நன்றி நவம்பர் இதழ் கவிதை உறவு
யானைக் கூண்டு
எஸ். சங்கரநாராயணன்

ரண்டு ஊர்களுக்கு இடையே ஒரு காலத்தில் வனாந்திரமாய் இருந்திருக்கலாம் அந்த இடம், இப்போது ஆள் அரவமற்று. அமைதி அங்கே ஒரு நீர்க்குட்டை போலத் தேங்கிக் கிடந்தது. பெரும்பாலும் தரைப் பொட்டல். திடல் போல பூமி வெள்ளரியாய் வெடித்துப் பிளந்து கிடந்தது. நடுவே பாழடைந்த கோவில் ஒன்று. அதைப் பார்க்க வருவாரும் இல்லை. பராமரிப்பாரும் இல்லை. பூமியில் விலக்கி வைக்கப் பட்டாப் போல துண்டாடப் பட்ட இடமாய் அந்தப் பிரதேசம். மேலேறிச் செல்ல கற்கள் தாறுமாறாகக் கிடந்தன. சிலாட்களுக்கு பற்கள் இப்படி முளைத்து வளர்ந்து காணக் கோரமாய் இருக்கும். கோவில் மொத்தமுமே புதர் மண்டி செடி கொடிகளால் மூடி குகை மாதிரிக் கிடந்தது. சிலந்திகளின் வாசஸ்தலம். ஒட்டடை விலக்கிப் போக வேண்டும்.
சந்நிதியின் முன்னே ஒரு துரு பிடித்த காண்டாமணி. அதன் நாக்கு அசைவதை நிறுத்தி யுகங்கள் கண்டிருந்தன. பிறரது துக்கத்தை அறிவிக்கிற காண்டாமணி. அம்மனைக் கண்திறக்க இறைஞ்சுகிற காண்டாமணி. அதுவே, தான் பயன்படுத்தப் படாத துக்க அமைதியில் உறைந்து கிடக்கிறது. சந்நிதிக்குள் காளி. பத்ரகாளி. விளக்கு மாத்திரம் எண்ணெய்க் கரியுடன் தொங்குகிறது. வஸ்திரமும் காணாத விக்கிரகம். யாருமற்ற இந்தத் தனிமை அவளுக்கு எப்படி இருக்கும்? சூலாயுதம் ஏந்திய கரம். கூடவே அபய ஹஸ்தம் காட்டும் இன்னொரு கரம். அதைக் கொள்வார் இல்லை என்ற நிலை.
கொடியில் ஊர்ந்தபடி நகரும் பாம்போ, பொத்தென்று கீழே தவறி விழுந்து ஓடும் அணிலோ தவிர சப்தங்கள் இல்லை. அமைதிக் குட்டையில் ஒரு ப்ளக். அவ்வளவே. சில சமயம் வண்டுகள் ருய்யென்று விமான இரைச்சல் போட்டபடி ஒரு வட்டமடித்துவிட்டுப் போய்விடும். திரும்ப அமைதி பாசிபோல் மூடிக் கொள்ளும். வாயடைக்கப்பட்ட மௌனத்தின் ஆட்சி அது. அமர்ந்த நிலையில் அப்படியே அம்மன், சுற்றிலும் எதிலும் அசங்கல் கூட இல்லாத பட்சம், அவள் கால்மாற்றி உட்காரக் கூட இயலாதிருந்தாள். முதுகு வலி கண்டிருக்கலாம். அவள் விழிகள் திறந்திருந்தாலும் எதையாவது அவள் பார்க்கிறாளா என்பதே ஐயம் தான். காட்சிகள் கண்ணுக்குள் நகரா உறைவு கண்டிருந்தன.
பூமி சுழலுவதையே அங்கே நிறுத்திக் கொண்டிருந்தது. காற்றின் அசைவோ, மரங்களின் சிணுக்கமோ கூட இல்லை. இந்த உறைந்த நிலை இப்படியே எவ்வளவு நாள் இருந்தது. இன்னும் எவ்வளவு நீடிக்கும். மௌனத்தில் சிறு வெடிப்பு எப்போது எப்படி நிகழும். தானே இயங்க முடியாத காளியம்மன். இப்போது முகத்தில் கூட அந்த உக்கிரம் சிறிது அடங்கினாப் போல ஆகியிருக்கலாம். யாராவது தன்னை உலுக்கி அசைக்க அவள் காத்திருந்தாள். துக்கத்துடன் ஒரு விடுதலைக்கு தானே ஏங்கிக் கிடந்தாள். திகைத்து விக்கித்துக் கிடந்தது மௌனம்.
