சிறுகதை

யா ர து ?

எஸ். சங்கரநாராயணன்



“தேவகி?....“ ஆமாம், என்று இவள்  சொல்லுமுன் எதிர்முனையில் அழுகைச் சத்தம். “அக்கா… நான் தான், பிரேமா பேசறேன்…“

“என்னடி? என்னாச்சி?“

“ஆக்சிடன்ட்.“ என்னடி சொல்றே, என்னுமுன் திரும்ப அழுகை முட்டியது பிரேமாவுக்கு. அவள் கேவிக் கேவிச் சொன்னதில் பாதி தான் புரிந்தது… அவள் கணவன் தனசேகர் அலுவலகம் போகின்ற வழியில்… எதோ லாரி மோதி….

“ஐயோ…“ என்றாள் தேவகி. “ஆமாங்க்கா… ஸ்பாட்லயே…“ இம்முறை அவள் குலுங்குவதை தேவகியால் உணர முடிந்தது. சரிந்த தண்ணீர்க் குடமாக அழுகை சிந்துகிறது.

அப்பா அம்மா எதிர்த்தபோதும் பிரேமா தனசேகரைக் கைப்பிடித்தாள்  நண்பர்கள் நாலுபேருடன் போய் பதிவுத் திருமணம். முடிந்தபின் அப்பா அம்மாவை மாலையும் கழுத்துமாய் அவள் பார்க்க வந்தாள். தேவகிக்கே பிரேமாவின் அசட்டு தைரியத்தின் மேல் பயமும் ஆச்சர்யமும் இருந்தது. தான் அந்தப் பையன் தனசேகரை விரும்புவதாக அவள் சொன்னபோது அப்பா அதை ஏற்றுக் கொள்ளவில்லைதான்… என்றாலும் பிரேமாவின் இந்த வேகம், இந்த நிமிர்வு… இத்தனை அவசரம் ஏன், தெரியவில்லை. அது அவள் குணம். நினைத்தால் சாதிக்கிற வரை ஓயமாட்டாள்…

“நல்லாருங்க,“ என்று மட்டும் அப்பா சொன்னார். அதைச் சொல்லவே அவருக்கு உதடுகள் துடித்தன. அழுது விடுவார் போலிருந்தது…

அப்பாவைப் பகைத்துக்கொள்ள மனம் இல்லாமல் தேவகியும் அவளை அப்புறம் போய்ப் பார்க்கவில்லை. என்றாலும் தங்கை மீது அவளுக்குப் பிரியம் உண்டு. கொஞ்சம் பெரிய வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறவள் பிரேமா. எதிலும் தன் பங்கு அதிகம் இருக்கிற ஆவேசம் இருந்தது அவளுக்கு. இந்த அதித ஆசை… இது எதில் கொண்டுவிடும் என்று அப்பாவும் அம்மாவும் பயப்பட்டார்கள். “உன்னைப் பத்தி எனக்கு ஒரு கவலையுங் கிடையாது இவளே, நீ எங்க இருந்தாலும் சமாளிச்சி அனுசரிச்சிக்கிட்டு நல்லா யிருப்பே தேவகி“ என்று அவளைத் தலையை வருடியபடியே அப்பா சொல்வார். அதில் பிரேமா பற்றிய கவலை இருக்கும்.

வேலை கீலை என்று எங்கேயும் அவள் கால்தரிக்கவில்லை. என்றாலும் நல்லபடியாக உடை உடுத்துவதிலும் அலங்காரம் பண்ணிக் கொள்வதிலும் அவளுக்கு தனி கவனம் உண்டு. அவளும் அக்காவும் வெளியே கிளம்பினால் அக்காவை விட தான் அதிகம் கவனிக்கப் படுகிற மாதிரி அவள் தன்னை அழகுபடுத்திக் கொள்வாள். ஆண்கள்பால் ஈர்க்கப்பட்டு, அதேசமயம் அதை அலட்சியமாய் உதட்டுச் சுழிப்புடன் கடந்து செல்கிற பாவனை அவளிடம் இருக்கும். கொலுசு அணிகிற பிரேமா!

