short story - சிலேட்டில் எழுதிய கவிதை



சிலேட்டில் 

எழுதிய 

கவிதை

எஸ். சங்கரநாராயணன்


தாயாரம்மாள் இறந்து விட்டாள். அது அவருக்குத் தெரியாது. மணிவாசகம் இரவு வெகு நேரம் கிரிக்கெட் மாட்ச் பார்த்தார். காலையில் சற்று கண்ணசதியாய் இருந்தது. எழுந்து கொண்டபோது வெளிச்சம் வந்திருந்தது. எப்பவுமே அவர் சீக்கிரம் எழுந்து கொள்வார். வெளிச்சத்தை வரவேற்பது அவருக்குப் பிடிக்கும். மணிவாசகம் கண்ணைத் திறந்து பார்த்தபோது வெளிச்சம் ஜன்னல்களில் மஞ்சள் பூசியிருந்தது. அவருக்கு வெட்கமாய் இருந்தது.

எழுந்து பக்கத்தில் பார்த்தார். மஞ்சள் வெயில் மனைவியின் முகத்தில் அடித்தது தனிக் களையைத் தந்தது. இன்னும் அவள் எழுந்து கொள்ளவிலலை என்பதே ஆச்சர்யம். அவருக்குப் பசி பொறுக்காது, என்பது அவளுக்குத் தெரியும். இன்னும் தூங்குகிறாள், என்றால் உடம்பு கிடம்பு சரியில்லையோ என நினைத்தார். மணிவாசகம் உருண்டு அவள் கிட்டத்தில் போனார். அவளைத் தொட்டார். அவள் கை சில்லென்றிருந்தது.

மூச்சு இல்லை. தாயாரம்மாள் இறந்து போனாள். சுமங்கலி. வெயில் அவள் உடலில் மஞ்சள் பூசியிருந்தது. ஒரு நிமிடம் என்ன செய்ய என்றே புரியவில்லை அவருக்கு. என்ன இது? இப்படி யெல்லாம் நடந்தால் என்னதான் செய்வது? அவள்.. அவரது அருமை மனைவி… இறந்து விட்டாள். எப்போது என்றே அவருக்கு, பக்கத்தில் தான் படுத்திருந்தார் அவர், தெரியாது. அழ விரும்பினார். அழுகை வரவில்லை. உடம்பு நடுங்கியது. குபீரென்று அடிவயிற்றில் பள்ளம் விழுந்தது. பயம் அல்ல, பசி என்றுதான் தோன்றியது. ரொம்ப பலகீனமாய் உணர்ந்தார்.

ஹ்ம். அந்த வேளை வந்து தான் விட்டது. இனி உலகம், அவர் உலகம் பற்றிய புதிய கேள்விகள் கிளைத்து விடும்… ஹா… என வாயை விரித்து குளிர்ந்த காற்றை உள்ளே இழுத்தார். அட நாயே கேடுகெட்ட நாயே, அவள்… உன் அருமை மனைவி இறந்து விட்டாள். அதற்கு அழாமல் உன்பாட்டை யோசிக்கிறாய்… என தன்னை ஒரு அறை கன்னத்தில் அறைந்து கொண்டார்.

அழுகை வரவில்லை. வரத்தான் இல்லை. அப்படியே சுவரில் ஒரு அறை கொடுத்தார். வலி. வலிக்கட்டும். இன்னொரு அறை கொடுத்தார்… திடீரென்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். நான்… என்ன இது… என்ன செய்கிறேன் நான். ஏண்டா உனக்குப் பைத்தியமா? தன்னையே கேட்டுக் கொண்டார். இப்ப… நான் இப்ப என்ன செய்ய வேண்டும்?

