தோட்டா இல்லாத துப்பாக்கி

எஸ்.சங்கரநாராயணன்

 க்காலங்களில் கிருஷ்ணசாமி திண்ணைக்கு மாற்றப் பட்டிருந்தார். நடமாட்டம் எல்லாம் ஓய்ந்து எல்லாமே படுக்கையில் என்றாகி விட்ட நிலைமை. வீட்டிற்குள் இப்படி நாற்றம் பிடித்த உடலை வைத்துக்கொள்ள எல்லாரும் முகஞ் சுளித்தார்கள். அது தாத்தாவின் வீடு. அவரே திண்ணை வைத்துக் கட்டியிருந்தார். அவரையே திண்ணையில் கொண்டுவந்து கிடத்தினார்கள். தினசரி காலையிலும் மாலையிலும் உதவியாள் ஒருத்தி வந்து அவரை சுத்தம் செய்துவிட்டுப்  போக ஏற்பாடு.

குடிக்க தண்ணீர் என்று அவருக்கு தாகம் எடுத்தால் ஒரு கத்து, ஊளை போலிருக்கும். உள்ளே யிருந்து யாராவது மனசிருந்தால் வருவார்கள். வேண்டா வெறுப்பாக வாயில் ஊற்றுவார்கள். “ஹா” என மூச்சு விடுவார். பெரும் நாற்ற வியூகம் அது. “ஆரு? தேவகியா?” தேவகிதான் வரணுமா, என்று நொடிப்பு கேட்டால், யார் என்ற ஆராய்ச்சியை விட்டு விடுவார். “இப்ப மணியென்ன?” உமக்கு மணி தெரிஞ்சி என்னாவப் போவது? போயி எந்தக் கோட்டையப் பிடிக்கப் போறீரு?... என்று அந்த உருவம் எழுந்து போகும். அது மருமகள் குமுதா. தேவகி அவர் பெண். அவளுக்குக் கல்யாணம் கட்டிக் கொடுத்தாச்சி. அவ இங்க எப்பிடி இப்ப வருவா?

நினைவும் கனவுமாக குழப்பமாகவே பொழுதுகள் ஓடின. நேரம் நாள், தேதி கிழமை, காலை மாலை, பகல் இரவு, எதுவும் அற்ற ஓருலகம். பெரிதும் அசைவு அற்ற உலகம். உடலையே அசைக்க முடியாத உலகம் அது. திண்ணையில் மோட்டுவளை ஓடு. வெயில் காலத்தில் இன்னும் கொதிக்கும் அங்கே. படுக்க முடியாது. இரவானால் உள் வெக்கைக்கு வெளியே வந்து திண்ணையில் படுப்பார்கள். ஓடு அடுக்கிய மரப்பட்டைகளில் எதாவது குளவி ஒய்ங் என்று பறந்து வாயில் ஈரமண் அதக்கி முட்டையிட ஒரு கூடு கட்டலாம் என்று இடம் பார்க்கும். காலையில் படுதாவைத் தூக்கி விடுவார்கள். வெயிலேற அந்தப் படுதாவை இறக்கி விட்டால் மறைப்பாய் இருக்கும். ஒரு அட்டை டப்பாவின் மூடி திறந்த மும்மறைப்பு அது. அவரால் படுத்தபடி தெருவைப் பார்க்க முடியாது.

தெருவிளக்கின் வெளிச்சம் இரவில் அவருக்கு ஆறுதல் அளித்தது. சாக்குப்படுதா வழியாக ஈரக்கோமணம் போல வெளிச்சம் கசிந்து உள்ளே வந்தது. காற்றடித்தால் அந்தப் படுதா சாப்பிட்ட வயிறு மாதிரி உப்பி பிறகு மெல்ல பின்வாங்கி அந்தக் காற்றைச் செரித்து அடங்கியது. பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாத தனிமை. இருந்தாலும் பேச என்ன இருக்கிறது. வளர்ந்த கதையா, நடந்த கதையா எதையும் சொல்லலாம். அதற்கெல்லாம் இப்போது அர்த்தம் இல்லை. அதைக் கேட்கவும் ஆள் இல்லை. அவரால் எத்தனை பேசிவிட முடியும்? எல்லாமே அலுத்த கணங்கள். அவர் மேலேயே அவருக்கு வெறுப்பு இருந்தது. இனி உயிரோடு இருப்பதே உடலின் அவஸ்தைகளை அனுபவிக்கத் தான். நல்ல அனுபவம் சுக அனுபவம், ஸ்திரீ சம்போகம் என்கிற மாதிரி, இனி கிடையாது. அதில் இப்போது ஆர்வமும் கிடையாது. குஞ்சாமணி வெறும் மூத்திரம் போக என்ற அளவில் ஒடுங்கிச் சுருங்கியாயிற்று. உடலை அசைக்கவே வகையில்லை.

