நிசப்த ரீங்காரம் / சிந்தனைத் தொடர் பகுதி 8

நன்றி – பேசும் புதிய சக்தி மாத இதழ்


வேப்ப மரத்தில் தேன்கூடு

ஞானவள்ளல்

ரு சிந்தனை மொழி வழியாக வெளிப்படும் போது அதன் அழகு தன்னைப்போல கட்டமைக்கப் படுகிறது. சிந்திக்கிறவனின் ஈடுபாடு, கவனம் சார்ந்து அதன் வீச்சின் வெளிப்பாட்டின் ஆழமும் சேரும் எனலாம். தன்னை முற்றிலும் அந்த சிந்தனையில் அமிழ்த்திக் கொள்கையில் அதை ரசித்து அந்தப் படைப்பாளன் அதை வெளிப்படுத்த, வழக்கம் இல்லாத புதிய பாதைகளையும் சேர்த்தே வடிவமைத்துக் கொள்ளப் பிரியப் படுகிறான். அதனால்தான் காவியங்களிலும், கவிதைகளிலும் புதிய புதிய வகைமைகள் அமைய முடிகிறது.

ராமனின் பெரும் காவியம் எழுத முனைகிறான் கம்பன். அந்தக் காவியத்தில் எத்தனை விதமான பாடல்கள். அனுமனைப் பற்றிய துதிப்பாடல் ஒன்று. அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி, அஞ்சிலே ஒன்று ஆறு ஆக, அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அஞ்சிலே ஒன்றை வைத்தான்… என சொல் விளையாட்டு. சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவிரியினை வீரர் கண்டார், என இடையே ஒரு கவிதையில் இரட்டுற மொழிதல், என அங்கங்கே ஞானத்தில் பொங்குகிறான். ஓசைநயம் மிக்க பாடல்கள் அவ்வப்போது வருகின்றன. ஈடுபடும் செயலில் அவனது ஆர்வமும் ஆசையும் அப்படியாய் அவனைப் புதுப்புது வடிவங்களில், சொல் உத்தி முறைகள் பயணப்பட, இயங்க வைக்கின்றன. இதுதவிர வாசக மனதைத் தாண்டி சிந்திக்கிற நுட்ப உணர்வுகளை அவன் வெளிப்படுத்தும் போது, கவிதை களைகட்டுகிறது.

கம்பன், ராமன் என மனது திளைக்கும்போது அந்தகக்கவி வீரராகவ முதலியார் நினைவு வருகிறார். பாணர் பாணினி பற்றிய ஒரு சம்பவச் சித்திரம் அது.

இம்பர் வான் எல்லை ராமனையே பாடி… என ஒரு பாடல். ராமன் என்ற வள்ளலைப் பாடியபோது ஒரு பாணர் ஒரு யானையைப் பரிசாகப் பெற்று வருகிறார். வீட்டில் வறுமை தாண்டவம் ஆடுகிற போது யானையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? யோசனையுடன் வீடு வந்ததும் அந்தப் பாணனின் மனைவி பாணினி, என்ன பரிசு கொண்டு வந்தீர், எனக் கேட்கிறார். அவளோடு சிறிது நகைச்சுவையாக உரையாட விரும்புகிறார் பாணர்.

யானை என்று சொன்னால் திகைத்து விடுவாள் என்பதால், யானை என்ற விலங்கைக் குறிப்பிடும் பல்வேறு சொற்களைப் பரிசு என்ன, என்பதாக அவர் சொல்லிக் கொண்டே வருகிறார். அவர் மனைவியோ வறுமையைப் போக்க வழி என்ன என்ற சிந்தனையிலேயே இருக்கிறார். ஆதலால் ஒவ்வொரு சொல்லுக்கும், யானை என்ற பொருளுக்கு பதிலாக மாற்றுப் பொருளைப் புரிந்துகொண்டு தங்கள் வறுமை விலகுவதாக மகிழ்ச்சி அடைகிறார். இறுதியில் யானை என அவள் புரிந்துகொண்டு அவளும் திகைத்து நிற்பதாக ஒரு கவிதை. அக்காலத்துப் பாணர் குலப் பெண்ணின் தமிழ் அறிவின் விசாலத்தையும் இதில் ரசிக்க முடிகிறது.