அவர்களுக்கு ஒரே பெண். சாந்தினி. அவள் கணவன் சோமசேகர். அவர்களுக்கு ஒரே பெண்குழந்தை. நந்தினி. அவர்… ஆமாம். முதலில் சந்தினியைக் கூப்பிடு… கூப்பிட்டார். எடுத்தது நந்தினி. “ஹுஸ் ஸபீக்கிங்?“ என்கிற கொஞ்சும் குரல்.  பேத்தியின் குரல். சிலிர்த்தது அவருக்கு. “அடிக்குட்டி நான் தாத்தா பேசறேன்…“ அதைச் சிரித்துக்கொண்டு சொல்ல நினைத்தார். முடியவில்லை. “தாத்தா? ஹவ் ஆர் யூ?“ என்று கேட்டது குழந்தை. தாத்தா குரலைக் கேட்டதில் அதற்கு சந்தோஷம். இப்படி எதிர்பாராமல் தாத்தா அழைக்கிறார், என்றால் என்ன விவரம், என்ன அவசரம் என்றெல்லாம் யூகிக்க வேணாமோ? அதற்கென்ன தெரியும் பாவம்… ம். ஹவ் ஆம் ஐ?... என்று தன்னையே கேட்டுக் கொண்டார்.

“அம்மாட்ட குடும்மா போனை…“

“அடாடா…“ என்றாள் சாந்தினி. “சரிப்பா. நாங்க உடனே வரோம்ப்பா… கவலைப்படாதே. உதவிக்கு அங்க… கூட…“

“அதெல்லாம் நான் பாத்துக்கறேன்…“ என்றார் அப்பா. “கைல பேங்க் சாவி இருக்கு. சில ஃபார்மாலிடிஸ்… அவர் வேற டில்லி போயிருக்கார். அங்கேர்ந்தே வந்துருவார்னு நினைக்கிறேன்… திரும்ப நான் வர்றதைப் பத்திச் சொல்றேம்ப்பா .“

நிகழ்ச்சி நிரல். அவள் வங்கி மேலாளர். பதவி சார்ந்து எதையும் அடுக்கான உத்தரவுகளோடு அரங்கேற்றுபவள். வேலைக்குச் சேர்ந்த ரெண்டே வருடம். சிஏஐஐபி தேறினாள். மேலாளரானாள். கணவன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பிசினெஸ் எக்சிக்யூடிவ்…. பணம் பணம் என இறக்கை விரிக்கிறார்கள்.

“சரி.“ என்றார் மணிவாசகம். என்னாச்சிம்மா, நாம தாத்தாவைப் பார்கக்ப் போறோமா, என்று பேத்தி எதோ கேட்டது. ஒலி தேய தொலைபேசி இணைப்பு துண்டிக்கப் பட்டது. உதவிக்கு… என அப்போது தான் தோன்றியது. பக்கத்து வீட்டில் ராமபத்ரன் இருக்கிறார். தனிக்கட்டை. மனைவி இறந்து பத்து வருடங்கள் ஆயிற்று. அவர் கூட கல்யாணம் ஆகாத தங்கை ஒருத்தி, வயசு 65, இருக்கிறாள். அவர்கள் பாடு ஓடுகிறது.

மரணத்துக்குப் பின் எத்தனையோ ஏற்பாடுகள் இருக்கின்றன. ராமபத்ரன் அந்தத் தெருவில் எல்லா காரியங்களுக்கும் முன்நின்று எடுத்துச் செய்கிற ஆள்தான். சிலருக்கு அப்படியொரு ஜாதகம். வலிய வந்து தன்னாலான உதவியைச் செய்வது அவர்கள் சுபாவம்…

“ராமபத்ரன்?“ என்று அவரகள் வீட்டு வாசலில் நின்று மணிவாசகம் கூப்பிட்டார்.

**
யதானாலே இப்படித்தான். உலகம் நின்று நின்று கிளம்புகிறது. வாகனம் ரிசர்வில் ஓடுகிறாப் போல.. சிறு அதிர்வுகள். கூடிய சீக்கிரம் எரிபொருள் தீர்ந்து போகப் போகிற அடையாளம் அது. என் முடிவு, எனக்கும் முடிவு வந்து விட்டதா?

மரணம். ஹா. இறந்து போகிறவர்கள் வாழ்க்கையில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். வாழ்க்கை சுமையாய் ஆகிப் போகிறது சில சமயம். இறக்கிவைக்க முடியவில்லை. இல்லாவிட்டாலும்… இது என் பாரம். இதை யாரிடம் நான் கைமாற்ற முடியும்?