உயிரோடு இருப்பதுதான் இப்போது பிரச்னை. ஆனால் செத்துப்போக இன்னும் வேளை வரவில்லை. அவரால் முடிந்தால் உடனே தற்கொலை செய்து கொள்ளலாம். எங்க, எழுந்துகொள்ளவே வகையில்லை. தன் சாவு தன் கையில் இல்லை. மனசின் புலம்பல்களுடன் அப்படியே படுத்துக் கிடக்க வேண்டியதுதான். பசி என்று முன்பு இருந்தது. இப்போது அதுவும் மரத்து விட்டது. காலை வெயில் ஏற கரைத்த சோறு அல்லது கஞ்சி கொடுக்கிறார்கள். அவரை உட்கார்த்தி வைத்து அல்லது சுவரோடு சாய்த்து வைத்துக் கொண்டு அவருக்கு ஒரு லோட்டாவில் தருகிறார்கள். நாலு வாய் அருந்து முன்னே மூச்சிரைக்கிறது. இருமல் வருகிறது. இருமவும் தெம்பு கிடையாது. வாயோரம் வழிந்த கஞ்சியைத் துடைத்து விட மாட்டார்கள். கஞ்சி குடித்து முடித்தபின் சில சமயம் ஈரத் துண்டால் வேலைக்காரி துடைத்துவிட்டுப் போனாலும் ஈ வந்து வந்து உட்காரும். மூக்கில் கன்னத்தில் காதில் என்று பறந்து பறந்து அமரும். அது அமரும் இடத்தை மாத்திரம் மாடு மாதிரி சுருக்கி உதறினால் நல்லது. அவரால் முடியாது... என்றாலும் அவருக்கு இன்னும் நரம்புகள் வேலை செய்கின்றன, உணர்ச்சி இருக்கிறது... என்பது ஒரு ஆறுதல்.

தூக்கம் என்று இல்லை. முழிப்பு என்று இல்லை. இரண்டும் கலந்தே இருந்தது. முழித்துக் கொண்டிருப்பதாகவே நினைவுகள் வண்ணங்களைக் கொட்டினாப் போல குழம்பும். திடீரென்று சுதாரிப்பார். உடம்பு ஒரு உதறு உதறும். அது முழிப்பு. எந்த அதிர்ச்சிக்கும் அதிராத உடல் என்று ஆகிவிட்டது. வெளியே மழை கொட்டினாலும், வெயில் உரித்துப் போட்டாலும் அவர் அப்படியே மரக்கட்டையாய்க் கிடப்பார். யாராவது உடலைத் தொட்டு காதில் வந்து சொல்வார்கள். “உங்க தோஸ்து... ராமஜெயம். செத்திட்டாராம்...” ம் என்பார். என்ன சொல்ல தெரியாது. அதற்கு வருத்தப்படத் தெரியாது. அதைப்பற்றி உணர்ச்சிபூர்வமாக அவரிடம் எதுவும் மாற்றம் இராது. பிறகு ஒரு புழுதிப் புயல். ராமஜெயம் வந்து திண்ணையில் உட்கார்வான். அவரோடு சீட்டு விளையாடுவான். ரெண்டு பேருமாக சாராயம் குடிப்பார்கள். மீன் பிடிக்கப் போவார்கள். திடீரென்று ராமஜெயம் செத்துப்போக அவருக்கு நினைவு திரும்பும். அடிக்கடி காது வலி வரும் அவனுக்கு. காதில் பஞ்சு வைத்துத் திரிவான் ராமஜெயம். அவனுக்கு மூக்கில் பஞ்சு வைத்தார்கள்.

உடம்பு நாட்பட நாட்பட நைந்து வாழத் தகுதியற்றதாகி வருகிறது. எண்ணெய் வற்றிய தீபம். அவர் துப்பாக்கியாக இருந்தார் ஒரு காலம். எல்லாரும் பயப்படுகிற அளவில் இருந்தார். இப்போது அதில் தோட்டா இல்லை. காலி பெருங்காய டப்பா அவர். அதில் கெட்ட வாசனைகள் குடிபுக ஆரம்பித்து விட்டன. வேலைக்காரி வந்து துடைத்துவிட்டால் உடல்நாற்றம் போய் வேறு மருந்து வாசனை சேர்ந்து கொள்கிறது. அவருக்கே பிடிக்காத நெடி அது. ஆஸ்பத்திரி நெடி. மற்றவர்களுக்கு எப்படிப் பிடிக்கும்?

