எஸ். சங்கரநாராயணன்
சிறுகதை
இறந்தும் உயிர் வாழ்தல்
வீரன் பொன்னுசாமிக்கு மேலுக்கு சுகமில்லை. ஒருகாலத்தில் சினிமாவில்
அவர் வில்லன் வேஷம் போட்டால் அப்படி கைதட்டுவார்கள்! ஹீரோ வரும்போது எப்படி பூவும்
காகிதமும் திரையை நோக்கிச் சொரியுமோ அதைப்போல வீரன் பொன்னுசாமி வரும்போது பலத்த கைதட்டலும்
ஊளை விசிலும் தியேட்டரையே அதிரடிக்கும். அவர் பேசும் ஒவ்வொரு வசனத்தையும் காதைத் தீட்டிக்கொண்டு
எதிர்பார்த்துக் காத்திருந்து ரசிப்பார்கள். அவர் கதாநாயகனோடு நேருக்கு நேர் மோதும்
காட்சிகள் பரபரப்பானவை. வில்லன் தோற்றுப்போவது திரைப்பட நியதி. அவர் கதைப்படி தோற்றுப்போனால்
இயக்குநர்கள் அவர் மானம் காத்தாற் போல செத்துப்போகிற மாதிரியோ, தானே அவர் தற்கொலை செய்துகொள்கிற
மாதிரியோ கதை அமைத்துக் கொண்டார்கள். பரிசுத்த வீரன் அவர். இப்போதைய காலங்களில் அவர்
அறிமுகம் ஆகியிருந்தால் கதாநாயகனாகவே அவரை ஆக்கியிருப்பார்கள்.
வீரன் பொன்னுசாமி சாகக்
கிடக்கிறார். இப்போது அவருக்கு வயது அறுபது அறுபத்தைந்து தாண்டியிருக்கும்.
ஒருமுறை கதாநாயகனுடன்
ஆக்ரோஷமான சண்டை. விசாகப்பட்டணம் கடற்கரையில் ஒரு பெரும் பாறையிலிருந்து வாளுடன் குதிக்க
வேண்டும். இயக்குநர் முதல் ஸ்டண்ட் மாஸ்டர் வரை எல்லாரும் அந்தக் காட்சியில் டூப் போட்டுக்
கொள்ளலாம் என்று வேண்டிக் கொண்டார்கள். வீரன் பொன்னுசாமி கேட்கவில்லை. எப்பவுமே இப்படியான
ஆபத்துக்களில் அவருக்கு விருப்பம் அதிகம். தானே நடிக்க அவர் பிடிவாதம் பிடித்தார்.
துள்ளி ஆவேசமாய்க் கீழிறங்குகையில் வழுக்கி விட்டது. சப்பையில் சரியான அடி. கண்ணைத்
திறக்கவேயில்லை. எலும்பு முறிந்திருந்தது உள்ளே. மறுநாள் எல்லா நாளிதழ்களிலும் பிரதான
செய்தி இதுதான். ஒரு நாளிதழ் அவர் விரைவில் குணம் பெற பிரார்த்தனை செய்ய வேண்டிக்கொண்டது. அரசாங்கமே அவரது மருத்துவச் செலவை
ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பும் வந்தது.
மீண்டும் எழுந்துகொண்டு
நடமாட, மாதங்கள் ஆயின. அதற்குள் திரையுலகம் மாறிப் போயிருந்தது. அவர் கையை விட்டு எங்கோ
போயிருந்தது. காட்சிகள், கதையம்சங்கள் என நிறைய மாறியிருந்தன. பெரிய பட்ஜெட் படங்கள்,
சண்டைக்காட்சிகள், சவடால்கள் மாறி எல்லாமே ஒரே வேடிக்கை, நகைச்சுவை என அரிதாரம் மாற்றியிருந்தது
சினிமா. புது கதாநாயகர்கள், புது வில்லன்கள் வந்திருந்தார்கள். வீரமற்ற நாயகர்கள்,
காமெடி வில்லன்கள். வாளாவது? துப்பாக்கிகளின் காலம்.
