PESUM PUTHIA SAKTHI / deepavali malar 2020

மணல்ரேகை

 
எஸ்.சங்கரநாராயணன்

 

ண்மை அப்படி அல்ல. ஆயினும் பெண்மை ரசவாதங்களுக்கு உரியது. கொடுத்து வைத்தவர் நீங்கள், பெண்கள்... என்று அவன்தான் சொன்னான். ரமணனுக்கு இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது என்பதே ஆச்சர்யமாய் இருந்தது அவளுக்கு. அவன் சொல்லிவிட்டு சொன்னதையே மறந்து விடுவான். ஆனால் அவளுக்கு ரொம்ப நேரம் யோசிக்கிறாப் போல ஆகிவிடுகிறது.

கனவுகள், சிறகடித்தல் அல்லாது பெண்மை உண்டோ? இதுவும் அவன் சொன்னது தான். கணங்களை ஆண்கள் பத்திரப் படுத்திக் கொள்வார்கள். எனில் பெண்களோ அப்பவே அந்தந்தக் கணங்களைக் கொண்டாடுகிறார்கள். துக்கம் என்றாலும் கூட சட்டென அழுது பெருக்கி அதிலேயே கரைந்துவிட பெண்களால் முடிகிறது. சந்தோஷமோ அவர்களைத் ததும்பித் துள்ள வைக்கிறது. உணர்ச்சிகளால் அவர்கள் சட்டென்று உயரே தூக்கப் படுகிறார்கள். இதோ மகிழ்ச்சி, என காலம் அவர்களைத் தோளில் எடுத்து சுற்றிக்காட்டி இறக்கி விடுகிறது போலும்.

அவன் மேலும் சொல்வான். நான் ஆண். அதனால் அதிகமாக பெண்மையை கவனிக்கிறேன்... நேசிக்கிறேன் போலும். “அப்படியா?” என விழிகளை விரித்தாள் கல்பனா. “அதேபோல... நீங்கள்... பெண்கள், ஆண்களைப் பற்றி என்னவெல்லாம் யோசிக்கிறீர்கள். சொல்ல முடியுமா?” என்று கேட்டான் மருதாணியிட்ட அவள் உள்ளங்கைகளைப் பார்த்தவாறே. அவளுக்கு என்ன தெரியும் என்றிருந்தது. சம்பவங்களை எதிர்காலம் நோக்கி நகர்த்துவது ஆண்களுக்கு வாடிக்கை. அவர்களது யோசனைகள் நேற்றும் நாளையுமாக இன்றைப் பின்னுகின்றன. பெண்கள் தற்காலத்தில் வாழ்வதாகக் கொள்ளலாமா? நிகழ்காலத்தை நீட்டித்து வாழ்கிறார்கள் பெண்கள். “சரிதான்” என்றான் அவன். “நீங்க சொன்னதையே வேறு மாதிரி சொன்னேன் அவ்வளவுதான்” என்றாள் கல்பனா வெட்கத்துடன். சிரிப்பு அழகு, என்றால் வெட்கம் பூசிய சிரிப்பு பேரழகாக இருந்தது.

பெண்கள் கொண்டாடுகிறார்கள். என்பதைப் போலவே பெண்களின் தருணங்கள் கொண்டாடப் படுகின்றன. அவள் நினைத்துப் பார்த்தாள். ஒரு ஞாயிறு மதிய நாளில் உறங்கிப் போனாள். கண்விழித்துப் பார்த்தபோது கீழாடையில் ரத்தம். பதறிப் போய் “அம்மா?” என்று அலறினாள். எல்லாருமாய்ச் சிரிக்கிறார்கள். சோபனம் சோபனம், என்கிறார்கள். அப்பாவுக்கு ஊருக்கு போன் போகிறது. கல்பனா சின்னப்பெண். அவளுக்கு என்ன தெரியும். அவளையிட்டு வீடே அலங்கரித்து குதூகலித்துக் குலுங்குகிறதாகப் பட்டது. “நீ பெரியவளாயிட்டே இவளே” என்று அம்மா கன்னத்தில் சந்தனம் தீற்றுகிறாள். அப்படியென்றால் என்ன, என மெல்லப் புரிந்து கொள்ளும்போது தன்னைப் பற்றிய ரகசியம் ஒன்று மெல்ல வாசனைபெற்றுக் கசிகிறதாக பிரமை தட்டுகிறது. மனதில் மணம் நிறைகிறது. பூவுக்குள் தேன் சுரந்த மாதிரி. ஒரு பெண்ணில் பெண்மை விழிக்கும்போது வாழ்வின் ஒரு சன்னல் திறக்கப் படுகிறது. பெண்மையின் ஒவ்வொரு கணமும் இங்கே கொண்டாடப் படுகிறது. சம்பிரதாயமே அப்படித்தான்.

