நன்றி நவின விருட்சம் இதழ் 101
Art madhiyazhagan subbiah maddy

மகிழ்ச்சியின் தூதுவன்

எஸ். சங்கரநாராயணன்
 ஞாயிற்றுக்கிழமையின் அடையாளமாக அவன் மாறிப் போயிருந்தான். காலையில் லேசாய் வெயில் மேலெழும் நேரம் வருவான். அவன் வருமுன்னே அவனது புல்லாங்குழல்ச் சத்தம் வரும். சாத்திய கதவுகளுக்கு உள்ளேயும் பாயும் வல்லமை பெற்றிருந்தது அது. எல்லாருக்குமே அந்தச் சத்தம் பிடித்திருந்தது. சாத்திய கதவுகள் அந்தச் சத்தத்தில் திறந்தன. அது ஞாயிறு காலையின் சத்தங்களில் ஒன்றாக ஊரில் எல்லாரிடமும் பதிவும் ஆகியிருந்தது ஆச்சர்யம்.
எதோ மூங்கிலை வெட்டி துளைகள் இட்டு, கிடைத்த சாயம் ஏற்றிய குச்சி அது. அதில் காற்று மாட்டிக்கொண்டாப் போல ஒரு சத்தம் வந்தது. அவனே அதை, அந்தக் குழலைச் செய்திருக்கவும் கூடும். அதை வைத்துக்கொண்டு அவன் கன ஜோராய் சில பாடல்கள் வாசித்தான். சிரமமான மெட்டுக்கள் அல்ல அவை. என்றாலும் அந்த மெட்டுக்களை அந்தக் குழலுக்குள் மடக்கி நீட்டி அவன் உற்சாகமாய் சாமர்த்தியமாய் வாசித்தாப் போலத்தான் இருந்தது. துணியை மடித்து அயர்ன் பண்ணி அணிந்து கொண்டாப் போல!
எனக்கு அவனைப் பிடித்திருந்தது. அவனிடம் ஒரு தட்டி கட்டிய கழி இருந்தது. துப்புரவுத் தொழிலாளியின் தெருவைப் பெருக்கும் தட்டி போல. ஆனால் அதை நிமிர்த்திப் பிடித்திருந்தான். ஆங்கில 'ஒய்' போன்ற தட்டி. அதில் அங்கங்கே விதவிதமான புல்லாங்குழல்களைச் செருகி எடுத்து வந்தான் அவன். அது தவிர சின்னச் சின்ன காகிதக் காத்தாடிகள், ஓலைக் காத்தாடிகள் என வகைவகையாய் அதில் மாட்டி வைத்திருப்பான். அந்தக் காத்தாடிகளையும் அவனே செய்திருக்கலாம். ஸ்வைங் என அந்தக் கழியை அவன் தூக்கிக் குலுக்க காத்தாடிகள் ஜிலுஜிலுவென்று சுழலும். மாட்டு மணிகள் சிலவற்றையும் அதில் கோர்த்துக் கட்டி வைத்திருந்தான். இனிய நாதம் தந்தபடி கூட வந்தது தட்டி. கொலுசு அணிந்த பெண் போல.
