உவகச் சிறுகதை / ஜப்பான்
நன்றி - மகாகாவி ஜனவரி 2019 இதழ்

நன்றி - மகாகாவி ஜனவரி 2019 இதழ்

ஜே
யாசுனாரி கவாபாட்டா
தமிழில் எஸ். சங்கரநாராயணன்
வைகறைப்
பொழுதில் இருந்தே ஜே உரக்கப் பாட ஆரம்பித்திருந்தது.
மழைத்
தடுப்பான கதவுகளை அவர்கள் ஒதுக்கித் திறந்தார்கள். பைன் மரத்தின் கீழ்க் கிளையில் இருந்து
மேலெழுந்து அது பறந்ததை எல்லாரும் பார்த்தார்கள். ஆக அது திரும்பி வந்திருந்த மாதிரிதான்
பட்டது. காலை உணவுவேளையின் போது அதன் சிறகடிப்பு கேட்டது.
“ஐய
அந்தப் பறவை ஒரு இம்சை.” தம்பி எழுந்துகொண்டபடியே சொன்னான்.
“சரிடா
சரிடா” என அப்பத்தா அவனை அடக்கினாள். “அது தன் குஞ்சைத் தேடுதுடா. நேத்து அதன் குஞ்சு
கூட்டில் இருந்து கீழ விழுந்திட்டது போல. நேத்தி அந்தி சாயறவரை அது இங்கிட்டும் அங்கிட்டுமா
பறந்துக்கிட்டே யிருந்தது. குஞ்சு எங்கன்னு அது இன்னும் கண்டுபிடிக்கலையோ என்னவோ? ச்.
என்ன நல்ல அம்மா அது, இல்லே? காலை வெளிச்சம் வந்த ஜோரில் திரும்ப என்ன ஏதுன்னு பாக்க
வந்திருக்கு.”
“அப்பத்தா
அழகா எல்லாம் புரிஞ்சிக்கறா” என்றாள் யோஷிகோ.
அப்பத்தாவின்
கண்கள் ஒண்ணும் தரமில்லை. ஒரு பத்து வருசம் முன்னாடி அவள் ‘நெஃப்ரைட்டிஸ் ஒன்’ வந்து
சிரமப்பட்டாள். அதைத் தவிர, அவளுக்கு உடம்புக்கு வந்ததே கிடையாது. என்றாலும் பள்ளிச்சிறுமியாய்
இருந்த காலத்தில் இருந்தே அவளுக்கு கேடராக்ட், கண்புரை இருந்தது. மங்கல் மசங்கலாய்த்
தான் அவளது இடது கண்ணில் பார்வை இருந்தது. இப்போது சாதக் கிண்ணத்தையும் சாப்ஸ்டிக்குகளையும்
யாராவது அவளுக்குக் கையில் எடுத்துத் தர வேண்டி யிருக்கிறது. வீட்டுக்குள் பழகிய இடங்களில்
அவள் சகஜப்பட்டாள் என்றாலும் தோட்டத்துக்குத் தனியே அவளால் போக இயலாது.
வெளியே
பார்க்கிற கண்ணாடித் தள்ளு கதவுகள் பக்கமாக சில சமயம் அவள் வந்து உட்கார்வாள். அல்லது
நின்றுகொண்டே கூட சன்னல் வழியே வரும் சூரியக் கதிர்களை விரல்களால் தள்ளினாப் போல அசைத்தபடியே
வெளியை வேடிக்கை பார்ப்பாள். இங்கே அங்கே என்று பார்வையை ஓட்டியபடியே அப்படி வெறித்துப்
பார்ப்பதே மொத்த வாழ்க்கைக்குமாகவும் இனி இருக்கிற பொழுதுக்குமாகவும் அவள் கைக்கொண்டாள்.
அந்த
மாதிரி சந்தர்ப்பங்களில் யோஷிகோவுக்கு அப்பத்தாவையிட்டு பயமாய் இருக்கும். அப்பத்தாவின்
பின்பக்கம் போய் அவளைக் கூப்பிட உந்தப் படுவாள். என்றாலும் சந்தடி செய்யாமல் நழுவி
விடுவாள்.
கிட்டத்தட்ட
பார்வை இல்லாத அப்பத்தாதான், ஜே பறவையின் குரலைக் கேட்டவள், அதன் நிலைமையை நேரிலேயே
பாத்தாப்போலப் பேசுகிறாள். யோஷிகோவுக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்.
