சிறுகதை - லா ரி

சிறுகதை


லாரி
எஸ். சங்கரநாராயணன்

துணிகள் என்று எடுத்துக் கொள்ள அதிகம் இல்லை. ஒரு கதர் வேட்டி, அரைக்கை ஜிப்பா. பொடி மட்டை, அது இல்லாமல் முடியாது. எடுத்துக்கொண்டார். பரபரவென்று பட்டையாய்த் திருநீறு பூசினார். கிளம்பிவிட்டார்.

வெளிய ரொம்ப குளிராக் கெடந்தது. செருப்பில்லாத கால்களில் பருக்கைக் கற்கள் குத்தின. இங்கேயிருந்தது கூத்தப்பாலம் மெய்ன் ரோடு வரை செண்மண் ரோடுதான். ஒரு சின்ன மழைக்கும் நாறிப்போகும். மனுசன் நட்க்க ஏலாது.

மணி ஒண்ணு இருக்குமா? பன்னிரண்டு எப்பிடியும் தாண்டிருக்கும். தெரு நீண்டு வெறிச்சுக் கிடந்தது. சக்கரக் கோனார் தொழுவத்தில் சிவத்த நாய் குளிருக்காக எருமை மாட்டோடு ஓட்டிப் படுத்திருந்தது. உண்மையில் குளிர் அதிகம்தான். காலை எட்டிப் போட்டு நடக்கையில் வேட்டி விலகி, முன்வந்த காலில் குளிர் ஆவேசமாய்ப் பாய்ந்தது. காதிலிருந்து பீடியெடுத்துப் பற்ற வைத்தவாறே ‘ஓஹ்’ என்றபடி வானத்தைப் பார்த்தார். உப்புக் கட்டிய நார்த்தங்காய் மேகத் துணுக்குகள். குலுக்கி வீசப்பட்ட நட்சத்திரச் சோழிகள்... காற்றின் ஜில்லிப்பு தாங்காமல் முண்டாசை அவசரமாய்க் கீழே இறக்கி விட்டுக் காதுகளை பத்திரப்படுத்தினார்.

லாரி ஓடிக் கொண்டிருந்தது. ‘ஒரு பாட்டு பாடு தருமு’ என்றான் அவன். அவனுக்கு போரடித்தது. ரொம்பத் தொலவெட்டுலேந்து அவர்கள் வருகிறார்கள். ஒருவன் களைப்பாய் உணர்கையில் அடுத்தவன் வண்டியை ஓட்ட சார்ஜ் எடுத்துக் கொள்ளுவான். இவன் பழனி. அவன் தருமன்.

தருமு பாடினான். அவனும் அலுத்திருந்தான். ஆயினும் பாடினான். அதிகச் சத்தமில்லாமல் லாரிக்குச் சற்று உரக்கப் பாடினான். சுமாரான, ஓரளவு தூக்கக் குரல். மெதுவாய்ப் பாடினான். பாடியபடியே தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொள்ள முன்னும் பின்னும் ஆடினான். ஆடியபடியே முதலுதவிப் பெட்டியைத் திறந்தான். பாட்டிலில் தமிழக அரசு முத்திரையிட்டு ஆசி வழங்கியது. திறந்து அப்படியே வாயில் ஊற்றிக் கொண்டான். வாயைத் துடைத்துக் கொண்டபடியே ‘ஹ’ என்றான் ‘கூட தனலெச்சுமி இருந்தா... ஹ’ என்றான்.

‘தனலெச்சுமி இப்ப எவனாவது குப்பனையோ சுப்பனையோ சேத்துக்கிட்டு...’

‘ஹ’ என்றான் தருமு. ‘வா - வா - வசந்தமே... ஸூகந்தரும்... ஹ’

‘பொல்லாதவன் பாத்தியா மாப்ள.’

