ஷேக்ஸ்பியரும் 
வெங்காயமும்

எஸ். சங்கரநாராயணன்

நாட்டில் எவனிடம் ‘‘சீஸர் தெரியுமா?’’ என்று கேட்டாலும், ‘‘நாயின் பெயர்’’ என்கிறார்கள். ஒருவனுக்காவது அது ஒரு மன்னனின் பெயர் என்று தெரியவில்லையே... என்று அவன் வருத்தப் பட்டான். அவன் வாழ்வில் இப்படி நிறைய வருத்தங்கள். உலகம் அபத்தங்களின் அகராதி. இதில் அவனைப் போன்ற மேதாவிகளுக்கு விலாசமே இல்லை. அறிவாளிகள் போராளிகள் ஆகி... ஆ, தாங்களே துப்பாக்கிகளை ஏந்தி விடுவதும் உண்டு. அவர்களுக்கு வணக்கம்.

போகாத பொழுதுகளை என்ன செய்வது? சீட்டு விளையாடலாம். அதற்கும் தன்னைப் போல வெட்டி வீரமணிகள் அமைய வேண்டும். ஆள் சிக்கா விட்டால் வெளியே காலாற நடந்துவிட்டு வரலாம். சுற்று முற்றும் பார்த்துக்கொண்டு சிகெரெட் பிடிக்கலாம்.

உலாப் போகும் தருணங்களில் அதிர்ஷ்டம் இருந்தால் சௌதாமினியின் தரிசனம் கிடைக்கும்.

நடையலுத்த மதிய நேரங்களை என்ன செய்வது? அவன் செய்தித்தாள் வாசிக்க அந்தப் படிப்பறைப் பக்கம் ஒதுங்க நேர்கையில் அவரைச் சந்தித்தான். அவர் உயரமானவர். அதாவது தோளுக்கு மிஞ்சியவர். தோழர் சுயம்பு.

மனிதனென்றால் சுயகௌரவம். சிந்தனை வேண்டும். போராட்ட உணர்வு வேண்டும். தவறுகண்ட இடத்து சுட்டிக் காட்டத் தயங்கக் கூடாது. இப்படி ஏடாகூடமாய் நடந்து கொண்டு ஒரு தொழிற்சாலையில் இருந்து  வெளியிறக்கப் பட்டவர் அவர்.

அவனைப் பார்த்ததும், நீண்ட (அங்கியணிந்த) பிரசங்கங்களை நிகழ்த்த ஆரம்பித்து விடுகிறார் அவர். கொஞ்சநாள் அதைத் தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தான். அவர் சட்டுச் சட்டென்று ஆவேசப்பட்டு கையை உயர்த்தினார். அவனுக்கு ஆசி வழங்குவதைப் போலவும் யாரையோ திட்டுவதைப் போலவும். கண் சிவக்க உரையாடினார். அவனுக்குக் கொட்டாவி வந்தது. இதுதான் ஆவியெழுப்புதல் கூட்டமா? அவர் முன் அடக்கிக் கொள்ள வம்பாடு பட்டான். பிறகு அந்தப் பக்கம் போவதையே நிறுத்தி விட்டான்.

தனசேகருக்கு இன்டர்வ்யூ கார்டு வந்திருக்கிறது. அது ஒன்றும் புதிதல்ல. நீங்கள் தேர்வு பெறவில்லை, என்றுகூட அநேகக் கடிதங்கள் வருகின்றன. கடிதங்கள் சேதி சொல்லி வருகின்றன. அவ்வளவே...

ஆனால் அப்பாவுக்கு அதில் காணாததைக் கண்டதுபோல் பரவசம். அவரது பக்தி அதிகமாகி விட்டது. அப்பா உடம்பு கொஞ்சம் நோஞ்சான் உடம்பு. சின்ன மழை, கொஞ்சம் அதிக வெயில்... எதுவானாலும் அவருக்கு சளித்தொந்தரவு அதிகமாகி விடுகிறது. டார்ஜானுக்கு எதிர்ப்பதம் நோஞ்சான்.

‘‘அடேய், பக்தியும் சளிப் பிடிக்கிறதும் ஒண்ணா?’’

அவன் சிரிக்கிறான். ‘‘ஏம்ப்பா உங்களுக்கு எதுக்கெடுத்தாலும் ஒரு படபடப்பும் கோபமும் வருது?’’

‘‘உன்னைப் பெத்ததில் இருந்தே அப்படித்தான்.’’