புதுசாய் ஒருத்தன் வித்தியாசமான
நடை நடக்கிறான். கை தட்டித் தட்டி வசனம் பேசுகிறான். அவனது குரல் ஏற்ற இறக்கங்கள் வித்தியாசமாய்
இருக்கின்றன. அவன் படம் ஒன்றும் பார்த்தார். தோளில் துண்டு ஒன்றைப் போட்டுக்கொண்டு,
அதை என்ன பாடு படுத்துகிறான்! வாயில் சிகெரெட்டை ஆட்டி ஆட்டி அவன் பல் கடித்த வசனம்
பேசினால் கூட்ட மொத்தமும் சிலிர்த்தது. விசில் ஊளை.
வீரன் பொன்னுசாமியால்
திரும்ப நடமாட முடிந்ததே தவிர சண்டைக்காட்சி அது இது என்று இனி ஓடியாட ரொம்ப காலமாகும்
போலிருந்தது. அதற்குள் சனங்கள் அவரை மறந்து விடுவார்கள், என்று அவருக்குப் புரிந்தது.
இனி அவர் தன் படங்களை தொலைக்காட்சியில் எப்பவாவது காட்டினால் உட்கார்ந்து பார்க்க வேண்டியது
தான்.
இந்த ஸ்தானத்துக்காக
அவர் பட்ட கஷ்டங்கள், நஷ்டங்கள் நினைவுக்கு வந்தன. சனங்கள் மத்தியில் அவருக்கு நல்ல
பெயர் இருந்ததைத் தக்க வைக்கிற அளவில் அவர் தான தர்மங்கள் செய்தார். வருஷம் தவறாமல்
கோவில்களுக்குப் பிரார்த்தனை என்று போய்வந்தார். அது செய்தியில் அடிபடுமாறு பார்த்துக்
கொண்டார். ஏழை மாணவனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்டினார்.
எல்லாக் காலங்களும்
முடிவடைந்தன. எப்பவாவது இன்றைய வில்லன்கள் பேட்டி என்று வரும்போது அவர் பெயரை மரியாதையுடன்
சொல்வது உண்டு. நாய்ப் பயல்கள், என்று உரக்கக் கத்துவார். சும்மா பேரைச் சொல்லுகிறான்களே
தவிர, எவனுக்கு அவர் மேல் அக்கறை, மரியாதை இருக்கிறது? போட்டி ஆள் ஒழிஞ்சிட்டான், என
அவர்கள் சந்தோஷப் பட்டிருப்பார்கள். ஹா, நானே அப்படித் தான் இருந்தேன்! அது ஒரு காலம்.
எவன் அவரை வீட்டுக்கு வந்து பார்த்தான்? ஒருத்தனும் இல்லை. தன்னை அடக்கிக் கொண்டு வீட்டில்
படுத்தபடி அதை வேடிக்கை பார்ப்பார். சரி, அந்தமட்டுக்கு பெயரை ஞாபகம் வெச்சிக்கிட்டுச்
சொல்றானுகளே… வறட்சியானதொரு புன்னகை அவரிடம் கிளம்பும்.
இருந்த வெறியில் அவர்
தன் வாழ்க்கையில் ஒரு தப்பு பண்ணினார். தன்னை இந்த சனங்கள் மறந்துவிட மாட்டார்கள்,
புறக்கணித்துவிட மாட்டார்கள், என்ற நம்பிக்கையில் தன்னையே கதாநாயகனாக வைத்து அவர் சொந்தப்படம்
எடுத்தார். அதிலிருந்து மீளவே முடியவில்லை அவரால். தன்னை வில்லனாகவாவது போட்டுக்கொண்டிருக்கலாம்.
அல்லது தனக்கேற்ற வில்லன்பாணி குணச்சித்திர வேஷமாவது போட்டிருக்கலாம். இந்தக்கால பிரபல
வில்லன் பாணியிலேயே அதைவிடவும் பிரமாதமாக நான் செய்கிறேன் பார், என்கிற விபரீத முயற்சியில்
ஈடுபட்டிருக்க வேண்டாம். வில்லனாகவும் இல்லாமல் கதாநாயகனாகவும் இல்லாமல் படம் ரெண்டுங்கெட்டானாய்
வந்தது. கோவேறு கழுதை! படம் வளர வளர இடைச்செருகலாய்க் காட்சிகள் புகுத்தியது பிசகு.