இம்பர்வான் எல்லை இராமனையே பாடி

என்கொணர்ந்தாய் பாணா நீ, என்றாள் பாணி

வம்பதாம் களபம் என்றேன், பூசும் என்றாள்

மாதங்கம் என்றேன், யாம் வாழ்ந்தேம் என்றாள்

பம்பு சீர் வேழம் என்றேன், தின்னும் என்றாள்

பகடு என்றேன், உழும் என்றாள் பழமை தன்னை

கம்பமா என்றேன், நற் களியாம் என்றாள்

கைம்மா என்றேன், சும்மா கலங்கினாளே

இந்தப் பாடலில் யானை என்ற விலங்குக்கு வழங்கப்படும் களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, மற்று கைம்மா என்ற சொற்கள் குறிப்பிடப் படுகின்றன. அச்சொற்களுக்கான மாற்றுப் பொருளும் பாணினி புரிந்துகொண்ட அளவில் சுட்டிக் காட்டப் படுகின்றன. பாடலில் மெல்லிய சோகமும் நகைச்சுவையும் ததும்புகிறது. வேப்ப மரத்தில் தேன்கூடு இந்தக் கவிதை.

(களபம் – யானை மற்றும் சந்தனம். மாதங்கம் – யானை, நிறையப் பொன். வேழம் – யானை, கரும்பு. பகடு– யானை, எருது. கம்பமா – யானை, கம்பு தானியத்தின் மாவு.)

எல்லாவற்றையும் அவள் மாற்றுப் பொருள் கொண்டே புரிந்து கொண்டதை எண்ணி அந்தப் பாணர் இறுதியாக கைம்மா, என்று முடிக்கிறார். அந்தச் சொல் யானை என்பதைத் தவிர வேறு மாற்றுப்பொருள் தராத நிலையில், யானையையா பரிசாக வாங்கி வந்தாய், இதில் யானையையும் வைத்து போஷிப்பது எப்படி, என அவள் திகைப்பதாகப் பாடல் முடிவு பெறுகிறது.

சங்க கால இரட்டைப் புலவர் பற்றித் தெரிந்திருக்கலாம். அவர்கள் இருவரிலும் ஒருவர் அந்தகர். அவர்களும் வறமையிலும் நகைச்சுவை குறையாமல் வாழ்ந்தவர்கள். இருவரும் மீனாட்சி திருக்கோவில் பொற்றாமரைக் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பார்வை அற்றவரின் ஆடை நழுவி குளத்தில் மூழ்கி விடுகிறது. இடுப்பு உடுப்பு தொலைந்ததில் மற்றவர் திகைத்து “ஐயோ  எனது கலிங்கம் (ஆடை) கைக்குத் தப்பி குளத்தில் மூழ்குகிறது” என்று பரிதவிக்கிறார். அதற்கு மற்றவர் இப்படி பதில் அளிப்பதாக தனிப்பாடல் வளர்கிறது.

         அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாம் அதனைத்

         தப்பினால் நம்மை அது தப்பாதோ?

என்று பதில் சொன்னவர், கூடவே ஆறுதலும் சொல்கிறார்.

     “… இப்புவியில்

         இக்கலிங்கம் போனால் என் ஏகலிங்க மாமதுரைச்

         சொக்கலிங்கம் உண்டே துணை.”

தமிழ் கொண்டு உற்சாகமான மனநிலையிலேயே புலவர்கள் வாழ்ந்தார்கள் என்று தெரிகிறது. வறுமையிலும் நகைச்சுவை உணர்வு நழுவாத உற்சாக வாழ்க்கையே அவர்கள் வாழ்ந்தார்கள்.

 ஔவையாரின் இப்படியான பல பாடல்களை நினைவுகூர முடியும்.

காளமேகப் புலவரின் பாடல்கள் பல கலகலப்பானவை. மன்னரை விடுத்து சாமானியர் பற்றிய பாடல்களும், இறைவர் பற்றியே கூட அவரது எகத்தாள தொனியும் உள்ளுந்தோறும் உவகை தர வல்லவை. விஷ்ணுவின் வாகனம் கருடன், என்பதை ’ஐயோ பிள்ளையைப் பருந்தெடுத்துப் போகுது பார்’ என்று பாடுவார். ஓர் ஊரில் ஆய்ச்சியரிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு, அந்த மோர் மிக நீர்த்துப் போய் இருந்ததைக் கிண்டல் அடிக்கிறார் இப்படி.

கார் என்று பேர் படைத்தாய் ககனத்துரும்போது

நீர் என்று பேர் படைத்தாய் நெடுந்தரையில் வீழ்ந்ததன் பின்

வார் சடை மென்கூந்தல் பால் ஆய்ச்சியர்கை வந்ததன் பின்

மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே

தண்ணீர் வானத்தை அடைகையில் மேகம் என்று (கார்) பெயர் எடுக்கிறது. மழையாகப் பெய்கையில் அதற்கு நீர் என்று பெயர் பெறுகிறது. ஆனால் இந்த ஆய்ச்சியர் அதையே மோர் என்று சொல்லி விற்கிறார்கள், என்று கிண்டல் அடிக்கிறார் புலவர்.