காலை
உணவு முடிந்து பண்ட பாத்திரங்களை எடுத்துக் கொண்டிருக்கும் போது ஜே பக்கத்து வீட்டுக்
கூரையில் இருந்து கூவல் எடுத்தது.
புழக்கடைத்
தோட்டத்தில் ஒரு வாத மரம் இருந்தது. ரெண்டு மூணு பெர்சிம்மன் மரங்களும். அந்த மரங்களை
அவள் பார்த்தாள். ரொம்ப மெல்லிய சாறல், மரத்தின் அடர்த்தி இல்லாமல் தனியே அதைப் பார்த்தால்
மழை பெய்வதே கண்ணில் படாது.
ஜே
வாத மரத்துக்கு மாறிக் கொண்டது. பிறகு தாழ இறங்கி ஒரு சுற்று பறந்து விட்டு திரும்ப
கிளைக்குப் போனது பாடிக் கொண்டே.
தாய்ப்
பறவை, அதன் குஞ்சு இந்தப் பக்கம் தான் எங்கோ இருக்கிறது என்பதால் அதனால் அங்கேயிருந்து
போக முடியவில்லையோ?
அவளுக்குக்
கவலையாய் இருந்தது. யோஷிகோ தன் அறைக்குப் போனாள். காலைக்குள் அவள் தயாராக வேண்டும்.
கண்ணாடி
முன்னால் போய் அமர்ந்தபடி அவள் விரல் நகங்களை, நகங்களில் வெள்ளைத் திட்டுகளாய்ப் பூ
விழுந்திருந்ததைப் பார்த்தாள். நகங்களில் பூ விழுந்தால், எதும் கிடைக்கும் என்று சொல்வார்கள்.
ஆனால் அவள் செய்தித்தாளில் வாசித்திருக்கிறாள். அது வைட்டமின் ‘சி’யோ எதுவோ, குறைந்தால்
அப்படி பூ விழுகிறது. ஓரளவு திருப்தியாகவே அவள் அலங்காரம் செய்து கொண்டாள். அவளது புருவங்களும்
அதரங்களும் மகா கவர்ச்சிகரமாக ஆகியிருந்தன. அடடா அந்த கிமோனோ, அதுவும் அட்டகாசம்.
அம்மா
வந்து அவளுக்கு உடை உடுத்த உதவ வரட்டும் என காத்திருக்கலாம் என்றுதான் நினைத்தாள்.
பிறகு காத்திருப்பானேன், நல்லது. நானே உடுத்திக்கறேன், என முடிவு செய்துகொண்டாள்.
அவங்க
அப்பா அவர்களை விட்டு தனியே வாழ்ந்து வந்தார். இப்போது அப்பாவுடன் இருப்பது அவர்களுடைய
சின்னம்மா.
அப்பா
முதல்மனைவியை, அவர்களின் அம்மாவை விவாகரத்து செய்தபோது யோஷிகோவுக்கு வயது நாலு. தம்பிக்கு
ரெண்டு. அப்பா அவளை விவாகரத்து ஏன் செய்தார், என்ன காரணம்? அம்மா வெளியே போகையில் பளபளவென்று
உடையணிந்து பகட்டு காட்டினாள் என்றும், ஊதாரி என்றும் காரணம் சொன்னார்கள். ஆனால் யோஷிகோவுக்கு
யூகம் வேறு மாதிரி இருந்தது. காரணம் அதைவிடப் பெரியது. அதைவிட ஆழமானது, என்றிருந்தது.
தம்பிக்காரன்
குழந்தையாய் இருந்தபோது அம்மாவின் ஒரு புகைப்படத்தைக் கண்டெடுத்தான். அதைக் கொண்டுவந்து
அப்பாவிடம் காட்டினான். அப்பா வாயே திறக்கவில்லை, என்றாலும் அவர் முகத்தில் எள்ளும்
கொள்ளும் வெடித்தது. அந்தப் படத்தைச் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டுவிட்டார்.
யோஷிகோவுக்கு
பதிமூணு வயசாகையில், புது அம்மாவை அவள் வீட்டுக்கு வரவேற்றாள். பின்னாட்களில் அவள்
நினைத்துக் கொண்டாள், எனக்காகத் தான் இந்தப் பத்து வருடங்களாக அப்பா மறுமணம் முடிக்காமல்
தனிமை காத்தார். சின்னம்மா நல்ல மனுசிதான். இல்லத்தில் அமைதி எந்த அளவிலும் பங்கப்
படாமல் தொடர்ந்தது.
