அபிராமியின் கடைக்கண்கள்

எஸ்.சங்கரநாராயணன்

 (நன்றி / பேசும் புதிய சக்தி, ஜுன் 2021) 

மைதியான இரவுகளில் சில சமயம் தெருநாய்கள், அமைதி உள்குடையப் பட்டு ஆத்திரத்துடன் குரைப்பு எடுப்பதைப் போல, அப்பாவுக்கு அடிக்கடி இராத்திரி இருமல் வரஆரம்பித்து விடுகிறது. சிறு மழை, தூறல் கூட அவருக்கு உடம்பைப் படுத்தி விடுகிறது. இரவிருளின் நிழல் சித்திரம் எதிலும் அவர் கலவரப் பட்டாரா? பகலிலேயே அவர் அத்தனை தைரியசாலி என்று சொல்ல முடியாது. மிகக் குறைவாகவே, தலையாட்டலுடன் யோசித்து ஓரிரு வார்த்தை பேசுவார்.

உண்மையில் அந்த உடல் படுத்தலுக்கு அவரது வாழ்க்கைசார்ந்த நம்பிக்கை யின்மையே, பயமே காரணம் என்று சேதுவுக்குத் தோன்றியது. சேது இப்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். ஊரில் ஒரே பள்ளிக்கூடம்தான். நடந்தே போய் நடந்தே திரும்பி வருகிற அளவில், ஆனால் தூரம் அதிகம். மீசை அரும்பும் அந்த வயது அப்படி. திடீரென்று மூளை சொந்தமாக யோசித்து, முடிவுகள் எடுக்க பரபரப்பாகிறது. எல்லாவற்றையும் சந்தேகமாகவும் தலைகீழாய்ப் புரட்டியும், சுய சிந்தனையுடன் சீர் தூக்கியும் பார்க்க ஆரம்பிக்கிறது. மீசைக்கும் அதற்கும் தொடர்பு இருக்கலாம். அதேவயதுப் பெண்கள்? அவர்கள் திரண்டு குளிக்கிற அளவில் சுய முடிவுகளுக்குத் தயாராகிறதாகக் கொள்வதா?

அந்த வயதில் ஆண்கள் பெண்களுக்குப் புதுசாய்க் காட்சி அளிக்க ஆரம்பிக்கிறார்கள். அதிலிருந்து எல்லாம் மெல்ல மாற ஆரம்பித்து விடுகிறது போலும்.

இந்த முன்தலைமுறை... என்று அவர்களுக்கு, இளைஞர்களுக்கு ஆயாசமாய் இருக்கிறது. இப்படி எதற்கெடுத்தாலும் தயங்கி, பயந்து, தடுமாறி, திகைத்து, திண்டாடி... ஆகப்போவது என்ன? அப்பாவுக்கு ஒரு சிமென்டு குடோனில் வேலை. உள்ளே வந்து அடுக்கும் சிமென்டு, வெளியே போகும் சிமென்டு என்று கணக்கு அவரிடம். அதில் துல்லியமாக இருக்க அத்தனை மெனக்கிடுவதும், அதுபற்றிய பெருமையும். சேதுவுக்கு அது ஆச்சர்யமாய் இருந்தது. தவிரவும் கடையின் வரவு செலவுக் கணக்குகள் அப்பாவிடம் இருந்தன. முதலாளியின் வலக்கை நானாக்கும், என்கிற பெருமிதம். நாற்பது வருட உறவு  அது. இங்கே வந்து வேலையமர்ந்த பின் தான் அவருக்குக் கல்யாணம் ஆயிற்று. கணேசமூர்த்தி முன்னிலையில் தான் கல்யாணம். பிறகு சேது பிறந்தது... (பெண்பிள்ளை பிறக்காமல் ஆணாகப் பிறந்ததே அப்பா அம்மாவுக்கு சந்தோஷம்) என அவரது வாழ்வின் நல்லம்சங்களின் பின்னால், முதலாளி பார்த்து கைதூக்கிவிட்ட அந்த பெரியதனம் இருக்கிறது. முதலாளி என்ற வார்த்தை கேட்டாலே உட்கார்ந்திருக்கும் அப்பா எழுந்து நிற்பார். அத்தனை பயம். அல்லது மரியாதை. முதலாளியா அவர்... படியளக்கும் பெருமாள்.