தனசேகர் அப்பாவைப் பற்றி இந்தக் கால மோஸ்தரில் ஒரு கவிதை எழுதினான்.

தோஷம் விலக
காலையில் குளித்து
கோவிலைச் சுற்றினால்
பிடித்தது ஜலதோஷம்

காலையில் அப்பா அவனை எழுப்பினார். அன்பான அப்பா. அவன் சிகெரெட் பிடிக்கிறான் என்று தெரிந்தும் அவனை அனுமதித்தார் அவர், வேறு வழியில்லாமல். ‘‘தனு?’’ என்று அவன் தலையை வருடினார் அப்பா. ‘‘என்னப்பா?’’ என்று பாதிக்கண்ணைத் திறக்கிறான். அவனது மன-அறையின் பாதிக் கதவைத் திறந்தாற் போல. அறைக்குள்ளே சௌதாமினி படுத்திருக்கிறாள். எழுந்து போய்விடுவாளோ, என்று பதட்டமாய் இருந்தது.

‘‘குட் மார்னிங்!’’ என்கிறார் அப்பா அதே புன்னகையுடன், ‘‘இன்னிக்கு என்ன நாள்?’’

‘‘பிரதோஷமா?’’

‘‘அட, இல்லடா...’’

‘‘சரி, உங்க பிறந்தநாள் அல்லது கல்யாணநாள். சரியா?’’

‘‘சரி, எனக்கு விசேஷநாள் இல்லடா... உனக்கு...’’ என்று அழுத்தினார் அப்பா.

‘‘எனக்குக் கல்யாணநாளா? சொல்லவே இல்லையே?’’

‘‘அட, போப்பா, இன்னிக்கு... உனக்கு... இன்டர்வ்யூ!’’ என்றார் உற்சாகமாய்..

அப்பா, உனக்காகவாவது இந்த வேலை எனக்குக் கிடைக்கணும். அவன் பல் விளக்கி முகங் கழுவி வருமுன் அவர் பூஜையறையில் இருந்தார். சுவாமி அறையில் கடவுளுக்கு அபார கவனிப்பு. விசேஷப் பூக்கள். வாசனைப் பத்தி. அர்ச்சனை. நாமாவளி...

இவனுக்கு அடுத்து ஒரு பெண். இந்திரா. இந்தப்புறா ஆட வேண்டுமானால் இளவரசர் பாட வேண்டும்... என்று தமிழில் புகழ்பெற்ற சினிமாவசனம். அதைப்போல அவளுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் முடிக்க வேண்டுமானால் இவன் நல்ல வேலையில் அமர வேண்டும்.

கிணி கிணியென்று மணியோசை.  அவன் உடைமாற்றியபடியே ‘‘அம்மா பால்காரன்’’ என்கிறான். ‘‘இல்லடா, உங்கப்பா பூஜை பண்றார்.’’ பாலை வைத்து நைவேத்தியம் பண்ணுகிறார் அப்பா. அதுவும் பால்காரனின் அழைப்பாகவே தோன்றியது.

‘வாடா கற்பூரம் எடுத்துக்கோ.’ குனிந்து கற்பூரம் ஒத்திக் கொண்டவனை, ‘அப்படியே ஒரு நமஸ்காரம் பண்ணு’ என்றார். சரியென்று பண்ணினான். ‘‘நல்லா மனசார வேண்டிக்கோ, வேலை கிடைக்கணும்னு...’’

‘‘இப்டி மணியடிச்சா, வேண்டிக்கிட்டா... வேலை கிடைச்சிருமாப்பா?’’

‘‘ச்...’’ என்றார் ஆயாசமாய். ‘‘இதுக்கெல்லாம் நம்பிக்கை வேணுண்டா...’’

‘‘நீங்க நம்புங்கப்பா உங்க பிள்ளையை... இந்த வேலை நான் என் அறிவினால் தகுதி பெறுவேன்...’’

‘‘டேய், இன்னிக்கு இன்டர்வியூ... கார்டு வந்ததே அபூர்வம். ஒரு ஜி.கே. புத்தகம் குறைந்த பட்சம் இன்னிக்குக் காலைல இந்து... புரட்னியா நீ?’’ என்றார் அப்பா. கொஞ்சம் கோபம் வந்தது அவருக்கு. ‘‘பகவான் அருள் இல்லாட்டி, என்ன அறிவு இருந்தும் பிரயோஜனமில்லை. அதை மட்டும் தெரிஞ்சுக்கோ...’’