தம்பி
மேல்நிலைப் பள்ளிப் படிப்பு என்கிற இளவாலிப வயசுக்கு வளர்ந்தான். ஒரு விடுதியில் வெளியே
தங்க வேண்டியதானது. அப்புறந்தான் சின்னம்மாவையிட்டு அவனது பார்வை குறிப்பிடத் தக்க
அளவில் மாற ஆரம்பித்திருந்தது.
“அக்கா,
நான் நம்ம அம்மாவைப் பாத்தேன். அவளுக்கு இன்னோரு கல்யாணம் ஆகி, இப்ப அசபுவில் இருக்கா.
அக்கா, நம்ம அம்மா நிசமாவே ரொம்ப அழகு. என்னைப் பாத்ததுல அவளுக்கு ரொம்ப சந்தோசம்.”
திடீர்னு
இதைக் கேட்டதும் அவளுக்குப் பேச வார்த்தையே வரவில்லை. முகம் வெளிறி உடம்பே ஆடிவிட்டது.
அடுத்த
அறையில் இருந்து சின்னம்மா அங்கே வந்து உட்கார்ந்து கொண்டாள்.
“அது
நல்ல விசயம், நல்ல விசயம். சொந்த அம்மாவை நீ போயிப் பாக்கறது, அது மோசமான விசயம் இல்லை.
சகஜந்தான் அது. இந்த நாள் வரும்னு எனக்கு முன்னாடியே தெரியும். அதைப் பத்தி நான் ஒண்ணும்
நினைக்கல்ல.”
அப்படி
அவள் சொன்னாலும் அவள் சுரத்தே குறைந்துபோய் பலவீனமாய்த் தெரிந்தாள் இப்போது. யோஷிகோவுக்கு
அவளைப் பார்க்க நொந்த நூலாய், தொட்டாலே மளுக்கென முறிகிற அளவில் இத்துப்போய்ச் சிறுத்துத்
தெரிந்தாள்.
தம்பி
சட்டென்று எழுந்து வெளியே போய்விட்டான். அட நாயே உன்னை அறைஞ்சா என்ன, என அவனைப் பற்றி
யோஷிகோவுக்குக் கோபம் வந்தது.
“யோஷிகோ,
அவனை எதுவும் சொல்லாதே. நீ பேசப் பேச அவன் இன்னும் மோசமாத் தான் ஆவான்” என்று தணிந்து
சின்னம்மா சொன்னாள்.
யோஷிகோவின்
கண்கள் தளும்பின.
அப்பாபோய்
விடுதியில் இருந்து தம்பியைத் திரும்பக் கூட்டி வந்துவிட்டார். ஆக அத்தோடு அந்த விவகாரம்
முடிந்துவிடும், என யோஷிகோ நினைத்தாள். ஆனால் அப்பா சின்னம்மாவைக் கூட்டிக்கொண்டு வேறு
ஜாகைக்கு, அவர்களைப் பிரிந்து போய்விட்டார்.
அதில்
ரொம்பவே பயந்துவிட்டாள் யோஷிகோ. ஆண்வர்க்கத்தின் கோபத்தினாலும் ஆத்திரத்தாலும் அவள்
தானே நசுஙகிப் போன மாதிரி இருந்தது. எங்களுடைய அம்மாவுடனான எங்களின் பந்தம், அதனால்
அப்பாவுக்கு எங்க மேலயே வெறுப்பாகி விட்டதா? வெடுக்கென்று எழுந்துபோன தம்பி, அவன் வீம்பும்
கூட அப்பாவுடையது மாதிரி தான், என்று தோன்றியது.
ஆனாலும்
அப்பாவின் அந்த சோகமயமான பத்து வருடங்கள், மணமுறிவுக்கும் மறுமணத்துக்கும் இடைப்பட்ட
அந்த பத்து வருடத்தின் வலி, அதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆக,
அவர்களை விட்டுவிட்டு தனியே போய்விட்ட அப்பா, அவளுக்கான ஒரு கல்யாண யோசனையுடன் திரும்ப
வீட்டுக்கு வந்தார். யோஷிகோவுக்கு ஆச்சர்யம்.