சேது நன்றாகப் படித்தான். அது அப்பாவின் பெருமை. நான் நன்றாகப் படிக்கிறேன், இதில் இவர் பெருமைப்பட என்ன இருக்கிறது, என நினைத்தான் சேது. அப்பாவிடம் தன் சார்ந்த அவநம்பிக்கையும், வேண்டாத சந்தோஷமும் நிறைய இருப்பதாக சேது உணர்ந்தான். சேது பிறந்த அதிர்ஷ்டம் என்பார். இல்லாட்டி, அந்த ஈஸ்வர கடாட்சம், என்பார் நெகிழ்ச்சியுடன். பாவம். பஞ்சாயத்து சைரன் ர்ர்ர் என்று சத்தமெடுத்தாலே பயந்து போவார். சற்று சத்தமாகப் பேசவே அவருக்கு வரவில்லை. அதற்கு ஏற்றாற் போல முதலாளி கணேசமூர்த்திக்கு மைக் தேவையில்லாத பெரிய குரல். (அப்பா போல யாரோ ஒருத்தன்தான் மைக்கைக் கண்டு பிடிச்சிருப்பான்.) கடையில் அவர், கணேசமூர்த்தி இருந்தால் அவரது அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும். சிப்பந்திகள் அனைவருமே கப் சிப். சிப்பந்திகள் சப் சிப்பந்திகளாகி விட்டார்கள். ஆனால் எல்லாம் ஊமைக்குசும்புத் தனம். அவர் எழுந்து போனதும் அவர்கள் அடிக்கிற கொட்டம், ஒரே சிரிப்பு. அப்பாவுக்கு அது ரசிக்கவில்லை. நன்றி இருந்தாத்தானே இந்த சனியன்களுக்கு, என அவர் நினைத்துக் கொண்டார். என்றாலும் மற்றவர்களைப் பற்றி முதலாளி வந்ததும் இல்லாததும் பொல்லாததுமாய் அவர் போட்டுக்கொடுத்தது கிடையாது. அது மற்றவர்களுக்கும் தெரியும். “இந்த மாதிரில்லாம் அவரு கைலயே காசு வாங்கித் தின்னுட்டு அவரையே கிண்டல் பண்றது எப்பிடித்தான் உடம்புல ஒட்டுதோ?” என்பார். ஆனால் அப்பாதான் ஒல்லிப்பிச்சா. மற்றவர்கள் கிழங்காட்டம் தான் இருந்தார்கள்.

வீட்டின் தண்ணீர்ச் செலவுகளுக்கு பின்கட்டுக் கிணற்றில் இருந்து தண்ணீர் கோரி எடுத்து வந்து உள்ளே அம்மாவுக்கு சமையல் அறையில் சேர்க்க வேண்டும். அம்மா அதன் ஒரு ஓர ஜலதாரைப் பக்கமே ஒதுங்கி உட்கார்ந்து குளித்து விடுவாள். அப்பாதான் காலையில் பின்கட்டுக் கிணற்றில் நீர் இரைத்து இரைத்து ஊற்றிக் கொள்வார். எத்தனை சளி இருந்தாலும் வெந்நீர் கேட்க மாட்டார். மனுசாளுக்கு வெந்நீரே வியாதிடா, என்பார். அவரது எல்லா அசட்டு நம்பிக்கைக்கும் ஓர் அறிவார்ந்த பாவனை இருந்தது. “காய்கறிக்காரன் வந்துட்டுப் போறானா... இப்ப பார் அடுத்து தபால்காரன் வருவான்,” என்பார்.