‘‘ஐய அவன் அமைதியா இன்டர்வ்யூவுக்குப் போயிட்டு வரட்டுங்க... உங்க ரெண்டு பேர் ‘பக்கவாதத்’தையும் அப்றம் வெச்சிக்கலாம். நீ சாப்பிட வாடா’’ என்றாள் அம்மா.

என்ன கம்பெனி தெரியவில்லை. நகரத்தின் மையத்தில் அலுவலகம் இருந்தது. நல்ல விஷயம். டை அணிந்து, சட்டையை ‘இன்’ செய்து கொண்டு, ஷூ சாக்ஸெல்லாம் ஜோராய் மாட்டிக் கொண்டு தடபுடலுடன் போயிருந்தான். சுற்றி அலட்சியமாய், தன்னைப் போலவே இன்டர்வ்யூவுக்கு வந்தவர்களை நோட்டம் விட்டான்... பாவம், வெறும் விரலைச் சூப்பிக் கொண்டு அவர்கள் வீடு திரும்ப நேரலாம்.

டாய்லெட்டே அமர்க்களமாய் இருந்தது அங்கே, இலைபோட்டுப் பரிமாறலாம் போல. கண்ணாடி பார்த்து முகம் துடைத்துக் கொள்ளும்போது, யார் இந்த அழகன், என்று தன்னைப் பார்த்துக் கேட்டுக் கொண்டான். இந்தக் கோலத்தில் சௌதாமினியைப் பார்க்க வாய்த்ததே யில்லை.

ஒவ்வொரு முறை சௌதாமினியை நெருக்கத்தில் பார்க்கும்போதும் எதாவது அசம்பாவிதங்கள். சட்டை சற்று கசங்கி, சாயம் போனதாய் இருக்கும். செருப்பு பிய்ந்து மிதிக்கக் கூடாததை மிதித்தாற் போல நடந்து போவான். அவளைப் பார்க்கவென்றே சிறப்புத் தயாரிப்புடன் போனால் கண்ணில் தட்டுப் பட்டால்தானே?


அவன் வெளியே வரும்போது உள்ளே அழைத்துக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் படபடப்பாய்த்தான் இருந்தது.*

இரண்டுபேர் இருந்தும். குளிரூட்டப்பட்ட அமைதி இருந்தது உள்ளே. பிணவறை... டேய், இந்த லொள்ளு எல்லாம் வேணாம். அடக்கி வாசி.

‘‘உட்காருங்கள் திரு...’’ என்று அவன் பெயரை மனசில் தேடினார் ஒருவர். இதைத்தான், திரு திரு என்று விழித்தார், என்கிறார்களா? பிறகு அவன் விண்ணப்பத்தில் தேட, அவர் தன் கண்ணாடியைத் தேடினார். ‘‘நான் தனசேகர் ஐயா’’ என்றான் தமிழில். ‘‘ஆ, வெகுநல்லது’’ என்றார் ஆங்கிலத்தில். ‘‘நீங்கள் நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருப்பதை உங்கள் சான்றிதழ்கள் தெரிவிக்கின்றன. நல்வாழ்த்துக்கள்.’’

‘‘இதை நல்ல துவக்கமாகவே உணர்கிறேன்’’

‘‘துடிப்பும் ஆர்வமும், சவாலான நிமிர்வும் கொண்ட இளைஞர்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்...’’

‘‘அவ்வகையில் நீங்கள் அதிர்ஷ்டக்காரர். நான் உங்கள்முன் அமர்ந்திருக்கிறேன்.’’

அவன் புன்னகைக்கிறார். அடுத்தவர் அதை அங்கீகரித்தாற் போலத் தலையாட்டிவிட்டு, ‘‘நம்முடையது புதிதாய் ஆரம்பிக்கப் படவுள்ள வியாபார மையம்... இங்கே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நமது பாரம்பரியம் மிக்க கலைப் பொருட்களைப் பற்றி எடுத்துச் சொல்ல அவர்களை கவர்ச்சிகரமான நல்லறிமுகத்தினால் கவர்ந்திழுத்து விற்பனை செய்ய வேண்டியிருக்கும்...’’

வெள்ளைக்காரன் உடையுடன் நமது பாரம்பரியப் புகழ் பரப்பும் வேலை... (சிரித்து விடாதே) ‘‘அது என்னால் முடியும்... தஞ்சாவூர் ஓவியங்கள், காஷ்மீரத்து சால்வைகள், கலைப் பொருட்களைப் பற்றிய செய்திகளைச் சேகரித்துக் கொண்டு நான் திறமையாகவே செயல்படுவேன்...’’