ஒலிகள் பொந்துக்குள் முடங்கினாப் போல இரவு எல்லாவற்றையும் அடக்கி விடுகிறது. இரவெனும் குகை. அதன் சிறு பொந்தென காது. காலியாய்க் கிடந்தது காது. ராஜமரியாதையாக பூரண கும்பம் ஏந்தியவர் முதுகு காட்டாமல் பின்னால் போகிறது போல மாலையில் வெளிச்சம் பின்வாங்க பிறகு மெல்ல இருளின் ராஜ்ஜியம் ஆரம்பிக்கிறது. ஆறுமணியானால் தெருவிளக்கு வந்துவிடும். அதன் கம்பத்தில் மாடு கட்டியிருப்பார்கள். எப்பவாவது அபூர்வ தருணங்களில் அதன் சாணி வாசனை , மூத்திர நெடி அவர் மூக்கை எட்டும். திடீரென்று உடம்பு சரியாகி விட்டாற் போல நல் ஆரோக்கியத்துடன் சுதாரிக்கிற காலங்கள் அவை. பசி வரும். கஞ்சில உப்பு கம்மியா இருக்கு, என்று தோன்றும். மருமகளிடம், ஓஹ், தேவகியப் பாக்கணும்னிட்டிருக்கு... என்பார். அவளா, செத்தா சொல்லி விடுங்கன்னுட்டுப் போனா... என்பாள் குமுதா.

தூங்கவும் விழித்திருக்கவும் அவருக்கு நேரங் காலம் கிடையாது. ஊரே தூங்கிக் கிடந்த இரவுகளில் அவருக்கு விழிப்பு வந்தது. சத்தமே இல்லாத வேளை. அதனால் உள்ளே மின்விசிறி சுழலும் ஓசை கேட்டது. கொஞ்சம் திரும்பிப் படுத்தால் நல்லது. கூப்பிட்டு விட்டாலும் யாரும் வரப் போவது இல்லை. தெருவிளக்கு வெளிச்சத்தில் எதோ மரத்தின் கிளைக் குச்சிகள் பெண்ணின் கூந்தல் பிரிகளாய்த் தெரிந்தன. காற்று அசைத்திருக்கா விட்டால் அதை கவனித்திருக்க மாட்டார். சரி தூங்கலாம் என்று முயன்றால் கண் மூடி யிருந்தாலும் நிகழ்வுகள் அலைக்கழித்தன. எதிலும் காலூன்றாத நினைவுகள். தேவகி என்னிய வந்து கூட்டிட்டுப் போறியா, என்று கேட்டார். நதித்துரையில் நீரோட்டம் காதில் சலசலவென்று கேட்டது. அங்கே தண்ணி கெடக்கான்னே தெரியவில்லை. நினைவுக் காற்றில் குப்பைகளாய் எழும்பித் திரியும் யோசனைகள். எப்போது தூங்கினார் தெரியாது.

சிறிது அசைந்தாலே சில நாட்களில் தலை கிர்ர்ரென்று உருமும். உள்ளே எதோ மிருகம் புகுந்து கொண்டதா என்றிருக்கும். உயிர் எனும் மிருகம் எழுப்பும் வலி உருமல் அது. உணர்ச்சிகள் ஒரு வெடிப்பை நிகழ்த்திய மாதிரி. கண்ணெல்லாம் ஜிவு ஜிவு என்றிருந்தது. காய்ச்சல் இருக்கும் போல. கண்ணோரங்களில் நீர் கசிகிறது. சரி. வேளை நெருங்கி வருவதன் அடையாளங்கள் இவை என்று நினைத்தார். மூச்சுவிட முடியாமல் வாயைத் திறந்து திறந்து காற்றை உள்ளிழுத்தார். மாலை வரை உடம்புக்கு ஒன்றுமில்லை. உள்ளே டி.வி ஓடியது கேட்டது. எல்லாருமாகச் சிரிப்பது கேட்டது. உலகம் அதுபாட்டுக்கு இயங்கிக் கொண்டிருந்தது. இரவு ஏற உடல் குளிரெடுத்தாப் போலிருந்தது. காற்று உடம்பைத் தொட்ட கணம் உடல் சிலிர்த்து நடுக்கம் கொடுத்தது. காய்ச்சலின் அறிகுறி தான் இது. கேட்டால் எதும் மாத்திரை தருவார்கள். கொஞ்சம் ஆறதலாய் இருக்கும். ஆனால் கதவு சாத்தி யிருந்தது. எல்லாரும் தூங்கி விட்டிருப்பார்கள். மெல்ல காய்ச்சல் உக்கிரப் படுவதாய் உணர்ந்தார். உம்ம் என்று ஒரு சிறு முனகல் தன்னைப்போல எழுந்து உடல் ஆட ஆரம்பித்தது.