“உன்னை
ரொம்ப சிரமப் படுத்திட்டேம்மா. உன்னோட இப்பத்தைய சூழல் எல்லாம் மாப்ளையோட அம்மாகிட்டச்
சொல்லியிருக்கேன். மருமகள்ன்றா மாதிரி இல்லாமல், அங்க போயி நீ உன்னோட பால்யகால சந்தோசங்களைத்
திரும்ப அடையறா மாதிரி வெச்சிக்கணும்ன்னு அவகிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன்.”
அப்பா
இப்பிடிச் சொன்னபோது யோஷிகோவுக்கு அழுகையே வந்திட்டது.
யோஷிகோ
கல்யாணம் ஆகிப் போயிட்டால், தம்பிக்கும் அப்பத்தாக்கும், அவர்களைப் பார்த்துக்கொள்ள
அனுசரணையான பெண் துணை இல்லாமல் போகும். இனி ரெண்டு குடித்தனம் இல்லை, ஒண்ணுதான், என
முடிவானது. அப்பா இங்கே வந்துவிட வேண்டும். பிறகு யோஷிகோ திருமணத்துக்குத் தலையசைத்தாள்.
அப்பாவைப் பார்த்து, அவள் கல்யாணம் என்றாலே கவலை தரும் விசயமாக நினைத்திருந்தாள். ஆனால்
ஏற்பாடுகளும் பேச்சு வார்த்தைகளும் நிகழ நிகழ, கல்யாணத்தில் அத்தனைக்கு பயப்பட ஏதும்
இல்லை என்று இருந்தது.
அலங்காரம்
முடிந்ததும் யோஷிகோ அப்பத்தா அறைக்குப் போனாள்.
“அப்பத்தா
இந்த கிமோனோவில் சிவப்பைப் பாத்தியா?”
“எதோ
கலங்கலா சிவப்பு தெரியறாப்ல இருக்கு. என்னன்னு பாப்பம்” என அப்பத்தா அவளைத் தன்பக்கம்
இழுத்தாள். கிமோனோவையும் அதன் நாடாக்களையும் கண் கிட்டத்தில் பார்த்தாள்.
“அடி
யோஷிகோ, எனக்கு உன் முகமே மறந்து போச்சு. இப்ப உன் முகத்தைப் பார்க்க ஆசையாக் கெடக்கு
எனக்கு.”
யோஷிகோ
புன்னகைக்க முயன்றாள். மென்மையாய் அவள் அப்பத்தாவின் தலையை வருடினாள்.
வெளியே
வந்து அப்பாவையும் வந்திருக்கிற மத்த ஆட்களையும் பார்க்கத் துடிப்பாய் இருந்தது அவளுக்கு.
யாரும் இன்னும் வரவில்லை. உள்ளே அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இப்படி வெட்டியாய்
எத்தனை நேரம் காத்திருக்கிறது? வெளியே தோட்டம் வரை போனாள். உள்ளங்கையை உயர்த்திக் காட்டினாள்.
ரொம்ப சன்னத் தூறல் தான். அவளது உள்ளங்கையே நனையவில்லை அந்த மழையில். தன் கிமோனோவை
சற்று உயர்த்திப் பிடித்துக் கொண்டு அந்தக் குற்று மரங்களூடே, மூங்கில் குத்துக்கு
உள்ளே என யோஷிகோ துழாவித் தேடிப் பார்த்தாள். ஆ அதோ.. செழித்து உயர்தோங்கிய புல்லுக்கு
உள்ளே… அந்தக் குஞ்சுப் பறவை.
அவளது
இதயப் படபடப்பு அதிகமானது. மெல்ல ஊர்ந்தாப்போல அவள் நெருங்கினாள். குட்டி ஜே தனது தலையை
கழுத்துப் பக்க இறகுகளுக்குள் புதைத்துக் கொண்டது. அதனிடம் அசைவே இல்லை. அதைக் கையில்
எடுக்க முடிந்தது. அதன் உடம்பில் தெம்பே இல்லை போல் இருந்தது. யோஷிகோ சுற்றித் தேடிப்
பார்த்தாள். எங்கே அந்த அம்மாப் பறவை. அதைக் காணவே இல்லை.
யோஷிகோ
வீட்டுக்குள் ஓடி வந்து கத்தினாள். “அப்பத்தா, குஞ்சு ஜேயைக் கண்டுபிடிச்சிட்டேன்.