அப்பாபற்றி இத்தனை கடுமையான யோசனைகள் வேண்டியது இல்லை. அம்மாபற்றி அப்படியெல்லாம் அவன் யோசித்தது கிடையாது. அப்பா உலகத்துக்கு பயப்பட்டால் இந்த அம்மா... அப்பாவுக்கு பயப்பட்டாளா தெரியவில்லை. அவளுக்கு அப்பாவைத் தாண்டி யோசனைகள் இருந்ததா அதுவும் சந்தேகமே. குடும்பம்னா ஒருத்தர் முடிவெடுக்கணும். ரெண்டு வண்டிமாடுகள் ஆளுக்கு ஒருபக்கமா இழுக்க ஆரம்பிச்சா (அது குடும்பத்துக்கு இழுக்கு) வண்டி நகருமா, என்கிறதாக அவள்சார்ந்து யோசனைகள். கைக்கும் வாய்க்கும் எட்டிய அளவில் திருப்திப் பட்ட வாழ்க்கை அது. எளிய வாழ்க்கை. அவளுக்கு மாங்கல்ய பலம் கெட்டி. தினசரி பூஜையில் அவள் அதை வேண்டிக் கொள்கிறாள்.

சேது அப்படி குடத்துள் அடங்கிவிட மாட்டான். அவன் கிணற்றுத் தவளை அல்ல. அவனது எதிர்காலம் பற்றி அவனுக்கு யோசனை எதுவும் உண்டா? ஒன்றும் இல்லை. அந்த நேரம் இன்னும் வரவில்லை. இப்போதைக்கு அவன் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் எடுத்தால் போதும். அப்பா அம்மா அவனிடம் எதிர்பார்ப்பது அதுதான். அதில் நான் குறை வைக்க மாட்டேன், என நினைத்துக் கொண்டான் அவன். நன்றாக மனப்பாடம் செய்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வாங்கினான். அவனையிட்டு அப்பா அம்மாவிடம் குறை எதுவும் இல்லை. அம்மா, அவள் பிரார்த்தனைகள் வீண் போகுமா என்ன?

அப்பாவின் முதலாளி, கணேசமூர்த்தி, அவர் முகமே அவனுக்குப் பிடிக்கவில்லை. எப்பவும் எதையாவது கணக்கு போட்டுக் கொண்டிருக்கும் உள்யோசனையைக் காட்டும் முகம் அது. என்ன யோசனை? அவரது பேர் எந்த சபையிலும் எடுபட வேண்டும். எதிலும் அவர் கை ஓங்கி யிருக்க வேண்டும். எதிலும் அவர் முயற்சி ஆதாயப்பட வேண்டும். தோல்வி, நஷ்டம்... அவருக்கு இல்லை. தினசரி பூஜைகள் செய்கிறார் அவர். அதில் கடவுளை மிரட்டுகிற ஒரு நிமிர்வு,தோரணை இருப்பதாக அவன் உணர்ந்தான். எப்பவாவது அவர் வீட்டைத் தாண்டி அவன் போனால் வாசலில் நாற்காலி போட்டுக்கொண்டு அவர் உட்கார்ந்து விசிறிக் கொண்டிருப்பார். விசிறிச் சாமியார் கேள்விப் பட்டிருக்கிறான். இவர் விசிறி முதலாளி. இவரைப் பார்க்க யார் போவார்கள். யாருக்கும் கடன் தேவைப் பட்டால் போவார்களாய் இருக்கும். ரேகை வாங்கிக் கொண்டு பணம் தருகிறார். அள்ள அள்ள குறையாத பணம். பணம் ஒரு போதைதான். பணம் அதிகாரத்தை தோரணையை நிமிர்வைத் தருகிறது. அப்பாவைப் பார். இவன் அப்பாவை... சற்று மெலிந்த ஒடிசலான உயரமான அப்பா. அவரிடம் நிமிர்வு அல்ல சிறு கூன் விழுந்திருந்தது.

