நன்றி / கவிதை உறவு ஆண்டு மலர் 2021

பாதுகாப்பு

எஸ்.சங்கரநாராயணன்

 •

கார்த்திகேயன் இறந்துவிட்டார், என்று கேள்விப்பட்டதுமே, அடாடா, என்று அவருக்கு மைதிலி ஞாபகம் வந்தது. மைதிலி நெருங்க முடியாத தேன்கூடாய் இருந்தாள் அவருக்கு. அது ஒரு காலம். இப்போது மைதிலிக்கே கல்யாணம் ஆகி இருபது இருபத்தியிரண்டு வயதில் ஒரு பெண் இருக்கிறாள். அவள் பெயர்கூட... அதைப்பற்றி என்ன, அவள் மைதிலியின் பெண். அது போதும். அதைவிட வேறென்ன அடையாளம் வேண்டும்.

பெண்களில் மைதிலி, அவளே தனிப்பெரும் அடையாளம். மைதிலி ஞாபகம் தன்னில் கமழும் தோறும், தான் இளமையாகி விடுவதாய் அவர் உணர்ந்தார். எல்லா ஆண்களுக்குமே அப்படித்தான் இருக்கும், என ஒரு புன்னகையுடன் அவர் நினைத்துக் கொள்வது உண்டு. ஆண்களுக்குப் பெண்கள் வாசனை வியூகம் தான்! அதாவது காதல் வயப்பட்ட ஆண்களுக்கு. வாசனை என்று கூட இல்லை. அவள் சார்ந்த ஓர் அந்தரங்கபூர்வமான விஷயம், எனக்குத் தெரியுமாக்கும், என்பது மகிழ்வூட்டுகிறது அவர்களை. அந்த அலுவலகம் மைதிலிவாசனையால் நிரம்பி வழிந்தது ஒரு காலம். தலைநிறைய பூ வைத்த மைதிலி. கருப்புச் செடியில் பூத்த மல்லிகையாட்டம். சிரிக்கும்போது எந்த அளவு உதடு விரிக்க வேண்டும், என்பன போன்ற நளின நாசூக்குகள் அவளுக்கு அத்துப்படி. பெண்களுக்கு மாத்திரமே இப்படி வித்தைகள் தெரிகின்றன. அவர்கள் மிக சாதுர்யமாக அவற்றைப் பயன்படுத்தவும் வல்லவர்களாக இருக்கிறார்கள். சில பெண்கள் அலுவலகத்தையே சுயம்வர மண்டபமாக ஆக்கி விடுகிறார்கள்.

ஆ, அவள் பெயர் கீதா! மைதிலியின் பெண். ஞாபகம் வந்து விட்டது!

கோபிநாத் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முயன்றார். மைதிலியின் கணவர் கார்த்திகேயன் இறந்துவிட்டார். செய்தி பயத்துடன் ஓரளவு எதிர்பார்த்ததுதான். . கார்த்திகேயன் நல்ல சுத்த பத்தமான மனிதர். எப்பவுமே உடல் ரீதியாகவும் உணவு ரீதியாகவும் ரொம்ப கட் அன்ட் ரைட்டாக இருப்பார். அலுவலக நுழைவாயிலில் சானிடைசர், அதைக் கட்டாயம் அவர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்துகொண்ட பின்புதான் உள்ளே வருவார். மாஸ்க் அணிந்தே வருவார். ஹெல்மெட், மாஸ்க் போன்ற முன்ஜாக்கிரதைகள் அவரிடம் இருந்தன.

என்றாலும்... கவனித்தார். நா அரும்புகளில் ருசி தட்டவில்லை. தண்ணீரையே ருசித்துக் குடிக்கிற மனுசன் அவர். லேசான தலைவலி. பிறகு காய்ச்சல் வந்தது. அவர் பக்கத்தில் போனாலே அந்த வெப்பம் நம்மை எட்டியது. அடுப்பு போல இருந்தது உடம்பு. அலுவலகத்தில் அவர் விடுப்பு சொன்னார். காய்ச்சல் உத்தேச மாத்திரைகளுக்கு அடங்கவே இல்லை. எதற்கும் பார்த்து விடலாம் என்று அவர் வீட்டுக்கே லாப் ஆளை வரவழைத்து ‘ஸ்வாப்’ எடுத்தார். ஒரே நாளில் முடிவு வந்தது. அவருக்கு கோவிட் 19 பாசிடிவ்.