தேவகி எதிர்பார்த்தாள். இவள் காதல் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறாள்! நிஜத்தில் அக்காவுக்கு வரன் பார்க்க என அப்பா முனைந்தபோது அவள் அப்பாவிடம் சொன்னாள். “முதல்ல வேணா இவளுக்கு… பிரேமாவுக்குப் பாத்திருங்களேன்…“

“என்னடி உளர்றே?“ என்று அம்மாதான் இவளை அடக்கியது.

பிரேமாவுக்குக் கல்யாணமாகி ஒண்ணரை வருடமோ என்னவோ, அவ்வளவுதான் ஆகிறது. எங்கியோ மணலி பக்கம் வீடு என்று அவளே போனில் சொல்லியிருந்தாள். தேவகி போனது இல்லை. வாடகை வீடுதான். எப்பவாவது அலைபேசியில் பேசுவாள். “எப்படி இருக்கே…“ என்று தேவகி கேட்டால், “உன்னைவிட நல்லா இருக்கேங்க்கா,“ என்பாள். “சரி, சந்தோஷம்“ என்பாள் தேவகி.

தான் செய்வது சரி, என்கிற முரட்டுத்தனம் எப்பவுமே அவளுக்கு உண்டு. இவளோடு நான் பேசுவதை நான் அப்பாவிடம் சொல்வேன், எனவும் எதிர்பார்த்து அவள் இப்படி பதில் சொல்லியிருக்கலாம். எதற்கும் ஒரு கணக்கும் அறிவுப் பிரயோகமும் அதனாலான விறைப்பும், வீம்பும் பிரேமாவிடம் இருந்தன. எனக்குத் தெரியும். எனக்கு உன் யோசனை தேவை யில்லை! அவளை மாற்ற முடியாது, என்று தான் தேவகிக்கு இருந்தது.

என்னவோ, அவள் பாடு. அவளுக்குக் கல்யாணமும் ஆகி கணவன் வீட்டுக்கும் போய்விட்டாள்… என தேவகி நினைத்திருந்தாள். இப்போது… நிலைமை எக்கச் சக்கமாகி விட்டது. விபத்து, என்கிறாள். அடி பலம். கணவன் அதே இடத்திலேயே இறந்து விட்டான். நம் மனிதர்கள் யாருமே அவள் கூட இல்லை… என முதல் தடவையாக உறைத்திருக்கலாம். அவள் குரலில் அந்தக் கையறு நிலை தெரிகிறது. பாவம்... இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

அப்பாவுக்குப் பேசலாமா, என்று யோசித்தாள். இந்தப் பெண், பிரேமா அப்பாவுக்கு தகவல் சொல்லியிருப்பாள் என்று தோன்றவில்லை. எப்ப எதுக்கு வீம்பும் கௌரவமும் பார்க்க வேண்டும், என்று தெரியாத பெண் இவள். எதற்கும் முதல் யோசனை என்று அக்காவை அணுகவும் செய்திருக்கலாம். தவிரவும் அக்கா தன்மேல் பிரியம் கொண்டவள் என்பது பிரேமாவுக்குத் தெரியும்.

“அக்கா?“ என்று மறுமுனையில் பிரேமா. “அப்பா கிட்ட பேசினியாடி?“ என்று கேட்டாள் தேவகி. மறுமுனையில் மௌனம். “முதல்ல நிதானமா இரு… எங்கருந்து பேசற நீ?“

“ஜி ஹெச்…“

“சரி நான் நேர்ல வரேன்… எல்லாம் நேர்ல பேசிக்கலாம்.“

“சீக்கிரம் வாக்கா. எனக்கு ரொம்ப பயமா யிருக்கு. கையும் ஓடல்ல காலும் ஒடல்ல.“

தேவகி கணவனிடம் விவரம் சொல்லி உடனே புறப்பட்டு வரச் சொன்னாள். கணேஷ் ரொம்ப நல்ல மாதிரி. அவசரம் என்றால் சட்டென யானையாய் ஏறிக்கொள்ளச் சொல்லி குனிவான். அவன் கூட இருப்பதே யானையின் பலம் தான்!