தவிர முதுகில் பூணூல் என மாட்டித் தொங்கவிட்ட நீள வார் வைத்த பை ஒன்று. அதில் எத்தனையோ குழந்தைப் பொக்கிஷங்கள். விசில்கள். ஊதல்கள். பீப்பீக்கள். விதவிதமான வண்ணங்களில் பலூன்கள். சைக்கிளுக்குக் காத்தடிக்கிற ஒரு பம்பு, அதையும் பெல்ட்டில் மாட்டி கட்டிக் கொண்டிருப்பான். ஒரு சில பலூன்களை ஆப்பிள் போலவோ, வேறு வடிவங்களிலோ ஊதி தட்டியில் கட்டிக் கொண்டிருப்பான். எழும்பி ஆடியபடி அவை கூட வரும். இடப்பக்க வலப்பக்க ஆப்பிள் பலூன்கள் தலைகளாகக் காணும்.அவனே பத்து தலை ராவணனாகி விட்டாப் போல. காற்றை உள்ளேயும் வெளியேயும் கொண்டாடும் பலூன்கள். அவன் தோளில் கருப்பு, பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று விதவிதமான கயிறுகள். அரைஞாண் கயிறுகள். நோன்புக் கயிறுகள், என தொங்கிக் கொண்டிருக்கும். தட்டியில் பிளாஸ்டிக்கில் வாட்சுகள், முள்ளைத் திருகி நகர்த்தி மணி வைக்கலாம். ஆனால் ஓடாது. மஞ்சள், நீலம், சிவப்பு, பச்சை என வண்ண வண்ணக் கண்ணாடிகள். கீச் கீச் ஊதல் உள்ளேவைத்த பொம்மைகள். தொட்டு அமுக்கவே அவை கீச்சிடும். ஸ்டிக்கரில் டாட்டூக்கள். ஒரு குழந்தையின் விளையாட்டு அறையையே வைத்துக்கொண்டு நகர்கிறான் அவன். அந்தப் பொருட்களை அநேகம் அவனே செய்திருப்பான். விசில், அதை தட்டி மடக்கி உள்ளே இலந்தைப்பழக் கொட்டை ஒன்றை வைத்திருப்பான். விசில் ஊத ஊத அந்தக் கொட்டை சுழல்வது ஒரு அழகு. அந்தச் சத்தம் சற்றே அதிர்வுடன் ர்ர்ர் என்று வெளியே வருவது இன்னும் விறுவிறுப்பு. வண்ண வண்ணக் காகிதங்களை வைத்து அவன் செய்யும் காத்தாடிகள். எத்தனை ஆசையாய்ச் செய்து கொண்டு வந்திருக்கிறான் இவன், என்று தோணும்.
குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய எல்லாவற்றையும் ஒரு கூறாக எடுத்து வந்தான் அவன். மகிழ்ச்சியின் தூதுவன்.
தலையில் முண்டாசு. அதில்கூட காத்தாடி ஒன்றை, கிரீடத்தின் சிறகு போல குத்திக்கொண்டு வருவான். ஒரு ராஜகுமாரன் போல மனசில் நினைப்பா அவனுக்கு. கழியை முட்டிக்கு மேலே தூக்கிய நிலையில் அணைத்துக்கொண்டு மத்த கையால் புல்லாங்குழலைப் பிடித்தபடி வாசித்துக்கொண்டே வருவான். சுருள் சுருளான சங்கதிகள் கொண்ட உற்சாகப் பாடல்கள். அவன் நடக்க நடக்க தலைக் காத்தாடி, அதுவேறு சுழல்வது குழந்தைகளுக்குப் பரவசமான வேடிக்கை. எல்லாத்தையும் விட அவன் குழலோசை. அடிபட்ட நாயின், அல்லது சடன் பிரேக் போட்ட வாகனத்தின் ஒரு கீச் தான் அதில் இருந்து வரும். அதாவது வாசிக்க மத்த யாருக்குமே, குழந்தையோ பெரியவர்களோ... அதைவைத்து அவன் மெட்டுக்கள் வாசிக்கிறான். நமக்கு அது அடையாளம் புரிகிறது. தெரு தாண்டும் வரை அவன் வாசிக்கிற நாலு மெட்டில் ஒண்ணு சமீபத்திய மெட்டாய் இருக்கும். அல்லது பிரபலமான மெட்டாய் இருக்கும். மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு, சித்திரம் பேசுதடி. அவனுக்கு எத்தனை பாடல்கள் வாசிக்கத் தெரியுமோ தெரியவில்லை.