அதிகாலை எழுந்து வீட்டு வாசலில் கோலம் போடுதல் பெண்வேலை ஆனது. பொழுதுகளை அலங்கரிக்கிறாள் அவள். “எங்க... முறைவாசல்னு ஒரு வயசான அம்மா வந்து போறாங்க. அவ பாத்துக்கறா எல்லா வேலையும்” என்று கல்பனா சிரித்தாள். சில சமயம் இரவுப்பணியுமாக அலுவலகம் போக வேண்டி யிருந்தது அவளுக்கு. ஒரு ‘கால் சென்ட்டரில்’ வேலை. ஒருவாரம் விட்டு ஒருவாரம் இரவுப்பணிதான். தொலைபேசி அழைப்புகள் வந்தமணியமாக இருக்கும். கேள்விகள். சந்தேகங்கள். உள்நாட்டு, வெளிநாட்டு அழைப்புகள். கையில் கட்டி எடுத்துப் போயிருப்பாள். இரவு பத்து மணிவாக்கில் பசிக்கும். எழுந்துபோய்ச் சாப்பிட்டு விட்டு வருவாள். அதற்குள் அழைப்புகளைத் தோழி பார்த்துக் கொள்வாள். இனி அவள் எழுந்துபோக வேண்டும். பரபரப்பான வேலைகள் முடிந்து சாறு பிழிந்த கரும்புச் சக்கையாக கல்பனா வீடு திரும்புவாள். காலை ஆறு மணிக்கெல்லாம் அவள் வரும்போது புன்னகை மாறாமல் கதவு திறக்கிற ரமணனை அவளுக்குப் பிடிக்கும். “நீ வேலையை விட்டுவிடலாம். என் ஒரு சம்பளம் போதும் என்று நீ நினைத்தால்...” என்பான். “ஆனால் படித்த பெண்கள் படித்த படிப்பை வீணாக்காமல் வேலைக்குச் செல்வதே நியாயம். வேலை உங்களை மேலும் நிமிர்த்துகிறது, என்பதை ஒத்துக் கொள்கிறேன். உன் விருப்பப்படி வாழ, உத்தியோகம்...”

“மனுஷ லட்சணம்” என்று சிரித்தபடி அவள் அவன்தந்த காபியை வாங்கிக் கொண்டாள். அவளுக்கு என்ன குறை? அவள் பிரியப்படி முகம்பார்த்து நடந்து கொள்கிற கணவன்.  வியாழக்கிழமைகளில் அவள் சில தெருக்கள் தள்ளி இருக்கிற சாய்பாபா கோவிலுக்குப் போவாள். கூடவே வருவான். கைகூப்பி அவன் வணங்கிப் பார்த்தது இல்லை. கேட்டால் புன்னகை செய்வான். அவனது உலகம் வேறு. அவளுக்குப் புரிந்தது. அவன் உலகம் என்ன என்று அவளுக்குத் தெரியாது. நிறைய வாசிக்கிற கணவன். சிறிது நேரம் கிடைத்தாலும் அவன் எதாவது தடிமனான புத்தகம் எடுத்து வாசிக்க ஆரம்பித்து விடுகிறான். பொடிப்பொடி எழுத்துக்கள். பொடி வைத்து எழுதப்பட்ட கதைகள். அவற்றைப் படித்தால் அவளுக்கும் அவை புரியுமா? அவனுக்கும் அலுவலகத்தில் வேலையும் கெடுபிடியும் அதிகம் தான். ஒருநாள் அவள் அவன்அலுவலகம் போயிருந்தாள். வாசலில் வரவேற்பில் காத்திருக்கச் சொல்லி அழைத்து விட்டார்கள். மென்பொருள் கம்பெனி. அவன் வந்து புன்னகையுடன் உள்ளே அழைத்துப் போனான்.