போஸ்ட்மார்ட்டம் முடிந்து தான் உடலைத் தந்தார்கள். அதற்கே ரெண்டு நாள் ஆகி விட்டது. யார் மோதினார்கள் தெரியவில்லை. வெறும் அவன் வண்டியும் உடலும் தான் தெருவில் கிடந்தன. யாரோ தகவல் சொல்லி போலிஸ் வந்து பார்த்தது. அவர்கள் வரு முன்பே அவன் இறந்திருந்தான். அவன் அலைபேசியில் இருந்து அவளைக் கூப்பிட்டு விஷயம் தெரிவிக்கப் பட்டது.

தனசேகரை அவள் கல்யாணம் பண்ணிக் கொண்டது, புகுந்த வீட்டிலும் அத்தனை வரவேற்பாய் இல்லை என்று தெரிந்தது. அப்பா இல்லை அவனுக்கு. அம்மாக்காரி இவன் தம்பியுடன் இருந்தாள். தம்பி வீட்டில் அவளுக்கே தத்தளிப்பாய் இருந்தது. சாவுக்கு அவள் வந்திருந்தாள். ஒரு வார்த்தை பேசவில்லை. இருந்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டாள் அவள். அந்தத் தம்பி ஊரிலேயே இல்லை. விஷயம் கேள்விப் பட்டானா, கேள்விப் பட்டால் வந்திருப்பானா எதுவும் தெரியாது..

தனசேகர் ஆளே ஊதாரியாய்த் தெரிந்தது. கையில் காசு இருக்கிற போது தாம் தூம் என்று ஆடிவிட்டு, இல்லாத போது அடங்கி ஒடுங்கிக் கிடப்பான். கிடைத்த இடத்தில் எல்லாம் கடன் வைத்திருந்தான். அவனது சகாக்களே கொடுத்த பணம் திரும்ப வராது, என திகைத்தார்கள்.

தேவகியின் அப்பா வரவேயில்லை. என்ன கோபம் அவருக்கு தெரியவில்லை. தேவகி அப்பாவைக் கூப்பிட்டுப் பேசினாள். “நீ ஏண்டி போனே? உன்னை யார் போகச்சொன்னா?“ என்று அவர் கத்தினார். ஆச்சர்யமாய் இருந்தது தேவகிக்கு. அந்த அளவுக்கு பிரேமா அவரை என்னவோ சொல்லியிருக்கலாம்… என நினைத்தாள் தேவகி. என்றாலும் இந்த நிலையில் இப்படி அவர் நடந்து கொண்டது அவளுக்கு சம்மதப் படவில்லை.

திடுதிப்பென்று பிரேமா தனித்து விடப்பட்ட மாதிரி ஆகிப் போயிற்று. அடடா நாம தனியே இவளை சமாளிக்கிறாப் போல ஆச்சே என்றிருந்தது தேவகிக்கு. உடனே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். பாவம் இப்ப அவளுக்கு நம்மை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?... என நினைத்துக் கொண்டாள்.

அத்தோடு நாம ஒண்ணும் தனியே இல்லை. கூட கணேஷ் இருக்கிறான். அவள் நிலையைப் புரிந்துகொள்கிற அனுசரணையான கணவன். அவனிடம் கேட்காமல் அவள் எந்த முடிவும் எடுக்க மாட்டாள். அவன் என்ன சொல்கிறான் கேட்டு நல்ல முடிவா எடுக்கலாம்… என்றிருந்தது.

கணேஷ் சொன்னான். “உங்க அப்பா வேத்துமுகம் காட்டறது ஆச்சர்யமா இருக்கு… ம். சரி. நீ இவ கூட ரெண்டு மூணு நாள் இரு. அலுவலகம் போக வேணாம். விடுப்பு எடுத்துக்கோ… அவளுக்கும் ஒரு துணையா ஆறுதலா இருக்கும்… அப்பாகூட தான் அவள் இருக்கணும். அதான் அவளுக்கு பாதுகாப்பு. அவர் ஒத்துக்குவாரான்றதெல்லாம், நாம அவரைப் பாத்துப் பேசி எடுத்துச் சொல்லி முடிவு செய்யலாம்… என்ன சொல்றே?“

பிரேமா வேலைக்கு என்று எங்கேயும் போகவில்லை. கல்யாணம் ஆன பின்னால், “என் புருஷன் இருக்கிறான். நான் ஏன் வேலைக்குப் போகணும்?“ என்று கேட்டவள் தான். என்னவோ வேலைக்குப் போகிற பெண்கள் எல்லாரும் கேவலம் போலப் பேசினாள். இவளது வாய் தான் இவள் சத்ரு… என நினைத்துக் கொண்டாள் தேவகி. இப்ப பார், இவள் இனி ஒரு வேலை என்று அமர்ந்தால் தான், இவள்பாட்டைப் பார்த்துக் கொள்ள முடியும், என்கிறாப் போலாச்சு.