தூரத்தில் அவனது சத்தம் கேட்டதுமே அத்தனை குழந்தைகளுமே ஊய்யென்று உற்சாகப்பட்டு பரபரத்துக் கிளம்பி வீட்டுக்குள்ளிருந்து தெருவுக்கு ஓடிவரும். காத்துக்குக் காத்தாடி விர்ரென்று அசைந்தாப் போல அவனது குழல் சத்தம் அவர்களுக்குள் ஒரு அசைவை ஏற்படுத்தி விடுகிறது போலும். வீட்டுக்குள் அதுவரை தூங்கிக் கொண்டிருந்த குழந்தையே கூட விலுக்கென்று விழித்து எழு,ந்து உட்கார்ந்து கொள்ளும். கைக்குழந்தை வைத்திருக்கிறவர்கள் புன்சிரிப்புடன் அவர்களே வேடிக்கை காட்ட என்று வாசலுக்கு இடுப்புக் குழந்தையுடன் ஓடிவந்து நின்றார்கள். வேடிக்கை பார்க்கிறவர்களை வேடிக்கை பார்க்க, என்று பெரியவர்களும் வந்து நின்றார்கள். எல்லா வீட்டு வாசல்களும் சட்டென மனிதர்களால் நிறைந்தாப் போலிருந்தது. பிள்ளைகள், வாலிபர்கள், பெரியவர்கள் எல்லாருடைய முகமும் அப்போது பிரகாசமாய் மலர்ந்திருந்தது.
குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே அவன் மகிழ்ச்சி அளிப்பவனாய் இருந்தான். இந்துக்களின் சான்ட்டா கிளாஸ் அவன். அவன் கையில் ஏந்தி வரும் தட்டி, அதுவே கிறிஸ்துமஸ் மரம்!
அவனை மற்ற நாட்களில் பார்க்க முடிவது இல்லை. ஒருவேளை அவனை பஸ் நிறுத்தம் அருகில், பள்ளிக்கூடத்தின் பக்கத்தில் என பார்க்க முடியுமோ என்று நான் தேடியும் இருக்கிறேன். பஜார்ப் பக்கம் திடீர் திடீரென்று வியாபாரங்கள் நடக்கும். ஒரு சைக்கிளில் இருந்து ஜவுளிகள் இறக்கி விலை கேட்கச்சொல்லி, ஒருதரம் ரெண்டுதரம் மூணுதரம், என்று ஏலம் விடுவார்கள். எதையெடுத்தாலும் பத்து ரூவா என்று திடீர்க் கடைகள் தெரு ஓரங்களில் போடுவார்கள். ஊர்த்திடலில் அரசியல் கூட்டங்கள் எதாவது நடந்தால், சாயந்தரத்தில் இருந்தே கட்சிப் பாடல்கள், ஹனிபா பாடலோ, சி. எஸ்.ஜெயராமன் பாடலோ காதைப் பிளக்கப் போடுவார்கள். மெல்ல கூட்டம் சேரும். அண்ணாதுரை எப்பவோ செத்தாச்சி. ஜெயராமனுக்கு இன்னும்அழுகை நிற்கவில்லை.
அப்படி இட்ங்களில் எல்லாம் கூட அந்தக் குழல்க்காரனை என் கண்கள் தேடின. அவன் தட்டுப்பட்டதே இல்லை. அவன் இந்த ஊரே இல்லை என்றுதான் தோன்றுகிறது. நடந்தே தான் வருகிறான். சைக்கிள் போல எதுவும் அவனிடம் இல்லை. எந்த ஊரில் இருந்து இவ்வளவு தூரம் நடந்து வருகிறானோ தெரியாது. இதில் என்ன லாபம் கிடைத்து விடும்? நடந்தே வேறுஊருக்கு வந்து வியாபாரம் செய்கிறானே, என்றிருந்தது. அவனுக்கு இந்த வேலை பிடித்திருக்க வேண்டும். தனது சொந்தக் கவலை என்ன இருந்தாலும் ஊருக்குள் நுழைகிற அந்த நேரம் அவன் தன்னையே புதுப்பித்துக் கொள்கிறானோ. அது அவனுக்கும் வேண்டியிருக்கிறதோ என்னவோ, என்று நினைத்தேன்.