இன்றைக்கு ராத்திரி நம்மளை ஒருவழி பண்ணிரும் போலடா... என நினைத்துக் கொண்டார். வயிறு வலித்து அப்படியே தன்னைக் கட்டுப் படுத்த முடியாமல் வெளிக்குப் போனார். பீய்ச்சி யடித்தது மலம். உடம்பைப் பிழிந்து யாரோ சாறு எடுக்கிறாப் போலிருந்தது. சூடான திரவமாய் அதன்மேலேயே கிடந்தார். காலை வெயிலேற வேலைக்காரி வரும் வரை அவர் அப்படியே கிடக்க வேண்டும். வேறு வழியில்லை. ஆனால் இருந்த ஜுரத்துக்கு மூளை கொதித்துக் கிடந்தது. என்றாலும் பிடிவாதமாக அவர் நினைவுகளைக் குவிக்க முயன்றார். தூங்க முடியப் போவது இல்லை. சாவு வேளை வந்துவிட்டதா? அதன் வலிகள். இம்சைகள்... அதை அனுபவிக்க அதற்குக் கட்டுப்பட அவர் காத்திருந்தார். தரையில் இருந்து சிறு உயரம், கிருஷ்ணனின் ரதம் அப்படித்தான் ஓடியதாகச் சொல்வார்கள்... அவர் உடம்பு தரையில் இல்லாமல் சிறு உயரத்தில் அந்தரத்தில் இருக்கிறதாகப் பட்டது. அவர்தான் அப்படி சற்று நிமிர்த்தி விரைப்புடன் வைத்திருந்தாரோ என்னவோ. வெளிக்கிப் போயிருந்ததில் படாமல் படுக்க உடம்பு தன்னைப்போல முயற்சி செய்திருக்கலாம்.

தெரு விளக்கின் வெளிச்சம் ஒரு மாதிரி மஞ்சள் பூசியிருந்தது அங்கே. மஞ்சள் சுண்ணாம்பு அடித்த சுவரின் பிரதிபலிப்பாக அது இருக்கலாம். அவர் கழித்திருந்த நீர்த்த மலம் போன்ற வெளிச்சம். அதைத் தவிர்க்க முடியாது போல. சில நாட்கள் உடம்பு முறுக்கி யெடுத்து விடும். எதோ வலி உள்ளே உருளும். சற்று அசைந்து படுத்துக் கொள்ள விரும்பி அது முடியாமல் போவதே மனசுக்கு என்னமோ செய்யும். என்னால் எதுவும் முடியாது. இது வலியின் ஆளுமைக் காலம். எதுவும் வாயுப் பிடிப்பாகக் கூட இருக்கலாம். அவயவங்கள் என்றால் அது தரும் சுக அனுபவங்களைப் போலவே, அது தரும் வலிகளும் உண்டு.

கண்களில் பீளை கட்டி பசையாய் ஒட்டிக் கிடந்தன கண்கள். அதற்குள் ஒரு குச்சிபோல குத்தியது வெளிச்சம். கண்குழி ஐஸ்கிரீம் கிண்ணம் என்றால் ஒரு ஸ்பூன் போல வெளிச்சம். அந்த வெளிச்சம் அவரைத் தூங்க விடவில்லை. மெல்ல பிடிவாதமாய்க் கண்ணைப் பிரிக்க முயன்றார். கையை முகம் வரை கொண்டு போய் கண்களைத் துடைத்து விட முயன்றார். கைகள் முரண்டு பிடித்தன. அங்கம் அல்ல அது, அங்கவஸ்திரம் போலக் கிடந்தது கை. இடது கை தரையில் கிடத்தப் பட்டிருந்தது. சரி வலது கை, அவர் வயிற்றில் கிடந்தது. நல்ல விஷயம் அது. சிலநாட்கள் கைகள் உடம்புக்கு ஒருக்களித்து தரைக்குப் போய்விட்டால் அவரால் அதை எழுப்பித் தூக்கக் கூட முடியாமல் ஆகிவிடும்.  