முள்ளுக் காட்டுப் பக்கம் பன்னியொண்ணு குட்டி போட்டிருக்கும் போல. தாண்டிப் போகையில் எச்சரிக்கை அடைஎது ‘ர்ர்ர்’ என்றது. ஒதுங்கிப் போனார் அவர். லேசாய் இப்போது முன்னிலும் தீவிரமாய் இருட்டு கவியத் துவங்கியது. நட்சத்திரங்களைச் சுற்றி வளைத்து மேகங்கள். கீழைக்காற்றின் வேகத்தில் குளிர் உடம்பை எறும்பாய்க் கடித்தது. கை கால்களின் மயிர்கால்கள் விரைத்துக் கொண்டு குத்திட்டு நின்றன. ரொம்ப நாளாய் ஆடிக் கொண்டிருந்த இடது கடவாய்ப் பல் கூச்சமெடுத்து வலித்தது. வாத ஒடம்பு. மூட்டுக்கள் பிடித்துக் கொள்ளும்... அது வேறு இருக்கிறது இன்னும். கைகளை விறுவிறுவென்று தேய்த்து சூடேற்றிக் கொண்டார் இன்னொரு பீடிக்குத் தேடினார். காதில், சட்டைப் பையில், இடுப்பில் தேடினார். கிடைக்கவில்லை. குளிர் இன்று அதிகம்தான். மழை வேறு வரும்போல... ஆனால் எப்படியும் போயாவணுமே.

இதோடு மெய்ன் ரோடு வரை நல்ல மேடு. சரியான ஏத்தம். சைக்கிளிலேயே எறங்கித் தாம் போவாங்க. சரளை பூமி. வயல்களை வளைத்துக் கொண்டு சாரைப் பாம்பு போல நீள ஓட்டம் ஓடும். வெளிச்சமேயில்லை. பள்ளம் மேடு தெரியாமல் தட்டுத் தடுமாறி நடந்தார். தவளை ஒன்று ‘கக் கக் கக்’ என்றது. தவளைகள் வெற்றிலை போடுவதைப் போல ஒலிகளைக் குதப்பி அனுப்புகின்றன. எப்பா என்ன குளிர். நல்ல மேடு. அவருக்கு மூச்சு முட்டியது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டார். நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது. எங்காவது உட்கார்ந்து விட்டுப் போனால் தேவலை. கால்கள் மயங்கி சண்டித்தனத்துடன் உடம்பைத் தள்ளிற்று. வயசுன்னாப்புல கொஞ்சமா? இந்த வயசுல அவனவன் தொங்கிப் போறான். பல்லு கட்டிக்குவான். கண்ணாடி கொண்டா, தடியக் கொண்டான்னிட்டுத் தேடுவான்...

நிமிர்ந்து பார்த்தார். உயரத்தில் கூப்பிடு தூரத்தில் மெய்ன் ரோடு தெரிந்தது. விளக்கு வெளிச்சம் பகலைப் போல. அவர் எங்கேயும் உட்காராமல் தொடர்ந்து ஏறினார். கால்கள் மருண்டன, கிடுகிடுவென்று ஆடின. உள்ளங்கையால் முட்டிகளை அழுத்தியபடியே நடந்தார்.

‘பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?’

‘என்னாங்கடா இந்த குளுரு குளுருது’ என்றபடியே பழனி மப்ளரை காதுக்குக் கீழே இழுத்து விட்டுக்கொண்டான். ‘பூரா தீத்துட்டியா?’

‘இல்ல இந்தா.’

‘தமிழ்நாடு அவ்ள கிக் இல்லாடா... எங்க்கூர்ல காலைல நாலு மணி நாலரை மணிக்குப் போவம்டா. பனையேறி அப்பவே வடிச்சிக் குடுப்பாம் பாரு, அதான்டா கிக்கு. ஒரு நாப் பாரு...’’

‘பாத்து ஓட்ரா டேய்.’

நரியொண்ணு குறுக்கே புகுந்து ஓட்டமெடுத்தது. பிரம்ம சமுத்திரம், கோழிஞ்சேரி ரூட்டில் கீரிகள் ஓடும் இப்படி, பூந்துறை, கோதையூர் பகுதிகளில் முயல்கள் துள்ளித்திரியும். மனுஷபயம் இல்லாமல் ராத்திரி ஜோராய் ஓடிச்சாடும்.

