பத்தி எழுத்து • நிசப்த ரீங்காரம் • பகுதி 7

சொற்களின் பகடையாட்டம்

எஸ். சங்கரநாராயணன்

 


ர் எழுத்தாளன் என்ற அளவில் சொற்களை, அதன் கவித்துவ எழுச்சியுடன் நகர்த்தப் பிரியம் கொண்டவன் நான். என் பாணி அது. கதை சொல்லும் உணர்ச்சி வியூகத்தை வாசகனுக்குக் கை மாற்ற நான் எழுத்தில் வாசனை நிரப்புகிறேன்.

“அதிகாலைப் பனி மூட்டத்தில் கதவைத் திறந்தாள். வாசலில் அவன் நின்றிருந்தான். ஒரு கனவின் தொடர்ச்சி போல இருந்தது அது.”

என்றாலும் மேடைப் பேச்சு சார்ந்து எனக்குப் பயிற்சி இல்லை என்ற வெட்கம் எனக்கு உண்டு. பணி என்று நான் சென்னைக்கு இடம் பெயர்ந்த காலங்களில் (தபால் தந்தித் துறை, என்கிற பி எஸ் என் எல்) எழுத்தும் என்னோடு இணைந்து கொண்டது.

அப்போது (1980) ‘இலக்கிய வீதி’ என, இளம் எழுத்தாளர்களின் பாசறை ஒன்று விநாயகநல்லூர், வேடந்தாங்கலில் இயங்கி வந்தது. அதன் மாதாந்திரக் கூட்டங்கள் ஓர் உயர்நிலைப் பள்ளியில் மதுராந்தகத்தில் நடத்துவார்கள். அதன் அமைப்பாளர் இனியவன். (வணக்கம் இனியவன்.) அதில் இளம் எழுத்தாளர்கள் நாங்களும் பிற புத்தகங்களைப் பற்றி விவாதம் நிகழ்த்துவோம்.

அவை உப்பு பெறாதவை, என இப்போது புன்னகையுடன் நினைத்துக் கொள்கிறேன்.

என்றாலும் இளமையின் தினவு நாட்கள் அவை. எல்லாவற்றையும் அசட்டுத் தன்னம்பிக்கையுடன், புன்னகையுடன் எதிர்கொண்ட பருவம். வாழ்வில் எல்லாமே அழகு தான். உற்சாகம் தான். விதி என்பது நம்மை ஒரு பூனையாய்த் தூக்கி பாற்கடலில் அருந்தக் காட்டிக் கொண்டிருக்கிறது, என்கிற மிதப்பு. கனவு சுமந்த பருவம்.

தெருவில் நான் இறங்கினால் மரங்கள் எனக்கு சாமரம் வீசுகின்றன.

அந்தக் காலங்களில் தான் தமிழ்ப் பல்லைக் கழக மேனாள் துணைவேந்தர் திரு ஔவை நடராசனாரின் நட்பு கிடைத்தது. (வணக்கம் ஐயா.) மனிதர் சொல்வேந்தர். எந்தச் சூழலையும் ஆதரித்தும் புறக்கணித்தும் பேச வல்லவர். அவரோடு பல கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன்.

அந்நாட்களில், என் இளமை நாட்களில், அவருக்கு சர்க்கரை நோயின் தாக்கம் இருந்த புதிது. ‘தலைமைச் செயலகம்’ என்னை வரச் சொல்லி விடுவார். எனது காலைப்பணி (ஷிஃப்ட்) முடித்து நான் அங்கே போய்விட்டால் சிறு அரட்டை முடித்து மாலை அலுவலகம் விட நடந்தே நாங்கள் அவர்வீடு, அண்ணாநகர் வரை பேசியபடி வருவோம். கூகுள் வரைபடம் இந்த தூரம் 10.6 கிமீ என்று காட்டுகிறது.

கால்வலி கூடிய பொற்காலங்கள் அவை.

அவர் வாசித்த ஏராளமான புத்தகங்கள் பற்றி அளவளாவுவோம். அவர் பேசுவார். மிகுந்த அக்றையுடன் எனது எழுத்து பற்றி அவர் விசாரிப்பார். என் வீட்டிலேயே அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளாத நாட்கள் அல்லவா அவை… நான் எழுதிய நுட்பமான வரிகளை, அப்படியாய் நான் கருதிக் கொண்ட வரிகளைப் பற்றி அவரிடம் சற்று கழுத்து விரைக்கச் சொன்னால், அவர் இன்னொரு உச்சத்தை எடுத்துக் காட்டுவார்.

