ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்
முழுத்தொகுப்பு
எஸ். ங்கரநாராயணன்

றிவிற் சிறந்த இந்த அவையை, இந்த அருமையான மாலை நேரத்தில் வணங்கி மகிழ்கிறேன். தோழி ஜெயந்தி சங்கரின் இதுவரை வெளியான மொத்தக் கதைகளையுமாகத் தொகுத்த நூல் வெளியீட்டு விழா இது. ஒரு எழுத்தாளனின் அல்லது எழுத்தாளினியின் வெற்றியின் முதல் படிக்கட்டு அல்ல, இரண்டாவது படிக்கட்டாகவே இதை நான் பார்க்கிறேன். மூன்றாவது மைல்கல் என்றுகூட இதைச் சுட்டலாம். காரணம் ஜெயந்தி சங்கரின் பெரும்பாலான கதைகள் பரவலாய்ப் பல்வேறு சஞ்சிகைகளிலும், இணையதள இதழ்களிலும் முதல் பிரசுரம் கண்டவை. பின் அவை நூல்களாக ஒருங்கமைவு கண்டன. இப்போது அவற்றின் மகா மாலை உருவாக்கப்பட்டுள்ளது. அறுபதடி ஆஞ்சனேயருக்கு வடைமாலை சாத்துகிறாப் போல ஒரு பிரம்மாண்டம் இதில் நமக்குக் கிடைக்கிறது. அவருக்கும் ஹா, என்கிற ஒரு திகட்டலும், சிறு புன்னகையும் சிறு கர்வமும் கூட இதில் கிடைத்திருக்க வேண்டும். எனது இரு பெருங்கதைக் கொத்துகள் இப்படி கலைஞன் பதிப்பகம் தயவில் வெளியானபோது எனக்கும் இப்படி ஒரு நெஞ்சுவிரித்த சுவாசம் வந்தது. அப்படியொன்றும் நமது வாழ்க்கை, அதுசார்ந்த கணக்குகள், யோசனைகள், அப்படியாய் நாம் செலவழித்த மணித்துளிகள் வீணாகிப் போய்விடவில்லை என்கிற சிறு ஆசுவாசம்.  அன்றாட நியதிகளிலும், புதிதாய் அவ்வப்போது தலைகாட்டும் நெருக்கடிகளிலும் இடையிடையே காலத்தை மிச்சம் பிடித்து, சேமித்து, சேகரித்த நிமிடங்களில் தேடிய பொக்கிஷங்கள் இவை அல்லவா? இவை ஆவணங்கள். – ஆனாலும் இவை என்னை அடையாளப் படுத்துகின்றன.
ஜெயந்தி சங்கரின் ஒரு நாவலுக்கு முன்பு நான் முன்னுரை தந்திருக்கிறேன். அப்போது அது சொல்லோவியம் என்கிற இணையதள இதழில் தொடராக வந்து கொண்டிருந்தது. அவர் எழுத்தில் ஒரு இரைச்சலான உற்சாகமும், கன்றுக்குட்டித் துள்ளலும் பார்த்து மகிழ்ந்த கணம் அது. திண்ணை என்கிற இணையதள இதழில்தான், அவரது நாலேகால் டாலர், என்ற சிறுகதை வெளியானபோதுதான், அவரை அடேடே, என நான் கவனிக்க நேர்ந்தது. சாயல்கள் இல்லாத,அதேசமயம் ஓர் எளிமை எனக்கு அந்தக் கதையில் கிடைத்தது. இந்த எழுத்துக்கு நெடும் பயணம் உண்டு என உணர்த்தியது அந்தக் கதை. பெருந்திரட்டாக அது இன்று ஆலமர உருக் கண்டது காலம் செய்த கொடைதான். எப்பெரும் முயற்சி இது. பதிப்பாளர் காவ்யா சண்முகசுந்தரம் இதை துணிச்சலுடன் சாத்தியம் ஆக்கியிருக்கிறார். அவர் முயற்சியால் இது இன்று வெளியிடப்படுகிறது. அவரது முயற்சிகள் வெல்க, என மனதார வாழ்த்துகிறேன்.
கதைகள் பற்றிய என் சாயல், என் பாணி, என் சிந்தனைக்குவிப்பு வேறு. ஜெயந்தி சங்கர் அவ்வகையில் வேறொரு துருவத்தில் இருக்கிறார். அதனாலேயே அவர் கதைகள் எனக்கு எப்பவுமே ஆச்சர்யம் தருவதாக இருக்கிறது. என் கதைகள் அவரை ஆச்சர்யப்படுத்தும் என்றே நான் நம்புகிறேன். நிலைக்களன்கள், சம்பவங்கள், பாத்திர வார்ப்புகள், உரையாடல்கள், முடிவு,என எல்லா விதங்களிலும் அவர் என்னில் இருந்து மாறுபடுகிறார். வேறுபட்டு சிந்திக்கிறார். அவர் எனக்குக் காட்டித் தரும் உலகம் புதியதாகவே எனக்கு வாய்க்கிறது.