இத்தனைக்கும் மேலாக பிரேமா, “நான் அப்பா கிட்ட போக மாட்டேன்…“ என ஒரு விரைப்புடன் பேசினாள். “என்னடி உளர்றே?“ என்று திடுக்கிட்டாள் தேவகி.

“இத்தனை நடந்திருக்கு. அப்பா வந்து பார்த்தாரா அக்கா? எனக்கு ஒண்ணுன்னா நீ எப்பிடி ஓடி வந்தே?“ என்று கேட்டாள் பிரேமா. அத்தனைக்கு நீ நடந்துக்கறே, என்று தேவகிக்கு வாய் வரை வந்தது. ஏற்கனவே நொந்து போயிருக்கிறாள் இவள். இப்போது இவளைக் காயப்படுத்த வேண்டாம், என்று அடக்கிக் கொண்டாள்.

பிரேமா அக்காவுடன் அக்காவீடு வந்தாள். பிரேமா எங்கேயும் வேலை என்று பார்க்காத நிலையில் வாடகை வீடு என்று செலவு அதிகமாக அவளால் எப்படி சமாளிக்க முடியும்? அப்பாவிடம் பேச கொஞ்ச நாள் ஆகட்டும், என்று பட்டது. அத்தோடு கணேஷ் அலுவலக விஷயமாக ஊருக்குப் போயிருந்தான். அவன் வர நாலைந்து நாள் ஆகும் போலிருந்தது.

“நான் உங் கூடவே வந்துர்றேங்க்கா…“ என்றாள் பிரேமா. அவளுக்கு சொல்லும் போதே அழுகை வந்தது. எதைப் பேசினாலும் அவள் அழுகையோடவே பேசினாள். உள்ளே வாழ்க்கை பற்றிய பயம் வந்திருந்தது. “வாடகை வீடு… அத்தோட தனியா வேற இருக்கணுமே அக்கா…“

“இவர் வரட்டும். அப்பாகூட பேசி…“ என்னுமுன் அவள் கழுத்தை விரைத்து, “அப்பா கதை பேசாதே அக்கா. அதைவிட ஒரு முழம் கயிறு வாங்கிக் கொடு. நான் தூக்கில் தொங்கி சாகிறேன்…“ என்றாள் பிரேமா. தேவகிக்கு என்ன சொல்ல என்றே புரியவில்லை.

கணேஷ் வந்தபோது பிரேமா தான் வீட்டில் இருந்தாள். அக்கா வேலைக்குப் போயிருந்தாள். அவனை ஒரு தரம் கண்ணுக்கு நேராகப் பார்த்துவிட்டு திரும்பக் குனிந்து கொண்டாள் பிரேமா. அவனுக்கு அவளைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. “நானும் உங்க அக்காவும் இன்னிக்கு உங்க அப்பாவைப் பார்த்து…“ என அவன் புன்னகைக்குமுன், அவள் அழ ஆரம்பித்தாள்.

“என்னாச்சி? என்னாச்சி?“ என கணேஷ் பதறினான்.

“என் நிலைமை இப்பிடி ஆச்சே…“ என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள் பிரேமா. அவனுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை. அவளோடு அவன் பேசிப் பழகியது இல்லை. இந்த வீட்டிலும் இதுவரை தேவகி தவிர வேறு பெண் கூட வந்து தங்கியது இல்லை. கணேஷ் விறுவிறுவென்று சாப்பிட்டு விட்டு அலுவலகம் கிளம்பினான்.