சின்னச்சின்னத் தடுப்புகளுக்குள் நுழைந்துகொண்டு நிறைய இளைஞர்கள். ஆண்கள். பெண்கள். அவரவர் குகை. அவள் அலுவலகமும் இப்படி உள்தடுப்புகள் எடுத்ததுதான். ஆனால் இங்கே ஆட்கள் அதிகம். கல்யாண மண்டபம் போல, பெரிய அரங்கம்போன்ற அறை. அதில் மைசூர்பாகு அடுக்கினாப் போல அவரவர் காபின். நடு ஏ.சி. அப்படியொரு குளுமை. அமைதி. அவன் அறைக்குப் போனார்கள். என்றாலும் இயல்பாய் அங்கே சொந்த விஷயங்கள் பேச வகையில்லாத சூழல் தெரிந்தது.

அத்தனை பரபரப்பான அவனது வேலையிலும் வீடு வந்து அவன் காட்டும் அமைதி ஆச்சர்யமானது. இதன்பிறகும் வாசிக்க என்று நேரம் ஒதுக்குவது, அவளுக்கு அவனைப் பற்றி இந்த விஷயத்தில் பெருமை உண்டு. யாரும் அவனை சட்டென்று ஆத்திரப் படுத்தி விடமுடியாது. அவனுக்குப் பிடிக்காத வார்த்தை எவரிடம் இருந்தும் வந்தால் சட்டென அவன் முகம் மாறும். சுளிக்க மாட்டான். ஆனால் மௌனமாகி விடுவான். அடுத்து அவன் வேறு விதமாக அந்த உரையாடலை நகர்த்திச் செல்ல என்று பேச ஆரம்பிப்பான். அல்லது அங்கிருந்து மெல்ல நகர்ந்து விடுவான்.

அவனது அப்பா அம்மா கடலூர்ப் பக்கம் சிறிய ஊர். ரொம்ப நல்லவர்கள். பிள்ளையையிட்டு அவர்களுக்குப் பெருமை உண்டு. அப்பா நன்றாகப் புல்லாங்குழல் வாசிப்பார். வீட்டின் பின்புறத் தோட்டத்தில் மாலையானால் துவைக்கும் கல்லில் அமர்ந்து அவர்பாட்டுக்கு மனம்போல எதும் வாசிப்பார். அவனை அவள் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற கவனம் மாமா மாமி இருவருக்குமே உண்டு. அநாவசியமாக அவர்களின், சின்னஞ் சிறுசுகளின் உலகத்தில் அவர்கள் தலையிட மாட்டார்கள். அவர்களுக்குத் திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது. இன்னும் அவள் குழந்தைபெற்றுக் கொள்ளவில்லையே, என்று பழைய காலத்து மாமியார் போல அவளிடம் வந்து முறையிடவோ விசாரிக்கவோ இல்லை. மாமனார் தான் ஒருமுறை அவனிடம் ஜாடையாகக் கேட்டார். அப்போது கல்பனா மாமியார் அருகில் அமர்ந்திருந்தாள். “கல்யாணத்துக்கு இந்தக் காலப் பிள்ளைகள் அவசரம் காட்டுது. ஆனால் பிள்ளை பெத்துக்கணும்னா, கொஞ்சம் போகட்டுமேன்றாங்க” என்றார் மாமனார். லேசான புன்னகையுடன் அவன் எழுந்து அந்த இடத்தைவிட்டு அகன்றதை கவனித்தாள்.