‘ஒரு நா என்னடா?’

‘என்னது?’

‘என்னமோ சொல்ல வந்தியே?’

மேடு ஏறுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. தொடைகளில் சரியான வலி. ஓதம் வேறு. கனமான கனம். அவருக்கு மூச்சுத் திணறிற்று. ‘ஆஹ்’ என்று காறித் துப்பினார். வந்திட்டது வந்திட்டது என்று சமாதானப்படுத்திக் கொண்டே ஏறினார். சரளைக் கற்கள். காலை குத்திக் கிழித்தன. எங்கெல்லாமோ வலி. குளிரான குளிர். காற்றில் சிறு தூறல்கள் சிதறி அவர்மேல் மோதிய போது சிலிர்த்தது. பெரிய சிட்டிகையாய் விரல் கொள்ள எடுத்து மூக்கில் அழுத்தினார். நல்ல காரம். சுறுசுறு என்று ஒரு பாம்பு கிளம்பி மூளையில் கொத்தியது. கண்ணீர் தெறிக்க பெரிய தும்மலென்று வெடித்தது. அப்படியே பொடியைப் பல்லிலும் இழுவிக் கொண்டார்.

தெருவோடு கட்டை வண்டியொன்று ஆடியாடிப் போயிற்று. மாடுகள் சாவகாசமாய் நடந்தன. வேட்டியையே போர்த்திக் கொண்டு வண்டிக்காரன்  தூங்கிக் கொண்டே போனான். வண்டிக்குக் கீழே சிறு வெளிச்சத்துடன் அரிக்கேன் விளக்கு ஆடியாடிப் போனது.

‘வண்டீய் வண்டீய்’ என்று கத்தினார். அவன் எழுத்து கொள்ளவில்லை. இவரால் ஓடிப்போய் எட்டிப் பிடிக்க முடியவில்லை. நெஞ்சு வலித்தது. நடந்து வந்த அசதி. களைப்பு. அகாலத்தில் வந்த தந்தியும் அதனாலான விழிப்பும், நடையும்... அதைப்பத்தி இல்ல. வண்டி கெடச்சாக் கூட கமலக்குடி வரப் போயிட்டா லாரி எதுனாச்சும் ஆம்புடும். போயிச் சேந்திரலாம்.

தெற்கே திரும்பிப் பார்த்தார். வண்டியெதுவுமில்லை. போய்ப் புளிய மரத்தடியில் மூணு நிமிஷம் தொடர்ச்சியாய் ஒண்ணுக்கிருந்து விட்டு வந்து, தெருவோரம் குத்திட்டு உட்கார்ந்தார். காத்திருந்தார்.

‘மாயாண்டின்னு ஒத்தன். எங்கூட அப்ப ஏழு எட்டு கிளாஸூ வர கூடப் படிச்சான். அப்பால அவன் போலீசு வேலைக்கிப் போட்டுப் போய்ச் சேர்ந்தான்னு வெய்யி.’

‘ஏ நீ தனலெச்சுமியோட தங்கச்சியப் பாத்திருக்கியா?’

‘கதயக் கேளுடா நீயி. அப்பல்லா எனக்கும் மாயாண்டிக்குந்தா பந்தயம். முளுசா ஒரு படி, அப்பிடியே குடிக்கோணும்...’

‘ஏம் முடியாதா?’

‘ஒன்னால முடியுமா?’

‘ஹ’ என்றான் தருமு.

‘சரக்குன்னா இப்ப ஊத்திக்கினோமே இந்தக் கருமாந்தரம் இல்லடா, சுத்தமா அப்பவே மரத்துலந்து எறக்கினது.’

‘ஆனந்தா எங் கண்ணையே ஒங்கிட்ட ஒப்படைக்கிறேன்.’

‘சே. நடிகர் திலகம்னா சும்மாவா? இப்பப் போட்டாலும் இந்தப் படம் வசூல் அள்ளுது...’