நேரம் என்ன தெரியவில்லை. எதாவது வேலை இருக்கிறவனுக்கு மணிக் கணக்கு அவசியம். வெறிதே படுத்துக் கிடக்கிறவனுக்கு நேரம் என்ன ஆனால் என்ன? மெல்ல மிக மெல்ல வலது கை அசைகிறது. அது ஒரு சாதனை செய்யப் போகிறது இன்றைக்கு. அவரது மூளையின் உத்தரவுகளை ஒழுங்காகக் கேட்டு மெல்ல உயர்ந்து கண் வரை நகர்ந்து கண்ணைத் துடைத்து, அவர் கண்ணைத் திறக்க வேண்டும். எனக்கு இன்னும் எவ்வளவு சக்தி இருக்கிறது, என்னால் எவ்வளவு முடிகிறது, என அது இன்றைக்கு எனக்குக் காட்டித் தரும்.

அந்தக் கையே ஒரு கல் போல மார்மேல் கிடந்தது. கை அல்ல இது, உலக்கை. அதன் நரம்புகளில் உணர்ச்சிகள் பயணப் பட்டு வெகு காலம் ஆகி யிருந்தது. மரத்தடி வேர்கள் போல அதன் மேல் திண்டு திண்டாய் நாளங்கள் முடிச்சிட்டு ஓடி யிருந்தன. மெல்ல அதை நகர்த்த முடிகிறது. கையை உயர்த்த... முடியுமா? முடிய வேண்டும். கண்ணைத் தானாகவே பட்டென்று மொட்டு உடைகிறாப் போல திறக்க முடிந்தால் நல்லது. இமைகளுக்கான ஆணைகள் இட்டார். கைகளைப் பிடிவாதமாக வேண்டினார். தொண்டை வறண்டது. ச்சீ... இப்ப கண்ணைத் திறந்து என்ன ஆவப் போவுது... என்று ஒரு மனம் அவரை அவநம்பிக்கை காட்டித் தளரச் செய்தது. இறுதியில் கை, வலதுகை சிறிது சிறிதாக நகர்ந்து முகத்தில் ஊர்ந்து மேலேறி கண்ணைத் தொட்ட கணம் மகத்தானது. ஆஹு, என்னால் முடிகிறது என மனம் கொக்கரித்த கணம் அது. கண்ணைத் துடைத்தார். இப்போதைக்கு இந்த உடம்பு சாகாது... என்று தோன்றியது. உடனே அது சந்தோஷப் பட வேண்டிய சமாச்சாரம் இல்லை, என நினைத்தார். பீளைப் பொறுக்குகளை உதிர்த்தார். கலங்கிய கண்ணில் மெல்ல பார்வை வந்தது. என்ன தெரிகிறது கண்ணில் என்று பார்த்தார். ஜுரப் பட்ட கண்கள் ஒரு மஞ்சள் பாரித்த பார்வை பார்த்தார். ஒரேடியாய்ப் படுத்தே கிடந்து உடம்பு சூடு, அதுவே அதிகமாய் இருந்தது. காற்றுப் புகா முதுகு. வியர்த்துக் கிடந்தது. அதில் இப்போது மலம் சேர்ந்திருக்கும்.

படுதா கட்டிய மேல் உத்திரம். நீண்ட மூங்கிலில் கயிறு போட்டுக் கட்டிய படுதா. சாக்குகளைப் பிரித்துத் துணி போல் தைத்த படுதா. திண்ணை உயரத்தில் பார்த்தார். அது என்ன? சட்டென எதோ பார்வைக்குப் பட்டு திரும்ப கிழே இறங்கினாற் போலிருந்தது. பிரமையா? இல்லை. அது ஒரு தவளை. தவளைதான் அது... என உள்ளுணர்வால் உணர்ந்தார். ஆகா மூளையும் பழுதில்லை என்று பட்ட கணம். என் மூளை சுதாரிப்பாய் இருக்கிறது. திரும்ப அந்த க்யுக் துள்ளல். அது தவளைதான். ஒரு அடி, அதற்கு மேலான திண்ணை தான். அவ்வளவு உயரம் தவளை எப்படி துள்ளி உள்ளே வந்தது? திண்ணை நடுவே வீட்டுக்குள் புக வழி உண்டு. படிகள் உண்டு. தவளை படியில் ஒரு தாவு தாவி பிறகு திண்ணைக்கு வந்திருக்கலாம். இப்போது அவர் எழுந்துபோய்த் தவளையை விரட்ட முடியாது. அருவருப்பான அளவில் அது இப்போது விசுக்கென்று அவர் மேல் வந்து உட்கார்ந்தால் என்ன செய்வது? நீளமான திண்ணை. இந்த மஞ்சள் வெளிச்சத்தில் அவருக்கு அது நிழல் போலத் தெரிகிறது. தெரியவில்லை அது. அது துள்ளினால் அவருக்கு அது காட்சி தருகிறது. காட்சி தந்துவிட்டு திரும்ப திண்ணையில் எங்காவது இறங்கிக் கொள்கிறது. எப்படி வந்தது தவளை? இன்றைக்குத் தூக்கம் அவ்வளவுதான் என நினைத்தார். இப்பவே மணி என்ன...