உடனே பரபரத்து ஆஸ்பத்திரி தேடி... ஆக்சிஜன் வசதி கிடைக்குமா, என்று நாலைந்து மணிநேரம் தொலைபேசிக் களேபரம். எல்லா ஆஸ்பத்திரியும் இடமில்லை இடமில்லை என்றார்கள். டிராவல்ஸ் பஸ் போல எத்தனை பெட் ஒண்ணா ரெண்டா என்று கூட ஒரு ஆஸ்பத்திரியில் கேட்டார்கள். ஒருவழியாக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில், கிரெடிட் கார்டில் நிறைய முன்பணம் கட்டி  சேர்ந்தார். ஏற்கனவே நிறையப் பேர் அங்கே கோவிட் கேசுகள் இருந்தார்கள். பெரியவர்கள் என்று இல்லாமல் பள்ளிவயதுப் பிள்ளைகள் கூட இருந்தது அவருக்கு வருத்தமாய் இருந்தது. முன்னெல்லாம், பிள்ளை பிடிக்கிறவன் வர்றான். ஓடி ஒளிஞ்சிக்க, என்று குழந்தைகளுக்குக் கதைகளில் சொல்வார்கள். கொரோனா பிள்ளை பிடிக்கிற வேலையைத்தான் செய்கிறது. கவலையுடன் கண்ணை அவர் மூடினார். கண்ணில் வெந்நீர் வழிந்தது.

அவர் அட்மிட் ஆன செய்தி கேட்டு, அலுவலகத்துக்கு இரண்டு நாட்கள் விடுப்பு விட்டார்கள். அறை முழுக்க கிருமிநாசினி தெளித்தல்... போன்ற வேலைகள் வேகமெடுத்தன. இரண்டு நாட்களுக்குப் பிறகு எல்லாருக்கும் திரும்ப அலுவலகம் வரவே சற்று திகிலாய் இருந்தது. எல்லாரும் கார்த்திகேயன் உட்காரும் நாற்காலியை வெறித்துப் பார்த்தார்கள். நாம போய் அவரைப் பார்க்க முடியுமா?

“கொரோனா வார்டுல சொந்தக்காரங்களே உள்ள அனுமதி இல்லை...”

கார்த்திக்கு புகை பிடிக்கிற கெட்ட பழக்கம் இருந்தது. சில மன அழுத்தமான சந்தர்ப்பங்களில், அலுவலகத்தில் எதாவது மீட்டிங் என்று பெரிய விஷயம் பேசினால், அவர் பாஸின் அனுமதியோடு அந்தக் கூட்டத்திலேயே புகை பிடித்தார். பெரிய கை. வேறு ஊழியர்கள் அதை மறுத்துப் பேச மாட்டார்கள். கோவிட் மூக்கில் நழைந்து நுரையீரலை எட்டுகிறது. மூச்சுத் திணறல் அவருக்கு எற்பட்டது. விடாமல் அடக்க மாட்டாமல் கார்த்திகேயன் இருமிக் கொண்டிருந்தார். நுரையீரலை ஸ்கான் செய்து பார்க்க அழைத்துப் போனார்கள். முன்பணம் நிறையக் கட்டி யிருந்தார்.

வீட்டில் பெண்ணைத் தனியே விட்டுவிட்டு மைதிலி ஆஸ்பத்திரியில் கூட இருந்தாளா தெரியவில்லை. ஆஸ்பத்திரியில் நோயாளி அருகே அனுமதிக்க மாட்டார்கள். வெளி வராந்தாவில் நிறைய நாற்காலிகள். ஒரு பொது டி.வி. திடீரென்று யாராவது நர்ஸ் அந்த அறைக்கு வந்து, “காவேரியம்மா அட்டென்டர்?” என்று கூப்பிட கூட்டம் முகம் மாறி பரபரக்கும். “இன்னும் பணம் கட்டணும்” என்றோ, “இந்த மருந்தை வாங்கிட்டு வாங்க” என்றோ தகவல் தருவார்கள். ரெம்டிசிவர் மருந்துக்கு ஊரே திருவிழாக் கூட்டமாக அலைகிறது வெளியே.

சேர்ந்த மறுநாளில் கார்த்திகேயன் தீவிர கண்காணிப்புக்கு மாற்றப்பட்டார். தொற்று நுரையீரலுக்குள் நுழைந்திருந்தது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. பிராணவாயு தேவைப்பட்டது. யானைக்கு தும்பிக்கை போல அவர் முகத்தில் ஆக்சிஜன் குழாயைப் பொருத்தினார்கள். ஸ்டீராய்ட் கொடுக்கவேண்டி யிருக்கலாம். காய்ச்சலை இறக்கியாகி வேண்டும் முதலில். மைதிலியை ஆஸ்பத்திரியில் காத்திருக்க வேண்டாம், என்று சொல்லி விட்டார்கள். அவசரம் என்றால் அவர்களே தொலைபேசியில் தகவல் தருவார்கள். தினசரி மாலை நாலு மணி அளவில் நோயாளியோடு வீடியோ காலில் பேச அனுமதி உண்டு. நோயாளிக்கு உடம்பு முடியவேண்டும். முகநூலில் மைதிலி தகவல் தெரிவித்தபோது நிறைய ஆறுதல் அடிக்குறிப்புகள் வந்தன.