கணேசுமூர்த்திக்கு ஒரே பெண். அபிராமி. முதலாளியின் பெண் என்பதாலேயே அவளைப் பற்றி சிறு எரிச்சல் இருந்தது சேதுவுக்கு. நல்ல சிவப்பு. கூந்தலை ஈரம் காய என்று மேல் முடிச்சோடு தளர விட்டிருப்பாள். தடுப்பணையில் இருந்து நீர் வழிந்து வருகிறாற் போலக் காணும். அவள் அருகில் போனால் அந்தக் கூந்தலில் இருந்து ஒரு சீயக்காய் வாசனை வரலாம். அல்லது ஷாம்பூ. ஏன் அருகில் போக வேண்டும், என நினைத்துக் கொண்டான் சேது. அதே பள்ளியில் அவனது வகுப்பில் தான் படிக்கிறாள் அபிராமி. பளிச்சென்ற உடைகள். கண்ணின் ஓரங்களை இன்னும் சற்று நீட்டி மை தீட்டி யிருப்பாள். கண் எனும் ஈட்டி எனக் காணும். முதலாளியின் பெண் என்ற அளவில் அவளை அவன் சற்று ஒதுங்கியே பழகி வந்தான். ஒருமுறை இடைவேளையில் அவன் தண்ணீர் குடித்துவிட்டு வகுப்பு உள்ளே வர அவள் வெளியே வர...

அது சீயக்காய்தான்.

பண ரீதியான கர்வம் அவளிடம் இருந்ததா தெரியவில்லை. அழகாய் இருப்பதாய் அவளைப் பற்றி அவளுக்கே ஒரு கிறுறுப்பு இருந்தது. தலையை ஒடித்து சிறு பாவனைகள் செய்தாள். இது குறித்து மற்ற பையன்களிடம் ஒரு ஹா இருந்தது. போங்கடா, உங்ளுக்கு வேற வேலை இல்லை, என அவன் சலித்துக் கொண்டான். ஒருவேளை அப்பாவின் முதலாளியின் பெண் என்ற அளவில் அப்பாவுக்கு எந்தச் சங்கடத்தையும் தர அவன் விரும்பவில்லையோ என்னவோ.

தினசரி காலைகளில் ஜமா சேர்த்துக் கொண்டு வயல் கிணறுகளில் போய்க் குளித்துவிட்டு வருவார்கள் ஊர்ப் பிள்ளைகள். நாலு பையன்களும் சேர்ந்து குபீர் குபீர் என்று குதிக்க கிணறும் வாய்த்துவிட்டால் கொட்டமடிக்கக் கேட்க வேண்டாம். போகும் வழியில்தான் கணேசமூர்த்தியின் தோட்டம். மாவும் புளியும் அடர்ந்து கிடக்கும். தோட்டத்துக்கு வேலியும் உண்டு. தோட்டக்காரனும் உண்டு. எல்லாம் சேதுவுக்கும் தெரியும்தான். விளையாட்டுப் புத்தி. தோட்டக்காரனை ஏமாற்றுவதில் ஒரு திருப்தி. வயசு அப்படி. வேலியில் ஒருபுறமாக ஒருவர் படுத்தபடி ஊர்ந்து உள்ளே போக வழி ஏற்படுத்திக் கொண்டு... எல்லாருக்கும் ஒரே சிரிப்பு. முதலில் தோட்டத்தினுள் நுழைவது யார்? நானே, என்று சேது நுழைந்தான். காடாகச் செழித்துக் கிடந்தது உள்ளே. தண்ணென்ற வெளிச்சம். அந்தக் குளுமையும் இதமான இருளும் வேறு உலகமாய் இருந்தது. பறவைகளும் குரங்குகளுமான பிரதேசம். வாலால் கிளையைப் பிடித்துக்கொண்டு தலைகீழாய் ஆடும் குரங்குகள் போல மாங்காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன. வயரில் தொங்கும் முட்டைபல்புகள். அல்லது காளைமாட்டின் அடிப்பகுதிகள்... மற்ற பயல்கள் வெளியே நின்று கொண்டிருந்தார்கள். சேதுவுக்கு உற்சாகம். துள்ளித் துள்ளி எட்டிய காய்களைப் பறித்துப் பறித்து வெளியே எறிந்தான். பையன்கள் இடமும் வலதுமாகப் பாய்ந்து காட்ச் பிடிக்கிறார்கள்.