ஆகா வந்தான் ஒருவன். ஒரு யுவன். யார் அவன், எங்கேயிருந்து வருகிறான். எப்படி அங்கே வந்து சேர்ந்தான். நல்ல நிலா வெளிச்சம். பூமிக்கு புண்ணியாகவசனம் செய்தாப் போல நிலாச்சொம்பில் இருந்து பால் அந்தப் பிரதேசத்தில் ப்ரோஷணம் பண்ணப் பட்டிருந்தது. புனிதமாக்கப் பட்டுக் கிடந்தது வெளி. தோள் குலுக்கிய உற்சாக நடை. அவன் பாட்டுக்கு வந்தான். அந்த வெளியின் வெண்மைப் பளபளப்பு திகட்டத் திகட்ட எதோ பாடியபடி வந்தான். என்ன பாடல்? பாடலா அது… த்தூ. என்ன ராகம்? அபஸ்வரம். சீச்சி. உன்மத்த உளரல். ஆனந்தத்க்கு மொழி ஏது. பிதற்றல் வாழ்வின் உன்னத போதை. கொல்லென்று பூத்துச் சிரிக்கும் மலர்க் காடாய்க் கிடந்தது வெளி. ஒரு மலர் இல்லை. என்றாலும் நிலா, ஐஸ்கிரீமாய் உருகி வழியும் நிலா. பூமியின் கவிந்த இருள் எனும் விக்கிரகத்துக்கு பாலாபிஷேக நேரம். ஹ்ரும், என்று கண் சிவக்க செருமிக் கொண்டான். அப்படியே துள்ளினாப் போல நடை. வேட்டிக்குள் கால் வீசி வீசி, கால் வேட்டிக்கு வெளியே வரவர ஒரு குளிர்ச்சி உள்ளே பாய்ந்து தடவி நிறைக்கிறது. ஒரு கெட்ட வார்த்தையை உரக்கச்சொல்லி சிரிக்கிறான். வாய் நிறைய மேலும் மேலும் கெட்ட வார்த்தைகள் பொங்கின. இயற்கை தரும் போதை…
சட்டென நின்றான். பார்த்தான். என்ன இடம் இது. எதோ கோவில். என்ன கோவில் இது? எத்தனை காலமாக இப்படி மூடிக் கிடக்கிறதோ. கொடிகளும் புதருமாய் உள்ளே புதையல். திரும்ப ஒரு பன்றிச் செருமல். செறிவாய் உணவெடுத்த இன்ப ஏப்பம் அது. இது மனதின் பசி. இன்னிக்கு எதோ விசேசம்னு நினைச்சமே. சரிதானப்பா… உள்ளே வந்து அந்த மண்டபத்தில் காண்டாமணியைப் பார்த்தான். மங்கலான ஒளி. அதன் தொங்கும் நாக்குக்குக் கீழே நின்று பார்த்தான். என்ன ஆபாசமடா இது… என்று சிரித்தான். வெளியால பாத்தா பொம்பளையாள் பாவாடையாட்டம். கோவில்ல கெட்ட காரிய ஞாபகமா. திரும்பச் சிரித்தான். எல்லாவற்றுக்கும் சிரிக்க ஆரம்பித்திருந்தான். என்னா இன்னிக்குச் சிரிப்பு சிரிப்பா வருது.
போதை தான். நிலாவே போதைதான். நமக்கே இப்பிடிக் கெடக்கே. இந்த மனம் பிசகிய ஆட்கள் இங்க வந்தால் அவனுங்க நிலைமை என்னாவும்? நான்? மனம் பிசகவில்லையா எனக்கு? இன்னும் பிசகவில்லையா? எந்தப் பைத்தியம் தன்னைப் பைத்தியம்னு ஒத்துக்கிட்டது. எந்தக் காலத்தில்… இன்னொரு கெட்ட வார்த்தை. அட காளி… அர்ச்சனை கேட்ட காது. நான் பேசினதெல்லாம் கேட்டுக்கிட்டா இருந்தே பாவம். இன்னும் நாக்கை நீட்டிக்கிட்டு எதுக்கு ஆவேசம்? வாய் வலிக்கப் போவுது. மூடிக்கோ… சிரித்தான். ஈஸ்வரி. நீ என்ன நினைக்கே? நான் பைத்தியந்தானா.