பொற்காலம்… கால்வலியை மறக்கவும்.

ஐயா, இன்றைக்கு என் கதையில் விதி பற்றி ஒரு வரி எழுதினேன். அவர் தலையாட்டுவார். “காலம், அது மனிதனைப் பறக்கவிட்டு இறக்கைகளைக் கத்தரிக்கிறது.”

பட்டினத்தார் எப்படிச் சொல்கிறார் பார், என்பார் அவர். “சாகப்போகிற பிணங்கள் செத்த பிணத்தைத் தூக்கிச் செல்கின்றன.”

பல நூறு புத்தகங்களின் பிழிவு அவர். அவரது பேச்சுபாணியைப் பற்றியே கூட நான் அவரிடம் சரளமாகக் கிண்டல் பண்ணி யிருக்கிறேன். அதான் சொல்கிறேனே. வயசு அப்படி. சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. அதை அவர் எளிய புன்னகையுடன் எதிர்கொண்டது அவரது பெருந்தன்மை.

ஐயா, எனக்கும் மேடையில் பேசக் கற்றுத் தாருங்கள், என்று அவரிடம் கேட்டிருக்கிறேன். உனக்கெல்லாம் மேடை வேண்டாம். எழுத்தில் நீ கவனம் செலுத்துகிறாய் அல்லவா. அது போதும்… என்று என்னை அவர் அடக்கி விட்டதாகவே தோன்றுகிறது. இது நல்லதா கெட்டதா தெரியாது. அது நான் மேடை யேறி யிருந்தால் ஒழிய கண்டுகொள்ள முடியாத விஷயம் அல்லவா.

என்றாலும் பேச்சுத் துணை என்று அவர் தனது காரில் பல்வேறு இடங்களுக்கு, ஊர்களுக்கே கூட அழைத்துச் சென்றிருக்கிறார். எத்தனையோ அனுபவங்கள். இந்தத் தலைப்பில் அவை வேண்டாம். என்றாலும் ஒரு நிகழ்வைச் சொல்லியாக வேண்டும்.

மிக அருமையான மனிதர். ஒரு மேடையில் டாக்டர் ஔவை இருக்கும்போது, கிருபானந்த வாரியார் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு சின்னப் பெண், பதின்ம வயது இருக்கும், சட்டென எழுந்து வாரியாரிடம் “நீங்கள் முன்னுக்குப் பின் முரணாக அல்லவா பேசுகிறீர்கள்?” என்று கேள்வி கேட்டாள். மொத்தக் கூட்டமே திகைத்துப் போயிற்று. அத்தனை கூட்டத்தில் ஒரு போலிஸ் அதிகாரி, உட்கார்ந்திருந்த மனிதர்களைத் தாண்டி, அந்தச் சின்னப் பெண்ணிடம் போய் அவளை அப்புறப்படுத்த முனைந்தார்.

உடனே பரிதவித்துப் போய், ஔவை நடராசனார் மேடையில் ஓரமாக நின்றிருந்த ஒரு காவல் உயரதிகாரியை அழைத்து அவரது காதோடு, “அந்தப் பெண்ணைத் துன்புறுத்தாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்” என அவரையும் அனுப்பி வைத்தது நினைவு வருகிறது. மாற்றுக் கருத்தை அவர் எதிர்கொள்ளும் அழகு, என உணர்ந்த கணம் அது.

ம். மேடைப்பேச்சு எனக்குக் கொடுப்பினை இல்லாமல் ஆயிற்று. மேடைப்பேச்சு சாமர்த்தியம் இந்தக் கால கட்டத்தில் தேவையாய்த் தான் இருக்கிறது. செட்டியார் முறுக்கா சரக்கு முறுக்கா, என்றால் செட்டியார் முறுக்குதான் இன்றைய தேவை. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் வகையறா பேச்சால் தங்களை முட்டுக் கொடுத்துக்கொள்ள வசதி வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன அல்லவா…

மேடைப்பேச்சு வாய்ப்புகளை நானே ஒரு பெருங்காலம் வரை தவிர்த்தேன் என்றும் சொல்ல வேண்டும். என்றாலும் மேடைப் பேச்சின் உத்திகளை ரசித்திருக்கிறேன்.

தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கும் ஒரு விழா நினைவு வருகிறது. பரிசு வழங்கியவர் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அந்த மேடையில் கே. பாக்கியராஜ் கலைமாமணி விருது வாங்கினார். அது நினைவு உள்ளது. அதைவிட முக்கியம் அன்றைய சிறப்புப் பேச்சாளர் நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன்.

ஒரு நிதியமைச்சராகச் செயலாற்றுவது எத்தனை சிரமம் என்கிற மாதிரி நாவலர் பேச்சைத் துவங்கினார். யாராவது வந்து தங்கள் பொருட்களுக்கு வரி விலக்கு அல்லது வரி குறைப்பு கேட்டுக் கொண்டே யிருப்பார்கள். யாரையும் திருப்திப் படுத்த முடியாத பதவி இது. ஒருவர் கோரிக்கையைப் பரிசீலித்து அவரது பொருளுக்கு வரி குறைத்தால், அந்த நிதியிழப்பைச் சரிகட்ட மற்றொரு பொருளின் விலையை ஏற்ற வேண்டியதாகி விடும். அதனால் அந்த மற்ற பொருள் விலையேற்றத்திற்கு வேறொரு தரப்பில் அதிருப்தி சூழல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது போய்விடும். அந்தப் பொருள் விலை அதிகமானதால் அதை வணிகம் செய்யும் நபர்கள் குறைப்பட்டுக் கொண்டு அவர்களும் கோரிக்கை வைக்க என்று எங்களைச் சந்திக்க வருவார்கள். கடைசிவரை எல்லாரையும் திருப்திப் படுத்த ஒரு அமைச்சரால் முடியவே போவது இல்லை… என்றெல்லாம் உரையாற்றிக் கொண்டே வந்தவர்… பிறகு பேச்சின் போக்கை இப்படி மாற்றினார்.

ஆனால் கலைஞர்கள் வாழ்க்கை அதிர்ஷ்டகரமானது. கலைஞர்களால்தான் ஒருசேர ஒரு மொத்தக் கூட்டத்தையும் திருப்திப் படுத்த முடிகிறது. ரசனை அடிப்படையில் மொத்த சனக் கூட்டமும் கலைஞனைத் தான் கைதட்டி உற்சாகப் படுத்திப் பாராட்டி ஆரவாரித்து மகிழ்கிறது.

தானும் மகிழ்ந்து, அதேசமயத்தில் பிறரையும் மகிழ்விக்க ஒரு கலைஞனால்தான் முடிகிறது.

அத்தகைய சிறப்பு மிக்க கலைஞர்களைப் பாராட்டி உயர்த்தி கௌரவிக்க வேண்டும். அதற்காகத்தான் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு அரசு கலைமாமணி விருதுகள் அளித்து கௌரவம் செய்கிறது… என்று அழகாக தேரை நிலைக்குக் கொண்டுவந்தார்.

சுமார் நாற்பது ஆண்டுகள் முன்பாக நடந்த இந்த நிகழ்ச்சியும், அவரது உரையும், அதன் உத்தியும் இன்னும் மனதில் தங்கி புன்னகைக்க வைக்கிறது.

இங்கிலாந்தின் முன்னாள் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சிலின் ஓர் உரை இப்படி நகர்கிறது. நடந்த நிகழ்ச்சியாக இருக்கலாம். அல்லது இவரது சுய தயாரிப்பாக இருக்கலாம். எனினும் அந்தப் பேச்சின் சாராம்சம், உத்தி… அது அழகானது.

பிபிசி (பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்) ஓர் உரைக்காக சர்ச்சில் டாக்சியில் செல்கிறார். டாக்சி டிரைவருக்கு அவரைத் தெரியாது. டிரைவரிடம், நான் வேலையை முடித்துக் கொண்டு நாற்பது நிமிடத்தில் திரும்பி வந்து விடுவேன். எனக்காகக் காத்திருக்க முடியுமா, என்று கேட்கிறார். மன்னிக்கவும், என்னால் முடியாது, நான் ரேடியோவில் வின்ஸ்டன் சர்ச்சில் உரைவாற்றுவதைக் கேட்க நான் வீடடைய வேண்டும், என்கிறான்.