விசுக். தவளை அவர் நெஞ்சின்மேல் கைமேலேயே தொம்மென்று வந்து குதித்தது. பெரிய, உள்ளங்கையளவு தவளை தான். சில தவளைகள் விஷம் போல திரவம் வெளியேற்றும். உடம்பே அரிக்கிற மாதிரி.  அதை எப்படி விரட்டுவது. பொதுவாக தவளைகள் தெருவோடு போய்விடும். ஏன் இது மேலேறி வந்தது? அப்படியே கண்ணை மூடிக் கொள்ளலாமா? கண்ணைத் திறக்காமலே இருந்திருக்கலாம். கை உதறித் தட்டி விடலாம் என்றால் கை அசைய மறுத்தது. லேசாய் நடுங்கியது கை. அதன் அடுத்த துள்ளலுக்கு அவர் காத்திருந்தார். இப்போது என்னைத் தாண்டி இந்த மூலைக்கு அது நகர்ந்து விடும். போகட்டும். அதுபாட்டுக்கு ஒரு மூலைக்குப் போய் விட்டால் அதனால் ஒன்றும் பிரச்னை இல்லை. நேரே தவ்வி முகத்தில் வந்து உட்காராத வரை கொடுப்பினை தான்.

அவரது வேட்டி ஒரு மாதிரி சுருண்டு தொடையோடு கிடந்தது. தடித்த கயிறு போல. அதில் சிறு அசைவுகள் தெரிந்தன. சில சமயம் காற்றடிக்கும் போது அப்படி உடம்போடு சிறு படபடப்பு தெரியும் அவருக்கு. இப்போது காற்று ஒன்றும் இல்லையே. என்ன அது? அப்படியே கிடந்தார். மூளையின் கவனத்தைத் தொடைப் பக்கம், அந்த ஸ்பரிசத்தை, திரும்ப என்ன என்று கவனித்தார். ஒன்றும் இல்லாமல் இருக்கலாம். பிரமையாக இருக்கலாம். சில சமயம் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பது கூட அசட்டுத் தனம்தான். இந்நேரம் தவளையை மறந்திருந்தார். இப்போது தவளையைப் பற்றி யோசித்தார். அவர்மேல் மார்பின் மேல், கையின்மேல் உட்கார்ந்திருந்தது தவளை. அது அங்கேதான் இருக்கிறதா? தவளையின் கனத்தைக் கை உணர்கிறதா? இல்லை. தவளை கை மேல் இல்லை. அது எங்கே போனது. ஒருவேளை எல்லாமே பிரமைகளோ?

இப்போது தொடையை உரசினாற் போல சிறு நெளிவு. அசைவு. என்ன அது? ஆகா பாம்... பாம்பா?... என நினைக்கவே திடுக்கிட்டுப் போனது. பாம்பா? தவளையைப் பிடிக்க பாம்பு வந்திருக்கிறது. பாம்புக்குத் தப்பி தவளை திண்ணையில் ஏறி யிருக்கிறது. அதைத் தேடி பாம்பு பின்னாலேயே... இரு. பாம்பு தானா? பிரமையா? அந்த சுருண்ட வேட்டிப் படபடப்பு. அதைத்தான் பாம்பின் நகர்வாக நினைக்கிறேனா? என்ன பாம்பு? இப்ப நான் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய முடியும் என்னால்? எழுந்து ஓடுவதா? ஏம்ளா... என்று சத்தங் கொடுப்பதா? உள்ளே யிருந்து ஆளைக் கூப்பிடுவதா? வருவார்களா?