அலுவலகத்தில் இருந்து தேவகிக்கு போன் பண்ணினான். “எனன தேவகி இப்பிடிப் பண்ணிட்டே?“

“என்னாச்சி?“

“அவளை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்திட்டியா?“

“அவ எங்க போவாங்க… என் தங்கைங்க அவ… நீங்களே இப்பிடிப் பேசறீங்க…?“ என்று சொன்னாள் தேவகி.

“இங்க பார். அவளுக்கு அப்பாவீடு தான் நல்லது. அவ தன்வீட்டிலேயே இருந்தால் அப்படியே அப்பாவீட்டுக்கு நாம அழைச்சிட்டுப் போயி விடறது லேசான விஷயமா ஆகியிருக்கும். அவளை இங்க கூட்டிட்டு வந்திட்டே. அங்கே அப்பாவீட்டை விட இங்கே இருக்கறது அவளுக்கு நல்லதாப் பட்டால், அங்க போக மாட்டேன், இங்கயே இருந்திர்றேன்னு அவள் பிடிவாதம் பிடிப்பாள்…“

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்…“ என்றாள் தேவகி. சொல்லி விட்டாளே யொழிய போனை வைத்த பின்னாலும் தேவகிக்கு அவன் சொன்னது பற்றி ஒரே யோசனையாய் இருந்தது. பிரேமா முடிந்தவரை தான் நினைக்கிறதையே சாதிக்கிற பெண். வேறு மார்க்கம் இல்லை, என அவள் அப்பாவீட்டுக்குப் போயிருக்க வேண்டும். அவள் இருந்த வீட்டில் இருந்தபடியே அவளை வற்புறுத்தி அப்பாவுடன் நான் அனுப்பி வைத்திருக்க வேண்டும். அவளை வீட்டைக் காலி பண்ணக்கூட ஏன் இத்தனை அவசரமாக நான் ஒத்துக் கொண்டேன்? பிரேமா இதை யூகித்து விட்டாள் என்று தான் பட்டது. நான் தான் பிரேமாவின் திட்டத்தை சரியாக கணக்குப் போடத் தவறி விட்டேன்… கணேஷ் வரும் வரை காத்திருந்திருக்க வேண்டும் அவள். கணேஷ் ஒண்ணும் சொல்ல மாட்டான், என அவள் நினைத்தாள்.

கணேஷ் விஷயத்தை வேறு விதமாகப் பார்க்கச் சொல்கிறான். இப்போது அவள் கண்டிப்பாக அப்பாவிடம் போகாமல் இங்கேயே தங்கிவிட முயற்சி செய்வாள் என்பதில் சந்தேகம் இல்லை. நான் அவசரப் பட்டு விட்டேனா, என நினைத்துக் கொண்டாள் தேவகி.



வாரா வாரம் வெள்ளைக்கிழமை கணேஷ் அலுவலகம் விட்டு வரும்போது அவளுக்குப் பூ வாங்கி வருவான். அதில் பாதியை அவள் சாமிக்குப் போட்டுவிட்டு மீதியைத் தலையில் வைத்துக் கொள்வாள்.

“இந்த வாரம், “பூ வாங்கிட்டு வர வேண்டாங்க“ என்றாள் தேவகி.

“ஏன்?“ என்றான் கணேஷ்.

“வீட்ல பிரேமா இருக்கா…“

“ஓ“ என்றான் கணேஷ். அவன் நெற்றி சுருங்கியது. “ஆபிஸ் விட்டு நாம எங்கியாவது வெளிய போயிட்டு வரலாமா?“ என்றாள் தேவகி புன்னகையுடன்.

தேவகி எதிர்பாராத விஷயங்கள் நடந்தன. யாரால் எதிர்பார்க்க முடியும்? அப்பா திரும்ப பிரேமாவை ஏற்றுக் கொள்வதாகவே இல்லை. “அவ என்னோட பேசட்டும் முதல்ல…“ என்றார். “எந்த முகத்தோட பேசுவா அவ? நீங்க செத்தாலும் நான் இந்த வாசப்படிய மிதிக்க மாட்டேன்னுட்டுப் போனாளே அவ…“ சொல்லும்போதே அவர் உடல் குலுங்கியது. “வெறி வந்தால் இப்படியெல்லாம் பேசச் சொல்லுமா இவளே?“ என்று கேட்டார் அப்பா.