கதை எந்த திசையில் போகிறது என்றே சனங்களுக்குப் புரியவில்லை.
படம் குப்புற விழுந்ததில்
முன்பு சப்பையில் பட்ட அடியை விட பலமாய் அடி விழுந்தது. பெருத்த நஷ்டம். எழுந்துகொள்ளவே
முடியாமலாயிற்று. படத்தை முடிக்க முடியாமல், போட்ட பணத்தை எடுக்க முடியாமல், கடன் தர
ஆள் இல்லாமல், முடித்த பின் வாங்க ஆளும் இல்லாமல்… ஒருவழிப் பாதைபோல அவர் இறுதிக்கட்டம்
முடிவானாப் போலாயிற்று. சனங்கள் மறந்து விட்டால் அப்புறம் அவர் உயிரோடு இருந்தும் சினிமாவில்
இறந்தவர் போலத்தான்… என்றிருந்தது நிலைமை.
பத்திரிகைகள் அவரைக்
கண்டுகொள்ளவில்லை என்பதே அதிர்ச்சியாய் இருந்தது. பேட்டிக்காகக் காத்திருந்தவர்கள்,
கூப்பிட்டு விட்டாலும் அலட்சியம் காட்டியது தாளவே முடியவில்லை. அவ்வளவில் மன உற்சாகத்தோடு
உடல பலமும் ஒடுங்கிவிட்டது. அடிக்கடி வியாதி என்று உடம்பைப் போட்டு வாட்ட ஆரம்பித்தது.
வளமான நாட்களில் ஆடிய ஆட்டங்கள்… திரும்பிக் கொண்டன!
குடிப்பழக்கம் ஆளையே
ஆட்டுவித்தது. வீடு வாசல் தோட்டம் துரவு என்று கையிருப்பு அனைத்தையும் விற்றுத் தீர்த்தார்.
நல்லா இருந்த காலத்தில் அந்த பூமி இந்த பூமி என்று பூமியையே பார்க்காமல் வாங்கிக் குவித்தார்.
அந்த பூமியை இப்ப கூட பார்க்காமல் கையெழுத்திட்டு விற்றார். குடி ஒன்றே மாற்றாக இருந்தது.
புலம்பிக்கொண்டு குறியில்லாத குறியில் உரக்க உளறிக்கொண்டு, காறித் துப்பிக் கொண்டு…
அவரையே அவருக்குப் பிடிக்காமலாச்சு. சாவும் வரவில்லை.
ஹா. நான் யாரு? வீரன்!
வீரன் பொன்னுசாமி… சாவு அண்டுமா என்னை? மிஞ்சியதெல்லாம் போலிப் பெருமை தான்… படுத்துக்
கிடக்கிறார். உள்ளே திருட நுழையும் பூனையை விரட்டக்கூட எழுந்து போக முடியாத வீரன் நான்…
கர்ர் என்று சளியைத் திரட்டி மண்சட்டியில் துப்பினார்.
குடிக்கக் காசு வேண்டி
எதையும் செய்கிற அளவில் கீழிறிங்கிப் போனார் அவர். மூளை வறண்டிருந்தது.
இருபத்திமூணு வயதில்
முறையான திருமணம். என்றாலும் செய்தி வெளியே வராமல் – அது அவரது சினிமா வாழ்க்கையை பாதிக்கும்,
என்று எல்லாரும் அபிப்ராயப் பட்டார்கள் – திரிவேணி அவரோடு வந்து இணைந்து கொண்டாள் வாழ்க்கையில்.
எக்ஸ்ட்ரா நடிகை. அவரது படங்களில் எல்லாம் சின்னச் சின்ன காட்சிகளில் அவள் வருமாறு
அவர் சிபாரிசு இருந்தது. அவளை அவருக்குப் பிடித்திருந்தது. அவளது பல்வரிசை அழகாய் இருக்கும்.