இருந்த உற்சாகத்தில் தோட்டக்காரன் வந்தது கவனிக்கவில்லை. மாட்டிக் கொண்டான் சேது. அவனைப் பிடித்து மரத்தில் கட்டினான் தோட்டக்காரன். குளிக்க என்று கூடவந்த பயல்களைக் காணவில்லை. அவர்களில் ஒருவன் போய் அப்பாவிடம் தகவல் சொல்லி யிருக்கலாம். தோட்டக்காரன் முதலாளிக்குத் தகவல் சொல்லி விட்டான். அப்பா என்ன வேலையில் இருந்தாரோ பதறிப்போய் ஓடோடி வந்தார். அவனிடம் அப்பா பேசவே இல்லை. சற்று ஆத்திரத்துடன் நெஞ்சு விரைத்து நின்றிருந்தான் சேது.

அது தேவையற்ற வீம்பு, என்று இப்போது தெரிகிறது. அந்த வயசில், தப்பே செய்தாலும் மாட்டிக் கொள்ளும்போது ஆத்திரமாகி விடுகிறது.

“எவ்வளவு நாளா நடக்குது இந்த திருட்டுத்தனம்?” என்று அவனைக் கேட்டார் முதலாளி. அந்தக் குரலின் அதிகாரத் திமிர் அவனுக்குப் பிடிக்கவில்லை.  “எத்தனையோ குரங்கும் பறவையும் சாப்பிடறதுதானே?” என்று சற்று தைரியத்தைத் திரட்டிக் கொண்டு பேசினான். “ஏல நீ குரங்குன்னு ஒத்துக்கறியா?” என்று கேட்டார் முதலாளி. அப்போதுதான் அப்பா ஓடிவந்தார். சாதாரணமாகவே முதலாளி என்றால் அவருக்கு நடுக்கம்தான். பையன் வேறு குற்றவாளியாய் நிற்கிறான். அப்பாவைப் பார்க்கவே அவனுக்குப் பாவமாய் இருந்தது.

“பாத்தியா ஒன் பிள்ளை லெட்சணத்தை?” என்றபடி திரும்பி வெற்றிலைச் சாற்றைத் துப்பினார் முதலாளி. “என் கௌரவத்தைக் கெடுக்கவே வந்து பிறந்தியாடா நீ?” என்று அவனைப் பளாரென்று அறைந்தார் அப்பா. அப்பா அவனை அதுவரை அடித்ததே இல்லை. பள்ளியில் முதல் மதிப்பெண். நல்லா படிக்கிற பிள்ளை, என அவனையிட்டு அவருக்கு அதுவரை பெருமைதான் இருந்தது. வீட்டுவேலை எதுவும் அவராக வாங்க மாட்டார். அம்மா தண்ணீர் கொண்டு வர என்று அவனைப் படிப்பில் எழுப்பினால் கோபித்துக் கொள்வார் அம்மாவை.

முதலாளி அவனை அடிக்குமுன் அவரே அடிப்பது நல்லது என்று அவர் கணக்குப் போட்டாரோ தெரியாது. ஆனால் அவன் அப்பாவிடம் தான் அடி வாங்குவதை எதிர்பார்க்கவில்லை. அதைவிட அவனால் தாள முடியாத இன்னொரு காரியம் செய்தார். “எனக்காகப் பையனை மன்னிக்கணும் முதலாளி...” என அவர்முன் கைகூப்பினார்.

அதை அவன் செய்திருக்க வேண்டும், சேது மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும், என்று அவர், அப்பா எதிர்பார்த்திருக்கலாம். முதலாளியும் அப்படித்தான் எதிர்பார்த்திருக்க வேண்டும். செய்யிறதையும் செஞ்சிட்டு எப்பிடி விரைத்து நிற்கிறான். வீட்டுக்கு அடங்காத பிள்ளை போல... என அவர் ஒரு வெறுப்புடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அதே வெறுப்புடன் திரும்பி அப்பாவைப் பார்த்தார் முதலாளி. ”நல்லா வளத்துருக்கய்யா பிள்ளையை” என்றவர், தோட்டக்காரனிடம் “அவனை கட்டவுத்து விடு துரை” என்றார்.

