உத்தம வில்லன் பசிக்குத் தலையணை
உத்தம வில்லன்
•
பசிக்குத் தலையணை
•
எஸ். சங்கரநாராயணன்
கமல் ஹாசனின் உத்தம வில்லன் பார்த்தேன். இதற்கு முன் பார்த்த படம்
மணி ரத்தினத்தின் ‘ஓ காதல் கண்மணி.‘ ரெண்டு பேருமே புதுசாய்ச் செய்ய வேகம் கொண்டவர்களாய்,
அதனாலேயே கவனம் பெறுகிறார்கள். ரெண்டு படமுமே எதிர்பார்த்த அளவு, அதாவது அவர்கள் இருவரும்
எதிர்பார்த்த அளவு கொள்வார் இலலாமல் ஆனவர்கள். ஒருவகையில், ரசிகர்கள் எதிர்பார்த்த
அளவு அவர்கள் சொல்லவில்லை, என்பதும் இதன் பொருள் ஆகிறது.
ஓ காதல் கண்மணி – பற்றி ஏற்கனவே எழுதியாகி விட்டது.
ரெட்டைக்குதிரை சவாரி செய்ய முயற்சி செய்ய ஆசைப்பட்டிருக்கிறார்
கமல். தப்பு என்ன இதில்?
எத்தனை ரெட்டைதான் கதை இடங் கொடுக்கும் தெரிய வேணாமா? மூச்சுத்
திணறுகிறது. சரித்திர சூழல் ஒண்ணு, நிகழ்காலத்தில் ஒரு பெரும் நடிகனின் கடைசித் தருணம்,
அதன் வாழ்வில் நெருக்கடிகள்… என ரெண்டாவது கதை… என்றால் அத்தோடு விட்டுறணும். தமிழ்
தெலுங்கு மலையாளம்… என பாத்திரங்களைப் போட்டு வதக்கி சுவை சேர்க்கலாம் என நினைத்தார்
பாருங்க. புரியாமை மற்றும் ஒட்டாமலேயே நகர்கிறது கதை.
சரித்திரக் கதை கதாநாயகனைச் சுற்றி நகர மறுக்கிறது. யாரோ ஒரு தளபதி
சூழ்ச்சிக்கார அண்ணாச்சி ராஜாவாகிறான்.. அவனுக்கு மரண பயம். இவன், ம்ருத்யுஞ்செயன்,
கதாநாயகன். மரணத்தை வென்றதாக நம்பப்படுகிறான். இவனிடம் சாகா வரத்தைப் பெற ராஜா முயல்கிறான்..
என்று சொல்ல வர, ராஜா, அவருக்கு சிறைப்பிடிக்கப் பட்ட ராணி மேல் ஆசை… என அந்தக் கதையே
பெரிசாய் வருகிறது.
மரண பயம் என்று ஒற்றைச் சொல் தவிர, படத்தில் அவனது, ராஜாவின் பாத்திரத்தில்
அது பிரஸ்தாபிக்கப் படவே இல்லை. வில் ஏந்திப் போர் செய்கிறவன் வில்லன், என ம்ருத்யுஞ்செயன்
பற்றி விவரணை. வில்லுக்கும் அவனுக்கும் ஸ்னானப் பிராப்தியே இல்லை. திடீரென்று வில்லுப்பாட்டு
என சுப்பு ஆறுமுகத்தை முதலில் உட்கார்த்தி வைக்கிறார்கள். அப்புறம் அவரைப் பயன்படுத்தவேயில்லை.
இரண்யவதம் கதையைத் திடீரென கதையில் செருகுகிறார்கள். கதை உடனே கேரளக் கூத்துக் கலைக்குப்
போகிறது. கதையில் ரெட்டை அம்சங்கள் தாண்டி, இப்படி மூணு நாலு என்று ஒட்டாத அம்சங்களே
நிறையச் சேர்ந்து கொண்டே போகிறது.
சரித்திரப் புனைவில் நகைச்சுவை என நினைத்த காரியம் சித்தி பெறவே இல்லை. அதனால் நடிகனின் நிகழ்கால மரணத்தையும் சாகா வரம் பெற்ற பாத்திரமாக அவனது திரைக் கதையையும் மாற்றி மாற்றிச் சொல்ல நினைக்கையில் எடுபடாமல் ஆகிறது.
கதை நாலு மருமகள் ஆளுக்காள் உப்பு போட்டு சமைத்த மாதிரி ஆகிப் போகிறது.
முதல் மனைவியை நடிகன் எப்பவோ பிரிந்து, சினிமா இயக்குநரின் பெண்ணை
மணந்து கொள்கிறான். இவனுக்கே பதின் வயதில் குழந்தை… என பாத்திர வார்ப்பு ஆகிப் போனதில்
இவனுக்கு, மூளையில் கட்டி, என வைத்தியம் பார்க்கும்
மருத்துவச்சியையே கள்ளக் காதலியாக வைத்துக் கொள்ளலாம், கதையில் கிளுகிளுப்பு காணும்,
என எதிர்பார்த்திருக்கிறார்கள். கதையே இதனால் ஆட்டங் காணும், என யோசிக்காமல். அவளும்
கூடவே இருக்கிறாள். டாக்டர்கள் வேலையே செய்ய மாட்டார்கள், என்கிற அவப் பெயர் தான் மிச்சம்.
அவனுக்கு மூளையில் கட்டி என்றவுடன் அவன் என்னவெல்லாம் ஒழுங்கற்று
விட்டிருந்தானோ, எல்லாவற்றையும் புறந்தள்ளி அவன்மீது இரக்கப் பட்டு விடுகிறார்கள்,
என்பது எப்படி சாத்தியம் ஆகும். மூணாவது கள்ளக் காதலையும் நீட்டித்துக் கொண்டு?
பாலசந்தர் வேறு இந்தப் படத்துக்குள் இயக்குனராக வருகிறார். இயக்குநர் மணிவண்ணன்
வசனம் பேசுகையில் சத்யராஜ் போலவே காணும். சத்யராஜுக்கு வசன உச்சரிப்புகளைப் பழக்கியவர்
மணிவண்ணன் என்ற அளவில். அதேபோல இந்தப் படத்தில் பாலசந்தர் பேசுகையில் நாகேஷ் நினைவு வருகிறது!
கே. பாலசந்தர் கே. விஸ்வநாத் பாத்திரங்களை
நன்றிக் கடன் தீர்க்க என கமல் சேர்த்திருக்கிறார். கடன் சுமை அதிகரித்து விடுகிறது.
திரைப்படப் படப்பிடிப்பில் காட்சி முடிந்ததும், இயக்குநர் பாலசந்தர் சூப்பர், சூப்பர்… என மாத்திரம்
சொல்லிக் கொண்டே யிருக்கிறார். டைரக்டர் நாற்காலியில் அவர் உட்கார வைக்கப் பட்டவர். அவ்வளவே அவர் பாத்திரச் சித்தரிப்பு. விரல் சூப்பர்.
யோசிக்க யோசிக்க குழப்பமாய்த் தான் இருக்கிறது. பசிக் கனவில் தலையணையைத்
தின்றிருக்கிறார்கள்.
என்றாலும், புதிய மிகப்புதிய களத்தை நோக்கி கமல் நகர முயற்சி செய்திருக்கிறார்.
வெற்றி பெறாவிட்டால் என்ன?
வருத்தமாய் இருக்கிறது. Better luck next time.
*
storysankar@gmail.com
Comments
Post a Comment