அவரது பாத்திரங்கள் சந்திக்கும் நெருக்கடிகள் எனக்கு புதிய உலகை அறிமுகம் செய்ய வல்லதாய் இருக்கிறது. முழுக்க முழுக்க நகரச் சூழல் சார்ந்த பிரச்னைகளாக அவை அமைகின்றன. அவரது மனமே கிராமத்தில் அல்ல, நகரத்தில் புழங்கி ஒருவித கவனக் கூர்மையுடன் பரபரப்பாக இயங்குவதாய்த் தெரிகிறது. உற்சாகக் கொப்பளிப்பு அதில் தெரிகிறது. புதுவெள்ள நுரைச் சத்தம். காலம் உருண்டோடுகிறது. அவருக்கும் ஆண்டொன்று போனால் வயது ஒன்று போகும்… ஆனால், இந்தக் கதைகளில் இயங்கும் அவர் மனம்… அது பொய்யோ என நினைக்க வைக்கிறது.  இதுவே அவர் பெற்றுவந்த வரம்தான். இன்னும் நிறைய எழுதப்போகிறார் இவர். இன்னொரு ஆஞ்சநேயரும், நாம் அவருக்கு அளிக்கிற வடைமாலையுமாக இலக்கிய உலகில் ஜொலிக்கப் போகிறார். நல்வாழ்த்துக்கள்.
புனைவு சார்ந்து எனக்கு சில தன்னொழுங்குகள் இருக்கின்றன. அதாவது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் இப்படியாய் ஒரு தன்னொழுங்கு உண்டு. அவை சமுதாய ஒழுங்குகளோடு ஒத்துப் போக வேண்டியது கூட இல்லை. ஆனால், ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒரு தன்னொழுங்கு,  ஆதார சுருதி இருக்கத்தான் இருக்கிறது.
வாழ்க்கை அல்ல புனைவு. புனைவு என்பது வாழ்க்கையின் கெட்டிச்சாயம். சுண்டக் காய்ச்சிய பால் போன்ற விஷயம் அது. வாழ்க்கை தர்க்கத்தில் அடங்காதது. கற்பனைக்கு அது உள்ளடங்குவதே இல்லை. அதுவே அதன் ஆச்சர்யமும், சுவாரஸ்யமுமாய் இருக்கிறது. பல்வேறு நிலையற்ற ஒழுங்கற்ற வடிவங்களின் கோர்வையாகவே இயற்கையின் செயல்பாடுகள் இருக்சகின்றன. அதன் ஒழுங்குகளில் ஒரு சீரற்ற தன்மை, பிசிர் இருக்கிறது. வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிற இந்த மனித உயிருக்கு இது ஆயாசப்படுத்தும் அம்சமேதான். கனவுகளும் எதிர்பார்ப்புகளுமான மனிதன், ஆகவே அதன் பயனான ஏமாற்றங்களும் அதிருப்தியும் சந்திக்க நேர்வதைத் தவிர்க்க முடியவில்லை. ஆகவே சமுதாயம் சில ஒழுங்குகளைக் கட்டமைத்து ஓரளவு சீரான பயணத்தை, பாதையை மானுடத்துக்கு வழங்கப் பார்க்கிறது. இங்கேதான் கலை உதவிக்கு வருகிறது என்பேன். அது சீரற்ற தன்மையையும் சுட்டி, அதைச் சீராக்குகிற மனித யத்தனத்தையும் முன்வைத்து ஒரு பயிற்சிக்களத்தை சித்திரமாய்க் காட்டுகிறது கலை. கலைக்கு தர்க்கம் முக்கியம். ஒழுங்கு முக்கியம். ஒழுங்கானதற்கு ஒரு அழகு உண்டு. வாழ்க்கை அழகானதுதான் என்கிறது கலை. உலகில் அழகற்றது எதுவும் இல்லை. இதைச் சொல்ல, இப்படிச் சொல்லித் தர, இப்படிப் பார்க்கப் பயிற்றுவிக்க ஒரு கலைஞன் பிறக்கிறான்.
ஆனால், கலை என்பது ஒத்திசைவா? என்றால் அல்ல. கலை என்பது முரண். ஒரு விஷயத்தில் ஒருவன் முரண்படும்போதுதான் சிந்தனை பிறக்கிறது. மாற்றுக் கருத்து, அல்லது அதுவரை புலப்படாத ஒன்று அதில் கிடைத்தால் கலைஞன் அதைக் கைமாற்ற உந்தப் படுகிறான்.
வாழ்க்கை புனைவு வடிவங்களை கலைஞன் மனத்தில் அள்ளிக் குவித்துக் கொண்டே இருக்கிறது- கொடியில் தொங்கும் சட்டையின் நிழல் வி.வி.கிரி போலிருந்தது என்று வைதீஸ்வரன் ஒரு கவிதை சொல்வார். சில காட்சிகளே போதும் ஒரு பாத்திரத்தின் உள்ளக் கிடக்கையை அப்படியே முன் நிறுத்திவிடும். பிச்சைக்காரி/ குழந்தைக்கு வைத்தாள்/ திருஷ்டிப் பொட்டு, என நான் ஒரு முறை எழுதினேன்.