எதிர்வீட்டு ராமபத்ரனும் அவரது வயதான தங்கையும் சேர்ந்து காலத்தை ஓட்டுகிறார்கள். அவளுக்கே அடிக்கடி முடியாமல் போய் இவர்தான் பாதிநாள் அடுப்பு காரியங்கள் பார்க்கிறார். ஒரு சுக்குத் தண்ணீ. ரசம்… இப்படி எதாவது பண்ணி காலத்தை ஊப்பென்று தள்ளிப் போகிறார்கள். காலம் நகர மறுக்கிறது. இளமையில் நிற்க மறுத்த காலம், இப்போது நகர மறுக்கிறது.

ராமபத்ரன் வந்து இவரது டைரி பார்த்து சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் தகவல் சொன்னார். வீட்டில் தொலைபேசி இருப்பது, அதுவும் வேலை செய்வது நல்ல விஷயம் தான். என் சாவு எப்படியோ, என திரும்ப நினைத்துக் கொண்டார். எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் வேண்டும். வாழ்வ்தற்கு மாத்திரம் அல்ல, செத்துப் போகவும் அதிர்ஷ்டம் கண்டிப்பாகத் தேவை.

சாந்தினி வசிப்பது சென்னையில். அதன் பரபரப்பு அவருக்கு ஒட்டவில்லை. அவளே அவருக்கு ஒட்டவில்லை. பரபரப்பு அவளை இயக்கினாற் போலிருந்தது. நகர மாந்தர்கள், யாரோடும் ஒட்டாமலேயே ஈரப்பசை இல்லாமலேயே எப்படியோ வாழ்க்கையை முடித்து விடுகிறார்கள். மற்றவர்கள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவும் முயற்சி செய்கிறது இல்லை, என்பது ஆச்சர்யம் தான்.

மதுரை வரை விமானம். பிறகு கால் டாக்சி என்று கடுகி வந்தாள் சாந்தினி. கவலை என்பதை விட கடமை என்பதில் அவள் கவனம் மிகுந்தவள். அலுவலக ஒழுங்கு அது. பெண்ணே, ஒழுங்கற்றது தான் வாழ்க்கையின் அழகு. குழந்தையின் கிறுக்கல் எத்தனை அழகு. குழலினிது யாழினிது அல்ல… மழலைச் சொல், அதன் தத்தக்கா பித்தக்கா நடை, அனைத்தும் இனிது. நீங்கள் கூட வார இறுதியின் அந்த ஒருநாள் ஓய்வு, அதை எப்படிக் கொண்டாடுகிறீர்கள்? அதன் ஒழுங்கற்ற தன்மையை எத்தனை நேசிக்கிறீர்கள்…

நாலைந்து மணி நேரத்தில் மாப்பிள்ளை சோமசேகர், அவனும் வந்துவிட்டான். எல்லாரிடமும் துட்டு இருக்கிறது. இல்லாவிட்டாலும் அவசரம் என்று செலவு செய்ய கிரெடிட் கார்ட் வேறு வைத்திருக்கிறார்கள். நேரே அவரிடம் வந்து, ‘த்ச்‘ என்றான். “நீங்க மனசைத் தளர விடக்கூடாது…“ என்றான். தலையாட்டினார்.

தாயாரம்மாள் காரியங்கள் மௌனமாக நடந்தேறின. அந்தக் குழந்தை நந்தினி… அதற்கு எவ்வளவு புரிகிறது. நந்தினி பயப்படுவாள், என தயங்கித் தயங்கி சாந்தினி அவளைக் கூட்டி வந்தாள். “பாட்டி செத்துட்டாங்களாம்மா?“ என்று நந்தினி கேட்டபோது, அதுவரை தெரியாத அழுகை… பொங்கி வெடித்துவிட்டது அவரில் இருந்து. உடல் குலுங்க அவர் தாள மாட்டாமல் அழுதார். எல்லாரும் அவர் அழட்டும் என்று விட்டு விட்டார்கள்.