ஆகா என் உரையைக் கேட்க என்று ரசிகன் ஒருவன்… என பூரிக்கிறார் சர்ச்சில். அப்போதும் தான் யார் என்பதை அவர் அவனிடம் காட்டிக் கொள்ளாமல், புன்னகையுடன் ஒரு பத்து பவுண்டு பணம் இனாமாகத் தருகிறார். பிறகுதான் அவர் எதிர்பாராதது நடந்தது.

பத்து பவுண்டுப் பணத்தை மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்ட அவன் சொல்கிறான். “எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கிறேன் ஐயா. அந்த சர்ச்சில் நாசமாப்போகட்டும். அதைப் பத்தி என்ன…”

பிபிசி உரையில் இப்படி ஒரு சம்பவத்தைச் சொல்லிப் பேச்சை இப்படித் தொடர்கிறார் சர்ச்சில். “லட்சியவாதம், கொள்கைப்பிடிப்பு எல்லாமே பணத்தின் முன்னால் சட்டென மாறிப் போகிறது என்று நாம் இதைவைத்துப் புரிந்து கொள்ளலாம். நாடுகளே பணத்துக்கு விற்கப் படுகின்றன. ஒன்றாய் இருந்த குடும்பங்கள் பணப் பிரச்னை வந்து பிரிந்து சிதறிப் போகின்றன. நண்பர்கள் பணத்தினால் விலகிப் போகிறார்கள். பணத்துக்காக சனங்களைக் கொலை செய்கிறார்கள். மனிதர்கள் பணத்தின் அடிமைகள் ஆகி விடுகிறார்கள்….” என அடுக்கி ஆர்ப்பரித்துச் செல்கிறார் சர்ச்சில்.

இது ஓர் ‘இட்டுக்கட்டிய கதை’யாகஇருக்கலாம். சர்ச்சில் நாட்டின் பிரதம மந்திரி. ஏன் டாக்சியில் செல்ல வேண்டும்? அவருக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் கிடையாதா, என்ற கேள்வி வருகிறது. அத்தோடு, அந்தக் காரோட்டி, அவன் அவரது பேச்சின் ரசிகன். ஆனால் அவனுக்கு சர்ச்சிலை முக அளவில் அடையாளம் தெரியவில்லை… என்பதும், காதைக் காட்டு, பூ வைக்கிறேன்… என்ற த்வனியிலேயே இருக்கிறது.

ஆயினும் சர்ச்சில் தன் இயல்புப் படி எப்பவுமே பளிச்சென்ற சொல்லாடலால் முத்திரை பதிப்பவர். ஒருமுறை சர்ச்சிலும் இன்னொரு அரசியல்வாதியும் பொதுக்கூட்டம் ஒன்றில் பேச என்று வந்திருந்தார்கள். கூட்டம் என்றால் அப்படியொரு கூட்டம். அந்த அரசியல்வாதிக்கு இத்தனை கூட்டம் நமக்காக என்று ஆச்சர்யம். இறுமாப்பு வேறு. அவர் புன்னகையுடன் சர்ச்சிலைப் பார்த்துச் சொன்னாராம். “பாத்தீங்களா, நம்ம பேச்சைக் கேட்க இவ்வளவு பேர்…”

அதற்கு சர்ச்சில் சிரித்தபடி இப்படி பதில் சொன்னார். “அட நீங்க வேற. சனங்களுக்கு வேடிக்கை பார்க்கிற உற்சாகம். அவ்வளவுதான். இப்பவே நம்மைத் தூக்கில் போடப் போறதா அறிவிப்பு செஞ்சி பாருங்க. இதைப்போல பத்து மடங்கு கூட்டம் வரும்!”

இப்படிக் கதைகள், அரசியல் வட்டாரத்தில் சர்ச்சில், முசோலினி, வாஷிங்டன், என்று தலைவர் பேர் மாறி மாறி உலவும். கண்டுகொள்ளக் கூடாது.

நாம் பேச்சாற்றல் பற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதற்கு வரலாம். 

இன்னும் சிலர், தனக்கு முன்னால் பேசியவர்களை கவனித்து தங்கள் பேச்சில் அந்த முந்தைய உரையைத் தொட்டு அல்லது விமரிசித்து தங்கள் பேச்சை வளர்த்துச் செல்வார்கள். ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் அனுராதா ரமணன் பேசினார். அந்த விழாவுக்கு ஒரு பத்திரிகை ஆசிரியர் வந்திருந்தார். அனுராதா ரமணன் தனது உரையில், உங்கள் பத்திரிகையில் பிரபலமானவர் கதைகள் மாத்திரம் தான் வாங்கி வாங்கி வெளியிடுகிறீர்கள். என் போன்றவர்கள் கதைகள் அனுப்பினால் வாசிக்காமலேயே திருப்பி அனுப்பி விடுகிறீர்கள், என்று பேசினார். அனுராதா ரமணனுக்கே இந்த நிலைமையா, என்று தோன்றியது.