காளமேகப் புலவரின் இரட்டுற மொழிதல் பாடல்கள் வெகு சிறப்பு. ஆசுகவி என்ற அளவில் நினைத்த நேரத்தில் உடனே கவிபாடும் திறம் மிக்க புலவர் அவர். அவர் பற்றிய இன்னொரு கதை இப்படிச் செல்கிறது.

காளமேகப் புலவர் பிறப்பால் வைணவர். ஸ்ரீரங்கத்துக்காரர். அவர் இயற்பெயர் வரதன். பக்கத்து திருவானைக்காவல் சிவன் கோவில் தாசி ஒருத்தியுடன் அவருக்கு மையல் ஏற்படுகிறது. அவர் திருவானைக்காவல் கோவில் மடப்பள்ளியிலேயே பணியமர்கிறார். அதனால் அவர் சைவர் ஆனதாகச் சொல்லப் படுகிறது.

அதில் பெருமாளுக்கு வருத்தம்.

ஒருமுறை பெருமாள்கோவில் பக்கமாக அவர் வரும்போது, பெருமாள் சட்டென்று மழை பொழியச் செய்கிறார். புலவருக்கு ஒதுங்க வேறு இடம் இல்லை.

வேறு வழியில்லாமல் அவர் பெருமாள் கோவிலுக்குள் நுழைய முயல்வதைப் பார்த்த பெருமாள் சட்டென்று கோவில் கதவுகளை அடைத்துக் கொள்கிறார்.

புலவருக்கு இது பெருமாளின் வேலைதான் என்று புரிகிறது. மழைக்கு ஒதுங்கியாக வேண்டுமே. இப்போது என்னசெய்வது? சட்டென்று அவர் பெருமாளைப் புகழ்ந்து ஒரு வரி பாடுகிறார்.

     “கண்ணபுரமாலே கடவுளினும் நீ அதிகம்…”

நான் வணங்கும் சிவனை விட நீ பெரியவன், என்ற பொருள்பட அவர் பாடியதும், பெருமாளுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கதவைத் திறந்து அவரை உள்ளே அனுமதிக்கிறார்.

உள்ளே வந்த காளமேகம் மீதி வரிகளைப் பாடுவார் என்று காத்திருந்தால் அவர் கவிதையைத் தொடர்வதாக இல்லை. பெருமாளுக்கே ஆர்வம் தாளாமல் பாடலைத் தொடரச் சொல்லி அவரைக் கேட்கிறார்.

     “உன்னிலுமோ நான் அதிகம்…”

எனத் தொடர்கிறார் காளமேகம். உன்னைவிட ‘நான்’ பெரியவன், என்கிறார் புலவர்.

திகைத்துப் போகிறார் பெருமாள். எப்படி?... என்று விளக்கம் கேட்கிறார்.

காளமேகம் பாடலை இப்படி முடிக்கிறார்.

     கண்ணபுரமாலே கடவுளினும் நீ அதிகம்

         உன்னிலுமோ நான் அதிகம்

         உன் பிறப்போ பத்தாம்

உயர் சிவனுக்குப் பிறப்பு இல்லை.

என் பிறப்போ எண்ணிலடங்கா.

பெருமாள் பத்து அவதாரங்கள் எடுத்தவர். சிவ பெருமான் அவதாரம் எதுவும் எடுக்கவில்லை. ஆகவே நீ சிவனை விடப் பெரியவன். ஆனால் நான்… எண்ணிலடங்காப் பிறவிகள் எடுத்தவன். உன்னைவிடப் பெர்யவன் யார்? நான்தானே?... என்று கேட்கிறது பாடல்.

எத்தனை அநாயாசமாக சிந்திக்கிறார் காளமேகப் புலவர் என்று நினைக்க வியப்பு மேலிடுகிறது.

காளமேகத்தின் சொற்திறன் பார்த்துத்தான் அவரிடம் நிறையப் பேர் ஈற்றடி அல்லது ஈற்றுச் சொல் விதவிதமாகத் தந்து கவிதை பாடச் சொன்னார்கள். அதில் நிறைய அவரை மட்டந் தட்டும் விதமான இழி சொற்கள். என்றாலும் காளமேகத்தின் கவித்திறன் அபாரமானது.

ஒருமுறை ’விளக்குமாறு’ (துடைப்பம்) என்று முடிகிற அளவில் அவரை வெண்பா பாடக் கேட்கிறார்கள் அவர் பாடிய வெண்பா இது.

