சொற்களின் மீது எனது நிழல்
சைலபதியின் சிறுகதைத் தொகுதி
*
அணிந்துரை / தமிழ்மகன்

*
சொற்களின் மீது

உனது நிழல்

*
''ஹலோ... சைலபதி?''

''ஆமாம் சார். ஒரு நிமிஷம்... வண்டியை ஓரமா நிறுத்திட்டுப் பேசறேன். ம்.. சொல்லுங்க

சார். படிச்சுட்டீங்களா?''

''படிச்சுட்டேன். நல்ல தொகுப்பு. புதிய  புதிய களம்... நல்லா வந்திருக்கு.''

''நன்றி சார்.''

''உங்களுக்குப் பெண் குழந்தை இருக்கா?''

''இல்லை சார்.''

''உங்கள் கதைகளில் பெண் குழந்தைகள் முக்கியமான பாத்திரங்களாக இடம்

பெற்றிருப்பதைப் பார்த்தேன். அதான் கேட்டேன்.. அப்புறம் இன்னொரு சந்தேகம்...''

''சொல்லுங்க சார்''

''ஸ்ரீ தோஷம்னு ஒரு கதை... ஸ்திரி தோஷம் என்பதுதான் தப்பா வந்துடுச்சோன்னு''

''இல்ல சார். ஸ்ரீ தோஷம் சரிதான்.''

''இப்பத்தான் முன்னுரை எழுதிக்கிட்டு இருக்கேன். கேட்கணும்னு தோணுச்சு... சரி..

ஓ.கே.''

''ஓ.கே.''

தேவைப்படாத இரண்டு சந்தேகங்களைக் கேட்ட இளம் நெருடலோடு எழுத
ஆரம்பித்தேன்.

அப்துல்காதரின் குதிரை, தேவன் மனிதன் லூசிஃபர் நூல்களைத் தொடர்ந்து சைலபதியின் இந்த சிறுகதைத் தொகுதி எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிறது. அந்த இரண்டு நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியவர்கள் நிஜமாக இந்த மூன்றாவது நூலையும், இனி அவர் எழுத இருக்கும் அத்தனை நூல்களையும் எதிர்பார்ப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கதைகளின் கடைசி வரி வரை சுவாரஸ்யத்தைத் தக்க வைக்கும் இனிமையான வாசிப்பு அனுபவத்தைத் தரக் கூடியவை சைலபதியின் எழுத்துக்கள்.

எழுத்தில் அமானுஷ்யத்தை ஏற்படுத்தும் ‘ஒத்தைப்பனை‘ ஆகட்டும், மகளின் தவிப்பைக் கண்டு கலங்கும் தந்தையை விவரிக்கும் ‘அம்மு‘ ஆகட்டும் எல்லாமே வாசிப்பின் தரிசனத்தைத் தரத் தக்கவை.  ‘ஒத்தைப்பனை’யின் முனி உண்மையில் இரவிலே வெள்ளைக் குதிரையில் வானத்துக்கும் பூமிக்குமாக அமர்ந்து வேட்டைக்குப் புறப்படுகிறாரா? அது உண்மையா, பொய்யா? பொய்யே போன்றதொரு உண்மையா?... நம்பிக்கையா, நிஜமா? என்ன ஆச்சர்யம்? அது எல்லாமாக இருக்கிறது. அதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் அதைப் படிக்கும் ஒவ்வொரு வாசகனும்தான். ஒவ்வொரு வாசகனுக்கும் ஒரு சந்தேகம். கேரளாவுக்குக் கடத்திச் செல்லப்பட்டது முனியா, ராஜனின் காதலியைத்தான் முனி கேரளாவுக்குக் கடத்திப் போய்விட்டதா?

சைலபதியின் பேய்கள் பெரும்பாலும் நல்லவித மானவை. அப்துல்காதரின் குதிரை தொகுதியில் இடம்பெற்ற எஸ்.எம்.எஸ். பேய்க்குத்தான் எத்தனை இரக்க சுபாவம்? அந்தப் பேயைப் போலவே மிஷ்கினின் பிசாசு படத்தில் வரும் பேய்க்கும் இரக்கம் வந்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

சில விஷயங்களில் நாம் தவறான முடிவுகள் எடுக்கிறோம். தவறாகக் கோபப்படுகிறோம். தவறான தண்டனைகளை வழங்கிவிட்டு, தவறுக்கு வருந்துகிறோம். ‘பார்க்கிங்‘ கதை, வித்தியாசமான இடத்தில் வந்து முடியும் ஒரு சுவாரஸ்யமான கதை. கடை முதலாளிக்கும், அதேதெருவில் வீட்டுச் சொந்தக்காரர் ஒருவருக்குமான பிரச்னையில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும், வேலையை இழந்த அவளுடைய கணவனும் சிக்குவது எதிர்பாராதது.