ஆக மனுசாளுக்கு வாழ்க்கையில என்ன முக்கியம். துட்டு. துட்டு இருந்தா உறவு சொந்தம் பந்தம் எல்லா கச்சடாவும் தானே வரும். மரம் பழுத்தால் வௌவால் வர்றா மாதிரி. துணிப் பொட்டலத்தை அப்படியே கடாசினான். உள்ளே என்னவோ உலோகம். தட்டாய் இருக்கலாம். சப்தித்தது. இடுப்பு முடியில் இருந்து தீப்பெட்டி எடுத்தான். சந்நிதி கிட்டே போய் குச்சியைப் பற்ற வைத்தான். கட்டை விரலால் இட்ட சந்தனம் போல கோவியாய், பொட்டு போல அதில் சுடர் கிளம்பியது. பத்ரகாளி அம்மன் முகம் அந்த ஒளியில் பொலிந்தது. இங்க தனியா என்னடி பண்றே.. என்று கேட்டான் அவன். மனித வாடையே இல்லாமல், குரல் ஒலிகளே இல்லாமல் இருந்த இடம் இப்போது சிறிது கலங்கினாப் போல இருந்தது. குட்டை நீரின் மேற்பரப்பில் மழை புள்ளி யிட்டாப் போல.. ஏண்டி தனியா இருக்கியே. உனக்கு பயமா இல்லியா?... என்று கேட்டான். எனக்கா? ஹா எனக்கென்ன பயம்… என்றான். பின் சிரித்து, அதான் கூட நீ இருக்கியே, என்றான். பயப்படாதே. என்றான். நான் இருக்கேன், என்றான்… வாய்க்கு வெளியே சிவப்பு வெத்திலையாய்த் தனியே நாக்கை நீட்டி நிற்கிறாள் பத்ரகாளி. பார்க்க பயமாய் இல்லை. அவன் அதைப் பற்றி அலட்டிக் கொண்டதாகவே இல்லை.
ஆனால் அத்தனை உற்சாகமானதா வாழ்க்கை. இந்த இடம், இந்தப் பயணம், இந்த நிலாக் கொண்டாட்டம். பொழுது மென்மை கண்டிருக்கிறது. கடும் தோல்விகள் கசப்புகள் ஏமாற்றங்கள், ஆகியவை அவனை வீட்டை விட்டுத் துரத்தி யிருந்தன. அவனால் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க முடியவில்லை. சற்று நிதானப்பட்ட போது இந்த உற்சாகத்துக்கு அர்த்தமே இல்லை என நினைத்தானா. என்னாச்சி எனக்கு, என குனிந்து தலையை உதறிக் கொண்டான். ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான். வெளியே வந்தான். ஐயோ அற்புதமாய்க் காய்ந்தது நிலா. ஐயோ இந்தப் புகையில்… நிலா அழுக்காயிருமோ என்று இருந்தது. இந்த அழுக்குகளைத் துடைக்கத் தானே வருகிறது ஒளியும் மழையும்.., என்று நினைத்தான். அப்படியே படியேறி வந்து வாசல் பார்க்க ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். காலை நீட்டிக் கொண்டான். இதமாக இருந்தது. தொடை வரை தடவித் தந்தான். புகையை உள்ளிழுத்து ஸ்ஸ் என ஒரு சத்தம் கொடுத்தான். இத்தனை தூரம் நடந்து வந்ததற்கு கால் வலி தெரியவில்லை… இருட்டானால் வலி தெரிந்திருக்கலாம். கிளம்பியிருக்கவே மாட்டான். எங்காவது முடங்கி யிருப்பான்.