அவரே கொள்ளி வைத்தார். நியதிகள் காத்திருப்பது இல்லை. அவருக்கும் ரொம்ப அதிர்ச்சியான சாவு எல்லாம் இல்லை. உன் காலம் ஆயாச்சா, சரி, என்றிருந்தது. என் காலம், என் முடிவு எப்போது? இப்போது என் முறை. நான் காத்திருக்கிறேன். பெண்ணிடம் போய் உட்காரக் கூடாது, என்று வைராக்கியம் வைத்திருந்தார். இப்ப என்ன செய்ய தெரியவில்லை. உதவி என்று இந்த கிராமத்தில் யார் கிடைப்பார்கள்? தன் காரியம் ஒருகாரியம் பார்த்துக் கொள்ளத் தெரியாதவர். அவரை விட்டுவிட்டு ஒரு நாள் ஒரு பொழுது தனியே வெளியே இறங்காதவள் தாயாரம்மாள். பெண்ணா அவள், குல தெய்வம் அல்லவா அவள். உன்னை இன்னமும் என்கூட இரு என்று சொல்ல மாட்டேன்… என நினைத்துக் கொண்டார். இத்தனை நாள் நீ தாக்குப் பிடித்ததே பெரிசு. போய் வா… நன்றி.

விரைவில் சந்திப்போம், என நினைக்கையில் திரும்ப கண்ணீர் வந்தது.

வாசல் திண்ணையில் உட்காந்திருந்தார். இப்போது அடிக்கடி உள்ளே ஒரு பயம் வந்து ஆட்டுகிறது. நான் தனி என்கிற அந்த ஆதங்கத்தைத் தவிர்கக முடியவில்லை. மாப்பிள்ளை நல்ல மனுசன் தான். சேதி கேள்விப்ட்டு உடனே கிளம்பி வந்துசேர்ந்து விட்டான். சோமசேகர்… “நாங்க இருக்கம். கவலைப் படாதீங்க மாமா…“ எனற்ன். அவர் என்னவோ பதில் சொல்லுமுன் அவனது அலைபேசி ஒலித்தது. “ஒன் மினிட்“‘ என எழுந்து போய் விட்டான். நாகரிகம்னா என்ன வென்றால், அருகில் இருப்பவர்கள் தூரமாகவும் தூர இருப்பவர்கள் கிட்டத்திலுமாக மாற்றிவிட்டது நாகரிகம்… என நினைத்துக் கொண்டார். இது அவர்களுக்கு பண அறுவடைக் காலம். நான்…  என் வயசில் அது எனக்குப் பிடிக்கவில்லை என்பது முக்கியம் அல்ல… என நினைத்தார். அந்த வயசில், அவர்கள் அப்படி இருப்பது, அதுதான் அழகு, நியாயம்… என்று தோன்றியது.

சாந்தினி பேசியதை வைத்து அவள் மனசில் என்ன இருக்கிறது என்றே யூகிக்க முடியவில்லை. “நீ அங்க வர்றதும், வந்து எங்ககூட இருக்கறதும்… உன் இஷ்டம்ப்பா. அதைப் பத்தி நான் ஒண்ணும் சொல்லல. ஆனால் நீ எனக்காக அங்க வந்து இருக்கேன்னு ஆயிறப்டாது. உனக்கு அந்த நகர வாழ்க்கை பிடிக்குமா தெரியாது. இங்கன்னா ஏழு ஆனா ராத்திரி. ஓய்வுன்னு ஆரம்பிச்சிப் பழகிட்டே நீ. அங்க எங்களுக்கு ராத்திரியே கிடையாது… வெளிச்ச உலகம்.“

இங்கயும் பாதி ராத்திரி வரை கிரிக்கெட் பார்க்கிறவர் தான். அவர் பதில் சொல்லாமல் அவளையே பார்ததார். “உன் வேலையெல்லாம் எப்பிடிப் போயிட்டிருக்கும்மா?“ என்று விசாரித்தார். “உனக்கு லீவு இருக்கா என்ன ஏது பாத்துக்கோ…“ என்றார்.