‘‘தேவைப்பட்டால் சற்று மிகைப்படுத்தி பொய்களும் பேசலாமல்லவா?’’

‘‘தேவைப்பட்டால் சற்று உண்மை பேசுவோம்’’ என்றான் அவன். சிரித்தார்கள். பிறகு அவர்கள் சில பொது அறிவுக் கேள்விகள் கேட்டார்கள். அதிகம் சுற்றுலாப் பயணிகள் வரும் நாடுகள் பற்றிய விவரங்கள் குறிப்புகள். அவர்களது நாணயங்கள், ரூபாய்க்கு நிகரான அவற்றின் மதிப்பு... சரளமான ஆங்கிலத்தில் அவன் உரையாடியதில் அவர்களுக்கு திருப்தி.

‘‘உங்களைப்போல ஒருவரையே நாங்கள் எதிர்பார்த்தோம்.’’

‘‘போல ஒருவரை... இல்லாமல் அதைச் சொல்லுங்கள்!’’

‘‘அடுத்தவார வாக்கில் அரசு பிரமுகர் ஒருவர் முன்னிலையில் திறப்புவிழா... அத்தோடு நாம் மும்முரமாக வேண்டியிருக்கும். சம்பளம் பற்றிய விதிமுறைகளெல்லாம் கவனித்தீர்கள்தானே?’’

‘‘ஆம். அவற்றுக்கு ஒத்துப் போகிறேன்.’’

‘‘நல்வாழ்த்துக்கள்’’ என்று கைகுலுக்கினார்கள்.

சௌதாமினிக் குட்டி, எனக்கு வேலை கிடைத்து விட்டது!

மொட்டைமாடியில் அப்பா இருந்தார். என்னவோ தோன்றியது. அங்கேயே நமஸ்கரித்தான். ‘‘காலை வாரிறாதே’’ என்றபடி கும்பிட்டார். ‘‘வே…லை கிடைத்து விட்டது அப்பா. நோ 'லை' என்றான். சிலிர்த்துப் போய் வானத்தைப் பார்த்துக் கும்பிட்டார் அவர். ’’பகவானே ’’ என்றார். ‘‘அது பகவான் இல்லப்பா. வெறும் வான்’’ என்றான் அவன்.

ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளி ஒருவரைக் கொண்டு திறப்பு விழா ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. அவர் மந்திரியாகும் ஹேஷ்யங்கள் வேறு இருந்தன. அரசின் போக்குவரத்து... புழக்க பழக்கங்கள் சுலபமாக அவர் வழியே முடித்துக் கொள்கிற ஒரு கணக்கு. அவரைப் பிடிக்க, திறப்பு விழாவுக்கு அவர் வருகையை அனுசரித்து நாள் பார்க்க என்று சிரமேற் கொண்டிருந்தார்கள் நிர்வாகிகள்.

ஷா என்டர்பிரைசஸ். திறப்பு விழா என்று இந்துவில் முதல் பக்க விளம்பர அமர்க்களம். காட்டினான் அப்பாவிடம், ‘‘தேவலையே’’ என்றார் அப்பா. ‘‘வானத்தைப் பார்த்துக் கும்பிட வேண்டாம். தேவலை அல்ல, வியாபார வலை’’ என்றான்.

‘‘தம்பி,  நிகழ்ச்சித் தொகுப்பு... காம்பியரிங் பண்றியா?’’ என்று கேட்டார்கள். திடீரென்று. ‘‘அதற்கென்ன?’’ என்றான் உற்சாகமாய்.

வழக்கமான பந்தாக்களுடன் கார்கள் அணிவகுக்க பிரமுகர் வந்தார். யானைக்குத் துதிக்கை போல பெருந்துண்டு... ரொம்பப் பரபரப்பானவர் போல் காட்டிக் கொண்டார் அவர். புகைப்பட மின்னல். பன்னீர் மழை. கருப்புக் கண்ணாடிக்கும் அதுக்கும் தடுக்கி கிடுக்கி விழுந்து விடப் போகிறாரே என்று பதறி கையைப் பிடித்து மேடைக்கு அழைத்துப் போனார்கள். ‘‘எங்களது பாரம்பரியம் மிக்க கம்பெனியின் சார்பில் மேதகு ஐயா சோமசுந்தரம் அவர்களை வருக வருகவென வரவேற்கிறோம்.’’ என்றான் அவன் ஒலிபெருக்கியில், அவர் அவனைப் பார்த்துக் கும்பிட்டார்.