இதோ என் கையில. ரொம்ப சோர்வா இருக்கு அது.”
“ஓ
அப்பிடியா? அதுக்குக் கொஞ்சம் தண்ணி குடு.”
அப்பத்தா
ரொம்ப அமைதியாய் இருந்தாள்.
சாதக்
கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணி ஊற்றி குட்டிப் பறவையின் மூக்கை அதில் அழுத்தியபோது அது
நீரை அருந்தியது. அதன் தொண்டை விடைத்து பார்க்க அழகாய் இருந்தது. பிறகு, ம், அது தேறிவிட்டதா?
அது இசைக்க ஆரம்பித்தது. “கி கி கி… கி கி கி.”
தாய்ப்
பறவை சந்தேகம் இல்லாமல், குஞ்சின் குரலைச் செவி மடுத்து, எங்கிருந்தோ பறந்து வந்துவிட்டது.
தொலைபேசி மின்கம்பியில் வந்து அமர்ந்தவண்ணம் அது இசைத்தது. குஞ்சுப் பறவை யோஷிகோவின்
கைகளில் படபடத்தபடி அது மீண்டும் பாடியது. “கி கி கி.”
“அடாடா
அம்மாக்காரி வந்திட்டது எத்தனை ஜோரான விசயம்! அதை அதோட அம்மாகிட்டயே ஒப்படைச்சிரு,
ஜல்தி” என்றாள் அப்பத்தா.
யோஷிகோ
திரும்ப வெளியே தோட்டத்துக்குப் போனாள். தாய் ஜே தொலைபேசி மின்கபியில் இருந்து கிளம்பி
கூடவே சிறிது தள்ளியே பறந்து வந்தது. ஒரு செர்ரி மர உச்சியில் இருந்து அது யோஷிகோவையே
கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.
தன்
உள்ளங் கையில் இருந்த குஞ்சு ஜேயை தாய் பார்க்க என்கிறாப் போல உயர்த்திக் காட்டிவிட்டு
யோஷிகோ அதைத் தரையில் விட்டாள்.
உள்ளே
வந்து கண்ணாடி வழியே வெளியே தோட்டத்தை யோஷிகோ பார்த்தாள். தன் குஞ்சுவின் ஆகாயம் பார்த்த
மழலை இசையைக் கேட்டு அந்த வழியைப் பின்பற்றுகிறாப் போல தாய்ப் பறவை மெல்ல கிட்டே வந்தது.
பக்கத்தில் இருந்த பைன் மரத்தின் ஆகத் தாழ்ந்த கிளைக்குத் தாய் வந்தது. குஞ்சு படபடவென்று
தன் சிறகை அடித்தது. பறந்து அப்படியே தாயை எட்டிவிடுகிற துடிப்புடன். தட்டுத் தடுமாறி
எழும்பி பொத்தென்று விழுந்தது குஞ்சு. கீச் கீச்சென்று அதன் இசை ஓயவில்லை.
தாய்ப்
பறவை இன்னும் கூட எச்சரிக்கை காத்தது. இன்னும் கீழே இறங்கி குஞ்சின் அருகே நெருங்காமல்
இருந்தது.
கொஞ்சநேரத்தில்
அது தன்னைப்போல குஞ்சின் பக்கத்துக்குப் பறந்து வந்தது. குஞ்சின் சந்தோசத்துக்கு அளவே
இல்லை. தலையை இப்படி அப்படி அது சிலுப்பிக் கொந்தளித்தது. பப்பரக்கா என விரிந்த ரெண்டு
சிறகும் நடுங்கியது அதற்கு. தாயின் அருகே வந்தது. அம்மா, சந்தேகம் இல்லாமல், குஞ்சுக்கு
என எதோ உணவு எடுத்து வந்திருந்தது.
அப்பாவும்,
சின்னம்மாவும் சீக்கிரம் வந்தால் தேவலை, என நினைத்தாள் யோஷிகோ. அவங்க இப்ப வந்தால்,
இந்தக் காட்சியைக் காட்டலாமாய் இருந்தது.
•
(ஜப்பானிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில்
லேன் டன்லப் மற்றம் ஜே. மார்டின் ஹோல்மேன்.)
storysankar@gmail.com
91 97899 878421 - 91 944 501 6842
Comments
Post a Comment