பிகார்காரர்கள் பல லட்சம் பேர் இப்போது தமிழ்நாட்டில் வந்து வேலை பார்க்கிறார்கள். அவர்களில் சிலரை நல்ல உழைப்பாளிகள் என்கிரோம். படிப்பறிவு குறைந்தவர்கள் என்கிறோம். குறைந்த சம்பளத்துக்கு மாடு மாதிரி உழைக்கும் இளிச்சவாயன்களாகப் பார்த்து விட்டோம். ஈஸிஆர் சாலைகளில் பெண்களைக் கற்பழிக்கிறவர்களாகவும், ஏ.டி.எம். மிஷின்களில் கொள்ளை அடிப்பவர்களாகவும் பேப்பர்களில் பார்த்துவிட்டோம். பிகாரி கதையில் வரும் மானுவின் தந்தை... சைலபதியின் மனசு அவருடைய கதைகளில் பிரதிபலிக்கிறது.

மானுவின் தந்தை கொண்டுவரும் பார்சலை ஈவு இரக்கம் இல்லாமல் பிரித்துப் போட்டுவிட்டு வருத்தப்படுபவனும், பைக்கில் ஊசி கொண்டு குத்திவிட்டு வருத்தப்படும்.... பிழைக்கு அஞ்சும் நடுத்தர மனசுகளின் அடையாளங்கள்.

அது ஒரு நடுத்தர வர்க்கத்தின் மனசு. மத்தியமர் மனசின் நிழலாட்டங்களைப் படம்பிடிப்பதுதான் உண்மையில் கதைக்கான இடமோ?

கச்சிதமான வர்ணனைகள்... (மனம் வாகனங்கள் இல்லாத சாலையாக வெறிச்சோடிக் கிடந்தது - துஞ்சுதல் போலும்) வசனங்கள்.

முடிவெட்டுகிற சாத்தன், முதுமை காரணமாக நிராகரிக்கப்படுகிற சோமசுந்தரம், மகளின் படிப்பைக் கனவு காணும் ராம் சிங், 23 வயதில் வாழ்வை இழந்து நிற்கும் விநோதா, சாகப் போகிற கட்டைக்கு வீணாக செலவு செய்யும் மகனை நினைத்துத் தவிக்கிற ஆறுமுகய்யா எல்லோரும் ஒரு விதத்தில் எல்லோருக்கும் நெருக்கமானவர்கள்தான்.

மனிதராக இருக்கும் அனைவரும் சந்திக்கும் மாந்தர்கள்தான். இவர்களை கதை மாந்தர்கள் ஆக்கும் போது சைலபதி, தன் படைப்புத் திறனை வெளிப்படுத்துகிறார். அந்தக் கதாபாத்திரங்களுக்கான நம்பகத்தன்மையே அது. நாம் தவறவிட்ட ஒரு புள்ளியை நமக்குத் தரிசிக்கத் தருவது படைப்பாளியின் ஆகச் சிறந்த திறமை.

சாலமன் சலிப்போடு வண்டியை நிறுத்திவிட்டு, 'தோத்திரம் பாஸ்டர்' என்றான்.

'என்ன பெரியவரே காசு தராம கம்பி நீட்டலாம்னு பாக்கறீயா?' என்றான் வாட்ச்மேன்.

ரமணா ஸ்டோர்... அங்கு அம்மா, அப்பா தவிர எல்லாவற்றையும் சல்லீசா விக்கிறான்.

ரொம்ப நாளாக அந்த ஸ்பாவை ஏதோ ஓட்டல் என்றே நினைத்திருந்தார். - கதையை ஜீவனுள்ளதாக்கும்

இத்தகைய வரிகள் இந்த நூலில் ஏராளம். இதில் உள்ள 13 கதைகளும் ஒன்றில் இருந்து ஒன்று மாறுபட்டது.

சுவையான ஆரம்பம்... விவரித்துச் செல்லும் பாங்கு, இறுக்கமான முடிச்சு, நெகிழ்ச்சியான, அதிர்ச்சியான முடிவு... இப்படித்தான் சைலபதியின் கதைகள் கட்டமைக்கப்படுகின்றன. கதைகளை எழுதுவது, வாழ்வின் துளிகளைத் தரிசிக்கத் தருவது.

சைலபதி தரிசிக்கத் தெரிந்தவராகவும் தரிசிக்கத் தருபவராகவும் இருக்கிறார். அவரை அவருடைய கதைகள் மூலமாகக் கண்டுபிடிப்பது சவால். ஆரம்பத்தில் அவருடன் போனில் பேசியது அந்த சவாலில் ஏற்பட்ட சறுக்கலாகத்தான் நினைக்கிறேன்.

எழுத்தாளனுக்குள் அவனுடைய அடையாளத்தைக் கலைத்துப் போடும் எத்தனையோ உருவங்கள் இருக்கின்றன. படைப்பாளியின் நிஜ அடையாளத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் வாசகன் தோற்க வேண்டும். அதுதான் எழுத்தாளனின் வெற்றி. சைலபதி வென்றுவிட்டார்.

 வாழ்த்துகள்.
அன்புடன்,

தமிழ்மகன்

Comments

Popular posts from this blog