ஏ தூங்கிட்டியா?... என உள்ளே பார்த்துக் கேட்டான். என்னால தூங்க முடியுமா தெரியல்ல, என்றான். நானும் உன்னைப்போல, என்றான். சிரித்தபடி அநாதை, என்றான். பிறகு அழுதான். அவ… என்றவன் நிறுத்தி சந்நிதியைப் பார்த்தான். உனக்கு எப்பிடி அவளைத் தெரியும். செண்பகவல்லி… பேர் நல்லாருக்கா?.. என்றான். எனக்கு அந்தப் பேர் பிடிச்சிருந்தது. சட்டென அவனுக்கு உடம்பு தூக்கிப் போட்டது. இருமல் வந்தது. நெஞ்சைத் தடவிக் கொண்டான். பீடியை உதறித் தூர எறிந்தான். நல்லாதான் வெச்சிக்கிட்டேன் அவளை… என்றான். ஓடிப் போயிட்டா, என நிறுத்திவிட்டு பின் தொடர்ந்து பேசினான். அழகா இருப்பா. ரொம்ப அழகா இருப்பா. அவளை என்னால மறக்க முடியல்ல. வெறுக்க முடியல்ல. அவளை யாராலும் வெறுக்க முடியாது. உன்னால கூட, என்று திரும்பிச் சொன்னான்.
நல்லாதானடி ஒன்ன வெச்சிக்கிட்டேன்? அப்படியே மல்லாக்கப் படுத்துக் கொண்டான். உனக்கு என்ன குறை வெச்சேன்? நான் தான் உன்னோட குறையா… என்றான். நீ வேற இடத்தில் வளர வேண்டிய விதையா?... என்றான். ஈஸ்வரி, கேட்டியா?... என்றான். நான் வேலைக்குப் போயிட்டு திரும்பி வீட்டுக்கு வரேன். வீடு இருட்டிக் கிடக்கு. திறந்து கிடக்கு வீடு. இங்க எப்படிக் கெடக்கு? அதைப் போல. ஆனா இங்க நீ இருக்க… இது ஓ வீடு. அங்க?...
விளக்குப் பொருத்த வேண்டிதானே? செண்பகவல்லி, என்ன பண்றா இவ? நான் உள்ளே போனால் காலியாக் கெடக்கு வீடு. சின்ன வீடுதான். ஒரே அறை. அதில் தேட என்ன இருக்கு. அவ வத்திப் பெட்டியா என்ன? கீழே மேலே குனிஞ்சி நிமிர்ந்து தேடறதுக்கு. வெளிய குடி தண்ணி எடுக்க கிடுக்கப் போயிட்டாளா. அவளோட பெட்டி, அங்க இல்லை. அட அவ போயிட்டான்னு உடனே புரிஞ்சது. அத்தனை அழகு எனக்குன்னு பெருமையா இருந்தேனே. அது பகீர்னு இருந்தது. ரெண்டு நாளா எதோ தன் யோசனையா இருந்தா. நான் என்னன்னு புரிஞ்சிக்கறது. ஆனால் இப்பிடி ஒரு காரியம் அவ பண்ணுவான்னு நான் எப்பிடி எதிர்பார்க்க முடியும்? யாரால எதிர்பார்க்க முடியும்? அவளை நான் பூ மாறி வெச்சிக்கிட்டேன். அவ பக்கத்ல இருந்தாலே எனக்கு மனசு நெறைஞ்சிரும்… ஹ்ம், என்றான். தலையை உதறிக் கொண்டான்.
ஈஸ்வரி கேட்டியா? தூங்கிறாதே. உனக்குச் சொல்ல ஆள் இல்ல. எனக்கு கேட்க ஆள் இல்ல… இனி அவ வரமாட்டான்னு தோணிட்டது எனக்கு. அவங்க ஐயா வீட்டுக்கு ஒரு போன் போட்டுக் கேட்கலாமான்னு இருந்தது. நான் கேட்கல்ல. அவ அங்க போயிருக்க மாட்டான்னு எனக்குப் பட்டது. யானையைக் கூண்டுக்குள்ள அடக்க முடியுமா? நான் நினைச்சது தப்பாப் போயிட்டது. ஈஸ்வரி. யானைன்னா அவ கறுப்பு யானை இல்ல. சிவப்பு யானை. நம்மாளுகள்ல செவப்புத் தொலி பாக்கறதே அபூர்ம்லா? அத்தனை அழகு அவ. அவ போன பிறகு வீட்ல என்ன இருக்கு அவ அடையாளமான்னு தேட வெச்சிட்டாளே பாதகத்தி. இந்தோ… என துணிப் பொட்டலத்தில் இருந்து ஒரு ஸ்டிக்கர் பொட்டுப் பட்டையை எடுத்து நீட்டினான். சிரித்தான். ஒரு பொட்டைப் பிரித்து தன் நெற்றியில் ஒட்டிக் கொண்டான். நீ வேணா ஒண்ணு வெச்சிக்கோ. ஜோரா இருக்கும்.