‘கவினிச்சியா பழனி. கியரு கிளைட்சு சரியாப் புடிக்க மாட்டது. வண்டி எம்புது. பாத்துப் போ. ஊருக்குப் போயி களட்டிப் பாத்திறலாம். மொதலாளியப் பாக்கப் போறன்னியே, பாத்தியா? அட்வான்சு குடுத்தானா?’

அவர் ரெண்டு கையாலும் வண்டியை மறித்து நிறுத்தினார். ஹெட்லைட்டின் அதிக வெளிச்சம் கண்ணில் குத்தியது. தலையைக் குனிந்தபடியே வெளிச்ச நதியில் குளித்துக் கூசினார்.

வண்டி பெருங் குலுக்கலுடன் நின்றது. பின் பகுதிகள் அதிர்ந்து இரும்புச் சங்கிலிகள் கிங் க்ளாங் என மோதிக் கொண்டன.

‘பாட்டையா, வூட்ல சொல்லிட்டு வந்திட்டியா?’

‘தம்பி ஒரு அவசரய்யா, என்னிய வேம்படியில எறக்கி வுட்ருங்க, புண்ணியமாப் போவும்.’

‘பெரியவரு பஸ்ஸூ காச மிச்சம் பிடிக்கிறாரு டோய்.’’

‘அதில்லய்யா, பஸ்ஸூ காச நீதா வாங்கிக்க இப்பென்ன போச்சி. ரொம்ப அவசரந் தம்பி.’

‘என்னடா?’

‘ஓ இஷ்டம்’.

‘பெரியவரே, எது வரப் போறீங்க?’

‘வேம்படி! வேம்படி!... என்னப் பெத்தார ஏறிக் கிடட்டுமா?’

‘ஏறுங்க, ஜல்தி.’


இப்போ அப்போன்னு பாய்ச்சல் காட்டிட்டிருந்த மழை வந்தே விட்டது. சடசடவென்று சின்னதும் பெரிதுமாய் மழைத் தூறல்கள் அவர்மேல் சிதறின. அவர் குளிரில் நடுங்கினார். ஓதம், ஏற முடியவில்லை. கதவில் ஒரு கையும் பிடியில் ஒரு கையுமாய் ஏறமுனைந்தார். குளிர் உடம்பை ஆட்டியது. ‘எய்யா ஒரு கை குடு சாமீ ஈ...ஈ,‘ என்று இழுத்தார். தருமு அப்படியே அவரைத் தோளோடு தூக்கி உள்ளே வாங்கிக் கொண்டான். அதற்குள் ரொம்ப நனைந்து விட்டிருந்தார். ‘யாத்தாடி என்னமாத்தாங் குளுருது.’

‘இந்த மாறி ராத்திரில இப்படித் தனியா மாட்டிக்கிறாதே பெருசு, செத்துப் போவே’ என்றான் பழனி. ‘உங்கூரு எது?’

‘சாமிந்திக்கல்லு. மெய்னு ரோட்டுலேந்து உள்ற புகுந்து போவோணும்....ம்...ம்.’

கிழவனுக்குப் பற்கள் கிட்டிக்கொண்டன. நேரே உட்கார முடியவில்லை. குத்திட்டு உட்கார்ந்து கொண்டு பைக்குள்ளிருந்து வேறு வேட்டி எடுத்துப் போத்திக் கொண்டான்.

சீரில்லாத மழை. மழைத்துளிகள் சின்னதும் பெரிசுமாய் விழுந்தன. சில அப்படியே பனிக்கல்லாய் லாரியின் கண்ணாடியில் உடைந்து சிதறித் தெறித்தன. ஹெட்லைட் வெளிச்சத்தில் மழை விழுவது தெரிந்தது. ஒருச்சாய்ந்து விழுந்த மழையைக் காற்று வேறு திசைக்கு விரட்டிற்று. காற்றடிக்குந் தோறும் கிழவன் ‘ஊ.... ஊ’ வென்று சாமியாடினான்.

‘பீடி இருக்குதா தம்பி?’

‘குட்ரா, பாவம் நடுங்கறாரு.’