“என் கதைகளை வந்த ஜோரில் அப்படியே திருப்பி விடுகிறார்கள். இரண்டு மூன்று நாளில் என் கதை திரும்பி வந்து விடுகிறது. உதவி ஆசிரியர் அவற்றை வாசிக்கிறாரா என்றே தெரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ள, ஒருமுறை நான் என் கதை எழுதிய காகித மடிப்பில் பவுடர் தெளித்து அனுப்பி வைத்தேன். அந்தக் கதையும் உடனே திரும்பி வந்துவிட்டது. நான் அந்க் கதையைப் பிரித்துப் பார்த்தால் கதையில் நான் கொட்டி அனுப்பிய பவுடர் அப்படியே உள்ளே இருந்தது…” என்றார் வேடிக்கையாக.

அதையடுத்துப் பேசிய பேச்சாளர் யார் என நினைவு இல்லை. அவர் இப்படித் தொடர்ந்தார். “அனுராதா ரமணன் அவர்களே, கதையில் பொடி வைத்து எழுதுங்கள். பிரசுரம் ஆகும். தனியே பொடி வைத்து அனுப்பிப் பயன் இல்லை…” என்று பேசி அரங்கம் அதிர கைதட்டல் வாங்கிக் கொண்டார்.

எஸ்.வி. சேகர் போன்றவர்கள் பேசினால் தன்னைப் போல பேச்சில் ஒரு சிந்தனை நகர்வைக் காட்டுவார். அது அவரது பாணி. நமது சிந்தனையோடு சேர்ந்து பயணிக்கிற பாவனை காட்டுவார். ஆனால் சட்டென அவர் லயம் பிரிந்து வேறு திசை காட்டும்போது குபீரென்ற நகைச்சுவை வெளிப்படும்.

ஏழு மணிக்கு நாடகம் ஆரம்பிக்க வேண்டும். கூட்டமே வரவில்லை. அரங்க வாசலில் சபா ஆட்கள் யார் உள்ளே வந்தாலும், டிக்கெட் இருக்கா, டிக்கெட் இருக்கா, என்று கேட்டு மடக்குகிறார்கள். மணி ஆறு ஐம்பது ஆகிவிட்டது. இனியும் கூட்டம் சேராவிட்டால் நாங்கள் வெறும் நாற்காலிகளைப் பார்த்து நாடகம் நடத்துகிறாற் போல ஆகிவிடும். சபாக்காரர்களிடம் நான், டிக்கெட் கேட்காதீங்க. உள்ள வரவங்க வரட்டும். நாடகம் பார்க்க நாலு பேராவது வேண்டாமா, என்று சொல்லி சமாதானப் படுத்தி விட்டேன்.

பிறகு பத்து இருபது பேர் உள்ளே வந்தார்கள். சரி. இதுக்கு மேலே காலம் தாழ்த்த வேண்டாம் என்று நாடகத்தை ஆரம்பித்து விட்டோம். நாடகம் போர் அடிச்சதா, வெளியே மழை பெய்து விட்டுவிட்டதா, தெரியவில்லை. பத்து நிமிடத்தில் திரும்ப கூட்டம் கலைந்து பாதிப்பேர் அரங்கத்தை விட்டு வெளியேற எழ ஆரம்பித்தார்கள். அப்பதான் நான் மேடையில் அறிவித்தேன். “வெளியே போக நூறு ரூபாய் டிக்கெட் வாங்க வேண்டும்.”

டாக்டர் ஔவை அவர்களுடன் பழகிக் கொண்டிருந்த காலத்தில் என் இளமைத்  தினவுடன் நான் சொன்ன எத்தனையோ பகடிகளை அவர் நெளிசல் எடுத்திருக்கிறார். ஒருமுறை நான் அவரிடம் இப்படிச் சொன்னேன். “அன்று கோபியரிடம் வஸ்திரங்களைப் பறித்துக் கொண்ட அதே கண்ணன், இன்று திரௌபதி மானங் காக்க ஆடைகளை வழங்கினான்.” உடனே அவர் என்னைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னார். “இங்க எடுத்து அங்க கொடுத்ததாகச் சொல்லணும்ப்பா” என்றார். எத்தனை வேகமாகச் சிந்திக்கிறார் இவர், என்றிருந்தது.