தயாரிப்பாளர், சினிமாக்காரர்கள் இஷ்டப்படி அவள் பணிந்திருந்தால் ஒருவேளை ரெண்டாம் நாயகி,
கதாநாயகி என அவள் கொடி உயர்ந்திருக்கக் கூடும். அவளுக்கும் வீரன் பொன்னுசாமியிடம் என்னவோ
ஒரு கிறுக்கு. அவரை அவள் விரும்பி, அவருக்கும் அவள்மீது ஒரு கண் என்று தெரிந்ததும்
மற்ற சினிமா ஆட்கள் அவளைத் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கிக் கொண்டார்கள்.
அவரைக் கல்யாணம் செய்துகொண்ட
அளவில அவளது சினிமா ஆசைகள் தணிந்தன. இனி வாழ்க்கை என்பது இவருக்கு அனுசரணையாக இருந்தாப்
போதும், என்றே தோன்றிவிட்டது. குறைந்தபட்சம் அவருடனாவது சோடியாக நடித்திருக்கலாம்.
அவரது காதலை ரகசியமாக வைத்திருக்கவே அவர் விரும்பியபோது அதுவும் நடக்காமலாயிற்று.
எல்லாம் நன்றாக ஓடிக்கொண்டிருந்த
வரை ஒரு தொந்தரவும் இல்லை. அவரது சினிமா வாழ்க்கை பூமிக்குள் உள்ளிழுக்க ஆரம்பித்தது,
என்பதைப் பற்றிக்கூட இல்லை. அவர் குடிப்பார் என்பது அவளுக்குத் தெரியாதது அல்ல. என்றாலும்
சொந்தப்படம் என்று, படம் எடுப்பது பற்றி எதுவுமே தெரியாமல், இத்தனை பெரிய ஆபத்தை அவர்
விலைக்கு வாங்குவார், என்று அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கேட்டால் ஒத்துக்கொள்ள
மாட்டார். யார் அவர்? வீரன் பொன்னுசாமி… ஆபத்துதான் அவரது மூலதனமே. அதில் வெற்றி பெறுவது
தான் அவரது விசேஷமே… என்பார். அவளது எச்சரிக்கைகளை அவர் நிராகரிக்கவே செய்வார். உண்மையில்
சினிமாவில், எந்தப் பெரிய வெற்றிக்கும் பின்னால், மகா பெரிய சவால் எதிர்கொள்ளப் பட்டிருக்கிறது,
என்பதை அவள் அறிவாள். என்றாலும் பயமாய், ரொம்ப பயமாய்த் தான் இருந்தது. அவர் கண்களில்
அந்த வெறி… ஒருவேளை இவர் ஜெயிக்கலாம், என்றும் தோணியது.
இல்லாவிட்டாலும், அவளுக்கு
சினிமா பற்றி என்ன தெரியும்?
யானை புல்லைக் கடித்துத்
துப்புகிறாப் போல காலம் அவரை அரைத்துச் சக்கையாய்க் கீழே எறிந்தது. வெறும் எலும்புக்
கூடாய் படுத்த படுக்கையாய்க் கிடந்த கணவரைப் பார்க்க சகிக்கவில்லை. கையில் காதில் இருந்ததைக்
கூட விற்றாகி விட்டது. எல்லாம் அவர் போட்டதுதானே? போனால் போகிறது. அவர் சரியானால் போதும்…
என இருந்தது. தாலிக்கொடியையே அடகு வைத்திருந்தாள். சொந்த பங்களா. வாடகை வீடாகி… வீடும்
மாறி மாறி, ஓடிக் கொண்டே இருந்தது. ஓட முடியாத அவருடன் ஓட வேண்டிய வாழ்க்கை.
பழைய சிநேகிதர்களை மனதில்
வைத்துக்கொண்டு அவள் திரும்பவும் சினிமாவில் வாய்ப்புகள் தேடினாள். கல்யாணம் ஆனவள்.
திரையுலகம் மறந்த முகம். யாராச்சும் நினைவு வைத்துக்கொண்டு, அதுவும் பரிதாபப்பட்டு
சிறிய சிறிய பாத்திரங்கள் தந்தால் உண்டு. வசனம் பேசினால் காசு அதிகம் கிடைக்கும். சும்மா
முகம் மாத்திரம் காட்டினால், பின்னணிக் கூட்டம் என்று வந்தால் துட்டு குறையும்… அதைப்பத்தி
என்ன? அவர்கள் சொல்வதுதான். அதிர்ஷ்டம் இருந்தால் வசன வாய்ப்பு வரலாம். அதற்கு எஜன்ட்
கமிஷனும் அதிகம்.