·        
அடுத்த வீட்டில் ரஞ்சினி. நாலாம் வகுப்புக் குழந்தை. அதற்கு தலைமுடி இன்னும் நீளமாய் இருந்திருக்கலாம் என்கிற ஆசை. தூக்கித் தூக்கி முன்னால் விட்டுத் தடவிக் கொண்டிருக்கும். நல்ல நாள் விசேஷம் என்றால் பட்டுப்பாவாடை அணியப் பிடிக்கும். கண்ணுக்கு மை. பின்னலோடு சௌரி சேர்த்து இடுப்பு வரை நீட்டிக்கொண்டு, அப்போது அவள் நடையே எத்தனை மாறிப்போகும். உலகமே துச்சம் அப்போது அவளுக்கு. அடியே ஒரிஜினல் தலைமுடி இருந்தால் எங்கபாடு அவ்ளதான். இடுப்பு சுளுக்கிக்கப் போறதுடி குட்டி. எதிர்வீட்டில் சேகர் என்ற பையன். தெருவில் வரும்போது எதாவது கல்லை வீடுவரை எத்திக்கொண்டே வருவான். வாயில் எப்ப பார், இந்த வயசிலேயே விசில். குறும்பு கொப்பளிக்கும் கண்கள். ஊரில் பெரியவர் சின்னவர் என்று இல்லாமல் எல்லாருக்கும் பட்டப்பேர் வைத்துத் திரிகிறான்.
எனக்குக் கூட எதாவது வைத்திருப்பான்.
சற்று உள்ளொடுங்கிய வீட்டில் அந்தக் குழந்தை மகேஸ்வரி. இன்னும் ஒரு வயசு ஆகவில்லை அதற்கு. வேத்து முகம் கிடையாது. எல்லாரையும் பார்த்துச் சிரிக்கும். வாயில் விரலைப்போட்டுக் குதப்பி உடம்பெல்லாம் எச்சில் வழியும். உடம்பே சப்பாத்தி மாவாட்டம் தொப்பையை அமுக்கச் சொல்லும். இப்பவே அதுக்கு தலை முடி புசுபுசுவென்று நிறைந்து காடாய்க் கிடக்கிறது. மகேஸ்வரியை யிட்டு அவள் அம்மாவுக்கு ரொம்பப் பெருமை. எப்பவும் அவள் குழந்தையை இடுப்பில் இருந்து இறக்கி விடவே மாட்டாள்.
எதிர்சாரியில் மாடிவீட்டில் குடியிருக்கும் ரங்கசாமிக்கு ஒரு பெண், ஒரு பையன். இரண்டுமே சின்னஞ் சிறுசுகள். எப்பவும் அவர்கள் வாசலிலேயே விளையாடிக் கொண்டிருப்பார்கள். திடீரென்று ஊவென்று அவர்களின் சத்தம் கேட்கும். யாராவது கீழே விழுந்திருக்கலாம். சண்டை வலித்து அடிபட்டுக் கொண்டிருக்கலாம். வெளியே வந்து பார்க்கவே வேண்டியது இல்லை. அந்த சைரனுக்கு அம்மா மாடியில் இருந்து இற்ங்கிவந்து குழந்தையை மொத்துவதும் கத்துவதும் கேட்கும். அம்மா வந்தவுடனேயே அவனோ அவளோ அழுவதை நிறுத்தி யிருப்பார்கள். என்றாலும் அவளை வரவழைத்த பின் வெறுமனே அவள் திரும்ப மேலே போக மாட்டாள். குழந்தையை ஒரு சாத்தாவது சாத்தினால்தான் அவளுக்குத் திருப்தி.
அந்தத் தெருவில் பத்து பதினைந்து குழந்தைகளுக்கு மேல் இருக்கிறார்கள். காலையும் மாலையும் தெருவே அமளிதுமளிப் பட்டது. இராத்திரியானாலும் தெரு விளக்கடியில் பையனும் பொண்ணுமாய்க் கலந்தே விளையாடினார்கள். அடிக்கடி பெத்தவர்கள் வீட்டுக்குள்ளே யிருந்து வந்து அவர்களைக் கூப்பிடுவார்கள். “வரேம்மா. நீ போ.” திரும்ப விளையாட்டு தொடரும்.