ராணி வார இதழில் பொதுவாக கருத்துப் படங்கள் அத்தனை நுட்பமாக அமையும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஒருமுறை அந்த அதிசயம் நடந்தது. அந்தக் காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆரை மலையாளி என்று பேசியிருந்தார். அதற்கு எம்.ஜி.ஆர் “நான் தமிழன்தான்,” என்று தன்னிலை விளக்கமும் தந்தார். இதைக் கேலியடித்து ராணி வார இதழ் வெளியிட்ட கருத்துப் படம் இன்னும் எனக்கு நினைவு இருக்கிறது. படத்தில் எம்.ஜி.ஆர். பேசுவது போல இருந்தது. அவர் பேசுகிறார். “ஞான் தமிழகத்தில் ஜனிச்சு.”

சாமர்த்தியமாகவும் சமாளிக்கிற விதமாகவும் பேசுவது உரையாற்றுவதில் ஒரு முக்கிய அம்சம். மொத்த சனத்தின் கவனத்தையும் அப்போது ஈர்த்து விடலாம். அதற்கு சில நகைச்சுவைத் துணுக்குகள் பெரிதும் உதவுகின்றன. கவிஞர் நா.காமராசன் ஒருமுறை பேசியது இப்போது நினைவு வருகிறது.

கல்லூரிப் பேராசிரியை ஒருத்தி தன் மாணவனையே காதலித்து, திருமணமும் செய்து கொண்டார். அவருக்கும் அந்த மாணவனுக்கும் பெரும் வயது வித்தியாசம் இருந்தது. அதைச் சமாளிக்க அந்தப் பேராசிரியை சொன்னாராம். “என்ன செய்வது, வகுப்புக்குத் தாமதமாக வருவதைப் போலவே அவன் இந்த உலகத்துக்கும் தாமதமாக வந்திருக்கிறான்.”

சில பிரபல பாடகர்கள் தங்கள் கச்சேரி சோபிக்காமல் போகிற சந்தர்ப்பங்களில் தங்களுக்குப் பிடித்த கீர்த்தனைகளை எடுத்துப் பாட ஆரம்பித்து முட்டுக் கொடுத்து விடுவார்கள். அது ஒரு உத்திதான்.

பிரபல பேச்சாளர் என்றால் கைவசம் கட்டாயம் சில நகைச்சுவைத் துணுக்குகள், அல்லது மேற்கோள்கள் கட்டாயம் வைத்திருப்பார்கள். டாக்டர் ஔவை புத்தக வெளியீடு என்றால் “மை பென் இஸ் மை வெப்பன்” என்று பேசுவார். இளையவர் எடுத்த விழா என்றால், “பொதுவா இளைஞர்கள் ஒன்றுகூடி ஒத்துமையா விழா எடுத்தால் ஆச்சர்யம் தான். ஒருமுறை ஒற்றுமை சங்கம்னு ஆரம்பித்தார்கள். அதற்குப் பேசப் போய்வந்தேன். ஆறே மாதத்தில் அதில் நாலு பேர் தனியாப் போயி ‘அதிதீவிர ஒற்றுமை சங்கம்‘ னு துவங்கி அதுக்கும் என்னைப் பேசக் கூப்பிட்டார்கள்.”

அவரது ஸ்டாக் நகைச்சுவையில் உடனே என் நினைவுக்கு வருவது.

பொதுவா நாம இந்தியர்கள் உயரமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு தாழ்வான இடத்தில் சாப்பிடுவோம். உயரமா பலகை போட்டு அமர்வோம். தரையில் இலை போட்டுச் சாப்பிடுவோம். வெள்ளைக்காரன் எல்லாரும் தாழ்வான இடத்தில் அமர்வார்கள். உயரமான இடத்தில் சாப்பிடுவார்கள். அதாவது நாற்காலியில் அமர்ந்து மேசையில் சாப்பிடுவார்கள்…

“எங்க வீட்டுக்கு ஒரு வெள்ளைக்காரன் வந்தான். அவனுக்குப் பலகை போட்டு இலை போட்டோம். இலைல உட்கார்ந்து விட்டான்.”

• • •

  

Comments

Popular posts from this blog