கோபிநாத் முகநூலில் இல்லை. கோபிநாத் மைதிலியை வீட்டிலோ ஆஸ்பத்திரியிலோ போய்ப் பார்க்கலாம், பார்க்கலாம் என்று உள்துடிப்பாய் இருந்தார். அங்கே சுற்றி இங்கே சுற்றி கோவிட் நம்ம பக்கத்திலேயே வந்து உட்கார்ந்து கொண்டது. ஒரு அலைபேசி அழைப்பில் கூட அவளிடம் பேசலாம். தயக்கமாய் இருந்தது. இதுநாள் வரை அவர் கணவர் இருக்கும் போது அவளிடம் தனியே அலைபேசியில் பேச யோசனைப் பட்டார். இப்போது அவர் கணவர் அருகில் இல்லை. பேச்சும் அவர் உடல்நலம் பற்றி விசாரிப்புதான்... என்றாலும் தயக்கமாகவே இருந்தது. மைதிலி இதை எப்படி எடுத்துக் கொள்வாள் தெரியவில்லை. ஒருவேளை என்னோடு பேச அலைகிறார் பார், என எடுத்துக் கொண்டு விடுவாளோ, என்று பயந்தார்.

மைதிலி கார்த்திகேயனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாள். இவருக்கு, கோபிநாத்துக்கு அவள் மேல் ஒரு கண் இருந்தது. அது அவளுக்குத் தெரியுமா? மைதிலி இம்மாதிரி விஷயங்களில் ரொம்ப சூட்சுமமானவள். அவளுக்கு அது தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. எந்த சம்பவச் சிக்கலையும் ஓர் அலட்சியச் சிரிப்புடன், மனசில் அவள் என்ன நினைக்கிறாள் என்று காட்டிக் கொள்ளாமல் தாண்டிச் செல்ல வல்லவள் மைதிலி. பாதிவேளை ஒரு சிரிப்பில் அவளால் நழுவிவிட முடிந்தது. ரவிக்கையிலும் புடவை பார்டரிலும் ஃப்ரில் வைத்துத் தைத்துக் கொண்டிருப்பாள். (உள்ளாடையிலும் ஃப்ரில் வைத்திருக்கக் கூடும். அதைக் கார்த்திகேயன் அறிவார்.) கண்ணுக்கு மைதீட்டி எப்பவும் சற்று திகட்டலான அலங்காரத்துடன் அவள் நடமாடினாள். மதிய உணவு இடைவேளைக்குப் பின் அவள் தனியறைக் கண்ணாடி முன் இன்னொரு கோட் பட்டை தீட்டிக் கொண்டாள்.

ஆண்களைத் தொந்தரவு செய்யும் விடாத முயற்சியாக அது கோபிநாத்துக்குப் பட்டது. அவளைப் பார்க்கக் கூடாது, என்கிற அவனது முன் தீர்மானங்கள்... கண் தன்னைப்போல அவள் அசைவுகளை அளந்த வண்ணம் இருந்தன. அவனுக்கே இதுகுறித்து வெட்கமாயும், பிடித்தும் இருந்தது இந்த விஷயம். மைதிலி அவனைத் தாண்டிப்போகும் தோறும் அவளிடம் இருந்து வரும் அந்த பான்ட்ஸ் பவுடர் வாசனையைக் கிட்டத்தில் நுகர அவனுக்கு வேட்கை வந்தது. மகா அமைதியான அந்த அலுவலகம், அவள் கால் மாற்றிப் போட்டு உட்கார்கிற அந்த சிறு கொலுசுச் சிணுங்கலுக்கும் நீரில் கல்லெறிந்த சலனம் கண்டது.

அதிகம் யாரோடும் பேசாத ஓர் அலட்சியமற்ற கவனிப்பு. ஆண்களை ஓர் எல்லையிலேயே நிறுத்தி விளையாட்டு காட்ட வல்லவள் மைதிலி. ஆண்கள் ஏன் ஓர் எல்லையை நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும். அவளை ஏன் அத்தனை லட்சியம் செய்ய வேண்டும், என்று தெரியவில்லை. வேலையில் ரொம்ப சிறப்பானவள் என்றெல்லாம் சொல்ல முடியாது. சற்று ஒயிலான நடை வசிகரம். தன் உருவம் சார்ந்த அலட்டல். சிறப்பு கவனம். உதட்டுச் சாயம் அவளை இன்னும் வெறிக்க வைத்தது. கைகளில் நகப்பூச்சு. கச்சிதமான இறுக்கமான உடைகள். கண்ணாடி போட்டால் வயதாகக் காட்டும் என கான்டாக்ட் லென்ஸ் அணிந்தாள். வாழ்க்கை என்பது சுவாரஸ்யங்களின் குவியல் என அவள் நம்புவதாக அவனுக்குத் தோன்றியது.