மாமி அவளைத் திரும்பிப் பார்த்தாள். கல்பனா அப்போது பதில் சொல்லவில்லை. என்றாலும் இத்தனை பரபரப்பான நகர வாழ்க்கையில், இருவரும் சம்பாதிக்க என்று வெளியே இறங்குகிற சூழலில் குழந்தையா என்று திகைப்பாய் இருந்தது. ரமணன் நல்ல பையன் தான். எவ்வளவு ஒத்தாசை அவளுக்கு. இந்த ஃப்ளாட் இருவருமாக வாங்கியது. வீடே இருவர் பெயரிலும் பதிவு பெற்றது. இரண்டு பேரும் வேலைக்குப் போவதால் இதெல்லாம் சாத்தியப் படுகிறது. சற்று நிதானமாக குழந்தை என்கிற அடுத்த கட்டத்துக்கு நகரலாம், அதற்கு, குழந்தைக்கு இன்னும் வசதியான ஒரு காலத்தை நாம் தரலாம்... என்பது அவர்களுக்குள் பேசிக்கொள்ளாத யோசனையாய், ஒப்பந்தமாய் இருந்தது போலும். அது உண்மைதானே? தவிரவும், நம்ம அப்பா அம்மா அவர்களைவிட மேலான ஒரு வாழ்வை நமக்கு, அவர்கள் பிள்ளைகளுக்கு யோசித்தார்கள். அதைப்போல நாமும் இப்படி யோசிப்பது என்பது இயல்பே அல்லவா?

ஒருபக்கம் வாழ்வின் தேவைகள், அத்தோடு வயதின், இளமையின் அனுபவங்கள். இரண்டு கரையிலுமாக ஓடுகிறது இல்லறம். அல்லவா?... என்ன நான் ரமணன் போலப் பேச ஆரம்பித்து விட்டேன், என நினைத்துச் சிரித்துக் கொண்டாள். கூடவே கலந்து பழகிவிட்டால் அப்படியெல்லாம் ஆகிவிடுகிறது போலும்...

மணமான இந்த மூன்று வருடங்களில் தாம்பத்திய சுகம் என்று அவன் அவளுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. கேட்க அவள் தயங்கியதும் இல்லை. புதுப் புது உத்திகள்... என அவர்கள் பேசிக் கொள்வதும் உண்டு. அவரவர் உடல். அவரவர் ருசிகள்.. அவற்றை சோதித்து கேட்டு பெற்று பரிமாறிக் கொள்ளுதல். இரவுகளைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். விடுமுறையானால் பகலையும்... நெருக்கமான காலங்களில் அவனை அவளும் அவளை அவனும் மிக இதமாகவும், பரிவுடனும் அங்கிகரித்தார்கள். பள்ளமும் மேடுமான நிலை பகிர்தலில் சமமானது. இந்த ஆசுவாசம்... இல்லறம் என்பது அதுதானே? அவனுக்கு அவள் நிழல். அவளுக்கு அவன் நிழல்... என உணர முடியவேண்டும். அவர்கள் அந்தரங்க நிமிடங்களில் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளா விட்டாலும் கூட அந்த மௌனம் அமைதியால் நிரப்பப் பட்டிருந்தது. நிறைவு கண்டிருந்தது. அவர்களிடையேயான சொற்கள் மௌனம் எனும் பெருங் கடலுள் சங்கமித்து விட்ட வேளை அது.

அவளுக்குத் தான் இரவுப் பணி. அவனுக்குக் கிடையாது. என்றாலும் அவளது இரவுப் பணி அவளையிட்டு அவனை ஒரு எதிர்பார்ப்பில் வைத்திருந்ததை உணர்ந்தாள். உணர்ச்சிகளுக்கும் அலைத்தன்மை இருந்தது. அவள் வீட்டுவிலக்கான தருணங்கள். ம்... என அவனைக் காத்திருக்க வைத்தது. “எனக்கு ஒண்ணும் அவசரம் இல்லை” என்றான் அவன். “நான் காத்திருப்பேன்” என்றான். அவன் முகத்தைப் பார்த்தாள் அவள். “முகத்தைப் பார்த்தால்... காத்திருக்கிறா மாதிரித் தெரியவில்லை..” என்றாள் குறும்புடன். அவன் பதில் சொல்லவில்லை. அவள் நினைத்துக் கொண்டாள். ஒருவேளை... எனக்குத் தான் காத்திருக்க முடியவில்லையோ!