“செருப்புக்கு வீரர்களைச் சென்றுழக்கும் வேலன்

பொருப்புக்கு நாயகனைப் புல்ல – மறுப்புக்குத்

தண்டேன் பொழிந்த திருத் தாமரைமேல் வீற்றிருக்கும்

வண்டே விளக்கு மாறே.”

மகாகவி பாரதியாரிடமும் ஒருவர் இப்படி இடக்காக ‘பாரதி சின்னப் பயல்’ என்று ஈரடி தந்து பாடச் சொன்ன கதை உண்டு. பாரதியார் அந்தப் பாடலை இப்படி முடிக்கிறார். “காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப் பயல்.” பாரதியாரின் பெருந்தன்மையினால் பிறகு அதே பாடலை, வயதில் மூத்த காந்திமதி நாதனுக்கு பாரதி சின்னப் பயல், என்பதாக மாற்றிப் பாடியதாக சம்பவம் சொல்லப் படுகிறது.

இரண்டு வடிவத்திலும் பாரதியாரின் பாடல் அறியக் கிடைக்கிறது.

நமது காலத்தில் கி.வா.ஜ., கிருபானந்த வாரியார் போன்றவர்கள் இப்படி நுட்பமாய் சொல் விளையாட்டு வித்தகம் செய்வார்கள். ஒரு திருமண வைபவத்தில் கி.வா.ஜ அவர்கள் விருந்து உண்டுவிட்டு வந்தபோது ஒருவர் அவருக்கு நீர் முகர்ந்து கொடுத்தார். அப்போது கி.வா.ஜ. குறிப்பிட்டாராம். “சாதாரணமாக நீரில் தான் குவளை இருக்கும். (குவளை மலர்.) இப்போது குவளையில் நீர் இருக்கிறதே.” (குவளை – நீர் அள்ளும் பாத்திரம்.)

“நவ கிரகங்களில் வியாழன் தான் கல்வி கிரகம். மற்றவை கல் விக்கிரகம்” என்பார் வாரியார்.

சங்கடமான சந்தர்ப்பங்களிலும் நகைச்சுவையாகக் கடந்து செல்லுதல் சிலரது இயல்பு. நம்மில் பலரிடம் அந்த அநாயாசத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

“வேட்டி அழுக்கா இருக்கே மாத்திக் கட்டிக்கக் கூடாதா?”

“என்ன பண்றது வேட்டிக்கு மூணு பக்கம் இல்லியே...” என்று அவன் பதில் சொன்னானாம்.

நெருக்கடி நேரங்களில் சமாளிப்பது ஒரு தனிக்கலை. தி.ஜானகிராமனின் ஒரு கதையில் இந்தக் காட்சி வருகிறது.

பழைய பேப்பர் எடுக்கும் ஒருத்தனைப் பற்றிய கதை. பழைய பேப்பரைப் போடுகிறவர் அவனது தராசு எத்தனை எடைக்கு பேப்பர் வைத்தாலும் எடைகுறைத்தே காட்டும், என்று அலுத்துக் கொள்கிறார். அதற்கு பேப்பர் எடுக்கிறவன் சொல்கிறான்.

“என் தராசை சந்தேப் படாதீங்க சாமி. இந்தத் தராசு எழுதின கடுதாசிக்கும் எழுதாத கடுதாசிக்கும் எடை வித்தியாசம் காட்டுமாக்கும்..” (தி.ஜா.வின் சிறுகதை ‘கோதாவரி குண்டு.’)

என்ன சாமர்த்தியமான பதில். 

சில பதில்கள் எதிராளி கிண்டலாகக் கேட்கும்போது அவருக்குத் தக்க பதிலடியாக அமைந்து விடுவதும் உண்டு.

ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு என ஒரு கம்யூனிஸ்டு தலைவர். கேரளாக்காரர். அவர் பேசுகையில் சிறிது நா தடுமாறும். ஒரு தடவை அவரிடம் அரசியல் சார்ந்து எதோ கேள்வி கேட்டார்கள். மிக விளக்கமாக அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்தபோது அடிக்கடி அவருக்கு நா குழறியது. நிருபர் அடக்க முடியாமல் அவரது பேச்சில் குறுக்கிட்டுக் கேட்டார்.

“நீங்க எப்பவுமே இப்படித் திக்குவீங்களா?”

நம்பூதிரிபாடு சட்டென பதில் சொன்னார். “இல்ல, பேசும்போது மாத்திரம்தான் திக்குவேன்.”

 

Comments

Popular posts from this blog