பாம்பு. நன்றாக இப்போது உடம்போடு ஈஷி உரசி நகர்ந்தது. அது பாம்புதான்... என நினைத்தார். இப்போது தவளை எங்கே என்று தெரியவில்லை. அது பாம்புதான், என்று தோன்றியது. என்ன பாம்பு. சட்டென போர்வையை உதறி அதை வீசியெறிந்து விட முடிந்தால்... அவரால் முடியாது. அதைப் பற்றி யோசிக்க வேண்டியது இல்லை. பாம்புகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவது இல்லை. அது கலவரப் படாதவரை மனிதரை அது எதுவும் செய்வது இல்லை. இப்ப நாம என்ன செய்யணும்... அசைய முடிந்தாலும் அசையவே கூடாது. கொஞ்ச நேரம் முன்னால் இந்தக் கையை முகத்துக்குக் கொண்டுபோக அசைவை விரும்பினார். இப்போது மரக்கட்டையாய் அப்படியே கிடப்பது நல்லது. பாம்பை அவர் கலவரப் படுத்தக் கூடாது. என்ன பாம்பு? விஷம் உள்ளதோ? இரு. பதட்டப் படாதே... அசைவே இல்லை இப்போது. இந்த இரவில் இந்தப் பதட்டத்தில் அவரது மூளை எத்தனை துல்லியப் படுகிறது. ஆபத்து என மூளை உணர்ந்தால் உயிர் பிழைக்க அத்தனை ஆவேசமும் உள்த் தீவிரமும் தேடலும் மனிதனிடம் வந்து விடுகிறது.

சீறி ஒரே கொத்து. அவர் ஆள் அவ்ட். அதாவது அது விஷப் பாம்பாய் இருந்தால். பொதுவாக சாரைப் பாம்புகளே இப்படி வெளியே திரிகின்றன. வயல் வரப்புகளில் சாதாரணமாகப் பார்க்கலாம். எலிகளை, தவளைகளைத் தேடி அவை திரியும். தவளை துள்ளி அவர்மீது ஏறியமர்ந்த அந்த ஸ்பரிசம். தவளையின் கால் சவ்வுகளில் ஒரு சொரசொரப்பை உணர்ந்தார். அதுவும் இப்போது இல்லை. அது அவர் பாம்பை நினைக்கையில் துள்ளி வேறெங்கோ போய்விட்டது போல. வழவழவென்று இருக்கும் பாம்பு. மேலே பாம்பு ஊரும்போது எப்படி இருக்கும்? இரு. கலவரப் படாதே. தவளையைக் கண்டாய். அதனால் பாம்பு ஒன்று அதைப் பின்தொடர்ந்து வந்ததாக நீயே கற்பனை பண்ணிக் கொண்டாயா? தூக்கம் துப்புரவாக அவரை விட்டு ஓடியிருந்தது. லேசான மஞ்சள் வெளிச்சம். இதில் பாம்பை தவளையை அவரால் எப்படி இந்தக் கண்ணைக் கொண்டு தேட முடியும்? அவரிடம் சக்தியும் இல்லை. போர்வையை உதறி விடலாம். நான் அல்ல. யாராவது உதவிக்கு வந்து, பாம்பை கவனித்து அவர்கள் செய்ய வேண்டும் அதை. போர்வையை அவரிடம் இருந்து உரித்து வீச வேண்டும். யார் வருவார்கள் இந்நேரம்?... பாம்புதான் வரும்.

அப்படியே போர்வைக்குள் புகுந்து கொண்டு தொடைப்பக்கம் அந்த வழவழப்பு. நரகலில் கிடந்து  மெல்ல அசைகிறது பாம்பு. பாம்புதானப்போவ். அட பாம்பைப் பார்த்தாயா நீ? இல்லை. பின்ன என்ன? பயம். பயம்தான் பாம்பு. இல்லை. அந்த வழவழப்பு. கேரள நம்பூதிரி துண்டைச் சுருட்டி தடிமனான பூணல் போல போட்டுக் கொள்வானே... அந்தத் தடிமனில், கயிற்றின் தடிமனில்... பாம்புதான் அது. அது தவளையைத் தேடுகிறதா? தவளை அவர்பக்கம் துள்ளியதும் பாம்பு, தவளை அவர்பக்கமாக எங்கோ இருக்கிறது என்று தேடுகிறது போல. தவளை. அது எப்பவோ அவரைவிட்டு துள்ளி வெளியே போய்விட்டது. அதைப் பாம்பு அறியவில்லை போல.