அவனது இந்த இணக்கப் போக்கு, அல்லது காதல் அறிகுறிகளை அந்த அலுவலகத்தில் வேறு யாரும் அறிந்திருந்தார்களா தெரியவில்லை. அவனே தன்னை அவள்முன்னே வெளிப்படுத்திக் கொள்ளத் தயங்கினான். அத்தனைக்கு அவள் பிடி தருகிறவளும் அல்ல. ஆண்களின் சூத்திரதாரி போல அவள் அவர்களைப் பொம்மலாட்டம் ஆட்டினாள். அவளிடம் பொம்மலாட்டக் கயிறுகளைத் தந்தது யார் தெரியவில்லை.

நுரைக்கத் தயாராய் இருக்கும் சோடா, பாட்டிலுக்குள் அடைபட்டிருப்பதைப் போல அவன் தனக்குள்ளேயே மருகிக் கொண்டிருந்தான். தவிர்க்கவே இயலாத அவளது வசிகர வலைக்குள் தான் சிக்குண்டு விட்டதை அவள் அறிவாளா? சிக்க வைத்தவள் அவளே. ஆனால் அதை அறியாத பாசாங்குடன் அவள் நடமாடுகிறாள். பிடித்த இரையைத் தப்பிக்க விடாமல் அதேசமயம் உடனே உண்ணாமல், அதன் உயிர்ப் பயத்தை, திகைப்பை வேடிக்கை பார்க்கிற பெரிய விலங்கின் குறும்பு அது.

அவனைத் தாண்டிப் போகும் போதெல்லாம் அவள் அவனை கவனிக்காத பாவனை கொண்டாடினாள். அந்த அதித அலட்சியமே அவளைக் காட்டிக் கொடுத்தது. அப்படி தலையைக் குனிந்துகொண்டு அதித பவித்ர பாவனை கொண்டாடுகிறவள் அல்ல அவள். அலுவலகத்தில் சக பெண்களுடன் அவள் சகஜபாவனை காட்டவே செய்தாள். மேகமல்ல நான் வானவில், என அந்தப் பெண்கள் மத்தியில் அவள் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பி யிருக்கலாம்.

அந்த அலுவலகத்தின் ஆண்கள் யாருடனும் அவள் அதிகம் பேசியதே இல்லை. வலியப்போய் ஆண்கள் அவளிடம் பேச வேண்டும், என அவள் எதிர்பார்த்திருக்கலாம். தானே தனக்கு முடி சூட்டிக்கொண்டு. ராணி என அவள் வளைய வந்தாப் போல இருந்தது. அவளைப்போலவே தன் கொடியை உயர்த்திப் பிடிக்க அங்கே வேறு பெண்கள் இல்லை.

கார்த்திகேயன் வேறொரு கம்பெனியில் வேலை செய்து இங்கே முதலாளியின் பிரத்யேக அழைப்பில் வந்து சேர்ந்தவர். அவ்வளவில் அவருக்கு வேறு யாருக்கும் கிட்டாத அநேக சலுகைகள் அங்கே வாய்த்தன. உதாரணம் அவரது தோரணையான சிகெரெட் புகைத்தல். அதற்கு முதலாளி மறுப்பு சொல்லவே இல்லை. வேறு ஆண் யாரும் அங்கே புகை பிடிப்பது இல்லை, கோபிநாத் அறிந்த அளவில். அவரும் புகைப்பது இல்லை. நல்ல படிப்பும், உயர் ரக தோரணையுமாக கார்த்திகேயன். சட்டையை இன் பண்ணி, டை கட்டி அலுவலகம் வருவார். அலுவலக உடை என்று ஒரு நேர்த்தி அவரிடம் வைத்திருந்தார். கூடவே சிகெரெட். அது ஒரு பந்தா.

ஆளால் ஆளையே அலலவா அது பலிவாங்கி விட்டது. முதலில் ஆக்சிஜன் வைத்தார்கள் அவருக்கு. பிறகு அவர் மனைவியைக் கூப்பிட்டுப் பேசி வென்ட்டிலேட்டர் வைக்க கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். உள்ளே புகுந்த கிருமியை விரட்ட என்று குழாய் குழாயாய் உள்ளே செருகினாற் போலிருந்தது. இருந்த வலியில் உதைத்துக் கிழித்து இணைப்புகளை நோயாளி பிய்த்து வீசிவிடுவார் என்று கையைக் காலைக் கட்டிப் போட்டிருந்தார்கள்.