அவளும் மாப்பிள்ளையுமாய் என்னவோ பேசிக் கொண்டார்கள். அந்தப் பக்கமாய் அவர் வருவதைப் பாரத்ததும் பேச்சை நிறுத்திக் கொண்டார்கள். சோமசேகர் அவரைப் பார்த்துப் புன்னகை செய்தான். அவர்களை விட்டுவிட்டு அவன் முதலில் ஊருக்குக் கிளம்புகிறான்…

**
வாசல்பக்கம் மஞ்சள் கனகாம்பரம் பூவாய்ப் பொங்கிக் கிடந்தது. தினசரி காலையில் ஒரு நார்க் கூடையை எடுத்துக்கொண்டு தோட்டத்து தங்கரளி, கனகாம்பரம் என்று பூ பறித்துக் கொண்டு வருவது அவர் வேலை. தாயாரம்மாள் குளித்துவிட்டு வருமுன் சாமியறையில் அவர் பூக்கூடையை நிரப்பி வைக்க வேண்டும். மூணு நாளாய் நியதிகள் தவறி விட்டன. பூ பறிக்கிற ஞாபகமே இல்லை. அவருக்கே வெட்கமாகி விட்டது…

வாசல் பக்கம் பார்த்தார். நந்தினி சிறு கையில் குவித்தபடி கனகாம்பரம் பறித்துக் கொண்டிருந்தது. அவர் எழுந்துகொள்ளுமுன் அவளே “தாத்தா?“ என்று ஓடிவந்து உற்சாகமாய்க் காட்டியது. ரெண்டு கை நிறைய பூக்கள். மஞ்சள் கனகாம்பரம். பிஞ்சு விரல்கள் அவையே பூவாகத் தெரிந்தது அவருக்கு.

“எவ்வளவு பூ தாத்தா. இதை சாமிக்குப் போடலாமா?“ என்று கேட்டது குழந்தை.

அவர் அந்தப் பூவை பவித்ரத்துடன் பெற்றுக் கொண்டார். எழுந்து போனார். மினுக்கும் விளக்கடியில்… தாயாரம்மாள் படம். பூவை அதற்கு சமர்ப்பித்தார் மணிவாசகம்.

**
திடீரென்று அவருக்கு இவர்கள் என்னைத் தனியே விட்டுவிட்டால் போதும் என்று பட்டது. என்ன ஆகிவிடும்? அதையும் தான் பார்த்து விடலாம். எத்தனையோ பார்த்தாயிற்று. சாந்தினியே மிக மோசமாய்க் காய்ச்சலில் விழுந்து பிழைப்பாளா என்று கிடந்து எழுந்தாள். இருக்கிற வேலையே போய் ரெண்டு மாசம் சம்பளம் இல்லாமல் குடும்பத்தை சமளிக்கத் திணறிப் போயிற்று. கஷ்ட காலங்கள் அவர் பார்க்காதது அல்ல… இதையும் ஹா பார்த்து விடுவோம். சொல்லத் தெரியாமல் அழுகை உள்ளே முட்டியது. பெண்டாட்டி சாவில் வராத அழுகை. இது பய அழுகை. தனிமையின் அழுகை. அவள் அருகில் இருந்தாள். அர்த்தமற்றவை அர்த்தபூர்வமாய் இருந்தன. அவள் இல்லை இப்போது. அர்த்தமுள்ளவை கூட இப்போது அர்த்தத்தை இழந்து விட்டன. அவளை நான் இழந்து விட்டேன்.

சோமசேகர் கிட்ட வந்தான். “அங்க வந்திர்லாம் அங்க்கிள். சென்னைல இப்பல்லாம் எத்தனையோ சீனியர் சிட்டிசன் ஹோம்ஸ் இருக்கு. நல்லதா நானே பார்க்கிறேன்… நீங்க கவலையே பட வேண்டாம். இது ரொம்ப சின்ன விஷயம்…“

உங்களுக்கு, என்று நினைத்துக் கொண்டார். சொல்லவில்லை.

அந்த நந்தினிக்குத்தான் எத்தனை அறிவு. அதற்கு மரணம் தெரிகிறது. இழப்பு தெரிகிறது. தாத்தாவின் தவிப்பு தெரிகிறது. எப்பவும் அவள் தாத்தா கூடவே இருந்தாள்.

“தாத்தா சாப்பிட வாங்க…“ என்று கையைப் பிடித்து இழுத்தாள்.

“நீ சாப்பிட்டியாம்மா?“

“இல்ல தாத்தா.“

”ஏன்?“

“நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுவோம் தாத்தா“ என்றாள் நந்தினிக் குட்டி.