ஞாயிறானால் இந்தச் சத்தம் இரட்டிப்பாகி விடும். அத்தோடு இந்தக் குழல்க்காரன் வேறு வந்துவிட்டுப் போயிருப்பான். ஆளுக்கு ஒரு பீப்பீ, அல்லது ஊதலை வைத்துக்கொண்டு நமது காதைப் பதம் பார்த்துவிடும். கையில் காத்தாடி வைத்துக்கொண்டு சர்ர்ரென்று ஓடும் சேகர். அட டவுசரைப் பிடி பிடீய். நல்லவேளை. மானம் காப்பாற்றப்பட்டது. வாங்கிய பலூன்கள் எலலாம் அரை மணி ஒரு மணியில் படார் படாரென்று அது வேறு வெடிக்கும். சிறிது கூர்மையான எந்தப் பகுதியில் பட்டாலும் பலூன் தாங்காது. இனி அவர்கள் அடுத்த ஞாயிறு வரை காத்திருக்க வேண்டும். விசிலோ கண்ணாடியோ குழலோ, கூட சில நாட்கள் உழைக்கும். அதனால் தான் அவன் தினசரி வராமல் ஞாயிறுகளில் வருகிறானோ என்றிருந்தது.
·        
ஆறு மணிக்கு நாளிதழ் வந்துவிடும். நான் வாசல்பக்கம் நாற்காலியைப் போட்டுக்கொண்டு உட்கார்வேன். ஞாயிறுகளில் நான் நாளிதழைப் பிரித்தாலும் மனம் லயிக்காது. அந்தக் குழல்க்காரனை நான் எதிர்பார்க்க ஆரம்பித்திருந்தேன். குழந்தைகள் எல்லாருமே அவனை எதிர்பார்க்க ஆரம்பித்திருந்தார்கள். அது சரி. ஆனால் நானும்! எனக்கே அதில் சிறு சிரிப்பு இருந்தது. அவன் தெருவின் அந்த மூலையில் தலையைக் காட்டினாலே ஹுவென்று பிள்ளைகள் அவனைப் பார்க்க தலைதெறிக்க ஓடும். அவனும் உற்சாகமாகி விடுவான். குழலை தேர்ந்த ரசிகர் கூட்டத்தின் முன்னால் வாசிப்பதைப் போல உடம்பையே ஆட்டி, ஆட்டி, பாம்புக்கு மகுடி வாசிக்கிறாப் போல வாசிப்பான்.
குழல்ச் சத்தம் கேட்டது. நான் புன்னகையுடன் நிமிர்ந்து தெருவின் அந்த ஓரத்தைப் பார்த்தேன். அவன் பின்னால் ஒரு பெண்குழந்தை விந்தி விந்தி வந்து கொண்டிருந்தது. ஞாயிறு காலையிலும் பள்ளிச் சீருடையிலேயே இருந்தது அது. அவன் நின்றான். கையால் முட்டியைத் தொட்டு அழுத்தியபடியே நடந்து வந்தது அது. “என்ன பாப்பா?” “பலூன்...” என்றது அது. “காசு?” “காசு இல்ல” என்றது அது. “அப்பாட்ட கேளு.” “அப்பா இல்ல...” என்றது அது. எந்தத் தெருக் குழந்தை தெரியவில்லை. “அம்மா?” “அம்மா வேலைக்குப் போயிருக்கு” என்றது குழந்தை. அவன் குழந்தையைப் பார்த்தான். “பலூன் இல்ல. போ” என்றான். நடையை எட்டிப் போட்டு வந்தான்.
குழலைத் திரும்ப வாயில் வைத்து ஊத ஆரம்பித்தான். தெருக் குழந்தைகள் பெரிதாய் இரைச்சலிட்டு வீடுகளில் இருந்து வெளியே பாய்ந்தன. மதகுகளைத் திறந்தாப் போலிருந்தது பார்க்க. அந்த போலியோ குழந்தை, அவன் பின்னாலேயே வந்தது. மகேஸ்வரியைத் தூக்கிக்கொண்டு அம்மா வாசலுக்கு வந்தாள். என்ன சத்தம் கேட்டாலும் அம்மாவைப் பார்த்து வாசலைப் பார்க்கக் கைகாட்டும் அது. இன்னும் பேச்சு வரவில்லை. ஆனால் ஜாடையாலேயே ஊரை வித்துரும் அது.