எங்க போயிட்டாளோ? எப்பிடி அப்பிடி ஒரு முடிவு எடுத்தா? நான் தெரிஞ்சிக்கிட்ட செண்பகவல்லி இல்லை அவ. அது இப்பதான் எனக்கு உறைக்குது. அவள் எப்படின்னு நான் புரிஞ்சிக் கிட்டிருக்கணும். அதும்படி நான் நடந்துக்க முயற்சி பண்ணி யிருக்கணும். ஐய அவ கெடச்சதுமே நான் அந்தாக்ல மிதந்துட்டேன். இனி என் வாழ்க்கைல எல்லாமே சந்தோசம் தான்னு நெனைச்சிட்டேன். நான் அவ என்ன நினைக்கிறான்னு யோசிக்கவே இல்லியோ என்னவோ. அதைப் பத்தி கவலைப்படவே இல்லையோ என்னவோ. தப்பு பண்ணிட்டேனே ஈஸ்வரி… என தலையில் சின்னதாய் அடித்துக் கொண்டான்.
ஒரு வேகம் வந்தது எனக்கு. ஒருநாள்ப் பூரா அழுதுகிட்டு கெடந்திருக்கேன். கதவைச் சாத்திக்கிட்டு வெளியே வரவே இல்லை நான். அப்பறமா அட கோட்டிக்காரப் பயலே. உன் அழுகைக்கு என்ன அர்த்தம்? இப்ப அழுது என்ன பிரயோசனம்… கண்ணைத் துடைச்சிக்கிட்ட போது ஒரு வைராக்கியம் வந்தது. நான் முயற்சி பண்ணுவேன். அவளை எப்படியாவது திரும்பிப் பார்த்து அழைச்சிக்கிட்டு வருவேன். வா செண்பகவல்லி. உன்னை நான் நல்லா வெச்சிப்பேன். நான் அவளைத் தேடிப் புறப்பட்டேன்.
கால் போன திக்கு. மனம் போன போக்கு. யாராண்டையும் விசாரிக்க என்ன ,இருக்கு? சொல்லு என்ன இருக்கு, என்று காளியைப் பார்க்க திரும்பிப் படுத்துக்கொண்டான். சிரித்தான். நாம ஆர்ட்டக் கேட்டாலும் நம்மள மேலும் கீழும் பார்க்கறாங்க. பாவமாப் பாக்கறது. இல்லாட்டி இளக்காரமாப் பாக்கறது. அவமானமா இருக்குது. அட என் தப்பு என்னா இருக்குது இதுல? எனக்குத் தெரிஞ்ச அளவு அவளை நல்லா வெச்சிக்கிட்டேன். ஆனால் என் சம்பாத்தியம் அவளுக்குப் பத்தல. என் ருசி அவளுக்குப் பத்தல. நான் என்ன செய்யறது? இதுக்கு மேல என்கிட்ட இல்லடா கண்ணா. திரும்ப அழுகை துளிர்த்தது கண்ணில். இவளால நான் என் குடியையே விட்டேன். செலவு கட்டுப்படி ஆவல்ல. கூட அவ இருந்தாளா,. அதைவிட போதை என்னா இருக்குது லோகத்துல. என்னா ஈஸ்வரி, பொம்பளைன்னாலே போதை தானே. ஹா, என்றான். யார் மேலயும் எது மேலயும் ரொம்ப பிரியம் வைக்கக் கூடாது பாத்துக்க. வெச்சா? ஒரு நா இல்லாட்டி ஒரு நா ஆப்பு நிச்சயம். ஹ்ரும் என்றான் நெஞ்சைத் தடவியபடி. சாப்பிட்டுர்லாமா?
துணிப் பொட்டலத்தை முடிச்சு பிரித்தான். உள்ளேயிருந்து ஒரு உணவுப் பொதிவை எடுத்தான். எப்ப எங்கே வாங்கினானோ. ஏ நீ சாப்பிட்டியா இவளே?.. என்றான். பாவம் எத்தனை பசியா இருப்பியோ. எத்தனை நாள்ப் பசியோ உனக்கு.. என்றான். என் பாடு தேவல… வா. வரியா. வந்து பக்கத்ல உக்காந்து ஒரு வாய் சாப்பிடுவே. சர்க்கரைப் பொங்கலும் அதுவுமா நல்லா சாப்பிட்டிருப்பே. இது எதோ ஒண்ணு… பசிச்சா சாப்பிடுவேன். இல்லாட்டி இதை விட்டெறிஞ்சிருவேன். அந்த இலையைக் கிழித்து கொஞ்சம் சோறு அதில் வைத்தான். ஹ்ம்… என்று சிறிது முனகினான். தண்ணி பாட்டிலை எடுத்து திறந்து வைத்துக் கொண்டான். அவன் வைத்ததற்கும் அதற்குள் பாட்டில் உள்ளே தண்ணி சிறிது குலுங்கியது.