தன்னால், தன் முன்னால் அப்பா கூனிக் குறுகி நின்றது அவனால் தாள முடியாதிருந்தது. அப்பா அடித்தபோது வராத அழுகை அப்போது வந்தது. குளிக்கப் போனவன் அப்பாவோடு வீடு திரும்பினான். இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அன்றைக்கு முழுவதும் அப்பா முகம் களையிழந்து கிடந்தது. அவனை அடித்ததை யிட்டு அவர் வருத்தப்பட்டுக் கொண்டிருந் திருக்கலாம். “இத்தனை வருஷமா முதலாளி கிட்ட நான் காப்பாத்திட்டுவந்த நல்ல பேரை ஒரு க்ஷணத்தில காத்துல பறக்க விட்டுட்டியேடா...” என்று அவர் தனக்குள் மறுகிக் கொண்டிருந்தார். நம்மப்போல ஏழைங்களுக்கு மானந்தாண்டா முக்கியம், என அவரில் எண்ணங்கள் குமுறிக் கொண்டிருந்தன. அவரது, மேன் மக்கள் மேன் மக்களே, நாமெல்லாரும் அன்னாரின் அடிவருடிகளே, அடிமைகளே... என்கிற சித்தாந்தம் அவனுக்குப் பிடிக்கவில்லை. முதலாளியையே அவன் எதிர்த்துப் பேசி விட்டான், என்ற விஷயம் அவரைத் திகைக்க வைத்திருக்க வேண்டும். இனி அவர் முதலாளியைச் சமாளிக்க வேண்டும். சும்மாவே அவர் பார்வையை அப்பாவால் தாள முடியாது. இப்போது மகன் வேறு அவரிடம், முதலாளியிடம் வெறுப்பைச் சம்பாதித்து விட்டான்... என்கிற நினைவு அவரைக் கலங்கடித்தது. இனி முதலாளி அப்பாவை முன்னைவிட கவனமாய்க் குற்றம் கண்டுபிடிப்பார் என்று தோன்றியது.

அப்பாவின் அந்த கைகூப்பிய நிலை திரும்பத் திரும்ப அவன் மனசில் வந்தது. சிறு வயசின் குறும்புத் தனமான எனது விளையாட்டில் அவர் காயம் பட்டு விட்டார். இதற்கு என்ன செய்ய என்று தெரியவில்லை. இவனது படிப்பு என்று கூட சிறு கடன் அவர் முதலாளியிடம் வாங்கி யிருந்தார்.ரேகை அல்ல. அப்பா கையெழுத்து போடுவார். முதலாளியின் பெண் அபிராமிக்கும் அது தெரியாமல் இராது. பள்ளி வகுப்பில் அவனைப் பார்க்கையில், தானும் அவளை அண்டிப் பிழைக்கிறவன், என்கிற அதிகாரப் பித்துடன் அவள் அவனை கவனிக்கிறாளா, அவனுக்குத் தெரியாது.

ஆனால் படிப்பில் சேது கெட்டிக்காரன். பாடங்களை சட்டென்று அவன் சுவிகரித்துக் கொண்டான். பதினைந்து வரிகள் கொண்ட ஓர் ஆங்கிலக் கவிதையை, மனப்பாடப் பகுதி அது, ஆசிரியர் பாடம் நடத்த நடத்த ஒரே ஒருதரம் கேட்டவுடனேயே எழுந்து அப்படியே முழுசும் சொன்னான் சேது. மற்ற மாணவர்கள் அனைவரும் கை தட்டினார்கள். அபிராமி என்ன நினைத்தாள் தெரியவில்லை. அவள் படிப்பில் அத்தனை சூட்டிகை என்று சொல்ல முடியாது.