மகேஸ்வரியைப் பார்த்ததும் குழல்க்காரன் நின்றான். ஒரு பீப்பீயை வெளியே எடுத்தான். குழந்தை அவனைப் பார்த்துச் சிரித்தது. அவன் குழந்தையைப் பார்க்கக் குனிந்தான். அது எதிர்பாராத நேரம் அவன் கிட்டத்தில் வந்து ப்பீ... என ஊதினான். ஒருவிநாடி விக்கித்து பின் குழந்தை கெக் கெக் என்று சிரித்தது. சுற்றியிருந்த எல்லாக் குழந்தைகளும் சிரித்தன. அந்த போலியோ பெண், அவளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. குழந்தை சிரிப்பை நிறுத்திவிட்டு அவன் முகத்தைப் பார்த்தது. அவன் திரும்ப அதன் தொப்பையில் காத்து படும்படி ப்பீ... என ஊதினான். திரும்ப கெக் கெக் கெக் என்று குழந்தை அடக்க மாட்டாமல் சிரித்தது.
அதன் அம்மாவுக்கு முகமெல்லாம் மலர்ந்து பூரித்தது. அவன் குழந்தையிடம் பீப்பீயை வாயில் வைத்தான். ஃப்பூ என்பது போல ஊதிக் காட்டினான். குழந்தை வாயில் பீப்பீயை வைத்துக்கொண்டு அது ஃப்பூ, என்றபோது ப்பீ... என்று பெரும் சத்தம் வெளியே வந்தது. குழந்தை கெக் கெக் என்று சிரித்தது. அதன் கண்ணெல்லாம் பெரிசாகி சிரிப்பு முகம் உடம்பு என்று வழிந்தது. அதன் அம்மாவுக்கு அதைவிடச் சிரிப்பு. ஃப்பூ, என்றான் அவன். ப்பீ... என்றது குழந்தை. கெக் கெக் என்று அது சிரித்தபோது சுற்றி நின்றிருந்த எல்லாக் குழந்தைகளும் ஹோவென்று சிரித்து அந்தக் குழந்தையின் தொபையைத் தொட்டு மேலும் உசுப்பேற்றினர். பெத்தவள் ஒரு ஐந்து ரூபாயை எடுத்து அவனிடம் நீட்டினாள். “நேத்துலேர்ந்து குழந்தைக்கு ஜுரம். இப்பதான் சிரிக்குது” என்றாள் அவள்.
ஒரு வியாபாரம் ஆனதும் கிடுகிடுவென்று வியாபாரம் சூடு பிடித்தது. பலூன் கேட்ட பிள்ளைகளுக்கு அவன் விதவிதமான உருவங்கள் செய்துகாட்டினான். கிடுகிடுவென்று அவன் பலூனுக்குள் காற்றடைக்கிற வேகம் அற்புதமாய் இருந்தது. பொம்மென்று பலூனில் உள்ளே காற்று நிறைவது பசியடங்கிய குழந்தையின் வயிறு போல் உப்பல் கண்டது. நீளமான பலூனில் அங்கங்கே அமுக்கி விட்டு அதை நெளி நெளியாய் மேடு பள்ளங்களாய் ஆக்கினான். ஓரிடத்தில கயிறால் கட்டி மேலது தலை, கீழது உடம்பு என்று வித்தியாசம் காட்டினான். கண்களை மையால் வரைந்தான். பேப்பரால் மூக்கை ஒட்டினான். ரெண்டு காதுகள், கைகள் கால்கள் என தனித்தனி சின்ன பலூன்களை குழாய் போல நீளமாய் ஊதி சேர்த்துக் கட்ட பூனை போலவும், நாய் போலவும் விறுவிறுவென்று உருவங்கள் முளைத்தன.