ஆனால்,, சந்தித்த மனிதர்களை வைத்து அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தி புனைகதைகளை எழுதுவது எனக்கு உவப்பாய் இல்லை. அவர்களைப் பற்றிய என் அபிப்பராயங்களை பகிரங்கப் படுத்துவதில் எனக்கு கூச்சம் உண்டு. அடிப்படையில் அவர்களைப் பற்றிய என் புரிதல், அதுவே முழுக்க சரி என நான் என்னையே அங்கீகரிப்பது இல்லை. நாளை அந்தப் பாத்திரங்களைப் பற்றிய என் கணிப்புகள் ஒருவேளை தவறாகவும் அமையலாம். அப்போது அவற்றை பகிரங்கப்படுத்திய நான் வெட்கப்பட நேரவே செய்யும் என்கிற கவலை எனக்கு உண்டு. இந்தக் கவலையை மீற,புறந்தள்ள எப்போதுமே நான் முன்வந்தது இல்லை.
ஆச்சர்யகரமாக, ஜெயந்தி சங்கரின் கதைகள் உண்மை சார்ந்தவை. அவற்றின் புலம் நிசமானது. சம்பவங்கள்கூட நிஜத்தின் உக்கிரம் சமந்தவை. அவை பிரச்னைகளை ஆதாரமாகக் கொண்டு ஒரு வலிமையான சூழலை உருவாக்கி கதைகளில் நம்மைச் சிக்க வைக்கின்றன. பிரச்சினைகளின் வீர்யத்தை அப்படியே மேல்தோல் உரித்தாப்போல பதிவு செய்கிறதில் அவர் மிக்க ஈடுபாட்டுடன் இயங்குகிறார். வாழ்க்கையின் நேரடி அனுபவத்தில் அலலாமல் இது சாத்தியமே இல்லை என்றுதான் எனக்குப் படுகிறது. வேடிக்கை, கேளிக்கைக் கதைகள் அவரிடம் இல்லவே இல்லை. அறவே இல்லை. இலக்கியம் என்பது பொழுதுபோக்கு அல்ல. பொழுதுபோக்கு அம்சம் அதில் கிஞ்சித்தும் தேவை இல்லை என்பது ஜெயந்தி சங்கரின் தீர்மானம்.
நான் தயங்குகிற ஒரு விஷயம்.இவரால் கையாளப்படுவதை நான் ஆச்சயத்துடன் கவனித்து மகிழ்கிறேன். ஜெயந்தி சங்கரின் சிறப்பு என்ன எனில், இந்தப் பாத்திர வார்ப்புகள் பற்றிய தன் அபிப்பிராயத்தை எப்படியோ இவர் கதையில் தவிர்த்துவிட்டு, கதை சொல்லப் பழகி யிருக்கிறார். ஜெயந்தி சங்கரின் பேரடையாளம் இது. பாத்திரங்களின் இயங்குதளம் பற்றிய அவரது, ஜெயந்தி சங்கரது விமரிசனத்தை நாம் எங்குமே கண்டுபிடிக்க முடியவில்லை. கவனப்படுத்தும் பாத்திர வார்ப்புகளை விருப்பு வெறுப்பு அற்ற நிலையில், தன் கருத்தை முன் நிறுத்தாமல் அவரால் பகிர முடிகிறது. இந்த நிலையை அடைய ஒரு முதிர்ச்சி நிலை கட்டாயம் வேண்டும். வாழ்க்கையிலேயே யாரையும் குறையெனக் காணாத நல்ல மனசு வேண்டும். அல்லது அதற்கான பயிற்சி வேண்டும். தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்பார் வள்ளுவர். நல்லவை நன்மை பயக்கிறதில், தன்னையும் வளர்த்துக் கொள்ளும் பாங்கு அவர் எழுத்தில் அவருக்கே கூட,  அதனால் நமக்கும் சித்திக்கிறது என்று சொல்லலாமா?
ஒரு கதைஞரின் ஒட்டுமொத்தக் கதைகளில் அந்த எழுத்தாளர் பற்றிய கவனம் வாசகனுக்குத் தட்டவே செய்யும். அவ்வகையில் ஜெயந்தி சங்கர் பெருமைப்பட அவரது ஒவ்வொரு கதையுமே அவரது முத்திரையை, சுமக்காமல் சுமந்து, பொலிவதை அவதானிக்க முடிகிறது. காவ்யா இல்லாமல் இந்தத் தொகுப்பு சாத்தியமே இல்லை. என்ற அளவில் பதிப்பகத்துக்கு மீண்டும் என் பாராட்டையும் வாழ்த்தையும் சொல்லி அமர்கிறேன்.
(டிஸ்கவரி புக் பேலசில் - நூல் வெளியீட்டு உரை)


Comments

Popular posts from this blog