினார். அவரது புன்னகையைப் பார்த்துக் கொண்டே யிருக்கலாமாய் இருந்தது. ஐந்து வயது வரை அப்பா எனக்கு நினைவில் இருந்தாரே, அந்த அப்பா இல்லை இது. அப்பாமடியில் படுத்துத் தூங்கிய ஞாபகம் இருந்தது எனக்கு. மற்றபடி பெரிய நினைவுகள் எதுவும் என்னிடம் இல்லை.

வாழ்க்கை ஆனந்த மயமானது. அது இன்பமும் துக்கமுமாக ஆக்கப் படுகிறது. மனித வாழ்வின் துக்கங்களுக்குக் காரணம் நாம்தான். மனிதர்களேதான். நமது சுயநல இச்சைகள் தான். ஆசைகள் தான். போட்டி பொறாமை கசப்பு, என்று மனதில் கசடுகளை ஏற்றிக் கொண்டு மனிதன் அவதிப் படுகிறான். மனிதன் பிறரைப் பற்றி நீதிபதியாகவும், தன்னைப்பற்றி வழக்குரைஞராகவும் செயல்படுகிறான்.

உண்மையில் நாம் எல்லாருமே ‘அவளுடைய’ குழந்தைகள் அல்லவா. எந்த தீயசக்தியில் இருந்தும் ‘அவள்’ நம்மைக் காத்து விடுவாள். நாம்தான் பிரச்சினையைப் பற்றி ரொம்ப மனதில் குழப்பிக் கொள்கிறோம். ஏனெனில் பிரச்சினைகளை நாமே வரவழைத்துக் கொண்டுள்ளோம், என்று நம் ஆழ் மனதுக்குத் தெரிகிறது. நமது மகிழ்ச்சியில் அது இருட்டைப் புகுத்தி விடுகிறது. உலகம் பெரியது. அன்புமயமானது. வாழ்க்கை இன்ப மயமானது. மனிதர் மேல் நம்பிக்கை முக்கியம். பரஸ்பர நம்பிக்கை வாழ்க்கைக்கு இனிமை சேர்ப்பது. அவர் பேசிய இந்தியில் எனக்குத் தெரிந்ததும் புரிந்ததுமாகச் சொல்கிறேன்.

நிறுத்தி நிதானமாய் மேடையில் அவர் கம்பீரமாய் பேசினார். அவர் பேசினால் கேட்டுக்கொண்டே யிருக்கலாம் போலிருந்தது. ஒவ்வொரு கருத்தையும் நிறுத்தி நிதானமாக இடையே மௌனத்தால் நிரப்பி நிரப்பி அவர் போதித்தார். நமது மனம் என்னும் பாத்திரத்தைக் காலியாக்கி காலியாக்கி மீண்டும் அவர் நிரப்பினாற் போலிருந்தது. ஒரு இசைக் கச்சேரி கேட்பது போல இருந்தது. பின்னால் சுருதிப் பெட்டி வேறு ருய்ங்கென்று இயங்கிக் கொண்டிருந்தது.

வாழ்க்கையின் தத்துவங்கள் மிக எளியவை. அதை மனம் என்னும் எண்ணக் குவியலால் குழப்பிக் கொள்ள நேரிடுகிறது. அன்பு, உலகின் பிரதான அம்சம். என்றால் அன்பே ஒருபக்கம் பிரச்னைகளை விளைவிக்க வல்லதாகி விடுகிறது. நமது உற்றார் உறவினர் சுற்றம், சூழ்ந்த இந்த வாழ்க்கையின் அன்பு, வேறொருவரிடத்தில் மூன்றாவது நபரிடத்தில் நமக்கு இல்லை. அங்கேதான் பிரச்சினை வேர் விடுகிறது. நமது சிறிய உலகத்தை வைத்துக் கொண்டு அதில் எல்லா நல்ல விஷயங்களையும் நாம் எதிர்பார்க்கிறோம். ஏமாற்றமும் சில சமயம் அடைகிறோம். நாம் அறியாமல் பிறரோடு நம்மை ஒப்புநோக்கிக் கொள்கிறோம். விளைவு என்ன? அமைதியின்மை. உலகம் மனிதன் அனுபவிக்கக் கிடைத்த ஒன்று. நமது வாழ்நாள் சிறியது. கவலைப்பட்டே அதன் பெரும் பகுதியை நாம் வீணடித்து விடுகிறோம். மகிழ்ச்சி என்பது... வேறெங்கோ இருந்து வருவது அல்ல. அது உன்னிடமே உள்ளது. அதை எண்ண மேகங்கள் மறைத்துவிடுகின்றன. அதை அனுமதிக்கக் கூடாது.

ஐயோ. அவர் பேச்சை சரியாக மொழிபெயர்த்துச் சொல்கிறேனா தெரியவில்லை. உரையை முடிக்கையில் “ஜெய் சக்தி!” என அவர் பெருங்குரல் எடுத்தபோது கேட்டுக் கொண்டிருந்த பெருங்கூட்டமே சிலிர்த்து “ஜெய் சக்தி!” என்று திரும்பச் சொன்னது. “எல்லாம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். மனிதனுக்குத் தெரியாத விஷயம் என்ன இருக்கிறது? ஆனால் தூய அன்பும் இயற்கை உபாசனையும் தவற விட்ட மனிதனுக்கு கண்கள் கட்டப் படுகின்றன. ஆத்திரம் கண்ணை மறைக்கிறது, என்று சொல்வார்கள் அல்லவா? அதைப்போல... நல்ல விஷயங்களை நாம் விடாமல் கைக்கொள்ள வேண்டி யிருக்கிறது. அதற்குக் கடினமான நியதிகள், பயிற்சிகள் முக்கியம். மனதைக் காலியாக வைத்துக் கொள்வது முக்கியம். அலை பாய்வது மனதின் இயல்பு. அதை முளையடித்து ஓரிடத்தில் கட்டுவது முக்கியம். சக்தியைச் சரணடையுங்கள். அவள் உங்கள் மனதைத் தெளிய வைப்பாள். உங்கள் பிரச்சினைகள், கவலைகளை அவளிடத்தில் விட்டு விட்டால் உங்கள் மனம் அமைதியடையும். பிரச்சினைகள் இருந்த இடம் குப்பை விலக்கினாற் போல துலக்கம் பெறும். ஜெய் சக்தி!”