“இல்லறம் என்பது உடலில் ரகசியங்களை, சூட்சுமங்களை அறிவது, என்று சொல்லலாமா?”... என அவளைக் குனிந்து முத்தமிட்டான். “ஆகா, என்னைப் பற்றிய ரகசியங்களைக் கூறுவீர்களா?”... என்று அவள் கேட்டாள். காலம் அப்படித்தான் அவர்களுக்குள் அலங்கரித்துக் கொண்டது. சட்டென நாபி சிலிர்க்க அவள் ஒருக்களித்துச் சரிந்து படுத்தாள். படுக்கையறைக் கண்ணாடி அவளைக் கேலி செய்தாற் போலிருந்தது. கண்ணாடி அறியாத ரகசியங்களா என்ன? இந்தக் கண்ணாடி என்பதே அவனது யோசனை. அவனுக்கு என்னவோ இப்படியெல்லாம் புதுப்புது யோசனைகள் தோன்றிக் கொண்டே யிருக்கின்றன. அவளை இன்னும் இன்னுமாக கௌரவப் படுத்தும் விதமாக. பெண்மை... அது கொண்டாடப் பட வேண்டிய ஒன்று. அதை அவன் அறிந்து வைத்திருந்தான்.

ஆணுறைகளை அவன் விரும்புவது இல்லை. அவளும். அதைப்பற்றி அவன் பேச அவளும், வேண்டாம், என சம்மதித்தாள். அவர்கள் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்ற தகுதியில், எல்லாம் ஒத்துப்போகிற அளவில் அவர்கள் தங்களுக்குள் அமைதியை ஸ்தாபித்துக் கொண்டார்கள். எல்லாம் தன்னைப்போல ஓரொழுங்கில் ஒத்திசைவில் இயங்கியது. அவனை அவளும் அவளை அவனும் புரிந்து கொண்டாற் போலத்தான் இருந்தது. பிரியம் இருந்தது ஒருவர் மேல் ஒருவர். மாற்றுக் கருத்து என்று இல்லையா என்ன? அவர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கத் தயாராய் இருந்தார்கள்.

அடுப்பில் குக்கர்வைத்து விட்டு அவள் குளிக்கப் போனால் சத்தம் பார்த்து அவன் அணைத்தான். சோப் தீர்ந்து போயிருந்தால் அவள் புதிதை எடுத்து உறை பிரித்து வைத்து விட்டு வெளியே வந்தாள். இரவுப்பணி என்று அவளை அழைக்க வாகனம் வரும். அவன் வாசல்வரை வந்து வழியனுப்பி வைப்பான். சில சமயம் இரவு பதினோரு மணியானாலும் அவனை அவள் அலைபேசியில் அழைப்பாள். படுத்திட்டீங்களா? “இல்ல. படிச்சிட்டிருந்தேன்” என்று அவன் பதில் சொல்வதை அவள் எதிர்பார்ப்பாள்.  ”தூக்கம் வரல்லியா?”  என்றுவிட்டு அவன் அவளை மயக்கும் விதமாக எதாவது சொல்வான் என எதிர்பார்ப்பாள். அவனும் சொல்வான். அவளுக்கு அந்நேரம் வேறு அழைப்பு எதுவும் வராதிருக்க வேண்டும். ஆகவே ஒழிந்த சமயம் அவள்தான் அவனை அழைக்க வேண்டும். அவன் அவளை அழைப்பது சரியாக வராது. இருவரும் அதை அறிந்திருந்தார்கள்.

