
short story * ஈருடல் ஓருயிர் எஸ். சங்கரநாராயணன் ( தா னறியாத அசதியில் குழந்தை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அதற்கு உடம்பு சரியில்லை. மூச்சு விடும்போதே நெஞ்சில் கர் புர்ரென்று சளிக்கட்டு கேட்கிறது. இருந்த சளிக்கு உடம்பில் சூடு அதிகப்பட்டு லேசான ஜுரம் வேறு.. இரவு நெடுநேரம் வரை கண் திறக்காமல் சிணுங்கிக் கொண்டே இருந்தது. மாத்திரையோ மார்பில் தடவிவிட்ட மருந்தோ பெரிதும் பயன்படவில்லை. எப்படியும் டாக்டரிடம் கூட்டிப் போனால் தான் சரியாகிறது. என்னதான் கைவைத்தியம் என்று போராடினாலும் டாக்டரிடம் போய் அவரது தட்சிணையை வைத்துவிட்டால் அநேகத்தரம் சரியாகி விடுகிறது. அவள் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக் கொண்டாள். பத்து மணியளவில் தான் டாக்டர் வருவாள். நல்லவேளை. குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது. அவள் விறுவிறுவென்று வீட்டு வேலைகளை முடிக்க ஆரம்பித்தாள். பத்துப் பாத்திரங்களே தேய்ககாமல் கிடந்தன. வீடே கூட்டவில்லை இன்னும். அவளுக்கே வீட்டைப் பார்க்கப் பிடிக்கவில்லை. குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் என்னவேலை ஓடுகிறது... அதுவும் குழந்தைக்கு முழிப்பு வந்துவி...