தருமு தனது லைட்டரால் அவரது பீடியைப் பற்ற வைத்தான். சின்ன ஒளியில் பெரியவரின் மூக்கு நுனி சிவப்பாய்ப் பளபளத்தது. வெள்ளி முட்களெனத் தாடியும், காலம் உழுத நிலமாய்ச் சில சுருக்கங்களும் தெரிந்தன.

‘திடீர்னு யாரோ கையக் காட்றாங்கன்ன ஒடனே நாங்கூட தனலெச்சுமி தானாக்கும் னிட்டில்ல பாத்தேன்...’

‘அவ இங்க எங்கடா வரப்போறா.... இந்நேரம் அவ எவங்கூடப் படுத்துக் கெடக்காளோ?’

தருமு கதவின் மேல் தார்ப்பாய் மறைத்து மூடினான். கதவின் ஓரத்தில் எறும்புவரிசையாய் நீர் முத்துக்கள். உள்ளே இறுக்கமாய் இருந்தது. அடைக்கப்பட்ட காற்றின் லேசான கதகதப்பு. பீடிப் புகை உள்ளேயே சுற்றி வந்தது.

‘போன வாரம் கடலூர் பாண்டி ரூட்டு நமக்கு.’

‘அப்பதா அவளப் பாத்தாப்ல...’

‘தனலெச்சுமியையா?’

‘அவ தங்கச்சிய-’

‘அவளே கூட்டி வந்தாளா?’

‘ஆமா - நல்ல கலரு. எம்மா என்ன ஒடம்புன்றே?’

‘அப்பிடியா?’ என்று பழனி அவனைப் பார்க்கத் திரும்பினான்.

‘ரோட்டப் பாத்து ஓட்டு தம்பி.’

‘பயப்டாத பெரிசு. ஒண்ணும் ஆயிறாது.’

‘இவ பேரென்ன?’

‘செல்லம்மா... ரோசாப்பூ ரவிக்கைக்காரி...’

‘எங்கூர்ல திருளாவுக்கு டிராமா ஆக்டிங் குடுக்க ஒத்தி வருவா பாரு. லலிதகுமாரின்னு பேரு. பிரசிடெண்டு வருஷா வருஷம் எப்பிடியும் அவளக் கூட்டியாந்திருவாப்ல. ஙொம்மாள, வசனமா பேசுவாளுக? என்ன பெரியவரே சிரிக்கிறீங்க?’

இப்போது குளிர் குறைந்திருந்தது. மழை வேகம் அடங்கியிருந்தது. மழைத் துளிகள் உத்தேசமில்லாமல் சிதறின. பழனி வைப்பரை நிறுத்தி விட்டான்.

‘என்னடா போதையே இல்ல? வேற பாட்டிலு கெடக்குதா?’

-ம் ....ம், ஒடைப்பமா?’

‘வேணாந் தம்பி - ’

‘கம்னிரு பெருசு. எட்ரா டேய்! வந்தநாள் முதல்’ இந்த நாள் வரை... அந்தப் படம் பாத்தியாடா?’

‘என்ன படம்?’

‘பாலும் பழமும்’

‘இல்லடா வேற ஏதோ படம்...’

‘அதேதாண்டா. ‘பா’வன்னாப் படம் பூராவுமே சிவாஜி ஆக்டிங் கொன்னுருவாண்டா...’

‘எங்க இருக்கு?’

‘தோ வரேன்’ என்று பழனி வண்டியை அப்படியே விட்டு விட்டு எழுந்தான். ‘பாத்து பாத்து’ என்று பெரியவர் அலறினார். வண்டி நிதானமில்லாமல் குலுங்கிக் குலுங்கி ஓடியது.

‘நீயேம் பெரிசு இப்பிடிப் பயந்து சாவறே? நாங்கதா இளந்தாரி. நாங்கதா சாவ பயப்படணும். நீ எல்லா அனுபவிச்சிருப்பியே?’

‘வேணுமா பெருசு?’

‘வேணா, வேணா, வண்டி ஓட்டும்போது குடிக்காதீங்கய்யா.’