தேவகிக்கே ஒருமாதிரி ஆகிவிட்டது. “இப்ப என்னங்க பண்றது?“ என்று அவள் கணேஷிடம் கேட்டாள்.

“காலம் தான் சிறந்த மருந்து. அது ஒரு வழி சொல்லும்….“ என்று கணேஷ் சொன்னான். “இப்ப என்ன செய்யலாம்? நாமளே ஒரு வீடு வாடகைக்குப் பார்த்து அவளை வைக்க வேண்டிதான்… அப்பப்ப போயி பாத்திட்டு வர வேண்டி யிருக்கும்.“

தேவகி யோசித்தாள். தங்கை கூடவே இருப்பதில் அவளுக்கும் விருப்பம் இல்லை. கணேஷ் உற்சாகமான கணவன். இன்னொரு பெண் வீட்டில் இருப்பதில் அவன் காற்று போனாப் போல நடமாடினான். அவளுக்கே என்னமோ போலிருந்தது அது. கணேஷ் சும்மா இருக்கும் நேரங்களில் எதாவது பாடுவான். எஸ்.பி. பாலசுப்ரமணியன் குரல் தனக்கு இருப்பதாக அவன் நம்பினான். பாடும்போதே அவரே போல சிரிக்க முயற்சி பண்ணிப் பாடுவான். வீட்டில் இருந்தால், விளையாட்டு பார்ப்பான். கிரிக்கெட் பைத்தியம் அவன். நாலோ ஆறோ அடித்தால் இங்கேயே கைதட்டுவான்… உற்சாகமான மனுசன்.

வீடு அமைதி காத்தது. டி.வி போடப்படுவதே இல்லை. கணேஷ் பாட்டு வாய்வரை வந்தாலும் அடக்கிக் கொண்டான், அது தேவகிக்குப் புரிந்தது. என்றாலும் ரெண்டு செலவு… இவளை இன்னொரு வீட்டில் வாடகைக்கு என அமர்த்துவது… அவளுக்கு திகைத்தது.

“அவ வீட்டை நீ காலி பண்ணியிருக்கவே கூடாது…“ என்றான் கணேஷ். குற்றம் சாட்டுகிறானோ என்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். இல்லை. அப்படியெல்லாம் இல்லை.

எதிர்காலம் பற்றி எது கேட்டாலும் பிரேமா பேசாமல் அப்படியே இருந்தாள். அழுத்திக் கேட்டால் அழுது விடுகிறாள்… வேலை என்றும் வெளியில் அவள் இறங்குகிறாப் போல இல்லை. பணம், அதைவிடு. வெளியிடம் போய் வருவதே மாற்றங்களை உற்சாகத்தை மீட்டுத் தரும்… அவளிடம் தேவகியால் பேசவே முடியவில்லை. இவள் மனசில் என்னதான் இருக்கிறது? இங்கேயே இப்படியே இருந்து விடுவாளா என்ன? அது எப்படி முடியும்?

ஒரு மாதம் ஆனது. தேவகியே கணேஷிடம் சொன்னாள். “இவளுக்கு  வாடகைக்கு வேறு இடம் பார்க்கலாங்க…“

“என்னாச்சி?“

“வேற வழி எனக்குத் தெரியலை…“ என்றாள் தேவகி.

தன் பின்னான நிகழ்ச்சிகள் இன்னும் வேறு உருவம் எடுத்தன. ஒரே படுக்கையறை, ஒரு சமையல் அறை… என்கிற சிறிய வீட்டை அவர்கள் பார்த்தார்கள். பிரேமாவுக்கு அந்த வீடு பிடிக்கவே யில்லை. “இந்த இடமும் எனக்குப் புதுசு..“ என்றெல்லாம் அவள் சொல்லி மறுக்கப் பார்த்தாள். இந்நாட்களில் அவள் கணேஷோடு சகஜப்பட ஆரம்பித்திருந்தாள்.