.jpg)
வீரன் பொன்னுசாமிக்கு
கால் ஓய்ந்த காலம். வெளியே பொழுது லேசாய்க் குளிர்ந்தாலே ஒரு இழுப்பு வந்தது. ஓயாத
விடாத இழுப்பு. மூச்சுவிட சிரமப்பட்டார். இருமல் வந்தால் அடங்குவதே இல்லை. பேச வந்தாலே
இருமல் வந்தது. ஒருநாய் ஆரம்பிக்க இன்னொரு நாய் தொடர்வதைப் போல இருமல் அடங்க மறு இருமல்
எழும்பியது. மருந்துகள் பிரயோசனப் படவில்லை. உட்கார படுக்க என எதிலும் நிலைகொள்ள முடியாமல்
ஒரு தவிப்பு. அவரைத் தனியே விட்டுவிட்டுப் போகவே திரிவேணி பயந்தாள். அவர ஆத்திரம் அவசரம்
என்று தண்ணி கேட்டால்கூட ஆள் வேணுமே, என்று கவலையாய் இருந்தது.
சினிமாவே இதுதான். ஒருகாலத்தில்
ஏகபோக வாழ்க்கை என்றால் இன்னொரு காலத்தில் இப்படித்தான். என்றாலும் அவள்பார்க்க நிறையப்பேர்
இதில் சுதாரித்து சமாளித்து, சம்பாதித்த காசை சரியாகப் பயன்படுத்தி பிள்ளைகளை நன்றாகப்
படிக்கவைத்து முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறார்களே. கௌரவமாக வாழ்கிறார்களே. நாம
தான் இப்படி பின்தங்கிப் போனோம்…
அவளுக்கு எப்போதுமே
கணவரிடம் மரியாதை உண்டு. இந்த வாழ்வு அவர் தந்தது. அவர் உச்சத்தை எட்டியபோதும் அவளிடம்
அவர் காட்டிய பிரியம் மறக்க முடியாதது. எத்தனை பெரிய விஷயம் இது… என அவள் மனம் நெகிழும்.
அரசல் புரசலாய் அவர் படப்பிடிப்பிலும் வெளியூர்களிலும் வேறு வேறு பெண்களுடன் பழகுவது
அவள் காதுக்கும் வந்தது, என்றாலும் அவர் மனதில் அவளுக்கான இடம், வெறும் உடல் சார்ந்தது
அல்ல, என்று அவள் அறிவாள். அவருக்கே தெரியாமல் அவளிடமும் சில ‘நெறிசார்ந்த‘ இழப்புகள்
உண்டுதான். அது அவள்மனசுக்கு மாத்திரமே தெரியும். அவரைக் காதலிக்க ஆரம்பித்ததும் அவள்
மாறிப்போனாள்.
கல்யாணம் முடித்ததும்
தன்னை அவள் அவர்மனைவியாகவே முழு அளவில் ஈடுபடுத்திக் கொண்டாள். தினசரி பொட்டும் பூவும்
வைத்துக் கொள்ளும்போது கடவுளிடம் அவரது நல்வாழ்க்கையை வேண்டிக்கொண்டாள். அது அவளுக்குப்
பிடித்திருந்தது. நோயுடன் அவர் போராடும் போது அவள்தான் எத்தனை துன்பப்பட்டாள். ஒவ்வொரு
முறையும் மருந்துகள் என்றும் டாக்டர் என்றும் செலவு கட்டற்று இருந்தது. கையில் காதில்
கழுத்தில் பொட்டு தங்கம் இல்லை. என்ன செய்வது?... ஏஜென்ட்டைப் போய்ப் பார்த்தாள். “ம்…
ம்“ என்கிறான் அலட்சியமாக. “உன் வயசுக்கு ஏத்தாப்ல கதைல எதுனா கேரக்டர் வர வேணாமா?