இந்த இரவின் சிறு குளிரில் போர்வை அடிக் கதகதப்பு அதற்கு, பாம்புக்குப் பிடித்திருக்கிறதா? வந்த வேலையை மறந்து இங்கேயே இப்படி ஓய்வெடுக்க அது முடிவுசெய்து விட்டதா? நினைக்கையிலேயே, ஆகா அது மெல்ல தொடைக்கு மேலே வந்தது. பாம்பு தான் அது. அவரது உடல் நீளத்துக்கு இருக்கும் போலிருக்கிறது. அவர்மேல் வழவழப்பாக ஏறியது. அவரது வயிற்றுக்குள் என்னவோ இம்சை எழுந்தது. பயம். அபார பயமாக இருந்தது. அவரை அவரே ஒரு திகிலுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். ஆமாம். பாம்புதான். அவர்மேல் நின்றபடி சற்று அரையடி ஒரு அடி மேலெழும்பி, எதையோ தேடியதா? பாம்புகள் சூழலை நோட்டம் விட நாக்கை நீட்டி நீட்டி மோப்பம் பிடிக்கின்றன. உணர்விழைகள் அமைந்த பிளவு பட்ட கத்திரி நாக்கு. இதுவும் நாக்கை நீட்டியதா, இருட்டில் தெரியவில்லை. அவர்மேல் பிரியமான பேரக் குழந்தை யாட்டம் ஜம்மென்று அமர்ந்திருந்தது பாம்பு.

அதன் தேவை என்ன தெரியவில்லை. அதற்கு மனிதர்களையிட்டு இப்போது இந்த இரவின் சந்தடியற்ற தன்மையில் பயம் இல்லை. அதன் இயல்பில் இருந்தது பாம்பு. இது அதன் உலகம். அதன் சுதந்திரம் அதற்கு. அதில் மனிதர் குறுக்கீடு எதுவும் கிடையாது. அந்தத் தவளை... அதை அதனால் கண்டுபிடிக்க முடிந்துவிட்டால் நல்லது. உடனே இரையை எட்டித் தேடி அடைய, சாப்பிட அந்தப் பாம்பு அவசரம் காட்டவும் இல்லை. அவரது கையளவு பருமன் இருந்தது பாம்பு. அவர் கழுத்துப் பக்கம்... அவருக்கு செருமல் எடுத்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார். நல்ல நீளமான பாம்பு. அவர் நீளம் இருக்கும் போல. அது இறங்கிப் போனாலும் வழவழவென்று அந்தக் கழுத்தில் வால் பக்கம் வரை பாம்பு நகர்வதை உணர்ந்தார். கடைசி வால். அப்படியே நின்று சிறிது தூக்கி அவர் கன்னத்தைத் தடவி... பாம்பு இறங்கிப் போய்விட்டது.  அவரைவிட்டு இறங்கி விட்டது. திண்ணையை விட்டுப் போய்விட்டதா தெரியவில்லை.

ஹா என்று சிரிப்பு வந்தது. சத்தமில்லாமல் வாயைப் பிரித்து மூச்சு விட்டார். ஒருவேளை கொத்தி யிருந்தால் நான் செத்திருப்பேன்... என நினைத்தார். ம், என அலுப்பாய் உணர்ந்தார். எனக்கு இன்னும் வேளை வரவில்லை போல. பாம்பு தவளையைக் கண்டு பிடித்து விட்டதா தெரியவில்லை. வேறு தவளையைத் தேடிக் கூட அது போகலாம். அது திண்ணையிலேயே மூலையில் எங்காவது பதுங்கிக் கொள்ளவும் கூடும். என்ன அனுபவம் இது, என்றிருந்தது. கண்ணை அகல விழித்துப் பார்த்தார். மஞ்சள் ஒளி சந்தனப் பாலாய்ப் பரவி யிருந்தது. இப்போது மணி என்ன என்று தெரியவில்லை. ஆனால் அந்தப் பாம்பின் வருகை, அத்தனை புலன்களும் எப்படி ஒருசேரக் கூர்த்து வேலை செய்தன... என நினைத்தார். சாவு என்கிற நெருக்கடி காட்டினால் மூளை அபாரமாய் கவனம் குவித்து விடுகிறது. விடியலுக்கு நேரம் ஆகி யிருக்கும் என நினைத்தார். வேறு எதோ கூட நினைத்தார். எப்போது தூங்கினார் தெரியாது. திரும்ப அவருக்கு முழிப்பு வந்தபோது வெயில் உக்கிரமாய் வந்திருந்தது.   

*

storysankar@gmail.com

91 97899 87842 / 91 94450 16842     

Comments

Popular posts from this blog