எல்லாம் கேள்விப்பட்டார் கோபிநாத்.  வார்டு வெளியே இருந்து கார்த்தியைக் காட்டினார்கள். ஆளே அடையாளம் தெரியவில்லை. அக்டோபஸ் என்று கடல் பிராணி கேள்விப்பட்டிருக்கிறாள். அதைப் போலிருந்தார் அவர். யாரைப் பார்த்தாலும் இருந்த உடல் வலிக்கு, தன் இணைப்புகளை விடுவிக்கும்படி திரும்பத் திரும்ப எல்லாரிடமும் பாவனையால் அவர் கெஞ்சுவதாகப் பட்டது. “பார்க்க அவர் தெளிவா இருக்கறதாத் தோணுது... எல்லாம் வென்ட்டிலேட்டர்ல இருக்கற வரைதான். அவர் முழுசா தன் நினைவில் இல்லை” என்றார் மருத்துவர்.

தான் என்கிற அந்த நிமிர்வு, பாவம் காலம் அவளைத் தள்ளாட்டிக் கொண்டிருந்தது. யாரும் எதிர்பாராமல், உலகமே எதிரபாராமல் இந்தக் கொரோனா எல்லார் வாழ்விலும், உலகம் பூராவிலும் புகுந்து புறப்படுகிறது. காலையில் அலுவலகம் போகும்போது வந்த பாதையில் திரும்பப் போக முடியாது போகிறது. அந்தப் பகுதி அடைக்கப் பட்டிருக்கிறது. கோவிட் பரவும் வேகம் பயமுறுத்துகிறது. மரண எண்ணிக்கை வேறு கலவரப் படுத்துகிறது.அவரது நெருங்கிய வட்டத்திலேயே நிறைய மரணச் செய்திகள் வருகின்றன. போய் நேரில் பார்த்து ஆறுதல் சொல்லக்கூட முடியவில்லை. அலைபேசியில் விசாரிப்பதோடு சரி. இதே ஊர் என்றாலும் வெளியே போக அனுமதி இல்லை. வெளியூர் என்றார் ஈ பாஸ் அது இது, என்று நிறைய கெடுபிடிகள்.

மைதிலியின் சங்கடமான தருணங்களை நினைத்து வேதனைப்பட்டார் கோபிநாத். அவள் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வரை அதிகம் அவளோடு பேச வாய்க்கவே இல்லை. ஒரு உபாசகனைப் போலவே நான் தள்ளி நின்று அவளிடம் மயங்கிக் கிடந்தேன். ஒருவேளை இந்தக் காதல்... நிறைவேறாது, என எனக்கே புரிந்திருக்கலாம். அதை வெளிப்படையாக நான் ஒத்துக்கொள்ள மறுத்தேன். என்றாலும் காதல்... மற என்றால் மேலும் தீவிரமாக அது நினைக்க வைத்து விடுகிறது.

ஆனால் கார்த்திகேயனுக்கு அவளிடம் ஒரு கவனம் இருந்ததை கோபிநாத் உணரவே இல்லை. கோபிபற்றி அவர் அறிந்தும் இருக்கலாம். அதுபற்றி அவர் பெரிதும் சட்டை செய்யாமல் இருந்திருக்கலாம். கோபிக்கு ஒருபடி மேலான ஸ்தானம் வகிப்பவர் கார்த்தி, என்ற அளவில் அவருக்கு இருந்த செல்வாக்கும், அதிகாரமும் அவரை அப்படி அலட்சியமாய் இருக்க வைத்திருக்கலாம்.

கார்த்திகேயன் காதல் வயப்படுபவனா, என்பதே ஆச்சர்யமான விஷயம் தான். அலுவலக விஷயமாக அவன் அடிக்கடி மைதிலியைத் தன் அறைக்கு அழைத்துப் பேசுவான். கோபிநாத் அது சாதாரண அலுவலக நடைமுறை தானே, என நினைத்தான். எப்போது எப்படி அவன் மைதிலியிடம் தன் காதலைச் சொன்னான், அல்லது அவளைத் திருமணம் செய்துகொள்ள அவள் சம்மதத்தைக் கேட்டான், எதுவும் தெரியாது. இல்லை, மைதிலிதான் முதலில் அவனிடம் தன் காதலைச் சொன்னாளோ? தன்னிடம் நெகிழ்ந்து கொடுக்காத மைதிலியின் இதயம் அவனிடம், கார்த்தியிடம் இழைந்து கொண்டதோ ஒருவேளை. வாழ்க்கை என்பதே புதிர் அகராதி. புதிர்கள் மேலும் புதிர்களையே போடுகின்றன.