ஆனா ஒண்ணு ஈஸ்வரி. இப்பிடி ஊர் ஊராத் திரியிறது… நல்லாதான் இருக்கு… என்றான். எனக்குப் பிடிச்சிருக்கு, வேற வழியில்லையில்லா, என்றபோது தொண்டை அடைத்தது. வீட்ல இருக்க முடியாது. அவ கூட இருந்த வீடு. நான் அவளை விரும்பறேன். செண்பகவல்லி. நான் உன்னை விரும்பறேன். ஏன் நீ எனக்கு அப்பிடி ஒரு காரியம் பண்ணினே.  ஹா, என்றான். ஈஸ்வரி, எனக்குப் புரியல்ல. நான் ஏன் இன்னும் உயிரோட இருக்கேன்… என்றான். ஒரு வாய் தண்ணி குடித்தான். லேசாய்ப் புரையேறியது. என்னை யார் நினைக்கப் போறா, என்று சோகமாய்ச் சிரித்தவன்… ஈஸ்வரி, நீ நினைச்சியா? ஒருவாய்ச் சோறு போட்டுக் கொண்டான். ஊறுகாய் தேடித்தடவி எடுத்து கடித்துக் கொண்டான். புளிப்பான காரம் ஸ் என்று ஏறியது. தேள் கொட்டினாப் போல.
கொஞ்ச நேரம் பேசவில்லை. ஈஸ்வரி கால்மாற்றி உட்கார்ந்து கொண்டதை அவன் பார்க்கவில்லை. கிடுகிடுவென்று சாப்பிட்டு முடித்தான். அப்புறமும் பேசவில்லை. தண்ணி நிறையக் குடித்த களக் களக் சத்தம். வாயைத் துடைத்தபடி வெளியே பார்த்தான். எத்தனை அருமையான இரவு. இட்லிக்கு அரைத்த மாவு போல கெட்டியான ஒளி. கொழகொழத்து கை பிசுபிசுத்தா மாதிரி இருந்தது. வெளிச்சத்தில் இந்த இடம் இப்பிடிக் கிடக்கு. இருளில் எப்படி இருக்குமோ, என நி9னத்தான். பயந்து கிடக்குமோ. உலகமே ரெண்டு வகை. வெளிச்சத்தில் ஒரு வகை. இருட்டில் இன்னோரு வகை. சந்தோசம் என்பது வெளிச்சம். துக்கம் இருள். சந்தோசத்தில் லோகம் ஒரு வகை. வருத்தத்தில் எதிர் மாதிரி. எது உண்மையான லோகம்…  ஒரு நாடகமேடையில் போல இங்கேயிருந்து அங்கே அங்கேயிருந்து இங்கே என நடந்தான். இன்னோரு பீடி? வேண்டாம் என நினைத்தான். காலடியில் பாளம் பாளமாய்க் கிடந்தது திடல். ஓரிரு புற்கள் உள்ளே யிருந்து மூக்கு மயிராய் நீட்டிக் கிடந்தன. பனி விழுந்த ஈரம் காலில் தட்டியது. செருப்பில்லாமல் இருந்தான்.
திரும்பிக் கோவிலைப் பார்த்தான். யாரோ பெண். யாரது? சிவப்புப் புடவை. ஈஸ்வரி நீயா என்று கத்தினான். வளையல் சத்தம். யாரோ சிரித்தா மாதிரிக் கூட இருந்தது. கிட்டே போய்ப் பார்த்தான். யாரும் இல்லை. சில சமயம் ராத்திரி படுத்துக் கிடக்கறப்போ ஈஸ்வரி, என்று உள்ளே கர்ப்பகிரகத்தைப் பார்த்துச் சொன்னான். செண்பகவல்லி வந்து தலைமாட்டுல நிக்கிறா மாதிரிக் கூடத் தோணும். அவ எங்க வரப் போறா. எங்க போனாளோ. என்னவோ யோசிததா மாதிரி நிறுத்தினான். ஆனா… என்றான். என்னால ஏன் அவளை மறக்க முடியல? அவ என்னை எப்படியோ மறந்திட்டா. எப்பவோ மறந்திட்டா. என்னை விட்டு அவ போயிட்டா. சிறிது மௌனம். பெருமூச்சு விட்டான். செவப்பா அழகா இருப்பா. எனக்குக் கொடுப்பினை இல்ல.