‘ஹ’ என்றபடி தருமு வாயைத் துடைத்துக்கொண்டான். ‘பயமா இருக்குதா? இந்தா நீயும் போடு. ஷூம்மா வாங்கிக்க. பயமெல்லாம் பறந்துரும்... கண்ணத் தொறக்கணும் ஷாமீ...’

‘வண்டீய் பாத்து பாத்து’ என்று பெரியவர் கத்தினார். மாட்டு வண்டி மீது மோதிவிடாமல் சடாரென்று பழனி லாரியை ஒடித்தான். லாரி குலுக்கலும் துள்ளலுமாய் ஏராளமாய்த் திரும்பிக் கடந்தபோது மாடுகள் மிரண்டு ஓரத்துக்குப் பாய்ந்தன.

‘பயந்திட்டியா பெருசு.’

‘கண்ணுகளா எப்பவுமே வண்டி யோட்டும்போது நிதானம் வேணும் மொதல்ல, கேட்டிங்களா?’

‘-சொல்லுங்க!’

‘இப்பக் கேலியாப் படுது... சரிப்பா நாங் கெழவந்தா, பயந்தவந்தா... போங்க.’

மழை இப்போது விட்டிருந்தது. குளிரின் லேசான ஜில்லிப்பு இன்னும் மிச்சமிருந்தது. பழனி திரும்பி அவரைப் பார்த்துச் சிரித்தான். பின் வேண்டுமென்றே ஸ்டீயரிங்கை விட்டுவிட்டு ‘வணக்கம் பெரியவரே’ என்று கும்பிட்டான்.

‘கௌதம புத்தரு-’

‘வாழ்க!’

‘பெரிசு!’

‘வாழ்க!’

‘தனலெச்சுமி-’

‘வாழ்க!’

‘கிண்டல் பண்ணாதீங்க பையங்களா?’

‘ஒனக்கு எத்தன பொஞ்சாதி பெரீவரே?’

-த்ச்.’

‘சரி விட்டுர்றா - நேத்து சாயந்தரம் நாலு மணிக்கு வண்டில ஏறினது பெரியவரே, இன்னிக்கு மதியம் ‘கூத்தப்பாலம்’ போயித்தான் ஹால்ட்டு. ஒடம்பு என்னா வலி வலிக்குது தெரியுமா ஒனக்கு? தண்ணி போட்டு கொஞ்சத்துக்குத் தாவல. கூட ஆளுக வந்தா கலாட்டா பண்ணிட்டே பொளுது தெரியாமல் போய்ச் சேந்திர்லாம். முன்னால வண்டி வந்தா விர்ர்ருனு அதத் தாண்டறதுல ஒரு கிக்கு. எப்படியும் கீழ எறங்கறவரிக்கும் நேரம் போவணும்ல?’

‘டீ சாப்பிடுவோமாடா?’ என்றான் தருமு, சாலை ஓரம் ஒரு டீக்கடையைப் பார்த்துவிட்டு.

லாரியை நிறுத்திவிட்டு இறங்கினார்கள். பன், பொரை, பட்டர் பிஸ்கெட், பாட்டில்கள் அடுக்கிய சின்னக்கடை. பெட்ரோமாக்ஸ் பெரிய சீறலாய்ச் சீறிக்கொண்டு இருந்தது. இரண்டொரு பெஞ்சுகளும் மேஜையில் பழைய பேப்பரும், வெளியே கிடந்தன. பீடி, சிகரெட் பாக்கெட்டுகள் கல்லாவில் அடுக்கியிருக்க, நீளக் கயிறில் எல்லா பாஷையிலும் கெட்ட புஸ்தகங்கள் தொங்கின. உள்ளே வெறுந்தரையில் துணி விரித்து, ஒரு பெண்ணும் அவளது குழந்தையும் உடம்பு முழுக்கப் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

பெரியவருக்கு நல்ல பசி போலிருக்கிறது. பன்னைப் பிய்த்துப் பிய்த்து டீயில் முக்கித் தின்றார். டீ ருசியாய் இருந்ததென்று சொல்ல முடியாது. ஆனால் சூடாய் குளிருக்கு இதமாய் இருந்தது.