திடுதிப்பென்று கார்த்திகேயன் எல்லாரையும் ஆச்சர்யப் படுத்தினான். கார்த்திகேயன் மைதிலி இருவருமே ஒன்றாக கோபிநாத்திடம் வந்து கல்யாணப் பத்திரிகை தந்தார்கள். பிரித்துப் பார்த்தபோது கோபிநாத்துக்குக் கைகள் சிறிது நடுங்கின. “அடேடே... அடேடே...” என்று அப்படியே நாற்காலியில் இருந்து எழுந்து நின்றான். அதற்குமேல் அவனால் பேச முடியவில்லை. அதுவரை மைதிலியை நேருக்கு நேர் பார்க்காதவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். “அவசியம் வாங்க” என்றாள் மைதிலி. அடுத்த நாற்காலிக்கு அவர்கள் நகர்ந்தார்கள். மைதிலியும் கார்த்திகேயனும் அலுவலக இடைவேளையில் ஒன்றாய் காபி சாப்பிட என்று கிளம்பிப்போனதோ, அல்லது சேர்ந்து அருகருகே இழைந்து சிரித்துக் கொண்டதோ... அதுவரை யாருமே பார்த்தது இல்லை. இத்தனையும் தாண்டித்தானே கல்யாணம் வரை வரும் விஷயம்?

பரவாயில்லை என்று மைதிலியிடம் அவன் தன் காதலைச் சொல்லி யிருக்கலாம். ஆனால் இதுவரை அவள் அவனிடம் சுமுக பாவத்துடன் அருகில் வந்து பேசினால் தானே? இத்தனைக்கும் அந்த அலுவலகத்தில் அவனது வேலைகளுக்கு நல்ல பேர் இருந்தது. கோபிநாத்தின் கையெழுத்து குண்டு குண்டாக அழகாக இருக்கும். எந்தக் கடிதத்தையும் ‘டிராஃப்ட்’ செய்ய வல்லவன். முதலாளிக்கு அவனது கையெழுத்து பிடிக்கும். அவசர வேலை என்று அவர் சொன்னால் மாலை எத்தனை நேரம் ஆனாலும் அவன் முடித்துத் தந்துவிட்டுப் போனான். அலுவலகத்தில் அவனது நற்பெயர்... அது அவளைக் கவரும். நான் அவசரப் படவில்லை. அவள் காலப்போக்கில் என்னை நெருங்கி வருவாள்... என நம்பி யிருந்தான். இலவு காத்த கிளி.

அன்றைக்கு இரவு அவனுக்கு உறங்க முடியவில்லை. அந்தக் கார்த்திகேயன், படவா அவன் கோபிநாத்தை ஒரு போட்டிக்காரனாக லட்சியமே செய்யவில்லை. இருக்கட்டும். அந்த மைதிலி, அவளும் அவனை நெருங்கவே விடவில்லை அல்லவா? ஆனால்.... அப்படி எப்படிச் சொல்ல முடியும்? அவனது காதல் உண்மை என்றால் அவனே வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும். அந்தக் காதலை வளர்த்தெடுக்க முயற்சிகள் கைக்கொண்டிருக்க வேண்டும். அவள் அவனைப் பற்றி என்ன நினைக்கிறாள்... என்ற பதிலையாவது அவன் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

உண்மையில், அவன் எந்நேரமும் அவளை தான் விரும்புவதாகச் சொல்லக்கூடும், என அவள் கட்டாயம் எதிர்பார்த்தே யிருப்பாள். தவிரவும், ஒரு அலுவலகத்து சக ஊழியன் அவன். இதில் எந்த விகல்பமும் அவள் காண முடியாது. தன் காதலை மிக எளிமையாகவே அவளால் மறுத்து விடவும் முடியும். என்றானபோது அவன்தான் தயங்கி பயந்து வாய்ப்பை நழுவ விட்டுவிட்டதாகத் தோன்றியது.

கண்ணில் சிறு அளவு கண்ணீர் கூட வந்த அந்த இரவு இப்பவும் ஞாபகம் வந்தது அவருக்கு. சில இடங்களின் ஈரம் எப்பவும் காய்வதே இல்லை. இந்த இருபத்தி நான்கு, ஐந்து வருட ஈரம் இப்பவும் அவருக்கு குளிர்ச்சி தட்டச் செய்கிறது, அதுவும் அவருக்கே திருமணமாகி பிளஸ் ட்டூ வாசிக்கிற பையன் இருக்கிற போது! அவரது திருமண வாழ்க்கை ஒன்றும் மோசமில்லை தான். என்றாலும் மைதிலி என நினைக்கவே அவருக்குள் ஓர் உணர்ச்சி கொந்தளிப்பதை என்ன செய்ய தெரியவில்லை. மைதிலி பற்றி இவளுக்கு, அவர் மனைவிக்கு எதுவும் தெரியாது. அவரும் சொல்லவில்லை.