சும்மா தொந்தரவு செஞ்சா எப்பிடி?“ என்று எரிந்து விழுந்தான். அவன் சொல்வதிலும் நியாயம்
இருந்தது. “நீ என் பிள்ளை மாதிரி. ரொம்ப கஷ்டம். அதான்... ஞாபகம் வெச்சிக்க. ஒருவார்த்தை
சொல்லிவிடு. ஓடியாந்திருவேன்… என்ன?“ என்று அசட்டுச் சிரிப்புடன் அவன் முகத்தைப் பார்க்கிறாள்
திரிவேணி.
லேசான தூறல். வீரன்
பொன்னுசாமிக்கு அதுவே தாளவில்லை. “குளிருது. குளிருது…“ என்கிறார். இருக்கிற கந்தல்
கிழிசல் எல்லாம் போர்த்தியாகி விட்டது. குளிர் தாளாமல் உடம்பு நடுங்குகிறது. நல்ல ஜுரம்
இருக்கும் போலிருக்கிறது. நெஞ்சை நீவி விட்டபோது அவர் அடக்கமாட்டாமல் இருமி, அவள் கையெல்லாம்
சளி. பரவாயில்லை என்று புடவையில் துடைத்துக் கொண்டாள். டாக்டரைக் கூட்டிவரலாம் என்றால்
கையில் சுத்தமாய்க் காசு இல்லை. என்ன செய்ய என்று திகைப்பாய் இருந்தது. அழுகையாய் வந்தது.
அவர் படுகிற அவஸ்தைக்கு இவர் போய்ச்சேர்ந்தால் கூட தேவலையாய்ப் பட்டது. சீச்சீ, என்று
தன்னையே திட்டிக்கொண்டாள். எழுந்துபோய் சாமி படத்தின் முன் நின்று குங்குமத்தை இட்டுக்கொண்டு
கன்னத்தில் போட்டுக்கொண்டாள். கடவுளே என் கணவனைக் காப்பாற்று!
இந்த மழைக்கு ஷுட்டிங்
இருக்குமா? ஏஜென்ட்டைப் போய்ப் பார்த்து என்ன செய்ய? திரும்பி அவரைப் பார்த்தாள். ஏனோ
பயமாய் இருந்தது. உதவிக்கு என்றுகூட இங்கே கூட யாரும் இல்லை. பிள்ளை குட்டி என்று பிறக்கவில்லையே
என்று ஏக்கமாய் இருந்தது. அந்தமட்டுக்கு இல்லாததும் ஒருவிதத்தில் நல்லது, என்றும் பட்டது.
மனசில் இத்தனைநாள் இல்லாமல்
ஒரு படபடப்பு. உடம்பே நடுங்கியது. தனியே அந்த அறையில் இருக்கவே பயமாய் இருந்தது. அந்த
முகம்… அந்த வேதனையைப் பார்க்கவே முடியவில்லை. அந்த நெஞ்சில் இருந்து ஒரு உறுமல் ஒலி.
ஒரு தைல ஒத்தடம் கொடுத்தால் நல்லது. போய்ப் பார்த்தாள். தைல பாட்டில் காலியாய் இருந்தது.
வந்து வெறுங் கையால் அவர் உள்ளங்காலைப் பரபரவென்று தேய்த்து விட்டாள். கடவுளே… என்று
மனசில் அரற்றினாள்.
“பெரிம்மா?“ என்று வாசலில்
குரல். அவளால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. பரபரப்புடன் வாசலுக்குப் போனாள். “ஒரு
படக் கம்பெனி கூப்பிடறாங்க…“ என்று வந்து நிற்கிறான் ஏஜென்ட். அவளால் தன் கண்களையே
நம்ப முடியவில்லை. கண்ணைத் துடைத்துக்கொண்டு “ஒரே நிமிஷம்ப்பா. வந்துர்றேன்…“ என்று
உள்ளேபோய்க் குங்குமம் வைத்துக்கொண்டாள். கடவுளே, வசனம் வரும் காட்சியாக இருக்க வேண்டும்…
என்று வேண்டிக்கொண்டாள்.
திரும்ப கணவனிடம் வந்தாள்.
“நான் போயிட்டு வந்திறட்டுமா?“
“ம்?“
“ஏஜென்ட் வந்திருக்காரு…“
“ம்“ என அவர் கண்ணை
மூடிக்கொண்டார். கண்ணில் வெந்நீர் வழிந்தது.