ஒவ்வொரு தேர்விலும் சேது தான் முதலாவதாக வந்தான். இரண்டாவது மதிப்பெண் கிரிஜா என்ற பெண். அவள் தந்தை டெய்லர். ஒவ்வொரு முறை வகுப்புக் கட்டணம் செலுத்தவும் அவளுக்குத் தாமதமானது. பாதி விலைக்கு வாங்கிய போன வருடத்திய புத்தகங்களையே அவள்  தந்தை அவளுக்கு வாங்கித் தர முடிந்தது. தீபாவளி போன்ற திருவிழாக் காலங்கள் இல்லாத சமயம் அவரே பழைய துணிகளைத் தைத்துத் தந்து கொண்டிருந்தார். அபிராமிக்கு பணம் சார்ந்த சுக அம்சங்கள் சேர்ந்து கொண்டதில் படிப்பில் அத்தனை அக்கறை இல்லாது இருந்ததா தெரியாது.

வகுப்பில் ஓரளவு பணக்காரப் பிள்ளைகளுடனேயே அவள் சிரித்துப் பேசிப் பழகினாள். மதியம் ரிக்ஷா வந்துவிடும் அவளுக்கு. வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருவாள். சேது கையில் ஒரு டப்பாவில் தயிர் சாதம் கொண்டு போனான். காலையில் அடைத்த சாதம். நெகிழ்வின்றிக் கல்லாய் இறுகிக் கிடக்கும். தண்ணீர் சேர்த்து நெகிழ்த்திக்கொண்டு சாப்பிடுவான்.

வெறும் பணம், அதன் நிமிர்வுகள், வசதி வழிப்பட்ட சுகங்கள், அதிகாரம்... இவை போதுமா, போதும் என இவள், அபிராமி நினைக்கிறாளா தெரியவில்லை. மேலே வானம் கீழே பூமி, என அனைத்தையும் அனுபவிக்கக் கிடைத்த இந்த வாழ்க்கையில் எத்தனை யெத்தனை விஷயங்களை இவள் தன் திமிரால், மமதையால் இழக்கிறாள், இவள் அறிவாளா? சகல உயிர்களும் இந்த உலகத்தில் மிகப் பெரும் சுதந்திரத்துடன் அல்லவா பிறக்கின்றன. அதை சிறு சிறு சுகங்களுடன் முடக்கிக் கொள்வது சரியா? அவை இருக்கிற கனவு மயக்கம் அவளுக்கு. என்றால் அவற்றில் சில தனக்கோ, தன் குடும்பத்துக்கோ மறுக்கப் பட்டதாக அப்பாவுக்கு ஆதங்கம். கவலை. இல்லாததை நினைத்து மறு கரையில் அல்லவா வாழ்கிறார்கள் இவர்கள்.

தனக்கு என்ன கவலை என்றாலும், பண ரீதியான பிரச்னை என்றாலும் அப்பா அவனை நன்றாகப் பார்த்துக் கொண்டார். அவனுக்கு ஒரு குறையும் அவர் வைக்கவில்லை. நல்ல நாள் விசேஷங்களில் அவர் கோவிலுக்குப் போய்வந்தார். ஊர் நடுவே பெருமாள் கோவில். யானை கட்டிய கோவில். மார்கழிக் காலைகளில் அங்கே ரெகார்டு போடுவார்கள். திருப்பாவைக் காலங்கள். அப்பாவுக்கு அதில் அநேகப் பாடல்கள் தெரியும். அம்மா மார்கழிக் காலைகளில் குளித்து விளக்கேற்றி திருப்பாவை வாசிப்பாள். எல்லே இளங்கிளியே, இன்னும் உறங்குதியோ... என அவள் உரக்க வாசிக்கையில் அவனுக்கு சில சமயம் விழிப்பு வரும்.

கணேசமூர்த்தி அபிராமிக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தந்திருந்தார். நல்ல கனம். அத்தனை கனத்தைத் தூக்கி நிறுத்தி அதில் ஏறி ஓட்டுவதே பெரிய விஷயம் தான். குறுக்கு பார் கம்பி இல்லாத பெண்கள் மாடல். நன்றாகவும் ஓட்டினாள் அபிராமி. அவன் எப்பவாவது தெருவில் போகையில் அவள் சைக்கிளில் எதிரே வந்தாள். அந்த சின்ன யந்திரத்தை அடக்கி ஆள்கிற போதை அவளுக்கு இருந்தது. அந்த வயதின் போதை அது.