கிளம்பும் போதே கணேஷ் தேவகியிடம் சொல்லி யிருந்தான். “அவ கட்டாயம் நம்ம கூடவே இருக்கப் பார்ப்பா. நீ பிடி குடுக்காதே… போன தடவை அந்த வீட்டைக் காலி பண்ணினப்போ என்னைக் கேட்கல்ல… இப்ப முன்கூட்டியே சொல்லிட்டேன். அவளை சம்மதிக்க வைக்கிறது உன் பொறுப்பு“ என்றான் கணேஷ். “அவ அவஇஷ்டப்படியே பேசுவா. அப்படியே கடைசி வரை இருந்துற முடியாது. அது அவளுக்குத் தெரியணும்…“

தேவகி அவனைப் பார்த்தாள். “ரொம்ப கடுமையா நான் பேசறதாப் படுதா இவளே?“ என்றான் கணேஷ். ஆமாம், என சொல்ல வந்தவள், “இல்ல“ எனப் புன்னகைத்தாள். அவன் சொல்வது சரிதான், என்று பட்டது.

சில மாதங்கள் இப்படியே போயின. செலவு ரெட்டைச் செலவாக ஆகி யிருந்தது… அடிக்கடி அவளும் கணேஷும் பிரேமாவைப் போய்ப் பார்த்து விட்டு வந்தார்கள். பிரேமாவும் முன்னெல்லாம் அடிக்கடி சலித்துக் கொண்டவள் இப்போது அனுசரித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டாப் போல இருந்தது. பிரேமாவின் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது.

தேவகி ஒருநாள் அலுவலகத்தில் இருந்து கணேஷுக்கு போன் பண்ணினாள். ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. ஆச்சர்யமாய் இருந்தது. அவன் ஆஃப் செய்யவே மாட்டான். எப்ப கூப்பிட்டாலும் உற்சாகமாக எடுத்துப் பேசுவான்… இதில் கிண்டல் வேறு – “எஸ்? வாட் கேன் யூ டூ ஃபார் மீ?“ அவள் புன்னகைத்துக் கொண்டாள். அலுவலகத் தொலைபேசியில் பேசியபோது வெளியே போயிருப்பதாகச் சொன்னார்கள். எங்கே போனான் தெரியவில்லை.

அன்றைக்கு ராத்திரி கேட்டபோது போனில் சார்ஜ் இல்லை என்றான். அப்புறம் சொன்னான். “நீ அலுவலகத் தொலைபேசில பேசியிருக்கலாமே?“ என்றான். அவள் அலுவலகத் தொலைபேசியில் பேசியது அவனுக்குத் தெரியவில்லை. நான் பேசினேன், என்று தேவகி சொல்ல நினைத்தாள். என்ன தோன்றியதோ சொல்லாமல் விட்டுவிட்டாள்.

அடுத்த தடவை அவள் அலுவலகத் தொலைபேசியில் பேசியபோது அவன் அலுவலகமே வரவில்லை, என்றார்கள். காலையில் அலுவலகம் போவதாகத் தான் கிளம்பிப் போனான். அலைபேசியில் அழைத்தாள். சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது…. அவள் உடம்பு நடுங்கியது. பதறாதே, என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். ஆனால் அலைபேசி அணைக்கப் பட்டிருக்கும் என அவள் எப்படியோ எதிர்பார்த்தாள்…

அவளுக்கு உடம்பு நடுங்கியது. இப்ப என்ன செய்ய தெரியவில்லை. திடீரென்று உலகமே இருட்டி விட்டாப் போலிருந்தது. மனுசாளுக்கு சந்தேகம் மாத்திரம் வரவே கூடாது… ச்சே… ஏன் இப்படி யெல்லாம் நான் நினைக்கிறேன்? அதெல்லாம் இல்லை. அப்படி யெல்லாம் இல்லை…

அன்று பின் பாதி விடுப்பு எடுத்துக் கொண்டு நேரே பிரேமாவைப் பார்க்கப் போனாள். அவள் உடம்பில் தெம்பே இல்லை. ரொம்ப கூச்சமாய் இருந்தது. கடவுளே, என் யூகம் பொய்யாய் இருக்க வேண்டும்…. என்று வேண்டிக் கொண்டே அவள் போனாள். போய் தங்கை வீட்டு காலிங் பெல்லை அழுத்தினாள்.

“யாரது?“ என்று ஆண் குரல் கேட்டது.
**



mob 91 97899 87842

Comments

Popular posts from this blog