இந்த இல்லறம் இந்த மூன்றாண்டுகள் பழகி விட்டது. பரபரப்பான நாட்களை விலக்கி அவள் ஓய்வான ஒரு வெள்ளிக்கிழமை வீட்டில் சமையலறையின் ஒருபுறமான பூஜைப்படங்களுக்கு விளக்கேற்றினாள். வியாழன் மாலை ஓய்வாய் இருந்தால் சாய்பாபா கோவிலுக்குப் போய்வந்தாள். சில இரவுகளில் சில சமயம் மொட்டை மாடியில் நாற்காலிகளை இழுத்துப் போட்டுக்கொண்டு காற்று வாங்குவார்கள். மிகப் பழைய திரைப்படப் பாடல்களின் ரசிகன் அவன். ஜி. ராமநாதன் விசிறி. ஆனால் கர்நாடக சங்கீதம் தெரியாது. பழைய பாடல் எதாவது போட்டுக்கொண்டு நேரம் போவது தெரியாமல் கேட்டுக் கொண்டிருப்பான். பழைய பாடல்களின் ருசி அவன் அப்பாவிடம் இருந்து வந்திருக்கலாம்.

இந்தப் பரபரப்பும், ஓய்வுக்கான ஏக்கமும், அது கிடைத்த நாளைக் கொண்டாடுவதுமான நியதிகளில் குழந்தை... அதற்கு இடம் இருக்கிறதா? இல்லை, என்றுதான் நினைத்திருந்தாள். மேலும் திகைப்புகளுக்கு இங்கே இடம் இல்லை. அவனும் அவளுமான ஓருலகம். இதில் மூன்றாவது நபராக அவர்களின் பெற்றோர்களுக்கே இடம் இல்லாமலாயிற்று... நவீன காலம் அப்படி. வாழ்க்கை முறையே அப்படி, இரண்டு பேரும் வேலை செய்கிற நிலையில், அப்படி மாறித்தான் போயிற்று.

அவர்கள் வீட்டுக்குப் பக்கத்து வீடு காலியாகி இப்போது அந்த வீட்டுக்கு ஒரு புது தம்பதி குடி வந்தார்கள். ஒரு அவன். ஒரு அவள். கூடவே ஒரு வயது ஒண்ணரை வயதில் ஒரு பெண் குழந்தை. கொழுகொழு சப்பாத்தி உருண்டையாய் இருந்தது குழந்தை. முந்தைய நாள் அவன் அலுவலகம் கிளம்பும்போது பக்கத்து விட்டில் இருந்து அந்தக் குழந்தையின் சிரிப்பு கேட்டது. அம்மா அதனோடு விளையாடுகிறாள் போலிருந்தது. குழந்தையின் தொப்பையை அவளது அம்மா புஸ்க் புஸ்க் என்று அமுக்கிக் கொடுக்க அதற்குப் பொங்கிப் பொங்கிச் சிரிப்பு. புன்னகையுடன் ரமணன் ஸ்கூட்டரை வாசல் பார்க்கத் திருப்பி உதைத்துக் கிளப்பினான். கல்பனாவுக்கு அந்தக் குழந்தை முகத்தை, அது சிரிப்பதைப் பார்ககவேண்டும் போலிருந்தது. பேசாமல் வண்டியில் பின்னே ஏறிக் கொண்டாள்.

அடுத்தநாள் காலையில் அவள் வீட்டுக்கதவு லேசாய்த் திறந்து கிடந்தது. வெளி நடையில் தத்தக்கா பித்தக்கா என்று நடை நடந்து அந்தப் பக்கத்து விட்டுக் குழந்தை வீட்டு வாசலுக்கு வந்து அந்தக் கதவை இன்னுமாய்த் திறந்து சிரிப்புடன் உள்ளே எட்டிப் பார்த்தது. பெண் குழந்தை. கல்பனா வாசல்பக்கம் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்துவிட்டு “உள்ள வாடி” என்று கூப்பிட்டாள். திடீரென்று அவளைக் கண்டதும் ஆச்சர்யக்குறியான குழந்தை ஒரேடியாக வெட்கப்பட்டு கேள்விக்குறியாய் முன் வளைந்து முகத்தை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டது. அவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது. அவள் அந்தக் குழந்தை முகத்தை மனதில் கொண்டு வந்தாள். ஓடிப்போய் அள்ளித் தூக்கி யிருக்கலாமோ என நினைத்துக் கொண்டாள். ரமணன் குளித்த தலையைத் துவட்டிக்கொண்டே வந்தான். “என்ன?” என்று கேட்டான். “குழந்தை வந்து எட்டிப் பார்த்தது...” என்று புன்னகைத்தாள் கல்பனா.