மைதிலி திருமணத்துக்குப் பின் வேலைக்கு வருவதை நிறுத்திக் கொண்டாள். அவர் ஒருத்தரின் சம்பளம் போதும் என அவள், அவர்கள் முடிவு செய்திருக்கலாம். அல்லது, கோபிநாத் பற்றி ஒரு யூக அளவில் அறிந்த கார்த்திகேயன் அவள் இனி அலுவலகம் வரவேண்டாம் என்று தவிர்த்திருக்கலாம். திருமணத்துக்கு ஒரு வாரம் முந்தியே மைதிலி வேலையில் இருந்து விலகிக் கொண்டாள். அதுவரை அவளை அலுவலகத்திலாவது அவனால் பார்க்க முடிந்தது.

கல்யாணம் நெருங்க நெருங்க அவளது அலங்கார அமர்க்களங்கள் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். கைக்கு மெஹந்தி. புருவம் திருத்துதல் என்று அழகு நிலையம் புகுந்து புறப்பட்டிருப்பாள். இனி அதெல்லாம் கார்த்திகேயன் மாத்திரமே அறிகிற செய்திகளாக ஆகிவிட்டன. அவர்கள் கல்யாணத்துக்கு கோபிநாத் போயிருந்தான். அவன்கூட வரிசையில் கிருஷ்ணன். “நல்ல ஜோடிப் பொருத்தம், இல்ல இவனே?” என்று இவனைப் பார்த்துச் சொன்னான் கிருஷ்ணன்.

நேரடியாக அவளிடம், மைதிலியிடம் பேசாமலேயே, மற்ற பெண்களிடம் அவள் அலட்டுகிற சிரிப்புகளிலேயே அவளை அறிந்திருந்தான் கோபி. மைதிலி இப்போது அவன் கண்களுக்கே மறைந்து விட்டாள். அடுத்த ஆறேழு மாதத்தில் கோபிநாத் கல்யாணம் செய்து கொண்டான். அப்பா அம்மா பார்த்த பெண். அவனது கல்யாணத்துக்கு கார்த்திகேயன் மாத்திரம் வந்திருந்தான். மைதிலி வரவில்லை. “அவ முழுகாம இருக்கா...” என்றார் எல்லாரிடமும்.

முழுகாம இருக்காளாமே. சரி அதைப்பற்றி என்ன, என நினைத்துக் கொண்டான். இப்போது அவள் முகத்தைப் பார்க்க ஆவலாய் இருந்தது. இப்போது வயிற்றை இப்படி அப்படி அசைத்தபடி தெருவில் பெண் பிள்ளையாராட்டம் நடந்து வருவாளா? இப்பவும் அதே அளவு அலங்கார அமர்க்களங்கள் செய்து கொள்கிறாளா? அவள் அவனிடம் இன்னுங் கொஞ்சம் சகஜமாக நாலு வார்த்தை பேசியிருக்கலாம். ஒருவேளை அவளது அந்த விலகலே நான் நெருங்கிவர என்று அவளது காத்திருப்பை உணர்த்தி யிருக்கலாம். என்னவோ... எத்தனையோ நடந்து விட்டது!

இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இதோ கார்த்திகேயனின் உடல்நலக் குறைவால் எல்லாம் மேலடுக்குக்கு வருகின்றன. இந்நேரம் இப்படி நினைவுகள் வரவேண்டிய தேவை என்ன? மனம் ஒரு குரங்கு. எதையாவது நினைக்காதே என்றால் அது அதையே நினைக்க ஆரம்பித்து விடுகிறது. அவளுக்குக் குழந்தை பிறந்தது தெரியும். பெண் குழந்தை. கார்த்திகேயன் எல்லாருக்கும் அலுவலகத்தில் இனிப்பு தந்தார். கீதா. அவளது முதல் பிறந்த நாள் என்று அலுவலகத்தில் எல்லாருமாய்ப் போய் வந்தது நினைவு உண்டு. யப்பா, அன்றைக்கு அவர் எதிர்பார்த்தபடி மைதிலி தேவதையாய்ப் பொலிந்தாள். தலைமுடியை அப்படியே விட்டு அதில் ஜிகினா தூவியிருந்தாள். சுய பெருமை மிக்கவள் தான். அவனை அவள் பார்த்த பார்வையில் அந்த ஜெயித்த கர்வம் இருந்தது. இக்காலங்களில் அவள் மனதில் இருந்து நான் அழிந்தே போயிருப்பேன்... என்று இருந்தது கோபிநாத்துக்கு.