‘பெரிசு காசு வெச்சிருக்கியா?’

‘நாங் குடுத்திர்றேய்யா, நீங்க போங்க.’

சுற்றிலும் இருள் கவிந்து கிடந்தது. தூரம் வரை வயல்கள் கருமையில் முங்கிக் கிடந்தன. வயலைப் பிளந்து கொண்டு தூரத்தில் ரயிலொன்று சத்தமில்லாமல் ஓடியது. பெட்டிகளில் சாத்தப்பட்ட ஜன்னல்கள் தவிர தொடர் வெளிச்சப் புள்ளிகள் அழகாய் ஓடின.

‘பீடி வாங்கிக்கிட்டீங்களா?’

‘ஆச்சிய்யா போலாம்,:

‘மள பிடிச்சிக் களட்டப் போவுதுன்னு பார்த்தேன். புஸ்ஸூனு போச்சே?’

‘அதாங் காத்து கலச்சிட்டதே? கீழக்காத்து கெடுக்கும், மேலக்காத்து கொடுக்கும்னு எங்கூர்ல வசனம்.’

‘வா’ என்று தருமு அவரை மீண்டும் தூக்கிவிட்டான். ‘ஏங் கெடந்து அவஸ்தைப் படுற. ஆபரேசன் பண்ணிக்கிறதுதான?’

‘எங்க - கமலக்குடி போவோணும். அங்க ஒரு தறுதலப் பய இருக்காம் பாரு. பொளுதன்னிக்கும் நர்சுங்களக் கேலியடிக்கவே அவனுக்கு நேரஞ் சரியா வருது. ஒண்ணெடக்க ஒண்ணு பண்ணி வுட்டுட்டான்னா...’

அதோ ரயில்வே கிராசிங்கோட பதினஞ்சி நிமிஷம் வேம்படி. கேட்டைத் தாண்டும்போது வண்டி துள்ளிக் குலுங்கியதில், பெரியவர் முன்னே குதித்துப் பிடித்துக் கொண்டார். மேலே சாமி படத்து மாலைகள் ஆடின.

‘எய்யா, பள்ளம் மேடு பாத்துப் போங்க. சைடு திரும்பினாப் பையப் பதறாமக் கோளாறாத் திரும்போணும். நிதானமாப் போணுண்டா கண்ணுகளா. சொன்னாக் கேளுங்க.’

ஹாரனடித்தபடியே ஒரு பஸ் சைடு கேட்டது. ‘குடுக்காதே, குடுக்காதே’ என்றான் பழனி. இப்போது தருமு வண்டியை ஓட்டி வந்தான். கேபினுக்குப் பின்புறக் கதவு வழியே பழனி பார்த்தான். டூரிஸ்டு பஸ் போலிருக்கிறது. ஒரே அழுக்கு, டீசலும் எண்ணெயுமாய் நாற்றம். ஒரேடியாய்ப் புழுதி கிளப்பிக் கொண்டு பிசாசு மாதிரி வந்து கொண்டிருந்தது.

‘விடாத மாப்ளா. ரைட்ல மறிச்சே நீ போ.... என்ன செய்யிறான்னு பாப்பம்.’

‘என்னப் பெத்தார, நா சொல்றதக் கேளுங்க’

முன்னே போகப் பாய்ந்து பாய்ந்து டூரிஸ்ட் பஸ் தடுமாறிற்று. பழனி பெரிசாய்ச் சிரித்தான். ‘ஹ’ என்றான் தருமு. ‘இவன் என்னடா, இவங்கப்பன்னாலும் வரட்டும். நம்மட்ட முடியாதுன்றேன்.’

‘அச்சம் என்பது மடமையடா.’

‘பிள்ளைங்களா?’

‘பெரிசு, ஒனக்கு வயசாச்சு, நீ கம்னிரு. சீக்கிரம் வேம்படி போணுமா வேணாமா?’

‘வேணாம்-’

‘வேணாமா?’ என்று தருமு திரும்பிப் பார்த்தான்.

‘பாத்து - ரோட்டப் பாத்து ஓட்டுய்யா.’