“சீக்கிரம் வந்துருவேன்…“
என அவர் பக்கம் குனிந்தாள்.
“நேரமாச்சிம்மா…“ என
வாசலில் இருந்து குரல் கேட்டது.
மழை விடுகிறாப் போல
இல்லை. நல்லவேளை. இந்த மழையிலும் படப்பிடிப்பு நடத்துகிறார்களே, என்றிருந்தது. எல்லாம்
நம்ம யோகம் தான். அதுவும் வீடுதேடி ஆள் அனுப்பியது... நல்ல விஷயம்.
“காலையிலேயே சொல்லியிருக்கலாமே
ராம்தாஸ்?” புடவைக் கிழிசலை தெரியாதபடி இழுத்து மறைத்தபடி மழையில் கிளம்பினாள் அவள்.
“ஐய அதையேன் கேக்குறீங்க?
அந்த லலிதாங்கி இல்ல…? மகா ரவுசு பிடிச்ச பொம்பளை அம்மா அவ. அவ சீன் இன்னைக்கு. அந்தம்மா
வரல. சரி டூப் போட்டு எடுத்திறலாம்னு கேட்டாங்க…“
“சரி சரி.“
லலிதாங்கி நடிக்கிற
காட்சின்னா வசனம் இருக்கலாம், என்பது முதல் எண்ணம். நினைக்கவே மகிழ்ச்சியாய் இருந்தது.
ஆட்டோ வந்திருந்தது அவளை அழைத்துப் போக. உற்சாகமாய் ஏறிக்கொண்டாள்… வீடு திரும்புகையில்
தைலம் எதாவது வாங்கிட்டு வரணும், என ஞாபகப் படுத்திக் கொண்டாள். என்ன காட்சியாக இருக்கும்
தெரியவில்லை. எப்படியும் முகம் தெரியாது. அவள் டூப் தானே? நடிக்க சிரமப்பட வேண்டாம்.
சட்டுப் புட்டென்று வேலை முடிந்து விடும். ஆனால் சில சமயம் கூட நடிக்கிற ஆர்டிஸ்ட்
சொதப்பி, ரெண்டு டேக் மூணு டேக் வாங்கினால், நேரமாகி விடும். பெரிய நடிகர் சரியாகப்
பண்ணாவிட்டால் அடுத்த டேக் என்று சொல்லி நம்மைத் திட்டுவதும் உண்டு…
அவரைத் தனியே விட்டுவிட்டு
வந்திருக்கிறேன்… என நினைக்க திரும்ப அந்த பயம் வந்தது. வேணாம். அதை மறந்து இப்போது
இந்த விஷயத்தை நினைக்க அவள் விரும்பினாள். ஷுட்டிங் இடம் பார்க்கவே பரபரப்பாய் இருந்தது.
அவளை ஏறயிறங்கப் பார்த்தபடி டைரக்டர் “இந்தம்மா தான் கிடைச்சதா?“ என்று கேட்டபோது பயமாய்
இருந்தது. “ என்ன சீன்னாலும் பண்ணுவேன் சார்“ என்று புன்னகைத்தாள் நம்பிக்கையுடன்.
“போயி அந்தக் கட்டில்ல
படு…“ என்றார் இயக்குநர். இன்னிக்கு வியாதிக்காரி வேஷம் தான் போலிருக்கிறது… வந்து
நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டு வைத்தார்கள். போய்க் கட்டிலில் படுத்ததும் உடலைப்
போர்த்தினார்கள். கால் விரல்களைக் கோர்த்துக் கட்டினார்கள். மூக்கில் பஞ்சடைத்தார்கள்.
ஒரு அப்பா நடிகர் உள்ளேயிருந்து பாய்ந்து வந்தார். “இந்தத் தள்ளாத வயசுல என்னைத் தவிக்க
விட்டுட்டுப் போயிட்டியா மரகதம்…“ என்று பெருங்குரலில் ஆரம்பித்தார்.
கண்ணைமூடிப் படுத்திருந்தாள்
அவள். அவளுக்கு தன் கணவர் ஞாபகம் வந்தது.
*
storysankar@gmail.com – Mob 91 97899
87842
Comments
Post a Comment