உற்சாகம் பீரிடும் போது கெட்ட வார்த்தைகளை வாரி யிறைத்தபடி யிருந்தான் அவன். இப்போது எவ்வளவோ நிதானப் பட்டாப் போலிருந்தது. உற்சாகம் பிறரோடு பகிர வல்லதாகவும், துக்கம் தனக்குத் தானே மாத்திரமே பேசிக் கொள்வதாகவும் ஆகி விடுகிறது. அல்லது துயரம் உன்னை மௌனமாக்கி விடுகிறது. என்னை உனக்குப் புரியுதா ஈஸ்வரி, என்றான். எனக்குப் பைத்தியம் ஈஸ்வரி. ஆமா. அவ மேல பைத்தியம். இப்ப பைத்தியம் முத்திட்டது. இந்தப் பௌர்ணமி வெளிச்சம் எனக்குக் குறுகுறுன்னு இருக்கு. லேசா நெஞ்சு விம்முது. அட சனியனே நான் சந்தோசமா இருக்கேனா துக்கமா இருக்கேனா, அதே தெரியலியே. அப்ப என்ன? அப்ப நான் பைத்தியம்னு தானே அர்த்தம். அஹ்க். உரக்க ஒரு கெட்ட வார்த்தை சொன்னான்.
மண்டபத்துக்கு வந்து படுத்துக் கொண்டான். நேரம் என்ன தெரியவில்லை. நேரம் தெரிஞ்சி என்ன ஆவப் போவுது. பெரிய கலெக்டர் உத்தியோகம் பாழாப் போவுதா? எனக்கு என்ன ஆனா என்ன? என்னைப் பத்திக் கவலைப்பட ஆரிருக்கா?... நெஞ்சு ஏறியேறி இறங்கியது. அழாதடா என்றான் தனக்குள். அப்படியே ஒரு தரம் சந்நிதியைப் பார்த்தான். என்ன தோணியதோ. ஒரு தரம் கை குவித்து வணங்கினான். இன்னொரு கெட்ட வார்த்தை. நிலா மேகத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கலாம். அதுதானோ என்னவோ. சட்டென இருட்டு கொடுத்தது. சந்நிதிக்குள் பத்ரகாளி அவனுக்குத் தெரியவில்லை. கரும் பலகையில் எழுதிப் போட்டதை வாத்தியார் அழித்தாப் போலிருந்தது.
வெயில் வந்திருந்தது. பத்ரகாளி மீண்டும் மாளாத் தனிமைக்கு ஆளாக வேண்டி வந்தது. ஒலிகள் மெலிந்து ஒடுங்கி கரைந்திருந்தன. யாராவது கெட்ட வார்த்தையாவது பேசக் கூடாதா என்ற கணங்கள். ஒலி உயிரின் அடையாளம் அல்லவா. சந்நிதியில் இருந்து எழுந்து வெளியே வந்தாள். அவன் கிட்ட வந்து பார்த்தாள். அவன் எழுந்து கொள்ளவில்லை. மல்லாக்க அவன் கிடந்த கிடக்கை. அவன் எழ மாட்டான் என்றிருந்தது. அவன் விழிகள் திறந்திருந்தாலும் எதையாவது அவன் பார்க்கிறானா என்பதே ஐயம் தான். காட்சிகள் கண்ணுக்குள் நகரா உறைவு கண்டிருந்தன. காய்ந்த இலைச் சருகில் அவன் அவளுக்காக நேற்று வைத்த சாதம் எறும்பு அரித்துக் கிடந்தது. ஒலிகளைத் தொண்டைக்குள் அமுக்கித் தொங்குகிறது காண்டாமணி. அமைதி மீண்டும் அங்கே பாசி போல் கவிய ஆரம்பித்திருந்தது.

  •  storysankar@gmail.com / 97899 87842

Comments

Popular posts from this blog