ஒரு நீலக் கண்ணாடி வாங்கிக்கொண்ட குழந்தை அதை அணிந்துகொண்டு உலகமே நீலமயமாய் ஆகிப்போனதில் ஆச்சர்யப்பட்டது. இன்னொரு குழந்தை பச்சைக் கண்ணாடி வழியே பார்த்தது. அப்புறமாக அக்கா தங்கை ரெண்டு பேரும் கண்ணாடிகளை மாற்றிக்கொண்டு பார்த்தார்கள். ஒரே சிரிப்பு அதுங்களுக்கு. சேகர் ஒரு விசில் வாங்கிக்கொண்டு அங்கே வந்து நின்ற நாயின் கிட்...ட்டே போய் பிர்ர் என்று ஊத நாய் பதறி ஓட்டம் பிடித்தது. எல்லாரும் சிரித்தார்கள். ஏழெட்டு பலூன்கள், விசில், ஊதல் கண்ணாடிகள், என்று ஓரளவு வியாபாரம் ஆனது. அவன் சட்டென்று திரும்பி அந்த போலியோ பெண்ணைப் பார்த்தான். ஒரு ஆப்பிள் பலூனை எடுத்து அவளிடம் “இந்தா” என்று நீட்டினான். அவள் சந்தோஷமாய் வாங்கிக் கொண்டாள். “வீட்டுக்குப் போ” என்றான் அவன். அவள் காலை விந்தி விந்தி கிளம்பிப் போனாள்.
·        
இதை எழுத நடுங்குகிறது கை. அடுத்த ரெண்டு மூணு நாளில் அந்தக் குழந்தை, மகேஸ்வரிக்கு உடம்பு ஜாஸ்தியாகி விட்டது. என்ன சாப்பிட்டாலும் அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. கை வைத்தியத்துக்கு ஜுரம் கட்டுப்படவில்லை என்றானதும் டாக்டரிடம் எடுத்துக்கொண்டு ஓடினார்கள். ரெண்டு நாள் ஆஸ்பத்திரியிலேயே வைத்து  வைத்தியம் பார்த்தார்கள். என்ன ஆயிற்று, குழந்தை எப்படி யிருக்கிறது, யாருக்குமே தெரியவில்லை. தெருவில் மத்த குழந்தைகளின் விளையாட்டே அடங்கி விட்டது. எல்லாருக்குமே மகேஸ்வரி ஞாபகம் தான்.
ஒரு ராத்திரி, வெள்ளிக்கிழமை என்று நினைக்கிறேன். ஆமாம். வெள்ளி தான். தெருவில் ஹோவென்று சத்தம். காரில் வந்து இறங்கினார்கள். மகேஸ்வரி உயிர் பிழைக்கவில்லை. எல்லாம் சட்டென்று கண்ணைக் கட்டித் திறந்தாப்போல இருந்தது. அந்த ராத்திரியிலும் தெருவே கூடிவிட்டது. அட, உற்சாகமாய் பீப்பீ ஊதிய குழந்தை. அத்தனை ஜுரத்திலும் எப்படி விளையாடியது. குழந்தையின் அம்மா, அவள் முகத்தைப் பார்க்கவே சகிக்கவில்லை. அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்து வீட்டுக்கு உள்ளே அழைத்துப் போனார்கள். சனிக்கிழமை, அதை அடக்கம் செய்கிற நாள் அன்றைக்கு தெருவே கூடிவிட்டது. அம்மாக்காரி மயங்கியே விட்டாள். அவளையே இப்போது சரியானபடி பார்த்துக்கொள்ள வேண்டுமாய் இருந்தது.
அந்த ஞாயிறு நன்றாகவே விடியவில்லை. போன வாரம் இதே தெரு எப்படி கலகலப்பாய் இருந்தது. நான் நாளிதழுடன் வாசல் வந்து உட்கார்ந்திருந்தாலும் எனக்குப் பதறியது. ஐயோ அந்தக் குழல்க்காரன். வந்துவிடுவானோ, என்று இருந்தது. இப்போது அவன் வராவிட்டால் நல்லது, என்று பதறியது எனக்கு. அந்தக் குழந்தையின் அம்மாவை சமாதானப் படுத்தவே முடியாமல் போகும். மத்த பிள்ளைகள் கூட, அவன் வரவேண்டாம் என்றுதான் நினைப்பார்கள், என இருந்தது எனக்கு.