தன் பையனை விட அபிராமியை அவள் அப்பா அருமையாக வளர்த்து வந்தார். அங்கே பெண்ணாய்ப் பிறந்தது அவள் அதிர்ஷ்டம். அதெல்லாம் ஒரு கொடுப்பினை என அப்பா நினைக்கலாம். அதெல்லாம் இல்லப்பா, உன் பையன் நான், நாளை உன் பிள்ளையைப் பற்றி ஊரே பேசும். நீ பார்க்கத்தான் போகிறாய், என நினைத்துக் கொண்டான் சேது.

அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சி யளிக்கிற மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்தது. அன்றைக்கு கணக்கு வாத்தியார் போட்ட கணக்குகள் மிகக் கடினமானவை. யாருக்குமே அது சரியாக விளங்கவில்லை. தவிரவும் வீட்டுப்பாடம் வேறு அவர் சில கணக்குகள் தந்திருந்தார். அவன் புன்னகைத்துக் கொண்டான். ஒரு சவால் போல அவன் அவற்றைத் தானே முயன்று போட்டுவிட முடிவு செய்தான். ராத்திரி அப்பாவும் அவனுமாய் வீட்டில் இருந்தபோது திடீரென்று வாசல் பக்கம் சைக்கிள் சத்தம் கேட்டது. அப்பா வாசல் பக்கம் பார்த்தால், சைக்கிளில் இருந்து இறங்கியவள்... அபிராமி.

அப்பா பயந்து போனார். சட்டென பாதி சாப்பாட்டில் எழுந்து வாசல் பக்கம் போக முயன்றார். இவ பாட்டுக்கு நம்ம வீட்டுக்குக் கிளம்பி வந்துட்டாளே, என அவரிடம் ஒரு திகைப்பு இருந்தது. அவள் வந்தது முதலாளிக்குத் தெரியுமா, என்றி பயம் அவரைச் சுருட்டியது. “நீ உக்காருப்பா...” என்று அப்பாவைத் தோளை அழுத்தினான் சேது.

“என்ன அபிராமி? இவ்ள தூரம்...” என்று கேட்டான் சேது. பாதி சாப்பாட்டில் எழுந்துகொள்ள அவன் முயற்சிக்கவில்லை. “இன்னிக்கு சார் போட்ட கணக்கு... எனக்குப் புரியலைடா. அதான்... நம்ம கிளாஸ்லயே நீதானே கணக்குல எக்ஸ்பர்ட். உன்கிட்ட கேட்டுப் போட்டுக்கிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றாள் அபிராமி புன்னகையுடன். பாவாடை சட்டையில் அந்த இரவிலும் பளிச்சென்று இருந்தாள். வீட்டுக்குள்ளேயே ஒரு ஒளி வந்தாற் போலிருந்தது.

“நீ வந்தது உங்க அப்பாவுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் அப்பா. “ம்ஹும்” என்று புன்னகைத்தாள் அபிராமி. “கேட்டா அவர் விடமாட்டார் மாமா. அதான்... சைக்கிள்ல நாம் பாட்டுக்கு வந்திட்டேன்...” என்றாள் அபிராமி. சேதுவுக்கு அந்த பதில் பிடித்திருந்தது. “அபி... நீயும் சாப்பிடறியா? வா வந்து உட்காரு” என்றான் சேது. அவர்கள் பேசிக்கொண்ட அந்த சுவாதீனம் அப்பாவுக்குப் பிரமிப்பாய் இருந்தது. அப்பவே அவருக்கு வயிறு நிறைந்தாற் போலிருந்தது.

கை கழுவிவிட்டு வர அபிராமி பின்கட்டுக்குப் போனாள்.

•••    

Comments

Popular posts from this blog