எல்லாம் நன்றாய்த்தான் இருந்தது. சோமசுந்தரம் தமது உரையில், நிறைய அசட்டு ஜோக்குகள் அடித்தார். நிர்வாகிகள் பக்கம் அவர் பெடஸ்டல் ஃபேன் போல திரும்பும்போது அவர்கள் அங்கீகரித்தாற் போல ரசனையுடன் தலையாட்டினார்கள், பிஸ்கெட்டைக் கண்ட பட்டி நாய் போல, ‘‘ஷா என்றதும் எனக்கு பெர்னாட்ஷா ஞாபகம் தான் வருகிறது. அவர் எழுதிய ஜூலியஸ் சீஸர் நாடகத்தில்...’’ என்றார் சோமசுந்தரம்.

அந்தப் பக்கத்து மைக்கில் அவரும், இந்தப் பக்கம் அவனுமாய் நின்றிருந்தார்கள். சட்டென்று மைக்கில் ‘‘ஐயா, ஜுலியஸ் சீஸர் எழுதியவர் பெர்னர்ட்ஷா அல்ல ஷேக்ஸ்பியர்’’ என்றான். ஒரு கணம் திகைத்துப் போனார் அவர். பிறகு சமாளித்துக் கொண்டு ‘‘எஸ். எஸ்...’’ என்று புன்னகைத்தபடியே மேலே பேச ஆரம்பித்தாலும், அவரிடம் முன்னிருந்த அந்த கெத்து இல்லை. உற்சாகம் இல்லை. காற்றுப்போன டயருடன் பஸ்ஸை டிப்போவுக்கு எடுத்துப் போவது போல என்னவோ பேசிவிட்டு அமர்ந்துகொண்டார்.

கூட்டம் முடிந்து கார்கள் புறப்பட்டுப் போன புழுதி அடங்குமுன்பே அவனுக்கு நிர்வாகிகளிடம் இருந்து அழைப்பு வந்து விட்டது. தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அவனைப் பார்த்ததும் முதலாமவர், ‘‘ஏய்யா, ஜூலியஸ் சீஸரை ஷேக்ஸ்பியர் எழுதினா என்ன வெங்காயம் எழுதினா என்ன? அவர் ஏதோ சொன்னார்னா சொல்லிவிட்டுப் போட்டுமேய்யா? நீ என்னத்துக்கு அதை மறிச்சித் திருத்தறே...’’ என்று கண்சிவக்க எகிறினார்.

‘‘இல்ல சார்... நான்...’’

‘‘இல்ல சாரும் இல்லை. நொள்ள சாருமில்லை... யுவார் டிஸ்மிஸ்ட்’’ என்றார் அடுத்தவர் ஆக்ரோஷமாய்.

‘‘பகவானே?’’ என்று வானத்தைப் பார்த்தார் அப்பா. அவர் கண்கள் அழுதன. ‘‘கடவுள் நம்பிக்கை வேணுண்டா, தனு. நான் சொல்லலே? என் அறிவே பெருசுன்னே... இப்ப என்னாச்சி?’’

‘‘வெறுப்பேத்தாதீங்கப்பா...’’ என்று வெளியேறினான். கலைந்த தலையை வாரிக்கொள்ளக் கூடத் தோணவில்லை. ஏதோ ஒரு சட்டை. மனசில் வன்மமும் ஆத்திரமும் குமறியது. தெருவில் இறங்கினான். நேரே எதிரே வந்தாள் சௌதாமினி.

போகாத பொழுதுகளை என்ன செய்வது?

‘‘மனித சக்தியை ஒன்று திரட்ட வேண்டும். போராட வேண்டும். அதிகார வார்க்கத்தைத் தகர்த்தெறிய வேண்டும். அதன் முதுகெலும்பை முறிக்க வேண்டும்... புரட்சி செய்யத் தயங்கக் கூடாது...’’ என்றார் தோழர் சுயம்பு தோரணையுடன். ‘‘அதற்கான எந்த ஆயுதத்தையும் கைக்கொள்ளலாம். போராட்டத்துக்கான உன் ஆயுதத்தை... நீ அல்ல, உன் எதிரியே தீர்மானிக்கிறான்... என்கிறான் எங்கல்ஸ்.’’

அவன் அவரைப் பார்த்தான். ‘‘அதைச் சொன்னது எங்கல்ஸ் அல்ல மாவோ’’ என்றான்.


Comments

Popular posts from this blog