நானே சிலிர்த்து “ஜெய் சக்தி!” என்றேன். ஒரு ஊதுபத்திப் புகை போல அவர் பேசும்போது பின்னணியில் சுருதிப் பெட்டி இயங்கியது. அவர் பேசி முடித்ததும் ஒவ்வொருவராகப் போய்ப் பிரசாதம் வாங்கிக் கொண்டோம். மைக்கை வாங்கிக் கொண்டு யாரோ பெண்மணி சுவாமிஜியை வணங்கிவிட்டு இறைப் பாடல் ஒன்றைப் பாட ஆரம்பித்தாள். அவளே கூட ஆர்மோனியமும் வாசித்தாள். புடவை மடிப்புகள் அசைவது போல ஒலி இழைகிறது. ஒவ்வொருவராக வரிசையாக அவரைநோக்கி நகர்கிறோம். அவரை இதோ கிட்டத்தில்... நான் போய் சுவாமிஜியை நமஸ்கரித்தேன். என் உடல் பரவசத்தில் நடுங்கியது.

அவர் என்னைப் புரிந்து கொண்டாரா? எனக்கு அழுகை அழுகையாய் வந்தது. புன்னகையுடன் என்னைப் பார்த்தார் அவர். என் கண்களை ஊடுருவி உள்ளே அவர் பார்ப்பதாய் உணர்ந்தேன். சுவாமிஜியின் அருட்பார்வை ஒன்று போதும். நமது துயரங்கள் பனிபோல் கரைந்து ஓடிவிடும், என்று தோன்றியது. அவரை அப்பா, என்று அழைக்க எனக்கு தைரியம் வரவில்லை. ஒருகணம் நான் அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொள்ளலாமா, என்று தோன்றியது. தனியே அவரைச் சந்திக்க நேரம் கேட்டு, அங்கிருந்த அவரது பரிவாரத்திடம் சொல்லி யிருக்கவும் செய்யலாம். ஏனோ அதை நான் செய்யவில்லை. அவர் என்னை அறிந்து கொண்டாலும், நான் அவரிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டாலும் அவரிடம் எந்த மாற்றமும் இராது, அவர் அதைப் பெரிதும் பரபரப்புடன் எடுத்துக்கொள்ள மாட்டார், என்று உணரமுடிந்தது என்னால்.

தன் உலகத்தை விட பெரிதாய் ஒன்றை அவர் சிருஷ்டி செய்துகொண்டு விட்டதாக உணர்ந்தேன். அன்றைக்கு என்னை, தன் குழந்தையை விட்டுவிட்டு அவர் பிரிந்து போனது எதற்காக? இப்போது அவர் ‘உலகத்தின் ஞானத்தந்தை’ அல்லவா? இதோ இந்த சிஷ்ய கோடிகள், இத்தனை பேருக்கும் அவர் தந்தை அல்லவா? இங்கேயும் அவருக்கு தந்தை அல்லது குருநாதர், அவரைப் பின்தொடர வாரிசு எல்லாமும் அமைந்திருக்கிறது. இது பெரிய வட்டம். அவரது சொல் ஒவ்வொன்றும் முத்து போல மதிப்பு மிக்கவையாக ஆகிவிட்டன. அவரை ஊரில் கொண்டாடுகிறார்கள். நான் சிறு மலையடிவாரக் கல். அவர் மலையின் மீதிப் பகுதி... என உரு பெருக்கிக்கொள்ள அவரால் முடிந்தது. அவரால் முடியும் என்று அன்றே அவருக்குத் தெரிந்திருக்கிறது.

எனக்கு அவர் இரத்த சம்பந்த அளவில் தந்தை. நான் அவரது உயிரளபெடை. அவரோ அன்றைய இரவில், எனது ஐந்து வயதில், தனது ஞானத் தந்தையைத் தேடிப் புறப்பட்டிருக்க வேண்டும், அந்த அந்தகார இருளில் தன் வெளிச்சத்தை நோக்கி அவர் புறப்பட்டிருக்கிறார், என்று தோன்றியது. ரயில்வே பிரளாட்பாரத்தை அடைந்தபோது ரயில் வந்திருக்கவில்லை. இன்னும் நேரம் இருந்தது. ஆசிரமத்துக்கு வந்திருந்த நிறையப் பேரை அங்கே ரயில் நிலையத்தில் பார்த்தேன். அவர்கள் எல்லார் முகத்திலும் அப்படியொரு அமைதியும் நிறைவும் இருந்தன. அவர்கள் எல்லார் நெற்றியிலும் அந்த குங்கும கோவி இருந்தது. என் மனம் தானறியாமல் “ஜெய் சக்தி!” என குரல் எடுத்தது.

---

storysankar@gmail.com

mob 91 97899 87842 /whatsApp 91 94450 16842

Comments

Popular posts from this blog