ஒவ்வொரு குழந்தையும் தனி உலகம். அதற்கென்று ஒரு மொழி உண்டு. அதன் வாயில் வந்தது வார்த்தை. அதை நாம் பொருளோடு பொருத்தி அந்த மொழியை உருவாக்குகிறோம். குழந்தையின் மொழி அம்மாவுக்குத்தான் தெரியும். மொழி என்பது இல்லை. குழந்தையின் ஒலிகள். பசிஅழுகை ஒரு மாதிரி. எங்காவது இடித்துக் கொண்ட வலிஅழுகை ஒரு மாதிரி. அம்மாவுக்கும் குழந்தைக்குமான பிரத்யேக மொழி அது. அப்பாவே அம்மாவிடம் கேட்டுதான் குழந்தையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

குழந்தைகள் அம்மாவின் பிரிந்துவந்த பகுதி.

“ஆமாம்” என்றாள் கல்பனா புன்னகையுடன். அவன் நெற்றியின் கேசங்களை அலைக்கழித்தபடி “ஒவ்வொரு குழந்தைக்கும் அம்மாவே தனியே ஒரு செல்லப் பெயர் வைத்து விடுகிறார்கள்... ஜில்லு. டிங்கு. ஜிங்ஸ்... இப்படி” என்றாள். “எங்க அப்பா அம்மாவுக்கு நான் குட்டி” என்று சிரித்தாள். “அதுவும் அப்படியே தன்னியல்பாய் அமைந்து போகிறது. இல்லையா?”  அவன் சிரித்தபடி காபியை வாங்கிக் கொண்டான். அவனை அலுவலகம் அனுப்பிவிட்டு அவள் உறங்கப் போக வேண்டும். என்றாலும் அதிகாலை அந்தக் குழந்தை வந்து எட்டிப் பார்த்தது அத்தனை உற்சாகமாக இருந்தது அவளுக்கு.

அவன் அலுவலகம் கிளம்பும்போது அவளும் வாசல்வரை வந்தாள். பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு அவள்அம்மா வாசலில் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தாள். அவள் இடுப்பில் குழந்தை கிழே இறங்குவேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தது. கல்பனா அவளைப் பார்த்துப் புன்னகை செய்தாள். குழந்தை அவளைப் பார்த்தது. சட்டென அம்மாவைப் பார்த்தது. “நானி” என்று என்னவோ அம்மாவிடம் சொன்னது. “அஸ்ஸோ நானி மாமி இல்லடி. இது” என்று அதன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். பிறகு அவளிடம் திரும்பி “ராணின்னு ஒரு ஆன்ட்டி. நாங்க முன்ன இருந்தோம் இல்லியா அந்த வீட்ல...” என்று கல்பனாவுக்கு விளக்கம் சொன்னாள். “நான் நானி தான். வா...” என்று கையை நீட்டினாள் கல்பனா. குழந்தை மகா வெட்கத்துடன் அந்தப் பக்கம் திரும்ப அம்மா தோளை உரசியது.

“இது பேரென்ன?”

“புஸ்கி” என்றாள் அம்மா.