வென்ட்டிலேஷன் வைத்தாலே நோயாளி கடுமையாகப் போராடுகிறார் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இனி அதை வேண்டாம் என்று பாதியில் எடுக்க முடியாது. இப்போது அவரது உயிரைப் பிடித்துவைத்திருப்பதே வென்ட்டிலேட்டர் தான் என்றார்கள். அதிகாரச் செருக்கு மிக்க கார்த்திகேயன், அடங்கி ஒடுங்கி மூச்சுவிட முடியாமல் தவித்து திணறி போராடி ஓர் பின்னிரவுப் போதில் இறந்து போனார்.

மொத்த அலுவலகமே துக்கம் கொண்டாடியது. உடலைத் தர மாட்டார்கள். ஆம்புலன்ஸ் வீட்டு வளாகம் வரை வந்து முகத்தைக் காட்டும். தள்ளி நின்று பார்த்துவிட்டு அகன்று விட வேண்டும். அடக்கமோ எரியூட்டலோ அவர்களே ஏற்பாடு செய்து கொள்வார்கள், என்றார்கள். யாரும் போய் மைதிலியைப் பார்க்க வகையில்லை. சந்தோஷத்தை விடு, துக்கத்தை இப்படி தனியே அனுபவிக்க விட்டு விடலாமா? கோவிட் காலங்கள் அப்படித்தான் ஆகி விடுகின்றன.

நாலைந்து நாள் கழித்து முதலாளி அனைவருடனும் கலந்து பேசினார். எதிர்பாராத இந்த மரணத்துக்கு நாம யாருமே எந்த ஆறுதலும் தந்துவிட முடியாது. மைதிலி மேடம், அவங்களே நம்ம அலுவலகத்தில் வேலை செய்தவங்க தான். இப்ப கணவரை இழந்து துக்கப்பட்டு நிற்கையில் நம்மால முடிந்த சிறு ஆறுதல், அவரோட பொண்ணு... கீதா பிபிஏ முடிச்சிருக்கு. கம்பேஷனேட் கிரவுண்டில், அவரோட பொண்ணுக்கு நம்ம அலுவலகத்தில் வேலை கொடுக்கலாம்னு இருக்கேன்... என்றார்.

எல்லாருக்குமே அந்த யோசனை பிடித்திருந்தது.

மைதிலியை அவரே கூப்பிட்டு தகவல் சொன்னார். ஒரு வாரத்தில் கீதா எங்கள் அலுவலகத்தில் வேலை ஏற்றுக்கொள்ள வந்தாள். குழந்தை வயதில் கோபி அவளைப் பார்த்திருந்தார். இப்போது பருவ வயதுப் பெண். அவள் முகம் எப்படி இருக்கும், மைதிலி சாயலில் இருக்குமா, அப்பா சாயலில் இருப்பாளா தெரியவில்லை.

கீதாவோடு மைதிலியும் துணைக்கு என்று வந்திருந்தாள். யப்பா, அவள் அந்த அலுவலகப் படிகளை மிதித்து இருபது இருபத்தி ஐந்து வருடங்கள் ஆகி யிருக்குமே. கோபிநாத்துக்கு அவளைத் திரும்பவும் அங்கே பார்க்க வருத்தாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.கார்த்திகேயன் இறந்து போனதும் அலுவலக இருக்கைகளை இடம் மாற்றிப் போட்டிருந்தார்கள். பழைய நினைவுகள் யாருக்கும் வேண்டாம்.

மென்மையான அலங்காரத்துடன் மைதிலி வந்திருந்தாள். காலம் அவள் மிடுக்கை சற்று தளர்த்தி யிருந்தது. அவள் வந்த சூழலினாலும் அப்படி இருக்கலாம். அந்தப் பெண் ஒல்லியாய் இருந்தது. என்றாலும் எல்லாரையும் இதமாய்ப் பார்த்துப் புன்னகை செய்தது. முதலாளி அறைக்குள் மைதிலியும் கீதாவும் போய்ப் பேசிவிட்டு வந்தார்கள். கீதா தன் இருக்கையில் அமர்வதை கோபிநாத் பார்த்தார். பிறகுதான் அது நடந்தது. அதுவரை அவரிடம் அநேகமாகப் பேசாதவள், மைதிலி அவரைப் பார்க்க வந்தாள்.

“பெண்ணை பத்திரமாப் பாத்துக்கங்க” என்றாள் மைதிலி.

•••

Mob 91 97899 87842 / whatsApp 94450 16842

storysankar@gmail.com

 

Comments

Popular posts from this blog