ராத்திரிகளில் அவர்கூட வந்து படுத்துக்கொண்டது. “தாத்தா ஒரு கதை சொல்லு தாத்தா…“ என்றது. பாட்டியிடம் எத்தனை கதைகள் கேட்டிருக்கிறது அது. இப்போது தாத்தாவின் முறை. என்ன கதை சொல்ல? இப்போது அவரது வாழ்க்கையே கனவாக, கதையாக அல்லவா ஆகிவிட்டது… பேச வார்த்தைகள் வராமல் உள்ளேயே முட்டித் தத்தளித்தன. “நான் ஒரு கதை சொல்லவா? தெனாலிராமன் கதை… எங்க மிஸ் சொல்லிருக்காங்க… ரொம்ப சிரிப்பு“ என்றது.

“நீ ஸ்கூல்ல படிச்சப்போ உன் பெஸ்ட் பிரண்ட் யார் தாத்தா?“ என்று அவளே கதைகளை வளர்க்க முயற்சி செய்தாள். “வா தாத்தா எங்கயாவது என்னைக் கூட்டிட்டுப் போ“ என அவரை வெளியே இழுத்தாள்.

**
சொந்தக்காரர்கள் ஒவ்வொருவராய்க் கரையலாயினர். எல்லாருக்கும் அவரவர் கூடு. அவரவர் பாடு. ரொம்ப காலம் கழித்து சாந்தினியைப் பார்ப்பதில் அவர்கள் எல்லாருக்கும் சந்தோஷம் இருந்தது. கிழவி செத்துப் போனாள். கல்யாணச் சாவுதான். இதில் துக்கம் என அதிகம் இல்லை. இனி மணிவாசகத்தை யார் கவனித்துக் கொள்வது, என்பது பற்றி யாருக்கும் பெரிதாய் யோசனை இல்லை.

சாந்தினி ஊருக்குக் கிளம்பினாள். சாமான்களை திரும்ப அவள் சூட்கேசில் அடுக்கிக் கெண்டாள். உள்ளறையில் மணிவாசகம் படுத்துக் கொண்டிருந்தார். இனி இவளும் இருக்க மாட்டாள். இந்த அறைகளின் வெறுமை, இவள்… என் மனைவி இல்லாத வெறுமை…  இனிதான் தெரியும். இவற்றுக்கு நான் பழகிக்கொண்டாக வேண்டும்… என எண்ணிக் கொண்டார். என்றாலும் பெண், தன்னை இன்னும் அழுத்திக் கூப்பிட்டிருக்கலாம், என்றிருந்தது.

நான் மரண அடி பட்டவன் அம்மா. எனக்கு யாராவது துணை வேண்டும். எனக்கு என்ன வேண்டும், எனக்கே தெரியாது. யாராவது என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள். என்னை யாராவது எழுப்பி விடுங்கள்… நான் இப்போது குழந்தை போல… அழுது விட்டால் கூட நல்லது தான். அழக்கூடாது, என்று உதட்டைக் கடித்துக் கொண்டார். கண்ணை மூடிக் கொண்டார். கண்ணீர் பொங்கி வழிந்தது. அவர் துடைத்துக் கொள்ள முயற்சிக்கவில்லை. இருட்டு. யார் அவரை கவனிக்கப் போகிறார்கள்.

“ஏம்மா தாத்தா டிரஸ் எதுவும் எடுத்து வெச்சிக்கலையா?“ எங்னறு கேட்டாள் நந்தினி. “தாத்தாவா?“ என்று கேட்டாள் அம்மா. அவர் காதுகளைத் தீட்டிக்கொண்டு கேட்டார்.

“தாத்தாவை நாம கூட்டிட்டுப் போகலையாம்மா?“ என்று கேட்டது நந்தினி.

“இங்க பாருடி. ஊர்ல அப்பாவும் வேலைக்குப் போறாங்க. அம்மாவும் போறேன்… தாத்தாவை நாம கூட்டிட்டுப் போனா, தாத்தாவை யார் பாத்துப்பாங்க?“

“நான் பாத்துக்கறேன்“ என்றாள் நந்தினி.
**

நன்றி அவள் விகடன்
Email storysankar@gmail.com Mob 97899 87842

Comments

Popular posts from this blog