அந்த விநாடி நேர சந்தர்ப்பத்தில் டூரிஸ்டு பஸ் ஹாரனடித்துக் கொண்டே தெலுங்கில் திட்டிக்கொண்டே கடந்து போயிற்று.

‘சே விட்டுட்டமேடா.’

‘வேணாந் தம்பி வெளையாட்டு. எனக்கு உசிர் போயி உசிர் வருது. நீங்கல்லா இளந்தாரிக, நல்லா வாழ வேண்டிய வயசு.’

‘புத்தர்!’

‘வாழ்க-’

‘கௌதம் புத்தர்’ என்றபடியே குனிந்த பழனி பதறிப் போனான். ‘என்னய்யா அளுவறீங்க?’

‘இந்தத் தந்தியப் படி தம்பி...’

‘டே லைட்டப் போடுறா...’

‘செல்வகுமார் லாரி விபத்து’

உடன் புறப்படவும் - கலா’

‘செல்வக்குமாரா?’

‘எம் மவன், லாரி டிரைவர்...’

‘ஐயய்ய எப்ப?’ என்றான் தருமு, வேகத்தைக் குறைத்தபடியே.

‘தெரிலயே தெரிலயே’ என்றார் கிழவர். அழுதார். ‘என்ன ஆச்சி? எப்பிடி இருக்கான்? எங்க விபத்து? எவ்ள அடி? எதுவுமே தெரிலயே... கை கால்தாம் போச்சோ. இல்ல ஆளே...’ என்று கிழவர் அழுதார். கட்டி வைத்த பாரமெல்லாம் உள்ளேயிருந்து உருகி வழிய, உள்ளம் உடைந்து ‘ஊ ஊ’வென அவல ஊளை.

தருமுவுக்குக் கைகள் நடுங்கின. ‘நீ ஏம் பெருசு அளுவற? அதுல்லா ஒண்ணும் ஆயிருக்காது’ என்றான்.

பெரியவர் அழுகையை நிறுத்திவிட்டு ‘நீ அச்சப்படாம ஓம் பாட்டுக்குப் போ தம்பி’ என்றார்.

‘தம்பிக்குக் கலியாணங் களிஞ்சிருச்சிங்களா?’

‘பழனி, நீ கடேசியா என்ன படம் பாத்தே?’ என்றார் பெரியவர்.

‘ஒங்க நெலம தெரியாம... த்ச், மன்னிச்சிரு பெருசு.’

‘தனலெச்சுமி நல்லாருப்பாளா தம்பி?’ என்று பெரியவர் கேட்டார். ‘பாத்து! பாத்து நிதானமாப் போய்யா’ என்றார். ‘நீங்க எம் பயக மாதிரி. நீங்கல்லா நல்லபடியா ரொம்பக் காலம் வாழணுய்யா.’

‘ஒங்க பையனுக்கு ஒண்ணும் ஆயிறாதுங்க.’

‘நல்லது, நா இப்பிடியே எறங்கிக் குறுக்கால நடந்துருவேன். இந்தாங்க...’

‘என்னது?’

‘சார்ஜு...’

‘அட வெய்ங்க பைல.’

‘இல்ல பரவால்ல.’

‘அட வெய் பெருசு, பாத்துப் போ.’

‘வரட்டா?’

‘வாங்க’ என்றபோது லாரி தாண்டிப் போயிற்று.

பொட்டு வெளிச்சமில்லாத வனாந்தரம் ஒரு பிரச்னையின் நேரடி எதிர்கொள்ளல் பற்றி ஒரு ஆக்ரமிப்பு வியூகம் பயமாய் கவலையாய் அவரைத் திணறடித்தது. ‘குமாரு, குமாரு’ என்று வாய் முணுமுணுத்தது. விழிகள் நனைத்து கண்ணீர் பூச்சியெனத் துடித்தது,

இடப்புறம் வலப்புறம் கவனித்து விட்டு, ஒரே ஓட்டமாய்த் தெருவை கடந்தார். 

-----------------------


Comments

Popular posts from this blog