ரமணன் அலுவலகம் விட்டு வரும்போது பக்கத்து விட்டுக் குழந்தைக்கு என்று பிஸ்கெட் வாங்கி வந்தான். “நானே சொல்லணும்னு இருந்தேன்...” என்றபடி கல்பனா புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்.  காலையில் பக்கத்து வீட்டுக்குப் போனாள் கல்பனா. “வாங்க வாங்க” என்று வரவேற்றாள் அந்தவீட்டுப் பெண். “நானி” என்றது குழந்தை. “வா” என்று அதைக் கூப்பிட்டாள் கல்பனா. குழந்தை அம்மாவைப் பார்த்தது. “போடி” என்றாள் அம்மா. “நானி” என்றது குழந்தை. “ஆமாண்டி” என்றாள் கல்பனா. “பிச்சி” என்றது குழந்தை பிஸ்கெட்டைப் பார்த்து. “உனக்குதான். வா” என்றாள் கல்பனா. “தா” என்று கையை நீட்டியது குழந்தை. “இங்க வா. தர்றேன்.” - “நானி.” - “ஆமாண்டி. வா.” - “பிச்சி. தா.” “இங்க வா. தர்றேன்...” நெருங்கி நெருங்கி தயங்கியது குழந்தை. சற்று குனிந்து அந்தக் குழந்தையை அள்ளிக் கொண்டாள் கல்பனா. கொழகொழ கொழுக்கட்டை.

அதன் உடம்பெல்லாம் ஒரு புது மணம் இருந்தது. பிஸ்கெட்டை வாங்கிக் கொண்டதும் பிரிக்கத் திணறியது அது. “நான் பிரிச்சித் தரேன்” என்றாள் கல்பனா. “தன்னா” என்றது குழந்தை. “இதுக்கு எல்லாமே தன்னாதான்...” என்று அவள் அம்மாவுக்கு அதில் ஒரு பெருமை. கல்பனா அம்மாவின் முகத்தைப் பார்த்தாள். பெண்மையின் பூரிப்பு அது. “கொஞ்சம் பழகிட்டா ஒட்டிண்டுடுவா இவ...” என்றாள் அம்மா. ஆசைதீர குழந்தையின் தொப்பையை அமுக்கித் தந்தாள் கல்பனா. கெக் கெக் என்றுசிரிக்கிறது குழந்தை. புஸ்கி சிரிக்கையில் அந்தச் சிரிப்பு அவள் கண்ணில் கிளம்பி கன்னம் வாய் வயிறு எல்லாவற்றிலும் வழிந்தது.

கல்பனாவுக்கு குழந்தையுடன விளையாட வேண்டும் போலிருந்தது. ரமணனுக்குக் கிளம்ப வேண்டும். “நான் அப்பறமா வரேன்...” என்று மனம் இல்லாமல் கிளம்பினாள். “குங்குமம் எடுத்துக்கோங்க” என்றாள் அம்மா. “ஐயோ என்னை நீ வான்னே, கல்பனான்னே நீங்க கூப்பிடுங்க” என்றபடி குங்குமம் வாங்கிக் கொண்டாள். “நானி” என்றது குழந்தை. “ஆமாண்டி” என்றாள் கல்பனா.

அன்றைக்கு இரவு சற்று சீக்கிரமே அவள் படுக்கைக்குப் போய்விட்டாள், என்பதை அவன் கவனித்தான். அவனுக்கு ஆச்சர்யம். புத்தகத்தை பக்கம் மடித்து வைத்துவிட்டு அவளிடம் வந்தான். “ஹலோ நானி ஆன்ட்டி...” என்றபடி அவள் மேல் சரிந்தான். கணவனின் ஸ்பரிசம் இது. அதைத் தாண்டி அவள் உடம்புசூட்டை விரும்பி மாரில் ஒடுங்கி நிம்மதியாய் உறங்கிக் கிடக்கிற குழந்தையின் ஸ்பரிசம்... ஆ மார்பை உறிஞ்சுகிறது குழந்தை. “என்ன பேச்சையே காணோம்?” என்று கேட்டான் ரமணன். “உங்களுக்குப் பையன் வேணுமா பொண்ணா?” என்று கேட்டாள் கல்பனா.                                                 

•••

Comments

Popular posts from this blog