சாதாரணமாய் ஒரு ஏழு ஏழரை மணி வாக்கில் வருவான் அவன். மணி பார்த்தேன். ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது. எனக்குப் பதட்டமாய் இருந்தது. மகேஸ்வரியின் அம்மா. அவள் கூட இந்நேரம் அந்தக் குழல்க்காரன் வருவதைப் பற்றி யோசித்துக் கொண்டுதான் இருப்பாள் என்று பட்டது. வராதே அப்பா. அவன் இருக்கும் இடம் தெரிந்திருந்தால் நான் நேரே போயே சொல்லிவிட்டு வந்திருக்கலாம். இப்போது அவன்... வரப்போகிறான். குழலோசை கேட்ட மாத்திரத்தில் இந்த அம்மா, அழுது ஓலமிடப் போகிறாள். இதைத் தவிர்க்க முடியாதா? கடவுளே அவன் வரக்கூடாது. நான் நாளிதழைப் பிரிக்கவே இல்லை. மடியில் கிடந்தது பேப்பர்.
மணி ஏழு தாண்டி விட்டது. எந்நேரமும் அவன் வருவான். எனக்கு இருப்பு கொள்ளவில்லை. வழக்கமாய் அவன் வரும் நேரம் இது. இப்படியே மௌனமாய் அமைதியாய்க் கடந்துவிட்டால் நல்லது. அடுத்த வீட்டுப் பெண் ரஞ்சினி வாசல் பக்கமாய் எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்ப உள்ளே போனாள். ஆக அவள் காத்திருக்கிறாள். இப்படியே எல்லா வீடுகளிலும் குழந்தைகள் காத்திருக்கின்றனவோ என்று தோன்றியது. என்றாலும் அவன் வரக்கூடாது, என்று தான் நான் நினைத்தேன். இந்தத் துயரம் சிறிது அடங்கட்டும். கடவுளே அவன் வரவேண்டாம்.
ஏழே முக்கால். அவன் வரவில்லை, என்பதில் எனக்கு சிறு ஆசுவாசம் வந்தது. ஏன் வரவில்லை தெரியவில்லை. நல்லவேளை வரவில்லை. எனக்கே உள் புழுக்கமாய் இருந்தது. அப்போது ரஞ்சினி என்பக்கம் வந்து நின்றது. “என்னம்மா?” “காத்தாடி மாமா?” என்றாள் அவள். “வரல்ல” என்றேன் நான். “ஏன்?” என்றாள் அவள். அவள் நெற்றி சுருங்கியது. அப்பாவிடம் அவள் காசு வாங்கிக் கையில் வைத்திருந்தாள். “தெரியல” என்றேன் நான். என்றாலும் எனக்கு அது ஆசுவாசமாய்த் தான் இருந்தது.
சிறிது உலாவிவிட்டு வரலாம் என்று சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினேன். இது என்ன, தேவையில்லாமல் எங்காவது நானே என்னை மாட்டவைத்துக் கொள்கிறேனா என்று இருந்தது. ஆனால் பாவம். மகேஸ்வரி. என்ன அருமையான குழந்தை. யார் கண் பட்டதோ? கால்போன போக்கில் நடந்தேன். ஒரு வாரம்கூடத் தவறாமல் வருவான் அந்த குழல்க்காரன். ரஞ்சினிக்கு அவன் காத்தாடி மாமா. இன்று... என்னாயிற்று அவனுக்கு? ஏன் அவன் வரவில்லை. நான். அதுவரை அவன் வர வேண்டாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவன். என்னாச்சி? அவன் ஏன் வரவில்லை?... என மனம் கிளை பிரிந்தது.
ஆத்தங்கரை மண்டபம் பக்கம் இருந்து வந்தது அந்தச் சத்தம்.. குழல்ச் சத்தம். அது அவன்தான். அவனேதான். அந்தச் சத்தம் எனக்குத் தெரியும். ஆனால். இங்கே என்ன செய்கிறான்? அவனைப் போய்ப் பார்க்கலாம் என்று இருந்தது. அந்தக் குழல் வாசிப்பு. வழக்கமான வாசிப்பு அல்ல அது. அதில் அப்படியொரு சோகம் இருந்தது. மனதை உருக்கும் சோகம். ஏன் இத்தனை சோகம்? நேரே அவனைப் போய்ப் பார்க்க, என் பாதங்கள்... நின்றன. அவனுக்கு சேதி தெரிந்திருக்கும் என்று திடீரென்று எனக்குத் தோன்றியது.
திரும்பி வீட்டைப் பார்க்க நடக்க ஆரம்பித்தேன்.
·        

91 97899 87842

Comments

Popular posts from this blog